மலையகத் தமிழர் சமூக உருவாக்கத்தில் அரங்கின் பாத்திரம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
37 நிமிட வாசிப்பு

மலையகத் தமிழர் சமூக உருவாக்கத்தில் அரங்கின் பாத்திரம்

October 30, 2025 | Ezhuna

இலங்கையின் மலையகத் தமிழரின் வரலாறும் பண்பாடும் பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதை நாம் அறிவோம். பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியின் சாபக்கேடுகளில் ஒன்றாக நிகழ்ந்த மாபெரும் புலப்பெயர்வுகளில் மலையகத் தமிழரின் புலம்பெயர்வும் உள்ளடங்கியுள்ளது. அது மனிதகுல வரலாற்றில் ஒரு நெடும் பயணம் (Long Walk) என அவுஸ்திரேலிய நாட்டவரான வென்டன் ட்ரைசன் என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது தி லோங் வோக்’ (The Long Walk) என்ற நூலில் அந்தப் பயண அனுபவங்களைப் பதிவு செய்கிறார்.

அப்புலப்பெயர்வின் வடுக்கள் இன்றும் அழியவில்லை; அது என்றென்றும் அழியப்போவதும் இல்லை. வரலாறு வஞ்சித்தது; வாழ்நிலையும் சூழ்நிலையும் மானுடத்தைச் சிறைப்படுத்தியது. பிரித்தானியக் காலனித்துவக் கொடுங்கோலர்கள் இரத்தம் பொங்கும் வெறியோடு மக்களை நசுக்கி, தங்களது காலனித்துவத்தின் கருவூலத்தை நிரப்பிக்கொண்டிருந்தபோது, மக்களின் வாழ்க்கை மோசமானதாக மாறியது. காலநிலையாலும், கொள்ளைநோய்களாலும் (குறிப்பாக, ஓயாத தொல்லை கொடுத்த கொலராவினால்) மாண்டு மடிந்தவர்களின் எண்ணிக்கை பல நூறு ஆயிரங்கள் என வரலாறு பதிவு செய்கிறது. மனித உருவில் நடமாடிய நரமாமிசப் பட்சிகள் பல வழிகளில் இம்மக்களைச் சூறையாடிய, சூறையாடுகின்ற கதை வரலாற்றில் முடிவற்றுத் தொடர்கிறது.

“நாடு சுதந்திரம் பெற்றதடா

நாங்கள் சுதந்திரம் பெற்றோமா” 

எனக் கேட்கின்றான் மலையக மக்கள் கவிஞரான குறிஞ்சித் தென்னவன். மலேசியா, சிங்கப்பூர், பிஜித் தீவு, மடகஸ்கார், தென் ஆபிரிக்கா, பிரிட்டிஷ் கயானா என விரிந்து பரந்த நிலப்பரப்புகளில், கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளில், பதினெட்டாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்து குடியேறியவர்கள் அந்தந்த நாடுகளின் குடிமக்களானார்கள்; ஆட்சியாளர்களானார்கள்; சுதந்திர மனிதர்களும் ஆனார்கள். ஆனால், வரலாற்றின் துயரம் என்னவென்றால், இலங்கை நாட்டிலே ‘இது என் நாடு’ என்று நினைக்கும் உரிமை கூட இல்லாத அளவுக்கு, வரலாறு எம்மை  முழுவதும் இழிவுபடுத்தி இருக்கிறது. எமது வரலாறு முழுவதும் வஞ்சிக்கப்பட்ட வரலாறு. மனித நாகரிகத்துக்கு எதிரான சட்டங்கள், உடன்படிக்கைகள், அடிமைச் சாசனங்கள், திட்டமிட்ட இன வன்முறைத் தாக்குதல்கள், குடியேற்றங்கள், ஓயாத புலப்பெயர்ச்சிகள், நாடு விட்டு நாடு விரட்டப்பட்ட நிலை என வாழ்வுக்கும் இருப்புக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையிலும் இந்த இனம் நீடித்து நிலைத்திருக்கிறதே!

இலங்கை மத்திய மலைநாட்டின் வளமான விளைநிலங்கள் இவர்களால் தான் மேலும் மேலும் வளமூட்டப்படுகின்றன. ஆனால், அந்த நிலம் இவர்களுக்கு உரியதாக இல்லை. மேலும், இம்மக்கள் செறிவாக ஒரு நிலப்பகுதியில் வாழ்கிறார்கள்; சிறந்த மொழிவழித் தொடர்புடையவர்கள்; இறுக்கமான கலாசார அடையாளத்தைக் கொண்டவர்கள்; இலங்கை பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளோடு நெருக்கமான தொடர்புடையவர்கள். இழப்பதற்கு ஏதுமற்ற, எதற்கும் உரித்தற்ற மக்கள் என்ற நிலையிலும் இவர்கள் எழுந்து நிற்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமாயிற்று?

இதற்கு விடை தர முற்படும் ஆய்வாளர்களும், பண்பாட்டு மானிடவியலாளர்களும் மக்களின் மொழி, கலாசாரம், பண்பாட்டுப் பரிமாணங்களில் அதற்கான விடையைத் தேடப் போராடுகிறார்கள். தமிழில் உள்ள அனைத்து வளமான, வலுவான மரபுக் கூறுகளையும் தன்னகத்தே கொண்ட இலங்கை மலையகத் தமிழர்களின் வாழ்வை வளப்படுத்துவதிலும் சமூக இருப்பை உறுதி செய்வதிலும் மலையக மக்களின் மரபுக் கலைகளும் பண்பாட்டுக் கூறுகளும் மிக முக்கியமான பங்களிப்பை நல்கி வருகின்றன.

தமிழ் பண்பாட்டின் கலை மற்றும் இலக்கியப் பரப்பில் ஆழப் பதிந்துள்ள இராமாயணம், மகாபாரதம், ஐம்பெரும் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், குறவஞ்சி, பள்ளு இலக்கியங்கள், அத்துடன் காத்தவராயன் கதை, லவகுசா கதை, பவளக்கொடி, அல்லி அருக்காணி கதை, நல்லதங்காள் கதை, அரிச்சந்திர புராணம், கண்டி ராசன் கதை, காசிராசன் கதை, ஒட்டக்கூத்தர் கதை, நொண்டிவீரன் கதை, காத்தவராயன் கதைப்பாடல், அபிஞான சௌந்தரி கதை போன்ற நாட்டார் மற்றும் புராணக் கதைப் பாடல்கள், மற்றும் சேர – சோழ – பாண்டியர் காலப் பண்பாட்டுக் கலைக்கூறுகள் என அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட மலையகத் தமிழர்கள், புதியதோர் நிலப்பரப்பில் புதிய உற்பத்தி முறைக்குள் உள்வாங்கப்பட்டனர்.

அவர்கள் தமது வாழ்நிலையைப் பாதுகாக்க முனைந்தபோது, அவர்களுடைய கோபம், வெறுப்பு, துக்கம், வேதனை, அவமதிப்பு, எதிர்ப்புணர்வு, ஆற்றாமை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் அரங்கக் கலைகள், மலையகத் தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் காத்திரமான பங்கை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோப்பிக்கால சமுதாய அரங்கு 

1824 ஆம் ஆண்டு முதல் 1867 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் தென் மாகாணத்தின் உடுகம மலைக் குன்றுகளிலும் கோப்பி மிகச் சிறந்த விளைபயிராக விளைவிக்கப்பட்டது. பிரித்தானியரும், சுவிஸ் நாட்டவர்களும் கோப்பிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு, இலட்சக்கணக்கான ஏக்கர் கோப்பிப் பெருந்தோட்டங்களை உருவாக்கினார்கள். இந்தக் காலகட்டத்தில், மலைக் காடுகளை அழித்து நிலத்தைப் பண்படுத்துதல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல், வடிகால் அமைப்புகளை உருவாக்குதல், வீதிகள் மற்றும் இரயில் பாதைகளை அமைத்தல் போன்ற அனைத்துக் கட்டுமானப் பணிகளிலும் ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

கோப்பித் தோட்டங்களில் நாற்று நடுவது, அறுவடை செய்வது, அவற்றைக் கொழும்புத் துறைமுகத்துக்கோ அல்லது இரயில் நிலையத்துக்கோ கொண்டு செல்வது, குதிரை வண்டிகளையும் மாட்டு வண்டிகளையும் ஓட்டுவது போன்ற அனைத்துப் பணிகளிலும் இந்தியத் தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டனர். தோட்டப் பகுதிகளில் கட்டுமானத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்கும் இவர்களே முதுகெலும்பாக இருந்தனர். 

இலங்கைக்கு வந்த இந்தியத் தொழிலாளர்கள், தமது கலை மற்றும் பண்பாட்டுக் கோலங்களைப் பேணிக்காத்தனர். அவர்கள் தத்தமது தமிழகக் கிராமங்களில் வழிபட்ட தெய்வங்களைத் தங்களது குலதெய்வமாக, நில தெய்வமாக வழிபடத் தொடங்கினார்கள். அத்துடன், தாம் வாழ்ந்த இடங்களின் பெயர்களையே புதிய தோட்டங்களுக்கும் சூட்டத் தொடங்கினார்கள். பெரிய கங்காணிமார்களின் திண்ணைகளிலே கூடி, கூட்டு வாழ்வைப் பாதுகாக்க முயன்றனர். இதன் ஒரு பகுதியாக, அவர்கள் காத்தவராயன் கதை, நல்லதங்காள் கதை, அர்ச்சுனன் தபசு, அண்ணன்மார் கதைப்பாடல், அரிச்சந்திர புராணம், அம்மானை பாடல்கள், பவளக்கொடி, பொன்னர் – சங்கர், லவகுசா, காமன் கூத்து, மகாபாரதக் கதைகள், இராமாயணக் கதைகள், குறவஞ்சிப் பாடல்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் போன்றவற்றை படித்தும், நடித்தும், ஆடியும், பாடியும் வந்தனர்.

