நாட்டுப்புறத் தெய்வங்களில் பல, கொலைகளில் உருவானதாகவே அமையப்பெற்றுள்ளன. மாடசாமி, மருதைவீரன், பொன்னர் – சங்கர் உள்ளிட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் மீதான அனுட்டிப்புகள் அவ்வகையில் அவதானத்திற்குரியவைகளாகும். அவ்வாறே பெண் தெய்வ வழிபாடு தொடர்பிலும் கொலையின் மூலமான தெய்வ அனுட்டிப்புகள் முக்கியத்துவத்திற்குரியதாக விளங்குகின்றன. முனி, கிராமத் தெய்வமாகவே உணரப்படுகின்ற நிலையில் இயக்கசக்தி மீதான கவனத்தைப் பெற்றுள்ளதாக அமைகிறது. பொதுவாகக் கிராமத் தெய்வங்களாக அடையாளப்படுத்தப்பட்ட தெய்வங்கள் உலகில் வாழ்ந்த தடயத்தைக் கொண்டுள்ளதோடு அவர்களது தியாகம், வீரம், முன்வருதல் போன்ற குணாம்சங்கள் இறைநிலையில் உயர்த்தப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது. மாறாக முனிகள் பற்றிய கவனத்தில், ஒன்றின் இயக்கம் அல்லது தொழிற்படுகை அம்சங்கள் முக்கியத்துவம் பெறுவதை உணரலாம். மூலம் ஒன்றின் தொடர் நிலையிலேயே முனிகளை உற்றுநோக்க வேண்டியுள்ளது. இயக்கம், செயற்பாட்டுடன் தொடர்புபட்ட நிலையிலையே அடைமொழியாக முனிகளின் பிரவாகம் அமைந்திருக்கின்றது. சிவனை மூலமாக இருத்தி ஆண்டியாக உருவகிக்கின்ற அதன் தொடர்ச்சி நிலையில் முனியாண்டியின் பரிமாணம் அமைந்துள்ளது. அதன் பரிமாணத்தின் ஓர் அங்கமாகவே ‘அஞ்சி முனியாண்டி’ அல்லது ‘ஐந்து முனியாண்டி’ தெய்வத்தின் அனுட்டிப்பும் உற்றுநோக்கப்பட வேண்டியுள்ளது.
‘அஞ்சி’ என்பது பயந்து அல்லது திகைத்து எனப் பொருள்படுகிறது. முனியாண்டி கடவுளுக்குப் பயந்து அல்லது அஞ்சித் திகைத்து நிற்கும் நிலையைக் குறிப்பிடுகின்றது. தமிழகத்தில் சில சமூகத்தினரால் வழிபடப்பட்டதன் தொடர்ச்சி நிலையில் அஞ்சி முனியாண்டி வழிபாடும் வியாபகம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக நாடார் சமூகத்தினரினால் தெய்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சி நிலையில் பல நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் அஞ்சி முனியாண்டி வழிபாடு பரவியுள்ளது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள், இருநூறு வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்தார்கள். தென்னிந்தியத் தமிழர்களின் வியாபகம் இலங்கையில் பல்வேறு மாறுதல்களுக்கு அடித்தளமிட்டன. பெருந்தோட்டத்துறையின் உருவாக்கம் பிரித்தானியர்களதும், இலங்கையினதும் பொருளாதாரத்தை உயர்த்தியது. அதுபோலவே அரசியல், கலாசார, பண்பாட்டு அம்சங்களிலும் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியது. இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் இச்சமூகத்தை ‘மலையகம்’ என அடையாளப்படுத்தும் முனைப்புகள் அறுபதுகளின் பின்னர் வலுப்பெற்று வருகின்றது.
