உதவி : ஜீவராசா டிலக்ஷனா
1921 ஆம் ஆண்டு ஆரம்பித்த இக்காலகட்டம் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெறும்வரை நடைமுறையில் இருந்தது எனக் கூறலாம். இக்காலகட்டத்துடன் தமிழின அரசியல் என்பது ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் இக்காலகட்டத்து தமிழர் அரசியல் என்பது இலங்கை என்கின்ற ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குள் சமவாய்ப்பைக் கோரும் அரசியலாகவே இருந்தது. இதை ஆரம்பித்து வைத்தவர் சேர். பொன்னம்பலம் அருணாசலமாவார். ஆனாலும் இக்காலகட்ட அரசியலை வளர்த்து எடுத்தவராக ஜீ.ஜீ பொன்னம்பலம் விளங்குகின்றார்.
தமிழர் மகாசபையின் தோற்றம்
இலங்கைத் தேசியக் காங்கிரஸில் இருந்து வெளியேறிய சேர். பொன்னம்பலம் அருணாசலம் 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தமிழர் மகாசபை எனும் இனரீதியான அரசியல் இயக்கத்தை யாழ்ப்பாணத்தில் உருவாக்கினார். இதன் உருவாக்கத்தின்போது தமிழ் அகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இலங்கைத் தீவில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களையும் இணைத்த அரசியலாகவே இக்காலகட்ட அரசியல் இருந்தது. 1924 ஆம் ஆண்டு பொன்னம்பலம் அருணாசலம்; மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபாட்டுக்கு சென்றபோது அங்கு மாரடைப்பினால் மரணமடைந்தார். இதனால் இக்காலகட்ட அரசியலை இவரால் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. முன்னரே கூறியதுபோல ஜீ. ஜீ பொன்னம்பலம் இதனை வளர்த்து எடுத்தார். அவரது ‘50 : 50’ கோரிக்கை இதன் அடிப்படையிலேயே எழுச்சியடைந்தது. இதன் அர்த்தம் அனைத்து விவகாரங்களிலும் 50 சதவீதம் பெரும்பான்மை இனத்திற்கும் மீதி 50 சதவீதம் ஏனைய இனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். பெரும்பான்மை இனம் ஏனைய இனங்களுக்கு எதிராகச் செயற்படக்கூடாது என்பதற்காகவே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் – 1924
1924 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் முன்னோடியாக ஹண்டி பேரின்பநாயகம் கருதப்படுகின்றார். இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் வேண்டுமென்ற கோரிக்கையை இவ்வமைப்பு முன்வைத்திருந்தது. தமிழின அரசியலில் இவ்வமைப்பு பெரிய அக்கறை காட்டவில்லை. ஆனாலும் தமிழ்ச்சூழலில் சமூக மாற்ற அரசியலை இவர்களே ஆரம்பித்து வைத்தனர். குறிப்பாக, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியத் தேசிய காங்கிரஸின் அரசியலினாலும், போராட்டங்களினாலும் கவரப்பட்டவர்களாக இருந்தனர். இந்தியத் தேசிய காங்கிரஸின் இடதுசாரிப் பிரிவுடன் இவர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவர்களை, யாழ்ப்பாணத்திற்கு அழைத்து பிரசாரக் கூட்டங்களை நடத்தினர். இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு போன்ற இந்தியத் தேசிய தலைவர்கள், இவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை வந்து யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்றினர்.

மனிங் டிவென்சயர் அரசியல் சீர்திருத்தம் – 1924
இவ் அரசியல் சீர்திருத்தத்தின்படி சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 49 ஆக காணப்பட்டது. இதில் 37 பேர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாகவும், 12 பேர் உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களாகவும் விளங்கினர். உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களில் 23 பேர் பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்பட்டனர். சிங்கள மக்களிலிருந்து 16 பேரும், தமிழ் மக்களிலிருந்து 7 பேரும் தெரிவு செய்யப்படக்கூடியதாக இப்பிரதிநிதித்துவம் ஒழுங்கமைக்கப்பட்டது. ஆறு பேர் இனரீதியாகத் தேர்தலின்மூலம் தெரிவு செய்யப்பட்டனர். ஐரோப்பியர் – 3, பறங்கியர் – 2, மேல் மாகாணத் தமிழர் – 1 என்ற வகையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்தவகையில் மேல் மாகாணத் தமிழர் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் அருணாசலம் மகாதேவா ஆவார் .
