யாழ்ப்பாண பௌத்தம் கி.மு. 100 - கி.பி. 1200 - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
31 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண பௌத்தம் கி.மு. 100 – கி.பி. 1200 – பகுதி 2

March 13, 2026 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

(3) பெருங்கற் பண்பாடும் பௌத்தமும் இணைந்த சமரசப் பண்பு (The Syncretism of Buddhism with Megalithism)

கந்தரோடைக் கிராமத்தின் தெற்குப் பக்கத்தில் பனந்தோப்புப் பகுதியிலிருந்த மண்மேடுகளை 1917ஆம் ஆண்டில் கவனித்த போல் பீரிஸ் அவை பௌத்த தாதுகோபங்களிருந்த மேடுகளாக இருக்கலாம் என எண்ணினார். ஆனால் அந்த இடமெல்லாம் பற்றையும் பறகும் மூடப்பட்டுக் காடாக இருந்தபடியினால் அங்கே அகழாய்வு எதையும் அவர் மேற்கொள்ளவில்லை (Pieris, P.E. 1917: 24).

1966-1967 ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளராகவிருந்த சாள்ஸ் எட்மண்ட் கொடகும்புர கந்தரோடையின் தெற்குப்பக்கத்தில் பனந்தோப்புகளிடையே காணப்பட்ட மேட்டை முதல் தடவையாக அகழாய்வு செய்யும் படி பணித்தார். 24 ஏப்ரல் 1966 ஆம் ஆண்டு அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்விடத்தில் பற்றையும் பறகுமாகக் காடு பற்றியிருந்தமையால் அவற்றை நீக்கி நிலத்தைச் சுத்தம் செய்வதற்கே சில மாதங்கள் பிடித்தது. மேலும், இடையில் வளர்ந்திருந்த இளம் பனை வடலிகளையும் தறிக்க வேண்டியிருந்தது.

1967 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரம் வரை 20 ஸ்தூபங்களின் அடித்தளங்கள் காணப்பட்டன. இவற்றில் பெரியது 23 அடி அகலமும் சிறியது 6 அடி அகலமும் கொண்டிருந்தது. இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அகழாய்வில் இந்த ஸ்தூபங்களின் மேல் கட்டுமானம் எதுவும் காணப்படவில்லை.

அவை காலப்போக்கில் அழிவுற்றிருக்கலாம், அல்லது மக்களால் செங்கட்டிகள் தங்கள் தேவைக்காக அகற்றப்பட்டிருக்கலாம். அடுத்துக் கவனிக்க வேண்டியது சில அடித்தளங்களின் பகுதிகள் வெவ்வேறு உயர மட்டங்களில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக – சில சமயங்களில் ஒன்றோடு ஒன்று செருகிய வண்ணம் காணப்பட்டன.

1967 ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் கந்தரோடைக்கு மேலாய்வு செய்வதற்காக வந்த விமலா பெக்லி இந்த இடத்தில் இலங்கை தொல்லியல் இலாகா அகழாய்வு செய்வதாகவும், இந்த அகழ்வுகளில் ஸ்தூபங்களின் அடித்தளங்கள் காணப்படுவதாகவும், மற்றும் குழிகளிலிருந்து முத்திரை நாணயங்கள், உரோம நாணயங்கள், லக்ஷ்மி பட்டயங்கள் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் (Begley, V.S. 1967).

இந்த ஸ்தூபங்களின் அடித்தளங்களைப் பரிசோதித்த கொடகும்புர, அவை ஏற்கனவே வார்ப்படமாக (Moulded) வெட்டப்பட்ட கோறல் கற்களால் சுற்றி அமைக்கப்பட்டு நான்கு அடுக்கு வரை காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். அவற்றின நடுவே கோறல் கற்களின் குப்பைத் துண்டுகள் காணப்பட்டன. “இவற்றின் மேல் கட்டுமானம் கோறல் கற்களினால் அமைக்கப்பட்டிருக்கலாம். அதன் உச்சியில் சதுரமாக பெட்டி வடிவில் சுண்ணாம்புக்கல்லில் வெட்டப்பட்ட (Harmika) ஹாமிக்கா தளத்தின் மேல் ஸ்தூபத்தின் முடிகள் (Finials) பொருத்தப்பட்டிருக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் (Godakumbura, C. E. 1968: 72).

கந்தரோடை ஈமக் கல்லறைகள்

கந்தரோடையில் இன்று ஸ்தூபிகளாகக் காணப்படும் பௌத்த சின்னங்கள் இறந்த பௌத்தர்களைப் புதைத்த பின்னர் மேலே எழுப்பப்பட்ட பெருங்கற் பண்பாட்டுக் கட்டுமானங்களாகும். கந்தரோடையை வந்தடைந்த இப்புதையல் பண்பாடு ஆந்திரப் பெருங்கற்கால–பௌத்தப் பண்பாடாகும். கந்தரோடையில் பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மக்களிடையே பௌத்த மதம் பரவியபோது அவர்களும் இப்பண்பாட்டை மேற்கொண்டார்கள்.

கந்தரோடையில் காணப்படும் பெருங்கற் பண்பாடும் பௌத்த சின்னங்களும் மேலணைவதை அந்த அடித்தளங்களின் தளவமைப்பிலிருந்து தெளிவாகக் காணமுடிகிறது. அந்த ஸ்தூபங்களின் அடித்தளங்கள் நெருக்கமான கொத்தாகவும் (Cluster) சில சமயங்களில் வெவ்வேறு மட்டங்களில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும் காணப்படுவது இவை திட்டமிட்டுக் கட்டப்பட்ட வழிபாட்டுத் ஸ்தூபங்கள் அல்ல என்பதையும், கல்லறைக்குரிய ஈமச் சின்ன ஸ்தூபங்கள் என்பதையும் காட்டி நிற்கின்றன. இவ்வகையான ஈமச் சின்ன ஸ்தூபங்கள் ஆந்திர தேச மையங்களான அமராவதி, நாகர்ஜுனாகொண்டா ஆகிய இடங்களில் இறந்த பௌத்த துறவிகளுக்காக நிறுவப்பட்ட சின்னங்களை ஒத்திருக்கின்றன (Schalk, P., quoting Ragupathy, P. 1990: 205).

