ஆங்கில மூலம்: கேட் குரோனின் – ஃபர்மான்
கூட்டணியைத் தடுக்கும் ஓர் உத்தி
மனித உரிமைகள் கவுன்சிலில் எந்த அரசிற்கும் வீட்டோ அதிகாரம் இல்லை. அதன் நாற்பத்தேழு உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச்சபையால் மூன்று ஆண்டுகாலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற குழுக்கள் ஏழு இடங்களை மட்டுமே கொண்டுள்ளன. இதன்பொருள், எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், அரசுகளின் கூட்டடான ஆதரவைப் பெற்றேயாக வேண்டும் என்பதாகும்.
இந்த இயக்கவியலைப் பயன்படுத்திக்கொண்டு, ராஜபக்சே ஆட்சி மனித உரிமைகள் கவுன்சில் ஒரு சர்வதேச ஆய்வு அமைப்பை உருவாக்க வலியுறுத்துவதைத் தடுக்க தீவிரப்பிரசாரத்தை மேற்கொண்டது. இலங்கையின் ராஜதந்திரம் மேற்கத்திய நாடுகள் அல்லாத மற்றைய உறுப்பினர்களை இலக்காகக்கொண்டது. பிரசாரம் இரண்டு கூறுகளைக் கொண்டிருந்தது.
முதலாவது அதன் உள்நாட்டு நிறுவனங்களைப்பற்றிப் பெரிதுபடுத்திப் பேசுவது. இரண்டாவது, அப்படிப்பட்டவற்றை விமர்சிப்பதை சட்டவிரோதமானது என்று வகைப்படுத்துவது. இதன்வழியாக மேற்கத்திய நாடுகளின் ஒடுக்குமுறைக்கு எதிராக வளரும் நாடுகளின் உலக ஒற்றுமை தூண்டப்படுகிறது. இந்த இரண்டு உத்திகளும் இலங்கையை ஆதரிப்பதற்கான காரணத்தையும், மனித உரிமைகள் கவுன்சிலில் சகநாடுகளுக்கு ஆதரவையும் வழங்க, இணைந்து செயற்பட்டன.
உள்நாட்டுவழிமுறைகள்
உள்நாட்டு அணுகுமுறையின் முக்கியத்துவம், முக்கியமாக LLRC இனை நோக்கியே இருந்தது. இலங்கையின் தூதுக்குழுவின் தலைவர் மனித உரிமைகள் கவுன்சிலின் 2011 செப்டம்பர் மாத அமர்வில் உரையாற்றுகையில், LLRC உறுப்பினர்கள் ‘மிகவும் கருத்தில்கொள்ளத்தக்க நிபுணர்கள்’ என்று வலியுறுத்தினார்: “அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்க அவர்களுக்கு நேரமும் இடமும் வழங்கப்பட வேண்டும்.” 2012 மார்ச்சிலும் அமைச்சர்கள்மட்டக் கூட்டம் ஒன்றிலும் அவர் இதை எதிரொலித்தார்: “இலங்கை தனது அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் பயனளிக்கும் ஒரு உள்நாட்டு நல்லிணக்க செயல்முறையை வெற்றிகரமாக நிறைவேற்றச் சிறப்பான நிலையில் உள்ளது.” இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் உருவாக்கத்தைப் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். “அறிக்கை வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களுக்குப்பிறகு, (LLRC) பரிந்துரைகளை செயற்படுத்துவதில் இலங்கை தெளிவான மற்றும் திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்றார்.
2013 ஆம் ஆண்டில், இலங்கை மீண்டும் மனித உரிமைகள் கவுன்சில் முன்னால் வந்தபோது, அதன்பிரதிநிதிகள், ‘உள்நாட்டில் வளர்க்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை’ பொறுப்புக்கூறல் பற்றியவைகளை பூர்த்திசெய்யப் போதுமானது எனத் தொடர்ந்து வலியுறுத்தினர். ‘ஏதோ ஒருவகையில் குறையுடையவை’ என்று கூறி, “நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் பொறிமுறைகளை குறைத்து மதிப்பிட்டு, மதிப்பிழக்கச் செய்யும்” நடவடிக்கை கவுன்சிலின் தீர்மானம் என்று சவால்விட்டனர்.
2013 ஆகஸ்டில் தனது நாட்டுப் பயணம் குறித்த நவிபிள்ளையின் விமர்சன அறிக்கையைத் தொடர்ந்து, ஜெனீவாவிற்கான இலங்கைத்தூதர் மனித உரிமைகள் கவுன்சிலிடம் பின்வருமாறு கூறினார்: “பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்கான பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுச் செயற்பாட்டில் உள்ளன.” அவர் குறிப்பாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட காணாமல் போனோர் ஆணையத்தைப்பற்றியும் குறிப்பிட்டார். “காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் விரிவாக விசாரிக்கப்படுகின்றன” என்றார். 2014 மார்ச் மாத அமர்வுக்கு முன்னதாக, உயர் ஸ்தானிகரின் அறிக்கைக்கு, இலங்கை ஒரு நீண்ட எழுத்துபூர்வ பதிலை வெளியிட்டது. LLRC, இராணுவ விசாரணை நீதிமன்றம் மற்றும் காணாமல் போனோர் ஆணையத்தின் பணிகளை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், 2006 ஆம் ஆண்டு நடந்த இரண்டு படுகொலைகள் மீதான விசாரணைகளையும் நடத்துவதாக அவர் எடுத்துக்காட்டினார்.
மேற்கத்திய நாடுகளை விமர்சித்தல்
மேற்கத்திய நாடுகளின் பொறுப்புக்கூறல் பற்றிய அழுத்தத்தை ‘சூனியக்காரிகளின் வேட்டை’ போன்றது என்று கடுமையாக விமர்சிப்பதன்மூலம், இலங்கை தனது உள்நாட்டுப் பொறிமுறைகளை முன்னிலைப்படுத்த எடுக்கும் வழக்கமான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. நிபுணர்கள்குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணைக்கு பிள்ளை அழைப்புவிடுத்தபோது, 2011 ஆம் ஆண்டளவில், இப்படிப்பட்ட இலங்கையின் தந்திரம் தொடங்கியது. ஜெனீவாவிற்கான இலங்கைத்தூதர் செனவிரத்ன உடனடியாக நவிபிள்ளையைக் கண்டித்தார்.

