இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
26 நிமிட வாசிப்பு

இலங்கையில் ஆதி இரும்புக்காலமும் பெருங்கற் பண்பாடும் – பகுதி 3

December 18, 2025 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

IV

பெருங்கற் பண்பாடும் தமிழ்மொழியின் பரவலும்

இலங்கைக்கு தென்னிந்தியாவிலிருந்து பெருங்கற் பண்பாட்டு அம்சங்களும், நீர்ப்பாசன விவசாயமும் பரவியபோது அவற்றுடன் தமிழ் மொழியின் பரவலும் இன்றியமையாத, கட்டாயமான அங்கமாக இருந்தது. தமிழ்மொழி இலங்கைக்குப் பரவியது பற்றிய பேராசிரியர் இந்திரபாலாவின் கணிப்பீடு கவனிக்கவேண்டியது: “When the urn burial practices of Adichanallur were carried over to Pomparippu and when the technology of the iron tools and BRW spread from the port of Korkai to Mātota, when the cist burial practices of the Vaigai Valley spread to the north-central plains of Sri Lanka watered by the YanOya, when those engaged in pearl fishery and chank fishery in the Palk Strait and the Gulf of Mannar frequented the Pamban coast and the Puttalam coast, one cannot imagine the Tamil language not being associated with these or being part of this cultural movement” — Prof. K. Indrapala,  2006: Page 114.

“ஆதிச்சநல்லூரின் தாழி அடக்க நடைமுறைகள் (இலங்கையின்) பொம்பரிப்பிற்குக் கொண்டுவரப்பட்ட போது – இரும்புக் கருவிகளினதும், கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களினதும் தொழில்நுட்பம் கொற்கையிலிருந்து மாதோட்டத்திற்குப் பரவியபோது – வைகை நதித் தாழ்நிலங்களின் கல்லறைப் புதையல் பண்புகள் யன்ஓயா நதி பாயும் இலங்கையின் வடமத்திய சமவெளிகளை வந்தடைந்தபோது – பாக்குநீரிணையிலும், மன்னார்க்குடாவிலும் முத்துக் குளிப்போரும், சங்கெடுப்போரும் பாம்பன் கரைக்கும், புத்தளம் கரைக்கும் அடிக்கடி வந்திறங்கியபோது – இக்கலாசாரப் பரவலோடு – இப்பண்பாட்டு இயக்க அசைவோடு – தமிழ் மொழியும் இவற்றோடு இணைந்து இங்கே வந்திருக்கும் என்பதை மறுக்க இயலாது.”

கீழடி அகழ்வில் கண்டெடுத்த கி.மு. 600 ஆம் ஆண்டிற்குரிய பானை ஓட்டுத் தமிழ்ப் பிராமிப் பதிவு: ‘சா(த்)தன் எசிறி கதிரன் இலபு’. இதன் காலம் கதிரியக்கக்கரிம ஆய்வின் மூலம் கணிக்கப்பட்டிருக்கிறது. Photo Courtesy: The Times of India, June 12, 2021.

இலங்கையில் அநுராதபுரத்தில் கண்டெடுத்த கலவோட்டில் காணப்படும் ‘தயா குடெ’ என்ற தமிழ்-பிராமி வாசகம். இதன் வெப்பேற்றுக்கதிர் காலக்கணிப்பு இதன் திகதியை கி.மு 700-500 ஆண்டிற்கு எடுத்துச் செல்கிறது. நன்றி: S.U.Deraniyagala.

பெருங்கற் பண்பாட்டுடன் தென்னிந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த மற்றொரு முக்கியமான அம்சம் குளங்களுடன் கூடிய நீர்ப்பாசன விவசாயம். மூலத்திராவிட மொழி, அடிப்படையில் ஒரு விவசாய மொழி. விவசாயத்தின் நாடளாவிய பரவல் அதன் துணை அங்கங்களில் ஒன்றான தமிழ் மொழியின் பரவலுக்கும் வழி வகுத்தது. 

விவசாயத்தின் பரவலோடு ஒரு விவசாய மொழி அறிமுகமாகி, இரண்டும் இணைந்து பரவுவது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. பீட்டர் பெல்வுட், கொலின் றென்புறூ (Bellwood, P. 2002; Renfrew, C. 1987) போன்ற தொல்லியலாளர்களும், லூக்கா ஸவல்லி-ஸ்போர்ஸா, ரூமாஸ் கிவிசில்ட் (Cavalli-Sforza 1996, 2002; Kivisild, T. 2002) ஆகிய மரபணுவியலாளர்களும் இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கூறிச் சென்றிருக்கிறார்கள். இவற்றில் மிக முக்கியமான ஆய்வு ‘இந்தியாவில் மொழியினதும், விவசாயத்தினதும் பரவல்’ (The Genetics of Language and Farming Spread in India) என்ற மரபணுவியல் ஆய்வாகும் (Kivisild et al. 2002).

