வல்லிபுரத்திற் பௌத்த சமயம்: சிவிராயனும் ணாகதீவும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
35 நிமிட வாசிப்பு

வல்லிபுரத்திற் பௌத்த சமயம்: சிவிராயனும் ணாகதீவும்

August 25, 2026 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

பொன்னேடும் பௌத்த படிமமும்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒரு பிரிவான வடமராட்சியிலே கரையோரமாக அமைந்திருக்கும் சிற்றூர்களில் ஒன்று வல்லிபுரம். அங்குள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகவும் பிரசித்தமானது வல்லிபுர ஆழ்வார் கோயில் என்னும் விஷ்ணு கோயில். அதன் ஆதியான வரலாறு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்து அரசர்களான ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்த வழிபாட்டுத் தலமாக அது விளங்கியது. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அந்தக் கோயிலை அழித்துவிட்டனர்.

பிரித்தானியர் ஆட்சியிலே சமய வழிபாட்டுச் சுதந்திரத்தை அனுபவிக்க முடிந்தமையாற் புராதனமான தலங்களில் ஆலயங்கள் மீண்டும் அமைக்கப்பட்டன. வல்லிபுர ஆழ்வார் கோயிலும் அதன் தற்போதைய தோற்றத்தைப் பெற்றுக்கொண்டது. ஆலயக் கட்டுமானங்களின் பொருட்டு நிலத்தை வெட்டியபோது சிறப்புமிக்க இரு பௌத்த சமயச் சின்னங்கள் கிடைத்தன. அவற்றிலொன்று வாசகம் பொறித்த பொன்னேடு. மற்றையது ஆளுயரமான பௌத்த படிமம். அவை ஆதி காலத்தில், கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஒரு பௌத்தப்பள்ளி அமைந்திருந்தமைக்கான அடையாளங்களாகும். அது நாகரின் செல்வாக்கு குடாநாட்டில் மேலோங்கியிருந்த காலம்.

ஆழ்வார் கோயிலுக்குரிய வளாகத்தில் 1936இல் ஒரு கிடங்கினை வெட்டியபோது ஒரு வாசகம் எழுதிய பொன்னேட்டைக் கண்டெடுத்தனர். அது பின்பு கொழும்பிற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதற்கு முன்பு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஆழ்வார் கோயிலைப் புனரமைப்பதற்கான வேலைகள் நடைபெற்றபோது கோயிலின் அமைவிடத்திற்கு 50 யார் தூரத்தில் ஒரு பெரியளவிலான புத்தர் படிமம் நிலத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டனர். அது 1902 வரை கோயிலின் வாகனச் சாலையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த வருடத்தில் அதனை அங்கிருந்து எடுத்துக்கொண்டுபோய் யாழ்ப்பாணத்துச் சுப்பிரமணியம் பூங்காவில் நிலைநிறுத்தினார்கள். தாய்லாந்து அரசர் அதைப்பெற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டதனாலே தேசாதிபதி பிளேக்கின் கட்டளைப்படி அதனைத் தாய்லாந்து மன்னரிடம் அனுப்பிவைத்தனர்.1