அதன்பிறகு சிறிது நேரத்திலேயே, செனவிரத்னவின் வாரிசான தமரா குணநாயகம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் பிறவக்காலத்து அமைப்புகளைப்பற்றிக் கூறினார். “எல்.எல்.ஆர்.சி.யின் சட்டபூர்வமானதன்மையைக் கேள்விக்குட்படுத்துபவர்களின் உண்மையான நோக்கம், அரசின் இறையாண்மையின் கொள்கையை குறைத்து மதிப்பிடுவதாகும் என்பது தெளிவாகிறது.” என்றார்.
2012 ஆம் ஆண்டில், தீர்மானம் குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, “ஒரு சுதந்திர நாட்டின் மக்களின் நலன்களுக்காகச் செயற்பட அதன் தனிச்சிறப்பை விட்டுக்கொடுக்க அனுமதிப்பீர்களா?” என்று மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களிடம் இலங்கைக்குழுவின் தலைவர் கேட்டார்.
இலங்கையின் இராஜதந்திரிகள், தங்கள் சகநாடுகளுக்கு அடுத்ததாக இருக்க முடியும் என்று வலியுறுத்தினர். 2013 இல், “இன்று அது இலங்கை” என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க எச்சரித்தார். “நாளை, இந்தச்சபையில் உள்ள வேறு எந்தநாடாகவும் இருக்கலாம்” என்று பிறநாடுகளையும் துணைக்குக் கூப்பிட்டார். 2013 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கவுன்சில் வரைவுத் தீர்மானத்தை விவாதித்தபோது, இலங்கையின் தூதர் இது “அனைத்து வளரும் நாடுகளிலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று எச்சரித்தார். 2014 ஆம் ஆண்டிலும் இந்த எச்சரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் சர்வதேச விசாரணையை நியமிக்கும் திட்டமானது “இயல்பாக ஊடுருவும்தன்மை கொண்டது மற்றும் இலங்கை மக்களின் இறையாண்மையையும் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுவதாகும்” என்றார்.
இலங்கை அத்துடன் நின்றுவிடவில்லை. இந்தச் சொல்லாட்சியை ஜெனீவாவிற்கு அப்பாலும் முன்னெடுத்தது. நியூயோர்க்கில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி ராஜபக்ச, சர்வதேச அரங்கில் ‘வளர்ந்துவரும் போக்கின்’ ஒரு பகுதியாக இலங்கையின் மீதான ‘இடைவிடாத துரத்தலை’ பற்றிக் கண்டனம் செய்தார். “வளரும் நாடுகளின் உள்விடயங்களில், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில்” இது நடக்கின்றது என்றார். 2014 மார்ச் மாதத்து மனித உரிமைகள் கவுன்சில் அமர்வு நெருங்கி வரும்போது, துணை-சஹாரா ஆபிரிக்க உறுப்பினர்களை நேரில் சந்தித்த ராஜபக்ச, ‘நவ-ஏகாதிபத்திய மனித உரிமைகள் அழுத்தங்களுக்கு எதிராக உலக ஒற்றுமையை வளர்க்க’ அழைப்புவிடுத்தார். ஊடக அறிக்கையில், சர்வதேச விசாரணைக்கான மேற்கத்திய நாடுகளின் கோரிக்கைகளை ‘கொடுமைப்படுத்துதல்’ என்று குறிப்பாக வகைப்படுத்தினார். அது ‘மல்யுத்த வீரர் ஒரு பள்ளி மாணவனுக்கு எதிராக விளையாடுவது போல’ என்றார்.

இந்த உத்தியின் வெற்றி (மற்றும் அதன் எல்லைகள்)
2012 மற்றும் 2013 இரண்டு ஆண்டுகளிலும், இலங்கையினால் ஒரு சர்வதேச விசாரணையைத் தடுக்க முடிந்தது. 2012 மார்ச் மாதத்தில் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடருக்கான பணிகளை மேற்கொள்வதற்காக, அந்தநேரத்தில் LLRC அறிக்கை வெளியிடப்பட்டது. அமர்வுக்கு முன்னதாக வந்து விழுந்த இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் அறிவிப்பும் மற்றொன்றாக இருந்தது. 2013 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தைப் பற்றி விவாதித்த இலங்கையின் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், “இது சில சர்வதேச செயற்பாட்டாளர்களின் கண்களை மூடிமறைக்கும் முயற்சியாக இருந்தாலும், பொறுப்புக்கூறலைக் கோருபவர்களுக்கான இலக்காக இல்லை” என்று ஒப்புக்கொண்டார். மாறாக, இன்னும் முடிவெடுக்காத மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்கள் சிலரை அது இலக்கு வைத்தது. இலங்கை, 2012 மார்ச் மாதக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இந்த அரசுகளில் சிலவற்றைத் ‘தேர்ந்தெடுக்க’ முடிந்தால், அது மனித உரிமைகள் அவைத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும்.
இலங்கையின் இராஜதந்திரிகள் அதன் உள்நாட்டு வழிமுறைகளைப்பற்றிப் பேசுவதாலும், மேற்கத்திய அழுத்தங்களுக்குச் சவால் விடுப்பதாலும், மனித உரிமைகள் கவுன்சிலின் பெரும்பான்மையினர் வெளிநாட்டுக்குழு ஒன்று விசாரணையை மேற்கொள்ள விரும்பவில்லை. ‘ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கையை’ இந்தியா கடைப்பிடிக்கும் என்ற அறிவிப்பு அத்தோடு வந்ததும், இதற்கு உதவியாக இருந்தது. புலம்பெயர்ந்த தமிழ் ஆர்வலரின் வார்த்தைகளில் சொன்னால், இலங்கைப் பிரச்சினைகளில் “எப்படிப் பதிலளிக்க வேண்டும் என்பதற்கான சமிக்ஞையாக மற்ற நாடுகள் இந்தியாவை எதிர்நோக்குகின்றன”.
