மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
27 நிமிட வாசிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் – பகுதி 1

March 18, 2026 | Ezhuna

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இன்மை காரணமாக, உள்ளூர்க் கால்நடைப் பண்ணையாளர்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் உள்ளூர்ச் சூழல், தற்போதுள்ள வரம்புகள் மற்றும் அரசியல் காரணிகள் போன்றவற்றைப் புரிந்துகொள்வது தற்போது மிக அவசியமாகின்றது. குறிப்பாக, மாவட்டத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எட்டுவதற்கு, நிலவி வரும் அரசியல் அழுத்தங்களை மாவட்டத்தின் அரசியல்-பொருளாதார நலன்களின் அடிப்படையில் ஆராய்ந்து, உரிய பரிந்துரைகளைச் செய்வது கட்டாயமானது. அதற்கமைய, இவற்றை ஆராயும் வகையில் ‘மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்’ எனும் இக்குறுந்தொடர் வெளியாகின்றது. 

வாசற்படி

கிழக்கு இலங்கையில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டம், வளமான கலாசார பாரம்பரியம், ஏராளமான இயற்கை வளங்கள் மற்றும் துடிப்பான சமூகத்தைக் கொண்ட ஒரு முக்கியமான மாவட்டமாகும். இருப்பினும், உட்கட்டமைப்பு இடைவெளிகள், அதிக வேலையின்மை விகிதம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு உள்ளிட்ட பல சமூக-பொருளாதாரச் சவால்களை இம்மாவட்டம் எதிர்கொள்கிறது. இப்பிரச்சினைகளைத் திறம்படக் கையாளுவதற்கு, ஒரு மூலோபாய மற்றும் விரிவான அணுகுமுறையுடன் கூடிய முழுமையான திட்டத்தை உருவாக்குவது அவசியமாகும்.

மட்டக்களப்பின் சமூக-பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் உள்ளூர்ச் சூழல், தற்போதுள்ள வரம்புகள் மற்றும் அரசியல் காரணிகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமாகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எட்டுவதற்கு, நிலவி வரும் அரசியல் அழுத்தங்களை மாவட்டத்தின் அரசியல்-பொருளாதார நலன்களின் அடிப்படையில் ஆராய்ந்து, உரிய பரிந்துரைகளை உள்வாங்குவது அவசியமாகிறது.

மட்டக்களப்பு மாவட்டம் வடக்கே வெருகல் ஆற்றினாலும், கிழக்கே வங்காள விரிகுடாவினாலும், தெற்கே அம்பாறை மாவட்டத்தாலும், மேற்கே அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களாலும் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டம் 186.43 சதுர கிலோமீட்டர் நீர்நிலைகள் உட்பட மொத்தம் 2,854 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

மாவட்டத்தின் பொருளாதாரம் முதன்மையாக விவசாயத்தைச் சார்ந்துள்ளது. இது சுமார் 30% வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, நிலப்பரப்பில் 45.5%க்கும் அதிகமான பகுதியை உள்ளடக்கியுள்ளது.

  • நெல் உற்பத்தி: ஆண்டுதோறும் 457,600 டன்களுக்கு மேல் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது (சராசரி விளைச்சல்: ஹெக்டேருக்கு 4.3 மெட்ரிக் டன்).
  • இதர பயிர்கள்: எண்ணெய் வித்துகள் மற்றும் பழப்பயிர்கள் 7,170 ஹெக்டேர்களிலும், ஏனைய முக்கிய பயிர்கள் 2,210 ஹெக்டேர்களிலும் பயிரிடப்படுகின்றன.
  • உள்ளூர் நுகர்வு: உற்பத்தி செய்யப்படும் நெல்லில் 21% மட்டுமே உள்ளூரில் நுகரப்படுகிறது. எஞ்சிய 79% (சுமார் 357,000 மெட்ரிக் டன்) குறைந்த விலையில் ஏனைய மாவட்டங்களுக்கு மூல நெல்லாக ஏற்றுமதி செய்யப்படுகிறது 

(ஆதாரம்: விவசாய அமைச்சு, EPC-2021).

கால்நடை வளர்ப்புச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், உள்ளூர்ப் பால் பண்ணைத் தொழிலில் தங்களின் பங்களிப்பையும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நிலையான நடைமுறைகளின் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக பின்வருவன அமைகின்றன:

  1. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை உறுதிப்படுத்துதல்.
  2. அண்டை விவசாயிகளால் முன்னெடுக்கப்படும் துன்புறுத்தல் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாப்பு.
  3. நிலத் தகராறுகளில் சந்தேகிக்கப்படும் அரசியல் தலையீடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தல்.
  4. நிலையான விவசாய நடைமுறைகளுக்கான ஆதரவு மற்றும் காலநிலை மாற்றத் தகவமைப்பு உத்திகள்.

