மாலதி எழுதிய ‘எனது தேசத்தில் கடந்துபோன ஒரு தருணம்’ - தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் இறுதி ஆண்டுகள் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

மாலதி எழுதிய ‘எனது தேசத்தில் கடந்துபோன ஒரு தருணம்’ – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் இறுதி ஆண்டுகள் – பகுதி 1

August 15, 2025 | Ezhuna

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகும்.

இந்த நூல் N. மாலதி எழுதி, 2012 இல் வெளிவந்ததாகும். மாலதி அவர்கள் நியூசிலாந்து நாட்டினை வதிவிடமாகக் கொண்ட ஈழத்தமிழ் டயஸ்போறா சமூகத்தைச் சேர்ந்தவர். கணினித் தொழில்நுட்பத்துறையில் கலாநிதி ஆய்வுக்கல்வியை (PhD) நியூசிலாந்துப் (University of Canterbury) பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தவர். அத்துறையில் ஆய்வாளராகவும் புரோக்கிராமராகவும் பணியாற்றியவர்.

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது, அரசுசாரா ஆயுதப் போராட்டங்களின் வரலாற்றில் (History of Armed Struggles by Non-state Actors) முக்கியமான அம்சமாகும்; குறிப்பாக, இந்தப் போராட்டமும் அதன் இறுதிக்கட்ட நிகழ்வுகளும் அதில் குறிப்பிடத்தக்கவை. இவை இன்னும் பன்நெடுங்காலங்களுக்கு பல கோணங்களிலிருந்து ஆய்வு செய்யப்படும். அத்தகு ஆய்வுக்கும் கற்கைக்கும் ஒரு பங்களிப்பாக இந்நூலும் அமையும் என முன்னுரையில் மாலதி குறிப்பிடுகின்றார். மக்களின் இருப்பினை உறுதி செய்வதற்கான முக்கிய செயற்பாடுகளில் ஒன்று வரலாற்றைப் பதிவு செய்தல். தனது இந்த நம்பிக்கையே இந்நூலை எழுதுவதற்கான உந்துதல் என்றும் கூறுகின்றார். இவர் இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக விரிவாக எழுதியவர். 

இந்த நூல், 2005 முதல் 2009 வரையிலான ஐந்து ஆண்டுகளில், வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசின் (De-facto State) கீழ் அவர் பணியாற்றிய காலத்தின் நினைவுகள், நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களைப் பதிவு செய்கிறது. நூலின் முன்னுரையில் வாசகர்களை நோக்கி இவ்வாறு கேட்கிறார்:

“ஒரு தேசத்தினுடைய முற்றுமுழுதான அழிவைப் பார்த்திருக்கின்றமை எத்தகைய ஓர் அனுபவத்தினை கொடுத்திருக்கும் என்பதை – அத்தகு அழிவுகளை நேரில் அனுபவிக்காத வாசகர்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

பௌதிக அழிவு (கட்டுமானம்), நிழல் அரச நிர்வாகக் கட்டமைப்புகளின் அழிவு, அந்த தேசத்தின் மக்களின் முழுமையான சிதறுகை (Dispersal), பெரும் எடுப்பிலான படுகொலைகள் எனவாக வரலாற்றில் எங்கேனும் இது போன்ற முழு அளவிலான பேரழிவு நிகழ்ந்து இருக்கின்றதா?” என்று கேள்வி எழுகின்றார். “இந்த அழிவு உலக அரசுகளின் அமைப்புகளால் (The Global System of States), அத்தகு பேரழிவாகப் பார்க்கப்படாமைக்கான காரணம், தமிழர் தாயகம் ஓர் அங்கீகரிக்கப்படாத தேசம் என்பதாகும். ஆனாலும் அது எமது மக்களின் மனங்களில் தேசமாக உணரப்படுகின்றது” என்று கூறுகின்றார் மாலதி.

நூலாசிரியரின் பின்னணி

மாலதி, புலம்பெயர்ந்து 30 ஆண்டுகள் நியூசிலாந்தில் வாழ்ந்தவர். இலங்கைத்தீவில் அமைதி நிலைபெற வேண்டும் என்ற விருப்போடு தாயகம் நோக்கிய ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் நியூசிலாந்தில் இயங்கியவர். புலிகளின் நிழல் அரசுக் கட்டமைப்புகளின் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, 2002 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து வன்னிக்கு ஆறு வாரக் குறும்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து 2004 இல் மூன்று மாதங்கள் வன்னியில் தங்கியிருந்து தன்னால் அங்கு ஆற்றக்கூடிய பணிகள் குறித்த ஒரு கள ஆய்வினையும் அவதானிப்பினையும் மேற்கொண்டார். அதன் பயனாக 2005 மார்ச் அங்கு மூன்றாவது தடவையாக பயணம் மேற்கொண்டு நீண்டகால அடிப்படையில் பணியாற்றும் முடிவோடு அங்கு சென்றார். அதனையடுத்து ஐந்து ஆண்டுகள் அதாவது 2009 மே மாதம் – முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டம் வரை – அங்கு தனது பணிகளை முன்னெடுத்தார். விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றார். வடக்கு – கிழக்கு மனித உரிமை செயலகம் (North – East Secretariat on Human Rights – NESoHR), விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் (Peace Secretariat of the Liberation Tigers of Tamil Eelam), பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் (Center for Women Development), செஞ்சோலை சிறுவர் காப்பகம் (Sencholai Girls’ Child Development Centre) உட்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு நிர்வாக சேவை அலகுகளில் இணைந்து பணியாற்றியிருக்கின்றார்.

புலிகள் அமைப்பிலிருந்து வயது குறைந்த போராளிகளை விடுவிப்பதற்கான செயற்பாடுகளில் புலிகளுடன் இணைந்து செயற்பட்டமை, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான ஆவணத்தயாரிப்பு, வடக்கு – கிழக்கு மனித உரிமைச் செயலகத்திற்கான (North – East Secretariat on Human Rights – NESoHR) ஆவணத்தயாரிப்புப் பணிகள் உட்பட்ட பல்வேறு திட்டங்களிற் பங்களித்துள்ளார். குடும்ப வன்முறை (Domestic Violence) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு செயற்திட்டத்திலும் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறாக 5 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட பணிகளும் அவற்றுடன் தொடர்புடைய அனுபவங்களும், நபர்களும், நிகழ்வுகளும் இந்நூலில் பகிரப்படுகின்றன. வெவ்வேறு 16 தலைப்புகளின் கீழ் (அத்தியாயங்கள்) அவை விவரிக்கப்படுகின்றன. முதல் எட்டு அத்தியாயங்கள் பற்றிய விரிவான பார்வையாக இக்கட்டுரை அமைகின்றது. 