ஐ.நா. வழங்கும் எந்தவொரு ‘ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவி’ குறித்தும் இலங்கைக்கு இறுதி முடிவை வழங்கும்வகையில் வாய்மொழித் திருத்தம் இருந்தபோதிலும், ராஜபக்ச ஆட்சி நீர்த்துப்போன தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்தும் போராடியது. அது நிறைவேற்றப்பட்டிருந்தபோதிலும், மனித உரிமைகள் கவுன்சிலில் நடந்த பொதுவிவாதங்கள், ‘உள்நாட்டு முறைகள் மற்றும் மேற்கத்திய தலையீடு’ பற்றிய கதைகள் எவ்வளவு ஆழமாக ஊடுருவியுள்ளன என்பதை வெளிப்படுத்தின. 2012 ஆம் ஆண்டில் ‘வேண்டாம்’ என்று வழங்கப்பட்ட வாக்குகளுக்கான விளக்கத்தில், “வளரும் நாடுகளின் உள்நாட்டு வழிமுறைகளுக்கு சர்வதேச வழிமுறைகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டது (உகாண்டா, இந்தோனேசியா). “இலங்கையின் உள்நாட்டுச் செயல்முறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்றது தாய்லாந்து. “இலங்கைக்கு LLRC இனைச் செயற்படுத்த அதிகநேரமும் இடமும் வழங்கப்பட வேண்டும்” என்றும் பலர் (மாலத்தீவுகள், கிர்கிஸ்தான்) வாதிட்டனர். அந்தத் தீர்மானம் “தற்போது நடைபெற்று வரும் தேசிய முயற்சிகளைக் குறைத்து மதிப்பிடுகிறது; அது அபாயத்தை ஏற்படுத்தும்” என்று எதிராக வாக்களிப்பவர்களின் சார்பாக கியூபா வாதிட்டது. மற்றவர்கள், சர்வதேச சமூகத்தின் ‘பக்கச் சார்புடைய அணுகுமுறையை’ விமர்சித்தனர் (ஈக்வடார், பங்களாதேஷ்).
2013 மார்ச் மாத விவாதத்தின்போதும், இதேபோன்ற நடைமுறைப்போக்கு நிலவியது. இன்னும் ஒருமுறை, கடைசிநேரத்தில் தீர்மானத்தின் மொழிதல் பலவீனப்படுத்தப்பட்டது. ஆகவே அது இலங்கையை நடவடிக்கை எடுக்க ‘ஊக்குவிக்கிறது’. மீண்டும் ஒருமுறை, ‘வேண்டாம்’ என்ற வாக்குகள் ‘நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டு நல்லிணக்கச் செயல்முறையையே’ வலியுறுத்தின. மேற்கத்திய நாடுகளின் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளின் ‘பக்கச் சார்புடைய’ தன்மையை இன்னும் ஒருமுறை விமர்சித்தனர் (வெனிசுலா, பெலாரஸ்) .
உயர் ஸ்தானிகர் நவிபிள்ளை தனது இலங்கைப் பயண அறிக்கையை முறையாக வழங்கியதைத் தொடர்ந்து 2014 மார்ச் மாத விவாதத்தில், ‘உள்நாட்டு முறைகள் மற்றும் மேற்கத்தியச்சார்பு’ என்ற இலங்கையின் சொல்லாட்சியை பல உறுப்புநாடுகள் கிளிப்பிள்ளைகள்போலத் திருப்பிச் சொல்லின. நவிபிள்ளையின் ‘பாரபட்சமான அணுகுமுறை’ (பாகிஸ்தான்) மற்றும் இந்த செயல்முறையின் ‘அரசியல் மயமாக்கல்’ (வெனிசுலா) ஆகியவற்றைப் பலர் விமர்சித்தனர். நவிபிள்ளை கோரிய ‘சர்வதேச விசாரணை என்பது உள்நாட்டுச் செயல்முறையை குறைவுபடுத்தும்’ என்ற கவலையை வெளிப்படுத்தினர் (நமீபியா, இந்தியா, இந்தோனேசியா) .
வளரும் உலக ஒற்றுமைக்கு அழைப்புவிடுத்த ஜனாதிபதி ராஜபக்சவின் இராஜதந்திர தாக்குதலைத் தொடர்ந்து, குறைந்தபட்சம் இரண்டு ஆபிரிக்க நாடுகளாவது ‘சர்வதேச விசாரணையைக் கட்டாயமாக்கும்’ தீர்மானத்தை ஆதரிக்கும் தங்கள் எண்ணங்களைக் கைவிட்டன.
ஆனால் இலங்கையின் அதிர்ஷ்டம் தொடரவில்லை. 2014 மார்ச் மாதம் 27 ஆம் நாள், நாற்பத்தேழுக்கு, இருபத்தி மூன்று வாக்குகள் ஆதரவாகப்பெற்ற நிலையில், மனித உரிமைகள் கவுன்சில் 25/1 தீர்மானத்தை நிறைவேற்றியது. மனித உரிமைகள் மீறல்கள், அத்துமீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்து உயர் ஸ்தானிகர் ‘ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்’ என்று அது கோரியது.
இந்தத் தீர்மானம் இலங்கைக்கு ஓர் இழப்பாக இருந்தது. ஆனாலும் ராஜபக்ச அரசாங்கம் வெற்றிகரமாக அதைத் தாமதப்படுத்தியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு (கட்டுரை எழுதப்படும் வரையில்) போருக்குப் பிந்தைய நீதி வழங்கல் மீதான எந்தவொரு சர்வதேச நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. வலுவான சர்வதேசத்துக்கு வழங்கவேண்டிய பதிலையும் அது தடுத்தது. ஒரு தமிழ் ஆர்வலர் புலம்பியதுபோல, ‘சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களை நேர்மையற்ற உள்நாட்டு தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கச் செய்யும் இந்த ஆட்சியின்திறன், காலத்தைக் கடத்தும் நடவடிக்கையில்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
விசாரணை பட்டியலிடப்பட்டாலும், அது தாமதப்படுத்தப்பட்டதானது, சாட்சியங்களை அழிக்கவும், பாரிய மக்கள் புதைகுழிகளை புல்டோசர் கொண்டு அழிக்கவும், சாட்சிகளை மிரட்டவும், காணாமல்போகச் செய்யவும், அரசுக்கு அவகாசம் அளித்தது. குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை, இராஜதந்திர விலக்கு அளிக்கும் தூதர் பதவிகளுக்கு இலங்கை அரசு நியமிக்கவும் செய்தது.