யாழ்ப்பாணத்திலே பெயர் எழுதிய உலோகப் பொருட்கள்

பொன்னேடும் புத்தர் படிமமும் தனிச்சிறப்பு வாய்ந்த சின்னங்கள். ஆதிகால யாழ்ப்பாணச் சமூக, பண்பாட்டு வரலாற்றுக்கு ஆதாரமான சின்னங்கள். அவற்றின் அம்சங்களைத் தனித்தனியாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மகாசேனனுக்கு முற்பட்ட காலத்தில் உலோகத்தில் அமைந்த பொருட்களிலே பெயர்களையும் வசனங்களையும் பதிவு செய்யும் வழக்கம் நாகரிடையில் மட்டுமே காணப்பட்டது. அவ்வாறான பல உருப்படிகள் யாழ்ப்பாணத்திலே கூடுதலாகக் கிடைத்துள்ளன. விளக்குகள், காசுப்பேழை, வழிபாட்டுச் சின்னங்கள் முதலானவை அவற்றுள் அடங்கும். அதனாற் பொன்னேடு பற்றிய புரிந்துணர்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்படுகின்றது. அது உலோகப் பொருட்களில் சொற்களைப் பதிவு செய்யும் பிராந்திய வழக்கின் அடிப்படையிலே பொன்னேட்டினை ஆராய வேண்டிய தேவையாகும். பொன்னேடு தவிர்ந்த அவ்வகையான பொருட்கள் எல்லாவற்றிலும் தமிழ்ச்சொற்களும் பெயர்களுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுவும் தமிழ்ப்பிராமி எழுத்துகளில் அவை அமைந்துள்ளன. இதனை இந்நூற்றாண்டு வரை எவரும் அறிந்திருக்கவில்லை. சென்ற நூற்றாண்டின் முடிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து வரலாற்றுத்துறை விரிவுரையாளர்களான செ. கிருஷ்ணாராசா, ப. புஷ்பரட்ணம் ஆகியோர் தமிழ்ப் பிராமி வடிவங்களிற் பெயர் எழுதிய கலவோடுகள் பெருந்தொகையானவற்றைக் கண்டெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வல்லிபுரத்திலே கடந்த 2000 வருடங்களாகத் தொடர்ச்சியாகக் குடியிருப்புகள் அமைந்திருந்தன என்பது பொன்னம்பலம் இரகுபதியின் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அங்கு கிடைத்த மிகப் புராதனமான தொல்பொருள் சின்னங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டிற்கு உரியவை. ஆழ்வார் கோயிலுக்கு அண்மையிலுள்ள மேட்டுநிலப் பகுதியிற் கல்லறையொன்றின் அழிபாடுகளுக்கிடையே ஈமத்தாழி இருப்பதைப் பற்றிய செய்திகள் 1972இல் வெளிவந்தன. அத்துடன் வல்லிபுரத்தில் அந்தப் பண்பாட்டின் அடையாளமான கரும்-செம் மட்கல வகைக்குரிய ஓடுகள் கிடைத்துள்ளன. அவற்றோடு தடித்த விளிம்புடைய மட்கலங்களும் அங்கு புழக்கத்தில் இருந்தன.2 வல்லிபுரத்தின் வரலாறு தமிழ்மொழி பேசிய நாகர் உருவாக்கிய குடியிருப்புகளுடன் ஆரம்பமாகின்றது. அவ்வாறான சூழ்நிலையின் அடிப்படையில் பொன்னேடு குறிப்பிடும் பௌத்தப்பள்ளியின் உற்பத்தியினை நோக்கமுடிகின்றது. முன்பு பொன்னேட்டின் வாசகத்தை விளக்க முற்பட்ட விற்பன்னர்கள் வரலாற்று அடிப்படையிலே பொன்னேட்டு வாசகத்தைப் புரிந்துகொள்வதற்கான வரலாற்றறிவுசார் தெளிவைப் பெற்றிருக்கவில்லை.

வல்லிபுரம் பொன்னேட்டின் வாசகம் இலங்கையில் வழங்கிய பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அது ஒரு கலப்பு மொழி. சாசனத்தின் வாசகம் ஒரு வசனமாக அமைந்துள்ளது. அது மென்மையான பொற்தகட்டில் நான்கு வரிகளில் நுண்ணிய கருவியினால் வெட்டப்பட்டுள்ளது.

சாசனங்களை வாசித்து சரியான வாசகத்தைப் பெறுவதற்கும் அதனைப் புரிந்துகொண்டு விளக்குவதற்கும் சில குறிப்பிட்ட ஆற்றல்களும் அனுபவங்களும் அவசியமானவை. அவற்றுள் முதலிடம் பெறுவது பன்மொழிப்புலமை. பிராகிருத மொழியைச் சரியாகப் படிப்பதற்குப் பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகியன பற்றிய அறிவு இன்றியமையாத தேவையாகும். தமிழ்மொழி வழங்கும் தமிழகம், ஈழம் ஆகிய தேசங்களிற் பிராகிருத சாசன வழக்கிலே தமிழ்மொழியின் செல்வாக்கு ஏற்பட்டுள்ளதால் அம்மொழி பற்றிய தெளிவான விளக்கமும் தேவைப்படும். தமிழ்ப் பிராமிச் சாசனங்களைப் படித்து, அவற்றைப் பலகோணங்களில் ஆய்வு செய்து, ஒரு பெருந்தொகுதியாக வெளியிட்ட ஐராவதம் மகாதேவன் இந்தத் தகைமையினை நிறைவாகப் பெற்றிருந்தார். அத்துடன் பிறரிடம் காணப்படாத மேதாவிலாசம் அவரிடம் காணப்பட்டது. வல்லிபுரம் பொன்னேட்டை அண்மைக்காலத்தில் நுட்பமாக ஆராய்ந்த பீற்றர் ஷல்க் மேலதிகமாகச் சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்றவர். எனவே, இவ்விருவரும் வெளிப்படுத்திய கருத்துகளை வரையறையாகக் கொண்டு பொன்னேடு பற்றிய விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கின்றோம்.3 அவற்றினாலே முன்பு தெளிவற்றுக் காணப்பட்ட சில விடயங்கள் பற்றிப் புதிய சிந்தனைகள் எழுகின்றன.