இந்தக் கலை வடிவங்கள் வெறுமனே பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமல்லாமல், அவர்களின் கூட்டு மன வெளிப்பாட்டுக் கருவியாகவும் பயன்பட்டன. ஆற்றாமை, பிரிவுத்துயர், தனிமை, களைப்பு, சோர்வு போன்ற உணர்வுகளுக்கான பரிகாரமாகவும், கோபம், வெறுப்பு, ஆத்திரம், அடக்க முடியாத ஆற்றாமை போன்ற உணர்வுகளின் வெளிப்பாட்டுச் சாதனமாகவும் இந்தக் கூட்டுக் கலை வடிவங்களைப் பயன்படுத்தினர்.

இலங்கை மலையகத் தமிழர்களின் பண்பாடு, மானிட சமுதாயத்தின் பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளில் உருவான ஆடல்கள், பாடல்கள், வேள்விகள், விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், தொன்மங்கள், மதிப்பீடுகள் போன்றவற்றின் தொடர்ச்சியாகவும், அவற்றின் பகுதியாகவும் அமைந்துள்ளது. இந்தப் பண்பாட்டின் படிமலர்ச்சிக் கட்டங்களை உள்ளடக்கி, அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு சமூகமாகவே இலங்கை மலையகத் தமிழர்கள் திகழ்கின்றனர். மேலும், இவர்கள் பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுடன் தொடர்புபட்ட ஆற்றுகைக் கூறுகளையும் அரங்க மரபுகளையும் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். அத்தோடு, உற்பத்தி உறவுகளோடு தொடர்புபட்ட புதிய கூறுகளை உட்புகுத்தியும், பழைய கூறுகள் பலவற்றை நீக்கியும் இன்றைய சமூக இருப்பை உறுதி செய்வதில் மலையக அரங்கியலாளர்களும் அரங்கமும் ஒரு மதிப்பார்ந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

தேயிலைக் காலத்தில் அரங்கச் செயற்பாடுகள் 

1867 ஆம் ஆண்டுக்குப் பின் மலர்ந்த தேயிலை யுகமானது, ஒன்றரை நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் சிரஞ்சீவி மூலிகையாக இலங்கைக்கு வாய்த்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு வற்றாத ஜீவநதி போன்று தொடர்ந்து பங்களித்து வருகின்றது. தேயிலை பயிரிடுவதற்கும் பராமரிப்புக்கும் இலட்சக்கணக்கான நிரந்தரத் தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், மலையகப் பிரதேசங்களில் நிலைபேறான ஒரு மக்கள் கூட்டம் வாழத் தலைப்பட்டது. கோசாம்பி, எஸ். நடேசன் போன்ற பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களின் பதிவுகளின்படி, இன்றைய தலைமுறை மலையகத் தமிழர்களில் 90% இற்கும் மேலானோர், அந்தத் தொடக்க கால மக்களின் வாரிசுகளே ஆவர்.

தேயிலை யுகத்தின் இக்காலப்பகுதியில் தான் பாரம்பரியமிக்க புராண இதிகாசக் கதைகள் பெருமளவு நாடகங்களாக அரங்கேற்றப்பட்டன; கிட்டத்தட்ட ஐந்து டசனுக்கும் மேற்பட்ட கூத்துகளும் கதைப்பாடல்களும் நிகழ்த்தப்பட்டு வந்ததாக மூத்த தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். தற்போது, பொன்னர் – சங்கர், அர்ச்சுனன் தபசு, லவகுசா, காமன் கூத்து, ஸ்ரீ ராமர் பஜனை போன்ற கூத்துகளும், ஸ்ரீ ராம கீர்த்தனை, நொண்டிமேளக் கூத்து போன்றவையும் மலையகத்தின் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவற்றுள், காதல், வீரம், அன்பு, இரக்கம், பாசம், விவேகம், வெற்றி, அறம் போன்ற பன்முக உளவியலைக் கட்டமைக்க வல்ல மதன ரதி படலத்தை மையமாகக் கொண்ட காமன் கூத்து இன்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. ஒரு பாரம்பரியமிக்க வெகுஜன நாடகமாக, காமன் கூத்து இன்று 600க்கும் மேற்பட்ட தேயிலை, இரப்பர் பெருந்தோட்டங்களில் நிகழ்த்தப்படும் ஒரு மலையக தேசியக் கூத்தாகத் திகழ்கின்றது. இக்கூத்தானது சடங்கு, தெருக்கூத்து மற்றும் மேடை நாடகப் பண்புகளை ஒருங்கே கொண்டுள்ளதால், இது மலையக நாடகப் பண்பாட்டின் மணிமகுடமாகப் பரிணமித்துள்ளது என்றால் அது மிகை இல்லை.

மலையக நாடக மரபுகளில், குறிப்பெடுத்தல், கம்பம் நடுதல், ஆட்டம் தொடங்குதல், திருமணம், காமம், காதல், சிருங்காரம், கோபம், போர் வீரம், உயிர்த்தெழுதல், அன்பு, இரக்கம் தொடர்பான பல்வேறுபட்ட வாழ்வியல் கூறுகளை ஆழப் பதிவு செய்வதிலும் மீட்டுருவாக்குவதிலும் காமன் கூத்து முக்கிய பங்கு வகிக்கின்றது. இக்கூத்தில் வேடம் தரிக்கும் இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்ற நம்பிக்கையுடன் இதற்காக வேண்டுதல் செய்து வேடம் தரிக்கும் வழக்கம் உள்ளது. காமன் கூத்துக்கு அடுத்ததாக, மகாபாரதக் கதையின் கிளைக் கதைகளை உள்ளடக்கிய அர்ச்சுனன் தபசு என்ற புராண அரங்கு மலையக சமூக உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததுடன், இன்றும் சமூக உருவாக்கத்தில் தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பாரம்பரிய அரங்குகள்

மலையகத் தமிழர் சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்வின் ஆணிவேராக அமைந்துள்ள பாரம்பரிய அரங்கியலானது, ஆழமான மொழியியல், பண்பாட்டியல், மானிடவியல், அரசியல், பொருண்மிய (பொருளாதார) கற்றல், கற்பித்தல் பொறிமுறை, ஆய்வுச் செயற்பாடு சார்ந்த விடயங்களை நாகரிக உலகிற்கு அளிக்க வல்லதாக உள்ளது. மேலும், திருமணச் சடங்குகள், பிரசவச் சடங்குகள், மரணச் சடங்குகள், ஆலயச் சடங்குகள், தபசு மரம் ஏறுதல், உயிர்ப்பித்தல், உயிர்த்தெழுதல் மற்றும் சிறுதெய்வ வழிபாடு ஆகியவையும் மலையக மக்களின் பாரம்பரிய அரங்கியலின் மூல விசைகளாக விளங்குகின்றன. இத்தகைய பாரம்பரிய அரங்கு, சமூகப் பெறுமானங்களை (மதிப்புகளை) கற்றுக் கொள்வதற்கும் கற்பிப்பதற்குமான ஒரு சமுதாயக் கல்விக்கூடமாகவே விளங்குகிறது.

மலையகப் பாரம்பரிய அரங்கானது, மூத்தோரை மதித்தல், தாய் – தந்தைக்குக் கீழ்ப்படிதல், குருவை மதித்தல், குழுவாகச் செயற்படல், கற்கக் கற்றல், வாழக் கற்றல், விழுமியக் கற்றல், விளையாட்டுக்களின் ஊடாகக் கற்றல், சமூக ஒழுங்கமைப்பு அணிதிரட்டல் போன்றவற்றை நிகழ்த்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அமைப்புகள், சாதனங்களைப் பயன்படுத்தி உறவு முறைகளைக் கட்டமைத்தலுக்கும் உதவுகிறது. மேலும், பாசப்பிணைப்புகள், தேவதைக் கதைகள், பழமொழிகள், வீரம், விவேகம் போதித்தல், சாகசக் கதைகளைக் கூறுதல், புராணங்களைச் சமூகமயமாக்கல், பழமொழிகளைச் சமூகமயமாக்கல், மரபுத் தொடர்கள், அடுக்குத் தொடர்கள், எதுகை, மோனை, இராகம், தாளம், நடனம், ஆடல் வகைகள், பாடல் வகைகள், கோல உடைகள், அலங்காரம், ஒப்பனைக் கலைகள், கைவினைத் தொழில்நுட்பம், கருவியைக் கையாளுதல் என அனைத்துத் துறைகளிலும் இந்தப் பாரம்பரிய அரங்கின் ஆழமான செல்வாக்கைக் காண முடிகிறது.

மலையகப் பாரம்பரிய நாடகங்கள் சமூக நம்பிக்கைகளைப் பாதுகாக்கும் ஊடகமாகவும், மலையகத் தமிழரின் மரபுரிமை அறிவியலை வளர்த்தெடுக்கும் சமூகச் சாதனமாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக, காமன் கூத்துப் பாடல்களில் ரதி – மதன் ஆடை ஆபரணங்களின் வகைகள், அவற்றைத் தயார் செய்வதற்கான பொருட்கள், அவற்றை பதப்படுத்தும் நுட்பங்கள் என்பன அழகாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல, பொன்னர் – சங்கர் பாடல் ஒன்று ஈமச்சடங்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக் காட்டுகிறது. மேலும், இந்தப் பாரம்பரிய அரங்கு சமூகச் செயற்பாடு, சமுதாயப் பங்குபற்றல், கூட்டு உழைப்பு மற்றும் கூட்டு முயற்சி ஆகியவற்றை வலியுறுத்துவதுடன், சமூக சமரசத்தை ஏற்படுத்துவதிலும் மிக முக்கிய பாத்திரம் வகிக்கிறது. மொத்தத்தில், இது மலையக சமூக உருவாக்கத்தில் தீர்க்கமான பங்கு வகித்திருக்கிறது எனலாம்.

