புத்தமும் தமிழும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
25 நிமிட வாசிப்பு

புத்தமும் தமிழும்

September 21, 2026 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

ஆங்கில மூலம்: பீற்றர் ஷால்க்


ஈழத்தைச் சேர்ந்த தமிழர்கள் அனுராதபுரக் காலத்தின் தொடக்கத்திலேயே பௌத்தத்தைத் தழுவியிருந்தனர் என்பதைத்தான் பிராகிருதத்தில் உள்ள நான்கு பிராமி கல்வெட்டுகளிலிருந்து இன்று நாம் அறியமுடிகிறது. அக்காலத்தில் பௌத்தம், சிங்கள(வ)ர்களின் பண்பாட்டு மற்றும் ‘இன’ குணாதிசயங்களுடன் அதுவரை அடையாளம் காணப்பாடமலேயே இருந்தது. அக்காலத்தில் இத்தீவின் மதச் சூழல், காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் தமிழ்நாட்டின் சூழலிருந்தும் இன்றைய ஈழத்தின் சூழலிலிருந்தும் முற்றிலும் வேறாக இருந்தது. இனம் என்ற கருத்தின் அடிப்படையில் இனத்தேசியவாதம் எதுவும் அங்கு இருந்திருக்கவில்லை. இத்தீவில் ஆதிக்கம் செலுத்திய மதம் சைவம் அல்ல. அது பௌத்தம். தீவில் ஆதிக்கம் செலுத்திய மொழி தமிழ் அல்ல. கி.பி. எட்டு, ஒன்பதாவது நூற்றாண்டுகளில் பிராகிருதம், சிங்களத்தின் ஆரம்ப வடிவமான ‘எலு’ என மாறி, பின்னர் சிங்களமாக வளர்ந்திருந்தது.1

தமிழ் ஒரு சிறு மொழியாகவே இருந்தது. தமிழர்கள் ஒருங்கிணைக்கப்படுவதற்கு, பிராகிருதம் – எலு – சிங்களம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தேவையாக இருந்தது. உண்மையில், அவர்கள் ஆரம்பகால அனுராதபுரக் காலத்தில் பிராகிருதத்தைப் பயன்படுத்தினர். தமிழ் பேசும் மக்கள், தமிழைத் தாய்மொழியாகப் பேசும் தகுதியின் அடிப்படையில், பௌத்தர்களாக ஆகுவதற்குத் தகுதியற்றவர்கள் என்ற கருத்து அப்போது இருக்கவில்லை. அவர்கள் பௌத்தர்களாக ஆனதாலும், பிராகிருதத்தைப் பயன்படுத்தியதாலும், பிராகிருதம் பேசும் குழுவினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட நிலப்பரப்பை அங்கீகரித்ததாலும் அவர்களின் ஒருங்கிணைப்புக் கைகூடியது. காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில், இனம் என்ற கருத்தைப் பொருத்துவது கால முரண்பாடாக இருக்கும். காலனித்துவத்திற்குப் பின்பான காலத்தில்தான், தமிழர்கள் இயல்பாகவே தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் உருவானது. காலனித்துவ காலத்திற்குப் பின்னர்தான் சிங்களவர்களுக்கான ஒரு பொருளாதார, மொழி மற்றும் இனக்குழு அடையாளக் குறியீடாகப் பௌத்தம்  பார்க்கப்பட்டது.

ஆதிக்கப் பிராகிருத மொழி பேசும் குழுவின் முகவர்களால், காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் தமிழர்கள் மதிப்பீடு செய்யப்பட்டதை, மகாவம்சத்தில் உள்ள 25:101-111 என்ற புகழ்பெற்ற பகுதி மூலம் எடுத்துக்காட்டலாம்.  புத்தசாசனத்தின் விழுமியங்களை வெளிப்படுத்தும் ஒருவர்தான், ஓர் உண்மையான மனிதன் என மகாவம்சம் வரையறுத்தது. உலகளாவிய விழுமியங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட மனிதநேயம் பற்றிய ஒரு கருத்தை மகாவம்சத்தில் தேடுவது உறுதியாக வரலாற்றுக்குப் புறம்பானது. அது குறிப்பிட்ட மற்றும் குறிப்பான மத விழுமியங்களின் அடிப்படையிலேயே வரையறுக்கப்பட்டது.

1988 ஆவது ஆண்டில் கணநாத் ஒபயசேகரவும்2, 1986 ஆவது ஆண்டில் நானும்3 மகாவம்சத்தில் உள்ள இந்தப் பகுதியைப் பற்றி எழுதியபோது, அதைச் சூழலுக்கு ஏற்ப புரிந்துகொண்டு, அதன் முக்கியத்துவத்தை உணர்த்த முயன்றோம். இன்றோ நான் இந்தப் பகுதியை வேறு கோணத்தில் பார்க்கிறேன். ‘தர்மமே’ உண்மையான மனிதநேயத்தை உருவாக்குகிறது என்ற கருத்தைச் சொல்லும் ‘சமஸ்கிருத சாஸ்திர’ இலக்கியங்களைப் போன்ற பிற சமய மானிடவியல்களுடன் நான் இதை ஒப்பிடுவதில்லை. மேலும், மகாவம்சத்தில் உள்ள இந்தப் பகுதியைப் புத்தரின் செய்தியுடனும், மனித உரிமைகளின் உலகளாவிய தன்மை குறித்த புதிய கருத்துகளுடனும் மீண்டும் ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கம் எனக்கு இங்கு இல்லை. நவீன சிங்கள – பௌத்த இனத்தேசியவாதத்தினுடைய ‘விலக்கும் மதக்கோட்பாடே’ பொருத்தமான ஒப்பீட்டுப் புள்ளி என்று நான் நினைக்கிறேன். அதன்பின்னர், மகாவம்சத்தில் உள்ள இந்தப் பத்தி மற்றொரு கோணத்தில் வெளிப்படுகிறது.

