ஆனைக்கோட்டைத் தொல்லியலாய்வு 
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
17 நிமிட வாசிப்பு

ஆனைக்கோட்டைத் தொல்லியலாய்வு 

July 11, 2025 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

 அறிமுகம்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் தென்மேற்குப் பகுதியின் மேற்குப் பக்கத்தில், நவாலிக்குத் தெற்கே யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் AB 17 வீதிக்கருகே யாழ்ப்பாணக் கடலேரிக்குக் கிழக்காக அமைந்த பண்டைய கிராமம். முன்னொரு காலத்தில் வன்னியில் யானைகளைப் பிடித்து, ஆனையிறவு வழியாக யாழ்ப்பாணம் கொண்டுவந்து, அவற்றை இக்கிராமத்தில் உள்ள அடைப்பரண்களில் (Corral) அடைத்து வைத்துப் பின்னர் கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த காலப்பகுதியில் இக்கிராமத்திற்கு ‘ஆனைக்கோட்டை’ என்ற பெயர் ஏற்பட்டது என்ற மரபுவழிக் கதைகள் உள்ளன. 

ஆனைக்கோட்டைக்கு சற்று தென்மேற்கே கடற்கரையோடு அமைந்த நாவாந்துறைப் பகுதியில் ‘கண்ணபுரம் குடியேற்றத் திட்டக் காலனியில்’ புதிய வீடுகள் அமைப்பதற்காக அங்கிருந்த நிலத்தைச் சீர்செய்வதற்காக ஆனைக்கோட்டையிலிருந்த கரையாம்பிட்டி மண்மேடு வெட்டப்பட்டு மண்கும்பிகள் அகற்றப்பட்டன. இதைத் தோண்டுவதற்கு அனுமதி கொடுத்த அலுவலகர்கள் கரையாம்பிட்டி ஒரு புராதன தொல்லியல் மேடு என்பதை அறிந்திலர் போலும். மேலும், அச்சமயம் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையினர் ஆனைக்கோட்டைத் தொல்லியல் மையம் இருந்த இடத்தில் ஒரு சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக 30 ஏக்கர் நிலத்தைப் பெற்றிருந்தார்கள்.  

ஆனைக்கோட்டைத் தொல்லியல் மேலாய்வுகள் – 1980

1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆனைக்கோட்டைக் கரையாம்பிட்டியில்  மண்ணகற்றல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், அங்கே கலாநிதி இரகுபதி தலைமையிற் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினரால் இது ஒரு பெருங்கற் பண்பாட்டுத் தொல்லியல் மேடு என இனங்காணப்பட்டது. அச்சமயம் பெய்த பெருமழையில் மண் தோண்டப்பட்ட இடங்களில் மண் கரைந்து பெருவாரியான மட்கலத் துண்டுகள் வெளியே தெரிந்தன.

ஆனைக்கோட்டைக் கரையாம்பிட்டி தொல்லியல் மேட்டை வட திசையிலிருந்து நோக்குமிடத்து பரந்து விரிந்த நெல் வயல்களின் பின்னணியில் பனந்தோப்புகளுக்கு இடையே மண்கும்பிகள் கிழக்கு – மேற்காக நீண்டு கிடந்தன. இந்த மேட்டை தென் திசையிலிருந்து நோக்குமிடத்து, மண்கும்பிகள் அகற்றப்பட்ட நிலம் பனை மர அடிமட்டத்திலிருந்து மூன்று அடிவரை கீழே தோண்டப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக குழுவினரின் மேலாய்வுகளில் புராதனத் தொல்பொருட்கள் காணப்படும் நிலம் இரண்டு சதுர கி.மீ. அளவினதாகக் காணப்பட்டது. அப்பரப்பினுள் ஆறு தொல்லியல் மண்கும்பி மையங்கள் இனங்காணப்பட்டன (Ragupathy, P. 1987: 66).

ஆனைக்கோட்டைக் கரையாம்பிட்டி மண்மேடும் அதில் கண்ட தாழிப்புதையலும்

இந்த மண்மேடு ஆனைக்கோட்டை நெல் வயல் வீச்சளவின் இடையே இரண்டு ஏக்கர் பரப்பளவிற்குப் பரந்து கிடந்தது. இந்த மேட்டின் அரைவாசிப் பகுதி அகற்றப்பட்டிருந்தது. மிகுதிப் பகுதியில் இயற்கையான தாவரங்களும் பனை மரங்களும் காணப்பட்டன. மண் தோண்டப்பட்ட பகுதியில் நவம்பர் மாதத்தில் பெய்த பெருமழையின் பின்னர் ஏராளமான மட்பாண்டங்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. 

மேற்பகுதி நீக்கப்பட்ட பெரிய அளவினதான ஒரு தாழிப் புதையல், அதனுள் காணப்பட்ட பல எலும்புத் துண்டுகள், ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டத் துண்டுகள், ஆரம்பகால சிவப்பு மட்கலன்கள், இரும்புக் கருவிகள் என்பன இந்த மையத்தின் பெருங்கற்காலப் பண்பாட்டு வளத்திற்கான சான்றாக அமைகின்றன (Ragupathy, P. 1987: 66). 

