புலம்பெயர் புலம்பல்கள்: யதார்த்தத்திற்கு வெகுதொலைவில்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
25 நிமிட வாசிப்பு

புலம்பெயர் புலம்பல்கள்: யதார்த்தத்திற்கு வெகுதொலைவில்

August 14, 2025 | Ezhuna

இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்டும்; அதுசார் வினாக்கள் எழுப்பப்பட வேண்டும். இலங்கையின் சமகாலம் குறித்த பெரும்பான்மையான எமது உரையாடல்கள் கவனம் குவிக்கத் தவறும் விடயங்களையும் அமைதியாகக் கடந்து செல்லும் களங்களையும் ‘சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள்’ எனும் இத்தொடர் பேசமுனைகிறது.

தொடக்கக் குறிப்புகள்

ஈழத்தமிழரின் புலப்பெயர்வுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. அது வெறுமனே போருடனோ, அல்லது இலங்கையின் இன முரண்பாட்டுடனோ மட்டும் தொடர்புடையதல்ல. பிரித்தானியக் கொலனித்துவ காலத்திலேயே இந்தப் புலப்பெயர்வு தொடங்கியது. முதலில் பிரித்தானியக் கொலனிகளில் பிரித்தானியரின் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக, ஆசிரியர்களாக, பொறியியலாளர்களாக, நிர்வாகிகளாக எனப் பலதரப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஈழத்தமிழர்கள் பிரித்தானியக் கொலனியெங்கும் புலம்பெயர்ந்தார்கள். இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர், பல நாடுகளில் பிரித்தானியக் கொலனியாதிக்கம் முடிவுக்கு  வரத்தொடங்கியது. இதைத் தொடர்ந்து பலர் நாடு திரும்பினர். சிலர் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கேயே வாழத்தொடங்கினர். இன்னும் சிலர் தாம் பணிபுரிந்த நாடுகளிலேயே வாழத் தலைப்பட்டனர். இலங்கையின் சுதந்திரத்தைத் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் ஈழத்தமிழர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள்  பணிக்காகவும் உயர்கல்விக்காகவும் சென்றவர்கள். இலங்கையில் கூர்மையடைந்த இன முரண்பாடும் அதைத் தொடர்ந்த வன்முறைகளும் இன்னும் பலரை இலங்கையில் இருந்து இடம்பெயர வைத்தது. அதில் 1983 இன் பங்கு பெரிது. அதைத் தொடர்ந்தே ஈழத்தமிழர்கள் மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். 

1990களில் அகதிகளாக இடம்பெயர்ந்தோரும் கல்வி, தொழில் போன்றவற்றுக்காக வந்தவர்களுக்கும் இடையே ஒரு கெடுபிடிப்போர் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. தாங்கள் அகதிகளாக வரவில்லை என்பதை ஒரு பெருமையாகவும் தகுதியாகவும் ஒரு பகுதியினர் நிலைநிறுத்தினர். இருந்தபோதும் இலங்கை நோக்கிய செயற்பாடுகளில் அனைவருமே ஈடுபட்டனர். இலங்கை நோக்கிய அபிவிருத்திசார் முயற்சிகள் 1970களிலேயே கொஞ்சம் பரவலடையத் தொடங்கிவிட்டன. சினோர் செயற்றிட்டம் இதில் முன்னோடியானது. 1980களின் நடுப்பகுதி முதல், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தத்தம் வாழ்விட நாடுகளில் அமைப்புகளை உருவாக்கி ஈழத்தமிழருக்கான அடையாளங்களை உருவாக்கவும் தக்கவைக்கவுமான முயற்சிகளை முன்னெடுத்தனர். 

இலங்கையின் முனைப்புற்ற இனப்பிரச்சினை போராகி, இடப்பெயர்வுகளாகி புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கையில் கணிசமான ஈழத்தமிழர்கள் மேற்குலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ‘பொருளாதார அகதிகள்’ என்ற வரையறைக்குள் அடங்குபவர்கள். இக்காலப்பகுதியில் தீவிரமடைந்த விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவும் விமர்சனங்களும் இந்தப் புலம்பெயர் சமூகங்களில் இருந்தும் வந்தன. விமர்சித்தமைக்காகக் கொலையுண்ட நிகழ்வுகளும் புலம்பெயர் ஈழத்தமிழரின் வரலாற்றின் சில கறுப்புப் பக்கங்கள் என்பதையும் நினைவூட்ட வேண்டியுள்ளது. 

2002 இல் நோர்வேயின் வசதிப்படுத்தலுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள், இலங்கை இனப்பிரச்சினை, சர்வதேசமயமாவதை உறுதிப்படுத்தின. தற்காலிக சமாதானமும் போர் நிறுத்தமும் புலம்பெயர்ந்தோரில் பலர் நீண்டகாலத்திற்குப் பிறகு நாடு திரும்புவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. அது பலருக்குத் தொடர்பறுந்து போயிருந்த உறவை மீட்க உதவியதோடு, அடுத்த தலைமுறைக்கு தமது ‘வீடு/ நாடு’ என்பதைக் கொண்டுசேர்க்க வழிசெய்தது. பேச்சுவார்த்தைகளின் தோல்வியும் அதைத் தொடர்ந்த போரும் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையானோரைத் துருவமடையச் செய்தது. இது இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வழியமைத்தது. ஆனால் மேற்குலகத் தலைநகரங்களில் குழுமிக் கோஷமிடுவதற்கு அப்பால் எதையும் செய்ய இயலவில்லை என்ற இயலாமை எழுப்பிய கேள்விகளும் போரின் அவல முடிவு ஏற்படுத்திய அதிர்ச்சியும் விடுதலைப் புலிகளின் முழுமையான அழிவும் இணைந்து புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் சிதைவுறலுக்குக் காரணமானது. 

அச்சிதைவிலிருந்து புலம்பெயர் தமிழ்ச்சமூகம் முழுமையாக மீண்டதாகச் சொல்லவியலாது. போரின் பின்னரான கடந்த 16 ஆண்டுகளில் புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்த தலைமுறை முன்னிலைக்கு வந்துள்ளது. அது ‘புலம்பெயர் ஈழத்தமிழர்’ என்பதற்கு இன்னொரு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது. இலங்கையில் வாழ்பவர்களுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான உறவு தொடர்ச்சியானதும் நெருக்கடிகளால் தீர்மானிக்கப்பட்டதாகவும், பல சந்தர்ப்பங்களில் ‘கொண்டோருக்கும் கொடுத்தோருக்கும்’ இடையிலான உறவாகவும் இருந்து வந்துள்ளது. ஒரு தரப்பு குறித்த மற்றைய தரப்பின் எதிர்பார்ப்பும், இரு தரப்பினரின் சிந்தனைகளின் ஒவ்வாமையும் சமூகப், பொருளாதார, அரசியல், பண்பாட்டு நெருக்கடிகளாக முகிழ்த்து பல்பரிமாணச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. 

