அரசியலமைப்புவாதமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும், நிறைவேற்று அதிகாரத்துக்கான வாய்ப்பும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
8 நிமிட வாசிப்பு

அரசியலமைப்புவாதமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும், நிறைவேற்று அதிகாரத்துக்கான வாய்ப்பும்

November 27, 2025 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புக் குறித்த பெரும்பாலான விமர்சனங்கள், இந்தச் சட்டத்தின்  உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுடனான அதன் முரண்பாடுகள், அதன் செயற்படுத்தலில் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் என்பவை தொடர்பாக  நியாயமான முறையில் கவனம் செலுத்துகின்றன.

இருப்பினும், இதுபோன்ற ஒரு கடுமையான சட்டம் நாட்டின் சட்டப் புத்தகங்களில் எவ்வாறு நுழைந்தது என்பதை ஆராய்வதும்கூட ஒரு முக்கியமான விடயம்தான். பெரும்பாலான ஜனநாயக அரசியலமைப்பு நாடுகளின் சட்டங்களில், நிர்வாகம் அல்லது நிறைவேற்றுக் குழு, அசாதாரணமான அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டிருத்தல் அல்லது அத்தகைய அதிகாரங்களை வழங்குகின்ற கடுமையான சட்டங்களைக் கொண்டிருத்தல் போன்ற நிலமையைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டு, ஆக்கபூர்வமான விமர்சனங்களையோ திருத்தங்களையோ பரிந்துரைப்பதற்காகவும், ‘தேசிய பாதுகாப்பு நலன்களின் அடிப்படையில்’ என்ற போர்வையில் சட்டத்தின் கொள்கைகள், மனித உரிமை தொடர்பான அடிப்படை விதிமுறைகள் என்பவை பெருமளவில் சமரசம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காகவும் செயற்படும் நிறுவனங்களும் உள்ளன. அத்தகைய கண்காணிப்புச் செயற்பாட்டைச் செய்ய எதிர்பார்க்கப்படும் இரண்டு நிறுவனங்கள் தான் சட்டமன்றமும் நீதித்துறையுமாகும். (ஆயினும்) இத்தகைய ஒரு சட்டத்தின் மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போதிலும் சரி, அல்லது மசோதாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இலங்கை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கின்ற போதிலும் சரி, இச்சட்டத்தின் மீதான விமர்சனங்களோ, அவற்றின் சட்டபூர்வத்தன்மை பற்றிய அல்லது சிவில் சமூகத்தால் எழுப்பப்பட்ட பல்வேறு கவலைகள் பற்றிய விவாதங்களோ அங்கே முன்வைக்கப்பட்டு உரையாடப்பட்டுள்ளனவா? (என்பது ஒரு முக்கியமான கேள்வி.)

