1968 - 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

1968 – 1983: ஆயுதப் போராட்டத்தை நோக்கி – பகுதி 1

October 16, 2025 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

இக்கட்டத்தில் தமிழ் மக்களினுடைய விடுதலைப் போராட்டம் இலங்கை என்ற மட்டத்தில் நின்றது. பிராந்திய மட்டத்திற்குச் செல்லவில்லை. இதனால் இலங்கை அரசு மட்டுமே எதிரியாக இருந்தது. ஆயுதச் செயற்பாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் போராட்ட அலை வீழ்ச்சியடைதல்

சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய இரு சக்திகள் தொழிற்பட்ட போதும் தமிழரசுக்கட்சி மட்டுமே ஒரு போராட்ட சக்தியாக தமிழ்த்தேசிய அரசியலை வீரியத்துடன் முன்னெடுத்தது. 1956 முதல் 1961 வரை அதன் போராட்ட வீச்சு அதி உச்ச நிலையில் இருந்தது. 1965 இல் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அரசாங்கத்தில் அங்கம் பெற்றதைத் தொடர்ந்து வீழ்ச்சிப்போக்கை நோக்கிச் சென்றது. இவ்வீழ்ச்சிப் போக்கினால் கட்சியில் இருந்த தேசியவாத சக்திகள், குறிப்பாக இளைஞர்கள், அதிருப்தியடைந்து புதிய அரசியல் இயக்கத்தை நோக்கி நகர முற்பட்டனர்.

ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம்

1968 இல் இலங்கைத் தேசிய மன்னன், மாவை சேனாதிராஜா, மைக்கல் தம்பிநாயகம், பரமசாமி, வில்வராஜா, டொக்டர் சண்முகநாதன் முத்துக்குமாரசுவாமி, சிவகுமாரன், மகா உத்தமன் போன்றவர்கள் ‘ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினர். இவ்வமைப்பின் தலைவராக, இலங்கைத் தேசிய மன்னனும், செயலாளராக மாவை சேனாதிராஜாவும், பொருளாளராக மைக்கல் தம்பிநாயகமும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த அமைப்பின் தோற்றத்துடன் தமிழ் அரசியலில் தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ், இளைஞர் இயக்கங்கள் என மூன்று வித சக்திகள் தொழிற்படத் தொடங்கின. இளைஞர் இயக்கங்கள் கட்சி அரசியல், தேர்தல் அரசியல் என்பவற்றிற்கு வெளியே செயற்பட முயற்சித்தன. 

‘சியவச சுவீப்’ ரிக்கற்றுக்கு எதிரான போராட்டம்

ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம் பாராளுமன்ற அரசியலுக்கு அப்பால் போராட்டத்தை நடாத்துவதற்கென உருவாக்கப்பட்ட முதலாவது அரசியல் இளைஞர் இயக்கமாக தமிழர் அரசியலில் தோற்றம் பெற்றது. இதுவே பின்னர் தொடர்ச்சியான தீவிர இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தது. ‘சியவச’ சுவீப் ரிக்கற் விற்பனைக்கெதிரான போராட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தை திருகோணமலையில் உருவாக்க வேண்டும் எனக் கோரும் போராட்டம் என்று இரண்டு விதமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்காக ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் நடாத்தப்பட்டன. ‘சியவச’ சுவீப் ரிக்கற்றுகள் கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவர்களிடையே விற்கப்பட்டது. “தமிழ்ப் பகுதிகளில் சேர்க்கப்பட்ட நிதி தென்னிலங்கைக்குச் செல்கின்றது” எனக் கூறியே போராட்டம் நடாத்தப்பட்டது.

1. தமிழ்ப் பல்கலைக்கழகத்தை திருகோணமலையில் அமைக்கக் கோரி நடாத்திய போராட்டம்

தமிழ்ப் பிரதேசத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றினை எங்கே நிறுவுவது என்பது தொடர்பாக அக்காலத்தில் தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. வடக்கு – கிழக்கை இணைக்கும் மையமாக திருகோணமலை இருப்பதால், திருகோணமலையில் அப்பல்கலைக்கழகம் நிறுவப்படல் வேண்டும் என தமிழரசுக்கட்சி பிரசாரம் செய்தது. 

தமிழ்க் காங்கிரஸ் கட்சி அப்பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படல் வேண்டும் எனப் பிரசாரம் செய்தது. ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம் திருகோணமலையில் அமைக்கப்படல் வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு அதனை ஆதரித்து ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. 

2. தமிழ்ப் பகுதிகளில் உருவாக்கப்படும் சிங்களப் பாடசாலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல்

புத்தூர், கரவெட்டி, ஆவரங்கால் போன்ற இடங்களில் உருவான சிங்கள – பௌத்த பாடசாலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

3. லக்சல, சலுசல போன்ற சிங்களப் பெயர்களை தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து அகற்றுமாறு கோருதல் 

மயிலிட்டி புஸ்பராசா, அருளானந்தன், ஏழுமலை போன்றவர்களும் இச்செயற்பாடுகளில் பங்கெடுத்தனர். 1970 தேர்தலுடன் இவ்வமைப்புச் சிதைந்து போனமையினால் இவர்களில் பலர் தமிழரசுக் கட்சிக்குச் சார்பாகவும், சிலர் தமிழ்க் காங்கிரசிற்குச் சார்பாகவும் பிரசாரங்களில் ஈடுபட்டனர். தேர்தலின் பின்னர் தமிழ் மாணவர் பேரவை உருவான போதும் இவர்களே அதில் முன்னணியில் நின்றனர்.