கி.பி. ஐந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த மகாவம்சம் (25:101-111 பத்தி) இரண்டு கருத்துகளைத் தெரிவித்தது. 1. புத்தசாசனத்தைச் சாராத தமிழர்கள் பின்வருமாறு குறிக்கப்படுகிறார்கள். ‘தவறான நம்பிக்கையாளர்கள்’ என்று பொருள்படும் ‘மிச்சாதித்தி’ என்றும் ‘தீயவர்கள்’ என்று பொருள்படும் ‘துஸ்ஸிலா’ என்றும் ‘மிருகங்களைப் போன்றவர்கள்’ என்று பொருள்படும் ‘பசுமா’ என்றும் கருதப்பட்டனர். இது இந்தப் பத்தியில் காணப்படுகின்ற விலக்கி வைக்கும் முகமாகும். ஆனால், மற்றொரு வரவேற்கும் முகமும் இதிலிருந்தது. 2. தமிழர்கள் முறையாகப் புத்தசாசனத்தை நோக்கித் திரும்பினால், படிப்படியாகக்கூட மனிதர்களாக மாற முடியும் என்று அந்தப் பத்தி உணர்த்துகிறது. அவர்கள் சரணடைதல் சூத்திரத்தை ஏற்றுக்கொண்டால், அரை மனிதர்களாகவும், ஒழுக்க விதிகளை ஏற்றுக்கொண்டால், முழு மனிதர்களாகவும் மாறவும் முடியும் என்கிறது.

தமிழர்கள் மனிதநேயப் பாதையில் நுழைவதற்கான அழைப்பின் நுழைவாயில், இந்தவகை நவீன இனத்தேசியவாதிகளால் மூடப்பட்டுள்ளது. நவீன இனத்தேசியவாதிகளின் ‘மனக் குழிக்கோ’ (கார்ல் ஜஸ்பர்ஸ்) (Karl Jaspers) அல்லது அவர்களின் ‘பூட்டப்பட்ட மனங்களுக்கோ’ (டி.என். மதன்) (T.N. Madan) நான்கு ரத்தினங்கள் உள்ள சாளரத்தைப் பூட்டிவைக்க முடியாது. அதாவது ‘நான்கு இரத்தினங்களான’ நாடு (ரதம்), இனம் (ஜாதியம்), மதம் (ஆகமம்), மொழி (பாசவம்) ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட சாளரத்தை பூட்டிவைக்க முடியாது.4 இங்கு எந்த உரையாடலும் சாத்தியமில்லை.5 இனத்தேசியவாதத்தின் வெளிச்சத்தில் தமிழ்ப் புத்தம் என்ற கருத்து ஒரு முரண்பாடாகத் தோன்றுகிறது. நவீன இனத்தேசியவாதம் ‘வம்ச’ (மகாவம்சம் என்பதனை ஆசிரியர் இப்படிக் குறிப்பிடுகிறார். மொ-ர்) மரபை முறித்துவிட்டது என்று நான் முடிவு செய்கிறேன். அதன்படி தமிழர்களும் புத்தசாசனத்தின் விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் மனிதர்களாக ஆகியிருக்க முடிந்திருக்கும். வரலாறு மற்றும் மொழியியலில் தொழில்முறைப் பயிற்சி இல்லாத மேற்கத்திய வர்ணனையாளர்களால் இன்று பொதுவாக ‘மகாவம்ச மனப்பான்மை’ என்று அழைக்கப்படுவது, மகாவம்ச மனப்பான்மையே அல்ல. அது, தன்னை உண்மையான மகாவம்ச மனப்பான்மை என்று கூறிக்கொண்டு, காலத்திற்குப் பொருந்தாத வகையில் தன்னை வரலாற்று ரீதியாக நிலைநிறுத்திக்கொள்ளும் ஒரு நவீன இனத்தேசியவாத மனப்பான்மையாகும். இந்த வர்ணனையாளர்கள், சிங்கள இனத்தேசியவாதமே ‘வம்ச’ மரபின் பிழிவு என்ற இனத்தேசியவாத வரலாற்றுப் பார்வையின் முன்வைப்பாளர்களாகத் தங்களை அறியாமலேயே ஆக்கிக்கொள்கிறார்கள். 

கி.பி. ஐந்தாவது நூற்றாண்டில், மகாவம்சம் தொகுக்கப்பட்டுவிட்ட இந்தக் காலத்தில் நாம் பயணிக்கிறோம். மட்டுமல்லாமல், இந்த மேற்குறிப்பிட்ட பத்தி (மகாவம்சம் 25:101-111 பத்தியையே ஆசிரியர் குறிப்பிடுகிறார். மொ-ர்) தலைமுறை தலைமுறையாகப் பரப்பப்பட்டுவிட்ட காலமுமாகும். மேலும் அது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிங்களத்தின் ‘சத்தர்மலங்காரய’ (සද්ධර්මාලංකාරය) போன்ற பிற மூலங்களிலிருந்தும் வெளிப்பட்டது.6 அதில், புத்தசாசனத்தைச் சேராத தமிழர்கள் ‘கால்நடைகள், நாய்கள் மற்றும் எலிகளாகக்’7 கருதப்பட்டனர் என்பதிலும், ஆனால் புத்தசாசனத்தில் நுழைந்தால், படிப்படியாகத் தமிழர்கள் மெல்ல மெல்ல மனிதர்களாக ஆக முடியும் என்பதிலும் எந்த ஐயமும் வைக்கப்படவில்லை. ஆதிக்கக் குழுவால் வரையறுக்கப்பட்ட மனிதநேய அணுகுமுறையைத் தங்களுக்கானதாகத் தேர்ந்தெடுத்த தமிழர்களின் பல எடுத்துக்காட்டுகளை நாம் காணமுடியும். 