2009 இறுதிப் போரின் முடிவுவரை வன்னியில் நின்றவர். இறுதியாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலம் வெளியேறியவர். போர் வலயத்திலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களோடு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வவுனியா (Menik Farm) முகாமில் தடுப்பில் இருந்துள்ளார். 2009 இன் பிற்பகுதியில் ‘மெனிக் ஃபார்ம்’ தடுப்பு முகாமிலிருந்தும், பின்னர் இலங்கையிலிருந்தும் வெளியேறியவர் என்பதை நூலிற் குறிப்பிடுகின்றார்.

தாய் – மகள் உரையாடலும் முரண்பாடும்

‘மக்கள் தொடர்பகத்தில் கண்ட இளம்பெண்’ என்பது முதலாவது அத்தியாயத்தின் தலைப்பு. மக்கள் தொடர்பகம் என்பது புலிகளிடம் மக்கள் ஏதேனும் உதவி, கோரிக்கை முன்வைப்பதற்கான அல்லது புலிகளின் நடவடிக்கைகள் மீதான முறைப்பாடுகளை முன்வைக்கும் ஓர் அலுவலகம் அல்லது ஒரு மையம். புலிகள் அமைப்பில் இணைந்திருந்த வயது குறைந்த (16 வயது) தனது மகளை அமைப்பிலிருந்து விடுவித்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக கண்ணீரோடு காத்திருந்த தாய் பற்றிய ஒரு கதை பகிரப்படுகின்றது. தான் நேரிற் கண்ட அந்தச் சம்பவத்தை விவரிக்கின்றார். அடிப்படையில் அது தாய், மகள், மக்கள் தொடர்பாக அதிகாரி இடையிலான ஓர் உரையாடல். இவர் அதில் ஓர் அவதானி. தாய், மகளுக்கு இடையில் இருவேறு முரண்பட்ட நிலைப்பாடுகளும், விருப்பங்களும் வெளிப்படுகின்றன. ஓர் அவதானியாக மாலதி தனது அந்த அனுபவத்தினைப் பதிவு செய்கின்றார். வயது குறைந்த போராளிகளை விடுவிக்கும் ஐ.நா திட்டத்திற் புலிகள் கைச்சாத்திட்டதற்கு அமைய விடுவிக்கப்பட்டவர் அந்த மகள்; விடுவிப்பிற்கு முன்னர் புலிகளின் இயக்கத்தில் இருந்துகொண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O Level) எழுதியவர் அந்தப் பெண். கல்விச் சான்றிதழை பெற யாழ்ப்பாணத்திலிருந்து தாயும் மகளும் மக்கள் தொடர்பகத்திற்கு வந்திருந்தனர். அங்கு தாய்க்கும் மகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகின்றது.

புலிகள் இயக்கத்தில் தான் மீண்டும் இணைய விரும்புவதாகவும் வீட்டுக்குச் செல்ல விரும்பவில்லை என்றும் அழுத்தமாகச் சொல்கிறார் அந்தப் பெண். யுனிசெப் நிறுவனத்தின் துணை அனுசரணையுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் முன்னெடுக்கப்படும் கல்வித் திட்டத்தில் இணைந்து கொள்வது பொருத்தமான தீர்வு என மக்கள் தொடர்பக அதிகாரி ஆலோசனை கூறுகின்றார். இதற்காகவா அலுவலகம் அலுவலகமாகப் பல ஆண்டுகள் அலைந்து உன்னை விடுவித்தேன் என்று விரக்தியில் பேசுகின்றார் தாய். பின்னர் மகளின் கழுத்து, காதில் இருந்த ஆபரணங்களைக் கழற்றிக்கொண்டு கோபத்துடனும் அழுகையுடனும் கைக்குழந்தையுடன் தாய் அங்கிருந்து வெளியேறிச் செல்கிறார். கல்வி நிலையத்தில் இணைந்த மகள் பின்னர் யாழ்ப்பாணம் திரும்பினாரா, போரில் பங்கேற்றாரா, போரில் கொல்லப்பட்டாரா, 2009 இல் சிறையில் அடைக்கப்பட்டாரா, இன்று உயிருடன் உள்ளாரா, தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாரா, இராணுவத்தினராற் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கேள்விகளை மாலதி எழுப்புகின்றார். 2006 இல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து அந்த மகளுக்கு 2009 இல் என்ன நேர்ந்திருக்கும் என்று மனம் கலங்குகிறார்.

இந்த சம்பவத்தில் ஊடாக குழந்தைப் போராளிகள் குறித்த புலிகள் மீதான மேற்கின் குற்றச்சாட்டின் பக்கச்சார்பான அல்லது ஒற்றைப்பரிமாணத் தன்மை மீதும் கேள்வி எழுப்புகின்றார். அதாவது குழந்தைப் போராளிகள் தொடர்பான சர்வதேசமயப்பட்ட பெரிய பிரச்சினையின் ஒரு பகுதியாக இந்தக் கதையாடலை அவர் முன்வைக்கின்றார்.

இத்தகைய கதைகள் உள்ளபடி உள்ளூரிற் கூட வெளிவருவதில்லை. சர்வதேசம் இதனைக் குழந்தைப் போராளிகள் என்ற ஒற்றைப்பரிமாணமாக முன்வைக்கின்றது – பார்க்கின்றது. ஆனால் ஈழத்தின் யதார்த்தத்தில், இது பல்பரிமாணங்களைக் கொண்ட விவகாரம். புலிகளின் ஆட்சேர்ப்புத் தேவையும் அதற்கான செயற்பாடுகளும் ஒரு பரிமாணம். உயர்ந்த இலட்சியமும் முரண்பட்ட ஆர்வங்களும் கொண்ட இளைஞர்களின் மனநிலை, விருப்பம் என்பது இரண்டாவது பரிமாணம். பிள்ளைகள் இயக்கத்தில் இணையும்போது குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்பும் அது சார்ந்த உணர்வுகளும், பாதிப்புகளும் மூன்றாவது பரிமாணம் என்கிறார் மாலதி.