கித்துள் ஊற்றுக் குடியேற்றம் – திருகோணமலை

1968 இல் திருகோணமலை மாவட்டத்தில் கித்துள் ஊற்று என்ற இடத்தில் ஒரு சிறு குளம் கட்டப்பட்டு அதில் சிங்களக் குடியேற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழரசுக் கட்சி பல்லாயிரம் ரூபா செலவில் தமிழரசு வாலிப முன்னணியைச் சேர்ந்தவர்களை அத்துமீறிக் குடியேற வைத்தது. அப்பகுதியின் சிங்கள உதவி அரசாங்க அதிபர் அவ்விளைஞர்களின் வீடுகளுக்குத் தீ வைத்ததோடு அவர்களைக் கைதும் செய்தார். காணி அமைச்சருடன் செய்த உடன்பாட்டின் படி, அத்துமீறிக் குடியேறிய இளைஞர்கள் உட்பட பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்களைக் குடியேற்றினர்.

தமிழரசுக் கட்சியின் 11 ஆவது மாநில மாநாடு: 1969 ஏப்பிரல் 7,8,9 – உடுவில்

11 ஆவது மாநில மாநாட்டில் மூ. இராசமாணிக்கம் 3 ஆவது முறையாகவும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழரசுக் கட்சியின் 11 ஆவது மாநில மாநாட்டின் தீர்மானங்களாக, 

  • ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசைத் தொடர்ந்தும் ஆதரிப்பதால் தமிழ் பேசும் மக்களுக்கு எதுவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. எனவே தமிழரசுக் கட்சிப் பாராளுமன்றக் குழு இனிமேல் சுதந்திரமாக இயங்கும் எதிர்க்கட்சியாகச் செயற்பட வேண்டும் எனத் தீர்மானித்தல். இதற்குக் காரணங்களாக,
  1. மாவட்ட சபைகள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் திருகோணமலையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படாமை. 
  2. கைத்தொழிற்சாலைகளை நிறுவுதல், மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்தல், தமிழ்ப் பிரதேசங்களில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில், போதிய போக்குவரத்து வசதிகள் செய்தல் என்பவற்றில் மோசமான பாரபட்சக் கொள்கைகளை அரசு பின்பற்றியமை.
  3. தமிழ் பேசும் மக்களின் கல்வி, கலாசாரத் தேவைகளை பூரணமாகப் புறக்கணித்தல். தமிழக மக்களுக்கு இடையிலுள்ள கலாசாரத் தொடர்புகளைத் துண்டிக்க அரசு திட்டமிட்டுச் செயற்பட்டமை.
  4. தமிழ்மொழிச் சட்டவிதிகள் அமுலாக்கப்படுவதை அரசாங்கம் காரணமின்றித் தாமதப்படுத்தியமை.
  5. திறைசேரிச் சுற்றறிக்கைள் 700, 701 ஆகியவற்றை எமக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு முரணாக பாரபட்சமான முறையில் தமிழ் பேசும் அரசாங்க ஊழியர்களுக்குக் கஷ்டத்தையும் ஏமாற்றத்தையும் தரக்கூடிய வகையில் அமுல்படுத்தியமை.
  • தமிழரசு உரிமைகளை மீட்கவென கட்சி எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவைத் தருமாறு தமிழ் பேசும் மக்களைக் கோருதல்.
  • சமஷ்டி ஆட்சி என்றதன் அடிப்படைக் கொள்கையில் கட்சி மேலும் உறுதி கொள்வதோடு அதன் மூலமாகவன்றி தமிழ் பேசும் மக்களது சுதந்திரம், தன்மானம், சமத்துவம் கிட்டாதென இம்மாநாட்டின் மூலம் பிரகடனப்படுத்துதல்.

1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல்

இத்தேர்தலில் தமிழரசுக் கட்சி 2,45,747 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களை மட்டும் கைப்பற்றியது. இத்தேர்தலில் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அ. அமிர்தலிங்கம் தனது வட்டுக்கோட்டைத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். ஈ.எம்.வி. நாகநாதனும் நல்லூர்த் தொகுதியில் தேல்வியடைந்தார்.

கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர்த் தொகுதிகளில் மட்டும் வெற்றியடைந்து பட்டிருப்பு, கல்குடா போன்ற தமிழ்த் தொகுதிகளில் தோல்வியடைந்தனர். போராட்டத்தைக் கைவிட்டு அரசுடன் சேர்ந்தமையே இதற்குக் காரணமாக இருந்தது. சிறீலங்கா சுதந்திர கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிசக் கட்சி தலைமையிலான கூட்டு முன்னணி 116 ஆசனங்களை, அதாவது 2/3 பங்கு ஆசனங்களைக் கைப்பற்றியது (சிறீ.ல.சு.க – 91, இ.க.க – 06).

புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சியும் அரசியல் நிர்ணய சபையும்

தேர்தலில் 2/3 பெரும்பான்மையைப் பெற்ற கூட்டு முன்னணி அரசாங்கம் புதிய அரசியல் திட்டமொன்றை உருவாக்க முயற்சி செய்தது. அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அரசியல் நிர்ணய சபையாகக் கூடுவதற்கு வருமாறு அழைப்பு விடுத்தது. 11.7.1970 இல் வவுனியாவில் கூடிய கட்சியின் செயற்குழு, அரசியல் நிர்ணய சபையில் கலந்துகொள்வது தொடர்பாக கட்சிக்கு வெளியில் பல தமிழ்ப் பெரியார்களுடன் கலந்தாலோசித்த பின் முடிவுக்கு வருவது எனத் தீர்மானித்தது. இதன்படி கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் ஆலோசனை நடாத்திய பின் முடிவுக்கு வருவது எனத் தீர்மானித்து, அரசியல் நிர்ணய சபையில் கலந்துகொள்வதோடு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பையும், தமிழர்களது சமூக – பொருளாதாரக் கொள்கைகளையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் யாப்பைச் சமர்ப்பிப்பது எனவும் தீர்மானித்தது. 

அரசியல் யாப்பை உருவாக்கும் பொறுப்பு வி. தர்மலிங்கம் தலைமையிலான குழுவிடம் விடப்பட்டது. பூரண சோஷலிசப் பொருளாதாரத்தையும் சாதி – சமய பேதமற்ற சமூக அமைப்பையும் சுயாட்சி பெற்ற ஐந்து மாநிலங்களையும் கொண்ட சமதர்ம சமஷ்டிக் குடியரசு அரசியல் யாப்புத் தயாரிக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்மொழி விசேட சட்டம் யாப்பில் உட்புகுத்தப்பட்டு, தமிழ்மொழி தமிழ் மாணவர்களின் கல்வி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும் அரசியல் நிர்ணய சபை இவற்றை ஆலோசனைக்கு எடுக்கவும் தயாரில்லாதிருந்தது.

தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த மாதிரி அரசியல் யாப்பில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள்:

1. இலங்கை சமஷ்டிக் குடியரசானது,

  • குடியரசின் தெற்கு, மேற்குப் பிரதேசங்களைக் கொண்ட மாநிலம்.
  • குடியரசின் வடமத்திய, வடமேல் பிரதேசங்களைக் கொண்ட மாநிலம்.
  • குடியரசின் மத்திய பிரதேசங்களைக் கொண்ட மாநிலம். 
  • குடியரசின் வட, வடகிழக்குப் பிரதேசங்களைக் கொண்ட மாநிலம்.
  • குடியரசின் தென்கிழக்குப் பிரதேசங்களைக் கொண்ட மாநிலம்.
  • குடியரசின் தலைநகரமென்ற முறையில் மத்திய அரசினால் நிருவகிக்கப்படுவனவாகிய கொழும்பு மாநகரமும் அதன் சுற்றுப்புறங்களும்

என்பவற்றைக் கொண்டிருக்கும்.

2. ஓர் எல்லை வகுக்கும் ஆணைக்குழுவானது இம்மாநிலங்களினதும் அதன் சுற்றுப்புறத்தினதும் எல்லைகளை வகுத்தல் வேண்டும். 

3. எல்லைகளை வகுப்பதில் ஆணைக்குழுவானது பழைய வரலாற்றுப் பாரம்பரியங்கள், பூகோள, பண்பாட்டு, மொழிவாரிச் சமூகச்சூழல்கள், குடிசனத் தேக்கம் என்பவற்றுடன் அத்தகைய வேறு காரணக்கூறுகளையும் கருத்திலெடுத்துக்கொள்ள வேண்டும்.

4. மாநில அரசுகளானவை, அவற்றிடம் ஒப்படைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமது பிரதேசங்களை நிருவகிப்பதில் பூரண அதிகாரமுடையதாதல் வேண்டும். 

5. மாநில அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரம், மாநில ஆட்சிமன்றங்களுக்கு உரித்தாக்கப்படல் வேண்டும். இம்மன்றங்கள், இந்த அரசியலமைப்புத் திட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஒவ்வொரு மாநிலத்தினதும் பிரதேச எல்லைகளுக்குள் செயற்படத்தக்க சட்டங்களை ஆக்க அதிகாரமுடையதாதல் வேண்டும்.

6. மாநிலங்களின் அரசியலமைப்புகளாவன வேறு விடயங்களுடன், குடிசனத் தொகையும் நிலப்பரப்பும் இணைத்துக் கணிக்கப்பெற்ற அடிப்படையில், மக்களால் தெரிவு செய்யப்படுவோர் ஆட்சிமன்றத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

7. ஒவ்வொரு பொதுத் தேர்தலையும் அடுத்துவரும் தமது முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் ஆட்சிமன்ற உறுப்பினர்களும் தம்மைக் குழுக்களாகப் பகுத்துக்கொள்வதுடன், ஒவ்வொரு குழுவும் ஒரு தலைவரைத் தெரிவு செய்தலும் வேண்டும்.

8. மாநில அரசுகளின் நிறைவேற்றுப் பணிகள் தலைவருக்கும் மேற்கூறப்பட்ட குழுக்களுக்கும் உரியன. 

