இலங்கையில் இன்று ‘மலையகத் தமிழர்கள்’ என அடையாளப்படுத்தப்படுகின்ற மக்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் தெற்காசியா முழுவதும் பரவியிருந்த மேலைத்தேயக் காலனித்துவத்தின் விளைவாகத் தோன்றியவர்கள் ஆவர். குறிப்பாக, பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் தவிர்க்க முடியாத ஒரு விளைவாக மலையகத்தில் குடியேற்றப்பட்டவர்கள்.

இம்மக்கள் தென்னிந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். வரலாற்றுத் தகவல்களின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து சுமார் 35% பேரும், சேலம் மாவட்டத்திலிருந்து 18% பேரும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 10% பேரும், மதுரையிலிருந்து 8% பேரும், இராமநாதபுரத்திலிருந்து 7% பேரும், புதுக்கோட்டையிலிருந்து 7% பேரும், தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து 5% பேரும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 3% பேரும், வட ஆற்காடு, கோயம்புத்தூர் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 2% பேரும் தோட்டத்துறை சார்ந்து இங்கு வருகை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தோட்டத்துறை சாராத இந்தியர்களும் இலங்கைக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். இவர்களின் புலப்பெயர்வில் திருநெல்வேலி மாவட்டத்தின் பங்களிப்பு மிக அதிகமாக (40%) இருந்தது. தஞ்சாவூரிலிருந்து 15% பேரும், மலபார் பகுதியிலிருந்து 8% பேரும், மதுரையிலிருந்து 6% பேரும், திருவிதாங்கூரிலிருந்து 5% பேரும், சென்னையிலிருந்து 4% பேரும் புலம்பெயர்ந்துள்ளனர். மேலும், புதுக்கோட்டையிலிருந்து 1% பேரும் பிற மாவட்டங்களிலிருந்து 3% பேரும் இலங்கைக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.
ஆரம்பகாலத்தில் இதற்காக ஆள் திரட்டுவதற்காகத் தனிப்பட்ட செல்வாக்குள்ள நபர்கள் பயன்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ‘கங்காணி முறை’ அறிமுகப்படுத்தப்பட்டது. கங்காணி முறையின் கீழ், பெரிய கங்காணிமார்கள் தமிழ்நாட்டின் தங்கள் சொந்தக் கிராமங்கள் மற்றும் அதன் அயல் கிராமங்களில் இருந்து பல்வேறு அடித்தள மக்களை, இலங்கையிலுள்ள கோப்பி, தேயிலை மற்றும் தென்னந் தோட்டங்களில் பணியாற்றுவதற்காகத் திரட்டி அழைத்து வந்தனர்.
இவர்கள் வந்த வழித்தடம் என்பது அக்காலப் பகுதியில் மிகவும் பயங்கரமானதாக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அவர்கள் திரட்டப்பட்ட கிராமங்களில் இருந்து தூத்துக்குடி துறைமுகப் பகுதிக்கும் அல்லது இராமேஸ்வரம் மண்டபப் பகுதிக்கும் பெரும்பாலும் கால்நடையாகவே கூட்டி வரப்பட்டிருக்கிறார்கள். சுமார் 300 முதல் 400 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர்கள் கால்நடையாக நடக்க வைக்கப்பட்டு, அங்கு தங்கவைக்கப்பட்டனர். பின்னர், சிறு சிறு படகுகளில், சிறிய தொகையினராக, அவர்கள் இலங்கையின் துறைமுகங்களுக்கு, குறிப்பாக தலைமன்னார் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.
பிற்காலத்தில், இவர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கும் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அழைத்துவரப்பட்ட மக்கள், அங்கு சிறிது காலம் தங்க வைக்கப்பட்ட பின்னர், அடர்ந்த வனப்பகுதிகளாக இருந்த இலங்கையின் வளர்ச்சி அடையாத, வீதிகளற்ற, நாகரிகமற்ற பகுதிகளின் ஊடாகக் கால்நடையாக நடத்திச் செல்லப்பட்டபோது, அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் வரலாற்றின் பெரும் துயரங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அவர்கள் தங்கள் பயணத்தின்போது பல சவால்களை எதிர்கொண்டனர். முதலாவதாக, அவர்கள் பெரும் காட்டாற்று வெள்ளங்களைக் கடக்க வேண்டியிருந்தது; இரண்டாவதாக, காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருந்தது; மூன்றாவதாக, பசி, பட்டினி மற்றும் பஞ்சம் அவர்களை வாட்டி வதைத்தது. இதனால், அவர்கள் வழிநெடுகிலும் தங்கள் உறவினர்களை – கணவன், மனைவி, அன்னை, தந்தை, குழந்தை – எனப் பலரை இழக்க நேரிட்டது. இறந்தவர்களின் சடலங்களை, அவர்கள் நடந்து வந்த அந்த வழித்தடம் முழுவதும் கிடத்தியே வந்ததாக, மலையகத்தின் மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் பதிவு செய்கின்றார்.
