லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் பண்டத்தரிப்புக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், மல்லாகம் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்திலுள்ள விவரங்களை ஆராயலாம்.
மல்லாகம் கோவிற்பற்று, அதன் நீளப்பாட்டு அச்சு மேற்கு – கிழக்காக இருக்கும்படி வலிகாமப் பிரிவின் நடுப்பகுதியை அண்டி அமைந்துள்ளது. இதற்குள் மல்லாகம், அளவெட்டி, ஏழாலை – ஈவினை, புன்னாலைக்கட்டுவன், சூராவத்தை ஆகிய ஐந்து துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படத்தில் உள்ளடங்கியுள்ள பட்டியல் தெளிவாகக் காட்டுகிறது. அளவெட்டி, இதன் மேற்கு அந்தலையில் உள்ளது. நடுப்பகுதியில் மல்லாகமும் கிழக்கில் ஏழாலை – ஈவினையையும் குறித்துள்ளனர். புன்னாலைக்கட்டுவனின் பெயரையோ எல்லைகளையோ நிலப்படம் குறித்துக் காட்டவில்லை. அது, புன்னாலைக்கட்டுவன் தவிர்ந்த நான்கு பிரிவுகளை மட்டுமே எல்லை குறித்துக் காட்டுகிறது (படம்-1). புன்னாலைக்கட்டுவன் ஊரின் அமைவிடத்தைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, புன்னாலைக்கட்டுவன், துணைப்பிரிவு நிலப்படத்தில் ஏழாலை – ஈவினை எனக் குறித்துள்ள பகுதிக்குள் அடங்கியிருக்கும் எனலாம். ஏழாலை – ஈவினைத் துணைப்பிரிவின் தெற்கு எல்லையை அண்டிச் சூராவத்தைத் துணைப்பிரிவு உள்ளது.

எல்லைகள்
மல்லாகம் கோவிற்பற்றுக்குக் கடலேரி அல்லது கடல் முகப்புக் கிடையாது. இது நாற்புறமும் நிலத்தாற் சூழப்பட்டது. இதன் வடக்கு எல்லையில் தெல்லிப்பழைக் கோவிற்பற்றும் கிழக்கில் புத்தூர்க் கோவிற்பற்றும் தெற்கில் கோப்பாய், உடுவில் ஆகிய கோவிற்பற்றுகளும் மேற்கில் பண்டத்தரிப்பு, சங்கானை ஆகிய கோவிற்பற்றுகளும் உள்ளன (படம்-2).

ஒல்லாந்தர்காலத்து மல்லாகம் கோவிற்பற்று, தற்காலத்தில் தெல்லிப்பழை, உடுவில் ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள் பிரிந்து காணப்படுகின்றது. இன்றைய காங்கேசந்துறை வீதிக்கு மேற்கேயுள்ள பகுதி தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவுக்குள்ளும், அவ்வீதிக்குக் கிழக்கேயுள்ள பகுதிகள் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குள்ளும் அடங்குகின்றன. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில், இதன் மல்லாகம், அளவெட்டி ஆகிய பகுதிகள் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் ஒரு பகுதியாகவும்; ஏழாலை, ஈவினை, புன்னாலைக்கட்டுவன் ஆகிய பகுதிகள் இன்றைய வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஒரு பகுதியாகவும் உள்ளன.
வீதிகள்
லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி, மல்லாகம் கோவிற்பற்றினூடாகச் செல்லும் மிக முக்கியமான வீதி, யாழ்ப்பாண நகரத்திலிருந்து தெல்லிப்பழை நோக்கிச் செல்லும் வீதியாகும். இது இக்கோவிற்பற்றை மல்லாகம் துணைப்பிரிவினூடாக ஊடறுத்துச் செல்கிறது. இவ்வீதி இன்றைய யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை வீதியின் தடத்தில் அமைந்தது என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரலாற்றில் மிக நீண்டகாலமாகவே இவ்வீதி முக்கியத்துவம் பெற்றிருந்ததால், மல்லாகத்தின் வளர்ச்சிக்கு இவ்வீதி பெரும் பங்காற்றியுள்ளது. மல்லாகப் பிரிவுக்குள் இவ்வீதியின் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி மேற்கு நோக்கிச் செல்லும் ஒரு குறுகிய நீளம் கொண்ட வீதி மல்லாகம் தேவாலயத்துக்குச் செல்வதாக நிலப்படம் காட்டுகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் அல்லது ஒல்லாந்தர் காலத்தில் தேவாலயத்தை யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை வீதியுடன் இணைப்பதற்காக இந்த வீதியை அமைத்திருக்கக்கூடும். சங்கானையிலிருந்து தெல்லிப்பழைக்குச் செல்லும் வீதியும் மல்லாகம் கோவிற்பற்றுக்குள் அளவெட்டித் துணைப்பிரிவை ஊடறுத்துச் செல்கிறது. தற்காலத்தில் இவ்வீதி அளவெட்டிக் கிராமத்தின் வடக்கு எல்லையாக அமைவதைக் காணமுடிகிறது. அளவெட்டியின் எல்லையையோ வீதியின் அமைவிடத்தையோ துல்லியமாக வரையாததால் இவ்வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.