வல்லிபுரம் பொன்னேட்டின் வாசகத்தையும் அதனைப் பற்றிய விளக்கங்களையும் ஸெனரத் பரணவிதான முதன்முதலாக வெளியிட்டார்.4 இலங்கையிலுள்ள சாசனவியலாளரில் அவர் முதன்மையானவர்; இணையில்லாதவர்; பன்மொழிப் பண்டிதர். ஆயினும், சில பலவீனங்களின் காரணமாகச் சில வேளைகளில் அவரின் வாசகங்களிலே தவறுகள் வருவதுண்டு. விளக்கங்கள் வாசகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு வித்துவபூர்வமான பொதுநெறியாகும். பரணவிதான இந்த நெறியைச் சில சமயங்களில் புறந்தள்ளி விடுவதுண்டு. அவர் வல்லிபுரம் பற்றிக் கூறிய சில கதைகள் அவ்வாறானவை. மொழி வழக்குப் பற்றி அவர் சொன்ன விளக்கங்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. பொன்னேட்டின் வாசகம் ஆதிகாலச் சிங்கள மொழியில் அமைந்ததென்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஆதிகால யாழ்ப்பாணத்திற் சிங்களமே பேச்சுவழக்கு மொழியானது என்ற விசித்திரமான கருத்தினையும் அவர் வெளிப்படுத்தினார். அவர் இந்தச் சாசனத்தை விளக்க உரைகளோடு வெளியிட்ட சமயத்தில் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கு முன் யாழ்ப்பாணத்தில் எழுதப்பெற்ற வேறெந்தச் சாசனம் பற்றியும் எவரும் அறிந்திருக்கவில்லை.

பொன்னேட்டின் வாசகத்தையும் அதன் பொருளையும் விளக்குவதற்குப் பரணவிதான வெளியிட்டவற்றை நோக்குவது அவசியமாகும். அவர் உருவாக்கிய வாசகமும் அதன் மொழிபெயர்ப்பும் மேல் வருவனவாகும்:

1. ஸித மஹரஜ வஹயஹ ரஜேஹி அமெதெ

2. இஸிகி3ரய நகதி3வ பு3ஜமெணி

3. வ3டகர – அதநெஹி பியகு3ஹ திஸ

4. விஹர கரிதெ

“நன்மை உண்டாகுக! மகாராசனாகிய வஹயவின் ஆட்சியில் நாகதீவு உடையானாக இஸிகிராயன் இருக்கிறபொழுது, ப3டகர – அதநவிலே பியங்கு திஸ விகாரையினைக் கட்டுவித்தார்.”

இந்த வாசகத்தில் ‘வஹய, இஸிகி3ரய, பியங்கு திஸ’ என்னும் மூவரின் பெயர்கள் காணப்படுகின்றன. அவர்களில் முதலாவது பெயரை உடையவன் அரசனொருவன். அது மகாராஜன் என்ற அவனது பட்டப்பெயரால் உணரப்படும். இரண்டாவது நபராகக் குறிக்கப்பெற்றவன் நாகதீவில் ஆட்சியதிகாரம் பெற்றவன். ‘வோ4ஜக’ என்பது அவனுடைய பதவிப்பெயர். ‘வோ3ஜக’ என்பது பிராகிருத மொழிப்பெயர். பதவிநிலையைக் குறிக்கும் பெயர். தென்னிந்திய தொல்லியல் விற்பன்னராகிய இரா. நாகசாமி அதனை ‘உடையான்’ என்று மொழிபெயர்த்துள்ளார். எனவே, ‘இஸிகிரய’ எனப் பரணவிதான அடையாளங்கண்ட பெயரையுடையவன் நாகதீவில் அதிகாரம் கொண்டிருந்தான் என்று கொள்ள முடிகின்றது. இச்சாசனம் குறிப்பிடும் மூன்றாவது பெயர் விகாரத்தை அமைத்தவருக்கு உரியது என்பது பரணவிதானவின் விளக்கம். ஆயினும், அது விகாரத்தின் பெயரின் அம்சமானது என்பது பீற்றர் ஷல்க்கின் கருத்தாகும். அது எமக்கும் உடன்பாடானது.⁵