மனித உரிமைகள் கவுன்சிலில் சலனமற்று இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளை ஈர்க்கச் செய்வதில் இந்த உத்தியின் வெற்றி தங்கியிருந்தது. இலங்கையின் வார்த்தைகளையே கிளிப்பிள்ளைபோலப் பேசும் சில நாடுகளின் வாக்குகள் எப்போதும் ‘இல்லை’ என்பதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவற்றில் பல, ஊசலாடும் நிலையில் இருந்தன என்பது தெளிவாகிறது. உதாரணமாக, இந்தோனேசியா 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளின் தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்து, இலங்கைக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் 2014 இல் வாக்களிக்கவில்லை. அதேபோல், 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் ‘இல்லை’ என்ற போட்ஸ்வானா, 2014 இல் ‘ஆம்’ என்றது. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ‘ஆம்’ என்று வாக்களித்த உருகுவே, மெக்சிகோ மற்றும் நைஜீரியா ஆகியன மேற்கத்திய நாடுகளால் விரும்பப்படும் வலுவான மொழியை ஆதரிக்காது என்பதை வெளிப்படையாகக்கூறின. இலங்கை அமைத்துள்ள உள்நாட்டு வழிமுறைகளின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். மேற்கத்திய நாடுகளின் வலுவான நடவடிக்கைக்கான அழுத்தத்தில், அதன் பல சகநாடுகள் இணைவதை இலங்கையால் தடுக்க முடிந்திருந்தது. மேலும் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பலவீனமான தீர்மானங்களுக்கு எதிராக வாக்களிக்க அவர்களில் சிலரை நம்ப வைப்பதும் இயலுமாயிருந்தது.
மாற்று விளக்கங்களைக் கருத்தில் கொள்ளுதல்
பொறுப்புக்கூறல் பற்றிய அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக இலங்கை அரைகுறை அளவிலான நிறுவனங்களை உருவாக்கியது. இது மனித உரிமை மீறல்களை உதாசீனப்படுத்தும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்று நான் வாதிடுகிறேன். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அரச குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணையை உருவாக்க ஒரு கூட்டணியை உருவாக்குவதைச் சீர்குலைக்கவும் இது உதவியது. ஆனால் இலங்கை பயன்படுத்தும் இந்த வகையான அரைகுறை நடவடிக்கைகளுக்கு, குறைந்தது இரண்டு நம்பத்தகுந்த விளக்கங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் உருவாக்கம், குறிப்பிட்ட வகையான பொறுப்புக்கூறல் நிறுவனங்களுக்கான உள்நாட்டுத் தேவையால் உந்தப்பட்டது. இது நல்லெண்ணத்தின் ஒரு பகுதி. ஆனால் சர்வதேசக் கோரிக்கைகளுக்கு இணங்க, போதுமான முயற்சி இல்லாதது என்பது குறிப்பிடத்தக்கது. கிடைக்கக்கூடிய சான்றுகள் இரண்டு விளக்கங்களுக்கும் எதிராகவே பெரிதும் இருக்கின்றன என்று நான் வாதிடுகிறேன்.
பொறுப்புக்கூறலின் உள்நாட்டு அரசியல்
இலங்கையின் உள்நாட்டு அரசியல், மூன்று காரணங்களுக்காக எந்தவொரு பொறுப்புக்கூறல் பொறிமுறையையும் உருவாக்குவதற்கு எதிராகத் தெளிவாகப் போராடியது. ராஜபக்சே ஆட்சியின் முக்கிய தேர்தல் தொகுதியினரான சிங்கள – பௌத்த வாக்காளர்கள், போர்க்குற்றங்களை ஒப்புக்கொள்வதையோ அல்லது விசாரணை செய்வதையோ எதிர்த்தனர். இரண்டாவதாக, அட்டூழியங்கள் நடத்தியதாகக் கூறப்படும் குற்றவாளிகள் அதிகாரத்தில் இருந்தனர். மூன்றாவதாக, மனித உரிமைகள் பரவலாகவும் முறையாகவும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தொடர்ந்தும் செய்திகள் வந்தன. இதன்விளைவு, நான் கீழே கோடிட்டுக் காட்டியுள்ளபடி, பொறுப்புக்கூறலுக்காக அழுத்தம் கொடுக்கும் உள்நாட்டு வாக்காளர்கள் யாரும் இல்லை என்பது மட்டுமல்ல; ஆட்சியின் அரைகுறை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கு ஒரு நுட்பமான சமநிலைச் செயலும் தேவைப்பட்டது. அதிகாரத்தின் மீதான அதன்பிடியை ஆபத்தில் ஆழ்த்துவதைத் தவிர்ப்பதற்கு இது உதவியது.
