இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வியின் வரலாறு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வியின் வரலாறு

September 24, 2025 | Ezhuna

‘அரசறிவியல் கலைக்களஞ்சியம்’ (Encyclopedia Of Political Science) என்னும் தலைப்பில் அமையும் இத் தொடரில் அரசியல் கோட்பாடுகள் (Political Theories), அரசியல் விஞ்ஞான எண்ணக்கருக்கள் (Concepts) சமகால அரசியல் விவாதங்கள் என்பன குறித்த கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன. பொதுவெளியில் (Public Sphere) நடைபெறும் அரசியல் விவாதங்களை ஆரோக்கியமுடையனவாக ஆக்குவதற்கு, அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்துவதும், சமூகத்தின் பல மட்டங்களிற்கும் அரசியல் அறிவை எடுத்துச் செல்வதும் அவசியமான பணி என நாம் உணருகின்றோம். தமிழ் அரசியல் சூழலில் நிலவும் கோட்பாட்டு வறுமையை (Theoretical Poverty) நீக்குவதற்கு இக் கட்டுரைத் தொடர் உதவும் என்பது எமது நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் மூலதனம் (Intellectual Capital) ஒரு சிறு மேட்டிமைக் குழுவிடம் (Elite Group) குவிந்திருப்பதை நீக்கி, அறிவுச் செல்வத்தின் மறுபங்கீட்டின் மூலம் சமூக விடுதலை, ஜனநாயக மயப்படுத்தல், அடிமட்டத்தினர் அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய இலக்குகளை அடைதல் இத் தொடரின் நோக்கமாகும்.

ஆங்கில மூலம்: ஏ.எம். நவரத்தின பண்டார, ஜயதேவ உயன்கொட

முன்னுரை

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற பாடம் ஒரு கல்வித் துறையாக வளர்ச்சியுற்ற வரலாற்றைப் பேராசிரியர் ஏ.எம். நவரத்தின பண்டாரவும், பேராசிரியர் ஜயதேவ உயன்கொடவும் இணைந்து எழுதியுள்ள ‘Political Science and Public Policy: Cultivating the Critical Spirit’ என்னும் தலைப்பிலான ஆங்கிலக் கட்டுரையில் விவரித்து எழுதியுள்ளனர். இக்கட்டுரை One Hundred Years of Humanities and Social Sciences in Sri Lankan Universities – Volume Ⅱ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக். 119 – 141) அமைந்துள்ளது. இக்கட்டுரையின் முற்பகுதியில் 119 முதல் 124 வரை 5 பக்கங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தொகுத்தும் சுருக்கியும் தருவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

வரலாறு

1921 இல் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்லூரி (The University College) என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனம் தாபிக்கப்பட்டது. இக்கல்லூரி லண்டன் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் கல்வி நிறுவனமாகச் செயற்பட்டது. அக்காலத்தில் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் அரசியல் என்னும் பாடம் வரலாறு, சட்டம், பொருளியல் என்ற துறைகளின் உபபிரிவாகவே இருந்து வந்தது. உதாரணமாக வரலாறு என்ற பாடத்தைக் கற்ற மாணவர்களிற்கு ‘இங்கிலாந்து வரலாறு’ கற்பிக்கப்பட்டது. அம்மாணவர்கள் ‘இங்கிலாந்துப் பாராளுமன்ற முறையின் வளர்ச்சி’ என்ற விடயத்தை அதன் ஊடாகக் கற்றனர். வரலாற்று மாணவர்கள் கற்ற இன்னொரு பாடமாக ‘அரசியல் கோட்பாட்டின் வரலாறு’ (History of Political Theory) என்ற பாடம் அமைந்தது. பண்டைக்காலம், இடைக்காலம், நவீனகாலம் ஆகிய மூன்று காலப்பகுதிகளிலும் மேற்கு நாட்டிலும், ஆங்கிலேயர் தேசத்திலும் ஏற்பட்ட வளர்ச்சிகள் பற்றி மாணவர்கள் இப்பாடம் மூலம் கற்றனர். பொருளியல் பாடத்தைக் கற்ற மாணவர்கள் மேற்கு நாட்டின் அரசியல் கோட்பாடும் அதன் வளர்ச்சியும் என்ற விடயத்தைக் கற்றனர். சட்ட மாணவர்கள் அரசியல் யாப்புச்சட்டம் (Constitutional Law) என்ற பாடத்தின் மூலம் இங்கிலாந்தின் அரசியல் யாப்பை பற்றிக் கற்றுக் கொண்டனர். பிரித்தானியாவின் கல்வி மரபைப் பின்பற்றிய இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி ‘அரசியல்’ என்னும் பாடத்தை பொருளியல், வரலாறு ஆகிய துறைகளின் ஊடாகக் கற்பிக்கும் நடைமுறையைப் பின்பற்றியது. ‘Ceylon University College Prospectus 1936 – 37’ எனும் கையேட்டில் தரப்பட்டுள்ள தகவல்களின் படி ஐந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் அரசியல் எனும் பாடத்தை மாணவர்களுக்குக் கற்பித்தனர் என்பதை அறியமுடிகிறது.