(உண்மையில் இந்தப்) பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட விதம், இலங்கையில் சட்டமியற்றல், கொள்கை வகுத்தல் ஆகியவற்றில் நிலவிய கடுமையான குறைபாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்ற ஒரு நிகழ்வாகும். தவிரவும், இது வழக்குகள் தொடர்பான ஒரு சிறந்த ஆய்வுக்குரிய நிகழ்வும்கூட என்பது மட்டுமன்றி, நாட்டில் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்ந்து சீரழிந்து வருவதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்ற ஒன்றும் கூட. நாட்டின்  ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து சீரழிந்து வருவதையும், காலனித்துவ காலத்திலிருந்தே நாட்டில் இருந்த பாராளுமன்ற ஜனநாயகத்தின் மோசமான மரபுகள், நீதித்துறையின் சுதந்திரம் என்பவற்றைக் கருத்தில் கொண்டும் நோக்குகையில், பாராளுமன்றத்தின் விவாதச் செயற்பாடு மிக முக்கியமான ஒன்றாகும். அது, அதன் கொள்கை, நோக்கம் ஆகியவற்றைச் சட்டபூர்வமாக்குவதால் வரும் நன்மை, தீமைகளை விவாதிக்கிறது; பகுப்பாய்வு செய்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது தங்கள் கடமையான விவாதச் செயற்பாட்டினால் கவனத்தைக் குவித்துக் கேள்விகள் கேட்கவும், அவற்றின் சட்ட ஏற்பாடுகள், அவற்றின் பிரிவுகள் என்பவை தொடர்பாக வினாக்களை எழுப்பவும், (தேவையானவற்றை) வற்புறுத்தவும் முயற்சிக்கவும் வேண்டும் என்பதுடன் இத்தகைய வற்புறுத்தலை அனுமதிக்க பாராளுமன்றம் தயாராக இருக்கவும் வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, குழு மட்டத்திலான உறுப்பினர்கள், முக்கியமாக அவற்றில் பயன்படுத்தப்படும் மொழி, பயன்படுத்தப்படும் மொழியின் பொருத்தப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த விதிகளை ஆராய்வார்கள். சட்டப் பிரிவுகள் பரந்ததாக இருக்க முடியுமா (குறிப்பாக இச்சட்டங்கள், பொதுமக்களது சுயாதீனத்தமையை [Civil Liberty] மீறக்கூடிய தன்மைகளைக் கொண்டுள்ளனவா, அல்லவா என்பவை முக்கியத்துவம் வாய்ந்தவை) என்பதை மதிப்பாய்வு செய்வார்கள். மேலும் இவை அனைத்திலும் சட்டத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு வேண்டிய மாற்றுவழிகளைக் கருத்தில் கொள்வார்கள்.

அரசியலமைப்பு ஜனநாயக நாடுகளுள், இலங்கை மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் அதன் 1972, 1978 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட இரண்டு குடியரசு அரசியலமைப்புகளும் சட்டத்தை, நீதித்துறை மீளாய்வு செய்வதைத் தடை செய்தன. சட்டத்தை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது, அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். பாராளுமன்றம் உச்சமட்ட சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் கொண்டது. ஆனால், அது அரசியலமைப்பிற்கு உட்பட்டு அதன் சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஏனெனில் பாராளுமன்றமே கூட அரசியலமைப்புச் சட்டத்தினால் உருவாக்கம் பெற்ற ஒரு சபைதான். அரசியலமைப்பு தொடர்பான நீதித்துறையினது மீளாய்வானது, அல்லது பல ஐரோப்பிய அரசியலமைப்புவாதிகள் அதை விவரிக்க விரும்புவது போல, சட்டம் அரசியலமைப்புடன் (மக்களின் விருப்பத்திற்கு) இணக்கமாக இருப்பதை உறுதிசெய்யும் சட்டத்தை ஆய்வு செய்யும் இறுதிப் பொறுப்பானது, அவ்வாறு செய்வதற்கான சிறந்த ‘ஆயுதத்தை ஏந்திய’ அரசாங்கத்தின் கிளையான நீதித்துறைக்கு வழங்குகிறது. சோல்பரி அரசியலமைப்பின் கீழ், ‘லியனகே எதிர் மகாராணி, ‘இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் எதிர் ரணசிங்க’ போன்ற இலங்கையின் பெரும்பாலான முக்கியமான வழக்குகளின் அரசியலமைப்பு சம்பந்தமான முடிவுகள், சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வுகளின் விளைவுகளாக அமைந்திருந்தன. பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் செய்யப்பட்டு வந்ததது போலவே, எந்தவொரு அரசியலமைப்பு அடிப்படையிலான ஜனநாயகத்திலும் உள்ளடங்கியுள்ள அரசியலமைப்பிற்கு முரணான சட்டத்தை, செல்லாததாகவும் பயனற்றதாகவும் நீதிமன்றங்கள் அறிவிக்க முடியும் என்பதை இலங்கை நீதிமன்றங்கள் அங்கீகரித்தன.