மேலே குறிப்பிட்ட வீதிகளைத் தவிர வேறு வீதிகள் எவற்றையும் மல்லாகம் கோவிற்பற்றுக்குள் நிலப்படம் காட்டவில்லை. இதனால், நிலப்படம் வரைந்த காலத்தில் வேறு வீதிகள் எவையும் இக்கோவிற்பற்றுக்குள் இருக்கவில்லை என்று பொருள்படாது. ஏற்கெனவே வேறிடங்களில் சுட்டிக்காட்டியதுபோல, அக்காலத்தில் இருந்திருக்கக்கூடிய ஏனைய வீதிகள் நிலப்படத்தின் நோக்கத்துக்கு முக்கியம் இல்லாதவையாக இருந்திருக்கக்கூடும்.
மேலே குறிப்பிட்ட சிறிய வீதியும் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை வீதியும் சந்திக்கும் இடமே இன்றைய மல்லாகம் சந்தி எனத் தோன்றுகிறது. எனின், சிறிய வீதியின் மேற்கு நோக்கிய நீட்சியே இன்று மல்லாகத்திலிருந்து அளவெட்டிக்குச் செல்லும் வீதியாகும். இந்நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் இம்முழு வீதியும் இருந்திருந்தும், தேவாலயங்களை இணைக்கும் வீதிகளைக் காட்டுவதே நிலப்படத்தின் நோக்கமாக இருந்ததால் தேவாலயத்துக்கு மேற்கேயுள்ள பகுதி காட்டப்படவில்லையா அல்லது குறித்த வீதிப்பகுதி பிற்காலத்தில் அமைக்கப்பட்டதா? என்பது தெளிவில்லை. மல்லாகம் சந்தியிலிருந்து வீதிக்குக் கிழக்குப் பக்கமாக இன்றுள்ள எந்த வீதியும் நிலப்படத்தில் இல்லை.
கட்டடங்கள்
போர்த்துக்கேயர் காலத்திலும் ஒல்லாந்தர் காலத்திலும் மல்லாகம் ஒரு கோவிற்பற்றாக இருந்ததால் அங்கே ஒரு கோவிற்பற்றுத் தேவாலயமும், அருகில் ஒரு தேவாலய இல்லமும் இருந்தன. இவற்றை நிலப்படம் காட்டுகிறது. இதைத்தவிரக் கட்டடம் என்ற வகையில் மல்லாகம் துணைப்பிரிவுக்குள் ஒரு யானைப் பந்தியையும் நிலப்படத்தில் காணமுடிகிறது.
தேவாலயமும் தேவாலய இல்லமும்
மல்லாகத் தேவாலயமும் தேவாலய இல்லமும் தெல்லிப்பழைக்குச் செல்லும் வீதிக்குச் சற்றுத் தொலைவில் அதற்கு மேற்கே இருப்பதாக நிலப்படம் காட்டுகிறது. மேற்படி வீதியிலிருந்து தேவாலயத்துக்குச் செல்ல ஒரு இணைப்பு வீதி இருந்தது பற்றியும் ஏற்கெனவே குறிப்பிட்டோம். இது தற்போதைய மல்லாகம் – அளவெட்டி வீதியின் பகுதியாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டோம். இது சரியானால் ஒல்லாந்தர்காலத் தேவாலயம் மல்லாகம் – அளவெட்டி வீதியியை அண்டி இருந்தது தெளிவு. ஆனாலும், நிலப்படத்தின் அம்சங்கள் சரியான அளவுத்திட்டத்தின்படி குறிக்கப்படாததால் அந்நிலப்படத்திலிருந்து தேவாலயத்தின் துல்லியமான அமைவிடத்தை அறிய முடியாது.
