இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நவீன இலங்கையின் வரலாற்றை நிர்ணயிக்கும் நிகழ்வுகள் பல இடம்பெற்ற காலம். இவை, அடுத்து வந்த இரண்டாம் காலில், அரசியலைப் பொறுத்து இலங்கையர் இன அடிப்படையில் பிளவுபட்டுப் பிரிந்து செல்ல வழிவகுத்தன. அரசியல் புலத்தில் மட்டுமல்லாது, பண்பாட்டுப் புலத்திலும் முக்கிய அபிவிருத்திகள் ஏற்பட்டு, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்பாடு, மொழி, மதம் ஆகியவை சங்கமித்துச் சிங்கள சமூகத்தில் ஒரு புரட்சியை உண்டுபண்ணின.
பண்பாட்டு அடையாளத்தைத் தேடல்
பௌத்த மத சீர்திருத்த இயக்கம் தொடங்கிய கட்டத்தில் பண்பாடு தொடர்பான விழிப்புணர்வும் சிங்களச் சமூகத்தில் அரும்பியது. சிறப்பாக, இசை மற்றும் நாடகம் ஆகிய கலைகளைப் பொறுத்து முன் காணப்படாத சில அபிவிருத்திகள் இடம்பெற்றன.
சிங்களச் சமூகத்தில் ஒரு தனித்துவமான இசை மரபோ, நாடக – நடன மரபுகளோ வளர்ச்சி பெறுவதற்குத் தேரவாத பௌத்த வழிபாட்டுமுறை தடையாக இருந்தது எனலாம். இதற்கு மாறாக, தமிழ்நாட்டில் சைவ – வைஷ்ணவ வழிபாட்டுமுறையில் இசையும் நடனமும் செழிப்பாக வளர்வதற்கு வாய்ப்பு இருந்தது. தேரவாத பௌத்தர்கள் தம் வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்று தாமரை, நீலோற்பலம், அல்லி, அலரி மலர்களைப் புத்தர் சிலைக்கு முன் சாத்தி, வணங்கி, பாளிமொழியில் சில சுலோகங்களை (சிறப்பாக திரிரத்தினங்களில் சரணடைதல் மற்றும் பஞ்சசீலம் ஓதுதல்) உச்சரித்துவிட்டுத் திரும்புவதே வழிபாட்டுமுறை. சிலைக்கு முன் அல்லது தலத்தின் வேறு இடங்களில் ஆடல் பாடல் நடைபெறுவதில்லை.
ஆட்சியாளர் அரண்மனைகளில் மகிழ்வூட்டு நிகழ்ச்சிகளாக ஆடலும் பாடலும், சில வேளைகளில் நாடகமும், நடைபெற்றன எனலாம். சிறப்பாக, பத்தாம் நூற்றாண்டின் பின் தென்னிந்தியச் செல்வாக்குக் கூடுதலாகப் பரவியபோது அரண்மனைகளிலும் ஊர் மட்டத்திலும் ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் தமிழருடைய சைவத்தலங்களில் இடம்பெற்றன எனக் கல்வெட்டுகளாலும் சிங்கள நூல்கள் வாயிலாகவும் அறிய முடிகின்றது. சில கற்சிற்பங்களும் (யாப்பஹுவ போன்ற இடங்களில்) இதை வெளிப்படுத்துகின்றன.
பின்னர், ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில், கத்தோலிக்க மதம் பரவியபோது தமிழ்நாட்டுத் தெருக்கூத்தும் நாட்டார் இசையும் இலங்கையிலும் பரவின. இவை பெரும்பாலும் கத்தோலிக்கர் மேடையேற்றிய நாடகங்கள் மூலமாக வந்தவை. தமிழ்நாட்டுத் தெருக்கூத்து முறைப்படி (இது ஆந்திரத்தின் வீதிநாடகம் மற்றும் யக்ஷகானம் ஆகியவற்றுடன் தொடர்புடையது) ஞானசவுந்தரி, சந்தியோகுமையோர், பெத்லெகம் குறவஞ்சி ஆகியவை மேடையேற்றப்பட்டன. இந்த நாடகங்களுள் மிகவும் மக்கள் விருப்பத்தைப் பெற்றது எஸ்தாக்கியர் நாடகம். இதனைப் பிலிப்பு சிஞ்ஞோ என்பவர் சிங்களத்துக்கு மொழிபெயர்த்து மேடையேற்றினார். இந்த நாடகங்கள் வழியாகப் பௌத்தர்களுடைய நாடகங்களும் தோன்றி, சிங்கள நாடகம (නාඩගම) என்ற அரங்கக் கலை உருவாகியது.
