யாழ்ப்பாண பௌத்தம்: கி.மு. 100 - கி.பி. 1200 - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
34 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண பௌத்தம்: கி.மு. 100 – கி.பி. 1200 – பகுதி 1

March 6, 2026 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

கந்தரோடை ஸ்தூபிகள். Source: Sri Lanka Guardian.

முன்னுரை

பௌத்த மரபுக் கதைகளின்படி புத்த பிரான் தனது வாழ்நாட்களில் வருகை தந்த இடங்களில் நாகதீபமும் (நாகதீவு – நாகநாடு) ஒன்றாகக் கூறப்படுகிறது. புத்த பிரானின் காலத்தில் இலங்கையில் நாகர்கள் ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த இடங்களில் வட இலங்கையின் நாகதீபமும், மேற்குக் கரையிலிருந்த கல்யாணியும் முக்கியமான இடங்கள் என இலங்கையின் பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நூலில் கூறப்படும் ஒரு நிகழ்வில் நாகதீபத்தில் மகோதரன் என்ற நாக அரசன் ஆட்சிபுரிந்த காலத்தில், அங்கிருந்த கந்தவதமன்ன என்ற மலையகத்தில் அவனது மருமகன் சுலோதரன் ஆட்சி புரிந்ததாகவும், கல்யாணியில் அவனது மாமன் மணி அக்கிகன் ஆட்சி செய்ததாகவும் கூறப்படுகிறது (Mahavamsa, Ch. 1: 46).

அக்காலத்தில் நாகதீபத்திலிருந்த விலையுயர்ந்த மணிகளால் இழைக்கப்பட்ட ஒரு சிம்மாசனத்தின் உரிமைக்காக மகோதரனுக்கும் சுலோதரனுக்கும் கடும் போர் ஏற்பட்டது. தமது பெரிய படைகளுடன் இந்த இருவரும் போரிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் புத்த பகவான் அங்கே தோன்றி, ‘இந்த மணியாசனம் எனக்கும், எனது சங்கத்தாருக்கும் உரியது. இதற்காக நீங்கள் போரிட வேண்டியதில்லை’ எனக் கூறி அந்த ஆசனத்தில் அமர்ந்து சமாதானமும் நல்லிணக்கமும் பற்றிய புத்தமதக் கொள்கைகளை எடுத்துரைத்தார். அவரது பிரசங்கத்தைக் கேட்ட எண்பது கோடி நாகர்கள் பௌத்த மதத்தை மேற்கொண்டார்கள் (Mahavamsa, Ch. 1: 46-62). அந்நாளிலிருந்து அந்த மணியாசனம் பௌத்தர்களின் வழிபாட்டுப் பொருளானது. 

மேலே கூறப்பட்ட நாகநாட்டு மன்னர்களுக்கிடையே மணியாசனத்திற்காக ஏற்பட்ட போரும், அதைப் புத்தபகவான் வந்து தீர்த்து வைத்த சம்பவமும் மணிமேகலைக் காப்பியத்திலும் கூறப்படுகிறது. மணிமேகலையில் புத்தபிரான் வந்து மணியாசனத்தில் அமர்ந்து சமரசம் செய்த இடம் மணிபல்லவம் எனக் கூறப்படுகிறது (மணிமேகலை, அத். 8: 1-2). 

மேற்குறிப்பிட்டுள்ள கதையிலுள்ள வரலாற்றுப் பெறுமதிகளைக் காட்டிலும் அது அமைக்கப்பட்ட பின்புலமும், அது நடைபெறும் நாகநாடு, மணிபல்லவம் ஆகிய இடப்பெயர்களும் முக்கியமானவை. இக்கதையைக் கூறும் மணிமேகலை கி.பி. நான்காம் நூற்றாண்டிலும், மகாவம்சம் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலும் எழுதப்பட்டவை. இவை கூறும் சம்பவங்கள் அவை எழுதப்பட ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் புத்தபிரான் மணிபல்லவத்திற்கு (நாகதீபத்திற்கு) வந்தார் என்பது கற்பனையே. ஆனால் அது கூறப்பட்ட பின்புலம் பரிசீலனை செய்யப்பட வேண்டியதாகும். 

1. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நாகநாட்டில் இருந்த குலோதரன், சுலோதரன் என்ற  அரசர்களின் பெயர்கள் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அக்காலத்தில் நாகநாட்டில் ஓர் இராசதானி ஆரம்பமாகி இருக்குமா? என எண்ணச் செய்கிறது.

2. சுலோதரன் என்ற அரசன் ‘கந்தவதமன்ன’ என்ற மலையகத்தில் வாழ்ந்தவன் என மகாவம்சம் கூறுகிறது. இது ‘கதிரமலை’ என்ற கந்தரோடையைக் குறிப்பிடும் பெயராக இருக்குமோ?

3. நாகதீபத்தில் 80 கோடி நாகர்களை புத்தபிரான் தனது பிரசங்கச் செய்திகளை ஏற்கச் செய்தார் என்கிறது மகாவம்சம். இது அதீத மிகைப்படுத்துதலாக இருக்கலாம். ஆனால் நாகதீபத்தில் பௌத்த மதத்தைக் கடைப்பிடித்த நாகர்கள் இருந்தார்கள் என்பதை அறிந்து கூறப்பட்ட மிகையாக இருக்கலாம். நாகநாட்டில் வளைவாணன் என்ற பெயர் கொண்ட பௌத்த மதத்தைப் பேணிய ஒரு நாக அரசன் ஆட்சி புரிந்தது பற்றி மணிமேகலை கூறுகிறது.

4. மணிமேகலையில் புத்தபிரான் தோன்றி அந்த இரு நாக அரசர்களுக்குமிடையே இருந்த பிணக்கைத் தீர்த்த இடம் ‘மணிபல்லவம்’ எனக் கூறப்படுகிறது. மகாவம்சத்தில் இப்பிரச்சினை நடந்த இடம் ‘நாகதீப’ எனப்படுகிறது.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக பல அறிஞர்கள் ‘மணிபல்லவம்’ என்ற தீவகம் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மேற்கேயுள்ள தீவுகளில் ஒன்றான ‘நயினாதீவை’க் குறிப்பதாகப் பேசியும், எழுதியும் வருவதை அறிவேன். இது மீளாய்வு செய்யப்பட வேண்டிய ஒரு கருத்து.

அன்றைய தமிழகத்திற்குத் தென்கிழக்கிலிருந்த இலங்கையை இரண்டு தீவகங்களின் பெயரைக் கூறி மணிமேகலை விவரிக்கிறது. ஒன்று ‘மணிபல்லவம்’ என்னும் தீவகம், மற்றது அதற்குத் தேற்கேயுள்ள சமனொளி மலையைக் கொண்ட ‘இரத்தின துவீபம்’.

நாகநாட்டை மணிபல்லவத் தீவின் ஒரு பகுதி என்றே மணிமேகலை கூறுகிறது. மணிபல்லவத்தின் “கீழ்நில மருங்கின் நாகநாடாளும்” (மணிமேகலை, அத். 8: 54) என்ற அடிகள் கவனிக்கப்பட வேண்டியவை. 

மணிபல்லவத்தின் கிழக்கே கடலுக்கு அப்பாலுள்ள நாகநாடு எனக்கூறாமல், மணிபல்லவத்தின் கிழக்கேயுள்ள நிலப்பகுதியிலுள்ள நாகநாடு எனக் கூறப்படுவதால் நாகநாடு அரசு மணிபல்லவத் தீவிலுள்ள ஓர் அரசு என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது. மணிபல்லவத்திற்கும் நாகநாட்டிற்கும் உள்ள தொடர்பு இந்த ஓர் இடத்தைத் தவிர வேறு எங்கும் மணிமேகலையில் கூறப்படவில்லை. 

மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவம், மகாவம்சம் கூறும் நாகதீபமான இன்றைய யாழ்ப்பாணம் என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், பண்டைய வல்லிபுரத்திலிருந்த துறைமுகத்தை மகாவம்சம் ‘பல்லவத்துறை’ (Bhallathitta) எனக் குறிப்பிடுவது கவனிக்க வேண்டியது (Mahavamsa, Ch. XXXVI: 42-44). இன்றைக்கும் இந்த வட யாழ்ப்பாணக் கடற்கரை ‘பல்லப்பை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 

பண்டைய யாழ்ப்பாணத்தின் வடகரையிலிருந்த ‘யம்புகோளம்’ நாகதீபத்தின் வரலாற்றுப் பெருமை மிக்க ஒரு துறைமுகமாக இருந்தமை ஏற்கனவே இங்கு கூறப்பட்டுள்ளது. வட இந்தியாவில் மகதநாட்டை ஆண்ட அசோகச் சக்கரவர்த்தியின் (கி.மு. 304-232) மகளான சங்கமித்தை தாம்ரலிப்தியிலிருந்து (மேற்கு வங்காளக் கரையிலிருந்த துறைமுகம்) புத்தபிரான் ஞானம் பெற்ற வெள்ளரச மரத்தின் கிளையோடு இக்காலத்தில் சம்புத்துறை என அழைக்கப்படும் சம்புகோவளத் துறையில் வந்து இறங்கினாள்.

வட இந்தியாவில் தாம்ரலிப்தி துறையினூடாகச் சென்ற கப்பல், தரைவழிப் பாதைகள்.

சம்புகோவளத்தில் அவளை வரவேற்க அநுராதபுர அரசன் தேவநம்பிய தீசன் தனது பரிவாரங்களோடு வந்து ‘சமுத்திரபன்னசாலை’ என்னும் மண்டபம் அமைத்துக் காத்திருந்தான். அவர்கள் வந்திறங்கியபின், வெள்ளரச மரக்கிளையைப் பெற்றுக்கொண்ட அரசன், விழாக் கொண்டாடி, சில நாட்கள் அங்கே தங்கியிருந்தான். பின்னர் அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு தேரில் கோலாகலமாக சம்புகோவளத்திலிருந்து புறப்பட்டு பதினான்காம் நாள் அநுராதபுரத்தை அடைந்தார்கள் (Mahavamsa, Ch. XIX: 130-131). 

அரசன் தேவநம்பிய தீசனால் அநுராதபுரத்தில் நாட்டப்பட்ட வெள்ளரசின் வித்துகளிலிருந்து எட்டு மரக்கன்றுகள் தோன்றியதாகவும், அவற்றுள் ஒரு கன்று சங்கமித்தை வந்திறங்கிய யம்புகோவளத் துறையில் நடப்பட்டதாகவும் மகாவம்சம் குறிப்பிடுகிறது (Mahavamsa, Ch. XIX: 133).

தேவநம்பிய தீசன் யாழ்ப்பாணத்தில் யம்புகோவளத் துறையில் தங்கியிருந்த காலத்தில் கடற்கரையில் ஒரு தாதுகற்பத்தையும், திஸ்ஸ மழுவை என்ற இடத்தில் ‘திஸ்ஸமகாவிகாரை’ என்னும் புத்த பள்ளியையும், கந்தரோடையில் ‘பாசீனவிகாரை’ என்னும் கோயிலையுங் கட்டுவித்தான் என 1993 இல் அவர் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் (பக். 14) முதலியார் இராசநாயகம் குறிப்பிடுகிறார். இச்செய்தி மகாவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. இவ்விடங்களில், கட்டடங்கள் இருந்ததற்கான அடித்தளங்கள் தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுபோல கந்தரோடையில் ‘பாசீனவிகாரை’ என்ற விகாரை இருந்ததற்கான அடித்தளம் அகழ்வுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தொல்லியல் பின்னணி

யாழ்ப்பாண இராச்சியம் எனப்பட்ட சிங்கை ஆரிய மன்னர்களின் ஆட்சிக்காலத்திற்கு முன்னர், யாழ்ப்பாணம் பற்றி எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் எதுவும் கிடையாது. தொலமியின் தப்ரபேன், மணிமேகலை கூறும் நாகநாடு, மகாவம்சம் கூறும் நாகதீப என்பன அங்கே இடம்பெற்ற சில இடங்களின் பெயர்களையோ அல்லது சில சம்பவங்களையோ மட்டுமே கூறுகின்றன. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் தொல்கால நிலமையை அறிவதற்கு அங்கு இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகளே நமக்கு உதவுகின்றன. இந்த வகையில் முக்கியமாக கலாநிதி இரகுபதியின் ‘Archaeological Survey of Early Settlements in Jaffna’ என்ற அகழ்வாய்வு நூலும், கந்தரோடையில் கலாநிதி விமலா பேக்லி போன்ற பல தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கூறும் இந்த ஆசிரியரின் ‘Kantarodai Civilization of Ancient Jaffna’ என்ற நூலும், யாழ்ப்பாணம் கோட்டையில் கலாநிதி பரமு புஷ்பரட்ணம், பேராசிரியர் ரொபின் கொனிங்ஹாம் ஆகியோர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளின் பெறுபேறுகளைப் பற்றி உரைக்கும் ‘Archaeological Excavations at the Jaffna Fort’ என்ற நூலும் நமக்குக் கைகொடுக்கின்றன.

கந்தரோடையில் அமெரிக்க பென்சில்வேனிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பெற்றுக்கொண்ட கருவூலப் பொருட்களில் இரு கறுப்பு – சிவப்பு மட்பாண்டப் பொருட்களின் ஆரம்பகாலம் கி.மு. 1350 ஆண்டையும், பெரும்பாலான பொருட்கள் கி.மு. 600 ஆம் ஆண்டையும் காட்டி நின்றன (Deraniyagala, S.U. in Ragupathy, P. 1987: 205). யாழ்பாணக் கோட்டையில் கண்டெடுத்த கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களின் ஆரம்பகாலத்தை கி.மு. 1000 ஆம் ஆண்டாக பேராசிரியர் ரொபின் கனிங்ஹாம் கணித்திருக்கிறார் (Thiagarajah, S. 2022: 26). இவற்றைக் கொண்டு யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் குடியேற்ற ஆரம்பகாலத்தை பொதுவாக கி.மு. 1200 ஆம் ஆண்டுக் காலமாகக் கொள்ளலாம். யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலப் பெருங்கற் பண்பாட்டுக் குடியேற்ற இடங்களாக கந்தரோடை, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணக் கோட்டை, காரைநகர், வேலணை, மண்ணித்தலை ஆகிய மையங்கள் இனம் காணப்பட்டிருக்கின்றன. இவ்விடங்களில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்கால கறுப்பு – சிவப்புநிற மட்பாண்டங்கள் இங்கே கி.மு. 1200 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 200 ஆம் ஆண்டு வரை பாவனையில் இருந்திருக்கின்றன. ஆனைக்கோட்டையிலும், காரைநகரிலும் இம்மட்பாண்டங்கள் பெருங்கற்பண்பாட்டு ஈமப்புதையல்களில் கிடைத்திருக்கின்றன. கந்தரோடையிலும், யாழ்ப்பாணக் கோட்டையிலும் அதிகமான அளவிலும், வேலணை, மண்ணித்தலை ஆகிய மையங்களில் குறைந்த அளவிலும் இம்மட்பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன. 