போரினால் அநாதரவாக்கப்பட்ட குழந்தைகள்

இதன் இன்னொரு பரிமாணத்தினையும் தனியான அத்தியாயத்தில் விவாதிக்கின்றார். அது போரினால் பாதிக்கப்பட்ட சிறார்கள் – போரில் பெற்றோரை இழந்த சிறார்கள் – போர் காரணமாக பெற்றோர் மற்றும் குடும்பங்களால் கைவிடப்பட்ட அல்லது பராமரிக்க முடியாத குழந்தைகள் சார்ந்த பரிமாணமும் பேசப்படுகின்றது. ‘கைவிடப்பட்ட குழந்தைகள்’ என்ற அடுத்த அத்தியாயத்தில் இவை குறித்து விரிவாகப் பேசுகின்றார்.

சமாதான காலத்தில் டயஸ்போறா தமிழர்கள், குறிப்பாக துறைசார் ஆளுமைகளை வன்னிக்கு வரவேற்பதில் புலிகள் மற்றும் தமிழீழ நிழல் அரசின் நிர்வாகங்கள் அக்கறையும், ஆர்வமும் கொண்டு செயற்பட்டன. தேச அபிவிருத்தி, நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் சேவைகளில் துறைசார் வளவாளர்களின் பங்களிப்பை அவர்கள் ஊக்குவித்தனர். அதன் நிமித்தம் தன்னார்வ ரீதியில் துறைசார் பணிகளை முன்னெடுப்பதற்கு புலம்பெயர் வளவாளர்களும், ஆளுமைகளும் அழைக்கப்பட்டனர்.

அரசியற்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வனுடனான உரையாடலின் விளைவாக வன்னியில் சிறுவர்களின் நிலைமைகள் தொடர்பான ஓர் ஆய்வில் மாலதி ஈடுபட்டிருக்கின்றார். கரன் என்ற போராளி புலிகளின் வரலாற்றை நன்கறிந்த ஒருவரும், ஆய்வு ஈடுபாடு கொண்டவருமாவார். அத்தோடு அவர் தகவல்கள், தரவுகள், ஆவணங்கள் மீதான இலகுவான அணுகலைக் கொண்டவராகவும் இருந்திருக்கின்றார். இந்த ஆய்வுப் பணியில் மாலதிக்கு அவருடைய உதவி பெரிதும் பயன்பட்டிருக்கின்றது. 

தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள சிறுவர் காப்பகச் சிறார்களின் நிலைமைகள் பற்றிய தகவலகள், போரினாற் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பாதிப்பிற்குரிய சமூக அக – புறக் காரணிகள் பற்றிய தகவல்களையும் தரவுகளையும் ஆவணங்களையும் அவர் திரட்டிக் கொடுத்துள்ளார். போர், குழந்தைகளை அநாதரவாக்குகிறது. வன்னியும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. பல சிறார் காப்பகங்கள் உருவாக்கம் பெற்றன. அவை அனைத்தும் ‘சிறார் காப்பகங்கள்/ இல்லங்கள்’ என்றே அழைக்கப்பட்டன. ஒருபோதும் ‘அநாதை இல்லங்கள்’ என்று அழைக்கப்படவில்லை.

தரவுகளின்படி தமிழர் தாயகத்தில் 6000 சிறார்கள் காப்பகங்களில் இருந்திருக்கின்றார்கள். வடக்கு – கிழக்கு மாகாண சபை புள்ளியியல் பதிவின் படி 18 வயதிற்கு கீழ் வடக்கு – கிழக்கில் 6 லட்சம் (600,000) குழந்தைகள் இருந்தனர். அந்தக் கணக்கின்படி, ஒவ்வொரு 100 குழந்தைகளில் ஒரு குழந்தை சிறார் காப்பகத்தில் இருந்ததாகச் சொல்லலாம். இந்த அத்தியாயத்தில் போரின் விளைவாகக் குழந்தைகள் எதிர்கொண்ட பாதிப்புகள், பெற்றோர்களை இழந்த குழந்தைகள், பெற்றோர்களின் வறுமை உட்பட்டவை விவரிக்கப்படுகின்றன. சிறார் காப்பகத்தில் இணைந்த – இணைக்கப்பட்ட குழந்தைகளின் கதைகள் சில பகிரப்படுகின்றன. பிள்ளைகளும் அக்கதைகளில் போரின் விளைவுகள் குறித்த சித்திரத்தை வரைகின்றது.

புலிகள் அமைப்பில் வயது குறைந்த போராளிகள் பற்றிய விடயம் சர்வதேசத்தில் மிகைப்படுத்தப்பட்டது அல்லது சிறார்நலன் சார்ந்த சர்வதேச அமைப்புகளின் நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கான கருவியாகச் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களாற் இவ் உத்தி பயன்படுத்தப்பட்டதென மாலதி தன் கருத்தினை முன்வைக்கின்றார்.

சிறார் காப்பகங்களும் கரிசனை மிகு பராமரிப்பும்

வள்ளிபுனம் வனங்களின் நடுவில் 150 வரையான பெண் பிள்ளைகளுக்கான பராமரிப்பிடமாக அமைந்திருந்த செஞ்சோலை சிறார் காப்பகத்தின் அமைவிடச் சூழல் முதற்கொண்டு அதன் கட்டுமானம், பணியாளர்கள், தங்கியிருந்த பிள்ளைகள் பற்றிய விவரிப்பு ஆகியன அந்த இடத்தினைக் கண்முன் கொண்டுவருவதாய் உள்ளன. ஜனனி அங்குள்ள பிள்ளைகளின் தாயாக இயங்கினார். பிள்ளைகள் அவரைப் பெரியம்மா என்றே அழைத்தனர். அவர்களுக்குரிய சிறந்த கல்வியோடு தொழிற்துறைப் பயிற்சிகளை மேம்படுத்தும் திட்டங்கள் பலவற்றை உருவாக்கும் பணிகளையும் ஜனனி வழிநடத்தினார்.

