இந்நூலின் முதல் எட்டு அத்தியாயங்களையும் திக்குகள் எட்டு தொடரின் கடந்த பாகத்திற் பார்த்திருந்தோம். இப்பாகம் அந்நூலின் மீதமுள்ள அத்தியாயங்கள் மீது கவனம் செலுத்துகின்றது. புலிகளின் நிழல் அரசின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் நிலவிய சமூக, அரசியல், வாழ்வியல் மற்றும் வரலாற்றுச் சூழல்களையும் போரின் விளைவாக அங்கு ஏற்பட்ட மாற்றங்களையும் இந்த அத்தியாயங்கள் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் விவரிக்கின்றன. போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் போருக்கு இட்டுச்சென்ற காரணிகள் முதல் முள்ளிவாய்க்கால் வரையான நகர்வு, தடுப்பு முகாம் அவலங்கள் உட்பட்ட போராட்டத்தின் முடிவையும் புலிகளின் நிழல் அரசின் சிதைவையும் இந்நூல் பேசுகின்றது. ‘சிறார் போராளிகள்’, ‘சமூக விவாதங்கள்’, ‘பெண்கள் விடுதலையின் வன்னிப் பாணி’, ‘வன்னிச் சமூக வெளி’, ‘போர் நிறுத்த கால ஒருங்கிணைப்புகள்’, ‘முள்ளிவாய்க்காலை நோக்கிய மெதுநடை’, ‘தடுப்பு முகாம்கள்’, ‘எந்த நாடும் தனித் தீவல்ல’ ஆகியன அத்தியாயங்களின் தலைப்புகளாகும்.

சிறார் போராளிகள்: வரலாற்றுப் பார்வை
சிறார் போராளிகள் என்ற அத்தியாயம் வரலாற்றுத் தகவல் ரீதியாக புலிகள் இயக்கத்தின் ஆட்சேர்ப்பு அணுகுமுறைகளை, குறிப்பாகச் சிறார் போராளிகள் சார் சூழமைவுகளை முன்வைக்கின்றது. அந்த விவகாரம் சார்ந்த உள்ளக, அதாவது புலிகள் மற்றும் தமிழ்ச் சமூகத்தின் பார்வை, சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஒரு பாரிய விவகாரமாகப் பார்க்கப்பட்ட புறநிலை குறித்தும் பேசுகின்றது.
புலிகள் இயக்கம் அதன் ஆரம்பக் கட்டங்களில் (1980களில்) வயது குறைந்தவர்களை இயக்கத்திற் சேர்க்கத் தொடங்கியது. முதலில், பெற்றோர்கள் இல்லாத, பராமரிக்க ஆளில்லாத குழந்தைகளுக்குக் கல்வி அளித்து, உரிய வயது வந்த போது போராளிகளாக இணைத்தது. காலப்போக்கில் 14 – 17 வயதுடையவர்களைச் சேர்க்கத் தொடங்கியது.
ஒரு கட்டத்திற் கட்டாய ஆட்சேர்ப்புகளையும் புலிகள் இயக்கம் மேற்கொண்டது. பாடசாலைகளில் நேரடியாகச் சென்று பரப்புரைகளை மேற்கொண்டும் இயக்கத்தில் இணைக்கும் செயற்பாடுகளைச் செய்துள்ளது. ‘குடும்பத்திற்கு ஒரு போராளி (வீட்டுக்கொரு வீரர் நாட்டுக்காக)’ என்ற திட்டத்தினாற் பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளைக் கட்டாயத்தின் பேரில் புலிகள் இயக்கத்திற்கு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
1980களில், 18 வயதிற்கு உட்பட்டவர்களை இராணுவம் மற்றும் ஆயுதப் போராட்ட இயக்கங்களிற் சேர்ப்பதைத் தடைசெய்யும் எந்த சர்வதேசச் சட்டமும் அமுலில் இருக்கவில்லை. 1989 இற்தான் ஐ.நா சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையானது, வயதெல்லையைப் பதினைந்தாக (15) நிர்ணயித்தது. 1990களில், ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ அமைப்புகளின் கூடுதல் கவனம் இது விடயத்திற் புலிகளுக்கு எதிரான சர்வதேச அழுத்தம் அதிகரிக்கக் காரணமாயிற்று.
17 வயதிற்கு உட்பட்டவர்களை இயக்கத்தில் இணைப்பதை நிறுத்துவதாகப் புலிகள் இயக்கம் 1998 இல் ஐ.நாவிற்கு வாக்குறுதி அளித்தது. அதன் தொடர்ச்சியாக இவ்விவகாரம் சர்வதேச விவாதமாகவும் மாறியது.
சிறார் போராளிகள் விவகாரத்தில் தமிழ்ச் சூழலின் உள்ளார்ந்த சமூக, பண்பாட்டு மற்றும் போரின் நேரடி விளைவுகளின் பாற்பட்ட புலிகளின் அணுகுமுறைக்கும், சர்வதேச சிறார் படைச்சேர்ப்பிற்கு எதிரான சர்வதேசப் பரப்புரைக்குமிடையில் பாரிய முரண்பாடு நிலவியது. புலிகள் அமைப்பின் விதுசா, துர்க்கா உட்பட்ட பெண்கள் இராணுவப்பிரிவின் பொறுப்பாளர்கள், சர்வதேசத்தின் விமர்சனங்கள் நியாயமற்றவை எனக் கருதினர். இருந்தபோதும் 17 வயதிற்கு உட்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர். 17 வயதிற்கு உட்பட்டவர்களைச் சேர்ப்பதில்லை என்ற புலிகளின் வாக்குறுதிக்குப் பின்னரும் ஐ.நா சிறுவர் நிதியம் (UNICEF) உட்பட்ட சர்வதேச அமைப்புகள், புலிகளுக்கு எதிராக அறிக்கையிட்டன.
‘UNICEF’ நிறுவனத்துடனான ஒத்துழைப்பிற்காக தனியான சிறார் பாதுகாப்பு அதிகாரசபையினை (Child Protection Authority) புலிகள் அமைப்பு உருவாக்கியது. ஆனால் அதன் நடவடிக்கைகள் அதிகம் அரசியல் மயப்பட்டவையாக அமைந்தமையினால், உரிய மாற்றங்களும் விளைவுகளும் நிகழவில்லை. புலிகள் இயக்க உறுப்பினர்கள் வயது குறைந்தவர்களை ஆட்சேர்ப்புச் செய்தால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புலிகள் அமைப்புச் சார்பில் இந்த விவகாரத்தினை அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அதிகம் கவனித்தார் என்று விவரிக்கின்றார் மாலதி. 2006 – 2007 காலப்பகுதியில் 17 வயதிற்கு உட்பட்டவர்களை ஆட்சேர்ப்புச் செய்வது நிறுத்தப்பட்டிருந்ததோடு, ஏற்கனவே சேர்க்கப்பட்ட வயது குறைந்தவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. 2008 இல் ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச வயது 18 என நிர்ணயிக்கப்பட்டது.