யாழ்ப்பாணத்தின் இரண்டாவது அலை மக்கள் குடியேற்றம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை நீடித்திருக்கிறது. இக்காலத்தில் இந்த மையங்களில் கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களோடு உரோமானிய ரௌலெற்றெட் மட்பாண்டங்களும் காணப்படுகின்றன. உரோமானிய மட்பாண்டங்கள் கந்தரோடைக்கு வெளியே உள்ள மையங்களில் கி.மு முதலாம் நூற்றாண்டு முதல் கிறிஸ்தாப்தம் ஈறாக, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை காணப்படுகின்றன. இம்மட்பாண்டங்களும், அங்கே கண்ட உரோம நாணயங்களும் இந்த இரண்டாம் அலைக் குடியேற்றங்களை இனம்காண உதவுகின்றன.

பௌத்த மதத்தின் பரவல்

பௌத்த மதம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை அடைந்துவிட்டதாக இலங்கையின் பாளி நூல்கள் கூறிய போதிலும், யாழ்ப்பாணத்தில் அம்மதத்தின் பரவல் கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே, ஏற்கனவே வலுவாக நிறுவப்பட்ட உரோம வர்த்தக வலைப்பின்னல் வழியாக நிகழ்ந்திருக்கிறது. யாழ்ப்பாணத் தொல்லியல் மையங்களில் காணப்பட்ட பௌத்த சின்னங்கள் இதை எடுத்துக் காட்டுகின்றன. கந்தரோடையிலும், யாழ்ப்பாணத் துறையின் சூழலிலும் கி.மு. ஆயிரமாம் ஆண்டுக் காலத்திலிருந்தே பெருங்கற்பண்பாட்டுக் குடியேற்றங்கள் இடம்பெற்று அதற்கு வெளியே இருந்த மற்றைய முதலாம் கட்ட 16 மையங்களிலும் அப்பண்பாடு விரைவாகப் பரவியுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 41 தொல்லியல் மையங்களை ஆய்வு செய்த தொல்லியலாளர் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி 1988 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 14 – 16 ஆம் திகதிகளில் சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘யாழ்ப்பாண வரலாற்றில் மதங்கள்’ என்ற பட்டறையில் ‘யாழ்ப்பாணத்தில் வணிகம்சார் பௌத்தம்’ (Mercantile Buddhism in Jaffna) என்ற தலைப்பில் ஓர் ஆய்வுரையை நிகழ்த்தியிருந்தார். அதில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் இவை:

யாழ்ப்பாணத்தில் புத்த மதத்தின் பரவல் இரண்டு கட்டங்களாக நிகழ்ந்திருக்கிறது.

  1. கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஆரம்பமாகி ஐந்தாம் நூற்றாண்டில் முடிவிற்கு வந்த ஆரம்ப கட்டம்.
  2. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பமாகி கி.பி. பன்னிரண்டாம் ஆண்டுவரை நீடித்த இரண்டாம் கட்டம். 

யாழ்ப்பாண பௌத்தப் பரவலின் ஆரம்ப கட்டம் (கி.மு. 100 – கி.பி. 500)

யாழ்ப்பாணத்தில் கண்ட ஆதிகாலப் பெருங்கற்பண்பாட்டு மையங்களில் ‘ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு சிவப்பு – சிவப்பு மட்பாண்டங்கள்’ (Early Carinated Black and Red Ware) காணப்படுகின்றன. இந்தக் கீழ் மட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பௌத்தமதச் சின்னங்கள் ஏதும் காணப்படவில்லை. இதற்குப் பின்னர் காணப்படும் மேல் மட்டத்தில்தான் வரலாற்றுக்கால கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், ரோம ரௌலெற்றெட் மட்பாண்டங்கள் அல்லது அதைத் தழுவிப் பிரதி செய்த மட்பாண்டங்களுடன் பௌத்த சின்னங்கள் முதன்முறையாக இடம்பெறுகின்றன. இப்பௌத்த சின்னங்களின் ஆரம்பகாலம் கி.மு. முதலாம் நூற்றாண்டாகும். ரௌலெற்றெட் மட்பாண்டங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை கந்தரோடையிலும், கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து மற்றைய யாழ்ப்பாண மையங்களிலும் காணப்படுகின்றன. பௌத்த மத ஆரம்பகாலத்தில் பௌத்த சின்னங்கள் பெருங்கற்பண்பாட்டுச் சின்னங்களோடு மேற்கவிந்து காணப்படுகின்றன (Schalk, P. 1990: 205). கந்தரோடையில் அகழ்வாய்வுகளை மேற்கொண்ட விமலா பேக்கிலியும் ரௌலெற்றெட் மட்பாண்டங்கள் இடம்பெற முன்னரே பெருங்கற் பண்பாட்டு கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் நீண்ட காலமாக இடம்பெறுவதாகக் கூறியுள்ளார் (Begley, V. 1973). 

ஆரம்பகட்ட யாழ்ப்பாண பௌத்தத்தின் எச்சங்கள் யாழ்ப்பாணத்தில் பின்வரும் எட்டு மையங்களில் காணப்படுகின்றன: 1. கந்தரோடை, 2. திசைமழுவை திருவடிநிலை, 3. நெடுந்தீவு, 4. காரைநகர் – வேரப்பிட்டி, 5. வேலணை – கும்புருப்பிட்டி, 6. புங்குடுதீவு – திகழி, 7. அரியாலை கிழக்கு, 8. வல்லிபுரம். கந்தரோடையைச் சூழ இருக்கும் சுன்னாகம், மல்லாகம், மகியப்பிட்டி, உடுவில் ஆகிய கிராமங்களில் கண்ட பௌத்த மதச் சின்னங்களை கந்தரோடை மையத்திலிருந்து பரவிய சின்னங்களாகக் கொள்ளலாம். 

யாழ்ப்பாணத்தில் பௌத்தமதம் பரவிய இடங்கள் – கந்தரோடை ஒன்றைத் தவிர – கடற்கரையிலிருந்த துறைமுக மையங்களும் வர்த்தக வழிக் குடியேற்ற இடங்களுமாகும் (Coastal Entrepots and Trade Route Settlements). சில ஆய்வாளர்கள் கருதுவது போல அக்காலத்தில் கந்தரோடை வழியாகச் சென்ற வழுக்கையாறு வழியாக கடலுடன் படகுத் தொடர்பு கொண்டிருந்தமையால், கந்தரோடையையும் ஒரு கடல் வர்த்தகவழி மையமாகக் கொள்ளலாம். பெருமளவிலான பௌத்த மத உருவங்களும், சின்னங்களும், கருவூலப் பொருட்களும் கந்தரோடையிலேயே கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 

ஆரம்பகட்ட பௌத்த மதத்தின் பரவலை பகுப்பாய்வு செய்யுமிடத்து அது வர்த்தக வழிகளில் காணப்படுவதும், வர்த்தக உயரடுக்கின் ஆதரவைப் பெற்றதும் புலனாகிறது (Patronised by the Trading Elite). யாழ்ப்பாணத்தில் ஆரம்பகால பெருங்கற் பண்பாட்டுக் குடியேற்றங்கள் இடம் பெற்ற இடங்களாக 18 மையங்கள் இனம் காணப்பட்டிருக்கின்றன. அவற்றில் எட்டு மையங்களில் பௌத்தமதச் சின்னங்கள் காணப்படுகின்றன. இவற்றில் கந்தரோடையும், வல்லிபுரமும் முக்கியமான பௌத்தமத தலங்களாகும்.

