ஆங்கில மூலம்: கேட் குரோனின் – ஃபர்மான்
இலங்கையிலிருந்து கிடைத்த சான்றுகள்
இலங்கையின் பாதுகாப்புப் படைகள் போர்க்குற்றங்களையும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் பாரிய அளவில் செய்துள்ளன என்பதற்கான சான்றுகள் 1983 – 2009 உள்நாட்டுப் போருக்குப் பின்னர் வெளிவந்தன. பத்தாண்டுகளுக்குப் பிறகும் ஏறக்குறைய 150,000 பேர் இன்னும் கணக்கில்வராமல் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் நம்புகிறார்கள். உயிர் பிழைத்தவர்களிடமிருந்தும் சர்வதேச சமூக உறுப்பினர்களிடமிருந்தும் பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையிலும் இந்தக் கொடுமைகளைச் செய்தவர்களை விசாரிக்கவோ அல்லது வழக்குத் தொடரவோ இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
ஆயினும்கூட, போரை வென்றபிறகு அதன் ஐந்து ஆண்டுகால ஆட்சிக்காலத்தில், சர்வதேச அழுத்தம் கடுமையாக இருந்த தருணங்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகம் ஏராளமான மனித உரிமைக் கட்டமைப்புகளை உருவாக்கியது. அனைத்துக்கும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய கடப்பாடுகள்தான் இருந்தன. ஆனால் போர்ச் சட்டமீறல்கள் குறித்து விசாரிக்கும் பணி எவருக்கும் கொடுக்கப்படவில்லை. இந்தக் கட்டமைப்புகள் அரசாங்கத்தின் தீவிர தேசியவாத உள்நாட்டுக் குழுவினரிடமிருந்து விமர்சனங்களைச் சந்தித்தன. நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களிடமிருந்து இந்த அமைப்புகளின் செயற்பாடுகளில் சந்தேகம் எழுப்பப்பட்டது. மேலே கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள புதிரை இலங்கையின் நடவடிக்கைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன: ஒப்புக்கொள்ளுதல் குறித்த நன்மைகள் ஏதும் இல்லாவிட்டால் எதற்காக இந்தச் செலவுமிக்க மற்றும் சிரமமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்? சர்வதேச அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இலங்கை எடுத்த அரைகுறை நடவடிக்கைகளை ஆவணப்படுத்துவதற்கு முன்பு, போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை நான் மதிப்பாய்வுசெய்ய விரும்புகிறேன். பின்னர் இந்த நடவடிக்கைகளுக்கான முதன்மையான பார்வையாளர்கள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள்தான் என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றேன்.
போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள்
நீண்ட போரின் முடிவு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான இலங்கையின் யுத்தம் 2009 மே மாதத்தில் இரத்தக்களரியாக முடிவுக்கு வந்தது. நீண்டகாலமான இந்த மோதல் முழுவதும் அரசால் மனித உரிமைகள் மீறப்படுவதென்பது பொதுவான இயல்பாக இருந்தது. ஆனால் இறுதி நாட்களில் பொதுமக்கள் உயிரிழப்பு அதிர்ச்சியூட்டும்வகையில் அதிகரித்தது. இலங்கையின் வடக்குப் பகுதியான வன்னிப்பகுதியைக் கடந்து அரசாங்கப் படைகள் முன்னேறியபோது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வாழ்ந்த 330,000 பொதுமக்கள் அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்டனர். இராணுவம் முன்னேறியதால் பீதியடைந்த பொதுமக்கள் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்தனர். இறுதியில் வங்காள விரிகுடாவிற்கும் நந்திக்கடலிற்கும் இடையிலான ஒரு குறுகிய நிலத்துண்டில் சிக்கிக்கொண்டனர். போரின் இறுதிச் சண்டை, முள்ளிவாய்க்கால் கிராமத்திற்கு அருகில் நடந்தது. இந்த நிகழ்வுகளின் நாட்களில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் யுத்தவிலக்கு மண்டலங்கள் என்று அழைக்கப்படுபவை மீது அரசாங்கம் ‘ஷெல்’ தாக்குதல் நடத்தியதன் மூலம் இது நிகழ்ந்தது.

போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் அரசாங்கக் காவலில் வைக்கப்பட்டனர். இந்தப் போர்க் கைதிகளில் சிலர் சித்திரவதை செய்யப்பட்டார்கள்; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள்; அல்லது சுருக்கமாக, கொல்லப்பட்டார்கள். அவர்களின் கொடூரமான தலைவிதிகள் வெற்றி பெற்ற இராணுவத்தின் துர்நாற்றம் வீசும் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனையவர்கள் ‘மறுவாழ்வு’ முகாம்களில் போய் விழுந்தனர். அவர்களில் அவர்களில் பலரும் தங்கள் குடும்பங்களுக்கு, அல்லது வீட்டிற்குத் திரும்பவே இல்லை. முள்ளிவாய்க்காலில் வாழ்ந்திருந்து வெளிவந்த பொதுமக்களும் தடுத்து வைக்கப்பட்டனர். மோசமான நிலையை உடைய, சித்திரவதைகள் அதிகமாகவும் இருந்த ஒரு பரந்தவெளி முகாம் வலையமைப்பில் இவர்கள் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், இலங்கை அரசாங்கம் ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்று இந்தத் துன்பநிகழ்வை அறிவித்தது. ஒரு வெற்றியும், அதற்காகப் புதிதாக அறிவிக்கப்பட்ட பொது விடுமுறையான வெற்றிக் கொண்டாட்ட நாளும் தயாராக இருந்தது.
தென்னிலங்கையில் உள்ள சிங்களக் குடிமக்களைப் பொறுத்தவரை ஒரு கொடுங்கனவு முடிந்துவிட்டது. தற்கொலைத் தாக்குதல் குறித்து எப்போதும் இருந்த பயம் இறுதியாக நீங்கிவிட்டது. தெற்கில் இருக்கும் மக்கள் பலர் எந்த தமிழர்களையும் இந்தக் காலங்களில் நேரில் சந்தித்ததில்லை. எல்.டி.டி, அரக்கர்கள் என்றே அவர்கள் நம்பினர். தமிழ்ப்போராட்டத் தலைவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டதைக் கண்டு நிம்மதியே அடைந்தார்கள். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மிகுந்த கவனம் செலுத்தியே இறுதிப்போர் நடவடிக்கை நடத்தப்பட்டது என்ற அரசாங்கத்தின் உத்தரவாதங்களை தென்னிலங்கை மக்கள் சந்தேகிக்கவேயில்லை. போர் பற்றிய அரசின் அதிகாரபூர்வமான கதையாடலைக் கேள்விக்கு உள்ளாக்கவும் அவர்கள் விரும்பவில்லை.
ஓர் இரத்தக்களரி பற்றிய வதந்திகள்
போர் முடியும் தருவாயில் இருந்ததால், பத்திரிகையாளர்களும் சமூக உதவிப் பணியாளர்களும் போர்க்களப் பகுதிக்குள் நுழைய முடியாதநிலை ஏற்பட்டது. ஆனால் முற்றுகைப் பகுதிக்குள் செயற்படும் மருத்துவர்களால் அது இயலுமாயிருந்தது. உயிரிழப்பு எண்ணிக்கைகள் தொடர்பான தகவல்களை ரேடியோமூலம் வெளியிட அவர்களால் இயலுமாயிருந்தது.
தப்பியோடிய பொதுமக்களின் சாட்சியங்கள் மற்றும் ஐ.நா. அதிகாரியின் நேரில் கண்ட சாட்சியத்துடன் இந்த எண்ணிக்கைகள் பொருந்தி வந்தன. பொதுமக்கள்மீது கண்மூடித்தனமான குண்டுவீச்சு மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் என்பன யுத்தவிலக்கு மண்டலங்கள் குறிவைக்கப்படுவதைச் சித்திரித்தன.