9. பரஸ்பர நலன் பயக்கும் கருமங்கள் தொடர்பில், மாநில அரசுகளானவை தமக்குள் உடன்படிக்கைகள் செய்துகொள்ளலாம். ஆயினும் அத்தகைய உடன்படிக்கைகளை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதுடன், அவ் உடன்படிக்கைகள் குடியரசினது உரிமைகளுக்கும் நலன்களுக்கும் அல்லது மற்றைய மாநிலங்களின் உரிமைகளுக்கும் முரண்பாடாக எதனையும் உள்ளடக்கியிருப்பின், மத்திய அரசாங்கம் அவற்றை நிறைவேற்றலைத் தடுப்பதற்கு உரித்துடையது. 

10. மத்திய அரசாங்கத்தின் முகவராண்மைக்கூடாகவன்றி மாநில அரசுக்கும் ஏதேனும் வெளிநாட்டு அரசாங்கத்துக்குமிடையில் அல்லது அதன் பிரதிநிதிகளுக்குமிடையில் எதுவித தொடர்பும் இருத்தல் ஆகாது.

11. மாநிலங்களுக்கிடையிலான எல்லாப் பிணக்குகளின் நடுத்தீர்ப்பிற்கும் தீர்வைக்கும் மத்திய அரசாங்கத்தின் விதிப்பு முற்றானதாக வேண்டும். எந்தவொரு மாநில அரசும் வேறெந்த மாநில அரசுக்கெதிராகவும் ஒருதலைச்சார்பான நடவடிக்கை எதனையும் எடுத்தல் ஆகாது. 

12. மாநில அரசுகளுக்கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையிலான எல்லாப் பிணக்குகளும் நீதித் தீர்வைக்கென அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும்.

13. மாநிலங்களானவை அதிகாரத்தை முழுமையாகப் பிரயோகிப்பதற்கு குடியரசவைக்கு எல்லா உதவிகளையும் அளித்தல் வேண்டும்.

14. சட்டப்படி தமக்கான கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றுவதற்குத் தவறுகின்ற மாநில அரசுகளுக்கெதிராக மத்திய அரசாங்கமானது ஏற்ற நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

15. இலங்கைக் குடியரசின் நிலப்பரப்பு பிரிக்க முடியாததும் மாநிலங்களின் நிலப்பரப்பை உள்ளடக்கியதுமாகும்.

16. பதினாறாம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டவை தவிர்ந்த ஏனைய எல்லா  விடயங்களிலும், ஒவ்வொரு மாநில அரசும் முழு அதிகாரத்தைப் பிரயோகிக்க உரிமையுடையது.

பல்கலைக்கழக அனுமதியில் மொழிவாரித் தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்படல்

பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடங்களில் தமிழ் மொழிமூல மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் மொழிவாரித் தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டது. இதன்படி தமிழ் மாணவர்கள் கூடுதலான புள்ளிகளும் சிங்கள மாணவர்கள் குறைந்த புள்ளிகளும் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

1971 ஆம் ஆண்டின் புள்ளிகளின் படி விவரம்

பீடம்                    சிங்கள மாணவர்தமிழ் மாணவர்
மருத்துவம்                                                      229250
பௌதீக விஞ்ஞானம்      183     204
உயிரியல் விஞ்ஞானம்                                       175 184
பொறியியல்                                                  227250
மிருக வைத்தியம்                                                181206
கட்டடக்கலை                                                          180194

தமிழ் மாணவர் பேரவையின் தோற்றம்

தரப்படுத்தலை எதிர்ப்பதற்காக 1970 கார்த்திகையில் தமிழ் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது. இதற்கு ஈழத்தமிழர் விடுதலை இயக்கத்தை உருவாக்கிய சிவகுமாரன், த. முத்துக்குமாரசுவாமி ஆகியோர் முன்னணியில் நின்றனர். இவர்களுடன் அரியரட்ணம், சத்தியசீலன் என்போரும் மத்திய குழுவில் இடம்பெற்றனர். 1970 நவம்பர் 24 இல் பாடசாலைப் பகிஷ்கரிப்புடன் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்தினர். இதில் சுமார் 10,000 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போதைய கல்வி அமைச்சரான பதியுதீன் முகமதின் கொடும்பாவியும் ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்பட்டது. “தமிழ் மாணவர்களின் கல்வியைப் பறிக்காதே! இன விகிதாசாரக் கொள்கையை ஒழிப்போம்! திறமைக்கு முதலிடம் கொடுப்போம்! சோஷலிசமா? சிங்கள இஸமா?” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழரசுக்கட்சிக்கு எதிரான சில சுலோகங்களும் ஊர்வலத்தில் எழுப்பப்பட்டன. ஊர்வலத்தின் முடிவில் யாழ். முற்றவெளியில் பொதுக்கூட்டம் நடைபெற்றதோடு கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. தொடர்ந்து 1970 டிசம்பர் 8 இல் மட்டக்களப்பிலும் மாணவர் பேரவையினால் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தப்பட்டு கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு: 1971 பெப்ரவரி 7 – வல்வெட்டித்துறை

தமிழ்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஏகோபித்த கோரிக்கைகளை அரசியல் நிர்ணய சபையில் முன்வைப்பதற்கு அபிமானிகள் சிலர் முயற்சி செய்தனர். வல்வெட்டித்துறை நகரபிதா ஞானமூர்த்தி சபாரத்தினம் வேலுப்பிள்ளை இது விடயத்தில் இடையறாது முயற்சி செய்தார். இம்முயற்சியினால் 1971 பெப்ரவரி 07 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக் கழகம், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சி. நாகராசா தலைமையில் வல்வெட்டித்துறையில் ஒற்றுமை மாநாட்டைக் கூட்டினர்.