கண்டிய தேசிய அவையின் சமஸ்டிக் கோரிக்கை
கண்டிய தேசிய அவை 1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கரையோரச் சிங்கள மக்களின் ஆதிக்கம் கண்டியப் பிரதேசத்தில் வளரக்கூடாது என்பதற்காகவே இவ்வமைப்புத் தோற்றம் பெற்றது. இது இலங்கையில் முதன்முதலாக சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இவ்வமைப்பின் சமஸ்டிக் கோரிக்கை இலங்கையானது கரையோரப்பகுதி, கண்டியப்பகுதி, வடக்கு – கிழக்குப் பகுதி என மூன்று சமஸ்டிப் பிரதேசங்களை உருவாக்க வேண்டும் என்றும், அம்மூன்றையும் இணைத்து ஒரு மத்திய அரசை உருவாக்க வேண்டும் என்றும் இருந்தது.
1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபோது டொனமூர் விசாரணைக்குழு முன்னிலையில் சமஸ்டிக் கோரிக்கையை இவ்வமைப்பு முன்வைத்தது. இக்கோரிக்கையைப் பிரசாரம் செய்வதற்காக யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கூட்டத்தை நடத்தினர். ஆனால் தமிழ்மக்கள் இவர்களது சமஸ்டிக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. இந்தச் சமஸ்டிக் கோரிக்கையின் பிரதான ஆதரவாளராக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா விளங்கினார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சமஸ்டிக் கோரிக்கையை ஆதரித்து இவர் உரையாற்றினார்.
சர்வஜன வாக்குரிமையும் மலையக மக்களும்
டொனமூர் யாப்பின்கீழ் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோது, மலையக மக்களும் வாக்குரிமை பெற்றுவிடுவார்கள் என்பதற்காக சிங்களத் தலைவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பான விவாதம் சட்டசபையில் இடம்பெற்ற போது டி.எஸ். சேனநாயக்கா “இந்தியர்களுக்கு ஒரு பெரிய நாடு உள்ளது. எங்களுக்கு இச்சிறுதுண்டு நிலமே உள்ளது” எனக் குறிப்பிட்டார். பிரான்சிஸ் மொலமூறே “பழைய காலத்தில் இலங்கையை லிப்டனின் தோட்டம் என்றனர். எதிர்காலத்தில் இலங்கையை இந்திய ஆலமரத் தோட்டம் என குறிப்பிடக்கூடும்” என்றார். சி.டபிள்யூ. கன்னங்கரா “இந்தியரின் வாக்குரிமையை எதிர்க்காதோர் துரோகிகள்” என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். இறுதியில், நாட்டில் நிலையான அக்கறை உடையோருக்கு அல்லது நாட்டில் நிலையாக வசிப்போருக்கே வாக்குரிமை என டொனமூர் குழுவினர் சிபாரிசு செய்தனர்.
1931 ஆம் ஆண்டு தேர்தலில் மலையக மக்களிலிருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டனர். ஹட்டன் தேர்தல் தொகுதியில் இருந்து பெரிசுந்தரமும், தலவாக்கலை தேர்தல் தொகுதியில் இருந்து எஸ்.பி. வைத்திலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர்.
டொனமூர் அரசியல் யாப்பு – 1931
1927 ஆம் ஆண்டு டொனமூர் குழுவினர் ஓர் அரசியல் யாப்பைச் சிபாரிசு செய்ய இலங்கை வந்தனர். அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு டொனமூர் அரசியல் யாப்பு என்ற பெயரில் 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை நடைமுறையில் இருந்தது.