“ஆழப்புதைந்த
தேயிலைச் செடியின்
அடி புதைந்த
அப்பனின் சிதைமேல்
ஏழை மகவும் ஏறி மிதித்து
இங்கவர் வாழ்வோ
எங்கவர் தருவர்”
இந்த அடையாளங்களைக் (இறந்தவர்களின் சடலங்களைக்) கொண்டுதான், அவர்களைப் பின் தொடர்ந்து வந்த ஏனைய மக்கள் தொகையினர் அந்தக் காட்டு வழித்தடங்களை அடையாளம் கண்டு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வரலாற்று நிகழ்வில் உள்ள துயரம் என்னவென்றால், இந்தத் துயரம் ஒன்றரை நூற்றாண்டுகள் தொடர்ந்தது என்பதே ஆகும். 1823 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வரலாற்றுப் பெருந்துயரம், 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடையும் வரை நீடித்தது. இந்த ஒன்றரை நூற்றாண்டு கால வரலாற்றுத் துயரங்களுக்கு ஊடாக, இலங்கையில் குடியேறிய மக்கள் தொகையை விட, நான்கு அல்லது ஐந்து மடங்கான மக்கள் தொகை, காடுகளிலும், காட்டாற்று வெள்ளத்திலும், கொடிய நோய்களின் தாக்கத்திலும் அழிந்து போனதாகவே அவதானிக்க முடிகிறது.
ஏனென்றால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, மலையகப் பகுதிகளில் அவர்கள் பெருந்தோட்டங்களை உருவாக்கிய அடர்ந்த கானகப் பகுதிகளுக்கு வீதிகளோ, புகையிரதப் பாதைகளோ, முறையான பாதுகாப்பு வசதிகளோ, தங்குமிடங்களோ, வீட்டு வசதிகளோ ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனவே, அவர்கள் அடர்ந்த கானகங்களிலேயே படுத்து உறங்கினார்கள்; ஒற்றையடிப் பாதைகளில் நடந்தார்கள்; பாம்புக்கடி மற்றும் விலங்குகளின் தாக்குதலால் மாண்டு மடிந்தார்கள்.
இலங்கையின் தேயிலை நூற்றாண்டு வரலாற்றை எழுதிய டி.எம். போரஸ்ட், தனது ‘நூறு ஆண்டுகால இலங்கைத் தேயிலை’ (A Hundred Years of Ceylon Tea) என்ற நூலில், 1850 ஆம் ஆண்டு தெல்தெனியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைப் பற்றிப் பதிவு செய்கிறார். அந்த வெள்ளம் 500 அடி உயரத்திற்குப் பாய்ந்ததாகக் கூறுகின்றார். அத்தகைய சவால்மிக்க சூழ்நிலையில்தான், இந்தப் பனி படர்ந்த மலைச் சிகரங்களிலே, 1,000 அடி முதல் 6,000 அடி வரையான உயரங்களில், அவர்கள் செல்வம் கொழிக்கும் தேயிலை, இறப்பர், தென்னந் தோட்டங்களை மட்டுமின்றி, ஆரம்பகாலக் கோப்பித் தோட்டங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தத் தோட்டங்களை உருவாக்குவதில், காலனித்துவவாதிகளான பிரித்தானியர்கள், ஸ்கொட்லாந்துக்காரர்கள், வேல்ஸ் நாட்டவர்கள் மற்றும் அவர்களது அரசில், ஆட்சியில், படைத்துறையில் பணியாற்றிய ஐரோப்பிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் ஈடுபட்டனர். இவர்கள் அரசு அதிகாரிகளாகவும், இராணுவ அதிகாரிகளாகவும், நிர்வாக அதிகாரிகளாகவும் அல்லது செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இலங்கையின் மலைக்காடுகளை விலை கொடுத்து வாங்கி அங்கே தோட்டங்களை உருவாக்க, அந்தத் தோட்டங்களுக்குத் தேவையான, பெருமளவு உடல் உழைப்பை வழங்கக்கூடிய, மிகவும் அர்ப்பணிப்பு மிக்க, கடின உழைப்பாளிகளான தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அவர்களுக்குக் கிடைத்தார்கள்.