தமிழ் மக்களின் ஏகோபித்த குறைந்தபட்சக் கோரிக்கைகளாக ஒன்பது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 17.02.1971 இல் கூடிய தமிழரசுக்கட்சியின் செயற்குழு, ஒற்றுமை மாநாட்டின் முடிவுகளை அங்கீகரித்தது.

பிரதமருடன் பேச்சுவார்த்தையும் அரசியல் நிர்ணய சபையைப் பகிஷ்கரித்தலும்

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் சிலவற்றையாவது அரசியலமைப்பில் இடம்பெறச் செய்தல் வேண்டும் என்ற நோக்கில் தமிழரசுக் கட்சியின் சார்பில் செல்வநாயகம் தலைமையில் தூதுக் கோஷ்டியானது 1971 மார்ச் 6 இல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவையும், அரசியல் விவகார அமைச்சர் கொல்வின் ஆர்.டி. சில்வாவையும் சந்தித்துப் பேசியது. தமிழ் மொழி உரிமை பற்றிய சில பகுதிகளை இடம்பெறச் செய்யும்படி தமிழரசுக்கட்சி பிரதமரிடம் வற்புறுத்தியது. 

பிரதமரின் ஆலோசனைப்படி ஏனைய அமைச்சர்களையும் கட்சி சந்தித்துப் பேசியது. ஆனால் பயன் கிடைக்கவில்லை. மொழி உரிமை பற்றிக் கொடுத்த திருத்தங்கள் கூட நிராகரிக்கப்பட்டன. இதனால் தமிழரசுக் கட்சி அரசியல் நிர்ணய சபையைப் பகிஷ்கரித்து வெளியேறியது. அரசியல் நிர்ணய சபையைப் பகிஷ்கரிக்க மறுத்த யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.எக்ஸ். மாட்டின் 15.7.1971 இல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தமிழரசுக்கட்சியின் சிறப்பு மாநாடு: 30 ஜீன் 1972 – யாழ்ப்பாணம்

தமிழரசுக்கட்சியின் சிறப்பு மாநாடு மு. இராசமாணிக்கம் தலைமையில் கூடியது. அரசியல் அமைப்பு தமிழ் இனத்தின் அடிமைச் சாசனம் ஆதலால் அது நிராகரிக்கப்படல் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவரும் இதற்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடாது அவ்வாறு வாக்களிப்பின் அவ்வவ் தொகுதி வாக்காளர்கள் தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் எனக் கோரப்பட்டது.

தென்னிலங்கையில் ஆட்சியாளரின் செயலினால் தம் தொழில், கல்வி வசதிகளை இழந்தவர்கள் தமது உடமைகளை வடக்கு – கிழக்கிற்கு மாற்றுமாறும் கோரப்பட்டனர்.

தீர்மானங்கள்:

1. சிங்கள மொழிக்கு அழிக்கப்பட்டிருக்கும் அதே அந்தஸ்து தமிழ் மொழிக்கும் சட்டபூர்வமாக அளிக்கப்படல் வேண்டும்.

2. நாட்டின் அரசாங்கத்தை மதச் சார்பற்றதாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.

3. இந்நாட்டைத் தமது தாயகமாகக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் எல்லோரினதும் முழுமையான குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப்படல் வேண்டும்.

4. தமிழ் மக்களின் பாரம்பரியமான தாயகத்தில் தமிழ்த்தேசிய இனத்தின் சுயாட்சி உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

ஆட்சியாளருக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் முன்னாள் செனட்டர் நடராசா, ஆட்சியாளர் தனக்கு அளித்த சமாதான நீதவான் பட்டத்தையும் உத்தியோகப்பற்றற்ற நீதவான் பட்டத்தையும் மாநாட்டில் வைத்தே துறப்பதாக அறிவித்தார்.

தமிழ் நாட்டிடம் தார்மீக ஆதரவு கோருதல்

தமிழ் இனத்தின் சுயாட்சி உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழ் மக்களது நிலையை சர்வதேச ரீதியில் விளக்க வேண்டியது அவசியம் என உணர்ந்தனர். இதன் முதல் கட்டமாக தமிழ் நாட்டு மக்களின் ஆதரவினைப் பெற திரு.ஆ. இராசரத்தினம் தமிழ்நாடு சென்று அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார். 

உலகத் தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் இரா. ஜனவர்த்தனன் தமிழ் நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க உதவினார். செல்வநாயகம், அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன் ஆகியோரைக் கொண்ட குழு 1972 பெப்ரவரியில் தமிழ் நாட்டுக்குச் சென்றது. தமிழ் நாடு ஆளுநர் கே.கோ, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன், தமிழக அமைச்சர்கள், தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ. சிவஞான கிராமணியார், பெரியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன், முன்னாள் முதலமைச்சர் திரு. பகவத்சலம், முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத், ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராஜர், செல்வாக்குப் பெற்றிருந்த சினிமா நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், அசோகன், மற்றும் முக்கியமான தொழில் அதிபர்கள், சட்ட வல்லுநர்கள், கல்விமான்கள், மாணவர் இயக்கங்கள், பத்திரிகையாளர்கள் என்போரைச் சந்தித்து இலங்கைத் தமிழரின் நிலை பற்றி விளக்கம் அளித்தனர்.