அங்கிருந்த பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்தவர்கள். இன்னும் பலர் இராணுவ மோதல்களில் ஏற்பட்ட வன்முறைகளால் கடுமையான மன உளைச்சல்களை அனுபவித்தவர்களாவர். செஞ்சோலைச் சிறார்களுக்கான தனியான பாடசாலைகள் நடாத்தப்பட்டன. அவற்றின் கல்விசார் பெறுபேறுகள் சிறந்த தரத்தினைக் கொண்டிருந்தன. பலர் காவற்துறை, சட்டம், மருத்துவம் மற்றும் கைவினை போன்ற துறைகளில் தொழில்முறைப் பயிற்சியைப் பெற்றனர். காலப்போக்கில் தனியான பாடசாலைகள் மூடப்பட்டு பொதுப் பாடசாலைகளில் செஞ்சோலைச் சிறார்கள் கல்வி கற்கத் தொடங்கினர். செஞ்சோலை பலமுறை இடம்பெயர நேர்ந்தது. குறிப்பாகக் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காகக் கிளிநொச்சிக்கு இடம்பெயர நேர்ந்தது. அது சவால் நிறைந்ததாகவும் இருந்தது என்கிறார். 

செஞ்சோலையிற் கிட்டத்தட்ட எல்லாக் காலங்களிலுமாக 450 குழந்தைகள் பராமரிக்கப்பட்டனர். தமிழ்ச் சமூகத்தில் பெற்றோரை இழந்த – பெற்றோரைப் பிரிந்த குழந்தைகளின் மீது உள்ள எதிர்மறைப் பிம்பத்தினை மாற்றியமைப்பதில் ஜனனி கரிசனை கொண்டிருந்தார். பல சிறுமிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைத் (GCE O Level) தேர்வையும் முடித்திருந்தனர். கல்வி முடிவுகளைத் தாண்டிப் பெண் குழந்தைகள், சிறுமிகள், வளரிளம் பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், பெற்றோரற்ற குழந்தைகளைப் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றவும் ஜனனி முயற்சித்தார். செஞ்சோலை, புலிகளுடன் நெருங்கிய பிணைப்பினைக் கொண்டிருந்தது. பெண் பிள்ளைகளின் நலன்கள், மேம்பாடு குறித்த கரிசனையுடன் புலிகளால் நன்கு நிதியளிக்கவும்பட்டது. இது UNICEF போன்ற சர்வதேச அமைப்புகள், செஞ்சோலையோடு இணைந்து பணியாற்றுவதற்குத் தடையாக அமைந்தது. ஜனனி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய நட்புறவையும் விசுவாசத்தையும் கொண்டிருந்தார்.

சிறார் காப்பகத்தில் இணைந்த குழந்தைகள் சிலரின் பின்னணி:

இசையரசி: ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் காப்பகத்தில் இணைந்தவர். அவரது தாயை அவருக்கு நினைவிருக்கிறது; தந்தை நினைவில் இல்லை. அவர் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, காணாமல் போனவர். தாயார் சுகவீனம் காரணமாகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, வைத்தியசாலை மீதான சிறிலங்கா இராணுவத்தின் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

சந்திரிகா: இவரும் இவருடைய சகோதரியும் பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டவர்கள். இந்திய இராணுவக் காலத்தில் நடந்த சம்பவங்களின் பின் பெற்றோர்களிடமிருந்து பிரிய நேரிட்டது. பெற்றோருக்கு என்ன ஆனது, எங்கு இருக்கிறார்கள்? போன்ற தகவல் ஏதும் இல்லை. பாட்டி இறந்த பின்னர் சந்திரிகா சிறுவர் காப்பகத்திற் சேர்க்கப்பட்டார். “2009 இல் வன்னியிலிருந்து வெளியேறுவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் நான் பயணம் செய்த வாகனத்தில் இயக்கச் சீருடை தரித்து வீதியில் நின்றிருந்த பெண் போராளிகள் சிலரை வாகனத்தில் ஏற்றிச் செல்ல நேர்ந்தபோது, சந்திரிகாவை அவர்களில் ஒருவராகச் சந்தித்தேன். அப்போது அவர் ஒரு விரிந்த புன்னகையோடு என்னிடம் கேட்டார்: என்னை நினைவிருக்கிறதா?” என தனது நினைவுகளை மீட்கின்றார் மாலதி.

ஜெயகௌரி: ஷெல் தாக்குதலில், பெற்றோர் இருவரையும் இழந்தவர்.

தர்ஷினி: 1995 இல் யாழ் இடப்பெயர்வின் போது தனது பாட்டி மற்றும் மாமனாருடன் கொழும்பிற்குச் சென்றார். மூவரும் இராணுவத்தினராற் கைதுசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறையில் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்பட்டனர். விடுதலையின் பின் அவர்கள் வன்னிக்கு வந்தனர். பாட்டியும் தாயாரும் ஒரே வீட்டில் வாழ்ந்தனர். வறுமை காரணமாக தர்ஷினியை பாடசாலைக்கு அனுப்ப அவர்களிடம் வசதி இருக்கவில்லை. அவர் காப்பகத்தில் இணைக்கப்படுகின்றார்.

போரால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளைக் கருத்தில் எடுத்தால், வீதியில் அலைந்து திரியும் குழந்தைகளைக் காண்பதொன்றும் ஆச்சரியமாக இருக்காது. ஆனால் வன்னியில், புலிகளின் நிர்வாகத்தில் அந்த நிலைமை ஏற்படவில்லை. இந்தப் பணிக்காகப் புலிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அத்தோடு குழந்தைகளை மையப்படுத்திய செயற்பாடுகளிற் தமிழ்ச் சமூகப் பண்பாட்டுப் பொறுப்பினையும் காரணமாகக் கூறமுடியும்.

பல்வேறு மோசமான பற்றாக்குறைகளுக்கு மத்தியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில், சிறுவர் காப்பகங்களில், பராமரிப்புப் பணிகள் வியக்கத்தக்க சிறப்பு நிலையிற் காணப்பட்டன. பராமரிப்புப் பணியாளர்களின் அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்க வியத்தகு அம்சம். உணர்வு, அக்கறை, கரிசனை, கருணை, கனிவு நிறைந்த இடமாக சிறுவர் காப்பகங்கள் இயங்கின.

