குட்டிமணி, தங்கத்துரை கைது – 1981.04.05
1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பருத்தித்துறைப் பிரதேசத்தில் உள்ள மணல்காடு என்னும் இடத்தில் இலங்கை கடற்படையின் சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் குட்டிமணி அவர்கள் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது இனத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து சிறைச்சாலையிலும், தலைமறைவிலுமாகத் தனது வாழ்க்கையை மேற்கொண்டவர். தங்கத்துரை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராவார். இவர் தொண்டமானாறைச் சேர்ந்தவர். 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைப் படுகொலையில் இருவரும் மரணமானார்கள். குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இலங்கை நீதிமன்றம் இருவருக்கும் ஏற்கனவே மரண தண்டனையை விதித்திருந்தது. நீதிமன்ற விசாரணையின் போது “ஆயுதங்கள் மீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்லர்” என்ற தங்கத்துரையின் சாட்சியம் அன்றைய காலகட்டத்தில் முக்கியமாகப் பேசப்பட்டது.
யாழ் நாச்சிமார் கோவிலடித் தாக்குதல் – 1981
1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலுக்கான தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இரவு 8.15க்கு இக்கூட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது புளொட் இயக்கத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். இதில் கனகசுந்தரம், புஞ்சிபண்டா ஆகிய இரு பொலிசார் மரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பொலிசார் மக்கள் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டனர். கூட்டமேடை சிதைக்கப்பட்டது. ஒலிபெருக்கிகள் அடித்து நொறுக்கப்பட்டன. நாச்சிமார் கோவிலுக்குள்ளும் சப்பாத்துக் கால்களுடன் பொலிசார் நுழைந்து ஆலயப் பொருட்களைச் சேதப்படுத்தினர். கோயில் சிற்பத் தேருக்கும் தீ மூட்டப்பட்டது. நன்கு பாதுகாக்கப்பட்ட தகரக் கொட்டகைக்குள் தேர் இருந்ததினால் தீ பரவவில்லை. கூட்டத்திற்கு மின்சார வெளிச்சம் செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட மின்பிறப்பாக்கியும் தீயிடப்பட்டது. கட்டட வேலைகள் இடம்பெற்ற ராஜகோபுரத்தைச் சுற்றி காட்டுத்தடிகள் கொண்டு அடைக்கப்பட்ட கிடுகு மறைப்பும் தீயிட்டு எரிக்கப்பட்டது. கோவில் அருகில் இருந்த வீடுகள் எரியூட்டப்பட்டன. தேர்முட்டி அருகே இருந்த வீடு முழுமையாக எரியூட்டப்பட்டது. அருகிலிருந்த கடைகள் எரியூட்டப்பட்டன.
யாழ் நகர் எரிப்பு – 1981
மே 31 ஆம் திகதி இரவு யாழ் நகரக் கடைகள் எரியூட்டப்பட்டன. பஸ் நிலையத்தில் இருந்த பூபாலசிங்கம் புத்தகசாலை முழுமையாக எரியூட்டப்பட்டது. ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான நூல்கள் தீயில் கருகின. அதே வரிசையில் இருந்த 27 கடைகள் தீயில் கருகின. தீயை அணைக்க உரிமையாளர்கள் முயன்ற போதும் துப்பாக்கிகளுடன் நின்றவர்கள் அதிகாலை ஒரு மணி வரை கடைகளை நெருங்கவிடவில்லை. இதே பஸ் நிலையக் கடைகள் 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதியும் எரியூட்டப்பட்டன. நவீன சந்தைக் கடைகளும் எரியூட்டப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான காமினி திஸநாயக்காவினாலும், கிறிஸ்மத்தியுவினாலும் தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட 150 காடையர்களே பொலிசாருடன் இணைந்து இத்தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

யாழ்ப்பாண பொது நூலகம் எரிப்பு – 1981
இதே தினத்தில் இரவு 7 மணிக்கும் 7.30க்கும் இடையில் யாழ்ப்பாண பொது நூலகம் தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட காடையர்களினால் எரியூட்டப்பட்டது. நூலக எரிப்பினால் 97,000 நூல்களும் அரிய ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் பிரதிகளும் எரிந்து சாம்பலாகின. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் சம்பந்தமான ஓலைச்சுவடிகளும் சாம்பலாகின.