சந்தித்தவர்கள் அனைவரும் மத்திய அரசுக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் வெளியுலகிலும் எமது பிரச்சினையை விளக்க உதவுமாறு கூறினர். சென்னை மாநகரசபை மேயர் திருமதி. காமாட்சி ஜெயராமன் தலைமையில் செல்வநாயகத்துக்கு பொது வரவேற்பு அளித்துக் கௌரவிக்கப்பட்டது. உலகத்தமிழ் இளைஞர் பேரவை கோகலே மண்டபத்தில் அதன் தலைவர் இரா. ஜனார்த்தனன் தலைமையில் செல்வநாயகத்திற்கு வரவேற்பளித்தனர். இவ்வரவேற்புக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் உரையாற்றினர். எந்தத் தனிக்கட்சியோடும் பிரத்தியேகத் தொடர்பு கொள்ளாமல் எல்லாக் கட்சிகளோடும் உறவுகளைப் பேண முயன்றனர்.

தமிழர் கூட்டணியின் தோற்றம்

தமிழ் அமைப்புகள் எல்லாம் தம் முரண்பாடுகளை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும் என்ற அடிப்படையில் திருகோணமலையில் கூட்டம் கூட்டினர். இது தொடர்பாக செல்வநாயகம் தமிழ் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், கட்சிசார்பற்ற பெரியோர்கள் என்போருக்கு அழைப்பு விடுத்திருந்தார். 04.05.1972 இல் திருகோணமலை நகர மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

07.02.1971 இல் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஒற்றுமை மாநாட்டுக்கு அமைப்பு வடிவம் கொடுப்பதாகவே இக்கூட்டம் அமைந்தது. ‘தமிழர் கூட்டணி’ என்ற பெயரில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் சேர்ந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. செல்வநாயகம் தலைவராகவும் எஸ். ஞானமூர்த்தி, காசி ஆனந்தன் என்போர் இணைச்செயலாளர்களாகவும் சி. கதிருவேலுப்பிள்ளை, திரு.தா. திருநாவுக்கரசு, திரு.அ. குமரகுரு ஆகியோர் பொருளாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். அனைத்துக் கட்சிகளையும் கட்சிசாரா ஸ்தாபனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைக்குழு உருவாக்கப்பட்டது.

மே 22 குடியரசு தினமும் பகிஷ்கரிப்பும்

புதிய அரசியலமைப்பு அமுலுக்கு வந்த குடியரசு தினமான மே 22 ஆம் திகதியைப் பகிஷ்கரிப்பதென தமிழர் கூட்டணியும் அனைத்துத் தமிழ் மக்களும் முடிவுக்கு வந்தனர். அத்தினத்தைத் துக்க தினமாகக் கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வரசியல் அமைப்பை நிறைவேற்றும் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பகிஷ்கரிக்க வேண்டும் எனத் தீர்மானித்தனர். இதன்படி வடக்கு – கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேரில் 15 பேர் பகிஷ்கரித்தனர்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான வட்டுக்கோட்டைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தியாகராசா, நல்லூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் சி. அருளம்பலம் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தொகுதி உறுப்பினர் மாட்டின், மட்டக்களப்புத் தொகுதி சுயேட்சை உறுப்பினர் இராஜன் செல்வநாயகம் ஆகியோர் அரசியல் அமைப்பை ஆதரித்தனர். அரசியலமைப்பை ஆதரித்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் இரு தமிழ் உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

கல்குடா தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகமும் பட்டிருப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தம்பிராசாவும் அரசியல் நிர்ணய சபையைப் பகிஷ்கரித்தனர். மே 22 இல், தமிழ்ப் பிரதேசம் முழுவதும் பூரண துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு பாடசாலைப் பகிஷ்கரிப்பு, கடையடைப்பு, சிங்கக் கொடியெரிப்பு என்பன மேற்கொள்ளப்பட்டன. ஆங்காங்கே கண்டனக் கூட்டங்களும் நடாத்தப்பட்டன.

வண்ணார்பண்ணை ஆச்சிரம மண்டபத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தமிழ்த் தலைவர்களால் குடியரசு அரசியல் திட்டத்தின் பிரதி தீக்கிரையாக்கப்பட்டது. 70க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, இ.போ.ச. சுப்பிரமணியம், வண்ணை ஆனந்தன் என்போரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் மாணவர் பேரவை அரசியல் போராட்டங்களைக் கைவிடலும் ஆயுத நடவடிக்கைகளை மேற்கொள்ளலும்

தரப்படுத்தல் பிரச்சினையுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தனியொரு நாடுதான் என்ற முடிவுக்கு வந்தது. இதற்கு ஆயுதப் போராட்டமே ஒரே ஒரு வழி எனத் தீர்மானித்தது. இதனாலும் பொலிஸ் கெடுபிடிகளினாலும் அரசியல் போராட்டங்களைக் கைவிட்டுவிட்டு ஆயதப் போராட்டத்தை முன்னெடுக்க 1971 இலேயே ஆயத்தமாகினர். இதற்கு பங்களாதேசின் முக்தி பாஹினி இயக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டனர்.