ஆரம்ப காலத்தில், அவர்கள் ஆபிரிக்கத் தொழிலாளர்களையும், சீனத் தொழிலாளர்களையும், மலாய் தொழிலாளர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்துவதற்கு முயற்சித்தபோதும், அந்த முயற்சிகள் பெருமளவு வெற்றி அளிக்காததோடு, அதிக செலவையும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தன. எனவே, இலங்கைக்கு மிக அண்மையில் இருந்த தென்னிந்தியாவிலிருந்து, கடின உழைப்பாளிகளான விவசாயக் கூலித் தொழிலாளர்களை இலங்கையின் தோட்டங்களுக்குக் கூலித் தொழிலாளர்களாக அணி திரட்டுவதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இவர்களைத் திரட்டுவதற்காக அவர்கள் கையாண்ட ஏராளமான உபாயங்கள் பற்றிப் பேசப்படுகிறது. பொய்களைப் பரப்பியுள்ளனர்; சமூகப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தியுள்ளனர்; கடன் பொறியைப் பயன்படுத்தியுள்ளனர்; கிராமங்களில் இருந்த அவர்களின் சுயதேவைப் பொருளாதாரத்தைத் திட்டமிட்டு அழித்துள்ளனர்; கிராமப்புற அதிகார வர்க்கத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், இந்திய நாட்டின் அடிமைத்தனம், அதன் தலைமையற்ற நிலை, மக்களை வழிநடத்தும் முறையான தேசியத் தலைவர்கள் அற்ற நிலை ஆகியவைகூட இந்த அணிதிரட்டலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
காலனித்துவவாதிகள் தமிழ் மக்கள் அல்லது இந்தியர்களை இலங்கைக்கு மட்டுமன்றி, 40க்கும் மேற்பட்ட ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் அடிமைக் கூலிகளாக (தொழிலாளர்களாக) கொண்டு சென்றுள்ளனர். ஆனால், உலக வரலாற்றின் அதிசயம் என்னவென்றால், இலங்கைக்குப் புலம்பெயர்ந்தவர்களைப் போலல்லாமல், ஏனைய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த இந்த மக்கள் தமது அடையாளங்களைத் தொலைத்திருக்கிறார்கள்.
இலங்கையின் மலையகத் தமிழர்கள், ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். இந்த அடக்குமுறைகளில் அந்நியக் காலனித்துவ அடக்குமுறை, சிங்கள பௌத்தப் பேரினவாத அடக்குமுறை, இலங்கையின் தேசிய இனக்குழுமங்களின் அடக்குமுறைகள், ஆக்கிரமிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள், திட்டமிடப்பட்ட இன வன்முறைகள், கட்டமைக்கப்பட்ட சனத்தொகைப் பேரழிவு, மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு அழிப்பு ஆகியவை அடங்கும். குறிப்பாக, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டங்கள் மூடப்பட்டதோடு, ‘அடிமைச் சாசனங்கள்’ என்று வர்ணிக்கக்கூடிய ஒப்பந்தங்கள் இவர்கள் மீது திணிக்கப்பட்டன. 1964 மற்றும் 1974 சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தங்களினால், சுமார் 6.5 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தாயகம் திரும்புதல் என்ற பெயரில் கட்டாயமாகப் பிரிக்கப்பட்டுத் தமிழ்நாட்டுக்கு மீள அனுப்பப்பட்டனர். இந்த வெளியேற்றத்தின்போது, கணவன் – மனைவி, பெற்றோர் – குழந்தைகள் எனப் பலாத்காரமாகப் பிரிக்கப்பட்டனர். இந்த அரசியல் துயரங்களுடன், வறுமையால், பிணியால், போசாக்கின்மையால், குறைந்த கூலியால் மற்றும் தற்கொலைகளால் மக்கள் பெரும் அழிவைச் சந்தித்தனர். 1870 ஆம் ஆண்டு மட்டும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரே வருடத்தில் 70,000 தோட்டத் தொழிலாளர்கள் தெருத் தெருவாக இறந்து கிடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனைப் பெரும் இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் மத்தியில், மலையக மக்கள் தமது அடையாளங்களைத் தொலைக்காமல் வாழ்கின்றனர்.
வரலாற்றுப் பதிவுகளின்படி, அவர்கள் பெரும்பாலும் கொலரா மற்றும் மலேரியா போன்ற நோய்களால் இறந்தனர். இத்தகைய பேரவலங்களுக்கும் பெருந்துயரங்களுக்கும் மத்தியிலும் கூட, இன்று இவர்கள் இலங்கையின் குறிப்பிடத்தக்க அரசியல் பெறுமானமும் பொருளாதார ஊற்றுமூலமும் கொண்ட ஒரு துறையில், அச்சாணியாக இருக்கிறார்கள். அதாவது, இலங்கைக்குப் புதிய முகத்தையும், புதிய அடையாளத்தையும், புதிய பொருளாதாரத்தையும், புதிய கட்டுமானங்களையும் தருவதற்கான ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தரும் மிகப்பெரிய தொழிற்றுறையின் (பெருந்தோட்டத் துறையாக) அச்சாணியாக அவர்கள் திகழ்கிறார்கள்.