மேற்கின் சிறார் காப்பகங்களுடனோ அல்லது இலங்கையின் ஏனைய பகுதிகளுடனோ ஒப்பிடுகையில் வன்னியின் சிறார் காப்பகங்களில் வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான குற்றச்சாட்டுகள் எழவில்லை. சர்வதேச தரப்புகள் இது குறித்து நேர்மறையாகப் பேசவில்லை. எனினும் புலிகளின் சிறார் காப்பகங்கள் சிறந்த நடைமுறையைக் கொண்டிருந்தன. அத்தோடு துஷ்பிரயோகங்கள் அற்றவை என்ற கணிப்பும் சர்வதேசத் தரப்புகளிடையே நிலவியது. 

புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் (2009 மே) வன்னியில் பல சிறார் பராமரிப்பு நிலையங்கள் பெருகி உள்ளன. அதாவது, கட்டுப்பாடற்ற இந்தப் பெருக்கம், சிறார்களின் பாலியல் துஷ்பிரயோகம், தவறான வழிகளில் பயன்படுத்தப்படுதல், அவர்கள் மீதான வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரிக்கும் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என நூலாசிரியர் கவலை கொள்கிறார். அது இலங்கையின் ஏனைய பகுதிகள் போன்று மோசமான நிலையை அடைந்துவிடும் என்றும் எச்சரிக்கின்றார்.

சடங்குகள், கலை, பண்பாட்டு நிகழ்வுகள், மாவீரர் நினைவேந்தல்கள்

சடங்குகள் என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் வன்னியின் சமூக, அரசியல் வாழ்வின் மைய அம்சமாகச் சடங்குகள் விளங்கின என்பதை விவரிக்கின்றார். குறிப்பாக 2002 இல் ஏற்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டினைத் தொடர்ந்து சடங்குகள் முதன்மை இடத்தினைப் பெற்றுக்கொண்டன. போரில் வீழ்ந்தவர்களுக்கான நினைவேந்தல் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளும் இதற்குள் அடங்குகின்றன. புலிகள் அமைப்பினாலும் சமய, சமூக பண்பாட்டுத் தலைமைகளினாலும் சடங்குகளும், நினைவேந்தல் மற்றும் கலை பண்பாட்டு நிகழ்வுகளும் வழிநடத்தப்பட்டன. 

புலிகளின் அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் மாவீரர்களின் தற்காலிக அல்லது நிரந்தர உருவப்படங்கள் காணப்பட்டன. அவற்றுக்கு நாளாந்தச் சடங்காக விளக்கேற்றல் மற்றும் பூத்தூவுதல் இடம்பெற்றன. நிமிர்த்தி வைக்கப்பட்ட சுடுகலனின் மேல்முனையில் இராணுவத் தொப்பி போர்த்தப்பட்ட தோற்றச்சிலை போராட்டத்தினது குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது. புகழ்பெற்ற களங்களில், தாக்குதல்களில் உயிரிழந்தோரை நினைவுகூரும் சிலைகள் மற்றும் திறந்தவெளி நினைவுத்தூபிகள், முக்கிய சாலைத் திருப்பங்களில், குறிப்பாக A9 சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுதப் போராட்டத்தை மையப்படுத்திய குறியீடுகள் பரந்த அளவில் முன்னிறுத்தப்பட்டன. முக்கிய நாட்களில், நிறுவனங்கள் ஒன்றுகூடி கொடியேற்றுதல், கொடிக்கீதம் ஒலிபரப்புதல், அமைதி வணக்கம் மற்றும் மலரஞ்சலி போன்ற மரியாதை நிகழ்வுகளை நடத்தின. சடங்குகள் கூட்டுணர்வினை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்குவகித்தன.

உயிரிழந்த போராளிகளுக்கான மாவீரர் நினைவு நாளானது மலர் அலங்காரங்கள், கல்லறைகளுக்குச் சென்று வழிபடுதல், உணர்வுபூர்வமான நிகழ்வுகளை உள்ளடக்கியதாக நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வு சமூகத்தின் மீதும் உணர்வுபூர்வமான தாக்கத்தைச் செலுத்தியதோடு, துயரும் மரியாதையும் கலந்த சூழலில் மக்களை ஒருங்கிணைத்தது.  புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டங்களும் நடந்தன. பாரம்பரியத் தெருக்கூத்து, தெருவிசை நிகழ்ச்சிகள் மூலம் அரசியல் மற்றும் போர் தொடர்பான கருத்துகளும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டன. பொங்கு தமிழ் போன்ற பாரிய பண்பாட்டு நிகழ்ச்சிகள், பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை ஈர்த்து, அரசியற் செய்திகளையும் சர்வதேசச் சமூகத்தை நோக்கிய கோரிக்கைகளையும் வெளிப்படுத்தின. ஆனால் இவற்றுக்கு வெகு குறைவான ஊடகக் கவனமே கிடைக்கப்பெற்றது. மதச் சார்பற்ற தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா, தேசியப் பெருநிகழ்வாகக் கொண்டாடப்பட்டது. போரின் அழிவுக்குப் பின்னான சமாதான காலத்தில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் சர்வதேச ஆதரவுடன் மீள்கட்டமைப்பிற்கு உட்பட்டன. 

மனித உரிமைச் செயலகப் பணிகளும் அனுபவங்களும் சவால்களும்

2002 இற்குப் பிறகு மனித உரிமைகள் செயலகத்திற்கு வந்த பொதுவான முறைப்பாடுகளில்  நிலத்தகராறுகள் முதன்மையானவை. அடுத்தாற்போல் பொருட்களுக்கான தமிழீழ நிர்வாகத்தின் வரி அறவீடு மற்றும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஆகியன அமைகின்றன. 