இரவல் வழங்கும் பகுதியில் இருந்த நூல்களும், உடன் உதவும் பகுதியிலிருந்த இலகுவில் கிடைக்க முடியாத நூல்களும் எரிந்து சாம்பலாகின. நூலகம் எரிக்கப்பட்டமையை கேள்வியுற்ற சுவாமி ஞானப்பிரகாசரின் மாணவரும் ஒப்பியல் ஆய்வாளருமான வணக்கத்திற்குரிய தாவீது அடிகள் அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பினால் மரணமடைந்தார். நூலக ஊழியராகப் பணிபுரிந்த பற்குணம் என்பவர் மனநோயாளியானார். நூலகம் எரிந்து கொண்டிருப்பதை 10.15 மணியளவில் அறிந்த மாநகர ஆணையாளர் சிவஞானம் தீயை அணைப்பதற்கு தண்ணீர் பவுசர்களை அனுப்பிய போதும், பொலிசார் நூலகத்திற்குள் செல்லவிடவில்லை. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் தேர்தல் கடமைக்காக தங்கியிருந்த பொலிசாரே பொது நூலகத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என ஆணையாளர் சிவஞானம் விசேட பொலிஸ் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.
ஈழநாடு காரியாலயம் எரிப்பு
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அதே தினம் இரவு ஈழநாடு அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது. தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு.கே.சி. தங்கராசாவினால் தொடங்கப்பட்ட ஈழநாடு, கொழும்புக்கு வெளியே அச்சிடப்படும் ஒரே பத்திரிகையாகும்; யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரேயொரு தினசரிப் பத்திரிகை. கட்சி சார்பற்ற, உண்மையான செய்திகளை விருப்பு-வெறுப்பின்றி வழங்கிய நாளேடாக விளங்கிய ஈழநாடு அச்சிடப்பட்ட காரியாலயமும் சிங்களக் காடையர்களால் எரிக்கப்பட்டது. இரவு 9.20க்கு காரியாலயம் எரிக்கப்பட்டது. அச்சியந்திரத்திற்குக் கீழே டயர்களை வைத்துத் தீயிட்டனர். ஊழியர்களின் சைக்கிள்களும் மோட்டார் சைக்கிள்களும் தீயில் கருகின. முகாமையாளரும் உதவியாளரும் காயமடைந்தனர். ஊழியர்கள் வேலி பாய்ந்து தப்பினர். 23 வருட பத்திரிகைத் தொகுப்புகளும் சாம்பலாகின. இயக்குநர் சிவானந்தமும், ஊழியர் சச்சிதானந்தமும் மேல்மாடியிலுள்ள குளியலறையில் ஒளிந்திருந்து தீக்காயங்களுடன் தப்பினர்.
யாழ்ப்பாணம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு எரிப்பு
இதே இரவு யாழ்ப்பாணம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியது. அவரது ஜீப் வாகனமும் எரிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் அவரது மனைவியும் அணிந்திருந்த ஆடைகள் தவிர்ந்த அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன. நகைகளும் தீக்கிரையாகின. பாராளுமன்ற உறுப்பினரும் அவரது மனைவியும் பின்பக்கக் கதவால் உயிர்தப்பி ஓடினர். யோகேஸ்வரனின் விலை மதிக்க முடியாத சட்ட நூல்களும், வழக்குகள் சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைச் செயலகம் எரிப்பு
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பிலிப் மருத்துவமனைக்கு அருகில் அமைந்திருந்தது. யோகேஸ்வரனின் வீட்டை எரித்தவர்கள் அதே தினம் இரவு தலைமை அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். தந்தை செல்வா, ஜீ.ஜீ. பொன்னம்பலம் என்பவர்களின் பிரேம் போடப்பட்ட நிழற்படங்களை கழற்றி நடுவீதியில் போட்டு உடைத்தனர். அலுவலகத் தளபாடங்கள் சிலவற்றையும் நடுவீதியில் அப்படங்களுக்கு மேல் போட்டுத் தீயிட்டுக் கொளுத்தினர். 40 பேர் வரை ஒரு மணி நேரம் நின்று எரித்ததாகக் கூறப்படுகிறது. அலுவலகத்திற்கு அருகில் இருந்த கடையும் எரிக்கப்பட்டது. இக்கடைக்கு அருகில் இருந்த மருத்துவர் செபஸ்டியாம்பிள்ளையினது வீட்டின் ஒரு பகுதியும் எரிக்கப்பட்டது.