சவால்களும் விமர்சனங்களும்
‘UNICEF’ மற்றும் சர்வதேச ஊடகங்கள், புலிகள் மீது சிறார் படைச்சேர்ப்புத் தொடர்பான விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்தன. பல சமயங்களிற் தவறான தகவல்களுடனும் தவறான முறையிலும் அறிக்கையிட்டன. உதராணமாக, சில குழந்தைகள் சுனாமிக்குப் பின்னர் புலிகள் நிர்வகிக்கும் சிறார் இல்லங்களில் பராமரிக்கப்பட்டமை கூட தவறாகச் சிறார் போராளிகளாகப் பதிவு செய்யப்பட்டது. சிறார் போராளிகள் விவகாரத்திற் புலிகள் மீதான விமர்சனங்கள் ஒற்றைப் பரிமாணப் பிரசாரங்களால் வழிநடத்தப்பட்டதாக விமர்சிக்கும் மாலதி, இது விடயத்தில் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளும் மாற்றங்களும் உள்ளக மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச அழுத்தங்கள் என்ற இருமுனை விளைவுகள் என்றும் கருதுகின்றார். இந்த அத்தியாயம் சிறார் போராளிகள் விவகாரம் குறித்த பல்பரிமாணச் சூழமைவுகளையும் சிக்கல்கள், சவால்களையும் முன்வைக்கின்றது. சிக்கலான தன்மைகளையும் முரண்களையும் ஈழத்தின் உள்ளகச் சூழலுக்கும் சர்வதேசப் புரிதல்களுக்குமிடையில் வைத்து ஆராய்கிறது; அனுபவரீதியான தகவல்களுடன் முன்வைக்கின்றது.
‘சமூக விவாதங்கள்’: புலிகளின் அறிவுத்தள ஈடுபாடு
சமூக விவாதங்கள் எனும் தலைப்பிலான அத்தியாயம் விடுதலைப்புலிகளின் உள்ளக மற்றும் வெளியக விவாதங்கள் குறித்த பார்வையை முன்வைக்கின்றது. அதாவது புலிகள் தமது அமைப்பிற்குள்ளும் பரந்த தமிழ்ச் சமூகத்திலும், எவ்வாறான சமூக, அரசியல் விவாதங்களில் ஈடுபட்டிருந்தார்கள், எவ்வாறான கருத்துகள், விவாதங்களை அனுமதித்தார்கள் என்பதை ஆராய்கிறது.
சமூகநீதி உட்பட்ட கொள்கை தொடர்பான விவாதங்களுக்கான இடம் புலிகளிடத்தில் நிலவியது. அவை, கோட்பாடாக நிலைநிறுத்துதல் என்பதற்கு அப்பால், செயல்பூர்வ நோக்கங்களைக் கொண்டிருந்தன. தனியான பிரிவுகளை நிறுவி இத்தகு செயற்பாடுகளைப் புலிகள் முன்னெடுத்தனர். நீதித்துறை அதற்கான உதாரணமாக முன்வைக்கப்படுகின்றது. வன்னியில் சட்ட நிபுணர்களிற் பெரும்பான்மையினர் தொழில்முறை சாராதோராக இருந்தபோதும், ஆளுமையுடையவர்களாக விளங்கினர். இது சட்டரீதியான விவாதங்கள், நடவடிக்கைகளை அர்த்தபூர்வமாக்கின.
சிறார் போராளிகள், ஊடக சுதந்திரம், பெண்கள் உரிமை, குடும்பங்களில் வேலைப் பங்கீடு, சட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு, கட்டாய ஆட்சேர்ப்பு, பாரம்பரிய உடை மற்றும் தமிழப் பெயர்கள் உட்பட்ட பேசுபொருட்கள் சமூக, அரசியல், ஊடகத் தளங்களில் விவாதப் பொருட்களாக இருந்தன. வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் மையத்தில் இணைந்து பணியாற்றியபோது தனக்குக் கிட்டிய அனுபவங்கள், பொதுமக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் அவற்றின் தன்மைகளையும் உள்வாங்க வாய்ப்பாகவும் அமைந்தது என்று பதிவு செய்கிறார் மாலதி. மனித உரிமைகள் மையத்திற் பணியாற்றிய ஊழியர்கள், போரினாற் பாதிக்கப்பட்ட இளையவர்கள், பொதுமக்களே. இருப்பினும் அவர்கள் திறனும் ஊக்கமும் கொண்டவர்களாக இருந்தனர்.
2006 இற்குப் பின்னர், அதாவது A9 பாதை மூடப்பட்ட பின், உரையாடல்கள் புலிகளின் சமாதானச் செயலகத்தை நோக்கி அதிகம் திரும்பியது. அங்கு விவாதங்கள் உயிர்ப்புடன் இடம்பெற்றன. விவாதங்களிற் பங்கேற்றவர்கள் கல்விசார் தகைமையுடையவர்களாகவும் இருந்தனர். கடந்தகாலப் போர்களையும் தோழர்களையும் நினைவுகூர்வதில் புலிகளின் உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வகை உரையாடல்களும் பகிர்வுகளும் அவர்களின் மன அழுத்தங்களுக்குரிய உணர்வுபூர்வமான சிகிச்சையாகவும் கொள்ளத்தக்கது.
2007 கிரிக்கெட் உலகக் கோப்பை, புலிகளின் உறுப்பினர்களிடையே எதிர்பாராத விவாதத்தை ஏற்படுத்தியது. இலங்கை அணிக்காகக் காட்டிய உற்சாகம் சில தமிழர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பெண் போராளிகள் பலரும், பெரும்பாலான ஆண் போராளிகளும் இலங்கையின் தேசிய அணியை ஆதரிக்க மறுத்தனர். ஆனால், முக்கிய ஆண் போராளிகளிற் சிலர், இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர். கிரிக்கெட் மற்றும் தமிழ்த் தேசியவாதம் குறித்த இந்த முரண்பாடு, அவதானிகள் மத்தியில் கேள்விகளை எழுப்பியது.
