அநகாரிக தர்மபாலவின் பௌத்த சமயச் சீர்திருத்த இயக்கம்: தனிநபர் அடையாளமும், பண்பாட்டு நெருக்கடியும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
45 நிமிட வாசிப்பு

அநகாரிக தர்மபாலவின் பௌத்த சமயச் சீர்திருத்த இயக்கம்: தனிநபர் அடையாளமும், பண்பாட்டு நெருக்கடியும்

August 22, 2025 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

ஆங்கில மூலம்: கணநாத் ஒபயசேகர 

1

தியோசொபிக்கல் சபை என்ற அமைப்பை 1875 ஆம் ஆண்டில் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட், பிளவாட்ஸ்கி அம்மையார் என்ற இருவரும் அமெரிக்காவில் நிறுவினர். கிழக்குத் தேசங்களின் சமயங்களிலும் அவற்றின் ஆன்மிகச் சிந்தனையிலும் அக்கறை கொண்டவர்களான இவர்கள் 1878 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தனர். இந்தியா வந்து சேர்ந்த இவ்விருவரும் சென்னையின் அடையாறு என்னும் இடத்தில் தலைமையகம் ஒன்றை அமைத்தனர். அநகாரிக தர்மபாலவின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தியோசொபிக்கல் சபையினையும், ஹென்றி ஸ்டீல் ஒல்கொட், பிளவாட்ஸ்கி அம்மையார் என்ற இரு ஆளுமைகளையும் பற்றிக் குறிப்பிடாமல், அநகாரிக தர்மபாலவின் ஆளுமை, அவரது வாழ்க்கையும் பணிகளும் என்ற விடயம் பற்றி அறிந்துகொள்ள முடியாது. அநகாரிக தர்மபாலவின் ஆளுமை பற்றியும், அவரது உளவியல் சிக்கல்கள் பற்றியும் ‘Personal Identity and Cultural Crisis: The Buddhist Reforms of Anagarika Dharmapala’ என்னும் தலைப்பிலான கட்டுரையை கணநாத் ஒபயசேகர எழுதியுள்ளார் (Obeyesekere, 2018). அக்கட்டுரையைத் தழுவி இத்தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தியோசொபிக்கல் சபையின் தாபகர்களான பிளவாட்ஸ்கியும், ஒல்கொட்டும் ஆன்மிக விடயங்களில் வெவ்வேறுபட்ட விருப்புகளையும், தனிப்பட்ட நாட்டங்களையும் உடையவர்களாக இருந்தனர். பிளவாட்ஸ்கி அம்மையார் கிழக்குத் தேச சமயங்களின் மந்திர தந்திரச் சடங்குகளில் ஆர்வங் கொண்டிருந்தார். அவர் திபெத்திய பௌத்தம் பற்றி அறிந்துகொள்ளவும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒல்கொட்டின் விருப்பங்கள் வேறுபட்டனவாக இருந்தன. ஒல்கொட் பௌத்த சமயத்தைப் படித்து அறிந்து அதன் அடிப்படையிலான தத்துவங்களை மேற்கு நாட்டின் புரட்டஸ்தாந்தியச் சமயத்தின் விழுமியங்களின் அடிப்படையில் விளக்கம் கூற முனைந்தார். மேற்கத்தைய சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றிருந்த புரட்டஸ்தாந்திய மேற்கத்தைய விழுமியங்களின்படி (Dominant Protestant and Western Values) அவர் பௌத்தத்தை விளக்குவதற்கு முயன்றார் என்பதால் அவர் கண்டுபிடித்துக்கூறிய பௌத்தத்தை ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ (Protestant Buddhism) என கணநாத் ஒபயசேகர அழைத்தார். ஒல்கொட்டின் எதிர்ப்பு (Protest) மரபுவழிப் பௌத்தத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. காலனிய அரசின் அதிகாரத்தின் துணையுடன் செயற்பட்ட கிறிஸ்தவ மிஷனரிகளின் மதப்பரப்புகைக்கும் எதிரான எதிர்ப்பும் அவரது புரட்டஸ்தாந்திய பௌத்தத்தில் உள்ளடங்கியிருந்தது. 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கிறிஸ்தவத்தை எதிர்கொண்ட இலங்கையின் பௌத்த பிக்குகள் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் தொடர்ச்சியான பல விவாதங்களை நடத்தினர் (Malalgoda 1976: 191 – 255). பிளவாட்ஸ்கியும் ஒல்கொட்டும் 1880 இல் இலங்கைக்கு வந்தபோது, அவ்விருவரையும் இலங்கையின் பௌத்தர்கள் அன்போடு வரவேற்றனர். பௌத்தத்தின் பாதுகாவலர்களான மேற்கு நாட்டவர் என்ற வகையில் அவ்விருவரும் வரவேற்கப்பட்டனர். இதன்பின்னர் ஒல்கொட் இலங்கையில் தொடர்ச்சியாகத் தங்கியிருந்தார்; வெளியே சென்றாலும் இலங்கைக்குத் திரும்பி வந்து பணியாற்றினார். பிளவாட்ஸ்கி மந்திர தந்திர நடைமுறைகளிலேயே தம் கருத்தை முழுமையாகச் செலுத்தினார். திபெத்தின் வஜ்ஜிரயான பௌத்தப் பிரிவின் தத்துவங்களிலும் நடைமுறைகளிலும் கூடிய ஆர்வம் செலுத்தினார். இதனால், பிளவாட்ஸ்கி, ஒல்கொட் என்ற இவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன; உறவிலும் விரிசல் ஏற்பட்டது.

இலங்கையின் சிங்கள பௌத்த அறிவாளிகள் ஒல்கொட் தொடங்கி வைத்த பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தில் படிப்படியாக இணைந்து கொண்டனர். இது தவிர்க்க முடியாததாகவும் அமைந்தது. இந்த மறுமலர்ச்சி இயக்கம் ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ ஆகும். இதனை முன்னெடுத்த அமைப்பு பௌத்த தியோசொபிக்கல் சபை (BTS) ஆகும். இலங்கையில் தியோசொபிக்கல் சபை கிறிஸ்தவப் பாடசாலைகள் மாதிரியில் பல பாடசாலைகளை நிறுவியது. கிறிஸ்தவப் பாடசாலைகள் கிறிஸ்தவத்திற்கு குழந்தைகளை மதம் மாற்றின. அப்பாடசாலைகள் ஆங்கிலம் கற்ற உயர் வகுப்பினருக்கு மட்டும் உரியனவாக விளங்கின. தியோசொபிக்கல் சபை பாடசாலைகள் மாணவர்களுக்கு பௌத்த சூழலில் ஆங்கிலக் கல்வியைப் பெற வழிவகுத்தது. ஒல்கொட் தொடங்கி வைத்த பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் இறுதியாக ஒல்கொட்டின் சீடரான அநகாரிக தர்மபாலவினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது. அநகாரிக தர்மபால ஒல்கொட்டின் இயக்கத்திற்கும் புதிய திசைவழியைக் காட்டினார். அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், தீவிர கிறிஸ்தவ எதிர்ப்பாளராகவும் விளங்கினார். ஒல்கொட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத திசையில் அவர் பயணித்தார். இறுதியில் தியோசொபிக்கல் சபையிலிருந்தும் அநகாரிக வெளியேறினார். “இக்கட்டுரையில் நான் எரிக்சன் (Erikson) என்னும் உளவியலாளரின் கருத்துகளைப் பிரயோகித்து அநகாரிக தர்மபாலவின் ஆளுமை உருவாக்கம் பற்றியும் அவர் எதிர்கொண்ட உளவியல் சிக்கல்கள், அதற்கான தீர்வு என்பன பற்றியும், அவரது பௌத்த சமய சீர்த்திருத்தவாதி என்ற வகிபாகத்தில் தனிநபர் அடையாளச் சிக்கல் எவ்வாறு பிதிபலித்தது என்பதையும் ஆராயவுள்ளேன்” என கணநாத் ஒபயசேகர குறிப்பிட்டுள்ளார். எரிக்சன் எனும் உளவியலாளர் லூதர் பற்றி Youngman Luther: A Study (1962) என்ற நூலை எழுதினார். எரிக்சன் காந்தி பற்றி ‘Gandhi’s Truth: On The Origins of Militant Non – violence’ (1970) என்ற நூலையும் எழுதினார். லூதர், காந்தி ஆகிய இரு தலைவர்களைப் பற்றிய இந்த ஆய்வுகளில் வரலாற்று நாயகர்களின் பெருமைமிகு வகிபாகத்தில் (Great Historic Role) இருண்ட பக்கம் ஒன்றும் உள்ளது என்பதை எரிக்சன் எடுத்துக்காட்டினார். தர்மபாலவின் பெரும் சிறப்புக்குப் பின்னாலும் ஓர் இருண்ட பக்கம் உள்ளது என்பதை தான் எடுத்துக்காட்ட உள்ளதாக ஒபயசேகர குறிப்பிடுகிறார். புத்தர், புதிய ஏற்பாட்டின் யேசுநாதர் என்ற இருவரும் அப்பழுக்கற்ற தூய வாழ்வுக்கு நிகரானவர்கள் அல்லது அவர்களுக்கு அருகாமையில் வைத்து எண்ணத்தக்கவர்கள் உலக வாழ்க்கையில் காணப்படுவது அரிது என்பது தனது தனிப்பட்ட கருத்து எனவும் ஒபயசேகர கூறுகிறார்.

குடும்பமும், இளமைப் பருவமும், சமூகமும்: வீரபுருஷர் ஒருவரின் அந்நியமாதல்

தென் இலங்கையின் மாத்தறைப் பகுதியில் ஹித்தாத்திய என்ற கிராமத்தில் அநகாரிக தர்மபாலவின் தந்தை ஹேவவித்தாரணலாகே டொன் கறோலிஸ் பிறந்தார். அநகாரிக தர்மபாலவின் தந்தை வியாபார முயற்சிகளில் ஈடுபட்டார். அவரது குடும்பத் தொழிலான தச்சுத் தொழிலை செய்துவந்த அவர் அத்தொழிலின் ஊடாக செல்வத்தை ஈட்ட ஆரம்பித்தார். வியாபார நோக்கத்தோடு கொழும்புக்கு இடம்பெயர்ந்த டொன் கறோலிஸ் கொழும்பு நகரில் ஒரு தளபாட உற்பத்திப் பட்டறையையும் விற்பனை நிலையத்தையும் தொடக்கி கொழும்பு நகரின் பிரபலமான வர்த்தகராக உயர்ச்சி பெற்றார். ‘டொன் கறோலிஸ் அன்ட் சன்ஸ்’ என்னும் பெயருடைய அவரது நிறுவனம் தளபாட உற்பத்தியிலும் விற்பனையிலும் முன்னணி நிறுவனமாக விளங்கியது. டொன் கறோலிஸ் விவசாயத் தொழில் சாதியான ‘கொவிகம’  சாதியைச் சேர்ந்தவர். ஆனால் அவரது மனைவி கடலோடிகளும், மீன் பிடிப்பவர்களுமான ‘கராவ’ சாதியைச் சேர்ந்தவர். டொன் அன்ரிஸ் பெரேரா என்பவரின் மகளான அவரை டொன் கறோலிஸ் திருமணம் செய்ததன் மூலம் வியாபார முயற்சிகளில் முன்நிலையில் விளங்கிய ‘கராவ’ சாதிக் குடும்பங்களுடன் அவருக்குப் பிணைப்பு உண்டானது. கிராமப் பின்னணியில் சாதி வேறுபாடு முக்கியமானது. ஆனால் கொழும்பு நகரிற்கு இடம்பெயர்ந்த கிராமத்து முயற்சியாளர்கள் சாதிக்கு முக்கியம் கொடுக்காமல் கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். கிராமியச் சூழலில் வியாபாரத் தொழில் முயற்சியாளர்களாகச் செயற்பட்ட ‘கொவிகம சாதி’ முயற்சியாளர் வகுப்பை ‘அப்புகாமி வர்க்கம்’ (Appuhami Class) என்று குறிப்பிடுவர். விவசாயத் தொழில் சாதியான கொவிகம ஆண்களின் பொதுப்பெயர்களில் ‘அப்புகாமி’ எனும் பெயர் பிரபலமானது. கிராமத்து உயரடுக்கைச் சேர்ந்த பணக்காரர்களை காலனிய ஆட்சிக்காலத்தில் ‘அப்புகாமிகள் வகுப்பு’ என அழைக்கும் வழக்கம் இருந்தது. இந்த அப்புகாமி வகுப்பினர் கொழும்பு நகருக்கு இடம்பெயர்ந்து வியாபாரம் செய்தபோது, சாதி எல்லைகளைத் தாண்டி வியாபார நலன் கருதிய கலப்புத் திருமணங்களையும் செய்துகொண்டனர் என்பதற்கு டொன் கறோலிஸ் ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடக்கூடியவர்.

கொழும்பு நகரில் அக்காலத்தில் உயர்நிலையில் இருந்த புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ உயர்குழாம் (Protestant Elite) கொழும்பு நகரின் ‘அப்புகாமிகளை’ ஏளனத்திற்குரியவர்களாக நடத்தியது. புரட்டஸ்தாந்திய உயர்குழாம் ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் என்ற ஆணவம் கொண்டவர்களாதலால், சிங்கள மொழி பேசும் அப்புகாமிகளை மதிக்கவில்லை. புரட்டஸ்தாந்திய உயர் வகுப்பின் வாழ்க்கைப் பாங்குகளைப் பாவனை செய்ய முயன்ற புதுப்பணக்காரர்களான (New Rich) அப்புகாமிகள் ஏளனத்திற்குரியவர்களாக்கப்பட்டதில் வியப்பில்லை. புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவ வகுப்பின் வாழ்க்கைப் பாங்குகளைக் கற்றுக்கொள்வதாயின், அவர்களின் பாணியில் உடைகளை அணிய வேண்டும், கொழும்பு நகரில் ஆடம்பரமான வீடுகளை வைத்திருக்க வேண்டும், வீடுகளில் வேலைக்காரர்களை வைத்திருக்க வேண்டும், தம்பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தைக் கற்பித்து அரசாங்க உத்தியோகங்களைப் பெறுவதற்குத் தயார்ப்படுத்த வேண்டும். டொன் கறோலிஸ் தன் மகன் தர்மபாலவை ஆங்கிலம் கற்றவராக, அரசாங்கத்துறையில் பதவி வகிக்கும் ஒருவராக உருவாக்கும் கனவோடு செயற்படத் தொடங்கினார். அப்புகாமி வகுப்பினர் தம்மையும் தம் பிற் சந்ததியினரையும் ஆங்கிலம் கற்றவர்களாகவும் மேற்கு நாட்டுக் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களாகவும் உருமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒல்கொட், தர்மபால ஆகிய இருவரும் பௌத்த ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவும் இயக்கத்தைத் தொடங்கி வைத்ததன் பயனாக 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலம் கற்ற பௌத்தர்கள் வகுப்பு ஒன்று உருவாகியது. டொன் கறோலிசும் அவரது மனைவியும் காலனிய அரசாங்கத்தால் ‘முகாந்திரம்’ (Muhandiram) என்ற கௌரவப் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். பணபலமும் அதிகாரமும் மிக்கவர்களின் அடையாளமாக விளங்கிய ‘முகாந்திரம்’ பட்டத்தைப் பெற்ற டொன் கறோலிஸ் குடும்பம் சமூக அந்தஸ்தில் தன்னை உயர்த்திக்கொண்டது. டொன் கறோலிஸ் குடும்பத்தின் இவ்வரலாற்றுப் பின்புலத்திலேயே தர்மபாலவின் ஆளுமை உருவாக்கத்தின் சமூக உளவியலை நாம் புரிந்துகொள்ள முடியும். 