கால்நடை விவசாயிகள் தற்போது கடுமையான காலநிலை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். நீடித்த வறட்சி மற்றும் ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி காரணமாக மேய்ச்சல் நிலங்களும் நீர் ஆதாரங்களும் குறைந்துள்ளன. இதனால் கால்நடைகளின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டு, பால் உற்பத்தி குறைந்து, நிதி நெருக்கடி உருவாகியுள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலையால் விலங்குகள் வெப்ப அழுத்தத்திற்கும் (Heat Stress) நோய்களுக்கும் உள்ளாகின்றன. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, உள்ளூர்ப் பால் உற்பத்தியையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

இலங்கையில் உள்ள சுமார் 750,000 கால்நடைகளில், 90%க்கும் அதிகமானவை 10க்கும் குறைவான விலங்குகளைக் கொண்ட சிறு விவசாயிகளிடமே உள்ளன. வறண்ட மண்டலத்தில் அமைந்துள்ள இத்துறை, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறது. அதிகரித்த வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒட்டுண்ணிகளின் பரவல் அதிகரித்து, நோய் அபாயமும் உயர்ந்துள்ளது.

தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இன்மை காரணமாக, உள்ளூர்க் கால்நடைப் பண்ணையாளர்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கால்நடை விவசாயிகளின் போராட்டங்கள் அவசர நடவடிக்கைகளுக்கான அழைப்பாகும். அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கால்நடை வளர்ப்பு என்பது ஒரு பாரம்பரிய வாழ்வாதாரம் மட்டுமல்ல, அது தேசிய பொருளாதாரத்திற்கும் (GDP-யில் 1% பங்களிப்பு) மிக அவசியமானது.

அரசாங்கம் இந்த விவசாயிகளின் கவலைகளைச் செவிமடுத்து, அவர்களுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் வளங்களை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகவும் வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதற்காகவும் முன்னெடுக்கும் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும். மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் விவசாயப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இம்மாற்றங்கள் இன்றியமையாதவை.

நிலமும் அடையாளமும் 

இலங்கையின் உள்நாட்டுப்போர் மௌனித்து 17 வருடங்களை (2009 – 2026) நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலிலும், போரின் கொதிநிலை இன்னும் தணியவில்லை என்றே கூறலாம். இன்றும் பல்வேறு வடிவங்களில் சிறிய அளவிலான மோதல்கள் அரங்கேறி வருகின்றன. இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையும், அத்தகைய சூழலை உருவாக்குவதற்கான தொடர் முயற்சிகளும் இன்றும் நீடிக்கின்றன.

ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் ‘உயிர்நிலை’ என்பது, தமது நிலத்தின் மீதான விட்டுக்கொடுக்க முடியாத உரிமையை நிலைநாட்டுவதே ஆகும். நிலம் என்பது வெறும் மண் அல்ல; அது ஒரு சமூகத்தின் வாழ்வியல் அடித்தளம், அடையாளம் மற்றும் வாழ்வாதாரம். நிலத்தின் மீதான கூட்டு உரிமையைக் கைவிடும் ஒரு சமூகத்திற்கு, காலப்போக்கில் தனது சுய அடையாளத்தைத் தானே கரைத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் மூலவேர், நில அடையாளத்தைப் பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது. நிலமே ஒரு சமூகத்தின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முதற்பொருளாகும்.

கிழக்கு இலங்கையில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரை மோதல்களும் வாழ்வாதாரப் போராட்டங்களும் இன்று பிரதான களங்களாக மாறியுள்ளன. போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் தணியாத கொதிநிலையுடன் தொடரும் இந்தப் போராட்டங்களின் மையக்கருப்பொருள் நிலமும் அடையாளமும் ஆகும்.

தற்போது மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய மேய்ச்சல் தரைகள் இந்த மோதல்களின் குறியீடாக மாறியுள்ளன. இப்பிரச்சினையின் மையத்தில் சிக்கித் தவிப்பது என்னவோ அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் போராடும் கால்நடைப் பண்ணையாளர்களும் அவர்களின் சொத்தான கால்நடைகளுமே ஆகும். ஆழமான அரசியல் நலன்கள், நிர்வாகத்துறையின் இறுக்கமான பிடி மற்றும் நீதித்துறையின் நீண்டகால மௌனம் ஆகியவற்றுக்கு இடையே இந்தப் பிரச்சினை ஒரு தீர்க்க முடியாத முரண்பாடாக உருவெடுத்துள்ளது.