போர் முடிவடைந்து வெறும் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ராஜபக்ச திட்டமிட்டதைவிட சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். போரில் பெற்ற வெற்றியின் பலத்தால் எளிதில் வெற்றி பெற்றார். சிங்கள – பௌத்தர்களுடைய தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கிட்டத்தட்ட 80 சதவீத வாக்குகளைப் பெற்றார். இராணுவ வெற்றியைப் பயங்கரவாதத்தின் தோல்வியாக மட்டுமல்லாமல், சிங்கள – பௌத்த மேலாதிக்கச் சித்தாந்தத்தின் நிரூபணமாகவும் அவர்கள் புரிந்துகொண்டனர். LTTE ஒரு வெளிப்புற ஊடுருவலாகவே கருதப்பட்டது. ‘வடக்கிலிருந்து வரும் படையெடுப்பாளர்கள்’ என்ற போர்க்குணமிக்க பௌத்தச் சொல்லாட்சி அதற்குப் பயன்பட்டது. எனவே போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், நீதிபெறத் தகுதியான இலங்கை அரசின் சட்டப்பூர்வமான குடிமக்கள் அல்ல; வடக்கிலிருந்து வந்த தோற்கடிக்கப்பட்ட எதிரிகள் ஆனார்கள். உயிரிழப்பு இல்லாதவகையில் பொதுமக்கள் நடத்தப்பட்டார்கள் என்ற அதிகாரபூர்வப் பிரசாரக்கருத்தை பெரும்பாலான சிங்களவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்தக் கூற்றின் அபத்தத்தைக் குறிப்பிட்டவர்கள், சில பொதுமக்கள் இறந்ததாக ஒப்புக்கொண்டனர்; ஆனால் எந்தவொரு மரணமும் ‘நியாயமானது’ என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

2013 ஆம் ஆண்டில் ஒரு தமிழ் ஆர்வலர் கூறியதுபோல், “இராணுவத்தை நோக்கி விரலை நீட்டுவது விருப்பமானதாக இருக்கவில்லை; சிங்களவர்களால் அது தேசபக்தியற்றதாகக் கருதப்படும்.” 2010 தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா, ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அது வியக்கத்தக்கவகையில் பின்விளைவை ஏற்படுத்தியது. தெற்கில் உள்ள சிங்கள – பௌத்தர்களில் பலர் சரத்பொன்சேகாவைத் தனது சொந்த மக்களை விற்றுவிட்ட ஒரு துரோகியாகக் கருதினர். ஜனாதிபதி ராஜபக்ச இப்படியாகத் தான் கருதப்படுவதிலிருந்து தவிர்ப்பதில் கவனமாக இருந்தார். “நாங்கள் உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்” என்று இராணுவத்திற்கு மீண்டும் மீண்டும் உறுதியளித்தார்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ராஜபக்சேவின் LLRC மற்றும் பிறநிறுவனங்களின் உருவாக்கம் அவரது சொந்த ஆதரவுத்தளத்திலிருந்தே குறிப்பிடத்தக்க எதிர்ப்பைச் சந்தித்தது. 2014 மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தைத் தொடர்ந்து, காணாமல் போனோர் ஆணையத்தின் அதிகாரத்தை ராஜபக்ச விரிவுபடுத்தியபோது எதிர்க்கட்சிகள் விரைவாகத் தாக்கத்தொடங்கின. “படையினரைக் காட்டிக்கொடுப்பதற்குப் பதிலாகவ்மின்சார நாற்காலியில் உட்காருவேன் என்று பெருமையாகக் கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இப்போது ஏன் தலைகீழாக மாறிவிட்டார்?” என்று பொதுமக்களிடம் சொல்ல வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கோரியது.
துருப்புகளுக்கு விசுவாசமாக இருப்பதன் அரசியல் முக்கியத்துவம், சிங்கள மக்கள் உணர்வை மட்டுமல்ல, போருக்குப் பிந்தைய காலத்தில் பாதுகாப்பு அமைப்பின் அதிகரித்த சக்தியையும் பிரதிபலித்தது. 2009 ஆண்டுகளில், இராணுவம் ஒரு பெரிய அமைப்பாக இருந்தது. 1983 இல் போரில் நுழைந்த முப்பத்தைந்தாயிரம் பேரை உடைய படையைவிட நூறு மடங்கு பெரியது. முன்னாள் உயர்மட்டத் தளபதி ஒருவர் எச்சரித்ததுபோல, “இவ்வளவு பெரிய படை சமாதான காலத்திற்கு மாறுவதைக் கடினமாக்கியது”.
போருக்குப் பிந்தைய இலங்கையில், இப்படி நடந்துவிட்ட இராணுவத்தின் விரிவாக்கம் உள்நாட்டு சிவில் சமூகத்தின் மீதான கொடூரமான ஒடுக்குமுறையுடன் சேர்ந்துகொண்டது. ஒருவர் பத்திரிகையாளராக இருப்பதற்கு, உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் இலங்கையும் ஒன்று என மாறியது. இலங்கை அரசு ஊழியர்கள் ‘துரோகிகள்’, ‘பயங்கரவாதிகள்’ அல்லது ‘வெளிநாட்டு சக்திகளுக்கான ஏமாற்றுக்காரர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டனர். ஐ.நா. மற்றும் சர்வதேசத்திற்கு, மனித உரிமைகள் தொடர்பான தகவல்களை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரிக்க, காவல்துறையின் ஒரு சிறப்புப்பிரிவை அரசு உருவாக்கியுள்ளதாக வதந்திகள் பரவின. இதன்விளைவாகப் பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டுச் செயற்பாடு என்ற வாதம் கிட்டத்தட்ட முற்றிலும் இல்லாமல் போனது. சிவில் சமூக மற்றும் அமைதிக்குழுக்கள்கூட “பேசாமல் விலகிநிற்பது நல்லது” என்று கூறின.
தேசியவாத மற்றும் இராணுவவாத உணர்வுகளின் எழுச்சி, விமர்சனக்குரல்களை அடக்குதல் ஆகியவற்றுடன், சிங்கள மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்புக்கூறலுக்கு எதிராகக் கடுமையாக விரோதமாக இருந்தனர். ராஜபக்சவின் தேர்தல் உத்தி, வெற்றிபெற்ற இராணுவத்துடனான அவரது நெருங்கிய தொடர்புகளை நம்பியிருந்தது. அதனால் உயர்மட்ட அதிகாரிகள் சர்வதேசக் குற்றங்களில் ஈடுபடாவிட்டாலும், பொறுப்புக்கூறலைப் பின்தொடர்வது அரசியல்ரீதியாக ஆபத்தானதாக இருந்திருக்கும். “ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும்கூட, எதிர்கால நிர்வாகம் இராணுவத்துடனான உறவுகளை ஆபத்தில் ஆழ்த்தத் தயங்கும்” என்று 2013 இல் ஒரு சிவில் சமூகத்தலைவர் வாதிட்டார். ஆனால் மூத்த அரசாங்க அதிகாரிகளே போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான துஷ்பிரயோகங்களுக்கு உடந்தையாக இருப்பதாகக் கூறப்படுவது நீதிக்கான சாத்தியத்தை இன்னும் சிக்கலாக்கியது. ராஜபக்ச ஆட்சி பொறுப்புக்கூறலில் பின்வாங்காது என்று கணித்த மற்றொரு ஆர்வலர், 2013 ஆம் ஆண்டில், “அவர்கள் தேற்கவேண்டும்” என்று மாற்றிச் செல்லும் நிலைக்கு ஆளானார்.
