நூதன உலகின் நுழைவாசலில்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
13 நிமிட வாசிப்பு

நூதன உலகின் நுழைவாசலில்

May 1, 2025 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

நவீன உலகை அண்மித்தல்

இருபதாம் நூற்றாண்டின் உதயத்தை உலக வரலாற்றில் ஒரு புது யுகம் தொடங்குவதைக் குறிக்கும் நிகழ்வாகக் கொள்ளலாம். மேற்குலகிலும் பிற இடங்களிலும் 19 ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி எவ்வளவுதான் மாற்றங்களைக் கொண்டுவந்தபோதிலும் அந்த நூற்றாண்டு 1900 இல் முடிவடைந்தபோது, இன்று நாம் நவீன வாழ்வின் அத்தியாவசியப் பொருட்களாகக் கருதும் பல முன்னேற்றமான உபகரணங்கள் புழக்கத்தில் இருக்கவில்லை. இவை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து துரிதமாகப் பெருந்தொகையான மக்கள் கைகளுக்கு வந்து, அந்த நூற்றாண்டு 2000 இல் முடிவடைந்தபோது, ஒரு புது உலகின் தோற்றத்துக்கு உதவின. வரலாற்றில் அப்படியான நூற்றாண்டு முன்னொருபோதும் இருக்கவில்லை.

உலக நிலை 1901 இல் எப்படி இருந்தது? யாழ்ப்பாணத்தின் நிலை எவ்வாறு காணப்பட்டது? இன்று பொதுப்பயன்பாட்டில் உள்ள எத்தனையோ பொருட்களும் பொதுவசதிகளும் அன்று இருக்கவில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் விரைவாக ஏற்பட, அவை பற்றிய அறிவும், அவற்றின் விளைவாக உற்பத்தியாக்கப்பட்ட பொருட்களும் ஒரு சில ஆண்டுகளுள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்து நவீன உலகைக் காண உதவின.

போக்குவரத்து

யாழ்ப்பாணம் வெளியுலகுடன் தொடர்புகொண்டு மாற்றமடையப் பெரிதும் உதவிய முன்னேற்றம் போக்குவரத்து வசதிகளில் ஏற்பட்ட மேம்பாடாகும். இது தொடர்பாக 19 ஆம் நூற்றாண்டில் இருந்தநிலை அதற்குமுன் பலகாலமாக இருந்த நிலையே.

உள்ளூர்ப் போக்குவரத்து 19 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் கால்நடையாகவே இருந்தது. வசதியுடையோர் மாட்டு வண்டியைப் பயன்படுத்தினர். செல்வந்தரும் ஐரோப்பிய அதிகாரிகளும் குதிரை, குதிரை வண்டி, பல்லக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தினர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே தமிழ்நாட்டுக்கு அல்லது கொழும்புக்குச் செல்லப் பொதுவாகச் சிறு பாய்க்கப்பல் அல்லது தோணி பயன்பட்டது. சில சந்தர்ப்பங்களில் கொழும்புக்குப் பல்லக்கில் சென்றனர்.

போக்குவரத்து 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எப்படி இருந்தது என்பதை விளங்கிக்கொள்ள யாழ்ப்பாணத்துக்கு வந்த முதலாவது அமெரிக்கரின் அனுபவங்கள் உதவுகின்றன. யாழ்ப்பாணத்துக்கு வந்த முதலாவது அமெரிக்கர் சாமுவெல் நியூவெல் (Samuel Newell) என்பவராவார். இவர் 1813 ஓகஸ்ட் 28 இல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லப் புறப்பட்டார். முதலில் சென்னையை நோக்கிச் சென்ற பாய்க்கப்பல் ஒன்றில் ஏறி இராமேஸ்வரத்துக்குப் போய், அங்கிருந்து இன்னொரு கப்பலில் பயணித்து செப்டம்பர் 7 இல் யாழ்ப்பாணத்தை அடைந்தார். சில வாரங்களின்பின் யாழ்ப்பாணத்தில் இருந்து காலியை நோக்கிப் பயணிப்பதற்குத் தரைவழியாகப் பல்லக்கில் செல்ல விரும்பினார். ஒக்டோபர் 22 இல் அவருடைய பயணம் தொடங்கியது. பல்லக்கை மாறிமாறித் தூக்கிச் செல்ல 12 பேரும் பொருள்மூட்டையைச் சுமந்து செல்ல இருவரும் இருந்தனர். காட்டுவழியாகப் பெரும்பாலும் இரவுப் பொழுதில் தீவட்டிகளுடன் பயணித்தனர். இவர்கள் கொழும்பு வழியாக நவம்பர் 3 இல் காலியை அடைந்தனர். மேலும் அதிசயிக்க வைக்கும் நிகழ்வு என்னவெனில், காலியில் நியூவெல் பல்லக்குக் கூட்டத்தினரைத் திருப்பி அனுப்பிவிட்டு, கால்நடையாகக் கொழும்புக்குத் திரும்பிச் சென்றார் (130 கிலோமீட்டர்/ 80 மைல்)!

