II
பெருங்கற் புதையல் நிவேதனப் பொருட்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் காட்டும் மக்களின் வாழ்வியல்
ஆதி-இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டின் அச்சாணிகளாக ஈமச் சின்னங்கள், குடியிருப்புகள், குளங்கள், வயல்கள் என நான்கு அம்சங்கள் விளங்கின. மக்கள் தமது வசிப்பிடங்களைச் சிறப்பாக அமைப்பதைக் காட்டிலும் ஈமச் சின்னங்களைச் சிறப்பாக அமைப்பதிலேயே அதிக கவனம் காட்டியதனால், இவர்கள் அமைத்த ஈமச் சின்னங்களில் இறந்தோருக்கு அளித்த பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெருங்கற் புதையல்களில் காணப்படும் நிவேதன, படையற் பொருட்கள் பெருங்கற் பண்பாடு பற்றிய கற்கைக்கும், அக்கால மக்களின் வாழ்வியல் பற்றிய அரிய தகவல்களை அறியத்தருவதற்கும் ஏதுவாக அமைகின்றன. மேலைப் பழங்கற்கால மக்கள் தங்கள் இனத்தவர்களின் இறந்தவர்களது உடல்களை பலவகையான நோக்கங்களுக்காக மண்ணிலே புதைத்தார்கள். இப்புராதன வழக்கத்தை பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மக்களும் தொடர்ந்து கடைப்பிடித்தார்கள். சாதாரண ஓலைக் குடிசைகளில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களுக்காக பிரமாண்டமான கற்களைத் தேடி எடுத்து, அதிலிருந்து கற்பலகைகளை அறுத்தெடுத்து, அவற்றைக் கொண்டு நிரந்தரமான கல்லறை மாளிகைகளை (Monument) எழுப்பி அவற்றினுள்ளே இறந்தவர்களின் சடலத்துடன் தங்களால் இயன்றளவு படையற் பொருட்களையும் வைத்து மூடியிருக்கிறார்கள். இந்தச் செயற்பாடு இறந்த மக்களின் பின்வாழ்விற்கோ (After-life), அல்லது மறுபிறப்பிற்கோ (Rebirth) அத்தியாவசியமானது என அவர்கள் நம்பினார்கள்.
தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் பெருங்கற் புதையல்களின் ஈமப் பொருட்கள் (Grave Furniture) பல வகையான மட்பாண்டங்கள், ஆயுதங்கள், அதிகமாக இரும்பினால் சில சமயங்களில் செம்பினால் அல்லது கற்களினால் செய்யப்பட்ட கருவிகள், சுட்ட களிமண்ணினாலான உருண்மணிகள், மதிப்புமிக்க கற்கள், தங்கம் அல்லது செம்பினாலான கழுத்தணிகள், புஜக் காப்புகள், கை வளையல்கள், காதணிகள், மூக்குத்திகள், பல வகையான உணவு வகைகள் – நெல், அரிசி, தானியங்கள் மற்றும் மீன் முட்கள், பறவை எலும்புகள் என்பனவாம்.
வாழ்வாதாரப் பாங்கு (Subsistence Pattern)
நமக்குக் கிடைத்திருக்கும் தொல்லியல், தொல்தாவரவியல், தொல்விலங்கியல் தெரிபொருட் கூறுகளையும், சுற்றுப்புறச் சூழலோடு அவைகளின் ஒப்புமைத் தொடர்புகளையும் நோக்குமிடத்து, தென்னிந்திய – இலங்கையின் பெருங்கற் பண்பாட்டில், ஒரு விவசாய – மந்தை வளர்ப்பு முல்லைத்திணை அடித்தளத்துடன் (Agro-pastoral Base), பல கைவினைத் தொழில்கள் பின்னிப்பிணைந்த ஓர் ‘இணைவாழ்வு உறவு’ (Symbiotic Relationship) காணப்படுகிறது எனக்கூறலாம். இந்த அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரப் பாங்குகளை நாம் நோக்கலாம்.
(1) நீர்ப்பாசன விவசாயம்
பெருங்கற்கால மக்களின் பொருளாதாரத்தின் முக்கியமான அடிப்படைத்தொழில் விவசாயம். இப்பெருங்கற் கட்டடக் கலைஞர்களே தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் குளமமைத்த நீர்ப்பாசன விவசாயத்தின் கர்த்தாக்களாவார். இவ்வகையான குளவாய்க்கால் நீர்ப்பாசனம் ஒரு விவசாயப் புரட்சியையே (Agricultural Revolution) ஏற்படுத்தியது. இவ்வகையான குளங்கள் மனிதர்களால் தோண்டப்பட்டோ அல்லது மலைகளுக்கு நடுவிலுள்ள பள்ளத்தாக்குகளில் ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலுமோ அணைகளைக் கட்டி ஏரிகளாகவோ உருவாக்கப்பட்டிருக்கலாம். இரும்பினால் செய்யப்பட்ட கலப்பைகளும், இரும்புக் கருவிகளும் இந்த விவசாய நடவடிக்கைகளுக்கு உதவியாக இருந்தன. இந்த விவசாயத்தின் முக்கியப் பயிரீடு நெல் ஆகும். இவ்வகையான நெல்வயல்களுக்குச் சற்றுத்தள்ளி, விவசாயத்திற்குத் தகுதியற்ற உயரமான பாறை நிலங்களிலேயே பெருங்கற் கல்லறைகளும், தாழிப் புதையல்களும் காணப்படுகின்றன.
தமிழகத்தில் பெருங்கற் பண்பாட்டு ஆய்வுகளை மேற்கொண்ட நரசிம்மையா (B. Narasimhaiah) அவரது பூனா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வில் பெருங்கற்காலப் புதையல்கள் ஆரம்பிக்கு முன்னரேயே மக்கள் இயற்கையான ஏரிகளையும், குளங்களையும் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டதாகக் கூறியுள்ளார். பண்டைக்கால மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நீரை அவர்கள் குளங்களிலிருந்தும், ஏரிகளிலிருந்தும் பெற்றுக்கொண்டார்கள். சிறுதானியங்களையும் இந்நீரைக் கொண்டு பயிரிட்டார்கள். ஆனால் பெருமளவிலான நீர்ப்பாசன விவசாயத்தை இப்பிரதேசங்களிலே அறிமுகப்படுத்தியவர்கள் நிச்சயமாக தென்னிந்திய பெருருங்கற் கட்டடக்காரர்களேயாவர் (Narasimhaiah, B. 1980).
மிகுந்த அறிவுத்திறனும், துணிவாண்மையும், திடசித்தமும் கொண்ட இச்சமூகத்தினர் பாறை நிலங்களையும், கற்தரைகளையும், உயர் குன்றுகளையும் தமது பெருங்கல் கல்லறைகளுக்கு ஒதுக்கிவிட்டு, பள்ளமான சமதரைகளை விவசாய நடவடிக்கைகளுக்காக உபயோகித்தார்கள். பயிரீட்டுத் தானியங்களில் முக்கியமான நெல் அரிசி அவர்களது அடிமூல உணவுப் பொருளாக (Staple Food) விளங்கியது. பெருங்கற் புதையல்களிலும், தாழிப் புதையல்களிலும் காணப்படும் நிவேதனக் கலன்களில் நெல் உமிகளும், அரிசியும் பெரும்பாலும் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் தரும் தகவல்களின்படி ஆரம்ப காலங்களிலிருந்தே அரிசி ஒரு முக்கிய உணவாக தமிழகமெங்கும் உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் கந்தரோடை அகழ்வுகளில் நெல், தினை, சாமை ஆகிய தானியங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஏற்கனவே இங்கு கூறப்பட்டிருக்கிறது.
(2) மந்தை வளர்ப்பு
பல பெருங்கற் புதையல்களிலே வளர்ப்பு மிருகங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. கால்நடைகள், ஆடு, செம்மறி, நாய், குதிரை, எருமை என்பன வளர்க்கப்பட்டிருக்கின்றன. சில மையங்களில் கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு மேற்கொண்டதற்தான தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன.
(3) வேட்டையாடுதல், மீன் பிடித்தல்
வேட்டையாடிக் கிடைக்கும் மிருக உணவின் சேர்க்கை விவசாயத்திலிருந்து கிடைக்கும் தாவர உணவை மிகுதிப்படுத்தியுள்ளது. புதையல்களில் காணப்படும் அம்பு நுனிகள், ஈட்டிகள், எறிவளைகள் (Javelins) என்பனவும், இப்பிராணிகளின் எலும்புகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அங்கு காணப்படும் பெருந்தொகையான உருளைக்கற்கள் கவண்வீசிக் கல்லெறிந்த வேட்டையும் நடைபெற்றிருப்பதைக் காட்டுகிறது. காட்டுப் பன்றி, மான், மரை, காட்டுக்கோழி, நீர்க்கோழி, கரடி ஆகியவற்றின் எலும்புகள் இம்மிருகங்கள் அக்கால உணவுத் தொகுதியின் ஓர் அங்கமாக விளங்கியதை எடுத்துக்காட்டுகின்றன.