இந்தப் பின்புலத்தில் இரு தரப்பினருக்குமிடையிலான உறவு குறித்த எண்ணப்பாங்குகளை மையப்படுத்தி கடந்த இரண்டு தசாப்த காலப்பகுதியில் வெவ்வேறு புலம்பெயர்ந்த நாடுகளில் வெவ்வேறு காலச் சூழல்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் சில வெளிப்பாடுகளை முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்த ஆய்வானது, நீண்டகால ஆய்வு முறையியலின் (Longitudinal Research Design) அடிப்படையில் பல்பண்பாட்டு ஆய்வுத்தளத்தை (Cross-cultural Research) மையப்படுத்தியது. இவ்வடிப்படையில் சேகரிக்கப்பட்ட தரவுகள் பல சுவையான, அதேவேளை பயனுள்ள நோக்குநிலைகளை வழங்குகின்றன. அதேவேளை இலங்கையில் வாழ்வோருக்கும் புலம்பெயர்வோருக்கும் இடையிலான அதிகரிக்கும் இடைவெளியின் பல்பரிமாணத் தோற்றத்தையும் வழங்குகின்றன. 

புலம்பெயர் சமூகங்களின் சீரும் சிதைவும்

தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து, புதிய குடியேற்ற இடங்களில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்கள், ஒரு புதிய சூழலில் தங்கள் வழியைக் கண்டறிய உதவும் சமூகங்களை உருவாக்க ஒன்றிணைகிறார்கள், அதே நேரத்தில் கடந்த காலத்தையும் அவர்கள் சந்தித்த இழப்புகளையும் ஏற்றுக்கொள்ளவும் உதவுகிறார்கள். இந்தச் சவாலான செயல்முறைகளில், கடந்த காலத்தின் மரபுகள் அவர்களைத் தொடர்ந்து வேட்டையாடுகின்றன, அவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும், அடுத்தடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. மோதலால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த சமூகங்கள் கடந்த காலத்தின் மரபுகள் மற்றும் நினைவுகளை அல்லது தொடர்ச்சியான வன்முறையை எவ்வாறு கையாள்கின்றன? வன்முறையான கடந்தகாலத்தின் இந்த மரபுகள் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைக்கின்றன மற்றும் புதிய சூழல்களில் ஒருங்கிணைப்புச் செயல்முறைகளை எவ்வாறு பாதிக்கின்றன? புதிய தலைமுறைகள் வயதுக்கு வரும்போது வன்முறையின் நினைவுகளுக்கு என்ன நடக்கும், அவர்கள் இந்த மரபுகளை எவ்வாறு கையாள்கிறார்கள்? இவை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குறித்த முக்கியமான கேள்விகள். 

வன்முறையின் அனுபவங்களை இலங்கையிலேயே தங்கியிருந்தவர்களும், வெளியேறிப் புலம்பெயர்ந்த சூழல்களில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியவர்களும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதில் வேறுபாடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. சமூக – பொருளாதார மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் வன்முறை இயக்கவியலின் தொடர்ச்சியான வெடிப்புகள் உட்பட, தாயகத்தில் பெரிய அளவிலான வன்முறையின் நீண்டகால விளைவுகளுடன் வாழ்வது, தாயகத்திற்கு வெளியே மோதல் எவ்வாறு அனுபவிக்கப்படுகிறது என்பதிலிருந்து மிகவும் வித்தியாசமானது. அதேநேரத்தில், தாயகத்தில் உள்ள அரசியல் சூழல் புலம்பெயர்ந்தோரில் நினைவாற்றல் கையாளப்படும் விதத்தை வலுவாக பாதிக்கிறது என்பதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. இதையொட்டி, தாயகத்தில் வன்முறையின் அரசியல் சூழல் மற்றும் மரபுகள் புதிய புலம்பெயர்ந்த சூழல்களில் ஒருங்கிணைப்பு மற்றும் நிலைப்படுத்தல் செயல்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் தாயகத்திற்கு வெளியே பிறந்த அல்லது சமூகமயமாக்கப்பட்ட தலைமுறைகளையும் பாதிக்கின்றன.

இது குறித்துக் கருத்துரைத்த சில புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் கருத்துகள் நோக்கற்பாலன: 

“2009 இன் தொடக்கத்தில் போர் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, ஈழத்தமிழருக்கு ஆதரவாக அனைவரையும் திரட்டும் வாய்ப்பிருந்தது. இது தலைமுறை தாண்டி ஈழத்தமிழரின் பிரச்சினையைக் கடத்துவதற்கான ஒரு நல்வாய்ப்பானது. ஆனால் அதைச் செய்ய நாம் எல்லோரும் தவறினோம். போரின் கோர முடிவின் பின்னரும் அதை நாம் செய்யவில்லை. வலியைக் கடத்துகிறோம் என்ற பெயரில் வெறும் கூச்சலிடும் கூட்டங்களையே உருவாக்கியிருக்கிறோம். இதிலிருந்து இன்றுவரை நாம் மீளவில்லை”. 

“போரின் முடிவானது, விடுதலைப் புலிகளின் முடிவு. அது ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் முடிவல்ல. விடுதலைப் புலிகள் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தை வழிநடாத்தினார்கள். அவர்களுக்கு முன்னரும் ஒரு வரலாறு உண்டு. போரின் பின்னரும் வரலாறு உண்டு. போரின் முடிவோடு வரலாறு நகராமல் நின்றுவிடாது. ஆனால் ஒற்றைப் பரிமாணத்தில் அனைத்தையும் நோக்குவதால் இன்னும் பேரழிவுகளை நோக்கியே நாம் நகர்கிறோம்.”

“புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தில் நிலவுகின்ற ஆழமான தீர்க்கமான பிளவுகள் அடுத்த தலைமுறைக்குச் சொல்லும் செய்தி என்ன. அப்பா தனது அரசியல் வெறுப்பை பிள்ளைகளுக்குத் திணிக்கிறார், தனது நிலைப்பாட்டையே பிள்ளைகளும் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். மாற்றுச் சிந்தனைக்கு வழிவிடாதோர் அதே தோரணையில் அடுத்த தலைமுறையினருக்கும் வழிகாட்டுகின்றனர்.” 

“முதலில நாங்கள் மாறோனும். கலியாண வீடெண்டா நான்தான் மாப்பிள்ள செத்தவீடென்டா நான்தான் பிணம் எண்டு நினைக்கும் வரைக்கும் ஒண்டும் செய்ய ஏலாது. பிள்ளையளை திறந்த மனதோட யோசிக்க விடோனும். ஈழம் வேணும் எண்டு கத்துற ஆக்களில பலபேர் ஈழம் கிடைச்சிருந்தாலும் இங்கேயிருந்து போயிருக்காயினம். தமிழரின்ட பண்பாடு, கலாசாரம் எண்டு அடம்பிடிக்கிற ஆக்களின்ட பிள்ளையள் தமிழே கதைக்காயினம். இதுதான் எங்கட வெக்கங்கெட்ட இலட்சணம்”.  

