ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன
இத்தமிழ்க்கட்டுரை குமாரி ஜயவர்த்தன அவர்களின் ‘Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூலின் 19 ஆவது அத்தியாயமாக அமையும் கட்டுரையின் தமிழாக்கமாகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் சட்டசபைப் பிரதிநிதித்துவம் இன அடிப்படையிலான நியமனமுறைப் பிரதிநிதித்துவமாக (Communal Representation) இருந்தது. 1911 ஆம் ஆண்டில் தேர்தல் மூலம் சட்ட சபைக்கு ஓர் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். இத்தெரிவு மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை அடிப்படையில் இடம்பெற்றது. 1920 க்கும் 1931 க்கும் இடைப்பட்ட காலத்தில் சட்ட சபைகளில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. 1931 இல் சர்வசன வாக்குரிமை புகுத்தப்பட்டது. அவ்வாண்டில் பிரதேச அடிப்படையிலான பிரதிநிதித்துவமுறை (Territorial Representation) இலங்கையில் அறிமுகமாயிற்று. இன அடிப்படையிலான நியமனப் பிரதிநிதித்துவ முறையிலிருந்து, சர்வசன வாக்குரிமையின் அடிப்படையிலான தேர்தல் முறைக்கு இலங்கை மாற்றம்பெற்றது. பிரதேச (Territory) அடிப்படையில் அமைந்த தேர்தல் அரசியல் (Electoral Politics) இலங்கை அரசியலில் பெருமாற்றங்களை ஏற்படுத்தியது. சட்டசபைகளின் அரசியல் பிரதிநிதித்துவ முறையில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்புலத்தில் 1900-1948 காலத்தின் இலங்கை அரசியலில் புகுந்த மாறுதல்களை குமாரி ஜயவர்த்தன அவர்கள் இக்கட்டுரையில் விரிவாக ஆராய்கிறார்.

தேர்தல் சீர்திருத்தங்கள்
1920 ஆம் ஆண்டிலும் பின்னர் 1931 ஆம் ஆண்டிலும் இலங்கையில் சட்ட சபைக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் தேர்தல் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1920 இல் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையே இருந்தது. ஆனால் 1931 இல் சர்வசன வாக்குரிமை புகுத்தப்பட்டது. இவ்விரு தேர்தல் சீர்திருத்தங்களையும் இக்கட்டுரையில் ஆராயவுள்ளோம். 1930 களில் சர்வசன வாக்குரிமை புகுத்தப்பட்டதன் விளைவாக ஜனநாயக நடைமுறைகள் பரவலாக்கப்பட்டன. ஒருவரின் பொருளாதார அந்தஸ்து, அவரின் இனக்குழுமம், கல்வி, சாதி, சமயம், பால் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளாது; சமத்துவ அடிப்படையில் அரசியல் அரங்கில் பங்கேற்பதற்கு சர்வசன வாக்குரிமை வழிவகுக்கும் எனக் கருதப்பட்டது. ஆயினும் ஜனநாயகமயமாதல் செயல்முறை, சிறுபான்மை இனக்குழுமங்களையும் கொவிகம சாதியில்லாத பிற சாதியினரையும் அரசியல் விளிம்புநிலைக்குத் தள்ளுவதற்குக் காரணமாயிற்று. இவ்வாறான எதிர்மறை விளைவு ஏற்பட்டபோதும், சில முற்போக்காளர்களும், பெண்கள் சிலரும் சட்ட சபைக்குத் தெரிவு செய்யப்படும் நல்விளைவும் சர்வசன வாக்குரிமையின் பயனால் விளைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1919 ஆம் ஆண்டில் இலங்கைத் தேசிய காங்கிரஸும், 1920 களின் சட்ட சபைகளும் இலங்கையின் பல இனக்குழுமங்களையும், பல்வேறு சாதிகளையும் பிரதிநிதித்துவம் செய்தன. ஆனால் 1931 இல் சர்வசன வாக்குரிமை புகுத்தப்பட்டபின் உருவான சட்டசபைகளின் பிரதிநிதித்துவம் முக்கியமான வேறுபாட்டை உடையதாக இருந்தது. 1931 இன் பிந்திய சட்டசபைகளிலும் மந்திரிசபையிலும் சிங்கள கொய்கம சாதியினரின் ஆதிக்கம் மேலோங்கியது.