இந்திய சுதந்திரப் போர் 

காந்திய இயக்கமும், 19 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலும் இந்தியாவில் இயங்கிய சுதந்திரப் போராட்டமும், இலங்கையில் ஏற்பட்ட சுதந்திரத்திற்கான கோரிக்கைகளும் மலையக நாடகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயக்கத்தின் செல்வாக்கு மலையகத் தமிழர் சமூகத்தில் ஆழமாகப் பதிந்ததுடன், அதன் தாக்கங்கள் அரங்கச் செயற்பாடுகள் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. அக்காலகட்டத்தில், சுதந்திர இந்திய விடுதலைப் போராட்டம், இந்திய தேசிய இராணுவத்தின் வீரதீரச் செயற்பாடுகள், மற்றும் இலங்கையின் விடுதலைக்கான குரல்கள் ஆகியவை மலையகச் சமூகத்தில் பலமாகப் பிரதிபலித்தன. இந்த அரங்கச் செயற்பாடுகள், சமுதாயத்தில் அகிம்சைக் கருத்துகளைப் பரப்புவதற்கும், மலையகச் சமூகத்தின் அடிமைத் தளையை அறுப்பதற்கான ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்பட்டன.

சமூக நீதிக்காக நாடகங்கள் 

20 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் மலையகத்தில் திராவிட இயக்கம் செல்வாக்கு செலுத்திய காலப்பகுதியில், பெரியார் ஈ.வே. ராமசாமியின் தமிழக திராவிட இயக்கத்தின் செல்வாக்கு இலங்கையிலும், குறிப்பாக மலையகச் சமூகத்திலும், மிக ஆழமாகக் காணப்பட்டது. இதையொட்டி, பெரியார் ஈ.வே. ராமசாமி, சி.என். அண்ணாதுரை, கலைஞர் மு. கருணாநிதி ஆகியோரின் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளால் உந்தப்பட்ட மலையக அரங்கச் செயற்பாடுகளால் உருவாக்கப்பட்ட நாடகங்கள் மலையகம் எங்கும் அரங்கேற்றப்பட்டன. மலையகத்தில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட தோட்டப்புறங்களில் ஒரு வருடத்திற்கு ஒரு நாடகம் என்ற கணக்கில் நூறு வருடங்களில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இவை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நாடகங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, மலையகத்தில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கால் உத்வேகம் பெற்று உருவான பல இலட்சக்கணக்கான நாடகங்களின் பிரதிகளோ அல்லது அவை தொடர்பான பதிவுகளோ எங்கும் கிடைக்காமல் போயின. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்புகளை முதன்மையாக ஆவணப்படுத்தவோ அல்லது அச்சில் ஏற்றவோ உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், இந்த நாடகங்கள் மலையகச் சமூகத்தில் இன்றுவரை ஆழமான தாக்கத்தைச் செலுத்தி வருகின்றன. தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, தருமம், நீதி, நியாயம் பற்றிய கருத்துகள், பகுத்தறிவுச் சிந்தனைகள், கோட்பாடுகள் ஆகியவை திராவிட இயக்கப் பாரம்பரியத்தோடு சேர்ந்து மலையகத் தமிழர் மத்தியில் வலுவாகச் செல்வாக்கு செலுத்தின. இந்த வரலாற்றுத் தாக்கத்திற்கான ஆதாரங்களை மூத்த தொழிலாளர்களின் நினைவோடைகளில் இருந்து மட்டுமே பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.

கோ. நடேசய்யரும் விடுதலை இயக்க நாடகங்களும்

மலையகத்தின் முதுபெரும் தொழிற்சங்கவாதியும், பத்திரிகையாளரும், படைப்பாளியுமான நடேசய்யரால் 1937 ஆம் ஆண்டு ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு’ என்ற நாடகம் எழுதப்பட்டுள்ளது (இதன் பிரதி இன்றும் முழுமையாகக் கிடைக்கிறது). இதைத் தொடர்ந்து, 1935களில் மலர்ந்த இடதுசாரி இயக்கங்கள் — குறிப்பாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்க இயக்கங்கள் — மலையகத்தில் அரங்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முக்கிய பாத்திரம் வகித்தன. இந்த இடதுசாரி இளைஞர்கள், தொழிலாளர்களை அணி திரட்டுவதற்கும், இடதுசாரி கருத்துகளை விதைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்ப்பதற்கும் நாடகங்களை ஒரு சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்தினர்.

மலையகத்தில் இடதுசாரி இயக்கங்கள் தொழிற்சங்கங்களை அணிதிரட்டவும் வர்க்க விடுதலைக் கருத்துகளை விதைக்கவும் நாடகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தியபோதும், அது தொடர்பான பதிவுகளையும் ஆவணங்களையும் அவர்கள் ஆவணப்படுத்துவதில் அக்கறை காட்டாதது வருந்தத்தக்க விடயமாகும். அக்காலப் பகுதியில், வர்க்க நிலைப்பட்ட சமூக விடுதலை, மக்கள் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை சார்ந்த கருத்துகளை உள்ளடக்கிய நாடகங்கள் தோட்டப் பகுதிகளில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. உதாரணமாக, ஏ.கே. அப்பாஸ் எழுதிய ‘கள்ளத்தோணிகள்’ என்ற நாடகம் 1960களில் மாத்தளை, பதுளை மாவட்டங்கள் உள்ளடங்கலாக மலையகம் முழுவதும் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகம் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவுகளையும், அதனால் 5,25,000 மலையகத் தமிழர்கள் நாடுகடத்தப்பட்ட வரலாற்றுத் துயரையும் பதிவு செய்தது. மாத்தளை கார்த்திகேசு, மாத்தளை வடிவேலன், அந்தனி ஜீவா போன்ற கலைஞர்களால் அரங்கேற்றப்பட்ட இந்த வீரியமிக்க சமூக இயக்கப் பதிவுகளை இன்று எங்கும் காண முடியவில்லை. பதுளையைச் சேர்ந்த இராமசாமி எழுதிய ‘இரத்தக்கண்ணீர்’ எனும் நாடகத்தின் பிரதிகளும் கிடைக்கப்பெறவில்லை. ‘கள்ளத்தோணிகள்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகத்தின் மூலப்பிரதியைத் தேடி ஆய்வாளர் மு. நித்தியானந்தன் மேற்கொண்ட முயற்சி, மலையக நாடக ஆவணப்படுத்தலின் சிரமத்தைச் சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஏ.கே. அப்பாஸ் அவர்களைச் சந்தித்து, அவர் பிரதியைக் கையளித்ததாகக் கூறிய நபரைத் தேடி, இறுதியாகப் பிரித்தானிய நூலகம் வரை சென்றும் அந்த மூலப் பிரதியைப் பெற முடியவில்லை என்ற தகவலை, அவர் 31.05.2025 அன்று ஹட்டனில் நடந்த இலக்கியச் சந்திப்பில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1980களில் மலையகத்தில் தோன்றி, முளையிலேயே கருகிப்போன மலையகத் தேசிய விடுதலை இயக்கங்கள் — குறிப்பாக மலையக மக்கள் இயக்கம், நல்வாழ்வு வாலிப முன்னணி, தொழிலாளர் விவசாய விடுதலை முன்னணி, மலையக இளைஞர் பேரவை, மலையக இளைஞர் முன்னணி — போன்ற பல்வேறு சமூக இயக்கங்கள், மலையகத்தின் சமூக விடுதலையை முன்னிறுத்திப் பல நாடகங்களை நிகழ்த்தியிருக்கின்றன. இவற்றில், இந்த விடுதலை இயக்கங்கள் பாரம்பரிய காமன் கூத்துக்கு ஒரு புதிய வடிவத்தை வழங்கி, அதை ‘காலன்கூத்து’ என்ற பெயரில் மேடையேற்ற முயற்சித்துள்ளன.

அடிமைச் சாசனங்களும் மலையக அரங்கும்

இந்திய – இலங்கை அடிமைச் சாசனங்கள் மற்றும் காணிக் குடியேற்றச் சட்டங்கள் ஆகியவை மலையக நாடக இயக்கத்தின் மீது மிக ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 1952 ஆம் ஆண்டின் நேரு – கொத்தலாவல உடன்படிக்கை, 1964 ஆம் ஆண்டின் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1974 ஆம் ஆண்டின் ஸ்ரீமாவோ – இந்திரா காந்தி ஒப்பந்தம், 1972 ஆம் ஆண்டின் முடிக்குரிய காணிக் குடியேற்றச் சட்டங்கள், 1972 மற்றும் 1974 காலப்பகுதியில் ஏற்பட்ட பெரும் பஞ்சம், 1977 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஏற்பட்ட இன வன்முறைகள், மற்றும் மலையகத் தமிழருக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் ஆகிய வரலாற்று நிகழ்வுகளால் மலையக நாடக இயக்கம் மிகப்பெரிய தாக்கத்திற்கு உள்ளானது. இதன் விளைவாக, 1956 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட உள்ளகப் புலப்பெயர்வுகள் காரணமாக, பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் வடக்கு – கிழக்கு, தென்னிலங்கை மற்றும் நகரப் பகுதிகளை நோக்கி அகதிகளாகக் குடியேறினர். இதனால் அவர்கள் எல்லாம் இழந்து வாழ்வியலுக்காகப் போராட வேண்டிய சூழலுக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள்.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் போன்ற காரணங்களால் தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்து சென்ற இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள், குடியேற்றப்பட்ட (குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி) பகுதிகளில் பல்வேறு அவலங்களைச் சுமந்திருந்தபோதும், இன்றும் தமது பாரம்பரியங்களைப் பாதுகாத்து வருவதாக அறியப்படுகிறது. அதேபோல், இலங்கையிலே, சீனிக் கற்றாழைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மாஸ்டர், எஸ். முத்துசாமி மாஸ்டர் போன்ற கலைஞர்களும் மற்றும் டயகம, கம்பளை புப்புரச தோட்டப்பகுதிக் கூத்துக் கலைஞர்களும் மலையகப் பாரம்பரிய நாடகங்களை இன்றும் பல்வேறு தோட்டப் பிரதேசங்களுக்குப் பயிற்றுவித்தும் பரப்பியும் வருகின்றனர். உதாரணமாக, தொங்கபத்தினித் தோட்ட அர்ச்சுனன் தபசு மாஸ்டரான பாலசுப்பிரமணியம் அவர்கள் முத்துலட்சுமி மற்றும் கொட்டியாக்கலை தோட்டங்களில் வாத்தியாராகச் செயற்படுகிறார். மேலும், தெரேசியாத் தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவருடைய மகனான கலியன் அய்யாதுரை போன்ற கலைஞர்களும் தோட்டம் தோட்டமாக அரிச்சந்திரன் நாடகத்தை அரங்கேற்றி, இந்தப் பாரம்பரியக் கலையைப் பேணிக் காத்து வருகின்றனர்.