சுன்னாகத்திலும் தீ வைப்பு
இதே தினத்தன்று இரவு சுன்னாகத்திலும் சில கடைகள் கொள்ளையிடப்பட்டு தீவைக்கப்பட்டன. சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த கடைகளே இவ்வாறு தீ வைக்கப்பட்டன. உரங்கள், சீமெந்து விற்கும் கடை, சிவாஸ் கூல்பார், பலசரக்குக் கடை என்பன எரிந்தவைகளில் முக்கியமானவைகளாகும். சுன்னாகத்தின் மிகப்பெரும் பழைய கட்டடமான சந்தைக் கட்டடம் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்த சந்தைக் கட்டடம் முழுவதும் சொக்கட்டான் வடிவத்தினதாகும். இச்சந்தைக் கட்டடத்தினுள் 40 வியாபார ஸ்தலங்கள் இருந்தன. அவையெல்லாம் எரிந்து போயின.
சுன்னாகம் சந்தைக்கு அருகில் காங்கேசன்துறை வீதியில் காணப்படும் சிறிய கோவிலுக்கும் தீயிடப்பட்டது. இதனால் அக்கோவிலின் தலவிருட்சமான புளிய மரம் தீயில் கருகி நடுவால் தெறித்து முறிந்தது. அதே நாள் சுன்னாகம் சந்தியில் உள்ள இந்திரபவன் கூல்பார், ராஜா ஸ்டோர்ஸ் என்பன சூறையாடப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டன. அதே நாள் கொட்டடி சிவன் பண்ணை வீதியில் உள்ள யாழ் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கக் கிளையும் தீ வைக்கப்பட்டது. இதில் 46,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து அழிந்தன.
உயரதிகாரிகளின் மாநாடு
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்து முடிந்த அசம்பாவிதங்களை நிறுத்தவும், அது சார்ந்து முடிவெடுக்கவும் உயரதிகாரிகள் மாநாடு கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் திரு. ஆர்.பி. வெரப்பிட்டியா தலைமை வகித்தார். பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் சி.ஏ. தர்மபால, அமைச்சரவைச் செயலாளர் ஜீ.வி.பி. சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் அனாசெனவிரத்ன, பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க ஆகியோரும், வடமாகாண இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதி எட்வர்ட் குணவர்த்தன, வடமாகாணப் பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ்வரன், பொலிஸ் மா அதிபர் டெனிஸ் பீற்றர் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தல்.
- யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை இராணுவமும் கடற்படையும் பொறுப்பெடுத்தல்.
- பாதுகாப்புக் கடமைகளுக்கு என பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க நியமிக்கப்படல்.
- யாழில் நடந்த குழப்பங்களுக்கு அங்கு நிரந்தரமாக இருக்கும் பொலிசார் காரணமில்லை எனவும், தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தென்னிலங்கையிலிருந்து வந்த 400 பொலிஸ் உத்தியோகத்தர்களே காரணம் என்றும், அதன் அடிப்படையில் அவர்களைத் திருப்பி அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
காங்கேசன் துறையில் தீவைப்பு
காங்கேசன் துறையில் வரிசையாக இருந்த கடைகள் அனைத்தையும் கொள்ளை அடித்து பின்னர் எரியூட்டினர். இவற்றில் ஐக்கிய தேசியக் கட்சி அபேட்சகர் திரு. பாலமூர்த்தி என்பவருடைய ஒரு கடையும் எரிந்து போனது. செல்லையா அன்ட் பிரதர்ஸ் கடைக் கட்டடங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதில் சுமார் 8 இலட்சம் பெறுமதியான பொருட்கள் அழிந்தன.
தமிழ்த் தலைவர்கள் கைது செய்யப்படல்
1981 ஆம் ஆண்டு ஜூன் நான்காம் திகதி அதிகாலை 2.45 மணிக்கு தமிழர் தலைவர் திரு அ. அமிர்தலிங்கம் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சிவசிதம்பரம், மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வி. தர்மலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு பலாலி இராணுமுகாமுக்குக் கொண்டுவரப்பட்டனர். பின்னர் ஜனாதிபதியின் பணிப்பின் பெயரில் விடுதலை செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழப்பகரமான சூழலில் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. எனினும் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி தேர்தல் நாடு பூராகவும் நடைபெறும் என அரசு அறிவித்தது. தேர்தல் கடமைகளுக்காக 2000 தொடக்கம் 4000 உத்தியோகத்தர்கள் தென்னிலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்டனர். இதில் 300 பேர் மாவட்ட அமைச்சருக்கும் அரசாங்க அதிபருக்கும் மருத்துவச் சான்றிதழ்களை அனுப்பிவிட்டு வராமல் நின்றனர். 39 பஸ்களில் தேர்தல் உத்தியோகத்தர்கள் வந்தனர். விரலுக்கு மை பூசுவதைத் தவிர வேறு ஏதும் அறியாதவர்களாக இருந்தனர்.