சாசன வாசகத்தில் ஏற்பட்ட தவறுகள்

பரணவிதான வெளிப்படுத்திய சாசன வாசகத்தில் மூன்றிடங்களிற் பிழைகள் உள்ளன. அவை பொருள்மாற்றம் ஏற்படுத்தக்கூடியவை. முதலாவதாக, முதலாம் வரியிலுள்ள சொல்லொன்றை ‘ரஜேஹி’ என அவர் அடையாளங்கண்டுள்ளார். அதனை அவர் ‘அரசனது காலத்தில்’ என்று விளக்குகின்றார். ஆயினும், அவ்வாறு கொள்வதற்கான முறையிலே சாசனக்குறிப்பு அமைந்திருக்கவில்லை. அதில் ‘ரஜஹ’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அது ‘ரஜ’ என்ற சொல்லுடன் ‘ஹ’ என்ற வேற்றுமை உருபு கூடி அமைக்கப்பட்டது. எனவே ‘அரசனுடைய’ என்பதுதான் அதன் பொருள். அது அமத (அமாத்ய) என்ற பட்டப்பெயருக்கு முன் வருவதால் சாசனம் அரசனது அமாத்தியன் (அமைச்சன்) ஒருவனைப் பற்றியது என்பது உணரப்படுகின்றது.

பரணவிதானவின் வாசகத்திலுள்ள இரண்டாவது பிழை ‘ணகதி3வ’ என அதில் அமைந்துள்ள சொல்லை ‘நகதி3வ’ என அடையாளங் கண்டமையாகும். அவரின் வாசகத்திலுள்ள மூன்றாவது தவறு நாகதீவின் அதிபனது பெயரை ‘இஸிகிரய’ என அடையாளங் கண்டமையாகும்.

வல்லிபுரம் பொன்னேடு பற்றிக் கருத்துரை வழங்கிய பிரபலமான ஆய்வாளர்களான பேராசிரியர்கள் ஆ. வேலுப்பிள்ளை, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இருவரும் பரணவிதானவின் வாசகத்திலுள்ள குறைபாடுகளை அறிந்திருக்கவில்லை. அதனால் சாசன வாசகத்தைப் பற்றிய விளக்கங்களைச் சொல்ல முற்பட்டவிடத்துச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டனர்.

யாழ்ப்பாணத் தீபகற்பம், அதனையடுத்துள்ள தீவுகள் என்பவற்றை நாக தீப என்று மகாவம்சம் முதலான பாளி நூல்களிற் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பிராந்தியம் நாகதீவு எனத் தமிழில் வழங்கியது என்பதை மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் மூலமாக அறியமுடிகின்றது.

புராதனமான தமிழ் நூல்கள் சில நாகதீவை நாகநாடு என்று குறிப்பிடுகின்றன. பொன்னேடு பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளதால் அதில் ‘நாக3தீ3ப’ என்ற பெயர் ‘நக3தி3ப’ என்னும் வடிவத்தையே பெற்றிருக்க வேண்டும். ஆனால், ‘ணகதி3வ’ என்றே பொன்னேட்டில் எழுதப்பட்டுள்ளது. பெயரின் நான்கு எழுத்துகளில் மூன்று எழுத்துகள் மாறுபட எழுதப்பட்டுள்ளன. முதலாவது எழுத்து ‘ந’ என்பதற்குப் பதிலாக ‘ண’ என்றே குறிக்கப்பெற்றுள்ளது. இதனைப் பரணவிதான அவதானிக்கவில்லை. பொன்னேட்டிலுள்ள ‘ண’ (I) என்னும் பிராமி வடிவத்தை அவர் ‘ந’ (⊥) என்று பிழையாக அடையாளங்கண்டுள்ளார். பரணவிதானவின் வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர்களும் இதுவரை அதனை அவதானிக்கவில்லை.