வன்முறையின் மரபுகள், நினைவுகள் மற்றும் புலம்பெயர் உருவாக்கச் செயல்முறைகளுக்கு இடையே ஒரு வலுவான இணைப்பு இங்கு நோக்கற்பாலது. போர்கள், வன்முறை மோதல்கள், இனப்படுகொலைகள் மற்றும் பிற அட்டூழியங்கள் போன்ற வடிவங்களில் கூட்டு வன்முறை என்பது புலம்பெயர் அணிதிரட்டல் நடைபெறும் ஒரு மையப் புள்ளியாகும். முக்கிய வன்முறை நிகழ்வுகள் அல்லது ‘தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ச்சிகள்’ மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பொது நினைவு நடைமுறைகள் எவ்வாறு புலம்பெயர் அணிதிரட்டலைத் தூண்டும் என்பதை புலம்பெயர் ஈழத்தமிழரின் கடந்தகால வரலாறு நிரூபித்துள்ளது. குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதற்கு அல்லது படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இடைக்கால நீதியின் சூழலில் புலம்பெயர் அணிதிரட்டல் உருவாகலாம். புலம்பெயர் சமூகங்களின் நாடுகடந்த நிறுவனம் நினைவு நடைமுறைகளின் சூழலில் வெளிப்படும். இந்த இயக்கவியல் கூட்டு அடையாள உருவாக்கம், உள்-புலம்பெயர் இயக்கவியல், புரவல சமூகத்துடனான உறவுகள், வெவ்வேறு தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் பிற அம்சங்கள் போன்ற புலம்பெயர் இருப்பின் பல பரிமாணங்கள் மற்றும் அம்சங்களுடன் செல்வாக்குச் செலுத்துகிறது. அதேவேளை இவையனைத்தும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்துள்ளது.

ஆரம்பத்தில் தொழிலாளர் இடம்பெயர்விலிருந்து தோன்றி பின்னர் அகதிகள் இடம்பெயர்வால் அது நிரப்பப்பட்டது. புலம்பெயர் சமூகங்களுக்குள், கிராமப்புற – நகர்ப்புற, சமூக – பொருளாதார, பிராந்திய மற்றும் சாதிய அடிப்படையிலான பிளவுகளுடன், ஆதிக்கம் செலுத்தும் அசைவியக்கங்கள் தீவிரமாக இன்னமும் செயலாற்றுகின்றன. ஆனால் அவை அரிதாகவே தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு இடப்பெயர்வு மற்றும் புலம்பெயர்வு ஆய்வுகளுக்குள் ஆராயப்படுகின்றன. 

தலைமுறைகளுக்கு இடையேயான பரவல் மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகள் தாங்கள் நேரடியாக அனுபவிக்காத வன்முறை அனுபவங்கள் மற்றும் நினைவுகளை எவ்வாறு கையாள்கின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இரண்டாம் தலைமுறையின் சிரமத்தின் முக்கிய அம்சம் இதுதான்: அது அனுபவத்தை அல்ல, மாறாக அதன் நிழல்களைப் பெற்றுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் சமூகங்களைப் பற்றிய ஆய்வு மற்றும் ‘பிந்தைய நினைவகம்’ என்ற கருத்து ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய யோசனையாகும். இந்தப் பரிமாற்றச் செயற்பாட்டில் உள்ள முக்கிய பதற்றங்களில் ஒன்று அதிர்ச்சிகரமான நினைவுகளை அமைதிப்படுத்துவது அல்லது அடக்குவது பற்றிய கேள்வியாகத் தெரிகிறது. மௌனமாக்குதல், கடந்தகாலத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பது மற்றும் தங்கள் குழந்தைகளுடன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது போன்ற பல்வகைப்பட்ட செயன்முறைகளை புலம்பெயர்ந்த பெற்றோர் முன்னெடுக்கிறார்கள். இருப்பினும், கடந்தகாலம் அமைதியாக இருக்கும்போது கூட, பரவுதல் நடைபெறுகிறது, ஆனால் மிகவும் மறைமுகமான, அமைதியான முறையில். அதிர்ச்சியின் மரபுகள் வாய்மொழி அல்லாத வடிவங்களில் பரவலாம்: உணர்ச்சிகள், உணர்வுகள், உடல்கள் (பச்சை குத்தல்கள் அல்லது வடுக்கள்) மற்றும் பழக்கமான, அன்றாடச் செயல்கள் இவற்றில் சில. இதற்குப் புலம்பெயர் ஈழத்தமிழ்ச்சமூகம் ஒரு நல்ல சான்றாகும். புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் இளையோர் இது குறித்துத் தெரிவித்த கருத்துகள் இதன் பன்முகத்தன்மையைப் பிரதிபலித்தன. 

“இலங்கை என்டாலே ஒரு பய உணர்வு எனக்கிருந்தது. 2009 இல நாங்க ரோட்டில கனநாள் நிண்டனாங்கள். இலங்கை மீது வெறுப்பு. சிங்கள ஆக்கள் என்றாலே கொடூரமானவர்கள் எண்டு தான் நினைச்சு இருந்தன். 2015 இல நண்பர்களோட இலங்கைக்குப் போனனான். விருப்பமில்லாமல் தான் போனனான். ஆனா திரும்பி வரேக்க ஒரே ஆச்சரியமும் குழப்பமும். எனக்கு எல்லாரும் சொன்னதுக்கும் நான் அங்க பார்த்ததிற்கும் நிறைய வித்தியாசம்.”

“ஸ்ரீலங்காவில எங்கட ஆக்களை சாக்கொண்டவை. அதால எனக்கு அங்க போகப் பிடிக்காது. தமிழீழம் தான் எங்கட நாடு. அம்மா, அப்பா அங்க இருந்துதான் வந்தவ. இப்ப எங்களுக்கு நாடு இல்ல. ஆனா நாங்கள் போராடுவம் நாட்டுக்கு. நாட்டுக்காகத்தானே நிறையப்பேர் செத்தவை”.

“நான் நோர்வேஜியன், தமிழன் இல்லை. அம்மா, அப்பா இலங்கையில இருந்து வந்தவ. அவை தமிழர். நான் இங்க பிறந்து வளர்ந்ததால நான் என்னை நோர்வேஜியனாகத்தான் பார்க்கிறன். எனக்கு இலங்கை தெரியாது. போகேயில்லை. நோர்வே தான் என்ர நாடு”. 

