1968 - 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
21 நிமிட வாசிப்பு

1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 3

December 3, 2025 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

1977 பொதுத் தேர்தல் (1977 யூலை 22)

1977 பொதுத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாகப் பிரகடனப்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் ஈழ தேசிய மன்றம் உருவாக்கப்பட்டு, தமிழ் ஈழத்துக்கான முன்னெடுப்புகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது. மனிதன் இயக்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஒரு பிரிவினர் தேர்தலை ஆதரிக்கவில்லை. முழுத் தமிழ்ச் சமூகமும் தேர்தல் வெற்றிக்காக உழைத்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என்றும், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளான கல்வி, குடியேற்றங்கள், தமிழ்மொழி உபயோகம், அரச துறைகளில் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு சர்வகட்சி மாநாடு மூலமாகத் தீர்வு காணப்படும் எனவும் குறிப்பிட்டது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், “சகல சிறுபான்மை இன மக்களும் எதிர்நோக்கும் கலாசார, சமூக மற்றும் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சகல தேசிய இனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட அரச ஆலோசனைச் சபை ஒன்று அமைக்கப்படும். இனப்பிரச்சினை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தச் சபை அரசுக்கு ஆலோசனை வழங்கும்” எனக் குறிப்பிட்டது.

தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த் தொகுதிகளில் கல்குடா தேர்தல் தொகுதியைத் தவிர அனைத்திலும் வெற்றி பெற்றது. கல்குடாவில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தேவநாயகம் 555 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி நிறுத்திய முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப், தமிழர் விடுதலைக் கூட்டணியின் பீரங்கிப் பேச்சாளராகச் செயற்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி 5/6 ஆசனங்களைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றது. 168 ஆசனங்களில் 140 இனைக் கைப்பற்றியது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்களை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது. இடதுசாரிக் கட்சிகள் ஒரு ஆசனத்தைக் கூடப் பெறவில்லை. அதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சியின் தலைமைப் பதவி தமிழர் விடுதலைக் கூட்டணியினை வந்து அடைந்தது. பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் தமிழ் மக்கள் தேர்தல் மூலம் தமக்குத் தனிநாட்டுக்கான ஆணையைத் தந்ததாகப் பிரகடனப்படுத்தினர்.

1977 ஆகஸ்ட் இனக் கலவரம்

1977 ஆகஸ்ட் 16 ஆம் திகதி யாழ்–சென் பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்ற களியாட்ட விழாவில் பொலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து கலவரம் ஆரம்பித்தது. இவ்வசம்பாவித தினத்தன்று நான்கு தமிழர்கள் பொலீசாரால் கொலை செய்யப்பட்டனர். மக்கள் மீளத் தாக்கியதில் ஒரு பொலீஸ் காயமடைந்தார். பின்னர் இரு பொலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனுராதபுரம் இரயில் நிலையத்தில் தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தமிழர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இரண்டு வாரம் இவை நீடித்தன. கத்தோலிக்க மதகுருவான திஸ்ஸ–பாலசூரியாவின் தகவலின்படி இதில் 50,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வீடுகளை இழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர். அரசு, ஓய்வு பெற்ற நீதியரசரான சன்சோனி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடாத்தியது. எனினும் விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

புலிகள் – தமிழர் விடுதலைக் கூட்டணி பேச்சுவார்த்தை

1977 இனக்கலவரத்தைத் தொடர்ந்து புலிகளும் கூட்டணியினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புலிகளின் சார்பில் உமா மகேஸ்வரன், பிரபாகரன், நாகராசா, விச்சுவேஸ்வரன் என்போர் கலந்து கொண்டனர். கூட்டணி சார்பில் அ. அமிர்தலிங்கம், மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு, புலிகள் இயக்கம் தலைமறைவு இயக்கமாக இயங்குவது என்றும், கூட்டணியினர் நிதி மற்றும் ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

1978 இல் கியூபாவில் நடந்த இளைஞர் மாநாட்டில் தமிழ் இளைஞர் பேரவையின் பெயர்ப் பட்டியலிலிருந்து புலிகள் பிரதிநிதிகள் சிங்கநாயகம் சாந்தன், யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக 04.02.1978 அன்று 30 ஆவது சுதந்திர தினத்தில் வழக்கமாகக் கடைப்பிடித்து வந்த கறுப்புக்கொடிப் போராட்டத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கைவிட்டனர்.