1917 ஆம் ஆண்டின் மந்திரிசபையிலும் கொய்கம சாதி மேலாதிக்கம் வெளிப்பட்டது. நில உடைமை, முதலாளித்துவம் ஆகிய இரு தளங்களில் தம் பொருளாதார வேர்களைக் கொண்டிருந்த நபர்கள் 19 ஆம் நூற்றாண்டு முதலாக காலனித்துவ அரசியல் களத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டதோடு, 20 ஆம் நூற்றாண்டிலும், பின்காலனித்துவ அரசியல் கட்டத்திலும் தம் பலத்தை உறுதிப்படுத்தினர். இதனை அடுத்து விளக்குவோம்.
19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் அரசியல் பிரதிநிதித்துவம் விசாலமடையலாயிற்று. இலங்கைத் தேசியக் கழகம் போன்ற பல அரசியல் அமைப்புகள் செயற்பட்டன. சிலாபம் கழகம் (Chilaw Association) என்ற பிராந்திய அரசியல் கழகம் ஒன்றும் சிலாபம் பகுதியை மையமாகக் கொண்டு இயங்கியது. சிலாபம் கழகத்தில் சி.ஈ. கொறயா, விக்டர் கொறயா என்ற இரு சகோதரர்கள் முக்கிய பங்கேற்றனர். இவர்கள் இருவரும் பெரும் செல்வந்தர்களாவர். சிலாபம் கழகத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க குழுவினர் பல கோரிக்கைகளை முன்வைத்துப் பிரசார இயக்கம் நடத்தினர். 1877 ஆம் ஆண்டின் தரிசு நிலச் சட்டத்திற்கு எதிர்ப்பு, புத்தளம் வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல், சட்டசபைக்கு ஆட்களைத் தேர்தல் முறைப்படி தெரிவு செய்தல் என்பன இவர்களின் பிரசார நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற முக்கிய விடயங்களாகும் (றொபேர்ட்ஸ், 1979:149 – 233). இவ்வாறாக அரசியல் சீர்திருத்தப் பிரசாரத்தில் ஈடுபட்ட கழகங்களும் அமைப்புகளும் 1919 ஆம் ஆண்டில் இலங்கைத் தேசிய காங்கிரஸில் ஒன்று சேர்ந்தன.

அரசியல் சீர்திருத்தம் கோரிய இலங்கைத் தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொன்னம்பலம் அருணாசலம் விளங்கினார். காங்கிரஸ் 50 உறுப்பினர் கொண்ட சட்டசபை அமைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. சட்டசபை உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கினர் தெரிவு செய்யப்பட்டோராயும், மீதி ஐந்தில் ஒரு பங்கினர் நியமனம் செய்யப்பட்டோராயும் இருக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கோரியது (வாக்குரிமை விரிவாக்கப்பட வேண்டும். பெண்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வாக்குரிமை வேண்டும் என்று காங்கிரஸ் கருதியது). நிறைவேற்றுச் சபையில் (Executive Council) அரைப்பங்கினர், சட்டசபையின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும், இலங்கையின் ஆளுநர் பிரித்தானிய பாராளுமன்ற அனுபவத்தை உடையவராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் காங்கிரஸ் முன்வைத்தது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் 1920 ஆம் ஆண்டில் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் பற்றி அறிவித்தனர். இதன்படி 37 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 16 பேர் தெரிவு செய்யப்பட்டோராய் இருப்பர் என்றும், 14 உத்தியோகத்தர்களும், 7 நியமன உறுப்பினர்களும் இச்சபையில் இடம்பெறுவர் என்றும் அறிவிக்கப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின்படி (ஆண்கள் மட்டும்), தேர்தல் மூலம் 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். ஆளுநர் நியமிக்கும் 7 உறுப்பினர்களும் சிறுபான்மையினரதும், ஐரோப்பியர்களதும் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வர் என்றும் கூறப்பட்டது. இவ்விதமாக சட்டசபையில் அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை பலம் இருப்பதற்கு வழி செய்யப்பட்டது. அத்தோடு நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இடம் பெறமாட்டார்கள் என்பதையும் 1920 இன் அரசியல் யாப்பு உறுதி செய்தது.