கட்டாய இடப்பெயர்வுக்கு முன்பு அல்லது அதன்போது அனுபவித்த வன்முறையை ஏற்றுக்கொள்வது, புதிய சூழல்களில் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுடன், இடம் உருவாக்குதல், சொந்தம் மற்றும் வீட்டைக் கண்டறிதல் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை உறுதி செய்தல் போன்ற செயல்முறைகளுடன் குறுக்கிடுகிறது என்பதில் புலம்பெயர் சமூகங்களிற்குத் தனித்தன்மையான பிரச்சினைகள் உள்ளன. பிரச்சினைக்குரிய மற்றும் அதிர்ச்சிகரமான நினைவுகளைச் சுற்றியுள்ள அமைதி பெரும்பாலும் புதிய சூழல்களில் குடியேறி ஒருங்கிணைக்க, ‘முன்னேறிச் செல்ல’ மற்றும் வலிமிகுந்த மற்றும் கடினமான கடந்த காலத்தை விட்டுச்செல்லும் விருப்பத்தால் இயக்கப்படுகிறது. குறிப்பாக, பல பங்களிப்புகள் முதல் தலைமுறை குழந்தைகளின் வெற்றிகரமான ஒருங்கிணைப்பைத் தடுக்காமல் இருக்கவும், தங்கள் குழந்தைகளுக்கு அதிர்ச்சி மற்றும் வலியைக் கடத்துவதன் மூலம் தங்கள் அனுபவங்களைச் சுமையாகக் காட்டாமல் இருக்கவும் எவ்வாறு முயற்சிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இதன் விளைவாக, அடுத்தடுத்த தலைமுறைகள் கடந்தகாலத்தின் விரிவான படத்துடன் அல்ல, மாறாக அவர்கள் தாங்களாகவே ஒன்றிணைக்க வேண்டிய துண்டுகள், நிழல்கள், துணுக்குகள் மற்றும் அறிவுத் துண்டுகளுடன் வளர்கின்றன.

சுவாரஸ்யமாக, வன்முறையின் கடந்தகால நினைவுகள், போருக்கு முந்தைய அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் நினைவுகள் (மோதல் அல்லது இனப்படுகொலை) ஏக்கத்துடனும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கலாம். உண்மையில், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் பலரின் எண்ணப்பதிவுகள் ஏக்கம் எவ்வாறு தனிநபர்களுக்கு வன்முறை நினைவுகளின் மறுபக்கமாக இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அழிவு, வலி மற்றும் துன்பம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் கதையாடலாக இருக்கும்போது, மக்கள் அமைதியான வாழ்க்கையின் படங்களுக்காக இன்னும் அதிகமாக ஏங்குகிறார்கள், மேலும் அவை ஏக்கக் கதைகள், சொந்தம் மற்றும் வீடு என்ற உணர்வை மீண்டும் பெறுவதற்கான ஒரு முக்கிய வழியாகின்றன. வன்முறையான கடந்தகாலத்தைக் கடந்து, மோதலின் எல்லைகளுக்கு அப்பால் சொந்தமானது என்பதற்கான மாற்று வெளிப்பாடுகளைக் கண்டறியும் ஒரு வழியாக, இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த தலைமுறையினரால் ஏக்கத்தை வெளிப்படுத்த முடியும்.

‘இரண்டாம் தலைமுறை’ என்ற சொல் பொதுவாக புலம்பெயர்ந்தோரின் சந்ததியினரைக் குறிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இந்தப் பரந்த வார்த்தையில் இருக்கும் பன்முகத்தன்மையை நாம் தவிர்த்துவிட முடியாது. இங்கே, தலைமுறை என்ற கருத்துக்கு நாம் கவனம் கொடுப்பது முக்கியமானது, இது அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்தில் போர் மற்றும் இடப்பெயர்ச்சியை அனுபவித்த இளைஞர்களைக் குறிக்கிறது, மேலும் அது அவர்களின் சொந்த நினைவுகளையும் கொண்டுள்ளது. அவர்கள் தங்கள் ஆரம்ப பாலர், இளமைக்காலத்தை தங்கள் சொந்த நாட்டில் கழித்தனர். ஆனால் போரின்  விளைவாக வேறொரு நாட்டில் சமூகமயமாக்கப்பட்டனர். எனவே அவர்களின் அனுபவங்கள் புதிய குடியிருப்புச் சூழல்களில் பிறந்த அல்லது தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்தவர்களிடமிருந்து வேறுபடுகின்றன. அவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட தலைமுறைகளுக்கு இடையேயான நிலை மற்றும் வன்முறை நினைவுகளுடன் ஒரு குறிப்பிட்ட உறவு உள்ளது. அவற்றில் சில அவர்களின் சொந்த நினைவுகள், அவற்றில் சில குறிப்பிடத்தக்க மற்றவர்களின் (பெற்றோர், உடன்பிறந்தவர்கள் முதலியன) நினைவுகள். இந்தப் புலம்பெயர்ந்த குழுவினர் குறித்து ஆய்வுகள் இதுவரை கவனம் செலுத்தவில்லை.  

அதேநேரத்தில், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு என்ன கடத்தப்படுகிறது என்பது மட்டுமல்ல, இந்த மரபை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் ஒரு கேள்வி. அவர்கள் பிறந்த நாடுகளில் நடந்த வன்முறையான கடந்தகாலம் அவர்களின் வாழ்க்கைக்கும், இங்கேயும் இப்போதும் பொருத்தமானதா? அது அவர்களின் அன்றாட யதார்த்தங்களிலும் போராட்டங்களிலும் ஒரு பங்கை வகிக்கிறதா? அவர்கள் தங்கள் தற்போதைய வாழ்க்கையின் சூழலில் அதை எவ்வாறு மாற்றியமைத்து மறுவடிவமைக்கிறார்கள்? போன்ற கேள்விகளை வரன்முறையாக புலம்பெயர் ஈழத்தமிழர் எழுப்பியுள்ளார்களா என்பதை ஆழமாகச் சிந்திப்பது பயனுள்ளது. 

பொதுவில், புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பொருளாதார ரீதியில் ‘வெற்றியாளர்களாக’ இருக்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்லவியலும். ஆனால் சமூகமாக பகுதியளவான வெற்றியைப் பெற்றிருக்கிறோமா என்பது கேள்விக்குரியது. அரசியல் ரீதியாக நிச்சயமாகத் தோல்வியடைந்த சமூகம் என்பதில் ஐயமில்லை. இந்தத் தோல்விக்கான காரணங்கள் பல. ஆனால் அதை ஆராய்வதற்கான முதற்படி, நாம் ‘அரசியல்ரீதியாகத்’ தோல்வியடைந்த சமூகம் என்பதை ஏற்றுக்கொள்வது. அதற்குக் காலமெடுக்கும். கெடுவாய்ப்பாய் அதை ஒரு சமூகமாக ஏற்றுக்கொள்ளாமல் திக்குத்திசை தெரியாக் காட்டில் என்னென்றைக்கும் அலையலாம். 