  1. பேராசிரியர் S.A. பேக்மன் – விரிவுரையாளர் – வரலாறு 
  2. பேராசிரியர் B.B. தாஸ்குப்தா – பொருளியல் – விரிவுரையாளர்.
  3. திரு. W.J.F. லப்றோய் (W.J.F Labrooy) – வரலாறு – உதவி விரிவுரையாளர்
  4. திரு. B.R. சொனி (B.R. Shony) – பொருளியல் – உதவி விரிவுரையாளர்.
  5. உபவேந்தரான சேர். ஐவர் ஜெனிங்ஸ், அரசியல் யாப்புச்சட்டம் பற்றிக் கற்பித்தார்.

பல்கலைக்கழகக் கல்லூரிக் காலத்தில் செவ்வியல் இலக்கியம் (Classics), மெய்யியல், வரலாறு, சட்டம் ஆகிய பாடங்கள் கலைத்துறை மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. இப்பாடங்களைக் கற்பதன் மூலம் தாராண்மை – மனிதாய விழுமியங்களை (Liberal – Humanist Values) உள்ளீர்த்துக் கொண்ட பண்பட்ட அறிஞர் குழாம் இலங்கையில் உருவாக்கம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் அரசியல் என்ற பாடமும் மேற்குறித்த  தாராண்மை உணர்வு நிலையை (Liberal Ethos) மாணவர்களுக்கு ஊட்டும் நோக்கத்துடனேயே கற்பிக்கப்பட்டது எனலாம். மாணவர்கள் வரலாறு, பொருளியல், சட்டம் ஆகிய பாடங்களின் ஊடாகப் பின்வரும் விடயப்பொருள் பற்றிய அறிவினைப் பெற்றுக்கொண்டனர்.

அ. அரசியல் கோட்பாடு (Political Theory)

ஆ. அரசியல் மெய்யியல் (Political Philosophy)

இ. அரசியல் சிந்தனை வரலாறு 

ஈ. பிரித்தானியப் பேரரசின் வரலாறு (History of the British Empire)

உ. அரசியல் யாப்புச் சட்டம் (Constitutional Law)

ஊ. பிரித்தானிய அரசாங்கம் (British Government)

இவை வரலாறு, பொருளியல், சட்டம் ஆகிய கற்கைத் துறைகளின் துணைப்பாடங்களாக விளங்கின என்பது கவனிக்கத்தக்கது.