1978 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மொராஜ்ஜி தேசாய் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெற அமிர்தலிங்கம் முயற்சித்தார். ‘துக்ளக் சோ’விற்கும் மொராஜ்ஜி தேசாய்க்கும் இருந்த நெருக்க உறவைத் தெரிந்து அவரை அணுகினார். மொராஜ்ஜி தேசாயை மும்பையில் சந்தித்த துக்ளக் சோ அமிர்தலிங்கத்தின் வேண்டுகோளைத் தெரிவித்தார்.

வேண்டுகோளை ஏற்ற மொராஜ்ஜி தேசாய், “இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் நான் நன்கு அறிவேன். இது தொடர்பாக ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் பேசுவதற்கும் நான் தயார். ஆனால் இரண்டு நிபந்தனைகளை அ. அமிர்தலிங்கம் ஏற்க வேண்டும்” எனக் கூறினார்.

  1. இலங்கையைப் பிரிப்பதற்கு ஊக்கமளிக்க மாட்டேன் எனப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.
  2. அரச தரப்பு அல்லது போராளிகள் தரப்பு ஆகிய எத்தரப்பிலிருந்தும் எழுகின்ற வன்முறையை அவர் கண்டிக்க வேண்டும்.

“இந்த இரு விடயங்களையும் அவர் பகிரங்க அறிக்கையின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். அவரது பகிரங்க அறிக்கையின் பின்னர்தான் இலங்கை சென்று ஜெயவர்த்தனாவுடன் பேசுவேன். நியாயமான கோரிக்கைகளுக்கு அவர் செவிமடுக்காவிட்டால் ஜனாதிபதி மாளிகை முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கும்வரை நான் எனது உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்; இதனை அமிர்தலிங்கத்திற்குத் தெரிவியுங்கள்” எனக் கூறினார்.

துக்ளக் சோ இந்தியப் பிரதமரின் கருத்தை அமிர்தலிங்கத்திடம் தெரிவித்தார். இதற்கு அமிர்தலிங்கம், “அத்தகைய உறுதிமொழியை மொராஜ்ஜியிடம் தனிப்பட்ட முறையில் வழங்க முடியும். நான் அமர்ந்திருக்கும் தேர்தல் மேடையே தனிநாட்டுக் கோரிக்கைதான். அதனைக் கைவிட்டுவிட்டேன் என்று எப்படி என்னால் பகிரங்கமாகக் கூற முடியும்? அதுவே எனது பிரசாரமாகவும் உள்ளது” எனக் கூறினார். அமிர்தலிங்கத்தின் பதிலை ஏற்கமறுத்த மொராஜ்ஜி தேசாய், “தனிமையில் ஒன்றும், பொதுவில் இன்னொன்றையும் பேசுகின்ற அரசியலை நான் அங்கீகரிக்க மாட்டேன். அமிர்தலிங்கத்தின் மனதில் மாற்றம் ஏற்பட்டால் என்னிடம் கூறுங்கள்” எனத் தெரிவித்தார்.

1979 ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் உரையாற்றும் போது, “தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் மாற்றுத் திட்டத்தை முன்வைத்து அது நியாயமான தீர்வு என்று நான் உணர்ந்தால், என்மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழர்களின் சார்பாக நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். அதன் பின்விளைவுகள் எத்தகையதாக இருந்தாலும் அதனை ஏற்க நான் தயாராக இருப்பதுடன், அதற்காக என் உயிரையும் கொடுக்கச் சித்தமாக இருக்கிறேன்” எனக் கூறினார்.

மாவட்ட அமைச்சர்களை உருவாக்குவதற்கான முன்மொழிவு

1979 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜெயவர்த்தனா இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட அமைச்சர்கள் முறையை முன்வைத்தார். இதன்படி, மாவட்ட அமைச்சர்களுக்கு பொறுப்பான அமைச்சர், 25 மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தெரிவுசெய்தார்.

மாவட்ட அபிவிருத்தி சபைகளின் நிறைவேற்றுத் தலைவர்களாக இருத்தல், அரசாங்க அதிபர்களின் தலைமையிலான நிர்வாகக் கட்டமைப்பு செயற்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்பார்வை செய்தல், அமைச்சரவை அமைச்சர்கள் வழங்கும் சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பன மாவட்ட அமைச்சர்களின் பணிகளாக இருக்கும் எனக் கூறினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி 5 மாவட்ட அமைச்சர்களைக் கேட்க, ஜெயவர்த்தனா மூன்று அமைச்சர்கள் மட்டும் தர முடியும் எனக் கூறினார். தமது கோரிக்கையை ஜெயவர்த்தனா ஏற்காமை, இளைஞர்களின் எதிர்ப்பு என்பவற்றால் மாவட்ட அமைச்சர் பதவியை ஏற்பதை கூட்டணி கைவிட்டது. ஆனால் மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்க முன்வந்தது.