பொதுமக்களின் மோசமானநிலை பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியதும் அந்தச் செய்திகளை இலங்கை கடுமையாக மறுக்கத் தொடங்கியது. இரு தரப்பினரும் செய்த துஷ்பிரயோகங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கத்திய அரசாங்கங்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அமர்வில் அழைப்புவிடுத்தன. ஆனால் 2009 மே மாதம் 27 ஆம் நாளன்று, ராஜபக்சே அரசு ஓர் இராஜதந்திர வெற்றியைப் பெற்றது. “மக்களின் விருப்பத்திற்கு எதிராகப் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான குடிமக்களை இலங்கை அரசு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்தது” என்று இலங்கை அரசு சொன்னது. மனித உரிமைகள் கவுன்சிலில் வரவேற்கப்பட்ட இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை வெற்றிகரமாக அது நிறைவேற்றியது. சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டதையும் அதற்கான பொறுப்புக்கூறலின் தேவை குறித்தும், மனித உரிமைகள் கவுன்சிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தெற்கு நோக்கிச் செல்லத் தொடங்கிய மேற்குடனான உறவு
போரின் கொடூரமான கடைசி நாட்களை, பணயக்கைதிகள் மீட்புப் பணியாக இலங்கை சித்திரித்ததை மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால் பல மேற்கத்திய அரசாங்கங்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. போருக்குப் பின்னர் மனித உரிமைகள் குறித்த இலங்கையின் கடும்போக்குப் பிடிவாதக்குணம் மேற்கத்திய நாடுகளுடனான அதன் உறவுகளை ஆழமாகப் பாதித்தது. பாரம்பரியமாக நன்கு அமைந்திருந்த அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகள் 2007 இல் சரியத் தொடங்கின. பாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கரிசனையுடன், அமெரிக்க காங்கிரஸ் பொருளாதார உதவியைக் குறைத்தது. இலங்கைக்கான இராணுவ உதவி மற்றும் ஆயுத விற்பனையை நிறுத்தியபோது, இந்தப் பாதிப்பு வெளிப்படையானது. 2010 ஆம் ஆண்டில் அமரிக்க காங்கிரஸ் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிறுத்தியது. பிரித்தானியத் தொலைக்காட்சியான ‘சேனல் 4’ இனுடைய ஆவணப்படமான “இலங்கையின் கொலைக்களங்கள்” என்பது திரையிடப்பட்டதைத் தொடர்ந்தே இப்படி நடந்தது. ஆவணப்படம் போர்க்குற்றங்களுக்கான தெளிவான ஆதாரங்களைக் காட்டியது. 2013 ஆம் ஆண்டில் மனிதாபிமான உதவி 8 மில்லியன் டொலர்கள் அளவு ஒதுக்கீட்டிலிருந்து 6 மில்லியன்களாகக் குறைக்கப்பட்டது.
முக்கிய பிற நன்கொடை நாடுகளுடனான இலங்கையின் உறவும் இதேபோல் பாதிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் ‘ஜிபிஎஸ் பிளஸ்’ சலுகையை இடைநிறுத்தியது. பல ஐரோப்பிய நாடுகள் அவற்றின் இருதரப்பு மேம்பாட்டு உதவியைக் குறைத்தன. 2009 இற்கும் 2012 இற்கும் இடையில் ‘பாரம்பரியமான மேம்பாட்டு உதவி வழங்கும் கூட்டாளிகளிடமிருந்து’ (அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, சர்வதேச மேம்பாட்டு வங்கிகள் போன்றன) வழங்கப்பட்ட தொகைகள் குறைந்துவிட்டன.
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லாததால், நடத்தப்பட்ட அட்டூழியங்களை விசாரிக்க எந்தத் தானியங்கி சர்வதேசப் பொறிமுறையும் இருக்கவில்லை.
ஒரு சர்வதேச விசாரணைக்கு பதிலாக பலதரப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன:
- நிலைமையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தல்.
- பாதுகாப்புக் கவுன்சில் ஒரு சிறப்புத் தீர்ப்பாயத்தை நிறுவுதல்.
- பாதுகாப்புக் கவுன்சில் அல்லது மனித உரிமைகள் கவுன்சில் ஒரு சர்வதேச விசாரணையை உருவாக்குதல்.
மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் காரணமாக மேற்கத்திய அரசாங்கங்கள் முன்னுரிமை வர்த்தகம் மற்றும் உதவியை வாபஸ் பெற்றதால், சீனாவுடனான இலங்கையின் நெருங்கிய உறவு வலுப்பெற்றது. இலங்கைக்கு எதிராக பாதுகாப்புக் கவுன்சிலில் நடவடிக்கை எடுக்கப்படுவதைச் சீனா தடுத்தது. இதனால் பொறுப்புக்கூறல் தொடர்பான முதன்மைக்களமாக மனித உரிமைகள் கவுன்சில் மாறியது.
அரைகுறை நடவடிக்கைகள்
அறிக்கைப் போர்கள்
போரின் இறுதிக்கட்டத்தின் போது சர்வதேச சட்டமீறல்கள் குறித்து விரிவான விவரங்களைக் கொண்ட ஓர் அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டது. “இலங்கை அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி இது. ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் இவை” என்று கூறி இலங்கை அவற்றை நிராகரித்தது.
இலங்கை திருப்பித் திருப்பி ஒரே பல்லவியையே பாடியது: அதில் ஒன்று “இலங்கையின் ஆயுதப்படைகள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும், அவர்களின் நலனைப் பாதுகாப்பதிலும் கவனமாக இருந்தன”. இரண்டாவது, “இலங்கையின் உள்நாட்டு நீதித்துறை, தாங்கள் மனித உரிமைகள் மீறலுக்கு ஆளாவதாகக் கருதுபவர்களுக்குத் தேவையான அனைத்து உரிமைகளையும் வழங்குகின்றது.”
