இலங்கை மலையகத் தமிழர் வரலாறு: ஓர் அறிமுகம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
24 நிமிட வாசிப்பு

இலங்கை மலையகத் தமிழர் வரலாறு: ஓர் அறிமுகம்

December 31, 2025 | Ezhuna

மலையகத் தமிழர்களின் புதிய வரலாற்றை இருபத்தோராம் நூற்றாண்டு அரசியல், பண்பாட்டுச் சூழலுக்கேற்ப எழுத வேண்டிய தேவை இன்றியமையாதது ஆகும். இவர்களின் 200 ஆண்டுகால வாழ்வு, இலங்கையின் பெருந்தோட்டங்களில் ஒரு வரலாற்று விபத்தாக நிகழ்ந்திருந்தாலும், இவர்களுக்கென்று ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு என்பதை மறுக்க முடியாது. இந்த நெடும்பயணத்தில், இவர்கள் நூற்றுக்கணக்கான வன்முறைகளுக்கும், குடியுரிமை பறிப்பு, நிலவுரிமை பறிப்பு உள்ளிட்ட பாகுபாடுகளுக்கும் ஆளாகினர். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தங்களால் இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் இலங்கையின் ஏனைய சமூகங்களால் அடிமைக் குடிகளாகவே பார்க்கப்பட்டனர். ஆயினும், இத்தகைய அவலங்களுக்கு மத்தியிலும், இந்த மக்கள் தமது தனித்துவமான மொழி, பண்பாடு, உற்பத்தி முறை, கூட்டு உளவியல் ஆகியவற்றைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வகையில், இந்நூற்றாண்டின் கண்ணோட்டத்தில், அவர்களது தனித்துவமான இருப்பை நிலைநிறுத்தும் முகமாக அவர்களுக்கான ஒரு புதிய அரசியல் – பண்பாட்டு அடையாளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு ‘மலையகத் தமிழர்களின் அரசியலும் பண்பாடும்’ எனும் இத்தொடர் எழுதப்படுகின்றது

மலையகம் என்பது கடல் மட்டத்திலிருந்து 1000 அடிக்கு மேற்பட்ட பகுதிகளை மட்டும் உள்ளடக்குவதில்லை. உண்மையில், கரையோரத்தில் அமைந்துள்ள தென் மாகாணப் பகுதிகளான காலி உடுகம மலைகள், மாத்தறை மாவட்டத்தின் தெனியாயப் பிரதேசம், பத்தேகமப் பிரதேசங்களில் வாழும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களையும், அண்சமவெளிப் பிரதேசங்களில் அமைந்துள்ள களுத்துறை, கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை மாவட்டத் தொழிலாளர்களையும், மத்திய மலைநாட்டில் 3000–5000 அடி உயரத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய பகுதிகளும் மலையகம் எனப் பொருள்படும்.

மலையகத் தமிழர்கள் என்பது இலங்கை மலையகத்தில் வாழ்வோரை மட்டுமன்றி, இலங்கைப் பெருந்தோட்ட உற்பத்தியுடன் தொடர்பு கொண்டவர்களான, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் குடியேறி வாழ்ந்தோ, அடிமைச் சாசனங்கள் மூலம் இந்தியாவின் தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டோ, அந்நிய நாடுகளில் அடைக்கலம் புகுந்தோ உள்ளவர்களையும் சேர்த்துக்கொள்ளும் வரையறையாகும்.

இன்றைய மலையகத் தமிழர்களாகிய எங்களது பாட்டன்மார்கள் 1824 ஆம் ஆண்டு தொடங்கி 1948 ஆம் ஆண்டு வரையில் இலங்கைத் தீவிற்கு வருகை தந்தவர்களாவர். ஆரம்பக் காலங்களில் அவர்கள் தமிழகக் கிராமங்களிலிருந்து மூட்டை முடிச்சுகளுடனும், குழந்தை குட்டிகளுடனும், ஆண்களும் பெண்களுமாகக் கட்டுச்சோறு, புளிசாதம் கட்டிக்கொண்டு கால்நடையாக நடந்து, சாரை சாரையாக இராமேஸ்வரம், தூத்துக்குடி போன்ற கடற்கரைப் பகுதிகளை அடைந்தனர். அதன் பின்னர் படகுகளில் பயணித்து தலைமன்னார் கரையில் இறங்கிய அவர்கள், பல மாதங்களாக அடர்ந்த, இருண்ட, மனிதச் சஞ்சாரம் அற்ற கானகங்களுக்கூடாக நடந்து நடந்து முன்னேறினர். அந்த நெடும்பயணத்தில் பலர் மாண்டு மடிந்தனர்; சிலர் வனவிலங்குகளின் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்தனர்; நோய்களையும் காட்டு வெள்ளங்களையும் எதிர்கொண்டனர். கங்காணிமாரின் வன்முறைகளுக்கும் காட்டுயிரிகளுக்கும் பலியாகிய பின் எஞ்சியோர் குத்துயிரும் குறையுயிருமாகப் பயணத்தைத் தொடர்ந்தனர். இவ்வாறு 18 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த இந்த நெடும்பயணத்தின் முடிவில் எம் முன்னோர் சென்றடைந்த இடங்களே, இன்றைய மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளாக அமைந்தன. இந்தப் பயணத்தின் துயரங்களையும் மனித வேதனைகளையும் மலையக மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை தனது படைப்புகளில் உணர்வூட்டமாகப் பதிவு செய்கிறார்.