இரும்பினாலும், செம்பினாலும் செய்யப்பட்ட தூண்டில் ஊசிகள், சுட்ட செங்கட்டிகளினாலான மீன்வலை தாழ்ப்பிகள் மற்றும் மீன் முட்கள், சுறா எலும்புகள், நண்டுக் கோதுகள் என்பன கடல் உணவும் ஓர் ஆதார உணவுத்தொகுதியாக விளங்கியதைக் காட்டுகிறது.
(4) தொழில் நுட்பம்: கைத்தொழிலும் தொழில்துறையும்
ஒரு சமூகத்தின் அன்றாட வாழ்விற்கும் மற்றும் தொழில்நுட்ப, கலாசாரத் தேவைகளுக்கும் நிறைவேற்றும் ஆற்றலும், பயனுறுதியும் கொண்ட ஒரு உதவிப் பொருளாதாரக் கட்டமைப்பு அவசியமாகிறது. தொழில்துறை ஆற்றல் கொண்ட கொல்லர், தச்சர், குயவர், கூடை பின்னுவோர், பிரம்பு பின்னுவோர், கல்தச்சர் ஆகியோர் பெருங்கற் பண்பாட்டு சமூகத்தின் முக்கியமான அங்கத்தினராவர். ஒரு நீர்ப்பாசன விவசாயச் சமூகத்தின் இன்றியமையாத உபவல்லுநர்கள் இவர்கள்.
(அ) உலோகத் தொழில்
பல பெருங்கல் புதையல் உள்ள நடுவங்கள் இரும்பு, செம்பு, தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் தயாரிப்பு மையங்களாகக் கருதப்படுகின்றன. இந்த நடுவங்களுக்குச் சமீபமாக தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உலேகங்களை உருக்கவைக்கும் புடமிடும் மட்கலன்கள், சுடுமண் ஊதுலைக் குழாய்கள் (Clay Tuyers), மற்றும் இரும்புக் கனிமங்கள் (Iron Ores), கழிவிரும்புகள் (Iron Slags), செம்புக் கழிவுகள் (Copper Slags) என்பன அவ்விடத்தில் ஓர் உலோகத் தொழில் உலைக்களம் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. அவ்விடங்களில் இரும்புக் கோடரிகள், இரும்புக் கலப்பை நுனிகள், அரிவாட்கள், மண்வெட்டிகள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஓர் உயர்வான தொழில்நுட்பத்தை இப்பெருங்கற் பண்பாட்டு மக்கள் அடைந்திருந்தமையை எடுத்துக்காட்டுகிறது.
செம்பு முக்கியமாக வீட்டுப் பாவனைப் பாத்திரங்களின் தயாரிப்பிற்காகவும், மாலைகள், காப்புகள், கைவளையல்கள் போன்ற பல தரப்பட்ட அணிகலன்களை உருவாக்கவும் உபயோகப்படுத்தப்பட்டது.
செயற்திறன் மிக்க உலோகத் தொழிலுக்குத் தேவையான முக்கிய அம்சம் உயர்தரமான எரிபொருள் ஆகும். இந்த உலோக ஆலைகளில் நிலக்கரி, மரச்சாணி, நெல்உமி என்பன எரிபொருட்களாகப் பாவிக்கப்பட்டிருக்கின்றன.
(ஆ) தச்சு வேலை – மரத்தொழிற் திறன்
அகழ்வுகளில் கண்ட பல வகையான நுணுக்கமாகப் பொருத்தப்பட்ட மரப் பொருட்கள் பெருங்கற்கால மக்களின் மரத்தொழில் நுட்பத்திற்குச் சான்று பகருகின்றன. இரும்பினால் செய்யப்பட்ட கோடரிகள், உளிகள், துளைக் கருவிகள், சுத்தியல்கள், ஆப்புகள் (செருகு கட்டை), வாய்ச்சிகள் மற்றும் கற்களினாலான பெரும் சுத்தியல்கள், பட்டடைக்கல் என்பன இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மரத்தச்சர்களால் உபயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. வேம்பு, பலா, கமுகு, தேக்கு, வேலமரம், சந்தனமரம் ஆகிய மரங்களில் செய்யப்பட்ட பொருட்கள் அன்றாடப் பாவனையில் இருந்திருக்கின்றன.
பனை மரத்தில் செய்யப்பட்ட பெரிய துலாக்கள், மரத்தினால் செய்த பெரிய தைலாப் பெட்டிகள், ஒரே மரத்திலிருந்து செதுக்கப்பட்ட பெரிய ஏர்கலப்பைகளிலிருந்து மிகச் சிறிய தீப்பெட்டி அளவினதான சந்தனமர டப்பிகள் வரை அவர்களால் தயாரிக்கக்கூடியதாக இருந்தது. அகழ்வுகளில் காணப்படும் துளைக்கற்கள், அவற்றினூடாக வெட்டப்பட்ட மரக் கம்பங்களை நட்டு வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள் எனக் கிரகிக்கச் செய்கிறது.
(இ) மட்பாண்டங்கள்
தென்னிந்திய – இலங்கையின் பெருங்கற் பண்பாட்டின் முக்கியமான அம்சம் அவர்கள் கண்டுபிடித்த வனைச்சில்லும், அவர்களின் தனித்துவமான கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களுமேயாகும். இவ்வகையான மட்பாண்டங்கள் கதிரியக்கத் தேதிக் கணிப்புகளின்படி கி.மு. 3000 ஆண்டுக் காலத்திலிருந்து (சிந்துவெளி குஜராத்), கி.பி. 200 ஆம் ஆண்டுக்காலம் வரை (இலங்கை) தயாரிப்பில் இருந்து வந்திருக்கிறது. இக்கலன்களின் நீண்டு விரிந்த பரவல் பற்றி கீழே கூறப்படுகிறது.
இம்மட்பாண்டங்களில் ஆரம்ப பெருங்கற்கால சொரசொரப்பான (Coarse) கறுப்பு-சிவப்பு மட்கலன்கள், ஆரம்பகால முறிவளைவு கொண்ட (Early Carinated) கறுப்பு-சிவப்பு மட்கலன்கள், இடைக்கால மிருதுவான (Smooth) கறுப்பு-சிவப்பு மட்கலன்கள், பிற்கால பளபளப்பான மெருகேற்றப்பட்ட (Burnished) கறுப்பு-சிவப்பு மட்கலன்கள் ஆகியவை அடங்கும். இவை தவிர மெருகேற்றப்பட்ட சிவப்பு மட்பாண்டங்கள், கறுப்பு மட்பாண்டங்கள், சாம்பல் நிற மட்பாண்டங்கள், செம்பழுப்பு மேற்படலம் அடித்து அதன்மேல் நிறம் பூசப்பட்ட மட்கலன்கள் (Russet Coated Painted Ware) என்பவையும் அடங்கும்.
இந்த மட்பாண்டங்களில் பலவகையான பருமனிலும் உருவத்திலுமான பானைகள், சட்டிகள், வட்டில்கள், தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள் என்பன காணப்படுகின்றன.
(ஈ) பல்வேறு நடவடிக்கைகள்: மணிமாலை செய்தல், பாய்-கூடை பின்னுதல், கல் வெட்டுதல், சுடுமண் வேலை, பாறை ஓவியம் வரைதல்
பெருங்கற்கால மக்களின் அணிகலன்கள் பலதரப்பட்ட அரிய கல்மணிகளால் ஆக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர தங்கம், செம்பு, சங்கு, கொம்பு ஆகிய பொருட்களால் செய்யப்பட்ட மாலைகள், காப்புகள், வளையல்கள் என்பனவும் காணப்படுகின்றன. இவற்றில் பலவகையான அணிகலன்கள் இம்மக்கள் வாழ்ந்த மையங்களிலேயே செய்யப்பட்டிருக்கின்றன. மதிப்புமிக்க கற்களும், தங்கம் போன்ற உலோகங்களும் வணிகப் பரிமாற்றங்கள் வழியாகவே இம்மையங்களை வந்தடைந்திருக்கின்றன.
கந்தரோடையில் கண்டெடுத்த சில பானை ஓடுகளில் பதிந்திருக்கும் ஓலைப்பாய்களின் பொறிப்பு அடையாளங்கள் அக்காலத்தில் ஓலைகளைக் கொண்டு பாய் பின்னுதல் நடைமுறையிலிருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. பாய் பின்னத் தெரிந்த கைவினைஞர்கள் ஓலைகளைக் கொண்டு கூடைகள், பட்டைகள், கடகங்கள், பெட்டிகள் ஆகியவற்றையும் பின்னியிருக்கலாம்.