வட இந்தியாவில் பேசப்படும் பல மொழிகளில் உணவுப் பொருட்களின் பெயர்களும், விவசாய உபகரணங்களுக்கான பல பெயர்களும் திராவிட அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றன. “வடஇந்திய மொழிகளில் இடம்பெறும் உணவுப் பயிர்களின் பெயர்கள், விவசாய நீர்ப்பாசன நடைமுறைகளுக்கான பல சொற்பதங்கள் திராவிட மொழிகளிலிருந்தே பெறப்பட்டிருக்கின்றன” என 1984 இன் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் (Encyclopaedia Britannica, 1984) குறிப்பிட்டிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இலங்கையில் பேசப்படும் சிங்கள மொழியில் விவசாயம் சம்பந்தமான பல சொற்கள் தமிழ் மொழியிலிருந்தே பெறப்பட்டுள்ளன. உதாரணமாக: அருவி, அரிவாள், அணை, அணைக்கட்டு, ஆறு, வாவி (வேவா), ஓடை (எல), ஓயா (ஓயா), குளம் (குளம), கட்டு, கடவை, கரை, மடு, முனை, மறிச்சுக்கட்டு, தேக்கம், திட்டி, பிட்டி, வரம்பு, புழைக்குடைவு, குடைவு (குடாயிவ்), ஆழி (எல), ஓடை-ஆழி (யோடி-எல), கணவாய் (கணவாயி), கலிங்குல் (கலிங்குல), பறவாய் (பெற்றாவ), தடைக்கல் (தடகல), பிறவழி (பிற்றாவன), வாய்க்கால் (வாக்கட), மண்ணு (அமுன), செரிவாய் (சொறாவ அல்லது கொறாவ) ஆகியன தமிழ்ச் சொற்களிலிருந்து நேரடியான சிங்களச் சொற்கள் பெறப்பட்டிருப்பதற்கான உதாரணங்கள்.

வடஇந்திய அசோகப் பிராமி எழுத்துகளின் தோற்ற காலம்

பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிரேக்க அரசன் செலியுகஸ் நிக்கரோரின் தூதுவரான மெகஸ்தெனிஸ் பாடலிபுரத்தில் சந்திரகுப்த மௌரிய மன்னனின் அரச சபையை அடைந்த காலத்தில் “இந்தியாவில் (வட இந்தியாவில்) எழுத்துப் பதிவுகளோ நூல்களோ இருக்கவில்லை” எனக் கூறியிருக்கிறார். இதிலிருந்து அவர் அங்கிருந்த காலத்தில் அரச சபையில் ஓர் எழுத்துமுறை இருக்கவில்லை என ஊகிக்க முடிகிறது (Stoneman, R. 2019: 129-176; Roller, D.W. 2016). 

வடஇந்தியப் பிராமி அல்லது அசோகப் பிராமி எழுத்து வடிவம், எந்தவிதமான தவறுகளும் இல்லாமல் முழுமையாக வளர்ச்சியடைந்த நிலையில் – படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைக் காட்டக்கூடிய தனித்தனி எழுத்துகள், எழுதப்பட்ட பரிசோதனை எழுத்துகளினதோ, சொற்களினதோ பதிவுகள் காணப்படாது முழுமையடைந்த நிலையில் – பொறிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இந்த எழுத்து வடிவம் இன்னொரு பிராந்தியத்திலிருந்து அங்கே வந்தடைந்திருப்பதே சாத்தியமாகிறது.