இன்றைய மலையகத்தின் பசுமைமிக்க, வளம் கொழிக்கும் தோட்டங்கள் அமைந்துள்ள இடங்கள் எம் மக்களின் வாழ்விடங்களாக உள்ளன. ஆயினும், அந்தத் தோட்டங்களின் பசுமையும் செழிப்பும் எம் மக்களின் வாழ்வில் இல்லை. எமது வாழ்வு ஓர் அடிமை வாழ்வாகவே நீடித்துள்ளது. சுமார் 150 ஆண்டுகாலம் ஆங்கிலேயர்களின் அடிமைகளாக இத்தீவில் அல்லல்பட்ட நாம், கடந்த 60 ஆண்டுகளாக பேரினவாத அரசியல் அமைப்புகளின் அடிமைகளாக அவஸ்தைப்படுத்தப்பட்டு வருகிறோம்.

1824 ஆம் ஆண்டு கண்டிக்கருகாமையில் அமைந்துள்ள சிங்கப்பிட்டி தோட்டம் தொடங்கப்பட்டது. சேர் எட்வர்ட் பான்ஸ் என்ற ஆங்கிலேயர் அங்கு கோப்பித் தோட்டத்தை நிறுவினார். 1867 ஆம் ஆண்டில் கண்டி ஹேவாஹெட்டை பகுதியில் அமைந்துள்ள லூல்கந்துர தோட்டத்தில் சேர் ஜேம்ஸ் டெய்லர் தேயிலைப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்தார். 1886 ஆம் ஆண்டில் கம்பஹா பகுதியில் சேர் ஹென்றி என்பவர் இறப்பர் தோட்டச் செய்கையைத் தொடங்கினார். இந்தப் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியத் தமிழர்களே பிரதானமாகக் கொண்டுவரப்பட்டனர். ஆரம்பத்தில் சிங்கோனா மற்றும் கொக்கோ ஆகியவை பெருந்தோட்டப் பயிர்களாகப் பயிரிடப்பட்டபோதிலும், அவை எதிர்பார்த்த அளவில் வெற்றியளிக்கத் தவறின. அதன் பின்னரே கோப்பிப் பெருந்தோட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. ஆனால் 1867 ஆம் ஆண்டில் குறுகிய காலத்திலேயே பூஞ்சை நோயால் கோப்பிப் பயிர்ச்செய்கை முழுமையாக அழிவடைந்தது. இந்நிலையிலேயே மாற்றாக தேயிலைப் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

கோப்பிக் காலத்தில் மலையகத் தமிழ்த் தொழிலாளர்கள் பட்ட துயரங்கள் மக்களின் வாய்மொழிப் பாடல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

“கண்டி கண்டி என்காதீங்க

கண்டி பேச்சு பேசாதீங்க

சாதி கெட்ட வெள்ளையன

சாதியில சேக்காதீங்க”

“கூனி அடிச்ச மலை

கோப்பி கன்று போட்ட மலை

அப்பனை தோற்ற மலை

அதோ தெரியுது பார்”

“கோண கோண மலையேறி

கோப்பிப் பழம் பறிக்கையில்

ஒரு பழம் தப்பிச்சினு 

ஒதச்சானைய்யா சின்னத் தொர” 

கோப்பிக்காலம் வரை மலையகத் தோட்டங்களில் இருந்து தமிழகத்திற்குத் திரும்புவதும், மீண்டும் இலங்கைக்கு வருவதுமாக இருந்த தமிழ்த் தொழிலாளர்கள், 1867 ஆம் ஆண்டு தேயிலைப் பயிர்ச்செய்கை தொடங்கிய பின்னர் பெரும்பான்மையாக நிலையான வாழ்வைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினர். வரலாற்றுப் பதிவுகளின்படி, அந்தக் காலகட்டத்துக்குப் பின்னர் சுமார் 80 வீதமான தொழிலாளர்கள் மலையகப் பெருந்தோட்டங்களில் நிரந்தரமாக வாழத் தொடங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. 1887 ஆம் ஆண்டில் கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன், நானுஓயா, பதுளை ஆகிய பகுதிகளை இணைக்கும் இரயில் பாதைகள் அமைக்கப்பட்டதும், அதே நேரத்தில் மலைநாட்டில் விரிவான வீதிப் போக்குவரத்து வசதிகள் உருவாக்கப்பட்டதும், தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறுகிய காலத்திலேயே மிக வேகமாக அதிகரிக்கக் காரணமானது. தேயிலைப் பயிரைத் தொடர்ச்சியாகப் பராமரித்துப் பாதுகாப்பதற்கும், சீரான கால இடைவெளிகளில் இடைவிடாது அறுவடை செய்வதற்கும் நிரந்தரமான, பெருந்தொகையான தொழிலாளர் பலம் தேவைப்பட்டது. இதன் விளைவாக, தென்னிந்தியாவிலிருந்து நிரந்தரமான தொழிலாளர்கள் மத்திய மலைநாட்டிற்கு தொடர்ந்து கொண்டுவரப்பட்டனர். குறிப்பாக வடஆர்காடு, தென்னார்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களிலிருந்தே சுமார் 90 வீதமான தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டதாக வரலாறு பதிவு செய்கிறது.