இவ்வாறு தோன்றிய சிங்கள நாடகத்தில் சேர்க்கப்பட்ட இசைக்கூறுகள் தமிழ் இசை வடிவங்களே. சிங்கள நாட்டுக்கூத்தை ஆய்வு செய்த பேராசிரியர் எதிரிவீர சரச்சந்த்ர இவற்றைத் தன் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார். சுருங்கக் கூறின், இந்த நாடகங்களில் பாடப்பட்ட இசைவடிவங்கள் தமிழ்த் தெருக்கூத்தில் இருந்து பெறப்பட்டவை. பாட்டு வகைகளுக்குத் தமிழில் இருந்த பெயர்களே சிங்களத்திலும் கொடுக்கப்பட்டன: கலிப்பா, வெண்பா, பரணி, கொச்சகம், இன்னிசை, தோடயம் (தோடாயம), விருத்தம் (විරිදුව).
இந்நிலையில், வட இந்திய இசையின் செல்வாக்கு எதுவுமே இல்லாதபோது, 1877 இல் ஒரு முக்கிய நிகழ்ச்சி இசைக்கலை தொடர்பாக நடைபெற்றது. இந்தியப் பெருநகராகிய மும்பையில் புகழ்பெற்றிருந்த பார்சியர் நாடகக் குழு ஒன்று (Parsi Theatre Troupe) இலங்கைக்கு வந்தது. அதன் பெயர் ‘Hindustani Dramatic Company’. இக்குழு ஏற்கெனவே இந்திய மக்களிடையே புகழ்பெற்றிருந்த ‘இந்தர் ஸபா’ (இந்திரன் சபை) என்ற ஹிந்துஸ்தானி/ உறுது மொழி நாடகத்தை மேடையேற்றியது. இதன் வழியாக வட இந்திய ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் ராக தாளங்கள் சிங்கள இரசிகர்களுக்கு அறிமுகமாயின. தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளாக இப்படியான வட இந்திய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இலங்கையில் இசைப்புலத்தில் பெருந்திரள் மக்களை மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள் (Mass Entertainment) தொடங்கின. இவற்றைப் பற்றியும் இவை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் அண்மைக்காலத்தில் சிறந்த ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானது பேராசிரியர் ஸுனில் ஆரியரத்ன (இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்) எழுதியவை ஆகும்.
பார்ஸியர் நாடகக் குழுக்களின் வருகை சிங்கள சமூகத்தில் எதிர்பாராத ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியது. ஆரியரத்னவின் ஆய்வின்படி, பார்ஸியர் நாடகங்களின் சிலிர்ப்பூட்டும் ஆடல் பாடல்களும், பளபளப்பான உடையலங்காரமும், முன்னொருபோதும் காதில் விழாத உறுது, ஹிந்துஸ்தானி, ஹிந்தி, குஜராத்தி, மராட்டிச் சொற்களும், காதுக்கினிய வட இந்திய ராகங்களும், ஆடம்பரமான மேடையமைப்பும், நவீன தொழில்நுட்பமும் இலங்கை இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. ‘இந்தர் ஸபா’வின் பாடல்களை இசைக் கலைஞர் மனப்பாடம் செய்து பாடினர். அவற்றின் ராகங்களில் சிங்களப் பாட்டுகளும் இயற்றப்பட்டன. இவற்றின் விளைவு ஒரு புதிய சிங்கள இசைமரபின் தோற்றம். இது சிங்கள – பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்துடனும் ஆரிய – சிங்கள அடையாளத்துடனும் சங்கமித்து, பண்பாட்டுத் தேசியவாதத்தில் ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டது. பண்பாட்டுத் தேசியவாதிகள் தமக்கென ஒரு தனித்துவ அடையாளத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது வட இந்திய இசையின் செல்வாக்குப் புயல் இலங்கையை நோக்கி வீசியது. இனமும் மொழியும் வட இந்தியாவுடன் தொடுக்கப்பட்ட வேளையில், இசையையும் வட இந்தியாவுடன் தொடுக்க வழி திறக்கப்பட்டது.