அசோகன் காலப் பிராமிக் கல்வெட்டுகளில் 40 வகையான எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்பட்ட போது, தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளில் 26 வகையான எழுத்துகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறைவான எழுத்துகள் கொண்ட அமைப்பே மூலமாக இருப்பது வழக்கம். மேலும், அசோகப் பிராமியில் கூட்டெழுத்து முக்கிய அம்சமாகக் காணப்படுகிறது. ஆனால் தமிழகக் கல்வெட்டுகளில் இக்கூட்டெழுத்துகள் காணப்படவில்லை. இவற்றை நோக்குமிடத்து தமிழகத்திலிருந்தே இந்த எழுத்து வடிவம் வட இந்தியா சென்று பிராகிருத மொழிக்கேற்றவாறு மேலதிக எழுத்து வடிவங்களும், கூட்டெழுத்துகளும் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

ஆனால் மொழியியலாளர் ஐராவதம் மகாதேவன் அவரது ‘Early Tamil Epigraphy’ என்ற நூலில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில்தான் தமிழ்ப் பிராமி ஆரம்பமானது என்றும், அது அசோகப் பிராமியிலிருந்து பெறப்பட்டது என்றும் தனது கருத்தை முன்வைத்திருந்தார் (Mahadevan,  I. 2003: 173).

பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் தென்னிந்தியாவில் – குறிப்பாகத் தமிழகத்திலும், இலங்கையிலும் மட்டுமே காணப்படுகின்றன. வட இந்தியாவில் மட்பாண்டங்களில் பிராமி எழுத்துப் பொறிக்கும் மரபு இருந்திருக்குமானால் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஓர் அகழாய்விலாவது பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் கிடைத்திருக்கும். அவ்வாறு கிடைக்காத நிலையில் எப்படித் தமிழகத்தில் கிடைத்த மட்பாண்ட எழுத்துகளை வடஇந்தியாவில் இருந்து வந்தன என்பதற்கு ஆதாரமாகக் காட்ட முடியும்? மேலும், தமிழகம் – இலங்கையில் காணப்படும் மட்பாண்டப் பொறிப்புகள் சாதாரண மக்களாலும், குயவர்களாலும், வர்த்தகர்களாலும் தமக்குச் சொந்தமான மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டவை. சாதாரண மக்களே தமிழ்ப் பிராமியை எழுதுவதில் கல்வியறிவு பெற்றிருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இன்றைய ஆய்வுகளின்படி கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து தமிழ்ப்-பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் கீழடி, அழகன்குளம், பொருந்தல், கொடுமணல், அநுராதபுரம் ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. இவற்றில் இந்த எழுத்து வடிவங்களின் படிமுறை வளர்ச்சியைக் காணமுடிகிறது. எழுத்து வடிவங்கள் சீராக்கப்பட்ட பின்னரே கல்வெட்டுகளில் தமிழ்ப்பிராமி வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்ப்பிராமி எழுத்துகளின் தோற்றமும் பரவலும்

இன்றைய அறிவியல் ரீதியான ஆதாரங்களின்படி கி.மு. ஏழாம் நூற்றாண்டளவில் தமிழ்ப்பிராமி எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் ஆரம்பகால எழுத்து வடிவங்கள் மட்கலன்களின் ஓடுகளில் காணக்கிடைக்கின்றன. ஆரம்ப நூற்றாண்டுகளில் புதிய எழுத்துகள் உருவாக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்கலாம். அதன் முதிர்ந்த நிலையில் 26 எழுத்துப் பதிவுகள் காணப்படுகின்றன. இதன் பிரகாரம் தமிழ் எழுத்து வடிவங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் அசோகப் பிராமியிலிருந்து உருவாக்கப்பட்டன என்ற கோட்பாடு (Mahadevan,  I. 2003: 173) ஆதார வலிமையற்றுப் போகிறது.

கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அதன் இரண்டாவது கட்டத்தில், இந்த தமிழ் எழுத்து வடிவம் வட இந்திய மௌரிய அரசர்களின் அரசவையை அடைந்திருக்கிறது. தமிழ் மொழியிலுள்ள 26 எழுத்துகளில் அவர்களின் பேச்சு மொழியான பிராகிருதத்தை எழுதுவதற்கேற்ப தமிழ் மொழி உச்சரிப்பிற்குரிய ‘ள’, ‘ழ’, ‘ற’, ‘ன’ ஆகிய எழுத்துகள் கைவிடப்பட்டு, ஒலிப் பிரமாண வகையில் தமிழில் உள்ள மிகுதி எழுத்துகள் ஏற்கப்பட்டு, பிராகிருத மொழிக்குரிய மேலதிக எழுத்துகள் உருவாக்கப்பட்டன. இது இன்றைய சான்றுகள் தரும் அறிவியல் ரீதியான ஓர் அனுமானமாகும். பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டின் பின் இந்த இரு எழுத்து வழக்குகளும் இந்தியாவில் உபயோகத்திலிருந்து வந்திருக்கின்றன.