மலையக மக்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த நிலையிலேயே வழிபாட்டு மரபுகளும் சமய நம்பிக்கைகளும் பெரிதும் துணை நின்றுள்ளன. அதன் தொடர்ச்சி நிலையிலேயே இலங்கை மலையகத்தில் அம்மன் வழிபாடு இடம்பெற்று வருகின்றது எனலாம். மலையகத்திலுள்ள தோட்டங்களில் அம்மன் ஆலயங்களைப் பிரதானப்படுத்தி குலதெய்வங்களும், காவல் தெய்வங்களும், தொழில் தெய்வங்களும் ஆதிக்கம் பெறுகின்றன. மலையகத்தில் ஆண் சிறு தெய்வங்கள் அம்மனின் சகோதரர்களாக நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வழிபாட்டுடன் தொடர்புபட்ட, அம்மனுக்குப் பாதுகாப்பைத் தருகின்ற வகையிலான தொன்மக் கதைகளும் உற்றுநோக்கத் தக்கவைகளாகும். இவ்வாறு காணப்படும் மாடசாமி, மருதைவீரன், பொன்னர் – சங்கர், கருப்பன், இராமர் போன்ற தெய்வங்கள் பற்றிய விடயங்கள் கவனத்தைப் பெறுகின்றன. மலையக மக்களால் வழிபாட்டிற்குரியதாக அறியப்படும் முனிகள் பற்றிய பூர்வீகத்தை அறிய முனைகையில் ஏக்கம் தொடர்பான எண்ணக்கரு வலிமை பெறுவதை அறிய முடிகின்றது.
மலையகத்தைப் பொறுத்தமட்டில் முனிகள் மீதான நம்பிக்கை, மிகுந்த வலிமை பெற்றதாக விளங்குகின்றது. எல்லை முனி, கவ்வாத்து முனி, கம்பி முனி, ரோதை முனி என்றவாறு முனிகளின் வகைப்பாடு ஆதிக்கம் பெறுவதைக் காணலாம். முனிவு என்பது சினம், அச்சுறுத்துவது ஆகிய பொருள்களில் அமைகின்றது. தொழிலில் காணப்பட வேண்டிய மரியாதை, அவதானம் ஆகியனவும் ஒரு பய நிலையில் நோக்கப்படுகின்றன. மலையகத்தின் தொழிற்துறையுடன் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் ஏற்படுத்துகின்ற வழிபாட்டு முறையாக முனிகள் தொடர்பான வழிபாடு விளங்குகின்றது. தொழில்கள் மீதான பக்தியையும், அவதானத்தையும் பிரதானப்படுத்திய வகையில் இவ்வழிபாட்டு மரபு கைக்கொள்ளப்படுகின்றமை கவனத்திற்குரியதாகும். முனிகள், மலையக மக்களின் வாழ்க்கை முறையோடும் இரண்டறக் கலந்துள்ளன. இதனை ‘அநியாயம் செய்தால் முனியாண்டி கேட்பான்’ என்ற வார்த்தைப் பிரயோகம் இம்மக்களிடத்தே நிலைபெற்றுள்ளதன் வழி அறியலாம். அதன் தொடர்ச்சி நிலையிலேயே மலையக மக்களால் ‘அஞ்சி முனியாண்டி’ அனுட்டிப்பும் சிறப்பிடம் பெறுகிறது.
அஞ்சி முனியாண்டியை நாடார் சமூகத்தினர் குலதெய்வமாகப் பார்த்த நிலையில், மலையகத்தில் அதன்வழி வந்தவர்கள் அதனைக் குலதெய்வமாக வழிபடுகின்றார்கள். தொழில் தெய்வங்களுக்கு ஏற்றவகையில் அவ்வவ் களங்களுக்கு ஏற்றவாறு முனியாண்டி அடைமொழிகளில் வேறுபடுவதும் அறிந்ததே. காவல் தெய்வம் எனத் தனித்தும் குழுவாகவும் வழிபடும் கடவுளாக எல்லை முனியும், அஞ்சி முனியும் விளங்குகின்றன.