வீடும் நாடும்: தாயகத்திற்கான பதகளிப்பு

நம்மில் பலர் நமது வீடு (Home) அல்லது மூதாதையர் தாயகம் மூலம் வெளிப்படுத்தப்படும் அடையாளம் மற்றும் சொந்தம் என்ற உணர்வைக் கண்டறிய முயற்சி செய்கிறோம். ஆனால் இன்று, இந்தத் தொடர்பு நேரடியான அடையாளமாக இல்லை. வீடு என்பது தனித்த நாம் வாழும் வீடு என்ற பொருளில் அன்றி, நாம் வாழும் சூழல், வாழிடம், மக்கள் என்ற பரந்த பொருளில் இக்கட்டுரையில் விளங்கப்படுகிறது. சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள், சந்தேகத்திற்கு இடமின்றி எழுச்சி, அச்சுறுத்தல் மற்றும் மாற்றத்தின் நிலையில் உள்ள வீடு மற்றும் சொந்தம் என்ற உணர்வை வளர்த்துள்ளன. புலம்பெயர்ந்தோரில், வீடு அல்லது தாயகம் என்ற கருத்துகள், சொந்தமானது, அடையாளம் மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான தொடர்புகள் என்ற கருத்துகளுடன் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்தோரில், ‘நாடுகடந்த இணைப்புகள்’ என்பதானது, இயக்கம் மற்றும் தேக்கம் ஆகிய இரண்டுமே வீட்டின் அர்த்தத்தை வடிவமைக்கின்றன என்பதைக் காட்டுகிறது. எனவே, வீட்டை ஒரு நிலையான நிறுவனமாக அல்லாமல் ஒரு மாறும் செயல்முறையாகப் பார்க்கிறோம். இந்தப் பின்புலத்திலேயே அடையாளத்திற்கான சிக்கலான தேடல்களை ஆராய நேர்கிறது. ஒருவரால் புலம்பெயர்ந்து வாழும் வீட்டின் இருப்பிடத்தை வீடாக உணர முடிகிற அதேவேளை இந்த இடப்பெயர்வு ஏற்படுத்திய வீட்டில் இல்லாத உணர்வு ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெளிப்படுத்த முடியும். இதையே தற்போதைய முதலாம் தலைமுறைப் புலம்பெயர் ஈழத்தமிழரில் பலர் வெளிப்படுத்துகிறார்கள். வீடு மற்றும் வீட்டில் இல்லாத உணர்வு ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான இவ் இடைவினையைப் புரிந்துகொள்வது தவிர்க்கவியலாதது. ‘இங்கே’ என்பது ‘அங்கே’ என்பதை வரையறுக்கும் இணைப்புகளின் நிலையற்றதன்மையை வலியுறுத்த நேருகிறது. மேலும் வேறு தன்மை சொந்தமானதற்கான தேடலுடன் குறுக்கிடுகிறது. ‘விருந்தோம்பும் நிலம்’ அல்லது ‘விருந்தோம்பும் நாடு’ போன்ற சொற்கள் வீடு குறித்த ஒற்றைத்தன்மையான பார்வையைச் சிக்கலாக்குகின்றன. ஏனெனில் அவை ‘பல இணைந்து வாழும் வீடுகள்’ மற்றும் தொடர்ச்சியான மற்றும் இருதரப்பு இடப்பெயர்வுகளின் சாத்தியத்தை அழிக்கின்றன. புலம்பெயர்ந்தோரால் ‘விருந்தோம்பல்’ செய்ய முடியும், ஆனால் உண்மையிலேயே ‘வீட்டில்’ அல்ல என்பதையும் இது குறிக்கிறது.

“இது எங்கட இரவல் தேசந்தானே. அவங்கள் எங்கள வாழ விட்டிருக்கிறாங்கள். இதுதான் எல்லா நாட்டிலயும். சில நாடுகள் கொஞ்சம் பெருந்தன்மையோட நடக்குது, அதால நல்லா இருக்கிறம் அவ்வளவுதான்”.

“நாங்கள் அங்கிடுதத்திகள். இங்கையும் இல்லாம, அங்கயும் இல்லாம. இதுவும் எங்களுக்குரிய நாடல்ல, எங்கட நாடும் எங்களுக்குரியதல்ல. இங்க குடியுரிமை வைச்சிருக்கிறம். ஆனா நான் இலங்கையனா, ஈழத்தமிழனா தான் உணருறன்”.  

நமது வீடுகளின் உள்ளூர் மற்றும் தேசிய நினைவுகள் நாடுகடந்த சூழல்களுக்குள் இணைந்து வாழ்கின்றன. ஏக்கம், பெரும்பாலும் தற்போதைய யதார்த்தங்கள் மற்றும் தேவைகளுக்கு ஒரு தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரதிபலிப்பாகச் செயற்படுகிறது. ஏக்கம் என்பது இழந்த இடம் அல்லது கடந்தகாலத்தின் மேம்பட்ட பதிப்பைக் கற்பனை செய்வது மட்டுமல்லாமல், அருகில் இருப்பவற்றுடன் செயற்படுகிறது. இடப்பெயர்வு, நாடுகடத்தல் மற்றும் தாயகம் ஆகியவற்றின் கூட்டு நினைவகம் பெரும்பாலும் ஒரு வலுவான இன அடையாளத்தையும், திரும்புவதற்கான பகிரப்பட்ட கதையையுமே வளர்க்கிறது. இருப்பினும், சமூக உளவியலாளர் மார்க் ஸ்கல்லி, “புலம்பெயர்ந்த பாரம்பரியம் தானாகவே வழங்கப்படுவதில்லை அல்லது எப்போதும் நேரடியானது” என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். இந்த இணைப்புத் தொடர்ந்து புனரமைக்கப்பட வேண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும், புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அல்லாத தலைமுறையினருக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும். நன்கு வரையறுக்கப்பட்ட தாயகம் எப்போதும் புலம்பெயர் அனுபவத்திற்கு மையமாக இருக்காது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அனைத்துப் புலம்பெயர்ந்தோரும் திரும்புவதற்கு தெளிவான தாயகம் இல்லை. கூடுதலாக, இன – புலப்பெயர்ச்சி பண்புகளைப் பகிர்ந்து கொண்டாலும் அதற்கேற்ப அடையாளம் காணாதவர்கள் தானாகவே புலம்பெயர்ந்தோரின் ஒரு பகுதியாகக் கருதப்படவியலாது. வீடுகள் மற்றும் மூதாதையர் தாயகங்கள் பற்றிய நமது கருத்துகள் நமது அடையாளங்களையும், நம் காலத்தைப் பற்றி நாம் சொல்லும் கதைகளையும் வடிவமைப்பதில் ஓர் அடிப்படைப் பங்கை வகிக்கின்றன – ஒவ்வொன்றும் தனித்துவமானது.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்ற கேள்வி ஒருவர் எங்கிருந்து வரவில்லை என்பதையும் குறிக்க முடியும். வீடு மற்றும் வெளியூர் ஆகியன ஒன்றையொன்று எவ்வாறு வரையறுக்கின்றன? வீடு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் வெளியேற வேண்டுமா? வீடு அல்லது மூதாதையர் தாயகம் என்பது ஒருபோதும் மாறாத இடமா அல்லது மாறக்கூடியதா? பல இடப்பெயர்வுகள் வீட்டின் கருத்துகளை எவ்வாறு மறுவரையறை செய்கின்றன? இக்கேள்விகள் சில முக்கிய புள்ளிகளை நோக்கி எம்மை நகர்த்த உதவுவன.