வன்னிப் பகுதியில் தமிழ்ப்பிராமி எழுத்துகள்

வன்னிப்பகுதியில் பல இடங்களில் தமிழ்ப்பிராமி எழுத்துப் பதிவுகள் மட்பாண்ட ஓடுகளிலும் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. அவற்றில் சில உதாரணங்கள் இவை.

பூநகரி மட்பாண்ட ஓட்டுப் பதிவு

இங்கே கூறப்படும் மட்பாண்ட ஓடு ஒரு முக்கியமான ஓடாகும். பரமன்கிராயில் கிடைத்த இந்தச் சாசனம் பூநகரிப் பிராந்திய வரலாற்றாய்வில் முக்கியமானதொரு சான்றாதாரமாகக் கொள்ளத்தக்கது. இதன் முதல் இரு எழுத்துகளையும் தெளிவாக ‘வேளா’ என வாசிக்க முடிகிறது. இதன் சாசனப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு வாசித்த ஐராவதம் மகாதேவன் மூன்றாவது எழுத்தான தமிழுக்குரிய ‘ன’ எழுத்து தலைகீழாகப் பதியப்பட்டிருப்பதாகக் கூறி, இச்சாசனத்தை ‘வேளான்’ என வாசித்திருக்கிறார் (மகாதேவன், ஐ. 1990).

இச்சாசனத்தில் இடம்பெறும் வேளான் என்ற பதம் வேள், வேளிர் எனப்படும் குறுநில மன்னர்களைக் குறிப்பிடும் பதமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டுப் பிராமிச் சாசனங்களில் வேள் என வரும் பெயர்களை வாசித்த அறிஞர் பலரும் அப்பெயர்கள் சங்ககாலத்திலே சிறப்புற்றிருந்த வேள், வேளிர் எனப்பட்ட குறுநில மன்னர்களையே குறிப்பனவென்பர். இலங்கையிலும் வேள் அல்லது வேளிர் என்ற பெயர் கொண்ட பிராமிச் சாசனங்களை சங்ககாலத்தைப் போல இலங்கையிலும் வேளிர் என்ற சிற்றரசர்கள் இருந்திருப்பதற்கான ஆதாரங்களாகக் கொள்ள முடியும் (Sitrampalam, S.K. 1980: 360-377).

இச்சாசனம் பற்றி தமிழ்நாட்டுச் சாசனவியலாளரான ஐராவதம் மகாதேவன் 01-07-1990 தேதியிட்ட தினமணி பத்திரிகையில் வெளியிட்ட கருத்து வருமாறு: 

“தமிழ் மொழியிலும் தமிழ்ப் பிராமி எழுத்துகளிலும் ஆன இச்சாசனம் கி.மு. 3 அல்லது 2 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததென்று எழுத்தமைதியில் இருந்து கூற முடியும். வேளான் என்ற பெயர் சங்ககால வேள், வேளிர் ஆகிய குறுநில மன்னர்களையும், பிற்காலச் சோழர் காலத்தைய (மூவேந்தர்) வேளன் என்ற பெயரையும் ஒத்திருப்பதால் இலங்கை யாழ்ப்பாணப் பகுதியில் சங்ககாலத்திலேயே தமிழ் வேளிர் அல்லது வேளார் குடியிருந்தனர் எனக் கொள்ளலாம்” (மகாதேவன், ஐ. 1990).

இப்பகுதியில் ஏற்கனவே எடுத்துக்கூறியது போல, தமிழ் நாட்டில் தமிழ்ப்பிராமி எழுத்துகளின் வடிவமைப்பையும், எழுத்தமைதியையும் கொண்டு ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் கண்டெடுத்த தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் கி.மு. 300 ஆம் நூற்றாண்டிற்கு உரியவையாக முதலில் கணிக்கப்பட்டன. ஆனால் அறிவியல் ரீதியான கதிரியக்கக் காலக் கணிப்புகள் இச்சாசனங்களின் காலத்தை கி.மு. 600-500 ஆம் ஆண்டுக் காலத்திற்கு எடுத்துச் செல்கின்றன. பூநகரிச் சாசனங்களும் இவ்வகையான கதிரியக்கக் காலக் கணிப்புகளுக்கு உட்படுத்தப்படும் போது, கி.மு. 300 ஆம் ஆண்டிற்கும் முற்பட்ட காலங்களைத் தரலாம். இச்சந்தர்ப்பத்தில் அநுராதபுரத்தில் கண்டெடுத்த தமிழ்ப் பிராமிச் சாசனம் கி.மு. 700-500 ஆண்டைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

பரமன்கிராயில் கண்டெடுத்த ‘வேளான்’ என்னும் தமிழ்ப் பிராமிப் பதிவைக் கொண்ட கலவோடு. இம்மட்பாண்ட ஓட்டின் காலம் கி.மு. 300-200 ஆம் ஆண்டாக எழுத்து வடிவ அமைப்பைக் கொண்டு கணிக்கப்பெற்றிருக்கிறது. Images Source: Dr P. Pushparatnam.