புலிகளின் இயக்கம் தம்மைப் பகிரங்கமாக வெளிப்படுத்தலும் தாக்குதல்களுக்கு உரிமை கோருதலும் (1978 ஏப்பிரல் 25)

1978 ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி புலிகள் தமது கடிதத் தலைப்பினூடாக பத்திரிகைகளுக்கு அனுப்பிய அறிக்கையின் மூலம் தம்மைப் பகிரங்கப்படுத்தினர். இதுவரை காலமான தமது தாக்குதல்களுக்கு உரிமை கோரினர். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் தட்டச்சில் இவ்வறிக்கை பிரதி பண்ணப்பட்டது. ஊர்மிளா இந்நடவடிக்கையில் ஈடுபட்டார். இவ்வறிக்கை 1978 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28 இல் வீரகேசரியில் வெளிவந்தது. இயக்கத்தின் சார்பில் உமா மகேஸ்வரன் கையொப்பமிட்டிருந்தார்.

புலிகள் இயக்கத்தையும் புலிகள் போன்ற ஏனைய அமைப்புகளையும் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்படல் (1978 மே 21)

புலிகள் இயக்கம் தம்மைப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, அரசாங்கம் புலிகளையும் அது போன்ற இயக்கங்களையும் ஒழிக்கும் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கச் சட்டத்தினை நிறைவேற்றியது. புலிகளை ஆதரிப்பவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இச்சட்டத்தினால் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் புலிகளுக்கு நேரடியாக ஆதரவு கொடுக்கப் பின்நின்றனர். சமரச அரசியலை நோக்கி முன்னேறினர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டாவது மாநாடு – ஆவரங்கால் (1978 யூலை 29, 30)

மாநாட்டுக்கு முன்னர் தமிழ் இளைஞர் பேரவை அதன் பொதுச் சபையில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது.

  1. தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமே தமிழீழ தேசிய சபையை உருவாக்குதல் வேண்டும். அச்சபை தமிழீழத்திற்கான அரசியல் யாப்பை வரைவதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும்.
  2. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும்.

முதலாவது கோரிக்கைக்கு, தமிழீழ தேசிய சபை சரியான நேரத்தில் நிறுவப்படும் எனக் கூறப்பட்டது. “மாவட்ட மந்திரிசபையை ஏற்கப்போகிறீர்களா?” என்பது குறித்து அறியத்தர வேண்டும் என இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்கள் கேட்டபோது, “மாவட்ட அமைச்சர்கள் இயங்கும் முறை குறித்து அரசாங்கம் எதுவும் கூறாத நிலையில் அதை ஏற்பதா? இல்லையா? என்ற கேள்வி எழவில்லை” என சிவசிதம்பரம் பதில் அளித்தார். மாநாட்டின் இரண்டாம் நாளின்போது மாநாட்டு முடிவுகளை பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத் தீர்மானத்தை பிற்போடும் முடிவை எடுக்கப்போவதாக அறிக்கை வெளியானதை எதிர்த்து, இளைஞர்கள் 1000 பேர் வரை அச்சுவேலியிலிருந்தும் புத்தூரிலிருந்தும் பொலீசாரின் தடையையும் மீறி ஆவரங்கால் மாநாட்டு மைதானத்தை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர். இது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான முதலாவது போராட்டமாக இருந்தது. தமிழீழத்தை தாமதமின்றி உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோசமெழுப்பப்பட்டது.

மாநாட்டு மேடையில் ஏறி, “செய்யுங்கள் அல்லது எங்களைச் செய்யவிடுங்கள்” என கோசமெழுப்பி ஒலிவாங்கியையும் பிடுங்க முயன்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்து துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. “நாங்கள் இங்கு களியாட்டம் நடப்பதை விரும்பவில்லை”, “எமது தலைவர்களே எமது துரோகிகள்”, “உங்கள் நாடாளுமன்ற ஆசனங்களைத் துறவுங்கள்” எனக் கோசங்கள் எழுப்பப்பட்டன.

இளைஞர்களைச் சமாதானப்படுத்தி மாநாட்டு மண்டபத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு ஒரு மணிநேரம் வரை எடுத்தது. தமிழீழ விடுதலை இயக்கம் (தற்போதைய ரெலொ அல்ல), ஈரோஸ், ஈழமாணவர் பொது மன்றம் என்பவற்றைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் முன்னணியில் நின்றனர். அ. அமிர்தலிங்கம் தமிழீழத் தீர்மானம் பிற்போடப்படுவதாக அறிவித்தார். மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக மு. சிவசிதம்பரமும், செயலாளராக அ. அமிர்தலிங்கமும் தெரிவுசெய்யப்பட்டனர்.