இலங்கைத் தேசிய காங்கிரஸ், யாப்புச் சீர்திருத்தம் பிற்போக்கானது, அது போதியதல்ல என்று கூறியது. அருணாசலம் தலைமையிலான காங்கிரஸின் தீவிரவாதிகள் புதிய சட்டசபையைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறினர். ஆளுநர் மனிங் பழமைவாதிகளான காங்கிரஸ்காரர்களை சட்ட சபைச் சீர்திருத்தத்தை ஏற்க வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் எனத் தூண்டுதல் கொடுத்தார். குறிப்பாக ஜேம்ஸ் பீரிஸை ஆளுநர் தம்வசமாக்கிக் கொண்டார். சில ஆண்டுகளுக்குள் மேலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்றும், ஆளுநர் நம்பிக்கையளித்தார். 1923-24 ஆம் ஆண்டுகளில் ஆளுநர் குறிப்பிட்ட மேலதிக சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 37 பேர் கொண்ட சட்டசபையில் 23 பேர் தெரிவு செய்யப்பட்டோராய் இருப்பர் என்பதே பிரதான சீர்திருத்தம். வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டதாய் பழைய முறைப்படி அமைந்தது. சில தொகுதிகள் இன அடிப்படையில் அமைந்தன. நியமன உறுப்பினர்களும் சட்டசபையில் இடம்பெற்றனர். சட்ட சபையில் அங்கம் வகிக்கும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 12 ஆகக் குறைக்கப்பட்டது. இருப்பினும் ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் (Reserved Powers) இருந்தன. அதனைவிட ஏதாவது ஒரு விடயத்தை அதிமுக்கியத்துவம் உடையது என ஆளுநர் கருதும்போது, உத்தியோகத்தர்களின் வாக்குகளை மட்டுமே அவ்விடயத்தினை முடிவு செய்வதற்குக் கணக்கில் கொள்ளலாம் என்ற விதி புகுத்தப்பட்டது.
மேலே குறிப்பிட்டவாறு சட்டசபையின் மீது அரசாங்கம் இறுக்கமான பிடியை வைத்துக்கொண்டது. ஆயினும் மனிங் சீர்திருத்தங்கள் இலங்கை அரசியலில் இரு போக்குகள் தோன்றுவதற்குக் காரணமாய் இருந்தன. அரசியலில் தீவிரவாதிகளாய் இருந்தோர் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுதல் இச்சீர்திருத்தங்களின் முதலாவது விளைவாகும்.
இலங்கைத் தேசிய காங்கிரஸில் இருந்த தீவிரவாதப் போக்குடையோர் தோற்கடிக்கப்பட்டனர். 1920ஆம் ஆண்டில் காங்கிரஸின் பழமைவாதிகளோடு சமரசம் செய்து கொள்ளப்பட்டது. இதனால் காங்கிரஸ், சுதந்திரத்திற்கான வெகுஜன இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதற்கு முயற்சி செய்யவில்லை. இந்தியாவைப் போன்று வெகுஜனங்களை அணிதிரட்டி ஒரு தேசிய இயக்கத்தை வழிநடத்துவதை காங்கிரஸ் கைவிட்டது. சட்ட சபையில் தீவரவாதப் பிரிவினரின் குரல் கேட்கவில்லை. அவர்கள் சிறுபான்மையினராகச் செயலிழந்தனர். இரண்டாவது விளைவு, சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் குறைந்ததாகும். கொழும்பு நகரின் ஏதாவது ஒரு தொகுதியில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று அருணாசலம் எதிர்பார்த்தார். காங்கிரஸ் அதனை அவருக்கு வழங்கவில்லை. அதனால் அருணாசலம் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். அத்தோடு 1924 இல் அவரது மரணமும் சம்பவித்தது.1
1920 இன் அரசியல் யாப்பு மாற்றங்கள், வாக்குரிமையை ஒரு குறுகிய பிரிவினருக்கு வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது. இக்காரணத்தால் முதலாளித்துவ வகுப்பு, சட்டசபையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி உள்ளூர் அரசியலில் செல்வாக்குப்பெற்றது. முதலாளித்துவ வகுப்பு தனது அதிகாரத்தை நிலைபேறுடையதாக வலுப்படுத்திக் கொண்டதுமல்லாது, அதன் பிரதிநிதிகள் தாமே நாட்டு மக்களின் தலைவர்கள் என்ற தோரணையில் நடந்து கொண்டனர். 