டிக்கோயா வீரட் 30 ஏக்கர் தோட்டப் பிரிவைச் சேர்ந்த அமரர் ஆறுமுகம் அவர்கள் பொன்னர்  – சங்கர் கூத்தை மலையகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். பாரம்பரிய அரங்குகளில் பயன்படுத்தப்படும் ஆபரணங்கள், வேட உடைகள், ஒப்பனைகள், கிரீடங்கள், புயக்கட்டுகள் போன்றவற்றைத் தயாரிப்பதில் புப்புரச கலைஞர்கள் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளனர். தற்காலத்திலும், லங்கா தோட்ட காமன் கூத்துக் கலைஞர்கள், பெரிய எலிப்படைத் தோட்ட பம்பயன் தங்கவேல் மாஸ்டர், தொங்கப்பத்தினி தோட்ட பாலசுப்பிரமணியம் போன்றோரும், மறை தோட்டக் கலைஞர்களும், வனராஜா மேல் மற்றும் கீழ் பிரிவுத் தோட்டங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். மிகவும் அண்மைக்காலமாக, 40 ஆண்டுகளுக்கு மேல் கைவிடப்பட்டிருந்த பெத்தராசி தோட்டத்தில் இளைஞர்களால் காமன் கூத்து மீள உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு சுண்டுலாக்கந்தை மேல்பிரிவுத் தோட்டத்தில் காமன்கூத்தும், போட்றித் தோட்டத்திலே பொன்னர் – சங்கர் கூத்தும் மீள உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, டிக்கோயா சின்ன வேர்க்கொலைத் தோட்டத்தில் மிக நீண்டகாலத்துக்குப் பிறகு இளைஞர்களால் காமன் கூத்து முழுமையாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகிறது. மேலும், கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் யட்டியாந்தோட்ட கருணாகரன் அவர்கள் பாடசாலையில் காமன் கூத்தை நடுகை செய்து, மலையகப் பண்பாட்டு அடையாளத்தை நிலைப்படுத்தும் வரலாற்றுப் பாத்திரத்தை முன்னெடுத்துள்ளார்.

பின்காலனித்துவ மயமாக்கல் 

பின்காலனித்துவ மயமாக்கல் பண்பாட்டுக் கருவியாக, கிறிஸ்தவ மத குழுக்களின் மீள் வருகையும் மதமாற்றங்களும் மலையகப் பாரம்பரிய அரங்கின் மீது குறிப்பிடத்தக்க எதிர்மறையான செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கின்றன. மலையகம் முழுவதும் இயங்கும் மதச்சார்பற்ற , அரசு சார்பற்ற நிறுவனங்களும் அவற்றின் துணையோடு இயங்கும் டசன் கணக்கான கிறிஸ்தவ மதக் குழுக்களும், மலையக மக்களின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் மரபுக் கலைகள் போன்றவற்றை அழித்தொழிப்பதில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.

பின்காலனித்துவக் காலப்பகுதியில் இயங்கும் மதச் சார்பற்ற மற்றும் கிறிஸ்தவ மதக் குழுக்களின் செயற்பாடுகளை, தமிழரின் வரலாறு மற்றும் பண்பாட்டுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அறிவிக்கப்படாத ஒரு நவகாலனித்துவப் போராகக் கருதினால் அது மிகை இல்லை. இதன் விளைவாக, மலையக மக்களின் வாழ்வியல் இயங்குவிசைகள் திட்டமிட்டுக் அழிக்கப்பட்டு வருகின்றன. பண்பாட்டுக் கருவிகள் கைவிடப்படுதல், அடையாளங்கள் அழிக்கப்படுதல், பாரம்பரிய மருத்துவம், தொழில்நுட்பம், கற்றல், அறிதல் மற்றும் தெளிதல் முறைகள் எல்லாம் கைவிடப்பட்டு, அவை மேலைத்தேய காலனித்துவ மயமாக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்தப் பண்பாட்டு அழிப்பிற்கு எதிரான போராட்டங்களும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பண்பாட்டு அழிப்பு மற்றும் நவகாலனித்துவ மயமாக்கலின் விளைவாகத்தான், இளைஞர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் புதிது புதிதாக ஒன்றிணைந்து, தமது கலைகளையும் பண்பாட்டையும் மீட்டுருவாக்கும் போராட்டத்தில் பங்களித்து வருகின்றனர். தற்போது, பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் ஆகியோர் இந்தக் கலை வடிவங்களை ஆவணப்படுத்துவதிலும், அறிக்கையிடுவதிலும், ஆய்வு செய்வதிலும் தமது அக்கறையைச் செலுத்தி வருகின்றனர். 

திறந்த பொருளாதாரமும் மலையக அரங்கும்

1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை மற்றும் அதன் உடனடி விளைவுகள் காரணமாக, ஏற்கனவே வாழ்வில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அரங்கியலாளர்கள் மேலும் துயரங்களைச் சுமந்து பொருளாதாரச் சுமைக்கு உள்ளானார்கள். இதைத் தொடர்ந்து, புலப்பெயர்வுகள், உள்நாட்டு யுத்தம், அடுக்கடுக்காகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள், திட்டமிட்ட ஆக்கிரமிப்பு, அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற காரணங்களால், இவர்களது அரங்கச் செயற்பாடுகளுக்கான முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட்டன அல்லது சிதைவு அடைந்தன. இவ்வாறு, மலையக அரங்கியலானது சமூக உருவாக்கத்தில் பங்கெடுத்த அதேவேளை, பல்வேறு தடைகளாலும் அழுத்தங்களாலும் பின்னோக்கித் தள்ளப்பட்டும், முன்னோக்கி நகர்த்தப்பட்டும் காலத்திற்குக் காலம் வந்துள்ளமையைக் காண முடிகிறது.

சான்றாக, பொகவந்தலாவ பெரிய எலிப்படை தோட்டத்தின் கீழ்ப் பிரிவில் முன்பு அர்ச்சுனன் தபசு, பொன்னர் – சங்கர், லவகுசா, காத்தவராயன் கூத்து, குறவஞ்சி, நல்ல தங்காள் கதை, அல்லி, அருக்காணி கதை போன்றவை நிகழ்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது லவகுசாவும், காமன் கூத்து ஆகியன மட்டுமே நிகழ்த்தப்படுவதைக் காண முடிகிறது. மேலும், மலையகச் சமுதாயத்தில் லவகுசா நாடகம் நிகழ்த்தப்படும் ஒரே இடமாகப் பொகவந்தலாவ பெரிய எலிப்படை பணியக்கணக்கு தோட்டம் மட்டுமே உள்ளது. அங்கு திரு. ஜி. கனகராஜ் மாஸ்டர் என்பவர் ஐந்து தலைமுறைகளுக்கு அந்தக் கூத்தைப் பயிற்றுவித்ததுடன், தனது அந்திமக் காலத்திலும் தொடர்ந்து இதனை நிகழ்த்தி வருகிறார். திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக, ஒரு பாரம்பரிய அல்லது நவீன நாடகத்தை நிகழ்த்துவதற்கு ஒரு தடவைக்கு இரண்டு முதல் மூன்று இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அத்துடன், பல வேலை நாட்களை இழக்க வேண்டி இருப்பதால், இந்தத் தொகையைத் திரட்டுவதும், அரசின் ஆதரவையோ அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவையோ பெறுவதும் இப்போது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.

இந்த மலையக அரங்கானது, நவீன சினிமா, தொலைக்காட்சி, இணையங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் எதிர்மறையான செல்வாக்கிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் போராட வேண்டிய தேவை இருக்கிறது. அதேசமயம், சில வேளைகளில், இந்த அரங்க முயற்சிகளும் கலைகளும் அவற்றுக்கூடாகவே (நவீன ஊடகங்கள் வழியாகவே) தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் முயற்சி செய்வதைக் காண முடிகிறது.