இத்தாழியில் கழுத்துப்பகுதியும் விளிம்பும் காணப்படவில்லை. தாழியின் உள்ளே ஆராய்ந்த பொழுது எலும்புகள், சிப்பிகள், நண்டுக்கோது, ஆரம்பகால முறிவளைவு கொண்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டத் துண்டுகள் என்பன காணப்பட்டன. இத்தாழிக்கு அருகில் செப்பினால் செய்த ஒரு ‘கோலக்குச்சி’ கண்டெடுக்கப்பட்டது. இப்படியான ‘கோலக்குச்சிகள்’ பொம்பரிப்புத் தாழிப் புதையல்களோடு காணப்பட்டதை விமலா பெக்லி குறிப்பிட்டிருக்கிறார் (Begley, V. 1970: 84-93). இவற்றோடு உரோம ரௌலெற்றெட் மட்பாண்டத் துண்டுகள், சித்திர எழுத்துப் பொறித்த மட்கலத் துண்டுகள் என்பன கிடைத்தன. இவற்றில் ஒரு ரௌலெற்றெட் மட்பாண்ட ஓட்டில் ‘பி’, ‘யி’ ஆகிய பிராமி எழுத்துகள் கீறப்பட்டிருந்தன. இவைதவிர கல்லினால் ஆன அம்மி – குழவிகள், கற்கருவிகள், இரும்பினாலான ஈட்டியின் பாகங்கள், இரும்பு ஆணிகள், உருக்கிய இரும்பின் கழிவுக் கசடுகள் (Iron slags) என்பனவும் இத்தாழியின் அருகே கண்டெடுக்கப்பட்டன (Ragupathy, P. 1987: 66-67). 

கண்ணகி அம்மன் கோயில் மண்மேடு

ஆனைக்கோட்டையில் வட்டுக்கோட்டை வீதிக்கு அருகாமையில் உள்ள கண்ணகி அம்மன் கோயிலுக்கு வடக்கே பண்டைய மட்கலன்களைக் கொண்ட மூன்று மண்மேடுகள் காணப்படுகின்றன. இவற்றில் இரு மேடுகள் கலைக்கப்பட்டும், ஒன்று முழுமையாகவும் காணப்பட்டன. இவற்றில் தடித்த விளிம்பு கொண்ட மட்பாண்டங்கள் மிக அதிகமாகக் காணப்பட்டன. கலைந்திருந்த மேடையிலிருந்து உரோம ரௌலெற்றெட் மட்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன (Ragupathy, 1987:67). 

ஐந்துபனைப் பிட்டி

இந்த மண்மேட்டில் ஐந்து பனை மரங்கள் காணப்படுவதனால் இது ஐந்துபனைப் பிட்டி என அழைக்கப்படலாயிற்று. ஆனால் இந்த மண்மேடு மண் மொண்டெடுப்பவர்களால் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்ணின் அடியில் பலவகையான மட்பாண்டத் துண்டுகள், முக்கியமாக தடித்த விளம்பு கொண்ட மட்கலன்கள் மற்றும் இரும்புக் கசடுகள் என்பன கண்டெடுக்கப்பட்டன. 

முள்ளிப் பிட்டி

ஆனைக்கோட்டை நெல் வயல்களின் கரையோரமாக பழைய டச்சுப் பாதையினருகே  காணப்படும் மேட்டு நிலம் முள்ளிப்பிட்டி. இவ்விடத்தில் இரு இடங்களில் பண்டைய மட்பாண்டத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒன்று கரைப்பிரான் பிள்ளையார் கோயில் மேடு. இந்தக் கோயிலுக்கும் நவாலி வீதிக்குமிடையே இருந்த வீட்டு வளவுகளிலும் பல பண்டைய கலவோடுகள் கண்டெடுக்கப்பட்டன. இக்கோயில் மேட்டிற்கு வட மேற்கேயுள்ள மணல் மேடுகள் மற்றைய மையங்கள் ஆகும். இங்கிருந்தும் பல வகையான மட்கலன்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. 

யாவில் குளக்கரை மேடுகள்

யாவில் குளக்கரையில் காணப்பட்ட மண்மேடுகளிலும் பலவகையான மட்பாண்டங்கள் காணப்பட்டன. இவற்றில் அதிகமானவை தடித்த விளிம்பு கொண்ட மட்பாண்டங்களும், சிவப்பு நிற மட்பாண்டங்களுமாகும். 

காத்தவராயர் கோயில்

ஆனைக்கோட்டை நெல் வயல்களின் வடகரையில் ஆனைக்கோட்டைக்கும் – நவாலிக்குமிடயிலான எல்லையில் அமைந்திருப்பது காத்தவராயர் கோயில். புகழ் பெற்ற இக்கிராமக் கோயிலில் ஆண்டுதோறும் காத்தவராயர் கூத்து நடைபெறுவது பாரம்பரியமாகப் போற்றிப் பேணப்படும் நிகழ்வு. இப்பிராந்தியத்தில் பளபளப்பாய்    மினுக்கப்பட்ட நீள்சதுரமான சுண்ணாம்புக் கற்களும், பவளப்பாறைக் கற்களும், மரம் நடுவதற்கேற்ற குழிக்கற்களும் பரவிக்கிடப்பது, இவ்விடத்தில் புராதன கட்டடங்கள் இருந்ததைக் காட்டுகின்றன. இவ்விடத்தில் முறையான ஓர் அகழாய்வு செய்வதன் மூலமே இவற்றை வெளிக்கொணர முடியும் (Ragupathy, P. 1987: 68).