பார்ஸிய நாடகங்களைப் போல, சிங்கள நாடகங்களை மேடையேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. இப்புதிய நாடக வடிவத்துக்கு நுர்த்தி (சம்ஸ்கிருதம் ‘நிர்த்ய’; தமிழ் ‘நிர்த்தனம்’/ ‘நர்த்தனம்’) என்ற பெயர் கொடுக்கப்பட்டது. டொன் பஸ்தியன் (1852 – 1921) முதலாவது நுர்த்தி நாடகத்தை 1877 இல் வெளியிட்டார். வெகு விரைவில், சிங்கள – பௌத்த தேசியவாதிகள் இக்கலை வடிவத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

பஸ்தியனைத் தொடர்ந்து, ஜோன் த சில்வா (John de Silva 1857 – 1922) என்பவர் இப்புதிய நாடக ஊடகத்தைச் சிங்கள – பௌத்த நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்தினார். இவர் 1902 இல் ஒரு நாடகக் கழகத்தை அமைத்து, சிங்கள வரலாற்று நாடகங்கள் சிலவற்றை எழுதி மேடையேற்றினார். இவற்றுக்கான பாடல்கள் ஹிந்துஸ்தானி சங்கீத முறையில் அமைந்தன. இந்த நாடகங்களைப் பற்றி ஸுனில் ஆரியரத்ன ஆய்வு செய்து எழுதியுள்ளார். அவருக்குப் பின் ‘Garrett Field’ என்ற அறிஞர் இவற்றை மேலும் ஆய்வு செய்து, தனது Ph.D. ஆய்வுரையில் எழுதியுள்ளார்.

கற்பனை ஆக்கங்களைப் படைத்து, அவற்றுக்கு வரலாற்றுப் போர்வை உடுத்து, அணிவகுத்துச் செல்ல வைப்பது தேசியவாதத்தின் தவறாத குணமாகும். அதற்கமைய, ஜோன் த சில்வா சிங்கள மக்கள் முற்காலத்தில் இந்திய இசையை நன்கு அறிந்திருந்தனர் எனவும், இவர்கள் இழந்த இசையை மீண்டும் அறிந்து கொள்ளவேண்டும் என்றும் கூறி ஹிந்துஸ்தானி சங்கீதத்துடன் சொந்தம் பாராட்டினார். இவருடைய நாடகங்களுக்காக ஹிந்துஸ்தானி ராகங்களுக்கு அமையப் புதிய பாடல்கள், சம்ஸ்கிருதச் சொற்கள் கலந்த சிங்களத்தில் (மிஸ்ர ஸிங்ஹள) இயற்றப்பட்டன. ஜோன் த சில்வாவின் நுர்த்தி இசை ஆரிய – சிங்கள அடையாளத்தை மேலும் வலியுறுத்த உதவியது.
தூய சிங்கள இயக்கம்
இலங்கையில் மொழிசார் தேசியவாத வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறுபவர் முனிதாஸ குமாரத்துங்க. தூய சிங்கள இயக்கத்தைத் தொடக்கிவைத்தவர் என்ற முறையில் இவருக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இவருடைய கருத்துகள் மற்றும் செயல்கள் பற்றிப் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் அண்மைக்காலத்தில் செய்யப்பட்ட ஒரு சிறந்த ஆய்வு (கேம்பிறிஜ் Ph.D. ஆய்வுரை) பேராசிரியர் ஸந்தகோமி கோப்பரஹேவா (සඳගෝමි කෝපරහේවා, கொழும்புப் பல்கலைக்கழகம்) எழுதியதாகும். இவருக்குப் பின் ‘Garrett Field’ (முன்னர் குறிப்பிடப்பட்டவர்) எழுதிய ஆய்வுரையிலும் குமாரத்துங்க பற்றிய ஆய்வு அடங்கியுள்ளது.
குமாரத்துங்க ஒரு மொழித்தூய்மை (Linguistic Purism) ஆர்வலர். அவர் கருத்தியலைச் சுருக்கமாகக் கூறினால், காலனிய காலத்துக்கு முன் வழக்கில் இருந்த ஹெள (எளு/ பழைய சிங்களம்) மொழியே தூய்மையானது. அம்மொழியை மீண்டும் வழங்கவைத்து, பிற மொழிச் சொற்களை (சம்ஸ்கிருதம், பாளி, தமிழ், ஆங்கிலம்) சிங்களத்தில் இருந்து நீக்கவேண்டும் என்பது அவர் நோக்கம்.