நவீனத் தொடர்பு சாதனங்களின் செல்வாக்கு

நவீனத் தொடர்பு சாதனங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செல்வாக்கினால், இன்றைய மலையகத்தின் இளைய தலைமுறையினரிடையே அரங்கச் செயற்பாடுகள் மிக வேகமாக அருகி வருவதைக் காண முடிகிறது. பாரம்பரிய அரங்குகளில் ஆர்வம் குறைந்துள்ள நிலையில், நவீன அரங்கச் செயற்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இடம்பெறுகின்றன. இத்தகைய நிலைக்கு, பாடசாலைக் கல்விமுறையின் செயலூக்கமற்ற தன்மை, இலாப நோக்குடைய தனிப்பட்ட கல்வி நிலையங்களின் செயற்பாடுகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்கள் பரீட்சைக்கு மாணவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக இயங்குவது, அத்துடன் கல்வி முறை வரலாற்றுணர்வையும், பண்பாட்டுணர்வையும், விமரிசன விழிப்புணர்வையும் ஏற்படுத்தத் தவறியமை என்பவையே காரணமாகும். மேலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மானிடத்தைச் சிதைக்கின்ற, சிறுமைப்படுத்துகின்ற மசாலா நாடகங்கள், தொடர் நாடகங்கள், உயர்மட்ட வர்க்கங்களின் சிதைவு, சீரழிவு, சதுராட்டங்கள், சறுக்கல்களை வெளிக்காட்டும் முடிவற்ற தொடர்கள் போன்ற நிகழ்ச்சிகள், இன்றைய தலைமுறையின் அரங்கச் செயற்பாடுகளுக்கும், சமூக மாற்றத்திற்கான அரங்கை உருவாக்குவதற்கும் பெரும் தடைகளாகக் காணப்படுகின்றன.

நம்பிக்கைத் தரும் அரங்க முயற்சிகள்

இன்றைய தலைமுறையின் இளைய நாடகவியலாளர்கள், மலையகச் சமூக உருவாக்கத்தில் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளனர். சமகாலச் சமூக நாடகங்களிலே, மலையகச் சமூகத்தின் முக்கியமான பிரச்சினைகளான மது ஒழிப்பு, பெண் அடிமைத்தனத்தை ஒழித்தல், அரசியல் விடுதலை மற்றும் தொழிற்சங்க மோசடிகள் என்பனவற்றை இவர்கள் மையப்படுத்துகின்றனர். இதற்குச் சான்றாக, பெயாவெல் ஏ. செல்வராஜ் அவர்களின் ‘என்னைப் பிடித்த பிசாசுகள் போயின’, ‘புதிய சிறகுகள்’, ‘ஆரியவதி வீடு’ போன்ற நாடகங்களையும்; பொன். பிரபாகரனின் ‘சின்னப் பண்ணையார்’, ‘பிரளயம்’, ‘நெருப்பு’, ‘வெல்வதற்கே பெண்ணுலகம்’ போன்ற படைப்புகளையும்; டியனசின் வி. கதிர்காமன் அவர்களின் ‘புதுமைப்பெண்’, ‘புதுமை மாற்றம் காண்போம்’, ‘மீண்டும் ஒரு புதுமை செய்வோம்’, ‘விடியலைத் தேடும்’, ‘சிதைந்த வீடு’, ‘அர்த்தம் என்ன’ போன்ற நாடகங்களையும், மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான ஒரு வீதி நாடகத்தையும் குறிப்பிடலாம்.

மலையக நாடகத்துறையின் சமகால எழுச்சிக்கு, யட்டியாந்தோட்டை வே. கருணாகரன், பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மா. ரூபவரதன் (கருத்தடை இனக்கொலை பற்றிய ‘வாழப்பிறந்தாருக்கு’ நாடகம்), நோர்வுட் கிறிஸ்டி நேசகுமார் (‘விம்பம்’), கொட்டகலை எஸ். சக்திவேல் (‘வாழ்க்கையின் சுமைகள்’), கட்டப்புல வசந்தன் (‘நல்ல காலம் பொறக்குது’), அப்புதளை சி. ஜீவராஜா (‘உடுக்கொலி’), கே. கோவிந்தராஜன் (‘தப்பு’), பொகவந்தலாவை எஸ். பிரேம்குமார் ஆகியோரின் நாடகங்கள் மிக முக்கிய பங்காற்றின. இவர்களுடன், லட்சுமி தோட்டம் தி. சிவனேசன் (‘தாகம்’, ‘கண்களில் ஈரம்’), கல்கந்தை வி. சதாசிவம், பொகவந்தலாவை எஸ். அன்சலாமேரி, வென்ஜர் பத்மேஸ்வரி, கெம்பியன் ராமகிருஷ்ணன், தெரேசியா பெருமாள் சசிகலா, இராகலை பன்னீர்செல்வம், மாகுடுகலை எஸ். புகழேந்திரன், பொகவந்தலாவை அன்னமுத்து ஜெகன்தாசன், போட்ரித் தோட்டம் பிரான்சிஸ் ஹெலன், கொட்டகலை செந்தில் குமார், தென்மதுரை சதீஸ்குமார், லிந்துலை சுகுமார், வென்ஜர் தியாகராஜா, செல்வராஜ் லீலாவதி, மெறேயா திசேரா, டயகம மா. சசிதரன் போன்ற கலைஞர்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், கேதீஸ் மெய்யநாதன், லோகநாதன், ராஜேந்திரன், அஜந்தன் சாந்தகுமார், புளியாவத்தை மு. நவநீதன் போன்றோரின் நாடகங்களும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

பளிங்குமலை செல்வராஜ் வாசுதேவன் அதிபர் அவர்கள், மலையகச் சமூக நாடக உருவாக்கத்தில் மிகச் சிறந்த பங்காற்றியுள்ளார். புதிய பண்பாட்டு அமைப்பு, மக்கள் களரி போன்ற நாடக அமைப்புகளுடன் நீண்டகாலம் பயணித்த அனுபவம், நடிப்புத் திறன், பயிற்சி நோக்குகள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் இவர். இந்தியா, கஜகஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளுக்குச் சென்று தனது நாடகங்களை அரங்கேற்றியுள்ள இவரது முக்கிய படைப்புகளாக ‘கோன் உயர’, ‘கதாநாயகன்’, ‘சுத்தம் சுகம் தரும்’, ‘அன்னையை அரவணை’ ஆகியவை உள்ளன. மேலும், இவரது சிறுவர் நாடகங்களான ‘கைகோர்ப்பு’, ‘எறும்பு கொண்டாடல்’, ‘எலிப்பொறியில் பூனை’, ‘மாயக்கல்வி’ போன்றவை தேசிய நாடக விழாவிலே பாடசாலை நாடகங்களாக அரங்கேற்றப்பட்டு, ஒன்பது முதல் பத்து தேசிய விருதுகளை வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் தேசிய நாடகப் போட்டிகளில், தர்மஸ்ரீ பண்டாரநாயக்க, பராக்கிரம நிதிஎல்ல போன்ற நாடக ஜாம்பவான்கள் அதிக விருதுகளை வென்றிருக்கும் நிலையில், அவர்களுக்குச் சமனான விருதுகளை இந்தத் தோட்டப்புறத்தைச் சேர்ந்த சாதாரண கலைஞர்கள் மற்றும் இளம் நாடகவியலாளர்கள் வென்றெடுத்திருப்பது மலையக நாடகத் துறையின் புதிய எழுச்சிக்குக் கிடைத்த முக்கியமான அங்கீகாரமாகும்.

தி. சிவநேசனின் வீதி நாடகங்கள், மது ஒழிப்பு, பாலூட்டல், பாலியல் வன்முறை எதிர்ப்பு, பெண் விடுதலை, இயற்கை பாதுகாப்பு, நிலம், நீர் சார்ந்த கருப்பொருட்களை மையமாகக் கொண்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. அதேபோல, ரூபாகொல்லை காளிதாசின் ‘தோழன்’, ‘மகாகவி காளிதாசர்’, ‘கரடி’ போன்ற படைப்புகள் மலையக இளம் நாடகக் கலைஞர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றன. இதற்கு மேலதிகமாக, யட்டியாந்தோட்டை கருணாகரன், ராசய்யா லோகநாதன், சுதர்சன், செல்வராஜ் லீலாவதி, மெய்யநாதன் கேதீஸ் ஆகியோரின் சிறுவர் நாடகங்கள், தேசிய நாடக விழாக்களிலும், இலங்கை தமிழ் நாடக விழாக்களிலும் ஐந்து முதல் பத்து விருதுகள் வரை வென்று, மலையக நாடகத் துறைக்கான தேசிய அங்கீகாரத்தை வலுப்படுத்தியுள்ளன.

புதிய பண்பாட்டமைப்பும் அரங்க முயற்சிகளும்

1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொகவந்தலாவை பெரிய எலிப்படை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் பொன். பிரபாகரன் மற்றும் ஆண்டி அரிச்சந்திரன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட புதிய பண்பாட்டு அமைப்பு, மலையகத்தின் நவீன நாடக இயக்கத்திற்கும் பாரம்பரிய நாடக இயக்கத்திற்கும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியது. குறிப்பாக, அவர்களது முயற்சியின் காரணமாக 300க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். முற்றிலும் புதிய தலைமுறைக் கலைஞர்களைக் கொண்டு, 2001 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையால் அரங்கேற்றப்பட்ட உலக நாடக விழாவில், மலையகப் பாரம்பரிய மற்றும் நவீன நாடகங்களை அரங்கேற்றி, ஓர் உயர் கல்வி நிறுவனத்தில் மலையக அரங்குகளுக்கான அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சாதனைக்கு, திரு. மணிசேகரன், தியாகசேகரன், திரு. பொன் பிரபாகரன் ஆகியோருடன், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் துறைத் தலைவரான பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களும், அப்போதைய சிரேஷ்ட விரிவுரையாளர் சி. ஜெயசங்கர் அவர்களும் சிறந்த பங்களிப்பையும் ஒருங்கிணைப்பையும் வழங்கியிருந்தனர்.