ஆனைக்கோட்டை மட்கலன்கள்

ஆனைக்கோட்டை மேலாய்வுகளில் கண்டடெடுத்த மட்கலன்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம் (கீழே படம் பார்க்க). இவ்வகையான மட்பாண்டங்களின் அமைப்பு முறையும் காலக்கணிப்பும் மூன்றாம் இயலில் கூறப்பட்டுள்ளன.

கட்டட அமைப்பு

பண்டைய யாழ்ப்பாணத்தில் கிடைத்த கல் வகைகளில் சுலபமாகக் கிடைத்தவை சுண்ணாம்புக்கற்கள் ஆகும். கந்தரோடையில் காணப்பட்ட ஸ்தூபங்களின் அடித்தளங்கள் வெட்டப்பட்ட சுண்ணாம்புக் கற்களைக் கொண்டே கட்டப்பட்டிருக்கின்றன. அதுபோல ஆனைக்கோட்டை – நவாலி எல்லைப் பகுதியில், மூடியிருந்த பற்றை பறகுகளையும் மண்ணையும் அகற்றி வெளிக்கொணரப்பட்ட பாழடைந்த கட்டடம் ஒன்று பொழியப்பட்டு, நேராக வெட்டப்பட்ட சுண்ணாம்புக் கற்பாளங்களால் கட்டப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. ஏற்கனவே கூறப்பட்டிருந்தது போல இப்பிராந்தியத்தில் பளபளப்பாய் மினுக்கப்பட்ட நீள்சதுரமான சுண்ணாம்புக் கற்களும், பவளப்பாறைகளும் (Coral rock), மரம் நடுவதற்கேற்ற குழிக்கற்களும் பரவிக்கிடப்பது, இவ்விடத்தில் இம்மாதிரியான கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இதுபோன்ற புராதனக் கட்டடங்கள் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. இவ்விடத்தில் முறையான ஓர் அகழாய்வு செய்வதன் மூலமே இவற்றை வெளிக்கொணர முடியும்.

ஆனைக்கோட்டைத் தொல்லியல் அகழ்வாய்வு – 1980

1980 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் ஆனைக்கோட்டையில் மேற்கொண்ட மேலாய்வுகளின் போது அந்த மையத்தின் தொல்லியல் வளம் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. இந்திரபாலா தலைமையில் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், கலாநிதி பொ. இரகுபதி ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் துணையோடு 1980 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் அங்கே அகழ்வாய்வுகளை மேற்கொண்டார்கள். மண்ணை அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போதே அகழ்வாராய்ச்சிப் பணியும் தொடர்ந்தது. மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது பல எச்சங்கள் சிதைந்தும், குழப்பப்பட்டுங் காணப்பட்டாலுங்கூட, ஓரளவுக்கு இக்குறைபாடுகள் அற்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு இப்பகுதியின் கலாசார முக்கியத்தினை எடுத்துக்காட்டியுள்ளது (சிற்றம்பலம், சி.க. 1993: 16). 

ஆனைக்கோட்டை கரையாம்பிட்டி மண்மேட்டு அகழ்வாய்வு

ஆனைக்கோட்டையில் கலைக்கப்பட்ட கரையாம்பிட்டி மண்மேடுகளின் வரிசையில், கலைக்கப்படாதிருந்த ஒரு மண்மேடு அகழ்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டது. ஈமச்சின்னங்களை உள்ளடக்கிய இந்த மண்மேட்டின் உயரம் சுமார் 4 அடிகளாகும். இந்த மேட்டில் 13 அடி நீளமும் 7 அடி அகலமுமான பகுதி அளந்து அகழ்வு செய்யப்பட்டது. இந்த அகழ்வில் நான்கு மண்படைகள் இனங்காணப்பட்டன.

முதலாம் படை I: இந்த மண்படை ஊரிகள், சங்குகள், நத்தை ஓடுகள், பவளச்சுண்ணப் பாறைகள் கலந்த மண்படையாகும். அருகிலுள்ள வயல்களைத் திருத்தும் வேளையில், அவற்றின் மேற்படையில் கடற்காற்று அடித்துக் கொண்டுவந்த கடற்கரை மணல்களோடு வந்த இப்பொருட்களைக் கொண்ட மண்ணை வயற்கரைகளில் வாரிக் கொட்டியபோது இவை சேர்ந்திருக்கலாம்.

இரண்டாம் படை II: இந்த மண்படை மணல் கலந்த செம்மஞ்சள் நிற மண்படை.

மூன்றாம் படை III:  இது ஒரு வகையான இருவாட்டி மண்ணினால் ஆனது.

நான்காம் படை IV: இந்த மட்டத்தில் இருவாட்டி மண்ணும், இயற்கையான மண்ணும் கலந்து காணப்பட்டது. 