இன்று, எண்ணிக்கை அடிப்படையில் சுமார் 1.4 இலட்சம் நேரடித் தொழிலாளர்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் கூட, அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1.6 மில்லியன் மக்கள் இன்னும் மலையகப் பெருந்தோட்டங்களில் 14 மாவட்டங்களில் செறிவாகவும் பரவலாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும், இலங்கையில் குடியேறிய இந்தியத் தொழிலாளர்களால்தான் இந்த நாட்டில் புதிய போக்குவரத்துப் பாதைகள் உருவாக்கப்பட்டன. பெருந்தோட்டத் துறையின் உபரி வருமானத்தின் மூலம்தான் தொடர்வண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டன, துறைமுகங்களும் கட்டப்பட்டன. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்திய பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பரவிக் காணப்படும் வைத்தியசாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல, பெருந்தோட்ட மக்களின் வருகைக்காகவும் அவர்களின் நலன்களுக்காகவுமே உருவாக்கப்பட்டன. மேலும், இலங்கையின் மருத்துவச் சட்டங்கள், சுகாதாரச் சட்டங்கள், கல்விச் சட்டங்கள், வீதிப் போக்குவரத்துச் சட்டங்கள் என அனைத்துச் சட்டங்களும் ஆரம்ப காலத்தில் தோட்டத்துறையை மையப்படுத்தியே பிரித்தானியரால் உருவாக்கப்பட்டன.
ஆனால், சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழர்கள் அரை-அடிமைகளாக, அடிமைக் குடிகளாக, அடிமைப் பாட்டாளிகளாக, அரசியல் அதிகாரமற்ற மக்களாக, காணி அதிகாரமற்ற மக்களாக, வெறுமனே பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் வாக்களிக்கும் இயந்திரங்களாக மாற்றப்பட்டனர். இவர்கள், இலங்கை வரலாற்றில் 1848 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரையான ஒரு நூற்றாண்டு காலத்தில், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் 98% வரை ஈட்டித் தந்தவர்கள் ஆவர். இலங்கையின் வருமானத்திற்கு இவ்வளவு பெரிய பங்களிப்பைச் செய்த இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய நியாயபூர்வமான உரிமைகள், சலுகைகள், அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், அரசியல் அதிகாரப் பங்கீடுகள் என்பன இதுவரை வழங்கப்படவில்லை என்பதே மிகவும் துயர்மிக்க வரலாறாகக் காணப்படுகிறது.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தோட்டத்துறைக் கட்டமைப்புகளும் அடித்தளக் கட்டமைப்புகளும் மிகச் சிறப்பாகப் பேணப்பட்டு வந்ததாக அறிய முடிகிறது. ஆனால், சுதந்திர இலங்கையில், பெருந்தோட்டங்களைச் சூறையாடுவது, மூடுவது, பெருந்தோட்டக் காணிகளில் இருந்து தொழிலாளர்களை விரட்டி அடிப்பது, குறிப்பாக மலையகத் தமிழ்த் தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது ஆகியவற்றைத்தான் சிங்களப் பெரும்பான்மைத் தலைவர்கள் ‘புரட்சி’, ‘போராட்டம்’, ‘நாட்டை முன்னேற்றுவதற்கான வழிமுறை’ மற்றும் ‘கிராமப்புற சமூகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார அபிவிருத்திக்கான சாத்தியம்’ என்று கருதினர். அவர்களுக்கு ஆதரவளித்த சிறுபான்மைத் தேசிய இனத் தலைவர்கள் உட்பட இவர்களனைவரும், இந்தச் சமூகத்தை அழித்தொழிப்பதில் மிகப் பெரிய வரலாற்று, பண்பாட்டுப் பாத்திரத்தை வகித்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் மத்தியில், போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற இம்மக்கள் கூட்டத்திற்கு ஒரு பொது அடையாளத்தை, ஓர் இனத்துவப் பெயரை, ஓர் அரசியல் அடையாளத்தை அல்லது அரசியல் அதிகாரத்திற்கான முத்திரையை வழங்குவதில், கடந்த 200 ஆண்டுகளாகத் தடுமாற்றங்களை நாம் அவதானிக்க முடிகிறது.