அநகாரிக தர்மபால 1864 இல் ஹேவவித்தாரண டொன் கறோலிசின் மூத்த மகனாகப் பிறந்தார். அவரின் பிறப்பு அருகில் இருந்த புரட்டஸ்தாந்தியக் கோவிலில் பதியப்பட்டது. அவரது பதிவுப் பெயர் ஹேவவித்தாரணலாகே டொன் டேவிட் என்பதாகும். பிற்காலத்தில் தன் பெயரை மாற்றிக்கொண்ட தர்மபால தமது பெற்றோர் ஏன் தமக்குக் கிறிஸ்தவப் பெயரை வைத்தனர் என்பதற்கு விளக்கம் கூறினார். அக்காலத்தில் குழந்தைகளின் பிறப்பை கிறிஸ்தவத் தேவாலயத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அவ்வாறு பதிவு செய்யும் போது கிறிஸ்தவப் பாதிரிகள் பௌத்த சமயப் பிள்ளைகளுக்கும் பைபிளில் காணப்படும் பெயர்களைச் சூட்டிவிடுவர். பிறப்புப் பதிவு இல்லாவிடில் பாடசாலையில் அனுமதி பெற முடியாது. ஆங்கிலம் கற்க முடியாது. கரையோர மாகாணங்களான தெற்கு, மேற்குப் பகுதிகளில் டச்சுக்காரர்களின் ஆட்சியின் போது (1638 – 1796) பிறப்புப் பதிவு என்ற நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது. தெற்கு, மேற்கு மாகாணங்களை டச்சுக்காரர் கைப்பற்ற முன் அப்பகுதிகளை போர்த்துக்கேயர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். போர்த்துக்கேயர் காலத்தில் கரையோரச் சிங்களவர்கள் போர்த்துக்கேயரின் பெயர்களையும், பதவிப் பெயர்களுடன் சேர்த்துக் கொண்டனர். ‘டொன்’ என்பது இப்படியான ஒரு பெயராகும். ஹேவவித்தாரண என்ற பெயருக்கு முதல் சேர்த்துக்கொள்ளப்பட்ட ‘டொன்’ போர்த்துக்கேயரிடமிருந்த பெற்றுக்கொண்ட பெயராகும். சிங்கள மக்கள் தம் பெயர்களோடு ‘டொன்’, ‘கறோலிஸ்’, ‘டேவிட்’ போன்ற பெயர்களையும் சேர்த்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனராயினும், வீடுகளில் பெரும்பாலான பௌத்தர்கள் தம் பிள்ளைகளை இவ்வாறான அந்நியப் பெயர்களால் அழைப்பதில்லை. கிறிஸ்தவத் தேவாலயங்களில் பிறப்புப் பதிவு செய்யும் வழக்கம் 1884 இல் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஒழிக்கப்பட்டது. 

தர்மபாலவின் பிறப்பு வாழ்க்கைப் பின்புலத்தின் விசேட இயல்புகள் அவரின் தனிநபர் ஆளுமை மீது செல்வாக்குச் செலுத்தின. அவர் கொவிகம, கராவ என்ற இரு சாதிகளின் கலப்பான சாதிப் பின்புலத்தை உடையவர். அவரது குடும்பம் கிராமத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நகரத்தில் நிலைகொண்டிருந்த போதும், நகரத்தின் உயர் வகுப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படாததாய் அந்நியப்பட்டிருந்தது. தர்மபாலவின் பெற்றோர் இன்று புறக்கோட்டை (பெற்றா) என அழைக்கப்படும் பகுதியில் வாழ்ந்தனர். அப்பகுதி நகரின் வர்த்தக மையமாக விளங்கியது. ‘அப்புகாமி வர்க்கம்’ சமூக அந்தஸ்தில் உயரவேண்டும் என்ற இலக்குடன் செயற்பட்டதென்பதைக் குறிப்பிட்டோம். தர்மபாலவின் பெற்றோரும் தமது மகனை ஆங்கிலக் கல்வி பயில்வதற்காக மிசனரிப் பாடசாலை ஒன்றிற்கு அனுப்பினர். அப்பாடசாலை ‘டச் பறங்கியர்’ (Dutch Burger) இனத்துப் பிள்ளைகள் கல்வி கற்கும் ஆங்கிலப் பாடசாலையாகும். ஆசிய நாட்டவர் + ஐரோப்பியர் கலப்பான ‘யுறேசியன்ஸ்’ (Eurasians) இனத்துப் பிள்ளைகள் படித்த இந்தப் பாடசாலையில் சேர்க்கப்பட்ட தர்மபாலவின் ஆரம்பக்கல்வி வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகவே இருந்தது. அவரின் வகுப்புப் பிள்ளைகள் இலங்கையை முன்னாளில் ஆட்சிசெய்த போர்த்துக்கேயரதும், டச்சுக்காரர்களினதும் வழிவந்த சுதேசிகளான யுறேசியர்களின் பிள்ளைகளாவர். இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் காலனிய ஆட்சியில் இடைத்தர உத்தியோகப் பதவிகளை வகித்தனர். ஏனைய சுதேசிகளை விட இவர்களுக்குக் காலனிய சமூகத்தில் உயர்ந்த சமூக அந்தஸ்து இருந்தது. தர்மபாலவின் ஆரம்பப் பாடசாலை அனுபவம் அவரிடம் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பாடசாலையில் கற்றபின் தர்மபால சிங்களமொழிப் பாடசாலை ஒன்றில் பெற்றோரால் சேர்க்கப்பட்டார். அப்பாடசாலையும் ஒரு கத்தோலிக்கப் பாடசாலையாகும். அக்கத்தோலிக்கப் பாடசாலையின் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். ஆயினும் சிங்கள மொழியை நன்கு கற்பித்தார். அம்மொழி மீது தமக்குப் பற்றுதலை வளர்த்தவர் என்று தர்மபால பிற்காலத்தில் அவர் பற்றிப் பாராட்டிக் குறிப்பிட்டார். தர்மபாலவின் வீட்டுச்சூழல் பௌத்த மதக் கலாசாரத்தைத் தழுவியதாகவும், பாடசாலை கிறிஸ்தவ மதக் கலாசாரத்தை உடையதாகவும் இருந்ததால் அவரின் கல்வி வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகவே கழிந்தது. 1874 ஆம் ஆண்டு தர்மபாலவிற்கு 10 வயதாக இருக்கும் போது அவரின் பெற்றோர் புறக்கோட்டையை விட்டு நீங்கி கொழும்பு நகரில் ‘கொட்டஹேன’ (தமிழில் கொட்டாஞ்சேனை) என்ற இடத்திற்குக் குடிபெயர்ந்தனர். கொட்டஹேன கத்தோலிக்கர் செறிந்து வாழும் பகுதியாகவும் விளங்கியது. இப்பகுதியில் அமைந்திருந்த டொன் கறோலிஸ் குடும்பத்தின் வீடு, வளவும் தோட்டமும் உடைய விசாலமான வசதியான வதிவிடமாக இருந்தது. அக்காலத்தில் மதிப்புமிக்கோர் வாழும் புறநகர்ப் பகுதியாக விளங்கிய கொட்டஹேனவில் புனித பெனடிக்ற் கல்லூரி  (St – Benedict’s College) என்ற புகழ்பெற்ற கத்தோலிக்க ஆங்கிலப் பாடசாலை இருந்தது. அக்கல்லூரி 1865 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முன்னோடி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். அக்கல்லூரியின் ஆங்கிலமொழியில் அமைந்த நவீன பாடநெறியை சிங்களமொழி மூலம் கற்றவரான தர்மபாலவால் பயில முடியாது எனக் கருதிய பாடசாலை நிர்வாகம், அவரை முதலில் கீழ் வகுப்பு ஒன்றில் சேர்த்தது. தர்மபால பின்னர் தமது திறமையால் மேல் வகுப்பிற்கு வகுப்பேற்றம் பெற்றுக்கொண்டார். 1874 முதல் 1886 வரை புனித பெனடிக்ற் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர் தர்மபால கோட்டே பகுதியிலுள்ள கிறிஸ்தவ விடுதிப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். இப்பாடசாலை கொழும்பு நகரில் இருந்து ஆறு மைல்கள் தூரத்தில் அமைந்திருந்தது. இப்பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற தர்மபால நாள்தோறும் கிறிஸ்தவ வழிபாட்டில் கலந்துகொண்டு துதிப்பாடல்களைப் பாட வேண்டியிருந்தது. பைபிளை வாசிக்க வேண்டியும் ஏற்பட்டது. பாதிரிமார் அவ்வேளையில் பௌத்த சமயத்தை அவதூறு செய்யும் முறையில் உபதேசம் செய்வர். அவற்றைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கும் துர்ப்பாக்கியம் அவருக்கு நேர்ந்தது. ‘சேர்ச் மிசனரி சொசைட்டி’ எனப்படும் மதப்பிரிவினரால் நடத்தப்பட்ட இக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த தர்மபால, குடும்பத்தின் ஆதரவும், தாயின் அரவணைப்பும் இல்லாதவராக துயரத்தோடு விடுதியில் காலம் கழித்தார். “நான் உட்கொண்ட உணவு மிகவும் மோசமானது. நான் போதிய உணவில்லாமல் மெலிந்து போனேன். இதனைக்கண்ட எனது தந்தை அப்பாடசாலையில் இருந்து என்னை விலகச் செய்தார்” எனத் தர்மபால தனது நினைவுகளைப் பதிவிட்டுள்ளார். உணவை வெறுத்தலும், தவிர்த்தலும் பொதுவாக இளம்பிராயத்தினரிடம் தோன்றும் உளவியல் எதிர்வினைகளில் ஒன்றாகும்.  இலங்கையின் பண்பாட்டுச் சூழலில் அன்பும் அரவணைப்பும் இல்லாதபோது உணவின் மீது வெறுப்பு ஒரு பண்பாட்டு வெளிப்பாடாக அமைகிறது. பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் ஈர்ப்பதற்கு உணவை ஒரு கருவியாக உபயோகித்த தர்மபால பாடசாலை விடுதி என்ற சிறையில் இருந்து விடுதலை பெறுவதில் வெற்றி பெற்றார். 1878 இல் விடுதியிலிருந்து வெளியேறி இரண்டு மாதங்கள் பெற்றோருடன் வீட்டில் தங்கியிருந்து உடல்நிலை தேறிய பின், மவுண்ட் லவணியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கிலிக்கன் பாடசாலையான புனித தோமஸ் கல்லூரியில் தர்மபால சேர்ந்து கொண்டார். 1878 இல் இக்கல்லூரியில் சேர்ந்துகொண்ட தர்மபால 1883 வரை அங்கு கல்விகற்று தமது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தார். 

தர்மபாலவின் இளமைக்காலத்தில், அவரது வீட்டுச்சூழலில், பௌத்த பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்கிக் கொண்டதான சமூகமயமாக்கல் (Socialisation) இடம்பெற்றது. ஆனால் அவரது கல்வி வீட்டுச்சூழலுக்கு எதிர்மாறானதாக இருந்தது. அவர் ஒன்றுக்குப்பின் ஒன்றாக கிறிஸ்தவத்தின் வெவ்வேறு மதப்பிரிவினரின் பாடசாலைகளில் தனது 6 வயது முதல் 19 ஆம் வயது வரை கல்வி கற்றார். வீட்டுக்கும் கல்விக் கூடத்திற்கும் இடையிலான இந்த எதிர்த்துருவ வேறுபாடு அவரது ஆளுமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சேர்ச் மிசனரிப் பாடசாலையின் (CMS) விடுதியில் தங்கியிருந்த போது தினமும் நான்கு தடவைகள் தாம் பைபிளை வாசித்துத் தோத்திரம் செய்ய வேண்டி ஏற்பட்டது என அவர் தம் நினைவுக்குறிப்பில் பதிவிட்டுள்ளார். கோட்டேயில் அமைந்திருந்த இந்தப் பாடசாலையில் தான் படித்த போது வரலாறு, கணிதம் ஆகிய பாடங்களைத் துளியளவேனும் கற்கவில்லை எனவும், இரண்டரை ஆண்டுகள் காலத்தில் தினமும் காலை முதல் மாலை வரை பைபிளையே படித்துத் தொலைக்க வேண்டியிருந்தது எனவும் தர்மபால குறிப்பிடுகிறார். தர்மபால பின்னாளில் மிசனரிகள் மீது கடுமையான வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்திய போதும், பைபிள் மீது அவருக்கிருந்த மதிப்புக் குறையவில்லை. தன்னிடமிருந்த பைபிள் பிரதியில் அடிக்கோடுகள் இட்டும், அங்கும் இங்குமாக குறிப்புகளை எழுதியும் அதனைப் படித்து வந்ததால், அப்பிரதியின் பக்கங்கள் சேதமடைந்த நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆயினும் கிறிஸ்துநாதர் மீது நிந்தை செய்யும் முறையில் அவரது ‘Buddhist Studies in Ceylon’ (இலங்கையில் பௌத்த கல்வி) என்னும் நூலில் பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. யேசுவின் சீடர்களை ‘மந்த புத்தியுடையவர்கள்’ (Men of Low Intelligence) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தர்மபாலவிற்கு பாடசாலையில் பைபிளை ஏறக்குறைய முழுநேரமும் படிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் வீட்டில் இருக்கும் போது பௌத்த சமயத்தைக் கற்றுக்கொண்டார். அவரின் தந்தை கிராமியப் பௌத்தத்தில் (Village Buddhism) ஊறித் திளைத்தவர். அவர் பிறந்த இடமான மாத்தறை இலங்கையின் தென் பகுதியில் உள்ளது. கிராமியப் பௌத்தத்தின் நாட்டார் சமயக்கூறுகளான பேயோட்டும் சடங்குகள், நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கான சடங்குகள் என்பனவற்றிற்குரிய இடமாக மாத்தறை பிரபலம் பெற்றிருந்தது. ஆயினும் தர்மபால வாழ்ந்த நகரச்சூழலில் கிராமியப் பௌத்தத்தின் இந்த அம்சங்களுக்கு எவ்வித அர்த்தமோ முக்கியத்துவமோ இருக்கவில்லை. தர்மபாலவின் பெற்றோர் பின்பற்றிய பௌத்தத்தில் சில அடிப்படைவாதப் பண்புகள் (Fundamentalist Character) இருந்தன. இதற்குக் காரணம் தர்மபாலவின் முன்னோர்கள் மாத்தறைப் பகுதியில் தியோசோபிஸ்டுகள் வருகைக்கு முந்திய காலத்தின் சமய மறுமலர்ச்சி இயக்கத்தில் முக்கிய பங்கேற்றவர்களாய் இருந்தனர். இதனால் தர்மபாலவின் தந்தை, ஒல்கொட் வருகைக்கு முந்திய காலத்து மறுமலர்ச்சி இயக்க முன்னோடிகளான சமயத்தலைவர்களின் கருத்துகளால் கவரப்பட்ட ஒருவராக இருந்தார். புலமையாளரான ஹிக்கடுவே சுமங்கலதேரர், சொல்வன்மைமிக்கவரான மிகுற்றுவத்தே குணானந்த தேரர் ஆகிய பிக்குகளுடன் தர்மபாலவின் தந்தையின் முன்னோர்களுக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன. 