எல்லை முனி ஆலயம் தோட்டத்தின் எல்லையில் இருக்கின்ற நிலையில் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு எல்லை முனியின்பால் ஒப்படைக்கப்படுகின்றது. சில தோட்டங்களில் அஞ்சி முனி ஆலயமும் தோட்ட எல்லையிலேயே அமைந்திருப்பது உண்டு. சில தோட்டங்களில் ஊரின் மத்தியிலும் இவ் ஆலயம் அமைவதுண்டு. விவசாயப் பயிர்களைக் காக்கும் காவல் தெய்வமாகவும் இது அனுட்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் விவசாயத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகம், பெருந்தோட்ட விவசாயப் பயிர்களோடு தொடர்புபட்டவாறு, முனி வழிபாட்டுடன் தொடர்பு கொள்கின்றது. அமைவிடம் எதுவாக இருப்பினும் ஊரைக் காப்பாற்றும் பொறுப்பு ஊர் மக்களால் அஞ்சி முனியாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கெட்ட ஆவிகள், பிசாசுகள் தோட்டங்களை அண்டவிடாது தடுத்தல், கொடிய நோய்கள் ஏற்படாது காத்தல், தீயவர்களும் கள்வர்களும் தோட்டத்தினுள் நுழைய விடாது தடுத்தல், உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்தல், விபத்துகளும் அங்கவீனங்களும் ஏற்படாது தடுத்தல், இரவு நேரப் பயணங்களின் போது துணை நிற்றல், பிள்ளைப்பேறு, எதிரிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குதல் போன்ற வேண்டுதல்களோடு அஞ்சி முனியாண்டியை வணங்கும் மரபு கைக்கொள்ளப்படுகின்றது. இவ் வேண்டுதல்கள், காணிக்கை கட்டுவதன் மூலம் அஞ்சி முனிக்குப் பாரம் கொடுக்கப்படுகின்றது.
சிவனை முனீஸ்வரர் என அழைக்கும் மரபில் முனியானது முனியாண்டி, முனீஸ்வரன், முனியப்பர் என்ற பெயர்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றார். முனீஸ்வரன் சிவனுடன் தொடர்புபட்ட சிவகணங்களாகக் குறிப்பிடப்படுகிறார். சிவனின் முகத்திலிருந்து தோன்றிய ஏழு வடிவங்களில் இருந்து வந்ததாக அவரைக் குறிப்பிடுவார்கள். மரத்தடி வழிபாடுகளில் இருந்து தோற்றம் பெற்றதாகவே முனி வழிபாடு தொடர்கின்றது. அதன் வழியில் மரத்தடிகளிலேயே இவ்வழிபாட்டுத் தலங்கள் அமையப்பெற்றுள்ளன. தமிழர்கள் நீண்டகாலமாகவே நடுகல் வழிபாட்டில் ஆர்வம் செலுத்தியுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாகவும் முனி வழிபாடு திகழ்கின்றது. பல இடங்களில் விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியன பூசி அலங்கரிக்கப்பட்ட கல் அடையாளமாக முனி திகழ்கின்றது. சிவன் – சக்தியை அடையாளப்படுத்தும் வகையில் திரிசூலம் நடப்பட்டு அதற்கும் பூசை இடம்பெறுகின்றது. உருவம் கொடுத்த நிலையில் இன்று சிலைகளும் வடிவமைக்கப்படுகின்றன. குடும்பரீதியாக அமைக்கப்பட்ட கோயில்கள் பொதுக்கோயில்களாக மாறியுள்ளன. வீரமும் ஆவேசமும் நிறைந்த கடவுளராக வழிபடப்படும் முனீஸ்வரன், அந்தகாசுரனை அழித்தவராகவும் அறியப்படுகிறார். முனியை தெய்வ ஆவேசம் படைத்தவராகவும், பயமற்றவராகவும் வேதம் குறிப்பிடுகின்றது. அவ்வாறே உபநிடதம், பகவத்கீதை போன்றனவும் முனி தொடர்பில் பின்வருமாறு விளக்கமளிக்கின்றன: உலக வாழ்க்கையை வெறுத்து ஞானத்தின் உயர் நிலையாகிய மௌனத்தைக் கடைப்பிடித்து விருப்பு வெறுப்பு, கோபதாபங்களை நீக்கியவர்கள். இதன் வழியிலேயே முனிவர்கள் என்ற பதம் உருவாகியுள்ளது. சமகாலத்திலும் கிராமிய மக்கள் மத்தியில் தவறு செய்தால் தண்டனை வழங்குபவராகவும், ஒளிப்பிழம்பாகக் காட்சி தருபவராகவும், மணி ஓசையைக் எழுப்புபவராகவும் நம்பப்படுகின்றார். மலையக மக்களின் அனுட்டிப்பில் பஞ்ச முனிகள் தொடர்பான வழிபாட்டையும் நோக்க வேண்டியுள்ளது. மலையகப் பிரதேசங்களில் இவ் ஆலயங்களை ‘ஐந்து முனியாண்டி’ ஆலயம் என அழைப்பர். வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி ஆகிய ஐந்து முனிகளும் பச்சையம்மனுக்குத் துணையாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. அவ் மரபில் ‘ஐந்து முனியாண்டி’ ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. இவற்றோடு ஜடாமுனி, பாலக்காட்டு முனி, இலாடா முனி ஆகியன பற்றிய கவனமும் எடுத்துரைக்கப்படுகின்றது.