யாழ்ப்பாண பௌத்தப் பரவலின் இரண்டாம் கட்டம் (கி.பி 600 – கி.பி. 1200)

ஆரம்பகட்ட யாழ்ப்பாண மையங்களில் காணப்பட்ட வளமான பௌத்த தொல்லியல் கண்டுபிடிப்புகளுக்கும், பிற்கால மையங்களில் காணப்பட்ட குறைவான கண்டுபிடிப்புகளுக்கும் கணிசமான வேறுபாடு காணப்படுகிறது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த பௌத்த மையங்களில் மட்டுமல்ல, மக்களின் குடியேற்றங்களிலும், வாழ்வாதார முறைகளிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுகிறது. இப்பொருளாதாரச் சரிவிற்கான முக்கிய காரணம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் சடுதியாக நின்றுவிட்ட உரோம வர்த்தகமே ஆகும்.  

யாழ்ப்பாணத்தில், பிந்திய கட்ட பௌத்தமதச் சின்னங்கள் காணப்பட்ட இடங்களாக: (கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிந்திய காலத்தைய மேல்மட்டத் தொல்பொருட்களைக் கொண்ட) முதலில் கூறப்பட்ட எட்டு மையங்களுடன், 9. இளவாலை – ஆனைவிழுந்தான், 10. கரவெட்டி – துளுக்கன் கோட்டை, 11. மந்துவில்லுக்குச் சமீபத்திலுள்ள வேரத்திடல், 12. பச்சிலைப்பள்ளி மையங்கள் ஆகியவையும் காணப்படுகின்றன. பச்சிலைப்பள்ளியில் மட்டும் ஆறு பௌத்த மையங்கள் இனம் காணப்பட்டன. பச்சிலைப்பள்ளி என்ற பதம் சமஸ்கிருத பர்ணசாலா என்பதற்கு நிகரானது. பாளி மொழியில் இது பன்னசாலா எனப்படும். இலைகளால் செய்யப்பட்ட ஒரு மண்டபம் என்பது இதன் பொருள். 

யாழ்ப்பாணத்தின் பிற்காலப் பௌத்த மையங்களில் கருவூலப் பொருட்கள் குறைவாகவே உள்ளன; வேறுபட்ட வகைமைகளைக் கொண்ட மட்பாண்டங்களும் காணப்படவில்லை. உள்ளூரில் செய்யப்பட்ட ஒரே வகையான ‘தடித்த விளிம்பு கொண்ட செந்நிற மட்பாண்டங்கள்’ மட்டுமே எல்லாப் பிற்காலப் பௌத்த மையங்களிலும் காணப்படும் முக்கியமான மட்கலன்களாகும்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கந்தரோடையிலும், மற்றும் சில மையங்களிலும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சில குடியிருப்புகளிலும் தென் இலங்கையின் தேரவாத பௌத்தத்தின் செல்வாக்கைக் காண முடிகிறது. 

கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இலங்கையில் சோழர் ஆட்சியின் போது யாழ்ப்பாணத்தில் சைவமதம் பிரபலமடைய ஆரம்பித்தது. கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்னர், யாழ்ப்பாண இராச்சியம் ஆரம்பித்த காலத்திலிருந்து யாழ்ப்பாண மக்களிடையே சைவமதம் மட்டுமே நடைமுறையிலிருந்தது. அக்காலத்தில் பௌத்தமத நடவடிக்கைகள் முற்றாக மறைந்து போயின.  

யாழ்ப்பாணப் பௌத்தம்

யாழ்ப்பாணத்தில் கி.மு. 100 முதல் கி.பி. 800 வரையில் நடைமுறையில் இருந்த பௌத்த மதத்தின் பண்புகள் இலங்கையின் பெருநிலப்பரப்பில் பரவியிருந்த தேரவாத பௌத்தத்தின் பண்புகளிலிருந்து வேறுபட்டு நின்றமையால், அது யாழ்ப்பாணப் பௌத்தம் என்ற தனிப்பெயரைக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்துருவை 1988 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 14 – 16 ஆம் திகதிகளில் சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘யாழ்ப்பாண வரலாற்றில் மதங்கள்’ என்ற பட்டறையில் பேசிய கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி முதன்முதலாக முன்வைத்திருந்தார். இந்த யாழ்ப்பாணப் பௌத்தம் கீழ்காணும் முக்கியமான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்தது.

1. வணிகம்சார் பௌத்தம். 

2. மகாயான பௌத்தம். 

3. பெருங்கற் பண்பாடும் பௌத்தமும் இணைந்த சமரசப் பண்பு.  

4. முருகைக்கல் – சுண்ணாம்புக்கல் கட்டடத் தொழில்நுட்பம். 

5. ஆந்திர எழுத்து வடிவங்களைக் கொண்ட வல்லிபுரப் பொற்சாசனம்.

6. பலவள இயல்புடைய யாழ்ப்பாணப் பௌத்தம் – உலகப் பொது நோக்கு.

(1) வணிகம்சார் பௌத்தம் (Mercantile Buddhism)

யாழ்ப்பாண மையங்களில் பரவிய பௌத்தத்தை, அவ்விடங்களில் தக்கவைத்துக் கொண்டிருந்தது கடல்வழி வர்த்தக நடவடிக்கைகளாகும். யாழ்ப்பாணத்தில் ஆரம்பகால பௌத்தமதம் பரவிய இடங்களான திருவடிநிலை, அரியாலை கிழக்கு, வல்லிபுரம், காரைநகர், வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு என்பன ஏற்கனவே குறிப்பிட்டது போல கடற்கரை மையங்களாகும். அங்கிருந்த முக்கியமான ஒரேயொரு உள்ளூர் மையம் கந்தரோடை. கந்தரோடை யாழ்ப்பாண வர்த்தக வலைப்பின்னலின் நடுவமாக விளங்கிய மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்தமதக் கருவூலப் பொருட்களின் அமைப்பு, கலைப்பொருள் வரிசை, கலாசாரப் பரிணாம வளர்ச்சி (The Setting, Sequence of Artefacts Unearthed and their Cultural Evolution) என்பன ஆந்திராவின் நாகர்ஜுனாகொண்ட, அமராவதி ஆகிய மையங்களில் காணப்பட்ட கலாசார பரிமாண வளர்ச்சியை நிகர்த்துக் காணப்படுகின்றன. மற்றும், கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட புத்தபகவானின் உருவச்சிலைகள் அவற்றின் அமைப்பிலும், சிற்பச் செதுக்குக் கலையிலும் அமராவதி கலைக்கல்லூரிப் பாணியைக் கொண்டிருக்கின்றன. 

மேற்குறிப்பிட்ட பௌத்த மையங்கள் அனைத்தும் ஒன்றில் துறைமுக அங்காடிகளாகவோ அல்லது வணிகப்பாதை மையங்களாகவோ இருந்தன. இவ்விடங்களின் குடியிருப்பு அமைப்புகள் யாழ்ப்பாண பௌத்தம் வர்த்தக உயரடுக்கின் ஆதரைவைப் பெற்று வளர்ச்சியடைந்ததை எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கையின் பெருநிலப்பரப்பில் பௌத்த மதத்தின் பரவல் குளங்களிலிருந்து நீர்ப்பாசனம் செய்த விவசாயச் சமூகத்தினரோடு இணைந்து பரவிய பொழுதில், யாழ்ப்பாணப் பௌத்தத்தின் வருகையும் பரவலும் வணிகப்பாதைகள் வழியாக வணிகத்துடன் இடம்பெற்றன. இந்த வித்தியாசமான பண்பே யாழ்ப்பாணப் பௌத்தத்தை இலங்கையின் பெருநிலத்தில் நடைமுறையிலிருந்த சிங்கள மக்களின் பௌத்தத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டிய ஒரு முக்கிய அம்சமாகும்.

கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து பௌத்த மதத்தின் பரவல் சிறப்பாக நிறுவனப்படுத்தப்பட்ட உரோம வர்த்தகவழிகளால் நடைபெற்றபடியினால், யாழ்ப்பாணத்தில் உருவான புதிய குடியிருப்புகளின் எழுச்சியோடு பௌத்த மதமும் பரவலாயிற்று. இளவாலை, கரவெட்டி, வேரத்திடல், பச்சிலைப்பள்ளி ஆகிய இரண்டாம் கட்ட பெருங்கற் பண்பாட்டுக் குடியிருப்புகளில் பௌத்த மதச் சின்னங்களே அவ்விடங்களின் ஆரம்பகால மதச் சின்னங்களாகக் காணப்படுகின்றன. 

பௌத்த மதத்தின் உள்ளார்ந்த அம்சம் நாடாண்கலையுடனான அதன் இணைப்பு ஆகும் (Link with Statecraft). அந்த மதம் தென்னாசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் மாநிலங்களையும், அரசுகளையும் உருவாக்கிய ஊக்கியாகவும் அல்லது காரணமாகவும் இருந்திருக்கிறது. மாமன்னன் அசோகன் பௌத்தமதம் சார்ந்து தன்னைத் தேவநம்பிரிய பியதாஸி ஆக்கியதும், இலங்கை அரசன் தீசன் தன்னைத் தேவநம்பிய தீசன் என அழைத்ததும் உதாரணங்கள். யாழ்ப்பாணத்திலும் ஆரம்பகால நூற்றாண்டுகளில் பௌத்தமும், அதன் வர்த்தகப் பின்னணியும் அங்கே உருவான நகரக் குடியரசின் அடித்தளமாக இருந்திருக்கின்றன. 

தமிழ்க் காப்பியமான மணிமேகலை நாகநாட்டின் (யாழ்ப்பாணம்) அரச மையம் பௌத்த மதம் சார்ந்தது எனவும், அதை ஆட்சி செய்த வளைவாணன் என்ற நாக மன்னன் பௌத்த மதத்தினன் எனவும், நாகநாடு சோழ நாட்டுடன் கொண்டிருந்த கடல்வழித் தொடர்புகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. மற்றொரு தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் நாகநாட்டையும், அது சோழ நாட்டின் தலைநகரமான காவிரிப்பூம்பட்டினத்துடன் கொண்டிருந்த இணைப்பையும் பற்றிக் கூறுகிறது. வல்லிபுரப் பொற்சாசனம் நாகதீவின் வடகரையில் ஒரு பிராந்திய ஆட்சியாளன் ஒரு பௌத்த விகாரையைக் கட்டியதை எடுத்துரைக்கிறது.

தொல்லியல் சான்றுகள் இலங்கையில் பாரம்பரியமாகப் பேசப்படும் பௌத்த மதத்தின் தோற்றத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. இலங்கையின் பௌத்தமதப் பாளிமொழி இலக்கியங்கள் இரு முக்கியமான சம்பவங்களை எடுத்துரைக்கின்றன.

  1. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடஇந்தியாவிலிருந்து இலங்கை வந்த ஆரியர்களின் இடப்பெயர்வு.
  2. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வழியாக வந்த பௌத்த மதம்.

இச்சம்பவங்கள் உண்மையான நிகழ்வுகளாக இருந்திருப்பின் அவற்றை நிரூபிக்கக்கூடிய கருவூலப் பொருட்களோ, மற்றும் சான்றுகளோ அகழ்வாய்வுகளில் காணப்பட வேண்டும். அப்படியான சான்றுகள் இதுவரை காணப்படவில்லை.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மிகப் பரவலாகப் புழக்கத்திலிருந்த மட்பாண்டம் வடக்கத்திய மெருகூட்டப்பெற்ற கறுப்புநிறப் பாண்டம் (Northern Black Polished Ware: NBPW) ஆகும். பாளி இலக்கியங்கள் கூறும் வட இந்திய மக்களின் ஒரு பாரிய இடப்பெயர்வு ஏற்பட்டிருக்குமானால் இலங்கையின் பல பகுதிகளில் பரவலாக இந்த மட்பாண்ட ஓடுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நிலமை அப்படி அமையவில்லை. யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் வட இந்திய மெருகூட்டப்பெற்ற கறுப்புநிற மட்பாண்டங்கள் (கி.மு. 500 – 100) சில கிடைத்திருக்கின்றன. இவை வட இந்திய வர்த்தகம் வழியாக வந்த மட்பாண்டங்கள். யாழ்ப்பாணத்தில் வேறு எந்த மையங்களிலும் இந்த மட்பாண்டம் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் பௌத்த மதம் சம்பந்தமான கலைப் பொருட்கள் எதுவுமே காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (Thiagarajah, S. 2022: 26). இலங்கையின் பெருநிலப் பகுதிகளின் அகழ்வுகளில் வட இந்திய மெருகூட்டப்பெற்ற கறுப்புநிற மட்பாண்டங்கள் அநுராதபுரத்தில் சில ஓடுகளும் (Deraniyagala, S. 1992); திஸ்ஸமகாராமவில் சிலவும் (Weisshaar et al. 2001); மாந்தையில் ஒரே ஒரு கலவோடும் (Carswell, J. 2013: 216) காணப்பட்டமை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றைத் தவிர இலங்கையின் வேறு பாகங்களில் இந்த வட இந்திய மட்பாண்டம் காணப்பட்டதாக அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. 

இதனோடு ஒப்பிடும் போது தென்னிந்தியப் பெருங்கற் பண்பாட்டுடன் இணைந்த கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் இலங்கைத் தீவு முழுவதும் செறிவாகப் பரவியிருப்பது ஏற்கனவே இங்கு (இயல் 10) எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.

தொல்லியல் ரீதியாக யாழ்ப்பாணப் பௌத்தம் தென்னிந்தியப் பௌத்தத்தின் ஒரு பிரிவாகவே காணப்படுகிறது. முக்கியமாக ஆந்திர நாட்டிலிருந்தே இவ்வகையான பௌத்தம் யாழ்ப்பாணத்தைக் கடல்வர்த்தக வழியாக வந்தடைந்திருப்பதை இனிக் கூறப்படும் பல்வேறு வகையான சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.

(2) மகாயான பௌத்தம் (Mahayana Buddhism) 

தென் இந்தியாவில் அமராவதி, நாகர்ஜுனாகொண்ட, காஞ்சி ஆகிய மையங்களில் கடைப்பிடிக்கப்பட்டது போன்ற ஒரு பௌத்த வழிபாட்டு முறை, யாழ்ப்பாண மக்களின் தெய்வ வழிபாட்டிற்கும், உணர்ச்சிகரமான பக்தி ஈடுபாட்டுக்கும் உகந்ததாக அமைந்தது. மகாயான பௌத்தம் என அழைக்கப்பட்ட இந்த வழிபாட்டு முறை பெரும்பாலான மக்களின் தேவைகளை நிறைவேற்றி, அக்காலத்திற்கு ஏற்றதாக இருந்தமையால் அது பௌத்த மதத்தின் பெரிய வாகனம் (Greater vehicle of Buddhism) என அழைக்கப்பட்டது. 