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நீண்ட நாடகப் பாரம்பரியம் உள்ளது. வருடத்திற்கு ஒரு நாடகம் என்ற அடிப்படையில், சுமார் 10 முதல் 12 ஆயிரம் தோட்டங்களில் தயாரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட நாடகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், அது 100,000 முதல் 150,000 நாடகங்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இத்தகைய பிரமாண்டமானதொரு கலைப் பொக்கிஷம் இருந்தபோதிலும், இவை முறைசார்ந்த ஆவணப்படுத்தலுக்கோ, அறிக்கையிடலுக்கோ, ஆய்வு முறைக்கோ உட்படுத்தப்படவில்லை என்ற வரலாற்றுத் துயரம் இன்னும் தொடர்கிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

மலையகத்தமிழர் மரபுரிமை பாதுகாப்பு அமைப்பும் அரங்க முயற்சிகளும்

மலையகத் தமிழர் மரபுரிமைப் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, மலையகத்தின் பல பகுதிகளில் இருந்த இத்தகைய கலைப் பண்பாட்டு முயற்சிகளின் தகவல்கள் திரட்டப்பட்டு, 2019 ஆம் ஆண்டு, 56 மலையக பாரம்பரிய அரங்கியலாளர்கள், ‘மலையக மரபுரிமை அறிவியலாளர்கள்’ எனப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில், எதிர்கால ஆய்வுகளுக்கு வழிகோலும் விதமாக 12 இளந்தலைமுறை அரங்கியல் ஆய்வாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

கொட்டியாகொல்லை தோட்டத்தைச் சேர்ந்த ராசையா லோகநாதன் மற்றும் லட்சுமி தோட்டம் மத்திய பிரிவைச் சேர்ந்த செல்வராஜ் லீலாவதி ஆகியோர் நாடகப் புலமைக்காகப் பாராட்டப்பட்டு, ஜப்பான் நாட்டின் அதியுயர் விருதான ‘புங்கா’ என்கிற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருப்பது, மலையகக் கலைஞர்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர் என்பதைக் குறிக்கிறது.

செல்வராஜ் லீலாவதி அவர்கள் ‘வையம் தழைப்பதற்கு’, ‘நாடக முற்றம்’, ‘லச்சுமி’ (நெடு நாடகம்), ‘சாப்பாட்டு மேசை’, ‘வெளிச்சமே’ (குறு நாடகம்), ‘பேசும் கொழுந்துகள்’, ‘ராட்டினம்’ (சிறுவர் நாடகம்) போன்ற பல நாடகங்களை இயக்கியதோடு, இவை தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றன. நவீன நாடகங்களில், ‘இப்படி ஒரு நாள்’, ‘பிள்ளைகளே எழுவீர்’, ‘மனசாட்சி ஓடுது பிடி’, ‘பிகி’, ‘நிலக்குமிழிகள்’, ‘லயத்துக் கோழிகள்’, ‘பாய் பாய் பங்களா’, ‘வானம் இருக்கும்’ (ஓரங்க நாடகம்) போன்றவை மிகச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. இவற்றில் பல, தோட்ட நிர்வாகம், இராணுவப் புலனாய்வுப் பிரிவு, மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் மீறி கொட்டியாகொல்லை மேல்பிரிவு தோட்டத்திலும் வடக்கு – கிழக்கின் பல பகுதிகளிலும் அரங்கேற்றப்பட்டன. மேலும், இவர்களது ‘தியேட்டர் மேட்ஸ்’ (அரங்கத் தோழர்கள்) நாடகக் குழுவினால் தயாரிக்கப்பட்ட ‘பாய் பாய் பங்களா’ மற்றும் ‘ரதிக்கூத்து’ நாடகங்கள், 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச நாடக விழாவில் அரங்கேற்றப்பட்டு வரலாறு படைத்தன. இதற்காக இவர்கள் 25 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நிதியைச் சுயமாகத் திரட்டிக்கொண்டு, 10 தோட்டப்புற ஏழைச் சிறுவர்களைக் கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றினர். இது பற்றிய பதிவை திரு. ராசையா லோகநாதன் அவர்கள் ‘கடல் தாண்டி மலை தாண்டி’ என்ற நூலாக எழுதியுள்ளார். இதனை ஆவணப்படமாக ‘கொக்கரிப்பு’ என்ற பெயரிலும் வெளியிட்டுள்ளனர். இவை மலையக நாடக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவையாகும்.

இளைய தலைமுறையின் நாடகப் பங்களிப்பில், அஜந்தன் சாந்தகுமாரின் ‘ஒளிவிடும் பரல்’, ‘விண்ணாதி விண்ணர்கள்’, ‘மினுங்கல்’ ஆகிய நாடகங்களும், புளியாவத்தை தோட்டத்தைச் சேர்ந்த சபாபதி கலையரசியின் ‘ஒரு ஊரில் ஒரு பாறை’ (சிறுவர் நாடகம்), ‘இருத்தல்’ (குறு நாடகம்) போன்ற படைப்புகளும் தற்போது கவனம் பெறுகின்றன. மேலும், மலையகச் சிறுவர்களே தயாரித்த நாடகங்களாக லட்சுமி தோட்ட மத்திய பிரிவைச் சேர்ந்த வசீகரன் எழுதிய ‘பெருந்தகை’, உயர்தர வகுப்பு மாணவன் ஜிம் கெனடியின் ‘கோணம்’ ஆகியவையும், புளியாவத்தை மு. நவனீதனின் ‘ரிப்போர்ட்டர்’ என்ற குறுநாடகமும் குறிப்பிடத்தக்கவை. பத்மநாதன் பிரகாஷின் ‘இல்லாதவர்கள்’, பிறமொழிக் கலைஞர்களின் ‘தித்த காட்ட’ மற்றும் ரொனிகாவின் சிங்கள நாடகங்கள் போன்றவையும் மலையகச் சமூக வாழ்வியலைச் சித்தரிக்கின்ற நவீன நாடகங்களாகத் தற்காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

‘மலையக அரங்கத் தோழர்கள் பண்பாட்டுக் குழு’ (Theater Mates) என்ற நாடகக் குழுவானது, லட்சுமி தோட்டம், கல்பொடவுத் தோட்டம், பெரிய அரைத்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பாடசாலைச் சிறுவர்களைக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பொகவந்தலாவையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியான மாதாந்த நாடக நிகழ்வுகளை நடத்தி வருவதுடன், நான்கு வருடங்களுக்கு மேலாகச் சிறப்பான உயர் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற நாடகக் குழுக்களைச் சிறுவர்களைக் கொண்டு உருவாக்கி வந்துள்ளது. இந்தச் சிறுவர் குழுக்களில் ஒன்று, அதாவது லட்சுமி தோட்ட நாடகக் குழு, ‘பாய் பாய் பங்களா’ என்ற நாடகத்தை மும்பை சர்வதேச நாடக விழாவில் அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவை பத்மநாதன் பிரகாஷ், அஜந்தன், செல்வராஜ் லீலாவதி, ராசையா லோகநாதன் ஆகியோர் நடாத்தி வருகின்றனர்.

மா. ரூபவரதன் என்ற பேராதனைப் பல்கலைக்கழக மாணவர், ‘வாழப்பிறந்தாருக்கு’ என்ற நாடகத்தை 2002 ஆம் ஆண்டு பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களைக் கொண்டே அரங்கேற்றினார். இதில் தெரேசியத் தோட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சசிகலா பிரதான பாத்திரமேற்று நடித்திருந்தார். இந்த நாடகமானது, மலையகத்தில் நிகழும் தேசிய இன அழிப்புக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட கருத்தடையை எதிர்க்கின்ற கருப்பொருளைக் கொண்டிருந்தது. இந்நாடகம் பல்கலைக்கழகச் சமூகத்திலும், கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலும், ஹட்டனிலும் அரங்கேற்றப்பட்டபோது, பரந்துபட்ட இலங்கைச் சமூகத்திற்கும் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே, நாடாளுமன்ற விவாதங்களின் பின்னர், மலையகப் பெருந்தோட்டப் பகுதியிலே கருத்தடை தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். 

கந்தப்பளையைச் சேர்ந்தவரும், யாழ் பல்கலைக்கழக நாடகவியல் விரிவுரையாளராகச் செயற்படுபவருமான கேதீஸ் மெய்யநாதன், ‘சகதிப் புழுக்கள்’ என்ற நாடகத்தை அரங்கேற்றியதோடு, அதன் நாடகப் பிரதியையும் வெளியிட்டுள்ளார். மேலும், ஐயாராம் குணசீலன் என்பவர் ‘நோக்காடு’ என்ற நாடகப் பிரதியை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டுள்ளார். நாடகத் துறையிலே அண்மைக்காலமாகப் பல மாணவர்கள் பட்டதாரிகளாகவும் கலைமாமணிகளாகவும் வெளிவந்துள்ளனர். அவர்களில், கெம்பியன் தோட்டத்தைச் சேர்ந்த திவ்யசோபனா, சுண்டுலாக்கந்தைத் தோட்டத்தைச் சேர்ந்த ராதிகா, பிரசாந்தினி ஆகியோரும் நாடகத்துறையில் இளங்கலை (இளமானி) பட்டங்களைப் பெற்றுள்ளனர். குறிப்பாக, பிரசாந்தினி மற்றும் ராதிகா ஆகியோர் வட இலங்கை சங்கீத சபையில் கலைமாமணிப் பட்டம் பெற்ற மலையகத்தின் முதல் கலைமாமணிகளாகத் திகழ்கின்றனர். மேலும், கௌரவிலை தோட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா (சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவனம் – கிழக்குப் பல்கலைக்கழக மாணவி) நாடகத்துறையில் இளமானி பயின்று கொண்டிருக்கிறார். இவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய நாடகங்களுக்காக (2023 – ‘மனிதி’, 2024 – ‘இளவந்திகை’, 2023 – அரச சிறுவர் நாடக விழா – ‘தோழமை’ ஆகியவற்றுக்காக) தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். பதுளை மாவட்ட மாணவரான அழகேஸ்வரன் கிருஸ்ணராஜ் என்பவர் 2024 – ‘இளவந்திகை’ நாடகத்துக்காக ஆறு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.  