தேயிலைக் காலத்தின் குதூகலத்தை மலையக மக்கள்,

“இஸ்டோரும் கட்டியாச்சு

இஞ்சினும் பூட்டியாச்சு

இளவட்டப் பொண்ணுங்களா

இல பொறுக்க வாருங்கடி” என்ற வாய்மொழிப் பாடலினூடாகப் பதிவு செய்துள்ளனர். 

தேயிலைப் பயிர்ச்செய்கை பரவப் பரவ, இலங்கைத் தீவின் வாழ்வும் வளமும் செழித்தது. ஆனால் மலையகத் தமிழர்களின் வாழ்வு செழிக்கவில்லை.

1818 ஆம் ஆண்டிலும் 1848 ஆம் ஆண்டிலும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக இலங்கைத் தீவில் இரண்டு பெரும் கிளர்ச்சிகள் இடம்பெற்றன. 1848 ஆம் ஆண்டுக் கிளர்ச்சி ஊவா–வெல்லஸ்ஸப் பிரதேசத்தில் நிகழ்ந்தது (வெல்லஸ்ஸ தோட்டப்பகுதி இன்றும் காணப்படுகிறது). இந்தக் கிளர்ச்சியில் தமிழ்த் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை, நேர்மையுள்ள சிங்கள வரலாற்றாசிரியர்கள் கூடக் குறிப்பிடுகின்றனர்.

நவீன இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சியின் படிக்கற்களாக, 

1931 – கோல்பூரூக் கமரன் சீர்திருத்தம் 

1920 – மனிங் டிவன்சியர் சீர்திருத்தம் 

1924 – மனிங் சீர்திருத்தம்

1931 – டொனமூர் சீர்திருத்தம்

1947 – சோல்பரி சீர்திருத்தம்

1971 – முதலாவது குடியரசு யாப்பு

1978 – இரண்டாம் குடியரசு யாப்பு, இவ் யாப்புக்கான 18 சீர்திருத்தங்கள் 

என்பன காணப்படுகின்றன.

இவை படிப்படியாக இலங்கைக்கு ஆளணிப்பதிவு அந்தஸ்தையும் பூரண சுதந்திரத்தையும் கொண்டு வந்தன. ஆனால் நாடு தான் சுதந்திரம் பெற்றது. நாட்டு மக்கள் சுதந்திரம் பெற்றார்களா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதை மலையகக் கவிஞன் ஒருவன் “நாடு சுதந்திரம் பெற்றதடா.. நாங்கள் சுதந்திரம் பெற்றோமா?” எனக் கேட்கிறான். நேரடியான காலனியாட்சியாளர்களுக்குப் பதிலாக அவர்களின் கையாட்களான சிங்கள, தமிழ் மேட்டுக்குடி பூர்ஷ்வா வர்க்கமும் பிரபுத்துவக் குடும்பங்களும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டன. இன்றுவரை இந்நிலையே நீடித்து வருகின்றன. 

1931 ஆம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டபோது மலையகத் தமிழர்களுக்கு உள்நாட்டுத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டது. இதற்கு சிங்கள பௌத்தப் பேரினவாதிகள் மட்டுமன்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரபுத்துவ வர்க்கமும் முக்கிய பங்காற்றியது. 

1947 ஆம் ஆண்டு சேர் வில்லியம் சோல்பரி முன்வைத்த அரசியல் திட்டத்தின் அடிப்படையில் இலங்கை ஓர் அரசியலமைப்பு முடியாட்சி நாடாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் 7 மலையகத் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்கள் மலையகத் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த ஹட்டன், கொட்டகலை, மஸ்கெலியா, நுவரெலியா, தலவாக்கலை, பண்டாரவளை, கொத்மலை ஆகிய தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சுமார் 20 தொகுதிகளில் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கும் மலையகத் தமிழ் வாக்காளர்களின் ஆதரவு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் காரணமாக, இலங்கையின் பெருந்தோட்ட மாவட்டங்களில் இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகக் காணப்பட்டது. எதிர்காலத்தில் மலையகத் தமிழ்த் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் எழுச்சியுடன் புரட்சிகரமான சோசலிச சமவுடைமை அரசு உருவாகலாம் என அஞ்சிய சிங்கள மற்றும் தமிழ் வலதுசாரிப் பிரபுக்கள் வர்க்கம், மலையகப் பாட்டாளி வர்க்கத்தை அரசியல் ரீதியில் முடமாக்கும் நோக்குடன் 1948 ஆம் ஆண்டு இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தையும், 1949 ஆம் ஆண்டு தேர்தல் திருத்தச் சட்டத்தையும் கொண்டுவந்தது. இதன் விளைவாக, ஜனநாயகத்தின் இரு கண்களாகப் போற்றப்படும் வாக்குரிமையும் பிரஜாவுரிமையும் மலையகத் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. இந்த வரலாற்றுத் துரோகத்தைச் செய்த சிங்கள–தமிழ் பிரபுத்துவ அரசியல் தலைவர்கள், 1930களில் இலங்கைக்குத் தமிழ்த் தொழிலாளர்களை கொண்டு செல்வதை இந்திய அரசு தடுத்தபோது, அந்தத் தீர்மானத்தை மாற்றக்கோரி டில்லிக்குச் சென்ற இலங்கைத் தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அடிமைச் சாசனங்கள்

சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கை அரசுகள் மலையகத் தமிழ்த் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட ஒப்பந்தங்கள், எம்மக்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைச் சாசனங்களாகவே அமைந்தன. அவை எம்மக்களின் சம்மதமின்றியும், எம்மக்களுக்கு எவ்விதத் தகவலும் வழங்கப்படாமலும், எம்மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டவையாகும். இந்த ஒப்பந்தங்கள் எம்மக்களைச் சிதைத்தன; குடும்பங்களைப் பிரித்தன. கணவனும் மனைவியும், அண்ணனும் தங்கையும், உற்றாரும் உறவினரும், அயலவருமாகக் கட்டம் கட்டமாகப் பிரிக்கப்பட்டு, கதறிக் கதறி அழுதபடியே கோச்சிகளில் ஏற்றப்பட்டு வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட அந்த உடன்படிக்கைகள், இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போதும், ஜெர்மனி பிரிக்கப்பட்டபோதும் நிகழ்ந்த மானிட அவலங்களுக்கும் துயரங்களுக்கும் எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.

1954 ஆம் ஆண்டு இடம்பெற்ற நேரு–கொத்தலாவல உடன்படிக்கை, 1964 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிறிமா–சாஸ்திரி உடன்படிக்கை, 1974 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறிமா–இந்திரா உடன்படிக்கை ஆகியவை, சுமார் ஆறு இலட்சம் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைச் சின்னாபின்னமாக்கிய மாபெரும் வரலாற்று அவலங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 ஆம் நூற்றாண்டில் இவ்வுடன்படிக்கைகளுக்கு நிகரான அடிமைச் சாசனங்களும், அவற்றால் உருவான மனித அவலங்களும் உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை எனலாம். இந்த உடன்படிக்கைகளின் விளைவாக ஏற்பட்ட புலப்பெயர்வுகளே, எமது தேசிய இனத்தின் இருப்பையும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல்–சமூக இருப்பையும் நிர்மூலமாக்கி, மேலும் பல தசாப்தங்கள் நீளும் அடிமைத்தனத்தில் எம்மக்களைத் தள்ளிவிட்டன. எமது மக்கள் தமது உழைப்பால் வளப்படுத்தி, பல தலைமுறைகள் வாழ்ந்து வந்த தோட்டங்கள், வாழ்விடங்கள், உறவுமுறைகள், பண்பாட்டுக் கருவூலங்கள், அடையாளங்கள், அரசியல் மற்றும் பொருளாதார பலங்கள் ஆகிய அனைத்தும் இச்சாசனங்களின் மூலமாகவே திட்டமிட்டுத் தகர்த்தெறியப்பட்டன. இதன் விளைவாக நாம் நாடற்றவர்களாக மாற்றப்பட்டோம். நாடற்ற பிரஜைகளாக சுமார் 60 ஆண்டுகள் வாழ நேர்ந்ததால் எமது சமூக வாழ்வு சிறுமைப்படுத்தப்பட்டது. வரலாறு எம்மை வஞ்சித்தது; பண்பாட்டுக் கருவூலங்கள் அழிவடைந்தன; எம்மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள் சிதைந்தன.

பிரஜாவுரிமையை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சுமார் 60 ஆண்டுகாலப் போராட்டங்களின் பயனாக 1986, 1988, 2003, 2008 ஆகிய ஆண்டுகளில் பல உடன்பாடுகள் மற்றும் சட்டத் திருத்தங்களின் ஊடாக இரண்டாம் தரப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. ஆயினும், அந்தப் பிரஜாவுரிமையும் அதனுடன் தொடர்புடைய வாக்குரிமையும் கூட, ஆட்பதிவு திணைக்களம், பதிவாளர் நாயகம் திணைக்களம், தேர்தல்கள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் போன்ற அரசியல்–நிர்வாக இயந்திரங்களைப் பயன்படுத்தி மறைமுகமாகத் தொடர்ச்சியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன.

காணிச் சீர்திருத்தங்களும், சிங்களக் குடியேற்றங்களும், இன வன்முறைகளும் 

1955 ஆம் ஆண்டு தொடங்கிய மலையகத் தமிழர்களுக்கெதிரான இவ்வன்முறைகளின் விளைவாக, பிரான்சிஸ் மற்றும் அய்யாவு எனும் இரண்டு தொழிலாளர்கள் கொட்டியாகலைத் தோட்டத்தில் வீரத் தியாகிகள் ஆயினர். இதனை தொடர்ந்து, 1977, 1979, 1980, 1981, 1983, 1984, 1986, 1988, 2001, 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில், திட்டமிட்ட பேரினவாதத் தாக்குதல்கள் மலையக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப கட்டங்களில், பெரிய அளவில் திட்டமிட்டு அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், பிற்காலத்தில் பகுதி பகுதிகளாகவும், சிறு அளவிலானதாகவும், காலத்துக்குக் காலம் திட்டமிட்டு நடக்கத் தொடங்கின.

புலப்பெயர்வுகள்

1954 ஆம் ஆண்டு நேரு – கொத்தலாவல உடன்படிக்கைக்குப் பின்னர், பல இலட்சக்கணக்கான தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் தமது பூர்வீக தாயகமான தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்தனர்.