ஒரு மாறும், நிலையற்ற, பன்மை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கருத்தாக, வீடு என்பது வீடு, சுற்றுப்புறம், இருப்பிடம், நகரம், பிராந்தியம், குடும்பம், பாரம்பரியம், உணர்வுகள், சமூகம், இனம், தேசம், தாயகம்/கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. வீடுகளின் பிரதிநிதித்துவங்களை பாலின, புவியியல், உளவியல், அரசியல் மற்றும் பொருள் நிலைகளில் ஒரே நேரத்தில் செயற்படும் கூட்டுக் கட்டுமானங்களாக நாம் பார்க்க வேண்டும். மானிடப் புவியியல் கண்ணோட்டமானது, ஒரு வீட்டை “துளைகள் மற்றும் திறந்த வெட்டும் கோளங்களின் தளம்; பொது மற்றும் அரசியல் பகுதிகளுடன் சிக்கலான முறையில் இணைக்கப்பட்ட சமூக உறவுகள்” என மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.

நமது வீடுகளும் மற்றும் மூதாதையர் தாயகங்களும் ஒருபோதும் ஒரே இடத்தில் இருக்காது – அவை நாமில்லாமல் நகர்கின்றன – அதே நேரத்தில் வீடு மற்றும் சொந்தம் பற்றிய நமது கருத்துகள் தொடர்ந்து மாறுகின்றன. கலாசார புவியியலாளர் டோரீன் மாஸி நமக்கு நினைவூட்டுவது போல, வீடுகள் நிலையான நிறுவனங்கள் அல்ல, மாறாக சமூக உறவுகள், வரலாற்று மாற்றங்கள், தனிநபர்களின் அன்றாட வாழ்க்கையின் தொடர்ச்சியான உருவாக்கம் மற்றும் பின்னலின் ஒரு பகுதியாகத் திறந்தவையாகவும், போட்டியானவையாகவும், நிலைத்தன்மையற்றவையாகவும் உள்ளன.  

புலம்பெயர் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் முதலாம் தலைமுறையினரில் ஒரு பகுதியினருக்கு தமது வீடு, நாடு, தாயகம் குறித்த மீட்கவொண்ணா எதிர்பார்ப்புகள் உண்டு. அவர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அவர்களின் மனம் தாயகத்திலேயே உண்டு. அவர்கள் இன்னமும் மனதால் முழுமையாகப் புலம்பெயராதவர்கள். இது ஏக்கமாக, எதிர்பார்ப்பாக, கவலையாக, அக்கறையாக, கோபமாக, விரக்தியாக வெளியாகிறது. இந்த உணர்வுகள் அதேவகைப்பட்ட வகையில் ‘வீட்டால்’ உணரப்படுவதில்லை. இது இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் தொடக்கப் புள்ளியாகிறது. அதேவேளை இன்னொரு தொகுதி புலம்பெயர் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை ‘வீட்டுக்குத் திரும்புவது’, தங்கள் பெருமைகளைப் பறைசாற்றி செல்வச் செழிப்பை ஊரறியச் செய்வதற்கே. முற்றொரு தொகுதியினர், தங்கள் முதலீட்டைப் பெருக்கவும், இலாபம் உழைக்கவும் ‘வீட்டைக்’ களமாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் ‘வீட்டில்’ இருப்போரைப் பொறுத்தவரை அனைவரும் ‘புலம்பெயர்ந்தோர்’ என்ற ஒற்றைப் பரிமாணத்தால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்த மூன்று குழுக்களில் வீடு குறித்த அறம்சார் அக்கறையும், வீட்டை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்ற குற்றவுணர்வும் தொடர்ச்சியாக வீடு பற்றிய பங்களிப்புகளுக்கு வழியமைக்கிறது. அவர்களே வீடு பற்றிய இடையறாத பதகளிப்புடன் இருப்பவர்கள். 

பொருளாதாரப் பலியாடுகள்

தாங்கள் பிரிந்துவந்த தாயகம் குறித்த தொடர்ச்சியான அக்கறை ஒரு தொகுதி புலம்பெயர் தமிழர்களைத் தவிர்க்கவியலாமல் பொருளாதாரப் பலியாடுகளாக ஆக்கியுள்ளது. கடந்த மூன்று தசாப்தத்திற்கும் மேலாக ஒரு தொகுதி புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகம் நோக்கிய பொருளாதாரா உதவிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளனர். குறிப்பாக போரின் பின்னரான கடந்த 16 ஆண்டுகளில் இந்த உதவிகள் குறிப்பிடத்தக்கன. இவ்வுதவிகள் பெரும்பாலும் எதிர்பார்ப்பின்றி மேற்கொள்ளப்பட்டாலும் அவை பேண்தகைமையான சமூகத்திற்குப் பங்களித்து தங்களது உதவிகளின் தொடர்ச்சியான தேவையை இல்லாமல் செய்யும் என்பது அவர்களின் நோக்காக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நிகழவில்லை. இது மூன்று முக்கிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. முதலாவது, தங்கி வாழும் சமூகமொன்றின் உருவாக்கம். இரண்டாவது, புலம்பெயர் சமூகம் மீதான அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பும் அதுசார் முரண்பாடுகளின் கூர்வடைதலும். மூன்றாவது, வெளிநாட்டு மோகமும் அதீத நுகர்வும் கொண்ட இளந்தலைமுறையின் பெருக்கம். 

புலம்பெயர்ந்தோருக்கு சர்வதேச சமூகம், உள்ளூர் சமூகங்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் போன்று பல்வேறு அரங்காடிகளால் சில பாத்திரங்களும் கடமைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அர்த்தத்தில் புலம்பெயர்ந்தோரை ‘ஒரு நாடுகடந்த அளவில் அணிதிரட்டக்கூடிய மற்றும் சில கடமைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பொருந்தும் ஒரு தார்மீகச் சமூகமாக’க் காணலாம். தரவுகளின்படி, புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த நாட்டிற்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருப்பதாக உணர்கிறார்கள். இதனால் பல்வேறு துறைகளில் தங்கள் பங்கை முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் உணர்கிறார்கள். புலம்பெயர்ந்தோர் தாங்கள் ஒரு பங்கை வகிக்க முடியும் என்று உணரும் சில பகுதிகளில் உறவினர்களை ஆதரிக்கப் பணம் அனுப்புதல், தங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருளாதாரப் பங்களித்தல் என்பன முதன்மையானதாக இருக்கின்றன. அதேபோல, அமைதியைக் கட்டமைத்தல் மற்றும் அபிவிருத்திக்குப் புதிய புதுமையான யோசனைகளை வழங்குதல் மற்றும் அரசியல், பொருளாதார அரங்கில் பங்கேற்பது ஆகியவையும் அடங்கும்.