ஆதாரங்கள் குவிந்தபோதும் இலங்கை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வருடம் கடந்தும் உள்நாட்டுப் பொறிமுறையில் பதில் எதுவும் இல்லை என்ற நிலை. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மேற்கத்திய அழுத்தத்திற்கு அடிபணிந்து இலங்கையில் பொறுப்புக்கூறல் குறித்த நிபுணர்கள் குழுவை உருவாக்கினார். LTTE இனைத் தோற்கடிப்பதற்கான இறுதி முயற்சியில், “சர்வதேச சட்டத்தினை மீறிக் கடுமையான செயல்கள் நடந்துள்ளன” என்று இறுதியில் முடிவு செய்யப்பட்டது. முழுமையான சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே, இலங்கை இதனை மறுத்தது. “ஓர் இறையாண்மை கொண்ட நாட்டின்மீது முன்னுதாரணமற்ற தேவையற்ற தலையீடு இது.” என்று இலங்கை கூறியது.
அதேநேரத்தில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (LLRC) என்ற அதன் சொந்தப் பொறிமுறையை இலங்கை உருவாக்கியது. விசாரணை தேவைப்படும் அளவிற்கு மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் எதுவும் இலங்கையில் இல்லை என்று ஆட்சியாளர்கள் கடுமையாக வலியுறுத்தியநிலையில், இந்த நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாக இருந்தது. வேறு என்ன? சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிவதாக அரசியல் எதிரிகளிடமிருந்து குற்றச்சாட்டுகளை அது எதிர்கொண்டது. ஆனால், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள ஒரு சிவில் சமூக அமைப்பின் இயக்குநர் விளக்கியதுபோல், “ஐ.நா. தனக்கு எதிராக அணிதிரட்டுவதற்கான அறிகுறிகளை இலங்கை அரசாங்கம் கண்டிருக்கிறது”. அதனால் வரக்கூடிய “போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு அஞ்சியதே, இந்தச் செயற்பாட்டிற்குக் காரணம்.”
நீதிபோன்ற எதையும் எல்.எல்.ஆர்.சி வழங்காது என்பது விரைவில் தெளிவாகியது. LLRC இன் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் சுட்டிக்காட்டியதுபோல, அதன்பங்கு “ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறையாக முன்னிறுத்தப்படவில்லை” மாறாக, “சமரசம் ஏற்படுத்துவதற்கு” என்றவகையில்தான் நிறுவப்பட்டது. 2002 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்தது பற்றி விசாரிப்பதே இதன் பணியாக இருந்தது. மீண்டும் சமூக வன்முறை நிகழாமல் இருக்கப் பரிந்துரைகளை வழங்குவதுதான் இதன் நோக்கம். அரசாங்கம் ஊகித்ததுபோல, “சர்வதேச நடவடிக்கைக்கு ஓர் எதிர்நிலையாக” இருக்கும் வகையில் இந்த உத்தரவு அமைந்தது. போர்க்குற்றங்கள் எனக் கூறப்படுவதைக் கையாள்வதற்கு போதுமான அளவுக்குக் கிட்டவாக இந்த அமைப்பு இருந்தது. சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் LLRC இன் ஆணையைப் பற்றி கடுமையாகப் பேசினர். குற்றம் சாட்டப்பட்ட, அட்டூழியங்களை விசாரிக்க அரசாங்கம் மறுத்ததற்கு ஒரு மறைமுகத்திரை அது என்றனர். பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஒருவர் கூறியதுபோல், “அவர்களின் பணி அதை மூடி மறைப்பதாகும்.”

உள்நாட்டு மற்றும் சர்வதேச சிவில் சமூகத்தைச் சேர்ந்த பலர் LLRC இன் பணிகளில் பங்கேற்க மறுத்துவிட்டனர். “போதுமான அதிகாரமின்மை, சுதந்திரத்திற்கான போதுமான உத்தரவாதங்கள் இல்லாதது மற்றும் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லாமை” பற்றிய கவலைகள் காரணமாக இப்படி மறுத்தனர். இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களிடமிருந்து சாட்சியங்களை எடுப்பதில் பதினெட்டு மாதங்களை LLRC உறுப்பினர்கள் செலவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் கூறியதைக்கேட்டு ஆணையர்கள் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. சாட்சியங்களைக் “காதுகொடுத்துக் கேட்பது மிகவும் கடினம்” என்று LLRC ஊழியர்களில் ஒருவர் கூறினார்.