இதற்குச் சான்றுகளை வழங்கும் வகையில் கந்தரோடையில் ஒரு ஸ்தூபத்தின் அடித்தளத்தின் கீழே அகழ்ந்தபோது ஒரு ஈமப் பேழையில் அழுகிய நிலையிலிருந்த எலும்பு காணப்பட்டது. அதற்கும் கீழே அழுகிய நிலையிலிருந்த மற்றொரு எலும்பும் காணப்பட்டதை கலாநிதி கொடகும்புர தனது அகழ்வாய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் (Godakumbura, C. E. 1968: p. 72).

கந்தரோடை ஈமப்புதையல் பற்றி இலங்கையின் இரு மூத்த பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் கூற்று இவை:

“கந்தரோடையில் கிடைத்த பௌத்த சின்னங்களின் தோற்றம் என்ன என்ற கேள்வி அடுத்து எழுகின்றது. இச்சின்னங்கள் ஒருவகையான ஈமச் சின்னங்களே ஆகும். பல்வேறு பரிமாணங்களில் அமைந்துள்ள, பல்வேறு காலப்பிரிவுகளுக்குரிய இத்தூபிகளில் இறந்த பௌத்த பிக்குமாரின் சாம்பல், எலும்புகள் என்பன முருகைக் கற்களிலமைந்த பேழைகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. ஒரு வகையில் இப்பகுதியில் நிலவிய பெருங்கற்கால ஈமச் சடங்கு முறை பௌத்தத்தின் வருகையோடு அதில் சங்கமமாகியதையே (Syncretism of Megalithism with Buddhism) இவை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இத்தூபிகள் காணப்படும் இடங்கூட முன்பொரு காலத்தில் பெருங்கற் பண்பாட்டிற்குரிய ஈமக்காடாகவும் விளங்கியிருக்கலாம்” (சிற்றம்பலம், சி.க. 1993: 15).

“கந்தரோடையிலுள்ள பௌத்த சின்னங்கள் தனியான பண்புகளைக் கொண்டவை. அவை அநுராதபுரம், மிகுந்தலை, மாகமை முதலான இடங்களில் உள்ளவற்றைக் காட்டிலும் வேறுபட்டவை. கந்தரோடையில் சிறிய அளவிலான தூபிகள் பல நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. அங்கே வழிபாட்டுத் தலங்களான சேதியங்களுக்குரிய அமைப்பு காணப்படவில்லை. அவற்றின் மேற்பாகம் அண்டவடிவமானது. அவை உயிர் நீத்த சங்கத்தாரின் பள்ளிப்படைகளாக அமைக்கப்பட்டவை. பௌத்த சமயக் கோட்பாடுகளுக்கு ஏற்ப, பெருங்கற் பண்பாட்டுக்குரிய ஈமக் கிடங்குகளுக்கு மேலாக அமைந்த கட்டுமான முறையினை பின்னர் மாற்றிவிட்டனர் போலத் தெரிகின்றது. இவற்றைப் போன்ற அண்டவடிவமான கட்டுமானங்கள் ஆந்திர தேசத்து அமராவதி, நாகர்ஜுனாகொண்டா போன்ற இடங்களில் காணப்படுகின்றன. அங்குள்ளவை உயிர் துறந்த சங்கத்தாரின் சடலங்களைப் புதைத்த குழிகள் மேல் அமைந்தவை” (பத்மநாதன், சி. 2011: 55).

ஆந்திராவில் அமராவதி, நாகர்ஜுனாகொண்டா, குந்துப்பள்ளி ஆகிய மையங்களில் இவ்வகையான பெருங்கற் பண்பாட்டுடன் இணைந்த பௌத்த ஈமப்புதையல்கள் இருந்ததை பிரித்தானிய தொல்லியலாளரான அல்பேர்ட் ஹென்றி லோங்ஹர்ஸ்ட் (Albert Henry Longhurst) எடுத்துக்காட்டியுள்ளார். இவர் சிந்துவெளி மொகஞ்சதாரோவில் அகழாய்வுகளை நிகழ்த்திய ஜோன் மார்ஷலின் மைத்துனராவார் (Longhurst, A. H. 1917; 1938).

1913ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் மேலாய்வின் தென் வட்ட மேலதிகாரியாகப் பணிபுரிந்த லோங்ஹர்ஸ்ட், 1917இல் ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குந்துப்பள்ளியில் தொல்லியல் மேலாய்வுகளையும் அகழாய்வுகளையும் மேற்கொண்டார். 1927ஆம் ஆண்டிலிருந்து 1931ஆம் ஆண்டுவரை நாகர்ஜுனாகொண்டா அகழ்வாய்வுகளுக்குத் தலைமை தாங்கினார்.

குந்துப்பள்ளியின் பௌத்ததலங்கள் வெட்டுப்பாறைக் குகைகள், பௌத்த சைத்தியங்கள், விகாரைகள், பௌத்தப் பள்ளியின் அடித்தளங்கள், ஸ்தூபிகள், கல்வெட்டுப் பொறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன. வட்டவடிவான ஈமப் புதையல்களுக்கு மேல் சுட்ட செங்கற்களாலான இரண்டு அடுக்குச் சுவர்களும், மேலே தட்டையான சுடுமண் கும்பலும் ஸ்தூபம் போல அமைக்கப்பட்டிருந்தன. இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும் (Longhurst, A. H. 1917).

அமராவதி, நாகர்ஜுனாகொண்டா மையங்களில் ஈமப்புதையல்களின் மேல் கட்டுமானங்கள் அழிந்துபோய்விட்டிருந்தன. அகழாய்வுகளின் மூலமே இவை பௌத்தமத ஈமப் புதையல்கள் என்பது அறியப்பட்டது (Longhurst, A. H. 1938).

குந்துப்பள்ளியில் காணப்படும் தட்டையான இந்த ஸ்தூபங்கள் பௌத்தமத ஈமக்கல்லறைகளாகும். ImageSource: A.H. Longhurst. 