யாழ்ப்பாணத்துக்கு வந்த இரண்டாவது அமெரிக்கர் எட்வேட் உவறென் (Edward Warren). இவர் கொழும்பில் இருந்து 1816 ஜுலை 1 இல் பல்லக்கில் புறப்பட்டு ஜுலை 11 இல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். அவருடன் அமெரிக்காவில் இருந்து வந்த புவர் தம்பதிகள் (Rev. and Mrs. Daniel Poor) கொழும்பில் இருந்து கப்பலில் கற்பிட்டி வழியாக யாழ்ப்பாணம் சென்றனர். இவர்களுடன் வந்த மற்ற இரு அமெரிக்க மிஷனரிமார் (Richards and Meigs) கொழும்பில் இருந்து நேராகக் கப்பலில் யாழ்ப்பாணம் சென்றனர்.

இந்தநிலைமை யாழ்ப்பாணத்தில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மாறவில்லை எனலாம். அக்கட்டத்தில் மேற்குலகில் போக்குவரத்துச் சாதனங்களைப் பொறுத்துப் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. முதலில், மிருகங்களின் உதவி இல்லாது ஓடும் வண்டியாக ரயில் வண்டி என வழங்கும் தொடர்வண்டி தொழிற்புரட்சியின்போது உருவாக்கப்பட்டது. பின்னர், 1885 அளவில் ‘சைக்கிள்’ வண்டி செம்மைப்படுத்தப்பட்டு, 1990 அளவில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பொதுப்பயன்பாட்டுக்கு வந்தது. அதேகாலமளவில் ‘மோட்டார்’ வண்டியும் உருவாக்கப்பட்டு மேலும் செம்மையாக்கப்படும் நிலையை அடைந்தது.

இப்புரட்சிகர மாற்றங்கள் வெகுவிரைவில் இலங்கைக்கும் வந்தன. ரயில் வண்டி 1864 இல் கொழும்பில் இருந்து மலையகத்தை நோக்கி ஓடத்தொடங்கியது. இதன்பின் ஜப்பானில் உருவாக்கப்பட்ட ஒரு புது வண்டி, நூற்றாண்டின் இறுதி அளவில் அறிமுகமாக்கப்பட்டது. அது தான் ரிக்‌ஷா (Rickshaw) வண்டி. இதன்பின், 1896 இல், சைக்கிள் வண்டியும் அறிமுகமாக்கப்பட்டது.

புதிய நூற்றாண்டு உதயமாகியபோது, அதாவது 1901 இல், உலகின் மிகப்பெரிய நகராக விளங்கிய லண்டனின் வீதிகளில் பெருமளவில் குதிரை வண்டிகளும் குதிரைகளுமே காணப்பட்டன. உலகின் பிற பெருநகரங்களிலும் இதே நிலைமைதான் காணப்பட்டது. கொழும்பில் குதிரை வண்டிகளுடன், மாட்டு வண்டிகள், சைக்கிள், ரிக்‌ஷா ஆகியவையும் காணப்பட்டன. 1902 இல் நீராவியால் இயக்கப்பட்ட ஒரு வண்டி அறிமுகமாக்கப்பட்டது. விரைவில், 1905 இல், பெற்றோல் மூலம் இயங்கிய முதலாவது மோட்டார் வண்டி கொழும்புக்கு வந்தது. நாட்டின் சில பாகங்களுக்கு ரயில் வண்டியும் கொழும்பில் இருந்து சென்றுவந்தது.