நவீன நாடகச் செயற்பாடுகளில், அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களான பிரீடோ நிறுவனம், சமூக அபிவிருத்தி நிறுவனம், பார்ம் பவுண்டேசன், மனித அபிவிருத்தி ஸ்தாபனம், உதயசூரியன் சமூக அபிவிருத்தி நிறுவனம், பீட்ரூ தோட்டம் என்பனவும், சிமிர்னா தேவாலயம் போன்ற மத அமைப்புகளும் இணைந்து சமூக விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

சென் ரெகுலாஸ் தோட்டமும் நேரு மன்றமும் 

அக்கரைப்பத்தனை சென் ரெகுலாஸ் தோட்டத்தில் இயங்கிய ‘நேரு நாடக மன்றம்’ சுமார் 56 நாடகங்களைத் தயாரித்திருப்பதும், அந்த நாடகங்களில் பங்குபற்றிய பல கலைஞர்கள் இன்றும் உயிருடன் இருப்பதும் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு, மலையக வரலாற்றில் ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்துள்ளது. இந்தக் கட்டுரையாசிரியரால் நேர்காணல் செய்யப்பட்ட, இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த ஜே.எம். குணபால (பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தொழிலாளி) என்பவர், நேரு மன்றம் தயாரித்த 22 தமிழ் நாடகங்களில் நடித்திருப்பதும், சுப்ரமணியம் ராசு என்பவர் இன்றும் இதற்கான நடமாடும் சாட்சியாக இருப்பதும் அறியப்பட்டுள்ளது. இவர்கள் ‘அம்மா’ (சந்திரபாபுவின் நாடகம்), ‘சம்பூர்ண இராமாயணம்’, ‘சாரதாஜி’, ‘மயான காண்டம்’, ‘தங்கப் பதுமை’, ‘ஏழையின் கண்ணீர்’, ‘பக்த பிரகலாதன்’, ‘இரணியன் சம்சாரம்’ ஆகிய நாடகங்களைத் தயாரித்து அரங்கேற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலாவையில் உள்ள கல்கந்தைத் தோட்டம், பெரிய எலிப்படைத் தோட்டம், சுண்டுலாக்கந்தைத் தோட்டம், கொட்டியாக்கொல்லைத் தோட்டம் போன்ற பகுதிகளும் மலையக அரங்கியலில் முக்கியமான பிரதேசங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, கொட்டியாக்கொல்லைத் தோட்டத்தில் திரு. தங்கராஜா மாஸ்டர் தலைமையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த நாடக இயக்கத்தில், அர்ச்சுனன் தபசு, பொன்னர் – சங்கர், காமன் கூத்து, காத்தவராயன் கூத்து, ஒட்டக்கூத்தர் கதை, காசிராஜன் கதை, தேசிங்கு ராஜன் கதை போன்ற மலையகப் பாரம்பரிய நாடகங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவரின் பங்களிப்பு தேசிய அளவில், 1972 ஆம் ஆண்டு இலங்கை வானொலியிலே காமன் கூத்தை நிகழ்த்தியதன் மூலமும், கொழும்பு ஜோன் டி சில்வா கலையரங்கிலே பயிற்சிப் பட்டறைகளையும் அரங்கேற்றங்களையும் நடத்தியதன் மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டிலும், யாழ்ப்பாணக் கல்லூரி, பரமேஸ்வரா கல்லூரி, வட்டுக்கோட்டை மகளிர் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களிலும், திருகோணமலை தக்‌ஷிண கைலாசப் புராணப்படலம் பாடும் நிகழ்விலும் மலையக காமன் கூத்து அரங்கேற்றப்பட்டதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இராசாத் தோட்டமும் பாரதி மன்றமும் 

இராசாத் தோட்டத்து (நோர்வுட்) பணியக்கணக்கில் பாரதி மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, 13.10.1965 அன்று வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று, அதன் வரலாற்றுச் செயற்பாட்டைப் பதிவு செய்துள்ளது. அதில், 13.10.1965 ஆம் ஆண்டு சனிக்கிழமை இரவு 7 மணிக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக இருந்த எம்.எஸ். செல்லச்சாமி அவர்களின் தலைமையில், எஸ். கருப்பையா தயாரித்த ‘அன்புக்கோர் ஆலயம்’ மற்றும் அவரே எழுதித் தயாரித்த ‘மலைநாட்டில் எமன்’ ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. ‘அன்புக்கோர் ஆலயம்’ நாடகத்தில் சோமபால, எஸ். லட்சுமண், எம். ராஜா, கே. வேலு, கே. லட்சுமண், ஆர்.எஸ். ராமையா, மருதமுத்து, விஸ்வலிங்கம், செபஸ்தியன், பி. காமெதி, எஸ். சுப்பிரமணியம், எம். அம்மாமுத்து, ஏ.கே. கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். ‘அழுவதா? சிரிப்பதா?’ என்ற மற்றொரு நாடகத்தில் என். செல்லையா, ஆர். சுப்பையா, எஸ். கருப்பையா, எஸ். சூரியநாதன், பாக்கியம், ஏ.ஆர். கந்தையா ஆகியோர் நடித்துள்ளனர். ‘மலைநாட்டில் எமன்’ நாடகத்துக்கு ஜெகதீஸ்வரன் மேலாளராகவும், பெனடிக்ட் பின்னணிப் பாடகராகவும், பாக்கியம் உதவியாளராகவும், செல்லத்துரை மேடை முகாமையாளராகவும், எஸ். கருப்பையா மேடை அமைப்பாளராகவும் இருந்துள்ளனர். எஸ். மணி குழுவினர் இசையமைப்பைச் செய்ய, காட்சி அமைப்பை என். கருப்பையா மற்றும் என். சூரியநாதன் செய்துள்ளனர். மேலும், அரிச்சுனன், முத்துலிங்கம், டபிள்யூ.ஜி. சோமபால ஆகியோரும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இராசாத் தோட்டம் (நோர்வுட்) பாரதி மன்றம், 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று நடத்திய விழாவில், திரு. நா. முத்தையா தலைமையில் ‘என் நீதி எங்கே’ என்ற நாடகம் மேடையேற்றப்பட்டதற்கான வரலாற்றுத் தடயங்கள் கிடைத்துள்ளன. அதே பாரதி மன்றம், 14.01.1979 ஆம் ஆண்டு ஞாயிறு இரவு 9 மணிக்கு, ‘மலைச்செல்வன்’ எழுதிய ‘இதயங்கள் புனிதமானவைகள்’ என்ற நாடகத்தை அரங்கேற்றியது. இதில் எம். ராமு, வி. கருப்பழகு, டி.பி. ராஜி, எம். மருதை, எஸ். மாணிக்கம், வி. அரசப்பன், எம்.வி. சுப்பிரமணியம், எஸ்.பி. அரசன், எஸ். லட்சுமணன், எஸ். முத்துலிங்கம், ஜி. பஞ்சரத்தினம், எஸ். சிங்காராஜ், கே. ராஜேந்திரன், எம். ராமையா, அம்மாசி, எஸ். சூரியநாதன், எம். கணபதி, ஜே. முனியாண்டி, ஆர். சித்திரன், பி. அருமைக்கொடி, எம். துரைசாமி, எம். ராமு, பி. முத்து, எஸ். கனகரத்தினம் ஆகியோர் பங்கேற்று நடித்துள்ளனர். இந்தக் காலகட்டத்து நாடகச் செயற்பாடுகளுக்கான சான்றுகள் துண்டுப் பிரசுரங்கள் வடிவில் திரட்டப்பட்டுள்ளன.

கொட்டகலைப் பளிங்குமலைத் தோட்டத்தின் நாடக முயற்சிகள் 

குறிப்பிட்ட இந்தத் தோட்டத்தில், 1970கள் மற்றும் 1980களில் இயங்கிய பல நூற்றுக்கணக்கான பாரம்பரிய நாடகவியலாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இருப்பினும், எஞ்சியிருந்த பூபாலன், மகாலிங்கம், செல்வராஜ், ஜோன், அலோசியஸ், கிருஷ்ணகுமார் ஆகியோர் 1974 முதல் 1984 வரையான ஆண்டுக் காலப்பகுதியில் தீவிரமான பாரம்பரிய மற்றும் நவீன நாடக முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர். தற்போது, அவர்களில் ஒருவரான செல்வராஜ் வாசுதேவன் என்பவர் ஓர் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றுவதோடு, ‘நிதரிசனம்’ மற்றும் ‘குணக்குன்று’ ஆகிய நாடகங்களை எழுதித் தயாரித்துள்ளார்.

கொட்டியாக்கொல்லைத் தோட்டத்தில் அரங்க முயற்சிகள்

பொகவந்தலாவை கொட்டியாக்கொல்லைத் தோட்டத்தில் 1970களில் வாழ்ந்த, இராமசாமி வேலு என்ற இயற்பெயருடைய தங்கவேல் மாஸ்டர் அவர்கள், தனது பதின்ம வயதுகளிலிருந்தே அர்ச்சுனன் தபசு, காசிராஜன் கதை, தேசிங்கு இராஜன் கதை, ஒட்டக்கூத்தன், காமன் கூத்து போன்ற பாரம்பரிய நாடகங்களையும், சமுதாய சீர்திருத்தப் பாடல்கள், நவீன வழிகாட்டி, ரங்கூன் ராதா போன்ற நவீன நாடகங்களையும் தொடர்ச்சியாக நெறியாளுகை செய்து நாடு முழுவதும் அரங்கேற்றியுள்ளார். இவர் 25 சதம் கட்டணமாக வசூலிக்கப்பட்ட சமூக நாடகங்களைக் கொண்டு திரட்டிய ரூபாய் 9,000 பணத்தில், பொகவந்தலாவை சென்மேரிஸ் கல்லூரியில் மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

பொகவந்தலாவை பெரிய எலிப்படைத் தோட்டத்தில் அரங்க முயற்சிகள்

1940 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து, இந்தத் தோட்டத்தில் காமன் கூத்து, பொன்னர் – சங்கர், அர்ச்சுனன் தபசு, காத்தவராயன் கதை, நல்ல தங்காள் கதை, அல்லி, அருக்காணி கதை, குறவஞ்சி, மருதவீரன் கதை, அபிஞான சுந்தரி, அரிச்சந்திர புராணம் போன்ற பல்வேறு வகையான பாரம்பரிய நாடகங்கள் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன.