ஆயுதங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டதோடு ஆங்காங்கே ஆயுத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். 1972 மே 22 குடியரசு தினத்திலும் வன்முறை நடவடிக்கைகளில் இவர்கள் பங்கெடுத்தனர். பஸ் எரிப்பு, தேசியக் கொடி எரிப்பு என்பவற்றில் ஈடுபட்டனர். இவர்களின் முதல் தீவிரத் தாக்குதல் நடவடிக்கையாக பிரதியமைச்சர் மீதான உரும்பிராய்த் தாக்குதல் நடைபெற்றது.

1972 ஆம் ஆண்டு உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு வருகை தந்த பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறியின் காருக்கு சிவகுமாரனால் குண்டு வீசப்பட்டது. மயிரிழையில் பிரதியமைச்சர் தப்பினார். கொழும்பில் திசவீரசிங்கமும், ஜீவராசாவும் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசாவைச் சுட்டதில் தியாகராசா உயிர் தப்பினார். கல்வியங்காடு, கொண்டலடி வைரவ கோவில் மூலஸ்தானத்தில் இவர்கள் மறைவாக வைத்திருந்த கைக்குண்டுகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னரான படையினரின் தேடுதலில் மாணவர் பேரவையின் மத்திய குழு உறுப்பினர்களின் பெரும்பாலானவர்களும் முன்னணி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். 1972 இன் இறுதியில் மாணவர் பேரவை சிதைவடைந்தது. 

தமிழர் கூட்டணியின் ஆறு அம்சக் கோரிக்கைகளும் மூன்று மாத அவகாசமும்

புதிய அரசியல் திட்ட அமுலாக்கத்தைத் தொடர்ந்து தனி நாட்டுக்கான போராட்டத்தை நடாத்த வேண்டும் என்ற குரல் தமிழ் மக்கள் மத்தியில் வலுப்பெற்றது. இது தொடர்பாக தமிழர் கூட்டணியின் நடவடிக்கைக் குழு 1972 யூன் 25 இல் கோப்பாயில் கூடி ஆராய்ந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பதால் பலன் இல்லை என்றும், அரசுக்கு ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அனுப்புவது என்றும், மூன்று மாத கால அவகாசத்தினுள் கோரிக்கைக்கு (அரசியலமைப்புக்குள் திருத்தங்களைக் கொண்டுவராத பட்சத்தில்) இணங்காவிட்டால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலையைக் காண சாத்வீக வழியில் போராடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டணியின் ஆறு அம்சக் கோரிக்கைகள்

1. அரசியல் அமைப்பில் சிங்கள மொழிக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதே இடம் தமிழ் மொழிக்கும் அளிக்கப்படல் வேண்டும்.

2. இலங்கை மதச்சார்பற்ற அரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு எல்லா மதங்களையும் சமமாகப் பேணி வளர்த்தல் வேண்டும்.

3. இந்நாட்டைத் தம் தாயகமாகக் கருதும் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் பூரண குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டங்கள் அரசியல் அமைப்பில் இடம்பெறல் வேண்டும்.

4. நீதிமன்றத்தின் மூலம் நிலைநாட்டப்படக் கூடிய அடிப்படை உரிமைகள் அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டும்.

5. சாதியையும் – பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் அரசியல் சட்ட மூலம் ஒழித்தல் வேண்டும்.

6. அதிகாரம் பரவலாக்கப்பட்டு மக்கள் பங்கு கொள்ளும் ஜனநாயக ஆட்சி அமைப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும்.

இக்கோரிக்கைகள் அடங்கிய மகஜர் தமிழர் கூட்டணித் தலைவர் செல்வநாயகத்தினால் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசாங்கம் இக்கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்காது விட்டது.

1972 ஆம் ஆண்டு புதிய குடியரசு அரசியல் திட்டமும் அதன் பேரினவாதத் தன்மைகளும்

அரசியல் திட்டத்தின் பின்வரும் அம்சங்கள் பேரினவாதத் தன்மைகளைக் கொண்டு விளங்கின.

1. தேசிய அரசுப் பேரவை

தேசிய அரசுப் பேரவை மீயுயர் கருவியாக்கப்பட்டு அனைத்து அதிகாரங்களும் அதனிடம் ஒப்படைக்கப்பட்டது. தேசிய அரசுப் பேரவையின் 157 பேரில் 19 பேர் மட்டுமே தமிழர்கள்.

இது தமிழர்களுக்கு எதிரான எச்சட்டத்தையும் உருவாக்கும், நிறைவேற்றும் நிலையில் இருந்தது. இது விடயத்தில் சோல்பரி அரசியல் திட்டத்தில் பெயரளவில் இருந்த 29 ஆவது பிரிவு, கோமறைக்கழகம், நீதிமன்றங்களின் நீதிப்புனராய்வு அதிகாரம் என்பனவும் நீக்கப்பட்டன. அரச சேவை உத்தியோகத்தர்கள் சம்பந்தமான பொறுப்புகள் அரசசேவை ஆணைக்குழுவிடமிருந்து பெறப்பட்டு அமைச்சரவையின் மீது ஒப்படைக்கப்பட்டமையானது, இன ரீதியான பாரபட்சத்திற்கு வழிவகுத்தது. முன்னைய நீதிச்சேவை ஆணைக்குழுவின் பொறுப்புகளை அமைச்சரவையின் மீது பொறுப்பித்தமையானதும் இன ரீதியான பாராபட்சத்திற்கு வழிவகுத்தது.