1958 ஆம் ஆண்டு இனவெறித் தாக்குதல்களை எதிர்கொண்டு, மலையகத் தமிழர்கள் வட மாகாணத்தின் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் குடியேறினர்.

1964 ஆம் ஆண்டு சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டு அதனை அமுல்படுத்துவதற்கான சட்டம் இலங்கையின் தேசிய அரசுப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், 1983 ஆம் ஆண்டு வரையிலும், சுமார் 6 லட்சம் மலையகத் தமிழர்கள் ஆடு, மாடுகள் போல் இரயில்களில் ஏற்றப்பட்டு, இரவோடு இரவாக தலைமன்னார் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு, கப்பல்களில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவுக்கு வந்தவர்கள், ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி மலைகளிலும், கேரளா மாநிலத் தோட்டங்களிலும் குடியேற்றப்பட்டனர்; மேலும், தொழில் முதலாளிகளின் கரங்களில் குடும்பம் குடும்பமாக ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ‘சிலோன் கோழிகள்’ என அழைக்கப்பட்டனர்.

1968 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறைகளுக்குப் பிறகு, பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் வட மாகாணப் பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்தனர். இந்த இடப்பெயர்வு, மலையகத் தமிழர் வரலாற்றில் முக்கியமான புலப்பெயர்வாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

1977 ஆம் ஆண்டு வன்முறைக்குப் பிறகு, வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் குடியேறினர்.

1983 ஆம் ஆண்டு வன்முறைகளுக்குப் பிறகு, பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், தென்னிந்தியாவிற்கும் புலம்பெயர்ந்து சென்றனர்.

இத்தகைய அவலமான புலப்பெயர்வுகளால் எமது மக்களின் வாழ்விடங்கள் மட்டுமின்றி, பண்பாட்டுக் கருவூலங்களும், பாரம்பரியங்களும், கலை இலக்கிய முயற்சிகளும், மரபுகளும், நம்பிக்கைகளும் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டன. எமது மக்களின் வாழ்வியல் வளமாக ஆழமாக வேர்விட்ட கலை கூத்துகளை நிகழ்த்தியோர்—அதன் வாத்தியார்கள், நடிகர்கள், பாடகர்கள், ஆட்டக்காரர்கள்—இடம்பெயர்ந்தனர், மரணித்தனர், காணாமல் போயினர், பட்டினியால் பிச்சையெடுத்து வாழ வேண்டிய நிலைக்கு வந்து மடிந்தனர். 1971–1974 காலப்பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பட்டினியால் மடிந்தனர்.

1977 ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரக் கொள்கையினாலும், இனவெறித் தாக்குதலினாலும், வாழ்க்கை மிகக் கடுமையாக இருந்தது. 1989 ஆம் ஆண்டு வரை எங்கும் பாதுகாப்பின்மை, நிச்சயமின்மை, பயம், விரக்தி ஆகியவை மேலிட்டன. இதனால் எமது பண்பாட்டில் ஓட்டை விழுந்தது; எமது வாழ்வியல் ஆட்டமும் பாதிக்கப்பட்டது. எமது தேசிய இனம் பல கலைக் கூத்துகளை இழந்தது. பொன்னர் சங்கர், அருச்சுனன் தபசு, அல்லி அருக்காணி கதை, நல்லதங்காள் கதை, குறவஞ்சி நாடகம், பறை நாடகம், குசலவன் கதை, சத்தியவான் சாவித்திரி கதை, அரிச்சந்திர புராணம், காத்தவராயன் கதை, மருதைவீரன் கூத்து, வள்ளி திருமணம், கண்டிராஜன் கதை என்பன கைவிடப்பட்டன.

எனினும் தற்போது காமன்கூத்து, மலையக தேசிய கலையாகப் பரிணமித்துள்ளது. அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், கெங்கையம்மன் கூத்து, காட்டேறி கூத்து ஆகியன ஆங்காங்கே நிகழ்த்தப்படுகின்றன. மாரியம்மன் திருவிழா, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகள் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகின்றன. சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் உயிர்வாழ்ந்து வருகின்றன. எமது மக்கள் தமது வாழ்வியலைப் பேணிப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர்.

உள்ளகப் புலப்பெயர்வுகள்

மலையகத் தமிழர்கள் எல்லைப்புறச் சிங்களக் கிராமப்புறங்களை அண்மித்த தோட்டங்களிலிருந்தும், குடியேற்ற மற்றும் நீர்ப்பாசன உற்பத்தித் திட்டங்களுக்கு அடுத்த பகுதிகளிலிருந்தும், தொடர்ச்சியான வன்முறைகளின் காரணமாக விரட்டப்பட்டபோது, அவர்களில் ஒரு பகுதியினர் மலையகத்தின் உயர்நிலப் பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்தனர். இவ்வாறு இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, வெலிமடை, கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்த தமிழர்களும், தென்னிந்தியத் தமிழர்களும் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மற்றும் பதுளை பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து குடியேறினர். இந்தப் புலப்பெயர்வுகள் நகரங்களிலிருந்து நகரங்களுக்கும், தோட்டங்களிலிருந்து தோட்டங்களுக்கும் தொடர்ச்சியாக நிகழ்ந்தன; அவை இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பம்மகொல்லை தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் மீது சிங்களக் காடையர்கள் நடத்திய தாக்குதல்களும், அதற்கு தோட்ட நிர்வாகம் உடந்தையாக இருந்தமையும் காரணமாக, சுமார் 150 தொழிலாளர் குடும்பங்கள் நுவரெலியா மாவட்டத்தின் புசல்லாவைப் பிரதேசத்திற்குப் புலம்பெயர்ந்து செல்ல நேரிட்டமை சமீபத்திய புலப்பெயர்வாகும். 