1978 புரட்டாதி மாதம் 7 ஆம் திகதி, அவ்ரோ விமானம் இரத்மலானையில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. ‘ராகவண்ணை’ என அழைக்கப்படும் புன்னாலைக் கட்டுவன் சிவகுமார் இதற்குத் தலைமையேற்றார்.

1978 ஆம் ஆண்டு அரசியல் திட்டம் (1978 செப் 07)

ஐக்கிய தேசியக் கட்சி தனது நீண்டகால நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அரசாங்க முறைக்கான அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. அரசியல் திட்டத்தில் ஒற்றையாட்சி அம்சங்களும் உறுதியாகப் பேணப்பட்டன. அரசியல் திட்டத்தில் காணப்பட்ட பின்வரும் அம்சங்கள் பேரினவாதத் தன்மையைக் கொண்டவையாகும்:

  1. ஒற்றையாட்சி அரசு
  2. மொழி
  3. மதம்
  4. அரசியலமைப்பை திருத்துவது தொடர்பான கடின ஏற்பாடுகள்
  5. விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை

1. ஒற்றையாட்சி அரசு

அரசியலமைப்பில் இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சி உடைய அரசு எனக் கூறப்பட்டது. இதன் மூலம் தமிழர்களின் முன்னைய கூட்டாட்சிக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. குடியரசின் இறைமை மக்களுக்குரியதாகும் எனக் கூறப்பட்டது. இதன் அர்த்தம், பெரும்பான்மை மக்களிடமே அதிகாரம் உள்ளது என்பதே. இதனூடாக, சட்டவாக்க அதிகாரம் சிங்கள இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றத்திடமும், நிர்வாக அதிகாரம் பெரும்பான்மை சிங்கள இனத்தினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியிடமும், நீதி அதிகாரங்கள் அரசியல் யாப்பின் மூலம் உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களிடமும் வழங்கப்பட்டிருந்தன.

2. மொழி

அ. அரச கரும மொழி
சிங்கள மொழி அரச கரும மொழியாக இருக்கும் எனக் கருதப்பட்ட அதேவேளை, தமிழும் தேசிய மொழிகளாக இருக்கும் எனக் கூறப்பட்டது.

ஆ. கல்வி மொழி
ஆள் எவரும் எந்தத் தேசிய மொழியிலும் கல்வி கற்கலாம் எனக் கூறப்பட்டது. இதன் மூலம் வடக்கு–கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற தமிழ் மக்களும் எல்லைப் புறங்களில் வாழும் தமிழ் மக்களும் சிங்கள மொழியில் கல்வி கற்கும்படி தூண்டப்பட்டனர். இதனூடாக தமிழ் மக்களின் அடையாளம் அழிவதற்கும் வழி ஏற்படுத்தப்பட்டது.

இ. நிர்வாக மொழி
சிங்கள மொழி வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் நிர்வாக மொழியாக இருக்கும் எனக் கூறப்பட்டது. வடக்கு–கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இதன் மூலம் வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள் தமிழ் மொழியில் நிர்வாகக் கடமைகளை ஆற்ற முடியாத நிலை தோன்றியது. வடக்கு–கிழக்கிலும் கூட ஏதாவது ஓர் உதவி அரசாங்க அதிகாரப் பிரிவு சிங்கள மக்களின் சனத்தொகையைப் பெரும்பான்மையாகக் கொண்டிருப்பின், சிங்கள மொழியை ஜனாதிபதி அங்கு நிர்வாக மொழியாக ஆக்கலாம் எனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனூடாக சிங்களக் குடியேற்றங்கள் யாப்பு மட்டத்தில் மேலும் வலுப்பெற்றது. வடக்கு–கிழக்கில் அம்பாறை மாவட்ட அரசுச் செயலகத்தில் சிங்கள மொழியே நிர்வாக மொழியாக நடைமுறையில் இருந்தது.

ஈ. சட்டவாக்க மொழி
எல்லாச் சட்டங்களும் துணை நிலைச் சட்டவாக்கங்களும் சிங்கள மொழியில் உருவாக்கப்படும்; சட்டங்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வேண்டும் எனக் கூறப்பட்டது. இதன் மூலம் தமிழில் சட்டமாக்கும் உரிமை மறுக்கப்பட்டது.