2. மொழி 

அ. அரசகரும மொழி 

சிங்கள மொழி அரச கரும மொழியாக இருந்தது. அது 1956 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டப்படி அரசகரும மொழிச் சட்டமாக இருந்ததே தவிர அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்தைப் பெறவில்லை. புதிய அரசியலமைப்பு மூலம் இது அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்தைப் பெற்றது. அதேவேளை தமிழ் மொழியின் உபயோகம் 1958 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கிணங்க இருந்தது. எனினும் இவை துணைநிலைச் சட்டங்களாக இருக்குமே தவிர அரசியலமைப்பின் ஏற்பாடாக பொருள்கொள்ளக் கூடாது என இருந்தது. தமிழ்மொழியின் உபயோகத்திற்குக் கூட அரசியலமைப்பு அந்தஸ்துக் கொடுக்க விரும்பவில்லை என்பதை இது காட்டியது.

ஆ. சட்டவாக்கமொழி 

சட்டங்கள் யாவும் சிங்கள மொழியில் சட்டமாக்கப்படல் வேண்டும். அவ்வாறு இயற்றப்படும் சட்டத்திற்கு தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று இருத்தல் வேண்டும் எனக் கூறப்பட்டது. இதன் மூலமாக சட்டவாக்க மொழி அந்தஸ்து தமிழ் மொழிக்கு கொடுக்கப்படாமல் இருந்தது.

நடைமுறையில் உள்ள துணைநிலைச் சட்டங்கள் அனைத்தும் சிங்களத்திலும் தமிழ் மொழிபெயர்ப்பிலும் உடனடியாக வெளியிடப்பட்டன. அதனை தேசிய அரசுப்பேரவை ஏற்றுக்கொண்ட பின்னர் சிங்கள மொழியில் உருவாக்கப்பட்டவற்றை மட்டும் சட்டமாகக் கொண்டு, ஏனையவற்றை மொழிபெயர்ப்பாகக் கொண்டனர். மூலச்சட்டங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் சிங்களத்திலுள்ள சட்டங்களே மேலானதாகக் கருதப்பட்டது.

இ. நீதிமன்றங்களின் மொழி

நீதியை நிர்வகிப்பதற்கு சட்டத்தினால் தத்துவமளிக்கப்பட்டுள்ள நீதிமன்றங்கள், நியாய சபைகள் என்பவற்றினதும், கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட நீதிமன்றங்கள், நியாய சபைகள், ஏனைய நீதி நிறுவனங்கள், 1958 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க இணக்க சபைகள் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இணக்க சபைகள் ஆகிய அனைத்தினதும் கரும மொழியாக இலங்கை முழுவதுமாக சிங்கள மொழி இருந்தது.

இதன்படி வழக்குரைகள், நடவடிக்கைகள், தீர்ப்புகள், கட்டளைகள், நீதிமுறைச் செயல்கள், சட்ட நிர்வாகச் செயல்கள் என்பவற்றின் பதிவேடுகள் அனைத்தும் சிங்கள மொழியில் இருந்தன. வருங்காலத்தில் உருவாக்கப்படும் எந்நீதி நிறுவனங்களுக்கும் மேற்கூறிய ஏற்பாடுகள் பொருத்தமுடையவையாக இருந்தன.

மேற்கூறிய நிறுவனங்கள் தொடர்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும், முஸ்லிம்கள் தொடர்பான காதி நீதிமன்றத்திலும் வழக்குரைகள், விண்ணப்பங்கள், பிரேரணைகள், மனுக்கள் என்பவற்றைத் தமிழில் சமர்ப்பிக்கலாம். நடவடிக்கைகளிலும் தமிழில் பங்குகொள்ளலாம் எனவும் இருந்தது. இத்தகைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பதிவேடுகளின் பொருட்டு சிங்கள மொழிபெயர்ப்புகள் தயாரிக்கப்பட்டன.

3. பௌத்த மதம்

குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மைத் தானம் வழங்குதல் வேண்டும் எனவும், பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டது.

4. அரச சேவை, நீதிச்சேவை

அரசசேவை சம்பந்தமான பொறுப்புகள் அனைத்தும் அரசசேவை ஆணைக்குழுவிடமிருந்து நீக்கப்பட்டு அமைச்சரவையின் மீது பொறுப்பாக்கப்பட்டது. கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகள், நீதிச் சேவை உத்தியோகத்தர்கள் என்பவர்களது பொறுப்புகளும் நீதிச்சேவை ஆணைக்குழுவிடமிருந்து நீக்கப்பட்டு அமைச்சரவையின் மீது பொறுப்பாக்கப்பட்டன. இதன் மூலம் இனரீதியான பாரபட்சத்திற்கு வழி ஏற்பட்டது. மொத்தத்தில் 1972 ஆம் ஆண்டு அரசியல் திட்டம் பேரினவாத ஆதிக்கத்தன்மைக்கு அரசியலமைப்பு வடிவம் கொடுத்ததாகவே காணப்பட்டது.

தொடரும்.



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்