அரசியல் நிறுவனங்களும் அரசியல் யாப்பு முறைகளும் (Political Institutions and Constitutional Systems) என்ற விடயம் பற்றி மேற்படி மூன்று துறை மாணவர்களும் கற்றபோது, அப்பாடம் சட்டம், அரசியல் என்ற இரண்டு துறைகளுடனும் கலப்புடையதாக இருப்பது வெளிப்பட்டது. பிரித்தானிய மரபில் அரசியற் பொருளாதாரம் (Political Economy) என்ற விடயம் பற்றிய கல்வி அரசாங்கத்திற்கும் பொருளாதாரக் கொள்ளைகளுக்கும் இடையிலான இடைத்தொடர்புகள் பற்றிய ஆராய்ச்சியாக அமைந்தமை அவதானிக்கத்தக்கது. 1895 இல் ‘லண்டன் ஸ்கூல்’ என்ற பெயரில் பொருளாதாரமும் அரசியலும் இணைந்த துறை (London School of Economics and Political Science) தாபிக்கப்பட்டது. இதனை சிட்னிவெப், பீற்றிஸ்வெப் (Sydney and Beatrice Web) ஆகிய இருவரும் தாபித்தனர். அத்துறையின் தாபிதம் பிரித்தானிய மரபில் பொருளியல், அரசியல் விஞ்ஞானம் என்ற இருதுறைகளுக்கும் இடையில் பிணைப்பு இருந்து வந்ததை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகத்தின் லிபரல் கலைப் பாடநெறிகளுக்கு (Liberal Arts Courses) மாணவர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகச் செயற்பட்டது. தாராண்மைச் சிந்தனையை மாணவர்களுக்கு ஊட்டும் தன்மையுடைய சமூக விஞ்ஞானம், மனிதப்பண்பியல் பாடங்களை இலங்கை மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்லூரி ஊடாகக் கற்றனர். செவ்வியல் இலக்கியம் (Classics), மெய்யியல், வரலாறு, பொருளியல், அறவியல் (Ethics), சட்டம் ஆகிய பாடங்களைக் கற்ற இம்மாணவர்கள் பலர் சிவில் சேவையில் இணைந்து இலங்கையில் பணியாற்றினர். இன்னும் சிலர் அயல்நாட்டுச் சேவையில் (Overseas Service) இணைந்தனர். வரலாறு, பொருளியல், சட்டம் போன்ற மேற்குறித்த பாடங்கள் ஊடாக இவர்கள் அரசியல் கோட்பாடு (Political Theory), பிரித்தானியப் பேரரசின் வரலாறு, அரசியல் யாப்புச் சட்டம், பிரித்தானிய அரசாங்கம் (British Government) ஆகிய விடயங்களில் மிகுந்த அறிவைப் பெற்றனர். இந்த அறிவு அவர்களுக்கு சிறந்த சிவில் சேவை நிர்வாகிகளாகவும் அயலுறவுத்துறையில் இராஜதந்திரிகளாகவும் சிறப்பாகச் செயலாற்ற உதவியது.

பிரித்தானியாவின் சிவில் சேவையின் சீர்த்திருத்தம் குறித்த 1854 ஆம் ஆண்டின் நோர்த்கோட் ரெவலியன் அறிக்கை சிவில் சேவைக்குத் தாராண்மைக் கலைக் (Liberal Arts) கல்வியைக் கற்றவர்களே மிகவும் பொருத்தமானவர்கள் எனச் சிபாரிசு செய்திருந்தது. அந்நாட்டின் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்களின் கலைப் பட்டதாரிகள் பிரித்தானியாவின் சிவில் சேவையிலும் பெரும்பாண்மை இடங்களைப் பிடித்துக் கொண்டதோடு சிறப்பாகவும் செயலாற்றினர். பல்கலைக்கழகக் கல்வியிலும், சிவில் சேவை ஆட்சேர்ப்பிலும், பிரித்தானிய மரபு இலங்கையில் பின்பற்றப்பட்டதைக் கட்டுரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர். இப்பின்னணியில் இலங்கையில் காலனிய ஆட்சிக்காலத்தில் அரசியல் விஞ்ஞானக் கல்வி சிறப்பிடம் பெற்றதில் வியப்பில்லை.