போருக்குப் பிந்தைய சூழலில், மேய்ச்சல் நிலப் பிரச்சினை என்பது வெறும் மனித மோதலாக மட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் காரணியாகவும் மாறியுள்ளது.

  • உணவுப் பற்றாக்குறை: மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், கால்நடைகளுக்குப் போதுமான உணவு கிடைக்காமல் அவை பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • கால்நடைகள் கொல்லப்படுதல்: மனிதர்களுக்கு இடையிலான மோதல்களில் அப்பாவிக் கால்நடைகள் கொல்லப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்கின்றன.
  • பொருளாதாரச் சரிவு: மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகமுக்கிய பொருளாதார வளமான கால்நடைத் துறை படிப்படியாக அழிந்து வரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

தற்போதைய மேய்ச்சல் நிலப் பிரச்சினை என்பது நீண்டகாலத் திட்டமிடலின் ஒரு பகுதியாகும். யுத்த காலத்தில் இப்பகுதிகள் (மகாவலி ‘பி’ வலயம்) விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, வெளி மாவட்ட ஊடுருவல்கள் தடுக்கப்பட்டிருந்தன. ஆனால், கிழக்கு மாகாணம் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் இம்மோதல்கள் மீண்டும் உயிர் பெற்றன.

இதன் பின்னணியில் உள்ள பிரதான காரணங்கள்:

  1. மேலாதிக்கம்: தமிழ் மக்களின் பூர்விக நில இருப்பின் மீதான மேலாதிக்கத்தைச் செலுத்துதல்.
  2. புவிசார் அரசியல் மூலோபாயம்: தமிழ் மக்கள் கோரும் வடக்கு – கிழக்கு தாயக நில இணைப்பின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பது.
  3. மகாவலித் திட்டம்: இந்த மூலோபாயத் திட்டத்தின் முதன்மை அச்சாணியாக இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான ‘மகாவலி அபிவிருத்தித் திட்டம்’ பயன்படுத்தப்படுகிறது. மேய்ச்சல் நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவது என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள், இப்பகுதியின் இனப்பரம்பலையும் நில உரிமையையும் மாற்றியமைக்கும் நோக்கம் கொண்டவை என அஞ்சப்படுகிறது.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் வருகை 

இலங்கையின் நீளமான நதியாகிய மகாவலி கங்கையையும் அதன் கிளை ஆறுகளை அண்டிய நிலப்பரப்புகளையும் மையப்படுத்தி, 1964ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் ‘UNDP’ மற்றும் ‘FAO’ நிறுவனங்களின் நிதிப் பங்களிப்புடன் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் மகாவலி அபிவிருத்தித் திட்டம். ஆரம்பத்தில் இத்திட்டம் பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அபிவிருத்திக்காகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்கள் ‘System A’ முதல் ‘M’ வரை 13 தொகுதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தன. இதில் A, B (வலது கரை), I, J, K, L மற்றும் M ஆகிய ஏழு தொகுதிகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் இத்திட்டம் ஒரு சாதகமான வளர்ச்சியாகவே பொதுவெளியில் பார்க்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அந்த நிலைப்பாடு மாறி, தமிழ் பேசும் மக்களின் சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் கருவியாக அது உருவெடுத்தது. கடந்த ஆறு தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களிலும், இன முரண்பாடு ஒரு முழு அளவிலான போராக மாறியதிலும் மகாவலித் திட்டம் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக முக்கியமானவை.

இலங்கையின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த கிராமப்புற அபிவிருத்தித் திட்டமான இது, மகாவலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நதிப் படுகைகளிலிருந்து நீர்வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. விவசாய உற்பத்தியை அதிகரித்தல், நீர்மின்சாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலமற்ற விவசாயிகளைக் குடியமர்த்துதல் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு ஆகியவை இதன் முக்கிய குறிக்கோள்களாக இருந்தன. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 39 சதவீதத்தையும், வறண்ட மண்டலத்தின் 55 சதவீதத்தையும் உள்ளடக்கிய இந்தப் பகுதிகளில் நிலமற்ற ஏழை விவசாயிகள் மீள்குடியேற்றப்பட்டனர். 1979ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மகாவலி அபிவிருத்தி அதிகார சபையானது, நிலம் மற்றும் நீர் மேலாண்மைக்கான அரச அமைப்பாகச் செயற்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 365,000 ஹெக்டேர் நிலப்பரப்பு உள்ளடக்கப்பட்டதுடன், புதிய குடியிருப்புகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது 101,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நீர்ப்பாசன நிலங்களை இந்த அதிகார சபை நிர்வகித்து வருகிறது.