கந்தரோடையில் 1967 ஆம் ஆண்டின் அகழாய்வின் முடிவில் கண்ட பெருங்கற் பண்பாடும் பௌத்தமும் இணைந்த ஈமப்புதையல் தளத்தில் வட்ட வடிவான மற்றும் சதுர வடிவான அடித்தளங்கள் மட்டுமே காணப்பட்டன. மேல் கட்டுமானங்கள் அனைத்தும் அழிந்திருந்தன. Image Source: Bennet Bronson.

மாலைதீவு காஷிடூ பௌத்தப்பள்ளியிலுள்ள ஸ்தூபங்களின் அடித்தளங்கள் கந்தரோடை போன்று வட்ட வடிவிலும், சதுர வடிவிலும் காணப்படுகின்றன. Image Source: Egil Mikkelsen

பெருங்கற் பண்பாடும் பௌத்தமத ஈம அடக்கமும் இணைந்த புதையல் பண்பு மாலைதீவுக் கூட்டத்தில் உள்ள காஷிடூ தீவின் பௌத்தப் பள்ளியிலுள்ள ஈமப்புதையல் தளத்திலும் காணப்படுகிறது. 1996–1998 ஆம் ஆண்டுகளில் இந்த மையத்தை நோர்வே, ஒஸ்லோ பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர் எகில் மைக்கேல்சென் அகழ்வாய்வு செய்தார்.

கந்தரோடை தெற்குப் பகுதியிலிருந்த பனந்தோப்பை 1967ஆம் ஆண்டில் கலாநிதி கொடகும்புர அகழ்ந்த போது ஈமப்புதையல்களின் வட்ட வடிவமான மற்றும் சதுரவடிவமான அடித்தளங்களே காணப்பட்டன. மாலைதீவு காஷிடூ அகழ்வுகளிலும் இதே மாதிரி வட்ட வடிவமான, சதுரவடிவமான அடித்தளங்களே காணப்பட்டன. ஆனால் கந்தரோடையைப் போல அல்லாது பழுதடையாத முழுமையான ஈமத்தூபிகளும் காணப்பட்டன. வட்ட வடிவான தூபிகள் கூம்பு வடிவில் படியடுக்குகளாகச் சென்று உச்சியில் ஒரு முடியைக் கொண்டிருந்தன. சதுரவடிவான தூபிகள் படிப் பிரமிட்டுகளைப் போல (Step-pyramids) படியடுக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டு அவைகளும் உச்சியில் ஒரு முடியைக் கொண்டிருந்தன.

கூம்பு வடிவில் படியடுக்குகளைக் கொண்ட காஷிடூ பௌத்த ஈமப்புதையல் ஸ்தூபி.  ஆரம்பகால கந்தரோடைப் பெருங்கற் பண்பாட்டுக் கட்டடங்களும் இதுபோல படியடுக்கு வடிவில் இருந்திருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. Picture Source: Dr. Egil Mikkelsen.        

மாலைதீவு காஷிடூவில் மேற்கூறப்பட்ட ஸ்தூபிகளுக்கு அருகாமையில் 6.5 மீட்டர் விட்டமும் 0.6 மீட்டர் உயரமுமான வட்டவடிவான ஒரு கல்மேடை காணப்பட்டது. அதன் தெற்குப் பக்கத்தில் காணப்பட்ட கல்மேடை நீடிப்பு ஸ்தூபி வடிவில் வட்டவடிவான மூன்று அடுக்குகளைக் கொண்டிருந்தது. இந்த அழிபாடு இல. 42 (Ruin XLII) எனப் பதிவு செய்யப்பட்டது. இந்த அழிபாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் நிலத்திலிருந்து 60–70 செ.மீ. ஆழத்தில் நான்கு கல்லறைகள் அகழ்ந்து ஆய்வு செய்யப்பட்டன. இக்குழிகளில் சடலங்கள் வடக்கு–தெற்கு திசை நோக்கி நீளக் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. சடலங்கள் வலது பக்கத்தில் சரிந்து, கரங்கள் இரண்டும் கால்களின் இடையே வைக்கப்பட்டிருந்தன. இங்கே அடக்கம் செய்யப்பட்ட சடலங்கள் ஆண்களும் பெண்களுமாவர். இச்சடலங்களின் காலம் கதிரியக்கக் கரிமத் தேதிக் கணிப்பின்படி கி.பி. 885ஆம் ஆண்டிற்கும் கி.பி. 1170ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும் (Mikkelsen, E. 2000: 19).

இக் கல்லறைகளில் சடலங்களோடு பல வகையான மட்பாண்டத் துண்டுகள் காணப்பட்டன. ஒரு சடலத்தின் கைவிரலில் ஒரு வெள்ளி மோதிரம் காணப்பட்டது. அகழ்வுகளில் பெருந்தொகையான மட்பாண்டத் துண்டுகள் காணப்பட்டன. இவை மட்பாண்ட, கற்பாண்ட, சீனப் பாத்திரக் கலவோடுகளாகும். மாலைதீவில் களிமண் இல்லாத படியினால் இவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்ட பாண்டங்களாகும். பெரும்பாலும் தென் சீனாவிலிருந்தே இவை வந்திருக்கின்றன (Mikkelsen, E. 2000: 19).

இறந்தவர்களின் உடல்களை எரிப்பதே பௌத்தமதப் பண்பு. புதைகுழிகளில் நிவேதனப் பொருட்கள் வைப்பது பௌத்த சம்பிரதாயத்திற்குப் புறம்பானது. புத்த தத்துவம் பற்றற்ற தன்மையைப் போதிப்பதால் இப்புதையல்களில் ஈமப் படையல்களை எதிர்பார்க்க முடியாது. பேராசிரியர் மைக்கேல்சன், பௌத்த மரபுகளில் ஈமப்பொருட்களைக் காண முடியாது என்றும், இவ்வழக்கம் ஒரு தனித்துவமான உள்ளூர் மாறுபாடாக இருக்கலாம் (It may have been a unique local variation) எனவும் அபிப்பிராயப்படுகிறார் (Mikkelsen, E. 2025: 97).