மொழியைப் பற்றி ‘விநயத்தில்’ (பிடகம்) உள்ள நியதி நெறியையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிக்குகள் ‘தம்மத்தை’ எந்த மொழிகளில் கற்கவும் (கற்பிக்கவும்) வேண்டும் என்பது குறித்த  விநய-பிடகத்தில் (சூளவக்கம் V.33) உள்ளது. புத்தர் கூறியதாகக் கூறப்படும் புகழ்பெற்ற கூற்றின்படி, ஒவ்வொருவரும் ‘தம்மத்தைத்’ தத்தமது சொந்த மொழியில் கற்க வேண்டும்.

“anujjanāmi bhikkhave sakāya

niruttiyā buddhavacanam pariyāpuņitun ti”

“பிக்குகளே, புத்தரின் வார்த்தைகளை ஒவ்வொருவரும் அவரவர் மொழியில் கற்க நான் உங்களுக்கு அனுமதிக்கிறேன்.”

உண்மைதான்! ஐந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த புத்தகோசர் ஒரு சிறப்பு விளக்கத்தைக் கொண்டிருந்தார். அதன்படி இந்த ‘புத்தவாசனா’ புத்தரின் மொழியைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட வேண்டும். அதை அவர் ‘மகதி’ என்று வகைப்படுத்தினார். நெறியில் நிலைபெற்ற நூல்களின் மொழி ‘பாலி’ மொழிதான் என்பதாகத் தவறாக மீண்டும் அவர் அடையாளம் கண்டார். இருப்பினும், இந்த விளக்கம், மேலே தரப்பட்ட புத்தர் வாக்கின் ஒரு மறுவிளக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு துறவியும் புத்தர் வாக்கைத் தனது சொந்த மொழியில் கற்க வேண்டும் என்பதை இந்தச் சூழமைவு தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு துறவியும் தனது சொந்த மொழியில் போதிக்க வேண்டும் என்பதை நான் குறிப்பாகச் சொல்கிறேன்.

புத்தகோசரின் விளக்கத்தை நாம் ஏற்றுக்கொண்டாலும் கூட, ‘மகதி’ என்பது சிங்களம் அல்ல. புத்தகோசர் பௌத்தத்தை ‘தேசியமயமாக்க’ அல்லது குறுகிய வட்டத்திற்குள் அடக்க விரும்பியதால் ‘மகதியைத்’ தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, அவர் பௌத்தத்தை உலகளாவியதாக்க விரும்பியதாலேயே அப்படித் தேர்ந்தெடுத்தார். பாலி மொழிதான் உலகில் அறியப்பட்டிருந்தது என்று அவர் தவறாக நினைத்தார். உரைகளில் இருந்த குறுகிய வட்டத்திற்குள் அடங்கிய பிராகிருதத்திற்குப் பதிலாக, ஒரு ‘சர்வதேச’ மொழியான பாலியை அவர் கொண்டுவர விரும்பினார். அவரது செயலானது, ‘விநய பிடகத்தில்’ புத்தர் போதித்த போதனையின் விளைவை ஏற்பதாகக் கருதலாம் (மகாவக்கா II) (Mahāvagga, Chapter II). அதன்படி, விடுதலை பெற்ற துறவிகள் பலரின் நலனையும், பலரின் மகிழ்ச்சியையும் மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் முழு உலகத்தின் மீதும் கருணை காட்ட வேண்டும். மனிதர்கள் மற்றும் தெய்வங்கள் இரு தரப்பினரின் மகிழ்ச்சியையும் மனதில் கொள்ள வேண்டும். எனவே, புத்தகோசரின் படைப்பில், ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிய பௌத்தத்தைக் கட்டமைப்பதற்கு எந்த ஆதரவும் அங்கு இல்லை. சிங்கள பௌத்தம் என்ற கருத்தாக்கம், அவரது படைப்பின் சாரத்தையும் புத்தரின் படைப்பையுமே கேள்விக்குள்ளாக்குகிறது.

தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் குடிபெயர்வோருக்கு  ஒரு மாறாத இலக்காக இத்தீவு (இலங்கை – ஈழம்) இருந்தது என்பதை இந்தத் தீவின் வரலாறு காட்டுகிறது. இலங்கையின் முதல் அரசன் என்று கூறப்படும் விஜயனின் சித்தரிப்பில் சேர்ந்தே வரும் வட இந்தியப் படையினர், தென்னிந்தியாவின் பகுதிகளிலிருந்து வந்த தமிழ் வேளிர் தலைவர்களைப் போலவே, சிற்றினங்களிடையேயான உள்நாட்டுப் போராட்டங்களின் விளைவாக உருவானவர்கள். இவர்கள் ‘பிராகிருதம் – எலு – சிங்களம்’ பேசும் மக்களுடனோ அல்லது தமிழ் பேசும் மக்களுடனோ ஒன்றிணைக்கப்பட்டனர். பல்லவருக்கு முற்காலம் முந்தையதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், சோழப் பேரரசுக் காலம் பிந்தையதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. 

புத்தகோசரின் மொழிகள் பற்றிய விளக்கத்திற்கும், மகாவம்சத்தைத் தொகுத்தவரின் உலகில், பௌத்தத்தின் நிலை குறித்த பார்வைகளுக்கும் இடையில் ஒரு வேறுபாட்டை என்னால் காண முடியவில்லை. உலகிற்கு ‘தம்மம்’ எனும் விளக்கை ஒளிரச் செய்வதற்காக அந்தத் தீவு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்துப் பிந்தையவருக்கு ஒரு சிறப்புப் பார்வை இருந்தது என்பது உண்மைதான். ஆனால் பௌத்தம் என்பது சிங்களவர் என்ற ஒரே இனக்குழுவின் மதம் மட்டுமே என்ற பார்வை எதுவும் அங்கு இல்லை.

