நாவலப்பிட்டி மண்ணில் உருவான ஆளுமை: எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

நாவலப்பிட்டி மண்ணில் உருவான ஆளுமை: எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை

October 1, 2025 | Ezhuna

இலங்கையின் மலையக நாட்டார் மரபு, அழகியலையும் வாழ்வியலையும் மட்டுமல்ல; எதிர்ப்புவாதச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துபவை. சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக மலையக மக்களிடையே தோன்றிய எதிர்ப்புணர்வுகள் பல்வேறு கலைவடிவங்களாகவும் உருமாறியுள்ளன. அவ்வகையில் சமூக அடையாளச் சிக்கல், உரிமை மறுப்பு, வரலாற்றுப் புறக்கணிப்பு, பொருளாதாரத் திண்டாட்டம் ஆகிய அனுபவங்களின் எதிரொலியாக, ‘மலையக வீதிப்பாடல்கள்’ உருவாகுவதைக் காண்கின்றோம். முச்சந்தி இலக்கிய வகையின் ஒரு முக்கியகூறாக விளங்கும் இப்பாடல்கள், எழுச்சிக் கோசங்களையும், அரசியற் சிந்தனைகளையும் முன்வைப்பவை. இப்பாடல்கள் சித்திரிக்கும் விடயப்பரப்புகளையும், அவற்றை இயற்றிய பாடலாசிரியர்களையும், அவர்களுக்குப் பின்னணியாக அமைந்த சூழ்நிலைகளையும் ஆவணப்படுத்தும் நோக்கம் கருதியதாக ‘மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள்’ எனும் இத்தொடர் பரிணமிக்கும். தலைப்பில் அமைந்தது போலவே, அவ்வாறு எழுந்த பாடல்கள் ஏற்படுத்திய சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் தொடர்பிலும் இத்தொடரின் உள்ளடக்கம் விரிவுபெறும்.

 

அறுபதுகளுக்குப் பிந்தைய நாவலப்பிட்டி மண்ணில் உருவான கவிதைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளையின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட மலையக வீதிப்பாடல்களை ஆராயும் போது, பெரியாம்பிள்ளை என்ற பெயர் தவிர்க்க முடியாததாகின்றது. எனினும், அவரது எழுச்சிப் பாடல்களில் பல எங்களிடம் இல்லாத நிலை, அவரைப் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொள்ள முடியாமைக்குக் காரணமாக இருந்து வருகிறது. அவரை நேரடியாகக் கண்டவர்கள், அவரது உடலியங்குச் சிறப்புகளைப் பற்றி சில குறிப்புகளை வழங்கினாலும், அவரது புகைப்படம் இல்லாமை அவரது உருவத்தைத் தெளிவாக அடையாளப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. “நாவலப்பிட்டி மொண்டிகிறிஸ்டோ அவரது பிறப்பிடமாகும். இ.தொ.கா. மாநாடுகள் நடைபெற்ற இடங்களில் அவர் தனது பாட்டுப் புத்தகங்களை விற்பனை செய்து வந்தார். பெரும்பாலும் தொழிலாளர் பிரச்சினைகளை முன்வைக்கும் வகையிலேயே அவரது பாடல்கள் அமைந்திருந்தன. அதேவேளை, காந்தியின் சத்தியாக்கிரகம், இந்திய சுதந்திரப் போராட்டம் போன்ற கருப்பொருட்களையும் அவர் பாடல்களாக இயற்றி, பாடி, விற்பனை செய்தார்” என பெ. முத்துலிங்கம் வழங்கியுள்ள குறிப்பும் கவனிக்கத்தக்கது.

முருக பக்தராக விளங்கிய பெரியாம்பிள்ளை, முருகன் மீதான ஆழ்ந்த பக்தியுணர்வில் பல பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். முருகனை மையமாகக் கொண்ட அவரது பக்திப் பாடல்கள் இன்று வரை பெருமளவில் கிடைக்கின்றன. அதேசமயம், முருகன் பக்தியுடன் இணைத்து சமூக அவலங்களையும் உட்சுமந்து அவர் பாடல்களை இயற்றியிருந்தார். 1926.07.07 அன்று பிறந்து, இம்புல்பிட்டியில் வசித்து வந்த அ. கந்தையா அவர்கள், பெரியாம்பிள்ளையை நன்கு அறிந்தவராவார். பெரியாம்பிள்ளை இயற்றிப் பாடிய பாடல்களில் ஒன்றை அ. கந்தையா அவர்கள் பாடிக் காட்டியதன் மூலம், அவரது படைப்புகளை நெருங்கிச் சுட்டிக்காட்டும் வாய்ப்புக் கிடைத்தது.