மேற்கூறிய பின்புலத்தில் வளர்ந்த தர்மபாலவின் உள்ளத்தில் வேரூன்றியிருந்த கருத்துகள் சிலவற்றுக்கு உதாரணமாக பிற்காலத்தில் அவர் எழுதிய குறிப்புகள் உதவுகின்றன. அவர் ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “எனது குடும்பம் சிங்களவர் பரம்பரையில் வந்தது, இக்குடும்பத்தினர் 2200 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக பௌத்தர்களாகவே இருந்து வந்தனர்”. தர்மபாலவின் இக்கூற்று அபத்தமானது. அவர் இவ்வாறு கூறும்போது தனது குடும்பத்தின் அடையாளத்தை கற்பனையான ஓர் இலட்சிய பௌத்த அடையாளத்துடன் (Idealised Buddhist Identity) தொடர்புபடுத்துகிறார். வரலாற்றைப் பின்நோக்கிப் பார்த்து நீண்டதொரு கற்பனையான நாகரிகத்துடன் (Imagined Civilisation) இணைத்துப் பார்க்கிறார். 

“எனது குடும்பத்தவர்கள் அனைவரும் பௌத்த சமய பக்தியுடையவர்கள், எனது தாயாருக்கு நான் மனப்பாடம் செய்த சமய நூற் சூத்திரங்களையும் புனிதப் பாடல்களையும் ஒப்புவித்தும், பாடியும் அவரைச் சந்தோசப்படுத்துவேன். எனது நற்குண நற்செய்கைகளுக்கு, தவறாது பரிசு கிடைக்கும். எனது தாயார் நான் விரும்பும் இன்சுவைத் திண்பண்டங்களை எனக்குத் தருவார்.”

தனது அம்மா ஏழைகள் மீது கருணை கொண்டவர், அவர்களுக்கு உணவும், பொருளும் கொடுத்து உதவுபவர் என்றும், அவரைப் போலவே அம்மாவின் சகோதரியும் ஒரு தேவலோகத்துப் பெண், மனித உருவெடுத்து வந்து மக்களுக்கு உதவும் அன்புள்ளம் கொண்டவர் என்றும், அவர்கள் இருவரும் மனிதர்கள் படும் துன்பங்களைக் கண்டும், உணவின்றி உடல் தளர்ந்து வாடுவோரைக் கண்டும் உள்ளம் நெகிழ்ந்து வறியோரான அம்மக்களுக்கு உதவி செய்வார்கள் என்றும் குறிப்பிடுகிறார். தனது குடும்பத்தவர் அனைவரும் பௌத்த நெறிப்படி வழிபாடுகளைச் செய்து வந்தவர்களென்றும், மாதம் ஒரு தடவை ‘போயா’ தினத்தன்று (முழுமதி நாளில்) உணவைத் தவிர்த்து விரதமிருந்து தியானம் செய்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். 

வீட்டுச்சூழலில் பௌத்த நெறிகளைக் கடைப்பிடித்து வந்த தர்மபாலவின் பாடசாலைச் சூழல் எத்தகையதாக இருந்தது என்பதைப் பின்வரும் கூற்று எடுத்துக்காட்டுகிறது. 

“ஒவ்வொரு மணித்தியால முடிவிலும் மாணவர்கள் கன்னிமேரியைப் போற்றும் தொழுகைப் பாடலைப் பாடவேண்டும். நான் கத்தோலிக்கச் சமய ஒழுக்கத்தை இவ்வாறு கற்றுக்கொண்டேன். ஆயினும் நான் ஒவ்வொரு நாளும் புத்த பிரானை வணங்குவதற்குத் தவறவில்லை.”

கத்தோலிக்கப் பாடசாலையின் மேற்படி அனுபவம் இளம் பிள்ளைப் பருவத்து தர்மபாலவின் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை ஊகித்து உணரலாம்;  தர்மபாலவின் உள்ளத்தை மனச்சாட்சி முள்போல் தைத்திருக்கும், அவர் அவமானத்தால் உளச் சோர்வுற்றிருப்பார். பௌத்தர்களுக்கும், பௌத்தத்திற்கும் அவமானத்தை தரும் முறையில் பாதிரிகள் நடந்துகொண்டதை அவர் இவ்வாறு பதிவு செய்தார். 

“பாதிரிகள் எமக்குத் தின்பண்டங்களை தந்து தலையில் தடவி எம்மீது அன்பு செலுத்துவதாகக் காட்டிக்கொள்வார்கள். அதேவேளை, உங்களின் மண்ணாலான சிலைகளைப் பாருங்கள், நீங்கள் உண்மையில் களிமண் கட்டிகளைத்தான் வணங்குகிறீர்கள் என்று கேலி செய்வார்கள்.”

சில சந்தர்ப்பங்களில் தர்மபால தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார். பாடசாலை விடுதியில் தான் பௌத்த சமயம் சார்ந்த சிறுநூலை வாசித்துக் கொண்டிருந்ததைப் பற்றி இவ்விதம் கூறுகிறார்.

“ஒரு ஞாயிறு தினம் நான் பௌத்த சமயத்தின் நான்கு உயரிய உண்மைகளைக் கூறும் சிறு பிரசுரம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது விடுதிக்குப் பொறுப்பாளரான பாதிரியார் வந்தார். என் அருகே வந்ததும் அந்தப் பிரசுரத்தைத் தனக்கு காட்டும்படி கூறினார். நான் அதைக் கொடுத்ததும், அதனை வாங்கி அவர் அறைக்கு வெளியே வீசினார்.”

கிறிஸ்தவ மிசனரிகள் உலகின் பிற இடங்களிலும் இவ்வாறே நடந்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். மிசனரிச் சூழலில் இப்படியான நடத்தைகள் இயல்பானவை. கூருணர்வு மிக்க இளவயதுப் பையனின் மனதில் இது போன்ற நடத்தைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். தர்மபாலவின்  சுய கௌரவத்தின் மீது விழுந்த பலமான அடிகள் அவர் மனதில் மனவடுக்களை ஏற்படுத்தியிருக்கும்.

“எனது குடும்பச்சூழலில் நான் பௌத்த வாழ்க்கை நெறியில் பயிற்றப்பட்டேன். அவ்வாறு பயிற்றப்பட்ட என்னைப் பாதிரிகளால் மாற்ற முடியவில்லை. பாதிரிகள் பன்றி இறைச்சியை விரும்பி உண்பார்கள். பன்றிகள் அழுக்கை உண்பவை; அருவருப்பானவை, இந்த மனிதர்களும் அழுக்கானவர்களாகவே இருக்க வேண்டும் என்று நான் மனதுக்குள் எண்ணிக் கொள்வேன். இந்த எண்ணம் மிசனரி ஆசிரியர்கள் மீது எனக்கு வெறுப்பை வளர்க்கக் காரணமாயிற்று.”

பத்து வயது மாணவனாக இருந்தபோது தம்மனதில் தோன்றிய உணர்வுகளை மேற்கண்டவாறு தர்மபால பதிவு செய்துள்ளார்.

2

புரட்டஸ்தாந்திய மிசனரிப் பாடசாலையில் தர்மபால படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவருக்குப் பன்னிரெண்டு வயதாகும் போது நடந்த ஒரு நிகழ்வு பற்றித் தர்மபால இவ்வாறு விவரிக்கிறார். “ஒரு நாள் இந்தப் பாடசாலையில் நடந்த சம்பவம் என்னை அதிர்ச்சியில் உறையவைத்தது. அப்போது எனக்குப் பன்னிரெண்டு வயது. எனது ஆசிரியர்களில் ஒருவர் துவக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே போனார். துப்பாக்கியால் அவர் பறவை ஒன்றை சுட்டு வீழ்த்தினார். இவர் ஒரு கிறிஸ்தவப் போதகர். ஆனால், வெளியே போய் ஈவிரக்கம் இல்லாமல் ஒரு தீங்கும் இல்லாத பறவைகளைச் சுட்டு வீழ்த்துகிறாரே; இவரின் மதம் எனக்குரிய மதம் அன்று என நான் எனக்குள் கூறிக்கொண்டேன்.” அவர் தொடர்ந்து பின்வருமாறு குறிப்பிடுகிறார். “அப்பாடசாலை ஆசிரியர்கள் மது அருந்துவார்கள். அவர்களின் இச்செயல் நான் கற்ற சமய ஒழுக்கத்திற்கு மாறானதாக இருப்பதை உணர்ந்தேன்.”

கிறிஸ்தவத்தின் மீது தர்மபாலவிற்கு வெறுப்பை ஏற்படுத்தக் காரணமாக இருந்த மேற்குறி்த்த சம்பவம் நடைபெற்றுச் சிறிது காலத்தின் பின்னர் தர்மபாலவின் வகுப்பில் ஒருங்கே படித்த சிறுவன் ஒருவன் நோயினால் திடீரென இறந்தான். “அவனது உடலைக் கட்டிலில் கிடத்தி வைத்திருந்தார்கள். அந்த உடல் அசைவில்லாமல் கிடந்தது. எமது ஆசிரியர் எம்மைத் தொழுகை செய்யும்படி கேட்டார். நாம் தொழுதோம். அப்போது திடீரென எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. நாம் பயம் காரணமாகவே தொழுகின்றோம் என்பதை உணர்ந்தேன். எனது மனதில் அக்கணமே சுதந்திரமாகச் சிந்திக்கும் மனப்பாங்கு தோன்றியது நான் தொழுவதை நிறுத்தினேன். அச்சம்பவத்திற்குப் பின் நான் பைபிளைக் கண்டனம் செய்பவனாக மாறினேன். என்னை அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும், பாடசாலையை விட்டு நீக்கி விடுவோம் என்றும் எச்சரித்தனர்.”

மேற்படி சம்பவங்களின் எடுத்துரைப்பு (Narration) உணர்ச்சிக் கலப்பானதாக இருப்பதைக் காணலாம். தர்மபாலவின் கொழும்பு வீட்டுச் சூழலில் அவர் குறிப்பிட்ட வகையான பௌத்த சமயச் சமூகமயமாக்கலுக்கு (Buddhist Socialisation) உட்பட்டார். அச்சமூகமயமாக்கலின் பின்புலத்திலேயே அவரது எடுத்துரைப்பில் வெளிப்படும் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தர்மபால அவரது தந்தையின் ஊரான மாத்தறையில் பிறந்து வளர்ந்தவர் என்று கற்பனை செய்து பார்ப்போம். மாத்தறையின் கிராமியச் சூழ்நிலையில் பறவைகளைச் சுடுதல் சாதாரணமான விடயம். அச்சூழலில் வளரும் ஒருவரின் மனதில் பறவையைச் சுடுதல் சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. தர்மபால படித்த கிறிஸ்தவப் பாடசாலை என்ற பின்னணியில் ஒரு பாவமும் அறியாத பறவையின் மரணமும், அப்பாவியான ஒரு சிறுவனின் மரணமும் அடுத்தடுத்து நிகழ்கின்றன.  இச்சம்பவங்கள் இவ்வுலக வாழ்க்கையின் துன்பம், அதன் நிலையாமை என்பன பற்றிய எண்ணங்களை அவர் மனதில் தோற்றுவித்தன. பௌத்தத்தின் துறவு வாழ்க்கையில் தர்மபாலவிற்குப் பற்றுதலை வளர்ப்பதற்கு இது போன்ற சம்பவங்கள் காரணமாயின.

உளவியல் சிக்கல்கள்

தர்மபால வாழ்ந்த புறச்சூழலான சமூகமும், சமயமும் தொடர்பாக அவர் உள்ளத்தில் தோன்றிய குழப்பங்களையும் முரண்பாடுகளையும் மேலே எடுத்துக்கூறினோம். அடுத்து அவரது குடும்பச் சூழலில் அவரது உள்ளத்தில் தோன்றிய உளவியல் சிக்கல்களைப் பற்றி கணநாத் ஒபயசேகர கூறியிருப்பவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். தர்மபாலவின் தந்தைக்கும் அவரது மகனான சிறுவன் தர்மபாலவிற்கும் இடையிலான உறவு, தர்மபாலவின் தாய்க்கும் தாயின் பாசத்திற்குரிய பிள்ளையான தர்மபாலவின் உறவு என்னும் குடும்ப உறவுகள் தர்மபாலவின் உள்ளத்தில் ஆளுமைச் சிக்கல்களை ஏற்படுத்தின. இந்த உளச்சிக்கல்களின் தீர்வாக தர்மபால ‘அநகாரிக’ அல்லது ‘வீடற்றவன்’ என்னும் துறவு மாதிரியைத் தேர்ந்து கொண்டார் என கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகிறார்.

தர்மபாலவின் தந்தை கடும் உழைப்பாளி. அவர் வர்த்தகம், தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுப் பணத்தைச் சேர்த்து செல்வந்தர் ஆனார். வாழ்க்கை அந்தஸ்த்தில் தன்னை உயர்த்திக்கொண்டார். அவருக்கு மகன் தர்மபாலவுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாதிருந்தது. ஆயினும் மகனுக்குரிய தேவைகள் பற்றி அவர் மிகுந்த அக்கறை செலுத்தினார். தர்மபாலவின் இன்னொரு சகோதரன் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று மருத்துவரானார். அதுபோலவே தர்மபாலவையும் வாழ்ககையில் உயர்நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தர்மபால தந்தையை நெருங்குவதை விட தனது தாயாரின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். அவர் தனது அன்னையின் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார். “நான் விளையாடிக் கொண்டிருக்கும் போது அம்மாவின் நினைவு எனக்கு வரும். அவருக்கு ‘நிர்வாணம்’ என்னும் பிறப்பும் இறப்பும் இல்லாத உயர்நிலை கிடைக்க வேண்டும்; அடுத்து வரும் புத்தர் அதனை அவருக்கு அருள வேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன்” என எழுதுகிறார். தன் தாயைப் போன்றே அவரது சகோதரியான சிற்றன்னை தன்மீது பாசம் கொண்டிருந்தார் எனவும் குறிப்பிடுகிறார். தன் தாயைப் போன்றே தாய்மையின் வடிவமாகத் தன் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட தாய்மையுள்ளம் படைத்த காலம் சென்ற பிளவாட்ஸ்கி அம்மையாருக்கும், ஹொனலுவைச் சேர்ந்த காலம் சென்ற திருமதி. Foster இற்கும் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன் என்று ஓரிடத்தில் எழுதுகிறார். திருமதி. Foster தர்மபாலவிற்குப் பண உதவி செய்தார். ஆத்மபலத்தை வழங்கினார். இவரைத் தர்மபால தம் ‘வளர்ப்புத்தாய்’ என்று குறிப்பிடுகிறார். தன் தாயார் மீது தர்மபாலவிற்கு இருந்த அன்புப் பிணைப்பு அவருக்குப் பதினேழு வயதாக இருந்தபோது ஏற்பட்ட துன்பநிகழ்வு ஒன்றின் போது வெளிப்பட்டது. அப்போது தர்மபாலவின் சகோதரியான இரண்டு வயதுக் குழந்தை இறந்தது. “தமது அருமைக் குழந்தையின் இழப்பினால் வருந்திய அம்மா மௌனமாக அழுது கொண்டிருப்பதைக் கண்டேன்” என அவர் எழுதுகிறார். 