பேராதனையில் அரசியல் விஞ்ஞானம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1952 ஆம் ஆண்டு முதல் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது. அப்பல்கலைக்கழகம் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பிப்பதிலும், ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவதிலும் முன்னோடியான பல்கலைக்கழகமாகச் செயற்பட்டது. அரசியல் விஞ்ஞானம் மட்டுமன்றிக் கலைத்துறைப் பாடங்களின் கல்வியில் பேராதனையில் 1950கள் முதல் 1970கள் வரை செழுமையான கல்வி மரபு இருந்தது எனக் கட்டுரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 1980க்குப் பிற்பட்ட காலத்தில் பேராதனையில் ஒரு பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பேராதனையின் ஏற்றம், இறக்கம் குறித்த காரணங்கள் பற்றிக் கட்டுரையாசிரியர்கள் கூறும் விளக்கங்கள், இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வி முறைக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிய ஆழமான சிந்தனைக்கு உதவும் அரிய கருத்துகளாகும். 

1971 இன் ஏப்ரல் கிளர்ச்சி, இனத்துவ முரண்பாடுகள் (Ethnic Conflict) தீவிரம் பெறுதல், அரசியல் ஏதேச்சதிகாரம் (Political Authoritarianism) என்னும் பெரும்கேடு சூழ்ந்து கொண்டமை ஆகியன பேராதனையின் கல்வி வாழ்க்கையிலும் சடுதியான வீழ்ச்சியை ஏற்படுத்தின என கட்டுரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 1970களிலும் குறிப்பாக 1980களின் பின்னரும் பேராதனையில் கல்வி கற்கப் புகுந்த மாணவர்களின் சமூகப் பின்புலம் (Social Background) முற்பட்ட காலத்து மாணவர்களின் சமூகப் பின்புலத்தை விட வேறானது. முற்பட்ட காலத்து மாணவர்கள் மத்தியதர வர்க்கப் (Middle Class) பெற்றோர்களின் பிள்ளைகளாக, சலுகை பெற்ற வகுப்பினைச் (Privileged Social Stratum) சேர்ந்தவர்களாக விளங்கினர். இதனால் பேராதனையின் கல்விப் பண்பாட்டில் ‘Culture of Intellectual Elitism’ என்னும் பண்பு இருந்தது எனக் கட்டுரையாசிரியர்கள் கூறுகின்றனர். 1980 ஆம் ஆண்டின் பின்னர் பேராதனையின் கல்வி வாழ்க்கையின் அமைதி குலைந்தோடு, ஆசிரியர்களும், மாணவர்களும் அரசியல் மயப்படுத்தப்படுத்தல் (Politicisation) இடம்பெற்றது. பேராதனை உட்பட இலங்கையின் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பிரச்சினைகள் அதிகரித்தன. போதிய வளங்கள் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படவில்லை; போதியளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; இலங்கையின் ‘பழைய’ பல்கலைக்கழகங்களும், ‘புதிய’ பல்கலைக்கழகங்களும் 1980க்கு பிற்பட்ட காலத்தில் ‘பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் கல்லூரிகள்’ (Undergraduate Colleges) என்ற நிலைக்குத் தரம் தாழ்ந்தன எனவும் கட்டுரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இப்பின்னணியிலேயே அரசியல் விஞ்ஞானம் என்னும் கல்வித்துறையின் கற்பித்தல், ஆராய்ச்சி, நூல் வெளியீடு ஆகியன மதிப்பிடப்படுதல் வேண்டும் எனவும் கட்டுரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 

இலங்கைப் பல்கலைக்கழகம் – (1942 – 1969)

1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் சுயாதீனமாகப் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்கும் சட்ட அதிகாரம் உடையதாகவும் இருந்தது. ஆயினும் ‘அரசியல்’ (Politics) தொடர்பான தனியான பட்டப்படிப்பை இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவில்லை. பொருளியல் பட்டப்படிப்பின் ஒரு பகுதியாகவே அரசியல் கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகம் கற்பித்து வந்தது. 1952 இல் கலைப்பீடம் பேராதனைக்கு மாற்றப்பட்ட பின்னரும் கூட அரசியல் பொருளியலின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது (Kodikara:1992:225). வரலாற்றுத்துறை மாணவர்கள் ஐரோப்பிய அரசியல் சிந்தனை வரலாறு, ஐரோப்பிய அரசியல் வரலாறு, ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதத்தின் எழுச்சி, தேசிய அரசுகளின் (Nation States) தோற்றம் ஆகியன பற்றிக் கற்று வந்தனர்.