தோட்டத்து மக்களை ஒன்று திரட்டுகின்ற களமாக இவ்வழிபாட்டுத் தலங்கள் திகழ்கின்றன. மலையகத் தோட்டங்களில் அம்மன் கோயில்களே பிரதானமாகக் காணப்படுகின்ற நிலையில் அம்மன் வழிபாட்டுடனும் மிக நெருங்கிய தொடர்போடு முனியாண்டி ஆலய வழிபாடு இணைக்கப்பட்டுள்ளது. அம்மன் திருவிழா மற்றும் தொடர்புபட்ட விழாக்களின் போது இவ் ஆலயத்திலும் பூசைகளும், கிரியைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்போது முற்றுமுழுதாக சைவ அனுட்டானங்களுடனான பூசைப் பொருட்களின் பிரயோகத்துடன் பொங்கல், கஞ்சி, சைவ உணவுகள் படைக்கப்படுகின்றன.
மார்கழி மாதத்தில் திருவெம்பாவை அனுட்டிப்பு மலையகத்தைப் பொறுத்தவரையில் இராமர் பஜனை வழிபாடாகவே வழிப்படுத்தப்படுகின்றது. மாரியம்மன் ஆலயம் அல்லது மாரியம்மன் வளாகத்தில் அமைந்துள்ள இராமர் ஆலயத்தில் மார்கழி மாதம் முழுதும் இடம்பெறும் வழிபாட்டின் போதும் அசைவப் பொருட்கள், மதுபானம் மற்றும் புகைத்தல் பொருட்கள் தவிர்த்தே படையல்கள் படைக்கப்படுகின்றன. அம்மன் ஆலயத் திருவிழா, தைப்பூசம், பங்குனி உற்சவம், சித்திரைப் புத்தாண்டு ஆகிய விசேட பூசைகளின் போது அம்மன் ஆலய நிர்வாகிகளால் அஞ்சி முனியாண்டி ஆலயங்களிலும் பூசைகள் நிகழ்த்தப்படுகின்றன. இக்காலங்களில் அம்மன் ஆலயத்தில் தொடர்ச்சியாகப் பூசை செய்யும் பண்டாரங்களே பூசை செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. அம்மன் ஆலயத் திருவிழாவின் போது பிராமணர்கள் அல்லது சமஸ்கிருதத்தைத் தழுவிப் பூசை மேற்கொள்ளும் தேசிகர்கள், அஞ்சிமுனி ஆலயத்திற்கு வருகைதந்து பூசைகளை நடத்துகின்றார்கள். அம்மன் ஆலயப் பாற்குடப் பவனியின் போது இவ் ஆலயத்தில் இருந்தே பால் வழங்கித் தொடக்கி வைக்கப்படுகின்றது. வருடாந்தம் கார்த்திகை தீப தினத்தின் போது அம்மன் ஆலயங்களில் சுடலை கொழுத்துதல் செயற்பாடு இடம்பெறும். அம்மன் ஆலயங்களின் முற்றத்தில் இது வழமையாக இடம் பெறுவதுண்டு. அம்மன் ஆலயத்தில் எரிக்கப்படுவதைப் போலவே அஞ்சி முனியாண்டி ஆலயத்திலும் சொக்கப்பனை கொழுத்துதல் செயற்பாடு இடம்பெறும். இவ்வழிபாட்டின் போதும் சைவப் படையல்களே படைக்கப்படுகின்றன.