போதாத நன்நம்பிக்கை முயற்சிகள்
போதுமான அளவு இடைக்கால நீதி நிறுவனங்கள் இல்லாததை உள்நாட்டு அரசியல் கோரிக்கையால் விளக்க முடியாத இடங்களில், அவற்றின் குறைந்ததிறன் காரணமாக, தோல்வியடையும் சர்வதேசத்தரங்களை பூர்த்தி செய்வதற்கான உண்மையான முயற்சிகளையும் பிரதிபலிக்கக்கூடும். ஆனால் இந்த விளக்கம், இலங்கையின் நடத்தையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. இது, ராஜபக்ச ஆட்சி, பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு நல்லெண்ண முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாகக்காட்டியது. அது, போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்தது. நீதிக்கான சர்வதேசக் கோரிக்கைகளை நிராகரித்தது. இந்தப்பிரசாரம், போர் முடிந்த உடனேயே சிலவாரங்களில் தொடங்கிவிட்டது. அப்போது ஜனாதிபதி, ‘டைம்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளை ‘பிரசாரம்’ என்று வகைப்படுத்தினார். சிலமாதங்களுக்குப் பிறகு, அரசாங்க அமைச்சர் ஒருவர், நீதிக்குப் புறம்பான மரணங்கள் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கை வழங்கியவரை “இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பயங்கரவாத ஊடக பிரசாரத்தின் மையத்தில்” இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
சர்வதேச அழுத்தம் அதிகரித்ததால் இந்த நடத்தை மேலும் தீவிரமடைந்தது. ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டபோது, அரசாங்கம் அதற்குப் பங்களித்ததாக சந்தேகிக்கப்படும் சிவில் சமூக உறுப்பினர்களைக் கடுமையாகச் சாடியது. ஆட்சி மாற்றத்திற்கான மறைமுக முயற்சிகள் செய்கிறார்கள் என்று அவர்கள்மீது குற்றம் சாட்டியது.
2013 ஆம் ஆண்டளவில், அரசாங்கம் பொறுப்புக்கூறல் அழுத்தத்திற்குப் பதிலளிக்கும்விதமாக வழக்கம்போல அடம்பிடிக்கும் குழந்தைப்பிள்ளைத்தனமாக பொதுவெளியில் குளறத் தொடங்கியது. நவிபிள்ளை நாட்டுக்கு வந்தபோது, அரசாங்கம் அவரைது மதிப்பைக் குறைக்கும் பிரசாரத்தைத் தொடங்கியது. அவரது வருகையில் ஈடுபட்ட ஓர் ஆர்வலர் அதை “ஒருங்கிணைந்த, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தி” என்று விவரித்தார். அவரை ‘அவமானப்படுத்தவும் இழிவுபடுத்தவும்’ இது நடத்தப்பட்டது என்றார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டைச் சுற்றியுள்ள அழுத்தங்களுக்கு, அரசாங்கம் அதே அளவு கடுமையாகப் பதிலளித்தது. “நாங்கள் ஓர் இறையாண்மை கொண்ட நாட்டவர்கள். யாராவது இலங்கையிடம் கோரிக்கை வைக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று தகவல் தொடர்பு அமைச்சர் கோபமான வார்த்தைகளில் சொன்னார். மேலும் 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலாளர் “பொறுமை குறைந்து வருகிறது” என்று எச்சரித்தார். அப்போது, இலங்கை அரசாங்கம் ஆவேசமாகப் பதிலளித்தது. “சர்வதேச சமூகம் நமது ஜனாதிபதியைத் தூக்கிலிட அடித்தளம் அமைத்ததாகக்” குற்றம் சாட்டியது. உலகளாவிய பெண்கள் மாநாட்டுக்கு வரவிருந்த அமெரிக்கத் தூதருக்கு பழிவாங்கும் விதமாக விசாவை மறுத்தது.
இந்த நடவடிக்கைகள், இலங்கை நீதிக்கான கோரிக்கைகளை தீவிரமாக எதிர்த்தது என்பதைக் குறிக்கிறது. இலங்கை அரைகுறை மனித உரிமை நடவடிக்கைக்கான நிறுவனங்களை உருவாக்குவது நேர்மையற்றது என்பதை பொறுப்புக்கூறலைக் கோரும் சர்வதேச நிறுவனங்கள் புரிந்து வைத்திருந்தன. LLRC அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, ஐ.நா. நிபுணர் குழு, அந்த துரதிர்ஷ்டவசமான மாதங்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் (இலங்கையின்) அக்கறையைப்பற்றிக் கடுமையான சந்தேகத்தை எழுப்பியது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த முழுநடவடிக்கையையும் “காலத்தைக் கடத்தும் விளையாட்டு” என்று நிராகரித்தது.
சர்வதேச நெருக்கடிக்குழு இது “அரசாங்கத்தை விடுவிப்பதற்கும்” மற்றும் “சர்வதேச சட்டத்தின் நன்கு நிறுவப்பட்ட கொள்கைகளை மாற்றுவதற்குமான (திசைதிருப்பிவிடுவற்குமான) ஒரு முயற்சி” என்று கண்டனம் செய்தது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், இராணுவ விசாரணை நீதிமன்றத்தைப் பற்றியும் இதேபோலவே கூறின. “உண்மையான சர்வதேச விசாரணைக்கான உலகளாவிய உந்துதலைத் தடுக்கும் ஒரு வெளிப்படையான சூழ்ச்சி இது” என்றன. “காணாமல் போனோருக்கான ஆணையம் என்பது சர்வதேசச் சமூகத்திற்கு எலும்புத்துண்டுகளை வீசுதல்” என்றன. 2014 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தால் பணிக்கப்பட்ட புலனாய்வாளர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அறிவித்தது. அப்போது நாட்டிற்குள் பதினாறு தமிழ்ப்புலம்பெயர் அமைப்புகளையும் நானூறுக்கும் மேற்பட்ட தனிநபர்களையும் நுழையவும், தடைசெய்யவும் அரசு முனைந்தது. உள்ளூர் ஆர்வலர்கள் மற்றும் சர்வதேசப் பார்வையாளர்கள் இந்த நடவடிக்கைகளை சர்வதேச விசாரணைக்குரிய தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகப் புரிந்துகொண்டனர்.