ஆளுமைகள்
இந்த அத்தியாயம் மேலும், புலிகள் அமைப்பில் 2006 – 2009 காலப்பகுதியில் ஏற்பட்ட அறிவுசார், சமூக மற்றும் தார்மீகப் பரிமாணங்களையும், முக்கியமான ஆளுமைகள் மற்றும் தமிழீழ வாழ்வின் உள்ளக முரண்பாடுகளையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், தளபதிகளான இளந்திரையன், புலித்தேவன், தமிழேந்தி போன்றோர் பற்றிய தனது பார்வையைப் பகிர்ந்துள்ளார் மாலதி.
சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் சிந்தனைமிக்கவர். கனிவான, தலைமைத்துவப் பண்புகொண்டவராக வர்ணிக்கப்படுகிறார். பெண்களின் சமத்துவ உரிமையில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். பெண்களின் வீட்டுப்பணிச் சுமைகளைக் குறைக்கும் வழிகள், பொதுப் பணிகளில் அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் முயற்சிகள் குறித்து அவர் அடிக்கடி விவாதித்ததாக மாலதி குறிப்பிடுகின்றார்.
இளந்திரையன் (மார்ஷல்), மொழிபெயர்ப்புத் திறன்மிக்கவர் என்பதோடு, பரந்த அறிவாற்றலும் படைப்பாற்றலும் கொண்டவராக வர்ணிக்கப்படுகின்றார். ஆனால் அவரது திறன்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் மாலதி கருதுகின்றார். புலித்தேவன் மற்றும் இளந்திரையன் ஆகியோர் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவளித்தாலும், அவர்கள் வகித்த பொறுப்புகளின் மேலாதிக்கச் சூழ்நிலைகளுக்குள் முழுமையான சமத்துவத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. 2009 – மே சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு இளந்திரையன் காணாமல் ஆக்கப்பட்டார் என்பது, புலிகள் அமைப்பைச் சேர்ந்த அறிவார்ந்த ஆளுமைகளின் துயரமான முடிவின் சாட்சியமாக உள்ளது.
புலிகளின் இன்னுமொரு மூத்த உறுப்பினர் தமிழேந்தி, தமிழ் வளர்ச்சி சார்ந்து அதிகம் அறியப்பட்டவர். பிறமொழிச் சொற் பயன்பாடுகளைத் தமிழிலிருந்து ஒழிப்பது, தூய தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டும் பரப்புரைச் செயற்பாடுகளை மேற்கொள்வது ஆகியவற்றைத் தீவிரமாக முன்னெடுத்தவர். அவருடைய தீவிர மொழித் தேசியவாதம் பாராட்டுதலைப் பெற்ற அதேவேளை, கிண்டலுக்கும் உட்பட்டது. இருப்பினும் அவரது முனைப்பு வன்னி மக்களிற் குறிப்பிட்ட தொகுதியினர் மத்தியில் ‘தூய’ தமிழ் பேசும் பண்பை உருவாக்கியது. இறுதிப் போரில் அவரும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகியோரின் மகள்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்த அனுபவத்தை நூலாசிரியர் விவரிக்கிறார். அந்தச் சிறுமிகள் எத்தகு தனிமைச் சூழலில் வாழ்ந்தனர் என்பதை அக்கற்பித்தல் காலத்தில் உணர்ந்ததாகவும் கூறுகின்றார். புத்திசாலிக் குழந்தைகளாக அவர்கள் இருந்தபோதும், பாதுகாப்புக் காரணங்களால் விளையாட்டு உட்பட்ட குழந்தைப் பருவ அனுபவங்கள் அவர்களுக்கு வாய்க்கவில்லை. இருவரும் 2009 – மே மாதத்திற்குப் பிறகு காணாமல் போனோராகினர்.
கட்டாய ஆட்சேர்ப்பின் விளைவுகள்
2006 நடுப்பகுதியிலிருந்து புலிகளின் அரசியற்கூட்டங்கள் ஆட்சேர்ப்பில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கின. தன்னார்வ ரீதியான இணைவு குறைந்ததால், ‘வீட்டுக்கு ஒருவர்’ கட்டாய ஆட்சேர்ப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். இது புலி உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்குமிடையில் ஆழமான தார்மீக, உணர்வுசார் முரண்பாடுகளை ஏற்படுத்தியது.

பல குடும்பங்கள் தமது பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஒளித்துவைக்கத் தொடங்கினர். அதேவேளை சிலர் கட்டாய ஆட்சேர்ப்பினைத் தேசக் கடமையென்று நியாயப்படுத்தினர். ஐ.நா உட்பட்ட சர்வதேச தன்னார்வ நிறுவனங்களின் உள்ளூர் (தமிழ்) ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்குகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. இது கொள்கை மற்றும் நடைமுறைக்கிடையிலான பதற்றத்தை வெளிப்படுத்தியது. இந்தக் கொள்கை சமூக அமைப்பைப் பாதித்தது. கட்டாய மற்றும் வீட்டுக்கொரு வீரர் திட்டம் அவசர, இளவயதுத் திருமணங்களுக்கும் இட்டுச்சென்றது. புலிகள் அமைப்பில் தீவிர விசுவாசத்தோடு இயங்கிய உறுப்பினர்கள் மத்தியிற்கூட இது தார்மீகப் பதற்றங்களையும் அதிருப்திகளையும் உருவாக்கியது.
புலி உறுப்பினர்களிற் பலர், தமது கட்டாய ஆட்சேர்ப்பு நடைமுறைகளை ஐரோப்பிய நாடுகளின் போர்க்கால நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுத் தம்மை நியாயப்படுத்தினர். இருப்பினும், விடுதலை இலட்சியத்திற்கும் கட்டாய நடவடிக்கைக்கும் இடையேயான நெறிமுறை முரண்பாடு அவர்களிற் பலரை உள்ளார உறுத்தியது.
பெண் விடுதலையின் வன்னிப் பாணி
இந்த அத்தியாயம் புலிகள் அமைப்பிற்குள் நிலவிய பாலினம், விடுதலை, இராணுவ, அரசியல் வகிபாகங்கள் குறித்த பார்வையை முன்வைக்கின்றது. பண்பாட்டுக் கூறுகள் மற்றும் அதன் அக – புறச் சூழல்களை முன்னிறுத்தி, புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளின் வகிபாகத்தையும், சமூகம் அவர்களை நோக்கும் பார்வையையும் இந்நூல் ஆராய்கிறது. மேற்கத்திய பெண் விடுதலைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறான, அதேவேளை பெண்களுக்கான தனித்துவமான உரிமை, அதிகாரமளிப்பினை பெண்களின் ஆயுதப்போராட்டப் பங்கேற்பு உருவாக்கியதாக மாலதி பதிவு செய்கின்றார்.