ஆரம்பத்தில் 900,000 ஏக்கர் நிலத்தைப் பாசன வசதி மூலம் அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் 650,000 ஏக்கர் புதிய நிலமும், நீர்ப் பற்றாக்குறையுள்ள 250,000 ஏக்கர் நிலமும் அடங்கும். நீர்த்தேக்க நீர் மூலம் 507 மெகாவாட் திறனுடன் 2,600 மில்லியன் ‘GWh’ இனை உற்பத்தி செய்யும் திட்டமும் உள்ளடக்கப்பட்டது. 1968ஆம் ஆண்டு ரூ. 6,700 மில்லியன் செலவில் 30 ஆண்டுகாலத் திட்டமாக இது வகுக்கப்பட்டிருந்தது. 1970இல் பிரதமர் டட்லி சேனநாயக்க இதற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, யூகோஸ்லாவிய நிறுவனமான இங்க்ரா மற்றும் சில உள்ளூர் நிறுவனங்களின் உதவியுடன், 30,000 ஏக்கர்களைச் சேர்த்து, இத்திட்டத்தினை முன்னெடுத்தார். விவசாயம் மற்றும் மின்சாரத் துறையில் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தார். இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் ரூ. 350 மில்லியன் செலவில் குறிப்பிடத்தக்க பொருளாதார வருமானம் ஈட்டப்பட்டது.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தன்னிறைவு, நீர்மின்சாரம் மற்றும் 1.2 மில்லியன் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை முன்னிறுத்தி மகாவலித் திட்டத்தை விரைவுபடுத்துவதை அரசியல் நோக்கமாகக் கொண்டது. நீர்ப் பயன்பாட்டை பற்றிய மதிப்பீடுகளின் அடிப்படையில், முதலில் திட்டமிடப்பட்ட 900,000 ஏக்கரில் பாதியை மட்டுமே அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது. மகாவலிப் படுகைக்கு வெளியே உள்ள ஆற்றுப்பள்ளத்தாக்கு உரிமைகளை மதிக்கும் வகையில் மத்திய மாகாண கால்வாய் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டதால் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி திட்டம் (AMP) உருவாக்கப்பட்டது.

இந்தத் திட்டம் 71,000 ஏக்கர் புதிய நிலத்தை அபிவிருத்தி செய்வதையும், சிஸ்டம்கள் A–D இல் உள்ள பாசன நிலங்களை மேம்படுத்துவதையும், நீர் ஒழுங்குமுறை மற்றும் மின்சார உற்பத்திக்காக கொத்மலே மற்றும் விக்டோரியா போன்ற அணைகளைக் கட்டுவதையும் இலக்காகக் கொண்டது. ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய இந்தத் திட்டம் சுமார் 500,000 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கி, 140,000 புதிய குடும்பங்களைக் குடியேற்றுவதற்கும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களுக்குப் பயனளிக்கும் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், மக்கள் தொகை நெரிசலைக் குறைப்பதற்கும், உணவுத் தன்னிறைவை அடைவதற்கும் உருவாக்கப்பட்டது.

1931 ஆம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்கா வேளாண்மை மற்றும் நில அமைச்சராக நியமிக்கப்பட்டது வறண்ட மண்டலத்தில் பல நீர்ப்பாசனத் திட்டங்களைத் தொடங்க வழிவகுத்தது. அவர் விவசாயப் பின்னணி கொண்டவராக இருந்ததும், பண்டைய சிங்கள மன்னர்களின் நீர்ப்பாசன முறைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்ததும் இதற்குத் தூண்டுதலாக இருந்ததாக கருதப்படுகிறது. 1935 இல் வெளியான அவரது ‘விவசாயம் மற்றும் தேசபக்தி’ என்ற நூல் போன்ற முயற்சிகள் அரசு அதிகாரிகளுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கின. காலப்போக்கில், சுதந்திர இலங்கையில் அரசியல் செல்வாக்கும் அதிகாரமும் இணைந்த நிலையில், பண்டைய நீர்ப்பாசன அமைப்புகளை மீட்டெடுப்பதோடு சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் கொள்கைகளும் முன்னெடுக்கப்பட்டன; இது பின்னாளில் நாட்டின் இனப்பிளவையும் நீண்டகால மோதல்களையும் தீவிரப்படுத்திய காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

சேனநாயக்காவின் கல் ஓயா விவசாயக் குடியேற்றத் திட்டம் அரசியல் நோக்கங்களுடனும் சிங்களப் பெரும்பான்மைச் சூழலுடனும் முன்னெடுக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகிறது. கல் ஓயா திட்டத்தின் செயற்பாடுகள் இன முரண்பாடுகளையும் பதற்றங்களையும் உருவாக்கிய சூழலில், தமிழர் எதிர்ப்பு உணர்வுகளையும் தூண்டியதாகவும் கூறப்படுகிறது. அதன் விளைவாக அரசியல் ஆதரவு பெற்ற குழப்பங்களும் வன்முறைச் சம்பவங்களும் ஏற்பட்டன; அவை அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற வழிவகுத்த, வரலாற்றின் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகின்றன.