1966-68 ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளராகவிருந்த சாள்ஸ் எட்மண்ட் கொடகும்புர கந்தரோடையின் தெற்குப் பக்கத்தில் பனந்தோப்புகளிடையே காணப்பட்ட மேட்டை முதல் தடவையாக அகழ்வாய்வு செய்தபோது ஒரே அளவுகளில், ஒரே சீராக வெட்டப்பட்டு வார்ப்படம் செய்த சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு நான்கு வரிசைகளில் ஸ்தூபங்களின் அடித்தளங்கள் கட்டப்பட்டிருந்ததைப் பதிவு செய்திருக்கிறார் (“All the stūpas have a moulded base. The base comprises four moulded tiers or courses of coral stones”: Godakumbura, C. E. 1968: 72). இதிலிருந்து கற்களை வெட்டி வார்ப்படம் செய்யும் தொழில்நுட்பத்தை அன்றைய கல்தச்சர்கள் அறிந்திருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
கலாநிதி புஷ்பரட்ணம் கட்டுக்கரை, நாகபடுவான் ஆகிய மையங்களில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் பலவகையான சுடுமண் பொம்மைகளையும், சுடுமண்ணினாலான தாய்த் தெய்வம், லிங்கம் ஆகிய மதச் சின்னங்களையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
(5) வணிக மற்றும் பண்டமாற்று வலைப்பின்னல்
கந்தரோடை, யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் பல மையங்களில் கண்டெடுக்கப்பட்ட அரிய கல்மணிகள், தங்கம் போன்ற உயர் உலோகங்கள் அனைத்தும் வாணிப நடவடிக்கைகள் மூலமே இந்த மையங்களை வந்தடைந்திருக்கின்றன. பண்டைய கடற்கரை நகரங்களில் அதிகமாகக் காணப்படும் சூதுபவளம் போன்ற கல்மணிகள் கடல் வர்த்தக மார்க்கமாக வந்தடைந்த பொருட்கள் என ஆர்.என். மேத்தா குறிப்பிடுகிறார். கந்தரோடை, யாழ்ப்பாணக் கோட்டை, பூநகரி, மாந்தை ஆகிய மையங்களின் அகழ்வுகளில் கண்ட ரௌலெற்றெட் மட்பாண்டங்கள், அம்போரா சாடிகள், உரோம நாணயங்கள் அக்காலக் கடல் வர்த்தகத்தின் அரிய சான்றாக விளங்குகின்றன.
(6) அழகியலும் அணிகலன்களும்
பெருங்கற்கால மக்களின் அணிகலன்கள் பலதரப்பட்ட அரிய கல்மணிகளால் ஆக்கப்பட்டிருக்கின்றன. நீலமணி (Sapphire), மரகதம் (Beryl), சூதுபவளம் (Carnelian), அமெதிஸ்ற் எனப்படும் ஊதாக்கல் (Amethyst), வைடூரியம் (Lapis-lazuli), மஞ்சள் மணிக்கல் (Jasper), கார்னெற் எனப்படும் மணிக்கல் (Garnet) மற்றும் பளிங்கு (Quartz) ஆகிய கற்களினால் செய்யப்பட்ட மணிமாலைகள் பெருங்கற் புதையல்களிலே கிடைத்திருக்கின்றன.

கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுத்த மணிமாலைகள். நன்றி: கலாநிதி ப. புஷ்பரட்ணம்.
இவற்றோடு தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களினாலான மணிமாலைகள், காப்புகள், வளையல்கள் பல பெருங்கல் மையங்களிலே கிடைத்திருக்கின்றன. இவை தவிர சங்கு, கொம்பு ஆகிய பொருட்களால் செய்யப்பட்ட அணிகலன்களும் காணப்படுகின்றன. மக்கள் தங்களது பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு அணிகலன்களைத் தெரிவு செய்திருப்பர்.
கந்தரோடையில் போல் பீரிஸ் கண்டெடுத்த இமைக்கு மைதீட்டும் கோலக் குச்சிகள், உயர் வகுப்புப் பெண்கள் அவற்றை உபயோகித்திருக்கலாம் என அனுமானிக்க வைக்கிறது.
குடியிருப்புப் பகுதிகளும் சமூக அமைப்பும்
பெருங்கற் பண்பாட்டு மக்களது வாழ்விடப் பகுதிகளிலிருந்து கிடைத்த பலதரப்பட்ட சான்றாதாரங்கள் அக்கால மக்களது வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், மக்கள் தொகை, குடும்ப – சமூக உறவு முறைகள், வாழ்விடங்கள், உணவு உற்பத்தி முறைகள், தொழில்நுட்ப வளர்ச்சி, மத நம்பிக்கைகள், கலை மரபு, உள்நாட்டு – வெளிநாட்டுத் தொடர்புகள் என்பவற்றை எடுத்துக்காட்டுகின்றன. தென்னிந்தியாவில் பெருங்கற்காலக் குடியிருப்புகளும் அவற்றுடன் தொடர்புடைய ஈமச்சின்னங்களும் குறிப்பிட்ட ஒரு தொல்லியல் வட்டத்திற்குள் இருந்ததற்கான ஆதாரங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொடுமணல் என்ற இடத்தில் காணப்படுகின்றன. இலங்கையிலும் கந்தரோடையில் முக்கிய நகரத்தில் குடியிருப்புப் பகுதிகளும், அதன் தெற்குப் புறத்தில் பனந்தோப்புகளினிடையே பௌத்தமத பெருங்கற் புதையல்களும் காப்படுகின்றன. இது தவிர ஆனைக்கோட்டை கந்தரோடை மக்களின் ஈமக்காடாக விளங்கியிருக்கிறது. இலங்கையில் கந்தரோடையைத் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் வட்டத்திற்குள் குடியிருப்புப் பகுதிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பெருங்கற் புதையல்களின் கற்கையானது ஆதி இரும்புக்காலத்தில் சமூகத்தில் மக்களிடையே பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் இருந்ததை எடுத்துக்காட்டுகிறது. மிகப் பிரமாண்டமான பெருங்கற் சமாதிகளுக்கும், பாறைகளை வெட்டிப் பல அறைகள் அமைத்த பாறைப் புதையல்களுக்கும், சாதாரண குழியடக்கங்களுக்குமிடையே காணப்படும் உலோகாயத வேறுபாடு, புதைக்கப்பட்ட மனிதர்களினிடையே சமுதாயத் தராதர வேறுபாடு (Status Differentiation) இருந்ததை எடுத்துக்காட்டுகிறது. புதைக்கப்பட்ட நிவேதனப் படையல் பொருட்களிடையே காணப்படும் பொருள்வள வேறுபாடும் சமுதாயப் படிநிலை (Social Status) இருந்ததை உறுதி செய்கிறது.
பெருங்கற் பண்பாட்டைப் பேணிய ஆதிஇரும்புக்கால மக்கள் கணிசமான சனத்தொகையைக் கொண்ட கிராமங்களிலே வாழ்ந்தார்கள். இக்கிராமங்களிலே பல்வேறு தொழில்புரியும் குழுக்களும் வாழ்ந்தன. இவற்றைவிடத் தனித்தனியாகவும் இவர்கள் கிராமங்களில் வாழ்ந்ததற்கும் ஆதாரமுண்டு. இக்காலத்தில் கிராம மக்களிடையே நெருங்கிய ஒற்றுமையும் கூட்டுறவும் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஈமச் சின்னங்களை அறிவியல் ரீதியாக அலசி நோக்கும்போது இவை பல நாட்களாக பலர் மேற்கொண்ட முயற்சியாலேயே ஆக்கப்பட்டமை தெளிவாகத் தெரிகிறது. கற்களைப் பாறைகளிலிருந்து வெட்டி எடுப்பதற்கும், பின்னர் அவற்றை ஈமச் சின்னங்கள் அமைக்கும் இடத்திற்கு இட்டு வருவதற்கும், இறுதியாக இக்கற்களைப் பயன்படுத்தி ஈமச் சின்னங்களைச் சிறப்பான முறையில் ஆக்குவதற்கும் பலரது முயற்சியும் உதவியும் தேவைப்பட்டிருக்கும். இவ்வாறே குளங்களுக்கு அணை கட்டுவதற்கும் பலரது கூட்டு முயற்சி வேண்டியிருக்கும். இக்காலக் குடியிருப்புகளை அண்டிக் காணப்படும் ஈமச் சின்னங்கள் சராசரியாக நூற்றுக்குக் குறையாத எண்ணிக்கையுடையனவாகக் காணப்படுகின்றன. இதன் மூலம் அக்காலக் கிராமங்களில் வாழ்ந்த மக்களின் தொகையை நாம் ஓரளவு ஊகிக்க முடிகிறது. மக்கள் குழுக்களாக வாழ்ந்ததை ஈமச் சின்னங்களில் கிடைக்கும் சான்றுகளும் (தாழிகளில் காணப்படும் குழுச் சின்னங்கள்) எடுத்துரைக்கின்றன (சிற்றம்பலம், சி.க. 1999: 178).
இம்மக்களது பிரதான தொழிலாக நெல் உற்பத்தியே அமைந்திருந்தது. நெல்லினது உமிகளும் நெல் மணிகளும் ஈமச் சின்னங்களிடையே கண்டுபிடிக்கப்பட்டன. உணவு உற்பத்திக்கு இரும்புப் பொருட்கள் ஆற்றிய பணி அளப்பரியது. காடுகளை அழித்து நிலத்தை வயல்கள் ஆக்குவதற்கும், வயல்களுக்கு அருகாமையில் குளங்கள் வெட்டுவதற்கும், ஏர் முனைகளை இரும்பு முனைகளாக ஆக்குவதற்கும், அரிவாட்கள், சத்தகங்கள், கத்திகள் போன்ற கருவிகளைச் செய்வதற்கும் எஃகு இன்றியமையாத சாதனமாக ஆனது.