கொழும்பு மாவட்டத்தின் அந்தர் பீல்ட் தோட்டத்தில் அமைக்கப்பட்ட சீதாவக்கை கைத்தொழில் பேட்டையும், கண்டி மாவட்டத்தின் பல்லேகல தோட்டத்தில் உருவாக்கப்பட்ட பல்லேகல கைத்தொழில் பேட்டையும், மாத்தளை மாவட்டத்தின் நாலந்தா தோட்டத்தில் நிறுவப்பட்ட நாலந்தா கைத்தொழில் பேட்டையும், நுவரெலியா மாவட்டத்தின் டெல்மார் தோட்டத்தில் இடம்பெறும் குடியேற்றத் திட்டமும், அதே நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா உதவி அரச அதிபர் பிரிவில் தலவாக்கலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மேல் கொத்மலை நீர் மின்னுற்பத்தித் திட்டமும், மிக அண்மைக்காலங்களில் நடைபெற்று முடிந்தவையாகவும் இன்னும் நடைபெற்று வருபவையாகவும் உள்ள மலையகத் தமிழர் பிரதேசங்களின் மீதான ஆக்கிரமிப்புத் திட்டங்களாகக் காணப்படுகின்றன.

இத்திட்டங்கள் அனைத்திற்கும் மலையகப் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்து வருகின்றனர். குறிப்பாக, மேல் கொத்மலை ஆக்கிரமிப்பு–அபிவிருத்தித் திட்டத்திற்காக ஜப்பானிய அரசு பெருந்தொகையான கடன் உதவியை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய மலையகத் தமிழரின் பரம்பல் 

இன்றைய மலையகத் தமிழர்கள் பெரும்பாலும் எட்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் பலர் தமது தாயகம் மற்றும் பூர்வீகம் குறித்த வரலாற்று அறிவு இல்லாதவர்களாகவே வளர்ந்துள்ளனர். இவர்களிடையே உருவாகியுள்ள மத்திய மற்றும் மேல் மத்தியதர வர்க்கத்தினரில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே தமது வேர்களைத் தேடிப் பயணித்து, தமது வரலாற்றை மீளக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நுவரெலியா (உதவி அரச அதிபர் பிரிவில் சுமார் 75 சதவீதமும், அம்பகமுவ அரச அதிபர் பிரிவில் சுமார் 70 வீதமும்) மலையகத் தமிழர்கள் செறிவாக வாழும் பகுதியாகக் காணப்படுகின்றது. இதனுடன், பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மொனராகலை, காலி, மாத்தறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் மலையகத் தமிழர்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதைய மலையகம் பெரும்பாலும் சிங்களவரின் பொக்கட் காலனிகளாக மாற்றப்பட்டுக் காணப்படுகிறது. தமிழ்ப் பிரதேசங்களைச் சூழ்ந்து குடியேற்ற முற்றுகைத் திட்டங்கள், ஆக்கிரமிப்பு–அபிவிருத்தித் திட்டங்கள், கிராம விஸ்தரிப்புத் திட்டங்கள் ஆகியவை திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு, பெரும்பான்மையான சிங்கள மக்களைக் குடியேற்றுவதன் மூலம் மலையகத் தமிழர் பிரதேசங்கள் முற்றுகையிடப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர், பெருந்தோட்டப் பிரதேசங்களுக்கிடையிலான நேரடிப் போக்குவரத்து வசதிகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன அல்லது திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதனுடன், பாரம்பரியமான தமிழர் நகரங்களைச் சூழ சிங்களப் புறநகர்ப் பகுதிகளும் குடியேற்றத் திட்டங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, நூற்றாண்டுகால வரலாறு கொண்ட மலையகத் தமிழ் நகரங்களை விட, அண்மைக்காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புறநகர்க் குடியேற்றங்களே அரசியல், நிர்வாக, பொருளாதார ரீதியாக அதிக வலிமை பெற்றவையாக உருவெடுத்துள்ளன. லிந்துலை, பொரலந்தை, கந்தப்பளை ஆகிய நகரங்கள் இத்தகைய திட்டமிட்ட புறநகர்க் குடியேற்றங்களின் எடுத்துக்காட்டுகளாகக் காணப்படுகின்றன.