உ. நீதிமன்றங்களின் மொழி
தமிழ் மொழியை நிர்வாக மொழியாகக் கொண்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் சிங்கள மொழி நீதிமன்ற மொழியாக இருந்தது. தமிழ் மொழிப் பிரதேசங்களில் தமிழ் நீதிமன்ற மொழியாக இருந்தது. இவ்வேற்பாடுகள் வடக்கு–கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களை பாதிப்படையச் செய்தது.

3. மதம்

1972 ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தில் பௌத்த மதத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. பௌத்த மதத்தினைப் பேணி வளர்த்தலும் பாதுகாத்தலும் அரசின் கடமை எனக் கூறப்பட்டது. இதனூடாக ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்பட்டன.

4. அரசியலமைப்பைத் திருத்துவது தொடர்பான ஏற்பாடுகள்

அரசியலமைப்பைத் திருத்துவது தொடர்பாக, பேரினவாதத்தன்மை மேலும் வலுவாக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பில் உள்ள பேரினவாதத் தன்மைகளைத் தொடர்ச்சியாகப் பாதுகாக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில், பின்வரும் விடயங்களில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுமாயின், பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்படுவதோடு, மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் அவசியம் எனக் கூறப்பட்டது:

  • இலங்கை ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு என்பதை மாற்றுதல்.
  • இலங்கை குடியரசு ஒரு ஒற்றையாட்சி அரசு என்பதை மாற்றுதல்.
  • இலங்கைக் குடியரசின் இறைமை சம்பந்தமான ஏற்பாடுகளை மாற்றுதல்.
  • இலங்கைக் குடியரசின் தேசியக் கொடியினை மாற்றுதல்.
  • இலங்கைக் குடியரசின் தேசிய கீதத்தை மாற்றுதல்.
  • இலங்கைக் குடியரசின் தேசிய தினத்தை மாற்றுதல்.
  • பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்ட முதன்மை ஸ்தானத்தை மாற்றுதல்.
  • சிந்தனை செய்யும், சுதந்திர மனசாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மதச்சுதந்திரம் என்பவற்றை மாற்றுதல்.
  • சித்திரவதைக்குள்ளாகாமல் இருப்பதற்குரிய சுதந்திரத்தினை மாற்றுதல்.

இதில் கடைசி இரண்டையும் தவிர, மற்ற அனைத்தும் அரசின் பேரினவாதத் தன்மையை பாதுகாப்பதாகவே இருந்தன. இவ்வேற்பாடுகள் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு என்றைக்குமே வருவதற்கு சாத்தியமில்லாமல் போனது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை

இத்தேர்தல் முறையினால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தேர்தல் மாவட்ட எல்லைகளை பேரினவாத சக்திகள் செயற்கையாக மாற்றி தமிழ்ப் பிரதேச மாவட்டங்களில் தங்களின் ஆதிக்கத்தினை உருவாக்கினர். அம்பாறை மாவட்டத்துடன் மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த மகா ஓயா, பதியத்தலாவ ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன. இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகரிக்கப்பட்டனர்.

இந்தத் தேர்தல் முறைக்கு முன் இம்மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் பின்வருமாறு:

  • சிங்களவர்: 01
  • முஸ்லீம்: 03
  • தமிழர்: 01

இந்தத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அது பின்வருமாறு ஆனது:

அனுராதபுர மாவட்டத்தில் இருந்த சில பகுதிகள் திருகோணமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. வடக்கு–கிழக்கிற்கு வெளியே மலையக, முஸ்லிம் கட்சிகள் பேரினவாதக் கட்சிகளோடு கூட்டுச்சேர வேண்டிய நிலை ஏற்பட்டு தமது தனித்துவத்தை இழந்தன.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் – 1979

தமிழ் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக 1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டு ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது. 1979 ஆம் ஆண்டு இச்சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் அ. அமிர்தலிங்கம் தலைமையில் எதிர்த்து வாதிட்டனர். இது தற்காலிகச் சட்டமாக இருக்கும் என ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன உத்தரவாதம் வழங்கியதால் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தனர். கூட்டணியின் தலைமை, உள்ளூர் விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என்பதை விரும்பியிருந்ததா என்ற சந்தேகத்தை இது எழுப்பியது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய மைத்திரிபால சேனநாயக்க, சட்டமூலத்தின் உள்ளடக்கம் பற்றியும் அதனைச் சட்டமாக நிறைவேற்ற முனைந்த முறை பற்றியும் தனது கவலைகளை வெளிப்படுத்தினார். வாசித்துப் பார்ப்பதற்கு கூட மக்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச் சட்டமும், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமும், அவசரகாலச் சட்டமும் இருக்கும் போது இது ஏன் அவசியம் எனக் கேள்வி எழுப்பினார். இச்சட்டத்தை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன 1982 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் நிரந்தரமாக்கினார். இதனால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கிய உத்தரவாதம் மீறப்பட்டது. இதைப் பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணி பெரிதாக எந்தக் கேள்விகளையும் எழுப்பவில்லை. இப்பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் சட்டமா அதிபர் சிவாபசுபதியே தயாரித்திருந்தார். நீதி அமைச்சர் தேவநாயகம் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.