தமிழ்ப் பெண்கள்: ஆயுதமேந்தலின் வகிபாகம்
புலிகள் அமைப்பிற் பெண் போராளிகள் ஒரு புதிய சமூக மாதிரியாக (Social Model) உருவாகினர். தன்னம்பிக்கை, ஒழுக்கம் என்பவற்றோடு பொதுவெளியிற் சுதந்திரமாகவும் அதிகாரம் மிக்கவர்களாகவும் செயற்படுகின்ற நிலை உருவாக்கப்பட்டது.
இராணுவப் பயிற்சி, போர்க்களப் பங்கேற்பு ஆகியன பாரம்பரிய ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த சுயாதீனத்தையும் மதிப்பினையும் வழங்கின. பெண் போராளிகள் அடைந்த இந்தச் சுதந்திர இயங்குநிலை, பொதுச் சமூகத்திற்குள்ளும் பரவியது. வன்னிப் பகுதியில் பெண்கள் வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்தனர். மோட்டார் சைக்கிள் உட்பட்ட வாகனங்களை ஓட்டத்தொடங்கினர், பொதுத்துறைப் பணிகளிலும், பொறுப்புகளிலும் ஈடுபட்டனர். பெண்களின் உரிமை சார்ந்த சமூக மாற்றத்தின் அடையாளங்களை இலங்கையின் வேறெந்தப் பகுதிகளிலும் காணவியலாத அளவிற்கு வன்னியில் காணமுடிந்தது.
பெண் விடுதலை: வன்னி – மேற்கு
வன்னியின் ‘பெண் விடுதலை’ மேற்கத்திய பெண் விடுதலைக் கோட்பாடுகளுடன் பொருந்தாதவை என்பதை நூலாசிரியர் விவரிக்கின்றார். அதனை, மேற்கிற்கு மாற்றான ஒரு கூட்டு நடைமுறை சார்ந்த பெண் விடுதலையாக மாலதி காண்கிறார். உயிர் வாழ்தலுக்கான போராட்டம், ஒருமைப்பாடு மற்றும் சமூகக் கூட்டுப்பொறுப்பு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட பெண் விடுதலையாகவும் அதனை அவர் சித்திரிக்கின்றார்.
புலிகளின் நிர்வாகத்திற்குள் இயங்கிய பெண்கள் மேம்பாட்டு மற்றும் மறுவாழ்வு மையம் (CWDR), பெண்கள் ஆராய்ச்சி மையம் (CWR) போன்ற நிறுவனங்கள் பெண்களின் நலன், சட்ட ஆதரவு மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வு போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுத்தன. புலிகளின் சிவில் நிர்வாகம் மற்றும் நிறுவனப் பணியாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையினராகப் பெண்கள் இருந்தனர். சட்ட அமுலாக்கம் மற்றும் நீதித்துறை அமைப்புகளும் பாலின சமத்துவத்தைப் பிரதிபலிப்பனவாக இருந்தன. இது தெற்காசியச் சூழலில் குறிப்பிடத்தக்க சாதனை என்றும் மாலதி குறிப்பிடுகின்றார்.
புலிகள் அமைப்பில் இணைவதற்கான தூண்டுதல்
பெண்கள் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கான பின்னணிகளையும் உந்துதல்களையும் எட்டு முக்கிய காரணிகளாக மாலதி வகைப்படுத்துகிறார். ஆயுதப் போராட்டத்தின் இராணுவப் பிரிவின் அங்கமாக ஆவதென்பது, இன ஒடுக்குமுறைப் பாதிப்பிற்கான எதிர்வினையாகவும், அதிகாரத்துடனான பலம்பெறுதலுக்கான (Empowerment) வடிகாலாகவும் இருந்தது.
- இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட உறவினர்களுக்கு நீதிகோரல், கொன்ற தரப்பினைப் பழிவாங்கும் உணர்வு.
- பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பு மற்றும் இராணுவத் துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்பு.
- போர்ச் சூழலினால் அடிக்கடி இடம்பெயர்தல், இயல்பு வாழ்வு பாதிக்கப்படும் வாழ்நிலைக்கு மாற்றாக புலிகள் அமைப்பில் இணைவது வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்கும் யதார்த்தம்.
- புலிகள் அமைப்பில் இயங்கிய வலுவான பெண் போராளிகளை முன்மாதிரிகளாகக் கொண்டு உந்துதல் பெற்றமை.
- வீட்டுப் பணிச்சுமை, வறுமை, பசியிலிருந்து விடுபடும் முயற்சி.
- புலிகளின் அரசியற் பரப்புரை, கொள்கை, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டமை.
- பண்பாட்டுக் கிளர்ச்சி: நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் சீதனம் உட்பட்ட ஒடுக்குமுறையை நிராகரித்தல்.
- வீட்டில் பாலியல் அல்லது உடல் வன்முறையிலிருந்து தப்பித்தல்.
மேற்குறிப்பிட்ட காரணிகள், கட்டமைப்பு ரீதியான இன மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான செயல் – தனிப்பட்ட உரிமை சார் முனைப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவாகப் பெண்கள் போர்க்காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் இணைவதற்கான புறநிலைகளாகப் பட்டியலிடப்படுகின்றன.
புலிகள் அமைப்பில் பாலினம் பற்றிய புரிதலும் அணுகுமுறையும்
பெண்கள் ஆரம்பத்தில் பராமரிப்பாளர்களாகச் (Caregivers) சேர்ந்தனர், ஆனால் படிப்படியாக போராளிகளாகவும் நிர்வாகிகளாகவும் மாறினர். அமைப்பில் பாலின வேறுபாடு நிலவியது. ஒருபுறம் பெண்களின் முன்னேற்றத்திற்குரிய தளமாகவும் (Empowering), மறுபுறம் ஆண்கள் ஆதிக்கம் கொண்ட துறைகளில் பெண்கள் முழுமையாக ஈடுபட முடியாத மட்டுப்படுத்தற் சூழல்களும் (Limiting) இருந்தன.
பெண்கள் தலைமைப் பதவிகளில் இருந்தாலும், அவர்களின் அதிகாரம் பெரும்பாலும் ஆண் மேலாளர்களால் வழிநடத்தப்பட்டது. இறுதியில் ஒட்டுமொத்த அதிகாரமும் கொண்டவராகப் பிரபாகரன் இருந்தார். பெண்களிற் சிலர் பாலினப் பிரச்சினைகள் குறித்து நேரடியாகப் பிரபாகரனைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புப் பெற்றிருந்தபோதும் தமது நிலைப்பாடுகளை வலியுறுத்தத் தயங்கினர். சமத்துவம் பேசும் இயக்கத்திலும் ஆணாதிக்க அம்சங்கள் உள்ளுறைந்திருந்தமையை இது காட்டுகிறது.