இருப்பினும், 1972 ஆம் 1978 ஆம் ஆண்டுகளில், நாட்டின் இரண்டு ஆதிக்க அரசியல் குழுக்களினாலும் (1972 இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் [SLFP] அதனோடு இணைந்திருந்த மார்க்சிஸ்டுகளது நடவடிக்கைகளாலும், 1978 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் [UNP] நடவடிக்கைகளாலும்) கொண்டுவரப்பட்ட, இலங்கையர்கள் சொந்தமாகத் தமது  அரசியலமைப்புகளைத் தாமே வடிவமைக்க முடிவு செய்து உருவாக்கப்பட்ட இரண்டு அரசியலமைப்புச் சட்டங்களும், அவற்றை நீதித்துறை மீளாய்வு செய்வதை வெளிப்படையாகவே தடை செய்தன. உண்மையில், அரசியலமைப்பியலில் எழக்கூடிய சட்டரீதியான சவால்களுக்கு ஒரு தீர்வைக் காண்பதற்காகவே, அரசியலமைப்பு வரைபுகள் சட்டமாக (பாராளுமன்றத்தால்) நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக நீதித்துறையின் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பாராளுமன்றத்தால்  நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக ஒரு சட்டவரைபை (அதன் சட்டபூர்வத்தன்மை குறித்துச்) சவால் செய்ய, அதுவும் மிகக் குறைந்த காலத்திற்குள்ளாகவே முடியுமாக இருந்தது. ஒரு மசோதா, தேசிய நலனுக்காக அவசரமானது என்று அமைச்சரவை அறிவித்தால், இந்த வரையறுக்கப்பட்ட கால அவகாசத்தைக் கூட மேலும் குறைப்பதற்கு முடியும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் நீதித்துறையின் பங்கும்

இலங்கையின் இந்த இரண்டு சுயாதீன தன்னாட்சி அரசியலமைப்புச் சட்டங்களினதும் (நிறைவேற்றுகைக்குப்) பின்னால், ஆதிக்கத்தில் இருந்த கோட்பாடு என்னவென்றால், அது, ஆட்சியாளர்களுக்கிருந்த நிறைவேற்று அதிகார வசதிதான் என்று நான் வாதிட்டேன். நிர்வாகக் குழுவில் உறுப்பினர்களாக இருந்து அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், நாட்டின் உச்சச் சட்டம் அவர்களின் ‘ஆட்சித்’ திறனை எந்த வகையிலும் தடுக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதில் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர். இதற்காக, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசியலமைப்புக்கு முரணான சட்டத்தை இயற்ற உதவும் அரசியலமைப்பு விதிகளைச் சேர்த்தனர். அவற்றில் ஒன்று பாராளுமன்றத்தில் சிறப்புப் பெரும்பான்மையைப் பெற்றிருப்பது என்பதாக இருந்தது.

அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த இரண்டு அரசாங்கங்களும் 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் பாவனையிலிருந்த ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ (Westminster) பாணியின், எளிய பெரும்பான்மை, சிறுபான்மை என்ற முறைமையால் உருவாக்கப்பட்ட சிதைவுகளின் காரணமாக, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டன. இதனால், ஏற்கனவே இருந்ததைவிட  இது இரண்டு மடங்கு வசதியான ஒன்றாக மாறியிருந்தது. முதலாவது, பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றவர்களால் தங்கள் சொந்த அரசியலமைப்புகளை வரைந்து (பாராளுமன்றத்தில்) ஏற்றுக்கொள்ள வைக்க முடியும் என்பது. இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்ட அடிப்படையிலான பெரும்பான்மைவாதத்தின் பெயரால், அரசியலமைப்பினால் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அல்லது வரையறுக்கப்பட்டிருந்த, சரிபார்ப்புகள், சமநிலைப்படுத்தல்கள் என்பவற்றைத் தவிர்த்துவிட்டு, தம்மிடமுள்ள சிறப்புப் பெரும்பான்மையினரின் தேவைக்கேற்ற வகையிலான (வரைபின்) வடிவத்தில் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே சட்டமாக நிறைவேற்ற முடிந்தது.