டி.எக்ஸ். கருப்பையாப் பிள்ளை நாடக சபை

இந்த நாடக சபையானது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முழுநேர நாடகக் குழுவாகச் செயற்பட்டு, மலையகம் முழுவதும் நவீன நாடகங்களை அரங்கேற்றம் செய்துள்ளது. இக்குழுவில் நாயகம், சின்னையாத் தேசிகர், குஞ்சரம், பரமானந்தம், அழகிரி, செல்லத்துரை, இராஜகோபால், கோதவர்மா பாகவதர், துரையப்பா, சுந்தரராஜ், ஆ. முத்தையா, வேல்நாயுடு ஆகியோர் முழுநேர நடிகர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

பி. குமாரசாமிப்பிள்ளை நாடக சபை

இந்தச் சபையும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மலையகத் தோட்டங்களில் முழுநேர நாடகக் கலைஞர்களைக் கொண்டு நவீன நாடகங்களை நடாத்தி வந்துள்ளது. இக்குழுவில் கணேச பாகவதர், சங்கரபாண்டியன், பண்டாரம், கருப்பையா, பொன்னையாப்பிள்ளை, குப்புசாமிப்பிள்ளை, மணிராஜ பாகவதர், விஸ்வலிங்கம், பொன்னப்பா ரெட்டியார், சபாபதிப்பிள்ளை, ஜோசப் ஆகியோர் முழுநேர நடிகர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

90 இற்குப் பின்னரான மலையக அரங்கச் செயற்பாடுகள்

1997 ஆம் ஆண்டு பொகவந்தலாவை பெரிய எலிப்படை கீழ்ப்பிரிவில் உருவாக்கப்பட்ட ‘புதிய பண்பாட்டு அமைப்பு’, மலையக வரலாற்றில் நீண்டகாலமாக அரங்க, அரசியல், சமூகச் செயற்பாடுகளை முன்னெடுத்த ஒரு சுயாதீனமான பண்பாட்டுக் குழுவாகக் காணப்படுகிறது. இந்த அமைப்பு 2003 ஆம் ஆண்டு மலையக சமூக நாடகப் போட்டிகளை நடாத்தியது. அவற்றில் 13 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. யாழ்ப்பாணம் சினிசிட்டா அரங்கிலே அரங்கேற்றப்பட்ட முதலாவது மலையக சமூக நாடக விழா இதுவேயாகும். இந்த நாடக விழாவை முன்னிட்டு ‘செங்கீற்று’ எனும் இதழும் வெளியிடப்பட்டது. இவ்விழாவில், இலங்கையின் பிரபல நாடகவியலாளரும், சினிமா இயக்குநருமான தர்மஸ்ரீ பண்டாரநாயக்க அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்களும் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வி.டி. தர்மலிங்கம் நாடகப் போட்டி

மலையக மக்கள் முன்னணியின் தலைவர்களில் ஒருவரான அமரர் வி.டி. தர்மலிங்கம் ஞாபகார்த்த மன்றத்தில் நடத்தப்பட்ட அரங்கப் போட்டிகளில் 56 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் நாவலப்பிட்டி ஜெய்சிங்க மண்டபத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் 190 மலையக சமூக நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதாக அமரர் வேலு தங்கராஜா மாஸ்டர் அவர்கள் கட்டுரையாசிரியரின் நேர்காணலில் பதிவு செய்திருக்கிறார். மேலும், கயிவத்தைக் கோவிலில் 150க்கும் மேற்பட்ட சமூக நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

கொட்டகலை கிருஸ்லர்ஸ்பாம் தோட்டத்தில் பி.எஸ். செல்வராஜா நாடகக்குழு

இந்த நாடகக் குழுவுக்காக, ஆ. முத்தையா மாஸ்டர் என்பவர் ‘இதயமில்லாத மனிதர்கள்’, ‘மறக்கமுடியாத சில மனிதர்கள்’, ‘வீர அபிமன்யு’, ‘காலம் வெல்லும்’, ‘நீதியின் தீர்ப்பு’, ‘அணையாத தீபங்கள்’, ‘புதிய சாம்ராஜ்யம்’, ‘நீங்காத நினைவுகள்’, ‘தூய உள்ளங்கள்’, ‘உறங்காத விழிகள்’, ‘பாண்டவர் சபதம்’, ‘இலங்கேஸ்வரன்’, ‘இதயத்தில் இரும்புத் திரை’, ‘விதியே உன் முடிவுதான் என்ன?’, ‘அலைகளின் நடுவே’ ஆகிய நாடகங்களின் பிரதிகளை எழுதியும், அவற்றில் நடித்தும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்.

லிந்துலை சுகுமார் நாடகம்

லிந்துலையைச் சேர்ந்த அமரர் சுகுமார் என்பவர் 100க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, தயாரித்து, தமது குழுவினரோடு சேர்ந்து நடித்தும் இருக்கிறார்.  

நாடகப் பயிற்சிப் பட்டறைகளும் பிறவும்

மலையகத்தில் 1990களுக்குப் பின்னர் தோற்றம் பெற்ற இத்தகைய பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் விதமாக, புதிய பண்பாட்டு அமைப்பு லட்சுமித்தோட்டம், பொகவந்தலாவை, நுவரெலியா, பலாங்கொடை ஆகிய பகுதிகளில் பல பயிற்சிப் பட்டறைகளை முன்னெடுத்தது. இவற்றில் பொன். பிரபாகரன், அ. கனகராஜ், எஸ். பிரபா, எஸ். பிரேம்குமார், எஸ். கிறிஸ்டி, பி. சக்திவேல் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர். மேலும், பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகளிலே நிஸாம், கே. கனகராஜ், ராஜநாயகம், பொன். பிரபாகரன், எஸ். பிரேம்குமார் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் பங்களித்திருந்தனர்.

ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலயத்தில், எம். நாகலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் சி. ஜெய்சங்கர் மற்றும் கோகிலா மகேந்திரன் ஆகியோர் நாடகப் பயிற்சிப் பட்டறைகளை முன்னெடுத்திருந்தனர். அதேபோல, அரச சார்பற்ற நிறுவனங்களான சுனேரா மன்றம் (மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சிப் பட்டறைகள்), பார்ம் பவுண்டேசன், பீட்ரு உதயசூரியன் சமூக அபிவிருத்தி நிறுவனம் என்பனவும், மக்கள் களரி நாடகக் குழுவும் மலையகத்தில் பல பயிற்சிப் பட்டறைகளையும் நாடக முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளன.

கற்றைநெறியாக அரங்கு

1980களில் நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய சுந்தரம் பிள்ளை என்பவர் ‘அபுநானா’ என்ற நாடகத்தைத் தயாரித்திருந்தார். 2001 ஆம் ஆண்டில், புதிய பண்பாட்டு அமைப்பின் வழிகாட்டலில், 30க்கும் மேற்பட்ட இளம் நாடகக் கலைஞர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உலக நாடக விழாவில் பங்கேற்றனர்; அங்கு மலையகப் பாரம்பரியக் கூத்துகளும் நவீன நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. 2003 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈழத்துக் கூத்து விழாவிலும், அதே ஆண்டில் சிங்கள, தமிழ்க் கலைஞர்களால் கொழும்பு கலாபவனத்தில் அரங்கேற்றப்பட்ட சிங்கள, தமிழ் கலைவிழாவிலும் புதிய பண்பாட்டு அமைப்பின் நாடகக் குழு பங்கேற்றது. மேலும், மட்டக்களப்பு இராமநாதன் நுண்கலைக் கல்லூரியால் நடத்தப்பட்ட சர்வதேச சமுதாய அரங்கு மாநாட்டில் பொன். பிரபாகரன், எஸ். சதாசிவம், எஸ். கலாவண்ணன், எஸ். பிரேம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மலையகத்தில் நாடகமும் அரங்கியலும் ஒரு கற்கைநெறியாகப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியில் திரு. இராஜநாயகம் அவர்களும், ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலயத்தில் எம். நாகலிங்கமும் அரங்கியலை அறிமுகப்படுத்தினர். அதேபோல, கெர்க்கஸ்வோல்ட் இல. 02 தமிழ் வித்தியாலயம் மற்றும் நோர்வுட் த.ம.வி. ஆகிய பாடசாலைகளில் பொன். பிரபாகரனும், லொயினோன் த.வி. மற்றும் டிக்கோயா த.ம.வி. ஆகியவற்றில் அன்சலாமேரியும், எலிப்படை த.வி. மற்றும் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் பத்மேஸ்வரியும், டியன்சின் த.ம.வி.யில் கதிர்காமனும், கவுரவில த.வி.யில் பிரேம்குமாரும், கெம்பியன் த.வி.யில் கிறிஸ்டியும் அரங்கியலை ஒரு கற்கைநெறியாகப் பாடசாலைகளில் முன்னெடுத்துள்ளனர்.



About the Author

பொன் பிரபாகரன்

பொன்.பிரபாகரன், யாழ். பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவப் பட்டம் பெற்றவர். பட்டப்பின் டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும், ஊடகவியலில் டிப்ளோமாப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். மேலும், கொழும்பு வணிகப் பள்ளியில் செயற்றிட்ட முகாமைத்துவப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 'காமன் கூத்து'(மலையக தமிழரின் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு), 'உப்பு ரொட்டி' (கவிதைத் தொகுப்பு), 'மலையகத் தமிழரின் சமூகவியலும் அரசியலும்' என்பன இவரது நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்