அறிவுசார் பெண் விடுதலையின் பற்றாக்குறை
உதாரணமாக, அடேல் பாலசிங்கம் தலைமையில் நடத்தப்பட்ட சீதன, பெண் ஒடுக்குமுறை எதிர்ப்பு உட்பட்ட செயற்பாடுகள் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வன்னிப் பகுதிக்கு நகர்ந்த பின்னர் மந்தமடைந்தன. கல்வி பெற்ற தலைமைத்துவ ஆளுமையுடையவர்கள் போர்களில் உயிரிழந்ததும், திறமை வாய்ந்தவர்களையும் போர் முன்னரங்குகளுக்கு அனுப்புகின்ற புலிகளின் சமத்துவ நடைமுறையும், பெண்கள் தொடர்பான அறிவுசார் தலைமைத்துவத்தை பலவீனப்படுத்தும் காரணிகளாகின.
பாரதி, வானதி போன்ற பெண் தலைமைத்துவ மற்றும் இலக்கிய ஆளுமைகள் போர்முனையில் உயிரிழந்தமை, இராணுவச் சமத்துவத்திற்குக் கொடுக்க நேர்ந்த விலையை உணர்த்துகிறது.
வன்னியின் பெண் விடுதலை என்பது அடிப்படையில் இராணுவமயமாக்கலின் மையத்திலிருந்து வடிவமைக்கப்பட்டிருந்தது. பெண்களின் உரிமைகள் புலிகளின் நிர்வாக அலகுகள் மூலம் நிலைநிறுத்தப்பட்டன. ஆணாதிக்க மனப்பான்மை எதிர்க்கப்பட்டது. ஆனபோதும் இது போர் மூலம் பிறந்த சுதந்திரம்; அமைதியால் மேம்படுத்தப்பட்டதல்ல; அதற்குரிய சூழலும் நிலவவில்லை. இது தனித்துவமான, உள்ளூர்ப் பெண் விடுதலை. நிகழ்த்தப்பட்ட, சாத்தியப்பட்ட பெண்களுக்கான இந்த அதிகாரமளிப்பு என்பது தற்காலிகமானதும் நசுங்கவும் நசுக்கப்படவும் கூடியது என்று கூறும் மாலதி, புலிகளின் நிழல் அரசின் வீழ்ச்சியுடன் அது மங்கிவிட்டது என்றும் பதிவு செய்கின்றார்.
பெண் விடுதலைச் சவால்கள்
பிரதான சவால் அல்லது முரண்பாடு, பெண்களுக்கான அதிகாரமளிப்பிற்கும் புலிகள் இயக்கத்திற்குள் நிலவிய கட்டமைப்பு ரீதியான ஆணாதிக்கத்திற்குமிடையிலானது.
இராணுவச் சீருடை, ஜீன்ஸ், சேட் மற்றும் இடுப்புப் பட்டியுடனான பெண் போராளிகளின் தோற்றமானது, தன்னம்பிக்கை, வலிமை, மிடுக்கு போன்றவற்றின் குறியீடுகளாக இருந்தன. அத்தோடு பாரம்பரியத் தமிழ் விழுமியங்களிலிருந்து ஓர் உடைப்பை நிகழ்த்துவதாகவும் அமைந்தது. தமிழ்ச் சூழலிற் செயல்வலு, தன்னம்பிக்கை, ஒழுக்கம் ஆகியவற்றுடனான பெண்மை குறித்த புதியதொரு உருவகத்தையும் இது பிரதிபலித்தது. அதேவேளை புலிகளின் சிவில் மற்றும் அமைப்பு சார் நிர்வாகத் துறைகளிற் பணியாற்றிய பொதுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பாரம்பரிய ‘சேலை’ அணிய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இது தமிழ்ச் சமூகத்தின் பெண்மைக்கான பாரம்பரியத்தையும் கட்டுப்பாட்டினையும் பேணும் முனைப்பிலானது. புலிகளின் அதிகாரமிக்க ஆண் பொறுப்பாளர்களால் விதிக்கப்பட்ட இந்த உடை நடைமுறையானது, பாலினச் சமத்துவத்தை ஆதரிப்பதாகச் சொல்லும் இயக்கத்துக்குள்ளும் பாரம்பரிய ஆண்மைய நிலைப்பாடுகள் எவ்வளவு ஆழமாக நிலைத்திருந்தன என்பதை வெளிப்படுத்துகிறது என்று வாதிடுகிறார் மாலதி. இந்தச் ‘சேலை விதி’ என்பது விடுதலை என்ற சொல்லாட்சிக்கும் நடைமுறைக் கட்டுப்பாட்டுக்கும் இடையிலான பரந்த முரண்பாட்டின் சிறிய உதாரணமாக நூலாசிரியரால் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.
பாலினச் சமத்துவம் குறித்த பிரபாகரனின் அக்கறை
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பாலினச் சமத்துவம் குறித்த அக்கறை இருந்ததாகக் குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். பெண்கள் போரில் கலந்துகொள்வதை எதிர்த்த ஆண் தளபதிகளைப் பிரபாகரன் மீறியதை நினைவுபடுத்துகின்றார். பெண் போராளிகளுக்காக பாரம்பரியமற்ற உடைகளை அணிய அனுமதித்தார் பிரபாகரன். ஆனால், அவருடைய ஆண் தளபதிகள் பெண்களின் உரிமைகளைப் புரிந்துகொள்ளும் விஷயத்தில் முற்றிலும் முற்போக்கான பார்வையைக் கொண்டிருக்கவில்லை. இதனால் கட்டமைப்புச் சார்ந்த ஆண்மையப் பழக்கங்கள் கொள்கைசார் மாற்றங்களை மீறி நீடித்திருந்தன.
பா. நடேசனுக்குப் பின் தமிழீழக் காவல்துறைப் பொறுப்பினைக் கையேற்ற இளங்கோ பற்றி மாலதி குறிப்பிடுகிறார். இவர் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான பயிற்சித் திட்டங்களைத் துவங்கினார். ‘பெண் காவல்துறையினர்’ மத்தியில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றார். பெண்கள் உரிமைகள், அவர்களுக்கான அதிகாரமளிப்புச் சார்ந்த இளங்கோவின் செயற்பாடுகளை அர்ப்பணிப்பு மிக்கனவாகவும், புதுமையான மனதைக் கவரும் வகையினவாகவும் வர்ணிக்கின்றார் மாலதி. ஆனால், போர் முடிவுக்கு வந்ததையடுத்து இளங்கோ என்ன ஆனார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. போர்களின் மோசமான முடிவு சீர்திருத்தவாதிகளை இல்லாதொழித்துவிடும் என்பதற்கான சாட்சியமாக இளங்கோ போன்றவர்களின் இழப்புக் குறிப்பிடப்படுகிறது.