தந்தைக்கும் தர்மபாலவிற்கும் இடையில் உறவு நெருக்கம் இருக்கவில்லை. இதற்கு மாறாக அவர் தாயுடன் மிக நெருக்கமானவராக இருந்தார்.

தர்மபாலவிற்கு ஒன்பது வயதாக இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றித் தர்மபால பின்வருமாறு குறிப்பிடுகிறார். “எனக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது என்னைக் கோவிலுக்கு அழைத்துச்சென்ற எனது தந்தை எனக்குப் பிரமச்சாரிய ஒழுக்கம் பற்றிக் கூறினார். பிரமச்சாரியாக இருப்பவர் தனக்கு வழங்கப்பட்ட உணவை உண்டு அதனுடன் திருப்தி அடைய வேண்டும். உணவில் ஆசை வைக்கக்கூடாது. நித்திரை கொள்ளும் நேரத்தைக் குறைக்க வேண்டும். அன்று 24 மணிநேரம் அந்த விரதத்தை மேற்கொள்ளும்படி அவர் புத்திமதி கூறினார். அது எனது உள்ளத்தில் நிரந்தரமான பதிவாக ஆகியது.”

மேற்சொன்ன விரதம் ‘உபாசகர்கள்’ என அழைக்கப்படும் பௌத்த சமயிகளால் போயா தினத்தில் (பௌர்ணமி தினத்தில்) ஒரு முழு நாளும் கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். இவ்விரதத்தில் 10 விதிகள் அடங்கியிருந்தன. அவற்றுள் ‘உடலுறவை முற்றாக விலக்குதல்’ (Total Sexual Abstinence) ஒன்றாகும். தர்மபாலவின் இளமைக்காலத்தில் இவ்விதி வயது வந்தவர்களுக்குரிய விரத விதியாக இருந்தது. ஆயினும் தர்மபால ஒன்பது வயதாக இருக்கும் போதே ஆண் – பெண் உடலுறவை வெறுக்கும் எண்ணத்தை தன் மனதில் கொண்டிருந்தார். இதற்கான உளவியல் காரணம், அவர் தாய் மீது கொண்டிருந்த அளவற்ற பாசம் எனவும், எதிர்ப்பாலினருடன் உடலுறவு வைப்பதை, ‘Incest’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ‘தகாத புணர்ச்சியுடன்’ தொடர்புபடுத்தி அதன்மேல் வெறுப்பை வளர்த்தமை எனவும் கணநாத் ஒபயசேகர உளவியல் விளக்கம் தருகின்றார். தர்மபாலவிடம் ஏற்பட்ட இந்த உளவியல் சிக்கல் அவரைத் தனது தந்தையிடம் இருந்து தூர விலகிச் செல்ல வைத்தது. வளர்ந்து வளர் இளம் பருவத்தினராக ஆகியபோது பிரமச்சாரியாக மாற வேண்டும் என்ற எண்ணம் உறுதியான முடிவாக உருப்பெற்றது. 1880 இல் கேர்ணல் ஸ்டீல் ஒல்கொட்டும் பிளவாட்ஸ்கி அம்மையாரும் இலங்கைக்கு வந்தனர். அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் பின்னர் தர்மபால ‘சமயம்’ தொடர்பான ஏராளமான நூல்களையும் கட்டுரைகளையும் வாசித்தார். இரண்டாம் தடவை ஒல்கொட்டும் பிளவாட்ஸ்கியும் 1884 இல் திரும்பி வந்தபோது தர்மபால தன்னை தியோசொபிக்கல் சபையில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டினார். அவர் அச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவர், சென்னையின் அடையாறு தலைமையகத்திற்கு, ஒல்கொட் உடனும் பிளவாட்ஸ்கியுடனும் போவதற்கும் விரும்பினார். தர்மபாலவின் தந்தை இவ்வாறாகத் தர்மபால தன் வாழ்க்கையின் திசைவழியை மாற்ற முயற்சிப்பதை சிறிதளவும் விரும்பவில்லை. ஒல்கொட் கூட அதனை விரும்பவில்லை. புத்ததுறவிகளும், தர்மபாலவின் பாட்டனும் பாட்டியும், வேறு நெருங்கிய உறவுகளும் கூட தர்மபால சென்னைக்குச் செல்வதை ஆதரிக்கவில்லை. ஆனால் பிளவாட்ஸ்கியும், தர்மபாலவின் தாயாரும் சென்னைக்கு அவரை அனுப்ப வேண்டும் என்பதை ஆதரித்தனர். 

“எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சென்னைக்குப் போகவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அங்கு சென்றால் அப்பயணம் எனக்குப் புதியதோர் வாழ்வைத்தரும் என நான் நம்பினேன். பிளவாட்ஸ்கி அம்மையார் என் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக என்னை அழைத்துச்செல்ல எண்ணி, எனது குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெற முயற்சித்தார். அவர் ஓர் அற்புதமான பெண்; எந்தத் தடைகளையும் எதிர்கொண்டு முன்செல்லும் மன உறுதி படைத்தவர். ‘இந்தப் பிள்ளையைப் போகவிடாமல் நீங்கள் தடுத்தால் அவன் (மனம் உடைந்து) இறந்து போவான். நான் அவனைக் கூட்டிச் செல்கிறேன்; விடுங்கள்’ என அவர் கூறினார்.”

பிளவாட்ஸ்கியின் குண இயல்பையும், அவர் தன்னை அழைத்துச்செல்ல உறுதி பூண்டதையும் தர்மபால மேற்கண்டவாறு பதிவு செய்கிறார். இறுதியில் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரைப் போக அனுமதித்தனர். 

“குடும்பத்தின் சம்மதம் கிடைத்தது. என் அன்னை என்னை ஆசிர்வதித்து ‘நீ போய்வா மகனே, மானிடத்தின் நன்மைக்காக நீ சேவை செய்ய வேண்டும்’ எனக் கூறி விடைகொடுத்தார். எனது தந்தை ‘அப்படியானால் நீ போய்வா மகனே, நீ ஒரு போதிசத்துவராக உயர்நிலை அடைய வேண்டும்’ எனக்கூறி எனக்குப் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தார்.” என தர்மபால குறிப்பிடுகிறார். 

தர்மபாலவின் சென்னைக்கான பயணம் அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு திருப்பமாகவும் அமைந்தது. உளச்சிக்கல்களால் குழப்பம் அடைந்திருந்த ஒரு வளர் இளம் பருவத்துச் சிறுவன் இப்பயணத்துடன் முதிர்ச்சி பெற்ற ஆடவனுக்குரிய உளப்பாங்குகளைப் பெற்ற ஒருவராக மாறினார். அவர் குடும்பத்துடனான தனது உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். இன்னொரு தாயாக அவர் கருதிய பிளவாட்ஸ்கி அம்மையாருடன், அவர் வழிகாட்டலில், வாழ்க்கையைத் தொடர்வதற்கு அவர் ஆரம்பித்தார். பிளவாட்ஸ்கி அம்மையாரின் ‘கீழைத்தேய ஞானத்தில்’ தர்மபால விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் பிளவாட்ஸ்கி அம்மையார் அவரை ‘மானிடத்திற்குச் சேவை செய்’ என ஊக்கப்படுத்தி பௌத்த சமயச் சேவையில் ஈடுபட வைத்தார். இலங்கைக்குத் திரும்பிவந்த தர்மபால தியோசொபிக்கல் சபையின் இலங்கைக் கிளையான, ‘பௌத்த தியோசொபிக்கல் சபையின்’ (Buddhist Theosophical Society – BTS) நிர்வாகத்தைப் பொறுப்பெற்றுக் கொண்டார். தனது மகனின் எதிர்கால வாழ்க்கை பற்றி உயர் இலக்குகளைக் கொண்டிருந்த தர்மபாலவின் தந்தைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தனது மகன் அரசாங்கப் பதவி ஒன்றைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறுவதையே அவர் விரும்பினார். அக்காலத்தில் இலங்கையில் உயர் பதவிகள் அனைத்திலும் பிரித்தானிய சிவில் சேவை உத்தியோகத்தர்களே சேவையாற்றி வந்தனர். அப்பதவிகளுக்கு இலங்கையர்கள் நியமிக்கப்படுவதில்லை. தர்மபாலவின் தந்தை தன் மகனைக் கல்வித்திணைக்களத்தில் எழுதுநர் பதவியைப் பெறும்படியும். ‘வாழ்க்கையில் நடைமுறைவாதியாக’ இருக்கும்படியும் புத்திமதி கூறினார். தந்தையின் வேண்டுதலுக்கு அமையக் கல்வித் திணைக்களத்தில் எழுதுநர் பதவியைத் தர்மபால பெற்றுக்கொண்டார்.  அவர் கல்வித் திணைக்களத்தில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த 1886 ஆம் ஆண்டில் ஒல்கொட் மீண்டும் இலங்கைக்கு வந்தார். இந்தத் தடவை அவர் வந்தபோது, அவருடன் லீட்பீட்டர் (Lead Beater) என்னும் பெயருடைய தியோசோபிஸ்ட்டும் இலங்கைக்கு வந்தார். தர்மபால தனது அலுவலகத்திலிருந்து மூன்றுமாத விடுப்பைப் பெற்றுக்கொண்டு ஒல்கொட், லீட்பீட்டர் ஆகிய இருவருடனும் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒல்கொட் இச்சுற்றுப் பயணத்திற்காக மாட்டு வண்டியொன்றைக் கொள்வனவு செய்தார். ஒல்கொட்டின் ‘பயண வண்டியில்’ லீட்பீட்டரும் தர்மபாலவும் சேர்ந்து இலங்கையின் சிங்களக் கிராமங்களுக்குச் சென்று மக்களின் வாழ்நிலையையும், பௌத்த சமயத்தின் அழிவுநிலையையும் நேரில் கண்டறிந்தனர். பௌத்த சமயம் சீரழிவுற்ற நிலையில் இருப்பதைக் கண்டு மனம் வருந்திய தர்மபால அதன் அழிவைத் தடுத்து, அதற்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என உறுதி பூண்டார். இப்பயணத்தின் முடிவில் தர்மபால சிங்கள மொழியில் தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் இரண்டு ஆண்டுகாலம் தாம் பௌத்த தியோசொபிக்கல் சபையுடன் சேர்ந்து இயங்கிய போது பெற்ற அனுபவங்களையும், தாம் எதிர்காலத்தில் எவ்வழியில் செல்வதற்கு முடிவு செய்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டார். அக்கடிதத்தில் இருந்து ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

“ஒரு குடும்பத்தின் தலைவனாக, வீட்டையும், குடும்பச் சொத்துகளையும் பராமரிப்பதும் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதும் பெரும் துன்பமே அன்றி வேறல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டேன். ஆகையால் நான் பிரமச்சாரியாகவே (திருமணம் செய்து கொள்ளாமல்) வாழ்வதென முடிவு செய்துவிட்டேன். நான் புத்த பிக்குவாகத் துறவு மேற்கொள்வதை விரும்பினேன் ஆயினும் அவ்வாறு துறவி ஆகும் முடிவைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக நான் பிரமச்சாரியாகவே உலகியல் வாழ்க்கையோடு இணைந்து வாழ விரும்புகிறேன். புத்தத் துறவியாக துறவு மார்க்கத்தில் செல்வோர் தமது சொந்த நலன் கருதியே அதனை மேற்கொள்கிறார்கள். ஆனால், பிறரின் நலன்கள் மீது (Welfare of Others) அக்கறையுடையவர்களுக்கு அது பொருத்தமான வழியன்று, உலகில் பயனுடைய நற்பணிகளைச் செய்வதற்குப் பிரமச்சாரிய வாழ்க்கையே மிகவும் பொருத்தமானது.”

இக்கடிதத்தில் தர்மபால திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையை நடத்துவதை ‘துக்கம்’ (Suffering) எனக் குறிப்பிடுவதையும், பிரமச்சாரியத்தை உலகிற்குப் பயன்தரும் நற்பணிகளைச் செய்வதற்கான துறவு என்று குறிப்பிடுவதையும் காணலாம். பிரமச்சாரியம் பற்றிய இக்கருத்து மக்ஸ்வெபர் குறிப்பிடும் ‘இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே இயற்றும் துறவறம்’ (This Worldly Asceticism) என்ற கருத்திற்கு ஒப்பானது என கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகிறார். தமது ஆன்ம ஈடேற்றத்திற்காக ஒருவர் மேற்கொள்ளும் துறவை மக்ஸ்வெபர் ‘அக உலகத் துறவு’ (Inner Worldly Asceticism) என்றார். அத்துறவு ஒருவர் தன்னை உலகில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதும் ஆகும். தர்மபால துறவிகளின் மடாலய வாழ்க்கையை ‘ஆர்த்மாத்தய’ என்ற சிங்களச் சொல்லால் குறிப்பிடுகிறார். இதன் அர்த்தம் ‘தன்னலம்’ (Self – welfare) ஆகும். இதனைச் ‘சுயநலம்’ என்றும் பொருள் கொள்ளலாம். உலகுக்கு பயன்தரும் நற்பணிகளைச் செய்துவரும் பிரமச்சாரிய வாழ்க்கையை தர்மபால சிங்கள மொழியில் ‘லோகார்த்தயக்கவாத’ எனக் குறிப்பிடுகிறார். தர்மபாலவின் துறவு பற்றிய கருத்துகள் லூதரின் கருத்துகளுக்கு ஒப்பானவையாக இருந்தன எனவும் கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகிறார்.