நெடுங்கேணிக் கல்வெட்டு

நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் கோயில் வளாகத்தில் இருக்கும் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு இது. நொச்சியடி ஐயனார் ஆலயம் வவுனியா புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி செல்லும் பிரதான வீதியில் நெடுங்கேணிப்பிரிவு ஆரம்பிக்கும் எல்லையிலிருந்து 300 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கே பல மலைக் குன்றுகள் இருக்கின்றன. அதில் ஒரு குன்றின்மேல் எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன. இவை சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அண்மைக்காலத்தில் பேராசிரியர் பத்மநாதன் இம்மலைக் குன்றிலிருக்கும் எழுத்துகளை வாசிப்பது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆய்வின் முடிவில் இவ்வெழுத்துகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளுக்கும் இடைப்பட்டகால தமிழ்ப்பிராமி எழுத்துகள் எனக் கூறியதுடன் அந்தப் பதிவில் “வேள் நாகன் மகன் வேள் கண்ணன்” எனத் தமிழ்ப்பிராமி எழுத்துகளில் பொழியப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் இப்பிரதேசத்தில் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அக்காலத்தில் வாழ்ந்தார்கள் என நம்பப்படுகிறது (அ. மயூரன், 2015).

நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் கோயில் வளாகத்திலுள்ள பாறையில் பதிக்கப்பட்டிருக்கும் தமிழ்ப்பிராமி எழுத்துப் பதிவில் ‘வேள்நாகன் மகன் வேள் கண்ணன்’ என இரு சிற்றரசர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. படம், நன்றி: அ. மயூரன்.

பெரிய புளியங்குளத்து வணிகர் விசாகன்

வடஇலங்கை வவுனியாவில் பாவற்குளம் பகுதியிலுள்ள ஒரு சிறிய நகரம் பெரிய புளியங்குளம். இப்பாறைப் பிரதேசத்தில் இலங்கையின் 37 ஆரம்பகால பிராமிக் கல்வெட்டுகளைப் படியெடுத்து, வாசித்து, ஒழுங்காக இலக்கமிட்டு, (இலக்கம் 338 முதல் 375 வரை) அவற்றை 1970 ஆம் ஆண்டில் பேராசிரியர் பரணவிதான ‘இலங்கைக் கல்வெட்டுகள் – பகுதி 1’ (Inscriptions of Ceylon – Volume I) என்ற நூலில் பிரசுரித்திருந்தார். 

இவற்றில் இரண்டு கல்வெட்டுகளில் அவ்விடத்திலிருந்த ஒரு குகையின் உரிமையாளரான ‘விசாக’ என்ற பெயர் கொண்ட தமிழ் வணிகரைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.

கல்வெட்டு இல. 356

டமேட வணிஜ க(ப)தி விஸாஹ லென.

வீட்டுடைமையாளர் தமிழ் வணிகர் விசாகனின் குகை.

கல்வெட்டு இல. 357

டமேட வணிஜ க(ப)தி விஸாஹ செனி-கமே.

வீட்டுடைமையாளர் தமிழ் வணிகர் விசாகனின் (வீட்டுப்) படிக்கட்டு.

கல்வெட்டுகளில் காணப்படும் உறவினர் பெயர்கள்

இலங்கையில் பெரிய புளியங்குளத்திலும், மறு பகுதிகளிலும் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளில் கி.மு. 300க்கும் கி.பி. 300க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் மருமகன், மருமான், மறுமான், பெருமகன், பருமகன், பருமகள் ஆகிய தமிழ்மொழி உறவுப்பெயர்கள் பொறித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

கி.மு. 300 – கி.பி. 300 ஆண்டுகளுக்கிடையிலான கல்வெட்டுகளில் காணப்படும் தமிழ் உறவினர் பெயர்கள். நன்றி: கலாநிதி ப. புஷ்பரட்ணம்.