புலம்பெயர்ந்தோரின் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் நிலைப்பாடுகள் உள்ளூர் சமூக உறுப்பினர்களால் வித்தியாசமாக உணரப்படுகின்றன. பொருளாதாரக் கண்ணோட்டத்தில், சில உள்ளூர்வாசிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளூர் வளங்களைச் சூறையாடுவதாகக் கருதுகின்றனர். அதேவேளை புலம்பெயர்ந்தோரின் பொருளாதாரப் பங்களிப்புகள் சமூகத்தில் ஓர் அசமத்துவத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். இவ்வகையான எதிர்மறையான கருத்துகள் பொதுவாக உள்ளூர்வாசிகளுக்கும், திரும்பிவரும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான தொடர்புகளின் போது உருவாகும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. இத்தகைய அனுமானங்கள், புலம்பெயர் உறுப்பினர்கள் போர் விரும்பிகள், யதார்த்தமற்றவர்கள், களநிலைமை தெரியாதவர்கள், வேறுபட்ட பழக்கவழக்கத்திற்குரியவர்கள் போன்ற முடிவுகளின் அடிப்படையிலானது. இதை இலங்கையின் வடக்கில் உள்ளோரின் கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன.

“எங்கட வெளிநாட்டுக்காரர் வெள்ளைக்காரராய் போய் கனகாலம். அவையள் எங்களின்ர பழக்கவழக்கங்களை கைவிட்டிட்டினம். பேருக்கு வேணுமெண்டா யாழ்ப்பாணத்தான் என்று சொல்லாம். அவையின்ர பிள்ளையள் தமிழர் இல்லைத்தானே.” 

“எங்களின்ட ஆக்கள் வெளிநாட்டில இருந்து வந்து செய்யிற அட்டகாசம் கொஞ்ச நஞ்சமில்லை. இவையள் புதுசாக் காசக் கண்ட ஆக்கள். அதுதான் தண்ணி போல செலவழிக்கினம். அங்க வாழ இயலாத வாழ்க்கையை இங்க வாழ நினைக்கினம். அது ஒத்துவராது. இவையள் காட்டிற படத்தை இங்கை இருக்கிற இளசுகள் நம்புது.”

அதேபோல், அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரின் பொருளாதாரப் பங்களிப்பானது, குறிப்பாக விலைவாசி உயர்வுடன் தொடர்புடையவை என்று உள்ளூரில் உணரப்படுகிறது. அது  வீடுகள், காணிகளின் விலையைப் பன்மடங்கு அதிகரித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

உள்ளூர்வாசிகளின் புலம்பெயர்ந்தோர் மீதான எதிர்மறையான கருத்துகள் வளப் பகிர்வுடன் மட்டும் நின்றுவிடவில்லை. கலாசார வேறுபாடுகளும் உள்ளூர்வாசிகளுக்கு ஒரு முக்கிய கவலையாக உருவெடுத்துள்ளன. புலம்பெயர்ந்தோர் உறுப்பினர்கள் நீண்டகாலமாக வெளிநாட்டில் தங்கி, வேறுபட்ட பிற கலாசாரங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்ற கருத்து, சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வேறுபட்டவர்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளது. உள்ளூர்வாசிகள், புலம்பெயர்ந்தோர் மோதலால் பாதிக்கப்படவில்லை என்றும், களத்தில் உள்ள யதார்த்தங்களுடன் தொடர்பில்லாதவர்கள் என்றும் கருதுகின்றனர். இது புலம்பெயர்ந்தோர் தாயகத்தில் தங்கள் சொந்தக் ‘கற்பனைகளை’த் திணிக்க வழிவகுக்கிறது என்பது பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. 

இன்னொருபுறம் புலம்பெயர்ந்தோரின் சில உறுப்பினர்கள் சாதிய வேறுபாடுகளைத் தூண்டுகிறார்கள், மத முரண்பாடுகளைத் தூண்டுகிறார்கள் என்ற எண்ணமும் வலுப்பட்டுள்ளது. இவர்கள் சில சந்தர்ப்பங்களில் போர் வெறியர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இதையும் இலங்கையின் வடபுலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கருத்துரைத்தோர் ஆணித்தரமாகத் தெரிவித்தனர். 

“நாங்கள் போரால பாதிக்கப்பட்ட ஆக்கள் பாருங்கோ. எங்களுக்கு எங்கட அன்றாட வாழ்க்கையைப் பார்க்கிறதே பெரிய பாடு. ஆனா இது வெளிநாட்டுக்காரருக்கு விளங்காது. கோடிக்கணக்கில காசச் செலவழிச்சுக் கோயிலை கட்டியிருக்கிறாங்க. யாருக்கு இவ்வளவு பெரிய கோயில். இங்க நல்ல பள்ளிக்கூடம் இல்லை, டீச்சர்மார் இல்லை. பள்ளிக்கூடத்தில் பொம்பிளைப் பிள்ளையளுக்கு உருப்படியான டொயிலட் இல்லை. பொம்பிளையள் வேலைக்குப் போய் கஷ்டப்படீனம். பிள்ளையளை பத்திரமாக விட்டுட்டுப் போக இடமில்லை. ஆனால் கோயிலைக் கட்டிப்போட்டி வருசாவருசம் திருவிழாவுக்கு வந்து கிலுக்கிறதோட சரி.” 

புலம்பல்களைப் புரிதல்: புலம்பெயர்ந்தோர் ஏக்கம்

கடந்த பத்தாண்டுகளில் புலம்பெயர்ந்தோரின் புலம்பல்கள் பல்பரிமாணமுடையனவாய் மாற்றம் கண்டிருக்கின்றன. குறிப்பாகப் போரின் பின்னரான இலங்கையின் கள நிலவரம் இதற்கான புதிய சாத்தியங்களையும் சவால்களையும் உருவாக்கியிருக்கிறது. போரின் கோர முடிவு, போரால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற தார்மீக உணர்வையும் அக்கறையையும் தூண்டியது. இதனால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, புலம்பெயர் தமிழர்கள் உதவிகளைச் செய்துவருகிறார்கள். இது வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு எனப் பலதரப்பட்டதாய் இருக்கிறது. போர் முடிந்து கடந்த 16 ஆண்டுகளில் இலங்கையின் வடக்குக் கிழக்கிற்குப் புலம்பெயர் தமிழர்களால் பொருளாதார உதவிகளாக அனுப்பப்பட்ட தொகை மிகப்பெரிது. ஆனால் அதற்கான சமூக மாற்றமும் அபிவிருத்தியும் இன்னமும் வடக்குக் கிழக்கில் நிகழவில்லை. இதன் தீவிரத்தை கொரோனாப் பெருந்தொற்றின் போதும், அதைத் தொடந்த பொருளாதார நெருக்கடியின் போதும் கண்டோம். புலம்பெயர் பொருளாதாரப் பங்களிப்புகள் வினைத்திறனான நின்றுநிலைக்கக்கூடிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இது ஏன் என்பது விரிவான ஆய்வை வேண்டுவது.  