காலனித்துவத்திற்கு முந்தைய தனித்த தீவின் வரலாற்றிலேயே கூட, தமிழர்களுக்கு எதிரான பல பதிவு செய்யப்பட்ட உடல்ரீதியான துன்புறுத்தல்களும், வாய்மொழிச் சீற்றங்களும் உள்ளன என்பதும் மீண்டும் உண்மைதான். இருப்பினும், வம்ச மரபை ஆராய்ந்தால், இந்த எதிர்மறையான மனப்பான்மைகளும் செயல்களும் தமிழர்களில் ஒரு ‘குறிப்பிட்ட பிரிவினருக்கு’ எதிராகவே செலுத்தப்பட்டன என்பது தெரியவருகிறது. இவை இயல்பான காரணங்களின் அடிப்படையிலோ அல்லது பௌத்தத்திற்கு எதிரான வெளிப்படையான அல்லது அழிவுச் செயல்பாட்டுக்குரிய தப்பெண்ணத்தின் காரணமாகவோ இருந்தன எனலாம். அவர்கள் பௌத்த நிறுவனங்களை அழித்த ‘மிச்சா தித்தி’ (micchā diṭṭhi), அதாவது ‘தவறான நம்பிக்கையாளர்கள்’ என்று அழைக்கப்பட்டனர் (micchādiāṭṭhi என்றே மூலத்தில் அச்சாகியுள்ளது. அச்சில் தவறாக இருக்கும் வாய்ப்புள்ளது. மொ-ர்). ‘துச்சிலா’ (dussila), அதாவது ‘தீயவர்கள்’ என்றும் வகைப்படுத்தப்பட்டதை நாம் மேலே கண்டோம். அவர்கள் ‘பசுமா’ (pasumā), அதாவது ‘விலங்கைப் போன்றவர்கள்’ என்று வகைப்படுத்தப்பட்டனர். ஆனால் இந்தக் குணாதிசயங்கள் அனைத்தும் பௌத்த எதிர்ப்பு நடவடிக்கைகளையே குறிக்கின்றன. இருப்பினும், ஒரு பௌத்தராக இருப்பது என்பது, ஒரு மத நம்பிக்கையைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் மிக அதிகம் என்பதை நாம் உணர வேண்டும். ‘மதம் மட்டுமே’ என்ற கருத்து அப்போது இருக்கவில்லை. புத்தசாசனமே அரசின் மதமாக இருந்தது. அது அரசாட்சியின் கொள்கையாக இருந்தது. பௌத்த எதிர்ப்பாளராக இருப்பது என்பது அரசின் எதிரியாக மாறுவதைக் குறிக்கிறது. நான் ஒரு ஸ்தூபியை அழித்து, பிட்சைப் பாத்திரத்தைக் கொள்ளையடித்து, புனிதப் பல்லை உடைத்தால், நானும் அரசின் எதிரியாகிவிடுவேன். ‘வம்ச’ மரபில், சமயவாதியையும் அரசியல்வாதியையும் பிரிக்க முடியவில்லை. இது பௌத்த எதிர்ப்புச் செயல்பாடுகள் குறித்த அவரது மதிப்பீட்டைப் பாதித்தது. நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், பௌத்த எதிர்ப்பாளராக வகைப்படுத்தப்படுவது எளிதாக இருந்தது. அரசுக்கு எதிரான ஒவ்வொரு செயலும் பௌத்த எதிர்ப்புச் செயலாகக் கருதப்பட்டது. இந்தக் கருத்து இன்றும் பாரம்பரிய மற்றும் மரபுசார்ந்த தீவிர, மற்றும் போர்க்குணமிக்க பௌத்தக் குழுக்களிடையே வாழ்ந்து வருகிறது. 

தீவிலிருக்கும் காலனித்துவத்திற்கு முந்தைய பௌத்த அரசு அமைப்புகள் தமிழர்களுடன் தொடர்ந்து ஒத்துழைப்பில் இருந்தன. ஆனால் பௌத்த எதிர்ப்புத் தமிழர்களுடன் ஒத்துழைப்பில் இருக்கவில்லை.  பாண்டியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுடன் இந்த ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் பௌத்த எதிர்ப்பாளராயிருந்த பாண்டியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுடன் இந்த ஒத்துழைப்பு இருக்கவில்லை. காலனித்துவ ஆற்றல்கள் பௌத்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதால், அவர்களுடன் எண்ணற்ற மோதல்கள் ஏற்பட்டன. தமிழ் பேசும் பௌத்தர்கள் உட்பட பௌத்தர்கள், தீவில் தலைமுறை தலைமுறையாகத் ‘தம்மத்தை’ விளக்காகக் கடத்தும் ஒரு சிறப்புமிக்க விதியைத் தாங்கள் பெற்றிருப்பதாக உணர்ந்தனர். கிறிஸ்தவத்தின் ஊடுருவலைத் தங்கள் ஆணைக்கு ஓர் அச்சுறுத்தலாகக் கருதுவதற்கு அவர்களுக்கு நல்ல காரணங்கள் இருந்தன.