மகாயான பௌத்தத்தின் கருத்துகள் புத்தபகவானின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், இந்த இயக்கம் முதலில் ஆரம்பமானது தென்னிந்தியாவில்தான். முதலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆந்திர தேசத்தில் வாழ்ந்த நாகர்ஜுனா பௌத்த மததத்தின் புனித போல் (St. Paul of Buddhism) என அழைக்கப்படுகிறார். அவரே மகாயான பௌத்தத்தின் ஆரம்ப கர்த்தா ஆவார் (Hirakawa Akira, 1993: 252; Ray, R.A. 1994: 404).

நாகர்ஜுனா சூனியவாதம் (Doctrine of the Void) என்னும் மெய்யியல் தத்துவக் கோட்பாட்டைப் போதித்தார். ‘எங்களைச் சுற்றிவர உள்ள அனைத்தும் வெறுமைதான். நாங்கள் காண்பது எல்லாம் வெறும் பிரமை, மாயை’ என்னும் கோட்பாடு இது. மனிதர்களின் மறுபிறவிகளின் முடிவில் ஒவ்வொரு பௌத்தனும் தேடும் ‘நிர்வாணம்’ இந்த வெறுமைதான். இந்தத் தத்துவத்தை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஆதி சங்கராச்சாரியார் புதிய உறையிலிட்டு ‘மாயாவாதம்’ என்ற பெயரில்திரும்பவும் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

மகாயான பௌத்தத்தின் மற்றொரு அம்சம் மைத்திரேய புத்தர் என்னும் ‘போதிசத்துவர்’, இந்த உலகத்தைச் சேவிக்க இன்னொரு தடவை வந்து பிறப்பார் என்ற நம்பிக்கை. இவர் தனது சொந்தத் துன்பங்களைச் சகித்து உலக மக்களை உய்யவைப்பார் எனக் கூறப்படுகிறது. இதன் எதிரொலிகளைக் கிறிஸ்தவ மதத்திலும் காணலாம். 

கி.மு. முதலாம் நூற்றாண்டு காலத்திலே ஆந்திராவிலிருந்து மகாயான பௌத்தம் தெற்கே தமிழகத்திற்கும், யாழ்ப்பாண மையங்களுக்கும் பரவிவிட்டிருந்தது. ஆந்திராவிலிருந்து வடக்கே இந்தியா எங்கும் பரவியது. இந்தியாவில் குப்தர்கால ஆட்சியின் போது (கி.பி. 320 – கி.பி. 550) மகாயான பௌத்தம் இந்தியா முழுவதிலும் பரவியிருந்தது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன யாத்திரிகரான ஹூவான் திஸாங் இந்தியாவில் தேரவாத பௌத்தம் அழிவின் விளிம்பில் இருப்பதாகப் பதிவு செய்திருக்கிறார் (Basham, A.L. 1982: 267).

தென்னிந்தியாவிலிருந்து போதிதர்மர் (தா-மோ) இந்த மத்தை சீனாவிற்கும், அங்கிருந்து யப்பானுக்கும் எடுத்துச் சென்றார். இந்தியாவைப் போல அல்லாது இலங்கையின் பெருநிலத்தில் அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு தேரவாத பௌத்தம் பெருவளர்ச்சி கண்டது.  

தனிமனித மதமான மகாயான பௌத்தம் 

தென்னிந்தியாவில் (யாழ்ப்பாணத்திலும்) பௌத்தம் முதன்முதலாக ஒரு சமூகக் கருத்தியலாகவும் (Social Ideology), தனி மனித சமயமாகவும் உருவெடுத்தது. இலங்கையில் உள்ள எழுத்துப் பதிவுகள், அக்காலத்தில் பௌத்த குருமார்கள் காடுகளிலுள்ள அய-வெட்டுக் குகைகளில் (Drip-ledge Caves) வாழ்ந்திருந்தார்கள் எனக் கூறும் காலத்தில், தென்னிந்தியப் பௌத்த மடாலயங்களும், புத்தரின் உருவச் சிலைகளும் ஒரு தனிமனித மதத்தின் உருவாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது (Seneviratne, S. 2003: 19).

தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்த அமராவதியில்தான் கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தபிரானின் உருவச்சிலைகள் முதன் முதலாக மனித உருவில் உருவாக்கப்பட்டன (காந்தார, மதுரா புத்த சிலைகள் மூன்றாம் – ஐந்தாம் நூற்றாண்டுகளிலும், சரநாத் சிலைகள் குப்த மன்னர் காலத்திலும் உருவானவை). அதுவரை காலமும் புத்தரின் பாதபீடங்களை மட்டுமே வணங்கி வந்த மக்கள் அவரை ஒரு மனித உருவத்தில் வணங்க ஆரம்பித்தது மகாயான பௌத்தத்தைத் தனிமனித சமயமயமாக்கும் முயற்சியின் முக்கிய அம்சமாகும்.

தென்னிந்தியர்கள் புத்தரை இறைவனின் அவதாரமாக நம்பினார்கள். அந்த அவதாரங்களை அவர்கள் தெய்வ உருவங்களாகச் சமைத்தார்கள். தென்னிந்தியத் தெய்வ உருவங்களின் நெற்றியில் ஒரு பொட்டு அமைந்திருப்பதைக் காணலாம். ஆரம்பகால அமராவதி புத்தர் சிலைகள் அவரது நெற்றியில் பாரம்பரியமான பொட்டைக் (திலகம்) கொண்டிருந்தன. அமராவதிக் கலைவடிவைக் கொண்ட புத்தர் சிலைகள் காணப்படும் கந்தரோடை, காஞ்சி ஆகிய மையங்களில் கண்ட புத்தரின் சிலைகளிலும் இப்பொட்டைக் காணலாம்.  

பொட்டணிந்த புத்தபிரான் – கந்தரோடை.

பொட்டணிந்த புத்தபிரான் – அமராவதி.      

பொட்டணிந்த புத்தபிரான் – காஞ்சி.

இந்தியாவிலும், இலங்கையிலும் நீண்ட காலத்திற்கு புத்தபிரான் வழிபாடு அவரது பாதச் சுவடுகளைப் பதித்த கற்களை வணங்குதலைக் கொண்டிருந்தது. வட இந்தியாவில் கி.மு. 185 ஆம் ஆண்டிலிருந்து பாரூத்திலும் (Bharhut), கி.மு. 100 ஆம் ஆண்டிலிருந்து சாஞ்சியிலும் இப் புத்தப் பாதக் கற்கள் தயாரிக்கப்பட்டன. 

ஆந்திராவில் ஆரம்பிக்கப்பட்ட மகாயான பௌத்தம் புத்த பகவானின் மனித வடிவிலான உருவச்சிலைகளை உருவாக்குவதற்கு முன்னர், வட இந்தியாவில் இம்மாதிரியான உருவச்சிலைகளை வடிப்பதற்கு எவருமே முன்வரவில்லை. புத்த பகவானின் மனித உருவிலான உருவச்சிலைகளைத் (Buddharūpa) தயாரிப்பதற்கு தேரவாத பௌத்தர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். தென்னிந்திய அமராவதி மனித வடிவிலான புத்தச்சிலைகளை அவர்கள் தடை செய்தது நன்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது (Their ban on South Indian anthropomorphic Buddharūpas – ‘Aniconism’ by the early Theravada Buddhists is well documented).