வாக்களிப்பு நிலையங்களில் சிரேஷ்ட உத்தியோகத்தர்களாக தென்னிலங்கையிலிருந்து வந்த சிங்களவர்களே நியமிக்கப்பட்டனர். ஆசிரியர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், கிராமச் செயலாளர், விற்பனை இலாகா கொள்முதல் உத்தியோகத்தர்கள், மின்சார போர்மன்கள் எனப் பலரும் நியமிக்கப்பட்டனர். அத்துடன் குருநாகல் கச்சேரியைச் சேர்ந்த இரண்டு பியோன்களும் சிரேஷ்ட அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
இலங்கை முழுவதற்குமான அபிவிருத்திச் சபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் யாழ்ப்பாண மாவட்ட முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. யோகேந்திர துரைச்சாமி, யாழ்ப்பாணம் மாவட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்ற போதிலும் சட்டப்பிரச்சினை காரணமாக அதன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். பின்னர் ஜனாதிபதியின் பணிப்பின் பெயரில் 1981 ஆம் ஆண்டு ஜூன் 16 இல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி தமிழர் விடுதலைக் கூட்டணி அனைத்து ஆசனங்களையும் யாழ் மாவட்ட ரீதியாகப் பெற்றுக்கொண்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அம்பாறை மாவட்டம் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அம்பாறை மாவட்டத்திலிருந்து வேல்முருகு என்ற தமிழ்ப் பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தலைவராக செனட்டர் நடராசா பொறுப்பேற்றார். ஆறாவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தவுடன் இவர்கள் அனைவரும் பதவி துறந்தனர்.
அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்
யாழ்ப்பாண அசம்பாவிதங்களின் பின்னர் அமைச்சர் வி.ஜே.மு. லொக்குபண்டார தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து இனத்துவேசத்துடன் உரையாற்றினார். அதே நாள் விவாதத்தில் அமைச்சர் திருமதி விமலா கன்னங்கரா “எங்களுக்குத் தேவையானபடி தான் நாங்கள் ஆட்சி நடத்துவோம். நாங்கள் இந்த நாட்டில் சிங்களவராகத் தான் பிறந்தோம். பௌத்தராகத் தான் பிறந்தோம். நாங்கள் பெரும்பான்மையினர். நாங்கள் சிறுபான்மையினருக்கு அடிபணிய முடியாது. பெரும்பான்மையினரான நாங்கள் எங்களுக்குத் தேவையானபடி தான் ஆள்வோம்…” என்றார். இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.வி. புஞ்சிநிலமே ஒரு படிமேலே போய் “சிங்கள அரசர்கள் கொடுத்த தண்டனையைப் போல, இரண்டு பாக்குமரத் தூண்களில் இரு பக்கமும் கயிற்றிலே கட்டி, அதனை வெட்டும்போது உடல் நடுவில் இரண்டாகப் பிளந்து சிதறுவதைப் போன்ற தண்டனையை இந்த நாடு இத்தகையவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்தக் கொடூர நிலைமையின் கீழ், எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை ஏற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தது. அதைப் பார்த்து ஆளுங்கட்சியினர் எள்ளி நகையாடினர். ஆனால் அமிர்தலிங்கம், 6/5 பெரும்பான்மையைக் கொண்ட ஆளுங்கட்சியை வீழ்த்துவது சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும், தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய, அதிகபட்ச ஜனநாயக வழியாக அதனைப் பார்த்தார். மே, ஜூன் கலவரமானது அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களின் தலைமையில், அவர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டமையினால், அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழப்பதாக 1981 ஜூலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்தது.
ஆனால் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் இனத்துவேசப் பேச்சுகளால் பாராளுமன்றத்தை நிரப்பியதுடன், இதனை மறுதலித்து அப்படியே மறுபக்கம் புரட்டினர். அதாவது எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவர்கள் முன்வைத்தனர். 36 பேரின் கையெழுத்துடன் நெவிலு பெர்னாண்டோ, சபாநாயகர் பாக்கீர் மாக்காரிடம் அந்தப் பிரேரணையைக் கையளித்தார். அந்தப் பிரேரணையைப் பிரேரித்தவர் நெவிலு பெர்னாண்டோ.