“சுருதி மலை தன்னில் வாழும் 

சுப்ரமணியா உன்னை ஸ்தோத்தரித்தேன்

இந்த வேளை நீ வாராய் 

தோகை மயில் மீது நீ வாராய்

ஐயா முருகையா

சிக்கந்தன் மலை தன்னில் இருப்போனே முருகா

அக்கந்த தலை தனில் விழிப்போனே

அக மன்னவர் சுகம் எய்திய 

பெரியாம்பிள்ளை கவி பாட

ஆனந்தம் மீது ஆனந்தம் ஆனந்தம்”

அந்தப் பாடலை மிகுந்த உணர்வோடு பாடிய பின்னர், கந்தையா அவர்கள் அதனைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கிறார். அந்தப் பாடல் காம்போதி இராகத்தில் பாடப்பட்டதாகவும், இந்த இராகம் குறிப்பிடப்பட்ட நிலையிலேயே, அவரது பாடல் நூல் தன்னிடம் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மலையக மக்களின் தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றில் 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற டயகமப் போராட்டம் சிறப்பானது. அந்தப் போராட்டத்தைச் சித்திரிக்கும் பெரியாம்பிள்ளையின் பாடல் வரிகள், அவரது படைப்புகளின் சமூக உணர்வை வெளிப்படுத்துபவையாக விளங்குகின்றன.

“ஆனை முகனுக்கு இளையோனே

ஞான வடிவேலனே – ஆறுமுக

பன்னிரெண்டு கையனே – மத

யானை மேல் பவனிவரும் மெய்யனே

வையகம் புகழும் மத்திய மாகாணத்தின்

ஒரு பகுதி டையகாமம் தோட்டத்திலே

ஆண்டவா நாங்க பட்டபாட்ட

கேட்டுப்பாரு தாண்டவா

தொண்டமான் பாட்டி என்றும் – தோழர்

அஸீஸ் பாட்டி என்று தோட்டத்திலே 

இரண்டு கட்சி ஆகியது தொழிலாளர்

மனம் துண்டுபட்டு போச்சுது”

எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை நாவலப்பிட்டி சொய்சாகலையில் பிறந்து, பின்னர் தொலஸ்பாகை மேரிவலைத் தோட்டத்தில் வாழ்ந்ததாக மாத்தளை வடிவேலன் குறிப்பிடுகிறார். சமயப்பணி, சமூகப்பணி ஆகியவற்றுடன் அவர் ஆற்றிய கல்விசார் பணியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஆலயங்களுக்குச் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களைத் துதிப்பாடல்களால் போற்றுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். முருகன் மீது அதீத பக்தி கொண்டிருந்த அவர், கதிர்காமத்தின் மீதும் அளவற்ற நேசம் கொண்டிருந்தார். தனது கவியாற்றலையும் பக்தி ஞானத்தையும் ஒருங்கே இணைத்து, முருகன் மீதான ஈடுபாட்டில் பல பாடல்களை உருவாக்கியுள்ளார். மலையக வீதிப்பாடல்கள் தொகுப்பிற்கேயுரிய பண்புகளுடன் அவரது சிறுசிறு பிரசுரங்கள் வெளியாகியுள்ளன. அப்பாடல்கள் பின்னர் தொகுப்புகளாகியுள்ளன. அவற்றில் அரோகரா துதி, கதிர்காம மாலை, தோத்திர மாலை, ஸ்ரீ கதிரை மகத்துவ மாலை, ஸ்ரீ கதிர்காம துதி, கதிரேசபத்து, கந்தன் சரணப்பத்து, காவடி மகத்துவம், வள்ளி – தெய்வானை ஏசல், வளையற்சிந்து, கழுகுமலைப்பத்து, கும்பிடுபத்து, தோத்திரப்பத்து, தரிசனைப்பத்து ஆகிய புத்தகங்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு வெளியானமை குறிப்பிடத்தக்கது.

‘தமிழ் இலக்கியத்தில் கதிர்காம முருகன்: மலையக கவிஞர் அருட்கவி எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை பாடிய சிற்றிலக்கிய தொகுப்பு’ என்ற தலைப்பில் வெளிவந்த நூல், கவிஞர் பெரியாம்பிள்ளையின் கவித்துவப் புலமையை வெளிப்படுத்தும் முக்கிய பணியினை ஆற்றுகிறது. இந்தத் தொகுப்பை வெளியிட்டதில் மாத்தளை வடிவேலனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் இதனைப் பதிப்பித்து வழங்கியுள்ளது.

பெரியாம்பிள்ளையின் சிறுபிரசுரங்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்நூலுக்கான வெளியீட்டுரையில், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தனன் குறிப்பிடத்தக்க கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுவதாவது: “முருகனையும் அன்னை முத்துமாரியையும் பாடி மக்களுக்கு வழிகாட்டிய பெருந்தகையாக, நாவல் நகரில் உதித்த மலையக மக்கள் அருட்கவி அமரர் எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை விளங்குகிறார். பெரியாம்பிள்ளை அவர்களை முத்தெனப் போற்றிப் பணியலாம். உழைக்க வந்த மக்களின் வாழ்வு சிறப்பாகவும், அவர்களின் துன்பதுயரங்கள் குறையவும் வழிகாட்டுவதாக இவரது பாசுரங்கள் அமைந்துள்ளன. அந்தக்காலத்தில் கல்வி என்பது பெரிதும் அரிதாக இருந்த சூழலில், மக்கள் கதிர்காமக் கந்தனின் புகழைப் பாடுவதற்கு ஏற்ற எளிய சொற்றொடர்கள் மற்றும் உவமானங்களைப் பயன்படுத்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.”

“எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை இலங்கை மட்டுமின்றி, பக்தியுலகமே போற்றித் துதிக்கும் கதிர்காமக் கந்தனின் திருக்கோயிலைச் சென்றடையும் வழிமார்க்கம் முதல் கதிர்காம முருகனின் தோத்திரமாலை, அரோகரா துதி போன்ற சிற்றிலக்கியங்கள் பலவற்றுடன், மாரியம்மன் தாலாட்டு, கோலாட்டுப் பாடல்கள் போன்றவற்றையும் நமக்கென்று வழங்கியுள்ளார். பழந்தமிழ் பள்ளு இலக்கியங்களைச் சேர்ந்த ஏசல், ஊடல், சிலேடை, கழுகு மலைப்பத்து, கும்பிடுபத்து, சரணப்பத்து, தோத்திரப்பத்து, தோத்திரமாலை, புராணம் போன்ற பா வகைகளை பெரியாம்பிள்ளை கையாண்டபோது, பாமர மக்களும் அவற்றை அறிந்து, தெளியும் வண்ணம் எளிய நடையில் பாடியிருப்பது ‘அவர் ஒரு மக்கள் கவிமணி’ என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. இவரது பாடல்கள் பக்தியுணர்வையும் வரலாற்றுத் தகவல்களையும் ஒருங்கே கொண்டுள்ளது” என பதிப்பாளரான மாத்தளை வடிவேலன் குறிப்பிட்டுள்ளதும் கவனத்திற்குரியது.

பெரியாம்பிள்ளை இயற்றிய அரோகரா துதிக்கு லாகோலா என்னும் மெட்டில் பல்லவி அமைக்கப்பட்டுள்ளது. அனுபல்லவி, முடுகு சந்தம் என்பன கையாளப்படும் விதங்கள் தொடர்பிலான விளக்கத்தையும் தெளிவுறுத்தியே அவரது பாடல்கள் அமையப்பெற்றுள்ளன. 

“சங்கரன் மகனெனும் தங்க மருந்து

சதுர் மறைப்புகழ் சிவசண்முக மருந்து 

ஐங்கரன் சோதரனான மருந்து 

அவனியோர் புகழ்ந்திடும் ஆனந்த மருந்து 

தென் கதிர்காமத்தில் வசிக்கும் மருந்து

சேயன் பெரியாம்பிள்ளை துதிக்கும் மருந்து”

இப்பாடல் முருகனின் திருவருளைச் சிறப்பிக்கிறது. இவர் ஒவ்வொரு பாடல்களின் இறுதியிலும் தனது பெயரையும் இணைத்துக்கொள்ளும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். 

முருகனின் தோற்றம், வரலாறு, முருக அடியார்களின் வரலாறு போன்றவற்றை நன்கு அறிந்தவராகப் பெரியாம்பிள்ளை விளங்குகிறார். பாடல்களை எழுதுவது மட்டுமன்றி, அவற்றை மக்கள் கூடும் இடங்களில் நேரடியாகப் பாடிக் காட்டும் வழக்கமும் அவருக்கு இருந்தது. இசையிலும் ஆழ்ந்த ஈடுபாடும், ஞானமும் கொண்டவர் என பெரியாம்பிள்ளையை இனங்காணலாம். கதிர்காமத்தைச் சிறப்பிக்கும் பல பாடல்கள் இவரது படைப்புகளில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

“ஆதி

தானிலங்கும் காவனம் சூழ்தென் கதிர்காமம் அருள்

தானிலங்கும் நீதமறைத்தலங் கதிர்காமம் நலந்தருங் கதிர்காமம்

மானிலம் புகழும் கந்தன்வளர் கதிர்காமம் கங்கை 

வேணியரன்பாலனருள் விழைகதிர்காமம் தவ

ஞானமுத்துலிங்க சுவாமிநகர் கதிர்காமம் வேதம் புகழ் கதிர்காமம்”

என அமைந்திருக்கிறது. அவ்வாறே  

செந்தமிழ்பிரபந்தமெனும் சந்தர் புகழும் காவடி

சிந்துப்பாடல் பெற்ற கதிர்காமமே அப்பர்

சுந்தரர் புகழ்ந்த கதிர்காமமே தேவ

இந்திரன் வணங்கும் கதிர்காமமே

செந்தமிழ்ப் பெரியாம்பிள்ளை கந்தநாதன் மீது சதா

சந்தப்பண்கள் பாடும் கதிர்காமமே அருள் 

தந்துலவும் கந்தன் கதிர்காமமே வாசன்

சிந்தை மகிழ்ந்தாடும் கதிர்காமமே” 

எனும் பாடல் அமைகின்றது. பெரியாம்பிள்ளையின் பாடல் வரிகளின் ஊடாக அவருடைய ஆன்மிகத் தெளிவு நன்கு வெளிப்படுகிறது. அதேபோல், பாடல்களைப் படிப்பவர்களும், செவிமடுப்பவர்களும் ஆன்மிகத் தெளிவை உணர வேண்டும் என்ற முனைப்பும் அவரின் பாடல்களில் காணப்படுகின்றது. புராணம் மற்றும் இதிகாசங்கள் மீதான ஈடுபாட்டையும், சமய வரலாற்று அறிவையும், போதிக்கும் நோக்கத்தையும் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

‘நித்தமுனை துதித்து நீணிலத்தோர் கொண்டாட – பத்துலக்சங்கோடி தமிழ் சுப்பையா பாடவரமே’ எனத் தொடங்கும் கதிர்காம மாலை எனும் பாடல், இவ்விரண்டு அடிகளாக மொத்தம் எண்பத்தி இரண்டு அடிகளைக் கொண்டுள்ளது. “பன்னிரண்டு கண்ணிருந்தும் பாராததென்ன வென்னை – உன்னிரெண்டு பாதம் நம்பி யுற்றேன் தயாநிதியே” என இப்பாடல் வேண்டுவதும் கவனத்திற்குரியது. 