இலங்கை வரலாற்றில் 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகாவலி மேம்பாட்டுத் திட்டம், நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகான மிகப்பெரிய முயற்சியாகக் கருதப்படுகிறது. இது தீவின் சமூக – இன நிலப்பரப்பை மாற்றியமைத்த ஒரு முக்கிய அபிவிருத்திக் கருவியாக அமைந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு உருவான இந்தத் திட்டம், உக்னோ விக்ரமசிங்க, சர் ஆர்தர் ரணசிங்க மற்றும் எச்.எம். ஹுலுகல்லே போன்ற மூத்த அதிகாரிகளின் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டதாகவும், பாலஸ்தீனில் உருவாக்கப்பட்ட யூதக் குடியேற்ற அனுபவங்களிலிருந்து ஊக்கமடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. 1977க்குப் பின்னர் துரிதப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம், குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது. மாதுரு ஓயா பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் சவால்களைச் சந்தித்தாலும், 1980களிலிருந்து இராணுவ – நிர்வாக ஒத்துழைப்புடன் அவை விரிவடைந்தன. இந்தக் காலகட்டத்தில் உருவான குடியேற்ற மற்றும் நிலப் பயன்பாட்டுக் கொள்கைகளே பின்னர் மேய்ச்சல் நிலங்களைச் சுற்றியுள்ள இன முரண்பாடுகளின் வரலாற்றுப் பின்னணியாகக் கருதப்படுகின்றன.

கிழக்கில் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து போனதற்கான காரணங்களில் ஒன்று 1950களிலிருந்து முன்னெடுக்கப்பட்ட குடியேற்ற விரிவாக்கத்தை நோக்கிய அரசியல் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகும். இதனால் கிழக்கில் பால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மேய்ச்சல் நிலங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைத் தாண்டி, சமூக மற்றும் இன உறவுகளையும் பாதிக்கும் பரந்த விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாதுரு ஓயா நீர்த்தேக்கம் மற்றும் ‘System B’ இன் வலது கரை (Right Bank) அபிவிருத்தி 

மகாவலி அபிவிருத்தித் திட்டம் முழுமையாக நிறைவுறுவதற்கு இன்னும் 30 வருடங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனைத் தனது ஆறு வருட ஆட்சிக்காலத்திற்குள் நிறைவு செய்வதாகக் கூறி, ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களினால் இத்திட்டம் ‘துரிதப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டம்’ (Accelerated Mahaweli Programme) எனப் பெயர் மாற்றப்பட்டது. இத்திட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 12 முக்கிய வேலைத்திட்டங்களுள் ஒன்றான மாதுரு ஓயா நீர்த்தேக்கம் மற்றும் ‘System B’ வலயத்தின் வலதுகரை (Right Bank) அபிவிருத்தி ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவே இன்றைய மயிலத்தமடு மற்றும் மாதவணை மேய்ச்சல் தரைப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

மாதுரு ஓயாவினுடைய இடது மற்றும் வலது கரைகள் மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியுள்ளன. இதில் இடதுகரையானது முற்றுமுழுதாக பொலன்னறுவை மாவட்டத்திற்குள்ளும், வலது கரையானது மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளும் அமைந்துள்ளன. குறிப்பாக, பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த மற்றும் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவுகளையும், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்குப் (வாகரை) பிரிவையும் உள்ளடக்கியதாகவே ‘System B’ வலயம் வரையறுக்கப்பட்டது.

ஆயினும், முந்தனை ஆற்றினை அண்டி அமைந்துள்ள கோரளைப்பற்று (வாழைச்சேனை) மற்றும் ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் பின்னரான காலப்பகுதியில் மகாவலித் திட்டத்திற்குள் ‘விசேட பிரதேசங்களாக’ (Special Areas) உள்வாங்கப்பட்டன. இத்தகைய நிர்வாக மாற்றங்களே காலப்போக்கில் நிலப்பயன்பாட்டு முரண்பாடுகளுக்கும், உள்ளூர்ப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலங்கள் பறிபோவதற்கும் அடிப்படையாக அமைந்தன.