1981 ஜூலை 23 ஆம் திகதி, அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அமிர்தலிங்கம் தன்னிலை விளக்கத்தை தெரிவிக்கத் தயாரானபோது, ஆளுங்கட்சியினர் பெரும் கூச்சலுடன் எதிர்த்தனர். இந்தப் பிரேரணையின் சூத்திரதாரியான டாக்டர் நெவிலு பெர்னாண்டோ, அமிர்தலிங்கம் தன்னிலை விளக்கம் அளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்தார்; பாராளுமன்றம் அனுமதித்தால் மட்டும் அதனைச் செய்யமுடியும் என்றார்.
அமிர்தலிங்கம், சபாநாயகர் பாக்கீர் மாக்காரிடம் தனக்கான தன்னிலை விளக்கத்தை வழங்கச் சந்தர்ப்பம் கோரியபோது, அதனை அவர் நிராகரித்தார். தன்னிலை விளக்கம் கொடுப்பது தமது அடிப்படை உரிமையென்றும், கருத்துரிமை என்றும் கூறி அமிர்தலிங்கமும் கூட்டணி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தார்கள். சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்த மைத்திரிபால சேனநாயக்க மூன்று காரணங்களை முன்வைத்து இந்தப் பிரேரணை ஏன் செல்லுபடியாகாது, ஏன் அர்த்தமற்றது என்பதை சபாநாயகருக்கு விளங்கப்படுத்தினார். உலகில் எங்கும் இப்படி நிகழ்ந்ததில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். ஆனால் அந்த மறுப்பு காலங்கடந்த ஒன்று என்றும், பிரேரணையை வழிநடத்தப் போவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும், கொம்யூனிஸ்ட் கட்சியினரும் பேச முயன்ற போது, சபாநாயகரால் குறுக்கிடப்பட்டு தடுக்கப்பட்டதால் அவர்களும் சபையை விட்டு வெளியேறினார்கள். சம்பந்தப்பட்ட எவரும் இல்லாமல் சபையில் வெறும் ஐ.தே.க. உறுப்பினர்கள் மட்டும் நிறைந்திருந்து, எதிர்ப்பும் மறுப்புமின்றி தமது பேச்சால் விளாசித்தள்ளினார்கள். அமிர்தலிங்கத்தை காலி முகத்திடலில் நிற்கவைத்து சுட்டுக்கொல்ல வேண்டுமென்றும், புராதன முறைப்படி தண்டனை வழங்க வேண்டுமென்றும், சவுக்கால் அடிக்க வேண்டும் என்றும், பேர வாவியில் முக்கிக்கொல்ல வேண்டும் என்றும் மிகக் கொடூரமாக வெறுப்பைக் கொட்டினார்கள்.
இந்த விவாதத்தில் அமிர்தலிங்கத்துக்கு ஆதரவாக பேசியவர் அரசாங்க அமைச்சராக இருந்த தொண்டமான் மட்டும்தான். யூலை 24 அன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிகழ்ந்தது. தொண்டமான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சமூகமளித்திருந்த 121 பேர் அமிர்தலிங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
அங்கு ஒரேயொருவர் மாத்திரம் தான் அந்தப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருந்தார். அவர் மிகவும் நேர்மையானவர் என்று பேர் பெற்ற ஷெல்டன் ரணராஜா. தனது சொந்தக் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டார் என்றும், அவர் ஒரு துரோகியென்றும் திட்டினர். ரணராஜா என்கிற அவரது பெயரை நடராஜா என்று அழைத்துக் கேலி செய்தனர். தொண்டமானைப் போல, ரணராஜாவும் விவாதத்தில் கலந்துவிட்டு வாக்கெடுப்பின் போது வெளியேறியிருக்கலாம் என்று ஜே.ஆர். கூறினார். ஷெல்டன் ரணராஜா இந்த விடயத்தில் மட்டும் அல்ல, சிறிமாவின் குடியியல் உரிமையைப் பறிப்பதற்கான பிரேரணையின் போதும் இது போன்றே தனது மனசாட்சிக்கு உட்பட்டு நடந்துகொண்டார்.