1972 ஆம் ஆண்டின் குற்றவியல் நீதி ஆணைக்குழுச் சட்டம், 1972 ஆம் ஆண்டின் செலாவணிக் கட்டுப்பாட்டு (திருத்த) சட்டம், 1978 ஆம் ஆண்டின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த ஏனைய இயக்கங்களைத் தடை செய்யும் சட்டம் ஆகியவற்றிலுள்ள முக்கிய ஏற்பாடுகளையும் சேர்த்து பயங்கரவாதத் தடைச் சட்டம் தயாரிக்கப்பட்டது. இவற்றில் பல அவசரகால ஒழுங்கு விதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் உள்ளீர்க்கப்பட்டன.

1972 ஆம் ஆண்டின் குற்றவியல் நீதி ஆணைக்குழுச் சட்டம் 1970 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டது. அதன் ஏற்பாடுகள் செலாவணிக் கட்டுப்பாட்டு அடிப்படையில் குற்றமிழைத்தோரையும் உள்ளடக்கியிருந்தது. இச்சட்டத்தின் படி குற்றவியல் நீதி ஆணைக்குழுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. இச்சட்டம் 8 வருடங்களுக்கு அமுலில் இருக்கும் என்றும், தேவையாயின் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இதனைப் பின்னர் நீக்கியது. 1972 ஆம் ஆண்டின் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திருத்தச் சட்டத்தையும் 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நீக்கியது.

1978 ஆம் ஆண்டின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களைத் தடை செய்யும் சட்டம் அவசரமாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆரம்பத்தில் அதன் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடம் என மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம் மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 30 ஆவது பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச் சட்டத்தை பின்னர் நீக்கியிருந்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் கீழ், பாதுகாப்பு அமைச்சர் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஒருவர் ஈடுபட்டிருக்கிறார் எனச் சந்தேகித்தால், அவரை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை செய்யலாம். இத்தடுப்புக் காவலை 18 மாதங்கள் வரை அவரால் புதுப்பிக்க முடியும். தடுத்து வைக்கப்படும் இடத்தையும் அமைச்சர் தீர்மானிக்கலாம்.

தடுத்து வைத்தல் ஆணையைப் பற்றி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது. தடுப்புக் காவலில் இருக்கும் ஒருவரை விடுவிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. சந்தேகநபர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என நீதவான் கண்டாலும், அவரை விடுவிக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கு இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின்படி, பொலிசாருக்கு தகவல் வழங்கத் தவறினாலும் அதுவும் குற்றமாகக் கருதப்பட்டு 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும். இச்சட்டத்தின் கீழ், சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தல், அவருடன் தொடர்பு கொண்டிருத்தல் ஆகியனவும் குற்றமாகக் கருதப்படும்.

சான்றுக் கட்டளைச் சட்டம் நீதிபதி ஒருவருக்கு முன்னால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதலையே சான்றாகக் கொள்கிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உதவிப் பொலிஸ் உத்தியோகத்தருக்கு முன்னால் வழங்கப்படும் குற்ற ஒப்புதல் சான்றாகக் கொள்ளப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் பொலிசாருக்கு சந்தேகநபரை நியாயமான மணிநேரம் விசாரணைக்காக எந்த இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்க முடியாது. ஆயுட்காலத் தண்டனையை வழங்க முடியும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக ஆட்கொணர்வு மனுக்கள், அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் தமிழ்க் கைதிகளுக்காக மு. சிவசிதம்பரம், சிவா ராஜரத்தினம், புள்ளநாயகம், எஸ். மகேந்திரன், மோதிலால் நேரு, சி.வி. விவேகானந்தன், அ. விநாயகமூர்த்தி, குமார் பொன்னம்பலம், நடேசன் சத்தியேந்திரா, நவரத்தினம், சிறீக்காந்தகுமார் ஆகியோர் வாதாடியுள்ளனர்.