கல்வி வாய்ப்புகள்

1944 ஆம் ஆண்டு C.W.W. கன்னங்கரா தலைமையிலான கல்விக்கான அரசாங்கக் குழு முன்வைத்த இலவசக் கல்வித் திட்டத்தின் பயன்களை, 65 ஆண்டுகள் கடந்த பின்னரும் மலையகத் தமிழர்கள் முழுமையாகப் பெற முடியாத நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான முக்கிய காரணமாக, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெருந்தோட்டப் பகுதிகளில் செயற்பட்ட தோட்டப் பள்ளிக்கூடங்கள் அரசுடைமையாக்கப்பட்டமை குறிப்பிடப்படுகிறது. அந்த அரசுடைமையாக்கல் நடைமுறைகள் மலையகத் தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு எதிர்பார்த்த நன்மைகளை வழங்கவில்லை என்பதே அனுபவச் சாட்சியாகும். மாத்தளை பாக்கியா கல்லூரி, புசல்லாவை C.C. கல்லூரி, கண்டி அசோகா கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், மேட்டுக்குடி மலையகத் தமிழர்களால் தொடங்கப்பட்ட முக்கியமான கல்வி முயற்சிகளாகும். இவ்வகை கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் பெரிய கங்காணிமார் மற்றும் மலையக நகர்ப்புற மத்திய–மேல் வர்க்கங்களின் பிள்ளைகள் கல்வி பயில உதவியவையாக இருந்தன.

உண்மையில் பிரித்தானிய, ஸ்கொட்லாந்து மற்றும் கிறிஸ்தவ மிசனரிகளே தோட்டப்புறப் பிள்ளைகளுக்கான கல்விக்கூடங்களை முதலில் அமைத்தன. இவ்வாறு அமைக்கப்பட்ட சுமார் 1600 பள்ளிக்கூடங்களில் தற்போது 800 பள்ளிக்கூடங்களே எஞ்சியுள்ளன. அவற்றில் சுமார் 300 தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு சுவீடன் நாட்டின் ‘சீடா’ (SIDA) நிறுவனம் கட்டட வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனைய பள்ளிக்கூடங்களில் போதிய கட்டட வசதிகளோ, தளபாடங்களோ, பிற அடிப்படை உட்கட்டமைப்புகளோ காணப்படவில்லை. இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மொனராகலை, கண்டி, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தளை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்றும் பல தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளோ, நிரந்தரக் கட்டடங்களோ இல்லை; அவை பாழடைந்த பழைய கொட்டில்களிலும், மடுவங்களிலும், லயன் அறைகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

மருத்துவ, சுகாதார வசதி 

மருத்துவ மற்றும் சுகாதார நிலையங்கள் தொடர்பாகப் பார்க்கும்போது, மலையகப் பெருந்தோட்டங்களில் 500க்கும் அதிகமான தோட்டச் சுகாதார நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான இடங்களில் தோட்ட மருந்து உதவியாளர் மட்டுமே கடமையாற்றுகிறார். சில தோட்டங்களில் குடும்ப சுகாதார மாதர் பணியாற்றுகின்றனர்; தற்போது சில பகுதிகளில் சுகாதாரத் தாதியர்களும் சேவையாற்றி வருகின்றனர். தோட்டச் சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கப்படுவது முதல் தடவையாக 16.11.2009 அன்று அரச வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் சேம நலன்களைப் பேணுவதற்கென பிரித்தானியர் காலத்தில் நிறுவப்பட்ட அரச மருத்துவமனைகள், இன்றோ தோட்டத் தொழிலாளர்களை மாற்றுப்பார்வையுடனும் அலட்சிய மனப்பாங்குடனும் நடத்தி வருகின்றன. தோட்டச் சுகாதார நிலையங்களில் சுமார் 50 மட்டுமே அரசுடைமையாக்கப்பட்டுள்ளன; அவற்றிலும் பெரும்பாலானவை மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. நோயும் பிணியும், போசாக்கின்மை, வறுமை, குருதிச்சோகை ஆகியவை மலையகத் தமிழ் மக்களின் உடன்பிறப்புகளாகவே தொடர்கின்றன. திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் மட்டுமே வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுகின்றன. 

மலையகத் தமிழர்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் வறுமை 60 சதவீதமாகவும், போசாக்கின்மை 44 சதவீதமாகவும், இடைநிலை வகுப்புகளில் கல்வி விலகும் மாணவர்கள் 42 சதவீதமாகவும், போக்குவரத்து வசதிக்காக காத்திருக்கும் சராசரி நேரம் 44 நிமிடங்களாகவும் பதிவாகியுள்ளன; பல்கலைக்கழக அனுமதி 0.02 சதவீதமாகவும், அரச வேலைவாய்ப்புகள் 0.02 சதவீதமாகவும் இருப்பதாக அரச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மலையகப் பிரதேசங்களில் வறுமை நிலவுவதாக உலக வங்கியும் ஏற்றுக்கொண்டுள்ளது.

வீட்டு வசதி

இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களாகிய மலையகத் தமிழர்களில் சுமார் 80 சதவீதமானவர்கள், இன்றுவரை 100–150 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரித்தானிய ஆட்சிக்கால லயன் காமிராக்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இத்தொடர் குடியிருப்புகள் ஆறு காமிராக்கள், 12 காமிராக்கள், 24 காமிராக்கள், 36 காமிராக்கள், சில இடங்களில் 60 காமிராக்கள் கொண்ட ஒரே தொகுப்புகளாக அமைந்துள்ளன. இந்தக் குடியிருப்புத் தொகுப்புகளில் போதிய அடிப்படை வசதிகளான மலசலகூட வசதிகள், குடிநீர் வசதிகள், கழிவகற்றல் அமைப்புகள், நடைபாதைகள் போன்றவை கூட முறையாகக் காணப்படுவதில்லை. இத்தகைய கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வது கடந்த 200 ஆண்டுகளாகவே இம்மக்களுக்குச் சாத்தியமாகவில்லை. காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வந்த அரசுகள் வாக்குறுதிகளை வழங்கினவே தவிர, இம்மக்களுக்கான வீட்டு வசதித் தேவைகளையும், காணி உரிமையையும், அடிப்படை வாழ்வாதாரக் கட்டமைப்புகளையும் ஏற்படுத்துவதில் தொடர்ச்சியாகத் தவறி வந்துள்ளன.