இவ்வாறு உணவு உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி மக்கள் வாழ்விலும் செழிப்பை உண்டுபண்ணியது. இத்தகைய செழிப்பை இக்காலக் குடியிருப்புகளில் கிடைத்துள்ள பல்வகை உலோகப் பொருட்கள், அரிய மணிகள், சங்குகள் என்பன எடுத்துக்காட்டுகின்றன. பல குழுக்களாக மக்கள் வாழ்க்கைமுறை அமைந்ததால் இக் குழுக்களுக்கிடையிலான சண்டைகள் (Tribal Warfare) ஒரு பொது நிகழ்ச்சியாக இக்காலத்தில் காணப்பட்டது. இவ்வாறு குழுக்களாக வளர்ச்சி பெற்ற சமுதாயம் காலப்போக்கில் பிராந்திய அரசுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இவ்வாறு வரலாற்றுக்கால வளர்ச்சிக்கு – வரலாறு மலருவதற்கு – வழிசமைத்துக் கொடுத்த இக்காலத்தை தொல்லியலாளர் வரலாற்றுதய காலம் (Protohistoric Period) என அழைப்பர். இது நிலவிய காலத்தை இன்றைய ஆய்வுகளின்படி கி.மு. 1200 ஆம் ஆண்டு தொடக்கம் ஏறக்குறைய கி.மு. 600 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி எனலாம்.
இரும்புக்காலச் சமூக அமைப்பில் ஆரம்ப காலங்களைப் போலன்றி பல்வகை வினைஞர் கூட்டம் காணப்பட்டதை இரும்பு, செம்பு, பொன், வெள்ளி ஆகிய உலோகங்களில் வடிக்கப்பட்ட ஆபரணங்கள், உபகரணங்கள் ஆகியனவும், பல்வேறு கற்களிலமைந்த மணிமாலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய கைவினைஞர் கூட்டத்தின் எழுச்சியானது இரும்புக்காலப் பல்துறைச் சமுதாய வளர்ச்சியின் ஓர் உரைகல் ஆகும். நிரந்தரமாகத் தங்குதடையின்றி ஊர் மக்கள் அனைவருக்கும் போதுமான அளவு கிடைக்கும் உணவு உற்பத்தியில் வேளாண் சமூகத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருக்க – உணவு உற்பத்தியில் ஈடுபடாத இன்னொரு முழு நேரக் கலைஞர் கூட்டம் அச்சமூகத்தில் இயங்கிக் கொண்டிருந்த காலம் – சமுதாய வளர்ச்சியின் இன்னொரு பரிமாணம்.
அன்றைய வதிவிடங்கள் வட்ட வடிவான, சதுர வடிவமான அல்லது நீள்வட்ட வடிவான குடிசைகள் ஆகும். இக்குடிசைகள் மண்ணினால் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வெளியே களிமண்ணினால் அல்லது களிமண்ணும் சுண்ணாம்பும் கலந்து மெழுகப்பட்டிருக்கும். இக்குடிசைகளின் வாசல் கரைகளும் மேல் கூரைகளும் மரத்தடிகளால் அமைக்கப்பட்டு, மேலே காய்ந்த நாணற் புற்களாலும் அல்லது இலைதழைகளாலும் மரத்தினாலும் வேயப்பட்டிருக்கும். இக்குடிசைகளின் தரையில் கற்களைப்பரவி அவற்றை அடித்து மட்டமாக்கி அவற்றின் மேல் சாம்பலும் களிமண்ணும் கொண்டு மெழுகியிருப்பார்கள். சில சமயம் குடிசை வீட்டினுள்ளும், சில சமயம் வெளியிலும் அடுப்புகள், அம்மி-குழவிகள் காணப்படுகின்றன. இதனால் காலநிலையைப் பொறுத்தே மனிதனின் நடவடிக்கைகள் வீட்டின் உள்ளும் புறமும் அமைந்தன எனலாம். சீரான காலநிலை இருக்கும் போது பெரும்பாலும் மனிதன் இவ்வீடுகளின் வெளியே தனது பெரும் பொழுதைக் கழித்துத் தனக்கு அவசியமான பொருட்களை மட்டும் இவ்வீடுகளிலே சேகரித்து வைத்தான் (சிற்றம்பலம், சி.க. 1999: 66).

தமிழகத்தின் பெருங்கற்பண்பாட்டு ஆரம்ப காலத்திற்குரிய மாதிரி வட்டக்குடிசை. இலங்கையிலும் இம்மாதிரிக் குடிசைகளிலேயே மக்கள் வாழ்ந்திருப்பர்.
அரச உருவாக்கம்
இலங்கையில் பெருங்கற்பண்பாட்டு மையங்களை அண்டியே பெரும்பாலான பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அக்கல்வெட்டுகளில் ராஜ, மகாராஜ, கமணி, குடும்பிக, வேள், ஆய், பருமுக (பெருமகன்), பெருமகள் முதலான அதிகார வட்டத்திற்குரிய பட்டப்பெயர்கள் காணப்படுகின்றன. இப்பட்டப் பெயர்களுக்குரியவர்கள் சிற்றரசர்களாக, இனக்குழுத் தலைவர்களாக, அரச அதிகாரிகளாக, சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்களாக, குடும்பத் தலைவர்களாக இருந்துள்ளனர் என்பதைக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன (Paranavitana, S. 1970). இக்கல்வெட்டுகளில் காணப்படும் வேள், ஆய், பருமக, பருமகள் என்பன தமிழ்ப் பெயர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கையின் அரச உருவாக்கம் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் குணவர்த்தனா, அநுராதபுரம் இலங்கையில் பலமான மைய அரசாக எழுச்சிபெற்ற போது அதற்கு வடக்கிலும், தெற்கிலும் 268க்கும் மேற்பட்ட குறுநில அரசர்களினதும், குழுத்தலைவர்களினதும் ஆட்சி இருந்தது என்பதற்குப் பாளி இலக்கியங்களையும், பிராமிக் கல்வெட்டுகளையும் ஆதாரமாக எடுத்துக் காட்டியுள்ளார் (Gunawardhana, 1985: 1-9).
இலங்கையில் வேளிர் ஆட்சி
இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளிலும், பாளி இலக்கியங்களிலும் வரும் வேள், வேளு ஆகிய பெயர்கள் அதிகாரத்திலிருந்த ஒருவரைக் குறிக்கும் பெயர்களாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இது சங்ககாலத் தமிழகத்திற்குச் சமமான காலத்திலே இலங்கைத் தமிழரிடம் வேள் ஆட்சி தோன்றியதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பேராசிரியர் பரணவிதான பதிப்பித்த இலங்கையின் தொடக்ககாலப் பிராமிக் கல்வெட்டுகள் (Early Brahmi Inscriptions of Ceylon) என்ற நூலின்படி, 21 கல்வெட்டுகளில் ‘வேள்’ என்ற சொல் காணப்படுகிறது. அவர்களில் 13 பேர் தலைவர் என்ற பெயரிலும், 2 பேர் கிராம அதிகாரியாகவும், ஒரு கல்வெட்டில் குதிரை மேய்ப்பாளராகவும், 2 கல்வெட்டுகளில் பௌத்தமத விசுவாசியாகவும் (Lay Devotee), ஒரு கல்வெட்டில் குடும்பத் தலைவனாகவும், மற்றைய கல்வெட்டில் வரிசேகரிப்பவனாகவும் இருந்திருக்கின்றனர் (புஷ்பரட்ணம் 2017: 57). இதில் வரும் சில பெயர்கள் அதிகாரப் பெயர்களாக இல்லாமல் அவர்களின் தனிப் பெயர்களாகவும் இருந்திருக்கலாம்.
பேராசிரியர் வேலுப்பிள்ளை (பரணவிதான குறிப்பிட்ட) 21ற்கு மேலும் ஐந்து கல்வெட்டுகளில் வேள் என்ற சொற்பதம் இருப்பதை அடையாளப்படுத்தி அப்பெயர்களைப் பேராசிரியர் பரணவிதான தவறாக வாசித்திருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளார் (Veluppillai, A. 1980: 12). சமகாலப் பாளி இலக்கியங்களில் வேல, வேலுசுமண ஆகிய பெயர்கள் இடம்பெறுகின்றன. மகாவம்சம் இலங்கையிலுள்ள வேள்நாடு பற்றி ‘வேளோஜானபதெதஸிய’ எனக் கூறுகிறது (Mahavamsa V. XII: 69). இந்த வாசகம் ‘அவர்களது வேள், அவர்களது நாடு’ எனப் பொருள் தரும் (பூங்குன்றன் 1999: 79). பேராசிரியர் ரோமிலா தாப்பர் வடமொழியில் ‘ராஜா’ என்ற பெயர் என்ன கருத்தைக் கொண்டுள்ளதோ அதே கருத்தையே தமிழில் ‘வேள்’ என்ற பட்டமும் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார் (Thapar, R. 1984: 83).