காவல் தெய்வங்களுக்கே உரிய மாமிசப் படையல் வைத்து வழிபடும் வழக்கமும் இவ் ஆலயத்தில் இடம்பெறுகின்றது. அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா நிறைவுற்று எட்டாம் நாளில், ஆலய நிர்வாகத்தினரால் சேவல் பலியிடப்பட்டு, சேவலின் தலையும் அதன் ஈரலும் தீயில் சுடப்பட்டு, அஞ்சி முனியாண்டியாக உருவகிக்கப்படும் சிலைக்கு அருகில் வைக்கப்படும். கள்ளுப் போத்தலை மூடியைத் திறந்து சிலையின் அருகில் வைத்துவிடுவார்கள். அருகில் சுருட்டு அல்லது பீடியை வைக்கும் வழக்கமும் உள்ளது. கள்ளுக்குப் பதிலாக ‘பியர்’ அல்லது சாராயம் (கால் போத்தல்) வைக்கும் வழக்கமும் உள்ளது. சிலநேரங்களில் இவ் ஆலயத்தில் பூசை செய்யும் பூசாரி, காவல் கொடுத்ததும் வைக்கப்படும் மதுபானத்தை தான் எடுத்து அருந்தி விடுவதுமுண்டு. பின்னர் காவல் கொடுத்த சேவலை உரித்துத் துப்பரவு செய்து ஆலய வளாகத்திலேயே கறி சமைத்து, அதனுடன் சோறும் சமைத்து, பூசைக்குத் தேவையான பொருட்களையும் வைத்துப் படையலிடுவார்கள். பின்னர் பூசாரியார் பூசை செய்து படையல் இட்டது போக, மீதமுள்ள கோழி இறைச்சி கலந்த சோற்றினைப் பூசையில் பங்கேற்பவர்களுக்கு இலையில் வழங்கி மகிழ்வார்கள். அப்படையலுடன் காளாஞ்சி, தட்சணை, காசு போன்றனவும் பூசாரியாருக்கு வழங்கப்படும். இப்பூசையில் ஊரில் விரும்பியவர்கள் பங்கேற்பார்கள்.
தனிநபர்களது நேர்த்திக்கடன்களும் மேற்குறித்தவாறே இடம்பெறும். குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அழைக்கப்பட்ட நபர்கள் மாத்திரம் தனிநபர்களது நேர்த்திக்கடன் பூசைகளின்போது பங்கேற்பார்கள். அவர்களது விருப்பத்திற்கு அமைய படையலுக்குத் தயார் செய்யப்பட்ட இறைச்சிச் சோற்றை உண்டு மகிழ்வதோடு, தங்கள் விருப்பத்திற்கு அமைய மதுபானங்களையும் அருந்தி மகிழ்வார்கள். இந்நிகழ்வு ஒருவகையில் விருந்துபசார நிகழ்வாக அமைவதுண்டு. காவல் கொடுப்பது ஒரு சேவலாக உள்ள நிலையில், ஊர் மக்களின் பங்கேற்பைக் கருத்திற் கொண்டு ‘புரொய்லர்’ கோழியையும் மேலதிகமாகச் சேர்த்துச் சமைக்கும் வழக்கம் உள்ளது. சிலரது நேர்த்திக்கடன் சைவப் படையல் வைத்துப் பொங்கலிடுவதோடு மட்டுப்படுத்தப்படும். இவ்வாறான நேர்த்திக்கடன் பூசையின் போது தோட்டத்திலுள்ள சிறுவர்களின் பங்கேற்பு அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தருவதாக அமையப்பெறும். வீட்டிலுள்ள பெண்களும் இப்பூசையின் போது பங்கேற்பார்கள். சிறுவயதில் பேசுவதற்கு இடர்படும் பிள்ளைகளுக்கு பேச்சு நன்றாக வரவேண்டும் எனவும் நேர்த்திக்கடன் வைப்பார்கள். இவ்வாறான நேர்த்திக்கடன் பூசையின் போது, மணியை வாங்கி, ஆலயத்தில் பூட்டுவது வழமையாகும். மணியோசையோடு சிறப்பிக்கப்படுகின்ற களமாகவும் ஐந்து முனி ஆலயங்கள் விளங்குகின்றன. ‘தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பும் மணிகள்’ ஆலய வளாகத்தில் மாட்டப்பட்டிருக்கும்.
ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அல்லது ஊரிலுள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கிப் பூசை செய்யும் நோக்கம் கருதிய பூசைகள், பண்டிகைளுக்கு அடுத்த நாள், ஏனைய விசேட நாள்களில் இடம்பெறுவதுண்டு. இப்பூசையைத் தனிநபர்களாகவோ, குழுக்களாகவோ, ஊர் மக்களிடம் வரிசேர்த்து ஏற்பாடு செய்வார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆடு வெட்டிக் காவல் கொடுப்பது வழமையாகும். இவ்வாறு ஆடு வெட்டுகின்ற போது நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குக் காவல் கொடுப்பதும் வழமையாகும். ஆடு வெட்டுவதற்கென்றே தீட்டி வைத்திருக்கும் கத்தியைக்கொண்டு பூசாரியினால் ஆடு வெட்டப்படும். வெட்டப்பட்ட ஆட்டின் தலை பூசாரிக்கு உரித்தானதாகும். வெட்டிய ஆட்டை உரித்துத் துப்பரவு செய்து கறி சமைப்பார்கள். பின்னர் சோறும் ஏனைய கறிகளும் சமைப்பதுண்டு. அவ்வாறு சமைக்கப்பட்ட உணவு அடுத்தநாள் பகல் பொழுதில் படையலிடப்பட்டு பூசை இடம்பெறும். எல்லாப் பூசைகளிலும் தேங்காய், வாழைப்பழம், பத்தி, சூடம், சாம்பிராணி, சந்தனம், குங்குமம், பாக்கு, வெற்றிலை, தட்சணை, பூக்கள் போன்றன கட்டாயமாக இடம்பெறும். பலிப் பூசைகளின் போது மதுபானமும், புகைத்தல் பொருட்களும் வைப்பது வழமையாகும்.
இவ்வழிபாடு மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த அம்சத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள நிலையில், மக்கள் மகிழ்வோடு ஒன்றுகூடுகின்ற களமாகவும் திகழ்கின்றது. மலையகத்தில் அம்மன் வழிபாடு இருநூறு வருடத்திற்கு மேற்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அதற்குச் சமகாலத்திலேயே அஞ்சுமுனி அல்லது ஐந்து முனி வழிபாடும் மலையகத்தில் ஊடுருவியுள்ளது. பொதுவாக சிறுதெய்வ வழிபாடு ஆகம முறையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாக அமையப்பெறுகின்றது. ஒருவகையில் குடும்பம், அக்குடும்பம் சார்ந்த சாதியினரிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் களமாகவும் இது அமையப்பெறுகின்றது. கருவறைக்குள் யார் செல்வது? என்ற வேறுபாடுகளைக் களைந்து ஜனநாயகத் தன்மையுடனான அணுகுமுறைக்கான வாய்ப்புக் குறித்த அம்சமும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. எது எவ்வாறாக இருப்பினும், அஞ்சி முனியாண்டி ஆலய வளாகம் பிறருக்கு ஒரு பய நிலையை ஏற்படுத்தி மலையகத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உசாத்துணைப் பட்டியல்
- வடிவேலன். பெ., (2007), மலையக நாட்டுப்புறவியலில் மாரியம்மன், மாத்தளை தமிழ் இலக்கிய வட்டம்.
- ஆனந்தக்குமார். பா., (2017), இலங்கை மலையகத் தமிழ் இலக்கியம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம்.
- முரளிதரன். சு., (2002), வரவும் வாழ்வும், மலையக நாட்டாரியல் சிந்தனைகள், சாரல் வெளியீட்டகம்.
- சிவதம்பி. கா., (1993), இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும், உதயம் நிறுவனம்.
- சந்தரா. சு., (2013), தொன்மவியல் கட்டுரைகள், அறிவுப்பதிப்பகம்.
- சண்முகலிங்கம். க., (1995), தமிழ் நாட்டார் வழக்காற்றியல், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம்.