மாலைதீவு காஷிடூ பௌத்தப்பள்ளி அகழ்வுகளையும் அதில் கண்ட தொல்பொருட்களையும் பற்றி பேராசிரியர் மைக்கேல்சன் இலங்கையில் பேராசிரியர் செனாகா பண்டாரநாயக்கவுடனும், கலாநிதி பொன்னம்பலம் இரகுபதியுடனும் உரையாடியிருக்கிறார். இலங்கைக்கும் மாலைதீவுக்கும் பௌத்தமதம் சமகாலப் பகுதியில் இந்தியாவிலிருந்து பரவியிருக்கிறது என்பது அவரது கருத்து (Mikkelsen, E. 2000: 21).

இலங்கையிலுள்ள பௌத்த நிறுவனங்கள் அனைத்திலும் மாலைதீவின் காஷிடூ மடாலயக் கட்டமைப்புகளுக்கு ஒத்ததன்மை கொண்டது யாழ்ப்பாணத்திலுள்ள கந்தரோடையே. (The only Buddhist site in Sri Lanka showing some similarities with the Kaashidhoo monastery is the one at Kantarodai in the Jaffna peninsula). அங்கிருக்கும் அழிபாடடைந்த கட்டடங்களும் பவளக் கற்களைக் கொண்டே கட்டப்பட்டிருக்கின்றன. அங்குள்ள சிறு ஸ்தூபிகள் காஷிடூ போன்றவை (Mikkelsen, E. 2000: 21).

மாலைதீவு காஷிடூ பௌத்தப்பள்ளியில் வட்ட வடிவான மேடையும், அதன் நீடிப்பான மூன்று அடுக்குகள் கொண்ட கல்மேடை அழிபாடும் (Ruin XLII). இந்த அழிபாட்டின் வடக்கிலும், தெற்கிலும் கீழே காணப்படுவது போன்ற நான்கு உடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. Picture Source: Egil Mikkelsen.          

மாலைதீவு காஷிடூ பௌத்தப்பள்ளியில் அகழ்ந்தெடுத்த நான்கு கல்லறைகளில் ஒன்று. சடலங்கள் நீளக்கிடத்திய நிலையில் வலது பக்கம் சரித்து அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. Picture Source: Egil Mikkelsen.

இலங்கை அரச தொல்லியல் துறையினர் செய்த மேற்கட்டுமானங்கள்

1966–1967ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசுத் தொல்லியல் துறையினர் கலாநிதி கொடகும்புரவின் தலைமையில் அகழ்வுகளை மேற்கொண்டபோது, ஈமப்புதையல்களின் மேல் பவளக் கற்களினாலான அடித்தளங்கள் மட்டுமே காணப்பட்டன. அதற்கு மேலே ஒருவிதமான கட்டுமானங்களும் காணப்படவில்லை. இதை அங்கே மேலாய்வு செய்வதற்காகச் சென்ற பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தினர் எடுத்த ஒளிப்படங்களிலும் காண முடிகிறது.

கந்தரோடையில் காணப்பட்ட அடித்தளங்கள் மாலைதீவு காஷிடூவில் காணப்பட்டதைப் போல வட்ட வடிவிலும் சதுர வடிவிலும் காணப்பட்டன. இவ்விரண்டு இடங்களுக்குமிடையே இருந்த நெருங்கிய ஒற்றுமையை நோக்குமிடத்து, அந்த அடித்தளங்களுக்கு மேலேயிருந்த ஸ்தூபங்கள் காஷிடூவில் போல படியடுக்கு முறையில் அமைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் அந்த அடித்தளங்களுக்கு மேலாக மேல் கட்டுமானங்களைக் கட்ட வந்த இலங்கைத் தொல்லியல் துறை வேலையாட்கள், வட்ட வடிவான அடித்தளங்களுக்கு மேல் இலங்கையின் பெருநிலப்பரப்பில் காணப்படும் தாதுகோபங்களைப் போல குவிமாட வடிவில் (Dome-shaped) இந்த ஸ்தூபங்களைக் கட்டியிருக்கிறார்கள். உடைந்திருக்கும் சில ஸ்தூபங்களின் உள்ளே நவீனகால கற்காரைக் கட்டிகளைக் (Concrete Slabs) காணலாம். வட்ட வடிவான அடித்தளங்களுக்கு மேலாக குவிமாடக் கட்டுமானங்களை அமைத்த தொல்லியல் துறையினர், சதுர வடிவான அடித்தளங்களைக் கவனிக்காது அப்படியே விட்டிருக்கிறார்கள்.

இச்செயலின் மூலம் இலங்கை அரசு, யாழ்ப்பாணப் பௌத்தத்தின் தனித்துவமான பெருங்கற் பண்பாடும் பௌத்தமும் சங்கமித்த அடையாளங்களை மாற்றி, அவற்றை உலகிற்கு சிங்கள–பௌத்த கலாசாரத்தின் தாதுகோபங்களாகப் பிரசாரம் செய்யும் வகையில் பெரியதொரு விளம்பரப் பலகையை நிறுவியுள்ளது. இது யாழ்ப்பாண மண்ணின் பாரம்பரிய வரலாற்றை ஆதாரமின்றி மறுத்துரைக்கும் செயலாகும்.

கந்தரோடைப் பெருங்கற் பண்பாடும் பௌத்தமும் இணைந்த ஈமக்கல்லறைகளின் மேற்கட்டுமானங்களை மாற்றியமைத்தமை. Image Source: Siva Thiagarajah.

(4) பவளக்கல் – சுண்ணாம்புக்கல் கட்டடத் தொழில்நுட்பம் (Coral and Limestone Building Architecture)   

யாழ்ப்பாணப் பௌத்தத்தில் காணப்படும் தனித்துவமான உள்நாட்டு அம்சம் பவளக் கற்களையும் சுண்ணாம்புக் கற்களையும் கொண்டு செதுக்கப்பட்ட கட்டடக் கலையும் சிற்பக் கலையுமாகும். இக்கற்களே யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒரேயொரு கட்டடப் பொருட்களாகும். இக்கற்களை உபயோகித்த கட்டட–சிற்பக் கலையானது யாழ்ப்பாணப் பௌத்தக் கட்டடங்களைக் கட்டுவதில் ஆரம்பித்து, பண்டைய கட்டடங்களையும் சிற்பங்களையும் உருவாக்குவதிலும், சமீப காலங்களில் அவற்றை சீமெந்து கொண்டு மாற்றியமைக்கும் வரையிலும் உபயோகத்தில் இருந்துள்ளது.