ஷெல்டன் ரணராஜா பிரதி நீதிமைச்சராக இருந்தார். ஜே.வி.பியின் வெலிக்கடை உடைப்புக்கு தார்மீகப் பொறுப்பேற்றும், ஜெயவர்த்தன அரசாங்கத்தைக் கலைக்காமல், அநீதியான முறையில் காலத்தை நீடிப்பதையிட்டு தனது மறுப்பை வெளிப்படுத்தும் வகையிலும் அவர் 1988 இல் இராஜினாமாச் செய்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகள் அமைக்கப்பட்ட போது, வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநராக ஜே.ஆர். ஜெயவர்த்தனா ரணராஜாவைத் தான் தெரிவு செய்தார். ஆனால் ரணராஜா அதனை நிராகரித்தார். பிரேமதாச, 1989 தேர்தலில் ரணராஜாவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்பது இதன் தொடர்ச்சி தான்.
அமிர்தலிங்கத்தின் மீதான இந்தப் பிரேரணை இறுதியில் கேலிக்கூத்தாகவே முடிந்தது. அந்தப் பிரேரணையை மிகக் கேவலமான முறையில் நிறைவேற்றிக்கொண்ட போதும், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த எந்தச் சட்ட வாய்ப்புகளையும் அரசியலமைப்பு வழங்கியிருக்கவில்லை. அரசாங்கத்தின் வெற்றியில் எந்த அர்த்தமும் இருக்கவில்லை. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்வதில் எந்தத் தடையும் சட்ட ரீதியாக இல்லை. ஆகையால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அது வெற்றியல்ல, முழுமையான தோல்வி எனக் கூறலாம்.
ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தகர்ப்பு – 1981.07.28
1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இலங்கையில் சிங்கள இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியில் பல பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டன. ஆனால் தமிழர் பகுதிகளில் அப்படி ஒரு தாக்குதல் நடந்ததில்லை. இக்கிளர்ச்சி நடந்து 10 ஆண்டுகளின் பின்னர், 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி சுழிபுரத்தைச் சேர்ந்த சதாசிவம் சிவசண்முகமூர்த்தி என்ற சுந்தரம் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றிக் கொண்டனர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரு பொலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம் இதுவாகும்.
இதன் பின்னர் ஆகஸ்ட் மாதம், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான சீலன் என அழைக்கப்பட்ட சார்ள்ஸ் அன்ரனி தலைமையில் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் இராணுவ ஜீப் ஒன்று தாக்கப்பட்டு இரண்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஈழப்போராட்ட வரலாற்றில் இராணுவம் மீதான முதல் தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People’s Revolutionary Liberation Front – EPRLF)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பது தமிழ் விடுதலை இயக்கங்களில் ஒன்றாக, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓர் இயக்கமாகும். இது 1981 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் தோற்றுவிப்பாளரும் தலைவரும் செயலாளர் நாயகம் க. பத்மநாபா என்பவர் ஆவார். இவ்வியக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1986 டிசம்பரில் தடைசெய்யப்பட்டது. பின்னர், இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்திய அமைதிகாக்கும் படையுடன் வந்து இந்திய இராணுவத்தின் உதவியுடன் புலிகளுக்கு எதிராக இயங்கியது.
இந்திய – இலங்கை ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபையில் இந்த இயக்கத்திற்கு இந்தியாவால் முதன்மையானதாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக அ. வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார். இவர் பெயரளவிலான ஒரு முதலமைச்சராக மட்டுமே இருந்தார்; முதலமைச்சர் எனும் வகையிலான செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்திய இராணுவம் வெளியேறியவுடன், இந்த இயக்கத்தின் முகாம்களும் மறைந்தன. இயக்க உறுப்பினர்களில் அதிகமானோர் இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.
2001 ஆம் ஆண்டு முதல், இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்டனர். இவ்வியக்கத்தினைச் சேர்ந்தவரான புஸ்பராஜா எழுதிய ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூல் ஈழப் போராட்ட வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் – 1982
இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் (ஜனாதிபதித் தேர்தல்) 1982 அக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்றது.
1982 ஆம் ஆண்டு அரசுத் தலைவர் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி நிலவிய போதிலும், மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலையே மிகுந்திருந்தது. இக்காலகட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமை நீக்கப்பட்டிருந்தது. இதனால் அக்கட்சியின் வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ நிறுத்தப்பட்ட போதிலும், தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் பிரபலமற்றவராக இருந்தார்.