முடிவுரை

இதுவரை கூறப்பட்ட விவரங்கள் வன்னிப் பகுதியிலும், இலங்கையின் பெருநிலப் பகுதிகளிலும் வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றி தொல்லியல் ரீதியாக நாம் அறிந்துகொள்ளக்கூடிய தகவல்களாகும். இவ்விடங்களில் காணப்படும் பெருங்கற் கலாசாரச் சின்னங்கள் இங்கே திராவிட மக்களின் செறிவான பெருங்கற் பண்பாட்டுக் குடியிருப்புகள் கி.மு. ஆயிரம் ஆண்டுக்காலப் பகுதியிலிருந்தே இருந்தமைக்கான உறுதியான ஆதாரங்களாகும். அக்காலத்தில் தமிழ் மொழியே இப்பெருங்கற் பண்பாட்டைப் பேணியவர்களின் பேச்சுமொழியாக இருந்திருக்கிறது. கி.மு. ஏழாம் நூற்றாண்டு அநுராதபுரத்தில் தமிழ் மொழியின் எழுத்துப் பதிவுகள் இருந்தமை அதற்கு ஆகக்குறைந்து 300 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ் ஒரு பேச்சுமொழியாக இருந்திருக்கலாம் என உய்த்துணரச் செய்கிறது.