பேராதனையின் பொருளியல் துறையில் அரசியல் கற்ற மாணவர்களுக்கு அரசியல் மெய்யியல், அரசியல் சிந்தனை, பிரித்தானிய அரசாங்கம், இலங்கை அரசாங்கம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அரசியலை மாணவர்களுக்குக் கற்பித்தவர்களுள் கலாநிதி I.D.S. வீரவர்த்தன ஒரு முன்னோடியான புலமையாளராவர். இவர் டொனமூர் கால அரசியல் பற்றி கலாநிதிப்பட்ட ஆய்வாகச் சமர்பித்த ‘Government and Politics in Ceylon 1931 – 1947’ என்ற நூல் (1951) இன்றுவரை இப்பாருள் குறித்த சிறந்த ஆய்வாக மதிக்கப்படுகிறது. இந்நூல் 1962 இல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும், அம்மொழிபெயர்ப்பு மாணவர்களுக்குப் பாடநூலாகப் பயன்பட்டதாகவும் கட்டுரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர் (இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை). அரசியல் பீ.ஏ சிறப்புப் படிப்பை மேற்கொண்டவர்களுக்கு மூன்றாம், நான்காம் ஆண்டுகளில், இலங்கை அரசாங்கம், ஒப்பீட்டு அரசாங்கம், சர்வதேச அரசியல், அரசியல் சிந்தனை என்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. ஆயினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் B.A Economics (Honours) எனவே பெயரிடப்பட்டது. இவ்வழக்கம் 1973 வரை தொடர்ந்தது. 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம்: 1969 முதல் இன்றுவரை

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை 1969 இல் ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற பெயரில் அரசியல் பாடவிதானத்தை வடிவமைத்து நான்கு ஆண்டு சிறப்புப்பட்டப் படிப்பை ஆரம்பித்தது. முதலாவது ஆண்டில் ‘G.A.Q’ வகுப்பில் அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகப் படித்த மாணவர்களில் இருந்து சிறப்புப் பட்டப்படிப்பிற்காக (Special Degree Course) மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். நான்கு ஆண்டு சிறப்புப் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அரசியல் விஞ்ஞானக் கல்வியின் பாடப்பரப்பு விரிவாக்கம் பெற்றது. சிறப்புப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பல புதிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன. 

  1. புதிய அரசுகளின் அரசியல் (Politics of New States)
  2. அமுக்கக் குழுக்களும் பொதுசன அபிப்பிராயமும் (Pressure Groups and Public Opinion)
  3. ஒப்பீட்டு அரசாங்கம்
  4. பிரயோகப் பொருளியல்
  5. புள்ளிவிவரவியல்
  6. சர்வதேச அரசியல் கோட்பாடுகள்

ஆகிய பாடங்களை மாணவர்கள் மூன்றாம் ஆண்டில் கற்றனர். இறுதியான நான்காம் ஆண்டில் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்பட்டன:

  1. இலங்கையில் அரசியல் மாற்றம்
  2. யப்பான் நாட்டின் அரசாங்கம்
  3. அரசியல் சமூகவியல் (Political Sociology)
  4. இருபதாம் நூற்றாண்டின் அரசியல் இயக்கங்கள்

இவற்றுள் ‘யப்பான் நாட்டின் அரசாங்கம்’ என்ற பாடம் ஆசியப் பிராந்தியத்தின் ஒரு நாட்டின் அரசாங்கமும் அரசியலும் பற்றிய மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இறுதியாண்டில் மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை எழுதிச் சமர்ப்பித்தல் வேண்டும். அக்கட்டுரைக்கும் புள்ளியிடப்படும் என்ற விதி 1973 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