நீர்மின்சார உற்பத்தி, வெள்ளக் கட்டுப்பாடு, உலர் வலய விவசாயத்திற்கான நீர்ப்பாசன வசதிகளை உருவாக்குதல், நிலமற்ற மற்றும் வேலையற்ற குடும்பங்களைக் குடியேற்றுதல் மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பௌதீக, சமூக உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன. இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையின் கீழ், குறிப்பிட்ட பிரதேசங்களின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நுட்பமான அரசியல் நிகழ்ச்சி நிரலும் துரித மகாவலித் திட்டத்தில் மறைமுகமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினால் மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இன்று நேற்று தொடங்கியவை அல்ல. துரித மகாவலித் திட்டம் 1977 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதற்கான எதிர்ப்புணர்வுகளும் பிரச்சினைகளும் 1983 ஆம் ஆண்டளவிலேயே முளைவிடத் தொடங்கின. மாதுறு ஓயாவை அண்டிய மட்டக்களப்பு நிலப்பரப்பில் தமிழர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பதாகக் குற்றம் சுமத்திய அன்றைய அரசாங்கம், அதற்குப் போட்டியாகச் சிங்கள மக்களை முறையற்ற விதத்தில் அங்கு குடியேற்றத் தொடங்கியது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட இந்தச் சிக்கலான நிலையைத் தணிக்க இந்தியா தலையிட்ட போதிலும், அந்த முயற்சி பெரிய அளவில் வெற்றியளிக்கவில்லை.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த சூழலில், இந்தப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட அத்துமீறிய குடியேற்றங்கள் படிப்படியாகக் குறைந்தன. இதனால் 2009 ஆம் ஆண்டு வரை மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைகள் பாரிய அளவில் எழவில்லை. ஆனால், 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தவுடன், மீண்டும் மேய்ச்சல் தரைகளை அண்டிய பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்களை அரசாங்கம் இராணுவப் பாதுகாப்போடு ஊக்குவிக்கத் தொடங்கியது.

குறிப்பாக 2012 ஆம் ஆண்டிலிருந்து மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய இரு மேய்ச்சல் தரைகளும் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டன. சுமார் 3,150 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த மேய்ச்சல் தரையில், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்படுவதற்கு அரச இயந்திரம் நேரடியாக உதவியதுடன், இராணுவம் அதற்கான பாதுகாப்பு அரணாகச் செயற்பட்டது. இதுவே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடைப் பொருளாதாரத்தைச் சிதைக்கும் பாரிய நிலப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

50 ஆண்டுகளிற்கு மேலாக தமிழ் கால்நடைப் பண்ணையாளர்களால் மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த 25,000 ஏக்கர் காணி, செங்கலடி – வாழைச்சேனை – வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து பெறப்பட்டு, 2013 இல் காட்டுக்குரிய ஒதுக்கமாக அறிவிக்கப்பட்டது. அந்த எல்லையினுள் வேறு எவரும் உள்நுழைய வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட வன அதிகாரிகள் மூலம் பதாகைகள் நட்டு, இராணுவத்தின் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்நிலை பல பதற்ற நிலைகளை உருவாக்கியது.

2020 ஆம் ஆண்டளவில் அப்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் மகாவலி அதிகார சபையுடன் இணைந்து குறித்த மேய்ச்சல் தரைகளில் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள ஊக்கமளித்திருந்தமை பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கியது. பல சட்டரீதியான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் சார்பாக எடுக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் முறையற்ற குடியேற்றங்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டிருந்தும், இன்றுவரை அக்குடியேற்றங்கள் அகற்றப்படவில்லை.

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்குள் உள்ளடக்கப்படும் மகாவலி அபிவிருத்தி மண்டலங்களும் அதன் தாக்கங்களும்

மகாவலி நீர் எமது காலத்தில் மட்டுமல்ல; எமக்கு அடுத்தடுத்த சந்ததியினரின் காலத்திலும் இந்தப் பகுதிக்கு வரக்கூடிய எந்தச் சாத்தியக் கூறுகளும் இல்லை. தமிழ் மக்களிடமிருந்து காணிகளைப் பறித்து அவர்களை வெளியேற்றுவதுதான் அவர்களுடைய நோக்கம்; அதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை. மகாவலி அதிகாரசபை என்ற போர்வைக்குள் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, எங்களுடைய காணிகளைப் பறித்து சிங்களவர்களுக்கு வழங்கிக்கொண்டிருப்பதே அவர்களுடைய செயற்பாடாக உள்ளது.