உசாத்துணை நூல்கள், கட்டுரைகள்

  1. ALLCHIN, F.R. (1995): The Archaeology of Early Historic South Asia: The Emergence of Cities and States, Cambridge University Press, Cambridge.
  2. ANAND, SHANKER SINGH (2017): “The Chronology of Northern Black Polished Ware: Recent Perspectives”. International Journal of Scientific Research in Science, Engineering and Technology – IJSRST. 3: 1488-1492. 20 Nov 2017.
  3. BEGLEY, VIMALA (1981): Excavations of Iron Age Burials at Pomparippu, Part One: Excavations at Pomparippu 1970, Ancient Ceylon, No. 4, Colombo.
  4. BELLWOOD, P. & RENFREW, C. (2002): Examining the Farming/ Language Dispersal Hypothesis, McDonald Institute, Cambridge.
  5. BELLWOOD, PETER (2004): The First Farmers: The Origins of Agricultural Societies; Wiley- Blackwell, London.
  6. BOPEARACHCHI, OSMUND & WICKREMASINGHE, RAJAH M. (1999): Ruhuna: An Ancient Civilisation Re-visited, Published by R.M. Wickremasinghe, Sri Lanka.
  7. CARSWELL, JOHN & PRICKETT, MARTHA (1984): Manthai 1980, Ancient Ceylon, No.5, Colombo.
  8. CARSWELL, JOHN; DERANIYAGALA, SIRAN; GRAHAM, ALAN (2013): Mantai: City by the Sea, Linden Soft Verlag, Germany.
  9. CAVALLI-SFORZA, L.L. (1996): The spread of Agriculture and Nomadic Pastoralism: Insights from the Genetics, Linguistics and Archaeology. In HARRIS DR (ed): The Origins and Spread of Agriculture and Pastoralism in Eurasia, Smithsonian Institution, Washington DC.
  10. CAVALLI-SFORZA, L.L. (2002): Genes, Peoples and Languages, Penguin, London.
  11. CONINGHAM, R.A.E.; ALLCHIN, F.R.; BATT, C.M.; LUCY, D. (1988): Published on line by Cambridge University Press. (April 1996): Cambridge Archaeological Journal, Vol. 6, Issue 1, pp. 73-97.
  12. CONINGHAM, R.A.E. & ALLCHIN, F.R. (1995): ‘The rise of cities in Sri Lanka’ in The Archaeology of Early Historic South Asia, Cambridge University Press.
  13. CONINGHAM, ROBIN (1999): Anuradhapura: The British-Sri Lankan Excavations at Anurahapura Salgaha watta 2., Vol. 1, British Archaeological Reports, International Series 824.
  14. DERANIYAGALA, S.U. (2013): ‘General Conclusions’ in Mantai, City by the Sea by John Carswell, Siran Deraniyagala and Alan Graham, Linden Soft Verlag, Aiochwald, Germany.
  15. DERANIYAGALA, S.U. (1972): “The Citadel of Anuradhapura 1969: Excavation in the Gedige area” in Ancient Ceylon, 1972: No.2: 48-169.
  16. DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Archaeological Department, Colombo.
  17. DE SILVA, K.M. (2005): A History of Sri Lanka, Penguin Books India, New Delhi.
  18. GODAKUMBURA, C.E. (1968): Kantarodai, Journal of the Royal Asiatic Society, Ceylon Branch (New Series), Vol. XII: 67-85.
  19. GUNAWARDHANA, R.A.L.H. (1977): Prelude to the State: An Early Phase in the Evolution of Political Institutions In Ancient Sri Lanka, The Sri Lanka Journal of Humanities VIII, University of Peradeniya.
  20. INDRAPALA, KARTIGESU (1969): ‘Early Tamil Settlements in Ceylon’, Journal of the Royal Asiatic Society, Ceylon Branch (New series), Vol. XIII: 43-63.
  21. INDRAPALA, K. (2006): The Evolution of an Ethnic Identity: The Tamils in Sri Lanka c. 300BCE to c. 1200CE., Kumaran Book House, Chennai – Colombo.
  22. KARUNARATNE, PRIYANKA PADMALAL (2010): Secondary State Formation During the Early Iron Age on the Island of Sri Lanka, University of California, San Diego.
  23. KENNEDY, K.A.R. (1975): The Physical Anthropology of the Megalithic Builders of South India and Sri Lanka, Canberra.
  24. KENNEDY, K.A.R. & DERANIYAGALA, S.U. (1989): Fossil Remains of 28,000 year hominids from Sri Lanka, Current Anthropology, 30(3).
  25. KIVISILD, TOOMAS et al. (2002): The Genetics of Language and Farming Spread in India in BELLWOOD, P & RENFREW, C. (eds.) Examining the Farming/ Language Dispersal Hypothesis, McDonald Institute, Cambridge
  26. KUMAR, VINAY (2019): Black and Red Ware : A Reappraisal, Heritage: Journal of Multidisciplinary Studies in Archaeology, 7: 2019., pp. 397-404.
  27. MAHADEVAN, IRAVATHAM (2003): Early Tamil Epigraphy, Cre-A, Chennai, India  and Harvard University, USA.
  28. MOORJANI, PRIYA; KUMARASAMY, THANGARAJ; PATTERSON, NICK et al. (2013): Genetic Evidence for Recent Population Mixture in India, American Journal of Human Genetics, 93 (3): Pages. 422-438.                                                                                                                   
  29. MOORTI, U.S. (1994): Megalithic Culture of South India, Ganga Kaveri Publishing House, Varanasi.
  30. NARASIMHAIAH, B. (1980): Neolithic and Megalithic Cultures in Tamil Nadu, Sindeep Prakashan, Delhi.
  31. NARASIMHAN, VAGHEESH M.; PATTERSON, NICK ; MOORJANI, PRIYA et al. (2019): The Formation of  Human Populations in South and Central Asia, Science, Sept 6, 2019: 365 (6457).
  32. PARPOLA, ASKO (1973): Arguments for an Aryan Origin of the South Indian Megaliths, State Department of Archaeology, Government of Tamilnadu.