இலங்கைக்குப் புலம்பெயரச் செய்யப்பட்ட ஆரம்பகாலத்தில், அவர்கள் ‘மலபார் கூலிகள்’, ‘கூலிகள்’, ‘தமிழ்க் கூலிகள்’, ‘தோட்டக் கூலிகள்’ மற்றும் ‘கூலித் தமிழர்கள்’ எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். கூலித் தமிழைக் கற்பதற்கென்று பிரித்தானியர்களால் கை நூல்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பின்னர் வந்த சமூக ஆய்வாளர்களும், சமூகவியலாளர்களும் அவர்களைத் தங்கள் விருப்பப்படி ‘இலங்கை வாழ் இந்தியர்கள்’, ‘சிலோன் இந்தியன்ஸ்’, ‘இந்தியப் புலம்பெயர்வாளர்கள்’, ‘இந்தியக் குடியேறிகள்’, ‘இந்தியக் குடியேற்றத் தொழிலாளர்கள்’, ‘தோட்டத் தொழிலாளர்கள்’, ‘பெருந்தோட்ட மக்கள்’, ‘பெருந்தோட்டத் தமிழர்கள்’, ‘இலங்கை வாழ் இந்திய மக்கள்’ என்று பல்வேறுபட்ட அடையாளங்களைக் கொடுப்பதற்கு முயன்றுள்ளனர்.
மேலும், இவர்கள் காலத்திற்குக் காலம் ‘கள்ளத்தோணிகள்’, ‘வடக்கத்தியான்’, ‘தோட்டக்காட்டான்கள்’ போன்ற இழிவுப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஆட்சியாளர்களின் ஒரு பகுதியினர் அவர்களைக் ‘கள்ளத்தோணிகள்’ என்றும், மற்றவர்கள் ‘இலங்கையின் தோட்டக்காட்டான்கள்’ என்றும் அடையாளப்படுத்த முயற்சி செய்தனர். அதேவேளையில், மேலாதிக்கச் சாதியினர் அவர்களை ‘இழிசனர்’ என வகைப்படுத்த முயன்றார்கள்.
ஒரு மக்கள் கூட்டம் ஒரு நாட்டில் குடியேறி 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் தமது சொந்த அடையாளத்தைத் தேடுவதில் தடுமாற்றங்களைக் கொண்டிருப்பதற்கு இத்தகைய அரசியல், பண்பாட்டுப் புலமைசார் வகையறாக்கள் வழிவகை செய்திருக்கிறார்கள்.
அண்மைக்காலத்தில், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, இந்த மக்களுக்கான ஒரு தேசிய இனத்துவ, அரசியல் – கலாசார அடையாளத்தைப் பெற்றுக்கொடுப்பதில் மலையகப் புலமையாளர்கள், புத்திஜீவிகள், அரசியல், தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள், குறிப்பாக இலக்கியப் படைப்பாளிகள், பெரும் பிரயத்தனங்களைச் செய்திருக்கிறார்கள். அதன் விளைவாக, அவர்கள் ‘மலைகளின் மக்கள்’, ‘தேயிலை தேசத்தின் மக்கள்’, ‘மலையகத் தமிழர்கள்’ எனப் பல அடையாளங்களைச் சூட்ட முயன்றிருக்கிறார்கள்.
1960களில், இலங்கையில் ஒருபுறம் மலையகத் தமிழர்களுக்கு எதிரான மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகள் தொடங்கப்பட்ட அதே காலப்பகுதியில், மலையக மக்களின் மத்தியில் பல்வேறு சமூக – கலாசார இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இந்த இயக்கங்கள், மலையக மக்களின் அரசியல் அதிகாரம் மற்றும் அடையாளம் பற்றிய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்திக் குரல் கொடுத்து வந்தன. இருப்பினும், பிரதான மைய நீரோட்டத் தொழிற்சங்க அரசியல் இயக்கங்கள் அத்தகைய அக்கறையைக் காட்டாத நிலையில், இந்தச் செயற்பாடுகள் குறு இயக்கங்களாகவே முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, 1940 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் மலையகப் பகுதிகளில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்த ‘இலங்கை திராவிட இயக்கம்’, நாவலர் இளஞ்செழியன் தலைமையில் இயங்கி வந்தது. அந்த இயக்கம் பகுத்தறிவுச் சிந்தனைகளை, அரங்கு சார்ந்த சமூகச் செயற்பாடுகளை, மற்றும் கலாசாரச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது.

இந்த இயக்கத்தின் தலைவரான நாவலர் இளஞ்செழியன் அவர்கள், ரதல்ல மைதானத்தில் நடைபெற்ற ஒரு மே தினக் கூட்டத்தில் வைத்து, ‘மலையகத் தமிழர்கள்’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. இருப்பினும், இலங்கையின் மலையகத் தமிழர்கள் மத்தியில் தோன்றிய ஆளும் வர்க்கங்கள் — குறிப்பாகத் தொழிற்சங்க, அரசியல் மற்றும் பொருளாதார அதிகார வர்க்கங்கள், வணிக சமூகம் மற்றும் தரகு முதலாளிகள் — இன்னும் தமது அடையாளத்தை இந்தியாவோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கே முயன்று வருகிறார்கள்.