மகாவலித் திட்டத்தின் கீழ் காணிகள் வழங்கப்படும் போது, குறைந்தபட்சம் விகிதாசார அடிப்படையிலாவது தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால், அதில் பாகுபாடு வெளிப்படாத ஒரு நிலைமை இருந்திருக்கும். ஆனால், ஏற்கனவே தமிழ் மக்களுக்கு உரித்தாயிருந்த காணிகளையும், அவர்களால் பயன்படுத்தப்பட்ட குளங்களையும் அபகரித்து தமது திட்டங்களை முன்னெடுப்பதே இத்திட்டத்தின் உண்மையான இலக்காக உள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்குள் உள்ளடக்கப்படும் மகாவலி அபிவிருத்தி மண்டலங்களும் அது குறித்த விவரங்களும்: 

Aமகாவலி A மண்டலம் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு முன்மொழியப்பட்ட புதிய மேம்பாட்டுப் பகுதியாகும் (திருகோணமலை மாவட்டம்).A மண்டலத்திற்குள் உள்ள குறிப்பிட்ட நிர்வாக மாவட்டங்கள் மற்றும் பிரிவுகள் முழுமையாக வெளியிடப்படவில்லை; செயற்படவில்லை.  2026 இல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மொத்தம் 70,000 ஹெக்டேர் நிலப்பரப்பை உள்ளடக்கியது. இந்தத் திட்டத்தில் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்காக உள்ளூர்க் குடியேறிகள் மற்றும் விவசாய நிறுவனங்களுக்கு நிலத்தை விநியோகிப்பதும் அடங்கும்.
Bபொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அண்மையில் இணைக்கப்பட்ட அம்பாறையின் எல்லைப்பகுதி (5%). ‘B’ வலயத்தின் அம்பாறையின் கிராமம் ஒன்றை வில் பொத்தனா என்னும் பெயராக மாற்றும் வகையிலான திட்டங்களும் தற்போது உருவாகி வருகின்றன. மகாவலி ‘B’ வலயம் முதன்மையாக பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு நிர்வாக மாவட்டங்களுக்குள் அமைந்துள்ள ஒரு முக்கிய அபிவிருத்தி வலயமாகும். குறிப்பாக, வெலிகந்த மற்றும் திம்புலாகலை பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கோறளைப் பற்று வடக்குப் (வாகரை) பிரதேசத்திலும் இது பரவியுள்ளது. இப்பகுதி மகாவலி கங்கை மற்றும் மாதுரு ஓயா ஆகிய ஆறுகளால் சூழப்பட்டுள்ளது.
Iமதவாச்சியும் இதற்குள் அடங்குகிறது. இது வட மத்திய மாகாணத்தின் ஆற்றுப்படுகைப் பகுதிகளில் ஒன்றாகவும், வவுனியாவின் தெற்குப் பகுதிகளுக்கு அருகிலுமுள்ள ஒரு வலயமாகவும் உள்ளது. மேலும், I மற்றும் H வலயங்கள் ஒன்றிணைக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களும் உள்ளன. அதேபோல், I & H பகுதி வலயம், ‘L’ வலயத்துடன் இணைக்கப்படும் ஒரு முக்கியப் புள்ளியாகவும் விளங்குகிறது.I & H பகுதி வலயம், L வலயத்துடன் இணைக்கப்படும் ஒரு புள்ளியாகும். L வலயம் இணையும் போது, தமிழ் மாவட்டங்களின் பல பகுதிகள் ஏனைய மாவட்டங்களுடன் உள்வாங்கப்படும் நிலை உருவாகும்.
Jமகாவலி ‘J’ வலயத்திற்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவுகளும், மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபைப் பிரிவும், வவுனியா வடக்குப் பிரதேச சபைப் பிரிவும் உள்வாங்கப்படுகின்றன. துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் மாந்தை மேற்கு பகுதிகளில் ஒவ்வொரு பிரதேசத்திலும் தலா 15 கிராம சேவகர் பிரிவுகள் அடங்குமாறு ‘J’ வலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டங்களின் மூலம் வடக்கு–கிழக்கில் தமிழ் மக்களின் தாயகப் பகுதிகளில் இனப் பரம்பல் மாற்றம் ஏற்படுத்தப்படும் நிலை உருவாகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 1,40,000 மக்கள் வசித்து வருகின்றனர். இதில் புதுக்குடியிருப்பைப் தவிர்ந்த ஏனைய பெரும்பாலான பகுதிகளில் வாழும் மக்கள் இத்திட்டங்களால் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளது. வவுனியா வடக்குடன் தொடர்புடைய கரைத்துறைப்பற்று மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளுக்குள் உள்ளடங்கிய காணிகளில் உள்ள பெரும்பாலான குளங்கள் அபகரிக்கப்பட்டு, ‘கெவில் ஓயா’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சுமார் ஆறாயிரம் ஏக்கர் காணியை மணலாற்றில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Kமகாவலி ‘K’ வலயம் என்பது இலங்கையின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒரு வலயமாகும். மகாவலி ‘L’ வலயத்துடன் தொடர்புபடுத்தப்பட்டதோடு, மகாவலி ‘J’ மற்றும் ‘K’ வலயங்களை வட மாகாணத்தில் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு நீட்சியாகவும் இது அமைகிறது.
Lமுல்லைதீவு, அனுராதபுரம், வவுனியா (வெலிஓயா) ஒன்றிணைந்த அபிவிருத்தி திட்டம்.
1. வெலிஓயா  2. பதவியா 3. கெபிதிகொல்லேவ 4. வவுனியா தென்பகுதி 5. வவுனியா வடக்கு 