டொனமூர் குழுவினரின் மத்தியில், இலங்கையில் செயற்பட்ட அமைப்புகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன. சிங்கள மக்களின் பிரதிநிதிகள் பிரித்தானிய மாதிரியிலான அரசாங்கம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். கண்டியப் பிரதேச மக்களின் பிரதிநிதிகள் முன்னரே கூறியதுபோல சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தனர். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கூறினர். ஆனாலும் தமிழ் மக்கள் மத்தியில் செயற்பட்ட யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பூரண சுதந்திரம் என்ற கோரிக்கையை முன்வைத்தது. டொனமூர் குழுவினர் இலங்கைச் சமூகம் ஐக்கியப்பட்ட சமூகமாக இல்லாததனாலும், இலங்கையர்கள் அரசியல் நிர்வாகத்தில் பயிற்சி குறைவுடையவர்களாக இருந்ததனாலும், அரசியல் கட்சிமுறை வளர்ச்சி அடையாமல் இருந்ததனாலும், அரைப் பொறுப்பாட்சி முறையையும், அனைத்துத் தரப்பும் பங்கேற்கக்கூடிய நிர்வாகக்குழு முறையையும் சிபாரிசு செய்தனர். நியமன உறுப்பினர்களும், தேசாதிபதியின் அதிகாரங்களும், நிர்வாகக்குழு முறையும், பொதுச்சேவை ஆணைக்குழு போன்ற நிறுவனங்களும் தமிழர்களின் அதிருப்தியைப் போக்குவதில் பங்காற்றும் எனவும் குறிப்பிட்டனர்.
சேர். பொன்னம்பலம் இராமநாதன் டொனமூர் அரசியல் யாப்பைக் கடுமையாக எதிர்த்தார். “டொனமூர் என்றால், தமிழர் இல்லை” என்று குறிப்பிட்டார். 1927 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் இதனைக் கடுமையாக எதிர்த்தார். டொனமூர் அரசியல் யாப்பு ஏற்கனவே கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தால் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி நிர்வாகக்கட்டமைப்பிடம் பெரும்பான்மை ஜனநாயகம் என்ற அடிப்படையில் அதிகாரத்தை ஒப்படைத்தது. முதன்முதலாக குறைந்த மட்டத்திலாவது பெரும்பான்மை இனம் அதிகாரத்தைக் கையில் எடுக்கும்நிலை உருவானது. சிங்கள – பௌத்தக் கருத்தியல் வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்ததால், ஏனைய இனங்களை அதிகாரக் கட்டமைப்பில் இருந்து விலக்குவதாகவும், அவர்களை ஒடுக்குவதாகவும் ஆட்சிமுறை வளரத் தொடங்கியது.
1833 ஆம் ஆண்டு கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புவரை, இனப்பிரச்சினைக்கு தீர்வாக இனவாரிப் பிரதிநிதித்துவ முறையையே ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முன்வைத்தனர். 1921 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையினால் பிரதிநிதித்துவச் சமநிலை குழம்பியது. 13 சிங்களப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, 3 தமிழ்ப் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட்டனர். எனினும் ஆட்சி அதிகாரம் முழுமையாக ஆங்கிலேயரிடம் இருந்தமையினால் ஆபத்துகளைத் தொட்டுணரக்கூடிய நிலை இருக்கவில்லை. 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புடன் பிரதிநிதித்துவச் சமநிலை குலைவுடன், கூடவே பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் இருந்தமையினால், புறக்கணிப்பைத் தொட்டுணரக்கூடிய நிலை உருவானது.
இதன் அடிப்படையில் தமிழர்கள் கடும் அதிருப்தியைத் தெரிவித்தனர். நியமன உறுப்பினர்களும், தேசாதிபதியின் அதிகாரங்களும், நிர்வாகக்குழுமுறையும், பொதுச்சேவை ஆணைக்குழு போன்ற நிறுவனங்களும், சிறுபான்மையோரின் காப்பீடாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. 1931 இற்குப் பின்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக மேற்கூறிய பாதுகாப்பு ஏற்பாடுகளே முன்வைக்கப்பட்டன. இராமநாதன், டொனமூர் திட்டத்தை, “தமிழ் மக்களின் தூக்குக் கயிறு” எனக் குறிப்பிட்டார். சட்டசபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஒரு வாக்கினால் இவ் அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டது. அந்த ஒரு வாக்கினை மட்டக்களப்பைச் சேர்ந்த ஈ.ஆர். தம்பிமுத்து என்பவரே வழங்கியிருந்தார்.
யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் தேர்தல் பகிஸ்கரிப்பு
டொனமூர் அரசியல் யாப்பின்கீழ் முதலாவது தேர்தல் 1931 ஜூன் மாதம் இடம்பெற்றது. இத்தேர்தலை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பகிஸ்கரித்தது. பகிஸ்கரிப்புக்கான காரணமாக, டொனமூர் அரசியல் யாப்பு இலங்கைக்கு பூரண சுதந்திரத்தை வழங்கவில்லை என்று கூறப்பட்டது. இப்பகிஸ்கரிப்புப் போராட்டத்திற்கு சிங்கள அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்குவதாகக் கூறியபோதும், பின்னர் பின்வாங்கினர். இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது. 1927 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் டொனமூர் அரசியல் யாப்பை நிராகரித்த போதும், தேர்தல் பகிஸ்கரிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட முடியாமையினால் மன்னார் – முல்லைத்தீவு தொகுதியில் போட்டியிட்டு எஸ்.என். ஆனந்தன் என்பவரிடம் தோல்வியடைந்தார்.
1934 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இடைத்தேர்தல் இடம்பெற்றது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். இவ்வெற்றியுடன் தமிழ் அரசியலில் அவரது தலைமைத்துவம் உறுதியாகிவிட்டது. அதேவேளை காங்கேசன்துறை தொகுதியில் இருந்து நடேசன் என்பவரும், யாழ்ப்பாணத் தொகுதியில் அருணாசலம் மகாதேவாவும், ஊர்காவற்துறைத் தொகுதியில் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளையும், மன்னார் – முல்லைத்தீவுத் தொகுதியில் எஸ்.என். ஆனந்தனும், திருகோணமலைத் தொகுதியில் எம்.எம். சுப்பிரமணியமும், மட்டக்களப்புத் தொகுதியில் ஈ.ஆர். தம்பிமுத்துவும் தெரிவு செய்யப்பட்டனர்.
சிங்கள மகாசபை – 1934
19.05.1934 ஆம் ஆண்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ‘பௌத்த மந்திரய’வில் வைத்து ‘சிங்கள மகாசபை’ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மகாகவி ஆனந்த ராஜகருணா, குமாரதுங்க முனிதாச, டீ.எம். ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் தகப்பனார்), பியதாச சிறிசேன போன்றோர் சிங்கள மகாசபையின் ஸ்தாபகர்களாகக் காணப்பட்டனர். சிங்கள மகாசபை என்கிற பெயர் பண்டாரநாயக்கவால் வைக்கப்பட்டதல்ல; வேறு இனத்தவர்களையும் இத்துடன் இணைத்துக்கொள்ளும் நோக்குடன் அவர் ‘சுவதேஷிய மகாசபா’ (Swadeshiya Maha Sabha – சுவதேசிய மகாசபை) என்கிற பெயரையே வைக்க விரும்பினார். ஆனால் பிரபல சிங்கள இலக்கியப் பிரமுகரான குமாரதுங்க முனிதாச அந்தப் பரிந்துரையைத் தோற்கடித்தார். பிளவுபட்டிருக்கிற சிங்கள இனத்தை ஒன்று சேர்த்து தேசாபிமானத்தைக் கட்டியெழுப்பி தேசத்தின் சுதந்திரத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதே இதனை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது. நாட்டுக்கு சிங்கள மகாசபையின் அவசியம் என்ன என்பது குறித்த பண்டாரநாயக்கவின் விளக்கம், 10.05.1934 அன்று, ‘லக்மின’ பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
சிங்கள மகாசபையினர் மலையகத் தோட்டத் தொழிலாளார்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக உள்நாட்டில் அவர்களுக்கு உரிமைகள் வழங்குவதை எதிர்த்ததுடன், அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்கள் என்கிற நிலைப்பாட்டில் இருந்தனர்.
லங்கா சமசமாஜக் கட்சியின் தோற்றம் – 1935
1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதலாவது அரசியல் கட்சியாகவும், முதலாவது இடதுசாரிக் கட்சியாகவும் லங்கா சமசமாஜக் கட்சி தோற்றம் பெற்றது. சூரியமல் இயக்கம், வெள்ளவத்தை நெசவாளர் போராட்டம், மலேரியா நிவாரணச் சேவை என்பன லங்கா சமசமாஜக் கட்சி தோற்றம் பெறுவதற்கு காரணமாக விளங்கின. இவ் இடதுசாரி இயக்கம் தமிழ் மக்களின் நலன்கள்மீதும், மலையக மக்களின் நலன்கள்மீதும் அக்கறைகொண்ட அமைப்பாக விளங்கியது. ஆரம்பத்தில் கட்சி மூன்று இலக்குகளைப் பிரதானமாகக் கொண்டிருந்தது. பூரண சுதந்திரத்தை அடைவது, உற்பத்தி விநியோகப் பரிவர்த்தனை சாதனங்களைத் தேசியமாக்குவது, வர்க்க – சாதி – இன – சமய ஏற்றத்தாழ்வுகள் காரணமாகத் தோன்றும் சமூக – பொருளாதாரப் பிரச்சினைகளை ஒழித்துக்கட்டுவது என்பவையே அவையாகும். இடதுசாரி இயக்கத்தினர், இந்தியத் தேசிய காங்கிரஸ் இயக்கத்தினரினால் கவரப்பட்டவர்களாக விளங்கியமையினால், இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர்களை இலங்கைக்கு அழைத்து தென்னிலங்கையில் கூட்டங்களை நடத்தினார். மிக நீண்டகாலம் ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றவர்களாகவும் அவற்றிற்குக் குரல் கொடுப்பவர்களாகவும் செயற்பட்டனர்.