‘நாக3தீ3ப’ என்ற பிராகிருதப் பெயரிலுள்ள ‘க3’ (∧) என்னும் மெல்லின எழுத்தினைப் பொன்னேட்டில் வல்லினமாக ‘க’ (+) என்று எழுதியுள்ளனர். ஈற்றெழுத்தான ‘ப’ (u) என்பதை இடையினமான ‘வ’ என்று எழுதியுள்ளனர். எனவே, பொன்னேட்டில் வரும் ‘I+C△’ (ணகதி3வ) என்னும் வடிவம் ‘⊥∧Cu’ (நகதி3ப) என்னும் பிராகிருதப் பெயரிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாகும். ஆயினும், வேலுப்பிள்ளையும் லெஸ்லி குணவர்த்தனவும் இவ்வாறான மாற்றம் தமிழ்மயமாக்கத்தின் விளைவாகும் என்று கருதினார்கள். அவர்களுடைய விளக்கத்தில் ஓர் அடிப்படைப் பிரச்சினை உண்டு. பிராகிருத மொழியில் எழுதிய ஆவணமொன்றிலே பிராகிருத வடிவமான பெயரொன்று எவ்வாறு தமிழ்மயமாக்கம் பெறும்? ஒரு பெயரின் தமிழ் வடிவமே இத்தகைய ஆவணத்திலே பிராகிருதமயமாக்கம் பெற்றிருக்க வேண்டும். குடாநாட்டின் தமிழ்ப் பெயர் நாகதீவு என்று முன் இங்கு கவனித்தோம். ஆதியில் அந்தப் பெயர் ‘ணாகதீவு’ என்ற வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்ப் பிராமியிற் பிற்காலத் தமிழில் நாகன் என்று சொன்ன பெயரை ‘ணாகன்’ என்றே மாறுபாடின்றி எழுதியுள்ளனர். ‘வேள் ணாகன், வேள் ணாகன் பொலம்’ என்னும் தொடர்கள் அதற்கான உறுதியான ஆதாரங்கள் ஆகும். இதுவரை கவனித்தவற்றின் அடிப்படையில் நோக்குமிடத்து ‘ணாகதீவு’ என்னும் தமிழ்ப் பெயர் ‘ணகதி3வ’ என்று பொன்னேட்டிலே பிராகிருதமயமாக்கம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அக்காலத்தில் தமிழ்மொழி பேசிய நாகர் பரந்தும் செறிந்தும் வாழ்ந்தமையால் ‘ணாகதீவு’ என்னும் நாட்டுப் பெயர் உருவாகியது. அந்தப் பெயர் பொன்னேட்டிலே பிராகிருதமயமாகி வருகின்றமை கவனித்தற்குரியது.

நாகதீவிற் சிவிராயன் என்னும் பெயருடைய ஒருவன் அதிகாரம் பெற்றிருந்தமை பொன்னேட்டின் மூலம் புலனாகின்றது. அது பிராகிருதமயமாகி ‘ணகதி3வ’ (‘I+C△’) என்னும் வடிவத்தைப் பெற்றுள்ளது.

சிவிராயன்

நாகதீவில் உடையானாக விளங்கிய பிரதானியின் பெயரைப் பரணவிதான ‘இஸிகி3ரய’ என அடையாளங் கண்டுள்ளார். ஆனால், பொன்னேட்டிற் பெயர் வேறுவிதமாகவே அமைந்துள்ளது. ‘இஸிகி’ என்பது வழக்கில் இல்லாத பெயர். இது மொழியியல் அடிப்படையில் விளக்கமுடியாததும் பொருளற்றதுமாகும். ஆயினும், சாசனம் பற்றி இதுவரை கருத்துரை வழங்கியவர்கள் எல்லோரும் பரணவிதான உருவாக்கிய இந்தப் பெயர் வடிவத்திலே தவறுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளவில்லை. பொன்னேட்டில் இப்பெயரின் மூன்றாவது எழுத்து ‘வி’ என்பதை வெளிப்படுத்தும் கோலத்திற் காணப்படுகின்றது. எனவே, ‘இஸிவிரய’ என்பதே பெயரின் உண்மையான வடிவமாகும். இப்பெயரின் இறுதியில் வரும் ‘ராய’ என்ற சொல் பிராகிருதச் சொல்லன்று. அதனை உணர்ந்துகொண்ட பரணவிதான ‘இஸிகிரய’ என்ற பெயர் அசாதாரணமானது என்று கூறுவார். எவ்வாறு இந்த அசாதாரணமான நிலை ஏற்பட்டது என்பதை விளக்குவதற்கு அவர் முற்படவில்லை.