மேற்குறிப்பிட்ட வகையில் 1969 முதல் 1973 வரையான காலத்தில் ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற கற்கைத் துறையின் பாடப்பரப்பு, முன்னைய மரபுவழி அடிப்படைகளில் இருந்து விலகி, விரிவாக்கம் பெற்றதைக் காணமுடிகிறது. முன்னைய காலத்தில் அரசியல் கோட்பாடு, இலங்கையினதும் பிரித்தானியாவினதும் அரசாங்கங்கள் ஆகிய பாடங்களிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. 1969 இன் பின்னர் மாணவர்கள் பொது நிருவாகவியல், சர்வதேச அரசியல் கோட்பாடுகள், தென்கிழக்காசியப் பிராந்தியத்தினதும் ஆபிரிக்காவினதும் புதிய அரசுகள் ஆகிய புதிய பாடங்களையும் படித்தனர். இவ்வாறு பாடப்பரப்பு விரிவாக்கம் பெற்றதால் விரிந்த நோக்கில் இலங்கையினது அரசியலையும், பிராந்திய அரசியலையும் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. புள்ளிவிவரவியல், பிரயோகப் பொருளியல் ஆகிய பாடங்களும் சிறப்புப் பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. இப்பாடங்கள் பற்றிய அறிவு இறுதியாண்டில் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதுவதற்கு வேண்டிய திறன்களையும் அறிவையும் மாணவர்கள் பெற்றுக்கொள்ள உதவியது.

1980 இல் பேராதனையில் அரசியல் விஞ்ஞானம் என்னும் புதிய துறை ஆரம்பிக்கப்படுதல்

பொருளியல் துறையில் அரசியல் விஞ்ஞானம் சார்ந்த பாடங்களைக் கற்பித்து வந்த விரிவுரையாளர்களைத் தனியாகப் பிரித்து, ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற புதிய துறை 1980 இல் உருவாக்கப்பட்டது. இவ்வாறு பிரித்து புதிய துறை ஆரம்பிக்கப்பட்டதனால், புதிய அலுவலகமும், புதிய ஆளணியும் பதவி நிலைகளும், அரசியல் விஞ்ஞானத்துறைக்குக் கிடைத்தன. பௌதீக வளங்களோடு, நிதிவளமும் அதிகரித்த அளவில் கிடைத்தது. இதனால், அரசியல் விஞ்ஞானம் தனித்துவமான பயில்நெறியாக (Independent Discipline) வளர்வதற்கான அடித்தளம் இடப்பட்டது. 1980களில் அரசியல் விஞ்ஞானம் மாணவர்களின் விருப்புக்குரிய பாடங்களில் ஒன்றாக வளர்ச்சி பெற்றது. ஓரிரு ஆண்டுகள் கழிவதற்குள் பேராதனையில் பொதுக்கலை முதலாம் ஆண்டில் (G.A.Q) அரசியல் விஞ்ஞானத்தைப் படிப்போர் எண்ணிக்கை 500 மாணவர்கள் வரை உயர்ச்சி பெற்றது. மாணவர்களில் பலர் பொது நிருவாகவியல், சர்வதேச அரசியல் ஆகிய பாடங்களைப் படிப்பதிலும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இதனால், 1990 ஆம் ஆண்டில் பின்வரும் நான்கு பாடங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

  1. ஒப்பீட்டுப் பொது நிருவாகவியல் (Comparative Public Administration)
  2. அபிவிருத்தி நிருவாகம் (Development Administration)
  3. இலங்கையின் அயலுறவுக் கொள்கை 
  4. சர்வதேச நிறுவனங்கள் (International Organisations)

1996 – 2000 ஆண்டு காலப்பகுதியில் அரசியல் விஞ்ஞானம் பாடப்பரப்பு மேலும் விரிவாக்கம் பெற்றது. இக்காலத்தில் அரசியல் விஞ்ஞானம் பாடப்பரப்பு பின்வரும் விடயங்களைச் சேர்த்துக்கொண்டது. பொதுக் கொள்கை (Public Policy) என்ற விடயம் தொடர்பான பாடங்கள் இரண்டு சேர்க்கப்பட்டன. அவை: 

  1. பொதுக் கொள்கை:  கோட்பாடும் நடைமுறையும் (Theory and Practice of Public Policy).
  2. பொதுக் கொள்கைக் கோட்பாடுகள் (Theories of Public Policy)