தர்மபால பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்காகப் பிரமச்சாரிய வாழ்க்கையைத் தேர்ந்து கொண்டார். அவரின் இந்த முடிவு அவரது ஆழ்ந்த ஊக்கப்பாட்டின் (Deep Motivation) விளைவு எனலாம். அத்தோடு பாலின்பத்தைத் தவிர்க்கும் இம்முடிவு அவரது உளவியல் சிக்கல்களின் தீர்வுக்கான வழியெனவும் கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகிறார். ‘குடும்பத்தின் தலைவராகத்’ தான் இருக்க விரும்பவில்லை என்று குறிப்பிடும் தர்மபால, ‘நான் என் தந்தையைப் போன்று வாழ்வதற்கு விரும்பவில்லை’ என்பதையே மறைமுகமாகக் குறிப்பிட்டார். தர்மபாலவிற்கு ஒரு கால் ஊனமானதாக இருந்தது. இது அவருக்குப் பிறப்பிலேயே அமைந்த குறைபாடு. பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனைக் குறித்துக்காட்டி பின்வருமாறு எழுதினார். 

“நான் உடற்குறைபாடு உடைய ஒருவன். நான் தாம்பத்திய வாழ்க்கையில் என்னைப் பிணைத்துக்கொள்வது பெரிய அநீதி. உடற்குறைபாடு உடைய ஒருவருக்குப் பிறக்கும் பிள்ளைகள் உடல் அழகு குறைந்தவர்களாகவும், விவேகம் இல்லாதவர்களுமாகவே இருப்பார்கள்.”

தர்மபாலவின் பிறப்பில் அமைந்த குறைபாடான கால் ஊனம், அவருக்கு நடமாடுவதற்கு இடைஞ்சல் தருவதாக இருந்தது உண்மையே. ஆனால் அவர் உடல் வலிமை இல்லாத வீரியம் இல்லாத மனிதர் அல்ல. 19 ஆம் நூற்றாண்டின் பிறப்புரிமையியல் (Heredity) பற்றிய கோட்பாடுகளின் தாக்கத்திற்கு உட்பட்ட தர்மபால தனது உடல் குறைபாடு பிற்சந்ததிக்குக் கடத்தப்படும் என்ற தவறான முடிவுக்கு வந்திருக்கக்கூடும். ஆயினும் இதனைவிட தென்னாசியாவின் துறவு பற்றிய நோக்குமுறை அவரின் பிரமச்சாரிய வாழ்க்கையின் மீதான நாட்டத்திற்குக் காரணமாக அமைந்தது எனலாம். துறவு மேற்கொள்ளும் ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுத் தனது விந்தை விரயமாக்குவதும், பாலின்பத்தை நுகர்வதும் துறவுசார்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் பங்கம் விளைவிப்பதாக அமையும் என்பது தென்னாசியாவில் பரவலாக இருந்து வந்த நம்பிக்கையாகும். 

தர்மபால தனது பெற்றோருக்கு எழுதிய கடிதம் இன்னொரு வகையில் முக்கியம் வாய்ந்தது. அக்கடிதம் பிரமச்சாரியாகத் துறவு வாழ்க்கையில் ஈடுபடுவதற்குத் தந்தையிடம் அனுமதி கோரும் கடிதமாகும். இந்த அனுமதி பண்பாட்டு நோக்கில் ஒரு கட்டாயத் தேவையாகும். தர்மபால இந்த அனுமதியைத் தந்தையிடமிருந்து பெறுவதற்கு முன்னரே தனது எழுதுநர் பதவி விலகல் கடிதத்தை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தார். அவருக்கு உத்தியோகப் பதவி உயர்வு கிடைத்திருந்த போதும், அவர் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தமை, அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார் என்பதையே காட்டுகிறது. தர்மபாலவின் தந்தை தனது மகனை அரசாங்க செயலாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அரசாங்க செயலாளரைச் சந்தித்தார். அப்போது அரசாங்க செயலாளர் தர்மபாலவைப் பார்த்து பதவி விலகல் கடிதத்தை வாபஸ் பெறுமாறு கேட்டாராம். ஆனால், தான் அக்கடிதத்தை வாபஸ் பெற மறுத்துவிட்டதாக தர்மபால குறிப்பிட்டுள்ளார். தர்மபால தந்தையின் சொல்லை மீறி நடந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இத்துடன் தந்தைக்குத் தன் மகன் பற்றிக் கொண்டிருந்த கனவுகள் கலைந்தன. “அரசாங்கச் செயலாளரின் அலுவலகத்தை விட்டு நான் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தேன்” எனத் தர்மபால இது பற்றி பின்னாளில் குறிப்பிட்டார்.

பிரமச்சாரிய நெறியை தந்தையினதும் தாயினதும் ஆசிர்வாதத்துடன் தர்மபால ஏற்றுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட அக்கணத்தில் இருந்து பௌத்த சமயத்தின் முன்னேற்றத்திற்காக அவர் அர்ப்பணிப்போடு உழைக்க ஆரம்பித்தார். ‘அநகாரிக’ என்னும் பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டார். ‘அநகாரிக’ என்றால் ‘வீடற்றவன்’ (The Homeless One) என்பது பொருள். ‘டொன் டேவிட்’ என்ற மேற்கு நாட்டுப் பெயரையும் கைவிட்டு ‘தர்மத்தின் காவலன்’ (Guardian of the Doctrine) என்ற பொருள் உடைய ‘தர்மபால’ என்ற பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டார். பாலின்பத்தை முற்றாகத் தவிர்க்கும் பிரமச்சாரிய ஒழுக்கநெறியைத் தர்மபால தெரிவு செய்தமை பற்றிய உளப்பகுப்பியல் விளக்கத்தை கணநாத் ஒபயசேகர ‘உயர்வழிப்படுத்தல்’ (Sublimation) என்னும் எண்ணக்கருவின் துணையுடன் பின்வருமாறு விளக்கிக் கூறுகிறார்.

“His new role could fully mobilise and express in a created and sublimated form the psychological tension in the individual’s life. It must be noted that the family problem of attachment to the identification with the mother is resolved in the newly adopted role of Anagarika. He initially breaks away from his mother and home, largely with the help of a powerful mother figure, Madam Blavatsky, and takes to homeless life, dedicated to a noble cause. Guilt feelings regarding sexuality are also resolved through the Anagarika role with its ideal of chastity, the ascetic denial of sex, originally a personal psychological problem, becomes a higher, impersonal way of life (Obeyasekere, 2018: 289).”

மேலே தரப்பட்ட மேற்கோளின் சாரமான பொருள் வருமாறு:

“தர்மபாலவின் உளவியல் சிக்கல்கள் ‘உயர்நிலைப்படுத்தல்’ மூலம் தீர்வு செய்யப்பட்டன. அவர் தன் தாயைத் துறந்து சென்றார்; வீட்டையும் துறந்தார்; ஆயினும் தாய்மையின் வடிவமான பிளவாட்ஸ்கி அம்மையார் என்ற சக்திவாய்ந்த பெண்மணியின் துணையுடன் ‘வீடற்றவன்’ வாழ்க்கையை ஏற்று உயரியதோர் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்தார். வீடற்றவன் என்ற வகிபாகம் அவருக்குப் பாலின்பம் தொடர்பான குற்ற உணர்வில் இருந்து விடுதலையை வழங்கியது. தனிப்பட்ட உளவியல் பிரச்சினை தீர்வு செய்யப்பட்டு, உயரிய தற்சார்பற்ற வாழ்க்கை என்ற நிலைக்கு மாற்றம் செய்யப்பட்டது.”

இலங்கையின் மரபுவழிப்பட்ட சமூகக் கட்டமைப்பினோடு (Traditional Social Structure) தொடர்புகள் இல்லாத, வேர்கள் அற்ற, ஒருவராகவே தர்மபால வளர்ந்தார். கிராமம், அதனோடு இணைந்த சாதி உறவுகள், பிராந்திய அடையாளம் என்பன அவருடன் ஒட்டிக்கொள்ளவில்லை. இந்த அடையாளங்கள் அற்றவரான தர்மபால, தமது கற்பனை செய்யப்பட்ட பௌத்தம் என்னும் பெருமரபுடன் (The Great Tradition of Imagined Buddhism) தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்குத் தந்தையின் ஊரான மாத்தறையின் கிராமிய வாழ்க்கையுடன் தொடர்புகள் இல்லாமையால், கல்விகற்ற சிங்களப் பௌத்தர்களின் அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் தனது கருத்துகளை முன்வைப்பதற்கும், அவர்களைக் கவர்வதற்கும், செயற்படுவதற்கும் இயலுவதாயிற்று. பாடசாலை நாட்களில் கிறிஸ்தவர்கள் மீது அவர் வளர்த்துக்கொண்ட பகைமை உணர்வு காரணமாக அவர் கிறிஸ்தவ மிஷனரிகளின் எதிரியாக மாறினார். கிறிஸ்தவ மிஷனரிகள் பௌத்தத்தின் மீது காட்டிய வன்மம், அவர்களின் கடுமையான கண்டனச் சொல்லாடல் என்பன தர்மபாலவின் கண்டனப் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் எதிரொலித்தன.  ஆனால் ஒல்கொட் அவர்களின் பேச்சிலும் எழுத்திலும் இது போன்ற தீவிரம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தர்மபாலவின் கோபம் மிகுந்த வார்த்தைகளிற்கு இரண்டு உதாரணங்கள் வருமாறு.

“The sweet gentile Aryan children of an ancient historic race are sacrificed at the altar of whisky drinking, beef eating belly god of heathenism. How long, oh! How long, will unrighteousness reign in Sri Lanka (Obeyasekere, 2018: 290).”

“Arise, awake, unite and join the army of holiness and peace and defeat the hosts of evil (Obeyasekere, 2018: 290).”

(இவ்வார்த்தைகளில் கொப்பளிக்கும் உணர்ச்சியை மொழிபெயர்ப்பில் தருவது கடினம்.)

புரட்டஸ்தாந்திய பௌத்தம்

தர்மபால பௌத்த மத ஒழுங்கமைப்பை சீர்த்திருத்தம் செய்யும் ‘புரட்டஸ்தாந்திய பௌத்தர்’ (Protestant Buddhist) என்ற வகிபாகத்தை ஏற்றார். அவர் பௌத்த சமய நிறுவனங்களில் புரட்டஸ்தாந்தியத்தின் தூய்மைவாத மதிப்பீடுகளைப் (Puritan Values) புகுத்தினார். இத்தூய்மைவாத மதிப்பீடுகள் படித்த சிங்கள பௌத்தர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக தர்மபாலவைப் போன்று மரபுவழிப் பண்பாட்டிலிருந்தும், வாழ்க்கை முறையிலிருந்தும், அந்நியப்பட்டவர்களாய், கிராம வாழ்க்கையில் இருந்து நீங்கி நகர்ப்புறங்களில் வாழ்ந்தோரிடையே இக்கருத்துகள் தாக்கத்தை ஏற்படுத்தின முதலில் பிரித்தானியாவின் அரசியல், பொருளாதார முறைமையின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த ஆங்கிலம் கற்ற கொழும்பின் உயர்குழாமை தர்மபாலவின் கருத்துகள் கவரத் தொடங்கின. பின்னர் இலங்கை முழுவதிலும் வாழ்ந்த சிங்கள பௌத்தர்கள் அவரது கருத்துகளை ஏற்று உள்வாங்கிக் கொண்டனர்.

வீட்டைவிட்டு நீங்கி பௌத்த தியோசொபிக்கல் சபையுடன் தன்னை இணைத்துக்கொண்ட தர்மபால ‘சன்டிறச’ (நிலவொளிக் கீற்றுகள்) என்ற பெயருடைய பௌத்த சமயப் பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றினார்; அச்சு ஊடகத்தை தன் பிரசாரத்திற்கு நன்கு பயன்படுத்தினார். 

இலங்கையில் தியோசொபிக்கல் சபையின் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலைகள் நிறுவும் திட்டத்திற்கு ஒல்கொட் பெருந்தொகை நிதியைத் திரட்டினார். தர்மபால இம்முயற்சியில் ஒல்கொட்டிற்குத் துணையாக நின்று செயற்பட்டார். 10 ஆண்டுகால எல்லைக்குள், 63 தியோசொபிக்கல் சபைப் பாடசாலைகள் அமைக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. தர்மபால ஒல்கொட்டுடன் இணைந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் சுற்றுப் பிரயாணம் செய்தார். சிறிது காலத்தின் பின்னர் தர்மபாலவிற்கும் ஒல்கொட்டிற்கும் இடையே கருத்து முரண்பாடுகள் தோன்றின. அவர்களது உறவு முறிவடைந்தது. தர்மபால தனது சொந்தத் தந்தையுடன் இருந்த உறவுகளையும் துண்டித்துக்கொண்டார். தந்தை போன்றவராக இருந்த ஒல்கொட்டுடன் இருந்த உறவும் துண்டிக்கப்பட்டது. “It was impossible for him to maintain a good relationship with father figures” என கணநாத் ஒபயசேகர தர்மபாலவின் உளவியல் எதிர்வினை பற்றிக் குறிப்பிடுகிறார். தர்மபாலவுடன் ஒல்கொட்டின் உறவு முறிந்தது போலவே, 1884 ஆம் ஆண்டு தொடக்கம் பிளவாட்ஸ்கியுடன் ஒல்கொட்டிற்கு இருந்து வந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டது.

இந்தியாவிற்கான இரண்டாவது பயணம்

1900 ஆம் ஆண்டில் தர்மபால இரண்டாவது தடவையாக இந்தியாவிற்குச் சென்றார். இந்தப் பயணம் அடையாறு நோக்கிய பயணமாக அமையவில்லை. தர்மபால வங்காளத்தின் தலைநகரான கல்கத்தா நோக்கிச் சென்றார். கல்கத்தா சென்ற தர்மபால அங்கு ‘மகாபோதி சங்கம்’ (Mahabodhi Society) என்ற அமைப்பை நிறுவினார். அச்சங்கத்தின் பத்திரிகையான ‘மகாபோதி’ (Mahabodhi) என்னும் ஆங்கில இதழையும் வெளியிட ஆரம்பித்தார். ‘மகாபோதி’ என்ற சொல் பௌத்த சமய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததொரு சொல்லாகும். அது ‘புத்தகயா’ என்னும் இடத்தில் புத்தர்பிரான் ஞானம் பெற்ற போதி மரத்தை (அரச மரத்தை) குறிக்கிறது. ‘மகாபோதி சங்கத்தை’ தர்மபால ஆரம்பித்த போது அவரது சிந்தனையிலும் நடவடிக்கைகளிலும் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன. 1900 – 1906 காலத்தில் தர்மபால பௌத்த தியோசொபிக்கல் சபையுடனான (BTS) தொடர்புகளை முற்றாக முறித்துக்கொண்டார். அச்சபையில் இருந்து விலகி அவர் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு செயற்பட ஆரம்பித்தார். 1893 ஆம் ஆண்டில் அவர் சிக்காகோவில் நடைபெற்ற உலகச்சமயங்களின் மாநாட்டில் (World Congress of Religions) பங்குபற்றினார். விவேகானந்தருடன் சேர்ந்து இந்து சமயத்தின் பிரதிநிதியாகப் பங்கு பற்றிய தர்மபாலவின் உரை அச்சபையில் இருந்தோரைக் கவர்ந்தது. அதனால் அவர் உலக அளவில் அறியப்பட்டவராக இருந்தார். அம்மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் ஹொன்னலு (Honolulu) சென்று ‘Mary Foster’ என்ற பெண்மணியைச் சந்தித்தார். ‘Foster’ இவரிற்குத் தம் வாழ்நாள் முடியும் வரை நிதியை வாரிவழங்கிய வள்ளலாக விளங்கினார். தர்மபால இந்தியாவில் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து பௌத்த கோவில்களின் வழிபாடுகளை அவதானித்தார். ஐக்கிய அமெரிக்கா, யப்பான், பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்தார். இந்தியாவின் பௌத்த தல யாத்திரைக்குரிய புனித இடங்களைப் புனரமைப்புச் செய்வதற்கு ஆசியாவின் பௌத்தர்களின் ஆதரவைத் திரட்டுவதே இவரின் ஆசிய நாடுகளின் பயணத்திட்டத்தின் நோக்கமாக அமைந்தது. அவர் நிதி திரட்டுவதிலும் பெரு வெற்றியைப் பெற்றார். அவரது பௌத்த சமயப் பணிகள் ஆசியாவின் பௌத்த நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு தர்மபால மேற்கு நாடுகளிலும் பௌத்த சமயத்தைப் பரப்பும் மிசனரியாகச் செயற்பட்டார். யப்பான், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்பனவற்றிலும் புத்தசமயத்தைப் பரப்பும் ‘மிசனரி’யாக அவர் செயற்பட்டார். யப்பான், ஐக்கிய அமெரிக்கா என்பனவற்றிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணித்தபோது அந்நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் தர்மபாலவை வியப்பில் ஆழ்த்தியது. 1904 இல் தர்மபால காசியில் மேற்கு நாட்டு மாதிரியில் ஒரு ‘கைத்தொழில் பாடசாலையை’ (Industrial School) நிறுவினார். இந்தப் பாடசாலையை நிறுவுவதற்குத் தாம் திரட்டிய நிதியைப் பயன்படுத்தினார். இப்பாடசாலையை அமைப்பதற்கு திருமதி. Foster அவர்களும் பெருமளவு நிதியைக் கொடுத்து உதவினார்.