1936 ஆம் ஆண்டுத் தேர்தலும் தனிச்சிங்கள மந்திரி சபையும்
1936 ஆம் ஆண்டுத் தேர்தலில் பின்னர் மந்திரிசபை அமைக்கப்பட்டபோது அனைவரும் சிங்களவர்களாகவே இருந்தனர். அது தனிச்சிங்கள மந்திரி சபையாகவே இருந்தது. இவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஜீ.ஜீ. பொன்னம்பலம் ‘50 : 50’ கோரிக்கையை முன்வைத்தார். இதன் பின்னர் ‘50 : 50’ கோரிக்கை ஓர் அரசியல் இயக்கமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்தேர்தலின் பின்னர் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவினால் சேர். வைத்திலிங்கம் துரைசாமி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின்போது சமநிலை காணப்பட்டது. ஆனால் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரான டாக்டர் என்.எம். பெரேராவின் முயற்சியினால் அபயகுணசேகர என்ற உறுப்பினர் சேர். வைத்திலிங்கம் துரைசாமிக்கு ஆதரவாக வாக்களித்தார்.

1942 ஆம் ஆண்டு ரி.டி. ஜெயதிலகவின் உள்நாட்டு மந்திரிப்பதவி வெற்றிடமாக, அவ்விடத்திற்கு அருணாசலம் மகாதேவா அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். அமைச்சர் பதவியைத் தொடர்ந்து அருணாசலம் மகாதேவா சிங்களத் தலைவர்களுடன் ஒத்துப்போக முனைந்தார். ஆனால் ஜீ.ஜீ. பொன்னம்பலம் சிங்களத் தலைவர்களிடமிருந்து விலகியே இருந்தார். தமிழ் அரசியலில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் செயற்பாடு மேலும் வளர்ச்சிபெற ஆரம்பித்தது. டொனமூர் காலத்தில் இலங்கையில் வாழ்ந்த, குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினருக்கு எதிராகப் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1935 ஆம் ஆண்டின் 19 ஆவது சட்டமாகிய காணி அபிவிருத்திச் சட்டம், 1940 ஆம் ஆண்டின் 24 ஆவது சட்டமாகிய மீன்பிடிச் சட்டம், 1942 ஆம் ஆண்டின் 47 ஆவது சட்டமாகிய பேருந்து சேவை அனுமதிப்பத்திரச் சட்டம் என்பன அதில் முக்கியமானவையாகும்.
இவற்றில் முதலாவது சட்டம் 1927 ஆம் ஆண்டின் நில ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளுக்குச் சட்ட உருக்கொடுக்கும் முகமாக ஆக்கப்பட்டதொன்றாகும். அதன் பிரதான நோக்கம் நிலமற்ற குடியான்களுக்கும், மத்திய வகுப்பினருக்கும் காணிகளைப் பங்கிட்டுக் கொடுப்பதாகும்.
இரண்டாவது சட்டமாகிய மீன்பிடிச்சட்டம் இலங்கைக் கடற்பிராந்தியத்தில் இலங்கையர் அல்லாதோர் மீன்பிடிக்க விரும்பினால், அதற்குரிய அனுமதிப்பத்திரத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென விதித்தது. இதன் இலக்கு இந்திய சமூகத்தவர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதினின்று தடுப்பதாகவே இருந்தது.