மேலும், அவர் தெரிவித்துப் பரப்பிய மொழிசார் கருத்துகள் தேசியவாத வளர்ச்சிக்குப் பங்களித்தன. தங்கள் மொழியே மூத்தது, முதன்மையானது, பிற மொழிகளின் தாயானது, ஏனைய மொழிகளைவிடச் செழிப்பானது, சிறந்தது என்றெல்லாம் கோரிக்கொள்வது மொழிசார் தேசியவாதிகளிடம் காணப்படும் பண்பாகும். இதே காலமளவில், துருக்கிய தேசியவாதம் தலைதூக்கிய போது, துருக்கி மொழி ஆர்வலர் தம் மொழியே பிற மொழிகளைப் பெற்ற தாய் எனப் பெருமைப்பட்டனர்.
குமாரத்துங்கவும் அவருடன் இணைந்த தூயமொழி ஆர்வலரும் (பின்னர் ‘ஹெள ஹவுல’ /හෙළ හවුල – ஹெளக் குழுமம் – எனப் பெயர்பெறும் குழுவினர்) பரப்பிய கருத்துகளுள் மூன்று முக்கியமானவை: இந்தியாவின் மிகப்பழைய மொழிகளைவிட ஹெள மூத்தது; இந்திய மொழிகள் அனைத்தும் ஹெளவில் இருந்து பெறப்பட்டவை; ஹெளமொழி பிற மொழிகளைவிட உயர்வானது.
குமாரத்துங்க தூய தனித்துவமான ஹெள அடையாளத்தை உருவாக்குவதற்கு எடுத்த முயற்சி சிங்கள மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வைத் தூண்டித் தங்களுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு என உணரவைத்தது. இது பேராசிரியர் கோப்பரஹேவாவின் முடிவாகும்.
விஜயன் கதை பட்ட பாடு
தேசியவாதத்திலும் இன அடையாள அரசியலிலும் (Identity Politics) மூழ்கிப் போராடுவோர்க்கு வரலாறு இன்றியமையாத ஓர் ஆயுதமாகும். இதனைப் பல அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர். கற்பனைக் கதைகளுக்கு (Myths) வரலாறு என்னும் உடை உடுத்திக் காட்டுவதைத் தேசியவாதத்தில் காணலாம் என்பது ‘Eric Hobsbawm’ என்ற பிரபல வரலாற்றாசிரியர் தெரிவித்துள்ள கருத்தாகும். இதற்கமைய, 2000 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் வம்சவரலாற்று நூல்களில் கூறப்பட்டு வந்த விஜயன் கதையை ஹெள ஹவுலக் குழுவினர் தம் தேவைக்கு ஏற்பத் தலைகீழாக மாற்றினர்.
விஜயன் கதை சிங்கள அரசவம்சத்தின் தோற்றத்தையும் பெயரையும் விளக்க எழுந்த கதை ஆகும். அது மரபுக்கதையாகப் பல வடிவங்களில் இருந்து, பௌத்த துறவிகள் எழுதிய வம்சவரலாற்று நூல்களுக்குள் புகுந்தது. முதலில் எழுதப்பட்ட தீபவம்ஸத்தில் அது பெற்றுள்ள வடிவம் பின்னர் எழுதப்பட்ட மஹாவம்ஸக் கதை வடிவத்தில் இருந்து வேறுபடுகின்றது. வாய்மொழிக் கதையாக அது எத்தனையோ வடிவங்களைப் பெற்றிருக்கும். ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்ட நூல்களில் இக்கதை அடையாளம் கண்டுகொள்ளமுடியாத வகையில் உருமாறிப் புதைந்து கிடக்கிறது (இது பற்றி 60 ஆண்டுகளுக்கு முன் விரிவாக நான் எழுதியுள்ளேன்).
விஜயன் கதையை இங்கு விரிவாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை. இக்கதையில், விஜயன் ஒரு வட இந்திய இளவரசன். தன் தோழர்களுடன் இலங்கைக்கு வந்து, அங்கு வாழ்ந்த இயக்கர் என்ற (மனிதர்கள் அல்லாத) இனத்தைச் சேர்ந்த குவேனி என்ற ஒரு பெண்ணை மனைவியாக ஏற்று ஆட்சியை நடத்தினான். ஆரிய – சிங்கள அடையாளத்தைப் போற்றிய தேசியவாதிகள் விஜயன் முதலானோர் வருகையை வட இந்திய ஆரியர் வந்து குடியேறிச் சிங்கள இனத்தைத் தோற்றுவித்ததைக் குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதினர்.