NESoHR பொதுமக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பாலமாகச் செயற்பட்டமையைப் பதிவுசெய்துள்ளார். பல்வேறு பரந்துபட்ட பிரச்சினைகளில் – கடினமானதும் அரசியல் மயமானதுமான சூழலில் – உத்தியோகபூர்வமற்ற அனுசரணையாளராக இயங்கியதாகவும் குறிப்பிடுகின்றார். இது தொடர்பான பல்வேறு சம்பவங்கள், முறைப்பாடுகள், நிகழ்வுகளை விவரிக்கின்றார். 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வயது குறைந்தவர்களைப் போராளிகளாக இணைப்பதைத் தடுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்ளூர் நடவடிக்கைகள், மனித உரிமை தொடர்பான சவால்கள் ஆகியன விவரிக்கப்படுகின்றன.

சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா. தீர்மானம் (1989) ஆயுத ரீதியான பங்கேற்புக்கான வயதெல்லையைப் பதினைந்தாக (15) நிர்ணயித்தது. அதேவேளை அரசற்ற தரப்புகளுக்கான வயதெல்லையைப் பதினெட்டாக (18) நிர்ணயித்தது. ஐ.நா சிறார் நிதியம் (UNICEF) 2003 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பில் 18 வயதுக்குட்பட்டவர்களின் ஆட்சேர்ப்பை கண்காணிக்கத் தொடங்கியது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வயது குறைந்த போராளிகளை விடுவித்துப் புனர்வாழ்வு அளிக்கும் செயல்திட்டம், யூனிசெஃப் (UNICEF) மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) அத்திட்டத்தின் உள்ளூர்ச் செயற்பாட்டுத் தரப்பாக இயங்கியது. பல சர்வதேச தன்னார்வ அமைப்புகள் (NGOs) பங்கேற்றன. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு (SLMM) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியன ஆட்சேர்ப்பைக் கண்காணித்தன. கண்காணிப்பை வலுப்படுத்திய ஐ.நா. தீர்மானம் (1612) 2005 ஆம் ஆண்டில் அமுலுக்கு வந்தது. இலங்கையில் இதற்காக UNICEF முக்கிய பொறுப்பை ஏற்றது.

ஐ.நாவின் புனர்வாழ்வுத் திட்டங்கள் தோல்வியடைந்தன. புலிகள் அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வயது குறைந்தவர்கள், சமூகத்தில் உகந்த இணைவாக்கமின்மையின் காரணமாக புலிகள் அமைப்பில் மீண்டும் இணைந்தனர். புலிகள் இத்திட்டத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விலகி, சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் மோசமான வளப்பயன்பாட்டினை விமர்சித்தனர். UNICEF ஆய்வு (2007) ஒன்றும், தமது ஒருங்கிணைப்புச் சிக்கல்களை உறுதிப்படுத்தியது. வடக்கு – கிழக்கு மனித உரிமைச் செயலகம் வயது குறைந்த போராளிகளை விடுவிப்பதற்கான பாலமாகவும் பயன்படுத்தப்பட்டது. அதேவேளை விடுவிப்புத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு புலிகளுக்கு UNICEF அழுத்தம் கொடுத்தது.

1990 ஓகஸ்ட் மாதம் ஒரே நாளில் மூன்று மகன்களை இழந்த முதிய தம்பதியினரிடமிருந்து ஒரு முறைப்பாடு வந்தது. 2005 ஆம் ஆண்டு அவர்கள் வடக்கு – கிழக்கு மனித உரிமைச் செயலகத்திற்கு வந்திருந்தார்கள். மகன்கள் இருவரும் இன்னும் எங்காவது உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன், அவர்களைத் தேடித்தருமாறு உதவி கோரினர். அவர்களின் காத்திருப்பும், பொறுமையும், நம்பிக்கையும் மனதை உலுக்கியது. இதுவே மனித உரிமைச் செயலக ஆவணப்படுத்தலில் தான் எழுதிய முதல் இருதயத்தை நொருக்கும் போர்ச் சூழற் சம்பவம் என்கிறார் மாலதி.

ஆவணப்படுத்தற் செயற்பாடுகள்

ஆவணப்படுத்தற் பணிகள் சார்ந்த தனது பங்களிப்பையும், அனுபவத்தையும் பதிவிடுகின்றார். தமிழ்ச் சூழலில், குறிப்பாக போரையும் ஆக்கிரமிப்பையும் பல தசாப்தங்களாக எதிர்கொண்ட தமிழ்ப் பிரதேசங்களில் சுவடிப்படுத்தல் சார்ந்து நிலவிய சவால்கள், போதாமைகள், சிக்கல்கள் குறித்த பின்னணிகளையும் வரலாற்று நோக்கு நிலையில் பதிவு செய்கின்றார்.

யாழ் குடாநாட்டின் அருகிலுள்ள சிறுதீவுகளில், மூன்று அடுத்தடுத்த கிராமங்களில் நடந்த காணாமற்போனவர்கள் பற்றிய சம்பவங்களை மனித உரிமைச் செயலகம் விசாரிக்கத் தொடங்கியது. ஒரு மாத காலம் நீடித்த சிறிலங்கா இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன. விசாரணையின் தொடக்கத்தில், 70 இளைஞர்களின் பெயர்ப்பட்டியல் பெறப்பட்டது. அந்தப் பட்டியல், காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தவுடன், ஒரு மூத்த தமிழ்த் தன்னார்வ அலுவலர் தயாரித்தது.

அந்த நடவடிக்கையின் போது, தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை இலங்கை இராணுவம் கைதுசெய்து கட்டாயத் தொழிலுக்கு உட்படுத்தியது. பெரும்பாலானவர்கள் பின்னர் வீடு திரும்பினாலும், 70 இற்கும் மேற்பட்டோர் திரும்பவில்லை. அக்காலத்தில் புலிகளின் தாக்குதல்களால் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்த இளைஞர்களை இராணுவம் வதைத்துக் கொன்றதாக அந்தக் கிராமங்களின் மக்கள் நம்புகின்றனர். நம்பகமான தகவற் சான்றுகளிலிருந்து அவ்வாறு நம்பப்பட்டது. மனித உரிமைச் செயலகத்தின் விசாரணைச் செயற்பாட்டின் போது, ஆரம்பப் பட்டியலுக்கு அப்பால் மேலும் பல பெயர்களும் சேர்க்கப்பட்டன. இந்த ஆவணப்படுத்தல் பலவிதங்களில் தனக்கு ஓர் அசாதாரண அனுபவமாக அமைந்ததோடு மனித மனத்தின் நிலைத்தன்மையையும், போரின் பேரழிவையும் ஆழமாக உணரச் செய்ததாகவும் மாலதி விவரிக்கின்றார்.