LLRC அதன் அறிக்கையை 2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிட்டது. இதில் இனங்களுக்கிடையேயான உறவுகள் பற்றிய விரிவான பரிந்துரை அணுகுமுறையும் அடங்கும். இதற்குக் கொழும்பு சிவில் சமூக உறுப்பினர்கள் தங்களை “மகிழ்ச்சிக்குரிய வகையில் ஆச்சரியப்படுத்தினர்” என்று LLRC இனர் கூறினர். அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தரவுத்தளத்தை நிறுவவுவதற்கு LLRC கேட்டுக்கொண்டது.
அவர்கள் கேட்ட சாட்சியக்கதைகள் பாதுகாப்புப் படையினர் வேண்டுமென்றே செய்த செயல்களின் விளைவாகும் என்ற முடிவுவை LLRC உறுப்பினர்கள் எதிர்த்தனர். இந்த ஆணையத்தின் மிகவும் பிரபலமாக்கப்பட்ட கண்டுபிடிப்பு என்னவென்றால், இலங்கை இராணுவம் ‘யுத்த விலக்கு மண்டலத்தில் பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைக்கவில்லை” என்பதாகும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அட்டூழியங்களுக்கான பொறுப்புக்கூறல் என்பதை இது முற்றிலுமாகத் தவிர்த்தது.
விசாரணைக்கான இராணுவ நீதிமன்றம்
மார்ச் 2012 ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடர் அண்மிக்கையில் இலங்கைக்குள்ளிருந்தும், புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்தும் குரல்கள் எழுந்தன. அவர்கள் சர்வதேச விசாரணை தேவை என வாதிட்டனர். இராஜதந்திர முன்னணியில் கடுமையாக ஆட்சி பின்னுக்குத்தள்ளப்பட்டது. ஓர் இறையாண்மை கொண்ட நாடாக அதன் உரிமைகளையும் உள்நாட்டு அணுகுமுறைகளையும் மேலாதிக்கத்தையும் வலியுறுத்தியது நீர்த்துப்போனது. “எங்கள் சொந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனும் விருப்பமும் எங்களிடம் உள்ளது,” என்று வெளியுறவு அமைச்சர் கூறினார். இந்த விஷயத்தை உள்நாட்டிலேயே கையாண்டு வருவதற்கான ஆதாரமாக அரசாங்கம் ‘எல்எல்ஆர்சி’ இனைச் சுட்டிக்காட்டியது. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நெருங்க நெருங்க, அரசாங்கம் இந்த உத்தியை இரட்டிப்பாக்க முயன்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையையும் தொடர்ந்தும் மறுத்தது. அதேவேளையில், 2011 ஓகஸ்டில், “பொதுமக்கள் இறப்பு விகிதம் ஒன்றுமே இல்லை” என்ற அதன்கூற்றுத் தவறானது என முதன்முறையாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளிப்படுத்தியது.
மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ‘இராணுவ விசாரணை நீதிமன்றம்’ கூட்டப்பட்டுள்ளதாக இலங்கை அறிவிக்க, இந்த ஒப்புதல் வாக்குமூலம் உதவியது. சர்வதேச சட்டமீறல்களில் ஈடுபட்டதாக முதன்மையான ஆதாரமாகக் கருதும் எவரையும் இராணுவ நீதிமன்றம் விசாரிக்கும் என்றது. ஆனால் மனித உரிமைகள் கவுன்சில் அமர்வு, சர்வதேச விசாரணையைப் பட்டியலிடாமல் நிறைவேற்றியபோது, இராணுவ நீதிமன்ற விசாரணை என்பதும் சத்தமில்லாமல் கடையை இழுத்து மூடியது. பல மாதங்களுக்குப் பிறகு, போரின் இறுதிக்கட்டத்தின்போது எந்தவொரு பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கும் இராணுவம் பொறுப்பல்ல என்று விசாரணையில் கண்டறியப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. குறிப்பாக அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மனிதாபிமான நடவடிக்கையின் அனைத்து நிலைகளிலும், இலங்கை இராணுவம் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் போர்ச்சட்டத்தைக் கடைப்பிடித்து, நன்கு ஒழுக்கமான இராணுவப்படையாக நடந்துகொண்டது என்பதற்கான சான்றுகள் வெளிப்பட்டன.”