1931 ஆம் ஆண்டில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டபோது இலங்கையின் தொழிற்கட்சியும், அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்த பிரித்தானிய தொழிற்கட்சியும், இலங்கை அரசியலில் ஆதிக்கம் பெற்ற சிறிய குழுவின் அதிகாரத்தளத்தை உடைக்க முடியும் என எதிர்பார்த்தன. ஆனால் நிலைமை சிறிதேனும் மாற்றமடையவில்லை. ஆழவேரூன்றிய நலன்களையுடைய குடும்பங்கள் 1930 களின் மந்தகாலப் பொருளாதார நிலையிலும் நலிந்து போகாமல் தப்பிப்பிழைத்து, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் தம் நிலையை மேலும் உயர்த்திக்கொண்டு முன்னேறின. சர்வசன வாக்குரிமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட இந்தக் குடும்பங்கள் 1947 வரையான சட்டசபை அரசியலில் தமது அதிகாரத்தைச் செலுத்தியதோடு, அதற்குப் பின்னரும் அரசியல் அதிகாரம் உடையனவாய் விளங்கின. 19 ஆம் நூற்றாண்டில் எக்குடும்பங்கள் செல்வத்தில் உயர்ந்து, புகழின் உச்சத்திற்குச் சென்றனவோ, அக்குடும்பங்கள் அரசியல் அதிகாரத்தைத் தமதாக்கிக் கொண்டன. இதற்குச் சில விதிவிலக்கான உதாரணங்களும் உள்ளன என்பது உண்மையே. 19 ஆம் நூற்றாண்டின் அறியப்பட்டோரும் (Somebodies), 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அநாமதேயங்களாக இருந்து பின்னர் அறியப்பட்டோர் ஆனவர்களும், முன்னையோருடன் சேர்ந்து தாமும் மக்கள் தலைவர்களே என்று கூறிக் கொள்வதையும் காணமுடிந்தது. தீவிரவாதிகளான அநாமதேயர்கள் 1930 களில் இடதுசாரிக் கட்சிகள் ஊடாக அரசியல் அரங்கிற்குள் நுழைவதையும் காண்கிறோம் (அமரசிங்க, 1999).
நில உடைமை வர்க்கத்தினதும் வர்த்தக வர்க்கத்தினதும் ஆதிக்கம் மேலோங்குதல்
1921 – 24 சட்டசபையிலும், 1925 – 30 சட்டசபையிலும், 19 ஆம் நூற்றாண்டில் எழுச்சிபெற்ற பணக்காரக் குடும்பங்களதும் நில உடைமையாளர்களதும் வாரிசுகள் தமது அரசியல் ஆதிக்கத்தைப் பலப்படுத்தினர். இக்குடும்பங்களின் பிரமுகர்களது மகன்மாரதும், மருமக்கள்மாரதும் குரல் சட்டசபையில் ஓங்கி ஒலிக்கலாயிற்று. இவர்களில் பலர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக இருந்தனர்.2 ஜேம்ஸ் பீரிஸ் (கொழும்பு நகரம்), யாக்கோப் டி மெல் அவர்களின் மருமகனாவார். சி.எச்.ஸட். பெர்னாண்டோ (வடமேற்கு பிரிவு), சி.எம். பெர்னாண்டோவின் மகன் ஆவார். அத்தோடு இவர் சாள்ஸ் டி சொய்சாவின் பேரனும், பஸ்ரியன் பெர்னாண்டோவின் மருமகனும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டி.எஸ். சேனநாயக்க (நீர்கொழும்பு), டொன் ஸ்பேட்டர் சேனநாயக்கவின் புத்திரராவர். டாக்டர் டபிள்யூ.ஏ.டி. சில்வா (மத்திய மாகாணம்), சைமன் பெர்னாண்டோ சந்திரசேகரவின் மருமகனாவார். ஏ.சி.(ஜெராட்) விஜயக்கோன் (மத்திய மாகாணம்), என்.டி.பி. சில்வாவின் மருமகனாவார். சி.ஈ. கொறயாவும் (வடமேற்கு மாகாணம்), அவரது சகோதரர் விக்டர் கொறயாவும் (கொழும்பு வடக்கு), செல்வாக்குமிக்க கொறயா குடும்ப வழித்தோன்றல்கள். டபிள்யூ.எம். ராஜபக்ச (மேற்கு மாகாணம்), ஜே.டி.எஸ். ராஜபக்ச என்ற நில உடைமையாளரின் புதல்வராவார். டி.எச். கொத்தலாவல (ஊவா மாகாணம்), முகாந்திரம் டி.சி. கொத்தலாவலவின் மகன் ஆவார். பி.டி.எஸ். விக்கிரமநாயக்க (ஹம்பாந்தோட்ட), பெரும் நில உடைமையாளராக விளங்கியவர். மேற்குறித்த தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை விட, சாள்ஸ் டி. சொய்சாவின் மருமகனான மார்க்கஸ் பெர்னாண்டோ, யாக்கோப் டி மெல் அவர்களின் மகனான எச்.எல் (ஹென்றி) டி மெல் என்ற இருவர் சட்ட சபையின் நியமன உறுப்பினர்கள் ஆயினர் (டி சில்வா, 1979). 1930 – 31 காலத்தில் சட்ட சபையின் உறுப்பினராக இருந்த டாக்டர் ஈ.ஏ. குரே (கொழும்பு தெற்கு), புகழ்மிக்க ஒரு குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டார். இவரின் மனைவி பேர்ணிஸ் பீரிஸ், 19 ஆம் நூற்றாண்டில் பிரசித்திபெற்ற சாராயக் குத்தகைச் சிண்டிகேட்டின் பங்காளரும், இலங்கையின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான ஹன்வடுகே எச்.ஜே. பீரிஸ் அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது. ஹன்வடுகே எச்.ஜே. பீரிஸ் அவர்களின் விதவை மனைவி 1927 இல் 4,234 ஏக்கர் தென்னந் தோட்டங்களின் உடைமையாளராக இருந்தார் (றொபேர்ட்ஸ், 1979). 1930 களில் தமது அரசியல் பிரசாரங்களின் போது குரே தமக்குக் கிடைத்த சீதனத்தைக்கொண்டு ஆடம்பரமாகச் செலவு செய்தார்.