மகாவம்சத்தில் விவரிக்கப்பட்ட புத்த அரசு பற்றிய கருத்தியல், மதம் என்ற வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகவும்  மதங்களின் இடையேயும் உள்ளேயும் விலக்குகின்ற, சேர்க்கின்ற ஒன்றாகவும் மாறியது என்பதே இந்த நாணயத்தின் மறுபக்கம். இது காலனித்துவத்திற்கு முன்பான கட்டத்தில் நடந்தது. ஆனால்  தமிழ் எதிர்ப்பு நிலையில் இது நிகழவில்லை. சிலபோது இது சைன எதிர்ப்பு, சைவ எதிர்ப்பு, கூடவே மகாயான எதிர்ப்பாக இருந்தது. உடல் வகைத் துன்புறுத்தல், அழித்தல் என்றளவுக்கும் இருந்தது. தீவில் பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாக மகாயானம் இருந்தபோது இப்படியிருந்தது என எடுக்கலாம். இருப்பினும், இது எப்போதும் எல்லா இடங்களிலும் இப்படி நடந்திருக்கவில்லை. இந்த ‘வம்சக்’ குறுங்குழுவாதச் சித்தாந்தம் முழுவதுமாகப் பரவியிருக்கவில்லை. குறிப்பாக அரசுகளில் பரவியிருக்கவில்லை. அங்கே நாம் பௌத்த ஆட்சியாளர்களின் பயன்வழிசார்  – பயன்கருதிய பொறுக்கும் தன்மையைப் பார்க்க இயலும். 

பெரிய குழுக்களாக வரும் தமிழ்ச் சைவத் துணைப்படையினர், குடியேறிகள், வணிகர்களில் அரசு சார்ந்திருந்தது. அரசுகள் சைவத்தின் புனிதத் தலங்களுக்கு அரச ஆதரவையும் கூட வழங்கினர். ‘மறுகரையில்’ சோழர்களும்கூட இந்தப் பொறுத்துக்கொள்ளும் தன்மையைக் கடைப்பிடித்தனர். கைக்கொள்ளப்பட்ட இந்தப் பயன்வழிசார் பொறுக்கும் தன்மையின் காரணமாகச் சைவராலும் பௌத்தராலும் இந்தக் காலங்களில் இணைந்து வாழ முடிந்தது. பிரிவினைவாதத்தைத் தவிர்த்த கருத்தியல் அர்ப்பணிப்பும், நடைமுறை சார்ந்த பொறுக்கும் தன்மையும் ஆகிய இரண்டு உச்சநிலைகளுக்கு இடையில்தான், இரு கரைகளிலும் உள்ள ஆட்சியாளர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றனர். இந்த நடைமுறை சார்ந்த ஏற்கும் தன்மைக்கும், மனித உரிமைகளை அங்கீகரிப்பதற்குமோ அல்லது பொறுக்கும் தன்மைக்குமோ எந்தத் தொடர்பும் இல்லை என்பது சொல்லாமலேயே விளங்கும். அது எந்த நேரத்திலும் பிரிவினைவாதத்தால் மாற்றப்படக்கூடிய ஒரு நடைமுறைவாதமே தவிர வேறில்லை. 

தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதவர்களுக்கும் இடையிலான துருவப்படுத்தும் (பிரித்து வைக்கும்) முனைப்பு, சூளவம்சம் என அறியப்படும் தொடர் வரலாற்றில் இன்னும் வண்ணமயமாக வெளிப்படுத்தப்பட்டது. சூளவம்சம் வரலாற்றின் ‘இடைக்காலத்தைப்’ பெரும்பாலும் உள்ளடக்கியது. தமிழர் பொதுவாகப் பௌத்தத்திற்கு எதிரானவர்கள் என்ற கருத்தும் சூளவம்சத்தின் முக்கியக் கருப்பொருள்களில் ஒன்றாகும். இந்தக் கருத்து, பொதுவாகத் தமிழர்கள் பௌத்தத்திற்குப் புறம்பானவர்கள் என்ற கருத்தின் முன்னோடியாகும். பெருநிலத்திலிருந்து (தமிழகத்திலிருந்து – மொ-ர்) கடுமையான படையெடுப்புகளை நிகழ்த்திய தமிழர்களைப் பற்றிய மெய்மைகளை அறிந்த தற்போதைய வரலாற்று ஆய்வருமேகூட இந்த மேற்படிக் கருத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்ட முடியும். 

இந்தக் கருத்துத் தமிழர்களின் போர் மற்றும் மோதல்களின் உறுதியான மற்றும் தொடர்ச்சியான பட்டறிவின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. சூளவம்சத்தில் அந்தப் பட்டறிவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, தமிழர்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்கள் என்ற பொதுவான பார்வையாக அது மாற்றப்பட்டது. இந்தக் கருத்தின் தலைகீழ் நிலை என்னவென்றால், தீவில் பௌத்தம் என்பது பிராகிருதம் – எலு – சிங்களம் பேசும் மக்களால் மட்டுமே கடத்தப்படுகிறது என்பதாகும். உண்மையில், ஆய்வு அறிஞர்கள் இந்தத் தலைகீழான நெறிமுறைச் செய்தியை இருபதாம் நூற்றாண்டில் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மேலும் உயர்த்தினர். அது அவர்களால் வரலாற்றுக் காலத்தின் தொடக்கத்திற்குக் காலப்பொருத்தமின்றி முன்வைக்கப்பட்டது. 1970 ஆவது ஆண்டில் வெளியான செனரத் பரணவிதானாவின் ஒரு படைப்பு, “இலங்கையில் உள்ள பௌத்தம், தொன்மையான காலங்களிலிருந்தே, இந்தத் தீவில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட ஒரு சிங்கள பௌத்தமாக மாறியிருந்தது” என்று கூறுகிறது.8 செனரத் பரணவிதான தனது நீண்ட பணி வாழ்க்கை முழுவதும் இந்தக் கேள்வியில் நிலைத்த தன்மையுடன் இருந்தார். பிராமி, பிராகிருதக் கல்வெட்டுகளில் தமிழ் அடித்தளம் ஒன்றும் இல்லை என்பதை செனரத் பரணவிதான மறுத்ததன் மூலம், பௌத்தத்தின் மீதான அவரது சிங்களமயமாக்கல், குறுகிய மனப்பான்மையாக்கல் மற்றும் வகுப்புவாதமாக்கல் கூட வெளிப்படுத்தப்பட்டன. 