இந்த மூன்றாம், நான்காம் மண் அடுக்குகளில் இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை காணப்பட்ட இடங்கள் A,B என அடையாளப்படுத்தப்பட்டன. இப்படையில் சுமார் பத்து அடிக்கு அப்பால் இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் இவற்றின் காலம் முன்-பின்னதாக அமைந்திருந்தது என்பதை உணர்த்தும் வகையில் இப்படையின் அமைப்பு அமைந்திருந்தது. இவற்றில் முதலாவது எலும்புக்கூடு (A) நான்காவது மண்படையில் புதைக்கப்பட்டு, அதற்கு மேல் வரிசையாக கோடிட்ட சுட்ட ஓடுகள் அடுக்கப்பட்டிருந்தன. இரண்டாவது எலும்புக்கூடு (B), முதலாவது புதையலிலிருந்து 10 அடி தூரத்தில் மூன்றாவது மண்படையில் புதைக்கப்பட்டிருந்தது (Sitrampalam, S.K., 1983: 5-6; Ragupathy, P. 1987: 118-119). 

ஈமப்புதையல் – (A)

இங்கே அகழ்ந்தெடுக்கப்பட்ட இரு சடலங்களும் ஏறக்குறைய ஐந்து அடி உயரமானவை. இவை இரண்டும் மேற்கு – கிழக்குத் திசையை நோக்கிய வண்ணம் புதைக்கப்பட்டிருந்தன. முதலாவது புதைகுழியில் (A) காணப்பட்ட சடலத்தின் மேல் 12 வரிசையில் ஓடுகள் அடுக்கப்பட்டிருந்தன. சடலத்தின் இரு கைகளும் இடுப்பை நோக்கி மடித்த வண்ணம் காணப்பட்டன. இடுப்புக்குக் கீழே உள்ள பகுதிகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. இம்மனித உடலைச் சுற்றிவர நிவேதனப் பொருட்களாகப் பல பொருட்கள் படைக்கப்பட்டிருந்தன. இப்பொருட்கள் இறந்த இம்மனிதனுக்குச் செய்யப்பட்ட கிரியைகளின் எச்சங்கள் போலத் தோன்றின. இவற்றுள் மீன், சுறா ஆகியவற்றின் எலும்புகள், நண்டு ஓடுகள், சிப்பிகள், பலவகை மிருக எலும்புகள் என்பன குறிப்பிடத்தக்கன. இவை மட்பாண்டங்களினுள்ளே வைத்துப் புதைக்கப்பட்டிருந்தன. இந்த மட்பாண்டங்கள் கிண்ணங்கள், வட்டில்கள், பானைகள் என்பனவாகும். இவற்றுள் ஆரம்பப் பெருங்கற்கால முறிவளைவு கொண்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், ஆரம்பகால சிவப்பு நிற மட்பாண்டங்கள் குறிப்பிடத்தக்கன. இம்மட்பாண்டங்களில் சித்திர எழுத்துகள் (Graffiti) வரையப்பட்டிருந்தன. சடலத்தின் காலடியில் பல சிப்பிகள் கூட்டாகப் புதைக்கப்பட்டிருந்தன. இவை அக்காலத்தைய ஈமப்புதையல் கிரியைகளாக இருக்கலாம். இவற்றைத் தவிர இரும்பினால் செய்த ஆணிகள், குத்துவாள், இரும்புக் கசடுகள் என்பனவும் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன (Ragupathy, P. 1987: 119; சிற்றம்பலம், சி.க. 1993: 19).

முதலாவது ஈமப்புதையலில் கண்டெடுத்த முக்கியமான கண்டுபிடிப்பு சடலத்தின் தலையின் அருகில் ஒரு கறுப்பு – சிவப்புக் கிண்ணத்தினுள் வைக்கப்பட்டிருந்த கைவிரலில் அணியும் முத்திரை மோதிரமாகும். இத்தகைய பெருங்கற்காலச் சவ அடக்கங்களில் தென்னிந்தியாவிலோ, இலங்கையிலோ இதற்கு முன் இப்படிப் பெயர் பொறித்த பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இம்மோதிரம் ஒரு முத்திரையாகப் பயன்படுத்தப்பட்டது. இம்முத்திரையில் இரண்டு வரிகளில் எழுத்துகள் உள்ளன. முதல் வரியில் மூன்று குறி எழுத்துகளும், இரண்டாவது வரியில் மூன்று பிராமி எழுத்துகளும் உள்ளன (Ragupathy, P. 1987: 119; Indrapala, K. 1987:201). இது பற்றிப் பின்னர் விரிவாகப் பேசப்படும்.  

ஈமப்புதையல் – (B)

முதலாவது ஈமப்புதையலுக்குச் சற்றுத் தெற்கே இரண்டாவது சடலம் அகழ்ந்தெடுக்கப்பட்டது. மேற்கு – கிழக்கு நோக்கிய வண்ணம் நீளக்கிடத்திப் புதைக்கப்பட்டிருந்த இச்சடலம் நான்கடி, ஒன்பது அங்குல உயரமானது. இது நிலத்தினுள் மூன்றாம் படை மட்டத்தில், முதலாவது புதையலுக்குச் சற்றுப் பிந்திய காலத்திற்குரியதாகக் காணப்பட்டது. இச்சடலத்தின் அடியில் படுக்கையாக சிப்பி ஓடுகள் பரப்பப்பட்டிருந்தன. இந்தச் சடலத்தின் காலடியில் ஒரு லக்ஷ்மி வில்லை, இரும்பு வாளின் துண்டுகள், இரும்பினாலான அகல் விளக்கு என்பன புதைக்கப்பட்டிருந்தன (Ragupathy, P. 1987: 120).