இவை அனைத்தும் சேர்ந்து, 1978 அரசியலமைப்பின் கீழ் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு உதவின. அரசியலமைப்பால் அனுமதிக்கப்பட்டபடி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை வாக்குகளுடன் இந்தச் சட்டத்தை இயற்ற விரும்புவதாக அரசாங்கம் அறிவித்தது. இதன் பொருள், முன்மொழியப்பட்ட சட்டத்தில் உள்ள உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக இருந்தாலும், அவற்றை இயற்றலாம் என்பதே. எனவே, வரைவு நிகழும் கட்டத்தில் சட்டமா அதிபர் துறையினராலோ அல்லது சட்டமாக்கப்படுவதற்கு முன்பான மீளாவுக் கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தினாலோ அல்லது விவாதிக்கப்படும் கட்டத்தில் பாராளுமன்றத்தினாலோ, கவனமாக அரசியலமைப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதென்பது எத்தகைய பயனுமற்றதாக மாறியது.

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை வாக்குகளுடன் சட்டத்தை இயற்றத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்ததால், சட்டத்தின் ஏதாவதொரு பிரிவு அரசியலமைப்பின் மிகவும் கடுமையாக வேரூன்றிய விதிகளை (இறையாண்மை, பௌத்தம் மற்றும் பிற ‘அடிப்படை’ அம்சங்களைக் கையாள்பவை) மீறுகின்றதா என்பதைக் கண்டறிவதற்காக மசோதாவை ஆய்வு செய்வதற்கு நீதிமன்றத்தை நாடியபோது, அது தனது நிலை ‘வரையறுக்கப்பட்ட செயற்பாட்டைக் கொண்டுள்ளது’ என்று அறிவித்தது. உண்மையில், அத்தகைய பிரிவுகள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை வாக்குகளுடன் மட்டுமல்லாமல், வாக்கெடுப்பில் மக்களின் ஒப்புதலுடனும் இயற்றப்பட வேண்டியவை. தனது ஒரு பக்க உத்தரவின் மூலமாக, இலங்கை உச்ச நீதிமன்றம், மசோதாவின் எந்தப் பிரிவுகளும் முரணாக இல்லை என்று அறிவித்தது. அரசியலமைப்பின், சிறப்பாக வேரூன்றிய விதிகளுடனும், மனித உரிமைகள் குறித்த அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையிலும், இந்த மசோதாவின் விதிகளை மறுபரிசீலனை செய்ய மறுத்து, அதன் மூலம் மசோதாவை சட்டமாக இயற்றுவதற்கான பச்சைக்கொடியை அரசாங்கத்திற்குக் காட்டியது.

பயங்கரவாதத் தடுப்புச்சட்ட மசோதாவும் பாராளுமன்றத்தின் பங்கும்

இக்கடுமையான ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்’ உச்ச நீதிமன்றத்தின் ஒற்றைப் பக்கத் தீர்ப்புக்குப் பின்னான இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 19, 1979 அன்று ஒரே நாளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டது.

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், பாராளுமன்றத்தை மதிப்பிழக்கச் செய்யும் செயல்முறையைத் தொடங்கியது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் முதன்முறையாக சட்டவாக்கற் துறையினது நிர்வாக அதிகாரத்தின் முக்கிய இடத்தை மாற்றுகின்ற ‘நிறைவேற்று ஜனாதிபதி’ முறையை அறிமுகப்படுத்தியது. பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பங்குப் பெரும்பான்மையை அது கொண்டிருந்ததாலும், அதன் பாராளுமன்றக் குழுவிலிருந்து ஏதேனும் எதிர்ப்பு இருந்தாலும் அதைக் கணக்கெடுக்காமலோ பொருட்படுத்தாமலோ இருந்ததாலும், பாராளுமன்ற விவாதமும் ஆலோசனைகளும் எத்தகைய பயனுமற்றவை என்பதைப் பாராளுமன்றம் உணரத் தொடங்கியது. அரசாங்கம், பாராளுமன்றத்திற்குப் புறம்பான நடைமுறைகளாக இருக்கும், ஆய்வுகள், விவாதங்கள், ஆலோசனைகள், கருத்து வேறுபாடுகள் என்பவற்றை விரைவுபடுத்தவோ அல்லது ஊக்கப்படுத்தவோ சட்டம் இயற்றும் செயல்முறைகளில் குறுக்கீடு செய்வதில் அல்லது தடுப்பதில் பங்காற்றுகின்ற ‘பாராளுமன்ற நிலையியற் கட்டளை’களை இடைநிறுத்தம் செய்யும் நடைமுறைகளையும் ஆரம்பித்தது!