‘ரய’ என்பது ‘ராயன்’ என்ற சொல்லின் பிராகிருத வடிவமாகும். அது பிராகிருத மயமாகியபோது தமிழ்ப் பிராமிக்குச் சிறப்பாகவுள்ள ‘ன்’ என்ற எழுத்து மருவிவிட்டது. இப்பெயரின் முதலெழுத்தாகக் கொள்ளப்படும் ‘இ’ எவ்வாறு பெயருடன் இணைந்து கொண்டது? அதனைச் சுட்டெழுத்தாகக் கொள்ளுமிடத்துப் பிரதானியின் பெயர் ‘ஸிவிராயன்’ என்றாகிவிடுகின்றது. அது சிபிச்சக்கரவர்த்தியினை நினைவுறுத்துகின்றது. சிபி பற்றிய கதைகள் ஆதிகாலப் பரதகண்டத்திற் பிரசித்தமானவை. அவற்றை மகாபாரதம், மகாபுராணங்கள் முதலானவற்றிலே காணலாம். பௌத்த ஜாதகக்கதைகளிலும் சிபி அரசனுக்குச் சிறப்பிடம் உண்டு. ‘சிவி ஜாதகம்’ என்ற பெயரில் வழங்கும் கதை ஒன்றுண்டு. எனவே, சிவி என்பது நாகதீவின் அதிபனுக்குரிய இயற்பெயர் என்று கொள்வது பொருத்தமானது. அது ராயன் என்ற கௌரவப் பெயருடன் இணைந்து சிவிராயன் என்றாகிவிட்டது. இச்சாசனத்தை எழுதியவர்கள் பிராகிருதமொழி மரபிற்கு ஏற்றவாறு அதனை ‘ஸிவிரய’ என்று மாற்றிவிட்டனர்.6 பெயருக்கு முன்வரும் ‘இ’ என்ற எழுத்தைப் பெயரின் முதல் எழுத்தாகப் பரணவிதான கொண்டதன் காரணமாகவே பிரதானியின் பெயர் பற்றிய சங்கடம் ஏற்பட்டுள்ளது. ‘இ’ என்ற எழுத்தைத் தவிர்த்துச் சுட்டெழுத்தாகப் பார்க்குமிடத்து ‘ஸிவிராய(ன்)’ என்பது இயல்பான பெயராகிவிடுகின்றது. அதனால் பொன்னேட்டின் வாசகத்தை எளிதிற் புரிந்துகொள்ள முடிகின்றது.

‘பு₂ஜமெனி’ என்ற சொல் அவனைப்பற்றி வருவதால் ‘ஸிவிராய(ன்)’ ‘வோ4ஜக’ என்ற பிராகிருத மொழியில் குறிப்பிடக்கூடிய பதவிநிலையைப் பெற்றிருந்தவன் என்பது உய்த்துணரப்படும். வசபனின் காலத்துக் கல்வெட்டொன்றிலே கிழக்குப் பிராந்தியத்தில் ‘அமத, வோ4ஜிக’ என்னும் பட்டங்களைப் பெற்று அதிகாரம் செலுத்திய ஒருவனைப் பற்றிச் சொல்லப்படுகின்றமையும் கவனித்தற்குரியது. அரசனொருவனின் மேலாதிக்கத்தைச் சாதுரியமாக ஒப்புக்கொண்டு தங்கள் உரிமைகளையும் அதிகாரங்களையும் சுயமாக வைத்துக்கொண்ட வேளிரான சிற்றரசர்களை ‘அமத, வோஜக’ என்ற பிராகிருத மொழிப் பட்டப்பெயர்களாற் குறிப்பிட்டனர் என்று கருதலாம்.