சங்க இலக்கியங்களில் 2400 பாடல்களில் 20க்கும் குறைவான பாடல்களில் ‘வேள்’, ‘வேளிர்’ பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் இப்பெயர், குறிப்பிட்ட குடித்தலைவர்களை மட்டுமின்றி, சமூகத்தில் செல்வாக்குமிக்க பிற தலைவர்களையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையே இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் ‘வேள்’ என்ற பெயருக்குரியவர்கள் வகித்த வேறுபட்ட பதவிகளும் உணர்த்துவதாகக் கொள்ள இடமுண்டு. தமிழகத்தில் வேள் என்ற பெயரை ஆநிரை கவர்தலில் தலைமை வகித்த தலைவர்களும், வணிகத் தலைவர்களும் பயன்படுத்தியதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. இலங்கையிலும் இப்பெயரை குதிரை வணிகர்கள், குதிரை மேய்ப்பாளர்கள் கொண்டிருந்தமைக்குப் பிராமிக் கல்வெட்டுகளிலும், பாளி இலக்கியங்களிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன (புஷ்பரட்ணம், ப. 2017: 57).
III
கறுப்பு – சிவப்பு மட்பாண்டம்:
ஹரப்பாவிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை

ஹரப்பாவில் கண்டெடுத்த கறுப்பு-சிவப்பு மட்கலன்கள். நன்றி: B.B. Lal, 1997.
தென் ஆசியாவில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் ஹரப்பா நாகரிகக்காலம், வெண்கலக்கால இந்தியா, இரும்புக்கால இந்தியா, பெருங்கற்காலத் தென்னிந்தியா, பெருங்கற்கால இலங்கை, வரலாற்றுக் காலம் ஈறாகப் பரவிக்கிடக்கின்றன. இந்திய உபகண்டத்தில் மிகப் பழமையான கறுப்பு-சிவப்பு மட்கலன்கள் குஜராத்தில்தான் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் சோம்நாத்தில் கண்டெடுத்த கறுப்பு-சிவப்பு மட்கலன் கதிரியக்கத் தேதிக்கணிப்பின்படி கி.மு. 3000 – 2800 ஆண்டிற்கு உரியதாகக் கணிக்கப்பெற்றிருக்கிறது. இது முதிர்ந்த ஹரப்பா நாகரிகத்திற்கு முற்பட்ட ஆரம்ப ஹரப்பா காலமாகும். இதைத் தவிர குஜராத்தில் தொலவீரா, கார்கோட்டா, கன்மர், மற்றும் லோதால் ஆகிய மையங்களிலும் கறுப்பு-சிவப்பு மட்கலன்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. லோதாலில் கண்டெடுத்த மட்கலனின் காலம் கதிரியக்கக்கரிம தேதியின் படி கி.மு. 2080+135 ஆகவும், திருத்தப்பட்ட காலம் கி.மு. 2461 ஆண்டாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது (Possehl, G. et. al. 1999: Possehl, G. 1990: 32).
மேற் கழுத்துப் பகுதியிலும், உட்பக்திலும் கறுப்பாகவும் கீழே வெளிப்பகுதியில் சிவப்பாகவும் இருக்கும் மட்பாண்டங்கள் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாதிரி மட்பாண்டங்களை மோட்டிமர் வீலர் முதன்முதலாக அரிக்கமேடு (1945), பிரம்மகிரி (1947) அகழ்வுகளில் கண்டெடுத்து இவற்றிற்கு ‘கறுப்பு-சிவப்பு மட்பாண்டம்’ என்னும் பெயரை வழங்கினார். களிமண்ணினால் செய்த இந்த மட்பாண்டங்களை சூளையில் தலைகீழாகப் புரட்டிச் சுடும்போது நெருப்புப் படும் இடங்கள் கறுப்பாகவும், காற்றுப் படும் மேற்பகுதி (பாத்திரத்தின் அடிப்பகுதி) உயிரகக்காற்றின் இணைவினால் (Oxidation) சிவப்பு நிறமாகவும் மாறுகிறது என்றும் விளக்கமளித்தார் (Wheeler, 1947). இக் கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் ஒரு காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டம் எங்கும் பரவி, பின்னர் திராவிட மக்களின் பெருங்கற் பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாகவும் விளங்கி வந்திருக்கிறது.


கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடு: லோதால், சோம்நாத் (குஜராத்).

ஆதிச்சநல்லூர்: கறுப்பு-சிவப்பு மட்பாண்டம். நன்றி: T.S. Subramanian

கந்தரோடை: கறுப்பு-சிவப்பு மட்கல ஓடுகள். நன்றி: ப. புஷ்பரட்ணம்

திஸ்ஸமகாராம (ஹம்பாந்தோட்டை மாவட்டம்): கறுப்பு-சிவப்பு மட்கல ஓடு. நன்றி: H. Wittersheim.
கறுப்பு-சிவப்பு மட்கலன்களின் தோற்றுவிப்பாளர்கள் குறித்து 1954 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் கரத்தரங்கு ஒன்றில் ஒரு விவாதம் நடைபெற்றது. சுப்பாராவ், சங்காலியா, வீலர் ஆகியவர்கள் இதுபற்றி ஆராய்ந்தார்கள். அக்காலகட்டத்தில் கதிரியக்ககரிம தேதிக் கணிப்புகள் எதுவும் இந்தியாவில் நடைபெறவில்லை.
வெவ்வேறு ஆய்வாளர்கள் கறுப்பு-சிவப்பு மட்கலன்கள் குறிப்பிட்ட சில இனக்குழுக்களின் பண்பாட்டு உடைமைகளாகக் கருதினார்கள். சங்காலியா (1963), திக்ஷிற் (1969), அக்ரவால் (1966) ஆகியோர் இப்பாண்டங்களின் கர்த்தாக்கள் ஆரியர்கள் எனக் கூறினார்கள். சுப்பாராவ் (1962), சௌந்தரராஜன் (1962), சம்பகலக்ஸ்மி (1975) ஆகியோர் கறுப்பு-சிவப்பு மட்கலன்களின் தோற்றுவிப்பாளர்கள் திராவிட மக்கள் என வாதிட்டார்கள் (Kumar, V. 2019).
சமீபகால மரபணுவியல் ஆய்வுகள் கி.மு. 1800 ஆம் ஆண்டுப் பகுதியில்தான் முதன்முதலாக இந்தோ-ஆரியர்கள் இந்தியாவுக்கு வர ஆரம்பித்ததாகவும், கி.மு. 1600 – 1500 ஆண்டுகளில்தான் பெருந்திரளான இடப்பெயர்வு நிகழ்ந்து இனக்கலப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகின்றன (Narasimhan et al. 2019; Moorjani et al. 2013). (இந்தோ-ஆரிய இடப்பெயர்வு ஓர் ஆண்வர்க்க இடப்பெயர்வு. ‘ஆசியப்-புல்வெளிப்-பெண்கள்’ அவர்களோடு வந்ததை மரபணுவியல் ஆய்வுகள் காட்டவில்லை). எனவே, கி.மு. 3000 – 2800 ஆண்டுக் காலத்தில் – இந்தியாவிற்குள் ஆரியர்கள் நுழையாத காலகட்டத்தில் – குஜராத்தில் ஆரம்பமான கறுப்பு-சிவப்பு மட்பாண்டத்தின் கர்த்தாக்கள் ஆரியர்களாக இருக்க முடியாது.
மத்திய கங்கைச் சமவெளி அகழ்வுகளில் அடி ஆழத்தில் கிடைப்பது கறுப்பு-சிவப்பு மட்பாண்டம். அதற்கு மேலுள்ள படுக்கையில் கிடைப்பது ஆரம்பகால வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டம். அதற்கும் மேலுள்ள அடுக்கியற் படுக்கையில் கிடைப்பது மெருகேற்றப்பட்ட வடக்கத்தைய கறுப்பு மட்பாண்டம்.
இந்தோ-ஆரிய மக்கள் முக்கியமாக இருவகை மட்பாண்டங்களை அறிமுகப்படுத்தினார்கள். கி.மு. 1600 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் ஆரம்ப வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டங்கள் (Early Painted Grey Ware) தயாரிக்கப்பட்டன. தொடர்ந்து கி.மு. 1100ற்கும் கி.மு. 500ற்கும் இடைப்பட்ட காலத்தில் சிறப்பாக, நேர்த்தியாக, பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட பிற்கால வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டங்கள் உபயோகத்திற்கு வந்தன.
கி.மு. 700 ஆம் ஆண்டளவில் ஆரம்பகால வடக்கத்தைய மெருகேற்றப்பட்ட கறுப்பு மட்பாண்டம் (Early Northern Black Polished Ware) உபயோகத்திற்கு வந்தது. இதன் அறிமுகத்தோடு சிறிது சிறிதாக சாம்பல் நிற மட்பாண்டங்கள் உபயோகமிழந்து போயின. கி.மு. 200 ஆம் ஆண்டுக்காலத்தில் பிற்கால வடக்கத்தைய மெருகேற்றப்பட்ட கறுப்பு மட்பாண்டங்கள் புழக்கத்திற்கு வந்தன. பொது யுகத்தின் பின்னர் இதன் பாவனையும் சிறிது சிறிதாக அற்றுப் போனது (Anand, S.S. 2017).