இதற்கு மாறாக, குமாரத்துங்கவும் ஹெள ஹவுலக் குழுவினரும் இலங்கையின் முதல் குடிகள் ஹெள மக்கள் எனவும், குவேனி என்பவள் தன் இனத்துக்குத் துரோகம் செய்த ஹெளப் பெண் எனவும் கருதினர். இவர்கள் விஜயன் கதையை இவ்வாறு மாற்றினர்: விஜயன் ஒரு கள்ளக் கூட்டத் தலைவன், வனத்தில் ஒரு குகையில் வாழ்ந்த பெருந்தெருக் கொள்ளைக்காரன் ஒருவனுடைய பேரன் (a grandson of a highway robber who lived in a cave in the great forest…). குவேனி தன் இனத்துக்குத் துரோகம் செய்த ஹெளப் பெண். விஜயன் ஹெள மக்களைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியவன் (இவை ஹெள ஹவுலவின் ஆங்கிலச் செய்தி மடலாகிய ‘Helio’ என்பதில் வெளியிடப்பட்டவை).
ஹெள மக்கள் இசை
குமாரத்துங்கவின் மொழிசார் தேசியவாதம் இசைத்துறைக்கும் சென்றது. குவேனியை ஒரு ஹெளப் பெண் எனவும் அவளுடைய இனத்தவர் ஹெள மக்கள் (தொல்காலச் சிங்கள மக்கள்) எனவும் நம்பிய குமாரத்துங்க, அக்காலத்தில் அவர்களுக்கு ஒரு தனியான இசைமரபு இருந்தது எனவும் நம்பினார். அந்த இசைக்கு ஒரு புதிய பெயரைக் கொடுத்து, அதனை உயிர்ப்பிக்க இவர் பல முயற்சிகளை எடுத்தார். இவை 1920களின் பின் நடைபெற்றவை.
குமாரத்துங்கவின் மொழிசார் தேசியவாதம் சிங்களத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு வேறும் பல முயற்சிகளை எடுக்க வைத்தது. இத்தேசியவாதத்தில் மூன்று முக்கிய உறுப்புகள் இருந்தன – மொழி, இனம், நாடு/ பஸ, ரஸ, தெஸ (බස, රැස, දෙස). இவை ஹெள மும்மணிகள் (හෙළ තෙරුවන) எனப்பட்டன. அநகாரிக தர்மபாலவின் தேசியவாத முழக்கத்தில் இடம்பெறும் மும்மணிகள் — நாடு, இனம், மதம் (රට, ජාතිය, ආගම) ஆகியவை.
மதத்தை விட்டு மொழிக்கு முதல் இடம் கொடுத்த குமாரத்துங்க, மத்திய வகுப்பினர் தங்கள் கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டித்து, இந்த நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் சிங்களத்தில் பேசவேண்டும் என வற்புறுத்தினார். இவருடைய முயற்சிகள் 1930 இன் பின் தீவிரப்போக்கை அடைய, பாடசாலைகளில் கற்பித்தல் தாய்மொழியில் இருக்கவேண்டும், நிர்வாக மொழி (சிங்கள மக்கள் வாழும் மாகாணங்களிலாவது) சிங்களத்தில் இருக்கவேண்டும், சட்ட சபையில் சிங்கள உறுப்பினர் சிங்களத்தில் மட்டும் பேசவேண்டும் என்றெல்லாம் இவர் குரல் எழுப்பினார்.
சமூகச் சீர்திருத்தம்
அநகாரிக தர்மபால மதச் சீர்திருத்தத்துடன் மட்டும் நின்றுவிடாது, ஆரிய – சிங்கள பௌத்த சமூகம் முழுமையாகச் சீர்திருந்தி ஒரு நவீன, தொழில்வளர்ச்சி பெற்ற இனமாக எழுச்சிபெற வேண்டும் என்ற நோக்குடன் செயலாற்றியமை கவனிக்கத்தக்கது. ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பினர் போலல்லாது, தர்மபால சிங்கள மக்கள் அனைவரும் நவீன முறைகளைக் கையாண்டு, ஆனால் தங்கள் பண்பாட்டைக் கைவிடாது, தொழிலிலும் வணிகத்திலும் வெற்றிகரமாக முன்னேற வேண்டும் என்று தன் மக்களுக்குப் போதித்தார்.