இக்கற்களைச் சிறப்பாக வெட்டி, பொழிந்து உருவாக்கும் தொழில்நுட்பத்தில் யாழ்ப்பாணக் கல்தச்சர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். யாழ்ப்பாணப் பௌத்தத்தில் காணப்படும் இந்தக் கட்டடப் பொருட்களும் அதை உபயோகிக்கும் தொழில்நுட்பமும் இலங்கையின் பெருநிலப்பில் காணப்படும் பௌத்த ஸ்தூபங்களிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. இப் பவளக்கல் – சுண்ணாம்புக்கல் தொழில்நுட்ப உபயோகம் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு வெளியே நடைபெற்றதாகத் தெரியவில்லை.

கடலுக்குள்ளிருந்து எடுத்து வந்து நீள்சதுரமாக வெட்டிய பவளக்கற் பாறைகள்.

ஆனைக்கோட்டை – நவாலி எல்லைப் பகுதியில் வெளிக்கொணரப்பட்ட பண்டைக்காலக் கட்டடம். இது பொழியப்பட்டு நீள்சதுரமாக வெட்டப்பட்ட சுண்ணாம்புக் கற்களினால் அடித்தளமும், சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கிறது. அக்காலத்தைய அரச, அல்லது வேளிர் வகுப்பு மக்களின் கட்டடங்கள் இவ்வாறான கட்டட அமைப்பைக் கொண்டிருக்கலாம்.Image Source: Dr. P. Ragupathy.

பவளக்கற்கள் கடலின் அடியில் உயிருள்ள வெண்ணிற ‘Polyps’ ஆக வளருகின்றன. இவை மூன்று–நான்கு அடி உயரமும் ஆறு–எட்டு அடி நீளமும் கொண்டவையாக வளருகின்றன. இவற்றைக் கடலிலிருந்து பெயர்த்தெடுத்து, ஈரமாக இருக்கும் போது அல்லது நீரில் ஊறவைத்து மென்மையாக்கிய பின்னரே அவற்றை தேவையான உருவங்களில் அறுக்கவோ செதுக்கவோ முடியும். இக்கற்கள் காய்ந்துவிட்டால் அவற்றை வெட்டும்போது சிறு துண்டுகளாகப் பிளவுபடும். பவளக்கல் தொழில்நுட்பம் இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மறக்கப்பட்டுவிட்டது. இத்தொழில்நுட்பம் இன்றும் மாலைதீவுகளில் காணப்படுகிறது. சுட்ட களிமண் கூரை ஓடுகளைப் போன்ற ஓடுகளை அவர்கள் பவளக்கற்களிலிருந்து வெட்டி எடுத்து உபயோகிக்கிறார்கள். யாழ்ப்பாணப் பௌத்தச் சிற்பங்களும் பண்டைய கட்டடங்களும் யாழ்ப்பாண மண்ணின் கீழே காணப்படும் ‘மையோசீன்’ காலத்து சுண்ணாம்புக் கற்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன.

(5) ஆந்திர எழுத்து வடிவங்களும் வல்லிபுரப் பொற்சாசனமும்

வல்லிபுரப் பொற்சாசனம் பற்றி ஏற்கனவே இங்கு ஏழாவது இயலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. வல்லிபுரப் பொற்சாசனத்தில் இடம்பெறும் எழுத்து வடிவங்கள் ஆந்திர நாட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிராமி எழுத்து வடிவங்கள். அக்காலகட்டத்தில் இக்ஷ்வாகு மன்னர்களின் ஆட்சியின் கீழ் ஆந்திரநாடு இருந்ததனால், இந்த எழுத்து வடிவத்தை இக்ஷ்வாகு வகை எழுத்துகள் என்றும் அறிஞர்கள் அழைப்பர்.

வல்லிபுரப் பொற்சாசனத்தின் எழுத்து வடிவங்களை ஆராய்ந்த இந்தியத் தொல்லியலாளரும் தொல்லெழுத்துக் கலைஞருமான பேராசிரியர் ஏ.எச். டானி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘இந்திய தொல்லெழுத்துக்கலை’ (Indian Palaeography) என்ற அவரது ஆய்வு நூலில், வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் எழுத்துகள் ஆந்திராவில் அமராவதி, நாகர்ஜுனாகொண்டா ஆகிய மையங்களில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும் நான்காம் நூற்றாண்டிலும் உபயோகிக்கப்பட்ட இக்ஷ்வாகு வகை எழுத்து வடிவங்கள் எனக் கூறியுள்ளார். இச்சாசனத்தில் காணப்படும் அ, ஐ, உ, க, ம, ய, ற, ல, வ ஆகிய எழுத்துகள் இக்ஷ்வாகு வகை எழுத்துகளே ஆகும். வல்லிபுரப் பொற்சாசனம் பற்றிய அவரது மதிப்பீடு வருமாறு:

“Of these, the gold plate inscription has an individual character of its own. In this case the lower curves of the verticals are over-emphasised and the medial i has a sharp curve to the left. The letters a, i, u, ka, ga, ma, ya, ra, la and va are all Ikshvaku forms.… In the inscription we have definite evidence of the school of Amarāvati and Nagarjunakonda writing reaching Ceylon, probably in the latter half of the third century AD (Dani, A.H. 1963: 221).

வல்லிபுரப் பொற்சாசனம் ஆந்திர தேசத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இருந்த கலாசாரத் தொடர்பை எடுத்துரைக்கும் மற்றுமொரு சான்றாகும்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குரிய ஆந்திர இக்ஷ்வாகு வகைப் பிராமி எழுத்துக் கல்வெட்டு. Picture Source: Archaeological Survey of India.