கே.சி. நித்தியானந்தா மறைவு – 1980.07.12

இலங்கையின் அதிதீவிர முற்போக்கு எண்ணம் கொண்ட தொழிற்சங்கவாதிகளில் கே.சி. நித்தியானந்தாவும் ஒருவராவார். அவர் டக்ளஸ் தேவானந்தாவின் தாய்மாமனாவார். அன்றைய முற்போக்குத் தொழிற்சங்கவாதிகளான டி.ஏ.சி. செனவிரத்தின, திஸாநாயக்க, ஐ.நா. புகழ் வைகுந்தவாசன், கந்தசாமி, ஏ.ஆ. ஆசீர்வாதம், திருமதி தாமரா லங்காரத்தின, எஸ்.டி. பண்டாரநாயக்க, பிலிப் குணவர்த்தன, டி.பி. இலங்காரத்னா போன்றவர்களுடன் மிகவும் நெருக்கமாகத் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டவர் கே.சி. நித்தியானந்தா. இவர் லங்கா சமசமாஜக் கட்சியின் ஓர் அங்கமாகிய அரசாங்க எழுது வினைஞர் சேவை நலச்சங்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவராவார். எப்பொழுதும் வெள்ளை வேட்டி, தேசிய சட்டையுடன் காணப்படுவார். 1930களிலேயே இந்த வேட்டி–சட்டை அணிந்து கொழும்பு அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்று பலரின் பாராட்டைப் பெற்றவர்.

1954 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வரவு–செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சித்ததன் காரணமாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரின் பதவிநீக்கத்துக்கு எதிராகப் பல தொழிற்சங்கங்கள் எழுப்பிய குரலுக்கு பயந்த அரசாங்கம், ஆறு மாதங்களின் பின்னர் அவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொண்டது. கே.சி. நித்தியானந்தா இல்லாவிட்டால் ஆரம்ப காலங்களில் டி.பி. இலங்காரத்னா, பீட்டர் கெனமன் போன்றவர்கள் மிகச் சுலபமாகத் தேர்தல் வெற்றியைக் கண்டிருக்க முடியாது என, கே.சியுடன் தொடக்க காலம் முதலே தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்ட கே. வைகுந்தவாசன் கூறியுள்ளார். 1977 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ஏற்பட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளான தமிழர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் தொடக்க கர்த்தாவாகவும் செயலாளராகவும் இருந்து மாபெரும் பணியாற்றியவர். 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் காலமானார்.

தனிநாயகம் அடிகளார் மறைவு – 1980.09.01

தனிநாயகம் அடிகள் என அழைக்கப்படும் வண. சேவியர் தனிநாயகம் (Rev. Xavier S. Thani Nayagam) 1913.08.02 அன்று பிறந்தார். இவர் ஈழத்துத் தமிழறிஞரும் கல்வியாளரும் ஆவார். தமிழ், ஆங்கிலம் தவிர ஸ்பானியம், உரோம மொழி, போர்த்துக்கீசம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர். பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து, அங்குள்ள நூலகங்களில் இருந்த பல தமிழ்க் கையெழுத்துப் பிரதிநூல்கள் மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வெளிக்கொணர்ந்தார். ‘தமிழ்க் கல்ச்சர் (Tamil Culture)’ என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951–1959 வரை இருந்தார். 1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார். இந்த நிறுவனமே தொடர்ந்து பத்து உலகளாவிய ரீதியிலான உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்தியது. அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப்பெற்றன. பொதுச் செயலாளராக இருந்து முதல் மகாநாட்டை கோலாலம்பூரில் பல உலக நாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடாத்திய பெருமையும் இவரையே சார்ந்தது. நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதற்கும் இவர் காரணமாக இருந்தார். இத்தகைய தமிழறிஞர் 1980 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் முதலாம் திகதி இயற்கை எய்தினார்.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் – 1981