3

1906 ஆம் ஆண்டு தர்மபாலவின் தந்தை டொன் கறோலிஸ் காலமானார். அவரது மரணத்தின் பின்னர் அவ்வாண்டு தர்மபால இலங்கைக்குத் திரும்பி வந்தார். ஒல்கொட் அவர்களும் அவ்வாண்டிலேயே ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். ஒல்கொட்டின் மறைவு, அவருக்கு அடுத்த நிலையில் இருந்து வந்த தர்மபாலவை, இலங்கையின் ஒப்பற்ற பௌத்த தலைவர் என்ற நிலைக்கு உயர்த்தியது. இவ்விருவரதும் இறப்பின் பின்னர் தர்மபாலவின் எழுத்துகளிலும், பேச்சிலும், நடத்தையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

தர்மபாலவின் உள்ளத்திலிருந்து அணையொன்றின் உடைப்பினால் வெள்ளம் கரைபுரண்டு பாய்வது போல் கோபம் பாயத் தொடங்கியது. இவ்வாறு தன் மனதில் ஏற்படும் கோபத்தின் கொந்தளிப்பு, தனது பௌத்த இலட்சியமான ‘மைத்திரி’ எனப்படும் ‘இரக்க உணர்வுக்கு’ (Compassion) முரண்பாடானதாக இருப்பதை தர்மபால அவர்களே உணர்ந்தார். தர்மபாலவின் வாழ்க்கை வரலாற்றைச் சிங்களத்தில் எழுதிய கருணாரத்தின இம்முரண்பாடு பற்றிக் குறிப்பிடுகிறார். தனது கோபத்தை அடக்கும் எண்ணத்துடன் அவர் அடிக்கடி “நான் நல்லவன்; நான் நல்லவன்” எனத் தனக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்வாராம். ஆனால், அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அடிக்கடி பொங்கிச் சீறினார் என கருணாரத்தின குறிப்பிடுகிறார் (கருணாரத்தின, 1965:203).

இக்காலத்தில்தான் அநகாரிக தர்மபாலவின் வசைமாரி பொழியும் படலம் ஆரம்பமாயிற்று. அவர் மிசனரிகள் மீது கடும் சொற்களால் வசைபாடினார். மிசனரிகளின் மீது மட்டுமல்லாமல் காலனிய அரசிடம் பட்டம், பதவிகளுக்காக தன் தந்தையைப் போன்று ஏங்கித் தவம் கிடந்தவர்கள் மீதும் அவர் தாக்குதல் தொடுத்தார். கௌரவ விருதுகள், பதக்கங்கள், பட்டங்கள் என்பனவற்றை அரசிடம் இருந்து பெற்ற உயர்குழாம் வகுப்பினை ஏகாதிபத்தியம் கருவியாக உபயோகித்தது என்பதை  தர்மபால சுட்டிக்காடினார்.

சிங்கள மக்கள் அந்நியர்களின் உடைகளை அணிவதையும், அந்நிய மோகத்தினால் தமது பண்பாட்டை இழப்பதையும் தர்மபால வெறுத்தார். பட்டம், பதவிகளைப் பெற்ற கிராமத்து உத்தியோகத்தர்கள் தமது தலையில் வளைந்த சீப்பு ஒன்றை நாகரிகத்தின் அடையாளமாக அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். யாவாவைச் சேர்ந்த குடியேறிகளின் அலங்கார அணிகலனாக இருந்த இந்த வளைந்த சீப்பை அணியும் வழக்கத்தை சிங்களவர்கள் இரவல் பெற்றனர். இதை அணிபவர்களை தர்மபால ‘எருமை மாடுகள்’ (ஹொன்ரடி) என்று கேலி செய்து எழுதினார்; ஏசினார். தர்மபாலவின் தந்தையார் கூட இவ்வாறாகச் சீப்பை அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அது அவரது முகாந்திரம் பட்டத்திற்குரிய மரபியல் அணிகலன்களில் ஒன்றாக இருந்தது. ஒரு தடவை இலங்கையின் பிரபல பௌத்த கல்வி நிறுவனமான வித்தியோதயப் பிரிவேனவிற்கு தர்மபால ஒரு விழாவிற்குச் சென்றிருந்தார். அங்கே முகாந்திரம் ஒருவர் சடங்கியல் முறையிலான உடையலங்காரத்துடன் (Ceremonial Attire) வந்திருந்தார். அவர் கழுத்தில் ‘டை’ கட்டியிருந்தார்; ஒரு சாரம், அதன் உள்ளே கால் நீளச்சட்டை (Trouser), தலையில் தொப்பி என்பனவற்றையும் அணிந்தவராக நடப்பதற்கு உபயோகிக்கும் பொல்லை ஊன்றிய வண்ணம் நின்றார். அப்போது தர்மபால “பொல் ஊன்றியபடி நிற்கும் இந்தக் காட்டுயானை யார்?” (Who is this wild elephant with a walking stick?) என்று கூறியபடி அவரின் இடுப்பைப் பிடித்து இழுத்து அவரை சுவருடன் மோதித் தள்ளினார். ஒரு தள்ளாத வயதுக் கிழவன் மீது தேவையற்ற முறையில் இப்படியான வன்முறையை உபயோகிக்கும் அளவுக்கு தர்மபாலவிடம் ஒரு வெறி எழுந்தது என்பது வியப்புக்குரியது. தர்மபாலவின் தந்தையைப் போன்றே முகாந்திரம் பட்டம் பெற்ற ஒருவர் மீது செய்யப்பட்ட இந்தத் தாக்குதலின் உளவியல் பற்றி கணநாத் ஒபயசேகர இவ்விடத்தில் சூசகமாகக் குறிப்பிடுகிறார் (Obeyesekere, 2018: 292).

தர்மபால தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார். அவர் ஏகாதிபத்தியவாதிகளைக் கடும் சொற்களால் கண்டனம் செயதார். அக்காலத்தில் யோன் கொத்தலாவல என்ற முக்கியஸ்தர் ஒருவர் இருந்தார். இம் முக்கியஸ்தரின் மகனே பின்னர் இலங்கையின் பிரதமராகப் பதவிவகித்த சேர். யோன் கொத்தலாவல; பெரும் பணக்காரரும், பிரபலம்மிக்கவருமான யோன் கொத்தலாவல ஒரு ‘சண்டியன்’ (Thug) என்ற பெயரைப் பெற்றிருந்தார். அவர் பிரித்தானியர்களான வெள்ளையர்களை வீதிகளில் கண்டால் அவர்களை அடித்துத் தாக்குவாராம். இவ்வாறு பிரித்தானியர் மீது வன்முறையை இடைக்கிடை பிரயோகித்துப் பிரபலம் பெற்ற யோன் கொத்தலாவல மீது தர்மபாலவிற்குப் பெருமதிப்பு இருந்தது. தர்மபாலவும் இதுபோன்று வன்முறையைக் கையாண்டிருக்கக் கூடும். ஆனால் அது அவரது ‘அநகாரிக’ வகிபாகத்திற்கு முரண்பாடானதாக அமைந்திருக்கும். அவர் மக்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையில் இவ்வாறு எழுதுகிறார். 

“சட்ட முரணான செயல்களில் ஈடுபடும் பிரித்தானியக் காவாலிகள் (British Lawless) உங்கள் கண்களில் எதிர்ப்பட்டால் அவர்களை அடியுங்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு வெருளிப் பொம்மையைச் (Scarecrow) செய்து தொங்கவிடுங்கள்; வாழைக்குற்றியைக் கொண்டு இதைச் செய்யலாம்; அதற்குக் காற்சட்டை அணிவித்து வீட்டின் முன்னால் வைக்கலாம். இவ்வெருளிப் பொம்மையை உங்கள் பிள்ளைகளின் கண்ணுக்கு முன்னால் நீங்கள் அடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அப்பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அந்நியர்களான பிரித்தானியர்களைக் கண்டால் அவர்களை அடித்துத் தாக்குவார்கள்.”

மேற்குறிப்பிட்ட மேற்கோளில் வெளிப்படுவது போன்ற அநகாரிக தர்மபாலவின் கட்டுக்கடங்காத கோபத்தின் உளவியலை கணநாத் ஒபயசேகர ‘இடிப்பஸ் கோபவெறி’ (Oedipal Rage) எனக் குறிப்பிடுகிறார். இக்கோப வெறியை முகாந்திரம் போன்ற பதவிகளில் இருந்தோர் மீதும் தர்மபால வெளிப்படுத்தினார் என்றும் கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகிறார் (Obeyesekere, 2018: 292).

இந்தக் கோபவெறி ‘மைத்திரி’ என்ற ‘இரக்க உணர்வுக்கு’ மாறானது. அது நியாயத்தினதும் நீதியினதும் அடிப்படையிலான எதிர்ப்புணர்வாக (Just Resentment) இருக்கவில்லை. ஆக்கபூர்வமான முறையில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும், கிறிஸ்தவ மிசனரிகளுக்கும் எதிரான எதிர்ப்புணர்வாக, உயர்வழிப்படுத்தல் (Sublimation) செய்யப்பட்ட எதிர்ப்பாக இது அமையவில்லை என்ற கருத்தை கணநாத் ஒபயசேகர பதிவு செய்கிறார்.

தர்மபாலவின் எழுத்தும், பேச்சும், நடத்தையும் பண்பாட்டு நிலையில் பிறருக்கு ஒரு முன்மாதிரியாக (A Model for Others) அமைந்தன. இலங்கையில் தர்மபாலவின் கவர்ச்சி ஆளுமையாலும், அவரது கருத்துகளாலும் கவரப்பட்ட, அவரது முன்மாதிரியைப் பின்பற்றிய ஓர் அரசியல் சமூகம் (Political Community) உருவானது. இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லா வயதினரும், இருபாலினருமான மக்களிடம் அவரின் கருத்துகள் சென்றடைந்தன (Obeyesekere, 2028: 292-293).

புதிய பௌத்த அடையாளத்தை உருவாக்குதல்

அநாகரிக தர்மபால இலங்கையில் சிங்கள சமூகத்தில் அடையாள வலியுறுத்தல் (Identity Affirmation) என்னும் செயல்முறையைத் தொடக்கி வைத்தார். அவர் வலியுறுத்திய பௌத்த அடையாளம் அவரது தனிப்பட்ட அடையாள முரண்பாடுகளின் (Personal Identity Conflicts) விளைபொருளாகும். தனிப்பட்ட நிலையில் அவர் தனது அடையாளத்தை வலியுறுத்தி உணர்ந்து கொண்டமை அவரது சுயமதிப்பையும் கௌரவத்தையும் உயர்த்துவதற்கு உதவியது. அவரது உள்ளம் வெட்கத்தாலும், தொடர்ந்த அவமதிப்புகளாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது சுய அடையாளத்தை அவர் வலியுறுத்தியமை மூலம் தனது சுயமதிப்பை உயர்த்திக் கொண்டார். இவ்வாறு தமது அடையாளத்தைக் கண்டறிந்து, அதனை வலியுறுத்த வேண்டும் என்று கூறினார். தனிநபர் ஒருவரின் தேவைகள் சமூகத்தின் தேவைகளுடன் ஒருங்கிணைவதற்கு இதுவோர் சிறந்த உதாரணமாகும். தர்மபாலவின் இந்த முயற்சியின் பயனாக இன்று வரை சிங்கள – பௌத்தர்கள் தமது கூட்டு அடையாளத்தை (Collective Identity) வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். சிங்கள – பௌத்தர் என்ற இனக்குழும (Ethnic Group) அடையாளம் ஒரு கூட்டு அடையாளம் ஆகும். இது கூட்டு அடிமன எண்ணங்களாக அல்லாது, உணர்வு நிலையில் வெளித்தெரியும் செயல் முறையாகும். வெளிப்படையான குறியீடுகள் மூலம் வெளிப்படுத்தல், வெளிப்படையான குறிப்பிட்ட வகை நடத்தைகள், செயல்கள், இனக்குழுமத்தின் தோற்றம் பற்றிய புராணப் புனைவுகளைப் பரப்புதல் ஆகியன இச்செயல்முறையில் அடங்குவன. சமூகவியல் நோக்கில் இதனை ஆராய்ந்து பார்த்தால், இச்செயல்முறை பண்பாட்டு அடையாள உணர்வு நிலையின் உள்ளார்ந்த கூறாக அமைந்திருப்பது தெரியவரும். இந்த அடையாள வலியுறுத்தல் சில வரலாற்றுக் கட்டங்களில் வேகம் பெறுவதுண்டு. அதனை வேகப்படுத்தும் சமூக உளவியல் உந்துசக்தி பின்வரும் சந்தர்ப்பங்களில் தோன்றும்.

அ. குழுவின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் தேவை உருவாதல்.

ஆ. இனக்குழும அடையாளம் சிதைவுற்றுப்போகும் நிலை ஏற்படுதல்.

இ. ஓர் இனக்குழுமத்தின் சுய அடையாளமும் சுயபடிமமும் எத்தகையது என்ற தெளிவற்ற நிலை இருத்தல்.