மல்லாகம் தேவாலயம் போர்த்துக்கேயர் காலத்தில் தொடங்கப்பட்டு ஒல்லாந்தர் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக போல்தேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். இது கற்களாலும் சுண்ணாம்புச் சாந்தினாலும் கட்டப்பட்டது என்றும் அவர் கூறுகிறார். தேவாலய இல்லமும் பல வளைவுகளுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது என்றும், இதன் மேல் மாடிக்குச் செல்வதற்கு நீளமான படிக்கட்டுகள் இருந்ததாகவும் போல்தேயசின் நூலில் தகவல்கள் உள்ளன.1 நூலிலுள்ள படமும், மல்லாகம் தேவாலயமும் தேவாலய இல்லமும் நிரந்தரமான கட்டடப்பொருட்களால் ஆனதாகவே காட்டுகிறது2 (படம்-3).

பிரித்தானியர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் மதப்பணியாற்றிய கிறித்தவ மிசன்கள் பழைய கோவிற்பற்றுத் தேவாலயங்களைப் பொறுப்பேற்றுத் திருத்திப் பயன்படுத்தியது குறித்து ஏற்கனவே இக்கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டோம். ஆனால், இம்மிசன்கள் எவையும் மல்லாகத் தேவாலயத்தைக் கையேற்றுத் திருத்தித் தேவாலயமாகப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்தப் பகுதியில் மதப்பணியாற்றிய அமெரிக்க மிசனைச் சேர்ந்தவர்கள் நீதிமன்ற வீதியில் 1817 ஆம் ஆண்டளவிலேயே ஒரு பாடசாலையை அமைத்ததாகவும், உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாகக் காட்டிய எதிர்ப்பினால் இந்த முயற்சி கைகூடவில்லை என்றும் தெரிகிறது.3 பழைய ஒல்லாந்தத் தேவாலயமும் இவ்வீதியை அண்டியே அமைந்திருந்ததால் மேற்குறிப்பிட்ட பாடசாலை அத்தேவாலயம் இருந்த இடத்திலேயே உருவாகியிருக்கக்கூடுமா? என்பது ஆய்வுக்குரியது. எவ்வாறெனினும், பிரித்தானியர் காலத்தில் ஒல்லாந்தரின் தேவாலயமும் இல்லமும் கைவிடப்பட்டு இடம் தெரியாமல் அழிந்துவிட்டதாகவே தெரிகிறது. இவற்றின் எச்சங்கள் எவையும் இன்று காணக்கிடைக்கவில்லை.
யானைப் பந்தி
வலிகாமத்தின் பல பகுதிகளில் யானைப் பந்திகள் இருந்தது குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டோம். மல்லாகத்திலும் ஒரு யானைப்பந்தி இருந்ததை லெயுசிக்காமின் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. தெல்லிப்பழைக்குச் செல்லும் வீதிக்குச் சற்றுத் தொலைவில் அதன் மேற்குப் பக்கத்தில், மல்லாகம் கோவிற்பற்றுக்கும் தெல்லிப்பழைக் கோவிற்பற்றுக்கும் இடையிலான எல்லையை அண்டி இது உள்ளது. இதை அணுகுவதற்கான வீதி எதையும் நிலப்படம் காட்டவில்லை. அத்துடன், இன்றும் இருக்கக்கூடிய ஏதாவதொரு நிலையான அம்சத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடியதாகவும் இல்லை. அமைவிடம் எந்த அளவுக்குத் துல்லியமானது என்றும் தெரியவில்லை. எனவே, இது எவ்விடத்தில் இருந்தது என்பதைத் துல்லியமாக அறிய முடியாதுள்ளது. குறிச்சிப் பெயர்கள், காணிப்பெயர்கள் முதலிய இடப்பெயர்களை நுணுக்கமாக ஆராய்ந்தால் இது தொடர்பான தகவல் ஏதாவது கிடைக்கக்கூடும்.