மேற்குறித்த சட்டசபை உறுப்பினர்களில் பலர் பெரும் நில உடைமையாளர்கள் என்பதும், அவர்கள் எந்தெந்தப் பகுதிகளில் தமது பொருளாதார வளங்களையும் நலன்களையும் வைத்திருந்தார்களோ, அந்தந்தப் பகுதிகளின் பிரதிநிதிகளாகச் சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்ததும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். உதாரணமாக சி.எச்.ஸட். பெர்னாண்டோவின் குடும்பம், வடமேற்கு மாகாணத்தில் பெரும் தென்னந் தோட்டங்களை உடைமையாகக் கொண்டிருந்தது. டி.எஸ். சேனநாயக்கவின் தந்தையார் நீர்கொழும்பில் குத்தகைக்காரராகவும், அப்பகுதியின் நில உடைமையாராகவும் இருந்தார். சி.ரி. கொறயாவிற்கு சிலாபம் பகுதியில் தென்னந் தோட்டங்கள் இருந்தன. நீர்கொழும்பைச் சேர்ந்த டபிள்யூ.எம். ராஜபக்ச அப்பகுதியில் பெரும் தென்னந் தோட்டங்களையும் கறுவாத் தோட்டங்களையும் வைத்திருந்தார். டி.எச். கொத்தலாவல (ஊவா பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்தவர்) ஊவா பகுதியின் மிகப்பெரிய நில உடைமையாளராவார். அவரின் தந்தையார் அப்பகுதியில் ஆயக் குத்தகை மூலம் பெரும் செல்வம் சேர்த்தவர்.3
1920 சட்டசபையின் முக்கிய உறுப்பினர்களின் சொத்துடைமை விவரம் கீழே தரப்பட்டுள்ளது. பெருந்தோட்டங்கள், பயிர்ச்செய்கைக் காணிகள், தரிசு நிலங்கள் என்ற வகையில் இச்சொத்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வட்டவணை றொபர்ட்ஸ் (1979), பதிவு செய்துள்ள தரவுகளில் இருந்து தயாரிக்கப்பட்டது.
மொத்த விஸ்தீரணம் (ஏக்கரில்) | தெங்கு | ரப்பர் | தேயிலை | ஏனைய நெற்காணி நிலங்கள் | |
என்.எச்.எம். அப்துல் காதர் | 521 | – | – | 149 | – |
சி.ஈ. கொறயா | 659 | 530 | – | – | – |
ஹென்றி டி மெல் | 7254 | 3973 | 895 | – | 83 |
டாக்டர்டபிள்யூ.ஏ.டி. சில்வா | 3687 | 1131 | 500 | 275 | 600 |
சி.எச்.ஸட். பெர்ணாண்டோ | 600 | 300 | 300 | – | – |
மார்கஸ் பெர்ணாண்டோ | 3942 | 1545 | 1399 | – | 15 |
ஓ.ஐ.எம். மாக்கன் மாக்கர் | 731 | 246 | 390 | – | – |
டி.எஸ். சேனநாயக்க | 1414 | 751 | 317 | – | 95 |
ஜேம்ஸ் பீரிஸ் | 1163 | 538 | 380 | 55 | – |
டபிள்யூ.எம். ராஜபக்ச | 1664 | 1664 | – | – | – |
ஏ.சி. ஜெராட் விஜயக்கோன் | 596 | 429 | 126 | – | 29 |
வி.டி.எஸ். விக்கிரமநாயக்க | 525 | 350 | – | – | – |
றொபேட்ஸ் அவர்களின் பட்டியலில் இடம்பெறாத நில உடைமையாளர்கள் பலரும் சட்டசபையில் உறுப்பினர்கள் ஆயினர். அவர்களின் பெயர்கள் வருமாறு: டாக்டர் ஈ.ஏ. குரே, டி.எச். கொத்தலாவல, ஜி.ஈ. மடவெல, பி.பி. ரம்புக்வெல, ஏ.எவ். மொலமுரே, ஏ.எச்.ஈ. மொலமுரே, ரி.பி. பானபொக்க (இளையவர்), பொராஸ்டர் ஒபயசேகர. இவர்களுள் இறுதியாகக் குறிப்பிட்ட பொராஸ்டர் ஒபயசேகரவின் தந்தை எஸ்.சி. ஒபயசேகர (1927 இல்) 2,276 ஏக்கர் காணியின் சொந்தக்காரராக இருந்தார் (மேலது).