இவை அனைத்துக்கும் மேலாக, இருபதாவது நூற்றாண்டில் சிங்களவர்கள் ஒரு மொழிக் குழுவாக மட்டுமல்லாமல், ஓர் இனமாகவும் கருதப்பட்டனர். பௌத்தம் ஓர் இனத்தின் மதமாக மாறியது. இதற்கு நேர்மாறாகவும் சமச்சீராகவும், சைவம் தமிழ் இனத்துடன் தொடர்புடையதாக இருந்தது. மதம் என்பது, மாற்ற முடியாத தோலின் நிறத்தைப் போல, ஓர் இனக்காரணியாக மாறியது. 

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தனித்த பிராகிருதக் கல்வெட்டுகள், பௌத்தர் மற்றும் மொழிக் குழுக்களைக் குறிப்பிடுகின்றன. ஆனால் இனங்களின் முகவர்களைக் குறிப்பிடவில்லை. மொழிக்கும் மதத்திற்கும் இடையில் எந்தச் சித்தாந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் அவை காட்டுகின்றன. பிராகிருதம் என்ற பொது மொழியை அடிப்படையாகக் கொண்ட இரு மொழிக் குழுக்களின் உறுப்பினர்களும் பௌத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர். எனவே, கல்வெட்டுகளின் கண்ணோட்டத்தில், சிங்கள பௌத்தத்தைப் பற்றிப் பேசுவதுபோல ஒரு சிறப்புத் தமிழ் பௌத்தத்தைப் பற்றிப் பேசுவதும் கால முரண்பாடாகவே இருக்கும். இந்தக் காலத்தில் பௌத்தம் இன்னும் வகுப்புவாதத்திற்கு உள்ளாக்கப்படவில்லை.

இந்தத் தீவில், முதலாம் உதய மன்னனின் (792-797, 797-801) ஆட்சிக் காலத்தில் தமிழ்ப் பௌத்தத் துறவிகள் ஒரு தனித்த சமூகமாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர் என்பதற்கும் ஒரு சான்று உள்ளது. சூளவம்சத்திலிருந்து (49:24), முதலாம் உதய மன்னருடைய பட்டத்தரசி, ‘ஜெயசேனபப்பதா’ விகாரத்தை ஒரு தமிழ்ப் பிக்கு சங்கத்திடம் ஒப்படைத்தார் என்பதை நாம் அறிகிறோம். 

“Kāretvā Jayasenaṃ ca pabbatam Dāmilassa adā bhikkhusaṅghassa”9

“.. மற்றும் காரணமாக ஜெயசேனபப்பதா (விஹாரா) கட்டப்பட, அவள் ஒப்படைத்தார் (அது) தமிழ் பிக்கு சங்கா…”

(ஜெயசேனவைக் [மடம்/ மலைவாசஸ்தலம்] கட்டிய பின்னர், அதை பிக்கு சங்கத்தைச் சேர்ந்த தமிழ் [துறவிக்கு] அர்ப்பணித்தார்.)

தமிழர்கள் பௌத்தர்களாக இருக்க முடியாது என்ற, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போதைய ஆதிக்க நெறிக்கு, இந்த உரை முரண்படுகிறது. குறைந்தளவேனும் சில தமிழ்ப் பௌத்த பிக்குகள், தாங்கள் தமிழ் பேசியதன் அடிப்படையில் தனியாக வாழ்ந்தனர் என்பதை இது உணர்த்துகிறது. ஒருவேளை, தமிழர்களிடையே சமயப் பிரசாரம் செய்யக்கூடிய ஒரு தமிழ்ப் பௌத்த சங்கத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறப்புத் தகுதி தேவைப்பட்டதாலோ என்னவோ இப்படி இருந்திருக்கலாம். 

பிந்தைய அனுராதபுரக் காலத்தில், அதாவது சோழர் மற்றும் பண்டியர் பேரரசு காலத்துடன் ஒத்துப்போகும் வரலாற்றுக்காலத்தில், ‘இரண்டுவகைக் குழுக்களுக்கும்’ பௌத்த அரசுகளிற்கும் இடையே ஒரு தொடர்பு நிறுவப்பட்டது. ‘இவ்விரண்டு வகைக் குழுக்களும்’ தமிழ் வணிகர்களும் துணைப்படையினருமே ஆவர் (முன்சென்ற இந்த இரண்டு வாக்கியங்கள் குறித்த மொழிபெயர்ப்புச் சார்ந்த தெளிவான விளக்கங்களைத் தவறாமல் இறுதிக் குறிப்புப் பகுதியில் படித்துப் பார்க்கவும். மொ-ர்)10 அவர்கள் அரசின் அமைப்புகளைக் கட்டுவதிலும் ஈடுபட்டிருந்தனர். அவற்றுள் பௌத்த அமைப்புகளும் அடங்கும். தமிழ்க் கல்வெட்டுகள் பல, அவர்களின் ஈடுபாட்டிற்குச் சான்றாக விளங்குகின்றன. மேலும், தமிழர்கள் பௌத்த அரசின் சித்தாந்தத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததையும் அவை காட்டுகின்றன.