குளங்கள்
நிலப்படம் மல்லாகம் கோவிற்பற்றுக்குள் அடங்கியதாக ஐந்து குளங்களை மட்டுமே காட்டுகிறது. இவற்றுள் பறையன் குளம், அழவலைக் குளம், பன்னாக்கைக் குளம், சங்கல்லைக் குளம் ஆகிய நான்கு குளங்கள் அளவெட்டித் துணைப்பிரிவுக்குள் உள்ளன. எஞ்சிய ஏழாலைக் குளம் ஏழாலை – ஈவினைத் துணைப்பிரிவுக்குள் உள்ளது. நிலப்படத்தின்படி மல்லாகம், சூராவத்தை, புன்னாலைக்கட்டுவன் ஆகிய துணைப்பிரிவுகளுக்குள் குளங்கள் இல்லை.
இன்றைய பதிவுகளின்படி பழைய மல்லாகம் கோவிற்பற்றுக்குள் அடங்கிய பகுதிகளுக்குள் 12 குளங்கள் இருக்கின்றன.4 அமைவிடங்களையும் பெயர் ஒலிப்பு ஒற்றுமையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நிலப்படத்திலுள்ள பன்னாக்கைக் குளத்தை தற்காலத்தில் பனாக்கைக் குளம் அல்லது பினாக்கைக் குளம் என அறியப்படும் குளத்துடன் இலகுவாக அடையாளம் காண முடிகிறது. அதேபோல நிலப்படத்தில் அழவலைக் குளம் என்ற பெயரில் குறித்துள்ள குளம், இன்று அழகொல்லைக் காட்டுக் குளம், அழகொல்லை வண்ணான் குளம் எனப்படும் இரண்டு குளங்களில் ஒன்றைக் குறிக்கிறது எனலாம். இவ்விரு குளங்களும் அருகருகே காணப்படுவதால் நிலப்படத்திலுள்ள அழவலைக் குளம் குறிப்பாக இரண்டில் எதைக் குறிக்கிறது என அறிவது கடினம்.
நிலப்படத்தில், ஏழாலை – ஈவினைத் துணைப்பிரிவில் காட்டியுள்ள ஏழாலைக் குளத்தின் அமைவிடம் இன்று ஏழாலைப் பகுதியில் உள்ள பெரிய தம்பிரான் குளத்துடன் ஒத்துவருகிறது. எனவே, நிலப்படத்தின் ஏழாலைக் குளமே அவ்விடத்தில் அமைந்த பெரிய தம்பிரான் கோவிலின் பெயரைத் தழுவிப் பிற்காலத்தில் பெரிய தம்பிரான் குளம் எனப் பெயர் பெற்றது எனலாம்.
ஏழாலையைப் பற்றிய நூலொன்றை எழுதிய தி.க. முத்துசாமி என்பவர் இந்தக் குளம் பழங்காலத்தில் நெடுங்கண்ணிக் குளம் எனப் பெயர் பெற்றிருந்ததாகக் கூறுகிறார். ஏழாலையின் தொடக்கக் குடியிருப்பு இந்தக் குளத்தை அண்டியே உருவாகிப் பின்னர் ஊரின் பிற பகுதிகளுக்கும் விரிவடைந்திருக்கவேண்டும் என்பது அவரது கருத்து.5 ஊரில் உள்ள மிகப் பழைய ஏழு ஆலயங்கள் தொடர்பாகவே இவ்வூருக்கு ஏழாலை (ஏழு ஆலயங்கள்) என்ற பெயர் ஏற்பட்டது என்ற கருத்து உள்ளது. மேலே குறிப்பிட்ட ஏழு ஆலயங்களும் இக்குளத்தின் அயலிலேயே காணப்படுகின்றன. இந்த ஏழு ஆலயங்களில் ஒன்றே குளத்துக்குத் தற்காலப் பெயர் ஏற்படக் காரணமான பெரிய தம்பிரான் கோவில். இக்கோவிலே குளத்துக்கு மிக அருகில் அதன் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.6
குறிப்புகள்
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 320.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 291.
- மு. அருளையா, “யா/மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம் (யா/அமெரிக்க மிசன்) பாடசாலையின் வரலாறு”, 175 ஆவது ஆண்டு நிறைவு யா/ மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம், 2007, 51.
- விவசாய அபிவிருத்தித் திணைக்களப் பதிவுகளின்படி.
- தி.க. முத்துச்சாமி, எங்களூர் ஏழாலயவூர் (ஏழாலை: திருமதி செல்லம்மா முத்துச்சாமி,1994), 25.
- முத்துச்சாமி, எங்களூர் ஏழாலயவூர், 27.