பெருங்கற் பண்பாட்டுப் புதையல்கள்

ஆனைக்கோட்டைக் கரையாம்பிட்டி மண்மேட்டு அகழ்வுகளின் மூலம் இது ஒரு பெருங்கற் பண்பாட்டை எடுத்துக்காட்டும் கலாசார மையமாக உணரப்பட்டது. இப்பண்பாடு வரலாற்றுதயக் காலத்தில் தென்னிந்தியாவில் ஆரம்பமாகி இலங்கை முழுவதும் பரவியிருப்பதை சமீபகால ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இன்றைய கற்கை நெறிகள், இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுதயக் காலத்தில் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இது ஒரு பொதுவான வாழ்க்கைப் பண்பாக இருந்து, பின்னர் இப்பண்பாடே இவ்விடங்களின் வரலாற்று ஆரம்பத்திற்குக் காரணமாக இருந்தது என்கின்றன.

ஆனைக்கோட்டையின் பெருங்கற் பண்பாட்டை எடுத்துக்காட்டும் கீழ்க்காணும் அடிப்படைத் தத்துவங்கள் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் பெருங்கற் புதையல்களின் பொதுவான அம்சங்களாகும்.

  1. நிவேதனப் பொருட்களோடு மேற்கொள்ளப்படும் சடங்கு முறைமையான ஈமப்புதையல்கள்.
  2. ஈமப் புதையல்களில் காணப்படும் கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள்.
  3. ஒரே வகையான நிவேதனப் பொருட்கள்.
  4. இரும்புப் பொருட்களும், இரும்பை உருக்கி வேலை செய்யும் போது கழிவுப் பொருட்களாக வரும் இரும்புக் கசடுகளும் இக்கால மக்கள் இரும்புத் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தார்கள் என்பதற்கான சான்றுகள். 
  5. மட்பாண்டங்களில் காணப்படும் பெருங்கற்காலச் சித்திர எழுத்துகள்.

இப்புதையல் மேடுகளின் மேற்பகுதி கலைக்கப்பட்டிருந்தமையால் அதன் மேற்தளக் கூறுகளைப் பற்றி அறிய முடியவில்லை. ஆனால், முதலாவது ஈமப்புதையலின் மேல் அடுக்கப்பட்டிருந்த 12 வரிசை ஓடுகளும் இது ஒரு முக்கியமான மனிதரின் புதையலுக்கான பெருங்கற் பண்பாட்டு அம்சமாக இருக்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களாகும். இச்சடலத்தின் தலையினருகில் கண்டெடுக்கப்பட்ட அரச முத்திரை இந்த மனிதரை ஒரு முக்கியமான தலைவனாகக் காண்பிக்கின்றது. ஆதலால் இந்த ஓடுகளின் வரிசையும் இந்த மனிதரின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. பெருங்கற் புதையல்களில் பொதுவான பண்பாட்டு அம்சங்கள் காணப்பட்ட போதிலும், இடத்துக்கு இடம் காணப்படும் தனிப்பட்ட வேறுபாடுகளில் இது ஒன்றாக இருக்கலாம் (Ragupathy, P. 1987: 121).

ஆனைக்கோட்டை பெருங்கற்பண்பாட்டு ஈமப்புதையல்களின் மற்றொரு வகை, 29-11-1980 இல் வெளிக்கொணரப்பட்ட மேற்பகுதி பழுதடைந்த தாழிப்புதையல். இறந்தவர்களின் சடலத்தையோ, எலும்புகளையோ நான்கடி வரை உயரமான பெரிய தாழிகளில் இட்டுப் புதைப்பது இன்னொரு வகையான பெருங்கற் பண்பாட்டு ஈமப்புதையல். கரையாம்பிட்டி மண்மேட்டில் புதைகுழிக்கு 3 மீட்டர் கிழக்கே, மேற்பகுதி அகழப்பட்ட மண்மேட்டில் இத்தாழி காணப்பட்டது (Ragupathy, P. 1987: 121).

இப்புதையல்களோடு பெருங்கற் பண்பாட்டு அம்சமான ஆரம்பகால கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள் (கி.மு. 1500 – கி.மு. 300), ஆரம்பகால சிவப்பு மட்பாண்டங்கள்       (கி.மு. 1200 – கி.மு. 300) ஆகியனவும் காணப்பட்டன. கதிரியக்கக்கரிம ஆய்வுகளின்றி  இப்புதையல்களின் சரியான காலக்கணிப்பை அளவிட முடியாதிருந்த போதிலும், இந்த ஆரம்பகால மட்பாண்டங்களைக் கொண்டு இப்புதையல்கள் இரண்டும் கி.மு. 300 ஆம் ஆண்டுக்காலத்திற்கு முற்பட்டவை எனக் கொள்ளலாம்.