‘சரணப்பத்து’ என்பது ‘சரணம் அடைதல்’ என்ற பொருளைத் தரும். பதிகம் ஒன்றின் பெயரையும் இவ்வாறு குறிக்கும் மரபும் காணப்படுகிறது. மேலும், தஞ்சம் புகுதல், சரணாகதி அடைதல் என்றவாறும் அது பொருள் கொள்ளப்படுகிறது. திருவருட்பா, திருவாசகம் போன்றவற்றிலும் பத்து எனும் அடையாளத்துடன் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான தலைப்புகளில் பலர் பாடல் எழுதியும் பாடியும் உள்ளனர். இதன் தொடர்ச்சியில், குறிஞ்சி நிலத்தின் சிறப்பையும் முருகனின் மகிமையையும் எடுத்துரைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு எழுந்த பாடல்களின் தழுவல்கள், பெரியாம்பிள்ளை அவர்களின் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. ‘கதிரேசப் பத்து’, ‘கந்தன் சரணப்பத்து’, ‘கழுகுமலைப்பத்து’, ‘கும்பிடு பத்து’ போன்ற தலைப்புகளில் உள்ள இவரது பாடல்கள் முருகனின் மகிமையையும், மனிதர்களில் நம்பிக்கையையும் எடுத்துரைக்கின்றன. மேலும், ‘தோத்திரப்பத்து’ என்பது சித்தாண்டி கந்தசாமி கோயிலில் எழுந்தருளிய இறைவனைச் சிறப்பிக்கும் பாடல்களாக அமைந்துள்ளது. பழனிமலை முருகனின் பெருமைகளை எடுத்துரைப்பதாக ‘தரிசனைப்பத்து’ அமைகின்றது.

முருக வழிபாட்டில் காவடி மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. சுமையான காவடியை தோளில் வைத்து ஆடுவார்கள். துன்பங்களைப் போக்கி நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக முருகனிடம் வேண்டும் தனித்துவ முறையாகவும் இது அமைகிறது. இது தியாகம், இசை, வேதனை ஆகியவற்றை உள்ளடக்கிய சடங்கு முறையிலான கலை வடிவமாகும். காவடி, நாட்டுப்புறக் கலை வடிவங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. பெரியாம்பிள்ளை அவர்களும் ‘காவடி மகத்துவம்’ என்ற தலைப்பில் காவடி ஆட்டத்திற்குரிய பாடலைத் தந்துள்ளார்; பதினாறு அடிகளைக் கொண்டு ஒன்பது செய்யுட்களில் அமைந்த வரிகளில், முருக வழிபாட்டின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றார். முருகனின் வாழ்க்கை வரலாற்றின் தடங்களும், களச் சூழலின் சிறப்புகளும் இப்பாடல் சித்திரிப்பில் முக்கியமானதாக விளங்குகின்றன. அவ்வாறு அமைந்த வரிகளில் பின்வருவனவற்றை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

“மந்தகாசத் தோகை மயில் காவடி அத்தர்

மணக்கும் மாம்பழக் காவடி

மச்சக்காவடி எலுமிச்சைக் காவடி நறு

மணங் கவிழ்ந்திடும் காவடி

தந்தான தானதன சந்தான சுரக்யான

தாள முடன் வரும் காவடி”

இலங்கையில், சிங்களவர்களின் வழிபாட்டு மரபுடன் முருக வழிபாடும் இரண்டறக் கலந்து காணப்படுகிறது. அம்முறைமை சிங்களவர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பிற்குரியதாகவும் விளங்குகிறது. கலாசார ஒருங்கிணைப்பில் முக்கிய தடமாகவும் இவ்வழிபாட்டு முறை அடையாளம் பெறுகின்றது. இதனை,

“சந்தமிகுந் திடும்கௌவ மைந்தன் பெரியாம்பிள்ளை

சந்தம் முழங்கும் காவடி

சாந்தமாய் சிங்களவர் சேந்தனை வணங்குவர்

சகம்புகழும் கதிரை நகரில்”

எனும் பாடல் அடிகளில் காணலாம்.