இப்பகுதி மக்கள் அங்கு குடியிருந்து 50 வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும், அவர்களின் நில உரிமைகள் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு முன்பு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டு, நில உரிமைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். மேலும், வயல் நிலங்கள் முன்பு 99 வருடக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தாலும், அவையும் தற்போது பறிக்கப்பட்டுள்ளன. 1980களிலிருந்து ‘மகாவலி எல் வலயம்’ என்ற பெயரில் எமது பூர்விக நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 2500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, ஊர்மனைப் பகுதிகளுக்கு அண்மையாகவே சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மகாவலி ‘எல்’ வலயத்தின் பெயரில் தமிழ் மக்களுக்கு பயனளித்துவரும் காணிகள் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தின் மூலம் தன்னிறைவை அடைந்து வந்தனர். ஆனால் அவர்களுடைய காணிகள் பறிக்கப்பட்டதன் விளைவாக இன்று தமிழ் மக்கள் விவசாயம் செய்ய காணிகளின்றிக் காணப்படுகின்றனர். மகாவலி கோட்டக்கேணி விநாயகர் ஆலயத்திற்கு அருகிலுள்ள காடுகள் பாரிய இயந்திரங்கள் மூலம் ஏக்கர் கணக்கில் அழிக்கப்பட்டு, அந்த நிலங்களை சிங்கள மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உந்திராயன் குளம் என அழைக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசத்தில் 264 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு, ‘நெலும்வெவ’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆமையன்குளம் 103 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட நிதியில் புனரமைக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ‘கிரிவன்வெவ’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்கள மக்களிடம் கையளிக்கப்பட்டது அனைவரும் அறிந்த விஷயமாகும். இக்குளத்தைச் சுற்றியுள்ள 360 ஏக்கர் நிலங்களில் தமிழ் மக்கள் முன்பு விவசாயம் செய்து வந்தனர். இதனுடன் சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டும், பிற வளங்கள் பயன்படுத்தப்பட்டும், அந்த நிலங்கள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 3,744 ஏக்கர் காணி இணைக்கப்பட்டு மொத்தம் 11,232 ஏக்கர் காணிகள் ‘மகாவலி எல்’ என்ற பெயரில் அபகரிக்கப்பட்டுள்ளன. ‘எல்’ வலயத்திற்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச சபைப் பிரிவுகளைச் சேர்ந்த 34 கிராம சேவகர் பிரிவுகள் அடங்குகின்றன. இதயபூமி எனக் குறிப்பிடப்படும் மணலாறு பகுதியும், முல்லைத்தீவு கச்சேரி என அழைக்கப்படும் பகுதியும் கூட இந்த ‘எல்’ வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மகாவலி ‘எல்’ திட்டத்தின் கீழ் மட்டும் முல்லைத்தீவில் 4,367 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னரும் சூரியனாறு பகுதியில் 1,700 ஏக்கர் காணி உட்பட மேலும் சில காணிகளை உள்வாங்கும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மணலாறுப் பகுதி எவ்வாறு அபகரிக்கப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது அங்கு 12,187 பேர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதி தனியான பிரதேச செயலகப் பிரிவாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று இக்குடியேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் இப்பகுதிகளில் பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி, ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ள இடங்களில் மேலும் புதிய குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Mவறண்ட மண்டலத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக சிஸ்டம் ‘M’ உள்ளது. ஆரம்ப முயற்சிகள் H மற்றும் C அமைப்புகளில் கவனம் செலுத்தியிருந்தாலும், பின்னர் நீர்ப்பாசனம் மற்றும் குடியேற்றத்திற்கான மாஸ்டர் திட்டத்தின் கீழ் கூடுதல் பகுதிகளைச் சேர்க்க விரிவுபடுத்தப்பட்டது. மகாவலி அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும் சிஸ்டம் M, விவசாய மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மையை வலியுறுத்துகிறது. இது முதன்மையாக மகாவலி மாஸ்டர் திட்டத்தின் இறுதி மற்றும் மிகப்பெரிய முயற்சியான மொரகஹகந்த–களுகங்கை திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மொரகஹகந்த–களுகங்கை நீர்த்தேக்கங்கள் 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நிறைவடைந்தன.

தொடரும்.



About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்