காணாமல் போனோருக்கான ஆணையம்
2013 மே மாததத்தில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள், இலங்கைக்கு விஜயம் செய்வார் என அறிவித்தார். 2013 நவம்பரில் காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டத்தை நடத்தும் நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டதன் விளைவாக, இலங்கையின் மனித உரிமைகள் தோல்விகள், அதிகரித்த கவனம் பெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக, அமர்வைப் புறக்கணித்த கனேடிய அரசாங்கம் மற்றும் பலர், இலங்கையின் மோசமான மனித உரிமைகள் செயற்றிறன் குறித்துக் கவனத்தை ஈர்த்தனர். போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாமையே முதன்மையான மையமாகவும், தற்போதைய துஷ்பிரயோகங்கள் பற்றிய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு துணைப்பொருளாகவும் இருந்தது. பிள்ளையின் வருகை நெருங்கி வருவதால், போர்க்காலத்தில் காணாமல் போனவர்களை விசாரிக்க ஒரு புதிய ஆணையம் உருவாக்கப்படுவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ 2013 யூலையில் அறிவித்தார்.
சர்வதேச அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இப்படி நிறுவனங்களை உருவாக்குவது இலங்கைக்கு வேலையாகப்போய்விட்டது என்று களத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். “அவை ஒரு பொய்ச் செய்தியாக, ஒரு மறைப்பாக, ஏதோ செய்யப்படுவது போன்ற தோற்றத்தைக்கொடுக்கும் ஒரு வழியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன” என்றார்கள். கமிஷன் ஒருபோதும் களத்தில் இறங்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் பலர் கருத்துத் தெரிவித்தனர். “முக்கியமான வார்த்தை ‘அறிவிக்கப்பட்டது’ என்ற சொற்தான்” என்று ஒரு நேர்காணல் செய்பவர் குறிப்பிட்டார். இன்னொருவர் இதை “CHOGM இனை நோக்கிய ஒரு சூழ்ச்சி” என நிராகரித்தார்.
போதுமான நடவடிக்கையற்ற ஐந்து ஆண்டுகள்
மேலே உள்ள விவாதத்திலிருந்து, பொறுப்புக்கூறலுக்கான வெளிப்புற அழுத்தத்தால் தூண்டப்பட்டே இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் உருவாக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. அவர்கள் அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், அவை அற்பமான சிறிய செயற்பாடுகளல்ல. இவற்றுக்கு இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க வளங்களை வாரி இறைத்தது. 2013 ஆம் ஆண்டு LLRC இற்கான செயல்திட்டத்திற்கு கிட்டத்தட்ட (1.3 பில்லியன் டொலர்) 1300 கோடி இலங்கை ரூபாய்கள் செலவாகும் என்று சொல்லப்பட்டது. இப்போதைய டொலர் மதிப்பீட்டில் ஏறக்குறைய $7.2 மில்லியன்கள் (கட்டுரை எழுதப்பட்ட ஆண்டில். இப்போது இது இன்னும் அதிகமானது). இலங்கைக்கான ஓர் ஆண்டின் ஒட்டுமொத்த வரவுசெலவான ரூ. 1.205 டிரில்லியனில், இது புறக்கணிக்கத்தக்க தொகை அல்ல. அடுத்த ஆண்டு, காணாமல் போனோர் ஆணையத்திற்காக அரசாங்கம் மேலும் 400 மில்லியன் ரூபாய்களைச் (2.6 மில்லியன் டொலர்கள்) செலவிட்டது.
மொத்தச் செலவினத்தில் ஏறக்குறைய 1 சதவீதம் என்பது ஒரு பெரிய செலவாகத் தெரியவில்லை என்றாலும், 2013 ஆம் ஆண்டில் இலங்கை தனது நீதித்துறைக்கு ரூ 5.4 பில்லியன் மட்டுமே ஒதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்கம் அதன் முழுநீதிமன்ற அமைப்பிற்கும் செலவிட்டதைவிடவும், ஒரு போலியான இடைக்கால நீதிப்பொறிமுறைக்கு மூன்றில் ஒரு பங்கை அதிகமாகச் செலவிட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்காக இலங்கை செய்த செலவுகள், தப்பித்து மீண்டு வருவதற்காக பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கு, மற்றைய நாடுகள் செலவிட்டதற்கு இணையாகவே உள்ளன. உதாரணமாக, தென்னாபிரிக்கா 1995 ஆம் ஆண்டு, மிகவும் பாராட்டப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்திற்காக $18 மில்லியனை செலவிட்டது. நாட்டின் ஒட்டுமொத்த ஆண்டுச் செலவினமான $28 பில்லியனில் 6 சதவீதத்தை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதற்கு நேர்மாறாக, இலங்கையின் பொருளாதார அளவை ஒத்ததாகவும், பட்ஜெட்டைக் கொண்டதாகவும் இருக்கும் கம்போடியா, பத்து வருடக் காலப்பகுதியில் சுமார் 18.6 மில்லியன் டொலர்களை கெமர் ரூஜ் தலைவர்களை வழக்குத் தொடரும் தீர்ப்பாயத்திற்காகச் செலவிட்டுள்ளது.