மேற்குறித்த வரலாற்றுச் சூழலில் புதிய அடையாளம் ஒன்றைக் கட்டமைத்தல், அல்லது அழிவுறும் நிலையில் உள்ள அடையாளத்தை மீள் உயிர்ப்பித்தல் இடம்பெறும்.

தர்மபால தமது அடையாள வலியுறுத்தல் வேலைத்திட்டத்தைச் சக்திமிக்க உத்திகளைக்கொண்டு முன்னெடுத்தார். அவரின் உத்திகள் மிக எளிமையானவையாகவும் இருந்தன. மக்களை வெட்கமுறச் செய்தல் அவரது உத்திகளில் ஒன்றாகும். மேற்கு நாட்டினரின் நடைமுறைகைளைப் பாவனை செய்வதையும், அந்நிய சமயத்தை ஏற்றிருப்பதையும் அவர் கேலி செய்தார். அவர்களது மூடத்தனத்தைச் சுட்டிக்காட்டி, அவர்களது சுயமதிப்பைத் தாழ்வுறச் செய்தார்; நாணமுறச் செய்தார். இவ்வாறு நாணமுறச் செய்ததோடு, சிங்கள மக்களின் கடந்துபோன பொற்காலத்தைச் சுட்டிக்காட்டி அவர்களின் சுயமதிப்பை உயர்த்தவும் செய்தார். தனது சொற்பொழிவுகளாலும், ‘சிங்கள பௌத்தய’ (சிங்கள பௌத்தர்) என்ற செய்திப் பத்திரிகையினாலும் மேற்குமயமாதலுக்கு உட்பட்ட சிங்கள மக்களைச் சாடினார்; கடந்துபோன பொற்காலத்தின் பெருமைகளை எடுத்துக்கூறினார். கீழ்வரும் கூற்று அவரது பிரசார உத்திகளுக்கு வகைமாதிரியாக அமைவது.

“இலங்கையின் இளைஞர்களே! நான் உங்களுக்குக் கூறக் கூடியது இதுதான். அந்நியனை நம்பாதீர்கள். அவன் உங்களுக்குச் சாராயம், விஸ்கி, கள்ளு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி என்பனவற்றைத் தருவான். மலிவு விலையில் தன் விற்பனைப் பொருட்களை பெற்றுச் செல்லும்படி கூறுவான். துட்டகைமுனு மன்னன் சொல்லியவற்றை உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்பெருமன்னனின் சிந்தனைகளை எண்ணிப் பாருங்கள். அவன் எமது தேசிய உணர்வை அழிந்தொழிந்து போகாது பாதுகாத்தவன் என்பதை உணருங்கள்.”

சிங்களவர்களின் கடந்தகாலத்தை இலட்சிய உலகாகக் காட்டிய அவர், அதனை மீளவும் உயிர்ப்பிக்க வேண்டும் என்றார். எமது இனத்தைப் போன்று நாகரிகம் படைத்த இனம் உலகில் வேறு எங்குமே கிடையாது; ‘சிங்கள இனம் ஈட்டியதைப் போன்ற வெற்றிகளை ஈட்டிய இனம் இப்பூவுலகில் வேறு எங்கும் இல்லை’ என்றெல்லாம் சிங்கள இனத்தின் பெருமையை அவர் எடுத்துக்கூறினார். இன்றைய தாழ்நிலைக்குக் காரணம் மிசனரிகளும் காலனியவாதிகளும் புகுத்திய மேற்கத்தைய கலாசாரம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 1922 ஆம் ஆண்டில் அவர் எழுதிய கட்டுரையொன்றில் ‘இந்நாட்டில் தமிழர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ இடம் கிடையாது.’ என்று எழுதினார். இவ்விரு பிரிவினரையும் சிங்கள மக்களைச் சுரண்டுபவர்களாகவே அவர் கருதினார். கிறிஸ்தவர்களை இறைச்சி உண்ணும் ‘தாழ்ந்தசாதி’ எனத் தூற்றினார். சிங்களவர் நாட்டைச் சிங்களவரே ஆளவேண்டும் என்றும் அவர் கூறினார். இடையிடையே சிங்களவர் என்ற சொல்லை எல்லாச் சிங்கள மக்களையும் உள்ளடக்கியதாக அவர் உபயோகித்தார் என்ற போதும், ‘சிங்கள – பௌத்த தேசம்’ (Sinhala – Buddhist Nation) என்ற கருத்தே அவரது கண்டன உரைகளிலும், எழுத்துகளிலும் ஓங்கி ஒலித்தது.

தர்மபாலவின் போதனைகளின் தாக்கம் உடனடியாகவே வெளிப்படலாயிற்று. சிங்களவர்கள் தமது பெயர்களை மாற்றத் தொடங்கினார்கள். பெயர்கள் ஒருவரின் அடையாளக் குறிகளாகும். ஒருவர் தமது பெயரை மாற்றுவது தமது சொந்த அடையாளம் பற்றிய சுய உணர்வின் (Self-consciousness) வெளிப்பாடாகும். ஐரோப்பியர்களின் பெயர்களைத் தமது சொந்தப் பெயராக வைத்துக் கொண்ட, கிறிஸ்தவர்கள் கூட இவ்வாறு பெயர் மாற்றத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு பெயர் மாற்றம் செய்வதில் கிராமப்புறத்து விவசாயக் குடியான்கள் அக்கறை செலுத்தவில்லை. அந்நியப்பட்ட உணர்வால் பீடிக்கப்பட்ட புத்திஜீவி வகுப்பினரே, பெயர் மாற்றம் செய்வதில் ஈடுப்பட்டனர். 1930களில் இவ்வாறாக பெயர் மாற்றத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. கிறிஸ்தவர்கள் கூட மதம் மாறாவிடினும் சிங்களப் பெயர்களைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்டினர். சிங்களவர்களிடையே பெண்களின் உடை, நாகரீகப் பாணி என்பவற்றிலும் சடுதியான மாற்றம் இக்காலத்தில் ஏற்பட்டது. கரைநாட்டுச் சிங்களவரில் பணம் படைத்த பிரிவினரின் குடும்பப் பெண்கள் ஐரோப்பியப் பாணியில் உடைகளை அணிந்து வந்தனர். இப்பிரிவினர் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நாகரிகத் தொடர்பிற்கு உட்பட்டிருந்ததே இதற்கான காரணமாகும். தர்மபால தனது சொற்பொழிவுகளில் சிங்களப் பெண்களின் மேற்கத்தைய உடைகளைக் கேலி செய்தார். தனது பத்திரிகையில் கேலிச் சித்திரங்களையும் வெளியிட்டார். இவ்விடயத்திலும் அவர் கையாண்ட உத்தி அவமான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்வதாகும். மேற்கத்தையப் பாணி உடைகள் அணிவதை வெட்கத்துக்குரியதாக்கி, தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தியதோடு, மாற்று உடை ஒன்றையும் அறிமுகம் செய்தார். அவர் பெண்களை இந்தியச் சாரிகளை அணியும்படி கூறினார். இப்புதிய ஆடையை தர்மபால தம் தாயாரையே முதலில் அணியச் செய்தார். விரைவில் இந்தியச் சாரி கரைநாட்டுச் சிங்களப் பெண்களின் தேசிய உடையாக மாறியது.

பௌத்தக்கொடி மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். இதனை ஒல்கொட் அறிமுகம் செய்தார். தர்மபால இக்கொடியைப் பிரபல்யப்படுத்தினார். பௌத்தக்கொடி அறிமுகமாகும் வரை பௌத்தர்களுக்கென ஒரு கொடி இருக்கவில்லை. இலங்கையின் சிங்களப்பகுதிகளில் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு கொடிகள் வழக்கில் இருந்தன. ஏழு கோறளைகள் பகுதியில் சிங்களக்கொடி வழக்கில் இருந்தது. இக்கொடி பின்னர் இலங்கையின் சிங்கள தேசியக் கொடியாக மாற்றம் பெற்றது. இக்கொடியில் இருந்து வேறாக தர்மபாலவால் பிரபல்யப்படுத்தப்பட்ட பௌத்தக்கொடி பரவலாக உபயோகத்திற்கு வந்தது. இக்கொடியை பொது வைபவங்களின் போதும், சடங்கியல் நிகழ்வுகளிலும் பறக்கவிடுவது பெருவழக்காகியது. இக்கொடியை இன்று ஏனைய பௌத்த தேசங்களும் பயன்படுத்துவதைக் காண முடிகிறது.

சமகால இலங்கையின் சமூக, அரசியல் போக்குகளில் தர்மபாலவின் சமயச் சீர்திருத்தங்கள் பெரும் செல்வாக்கைச் செலுத்தின். தர்மபாலவின் எழுத்துகள் விவசாயக் குடியான் வர்க்கத்தை நோக்கியதாக இருக்கவில்லை. அவர் சிங்கள மொழியில் கற்றவர்களையும், இருமொழிக் கல்வி உடையோரையும் இலக்குக் குழுக்களாகக் கொண்டு தம் கட்டுரைகளை எழுதினார்.

கல்விகற்ற இவ்வகுப்பு மக்களின் சுயமதிப்பை ஓங்கச் செய்தார். தர்மபால நவீன பௌத்தத்தின் நோக்கத்தையும் இலக்குகளையும் வரையறை செய்யும் பிரகடனத்தையும் (Charter) வெளியிட்டார் எனலாம். இந்தப் பிரகடனத்தில் இரண்டு கூறுகள் அமைந்திருந்தன. ஒன்று, இவ்வுலகத்துறவு (This Worldly Asceticism) என்னும் பௌத்த வாழ்நெறியாகும். தர்மபால சிங்கள மக்களின் சோம்பறித்தனத்தைச் சாடினார். சிக்கனமாக வாழ்தல், பொருளைச் சேமித்தல், கடின உழைப்பு ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார். இந்துக் கடவுள்களையும், தேவர்கள், தேவதைகளையும் வணங்கக்கூடாது எனவும், ஒவ்வொரு நாளும் வீட்டில் புத்தரை வணங்க வேண்டும் எனவும், வாரத்தில் ஒரு முறையாவது புத்த கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் எனவும் அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். பெற்றோர் தம் பிள்ளைகளை தினமும் ‘தியானம்’ செய்வதில் (சிங்களத்தில் ‘சில்’ அனுட்டித்தல் என்று கூறப்படும்) ஈடுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். தியானம் செய்தல் முதியவர்களுக்குரிய சமய நடைமுறையாக இருந்து வந்தது. அதனை சிறுவர் உட்பட யாவருக்கும் உரிய வழக்கமாக தர்மபால ஆக்கினார். இறைச்சி உண்பதையும், மது அருந்துவதையும் அவர் திரும்பத் திரும்பக் கண்டனம் செய்தார். ஆயினும் சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பரவலாகக் காணப்பட்ட மீன் உண்ணும் வழக்கம் பற்றித் தர்மபால எதுவும் கூறாது மௌனம் காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மபாலவின் நவீன பௌத்தம் பற்றிய பிரகடனத்தின் இரண்டாவது கூறாக அமைவது, பௌத்த சமயிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் (Practices for Lay Buddhist Persons) ஆகும். பௌத்த சமய நூல்களில் துறவிகள் அல்லாத புத்த சமயிகளுக்கான ஒழுக்கவிதிகள் வரன்முறையாக வகுத்துக் கூறப்படவில்லை. புத்தசங்கத்தைச் சேர்ந்த பிக்குகளிற்கான ஒழுக்கவிதிகள் மட்டும் இச்சமய நூல்களில் கூறப்பட்டிருந்தன. திரிபிடகத்தின் சில பகுதிகளில் மட்டும் சாதாரண மக்களுக்குரிய ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. புத்தசமயிகள் இன்னவாறு ஒழுக வேண்டும் என்ற விதிகள் புத்த சமயத்தில் இல்லாதபடியால், புத்தசமயம் விவசாயக் குடியான் சமூகங்களிலும் பரவியது. விவசாயக் குடியான்களிடையே பரவிய பௌத்தம் வெவ்வேறு அற ஒழுக்கநெறிகளை அனுமதித்தது. இதனால் இலங்கை போன்ற விவசாயக் குடியான் சமூகங்களின் அற ஒழுக்கநெறிகளில் முரண்பாடுகள் பல காணப்பட்டன. இலங்கையின் பௌத்தர்களுக்கு ஒழுக்கநெறிகளைப் போதிக்கும் நோக்குடன் தர்மபால ‘The Daily Code for the Laity’ (புத்த சமயிகளுக்கான ஒழுக்கவிதிகள்) என்ற நூலை 1898 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். இந்நூல் சமயிகளுக்கான ஒழுக்கவிதிகளை திட்டவட்டமாக எடுத்துரைத்தது. 1958 இல் இந்நூலின் 19 ஆவது பதிப்பு வெளியானது. அந்நூல் 50,000 பிரதிகள் விற்பனையாயிற்று. கணநாத் ஒபயசேகர அவர்கள் இந்நூலில் கூறப்பட்ட ஒழுக்கவிதிகளைப் பட்டியலிட்டு விளக்கும் முறையில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆகையால் அவ்விபரங்களைத் தமது பிற கட்டுரைகளில் கண்டுகொள்ளுமாறு கூறிவிட்டு, ஐரோப்பா, யப்பான், ஐக்கிய அமெரிக்கா ஆகிய கைத்தொழில் நாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி தர்மபால கூறியிருக்கும் கருத்துகளை விளக்கிக்கூறத் தொடங்குகிறார். ‘புத்த சமயிகளுக்கான ஒழுக்கவிதிகள்’ நூல் பற்றி, கணநாத் ஒபயசேகர ‘The Vicissitudes of the Sinhala – Buddhist Identity through Time and Change’ (1979) என்ற கட்டுரையில் எழுதியிருப்பவற்றைத் தொகுத்து இக்கட்டுரையின் பின்னிணைப்பாகத் தந்துள்ளோம்.

அநகாரிக தர்மபாலவின் சீர்திருத்தக் கருத்துகளின் தாக்கம்

கவர்ச்சி ஆளுமை மிக்க தலைவர்களின் தாக்கம், சமூகத்தின் எல்லா அடுக்குகளையும் சேர்ந்த மக்களின் மீதும் ஒரே விதமானதாக அமைவதில்லை. முதலில் தர்மபாலவின் கருத்துகளால் கொழும்பு நகரத்தின் சிங்கள உயர்வகுப்பினரின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கவரப்பட்டனர். பணத்தைத் தேடியும், கல்வி மூலம் உயர்ச்சி பெற்று உயர்நிலையை எய்தியவர்களும், மருத்துவம், சட்டம் போன்ற உயர் தொழில் துறைகளில் பணியாற்றியவர்களுமான சிங்கள உயர்வர்க்கம், அவரின் கருத்துகளால் முதலில் கவரப்பட்டனர். தர்மபாலவின் சொந்தச் சகோதரர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் ‘அப்புகாமி வர்க்கத்தின்’ அடையாளங்களை எப்பொழுதோ இழந்துவிட்டவர்களாய், கொழும்பு நகரில் தம் மத்தியில் வாழ்ந்த புரட்டஸ்தாந்திய உயர்வகுப்பின் வாழ்க்கை முறைகளையும், நடை உடை பாவனைகளையும் கைக்கொண்டவர்களாய் மாறியிருந்தனர். தர்மபாலவின் ஆங்கில எழுத்துகள், இந்த வகுப்பினருக்கு இடித்துரைக்கும் முறையில் அமைந்தன. இந்தப் புதிய பணக்கார வர்க்கம் விரைவாகச் சிங்கள – பௌத்தர் என்ற தேசிய அடையாளத்தை இழந்து வருகின்றது என்றும், காலப்போக்கில் முழுச் சிங்கள மக்களும் தமது தேசிய அடையாளத்தை இழந்துவிடுவர் என்றும் தர்மபால நம்பினார். ‘ஆரியச் சிங்களவர் தமது உண்மையான துய அடையாளத்தை இழந்து ஒரு கலப்பு (Hybrid) வகையினராக மாறுகின்றனர்’ என அவர் கவலைப்பட்டார்.