உறவுகள் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்ட, கைதுசெய்யப்பட்ட குடும்பங்களுடனான சந்திப்புகளையும் நூலாசிரியர் விவரிக்கின்றார். அவற்றிற் குறிப்பாக குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்குப் பொறுப்பாகவிருந்த இளைஞர்களை இராணுவ ஒடுக்குமுறையின் கோரக் கரங்களுக்குப் பலிகொடுத்த – பறிகொடுத்த குடும்பங்களின் கதைகளை விவரிக்கின்றார். அவர்களுடனான சம்பாசனைகள் மிக உணர்வுபூர்வமானவையாகவும் சவாலானவையாகவும் அதேவேளை ஆவணப்படுத்தற் செயற்பாட்டின் முக்கிய அம்சமாக இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார். உறவுகளைத் தொலைத்த மனிதர்களின் மன உழல்வுகளை (Traume) மீள் உயிர்ப்பிப்பது தொடர்பான அறம்சார் கேள்விகளையும் இந்த ஆவணப்படுத்தல் எழுப்பியதாகக் குறிப்பிடுகின்றார்.  

மனித உரிமைச் செயலகம் (NESoHR) மற்றும் வடக்கு – கிழக்கு புள்ளியியல் மையம் (Statistical Centre for North East (SNE) ஆகியன போரின் விளைவுகள் தொடர்பான விரிவான புள்ளிவிவரங்களைச் சேகரித்திருந்தன. உயர் பாதுகாப்பு வலயங்கள் (High Security Zones – பாரிய இராணுவத் தளங்களை அமைப்பதற்காக செறிவான குடியிருப்புகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பகுதிகள்), தமிழர் மீதான படுகொலைகள் (1956 – 2008 காலப்பகுதியில் நடாத்தப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்களின் ஆவணப்படுத்தல்), பொதுமக்களின் இழப்புகள் மற்றும் 2000 இற்கும் மேலான சாட்சியங்கள், மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்மான் தீவுகளில் இடம்பெற்ற காணாமற் போதல்கள் குறித்த M-A-M அறிக்கை மற்றும் உயர்பாதுகாப்பு வலய அறிக்கை ஆகியன சர்வதேசக் கவனத்தைப் பெற்றன. பிரமந்தனாறு, பன்னங்கண்டி, ஒதியமலை ஆகிய கிராமங்களில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றிய ஆவணப்படுத்தற் செயற்திட்டங்கள் பகுதியாகவும், முழுமையாகவும் நிறைவு செய்யப்பட்டன. இத்தகு திட்டங்கள் குரலற்றவர்களுக்கான குரலை வழங்குவதற்கான வேணவாவில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் போர்ச்சூழல் மோசமடைந்ததன் விளைவாகப் பல திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. இன்னும் பல ஒருபோதும் நிறைவேற்றப்படாமற் போயின. 2009 இறுதிப் போரின் போது இந்த ஆவணங்களிற் பெரும்பாலானவை இழக்கப்பட்டுவிட்டன.

மாலதி இன்னும் பல அறிக்கையிடல்களிற் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, மீனவர் சமூகத்தின் துன்பங்கள், தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை மாற்றங்கள் (Demographic Changes), மேலும் 1980களில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி கிராமங்களில் இருந்து தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டமை போன்றவற்றை அவர் குறிப்பிடுகிறார்; அதேவேளை, பல அறிக்கைகள் முடிக்கப்படாமல் போனதையும் அல்லது இழக்கப்பட்டுவிட்டதையும் பதிவுசெய்கிறார்.

புலிகள் இயக்க மருத்துவத்துறைப் போராளியான மலரவன் எழுதிய ‘போர் உலா’ குறுநாவலினை 2007 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அனுபவத்தினைப் பகிர்கின்றார். 1990களில் 20 வயதில் போரில் மரணித்த மலரவன், பெண்களின் விடுதலை மற்றும் போரியல் வாழ்வு குறித்து எழுதியுள்ளார்.

வன்னி ஊடகங்கள்

தமிழீழ நிழல் அரசின் கீழான வன்னி ஊடகங்கள் பற்றியும் அவை எவ்வாறான விடயங்களிற் கவனம் செலுத்தின என்பது குறித்த பார்வைகளுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னி மக்களின் நாளாந்த வாழ்விலும் புலிகளின் அரசியல், இராணுவச் செய்திகளையும், கருத்துகளையும் மக்களிடம் சேர்க்கும் முதன்மை வகிபாகத்தினை புலிகளின் ஊடகங்கள் கொண்டிருந்தன. ஈழநாதம் நாளேடு, புலிகளின் குரல் வானொலி, தமிழீழத் தேசிய தொலைக்காட்சி (NTT) ஆகிய எழுத்து, ஒலி, ஒளி ஊடகங்கள் பிரதான வகிபாகத்தினைக் கொண்டிருந்தன. 

ஈழநாதம் நாளேடு பொதுத்தன்மை கொண்ட நிறுவனமாகத் தோற்றம்கொடுத்தாலும் அது நடைமுறையில் புலிகளுக்கு விசுவாசமாகச் செயற்பட்டதோடு, ஒரு போதும் புலிகள் அமைப்பினை விமர்சனத்திற்கு உட்படுத்தவில்லை. அரசியல், இராணுவச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அத்தோடு கல்வி, மருத்துவச் சேவைகள், சமூகத்தின் பிரச்சினைகள் பற்றிய உள்ளூர்ச் செய்திகளையும் வெளியிட்டு வந்தது. 2006 காலத்திலிருந்து மீண்டும் செய்திகள் அதிகம் போர் சார்ந்தவையாக மாறின. முக்கியமான இராணுவத் தாக்குதல்கள், வெற்றிகளின் போது ஈழநாதத்தின் விசேட பதிப்புகள் வெளிவந்தன. வார வெளியீடான வெள்ளிநாதம் விரிவான கட்டுரைகள், தொடர்களைக் கொண்டிருந்தது. இவற்றில் பெண் பத்திரிகையாளர்கள் வெகுகுறைவாக இருந்தனர். புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் பத்திரிகையைவிடக் கூடுதலான சமூக விடயங்களைப் பிரதிபலித்தது. இசைப்பாடல்கள், போட்டிகள், வானொலி நாடகங்கள் ஆகிய வடிவங்களில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. ‘மாற்றம்’ எனும் நிகழ்ச்சி, சமூகப் பேசுபொருட்கள், பெண்களின் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டது. இணையத்தினூடாக புலம்பெயர் தமிழர்களையும் புலிகளின் குரல் சென்றடைந்தது. 