இந்த நிறுவனங்களை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அரசியல்ரீதியாகவும் விலைகளைக் கொடுத்தது என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ராஜபக்சேவின் தேர்தல் உத்தி எப்போதும் அவருக்குரிய சிங்கள – பௌத்த மண்ணின் மைந்தர் என்ற நற்சான்றிதழ்களிலிருந்து தொடங்கும். மேலும் அது, அவரது குடும்பத்தினர் வெளிப்படையாக மேலாதிக்கவாதிகள் என்பதிலும், போர்க்குணமிக்க துறவிகள் அமைப்பான பொதுபலசேனா உட்பட பிற குழுக்களுடனான உறவுகளிலும் தங்கியுள்ளது. சிங்கள – பௌத்த மேலாதிக்கவாதிகள் பொறுப்புக்கூறல் நிறுவனங்களை உருவாக்குவதை கடுமையாக எதிர்த்தனர். LLRC அறிக்கை வெளியிடப்பட்டபோது, அது எவ்வளவு பலவீனமாக இருந்தாலும்கூட, அவர்கள் போர் வீரர்களாகக் கருதியவர்கள்மீது தாக்கம் வருகிறது என்ற அடிப்படையில் எதிர்த்தனர். கடுமையான தேசிய தேசபக்த இயக்கத்தின் பிரதிநிதிகள், ஆணையர்களின் தகுதி குறித்துப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினர். துறவிகள் தலைமையிலான கும்பல்கள் அதை செயற்படுத்துவது குறித்த பட்டறைகளுக்கு இடையூறு விளைவித்தன. ஒரு முக்கிய முன்னாள் ஆதரவாளர், “அரசாங்கம் மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குவது வெளிநாட்டவர்களின் காலடியில் விழுவது” என்று விவரித்தார். பரவலாகக் கருதப்படும் ஒரு கருத்தை வெளிப்படுத்துவதென்றால், அரசாங்கம் மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குவதை “வெளிநாட்டவர்களின் காலடியில் விழுவது” என்றும் “(இலங்கையை) பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றப் போராடியவர்களைக் காட்டிக்கொடுப்பது” என்றும் விவரித்தார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து உண்மையான விசாரணை எதுவும் நடத்தப்படாததை, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய அரசாங்கங்கள் அனைத்தும் எடுத்துக்காட்டின. சர்வதேச சிவில் சமூகத்திடமிருந்து கிடைத்த வரவேற்பு இன்னும் முக்கியமானதாக இருந்தது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், “அறிக்கை, அரசாங்கப் படைகளின் மோசமான துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்ததுடன், நீண்டகாலப் பரிந்துரைகளை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து, பொறுப்புக்கூறலை மேம்படுத்தத் தவறிவிட்டது.” என்றது. “இலங்கையில் தோல்வியுற்ற உள்நாட்டு வழிமுறைகளின் நீண்டவரிசையில் சமீபத்தில் வந்த புதிய ஒன்று” என்று சர்வதேச மன்னிப்புச் சபை இதை விவரித்தது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தபோது, ஆணையத்தின் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டபோது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலாளர் நிஷா பிஸ்வால், “நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறித்து முன்னேற்றம் இல்லாததை” கண்டித்தார். சர்வதேச அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இலங்கை உருவாக்கிய நிறுவனங்கள், பொறுப்புக்கூறலைக் கோரும் அவர்களைத் திருப்திப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வியடைந்தன என்பதை இந்த எதிர்வினைகள் காட்டின. மேற்கத்திய நாடுகளிலும் சர்வதேச மனித உரிமைகள் சமூகத்திலும் விமர்சகர்களை மௌனமாக்குவதே இந்த அரைகுறை மனித உரிமை அமைப்புகளை அமைப்பதன் குறிக்கோளாக இருந்ததால்தான், அவை தோல்வியடைந்தன. ஆனால், பின்வரும் அடுத்தபகுதியில் காட்டுவதுபோல், இலங்கையின் நடவடிக்கைகள் மற்றைய இடங்களில் மிகவும் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டன.