தர்மபாலவினைப் போன்று உயர்ச்சி பெற்றுவந்த பௌத்த உயர்வகுப்பினர் அவரின் பௌத்த நவீனத்துவ கருத்துகளை ஏற்றனர். ஆயினும் அவர்களால் தர்மபாலவின் தீவிர தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் காலனிய அரசாங்க நிர்வாகத்தில் உயர் பதவிகளைப் பெற்று தம் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற அவர்களது கனவுகளைத் தர்மபாலவின் தீவிர தேசியவாதம் சிதறடித்துவிடும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அக்காலத்தின் அரசியல்வாதிகள் காலனிய அரசாங்கத்துடன் அரசியல் சீர்திருத்தம் (Political Reforms) பற்றிப் பேரம் பேசுவதில் ஈடுபட்டிருந்தனர். அந்த அரசியல்வாதிகளால் தர்மபாலவின் தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கை படிப்படியாக சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்கும் என்ற அவர்களின் கனவு தர்மபாலவின் தேசியவாதத்தால் பலிக்காமல் போய்விடும் என அந்த அரசியல்வாதிகள் அஞ்சினர். மதிப்புக்குரிய குடும்பங்களின் பிள்ளைகள் அக்காலத்தில் மிசன் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியைக் கற்று வந்தனர். பௌத்த தியோசொபிக்கல் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளிலும் அக்குடும்பங்களின் பிள்ளைகள் சேர்ந்து ஆங்கிலக் கல்வியைக் கற்று வந்தனர். அப்பிள்ளைகளும், அவர்களின் பெற்றோர்களும் தர்மபாலவின் கண்டனங்களால் அச்சமடைந்தனர். குறிப்பாக அவர் கல்வி மொழியாக ஆங்கிலம் உபயோகிக்கப்படுவதையும், பிள்ளைகள் மேற்கு நாகரிகப் பாணியில் உடைகளை அணிவதையும் கேலி செய்து எழுதுவது ஏற்கப்படக்கூடியதாக இருக்கவில்லை. அக்கால மேட்டிமைத்தனமான கல்வி முறையை (Elite Education) தர்மபால முற்றாக நிராகரிப்பவராகக் காணப்பட்டார்.

தர்மபாலவின் சகோதரர்கள் அவரக்குப் பலவகையிலும் உதவிகளைப் புரிந்து வந்தனர். ஆயினும் அவர்கள் தம் மேற்கு நாட்டுப் பெயர்களை மாற்றிக் கொள்ளவில்லை; மேற்கு நாட்டு நாகரிக வாழ்க்கை முறைகளையும் கைவிடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. தனது சொந்தக் குடும்ப வட்டத்தினரே சிங்களப் பண்பாட்டின் சீரழிவு பற்றி அக்கறையற்றிருப்பதைக் கண்டு தர்மபால உள்ளம் குமுறினார். தனது சகோதரனைப் பெயர்சுட்டாமல் குறிப்பிட்டு “எங்கள் மத்தியிலும் ஒரு யானை வைத்தியன் இருக்கிறான். அவன் அந்நியர்களான வெள்ளையர்கள் அணியும் காற்சட்டையை அணிந்து திரிகிறான்” (இக்கூற்றில் வைத்தியரை Elephant Doctor எனக் குறிப்பிடுகிறார். ‘அவன்’ என்ற மரியாதையற்ற பொருளுடைய சுட்டுப்பெயரை உபயோகிக்கிறார்.) என்கிறார். சிங்கள உயர்வகுப்பு தர்மபாலவிற்கு முழுமையான ஆதரவை வழங்க முன்வரவில்லை. அவ்வகுப்பினர் பௌத்த தியோசொபிக்கல் சபையை ஆதரித்தார்கள்; இச்சபையில் இருந்து வெளியேறிய தர்மபால ஆரம்பித்த ‘மகாபோதி சங்கத்தின்’ தீவிரவாதத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. எவ்வாறிருப்பினும் தர்மபாலவின் கருத்துகள் அனைத்துப் பௌத்தர்களுக்கும் சுயகௌரவத்தை அளிப்பனவாய் அமைந்தன. இக்காரணத்தால் தர்மபாலவின் தலைமுறையினரும், அவருக்குப் பிந்திய தலைமுறையினரும் ‘சிங்கள – பௌத்தர்’ என்ற அடையாளத்தால் பெருமிதம் கொள்ளத் தொடங்கினர். தர்மபாலவின் சகோதரர்கள் தமது அந்நியப் பெயர்களை மாற்றிக்கொள்ளாத போதும், தம் பிள்ளைகளுக்குப் பௌத்தப் பெயர்களைச் சூட்டினர்.

நகரப்புறத்தில் வாழ்ந்த படித்த சிங்களவர்களுக்கு அடுத்த நிலையில், தர்மபாலவின் கருத்துகளால் கவரப்பட்ட பிரிவினராக கிராமங்களில் வாழ்ந்து வந்த சிங்கள மொழி மூலக் கல்வி கற்ற வகுப்பு விளங்கியது. இக்கிராமத்து புத்திஜீவிகள் வகுப்பில் (Village Intelligentia) புத்த பிக்குகள் முக்கிய பிரிவினராக அமைந்திருந்தனர். புத்த பிக்குகளை அரசியல்மயப்படுத்துவதில் இலங்கையில் பிறர் எவரையும் விடத் தர்மபாலவிற்கே முதன்மையான வகிபாகம் இருந்தது. புத்த பிக்குகளோடு கிராமத்து ஆசிரியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், கீழ்நிலைப் பதவிகளான கிராம விதானை (Village Headman), விவாகப் பதிவாளர், பிறப்பு – இறப்புப் பதிவாளர், நொத்தாரிசு ஆகிய பதவிகளை வகித்தோரும் கிராமத்துப் புத்திஜீவி வகுப்பில் உள்ளடங்குவர். இவர்கள் யாவரும் காலனிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அதிகாரி வகுப்பின் (Colonial Bureaucracy) அங்கமாக விளங்கினர். அத்தோடு இவர்கள் யாவரும் விரைவாக வளர்ச்சி பெற்று வந்த கிராமப் பாடசாலைகளில் கல்வி கற்றவர்களாக இருந்தனர். கிராமத்து புத்திஜீவிகள் கிராமங்களில் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் கிராமத்து மக்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக விளங்கினர். ஆயினும் அவர்கள் கிராமத்து விவசாய வகுப்பில் இருந்து வேறானவர்களாக இருந்தனர். அத்தோடு நகர்ப்புறங்களின் படித்த உயர்குழுக்களோடும் இவர்களுக்குத் தொடர்பு இருக்கவில்லை. இதனால் அரசியல், பொருளாதார அதிகாரங்கள் அற்றவர்களாகக் கிராமத்துப் புத்திஜீவிகள் இருந்து வந்தனர். கண்டியின் ‘ரதல’ (Radala) நிலப்பிரபுத்துவ அதிகார வகுப்பில் இருந்து வேறான ஒரு வர்க்கமாகவும் கிராமத்துப் புத்திஜீவிகள் வர்க்கம் விளங்கியது. தர்மபால இந்த வர்க்கத்தினருக்கு புதிய வாழ்க்கை நெறி ஒன்றைக் காட்டினார்; அவர்கள் புதியதொரு அடையாளத்தைப் பெற உதவினார். கிராமத்துப் புத்திஜீவிகள் வகுப்பு கிராமத்தின் தலைமைத்துவத்தை இக்காலத்தில் பெறத் தொடங்கியது. 1956 இல் முதற்தடவையாகக் கிராமத்துப் புத்திஜீவிகள் வர்க்கத்தினர் பண்டாரநாயக்கவிற்கு வாக்களிக்கும்படி மக்களின் ஆதரவைக் கோரினர்; பண்டாரநாயக்கவை ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினர். பிரதம மந்திரியாக ஆட்சி அதிகாரத்தினைப் பெற்ற பண்டாரநாயக்க, தம்மை அறியாமலே, தர்மபாலவின் மரபுரிமையைத் தனதாக்கிக் கொண்டார். இக்கிராமிய வர்க்கங்களின் அடுத்த தலைமுறையினர் அல்லது பேரப்பிள்ளைகள், 1971 இல் ஒரு கிளர்ச்சி இடம்பெறக் காரணம் ஆயினர். 1971 இன் தீவிரவாதக் கிளர்ச்சியாளர்களிடமும், தர்மபாலவிடமும் பின்வரும் பொது இயல்புகள் காணப்பட்டன. 

அ. உலகியல் இன்பங்கள் யாவற்றையும் துறக்கும் அர்ப்பணிப்பு (Ascetic dedication).

ஆ. இறுக்கமான தூய்மைவாதம் (Regib Puritanism).

இ. ஒழுங்கமைப்புத் திறன்கள் (Organisational Skills).

ஈ. மார்க்சியத்தை குறுகிய இனவாதத்துடன் கலப்புச் செய்தமை (தர்மபால புத்தரின் போதனைகளை சிங்கள இனவாதத்துடன் கலப்புச் செய்தது போன்று).

இப்பொழுது இலங்கையில் தர்மபாலவின் புரட்டஸ்தாந்திய பௌத்தத்தின் செல்வாக்குப் படிப்படியாகக் குறைந்து செல்கிறது என்றே கூற வேண்டும்.

இத்தமிழ்க் கட்டுரை கணநாத் ஒபயசேகரவின் ‘The Buddha in Sri Lanka: Histories and Stories’ என்ற நூலின் 10 ஆவது அத்தியாயமான ‘Personal Identity and Cultural Crisis: Buddhist Reforms of Anagarika Dharmapala என்ற தலைப்பிலான கட்டுரையின் (பக். 277-299) சுருக்கிய தமிழாக்கமாகும்.

பின்னிணைப்பு

புத்த சமயிகளுக்கான ஒழுக்கவிதிகள் (1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘The Daily Code for the Laity’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டவை):

  • உணவு உண்ணும் முறை (25 விதிகள்)
  • வெற்றிலை சப்புதல் (6)
  • சுத்தமான ஆடைகளை அணிதல் (5)
  • மலசலகூடத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் (4)
  • வீதியில் நடந்து செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய நற்பழக்கவழக்கங்கள் (10)
  • பொதுமக்கள் கூடும் இடங்களில் நடந்துகொள்ளும் முறை (19)
  • பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை (30)
  • சிறுவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை (18)
  • புத்த துறவிகள் முன்னிலையில் புத்த சமயிகள் நடந்துகொள்ள வேண்டிய முறை (8)
  • பேருந்துகளிலும், ரயில் வண்டியிலும் பயணிக்கும் போது நடந்துகொள்ளும் முறை (8)
  • கிராமப் பாதுகாப்புச் சங்கங்கள் செய்ய வேண்டியவை (8)
  • நோயாளிகளைப் பார்வையிடச் செல்லும் போது நடந்துகொள்வது எப்படி (2)
  • மரணச்சடங்கு (3)
  • வண்டிக்காரர்களுக்கான விதிகள் (6)
  • சிங்களவரின் உடைகள் (6)
  • சிங்கள ஆட்பெயர்கள் (2)
  • ஆசிரியர்கள் செய்ய வேண்டியன (11)
  • வேலையாட்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை (9)
  • விழாக்களை எப்படிக் கொண்டாட வேண்டும் (5)
  • கோவில்களில் சமய பக்தர்கள் (ஆண்களும், பெண்களும்) நடந்துகொள்ள வேண்டிய முறை (14)
  • பிள்ளைகள் பெற்றோரைப் பேணி நடக்கும் முறை (14)
  • வீட்டுச்சடங்குகள் (1)

அநகாரிக தர்மபால இவ்வாறு ஒழுக்கவிதிகளை புத்த சமயிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டியாக வரைந்தளித்தார். இந்த விதிகளை வாசித்துப் பார்க்கும் போது இவை படித்தவர்களான சிங்களப் புத்திஜீவிகளுக்காக எழுதப்பட்டவை என்பது புலனாகும். விவசாயக் குடியான்களின் பழக்கவழக்கங்களை இவை தவறானவை எனக் குறிப்பிடுவதைக் காணலாம். அருவருப்பை ஏற்படுத்தும் உண்ணுதல் முறை, உடையணிதல், மலசலம் கழித்தலில் சுத்தம் பேணாமை, கண்டபடி வெற்றிலை சப்புதல், பிறரை விளிக்கும் போது மரியாதையில்லாத சொற்களால் விளித்தல் என்பனவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

தர்மபாலவின் ஒழுக்கவிதிகளில் பல சிங்களவரின் மரபுவழிப் பண்பாட்டின் கூறுகளாக இருந்தன. ஆயினும் அவர் கூறியவற்றில் பல மேற்கு நாட்டுப் பண்பாட்டின் ஒழுக்கவிதிகளுமாகும். ஆதலால் தர்மபால மரபுவழி ஒழுக்கவிதிகளையும், தாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த செல்வந்தச் சமூகத்தின் ஒழுக்கவிதிகளையும் கலந்தவொரு விதிமுறையையே உருவாக்கினார் எனலாம். இவ்வாறாக அவர் மேற்கு நாட்டுப் புரட்டஸ்தாந்திய அறநெறிகளை உள்வாங்கி, மரபுவழிச் சிங்கள அற ஒழுக்கநெறிகள் என இலட்சியப்படுத்தினார். இதனையே நாம் புரட்டஸ்தாந்திய பௌத்தம் எனக் குறிப்பிட்டோம். தர்மபாலவின் கருத்தியல் நிலைப்படி அவர் மேற்கத்தைய முறைகளை நிராகரிக்கும் நோக்கம் உடையவராக இருந்தார். ஆயினும் அவர் வகுத்துரைத்த ஒழுக்கவிதிகளில், கரண்டியையும், முள்ளுக் கரண்டியையும் உணவு மேசையில் எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் குறிப்பிடுகிறார். அவர் மேற்குலகை எவ்விதம் பற்றுதலோடு நோக்கினார் என்பது அவரின் கட்டுரைகளில் சில இடங்களில் வெளிப்பட்டுத் தெரிகிறது.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்