சட்டசபையில் 1920 களில் உறுப்பினராகப் பதவி வகித்தோரில் பலர் பெரும் தனவந்தர்களான கராவ சாதிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். 19 ஆம் நூற்றாண்டில் சாமான்யர்களாக இருந்தவர்கள், சாராயக் குத்தகை, காரீயச் சுரங்கத் தொழில், பெருந்தோட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்து உயர்நிலைக்கு வந்தனர். சாராயக் குத்தகையாளர்கள் வர்த்தகக் ‘கார்ட்டல்’களை உருவாக்கினர். அத்தோடு திருமணத் தொடர்புகள் மூலம் குடும்ப கார்ட்டல்களையும் உருவாக்கினர். இருப்பினும் பல ஆண்டுகாலமாக இவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் எட்டாக் கனியாகவே இருந்தது. இக்குறை இக்குடும்பங்களிலிருந்து தோன்றிய மகன்மாரும், மருமகன்மாரும் அடைந்த அரசியல் வெற்றியூடாக நிவர்த்தி செய்யப்பட்டது.
உதாரணங்கள் வருமாறு:
சட்டசபை உறுப்பினர் | பெண் கொடுத்த நபர் |
சி.எச். பெர்னாண்டோ | ஹெடிட்டிகன்டகே பெர்னாண்டோ |
டாக்டர் டபிள்யூ.ஏ.டி. சில்வா | முத்துதந்திரிகே பெர்னாண்டோ |
ஜேம்ஸ் பீரிஸ் | விதானலாகே டி மெல் |
மார்க்கஸ் பெர்னாண்டோ | வறுஸகென்னடிகே சொய்சா |
டாக்டர் ஈ.ஏ. குரே | ஹன்வடுகே பீரிஸ் |
இதனைவிட சாள்ஸ் டி சொய்சாவின் மருமகனும், அவரது பேரனும் சட்டசபை உறுப்பினர்களாய் இருந்தனர். யாக்கோப் டி மெல்லின் மகனும், மருமகனும் சட்டசபையில் இருந்தனர். சட்ட சபை உறுப்பினர்களாக இருந்த கராவ சாதிப் பிரமுகர்களில் பலர், ஒருவருக்கு ஒருவர் கிட்டிய உறவுக்காரர்களாயும் இருந்தனர். சி.எச்.ஸட். பெர்னாண்டோ, மார்க்கஸ் பெர்னாண்டோவின் சகோதரரின் புதல்வராவார். ஜேம்ஸ் பீரிஸ், எச்.எல். டி மெல் என்ற இருவரும் திருமண வழியில் மைத்துனர்களாவர். கொய்கம சாதியின் புதுப்பணக்காரார்களும் இவ்வாறே 1920 களில் கிடைத்த ஆரம்ப வெற்றிகள் மூலம் அரசியல் பிரவேசம் செய்தனர். ஆட்டிகல, சேனநாயக்க, கொறயா, கொத்தலாவல, நாணயக்காரகே சில்வா என்பன இப்புதுப் பணக்காரக் குடும்பங்களாகும். ஒன்றோடொன்று உறவுப் பிணைப்புகளை உடைய இக்குடும்பங்களின் மகன்மாரும், மருமகன்மாரும் அரசியலில் பிரகாசிக்கத் தொடங்கினர். புகழ் பெற்ற முதலியார்கள் குழுமத்தின் அரசியல் அதிகாரமும் எஸ்.சி. ஒபயசேகரவின் மகன் பொரஸ்டர் ஒபயசேகர (தென்மாகாணம் – மத்தி), ஓ.சி. திலகரட்ண (தென் மாகாணம்) ஆகியோர் வழி தொடரலாயிற்று. சலாகமச் சாதியில் இருந்து டபிள்யூ.எம். ராஜபக்ச என்பவர் மட்டும் சட்ட சபையில் உறுப்புரிமை பெற்றார். இவர் நீர்கொழும்பின் புகழ்பெற்ற கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கண்டியின் நிலப்பிரபுக் குடும்பங்களும் பிரதிநிதித்துவத்தைத் தேடிக்கொண்டன. அந்நிய வர்த்தக சமூகத்தினருக்கும், பெருந்தோட்ட உடைமையாளர்களுக்கும், ஆளுநர் உத்தியோக முறையிலான நியமனங்கள் மூலம் சட்டசபை உறுப்பினர் பதவிகளை வழங்கினார்.4