அவர்கள் சில வேளைகளில் மலையகத் தமிழர்களை, ‘இலங்கைத் தமிழர்கள்’ அல்லது ‘இந்தியத் தமிழர்கள்’ அல்லது ‘இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள்’ எனக் கூறிக் கொள்ளலாம் என்று தற்போது கூட புலம்பிக் கொண்டிருக்கின்ற ஒரு போக்கைக் காண முடிகிறது. இந்தியா ஒரு பிரமாண்டமான நாடாகவும், நீண்ட நெடிய வரலாறும் பண்பாடும் கொண்ட தொன்மை மிக்க நாடாகவும் இருப்பதால், தங்கள் இன அடையாளத்தை இந்தியாவுடன் தொடர்புபடுத்திக் காட்டுவதன் மூலம், இந்தியாவிடமிருந்து மிகப்பெரிய பாதுகாப்பும், இந்தியர் என்ற வகையில் ஒரு கௌரவமும் கிடைக்கும் என்று இவர்கள் நம்புவதாகவும் தெரிகிறது.
ஆனால், வரலாற்று ரீதியாக இந்தியா இதுவரை மலையகத் தமிழர்கள் விடயத்தில் எதிர்மறையான பாத்திரத்தையே வகித்திருப்பதை நாம் காண முடிகிறது. உண்மையில், இந்தியப் பேரரசு பிராந்திய வல்லரசாக, சகல வலிமையும் அதிகாரமும் கொண்டிருந்தபோதும், மலையகத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள், தாக்குதல்கள், அழித்தொழிப்புகள், ஆக்கிரமிப்புகள், மக்களின் அரசியல் அதிகாரப் பறிப்புகள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவதிலோ, அல்லது இன்னமும் அரசியல் ரீதியாக நெருக்கடியான நிலையில் இருக்கும் அவர்களின் பொருளாதார, சமூக நிலையை முன்னேற்றுவதிலோ மிகப்பெரிய தாக்கம் எதனையும் செலுத்த முடியவில்லை என்ற அரசியல் வரலாற்று உண்மையை இவர்கள் உணரத் தவறுகிறார்கள்.
உண்மையில், மலையகத் தமிழர்கள் வரலாற்று, பண்பாட்டுத் தொடர்புகளையும், மொழி, கலாசாரம், நாகரிகம் போன்றவற்றில் காணப்படும் மிகத் தொன்மையான மரபுகளையும் தமக்கெனக் கொண்டிருப்பதற்கான சகல தகுதியையும் கொண்டிருக்கிறார்கள். தமிழருக்கென்று ஒரு நாகரிகம், தமிழ்நாட்டுக்கென்று ஒரு நீண்ட நெடிய வரலாறு, தமிழ் இனத்துக்கென்று ஒரு நீண்ட நெடிய பண்பாடு ஆகியவை இருக்குமானால், அவர்களுக்கென்றும் ஓர் அரசியல் அதிகாரக் கட்டமைப்பு இருக்க வேண்டும். மேலும், அவர்களின் அறிவியலும், தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவை எல்லாவற்றிலும் மலையகத் தமிழர்களும் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரத்தைக் கொண்டிருப்பவர்களே.
ஆனால், 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் – வரலாற்றுச் சூழலமைவில், இலங்கையின் புவியியல் அமைவிடம், உலக அதிகாரச் சமநிலையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களின் சூழலமைப்பு, இலங்கையின் உள்நாட்டுத் தேசிய இனங்களுக்கு இடையே நடைபெறுகின்ற அரசியல் அதிகாரப் போட்டிகள், தேச உருவாக்கப் போட்டிகள், தேசிய இனக் குழுக்களுக்கு இடையிலான அடையாள அரசியல் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி அரசியல் தேவைகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, இலங்கையின் மலையகத் தமிழர்கள் தமக்கான இனத்துவ அடையாளத்தைத் தனித்துவமானதாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
உலகின் அதிகாரச் சமநிலை மையம், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து வரும் 21 ஆம் நூற்றாண்டில், இந்த நூற்றாண்டு கிழக்கின் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையேயான கப்பல் பாதைகளிலே, மிகப்பெரிய வணிகப் பாதைகள், வணிக மையங்கள், உற்பத்தி மையங்கள், பொருளாதார மையங்கள், நிதி மையங்கள், இராணுவ மேலாண்மை மையங்கள், மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை மையங்களாகக் கீழ்த் திசை அரசுகள் (கிழக்கு அரசுகள்) தோற்றம் பெறத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொண்டிருந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகால அதிகார மையத்திலிருந்து, தெற்காசியா, மத்திய ஆசியா மற்றும் கிழக்காசியாவை மையமாகக் கொண்ட புதிய அதிகார மையங்கள் உலகம் முழுவதும் உருவாகி வருகின்றன.