யாழ்ப்பாணத்தில் 1901 இல் பெருமளவில் மாட்டுவண்டிகளே பயன்பாட்டில் இருந்தன. நகரப்புறத்தில் சில குதிரைவண்டிகள், குதிரைகள், ரிக்‌ஷா ஆகியவையும் காணப்பட்டன. யாழ்ப்பாணம் முதல் தடவையாக ஒரு மோட்டார் வண்டியைக் கண்டது 1905 இல் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் 23 இல் நுவரெலியாவில் இருந்து சில ஐரோப்பியர் ஒரு மோட்டார் வண்டியை ஓட்டிகொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்தனர் என அறியக்கிடக்கின்றது. அதே ஆண்டு ஓகஸ்ட் 1 இல் கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரயில் பாதையும் திறக்கப்பட்டது. இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ரயில் வண்டி யாழ்ப்பாணத்துக்கு அறிமுகமாகி இருந்தது. காங்கேசந்துறையில் இருந்து சாவகச்சேரி வரை ஓடும் ரயில் சேவை 1902 இல் தொடக்கப்பட்டது.

பிற நவீன சாதனங்கள்

இவ்வாறு முன்னேற்றமான போக்குவரத்து வசதிகள் யாழ்ப்பாணத்தை மேம்படுத்தி, வெளியிலிருந்து செல்வாக்கு விரைவாகவும் இலகுவாகவும் பரவுவதற்கு வழிவகுக்க, மேற்குலகத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக யாழ்ப்பாணத்தை வந்தடையத் தொடங்கின. ஆனால் இவை பொதுமக்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவர நீண்டகாலம் எடுத்தன.

புதிய நூற்றாண்டு தொடங்கியபோது உலகின் பல பாகங்களில் நவீனமயமாக்கத்தின் ஒரு முக்கிய அறிகுறியாக விளங்கியது மின்சக்தியின் பயன்பாடாகும். மின்சக்தியை ஒளி உற்பத்திக்குப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் விளைவாக, 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெருநகரங்களின் முக்கிய வீதிகளுக்கு விளக்கேற்ற மின்சக்தி பயன்படத் தொடங்கியது. எனினும் 1901 இல் மிகவும் சிறிய அளவிலேதான் நியூயோர்க், லண்டன் போன்ற நகரங்களிலேகூட வீடுகளுக்கு ஒளி கொடுக்க மின்சக்தியைப் பயன்படுத்த முடிந்தது. 

இலங்கையில் மின்சக்தியின் பயன்பாடு மெதுவாகவே இடம்பெற்றது. கொழும்பு புறக்கோட்டையில் 1902 இல் ஒரு மின்சக்தி உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து படிப்படியாக மின்சக்தியின் பயன்பாடு வளரத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் மின்சக்தி பரவலாகப் பொதுமக்கள் வாழ்க்கையில் இடம்பெற நீண்டகாலம் எடுத்தது. சில தனியார் இடங்களிலும், வணிகத்தலங்களிலும் (தற்காலிகப் படக்காட்சிக் கொட்டகை போன்றவை), சில கல்லூரிகளிலும் மின்சக்தி உற்பத்தி இயந்திரங்கள் (Generators) சில மணி நேரத்துக்குப் பயன்பாட்டுக்கு வந்தன. யாழ்ப்பாணக் கல்லூரியில், எடுத்துக்காட்டாக, 1930களில் இரவு நேரத்தில் விடுதிச்சாலைகள், நூலகம், வகுப்பறைகள், ஆசிரியர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு மின்சக்தி வழங்கத் தொடங்கியிருந்தனர்.

நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய தொழில்நுட்ப ஆக்கம், ஓடும்படம் (Movies). முதலில் மௌனப்படமாக இருந்து, 1927 இல் இருந்துதான் பேசும்படம் தயாரிக்கப்பட்டது. இலங்கையில் 1901 இல் ஓடும்படம் அறிமுகமாகியது. கொழும்பில் 1903 இல் ஒரு கொட்டகையில் முதலாவது படம் காட்டப்பட்டது. யாழ்ப்பாணத்திலும் அதிக தாமதம் இன்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மௌனப்படங்கள் காட்டப்பட்டிருக்கலாம். ‘நளதமயந்தி’ (1921) போன்ற படங்கள் யாழ்ப்பாணத்தில் காட்டுவதற்குப் பொருத்தமானவையாக இருந்திருக்கும். பேசும்படம் அறிமுகமாகியபின் 1931 இல் முதலாவது தமிழ்ப்படம் (காளிதாஸ்) வெளிவந்தது.