இதுபோல், பெண்களுக்கு கராத்தே பயிற்சியும் வழங்கப்பட்டதை நினைவுகூருகின்றார். பெண்களை உடல் ரீதியாக தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், சமூக ரீதியாக தைரியமானவர்களாகவும் இத்திட்டங்கள் மாற்றின. பாரம்பரியமாக்கப்பட்டு பெண்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட கலாசாரப் பண்பு, கீழ்ப்படிதல் நடைமுறைகளையும் இத்தகு திட்டங்கள் குறைத்தன.
திருமண உறவில் இணைந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த தம்பதிகள் பொது மக்கள் மத்தியிலிருந்த தம்பதிகளை விடவும் சமத்துவத்தினைக் கொண்டிருந்ததாகத் தனது அவதானிப்பினை நூலாசிரியர் முன்வைக்கின்றார். புலிகள் அமைப்பின் ஆண்கள் பெண்களை மதித்தமை, பெண்கள் படைத்துறையில் செய்த பங்களிப்பை ஏற்கும் மனப்பான்மையுடன் தொடர்புடையது. பெண்களின் மறுமணம் என்பது பாரம்பரியத் தமிழ்ச் சமூகத்தில் அதிகம் நிகழாத ஒன்று. ஆனால் புலிகளின் உறுப்பினர்கள் மத்தியில் அது அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனப்பாங்கு நிலவியது. இது அழுத்தம்மிகு சூழலின் சமூக நவீனமயமாக்கலைக் குறிக்கிறது.
வன்னியின் சமூக வெளி
வன்னியின் சமூக வெளி எனும் தலைப்பிலான அத்தியாயத்தில் வன்னியின் வாழ்வியற் சூழலை விரிவாக விளக்குகிறார். வன்னியானது நீண்ட காலமாக (பூர்விகமாக) அங்கு வசித்தவர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து (1995 யாழ். இடப்பெயர்வு) இடம்பெயர்ந்தோர், இராணுவ அடக்குமுறை மற்றும் வறுமை காரணமாகப் பிற பிரதேசங்களிலிருந்து குடிபெயர்ந்தோர் போன்றவர்கள் வாழும் நிலம். புலிகளின் நிர்வாக ஆட்சியின் கீழ் உருவான தனித்துவமான சமூகத்தின் முதன்மை அங்கமாகவும் இருந்தது.
வன்னிச் சமூகம் போரின் விளைவான பாரிய பாதிப்பின் குறியீடுகளைச் சுமந்திருந்தது. ஒவ்வொருவரும் இழப்புகளின் கதைகளைத் தம்மகத்தே கொண்டிருந்தாலும், அந்தப் பொது அனுபவங்கள் வலுவான சமூக ஒற்றுமையை உருவாக்கின. உணவுப் பகிர்வு, உணர்வுப் பகிர்வு, மற்றும் கூட்டுப் பராமரிப்பு போன்ற பண்பாட்டு இயல்புகள், மக்களின் நம்பிக்கைக்கு உந்துதலாய் அமைந்தன. இத்தகு பரஸ்பர பரிவுணர்வும், பகிரப்பட்ட அடையாளமும், அவர்களுக்கு மன உறுதியை வழங்கின்.
இந்த அத்தியாயத்தில் வன்னி மக்களின் சமயப் பின்னணி, பின்பற்றல் நடைமுறைகள் சார்ந்த குறிப்புகள் உள்ளன. புலிகள் அமைப்பு மதச்சார்பற்ற அமைப்பாக இருந்தது. அதன் உறுப்பினர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டன. தனிப்பட்ட வாழ்க்கை (திருமணம் உட்பட) கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகள் சேவை செய்த பின்னர் மட்டுமே திருமணம் அனுமதிக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு, குடும்பத்துடன் வாழ அனுமதிக்கப்பட்டனர், ஆனால் மதச்சார்பு நடைமுறைகள் தனிப்பட்ட வகையிலேயே பின்பற்றப்பட்டன.
இராணுவ – அரசியல் – சிவில் நிர்வாகக் கட்டமைப்பு
புலிகளின் கட்டமைப்பு ரீதியான பிரிவுகள், நிறுவன, நிர்வாக விவரங்களும் குறிப்பிடப்படுகின்றன. இராணுவம், அரசியல், நிதித்துறை, புலனாய்வுத்துறை, காவல்துறை, சர்வதேச விவகாரம் ஆகிய துறைகளைப் புலிகள் அமைப்புக் கொண்டிருந்தது. இத்துறைகள் ஒவ்வொன்றுக்கும் பல துணை அமைப்புகள் இருந்தன. பொது மக்களுக்கு நன்கு அறிமுகமானதும் வெளிப்படையாகத் தென்பட்டதுமான அமைப்பு, அரசியல் பிரிவாகும். இராணுவ மற்றும் புலனாய்வுத்துறை ஆகியன பொது மக்களிலிருந்து விலகியே இயங்கின. புலிகளின் சிவில் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்கள் அனைவரும்கூட இராணுவப் பயிற்சி பெற்றிருந்தனர்.
குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கான நலத்துறை அமைப்புகள், மையங்கள் இயங்கின. ஊடகம், சுகாதாரம், பொருளாதாரம், விளையாட்டு, கல்வி மற்றும் கலாசாரப் பிரிவுகளும் செயற்பட்டன. நீதிமன்றங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளும் செயற்பட்டன. நிதிப்பிரிவு, மளிகைக் கடைகள், பண்ணைகள், போக்குவரத்துத்துறை மற்றும் சிறுதொழில்கள் ஆகியவற்றையும் புலிகளின் சிவில் நிர்வாகத்துறை இயக்கியது. பொது மக்களிற் பலர் இவற்றின் நிர்வாகப் பணிகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
சர்வதேசப் பிரிவு, புலிகளின் புலம்பெயர் நாடுகளின் கட்டமைப்புகளுடன் தொடர்பாடல்களையும் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தது. ஆனால், புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், புலம்பெயர் தமிழர்கள் ஈழப்போராட்டத்தின் மீதான உண்மையான அக்கறையுடனான செயற்பாடுகளைத் தொடரவில்லை.
விடுதலைப் புலிகள் – பொது மக்கள் தொடர்பு
விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இடையிலான சமூகப் பிணைப்பு உணர்ச்சிபூர்வமாக இருந்ததாகப் பதிவிடுகிறார் மாலதி. பல குடும்பங்களில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருந்தனர். இந்த யதார்த்தமானது, புலிகள் இயக்கத்திற்கும் சமூகத்திற்குமிடையில் ஆழமான உறவை உருவாக்கியது.