  33. PARANAVITANA, S. ; NICHOLAS, C.W. (1961): A Concise History of Ceylon: From the earliest times to the arrival of the Portuguese in 1505, Ceylon University Press, Colombo.
  34. PARANAVITANA, S. (1970): Inscriptions of Ceylon I: Early Brahmi Inscriptions, Department of Archaeology, Colombo.
  35. PARANAVITANA, S. (1983): Inscriptions of Ceylon II: Late Brahmi Inscriptions, Department of Archaeology, Sri Lanka, Moratuwa.
  36. PARKER, HENRY (1909): Ancient Ceylon, Luzac, London.
  37. POSSEHL, GREGORY L. (1990): Radiocarbon Dates for South Asian Archaeology, The University Museum, University of Pennsylvania, Philadelphia.
  38. POSSEHL, G.L. (1994): Radiometric Dates from South Asian Archaeology; An Occasional Publication of the Asia Section, University Museum, University of Pennsylvania, Philadelphia.
  39. POSSEHL, G.L. & GUNTUPALLI, PRAVEENA (1999): Radiometric Dates for Megalithic Iron in Peninsular India; An Occasional Publication of the Asia Section, University of Pennsylvania, Philadelphia.
  40. RAGUPATHY, PONNAMPALAM (1987): Early Settlements in Jaffna: An Archaeological Survey, Madras.
  41. RAJAN, K. (1991): Archaeology of Dharmapuri District, Tamil Nadu, Man and Environment, 16, 1: 37-52.
  42. RAJAN, K. (2019): Keeladi: Foreword, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Madras.
  43. REA, ALEXANDER ( 1915): Catalogue of Prehistoric Antiquities of Adichanallur and Perumbiar, Govt. Publications, Madras.
  44. RENFREW, COLIN (1987): Archaeology and Language: The Puzzle of Indo Europe Origins;  Jonathan Cape, London.
  45. SAMPATH, M.D. (1999): “Sri Lanka and the Tamil Brahmi Script – A Comparative Study” in Narasimhamoorthy Felicitation Volume, Chennai., pp 87-95.
  46. SENEVIRATNE, S. (1984): The Archaeology of the Megalithic – Black and Red Ware Complex in Sri Lanka, Ancient Ceylon 5, 237-307.
  47. SENEVIRATNE, S. (1985): Social Base of Early Buddhism in South India and Sri Lanka (C.3rd Century B.C. – 3rd Century A.D.), Tawaharlal Nehru University, New Delhi. Ph.D. Thesis, Department of History, Unpublished.
  48. SITRAMPALAM, S.K. (1980): The Megalithic Culture of Sri Lanka, Ph.D. Thesis, University of Poona, Poona, India.
  49. SITRAMPALAM, S.K. (1983): ‘Ancient Jaffna: An Archaeological Perspective’ in Journal of South Asian Studies, Vol. 3. No. 182.
  50. SITRAMPALAM, S.K. (1990): The Urn Burial site of Pomparippu in Sri Lanka, Ancient Ceylon, No.7, Vol. 2, Colombo.
  51. STONEMAN, RICHARD (2019): The Greek Experience in India, Princeton University Press, New Jersey.
  52. SUNDARA, A. (1985): Archaeology in Karnataka, Papers presented at the National Seminar in Archaeology, 1985.
  53. SUNDAY OBSERVER Sri Lanka (2013): Prehistoric Cemetery at Ibbankatuwa, 6th October 2013.
  54. THAPAR, B.K.; ATHAVALE, V.T.; RAMESH RAO, K. & SHAHI, R. (1964-65): A Chalcolithic Site in the Tapti Valley, Ancient India Nos. 20&21, Archaeological Survey of India, Government of India, New Delhi.
  55. THAPAR, ROMILA (1983): “The Archaeological Background to the Agnicayana Ritual.” In (Eds) Frits Stall et al. Agni: The Vedic Ritual of the Fire Altar, Vol. 2., Asian Humanities Press, Berkeley.
  56. THAPAR, ROMILA (2002): Early India: From the Origins to AD 1300. California: University of California Press. P. 87.
  57. THIAGARAJAH, SIVA (2016): Kantarodai Civilization of Ancient Jaffna 500BCE-800CE, Kumaran Book House, Colombo-Chennai.
  58. VELUPPILLAI, A. (1980): Epigraphical Evidences for Tamil Studies, International Institute of Tamil Studies, Madras.
  59. WHEELER, R.E.M. (1947): Brahmagiri and Chandravalli: Megalithic and Other Cultures in Mysore State, Ancient India 4.
  60. ZVELEBIL, KAMIL (1965): Harappa and the Dravidians: An old mystery in a new light. New Orient 4 (3): 65-69.
  61. இந்திரபாலா, கா. (2006): இலங்கையில் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு பொ.ஆ.மு. 300 – பொ.ஆ. 1200, குமரன் புத்தக இல்லம், சென்னை – கொழும்பு.
  62. சிற்றம்பலம். சி.க. (1999): பண்டைய தமிழகம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை.
  63. மகாதேவன், ஐராவதம் (1990): தமிழ்ப் பிராமி சாசனங்கள், தினமணி, 01-07-1990, சென்னை.
  64. பாலகிருஷ்ணன், ஆர். (2023): ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை, சென்னை: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
  65. புஷ்பரட்ணம், பரமு (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
  66. புஷ்பரட்ணம், ப. (2017): இலங்கைத் தமிழர்: ஒரு சுருக்க வரலாறு, தமிழ்க் கல்விச் சேவை, சுவிற்சர்லாந்து.
  67. பூங்குன்றன், ஆர். (1999): பண்டைய தமிழகத்தில் அரச உருவாக்கம், முனைவர் பட்டத்திற்கான தஞ்சாவூர் பல்கலைக்கழக ஆய்வேடு., தஞ்சாவூர்.
  68. மணிமேகலை (1956) உ.வே. சாமிநாதையர் – 4 ஆம் பதிப்பு, சென்னை.
  69. ராஜன், கா. (2010): தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  70. ராஜன், கா. (2025): இரும்பின் தொன்மை, தமிழ்நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் காலக் கணக்கீடுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.


About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்