இன்னொரு முக்கியமான 20 ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்ப ஆக்கம் வானொலி ஆகும். முதலாவது வானொலி ஒலிபரப்பு ஒல்லாந்தில் 1919 இலும், அமெரிக்காவில் 1920 இலும் நடந்தது. உலகப் பிரசித்திபெற்ற ‘British Broadcasting Corporation’ (BBC) தனது முதல் ஒலிபரப்பை 1922 இல் நடத்தியது. கொழும்பில் 1923 இல் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டபின், 1925 இல் கொழும்பு வானொலி (Colombo Radio) ஒலிபரப்பைத் தொடங்கியது. எனினும் வானொலி யாழ்ப்பாணத்தில் செல்வாக்குச் செலுத்தப் பல ஆண்டுகள் சென்றன.  

ஒலிப்பதிவுத் தட்டுக்களும் ‘பாட்டுப் பெட்டியும்’

யாழ்ப்பாணத்தை, இலங்கையின் பிற பாகங்களுடன், நவீன உலகுக்கு அழைத்துச் சென்ற விசித்திரமான தொழில்நுட்பப் படைப்புக்களுள் முதன்மையானது ‘கிராமபோன்’ (Gramophone) எனப் பெயர்பெறும் சாதனமாகும். இது ஒலிப்பதிவினை மீண்டும் அதே ஒலியாக வெளிப்படுத்தி உயிர்பெறச்செய்த புதுமையான இயந்திரம் ஆகும். பிரபல அமெரிக்க ஆக்கத்திறனாளி தோமஸ் அல்வா எடிஸன் (Thomas Alva Edison) 1877 இல் ஒலியை ஒரு தட்டில் பதிவு செய்து அதனை மீண்டும் வெளிப்படுத்துவதில் வெற்றிகொண்டதன் விளைவாகப் பிற தொழில்நுட்பவியலாளர்கள் முயன்று ‘கிராமபோன்’ சாதனத்தை உருவாக்கினர்.

தொலைபேசியும் திரைப்படமும் இலங்கை மக்களை வந்தடையுமுன் இந்த ஒலிப்பதிவு இயந்திரமாகிய ‘பாட்டுப் பெட்டி’ பலரை அதிசயிக்க வைத்துப் பாட்டுக் கேட்டு இன்புற உதவிய கருவியாக அமைந்தது. அமெரிக்காவில் ஆக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகளில், 1900 இல், ‘கிராமபோன்’ கொழும்பை வந்தடைந்தது. சிங்களப் பாடல்கள் 1903 இல் இசைத்தட்டுகளில் பதிவுசெய்யப்படத் தொடங்கின.

‘கிராமபோன்’ பெட்டியின் வருகை, தென்னிந்தியா – இலங்கை நிலப்பகுதியில் சமூகத்திலும் பண்பாட்டிலும் ஒரு புதிய காலப்பகுதியின் தொடக்கத்தைக் குறித்து நிற்கின்றது. சுருங்கக்கூறின், இது ஒரு புதிய ‘பொதுமக்கள் பண்பாட்டை’ (Mass culture) தோற்றுவித்தது. இப்பண்பாடு பின்னர் திரைப்படத்தின் வருகையோடு தமிழ்நாட்டை மூழ்கடித்து, அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. இந்த வரலாற்றுப் போக்கில் யாழ்ப்பாணம் ஒரு தனித்துவமான வகையில் செல்லாது, தமிழ்நாட்டுப் பொதுமக்கள் பண்பாட்டையே ஏற்றுக்கொண்டது. இலங்கையின் தென்பாகத்தில் ‘கிராமபோன்’ வேறொரு முக்கிய வகையில் பயன்பட்டது. அங்கு, பௌத்த தலைவர் அநகாரிக தர்மபால மாட்டுவண்டியில் ‘கிராமபோன்’ பெட்டியை ஏற்றி, நாட்டுப்புறத்துக்குச் சென்று, இரவிரவாக ஊர்மக்களுக்குப் பௌத்தமதப் பிரசாரம் செய்ய இப்புதிய கருவியைப் பயன்படுத்தினார்.

புதிய பொதுமக்கள் பண்பாட்டின் தோற்றத்தை விளங்கிக்கொள்ள 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இசைத்துறை எப்படி இருந்தது என்பதை அறிவது உதவும். பாரம்பரியமாகப் பேணப்பட்டுவந்த கர்நாடக இசை உயர்வர்க்கத்தினர் ரசித்துவந்த கலையாக விளங்கியது. பொதுமக்கள் அதில் ஈடுபடாது, பாமரர் இசையை ரசித்தனர். இசை வித்துவான்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் பல்நிறக் கோலங்களைக்கொண்ட பசும் கம்பளங்களில் உட்கார்ந்து பலமணி நேரம் பாடியும் இசைக்கருவி வாசித்தும் மகாராஜாக்களை (மைசூர் மகாராஜா, தஞ்சாவூர் நாயக்கர்) மகிழ்வித்த காலம் ‘கிராமபோன்’ வருகையுடன் மாறியது.