இதன்பின், ஜூலை 19, 1979 அன்று, மதிய உணவிற்குப் பின்னராக, பாராளுமன்றம் பயங்கரவாதத் தடுப்புச்சட்ட மசோதாவை எடுத்துக்கொண்டது. பாராளுமன்ற விவகார அமைச்சர் வின்சென்ட் பெரேரா எம்.பி., மசோதாவை அன்றே நிறைவேற்றும் வகையில் நிலையியற் கட்டளைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். நீதி அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகம் எம்.பி., மசோதாவை அறிமுகப்படுத்தினார். மசோதாவின் இரண்டாவது வாசிப்பு அன்று மாலை 9.45 மணி வரை தொடர்ந்தது.

எதிர்க்கட்சியின் சார்பாக முக்கிய உரையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி. மைத்திரிபால சேனநாயக்க நிகழ்த்தினார். தனது உரையில் அவர், மசோதாவின் சாராம்சம் குறித்து மட்டுமல்லாமல், மசோதாவை இயற்ற முயன்ற விதம் குறித்தும் சில முக்கியமான கவலைகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. அவர் கூறினார்:

“இந்த மசோதாவை இன்றிரவு நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இந்த நாடாளுமன்றத்தில் யாருடைய பெயரில், யாருடைய அதிகாரத்தின் கீழ் சட்டங்கள் இயற்றப்படுகிறதோ, அந்த நாட்டு மக்கள் அதை முழுமையாகப் படித்துப் பார்ப்பதையும், அதன் உள்ளடக்கங்களை விரிவாகப் படிப்பதையும் தடுக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் அடிப்படை உரிமைகளின் சில அம்சங்களைப் பறிக்க முயன்ற ஒவ்வொரு மசோதாவும், தேசிய நலனுக்காக அவசரமானது என்று விவரிக்கப்பட்டு, பெரும்பான்மையைப் பெறுவதற்கு உதவிய மக்களின் முதுகுக்குப் பின்னால், அரசாங்கத்திடமுள்ள அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்பட்டிருப்பதால் இது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல. இந்த மசோதாவைப் பொறுத்தவரை, எந்த அவசரத்தையும் நாம் காண முடியாது. வடக்கில் பயங்கரவாதச் செயல்களைக் கையாள்வதற்கான நோக்கத்திற்காக இது தேவைப்பட்டால், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட அவசரநிலைக்கு கூடுதலாக, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யும் சட்டம் இருக்கிறது. வேறும் பிற இதையொத்த அமைப்புகள் ஏற்கனவே உள்ளன. இவற்றின் கீழ் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது.”

அமைச்சர் தேவநாயகம் தனது சுருக்க உரையை நிகழ்த்த 9.58 மணிக்கு எழுந்ததாக ஹன்சார்ட் பதிவு செய்கிறது. இதைத் தொடர்ந்து குழுநிலை (பாராளுமன்றம் மசோதாவை ஒவ்வொரு பிரிவும் ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது), அடுத்ததாக மசோதாவின் மூன்றாவது வாசிப்பு ஆகியவை நடைபெற்றன. மசோதா அதன் அனைத்து நிலைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதத் தடுப்பு மசோதாவுடன் எந்த தொடர்பும் இல்லாத, பொதுசனப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், ஒரு தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டு, பாராளுமன்றம் இரவு 10.25 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது!