வட இந்தியாவில் மகாயான பௌளத்தம் பரவி, மக்களின் ஆதரவைப் பெற்ற பின்னரே கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பார்க்காமில் (Parkham) புத்தரின் உருவச் சிலைகள் தயாரிக்கப்பட்டன. தொடர்ந்து மதுராவிலிருந்தும் புத்தச் சிற்பங்கள் வெளிவந்தன. அமராவதிப் பாணியைப் பின்பற்றி இந்த ஆரம்பகால புத்தரின் சிலைகளும் நெற்றியில் பொட்டைக் கொண்டிருந்தன.

புத்தரின் பாதபீடிகை, கந்தரோடை. Image Source: C.E. Godakumbura.

ஆரம்ப நாட்களில் புத்தரின் பாதபீடிகைகளை மட்டுமே வணங்கிவந்த மக்கள், கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து புத்த பகவானின் உருவச் சிலைகளை வணங்க ஆரம்பித்தது புத்தமத வழிபாட்டில் மகாயான பௌத்தம் கொண்டு வந்த மதப் புரட்சி என்றே கூறவேண்டும். 

போல் பீரிஸ், சுன்னாகத்தில் தலை வேறாகக் கண்ட புத்த சிற்பமும் கந்தரோடையில் கண்ட சிற்பப் பகுதியும். தலை பொருத்தப்பட்டு உடைவு ஒட்டப்பட்ட சுன்னாகம் சிற்பம் (நடுவில் உள்ள படம்) அநுராதபுர அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இச்சிற்பம் சுன்னாகத்தில் கண்டெடுக்கப்பட்டது என்பதற்கான எதுவிதமான தகவலுமில்லை.

இலங்கையின் பெருநிலப்பரப்பில் ஆரம்பகால புத்தபிரானின் உருவ வணக்கத்தை அறிமுகப்படுத்தியவர்கள் அபயகிரியில் நிலைகொண்ட மகாயான பௌத்தர்கள் என நம்பப்படுகிறது. புத்தபகவானின் உருவச்சிலைகளை வணங்குவது தேரவாத பௌத்த தத்துவமான ‘புலணுணர்வகளால் பெறும் அனுபவங்களைத் துறத்தல்’ (Renunciation of all Sensual Experiences) என்ற கொள்கைக்கு எதிரானது ஆகையால் தேரவாத பௌத்தர்கள் அவ்வணக்கத்தை அனுமதிக்கவில்லை. ஆனால் புத்தரின் உருவ வணக்கம் மக்களிடையே பிரபலமாவதைக் கண்ட தேரவாதிகள் இறுதியில் அவ்வணக்கத்தைத் தாங்களும் ஏற்றுக்கொண்டார்கள். 

அமராவதி, மதுரா, காந்தாரச் சிற்பக் கலைகளில் புத்த பகவானின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களும், ஜாதகக் கதைகளில் கூறப்படும் அவரது முற்பிறப்பு நிகழ்ச்சிகளும் விவரணக் காட்சிச் சிலைகளாகவும், பாறைக் குடைவரை உருவங்களாகவும் செதுக்கப்பட்டு பௌத்தக் கோயில்களிலும், மற்றைய பௌத்த நிறுவனங்களிலும் காணப்படுகின்றன. இத்தகைய சிற்ப வேலைகள் எதுவும் இலங்கையின் புத்த கோயில்களில் கிடையாது. இலங்கையில் காணப்படும் பௌத்தக் கருப்பொருட்களைக் காட்டும் சில பளிங்குச் சிற்பங்கள் அமராவதியிலிருந்தும், நாகர்ஜுனாகொண்டாவிலிருந்தும் பக்தியுள்ள வர்த்தகர்களால் காணிக்கைகளாக அளிக்கப்பட்டவையாகும் (Bopearachchi, O. 2012: 64).  

கந்தரோடைப் புத்த சிலைகளின் உருவ அமைப்பு 

கந்தரோடையில் போல் பீரிஸ் மேற்கொண்ட மேலாய்வுகளினதும், அகழாய்வுகளினதும் பயனாக பல புத்த சிற்பங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவற்றில் சில யாழ்ப்பாண அரும்பொருளகத்திற்கும், சில அநுராதபுர அரும்பொருளகத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன. 

இச்சிற்பங்கள் யாவும் தென்னிந்தியச் சிற்பக்கலை மரபின் செல்வாக்கினைப் பிரதிபலித்து நிற்பதனை நன்கு அவதானிக்க முடிகிறது. கந்தரோடை அகழ்வுகளின் போது வெளிப்படுத்தப்பட்ட வெண் வைரக்கல்லினாலான புத்தர் சிலைகள் அமராவதிக் கலை மரபின் கலைச் செழிப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. கந்தரோடைப் பௌத்த மதமானது தென்னிந்தியாவிலிருந்தே இங்கே வருகை தந்தது என்பதை உறுதிப்படுத்தும் சின்னங்களாகவே இச்சிற்பங்களைக் காண முடிகிறது.

ஆசன நிலையில் அமைக்கப்பட்ட வெண் வைரக்கல்லினாலான புத்தர் சிற்பத்தின் சிறப்பியல்புகள் இங்கு நோக்கத்தக்கவை. சுமார் 15 அந்தர் நிறையுடைய இச்சிற்பமானது ஐந்தரை அடி அகலமான மார்புப் பகுதிகளைக் கொண்டுள்ளது. சிற்ப அமைப்பு முறையை நோக்கும் போது இங்கு அமராவதிக் கலை மரபில் பின்பற்றப்பட்ட ‘ஒட்டும் முறை’ பின்பற்றப்பட்டிருந்தமையைக் காண முடிகிறது. அதாவது கைகள், கால்கள் என்பன வெவ்வேறாகச் செய்யப்பட்டு அவற்றை உடலோடு பொருத்துகின்ற முறை ஒன்று இருந்தமையினை கந்தரோடையிலிருந்து பெற்றுக்கொண்ட புத்தர் சிற்பங்கள் காட்டி நிற்கின்றன (கிருஷ்ணராசா, செ. 1998: 35). அநுராதபுரத்தில் காணப்படும் ஆரம்பகால பௌத்தச் சிற்பங்களும் அமராவதிக் கலைமரபின் ஒட்டும் முறையில் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆனந்தா குமாரசாமி குறிப்பிட்டிருக்கிறார் (Coomaraswamy, A. K. 1935, 1980).

நிற்கும் வகையைச் சேர்ந்த புத்தர் சிற்பமொன்று 1917 இல் போல் பீரிஸ்ஸினால் சுன்னாகத்திற்கு அண்மையில் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டது (மேலுள்ள படம் பார்க்கவும்). சுன்னாகத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இச்சிற்பமே ஓரளவுக்குப் பூரணத்துவமான நிலையில் பாதுகாக்கப்பட்டிருந்தது. சிற்பத்தின் தலைப்பகுதி வேறாக அருகே காணப்பட்டது (Pieris, P.E. 1917: 20-21). இச்சிற்பமானது 12 அடி உயரம் கொண்டதாகும். அதன் மார்பகம் 20 அங்குலங்களாகும். தனி வெண்வைரக் கல்லினால் அமைக்கப்பட்ட இச்சிற்பத்தின் அமைதி அமராவதிக் கலைப்பாணியை மாதிரியாகக் கொண்டுள்ளது (கிருஷ்ணராசா, செ. 1998: 35).