தமிழ் இலக்கியத்தில் ‘வளையல் சிந்து’ என்பது ஒரு வகையான சிந்துப் பாடலாகும். வளையல் என்பது கைக்கு அணியும் காப்பைக் குறிக்கும். சிந்து என்பது இசைப் பாடலின் ஒரு வடிவமாகும். பெரியாம்பிள்ளையின் ‘வளையற் சிந்து’ ஊடாக, முருகன் வள்ளியின் காதலும், அந்தக் காதலின் சிறப்பும் வெளிப்படுகின்றது. அதேபோல், கதிர்காம மாலை, தோத்திர மாலை, ஸ்ரீ கதிரை மகத்துவ மாலை போன்ற பாடல்களில், முருகனின் சிறப்பை மையமாகக் கொண்ட சம்பவங்கள் மற்றும் முருகனின் பல்வேறு வகிபாகங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. தோத்திர மாலையானது,

“பக்தர்கள் உனைத் துதித்து கந்தையா

பாருலகோர் கொண்டாட 

உத்தமனே உன் மாலை கந்தையா

உகந்து பாடுதற்கு”

எனத் தொடங்கின்றது. இங்கு வேறுபட்ட களங்களில் முருகனின் நாமங்கள் தொடர்புபடும் விதங்கள், ஏனைய கடவுள்களுடன் ஏற்பட்ட உறவுமுறை பற்றிய சித்திரிப்புகளும் இடம்பெறுகின்றன. இப்பாடலின் இறுதிப்பகுதி,

“பண்ணு தமிழ் வாழ்க கந்தையா

பத்த முத்தரும் வாழ்க

இந்நூல் வாழ்க கந்தையா

இதைப் படித்தோரும் வாழ்க.”

என நிறைவடைவதையும் அவதானிக்கலாம்.

பொதுவாக முருகன், தெய்வானை, வள்ளி ஆகியோரின் இல்லற வாழ்க்கை குறித்துப் பல சர்ச்சைகளும், நியாயப்படுத்தல்களும் உள்ளன. இதுபோன்ற கருத்துகள் ஆன்மிகத் தளத்திலும், இலக்கியக் களத்திலும் வேறுபாடாகக் காணப்படுகின்றன. முருகனின் குடும்பத்தில் அந்தச் சர்ச்சை நிலை எவ்வாறு அமைந்திருந்தது என்பதற்கான கற்பனைச் சித்திரத்தை பெரியாம்பிள்ளை விவரித்துள்ளார். குறிப்பாக, வள்ளி மற்றும் தெய்வானையிடையிலான தர்க்க நிலை, தெய்வானை முருகனை எதிர்த்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், வள்ளியின் எதிர்வினை, சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமத்துவ அரசியல் தொடர்பான தெளிவுரை போன்றவை அவரது பாடல்களில் கவனிக்கக்கூடியதாக அமைந்துள்ளன.

தெய்வானை – வள்ளியிடையே நடக்கும் சக்களத்திச் சண்டை சமூக ஏற்றத்தாழ்வினை முனைப்பாக்கிக் காட்டுகிறது. “சிறுக்கியான வள்ளியே, எந்தன் நாயகன் பின்னால் வந்து அவனோடு வாழ்ந்தாலும், சாதியால் எனக்கு நீ நிகராக முடியாது. உயர்ந்த சாதிக்குள் பிறந்த என்னோடு சமமாக வாழ முடியுமோ? என் வீட்டிற்குள் நுழையாதே!” என தெய்வானை கூறும் போது, வள்ளி தெய்வானையை நோக்கி, “சாதியை முன்நிறுத்திப் பேசுவது நல்லது அல்ல. இவ்வாறு நீ இழிவாகப் பேசும் போது உன் மீது எனக்கு எப்படி மரியாதை வரும்? உண்மையை உணர்ந்து, மணம் புரிந்த கந்தனை நீ ஒதுக்கி விடு. எனது தங்கத்தை நான் என் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்” என்கிறாள். இவ்வாறு இருவருக்குமிடையேயான வாதம் தொடர்கிறது.

தெய்வானை மற்றும் வள்ளியின் தர்க்கம் தொடரும் நிலையில், முருகன் இப்பிரச்சினைக்கு தீர்வு காண பல முயற்சிகளில் ஈடுபடுகிறான். தெய்வானையைப் பார்த்து, “என் பேதலித்த புத்தியால் வள்ளியையும் மணந்தாலும், பெருமனதுடன் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். உன் உடைகளைத் துவைக்கவும், மாலைகள் கட்டவும் ஒருத்தியை அழைத்து வந்தேன் என எண்ணிக்கொள்வாயாக,” எனக் கெஞ்சுகிறான். “என்னை ஏளனமாகப் பார்க்காதே” என்பதும் அவன் கோரிக்கை. “பட்டணத்தி லெச்சி நக்கும், ஜாதியே நாமுந் தொட்டுக்கொள்ள என்னவுண்டு நீதியே.” என தெய்வானை பதிலளிக்கிறாள். “கோடித்தடவை கும்பிட்டுக் கேட்கிறேன், என்னை தவிக்க விட்டிடாதே.” என முருகன் மன்றாடுகிறான். இந்தக் கோரிக்கை தெய்வானையின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முருகன் வள்ளியை மிகுந்த பிரயத்தனத்துடன் ஆசுவாசப்படுத்தி, தெய்வானையின் காலில் விழுந்துவிடச் சொல்லுகிறான். முருகனின் வார்த்தைகளைக் கேட்ட வள்ளியும் தெய்வானையின் காலில் விழுந்து மன்றாடுகிறாள். மூவரும் புரிந்துணர்வில் உடன்படுவதை கவிஞர் பெரியாம்பிள்ளை தனது கற்பனை வரிகளால் பாடலாகப் புனைந்து காட்டுகிறார்.

எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை ஆளுமைமிக்க கவிஞராகவும், பல கவிஞர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்துள்ளார். நாவலப்பிட்டி மண்ணில் இயங்கிய மலைநாட்டு செந்தமிழ் கவிஞர் சங்கத்தின் தலைவராகவும் அவர் செயற்பட்டார். கா.சி. ரெங்கநாதன் என்பவரும் மலையக வீதிப்பாடல் யுகத்தில் முன்னணிக் கவிஞராகத் திகழ்ந்தார். அவரது நூலான ‘தமிழ் மணிக்கீதம்’ (1963) நூலிற்கு ஆசி வழங்கிய பெரியாம்பிள்ளை அவர்களது வரிகள்,

“அறைந்திடும் ஐந்திலக்கணங்கள் வழுவா நின்று

சித்திரக்கவிதா எழுதித் தொழிலாளர் செய்

சீரில்லா வழக்கமதைத் திருத்தும் வீர

சிங்கமெனும் கா.சி.ரெங்கநாதன் கீதம்

சிறந்த தமிட் கமுதென செப்புவோமே.

செய்யப்புகழேந்தி கூத்தனார் கம்பன் சிவந்தகிரி

துய்யபடிகாசு இரட்டையரோவெனத் தோன்றியுளான்

மெய்த்தமிழ் ஸ்ரீ ரெங்கநாதன் விரித்த தமிழ்

வையகமீது தமிழ்த்தாய்க்குச் சூட்டும் மணிமகுடம்” 

என்றவாறு அமைகின்றன. இவ்வரிகள் தமிழ் மீதும் தமிழ்க் கவிதைகள் மீதும் கொண்ட பற்றுறுதியை எடுத்துச் சொல்வதாக விளங்குகின்றன. ‘மலைநாட்டு செந்தமிழ் கவிஞர் சங்கம்’ அமைப்பின் செயற்பாடு அக்கால மலையகக் கவிஞர்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிற்கு முக்கியத்துவமளித்துள்ளது. முறையான நிர்வாகத்துடன் கூடிய இலக்கிய, சமூகச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள் அமைப்பு ரீதியில் சமூகப் பிரக்ஞையோடு செயற்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. மலையகம் ஆன்மிகத் தெளிவுடனும், சமூக சிந்தனையோடும் முன்நகர வேண்டிய வழிகாட்டலை இக்கவிஞர்கள் வழங்கியுள்ளார்கள். புலமைசார் படைப்புகளின் பால் கொண்ட ஈடுபாட்டையும் இவர்களில் அவதானிக்கலாம். இவ்வாறான ஒருங்கிணைப்புத்தான் அக்காலத்தில் அநீதிக்கு எதிரான கருத்துகளோடு பல படைப்புகளில் வெளிவந்தன.

பெரியாம்பிள்ளை, சேது இராமநாதபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். சி.ரா.சி. பெரியாம்பிள்ளை கோனார் எனவே தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். ‘ஸ்ரீ கதிரைநாதன் பேரில் ஆனந்தக் களிப்பு’ எனும் தலைப்பில் 1931 ஆம் வருடத்திலேயே ஒரு பாடல் நூலை வெளியிட்டுள்ளார். இப்பாடல் தொகுப்பு வெளிவருவதற்கு கம்பளை எம். ராமையா பிள்ளை அவர்கள் உந்துசக்தியாகச் செயற்பட்டார். கொழும்பு ஜிந்துப்பிட்டி தெரு, சரஸ்வதி புத்தகசாலையில் இப்பாடல் நூல் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு, பாபர் ஸ்டீட்டில் அமைந்துள்ள ஸ்டான்லி பிரசில் இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது; ஐந்து சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருபத்தைந்து பக்கங்களில் இரண்டு தலைப்புகளில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. 

‘ஸ்ரீ கதிரைநாதன் பேரில் ஆனந்தக் களிப்பு’ எனும் தலைப்பில் ஒரு நீண்ட பாமாலை தொடர்கிறது. முருகன் – வள்ளி ஆகியோரிடையேயான உரையாடலாக இப்பாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இப்பாடல் ஊடாக வாழ்வியல் நெறிமுறைகள் எடுத்துச் சொல்லப்படுவதை அறியலாம்.

“அடக்கமாயிருப்பதுவே நீதி பெண்ணே

அவ்வித மிருப்பதுவே இல்லறத்தின் கியாதி 

ஆகையால் போய் வாரேனென்று எங்கள்

ஆறுமுகன் சொல்லவே வள்ளி எதிர்நின்று

என் கணவா வேலவரே நில்லும் மாது

எனக்குவகை சொல்லிநீர் அப்பாலே செல்லும்

சொந்தமனை யாளிருக்க நீரும்

எந்தனை யழைத்து வந்து ஊரார் சிரிக்க 

நீரே இவ்விதம் சொல்லலாமோ இந்த

நீணிலத்தோர் புகழும் தென் கதிர்காமா”

இவ்வாறு முருகன் – வள்ளி ஆகியோருடனான கருத்துகள் பாடல்கள் ஊடாகப் பரிமாறிக் கொள்ளப்படுகின்றமை அவதானத்திற்குரியதாகும். 