இந்தியாவின் மட்பாண்டங்கள் பரவிய முறையிலும், அவற்றின் தொடர் வரிசையிலும் நமக்குச் சில தடயங்கள் கிடைக்கின்றன. ஹரப்பா பண்பாட்டில் மேலதிகமானவை செந்நிற மட்பாண்டங்கள் என்றால் அதன் தொடர்ச்சி கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள்தாம். பிற்கால ஹரப்பா பண்பாட்டிலும், அதன் முடிவிற்குப் பின் குஜராத், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் நிலவிய பண்பாடுகளிலும் இத்தொடர்ச்சியைக் காண முடிகிறது. கத்தியவாரில் தொடங்கி நர்மதை நதிக்கரையை ஒட்டிப்பயணித்த இப்பரவல் கிழக்குக் கங்கைச் சமவெளி வரை மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. கறுப்பு-சிவப்புப் பாண்டம் ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளிலும் பரவியுள்ளது. இப்பகுதிகளில் சாம்பல் வண்ணம் தீட்டிய பாண்டம் பயன்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கறுப்பு-சிவப்பு பாண்டத்திலிருந்து இப்பகுதிகள் நேரடியாக மெருகூட்டப்பட்ட வடக்குக் கரும்பாண்ட வகைக்கு நகர்ந்து விடுகின்றன (பாலகிருஷ்ணன், 2003: 323-324). இதன் பொருள்: ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளுக்கு – சற்றுப் பிற்காலத்தில் – மெருகூட்டப்பட்ட வடக்குக் கரும்பாண்டங்கள் உபயோகத்திற்கு வந்த காலமே ஆரியர்கள் புலம்பெயர்ந்த காலத்தைக் காட்டுகிறது.
தொல்லியல் ஆய்வுகள் காட்டும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டுக்கு முற்பட்ட இந்திய நாடளாவிய பரவலும், கதிரியக்கக்கரிம ஆய்வுகள் தரும் காலநிரல் வரிசையும் இந்தோ-ஆரியரின் வருகைக்கு முற்பட்ட திராவிட இந்தியாவின் முத்திரைப் பாண்டம் இதுவே என்பதைத் தெளிவாகக் காட்டி நிற்கிறது.
பல வட இந்திய மையங்களில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களுடன் வடக்கத்திய சாம்பல்நிற மட்பாண்டங்களும், சில சமயங்களில் மெருகேற்றப்பட்ட கறுப்பு மட்பாண்டங்களும் காணப்படுகின்றன. “சாம்பல் வண்ணம் தீட்டிய மட்பாண்டப் பண்பாடும், கறுப்பு-சிவப்புப் பண்பாடும் சந்தித்துக்கொண்ட போது மிகவும் பயனுள்ள பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன” என ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். இது உள்ளூர் திராவிட மொழி பேசும் மக்களும், புதிதாக வந்த ஆரிய மக்களும் சந்தித்துக்கொண்ட பண்பாட்டுப் பரிமாறல்களின் ஒரு சின்னமாகும் எனவும் குறிப்பிடுகிறார் (Thapar, R. 1983: 13).
செக்கோசிலோவாக்கிய நாடு தந்த சமஸ்கிருத, தமிழ் மொழிகளின் மொழியியல் விற்பன்னர் கமில் ஸ்வெலபில்லின் கூற்று இது:
“கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் திராவிட மொழி பேசும் மக்கள் காவிச்சென்ற பண்பாட்டு அடையாளம். அதன் அகில இந்தியப் பரவல், இவர்கள் ஒருகாலத்தில் இந்தியா முழுவதிலும் பரவி இருந்தார்கள் என்பதற்கான சான்று. கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும், வேதகாலப் பண்பாட்டின் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்களும் ஒன்றாகக் காணப்படும் கி.மு. 500 ஆம் ஆண்டுக்காலப் பகுதி பெருவாரியான திராவிட மொழிச் சொற்கள் சமஸ்கிருத மொழியில் உட்புகுந்த காலமாகும்.” (Kamil Zvelebil 1965: 65-69).
தென்னிந்தியா – இலங்கையில் கறுப்பு-சிவப்பு மட்கலன்களின் பரவல்
கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட இரண்டாயிரத்தாம் ஆண்டுக்காலத்தின் பிற்பகுதியில் பெருங்கற் பண்பாடு தென்னிந்தியாவெங்கும் பரந்து பரவி, இலங்கையில் பொங்கி வழிந்து பரம்பியபோது அதனுடைய முக்கிய அங்கங்களில் ஒன்றாக விளங்கியது கறுப்பு-சிவப்பு மட்பாண்டம். சமீபகாலங்களில் கிடைத்த கதிரியக்கக்கரிம தேதிக் கணிப்புகளின்படி கர்நாடகத்தில் ஹல்லூர், குமரனகல்லி, தடஹனகல்லி ஆகிய மையங்களில் இப்பெருங்கற் பண்பாடு கி.மு. 1900 – 1500 ஆண்டுக்காலத்தில் ஆரம்பமானதாக அறிய முடிகிறது (Possehl & Guntupalli, 1999).
ஒரு காலகட்டத்தில் பெருங்கற் பண்பாடு மகாராஷ்டிரத்தில் ஆரம்பமாகியிருக்கலாம் என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரத்தில் காணப்படும் பெருங்கற் சின்னங்களின் கதிரியக்கக் கரிம வயதுகள் கி.மு. 1000 – 800 ஆண்டுகளுக்கு மேல் காட்டாமையால் இப்பண்பாடு தென்னாசியாவில் கர்நாடகத்தில் உதயமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆயினும் இப்பண்பாட்டின் முக்கிய அங்கங்களான நீர்ப்பாசன விவசாய நடவடிக்கைகளும், கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகமும் ஹரப்பா நாகரிகத்திலிருந்து மகாராஷ்டிரம் (வடமேற்குத் தெக்கணம்) வழியாகவே தென்னிந்தியாவை வந்தடைந்தன.
சில சிந்துவெளி நகரங்களில் பாவனையிலிருந்த கறுப்பு-சிவப்பு மட்கலன்கள் கிழக்கே கங்கைச் சமவெளிக்கும், மேற்கு மலைத்தொடர் வழியாக மகாராஷ்டிரத்திற்கும் கர்நாடகத்திற்கும் பரவியிருக்கிறது. பேராசிரியர் ரொமிலா தாப்பர் கூறியது: “இந்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் பரப்பீடு நர்மதா நதியின் தெற்கே தெக்கண மேட்டு நிலத்தில் ஆரம்பமாகி தெற்கு நோக்கி இன்றைய மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு எங்கும் பரவியுள்ளது.” (“The distribution of the BRW begins in the Deccan Plateau south of the Narmatha River, and southwards through the modern states of Maharashtra, Karnataka, Andhra Pradesh and Tamil Nadu”).
மத்திய கங்கைத் தாழ்நிலத்தில் காணப்படும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் அலகாபாத்திலிருந்து மேற்கு வங்காளம் வரை பரந்திருப்பதைக் காண முடிகிறது. இதன் முக்கிய மையங்களாக கௌசாம்பி, ராஜ்காத், ராஜ நல்கதிலா, வங்காளத்தின் பாண்டு-ராஜர்-தீபா ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம் (Thapar, Romila 1984: 37). கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் காணப்பட்ட போதிலும் இந்த வட இந்திய மையங்களை பெருங்கல் புதையல் பண்பாடு சென்று அடையவில்லை.
பல வட இந்திய மையங்களின் அகழ்வாய்வுகளில் வட இந்திய பளபளப்பான கறுப்பு (NBPW) மட்பாண்டங்களின் கீழே வண்ணம் பூசப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்களும் (Painted Grey Ware), அதனடியில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தப்திப் பள்ளத்தாக்கில் பிரகாஷா என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வுகளில், மேற்படைகளில் பளபளப்பான கறுப்பு மட்பாண்டங்களும், 4 மீட்டர் ஆழத்திலே கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டன (Thapar B.K. et al. 1964-65).
தமிழகத்தில் இம்மட்பாண்டங்களின் பரவல் பெருங்கற் சின்னங்களின் பரவலோடு தெற்குக் கர்நாடகத்திலிருந்து இடம்பெற்றது. தர்மபுரி, வட ஆர்க்காடு மாவட்டங்களில் காணப்படும் ஈமப்புதையல்கள் கர்நாடகத்தின் புதையல் தொகுதியின் நீட்சி ஆகும். இந்த மையங்கள் மேல் காவேரி நதியின் கரைகளுக்குச் சமீபமான மையங்கள். இங்கே காணப்படும் பெருங்கற் புதையல்களில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் கட்டாயமான துணைப் புதையல்களாகும். இப்பண்பாடு காவேரி, பொன்னியாறு, பாலாறு, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகளின் வடிநிலங்களின் செழிப்பான சமவெளிகளில் வேரூன்றியது (Rajan, K. 1991: 37-46).