உலகானது ஒரு துருவ அரசியல் அதிகார மையத்திலிருந்து பல் துருவ அரசியல் மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய ரஷ்யா ஒரு மிகப்பெரிய இராணுவ, பொருளாதார, இராஜதந்திர மற்றும் அரசியல்ரீதியாகத் தவிர்க்க முடியாத அதிகார மையமாக மீண்டும் உருவாகியுள்ளது. சீனா, உலகின் உற்பத்தி மையமாகவும், ஏற்றுமதி மையமாகவும், வணிக மையமாகவும், மற்றும் இராணுவ மையமாகவும் வலுப்பெற்றுள்ளது. ஈரான் மற்றொரு தவிர்க்க முடியாத சக்தியாக மத்திய கிழக்கில் தோற்றம் பெற்றுள்ளது.
எனவே, இந்தச் சூழலில் நாம் எமது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கத் தவறினால், இம்மக்கள் கூட்டம் காற்றோடு கரைந்து போவதற்கான ஒரு வரலாற்றுச் சூழ்நிலை ஏற்படும். இன்றும்கூட, இறுதியாக வெளிவந்த இலங்கையின் 15 ஆவது குடித்தொகைப் புள்ளிவிவரக் கணக்கெடுப்பிலே, மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 2.1% தான் எனப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில், இலங்கை மலையகத் தமிழர்கள் 14 மாவட்டங்களில் வாழ்கிறார்கள்; உத்தியோகபூர்வமற்ற புள்ளிவிவரங்களின்படி, அவர்கள் 16 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களாக இலங்கையில் வாழ்ந்து வரவேண்டும்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் மலையகத் தமிழர்களும், மலையகப் பெருந்தோட்டங்களையும் அவற்றைச் சூழ்ந்த நகர/ கிராமப்புறங்களில் வாழும் மலையகத் தமிழர்களும் அறிந்தோ அறியாமலோ தம்மை ‘இலங்கைத் தமிழர்கள்’ என அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். மலையகப் பகுதிகளில் இத்தகைய ஒரு கலாசார ஆக்கிரமிப்பை அல்லது அரசியல் அடையாள அழிப்பை மேற்கொள்வதில் பல புலம்பெயர் அமைப்புகள், அரசு சார்பற்ற அமைப்புகள் (NGO), மதச்சார்பு அமைப்புகள், மத்தியதர வர்க்கப் புத்திஜீவிகள், அரசியல்-தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சில பிரபல ஊடகங்கள் கூடச் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.
இலங்கையிலுள்ள சில சக்திகள், மலையகத் தமிழர்கள் தமக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருக்கக்கூடாது, அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிடக்கூடாது, அடிமைக் குடிகளாக இருக்கும் தமது வாழ்நிலையிலிருந்து விடுபட்டுவிடக்கூடாது, காணி மற்றும் வீட்டு உரிமையைப் பெற்றுவிடக்கூடாது என உள்ளூர எண்ணுகின்றன. இந்தச் சக்திகள், இம்மக்கள் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதை, திட்டமிட்ட வகையில் மிகவும் அப்பட்டமாகத் தடுத்து வருகின்றன. அரசு அதிகார மையத்தில் இருக்கும் கீழ்நிலை, இடைநிலை அல்லது மேல்நிலை அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் கூட இந்த மக்களின் அடையாளத்தைச் சிதைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த வரலாற்றின் துயரம் என்னவென்றால், இலங்கையின் முதலாவது சனத்தொகைக் கணக்கெடுப்பில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் கூட்டமாக இருந்த இந்த ‘குடியேற்றத் தொழிலாளர்கள்’ (இன்றைய மலையகத் தமிழர்கள்), கடந்த 150 ஆண்டுகளில் தமது சனத்தொகையை (அதிகாரபூர்வமாக) வெறும் 2.1% ஆகக் குறைத்துக் கொண்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில்தான், மலையகத் தமிழர்கள் தமது அடையாளத்தை மிக ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த பல தசாப்தங்களாகப் பல்வேறு சமூக, கலாசார மற்றும் அரசியல் இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள், செயற்பாடுகள், மற்றும் அழுத்தங்களின் காரணமாக, இன்றைய இலங்கையின் புதிய அரசாக (அல்லது மாற்றுச் சமூக – கலாசாரப் பாரம்பரியம் கொண்ட அரசாக) தோற்றம் பெற்றுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’ கட்சி, இம்மக்களின் இனத்துவ அடையாளத்தை ‘மலையகத் தமிழர்கள்’ என ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்திருக்கிறது. எனினும், இந்த அடையாளச் சேர்ப்பு என்பது கடந்த காலத்தில், மலையகத்தின் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் – தொழிற்சங்கத் தலைமைகளின் அரைகுறை இணக்கப்பாட்டுடன், இலங்கைத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