இத்தொகுப்பில் ‘கதிரை மகத்துவ ஏசல்’ எனும் தலைப்பிலும் ஒரு பாடல் உள்ளடங்கியுள்ளது. இது வள்ளி – தெய்வானை ஏசல் போன்றே, முரண்பாட்டுச் சூழலில் அவரவர் நியாயக் கருத்துகளை எடுத்துரைப்பதாக அமைகிறது. இரண்டாவது திருமணத்தின் பின்னர் முருகன் மனதளவில் படும் அவஸ்தை நிலையும், பாடு பொருளாகியுள்ளதை இப்பாடல் புலப்படுத்தும் கருத்துகள் ஊடாக அறியலாம். இவ்வாறு வாதங்கள் தொடரும் நிலையிலும், முருகனின் சிறப்பையும் கதிர்காமத் தலத்தின் மகிமையையும் எடுத்துக்கூறும் முனைப்பை இப்பாடல்களில் காணமுடிகிறது. 

“ஓங்கும் புகழ் நிறைந்த நான்கு வருணத்தோரும்

ஒப்பும் திருப்புகழைப் பாடியே கூடிச்

செப்பும் விசித்திரம் பார் சேடியே

செப்பும் என் அமணவாளா அப்பன் சண்முகநாதன்

திருவிழாக் காட்சி என்ன சீரையா கந்தன்

வரும் பவனி என்ன வாரையா”

பெரியாம்பிள்ளை அவர்கள் பக்தியோடு வாழ்நாளைக் கழித்ததோடு, தாம் முன்வைத்த தலைப்புகள் தொடர்பிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயற்பட்ட ஆளுமையாகத் திகழ்ந்தார். தாம் பெற்ற ஆன்மிகத் தெளிவை பிறருக்கும் எடுத்துரைக்கும் பணியை அவர் மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அவ்வுயரிய எண்ணங்களின் சாட்சிகளாகவே அவரது பாடல்களின் உள்ளடக்கங்கள் திகழ்கின்றன எனலாம். இப்பாடல்கள் மனித விழுமியப் போதனைகளாகவும் மதிக்கப்படுகின்றன. முருகன் அறிவின் கடவுளாகவும், ஞானத்தின் அடையாளமாகவும் அணுகப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது. பெரியாம்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள ஏனைய நூல்கள் இன்று கிடைக்கும் பட்சத்தில், அவரது ஆளுமைக் கூறுகளை மேலும் ஆழமாக அறிவதற்கான வாய்ப்புகள் விரிவடையும் என்பது திண்ணம்.

எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை அவர்களின் பாடல்கள் ஆன்மிகத் தளத்தில் மட்டுமல்லாது, சமூக மற்றும் அரசியல் தளங்களிலும் கவனிக்கத்தக்கவைகளாகும். மலையக சமூக – அரசியல் நிலைகளில் இருந்தும் அவர் பல பாடல்களைப் படைத்துள்ளார். இருந்தபோதிலும், அவரால் எழுதப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாதமை கவலைக்குரியதாகும். அவர் எழுதிய பாடல் தொகுப்புகளில், ‘டட்லி சேனநாயக்கா அவர்கள் மீது அனுதாபக் கீதம்’ எனும் பாடல் தொகுப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தத் தொகுப்பில் இடம்பெற்ற பாடல்கள் வெளிப்படுத்தும் கருத்தியல், விமர்சன ரீதியில் அணுகப்பட வேண்டிவையாகும். பொதுவாக, சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது ஐக்கிய தேசியக் கட்சிதான். அந்தக் கட்சியின் தலைவராக விளங்கிய டட்லி சேனநாயக்காவின் மறைவின் பின்னர், தன் மனதில் தோன்றிய உணர்வுகளை அவர் பாடல்களாக எழுதி, பாடி, தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இப்பாடல் தொகுப்பு நூல் நாவலப்பிட்டி, ராஜா அச்சகத்தில் அச்சிடப்பட்டு, டிக்கோயா வீ. இராமசாமியினால் 1973 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாக மலையக மக்களிடையே ஐக்கிய தேசியக் கட்சியைப் பற்றிய விமர்சனப் போக்கு நிலவியது. சுதந்திரத்திற்குப் பின்னர், இலங்கையில் வாழ்ந்த மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு போன்ற சம்பவங்கள் இம்மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. அந்தக் கடுமையான அனுபவங்களின் அடிப்படையில், மாற்றுச் சிந்தனாவாதிகள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் தலைவர்களை விமர்சித்தனர். ஆயினும், 1977 ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் இணக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக, மலையக மக்கள் படிப்படியாக இக்கட்சியின் அபிமானிகளாக மாற்றமடைந்தனர்.

டட்லி சேனநாயக்கா, இலங்கையின் விவசாயத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்த தலைவராக அடையாளப்படுத்தப்படுகிறார். கிராமங்களில் வாழும் விவசாயிகளின் மத்தியில் அபிமானம் பெற்ற ஆளுமையாகவும் விளங்கினார். இவர்மீது மலையக மக்களும் அபிமானத்தை வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட கவலையூட்டும் மனநிலையிலேயே பெரியாம்பிள்ளையும் பாடல்கள் இயற்றினார். அவ்வாறு அவர் எழுதிய பாடல்களின் தொகுப்பாகவே இந்நூலும் அமைந்துள்ளது.