மறுபுறம் பேருந்து சேவை அனுமதிப்பத்திரச் சட்டம், பேருந்து சேவையை நடத்துவதில் இலங்கையருக்கு முன்னுரிமை வழங்க முன்வந்தது. இந்தச் சட்டங்கள் இந்தியருக்கு எதிரானவை என்பது நேரடியாக எடுத்துக்கூறப்படாத போதும், நடைமுறையில் அவை இலங்கையிலிருந்த இந்திய வம்சாவளியினரை நாட்டின் பொருளாதார அலுவல்கள் சிலவற்றிலிருந்து ஒதுக்கி, அந்த வாய்ப்புகளை இலங்கையர்பால் திருப்பிவிட முனைந்தன என்பதில் சந்தேகமில்லை.
இலங்கைப் பிரஜைகள் அல்லாதவர்கள் இத்தொழில்களில் ஈடுபட அனுமதிப்பத்திரம் மறுக்கப்பட்டது. அதேவேளை, இக்காலங்களில் அரச ஊழியர்களாக இந்திய வம்சாவளி மலையக இனத்தவர்கள் பலர் இருந்தனர். 1939 ஆம் ஆண்டு போக்குவரத்து அமைச்சராக இருந்த சேர்.ஜோன். கொத்தலாவல, ஒரே நாளில் சுற்று நிரூபணம் ஒன்றைக் கொண்டுவந்து, அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றிய இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் வேலையிலிருந்து நீக்கினார். இதனால் அதிருப்தி அடைந்த நகர்ப்புறங்களில் செயற்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் அமைப்புகள், இந்தியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய மகாத்மா காந்தியிடம் இப்பாதிப்புப் பற்றி முறையிட்டனர். காந்தி இவ்விவகாரம் தொடர்பாக இலங்கையின் தலைவர்களோடு பேசித் தீர்த்து வைக்குமாறு ஜவஹர்லால் நேருவை இலங்கைக்கு அனுப்பினார். நேரு இலங்கைத் தலைவர்களுடன் பேசியபோதும், இலங்கைத் தலைவர்கள் எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை. இதன்பின்னர் நேருவின் ஆலோசனையின் பெயரில் 1939 ஆம் ஆண்டு இலங்கை – இந்தியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதுவே இந்திய வம்சாவளியினர் மத்தியில் உருவாக்கப்பட்ட முதலாவது அரசியல் இயக்கமாகும்.

1940 ஆம் ஆண்டு அப்புத்தளை கதிரேசன் கோயிலில் இலங்கை – இந்தியக் காங்கிரஸ் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. இது, 1950களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1940களின் பிற்பகுதியில் சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை – இந்தியக் காங்கிரஸின் தலைவராகப் பதவியேற்றார். இறக்கும்வரை அவரே அதன் தலைவராக விளங்கினார்.
கிராம சபைகளும் மலையக மக்களும்
டொனமூர் யாப்பு சில கட்டுப்பாடுகளுடன் மலையக மக்களுக்கு வாக்குரிமையை வழங்கியது. தம்மைப் பதிவுசெய்து வாக்களிப்பதில் மலையக மக்கள் வலுவான அக்கறை காட்டினர். இது சிங்கள அரசியல் தலைவர்களிடையே அச்சத்தைக் கொண்டுவந்தது. அவர்கள் உள்ளூராட்சிச் சபைகளில் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முனைந்தனர்.
1889 ஆண்டின் கிராமிய சபைச் சட்டத்தின்படி ஐரோப்பியர், பறங்கியர், இந்தியர் என்போருக்கு கிராமசபைகளில் பங்குபற்றும் உரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் கிராமிய வாழ்க்கையுடன் இணைந்த பகுதியினர் அல்லர் என இதற்குக் காரணம் கூறப்பட்டது.