1970–77 இற்கிடையிலான இலங்கை சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சோசலிசப் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் ஏற்பட்ட பஞ்சநிலையின் போது பாதிப்புற்ற மக்கள் அக்கட்சியின் மீது அதிருப்தி கொண்டிருந்தனர். 1977 ஆம் ஆண்டு பதவியேற்ற ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கை, மக்களிடையே பெரும் கவர்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அதேவேளை, 1970–77 காலப்பகுதியில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடிகளும் பஞ்ச நிலையும் மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் காணப்பட்டது.
1982 அக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்ற 1 ஆவது இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 8,144,015 ஆகும் (அரசுத்தலைவர் தேர்தலின் போது இலங்கை பூராவும் ஒரு தொகுதியாகவே கருதப்பட்டது). இவர்களுள் 6,602,612 (81.06%) வாக்காளர்கள் வாக்களித்தனர். அதில் 6,522,147 (79.84%) வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்தன. யாப்பு விதிகளின்படி, அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது இத்தேர்தலில் 3,261,074 வாக்குகளுக்கு மேல் பெற்றவர் அரசுத்தலைவராக தெரிவு செய்யப்படுவார்.
ஜே.ஆர். ஜெயவர்த்தனா 3,450,811 வாக்குகளைப் பெற்றார். அதாவது 52.91 சதவீத வாக்குகளைப் பெற்றதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1983 பெப்ரவரி 4 ஆம் திகதி மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
1982 ஆம் ஆண்டு, அரசாங்கம் இரண்டு முக்கிய தேர்தல்களை இரண்டு மாத இடைவெளியில் நடத்தியது. அது, பதவியேற்று 5 ஆண்டுகளைக் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியைத் தற்காப்புச் செய்து நீட்டிப்பதற்கான சூழ்ச்சியின்படி செய்யப்பட்டிருந்தது. 1978 ஆம் ஆண்டு யாப்பில் கொண்டுவரப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழே இத்தேர்தல் நடத்தப்பட்டது. அரசாங்கம் தேர்தல் முறைகேடுகளில் தாராளமாக ஈடுபட்டது. அரசியலமைப்பின் படி 1978 பெப்ரவரி 4 ஆம் திகதி, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். பதவியேற்றார்.
அரசியலமைப்பின் படி, ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்குக் குறையாமலும், இரண்டு மாதத்துக்குக் கூடாத காலப்பகுதியிலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜே.ஆர். ஜெயவர்த்தனா, தனது விருப்பப்படி அந்தத் தேர்தலை நடத்த முடியாத நிலைமையில் இருந்தார். இதற்காகவே இந்த ஏற்பாட்டை மாற்ற வேண்டிய அவசியம் ஜே.ஆருக்கு ஏற்பட்டது. ஏனெனில், பொதுத்தேர்தலையும் நடத்துவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள் பலமடைந்து வந்துகொண்டிருந்ததையும் ஜே.ஆர். புரிந்துகொண்டார். குடியியல் உரிமை பறிக்கப்பட்டிருந்த சிறிமாவும் தனது சரிவில் இருந்து நிமிர்ந்துகொண்டிருந்தார். சுதந்திரக் கட்சி தலைதூக்கிவிட்டால், தனது கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏற்படக்கூடிய அபாயத்தையும் ஜே.ஆர். உணர்ந்திருந்தார். அதற்கு முன்னர் ஒரு வழியை மேற்கொள்வதே அவசியம் என அவர் எண்ணினார்.
ஜே.ஆரிடம் 5/6 பெரும்பான்மைப் பலம் இருந்தது. அப்படிப்பட்ட பெரும்பான்மையை அடுத்த தேர்தலில் பெற முடியாத நிலைமையும் அவர் உணர்ந்திருந்தார். அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்டிருந்ததால், அதைக் கவனமாகத் தக்கவைத்துக் கொண்டால் ஆட்சியைப் பாதுகாக்கப் பல்வேறு கைங்கரியங்களைச் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. 5/6 பெரும்பான்மை இருக்கும்போதே, தனக்குத் தேவையான அரசியலமைப்பு மாற்றங்களைக் கொண்டுவர முடியுமாக இருந்தது.