1920 களின் சட்டசபையில் உயர்தொழில்களில் (Professions) இருந்தோர் பலர் முதற்தடவையாக உறுப்பினராவதையும், அவ்வழி அரசியலில் பிரவேசிப்பதையும் காண்கிறோம். 1927 ஆம் ஆண்டில் இலங்கைத் தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவரும் சட்டவாதியுமான ஈ.டபிள்யூ. பெரேரா, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரான சாதிகளின் உயர்வுக்காக உழைத்தவரும், கண்டியில் சட்டவாதியாகப் பணிபுரிந்தவரும், 1920 களில் தொழிற்சங்க இயக்கத் தலைவருமாக இருந்த ஜோர்ஜ். ஈ.டி. சில்வா, மலே சமூகத்தவரைச் சேர்ந்த கல்வியாளரும், முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தியில் அக்கறைகொண்டு உழைத்தவருமான ரி.பி. ஜயா, தஞ்சாவூரில் இருந்து வந்தவரும், பத்திரிகையாளரும், 1920 களில் பெருந்தோட்டப் பகுதிகளிலும் நகரப் பகுதியிலும் தொழிற்சங்கங்களை ஒழுங்கமைத்தவருமான கோ. நடேசய்யர், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுவிலக்கு இயக்கத்தில் ஈடுபட்டவரும், பௌத்தர்களின் கல்வியில் காட்டிய ஈடுபாட்டால் புகழ்பெற்றவருமான டி.பி. ஜயதிலக, கல்வியாளரும், பின்னர் இலவசக் கல்வித்திட்டத்தை முன்னெடுத்தவருமான சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா ஆகியோர் சட்டசபை உறுப்பினர்களாக அரசியலுக்குள் நுழைந்த உயர்தொழில் வகுப்பினராவர். வடமத்திய மாகாணத்தில் அரசரங்க அதிபராக இருந்து அப்பகுதியின் ஏழை மக்களின் நன்மைக்காக உழைத்த முன்னாள் சிவில் சேவை அதிகாரியான எச்.ஆர். பிரீமன் என்ற பிரித்தானியரும் சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் சட்ட சபையில் சிறுபான்மையினராக இருந்தபோதும், அதில் அங்கம் வகித்த பழமைவாத நில உடைமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் மாறுபட்ட ஒரு போக்கைப் பிரதிநிதித்துவம் செய்தனர். நில உடைமையாளர் வகுப்பின் நலன்கள் அரசியல் பழமைவாதத்தோடு நெருங்கிய உறவுடையதாய் இருத்தல் இயல்பே. ஆயினும் இவ்விதிக்கு விலக்கான சில தனிநபர்களும் இருந்தனர். சி.எச்.ஸட். பெர்னாண்டோவும், விக்டர் கொறயாவும் நகரத் தொழிலாளர் இயக்கத்தோடும், இலங்கைத் தொழிற்கட்சியோடும் 1920 களில் சம்பந்தப்பட்டிருந்தனர். சி.ஈ. கொறயா விவசாயிகளின் உரிமைகளுக்காக உழைத்தவர் (ஜயவர்த்தன, 1972). இத்தனிநபர்கள் 1920 களில் சட்டசபையில் உறுப்பினர்களாய் இருந்த கிளர்ச்சிச் சிந்தனைப் போக்குடையவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள்.