விவாதம் மற்றும் முடிவுரை
2009 ஆம் ஆண்டு போர்க்குற்றங்கள் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து, பாரிய அட்டூழியங்களுக்குப் பொறுப்பானவர்களை விசாரித்து வழக்குத்தொடர இலங்கை மறுப்பது, மேற்கு நாடுகளுடனான சர்ச்சைக்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது. போருக்குப் பிந்தி உருவான அரசாங்கத்திற்கு, உள்நாட்டு அரசியல் ரீதியான எதிர்ப்புகள், கட்டுப்பாடுகள் என்பன நீதி வழங்குவதை மிகவும் விரும்பத்தக்கதாகக் காட்டிக்கொள்ளுவதற்கான வாய்ப்பாக மாற்றியது. அடையாளம் காணப்பட்ட, சுட்டிக்காட்டப்பட்ட அட்டூழியங்களில் ஆளும் ஆட்சியின் உறுப்பினர்களின் உடன்பாடும் பங்கும் இருந்தது. இதன் காரணமாக, சர்வதேச தலையீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதனால் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையுடனான ஒத்துழைப்பு இலங்கை அரசுக்குப் பொருந்திவரவில்லை. ஆயினும்கூட, தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. பலவீனமான பொறுப்புக்கூறல் நிறுவனங்களினை, தொடர்ச்சியாக மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழித்து உருவாக்குகிறது. அதுவும்கூட, சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிவதாகச் சொல்லி அதன் தீவிர தேசியவாத ஆதரவாளர்களிடமிருந்து கண்டனங்களைப் பெற்றது. இலங்கையால் அறிமுகப்படுத்தப்பட்ட உள்நாட்டுவழிமுறைகள், நீதியைக் கோருவதில் ஈடுபட்ட பங்கேற்பாளருக்கு நம்பிக்கையளிக்கவில்லை என்பதை, சர்வதேச பார்வையாளர்களின் எதிர்வினைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கையின் நடத்தை, அறிமுகப்பகுதியில் எழுப்பப்பட்ட கேள்வியை எடுத்துக்காட்டுகிறது: நடவடிக்கை கோருபவர்களை திருப்திப்படுத்தாத அரைகுறை மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குவதற்கு இவ்வளவு செலவுகளை ஏன் செய்யவேண்டும்? மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து, கினியா மற்றும் பஹ்ரைன் உதாரணங்களைப் போலவே, இலங்கையும் தொடர்ந்து விமர்சனங்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டது. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உள்ள சகநாடுகள் மிகவும் மாறுபட்ட எதிர்வினையைக் கொண்டிருந்தன.
மேற்கத்திய அரசாங்கங்களால் கொடுமைப்படுத்தப்பட்ட ‘இந்த ஏழை மூன்றாம் உலக நாடு’ என்று தன்னைச் சித்திரிக்கும் சொல்லாட்சியை இலங்கை பயன்படுத்தியது. அதையும்மீறித் தாமே உள்நாட்டில் செயற்படுவதற்கான சான்றாக, அரைகுறை மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குவதைச் சுட்டிக்காட்டியது. அந்த உத்தி பலனளித்தது. 2014 ஆம் ஆண்டு விசாரணைக்கு அங்கீகாரம் அளித்த தீர்மானத்திற்குப் பிறகும், ஐ.நா. சபையில் இலங்கையின் நட்பு நாடுகள் இந்த நடவடிக்கையை “குறிப்பாக நாடு அதன் சொந்த உள்நாட்டுச் செயல்முறைகளைச் செயற்படுத்தும் சூழலில் இது தேவையற்றது” என்றன. “இது ஆபத்தானது (முன்னோடியாக உள்ளது); நமது அனைத்து நாடுகளையும் மோசமாகப் பாதிக்கக்கூடும்” என்றும் தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்தன.
இந்தக் குறிப்பிட்ட ஆய்வில் காணப்பட்டவற்றின்படி, அடக்குமுறைகள் செய்யும் நாடுகள் மனித உரிமைகளுக்கான அரைகுறை நடவடிக்கைகளைத் தங்களுக்கு எதிராக நாடுகள் அணிசேர்வதைத் தடுக்கும் உத்தியாகப் பயன்படுத்துகின்றன என்ற கோட்பாட்டிற்கு ஆதரவை வழங்குகிறது. வேறுவிதமாக இலங்கையின் நடத்தையை விளக்குவது கடினம். சர்வதேசத் தராதரங்களை நிறைவாக்காத மனித உரிமை நடத்தையை பல சந்தர்ப்பங்களில், உள்நாட்டு அரசியலினை முன்வைத்து எளிதாக விளக்க முடியும். உதாரணமாக, பிரபலமான தலைவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்குதல் என்பது ஒன்று. உண்மையில் இவர்கள் மிகத்தீவிரமான பொறுப்புக்கூறல் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களாவர். இலங்கையின் விடயத்தில், உள்நாட்டு அரசியல் ஊக்கிகள், பொறுப்புக்கூறல் குறித்து எதுவும் செய்யாமல் இருப்பதற்கு ஆதரவாகத் தெளிவாகப் போராடின. போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேசவாதத்திற்கு இலங்கை வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்தது. முனைப்பாகச் செயற்பாடும் நாடுகள் மற்றும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஐயத்துக்குரிய பதில்கள், இலங்கையின் நடத்தையை அவர்கள் நம்பிக்கையற்றதாகப் புரிந்துகொண்டதையே காட்டுகின்றன.
மனித உரிமைகள் குறித்த நேர்மையற்ற வாக்குறுதிகள் பற்றிய ஆய்வுச்சான்றுகள் இலங்கையின் இத்தகய நிலையை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அரைகுறை மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குவதும் இயக்குவதும், ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைவிட கணிசமாக அதிகச் செலவினம் கொண்ட நடத்தையாகும்.