சிங்கள மக்கள் பின்தங்கிய நிலையில் வருந்தி நிற்க, இலங்கையில் பிற இனங்கள் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனம் ஆகிய குணங்களுடன் முன்னேறுவதாகவும் தர்மபால கவலையுற்றார். கவலை பின்னர் சீற்றமாக மாற, சிங்கள மக்களை மோடர் (සිංහලයා මෝඩයා), திறமையில்லாதவர்கள், சோம்பேறிகள் என்று பலவாறு திட்டி, அவர்கள் ஐரோப்பியர் பண்பாட்டைக் கண்மூடித்தனமாகத் தழுவுகிறர்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
ஐரோப்பியரைப் போன்று தாமும் நடந்துகொள்ள சிங்கள மக்கள் மேற்கத்திய உடை அணிவது, மதுபானம் அருந்துவது, மாட்டிறைச்சி உண்பது, கிறிஸ்தவப் பெயர்களைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பது ஆகியவற்றைச் செய்வதை தர்மபால கடுமையாகக் கண்டித்தார். ஐரோப்பிய உடை அணிவோரை மிகவும் இழிவுபடுத்திப் பேசினார். இது தொடர்பாகப் பேசும்போது, யாழ்ப்பாணத்தில் ஆங்கிலப் பாடசாலைக்குச் செல்லும் தமிழ் மாணவர் ஐரோப்பிய உடை அணிவதில்லை (ලංකාවේ උතුරු පළාතේ යාපනයේ පිහිටි ඉංග්රීසි පාඨසාලාවලට යන ද්රවිඩ සිශ්යයෝ යුරෝපීය කෝනම අඳින්නේ නැත – 1922) எனச் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆரிய – சிங்கள உடையைப் பலர் அணிவதற்கு அநகாரிகவின் வேண்டுகோள் வழிவகுத்தது. சிறப்பாக, சிங்களமொழிப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் பாரம்பரியத் தொழில்புரிவோரும் (ஆயுர்வேத வைத்தியர் போன்றோர்) இந்த உடையைத் தேசிய உணர்வுடன் வரவேற்றனர். மதுபானத்துக்கு எதிரான பேச்சுப் பல இடங்களில் மதுவிலக்கு இயக்கம் (Temperance Movement) துரிதமாகச் செயற்பட வழிவகுத்தது. அத்துடன், பலர் தங்கள் ஐரோப்பியப் பெயர்களை மாற்றி இந்திய மொழிப் பெயர்களை எடுக்கத் தொடங்கினர்.
அநகாரிகவின் மதத் தேசியவாதம் சமூகச் சீர்திருத்தத்தையும் மேம்பாட்டையும் உள்ளடக்கியது. சிங்களச் சமூகம் விழித்தெழுந்து, தொழிலிலும் வணிகத்திலும் முன்னேறி, ஒரு நவீன சமூகமாக மாறவேண்டுமென்பதே அவர் வற்புறுத்தியது. இதற்கு அவர் காட்டிய முன்மாதிரி ஜப்பான். ஜப்பானியரைப் போன்று பாரம்பரியப் பண்பாட்டைக் கைவிடாது நவீனமயமாக்கத்தைத் தழுவவேண்டும் என்பதை ஓயாது வற்புறுத்தினார். சிங்களச் சிறுவர்களை நோக்கி, “பாளி, சிங்களம், தமிழ், ஹிந்துஸ்தானி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் படி,” (පාලි, සිංහල, දෙමළ, හින්දුස්තානි, ඉංග්රීසි භාෂා ඉගෙන ගණින් – 1923) எனத் தூண்டினார்.
குமாரத்துங்கவின் மொழிசார் இயக்கமோ அநகாரிகவின் மதம்சார் இயக்கமோ அந்நியர் ஆட்சிக்கு எதிரான, ஆங்கிலேயரை வெளியேற்றக் கூச்சலிட்ட இயக்கங்கள் அல்ல. ஆனால் இரண்டும், சாதாரண மக்களையும் உள்ளடக்கியவையாக, பின் பொங்கி எழும் சிங்கள – பௌத்த தேசியவாதத்துக்குப் பெரும் பங்களிப்பைச் செய்தன.