கொழும்பு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் வல்லிபுரப் பொற்சாசனப் பிரதி. Image Source: National Museum, Colombo.

(6) நாடாளும் கலையுடன் இணைந்த யாழ்ப்பாணப் பௌத்தம் (Buddhism’s link with Statecraft)

பௌத்த மதத்தின் இயல்பான அம்சம் தன்னை நாடாளும் கலையுடன் இணைத்துக் கொண்டதாகும். தென்னாசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் மாநிலங்களும் அரசுகளும் உருவாகுவதற்கு ஊக்கமளித்த காரணிகளில் ஒன்றாகப் பௌத்த மதம் இருந்திருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் பௌத்தமும் அதன் வணிகம் சார்ந்த தன்மையும் பண்டைய கிறிஸ்தாப்த காலத்திலிருந்த நகர–மாநில உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்ததுபோலத் தெரிகிறது.

தமிழகத்தின் சங்கமருவிய காலக் காப்பியமான மணிமேகலை நாகநாட்டில் (பண்டைய யாழ்ப்பாணம்) ஓர் அரசும், அங்கே வளைவாணன் என்ற பெயர் கொண்ட ஓர் அரசனும், அந்த அரசின் பௌத்த மதச் சார்பும், அந்த அரசு சோழ நாட்டுடன் கொண்டிருந்த உறவும் பற்றிக் கூறுகிறது. மற்றொரு காப்பியமான சிலப்பதிகாரம் நாகநாடு நகரம் பற்றியும், அந்த நகரம் சோழ நாட்டின் தலைநகரமான காவிரிப்பூம்பட்டினத்துடன் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் உரைக்கிறது.

வல்லிபுரப் பொற்சாசனம் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஒரு பிராந்திய ஆட்சியாளன் ஒரு பௌத்த விகாரையைக் கட்டிய செய்தியை அறியத்தருகிறது.

(7) உலகளாவிய மத, இன நடைமுறைகள் கொண்ட யாழ்ப்பாணப் பௌத்தம்

பண்டைய யாழ்ப்பாணத்தில் வழக்கிலிருந்தது ஓர் உலகளாவிய பன்முக மத நடைமுறை (Cosmopolitan Religious Practice) என்பது அறியக் கூடியதாக இருக்கிறது. நாட்டார் மதங்களும், நாக வழிபாடும், ஆரம்பகால சைவ மதமும், பௌத்த மதமும் அருகருகே பல மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பின்னர் மத்தியகாலப் பகுதியில் நடைபெற்றது போன்ற மதவெறியோ, மத நிந்தனையோ அக்காலத்தில் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

உலகம் முழுவதும் பௌத்த மதத்தைப் பின்பற்றுவோருக்கு வட இந்தியாவில் புத்தகாயா ஒரு புனிதத் தலம் ஆகும். இதன் முந்தைய பெயர் உறுவெல. இந்த இடத்தில் கௌதம புத்தர் ஆறு ஆண்டுகள் இச்சையடக்கம் செய்து தன்னொறுப்புத் தவம் புரிந்தார் (Self-mortification). கி.மு. 250ஆம் ஆண்டளவில் அசோகச் சக்கரவர்த்தி இந்த இடத்தில் ஒரு புத்தக் கோயிலைக் கட்டியிருந்தார். அந்தக் கோயில் புத்தகாயா என அழைக்கப்படுகிறது.

யாழ்ப்பாணப் பௌத்தத்தின் பொற்காலமான கி.மு. 100 – கி.பி. 500 காலப்பகுதியில், ஏப்ரல் மாதத்தில் இலங்கையிலுள்ள பௌத்த யாத்திரிகர்கள் வருடாந்த காயா யாத்திரைக்காக யாழ்ப்பாணத்தில் கூடுவார்கள். அக்காலத்தில் சிங்களவர், தமிழர் என்ற இன வித்தியாசம் கிடையாது — அவர்கள் எல்லோரும் பௌத்த யாத்திரிகர்களே. அக்காலத்தில் ‘சிங்கள’ என்ற பெயர் குப்த, மௌரிய, சோழ என்பது போல அநுராதபுர அரச வம்சத்தினரையே குறித்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பின்னரே சாதாரண மக்கள் சிங்களவர் என அழைக்கப்பட்டார்கள்.

புத்தகாயா செல்லும் யாத்திரிகர்கள் கப்பல் ஏறிய துறை ‘காயாத்துறை’ என அழைக்கப்பட்டது. அதுவே இன்றைய காங்கேசன்துறை (Thiagarajah 2016: 261).

பின்னுரை

யாழ்ப்பாணத் தொல்லியல் ஆய்வுகளில் கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் காணப்படும் வளமிக்க தொல்பொருள் கண்டுபிடிப்புகள், அக்காலத்திலிருந்த செல்வம் மிக்க ஒரு வணிகம்–சார்ந்த பௌத்தத்தைக் காட்டி நிற்கின்றன. இதற்கு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை வியாபித்திருந்த வளமான ரோமாபுரி வர்த்தகம் ஒரு முக்கியமான காரணமாகும்.

ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பின்னர் யாழ்ப்பாணத்து பௌத்த மையங்களில் குறிப்பிடத்தக்க ஒரு வீழ்ச்சி காணப்படுகிறது. இந்த வீழ்ச்சி பௌத்த மையங்களில் மட்டுமல்ல, யாழ்ப்பாணக் குடியிருப்புகளிலும் வாழ்வாதார முறைகளிலும் காணப்படுகிறது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ரோம வர்த்தகத்தின் முடிவோடு யாழ்ப்பாண வர்த்தக நகரம்–மாநிலம் வறுமைக் காலங்களை அடைந்துவிட்டது போலத் தெரிகிறது.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து மத்தியகால நூற்றாண்டுகள் ஈறாக (Medieval Centuries) தென்னாசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் குளங்கள் அமைத்து நீர்ப்பாசன விவசாயம் செய்வதன் மூலமே தேசங்கள் தங்கள் பொருளாதாரச் செழிப்பைத் தக்கவைத்துக்கொண்டன. யாழ்ப்பாணத்திலோ நீர்ப்பாசன விவசாயம் செய்வதற்கான ஆறுகளோ குளங்களோ இல்லாமையால் இலங்கையின் பெருநிலத்துடனோ அல்லது தென்னிந்தியாவுடனோ அதனைப் பொருளாதார வளத்தில் ஒப்பிட முடியவில்லை.