இச்சிற்பத்தின் அமைப்பு முறைமையைப் பொறுத்தமட்டில் வலது மார்பு, தோள் ஆகிய பகுதிகள் தவிர ஏனைய பகுதிகள் போர்வையினால் மறைக்கப்பட்ட நிலையில் தோற்றமளிப்பதனைக் காணலாம். போர்வையின் அமைப்பு பாதத்தினை மறைத்த நிலையில் பாதத்திலிருந்து மடிக்கப்பட்டு மீண்டும் இடது கரத்தினூடாக கீழ் நோக்கித் தொங்குவதாகச் செதுக்கப்பட்டுள்ளது. மடிப்புகள் யாவும் மிகத் தெளிவாகவும், ஒன்றுக்கொன்று சமாந்தரமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தின் தலையமைப்பு காந்தாரக்கலை மரபின் சுருள்கேச முறையில் வடிக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மதுராக்கலை மரபில் காணப்படும் உச்சிக்கொண்டை முறையும் இச்சிற்பத்தில் பின்பற்றப்பட்டுள்ளது (கிருஷ்ணராசா, செ. 1998: 35-36).

நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிற்பங்களில் பல தலையற்றவையாகவே அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவை யாவும் வெண் வைரக்கல்லினாலேயே செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றுள் ஒன்று மைத்திரேயர் வகையைச் சேர்ந்தது. இதன் உயரம் 3 அடி 6 அங்குலங்களாகும். மைத்திரேய புத்தரின் ஆடையலங்காரமும், உடைந்த நிலையில் வேறாகக் கிடைத்த அதன் தலையின் அமைப்பும், கலை வனப்பு வாய்ந்தவையாக உள்ளன. இங்கு மைத்திரேய புத்தரின் மேலாடையானது வலது கரத்தினூடாகக் கீழே தொங்குவது குறிப்பிடத்தக்கது. இச்சிற்பத்தில் புத்தரின் சுருள் சுருளான கேச அமைப்பு காந்தாரக் கலைப்பாணியை வெளிப்படுத்துவதாக உள்ளது (கிருஷ்ணராசா, செ. 1998: 36).

கந்தரோடையில் அகழ்வு மேற்கொண்ட பொழுது வெளிப்படுத்தப்பட்ட மற்றொரு சிற்ப வடிவம் சந்திரவட்டக்கல் ஆகும். பௌத்த மரபில் சந்திரவட்டக்கல் கலையானது தத்துவ அடிப்படையிலும், கலை ரீதியாகவும் முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கையில் வளர்ச்சி பெற்றிருந்த தனித்துவமான பௌத்தக் கலை மரபுக்கு ஒரு சிறந்த உதாரணமாக சந்திரவட்டக் கல்லையே கலைவல்லுநர் எடுத்துக்காட்டுவர். அந்த வகையில் கந்தரோடையில் வெளிப்படுத்தப்பட்ட சந்திரவட்டக்கல்லின் தனிப் பண்புகளையும் நோக்கவேண்டும்.

இங்கு வெளிப்படுத்தப்பட்ட சந்திரவட்டக் கல்லானது மூன்று கற்துண்டுகளால் ஆனது. எதுவிதமான அலங்கார வேலைப்பாடுகளும் அற்ற நிலையில், அரைவட்ட வடிவத்தில் வெறுங்கோடுகளால் மாத்திரம் செதுக்கப்பட்டதாக இச்சந்திரவட்டக்கல் காட்சியளிக்கிறது. இத்தன்மையானது ஆந்திரக் கலைமரபில் நாகர்ஜுனாவில் காணப்பட்ட சந்திரவட்டக்கல்லின் கருப்பொருளை நினைவூட்டுவதாக உள்ளது. எனவே கந்தரோடைக்கும் நாகர்ஜுனாகொண்டாவுக்குமான தொடர்பு காலத்தால் முற்பட்டது என்பதனையும், கலைப் பாரம்பரியங்கள் இவ்விரண்டு மையங்களுக்குமிடையே நெருக்கமானவை என்பதனையும் உணர்ந்துகொள்ள முடிகிறது (கிருஷ்ணராசா, செ. 1998: 36-37).

மற்றைய மையங்களின் புத்த சிலைகள்

கிறிஸ்தாப்தத்தை அடுத்த நூற்றாண்டுகளில் கந்தரோடை, வல்லிபுரம், யாழ்ப்பாணப் பண்ணை என்பன முக்கிய நகரங்களாகவும், வர்த்தக மையங்களாகவும் விளங்கின. இதனால் இவ்விடங்களில் பலநாட்டு வர்த்தகர்களின் நடமாட்டம் ஏற்பட்டதுடன் அவர்களது பண்பாட்டுச் செல்வாக்கும் இவ்விடங்களில் காணப்பட்டது. குறிப்பாக கிரேக்க, ரோம, அரேபிய, சீன, இந்தியத் தொடர்புகளின் முக்கியத்துவத்தை இவ்விடங்களில் கண்ட தொல்பொருட் சின்னங்களில் காணலாம். கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்களில் பௌத்த சின்னங்கள் பெருமளவில் காணப்பட்டமைக்கு சமகாலத்தில் தென்னிந்தியாவில், சிறப்பாக ஆந்திராவில், பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்ததுடன், இம்மையங்கள் ஆந்திராவுடன் நெருங்கிய கலாசாரத் தொடர்பினைக் கொண்டிருந்ததும் காரணமாகும். 

வல்லிபுரத்திலமைந்த விஷ்ணு கோயிலுக்கு அருகாமையில் மிகப் பழைய கட்டட அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் மேற்கொண்ட மேலாய்வின் போது விஷ்ணு கோயிலுக்கு வடக்கே 50 யார் தொலைவில் புத்தரது சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவகையான பளிங்குக் கல்லினால் ஆக்கப்பட்ட நிற்கும் நிலையிலான இப்புத்தர் சிலையின் வலதுகரம் உடைந்த நிலையில் உள்ளது. வலது மார்பும் தோளும் அங்கவஸ்திரத்தினால் மறைக்கப்பட்டிருந்தது. ஆடையின் அமைப்பு பாதத்தைத் தொட்டு மடிக்கப்பட்டு இடது கரத்திலிருந்து கீழ் நோக்கித் தொங்குவதாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் பொதுவான அமைப்பும், ஆடை மடிப்புகளில் காணப்படும் தெளிவான தன்மையும் ஆந்திரக் கலைமரபின் செல்வாக்கினைப் பிரதிபலிக்கின்றன (Lewis, J.P. 1916). மேற்படி புத்தரின் சிலை பற்றி ஏற்கனவே இங்கு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சிலகாலம் யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த இச்சிலை 1906 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆளுநராகவிருந்த (Governor) ஸேர் ஹென்றி பிளேக்கினால் சியாம் நாட்டு (இன்றைய தாய்லாந்து) அரசருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது (The Ceylon Antiquary and Literary Register 1916-17, Vol. 2, Part 2, p.96-97). 

1954 ஆம் ஆண்டில் புத்தூர் என்ற கிராமத்தில் ஒரு புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. புத்தூரையும் சுன்னாகத்தையும் இணைக்கும் பிரதான வீதியின் மேற்குப் பகுதியில் நிலாவரை என்ற இடத்திற்கு அண்மையில் இச்சிலை கண்டெடுக்கப்பட்டது. ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லால் ஆக்கப்பட்ட இச்சிற்பத்தின் பாகங்கள் உடைந்த நிலையில் இருந்தன. இது 3 அடி 3 அங்குல உயரமுடையது. தலை மாத்திரம் 1 அடி 2 அங்குல உயரத்தைக் கொண்டது (Ceylon Today, 1955; 4: p.17). இச்சிலையின் சிற்பக்கலை வடிவும், அங்க அமைப்பும், உடையின் பாணியும் வல்லிபுரப் புத்தர் சிலையை ஒத்திருந்தன (புஷ்பரட்ணம், ப. 2024).

தொடரும்.



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்