புலிகளின் நிர்வாகங்களில் பொதுமக்களிற் பலர் முக்கியமான வேலைவாய்ப்பாளர்களாக இருந்தமையும் அந்த அமைப்புடன் மக்களை மேலும் இணைத்தது. ஆனால், கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் பொது மக்களில் ஒரு பகுதியினர் விடுதலைப் புலிகளிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ள வழிவகுத்தன.
போர் நிறுத்த கால நன்மைகள்
2002 ஆம் ஆண்டில் உருவான போர்நிறுத்த, சமாதான முன்னெடுப்பு, 2004 ஏற்பட்ட சுனாமிப் பேரழிவு ஆகியவை வன்னியில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களை (ஐ.நா., தன்னார்வ அமைப்புகள், SLMM) வருவித்தன. இதன் விளைவாகப் புதிய நிதி வருகை மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகின. அதேவேளை இலங்கை அரசின் நிறுவனங்கள் வன்னியிற் செயற்பட்டுக் கொண்டிருந்தன, ஆனால் அவற்றின் அதிகாரம் பெயரளவிலேயே இருந்தன. அரச அலகுகளிற் தமிழர்கள் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தாலும் கொழும்பிலிருந்து தான் உத்தரவுகள் வந்தன. இது ஓர் இரட்டை நிர்வாகச் சூழலை உருவாக்கியது. விடுதலைப் புலிகளின் நிறுவனங்கள் அரசுத் துறைகளைப் பதிலீடு செய்தன. குறிப்பாக சுகாதாரத்துறையிற் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, புலிகள் – இலங்கை அரச சுகாதாரத்துறை இடையே நெருக்கமான ஒத்துழைப்புச் சாத்தியப்பட்டது. கல்வித்துறை அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், விடுதலைப் புலிகள் தமது நிழல் நிர்வாகங்கள் மூலம் தமிழ் வரலாற்றை ஊக்குவித்து, பண்பாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர்.
புலிகளால் நிர்வகிக்கப்பட்ட பெண்கள் மேம்பாடு மற்றும் மறுவாழ்வு மையம் (CWDR – Centre for Women’s Development and Rehabilitation) மற்றும் சுகாதாரப் பராமரிப்பு மையம் (CHC – Centre for Health Care) போன்ற அமைப்புகள் முக்கியமான சேவைகளை வழங்கின. விடுதலைப் புலிகள் மேற்பார்வையில் இந்நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மையும் செயற்திறனும் நிலைநிறுத்தப்பட்டது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (Tamil Rehabilitation Organization – TRO) வன்னியில் மிகப்பெரிய உள்ளூர் தன்னார்வ அமைப்பாக இருந்தது. இது குழந்தைகள், சிறார் நலன், சிறு கடன், சுயதொழிற் திட்டங்கள், கிராம வளர்ச்சி, நோர்வேஜிய தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் போன்ற திட்டங்களை முன்னெடுத்தது. புனர்வாழ்வுக் கழகம் பிரதானமாகப் புலம்பெயர் தமிழரின் நிதிப்பங்களிப்புடன், பல சர்வதேச தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும் செயற்பட்டது. 2007 இல், பயங்கரவாதத்திற்கான நிதிச் சேகரிப்புக் குற்றச்சாட்டுகளால் அந்நிறுவனம் சர்வதேச அளவிற் பல நாடுகளிற் தடைசெய்யப்பட்டது. ஆனாலும் புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் இயங்கிய CWDR, CHC போன்ற அமைப்புகள் மீதான ஊழல் அல்லது தவறான நிதிக்கையாளுகை தொடர்பான குற்றங்களுக்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
2002 – 2006 போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிழல் அரசின் செயற்பாடுகள் சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கு வழிவகுத்தன. கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை, குழந்தைகள் பராமரிப்பு, மனித உரிமைகள், சூழலியல் உட்பட்ட பல துறைகளில் முன்னேற்றகரமான வளர்ச்சிகள் இடம்பெற்றன.
இந்த அத்தியாயம் வன்னியோடு இணைந்திருந்த சமூக – அரசியல் சூழலைச் சித்திரிக்கின்றது. விடுதலைப் புலிகள் ஓர் ஆயுத இயக்கமாக மட்டுமல்லாமல், ஓர் அரச கட்டமைப்பைக் கொண்டிருந்த அமைப்பாகவும் செயற்பட்டமையை விவரிக்கின்றது. அத்தோடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு மற்றும் இராணுவமயமாக்கல், தனிப்பட்ட சுதந்திரங்களை கட்டுப்படுத்தியதன் விளைவாக மக்கள் மத்தியில் ஒருவித மௌன எதிர்ப்பு நிலவியதையும் பதிவு செய்கிறது.
முள்ளிவாய்க்கால் நோக்கிய மெதுநடை
முள்ளிவாய்க்காலை நோக்கிய மெதுவான நடை என்ற தலைப்பிலான அத்தியாயம் 2005 முதல் 2007 வரை தமிழ் நிலம் எவ்வாறு மெதுவாகக் குலைந்தது என்பதை விவரிக்கின்றது. சுனாமிக்குப் பின்னான சமாதான முயற்சிகள் சற்று நம்பிக்கையளித்த போதும், தொடர்ச்சியான கடத்தல்கள், படுகொலைகள், விமானக் குண்டுவீச்சுகள் மீண்டும் மக்களை அழிக்கத் தொடங்கின. சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, பொருளாதாரத் தடைகள், ஊடக மௌனம் என்பன நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தின. 2006 ஆம் ஆண்டு செஞ்சோலைக் குண்டுவீச்சும், 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டதும் போர் முனைப்பினைத் தீவிரப்படுத்தின. இந்த ஆண்டுகள் முழுவதும், முழுமையான அழிவையும் இழப்புகளையும் நோக்கி வன்னி நிலம் மெதுமெதுவாகவும் துயரங்களுடனும் நகர்ந்ததாக மாலதி விவரிக்கிறார்.
முன்னைய சமாதான காலத்தின் நிலைத்தன்மை, இறுதிக் காலங்களில் ஏற்பட்ட பேரழிவுகளுடன் ஒப்பிடப்படுகிறது. தமிழர் தாயகத்தின் பௌதிக அழிவு, அதன் நிர்வாக அமைப்பின் முற்றுமுழுதான சிதைவு, மக்களின் பெருமெடுப்பிலான இடப்பெயர்வுகள், படுகொலைகள் விவரிக்கப்படுகின்றன. சமாதானம் குலைந்து, போருக்கு இட்டுச் செல்லப்பட்ட அரசியற் புறநிலைகளும் பேசப்படுகின்றன.