NTT – தமிழீழத் தேசிய தொலைக்காட்சி 2005 இல் தொடங்கப்பட்டது, முன்னர் நீண்டகாலம் வெளியிடப்பட்ட ‘ஒளிவீச்சு’ வீடியோ சஞ்சிகை மற்றும் தெருநாடகத் திட்டங்களுக்கு மாற்றாக தேசியத் தொலைக்காட்சி மாறியது. நாளாந்தம் மாலை நேரத்தில் நான்கு மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பாகியது. அதிகமாக போர், இசை, மற்றும் படைத்துறைசார் பிரசாரத்தையும் கொண்டிருந்தது. அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகளும், வெகு சுருக்கமான ஆங்கிலச் செய்தித் தொகுப்பும் ஒளிபரப்பப்பட்டன. NTT தொலைக்காட்சி தமிழ்த் தேசியப் பெருமிதத்தினதும், அரசியல் இலட்சியத்தினதும் ஒரு சின்னமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய வெளியீடுகளாக விடுதலைப் புலிகள் (புலிகளின் அதிகாரபூர்வ ஏடு), சுதந்திரப் பறவைகள் (பெண்கள் பிரிவு), வெளிச்சம் (கலை, இலக்கியம், சமூக வாழ்வியல், அரசியல், மற்றும் மனித உரிமை பற்றிய மாத இதழ்) மற்றும் அலை (உள்ளக உறுப்பினர் செய்தி) ஆகியவை அடங்கும். பத்திரிகையாளர் பற்றாக்குறையால் ஊடகப் பணிகள் சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொண்டன. அதனை நிவர்த்திசெய்யும் பொருட்டு ஓர் ஊடகக் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா அரசு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை வெகுவாகக் கட்டுப்படுத்தியது. புலிகளும் தம்மீது விமர்சனங்களை முன்வைக்கும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களை அனுமதிக்கவில்லை. வெளியுலகத்திற்குரிய தகவல்கள் பெரும்பாலும் புலம்பெயர் தமிழ் இணையத்தளங்களூடாகச் சென்றன. அவை சர்வதேச வட்டாரங்களில் புலிகளின் பிரசார மற்றும் ஆதரவு ஊடகங்களாக முத்திரையிடப்பட்டன. இப்புறநிலை செய்திகளின் தாக்கத்தை குறைத்தது. ஈழத் தமிழர்களின் நிலைமை குறித்த தகவல்கள் ஒப்பீட்டளவில் வெளியுலகத்திற்கு உரிய முறையிற் கொண்டுசெல்லப்படவில்லை. 

வன்னியில் சர்வதேச அமைப்புகள்

2004 சுனாமி ஆழிப்பேரலையைத் தொடர்ந்து பல சர்வதேச அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் வன்னிப்பகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டனர். ஆனால் அதிகாரபூர்வ இலங்கை அதிகாரிகள் அங்கு வரவில்லை. குறிப்பாக மேற்கத்தியப் பிரதிநிதிகள் வந்தனர். சுனாமியின் போது விடுதலைப் புலிகளின் துரித மற்றும் மனிதாபிமான மீட்புப் பணிகள் சர்வதேச மட்டத்திற் பேசப்பட்டன. சர்வதேச தரப்புகள் வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினையும் பார்வையிட்டன. சந்திப்புகள் பெரும்பாலும் அதிகார வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டன. மேற்கத்தியக் குழுக்கள் சர்வதேச உடன்படிக்கைகள், விதிகளை முன்வைத்து வாதிட்டனர். விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் தமிழர்களுக்கு எதிரான வரலாற்று அநீதிகளை முன்னிறுத்தினர்.

இச்சந்தர்ப்பங்களில் நூலாசிரியர் படிப்படியாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலாளரகத்தில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியதையும் அது குறித்த அனுபவங்கள், பணிகள் தொடர்பாகவும் குறிப்பிடுகின்றார். மொழிபெயர்ப்புகள் மற்றும் ஆங்கில ஆவணங்களை உருவாக்குவதற்குப் பொறுப்பு வகித்தமையைக் குறிப்பிடுகின்றார். அவர் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவனுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளார். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுடனான பணிகள், சந்திப்புகள் பற்றியும் குறிப்பிடுகின்றார். சர்ச்சையான நிகழ்வுகளும் விவரிக்கப்படுகின்றன. ஒருமித்த முடிவின்றி முடிந்த தூதரகச் சந்திப்புகள், போர் நிறுத்த மீறல்கள், தாக்குதல் அச்சுறுத்தல்களில் புலிகளை மட்டுமே குற்றம்சாட்டி வெளிவந்த சர்வதேச ஊடகச் செய்திகள், அறிக்கைகள் பற்றியும் அது சார்ந்த ஊடக இயக்கவியலையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது.

அடுத்த பாகத்தில் இந்நூலின் ஏனைய அத்தியாயங்களை நோக்குவோம். 

தொடரும்.



About the Author

சிவராஜா ரூபன்

ரூபன் சிவராஜா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சிறுவனாக இருக்கும்போது ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடகம் ஆகிய தளங்களில் இவர் செயற்பட்டு வருவதுடன் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்தும் எழுதி வருகிறார். ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

எதிர்ப்பரசியல்', 'அதிகார நலனும் அரசியல் நகர்வும்' (உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு), 'எழுதிக் கடக்கின்ற தூரம்', 'சொற்களைச் செமிக்கும் கடல் (கவிதைத் தொகுப்பு), 'கலைப்பேச்சு தொகுதி 1, தொகுதி 2' (திரை நூல் அரங்கு), '' என்பன இவரது படைப்புகளாகும்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்