1937 ஆம் ஆண்டு, கிராமப்பகுதிகளில் அமைந்திருக்கும் தோட்டங்களுக்கு வரி அறவிடுவது என்றும், ஐரோப்பியருக்கும் பறங்கியருக்கும் கிராமசபை உறுப்பினர் உரிமை வழங்குவதென்றும் கிராமசபைச் சட்டம் திருத்தப்பட்டது. இந்திய வம்சாவளியினரான மலையக மக்களுக்கு அவ்வுரிமை வழங்கப்படவில்லை. இச்சட்டத்திற்கு இலங்கையிலிருந்த இந்தியச் சங்கங்கள் பல எதிர்ப்புத் தெரிவித்தன. “இச்சட்டம் இன வேறுபாடு காட்டலின் அடிப்படையில் அமைந்தது” என இந்திய அரசாங்கமும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதன் காரணமாக பெருந்தோட்டத்துறையில் பணிபுரியும் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிராமசபை உறுப்பினர் உரிமையை மறுக்கும் இன்னொரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தோட்டங்களில் சிங்களத் தொழிலாளர்கள் மிகக்குறைவாக இருந்ததனால் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரானதாகவே இச்சட்டம் அமைந்தது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி – 1943
லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து எஸ்.ஏ. விக்ரமசிங்க தலைமையில் வெளியேறிய குழுவினர், 1943 ஆம் ஆண்டு ஜூலை 3 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். சோவியத் யூனியனின் தலைவர்களில் ஒருவரான லியோன் ரொஸ்கிக்கும், சோவியத் யூனியனின் அதிபராக இருந்த ஸ்டாலினிற்கும் இடையே ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகளே கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திற்குக் காரணங்களாக அமைந்தன. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது மாநாட்டில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொண்டதுடன் அதன் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொண்டது.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 1944
1944 ஆம் ஆண்டு சோல்பரி குழுவினர் இலங்கைக்கென ஒரு புதிய அரசியல் யாப்பை சிபாரிசு செய்வதற்காக இலங்கை வந்தனர். இச்சோல்பரிக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி 1944 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக ஜீ.ஜீ. பொன்னம்பலம் தெரிவு செய்யப்பட்டார். சோல்பரிக் குழுவினர் முன்னிலையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முன்வைத்தது. இதன் நோக்கம், பெரும்பான்மைச் சமூகம் ஏனைய சமூக நலன்களுக்கு எதிராகச் செயற்படாதவாறு சமவாய்ப்புகளைக் கோருவதாக இருந்தது.
போல்சேவிக் லெனினிசக் கட்சி – 1945
1945 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய கொல்வின் ஆர்.டி. சில்வா, அக்கட்சியில் இருந்து வெளியேறி போல்சேவிக் லெனினிசக் கட்சியை உருவாக்கினர. இக்கட்சி தமிழ்மக்கள் விவகாரங்களில் வலுவான அக்கறையைக் காட்டிய கட்சியாக விளங்கியது.
ஐக்கிய தேசியக் கட்சி – 1946
சோல்பரி அரசியல் யாப்பு, பாராளுமன்ற அரசாங்கமுறையைச் சிபாரிசு செய்தது. இவ்வரசாங்கமுறைப்படி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, இலங்கையின் பிரதான இயக்கமாக விளங்கிய இலங்கைத் தேசிய காங்கிரஸ், எஸ்.டபுள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் உருவாக்கப்பட்ட சிங்கள மகாசபை, முஸ்லிம் மக்கள் நலன்களைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கின.
டி.எஸ். சேனநாயக்கா இக்கட்சியின் தலைவராக விளங்கினார். 1947 ஆம் ஆண்டு தேர்தலின்போது இக்கட்சி ஏனைய சிறு கட்சிகளுடனும், சுயேட்சை உறுப்பினர்களுடனும் கூட்டுச்சேர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. டி.எஸ் சேனாநாயக்கா இலங்கையின் முதலாவது பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இதன் உபதலைவர்களாக எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, சேர். ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, ரி.பி. ஜாயா, அருணாசலம் மகாதேவா, எஸ். நடேசன் என்போரும்; செயலாளராக எச்.டபுள்யூ. அமரசூரியவும்; பொருளாளர்களாக ஜே.ஆர். ஜெயவர்த்தன, ராசிக் பரீத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
சோல்பரி அரசியல் யாப்பு – 1947
சோல்பரி அரசியல் யாப்பு 1947 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு அமலுக்கு வரும்வரை நடைமுறையில் இருந்தது. இதில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த இனங்களைப் பாதுகாக்கவென சிறுபான்மையோர் பொதியொன்று உருவாக்கப்பட்டது. இதில் சிறுபான்மையோர் காப்பீடுகளாக, பின்வருவன கொள்ளப்பட்டன.