பத்தாவது நூற்றாண்டில் இருந்து காணப்படும் தமிழ்ப் பதிவுகள் சோழப் பேரரசுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு வகைப் பௌத்தத்தைக் குறிப்பிடுகின்றன. இதை ஒரு சிறப்புத் தமிழ்ப் பௌத்தம் என்று சரியாக அழைக்க இயலும். இது பிராகிருதம் – எலு – சிங்களம் அல்லது பாலி மொழிகளில் அல்லாமல், தமிழில் பரப்பப்பட்டிருந்தது. சோழர்கள் இதைச் சித்தாந்த வகையாகவும் சடங்கு வகையாகவும் உருவாக்கினர். பௌத்தத்தை விளக்குவதற்குச் சைவச் சொற்களும் கருத்துகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதை, ‘ஈழத்திலிருந்து வந்த ஈழ சோழப் பெளத்தம்’ என்று அழைப்போம். இது தமிழர்களிடையே பௌத்தத்திற்கு ஒரு புதிய தொடக்கமாக இருந்தது. தமிழர்களிடையே இருந்த முற்கால பிராகிருத பௌத்தத்திற்கும் இந்த ‘ஈழ சோழப் பௌத்தத்திற்கும்’ எந்தத் தொடர்பும் இல்லை. போர்களில் கைப்பற்றப்பட்ட தீவினுடைய சில பௌத்த நிறுவனங்கள், கிழக்கில் உள்ள ராஜராஜப் பெரும்பள்ளியைப் போல, இந்த ‘ஈழ சோழப் பெளத்தத்தை’ நிறுவுவதற்கான மையங்களாக மாற்றப்பட்டன. 1978 ஆவது ஆண்டில் அல்வாப்பிள்ளை வேலுப்பிள்ளையால்11 முதலில் முன்மொழியப்பட்ட, ‘ஈழத்துப் பௌத்தம்’ என்ற ஒரு சிறப்புத் தொடர் மரபில் இருந்ததா என்ற கேள்வி நியாயமானது, மற்றும் அதற்கு ‘ஆம்’ என்று பதிலளிக்கப்படலாம். 

‘ஈழ சோழப் பௌத்தம்’ தன்னிறைவு பெற்றிருந்தது. போரினால் கைப்பற்றப்பட்ட ஒரு முன்னாள் சிங்கள – பௌத்தப் பகுதியில் இருந்த தமிழர்கள், அதனைத் தமிழ் மொழியில் பரப்பினர் என்ற பொருளில், அக்குறிப்பிட்ட தன்மையைக் கொண்டிருந்தது. அதன் கலைச்சொற்கள், சைவத்தை ஒத்திருந்தது என்ற பொருளிலும் அது ஒரு குறிப்பிட்ட தன்மையைக் கொண்டிருந்தது. பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் அழித்தாெழிப்பு அல்லது உள்ளிணைப்புக் காரணமாக ‘ஈழ சோழப் பௌத்தம்’ மறைந்துவிட்டதால், காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் ஈழத்தில் இருந்த தமிழர்களிடையே பௌத்தம் பற்றி மேலதிகமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

இன்று, தமிழர்கள் (இலங்கையைத்தான் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மொ-ர்) பௌத்தராக இருப்பது எளிதல்ல. ‘ஈழ சோழப் பௌத்தத்திற்குப்’ புத்துயிர் அளிப்பது பழைமைவாதமாகவே இருக்கும். அதைச் சிறப்பானதொரு ஈழப் பௌத்தமாக மாற்றுவது, சிங்களப் பௌத்தத்தின் தலைகீழ் மாற்றமாகவே இருக்கும். சிங்களப் பௌத்தத்திற்கான கதவு தமிழருக்கு மூடப்பட்டுள்ளது. ஏனெனில் தமிழர்கள் சிங்கள குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமான தகுதியைக் கொண்டிருக்கவில்லை. ‘வம்ச’ மரபில் உள்ள பாரம்பரிய பௌத்தத்திற்கான கதவைத் தமிழர்கள் கடந்து செல்ல விரும்புவதில்லை. மனிதநேயம் என்பது பௌத்தம் அல்ல. அது உலகளாவியது என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே, கடந்து செல்லக்கூடிய கடைசி வாய்ப்பான கதவு புத்தரின் போதனைகளுக்குத் திரும்புவதேயாகும். அவரின் அறவுரைகள் எல்லா மொழிகளிலும் விலங்குகளையும் மிருகங்களையும் நோக்கி அல்லாமல், பாலினம், வயது, இனம், வர்க்கம் அல்லது சாதி பேதமின்றி அனைத்து வகையான மனிதர்களையும் நோக்கியே இருந்தன.

Pauttamum Tamilum. Schalk, Peter. Sri Lankan Journal of South Asian Studies, No 7 2000/2001. University of Jaffna.


அடிக்குறிப்புகள்

1. பிராகிருதத்திலிருந்து சிங்களத்திற்கான வளர்ச்சியில் ஒரு மொழிப் படிநிலையாக ‘எலு’ என்ற சொல்லை நான் இங்கு பயன்படுத்துகிறேன். சமஸ்கிருதம் மற்றும் பிற அயல் கூறுகளிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்ட சிங்களம் என்ற தூயவாதப் பொருளில் நான் அதைப் பயன்படுத்துவதில்லை.

2. G. Obeyesekerc, A Meditation on Conscience, Occasional Papers I (Colombo: Social Scientists’ Association, 1988).

3. P. Schalk, “Landets söner. Om nutida buddhistisk historietolkning och konflikten mellan singhaleser och tamiler i Sri Lanka”, Häften för Kritiska Studier, 1, 19 (1986), pp.24-41. Also published in Chaos 4 (1985), 39-55.

4. This four fold refuge is mentioned by the Anagārika Dharmapāla but was later taken up by Madih ēPañña siha, by the Mahanāyka of the Amarapura Nikāya. Vide Vīra Carita. Anāgarika Dharmapāla tumā, Vol.1 (Nugegoda:Kurunāgala Taruņa Bauddha Samgamaya, 1985), p.22. For a comment on this vide P Schalk, “Lejonet och tigern. Kampen med symboler i Sri Lanka”, Svensk Religionshistorisk Tidskrift 2 (1986), pp.45-76, especially p.50.