தடுப்பு முகாம்கள்
2009 – மே உள்நாட்டுப் போரின் முடிவில், பல நூறாயிரக்கணக்கான தமிழ் மக்கள், அரசாங்கத்தின் இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டமையும் அங்கு அவர்கள் நடத்தப்பட்ட விதங்கள் தொடர்பாகவும் ‘தடுப்பு முகாம்கள்’ எனும் தலைப்பிலான அத்தியாயத்திற் பேசப்படுகின்றது. அம்முகாம்களில் மிகப்பெரியது வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த ‘மெனிக் ஃபார்ம்’. முகாமுக்குக் மக்கள் கொண்டு செல்லப்பட்ட பயணம் மிகவும் கொடூரமானது. ஓய்வு, உறக்கம், உணவு, தண்ணீர் இன்றிப் பொதுமக்கள் பல நாட்கள் தொடர்ச்சியாகப் பேருந்துகளில் அடைத்து வைக்கப்பட்டனர். இராணுவத்தால் திரும்பத்திரும்பப் பலமுறை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், அங்கு சனங்களால் நிறைந்து வழியும் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டனர். கட்டிமுடிக்கப்படாத கழிப்பறைகள், போதிய குடிநீரின்மை, உணவுப்பற்றாக்குறை என அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட சூழலில் வைக்கப்பட்டனர். முகாம் முழுவதுமாக சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இராணுவத்தினர் இடம்பெயர்ந்த மக்களை முற்றிலும் கைதிகளாகவே நடத்தினர். வன்முறை, அச்சுறுத்தல், அவமதிப்புகள் வழமையாகியிருந்தன. ஆண்கள், பெண்கள், முதியவர்களைக்கூட அடிப்பது உட்பட்ட உடல்ரீதியான வன்முறைகளைப் பிரயோகிப்பதை இராணுவம் வழக்கமாகக் கொண்டிருந்தது.
நாளாந்த வாழ்நிலைமைகள் மிகவும் மோசமாக இருந்தன, குறிப்பாக குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்குப் போதுமான உணவு வழங்கப்படவில்லை. வயிற்றுப்போக்கு, ‘ஹெபாடைடிடிஸ்’ போன்ற நோய்கள் துரிதமாகப் பரவின. மருத்துவச் சேவை கரிசனையுடன் மேற்கொள்ளப்படவில்லை. பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குன்றி பலவீனமடைந்திருந்தன. குடும்பங்கள் பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டன. காயமடைந்த உறவினரை இராணுவம் அழைத்துச் சென்றபோது குடும்பத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விசாரணைகளின் பேரில் பலர் பிரித்துச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர். பலர் காணாமல் போன உறவினர்களைத் தேடி மாதக்கணக்கில் அலைந்தனர். சட்டபூர்வ உதவி இல்லாமல் மக்கள் அலைக்கழிந்தனர். கொலைகள், காணாமல் போதல்கள், சித்திரவதைகள் பற்றிய கதைகள் பரவலாக நிலவின. இவை முகாமில் இருந்தவர்கள் மத்தியிற் பயத்தையும் நம்பிக்கையின்மையையும் அதிகரித்தன.
முகாம்கள் தற்காலிக தங்குமிடங்களாக அல்லாமல், சிறைக்கூடங்களாகவே இயங்கின. வெளியுலகத்துடனான தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்டன. சந்திப்புகள் கடுமையான கண்காணிப்பிற்கு உட்பட்டன. புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள், விளக்கமின்றி அழைத்துச் செல்லப்பட்டனர். உணர்ச்சி ரீதியாக மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உட்பட்டனர். உடற் துன்பங்கள் மட்டுமல்லாமல், கடுந்துயரம், பயம், அவமதிப்பு ஆகியவற்றையும் மக்கள் அனுபவித்தனர். தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, வீடு திரும்பிய பின்னரும் பலர் தொந்தரவுகளையும் பாதுகாப்பின்மையையும் எதிர்கொண்டனர். இப்படியாக மெனிக் ஃபார்ம் அனுபவங்கள், போர் முடிவில் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரத்தின் புறக்கணிப்புகள், அவமதிப்புகள், சுதந்திர இழப்புகள், துன்பங்கள் என்பவற்றை தமிழ் மக்கள் இடையறாது எதிர்கொள்ள நேர்ந்த கதைகளுடன் இந்த அத்தியாயத்தை மாலதி நிறைவு செய்கிறார்.
நிழல் அரசின் சிதைப்பும் மேற்கின் அதிகார மேலாண்மையின் தொடர்ச்சியும்
நியூசிலாந்துக்குத் திரும்பிய நூலாசிரியர் காணாமலாக்கப்பட்ட, கொல்லப்பட்ட வன்னி மக்களின் கையறுநிலை குறித்த துயர்மிகு நினைவுகளைச் சுமந்தபடியிருப்பதை இறுதி அத்தியாயத்தில் பதிவு செய்கிறார். இந்நிலை ஈழத் தமிழர் சமூகத்தின் பரவலான மன உழல்வைப் பிரதிபலிக்கிறது. புலிகளின் தோல்வி, தமிழர்களின் அரசியல் இலக்குகளின் தவறுகளையும், சர்வதேச அதிகாரப் பரிமாணங்களின் கசப்பும் கடுமையுமான உண்மைகளையும் எதிர்கொள்ள நிர்ப்பந்தித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, மேற்குலக நாடுகள் பெரும்பாலும் தமிழர்களின் அபிலாசைகளைக் கட்டுப்படுத்தும் அல்லது எதிர்க்கும் நிலைப்பாடுகளை எடுத்தன. புலிகள் அமைப்பு கடுமையான வழிமுறைகளைக் கொண்டிருந்தபோதும், சமூக ஒருமைப்பாடு, முன்னேற்றகரமான கொள்கைகள், கூட்டுச் செயற்பாட்டியக்கம் ஆகியவற்றுக்கான தனித்துவமான நிலமாக புலிகளின் வன்னி இருந்தது; சாதிய, சமூகப் பிளவுகள், பிரிவுகளை மீறி உறுதியை வளர்த்தது. போரின் முடிவில் இத்தகு நம்பிக்கைகளின் பெரும்பகுதி சிதைக்கப்பட்டுவிட்டது. தமிழர்கள் பேரிழப்புகளுடன், பெரும் மன உழல்வுகளுடனும் உலக அரசியல் சக்திகளின் தொடர்கின்ற அதிகார மேலாண்மையின் தாக்கங்களுக்கு மத்தியிற் தமது போராட்டத்தை வழிநடத்த வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என முடிக்கின்றார் மாலதி.