பூகோளச் சூழல் (Global Environment), பூகோளப் பொருளாதாரம், பொதுத்துறை வளங்களின் முகாமைத்துவம், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், மனிதப் பாதுகாப்பு, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஆகிய விடயங்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக பொதுக் கொள்கை வகுத்தல் (Public Policy Making) முக்கியம் பெற்றுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கு இப்பாடங்களைக் கற்பிக்கும் தேவை எழுந்துள்ளது. 1996 – 2000 காலப்பகுதியில் அரசியல் விஞ்ஞானத்துறையில் பின்பட்டப்படிப்புக் கல்வியும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில் தற்போது ஒரு பேராசிரியரும், ஆறு முதுநிலை விரிவுரையாளர்களும் கலாநிதிப் பட்டம் (Ph.D) பெற்றவர்களாகவும், இரு விரிவுரையாளர்கள் முதுகலைப் பட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறு தற்காலிக விரிவுரையாளர்களும் அங்கு கடமையாற்றுகின்றனர்.

பிற பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானக் கல்வி

கொழும்புப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அரசியல் விஞ்ஞானம் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகங்களில் வரலாறு, பொருளியல் ஆகிய இரு துறைகளின் உப பிரிவுகளாக அரசியல் விஞ்ஞானம் ஆரம்பத்தில் அமைந்திருந்தது. பின்னர் பேராதனையைப் போன்றே பிற பல்கலைக்கழகங்களிலும் ‘அரசியல் விஞ்ஞானமும் பொதுக் கொள்கையும்’ கல்விக்கான தனித்துறைகள் நிறுவப்பட்டன. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தனித்துறை 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போது இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் பேராதனை, கொழும்பு, சிறி ஜெயவர்த்தனபுர, யாழ்ப்பாணம், உருகுணை, களனி ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், சப்பிரகமுவ பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கப்படுகிறது.

தொகுப்புரை

ஏ.எம். நவரத்தின பண்டார, ஜயதேவ உயன்கொட ஆகிய இரு பேராசிரியர்களால் இணைந்து எழுதப்பட்ட ‘Political Science and Public Policy: Cultivating the Critical Spirit’ என்னும் தலைப்பிலான 22 பக்க ஆங்கிலக் கட்டுரையின் முதல் 5 பக்கங்களில் உள்ள கருத்துகளைத் தொகுத்துத் தரும் முறையில் இத்தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

சமூக விஞ்ஞானங்களில் ஒன்றான ‘அரசியல் விஞ்ஞானம்’ என்ற கல்வித்துறை, 1921 இல் பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்கப்பட்ட காலம் முதல் ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு மேலாக, பல்கலைக்கழக நிலையில் ஒரு கற்கைநெறியாக வளர்ச்சியுற்ற வரலாற்றைக் கட்டுரையாசிரியர்கள் இக்கட்டுரையில் விளக்கிக் கூறியுள்ளனர். அவர்கள் கூறியிருக்கும் முக்கிய கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

1. காலனிய ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரி (The University College) பிரித்தானியப் பல்கலைக்கழகக் கல்வி மரபைப் பின்பற்றி, வரலாறு, பொருளியல், சட்டம் ஆகிய பாடங்களின் உப பிரிவாகவே அரசியல் (Politics) என்ற பாடத்தை மாணவர்களுக்குக் கற்பித்து வந்தது.

2. 1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது, அரசியல் கல்வி பொருளியல் துறையின் ஓர் உப பிரிவாகவே இயங்கியது. 1952 இல் பேராதனைக்கு கலைப்பீடம் (Arts Faculty) மாற்றப்பட்ட பின்னரும் ஏறக்குறைய 27 ஆண்டுகள் அரசியல் கல்வி தனித்துறை என்ற அந்தஸ்தைப் பெறவில்லை.

3. பிரித்தானிய மரபில் சில மட்டுப்பாடுகள் (Limitations) இருந்தபோதும், அக்கல்வி மரபில் நேர்மறை அம்சங்கள் பல இருந்தன. அரசியல் என்ற பாடத்தை இக்கல்வி மரபின் ஊடாகக் கற்ற மாணவர்கள் பல நன்மைகளைப் பெற்றனர். 