மாநகர சபை, நகர சபை, பட்டின சபை மற்றும் கிராம சபை என நான்கு வகையான உள்ளூர் அதிகார சபைக் கட்டமைப்பையும் முழுமையான மாற்றத்துக்கு உட்படுத்தி, 1981 ஆம் ஆண்டின் மாவட்ட அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டமை, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை அடிப்படையாகக்கொண்டு ஏற்படுத்தப்பட்ட உள்ளூர் அதிகார சபை மாற்றத்தின் முக்கிய அம்சமொன்றாக அமைந்தது. முன்னதாக, 12 மாநகர சபைகள், 39 நகர சபைகள், 82 பட்டின – நகர சபைகள் மற்றும் 549 கிராம சபைகள் என அமைந்திருந்த உள்ளூராட்சி சபைக் கட்டமைப்பானது, 1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்தி சபைச் சட்டத்தின் மூலம் மாற்றம் கண்டது. இச்சட்டத்தின்படி, பட்டின சபைகளையும் கிராம சபைகளையும் ஒன்றிணைத்து, ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திற்காகவும் ஒரு ‘மாவட்ட அபிவிருத்தி சபை’ நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய நிறுவப்பட்ட அபிவிருத்தி சபைகளின் எண்ணிக்கை 24 ஆகும். இவ்வபிவிருத்தி சபைகளின் பிரதான நோக்கம், அபிவிருத்திச் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்காக மத்திய அரசின் திணைக்களங்கள், அமைச்சுகள் ஆகியவற்றின் அதிகாரத்தை மாவட்ட மட்டம் வரை பன்முகப்படுத்துவதாகும். இப்பணிகளுக்காக மாநகர சபை, நகர சபை பிரதேசங்கள் மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் உள்ளடக்கப்பட்ட போதும், அப்பிரதேசங்களின் சேவைப் பணிகள் மாநகர சபைகள் மற்றும் நகர சபைகளினாலேயே மேற்கொள்ளப்பட்டதோடு, ஏனைய பட்டின சபை, கிராம சபைகளின் சேவைகள் அபிவிருத்திச் சபைகளுக்குக் கையளிக்கப்பட்டன.

1981 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க அபிவிருத்தி சபைச் சட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட முதலாவது மற்றும் ஒரேயொரு தேர்தல், 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி நடைபெற்றது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ், இதுவரை மாநகர சபை மற்றும் நகர சபைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த உள்ளூர் அதிகார சபைத் தேர்தல், இத்தேர்தல் மூலம் மாவட்ட மட்டம் வரை விருத்தியடைந்து, உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய அனுபவத்தை வழங்கியது. இங்கு அரசியல் கட்சிகளிடமிருந்தும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்தும் வேட்பாளர் பெயர்ப் பட்டியல்கள் கையளிக்கப்பட்டதோடு, அந்தப் பட்டியலில் பெயர்களை உட்சேர்க்கும் போது கட்சியின் அல்லது குழுவின் முக்கியஸ்தர்களால் முன்னுரிமை தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, ஒவ்வொரு கட்சியும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாசாரமாக கிடைக்கப்பெறும் உறுப்பினர் பதவிகளுக்காக மேற்குறித்த வேட்புமனுவிலிருந்து வேட்பாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கண்டி, மாத்தளை, குருநாகல், மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்காகப் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ஏனைய மாவட்டங்களுக்கு தேர்தல் நடாத்தப்பட்டது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் வாக்கெடுப்பை நிராகரித்தமை காரணமாக, சில மாவட்டங்களில் பிரதிநிதிகள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தேர்தலுக்குரியதாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு, தேர்தல் வரலாற்றில் கறுப்புப் புள்ளியை ஏற்படுத்திய ஒன்றாக அமைந்ததோடு, அந்தக் கசப்பான அனுபவங்களின் ஊடாக அபிவிருத்தி சபையின் இருப்பும் ஆட்டம் கண்டது. அரசியல் அமைப்பின் ஆறாம் திருத்தத்திற்கமைய உறுப்பினர் பதவி கிடைக்கப்பெற்று, ஒரு மாதத்தினுள் கையளிக்க வேண்டிய சத்தியம் அல்லது உறுதியுரை ஒப்பமிடாமை காரணமாகப் பதவியைக் கைவிட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 ஆகும். அவர்களில் பெரும்பான்மையினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர்களாகக் காணப்பட்டனர். வேட்புமனுவில் காட்டப்பட்டுள்ள பெயர்களில் இருந்து அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும், குறித்த சத்தியம் அல்லது உறுதியுரை காரணமாக அவ்வுறுப்பினர்களும் பதவிகளைக் கைவிட்டுச் சென்றனர். இச்சிக்கலான நிலைமையில், 1984 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க அவசர (அபிவிருத்தி சபை) கட்டளைகளின் இரண்டாம் கட்டளையினால் தமக்குக் கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கமைய, உள்ளூராட்சி, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரினால் 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதிய 320/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி சபைகள் கலைக்கப்பட்டன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய அபிவிருத்தி சபைகள் இவ்வாறு கலைக்கப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1981 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்களின் போது, தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட காடையர்கள் வாக்குப் பெட்டிகளை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்பட்டது. இதனால் உடனடியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இறுதியில் அனைத்து உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து தெரிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

தொடரும்.



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்