முடிவுரை

கடந்த முப்பது ஆண்டுகளில், இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் முக்கிய குறைபாடுகளில் ஒன்றாக, அரசாங்கத்தின் நிர்வாகக் கிளையின் அதிகாரக் குவிப்பை பல விமர்சகர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். அரசாங்கத்தின் மற்றைய இரண்டு கிளைகளான பாராளுமன்றம், நீதித்துறை என்பவற்றின் அதிகாரங்கள் குறைந்து வருவதால், இவ்வளவு வலுவூட்டப்பட்ட நிர்வாகக் கிளையின் ஆபத்தானது இன்னமும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்த இரண்டு கிளைகளும் தாங்கள் அனுபவித்த வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக்கூட அதிகபட்சமாக வலியுறுத்த விரும்பாததால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. பயங்கரவாதத் தடுப்புச்சட்ட மசோதாவின் கதை என்பது, அது இயற்றப்பட்ட விதம், நீண்டகாலமாக நமது சட்டப் புத்தகங்களில் ஒரு சட்டமாக அது இருந்து வருவது, சாராம்சத்தின் அடிப்படையில் மிகவும் விமர்சனத்திற்கு உட்பட்ட அதன் தன்மை, அது அடுத்தடுத்த அரசாங்கங்களால் நியாயமான எதிர்ப்பைக்கூடக் குறிவைத்து நாட்டின் அனைத்துச் சமூகங்களின் உறுப்பினர்களினதும் மனித உரிமைகளை நசுக்கப் பயன்படுத்தப்பட்டமை, மிக எளிதாக அது ஒரு சட்டமாக இயற்றப்பட்ட விதம், இந்த  அரசியலமைப்புவாதம், சட்டத்தின் ஆட்சி, இலங்கையில் சட்டம் உருவாக்கும் செயல்முறை என்பவை தொடர்பான அடிப்படையான பல கேள்விகளை எழுப்புகிறது. இலங்கை அடிப்படை அரசியலமைப்புச் சீர்திருத்தத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது, முந்தைய அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருந்த, தற்போதைய அரசியலமைப்பின் கட்டமைப்பில் உள்ள இந்த அடிப்படைக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுவது மிக அவசியமானது என்பது தெளிவு!

கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு

இந்தக் கட்டுரையின் ஆசிரியர் றொகான் எதிரிசிங்க – LLB (Colombo), LLM (University of California – மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற அமைப்பின் இயக்குநர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவின் தலைவர். 1986 முதல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டப்பீடத்தில் கற்பித்து வருகிறார். அவரது சிறப்புப் பிரிவு, அரசியலமைப்புச் சட்டம். அவர் 1995 இல் தென்னாபிரிக்காவின் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் சட்டப்பீடத்தில் கற்பித்தார். பின்னர், 2004/5 இல், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உலக மதங்களின் ஆய்வு மையத்தில் வருகை தரும் உறுப்பினராக இருந்தார். 1992 முதல் 1995 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆராய்ச்சி, பகுப்பாய்வு மையத்தின் நிறுவுநர், இணை இயக்குநர் ஆகிய பொறுப்புகளில் இருந்த இவர், 1989 முதல் 1993 வரை ‘தாராளவாத ஜனநாயகக் குழு’வின் நிறுவுநராகவும், அதன் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். 1987 ஆம் ஆண்டு லிபரல் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து 1993 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகும் வரை அவர் அதன் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 1995 ஆம் ஆண்டு, ஊடகச் சட்டச் சீர்திருத்தங்களை முன்மொழிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்களில் உறுப்பினராகவும் இவர் இருந்தார். இந்த நூலின் (இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு) மூன்றாவது கட்டுரை இது.



About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்