ஆனால், இந்த அடையாளம் (மலையகத் தமிழர்) இன்னும் முழுமையாகத் தேசியமயப்படுத்தப்பட்ட அல்லது சமூகமயப்படுத்தப்பட்ட அடையாளமாக இல்லை என்பதை இந்தப் புள்ளிவிவரங்களின் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும், 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டிலே வாழ்ந்து வருகின்ற மக்கள் கூட்டம், தங்களுடைய இனத்துவக் கட்டமைப்பு, அடையாளம், மொழி, பண்பாடு, பொருளாதாரச் செயற்பாட்டுப் பிரதேசங்கள், வாழ்வாதாரம் ஆகியவை சிதைக்கப்பட்ட பின்னரும்கூட, இந்த நாட்டின் அசைக்க முடியாத ஒரு மக்கள் கூட்டமாக எஞ்சியிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மையை ஏற்றுக்கொண்டு, இந்த மக்களின் அரசியல் அதிகாரத்தை உறுதி செய்வதற்கும், அரசியல்ரீதியான இனத்துவ அடையாளத்தை உறுதி செய்வதற்கும், அவர்களை ‘மலையகத் தமிழர்கள்’ என்ற தேசிய இனமாக அங்கீகரிப்பதற்கும் இலங்கைத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் இந்த நூற்றாண்டில் (21 ஆம் நூற்றாண்டு) உறுதியேற்க வேண்டும்.
இந்த நூற்றாண்டில், மலையகத் தமிழர்கள் உலகின் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களைப் போலவே, அரசியல் அதிகாரத்துக்காகவும், வாழ்வாதார உரிமைகளுக்காகவும், சர்வதேசச் சட்டங்களாலும் நியாயத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளுக்காகவும் போராடுவதற்கான சகல தகுதிகளையும், இயலுமைகளையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், தமது வாழ்வாதாரப் பிராந்தியம், தமது அரசியல் அதிகார மையம், தமது பொருளாதாரச் சுதந்திரம், கலாசாரத் தன்னாதிக்கம் ஆகியவற்றுக்காகப் போராடுகிறார்கள். இந்த வகையில், 21 ஆம் நூற்றாண்டில் இம்மக்கள் ‘மலையகத் தமிழர்கள்’ என்ற இனத்துவ அடையாளத்துடன், பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக மாறுவார்கள் என்றும்; அரசியல் அதிகார மையங்களிலும், சர்வதேச அமைப்புகளிலும், சர்வதேச சமூகங்களிலும் இம்மக்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பாக மிக ஆழமான கலந்துரையாடல்களும் போராட்டங்களும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கலாம்.
உசாத்துணை மூலங்கள்
- Hariprasad Chottopadhyaya, 1979, Indians in Sri Lanka: A Historical Study.
- Kondapi, C., 1951, Indians Overseas, 1838–1949.
- Nadesan, S., 1993, A History of the Up-country Tamil People in Sri Lanka.
- Rachel Kurian and Kumari Jayawardena, 2018, Changing Identities of the Plantation Community in Ceylon: Challenging the Legacies of Slavery, National Politics, Class and Ethnic Discrimination (Research Paper).
- Dr. M. S. Thangam, 2023, Origin and Position of Plantation Tamils in Sri Lanka.
- Peeples, Patrick, 2001, The Plantation Tamils of Ceylon.
- Kodikara, S. U., 1965, Indo-Ceylon Relations Since Independence.
- பி.ஏ. காதர், 2023, இலங்கை மலையக தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள்.
- பி.ஏ. காதர், இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்.
- சோ. சந்திரசேகரன், 2001, இலங்கை இந்திய வரலாறு.
- மூ. கந்தையா, 2015, சிதைக்கப்பட்ட மலையக தமிழர்கள்.
- நேரு – கொத்தலாவல ஒப்பந்தம், 1952.
- சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1964.
- காணிச் சீர்திருத்தச் சட்டம், 1971.
- முதலாவது குடியரசு யாப்பு, 1972.
- இரண்டாவது குடியரசு யாப்பு, 1977.
- அரச கரும மொழிகள் சட்டம், 1956.
- சிறிமா – இந்திரா ஒப்பந்தம், 1974.
- இலங்கை – இந்தியா ஒப்பந்தம், 1987.
- குடியுரிமைச் சட்டம், 1948.
- இந்திய – பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம், 1949.
- தர்சி வித்தாச்சி, எமர்ஜென்சி 1956.
- பொன். பிரபாகரன், 2015, புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகள் – புதிய பண்பாட்டு அமைப்பு.