மன்னர்கள் மட்டுமல்ல, வசதிபடைத்த உயர்வர்க்கத்தினரும் தங்கள் பெரும் இல்லங்களின் இருக்கை அறைகளில் அழகாக அலங்கரித்து வைக்கப்பட்ட இசைப்பெட்டியில் இருந்து பரவும் இன்னிசையைக் கேட்டனர். வேண்டிய நேரம் இசையை ரசிப்பதற்கு உதவும் இப்புதிய வசதியை வலியுறுத்தும் வகையில், பிரபல இசைக்கலைஞர்களை வீட்டுக்குள் அழைத்து அவர்கள் பாட்டைக் கேட்டுச் சுவைக்கலாம் என்ற கருத்தைக் ‘கிராமபோன்’ விளம்பரங்கள் வெளிப்படுத்தின. அதுமட்டுமன்றி, மீண்டும் மீண்டும் விரும்பிய பாடலைக் கேட்டு ரசிக்க ‘கிராமபோன்’ உதவுகின்றது என்பது விளம்பரங்களில் அழுத்தப்பட்டது. 

அமெரிக்காவின் ‘Gramophone Company’ இந்தியச் சந்தையைத் தன்வசமாக்கும் நோக்குடன் 1901 இல் கொல்கத்தாவில் ஒரு கிளையை நிறுவியது. இந்த நிறுவனம் தயாரித்த இசைத் தட்டுகளின் வணிகப் பெயர் (Brand name) His Master’s Voice (HMV) என்ற பிரசித்தி பெற்ற பெயராகும். HMV தமிழ் இசைத் தட்டுகள் 1905 இல் வெளிவரத் தொடங்கின. 

Gramophone Company, 1911 அளவில் குறிப்பிடத்தக்க அளவு தமிழ் இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தது. இவற்றின் பொருள் பெரும்பாலும் கர்நாடக இசையே. மரபுவழியாகப் போற்றப்பட்ட தேவாரம், திருப்புகழ், தாயுமானவர் பாடல்கள் ஆகியவையும் காவடிச் சிந்து, கும்மி போன்ற நாட்டார் பாடல்களும் அரிச்சந்திர நாடகம், இராமாயண நாடகம் ஆகியவற்றில் இருந்து பாடல்களும் நகைச்சுவைப் பாடல்களும் (இவை வேடிக்கைப் பாட்டு எனப்பட்டன) இவற்றுள் அடங்கின. அத்துடன், நாதஸ்வரம், ஜலதரங்கம், புல்லாங்குழல், ஆர்மோனியம், வயலின் ஆகிய கருவிகளின் இசையும் தட்டுகளில் வந்தன. இத்தொடக்க காலத்தில் ‘கிராமபோன்’ ஓரளவு விலையுயர்ந்ததாக இருந்தது. இதனால் நடுத்தர வகுப்பினரே இதனை நுகர்வோராக இருந்தனர்.

ஆனால் மேலும் பல வணிகக் குழுக்கள் (மலிவான பொருட்களை உற்பத்திசெய்த ஜப்பானியர் உட்பட) ‘கிராமபோன்’ உற்பத்தியில் ஈடுபட, விலையும் குறையத் தொடங்கியது. இதனால் 1920களில் ‘கிராமபோனின்’ விலை முன் இருந்த விலையின் அரைவாசிக்குக் கீழ் வீழ்ந்தது.

தமிழ்நாட்டில் பொதுமக்கள் பண்பாடு என்று வர்ணிக்கத்தக்க, கற்றோரும் கல்லாதோரும் ரசிக்கும் இசை, நடனம், நாடகம் ஆகியவற்றின் உதயம் ‘கிராமபோனின்’ வருகையுடன் தொடங்கியது. முதல் தடவையாக, இசைக்கலைஞர்கள் பொதுமக்கள் போற்றும் ‘நட்சத்திரங்கள்’ ஆகினர். இந்தப் போக்குத் திரைப்படம் வந்த பின் மேலும் வலுப்பெற்றுத் தமிழ்நாட்டின் அரசியலில் மிகுந்த தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு வளர்ந்தது. இந்த வளர்ச்சி இசைத்தட்டுகள் மூலமாக மட்டுமன்றி அச்சு ஊடகம் (Print media) மூலமாகவும் ஏற்பட்டது. 