  1. இக்கல்வி மரபு ‘தாராண்மைக் கலைக் (Liberal Arts) கல்விக்கு’ முதன்மையளித்தது. வரலாறு, பொருளியல், சட்டம், மெய்யியல், இலக்கியம் ஆகிய கலைத்துறைப் பாடங்களைக் கற்றவர்கள் ‘தாராண்மை விழுமியங்களை’ (Liberal Values) உள்ளீர்த்துக் கொண்டவர்களாகவும், அரசியல், சமூக விடயங்களில் கூருணர்வு மிக்கவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பெற்றுக்கொண்ட அரசியல் அறிவு பொது வாழ்க்கையிலும், அரச நிர்வாகத்துறையிலும் சிறப்பான வகிபாகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியது.
  2. பிரித்தானியாவின் கல்வி மரபில் தாராண்மைக் கலைக் கல்விக்கு முதன்மையிடம் அளிக்கப்பட்டது போன்று, அந்நாட்டின் நிருவாக சேவையிலும், கலைப் பட்டதாரிகளான ‘Generalists’ முதன்மையிடத்தைப் பெற்றனர். கலைப்பட்டதாரிகளே சிவில் சேவைப் பதவிகளுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என 1854 ஆம் ஆண்டின் நிர்வாகச் சீர்திருத்த ஆணைக்குழு அறிக்கை சிபாரிசு செய்திருந்தது. இலங்கையிலும் சிவில் சேவைப் பதவிகளில் வரலாறு, பொருளியல், சட்டம், மெய்யியல் ஆகிய கலைத்துறைப் பட்டதாரிகள் உள்ளீர்க்கப்பட்டனர். 1960க்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் சிவில் சேவையின் தரம் உயர்வாக இருந்தமைக்கு இது பிரதான காரணங்களில் ஒன்றாகும்.

4. இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரிக்காலம், 1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் உருவாக்கம் பெற்ற பின்னர் உள்ள பத்தாண்டு காலம், 1952 இல் கலைத்துறை பேராதனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது முதல் 1969 வரையான 27 ஆண்டு காலம் என்ற மூன்று கட்டங்களிலும் அரசியல் கல்வி இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் பலமான அடித்தளத்தை உடையதாக வளர்ச்சி பெற்றது.

5. S.A. பேக்மன் (வரலாறு), B.B. தாஸ்குப்தா (பொருளியல்), W.J.F. லப்ரோய் (வரலாறு), B.R. சொனி (பொருளியல்) ஆகியோரும், சேர். ஐவர் ஜெனிங்ஸ், I.D.S. வீரவர்த்தன ஆகியோரும் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியிலும், இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் அரசியல் கல்வி வேரூன்றிச் செழித்து வளருவதற்கு வேண்டிய அடித்தளத்தை இட்டனர்.

6. 1969 இல் அரசியல் என்னும் துறை, அரசியல் விஞ்ஞானம் என்னும் (Political Science) புதிய அடையாளத்தைப் பெற்றது. அதன் பாடப்பரப்பு விரிவாக்கம் பெற்றது. பொது நிருவாகவியல், சர்வதேச அரசியல் கோட்பாடுகள், அரசியல் சமூகவியல், அபிவிருத்தி நிர்வாகம் போன்ற புதிய பாடங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

7. 1980 ஆம் ஆண்டில் பேராதனையில் அரசியல் விஞ்ஞானத்துறை என்ற தனித்துவமுடைய துறை (Separate Department) நிறுவப்பட்டது. புதிய துறையாக அரசியல் விஞ்ஞானத்துறை ஆரம்பிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள், முதலாவது ஆண்டில் (G.A.Q) அரசியல் விஞ்ஞானத்தைக் கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ச்சி பெற்றது. இக்காலத்தில் அரசியல் விஞ்ஞானம் மாணவர்களின் விருப்புக்குரிய பாடங்களில் ஒன்றாக மாறியது. 1990 – 96 காலத்திலும், 1996 – 2000 காலத்திலும் அரசியல் விஞ்ஞானப் பாடத்தின் விடயப்பரப்பு மேலும் விரிவாக்கம் பெற்றது.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்