ஆனைக்கோட்டை அரச முத்திரை – 𑀓𑁄𑀯𑁂𑀢

ஆனைக்கோட்டையில் 1980 டிசெம்பர் மாதத்தில் பேராசிரியர் இந்திரபாலா தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து வரலாற்றுத் துறையைச் சேர்ந்த ஒரு குழு அகழாய்வை நடத்தியபோது பெருங்கற் பண்பாட்டு ஈம அடக்கம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டது. அதில் காணப்பட்ட எலும்புக்கூட்டுடன் கைவிரலில் அணியும் ‘ஸ்றீற்றைற் ’ எனப்படும் கல்லிலாலான மோதிரம் ஒன்று, பொறிக்கப்பட்ட எழுத்துகளுடன் கிடைத்தது. இம்மோதிரம் ஒரு முத்திரையாகப் பயன்படுத்தப்பட்டது. இம்முத்திரையில் இரண்டு வரிகளில் எழுத்துகள் இருந்தன. முதல் வரியில் மூன்று குறி எழுத்துகளும், இரண்டாவது வரியில் மூன்று பிராமி எழுத்துகளும் காணப்பட்டன.  

இம்முத்திரையிலுள்ள எழுத்துகளைப் பற்றி முதன்முதலாக விளக்கமளித்த பேராசிரியர் இந்திரபாலா முதல் வரியில் உள்ள எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகள் என்றும், அடுத்த வரியில் உள்ளவை பிராமி வாசகம் எனவும் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் முதல் தடவையாக சிந்துவெளி எழுத்து வாசகமொன்றை பிராமி எழுத்துப்பெயர்ப்பு மூலம் வாசிக்கக்கூடிய சாத்தியம் ஒன்று இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார் (‘So, for the first time we have a chance of deciphering one complete legend in the characters of the Indus-derived script with the aid of a Brahmi transliteration’) (Indrapala, K. 1981, 1987: 201). 

இரண்டாவது வரியில் பிராமியில் எழுதிய சாசனத்தில் மூன்று எழுத்துகளும் ஒரு அநுஸ்வரமும் காணப்படுகின்றன. முதலாம் எழுத்தின் எல்லா அம்சங்களையும் மிக அவதானமாகக் கவனிக்குமிடத்து அவை தொடக்கத்திற் சில பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற போதிலும், அவை மிக நெருக்கமாக, ஒரு சிறிய இடத்தில் எழுதப்பட்டுள்ளன. முதலாவது எழுத்தை வாசிக்க முற்படுமிடத்து சில கஷ்டங்கள் இருப்பினும், அதன் எல்லா அம்சங்களையும் கூர்ந்து அவதானிக்குமிடத்து அது ‘கோ’ என்ற உயிர்மெய் எழுத்தென்பது தெரிகிறது. இரண்டாம் எழுத்தை ‘வே’ என்றும் அடையாளங்காண முடிகின்றது. ‘த’ என்னும் எழுத்தின் மேல் ஒரு புள்ளியோ அநுஸ்வரமோ தெரிகின்றது. இச்சொல்லினை இரண்டு விதமாக அடையாளப்படுத்தலாம். அது அநுஸ்வரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதனைத் ‘த’விற்கு முன்னதாகக் கொண்டால் சாசனத்தை ‘கோவேந்த’ என வாசிக்கலாம். அநுஸ்வரத்தை ‘த’விற்குப் பின்னுள்ளதாகக் கொண்டால் வாசகத்தை ‘கோவேந்தன்’ எனக் கொள்ளமுடியும். எவ்வாறாயினும் அது திராவிட மொழியிலுள்ளதாகும் (Indrapala, K. 1987: 201-202).

பேராசிரியர் இந்திரபாலாவின் மேற்கூறப்பட்ட விளக்கத்திற்கு பேராசிரியர் பத்மநாதன் கீழ்க்காணும் விமர்சன விளக்கத்தைத் தருகிறார்:

மேற்கூறப்பட்ட விளக்கத்திலே சில அடிப்படைப் பிரச்சினைகள் உண்டு. ஒன்று அநுஸ்வரம் பற்றியது. இரண்டாவது ஆனைக்கோட்டை முத்திரையில் இருமொழிச் சாசனம் எழுதப்பட்டுள்ளது என்ற சிந்தனை. முத்திரையிலே கோவேதன் என்ற பெயர் திராவிட (தமிழ்) மொழியில் அமைந்துள்ளது என்று பேராசிரியர் கா. இந்திரபாலா சொல்வது பொருத்தமானது. அது மறுப்பதற்குரியதுமன்று. ஆனால் அநுஸ்வரம் பற்றியும் இருமொழி வாசகம் பற்றியும் அவர் கூறும் விளக்கங்கள் அவ்விதமானவை போலத் தெரியவில்லை. வாசகம் தமிழில் அமைந்திருப்பின் புள்ளியை அநுஸ்வரமாகக் கொள்ளவியலாது. அநுஸ்வரம் சமஸ்கிருத மொழி வழக்கிலுள்ளது. தமிழ்மொழி ஆவணங்களில் அது இடம்பெறுவதில்லை. இலக்கண நூலாசிரியர்களும் அதனைப் பற்றிச் சொல்வதில்லை. தொல்காப்பியம் புள்ளி இடவேண்டிய இடங்களைப் பற்றியே குறிப்பிடுகிறது. அநுஸ்வரம் பற்றியோ அதனைப் போன்ற வேறொன்றைப் பற்றியோ அது குறிப்பிடவில்லை (பத்மநாதன், சி. 2011: 33).