தமிழ் நாட்டிலிருந்தே இப்பண்பாடு இலங்கையை வந்தடைந்தது. பூகோள ரீதியினாலான அண்மை, பொருளாதார வலயங்களுக்கிடையிலான ஒற்றுமை, பொதுவான புதையல் மற்றும் மட்பாண்ட மரபுகள், பொதுவான ஈமப்புதையல் பண்பாடுகள் என்பன தென்னிந்திய பெருருங்கல் நினைவுச் சின்னங்களுக்கும் இலங்கையின் பெருங்கற் சின்னங்களுக்கும் இடையிலான பொது மரபு கொண்ட ஓரினத்தன்மையை (Homogeneity) எடுத்துக்காட்டுகின்றன (Seneviratne, S. 1985: 59).
இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடைக்கற்காலத்திலிருந்தே தொடர்ந்துவரும் பண்பாட்டு-தொழில்நுட்பத் தொடர்புகள் (நுண்கல் மற்றும் கல்லாயுதங்களின் செய்முறை ஒற்றுமைகள்), பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலங்கள் ஈறாகத் தொடர்ந்து வந்திருக்கின்றன. வைகை, தாமிரபரணி நதிக் கரையோரம் குடியிருந்த இரும்பு உபயோகித்த மக்கள் பாக்கு நீரிணையில் கடற் செல்வங்களான மீன், முத்து, ஈரிதழ்சிற்பி, சங்கு, பவளப்பாறை என்பவற்றை எடுக்க வந்தபோது இரு கடற்கரைச் சமூகங்களுக்குமிடையிலான பின்னிய செயலாக்கம் (Interaction) வலுப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களின் இடப்பெயர்வு வடமேற்கு இலங்கைக்கும் தமிழகத்திற்குமிடையே தொடர்ந்தது.
இற்றைக்கு கி.பி. 200 ஆம் ஆண்டளவில், 1800 ஆண்டுகளுக்கு முன்னர், தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் பொது மக்களிடையே மதிப்பிழந்து அதன் தயாரிப்பும் நிறுத்தப்பட்டது. தென்னாசியாவில் ஹரப்பாவிலிருந்து (கி.மு. 2400) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமகாராமை வரை (கி.பி. 200) 2200 ஆண்டுகள் நெடுங்கால வழக்கிலிருந்த இம்மட்பாண்ட உபயோகம் நின்றுபோனது. அதற்குப் பதிலாக வேறுவகையான பல மட்பாண்டங்கள் பிரபலமாயின.
இலங்கையில் கந்தரோடையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் கி.மு. 1000 ஆண்டுக் காலத்திலிருந்து மக்களிடையே பிரபலமாக விளங்கியிருக்கிறது. கந்தரோடையில் கண்டெடுத்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் ஆரம்பகாலம் கி.மு. 1350 ஆம் ஆண்டுக்காலம் என்பதை கதிரியக்கக் கரிம ஆய்வுகள் எடுத்துக்காட்டியிருப்பதை ஏற்கனவே பார்த்தோம். நமக்கு ஏற்கனவே பரிச்சயமான பிரித்தானிய டர்ஹாம் பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர் ரொபின் கொனிங்ஹாம் இலங்கையில் பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் காணப்படும் இடங்களை ஐந்து வலயங்களாகப் பிரித்திருக்கிறார் (Coningham, R. 1999).

இலங்கையில் ஐந்து வலயங்களாக அமைந்த பெருங்கற் பண்பாட்டு கறுப்பு-சிவப்பு மட்பாண்ட மையங்கள். Image Source: Dr Robin Coningham, 1999.
(1) வட இலங்கை வலயம்: யாழ்ப்பாணத் தொகுதி
கடந்த அரை நூற்றாண்டுகளாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் தனியான ஒரு தொகுதியாக அமைகின்றன. இம்மட்பாண்டங்கள் மிக அதிகமாகக் காணப்பட்ட மிகப் பழமையான மையம் கந்தரோடை ஆகும். இவ்விடத்தில் கி.மு. 1350 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 200 ஆம் ஆண்டு வரையான கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. கந்தரோடையைத் தவிர கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் காணப்பட்ட இரு தாழிப்புதையல் மையங்களும், நீளக்கிடத்திப் புதையல் செய்த இரு மையங்களும், ஒரு கல்லறைப் புதையல் மையமும் அகழ்வுகளில் காணப்பட்டமை ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இவை தவிர அதிகமான குடியிருப்பு மையங்களில் கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
தாழிப்புதையலும், நீளக்கிடக்தி அடக்கம் செய்யப்பட்ட குழிகளும் காணப்பட்ட இடம் ஆனைக்கோட்டை. இப் புதைகுழிகளில் கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகளும், இரும்புப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கலாநிதி இரகுபதி சந்திராந்தை (காரைநகர்), கும்புருப்பிட்டி, சாட்டி (வேலணை), கொட்டுப்பனிவு (மண்ணித்தலை) ஆகிய மையங்களில் புதையல்களோடு கறுப்பு-சிவப்பு மட்கலன்கள் கண்டெடுக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார் (Ragupathy, P. 1987: 57-78).
1972 ஆம் ஆண்டில் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்குச் சமீபமாக இருந்த ஒரு மண்மேட்டை அகழ்ந்தபோது பெரிய கல்மேசையினால் மூடப்பட்டு, கற்களினால் சுவரமைக்கப்பட்ட ஒரு புதைகுழியும் அதனுள்ளே எலும்புகளைக் கொண்ட ஒரு தாழியும் (Urn in a Cist) காணப்பட்டது. இப்பெருங்கற் பண்பாட்டுப் புதையலில் கார்ணிலியன் மற்றும் மதிப்புமிக்க கற்கள், கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், குடுவைகள், இரும்பு ஆணிகள், நாணயங்கள் என்பன காணப்பட்டன (இந்திரபாலா, கா. 1973, Ragupathy, P. 1987: 83).
வன்னிப் பகுதியில் மண்ணித்தலை, கல்முனை, வெட்டுக்காடு, பள்ளிக்குடா, பல்லவராயன், ஈழவூர், கட்டுக்கரை, சாட்டி, மற்றும் பல மையங்களின் அகழ்வாய்வுகளிலும், மேலாய்வுகளிலும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் காணப்பட்டதை தொல்லியல் அறிக்கைகளில் கலாநிதி புஷ்பரட்ணம் கூறியுள்ளார் (புஷ்பரட்ணம், ப. 1987: 83., 2017: 35-37).
(2) அநுராதபுரத் தொகுதி
அநுராதபுர மாவட்டத்தில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற் பண்பாட்டு மையம் குருகல்ஹின்ன என்ற இடமாகும். வடமத்திய மாகாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த ஆர்.டபிள்யூ. லீவேர்ஸ் 1889 ஆம் ஆண்டில் இவ்விடத்தில் இரு பெருங்கற் கல்லறைகளைக் (Cist Burials) கண்டுபிடித்தார். அதன் பின்னர் 75 ஆண்டுகள் சென்றபின்னர் இந்த மையத்தில் இரு கல்லறைகள் அகழ்ந்து திறக்கப்பட்டன (Godakumbura, 1967: 105). இந்த அகழ்வாய்வின் அறிக்கை வெளியிடப்படவில்லை.
அநுராதபரத்தின் பழைய நகரத்தின் அகழ்வுகளின் போது அதன் ஆரம்பகாலக் குடியிருப்புகள் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டைக் காட்டியுள்ளன. அங்கு காணப்பட்ட ஆதி இரும்புக்காலம் கி.மு. 800 – 450 ஆண்டுக்காலத்தைக் காட்டியுள்ளது. இக்காலப் பகுதியில் மெருகேற்றப்பட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், கீறல் எழுத்துப் பொறித்த கலவோடுகள், இரும்புக் கசடுகள், கால்நடை எலும்புகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன (Coningham & Allchin, 1995: 159-169).
இபன்கட்டுவ பெருங்கற் புதையல்கள் குருநாகல்-தம்புல்ல வீதியில் தம்புல்ல நகரிலிருந்து தென்கிழக்காக 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இப்புதையல்கள் 1970 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினரால் கண்டுபிக்கப்பட்டு, 1988 – 1991 ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்யப்பட்டது. இப்புதையல்களில் கண்ட ஈமப்பொருட்களில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் மற்றும் பலவகையான களிமண் கலன்கள், இரும்பு, செம்பு, தங்கத்தினாலான கலைப் பொருட்கள், மணிகள், இரத்தினக் மணிக்கற்கள், கழுத்தணிகள் என்பன கண்டெடுக்கப்பட்டன. இப்புதையல்களின் கதிரியக்கக்கரிம ஆய்வுகள் கி.மு. 700 ஆம் ஆண்டுக்காலத்திற்கு எடுத்துச் செல்கின்றன (Karunaratne, P.P. 2010; Sunday Observer, 6/10/2013).