அரசியலமைப்பின் 30 (2) பிரிவின் படி, ஜே.ஆரின் ஜனாதிபதிப் பதவிக்காலம் 1984 பெப்ரவரி 4 ஆம் திகதி முடிவடைய இருந்தது. ஆகையால், தனது பதவிக்காலம் முடிவடைய முன் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்காக ஜே.ஆர் முடிவெடுத்தார். இத்தேர்தலை நடத்த அரசியலமைப்பு அனுமதிக்காதிருந்ததால், அவர் 3 ஆவது திருத்தச் சட்டத்தை 26.08.1982 அன்று கொண்டுவந்தார். இந்தத் திருத்தம், பதவிக்காலம் முடிந்ததும், இரண்டாவது பதவிக்காலத்துக்கான மக்களாணையை தேர்தல் மூலம் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டது.
இது மக்களின் இறைமையை மீறும் செயல் என்றும், இந்தத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவுடன், மக்கள் தீர்ப்பையும் பெறவேண்டும் என்றும் கோரி சிவில் உரிமைகள் பாதுகாப்பு முன்னணி என்கிற அமைப்பு உயர்நீதிமன்றத்துக்கு ஒரு மனுவைக் கொடுத்தது. அது மக்களின் இறைமையைப் பாதிக்காது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இரண்டு வருடங்கள் மேலதிகமாகப் பதவியில் நீடிக்க முடிந்தும் கூட, தனக்கு ஏதுவான புதிய திருத்தத்தைச் செய்து தேர்தலுக்குத் தயாரானார் ஜே.ஆர்.
இதற்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு பெரும் பிளவு நிகழ்ந்தது. மைத்திரிபால – அனுரா பண்டாரநாயக்க தலைமையில் ஒரு குழுவும், சிறிமா தலைமையிலான ஒரு குழுவும் பிரிக்கப்பட்டிருந்தன. சுதந்திரக் கட்சியும், அதன் சின்னமும், தலைமைக் காரியாலயமும் யாருக்குச் சொந்தம் என்கிற விவாதம் நீதிமன்றம் வரை சென்றது. இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரம் இருக்கையில், 1982 செப்டம்பர் 9 அன்று சிறிமா குழுவினருக்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சாரும் என்று தீர்ப்பு வந்தது. இப்படிக் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் உள்ள சாதகத்தை ஜே.ஆர். உணர்ந்திருந்தார். தமிழ் மக்களிடம் “நீங்கள் எவருக்கும் வாக்களியுங்கள், ஆனால் கட்டாயம் வாக்களியுங்கள்” என்றார். தமிழர் கூட்டணி, தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியிருந்தது. தான் சொல்வதற்கு எதிர்மாறாக தமிழ் மக்கள் இயங்குவார்கள் என்று ஜே.ஆர். நம்பியிருக்கலாம். ஏனென்றால் தமிழ் மக்கள் தன்னைப் புறக்கணிப்பது தனக்கு வாய்ப்பானது என்று ஜே.ஆருக்குத் தெரியும். தமிழ் மக்களின் வாக்குகள் எதிர் வேட்பாளர்களுக்குப் போய்ச் சேருவதைவிட, அந்த வாக்குகள் எவருக்கும் போய்ச் சேராமல் இருப்பது தனக்கான வாக்கு வீதத்தை அதிகரிக்கும் என்பது அவருக்கு தெரியும். இத்தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
விடுதலைப்புலிகளின் முதற்போராளி மரணம் – 1982.11.27
தமிழீழ விடுதலைக்காகப் போரிட்டு இறந்த ஏனைய அமைப்புகளின் உறுப்பினர்கள், விடுதலைப்புலிகளால் மாவீரர்களாகக் கருதப்படுவதில்லை. புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் ஆவார். இவர் சுதுமலையில் படையினரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு சயனைட் அருந்தி 1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி மரணமடைந்தார். இவரது மரணத் திகதியே மாவீரர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நவம்பர் 20, 2006 வரையில் 18,742 பேர் மாவீரர்களாகியிருந்தனர். இதற்கு முன்னர், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் திகதி, தியோடர் டீ அல்விஸ் என்ற நீதிபதியால் குட்டிமணி மற்றும் ஜெகன் போன்றோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி, விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் சார்ள்ஸ் அன்ரனி ஓர் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி கொடுக்குமாறு 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி, இரவு 11:30 மணியளவில், திருநெல்வேலி தபால்பெட்டியடி எனப்படும் பலாலி வீதியில் அமைந்த இடத்தில், இராணுவத்தினரை இலக்கு வைத்து நிலக்கண்ணி வெடித்தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.