இக்குடியிருப்புகள் ஒருபக்கக் குடியிருப்புகள், இருப்பக்கக் குடியிருப்புகள், நெடுங்குடியிருப்புகள் எனப் பல வகைகளாகக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, புசல்லாவை ரோச்சல் தோட்டத்தில் ஒரே தோட்டப் பகுதியில் 60 காமிராக்கள் தொடர்ச்சியான வரிசையாக அமைந்துள்ளன. இதேபோல், ‘மாடி வீட்டு திட்டங்கள்’ என்ற பெயரில் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளும் அப்புதளை, தம்பேதன்னை, முகத்துல, ராணிக்காடு தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டுள்ளன.

எனினும், சுதந்திரத்துக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களின் மூலம், ‘பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டங்கள்’ என்ற பெயரில், பழைய லயன் தொடர்மாடி குடியிருப்புகளைவிட வசதிகள் குறைவான பல்வேறு மாடி மனைகள் அமைக்கப்பட்டன. இதில், திரு அமரர் பெரியசாமி, சந்திரசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்த காலத்தில், தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சராக இருந்த திரு பெரியசாமி அமைத்துள்ள சுமார் 38,000 தனிக் குடியிருப்புகள் மக்களுக்கு இன்னும் உரிமையாக்கப்படாமலும், காணி உறுதி வழங்கப்படாமலும் உள்ளன. அதேபோல், திரு ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தலைமையில் சுமார் 5,000 மாடி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும் 5,000 குடியிருப்புகள் சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில், சீ.பி. ரத்நாயக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், உரிய தொழிலாளர்களைச் சென்றடையவில்லை என அறியப்படுகிறது. இத்தகைய பின்புலத்திலேயே, இருபத்தோராம் நூற்றாண்டு நவீன அடிமைக் குடியிருப்புகளாகக் காணப்படும் தொடர் லயக் குடியிருப்புகளை ஒழித்து, மாற்றியமைத்துக் கட்டுவதற்காக சுமார் 1,60,000 தனி வீட்டுத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

மலையகத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை இல்லாத நிலையிலேயே, அவர்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கான உரிமை பற்றி காலத்திற்குக் காலம் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, அந்த வீடுகள் இலங்கையின் காணிச் சட்டங்களின் கீழ் தீர்க்கமான உரிமையுடன் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. இந்தச் சூழலில், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மற்றும் தனி வீட்டுத் திட்டங்கள் அவசியம் என்ற வலியுறுத்தல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு தசாப்த காலமாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் குரல்கள் தொடர்ந்தும் உருவாகி வருகின்றன. இன்றைய இயற்கைப் பேரிடர்களுக்குப் பின், காணி உரிமை மற்றும் வீட்டு வசதிப் பிரச்சினைகள் மலையக மக்களின் முதன்மைப் பிரச்சினைகளாக மாறியுள்ளன என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

முடிவுரை

இந்த நீடித்து நிலைத்திருக்கும் அடிமைத்தனம், அரைகுறை அடிமை முறைகள், காலனித்துவ பொருளாதார மரபின் தொடர்ச்சி, திட்டமிடப்பட்டதும் கட்டமைக்கப்பட்டதுமான வன்முறைகள், இனவழிப்புச் செயன்முறைகள், வரலாற்றமைவுகள் மற்றும் ஒவ்வொரு அரசியல், பொருளாதார, கலாசார காலநிலை நெருக்கடிகளையும் காரணமாகக் கொண்டு மலையகத் தமிழர்கள் தம்மை ஒரு தனித்துவமான தேசிய இனமாக வரையறுத்துக்கொள்ள முயல்கிறார்கள். அவர்கள் தமக்கென காணி உரிமை, வீட்டுரிமை, வாழ்வாதார, பொருளாதார உரிமைகளுடனும் கலாசார தனித்துவத்துடனும் எழுந்து நிலைக்க முயல்கின்றனர். இந்த முயற்சிகளைச் சாத்தியமாக்குவதற்கும், அதனைப் பாதுகாக்கவும் அவர்கள் தொடர்ந்து போராட நேரும்.



About the Author

பொன் பிரபாகரன்

பொன்.பிரபாகரன், யாழ். பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவப் பட்டம் பெற்றவர். பட்டப்பின் டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும், ஊடகவியலில் டிப்ளோமாப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். மேலும், கொழும்பு வணிகப் பள்ளியில் செயற்றிட்ட முகாமைத்துவப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 'காமன் கூத்து'(மலையக தமிழரின் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு), 'உப்பு ரொட்டி' (கவிதைத் தொகுப்பு), 'மலையகத் தமிழரின் சமூகவியலும் அரசியலும்' என்பன இவரது நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்