மூன்றாம் தரப்புப் பார்வையாளர்களுக்காக விளையாட்டு
பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச அரசியல்
போரின் கடைசிக்கட்டங்களில் முக்கியமான ஆயுதங்களையும் ஆதரவையும் வழங்கிய சீனா, 2009 ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் மிகப்பெரிய, தனித்த உதவி செய்யும் நன்கொடையாளராக மாறியது. வாக்களித்த மொத்த $2.2 பில்லியனில் $1.2 பில்லியனை அந்த ஆண்டுக்குள்ளேயே வழங்கியது. இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹன்ன, நியூயோர்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியதுபோல, “இலங்கையின் ‘பாரம்பரிய மேற்கத்திய நன்கொடையாளர்கள்’ சீனாவின் இத்தகைய நன்கொடையால் ஒரு மூலைக்கு ஒதுக்கப்பட்டனர்”. மேற்கத்திய நாடுகளுடனான அதன் இருதரப்பு உறவுகளைப் போலல்லாமல், சீன உதவி மற்றும் உட்கட்டமைப்புக் கடன்கள் எந்தவகை நிர்வாக அல்லது சீர்திருத்த நிபந்தனைகளும் இணைக்கப்படாமல் வந்தன என்று ராஜபக்ச ஆட்சி கருதியது. கோஹன்ன, “சீனப்பணம் விரும்பத்தக்கது, ஏனெனில் ஆசியர்கள் ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்க மாட்டார்கள்” என்றார். சீனாவை நோக்கிய இலங்கையின் திருப்பம் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பரந்த பிராந்தியல் போட்டி இயக்கவியலிலும் பங்களித்தது. இந்தியாவுடனான பாரம்பரியமான நெருங்கிய உறவு, போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் விரிசல் அடைந்தது. மனித உரிமைகளுக்காக இந்தியா வாதிடுவதும், இலங்கைத் தமிழர்களுக்கான சுயாட்சியை அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம். தமிழர் பிரச்சினைகளில் இந்தியாவின் அழுத்தத்திற்கு ராஜபக்சே தனது எதிர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தனது சிங்கள – பௌத்த தேசியவாத வாக்காளர்களிடையே ஆதரவைத் திரட்டினார். அதேநேரத்தில், அவர் தனது தெற்கு ஆதரவுத்தளத்தில் பாரிய உட்கட்டமைப்புப் திட்டங்களுக்கு நிதியளிக்க சீனக் கடன்களைப் பயன்படுத்தினார். இதில் அவரது சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் ஒரு விமான நிலையம் மற்றும் ஆழ்கடல் துறைமுகம் என்பன அடங்கும்.
அந்த ஆட்சி சீனாவுடனான உறவை விடாமுயற்சியுடன் வளர்த்துக்கொண்டது. எடுத்துக்காட்டாக, 2010 ஆம் ஆண்டு சீன எதிர்ப்பாளர் லியு சியாபாவோவுக்கான அமைதிக்கான நோபல் பரிசு விழாவை இலங்கை புறக்கணித்தது. 2011 ஆம் ஆண்டில், ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை வெளிவந்த பிறகு, சீன வெளியுறவு அமைச்சர் இலங்கையின் சார்பாகப் பேசினார். இந்த விஷயத்தை உள்நாட்டில் தீர்த்து வைக்கும் இலங்கையின் திறனில் சீனா ‘நம்பிக்கை’ கொண்டுள்ளது என்றார். ‘பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை’ எடுப்பதைத் தவிர்க்குமாறு சர்வதேச சமூகத்திடம் சீனா அழைப்புவிடுக்கிறது என்றார்.
சீனாவின் உறுதியான இலங்கைக்கான ஆதரவும், மேற்கத்திய நன்கொடையாளர்களைச் சார்ந்திருப்பது குறைந்து வருவதும், பொறுப்புக்கூறல் அழுத்தத்திலிருந்து இலங்கைக்கு ஓரளவு நிம்மதியைத் தந்தன. போரின் கடைசி மாதங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் அல்லாத மக்களின் இறப்புகள், பொதுமக்களுக்கு எதிரான வன்முறையாகக் கருதப்பட்டாலும், அதற்கான சர்வதேச எதிர்வினை ஒப்பீட்டளவில் அமைதியாக்கப்பட்டது. இலங்கை LTTE இற்கு எதிரான போராட்டத்தை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக வடிவமைத்ததன் விளைவாக அது இருக்கலாம். போருக்குப் பிந்தைய காலத்தில், மேற்கத்திய அரசாங்கங்கள் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படாமல் ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது குறித்து குரல் கொடுத்து வந்தநிலையில், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் பொறுப்பை அவர்கள் தாங்களாகவே ஏற்கத்தயங்கினர். 2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கோடிட்டுக்காட்டினார்: “இலங்கையர்கள் இந்தப் பிரச்சினைகளைத் தாங்களாகவே எடுத்துக்கொண்டு முழுமையாகத் தீர்வு காண்பது நல்லது என்று நாங்கள் நீண்டகாலமாகச் சொல்லிவருகிறோம்… எனவே அவர்கள் இனி என்ன செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.”