1. யாப்பின் 29 ஆவது சரத்து
2. செனட் சபை
3. நியமன உறுப்பினர்
4. பல்லங்கத்தவர் தேர்தல் தொகுதி
5. யாப்பை திருத்த 2/3 பெரும்பான்மை பெறப்படல்
6. அரசாங்க சேவை, நிதிச் சேவை ஆணைக்குழுக்கள்
7. கோமறைக்கழகம்
ஆயினும், இவை எதுவும் நடைமுறையில் பெரிய பயன்களைத் தரவில்லை.
சோல்பரி யாப்பு மீதான தமிழர்களின் எதிர்ப்பு
சோல்பரி யாப்பின் தீமைகளை, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்க, ஜீ.ஜீ பொன்னம்பலம் பிரித்தானியா சென்றார். ஆனால் சிங்களத் தலைவரில் ஒருவரான டி.எஸ். சேனநாயக்கா மற்றும் தமிழ்த் தலைவர்களான நடேசன், அருணாசலம் மகாதேவா, தியாகராஜா என்போரின் ஆதரவுடன் சோல்பரி யாப்பு நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமுற்ற ஜீ.ஜீ. பொன்னம்பலம், யாப்பிற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்ப்பிரதிநிதிகளைத் தேர்தலில் தோற்கடிக்கப்போவதாகச் சபதம் செய்தார்.
1947 ஆம் ஆண்டு தேர்தல்
1947 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய கட்சிகளைவிட அதிக ஆசனங்களைப் பெற்றது. ஆனாலும் அரசாங்கத்தை அமைக்கும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. அகில இலங்கைத் தமிழக் காங்கிரஸ் ஏழு இடங்களில் வெற்றி பெற்றது. சோல்பரி அரசியல் யாப்பிற்குச்சார்பாக வாக்களித்த தமிழ்த் தலைவர்களை, குறிப்பாக அருணாசலம் மகாதேவாவை, தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஜீ.ஜீ. பொன்னம்பலம் தனது பிறப்பிடத் தொகுதியான பருத்தித்துறைத் தொகுதியைவிட்டு, யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு, அருணாசலம் மகாதேவாவைத் தோற்கடித்து வெற்றிபெற்றார்.
ஏனைய தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களான திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் காங்கேசன்துறையிலும், ஓடிட்டர் ஜெனரலாக இருந்த திரு கே. கனகரத்தினம் வட்டுக்கோட்டையிலும், திரு சி. வன்னியசிங்கம் கோப்பாயிலும், நீதிபதியாக இருந்த திரு இராமலிங்கம் பருத்தித்துறைத் தொகுதியிலும், திரு வி. குமாரசாமி சாவகச்சேரித் தொகுதியிலும், திரு சிவபாலன் திருகோணமலைத் தொகுதியிலும் வெற்றிபெற்றனர். தேர்தலின் பின்னர் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்பேசும் மக்களின் தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. அதன் தலைவர் திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமிழரின் தலைவராகவும் விளங்கினார்.
பிரஜாவுரிமைச் சட்டங்களும் தேர்தல் திருத்தச் சட்டமும்
1948 ஆம் ஆண்டு முதலாவது பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒருவர் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற, அவர் இலங்கையில் பிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லது அவரது தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். இச்செயற்பாடு இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்காமல் செய்தது. தொடர்ந்து இந்தியாவின் அழுத்தம் காரணமாக 1949 ஆம் ஆண்டு இந்திய – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி இலங்கையர் அல்லாத ஒருவர் பிரஜாவுரிமையைப் பெற வேண்டுமாயின், அவர் திருமணம் செய்தவர் எனில், இலங்கையில் ஏழு வருடம் தொடர்ந்து வசித்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். திருமணம் செய்யாதவர் எனில், 10 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாமையினாலும், பிறப்பைப் பதியும்முறை 1911 இல் அறிமுகமானதாலும், அரசாங்கத்தினால் கேட்கப்பட்ட பல தகவல்களைப் பூர்த்திசெய்ய இவர்களால் முடியவில்லை. இதனால் இவர்களுக்குப் பிரஜாவுரிமை கிடைக்காமல் போனது. தொடர்ந்து இதே ஆண்டு தேர்தல் திருத்தச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, பிரஜாவுரிமை உள்ளோருக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனால் இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை இல்லாமல் போனது. 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிசார்பாக, ஏழு உறுப்பினர்கள் வெற்றிபெற்றும், 1952 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒரு உறுப்பினரும் வெற்றிபெறவில்லை.