இசைத்தட்டுகளின் பாட்டுகள் சிறு நூல்களாக அச்சிடப்பட்டு மலிவாக விற்கப்பட்டன (பின்னர் திரைப்படப் பாட்டுகளும் இவ்வாறு அச்சிடப்பட்டன). இதனால் பொதுமக்களிடையே பிள்ளைகளும் இளைஞர்களும் பாடல்களை மனப்பாடம் செய்து பாட முடிந்தது. சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களிலும் ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகளிலும் புதிதாக வெளியிடப்படும் பாடல்கள் பற்றி விமர்சனங்கள் எழுதப்பட்டன. பிற்காலத்தில் பிரபல ஊடக எழுத்தாளராக விளங்கிய ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 1930 இல் ஆனந்தவிகடனுக்கு இப்படியான பாட்டு விமர்சனங்களை எழுதித் தன் ஊடக எழுத்தாளர் வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். இவை எல்லாம் ‘கிராமபோன்’ ஊக்குவித்த பொதுமக்கள் பண்பாட்டை வளர்க்க உதவின.

இவ்வாறு தமிழ்நாட்டில் ‘கிராமபோன்’ தோற்றுவித்த பொதுமக்கள் பண்பாடு யாழ்ப்பாணத்துக்கும் பரவியது. இதற்கு, யாழ்ப்பாணத்துக்கு வந்துசென்ற தமிழ்நாட்டு நாடகக்கலைஞர்கள் சிலர் உதவினர். இவர்களுள் இருவர் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

தமிழ்நாட்டு நாடகக்குழுக்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து நாடகங்களை மேடையேற்றிச் செல்லும் வழக்கம் நீண்டகாலமாக இருந்து வந்தது. அப்படியாக 1920களில் யாழ்ப்பாணத்துக்கு வந்த இரு பிரபல நடிகர்கள் பின்னர் ‘கிராமபோன்’ இசைத்தட்டு நட்சத்திரங்கள் ஆகினர். ஒருவர் கே.பி. சுந்தராம்பாள் (1917 இல் இருந்து பல ஆண்டுகள் இலங்கையில் வசித்தவர்; பிற்காலத்தில் ‘ஔவையார்’ போன்ற படங்களின் நடிகர்); மற்றவர் எஸ்.ஜி. கிட்டப்பா. இவர்கள் வெவ்வேறு நாடகக்குழுக்களைச் சேர்ந்தோராய், யாழ்ப்பாணத்தின் ஊர்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்தனர். இது பற்றி என் தந்தையார் பலமுறை எனக்குக் கூறியுள்ளார்.

இசைத்தட்டுத் தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற சிறந்த பாடகர்களை அணுகியபோது, ‘கிராமபோன்’ என்ற விசித்திர சாதனத்துக்காகப் பாடுவதற்கு அவர்கள் தயங்கினர். அத்தகைய சூழலில், சிறந்த கலைஞர்களாகப் புகழ்பெற்றிருந்த நாடக நட்சத்திரங்களையும் இசை வளர்த்த தேவரடியார் (தேவதாசி) குடும்பங்களைச் சேர்ந்தோரையும் அழைத்துப் பாடவைப்பதில் அவர்கள் வெற்றிகண்டனர். இச்சூழ்நிலையில் சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் இசைத்தட்டுப் பாடகர்கள் ஆகுவதற்கு வாய்ப்பைப் பெற்றனர். விரைவில் இவர்கள் நட்சத்திரங்கள் ஆகினர். தமிழ்நாட்டைப் போல் யாழ்ப்பாணத்திலும் இவர்களுடைய இசைத்தட்டுப் பாடல்கள் பொதுமக்கள் விரும்பி ரசித்தவையாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன்.

இவ்வாறு தொடங்கிய பொதுமக்கள் பண்பாடு பின்னர் ஒலிபெருக்கி (Loudspeaker) பொதுப்பயன்பாட்டுக்கு வந்ததும், கோயில்களிலும் திருமண வீடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் இசைத்தட்டுப் பாடல்களை ஊர்மக்கள் அனைவரும் கேட்கும் நிலைக்குக் கொண்டுவந்தது. பொதுமக்கள் பண்பாடு தோன்றுவதற்குப் ‘கிராமபோன்’ பெரிதும் உதவியது.


ஒலிவடிவில் கேட்க


About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்