குறிப்புகள்
1. 1908 முதல் 1920 வரை சட்டசபையில் சிறுபான்மையினருக்கு கூடிய பிரதிநிதித்துவம் இருந்து வந்தது. முக்கியமாக உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள்: 1908-11 சட்ட சபையில் 8 அங்கத்தவர்களில் சிங்களவர் 2, சிங்களவர் அல்லாதவர் 3 (தமிழர் 1, முஸ்லிம் 1, பறங்கியர் 1), பிரித்தானியர் 3 என்ற வகையில் நியமனங்கள் இடம்பெற்றன. 1917 அளவில் 10 உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களில் சிங்களவர் 3, தமிழர் 3, முஸ்லிம் 1, பறங்கியர் 1, பிரித்தானியர் 2 என்ற வகையில் நியமனங்கள் இடம்பெற்றன. 1920 இன் சீர்திருத்தங்களின் பயனால் சிங்களவர்களின் விகிதாசாரம் அதிகரிக்கும் என்பதை அருணாசலம் உணர்ந்து கொண்டார். வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்குக் கிடைக்கவுள்ள ஆசனங்களுக்கு மேலதிகமாக, கொழும்பு நகரில் தெரிவு செய்யப்படுவோருக்கான 2 ஆசனங்களில் ஒன்றைத் தமிழர்களுக்கு ஒதுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 1920-24 சட்டசபையில் மொத்தம் 37 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களுள் 9 பேர் தமிழர்களாவர். 1931 சட்டசபையில் 5 தமிழர்களும், 1936 இல் 10 தமிழர்களும் இருந்தனர்.
2. 1920-1947 காலப்பகுதியில் சட்டசபையில் உறுப்பினர்களாய் இருந்தோர் விபரம் ‘G.P.S.H. De Silva, Statistical Survey of Election to the Legislature of Sri Lanka, 1911 – 1977’ என்ற நூலிலிருந்து பெறப்பட்டது. வெளியீடு: மார்க்கா நிறுவனம், கொழும்பு (1979).
3. சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட கண்டியின் நில உடைமையாளர்கள் வருமாறு: (1) ஜோர்ஜ் எட்வர்ட் மடவெல (வடமேற்கு மாகாணம் – கிழக்கு); இவரின் தந்தை மடவெல திஸ்ஸநாயக்க நிலமே ஆவார். திஸ்ஸநாயக்க நிலமே பெரும் நில உடைமையாளர்; அவரது மனைவி, சி.ஈ. தென்னக்கோன் றட்டே மஹமத்தயாவின் மகளாவார் (றைட், 1907: 720). (2) பி.பி. றம்புக்வெல (மத்திய மாகாணம் – கிராமப்புறம்). (3) ஏ.எல். மொலமுரே (கேகாலை), டி.ஏ.எச்.ஈ. மொலமுரே (அனுராதபுரம்) ஆகியோர் உறுப்பினர்களாயினர். இவர்களைவிட ரி.பி. பானபொக்கே (இளையவர்) சட்ட சபைக்கு நியமிக்கப்பட்டார். நியமனம் பெற்ற முதலாவது கண்டியரான இவர் டிக்கிரி பண்டா பானபொக்கேயின் மகனாவார். இளைய பானபொக்கே இன்னொரு நிலப்பிரபுக் குடும்பத்தினைச் சேர்ந்த மொறவில்ல கெப்பிட்டிபொல றட்டே மஹாமத்தயாவின் மகளை விவாகம் செய்தார்.
4. நியமனம் பெற்றவர்கள் விபரம் வருமாறு: பிரித்தானியர் 2; ரி.வை. றைட் என்பவர் தோட்டத்துறைப் பிரதிநிதியாக, தோமஸ் வில்லியர்ஸ் என்பவர் வர்த்தக நலன்களின் பிரதிநிதியாக. ஈ.ஜி. ஆதம்மலி கொழும்பில் முன்னணியில் திகழ்ந்த ‘போறா’ வர்த்தகர், ஐ.எக்ஸ். பெரேரா பரதவ வர்த்தகர். இவர் இந்திய வர்த்தக நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தார். இந்த நியமனங்களில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் வர்த்தக நலன்களுடன் ஒன்றுபடுவதைக் காணலாம். இதேபோன்று உள்ளூர் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்தோர், பிரபல மாணிக்கக்கல் வியாபாரியான எச்.எம். மாக்கான் மாக்கார், என்.எச்.எம். அப்துல் காதர் ஆகியோராவர். இவர்கள் நில உடைமையாளர்களாகவும் இருந்தனர் (G.P.S.H. De Silva, 1979).