மலினமான கதைகள் பேசுதல் என்பது முக்கியமான செயற்பாட்டின் போக்கைத் தவறவிட்டுவிட்டு, அத்தியாவசியப் புதிருக்குப் பதிலளிக்காமல் போகின்றன. செயலாற்ற விரும்பாத அரசு எதற்காகச் செலவுமிக்க அரைகுறை மனித உரிமை நிறுவனங்களை உருவாக்கும் சிக்கலுக்குச் செல்கிறது? அந்த நிறுவனங்கள் அழுத்தம் கொடுப்பவர்களை திருப்திப்படுத்தப்போவதும் இல்லை.
இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள கோட்பாடு, மனித உரிமை நடத்தைகளுக்கு இணங்காததற்காக தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு நியாயப்படுத்தப்பட்ட சூதாட்டமாக இந்த நடத்தையை விளக்குகிறது. மனித உரிமைகளுக்கான கடப்பாடுகளைச் சந்திப்பதற்கான முழுச்செலவுகளையும் தவிர்ப்பதற்கு இது உதவும்.
இது சர்வதேச உறவுகள்சார் வழங்கல்களுக்குப் பல பங்களிப்புகளைச் செய்கிறது. முதலாவதாக, சர்வதேச மனித உரிமைகள் நடவடிக்கைத் திட்டத்திற்கு எதிராக எவ்வாறு அடக்குமுறை நாடுகள் பின்வாங்குகின்றன என்பது குறித்து வளர்ந்துவரும் ஆவணங்களில் இது சேர்கிறது. இரண்டாவதாக, மனித உரிமைகள் நடத்தைக்கான புதிய பார்வையாளர்களை இது வரையறுக்கிறது. மூன்றாவதாக, போட்டிகளையும் வெற்றுச் சொல்லாடல்களையும் உருவாக்குவதற்கான ஓர் இடம் என்ற வகையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் பங்கை முன்வைக்கிறது. நான்காவதாக, சர்வதேச உறவுகளில் பாசாங்குத்தனத்திற்கு இன்னும் ஒரு புதிய பங்கு இருப்பதாக இது பரிந்துரைக்கிறது. ஆனால் அது இதற்கான பார்வையாளர்களின் நற்பெயரைப் பாதுகாக்கிறது. இலங்கையிலிருந்து கிடைத்த சான்றுகள், சர்வதேச மனித உரிமைகள் அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரைகுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது, அழுத்தத்தை வழங்குபவர்களை திருப்திப்படுத்தாவிட்டாலும்கூட, ஒரு வெற்றிகரமான உத்தியாக இருக்கும் என்ற தத்துவார்த்தக் கணிப்புகளை ஆதரிக்கிறது. பலதரப்பு நடவடிக்கைகளில் வீட்டோ புள்ளிகளாகச் செயற்படக்கூடிய ஊசலாடும் அரசுகளை ஒரேநேரத்தில் தங்கள் ஆதரவை வழங்க வற்புறுத்துவதன் மூலமும், அதற்கான அரசியல் மூடிமறைப்பை வழங்குவதன் மூலமும், அரைகுறை மனித உரிமை நடவடிக்கைகள் செயற்படுகின்றன.
இலங்கை பற்றிய இந்த ஆய்வு, மனித உரிமைகளைச் செயற்படுத்துவதற்கான, கடுமையான பல மாதிரிகளின் தொகுப்பை எடுத்துக்காட்டுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘வீட்டோ’வை வைத்திருக்கும் புரவலரால் பாதுகாக்கப்படுகின்ற, மனித உரிமை மீறும் அரசாங்கங்கள் இவை.
ஆனால் அரைகுறை நடவடிக்கை உத்திகள் இந்த வகையானவற்றுக்குத் தனித்துவமானவை அல்ல. அமெரிக்கா உரிமைகளை ஊக்குவிக்கும் தனது வரலாற்றுப் பங்கிலிருந்து பின்வாங்குவது மனித உரிமைச் செயலாக்கத்தை மேலும் நிச்சயமற்றதாக்குகிறது; கவுன்சிலுக்கு வெளியேயும் அதற்குள்ளும் பலதரப்புகளின் நடவடிக்கைகளைச் சார்ந்ததாக மனித உரிமைகளை ஆக்குகிறது. இவை மனித உரிமையை மீறும் நாடுகளுக்கு பாரிய முறையில் கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். இந்த செயற்பாட்டுப் போக்கு, தங்கள் சகநாடுகளின் ஆதரவைச் சேர்ப்பதில் மனித உரிமை மீறும் அரசாங்கங்கள் பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்.
மனித உரிமை நடத்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த போட்டியை உருவாக்கும் சூழல் இன்று உள்ளது. கூட்டணித் தடுப்பு நடத்தையின் பொருத்தப்பாடு இங்கு ஏன் என்பது, தெளிவாகத் தெரிகிறது. சர்வதேச விதிகளை அமல்படுத்துவதற்கு, சுயநல நோக்கங்கள் இல்லாதநிலையில் மற்ற நாடுகள் செயற்பட வேண்டும் என்றநிலை இன்று. இது சர்வதேச உறவுகளின் பிறபகுதிகளுக்கும் நீண்டுள்ளது.
சர்வதேச சுற்றுச்சூழல் சட்டம் முதல் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் வரையிலான பல பகுதிகளுக்கு இது நீள்கிறது. பிற அரசுகளின் ஈடுபாட்டிலிருந்து பரஸ்பர நன்மைகள் எதுவும் இல்லாததால், சர்வதேச விதிகளைக் கண்காணித்து செயற்படுத்துவதற்கு அரசுகளுக்கு அதிகம் ஆர்வம் இல்லை. இதன்விளைவாக, இவற்றின் செயலாக்கத்திற்கு பெரும்பாலும் பலதரப்புக் கூட்டுநடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மனித உரிமையை மீறும் நாடுகள் தங்களுக்கு எதிரான கூட்டணிகள் உருவாவதைத் தடுக்கும் முயற்சியில் அரைகுறை மனித உரிமை நடவடிக்கை உத்திகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை மேலும் திறக்கின்றன.