யாழ்ப்பாணத்து வணிகம்சார்–பௌத்தம் வீழ்ச்சியடைந்துகொண்டிருந்த அந்த வேளையில் இலங்கையின் உலர்வலய நீர்ப்பாசன பௌத்தம் அதன் உச்ச நிலையை அடைந்தது. மத்தியகாலத்தில் தென்னிந்திய பக்தி இயக்கமும் யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து இலங்கையின் உலர்வலயத்திலேயே தமது செல்வாக்கை உபயோகிக்க ஆரம்பித்தது. மத்தியகால யாழ்ப்பாணத்தின் பொருளாதார நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்திற்கு 100 கி.மீ. தெற்கிலிருந்த மாந்தைத்துறை நோக்கி நகர்ந்தன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் பெருநிலப்பரப்பின் தேரவாத புத்த செல்வாக்கை சில யாழ்ப்பாண பௌத்த மையங்களில் காண முடிகிறது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குரிய சிங்கள மொழிக் கல்வெட்டு ஒன்று கந்தரோடையில் ஒரு தூணில் காணப்பட்டது. இதை முதலில் P.E.P. தெரனியகல கண்டறிந்தார். ஒரு தூணின் மூன்று பக்கங்களில் ஒன்பதாம் நூற்றாண்டிற்குரிய சிங்கள மொழியில் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டில் அரசன் நான்காம் கசப்பன் ஒரு விகாரைக்கு அளித்த தானம் பற்றிக் கூறப்பட்டிருந்தது.

கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழர்களின் வருகையோடு யாழ்ப்பாணம் ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகளில் யாழ்ப்பாண இந்துக் கோயில்கள் பற்றிக் கூறப்படுகிறது. அடுத்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணப் பௌத்தம் அமிழ்ந்து இந்துமதம் மேலோங்கி வந்திருக்கிறது. பௌத்த மையங்களில் காணப்பட்ட தடித்த விளிம்பு கொண்ட சிவப்பு மட்பாண்டங்கள் மறைந்து, பள்ளமிட்ட விளிம்பு கொண்ட மட்பாண்டங்கள் உபயோகத்திற்கு வருகின்றன. பௌத்த மையங்கள் கைவிடப்பட்டு, புத்த பகவான் ஐயனாரோடு ஒருங்கிணைக்கப்பட்டு, பௌத்த சைத்தியங்கள் கிராம ஐயனார் கோயில்களாக மாறுகின்றன.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல வேளாள குலமரபுத் தலைவர்களின் வருகையோடும், சைவசித்தாந்தத்தின் அறிமுகத்தோடும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றத்துடனும் இக்கால யாழ்ப்பாண இந்து மதம் தோற்றம் பெற்றது.

ஆனால் பதில் கிடைக்காத ஒரு கேள்வி இன்னும் நம்மை உறுத்திக்கொண்டே இருக்கிறது. இங்கே பெரிய பெரிய இந்துக் கோயில்கள் எல்லாம் வந்த பின்னரும் ‘தாய்த்தெய்வம்’, ‘திரிசூலம்’, ‘நாகச்சிலை’ போன்ற ஆதி யாழ்ப்பாணத் தெய்வ வழிபாடுகள் இன்னும் நாட்டார் சமயமாக, சிறு தெய்வ வழிபாடாக தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த யாழ்ப்பாணப் பௌத்தம் ஏன் அழிவுற்றுப் போனது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

யாழ்ப்பாணப் பௌத்தம் அன்றைய சமூகத்தின் வர்த்தக உயரடுக்கு மேலோரின் நடைமுறையாக இருந்ததாகவும், அது கீழ்மட்ட மக்களைச் சென்றடையவில்லை என்றும் ஒரு கருத்து உள்ளது. அது கீழ்மட்ட சமூகத்தில் பரவாது விட்டமையே அது தொடராமல் போனதற்கான காரணமாக இருக்கலாம்.

உசாத்துணை நூல்கள், கட்டுரைகள்

BASHAM, A.L (1982 reprint): The Wonder that was India; Fontana, Delhi.

BECHERT, HEINZ (1993): “The Nikayas of Medieval Sri Lanka and the Unification of the Sangha by Parakramabahu I”, In Studies in Buddhism in Honour of Professor A. K.Warder, (eds.) N.K. Wagle & F. Watanabe, p.11-21, University of Toronto, Toronto.  

BEGLEY, VIMALA (1973): ‘Proto-Historic Material from Sri Lanka and Indian Contacts’ in (eds.) Kenndy, K.A.R. & Possehl, G.L.: Ecological Backgrounds of South Asian Prehistory, Cornell University.

BOPEARACHCHI, O. & WICKRAMASINHA, W. (1999): Ruhuna, An Ancient Civilization Revisited, Nugegoda.

BOPEARACHCHI, OSMUND (2012): Early Buddhist Statues of Sri Lanka in New Dimensions in Tamil Epigraphy (Ed). Appasamy Murugaiyan, Cre-A, Chennai.

BRIDGET & RAYMOND ALLCHIN (1993): The Birth of Indian Civilization, Penguin Books, India.

CARSWELL, JOHN (2013): Mantai – City by the Sea, Linden Soft Verlag, Aichwald.

COOMARASWAMY, ANANDA K. (1935): Elements of Buddhist Iconography, Harvard University Press

COOMARASWAMY, ANANDA K.  (1980 reprint): The Origin of The Buddha Image, Coronet Books Inc., India.

DEEGALLE, MAHINDA (1999): A Search for Mahayana in Sri Lanka, A Journal of the  International Association of Buddhist Studies, Vol. 22, No. 2.

DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka, Govt. of Sri Lanka, Colombo.