நீண்டகாலமாக மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்ட ஈமப் புதையல்கள் பொம்பரிப்பில் காணப்பட்ட 8,000ற்கும் மேற்பட்ட தாழிப் புதையல்களாகும். இவற்றோடு பலவகையான கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும் காணப்படுகின்றன. இங்கே காணப்படும் இரும்புக்காலம் கி.மு. 1200 – 1000 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த ஈமப் புதையல்கள் காணப்படும் பிரதேசம் வில்பத்து வனவிலங்கு சரணாலயமாகும் (Begley,V. 1981; Seneviratne, S. 1984). இச் சரணாலயத்தினுள் காணப்படும் ஆதி இரும்புக்கால மையங்களான தெக்கம், அலுத்பொம்புவ, கரம்பன்குளம் ஆகிய மையங்கள் இதுவரை அகழ்வாய்வு செய்யப்படவில்லை.
மாந்தையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இரும்பு, கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் மிக ஆதியான காலப் பகுதிகளிலிருந்தே இவ்விடத்தில் காணப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. மாந்தையில் காணப்படும் இரும்பின் தொழில்நுட்பம் தமிழகத்தின் கொற்கையிலிருந்து பரவிவந்ததாகக் கருதப்படுகிறது. இலங்கையில் இரும்பின் உபயோகம் கி.மு. 1380 ஆம் ஆண்டளவில் ஆரம்பமானதாக ஆய்வாளர் ஸெரான் தெரனியகல கூறியுள்ளார் (Deraniyagala, S.U. 213: 511). இந்த உலோகத்தின் தொழில்நுட்பம் மாந்தை வழியாக வந்திருப்பின் அக்காலகட்டத்தில் இதன் உபயோகம் மாந்தையிலும், அருகாமையிலுள்ள மற்றைய ஆதிக்குடியேற்ற மையங்களுக்கும் பரவியிருக்கும்.
(3) கிழக்கு இலங்கைத் தொகுதி
கிழக்கு இலங்கையின் ஈமப்புதையல்கள், அதிகமான கல்லறைப் புதையல்களைக் (Cist Burials) கொண்டிருக்கின்றன. பெரும்பாலான கல்லறைகள் யன்ஓயா நதிக் கரைகளிலே காணப்படுகின்றன. இவை இலங்கையின் வடமத்திய பகுதிகளிலிருந்து வட-கிழக்கு கடற்கரை வரை தொடர்ந்து காணப்படுகின்றன (Seneviratne, S. 1984: 283).
ஆரம்ப இரும்புக்காலப் புதையல்கள் யன்ஓயாவின் கழிமுகப் பகுதிகளிலும், அதிகமான புதையல்கள் இந்நதியின் மத்திய பகுதிக் கரைகளிலும் காணப்படுகின்றன. இதிலிருந்து இப்பண்பாடு கடல் வழியாகவே இப்பிரதேசத்தை வந்தடைந்திருக்கிறது என்பதை ஊகிக்கலாம். பெருவாரியான கல்லறைப் புதையல்கள் தமென்ன-கொடெல்ல, குருங்கல்ஹின்ன, வடிகவேவா, கொக்கெபெ, திவுல்வேவா, றொபேவா ஆகிய இடங்களிலே காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைத்து ‘யன்ஓயா கூட்டுத்தெகுதி’ (Yan-Oya Complex) என அழைக்கப்படுகிறது (Seneviratne, S. 1984: 283).
இக் கற்புதையல்கள் மிக ஆழமாக முழுவதும் நிலத்தில் புதைக்கப்பட்டும், ஒரு பகுதி புதைக்கப்பட்டு மிகுதி நிலத்திற்கு மேல் தெரியும்படி அமைக்கப்பட்டும் அல்லது கற்கள் முழுவதுமே நிலத்தின் மேலும் அமைக்கப்பட்டும் உள்ளன. இக் கல்லறையைச் சுற்றிவர கல்வட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஈமப்படையல்களில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், மணிகள், இரும்புப் பொருட்கள் என்பன காணப்படுகின்றன (Seneviratne, S. 1984: 283).

நிலத்தினுள்ளே புதைக்கப்பட்ட கல்லறை – Fully buried Cist with cover Stone.

நிலத்தின்மேல் அமைக்கப்பட்ட கல்லறை – Fully exposed overground Cist.
தமிழ்நாட்டில் பிந்நாளில் சோழநாடு என அழைக்கப்பட்ட பிராந்தியத்தில் கல்லறைப் புதையல்கள் முக்கியமான ஈமச்சின்னங்களாகக் காணப்படுகின்றன. இப்பிராந்தியத்திலிருந்தே, முக்கியமாகக் காவேரிநதிக் கழிநிலப் பகுதிகளிலிருந்தே, இப்பண்பாடு வட-கிழக்கிலங்கையை வந்தடைந்திருக்கிறது. ஆரம்ப இரும்புக்காலம் முழுமையும் இப்பண்பாட்டுப் பெயர்ச்சி இயற்கையாக நடைபெற்ற ஒரு நிகழ்வாகும் (The flow of influence from this area, particularly from the Kaveri delta, to the North-east of Sri Lanka is a natural process that continued throughout the Early Iron Age) (Seneviratne, S. 1984: 283).
(4) மேற்கு இலங்கைத் தொகுதி
தென்மேற்கு இலங்கையில் இரும்புக்கால பெருங்கற் புதையல்கள் அருகியே காணப்படுகின்றன. கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் களனி ஆற்றங்கரையோர மையங்களிலும், கித்துல்கல, இரத்தினபுரி ஆகிய இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கல்அத்தற என்ற இடத்தில் ஒரு கல்லறைப் புதையலும், மக்கேவித்த என்ற இடத்தில் பெருங்கல் பரல் உயர்ப்பதுக்கையும் அறியப்பட்டிருக்கின்றன (Deraniyagala, 1992).
இந்த நிலமைக்கு மாறாக அத்தனகல என்ற இடத்தில் காணப்படும் குகைகளான அலுலென, பெலினென, பாதாதொம்பலென, பாகியன்லென ஆகிய குகைகள் அகழ்வாய்வு செய்யப்பட்டு அவற்றில் கண்டெடுத்த தொல்பொருட்கள் முறையாக கதிரியக்கக் கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்னளன. இப்பொருட்கள் இலங்கையின் ஆரம்பகால நவீன மனிதரின் (Homo Sapiens Sapiens) குடியிருப்புகளைக் காட்டியுள்ளன. இவற்றில் காணப்பட்ட மனித எலும்புகளின் காலம் கி.மு. 28,000 ஆண்டுக் காலத்தையும், கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் ஆரம்பகாலம் கி.மு. 1000 – 800 ஆம் ஆண்டுக் காலத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது (Kennedy & Deraniyagala 1989; Deraniyagala, S.U. 1992).

இலங்கையில் பாதாதொம்பலென குகை.
(5) தெற்கு இலங்கைத் தொகுதி
தென் இலங்கையில் கிரிந்தி ஓயா, கும்பக்கன் ஓயா ஆகிய நதிக் கழிமுக மையங்களிலும், லெவ கங்கைத் தீரமான ரிடியகமவிலும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 1996 ஆம் ஆண்டில் தொல்லியலாளர் ஒஸ்மண்ட் போப்பியராய்ச்சியும் சகாக்களும் இப்பிரதேசத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் பெருந்தொகையான கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். (“We are able to collect not only at Ridiyagama, but also along the Welawa Ganga, large quantities of early Black and Red Ware, some of which were engraved with early megalithic symbols”)(Bopearachchi & Wickremasinghe 1999: 7).

தென் இலங்கை திஸ்ஸமகாராமையில் கண்ட பிராமி எழுத்துப் பதித்த கலவோடு. நன்றி: ஒஸ்மண்ட் போபியாராய்ச்சி.
தென் இலங்கையின் ஆரம்பகாலத் தலைநகரமான உருகுணை இக்கால நகரமான திஸ்ஸமகாராமை என இனம் காணப்பட்டுள்ளது. இந்த மையத்தில் காணப்படும் 6 மீட்டர் உயரமான மேடும் அதைச் சுற்றிவர உள்ள நான்கு பௌத்த துறவிமடங்களும் (Monasteries) கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக அகழாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இந்த மையங்களில் காணப்படும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், ரௌலெற்றெட் கலன்கள், கலவோடுகளில் காணப்படும் பிராமி எழுத்துப் பதிவுகள், இரும்புப் பொருட்கள், இந்தோ உரோமானிய மற்றும் செம்பினாலான முத்திரை நாணயங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன (Allchin 1995: 172-173; Bopearachchi & Wickremasinghe 1999: 7).
மேற்கூறப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளும் அவற்றின் கண்டுபிடிப்புகளும், கி.மு. ஆயிரத்தாண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே பெருங்கற் பண்பாடும் அதன் முக்கிய அங்கங்களான கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகம், இரும்பின் உபயோகம், நீர்ப்பாசன விவசாயம், நெல் வளர்ப்பு என்பனவும் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்து இலங்கைத் தீவு முழுவதிலும் பரவலாக உபயோகத்திலிருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. தொல்லியல் அகழாய்வுகள் காட்டும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டத்தினதும், அதிற் காணப்படும் ஆரம்பகால எழுத்துப் பதிவுகளையும் கொண்ட பெருங்கற் பண்பாட்டின் வருகையினதும் காலம், இலங்கையின் நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப காலமாகக் கொள்ளப்பட வேண்டும்.
தொடரும்.