புலம்பெயர்ந்தோர் ஏக்கம் (Diasporic Nostalgia) என்பது தங்கள் தாயகத்திற்கு வெளியே வாழும் தனிநபர்கள் அனுபவிக்கும் சிக்கலான உணர்ச்சிகளைக் குறிக்கிறது. இது அவர்களின் கலாசார, பாரம்பரியத்துடன் தொடர்புடைய கடந்த காலத்திற்கான ஏக்கம் அல்லது கற்பனை செய்யப்பட்ட கடந்தகாலத்தால் வகைப்படுத்தப்படுகிறது. இது இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் முன்பு இருந்ததைப் போலவே இல்லாத ஒரு வீட்டைப் பெறுவதற்கான ஏக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பன்முக நிகழ்வு ஆகும். இந்த ஏக்கம் புலம்பெயர்ந்த சமூகங்களுக்குள் அடையாளம், கலாசார நடைமுறைகள் மற்றும் சமூகத் தொடர்புகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகின்ற அதேவேளை, தாயகச் சமூகங்களுடனான முரண்பாடுகளிற்கான வழியாகவும் உள்ளது. 

புலம்பெயர் ஏக்கம் என்பது பெரும்பாலும், முன்பு இருந்ததைப் போல இல்லாத ஒரு இடத்திற்குத் திரும்புவதற்கான அல்லது நினைவகம் மற்றும் கற்பனை மூலம் கட்டமைக்கப்பட்ட அந்த இடத்தின் இலட்சியப்படுத்தப்பட்ட பதிப்பிற்குத் திரும்புவதற்கான ஆழ்ந்த விருப்பத்தை உள்ளடக்கியது. இந்த விருப்பம் மாறியுள்ள தாயகச் சூழலுக்கு உடன்பாடில்லாதது. புதிய தாயகச் சூழலையோ அதுசார் இயல்புகளையோ ஏற்கத் தயக்கங் காட்டுவது. ஏனெனில் இந்த ஏக்கம் தங்கள் கடந்தகால வாழ்வைக் கனவு காண்கிறது. அதை இலட்சியப்படுத்துகிறது. அந்த வாழ்வை வாழுவது நோக்கிய எதிர்பார்ப்புடன் தாயகம் குறித்த அக்கறையைச் செலுத்துகிறது. புலம்பெயர்ந்த தனிநபர்கள் தங்கள் தற்போதைய இருப்பிடம் அல்லது அவர்களின் தாயகத்திற்கு முழுமையாகச் சொந்தமில்லாத இடங்களுக்குத் திரும்புவதற்கான ஓர் உணர்வை உணர்கிறார்கள். புலம்பெயர் ஏக்கம் கலாசார அடையாளத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. ஏனெனில் தனிநபர்கள் தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்பைப் பேணுவதற்கும், புலம்பெயர்ந்தோரான மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்வதற்கும் நினைவுகள் மற்றும் மரபுகளைப் பயன்படுத்துகிறார்கள். 

கடந்தகால அல்லது கற்பனை செய்யப்பட்ட வீட்டிற்கான இந்தப் பகிரப்பட்ட ஏக்கம் புலம்பெயர் உறுப்பினர்களிடையே சமூக உணர்வை வளர்க்கலாம். மேலும் அது கலாசாரப் பரிமாற்றம், நினைவுகூருதல் மற்றும் மரபுகளின் பரவலுக்கான இடங்களை உருவாக்குகிறது. திரும்பி வருவதற்கான விருப்பம் ஒரு பொதுவான கருப்பொருளாக இருந்தாலும், புலம்பெயர் ஏக்கம் எப்போதும் உடல் ரீதியாகத் திரும்பிச் செல்வது பற்றியது அல்ல. கலாசார நடைமுறைகள், கதைசொல்லல் மற்றும் சமூகக் கட்டுமானம் மூலம் நிகழ்காலத்தில் ஒரு வீட்டின் உணர்வை உருவாக்கும் செயல்முறையையும் இது உள்ளடக்கியிருக்கலாம். புலம்பெயர் ஏக்கம் எப்போதும் ஒரு நேர்மறையான அல்லது காதல் அனுபவமாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது சோகம், வருத்தம் மற்றும் இழப்பு உணர்வு ஆகியவற்றால் சூழப்படலாம். புலம்பெயர் ஏக்கம் என்பது ஒரு நிலையான கருத்து அல்ல. இது மாறும் தன்மை கொண்டது மற்றும் தனிநபர்களும் சமூகங்களும் புதிய சூழல்களுக்கு ஏற்ப மாறி, அவர்களின் புலம்பெயர் அனுபவத்தின் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது உருவாகிறது.

நிறைவுக் குறிப்புகள்

இந்த ஆய்வின் முக்கியமான முடிவுகளில் ஒன்று, புலம்பெயர் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது வீடு அல்லது தாயகம் என்று அறியப்பட்ட இலங்கை குறித்த பார்வை அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய ஆண்டுடன் உறைந்துவிடுகிறது. உதாரணமாக ஒருவர் 1998 இல் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தார் என்றால், 2025 இலும் இலங்கையை அவர் இலங்கையை விளங்கிக்கொள்ள, 1998 இன் சட்டகத்தையே பயன்படுத்துகிறார். இது மிகப்பொதுவான ஒரு விடயம். இதற்கு விலக்கானோரும் உண்டு. ஆனாலும் பெரும்பாலானோருக்கு இது பொருந்தும். இதனால் பெரும்பான்மையான புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இலங்கை தொடர்பில் காலாவதியான சிந்தனைப்போக்குகளைக் கொண்டுள்ளனர். அதேவேளை தாங்கள் வாழும் நாட்டின் விழுமிய ஒழுக்கநெறிகள் இலங்கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எல்லாவகையிலும் யதார்த்தத்திலிருந்து விலகியவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஒருவகையில் இவர்கள் கருணைக்குரியவர்கள். இன்னொருபுறம் இவர்கள் தங்களுக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்ற பொருளாதாரப் பலத்துடன் செய்யவிளையும் காரியங்கள் எரிச்சலூட்டுவன. 

புலம்பெயர் தமிழர்களின் பொருளாதாரப் பங்களிப்புகள் குறைவடையத் தொடங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. இன்னும் இருபது ஆண்டுகளில் நல்லெண்ண உதவிகள் எதுவும் வரப்போவதில்லை. தங்கிவாழப் பழகிய சமூகம் இப்போதிலிருந்து தன்னைத் தகவமைக்காது போயின் நெருக்கடிகளைச் சந்திக்க நேரும். அடுத்த தலைமுறையினரின் இடைவெளி மிகப்பெரியது. அவர்களது வீடோ தாயகமோ இலங்கை அல்ல. அவர்களுக்கு இலங்கை சுற்றுலாத்தலமுமல்ல. அந்தக் காலம் வரும்வரை விரும்பின் தங்கியிருக்கலாம், தகாதன செல்லலாம். எல்லாம் கொஞ்சக் காலத்திற்குத்தான்.   



About the Author

மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்