5. P. Schalk, “Kette ohne Anfang und Ende. Die Welt der Fundamentalisten in Sri Lanka ist hermetisch gegen Kritik versiegelt”. Der Überblick. Zeitschrift für ökumenische Begegnung und internationale Zusammenarbeit. 33. Jahrgang. März 1997, pp.83-88 ld., “Twisted Cross: The Religious Nationalism of the German Christians”. Studia Theologica, Scandinavian Journal of Theology 52, 1, (1998), pp.69-79.

6. Saddharmalamkāraya, Maku|uvé SrI Piyarātnabhidhāna (Kolambam Di Gunasēna, 1971), p.550. 

7. Saddharmalamkāraya, p.550

8. S. Paranavitana, “Introduction”, IC 1, pp.cii.11

9. For a critical comment on the source see CvT, p.129, note 4 and R A L H Gunawardana, Robe and Plough. ‘Monasticism and Economic Interests in Early Medieval Sri Lanka’ (Tucson: The University of Arizona Press, 1979), p.47. The best reading of the Pāli is Geiger’s given above.

10. Dr. Peter.S இந்த இடத்தில் மூலத்தில் “two ‘m’s” என்று பயன்படுத்துகிறார். இரண்டு ‘m’ களும் mercenaries, merchants என்ற சொற்களில் வரும் முதல் எழுத்துகளாகும். அதனால் அந்தப் பகுதியில் ‘இரண்டு குழுக்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டது.

‘Mercenaries’ என்ற சொல்லுக்கு எந்தச் சொல் சரியாக அமையும் என்ற கேள்வி எழுந்தது. வரலாற்றுப் புவிச்சூழல் அமைவில், அந்த நேரத்தில் ‘துணைப்படை’ என்பதே சரியாக இருக்கிறது. தமிழின் ஆறுவகைப் படைகள் இருப்பதாகத் திருவள்ளுவர் படைமாட்சி அதிகாரத்தின் உரையில் பரிமேலழகர் குறிப்பிடுகிறார்.

(சுவடி: https://www.tamilvu.org/library/suvadi/s210/html/s2100276.htm). புறப்பொருள் வெண்பா மாலையில் தும்பைத்திணைப் பகுதியில், இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியத்தின் புறத்திணையியல் சூத்திரங்களில் (சூத்திரம்: 53) உரையாக நச்சினார்க்கினியர், இளம்பூரணர் ஆகியோர் இந்தப் படை வகைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

மூலப்படை: இது நாட்டின் மரபாக, தொடர்ந்தும் அரசனுக்கு விசுவாசமாக இருக்கும் முதன்மைப் படையாகும். கூலிப்படை: போர்க்காலங்களில் அந்த நேரத்தில் மட்டும் பணம் அல்லது கூலி கொடுத்துச் சேர்க்கப்படும் படையாகும். நாட்டுப்படை: நாட்டின் குடிமக்களிலிருந்து போர்ப் பயிற்சி கொடுத்துத் திரட்டப்படும் படையாகும். காட்டுப்படை: காடுகளில் வாழும் மறவர்கள் மற்றும் வேடர்களைக் கொண்டு அமைக்கப்படும் படையாகும். இவர்கள் காட்டில் நடக்கும் போர்களில் வல்லவர்கள். துணைப்படை: நட்பு நாட்டு அரசர்கள் போர்க்காலத்தில் உதவிக்காக அனுப்பி வைக்கும் படையாகும். பகைப்படை (மாற்றுப்படை): பகையிடமிருந்து பிரிந்து வந்து தஞ்சம் புகுந்தவர்கள் அல்லது போர்க்கைதிகளாகப் பிடிபட்டுப் பின்னர் அரசனுக்கு ஆதரவாகச் செயல்படும் படையாகும்.

11. A Veluppillai, “Language variations in Sri Lanka Tamil Inscriptions”, Journal of Tamil Studies (1978), p.80 [65-83].


இந்த மொழிபெயர்ப்பில் பின்வரும் கருவி உதவிகள் பெறப்பெற்றன:

Google (2026) Google Translate [Online tool]. Available at: google.com [Accessed various dates  in Aug 2026].

DeepSeek. (2026). DeepSeek (version) [Large language model]. https://www.deepseek.com [Accessed various dates in Aug 2026]

University of Madras. (1924–1936). Tamil Lexicon. Madras: University of Madras. 

Winslow, M. (1862). Winslow’s a comprehensive Tamil and English dictionary = தமிழ் ஆங்கில அகராதி. Asian Educational Services.



About the Author

வின்சென்ற் போல் சந்தியாப்பிள்ளை

வின்சென்ற் போல் சந்தியாப்பிள்ளை (B.Sc., M.A, M.Phil) அவர்கள், 1966 இல், யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள ஊறணி எனும் இடத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை இளவாலை என்றியரசர் கல்லூரியில் பயின்றார். உயர்கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கற்றார். கனடாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்திய தமிழியல் பட்டப்படிப்பில், 5 - 6 ஆண்டுகள் தமிழர் மெய்யியல், நாட்டார் வழக்காற்றியல், இலக்கியத் திறனாய்வு போன்ற பாடங்களைக் கற்பித்திருக்கிறார். கல்லூரிக் காலத்தில் நாத்திகம், மார்க்ஸிசம் போன்ற கருத்தியல்களில் ஈடுபாடு காட்டிவந்தார். பின்னர் கற்கைப் புலத்தினூடாக மெய்யியல், தத்துவம் என்பவற்றில் ஆர்வம் செலுத்தினார். தற்போது சோதிடம், ஹோமியோபதி, தமிழ்மொழி போன்றன தொடர்பாகக் கவனம் செலுத்தி வருகிறார்.