“நவகண்டம் புகழ்ந்திடும் இலங்கையில் கமத்தொழில்

நன்மக்கள் வாழ்வு சிறக்க

நன்மனதுடன் விவசாயம் செய்திட நிலம்

நமக்கு கொடுத்தார் விதைக்க

இகபோக சுக வாழ்வும் நிலைநிர்க்காது என்றும்

இனபேதம் செய்தோர்க்கு தலை தூக்காது

அகமாய் வெறுத்தோர்க்கு புகழ் தப்பாது அறம்

அழியாது வளர்ந்தோங்கும் புகழ் குன்றாது டட்லி…”

டட்லியின் மரணம் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மலையக மக்களிடத்தில் நிலவிய மனநிலையை, சமூகத்தின் முக்கிய அவதானமாகப் பதிவு செய்த பெரியாம்பிள்ளையின் குறிப்புகள் கவனிக்கத்தக்கதாகின்றன. அதனை எடுத்துக்கூறும் வகையில், 

“நாட்டிலும் வெள்ளைக்கொடி – வேடர்வாழும்

காட்டிலும் வெள்ளைக்கொடி

கேட்டிலும் வெள்ளைக்கொடி – தோட்ட மக்கள் 

வீட்டிலும் வெள்ளைக்கொடி”

என்பதோடு,

“நாட்டுக்கு நன்மைசெய்த – டட்லியின் 

நாமம் புகழாத

தோட்டத் தொழிலாளர் – இல்லையெனத் 

தோணுது நாட்டினிலே”

எனும் வரிகளும் கவனத்தைப் பெறுகின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்ற ‘சாந்தி நிலை அடைந்தார்’, ‘மாரியம்மா முகம் பாருமம்மா’, ‘அறிவுக்கு விருந்தாகும்’, ‘மணப்பாறை மாடு கட்டி’, ‘ஏர் முனைக்கு நேர்’ என்ற மெட்டுகளில் எழுதப்பட்ட பாடல்கள், இலங்கை அரசியலில் டட்லி சேனநாயக்காவின் வகிபங்கை எடுத்துரைப்பனவாகும்.

மலையக அசைவியக்கத்தில் மலையக வீதிப்பாடல் யுகம் முக்கிய அவதானத்திற்குரியதாக விளங்குகிறது. மலையக மக்களின் வாழ்வியலையும், வாழ்வியல் வரலாற்றையும் முழுமையாக அறிந்துகொள்வதற்கு வீதிப்பாடல்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இக்கால நடைமுறைகளை விளங்கிக்கொள்வதற்கு ஏற்ற இலக்கியமாகவும் வீதிப்பாடல்கள் விளங்குகின்றன. மலையக எதிர்ப்பிலக்கியத்தின் அச்சாணியாக முக்கியத்துவம் பெறும் நிலையில், இத்துறையில் எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை தவிர்க்கமுடியாத ஆளுமையாக முக்கியத்துவம் பெறுகிறார். தமிழ்க் கவிதைத்துறைக்கும் வலிமை சேர்க்கும் அவரது தனித்துவச் சிந்தனை, செயற்பாடு, வெளிப்பாடு என்பன பிரமிப்பிற்குரியவைகளாகத் திகழ்கின்றன. தொழிலாளர்களின் உரிமை சார்ந்த விடயங்களில் அவரின் அக்கறையும், ஆன்மபலம் தொடர்பான வழிகாட்டல்களில் ஈடுபாடும், பெரியாம்பிள்ளையைத் தனித்து அடையாளப்படுத்தும் முக்கிய அம்சங்களாகும்.

உசாத்துணை நூல்கள்

  1. யோகராசா, செ. (2023). ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேசன்.
  2. வடிவேலன், பெ. (2025). தமிழ் இலக்கியத்தில் கதிர்காம முருகன்: மலையகத்தில் கவிஞர் அருட்கவி எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை பாடிய சிற்றிலக்கிய தொகுப்பு. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  3. நடேசய்யர், கோ. (1946). கதிர்காமம். பி.என்.கே பிரஸ்.
  4. பெரியாம்பிள்ளை, எஸ். (1941). ஸ்ரீ கதிரைநாதன் பேரில் ஆனந்தக் களிப்பு. சரஸ்வதி புத்தகசாலை.
  5. பெரியாம்பிள்ளை, எஸ். (1973). டட்லி சேனநாயக்க அவர்கள் மீது அனுதாபக் கீதம். ராஜா அச்சகம்.
  6. ரெங்கநாதன், கா. (1963). தமிழ் மணிக் கீதம். மலையக செந்தமிழ் கவிஞர் சங்கம்.


About the Author

அருணாசலம் லெட்சுமணன்

‘ம.மா - கொத் - உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின்’ அதிபரான அருணாசலம் லெட்சுமணன், 'நிகர்' சமூக - கலை - இலக்கிய அரங்கத்தின் பிரதம அமைப்பாளருமாவார். தேசிய, பன்னாட்டு ஆய்வரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்து வருகிறார். 2023இல் மலேசியாவில் இடம்பெற்ற பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய, பன்னாட்டு இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். பயண இலக்கியங்கள், சமூக, கலை, இலக்கிய, கல்வித்துறைச் செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். இவர் ஒரு கவிஞருமாவார். சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியம் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்