‘கோ’ என்னும் எழுத்துக்குப் பின்னால் வரும் சொல்லை ‘வேந்தன்’ என்று கொள்வது எவ்வாறு பொருந்தும்? ஒரே பொருளுடைய இரு சொற்களை, இரண்டு சொற்களை மட்டுங்கொண்ட வாசகத்திற் பயன்படுத்தினார்கள் என்று கொள்ள முடியாது. எனவே ‘கோ’ என்பதை பதவியினைக் குறிக்குஞ் சொல்லாகவும் ‘வேதன்’ என்பதை முத்திரையின் உடைமைக்காரனது பெயராகவும் கொள்வதே பொருத்தமான விளக்கமாகும். ‘கோ’ என்பது தொடக்க நிலையில் குறுநிலப் பிரிவுகளின் அதிபருக்குரிய பதவிப்பெயராக வழங்கியது. பிற்காலங்களில் அரசர்களையும் சக்கரவர்த்தியினோரையும் ‘கோ’ என்று அவர்களின் ஆவணங்கள் குறிப்பிட்டன (பத்மநாதன், சி. 2011: 33-34).

முத்திரையிலுள்ள மேல்வரியிற் காணப்படும் சித்திரங்களைச் சித்திர எழுத்துகளாகக் கொள்வது வெறுங்கற்பனையாகும். அவற்றில் வலமிருந்து இடமாகவுள்ள இரண்டு வடிவங்களும் குறியீடுகளாகவே கொள்ளத்தக்கவை. கேரளத்திலுள்ள எடகல் என்னுமிடத்தில் ‘கடும்மி புத சேர’ என்ற வாசகத்தைத் தொடர்ந்து திரிசூலம் போன்ற அடையாளம் அமைந்துள்ளது. அதனைத் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையினர் ‘பனைமரம்’ என்று கொள்ளத்தக்க குறியீடு என்று குறிப்பிட்டுள்ளனர் (ஸ்ரீதர் 2006: 83, பத்மநாதன், சி. 2011: 34). ஐராவதம் மகாதேவன் இந்த அடையாளத்தை சேர அரசர் குல விருதுச்சின்னங்களில் ஒன்றான பனைமரம் (One of the insignia of the Cēra dynasty) எனக் குறிப்பிடுகின்றார் (Mahadevan, I. 2003: 610).

ஆனைக்கோட்டை முத்திரையில் குறியீடுகள் மேல்வரியிற் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றைச் சாசனத்தின் இறுதியான வடிவங்கள் என்று கொள்வது பொருத்தமாகும். சாசனம் கீழ்வரியிலுள்ள வலப்பக்கத்து முதலெழுத்துகளுடன் ஆரம்பமாகின்றது. வலமிருந்து இடமாக வாசிப்பதன் மூலமே ‘கோவேத’ என்ற சொற்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. மேல்வரியை சாசனத்தின் தொடர்ச்சியாகக் கொண்டு இடமிருந்து வலமாக நோக்குமிடத்து அவ்வரியிலுள்ள முதலெழுத்தைத் தமிழுக்குச் சிறப்பெழுத்தான ‘ன’ வின் அடையாளம் என்று கொள்வதில் எதுவிதமான சிரமமும் இல்லை. உலோகத் துண்டத்தின் (ஸ்றீற்றைற் கல்லின்) எல்லைப்புறமான கோணத்தில் அது அமைந்திருப்பதால் அந்த எழுத்திற்குரிய ஒரு வளைகோட்டினை அதில் எழுத முடியவில்லை. இவ்வண்ணமாகச் சாசனத்தை நோக்குமிடத்து ‘கோ வேதன்’ என்ற வாசகம் உறுதியாகின்றது. அதனையடுத்து அமைந்துள்ள வடிவங்கள் இரண்டும் எடகல்லில்  காணப்படும் சாசனத்தைப் போலக் குறியீடுகளாக வருகின்றன. அவற்றைக் கோ வேதனின் பதவிக்குரிய இலச்சினைகள் என்று கருதலாம் (பத்மநாதன், சி. 2011: 35).

ஆனைக்கோட்டை முத்திரையின் காலம்

ஆனைக்கோட்டை முத்திரையில் காணப்படும் பிராமி எழுத்துகளின் வடிவ அமைப்பியலைக் (Morphology) கொண்டு அந்த முத்திரையின் காலம் கி.மு. 300 ஆம் ஆண்டிற்கு உரியதாகக் கணிக்கப்படுகின்றது (Indrapala, K. 1987: 200; Ramesh, K.V. 1987: 204).