GODAKUMBURA, C. (1968): Kantarodai; Journal of the Royal Asiatic Society, Ceylon Branch, Vol.12.

GUNAWARDANA, R.A.H.L. (1977): Prelude to the State, An Early Phase in the Evolution of Political Institutions in Ancient Sri Lanka; The Sri Lanka Journal of Humanities, VIII (1&2).

HIRAKAWA AKIRA Transl.& Ed.: PAUL GRONER (1993): A History of Indian Buddhism,Motilal Banasidass Publications, Delhi.

INDRAPALA, K. (1973): A Brahmi potsherd inscription from Kantarodai, Purvakala, Bulletin of the Jaffna Archaeological Society No.1, Jaffna. 

INDRAPALA, K. (2006): The Evolution of an Ethnic Identity, Kumaran  Book House, Chennai.

LEWIS, J.P. (1916); Some Notes on Archaeological Matters in the Northern Province of Ceylon; Antiquary and Literary Register Vol.II, Part II, Colombo.

LONGHURST, A.H. (1917): The Buddhist Monuments at Guntupalle, Krishna District,  Annual Report of the Archaeological Department, Southern Circle, Madras 1916-1917.   

LONGHURST, ALBERT HENRY (1938): The Buddhist Antiquities of Nagarjunakonda, Madras Presidency., Memoirs of the Archaeological Survey of India Vol. 54, Archaeological Survey of India, New Delhi 

MAHAVAMSA, Transl & ed. WILHELM GEIGER (1950), Colombo

MANIMEKALAI by Chattanar, English Transl. ALAIN DANIELOU (1989): New Directions Publishing Corp., NY.

MARSHALL, JOHN (1931): Mohenjo-Daro and the Indus Civilization; Arthur Probsthain, London.

MIKKELSEN, EGIL (2000): Archaeological Excavation of a Monastery at Kaashidoo, National Centre for Linguistic and Historical research, Male.

MIKKELSEN, EGIL (2025): ‘The Cemetery: Graves and Buddhist Funerary Practice’ in The Archaeology of Buddhism in the Maldives, Brill, Leiden, The Netherlands.

ORTON, N (1995): The Early Ceramics of Kantarodai; Ancient Ceylon 13. 

PARANAVITANA, S. (1959): A History of Ceylon Part I, University of Ceylon. Colombo.

PARANAVITANA, S. (1961): The Arya Kingdom in North Ceylon, Journal of the Royal Asiatic Society (C.B.), New Series Vol. VII, Part 2: 174-224, Colombo. 

PARANAVITANA, S. (1971): The Art of the Ancient Sinhalese, Colombo.

PIERIS, PAUL E. (1917): Nagadipa and Buddhist Remains in Jaffna Part I,  Journal of the Royal Asiatic Society (C.B.), Vol. XVII, No. 70, Colombo. 

PIERIS, PAUL E. (1919): Nagadipa and Buddhist Remains in Jaffna, Part II, Journal of the Royal Asiatic Society (C.B.), Vol. XVII, No. 72, Colombo. 

PUSHPARATNAM, P. (2002): Ancient Coins of Sri Lankan Tamil Rulers, Bavani Publishers, Chennai. 

RAGUPATHY, P. (1987): Early settlements in Jaffna, Mrs. Ragupathy, Madras.

RASANAYAGAM, C. (1926): Ancient Jaffna, Madras.

RAY, REGINALD A. (1994): Buddhist Saints in India, Delhi. 

SCHALK, PETER (1990): Retelling P.Ragupathy’s ‘Mercantile Buddhism in Yālpānam’, Lanka, December 1990, Uppsala University, Sweden, 

SCHALK, PETER (1994): The Vallipuram Buddha Image Rediscovered, Paper presented at the Symposium of Dance, Music and Art in Religions, Abo, Finland, 16th-18th August 1994. 

SENEVIRATNE, S (1993): The Archaeology of Megalithic Black and Red Ware Complex in Sri Lanka; Ancient Ceylon 5, Colombo.  

SENEVIRATNE, SUDHARSHAN (2003): The Philosophy and Social Role of Early Buddhism in South India; Vesak Commemoration Lecture, Chennai.   

VIMALA BEGLEY (1967): Archaeological Exploration in Northern Ceylon; Expedition Summer 1967: (9)4; Bulletin of the University Museum, University of Pennsylvania, Philadelphia.

VIMALA BEGLEY (1973): ‘Proto-Historic Material from Sri Lanka and Indian Contacts’ in (Eds.) Kennedy, K.A.R & Possehl, G.L.: Ecological Backgrounds of South Asian Pre-history; Occasional papers and Thesis, Cornell University.

WEISSHAAR, H.J., ROTH, H., WIJEYAPALA, W. (2001): ‘Ancient Ruhuna: Sri Lankan-German Archaeological Project in the Southern Province’, Materialien zur Allgemeinen und Vergleichenden Archäologie, Vol. 58, 2001.

WHEELER, R.E.M. (1948): Brahmagiri and Chandravalli 1948: Megalithic and Other  Cultures in the Chitaldug District, Mysore, Ancient India 4: 181-308.

கிருஷ்ணராசா, செ. (1998): தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

கிருஷ்ணராசா, செ. (2004): வழுக்கையாற்று வடிநிலப் பகுதியில் கண்ட தொல்தமிழ் எழுத்து வடிவங்கள், வீரசேசரி 08.02.2004, 29.02.2004, 14.03.2004.

சிலப்பதிகாரம் (1920): பதிப்பு: உத்தமதானபுரம் வே. சாமிநாதையர், அடியார்க்கு நல்லார்  உரையுடன், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை.

சிற்றம்பலம், சி.க. (1993): யாழ்ப்பாணம் – தொன்மை வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

புஷ்பரட்ணம், (1993): பூநகரி – தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி. 

புஷ்பரட்ணம், ப. (2025): பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை ஆந்திர உறவுகள், எழுநா, ஜனவரி 2025.

மணிமேகலை சீத்தலைச் சாத்தனார் (1965): உ.வே. சாமிநாதையர் பதிப்பு, அறம் பதிப்பகம், சென்னை.



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்