ஆனால், எழுத்துகளின் வடிவ அமைப்பியலைக் கொண்டு கணிப்பிடும் காலக்கணிப்பு எப்போதும் சரியாக இருக்கும் எனக் கொள்ள முடியாது. உதாரணமாக தமிழ்நாட்டில் அழகன்களம், ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், கீழடி ஆகிய இடங்களில் கண்டெடுத்த மட்பாண்ட ஓடுகளில் காணப்பட்ட ஆனைக்கோட்டை எழுத்துகளை நிகர்த்த பிராமி எழுத்து வடிவங்கள் அவற்றின் வடிவ அமைப்பியலைக் கொண்டு கி.மு. 300 ஆம் ஆண்டிற்கு உரியதாக முதலில் கணிப்பிடப்பட்டன. ஆனால் கீழடி, ஆதிச்சநல்லூர்  அகழ்வாய்வுகளில் கிடைத்த அறிவியல் ரீதியான காலக் கணிப்புகள் தமிழ்ப் பிராமி எழுத்துகளின் காலத்தை கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்கின்றது (இரா. சிவானந்தம் 2019: 08). இவை போன்று ஆனைக்கோட்டை முத்திரையின் காலமும் கி.மு. ஐந்தாம் – ஆறாம் நூற்றாண்டிற்கு உரியதாக இருக்கலாம். எனவே, அறிவியல் ரீதியான கதிரியக்கக் காலக் கணிப்பை மேற்கொண்டாலே ஒழிய ஆனைக்கோட்டை முத்திரையின் சரியான காலத்தை அறிந்துகொள்ள முடியாது. அதுவரையில் அதன் காலத்தை கி.மு.300 ஆம் ஆண்டு என்றே கொள்ள முடியும்.

யாழ்ப்பாணத்தில் அரசமைப்பின் ஆரம்பம்

யாழ்ப்பாண மண்ணில் ஓர் அரசமைப்பு, அது வெளியிடப்பட்ட காலப்பகுதியில் நடைமுறையில் இருந்திருக்கின்றது என்பதை நமது அறிவியலால் அறிந்துகொள்வது மட்டுமல்லாது, இன்று அந்த அரசமைப்பை வெளிப்படுத்தும் ‘தொட்டுணரக்கூடிய மரபுரிமைச் சான்றாகவும்’ (Evidence of a Tangible Cultural Heritage) இருப்பதுமே  ஆனைக்கோட்டை முத்திரையின் முக்கியத்துவமாகும்.

முத்திரையில் இடம்பெறும் ‘கோ’ என்னும் அடைமொழி அவனது பெயரோடு இணைந்துள்ளதால் அவனை ஓர் அரசனாகவோ அல்லது சிற்றரசனாகவோ பதிவு செய்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், அதனை அடுத்துள்ள தீவுகளிலும், ஆதி இரும்புக்காலத்திற்குரிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் ஏற்படுத்திய குடியிருப்புகள், காலப்போக்கிலே சிற்றரசுகளாக உருவாகிவிடத் தொடங்கிவிட்டன என்பது ஆனைக்கோட்டையில் கிடைத்த எழுத்துப் பொறித்த முத்திரை அறுதியிட்டு உறுதிப்படுத்தும் (Affirmative evidence) சான்றாகும்.

உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்:

  1. BEGLEY, VIMALA (1981): ‘Excavations at Pomparippu 1970’, Ancient Ceylon, No. 4., May 1981.
  2. INDRAPALA, K. (1981): The Anaikkoddai Indus-Brahmi Seal, The Hindu, 26-04-1981.
  3. INDRAPALA, K. (1987): ‘Anaikoddai Seal’ in P.Ragupathy: Early Settlements in Jaffna, Mrs Ragupathy, Madras.
  4. MAHADEVAN, IRAVATHAM (2003): Early Tamil Epigraphy, Harvard University, USA.
  5. RAGUPATHY, P. (1987): Early settlements in Jaffna, Mrs. Ragupathy, Madras.
  6. SITRAMPALAM, S.K. (1983): Ancient Jaffna: An Archaeological Perspective, Journal of South Asian Studies, Vol.3, No. 182.
  7. SITRAMPALAM, S.K. (1992): The Dawn of Civilization in Sri Lanka – A Study, Paper presented at the First Annual Conference of the Jaffna Science Association, Jaffna.
  8. THIAGARAJAH, SIVA (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Tamil Information Centre, UK.
  9. இந்திரபாலா, கா., (2006), இலங்கையில் தமிழர்: ஓர் இனக்கழு ஆக்கம் பெற்ற வரலாறு. பொ.ஆ.மு. 300 பொ.ஆ.மு. 1200, குமரன் புத்தக இல்லம், சென்னை-கொழும்பு.
  10. இரகுபதி, பொ., (1983), பெருங்கற்கால யாழ்ப்பாணம், பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை (24-06-1983). திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.
  11. இரா. சிவானந்தம் (பதிப்பாசிரியர்), (2019), கீழடி: வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம், தமிழ்நாடு அரசு, சென்னை.
  12. சிற்றம்பலம், சி.க., (1993), யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.
  13. ஸ்ரீதர், தி., (பதிப்பாசிரியர்), (2006), தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை. (பக். 83).
  14. பத்மநாதன், சி., (2011), யாழ்ப்பாண இராச்சியம்: ஒரு சுருக்க வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை.


About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்