பொன்னேடு எழுதுவதற்கு முன்பு, பல நூற்றாண்டுகளாக வேள் என்னும் பட்டம்பெற்ற நாகரான சிற்றரசர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்தமைக்கான சான்றுகள் மிக அண்மைக் காலத்திற் கிடைத்துள்ளன. வேளிர் ஆட்சிமுறை பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களின் குடியிருப்புகள் மூலமாகவே தோன்றியது. வேள் ஒருவனின் சடலத்தை அடக்கஞ்செய்த ஆனைக்கோட்டையில் 1980இல் கா. இந்திரபாலா, பொ. இரகுபதி முதலானோர் அகழ்வாய்வு செய்த கல்லறையில் ‘கோ வேத(ன்)’ என்ற சொற்கள் பொறித்த முத்திரையொன்று கிடைத்தமை பலரும் அறிந்த விடயமாகும். அதிற் காணப்படும் ஓரெழுத்துச் சொல்லான ‘கோ’ என்பது குறுநில மன்னருக்குரிய பட்டப்பெயர் என்பது இந்திரபாலா முதலான எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரு விடயமாகும்.7 ‘வேள் ணாகன்’ என்ற பெயர் கந்தரோடையில் கிடைத்த கலவோடுகளிலும் கட்டடங்களின் உதிரிப்பாகங்கள் பலவற்றிலும் குடாநாட்டிலுள்ள வேறு பல பொருட்களிலும் காணப்படுகிறது. ‘கோ, வேள்’ என்பன ஒரே பொருள் குறிக்கும் இருவேறு சொற்களாகும்.

பதவிநிலையைக் குறிக்கும் ‘அமத, வோ4ஜக’ என்ற சொற்கள் பிராகிருத மொழிச்சொற்கள். பிறமொழிகளைப் பேசுகின்ற சமுதாயங்களிற் காணப்படும் இன உறவுமுறை, ஆட்சிமுறை என்பன பற்றிக் குறிப்பிடும் போது பிராகிருத மொழி வாசகங்களில் எழுதுமிடத்து அவற்றைப் பிராகிருதமாக மொழிபெயர்த்துக் குறிப்பிடுவதே முறையாகும். அதன்படி ‘கோ, வேள்’ என்பன ‘ரஜ’ என்றாகிவிடும். இச்சாசனத்தில் மேலான அரசன் ஒருவனைப் பற்றிச் சொல்லப்படுவதால் இங்கு குறுநில மன்னனைக் குறிப்பதற்கு வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர் போலத் தெரிகின்றது. மந்திரி, அமாத்தியன் (அமைச்சன்) என்ற சொற்களை ஒரே பொருள் குறிக்கும் இருவேறு சொற்களாக நோக்குவது தற்காலத் தமிழ்வழக்கில் வழமையாகிவிட்டது. ஆனால், இது புராதனமான காலத்தைப் பொறுத்தவரையில் எந்தளவிற்குப் பொருத்தமானது என்பது சிந்தனைக்குரியதாகும். சமஸ்கிருத நூல்களிலும் திருக்குறளிலும் அமைச்சன் (அமாத்யன்) என்பது நிர்வாக அதிகாரிகளைக் குறிக்கும் வகையிற் பயன்படுத்தப்படுகின்றது.

விகாரம் அமைந்த தலம்

இச்சாசனத்தில் ‘ப3டகர அதன’ என்றவிடத்தில் விகாரம் அமைக்கப்பட்டதென்று சொல்லப்படுகின்றது. அதனால் அது திறைசேரி அமைந்திருந்த இடம் என்பது பரணவிதானவின் விளக்கம். ஆயினும், வாசகத்தின் மொழிபெயர்ப்பில் வாசகத்திலுள்ளவாறே மாற்றமின்றி இடப்பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இடப்பெயர் பற்றித் தெளிவுபடுத்த வேண்டிய தேவையுண்டு.8 ‘ப3டக3ரிக, ப3டகரிக’ என்னும் சொற்கள் ஆதிகால இலங்கைக் கல்வெட்டுகளிற் காணப்படுகின்றன. அவை வெவ்வேறு பொருள்களைக் குறிக்கும் சொற்களாகும். அவை சொற்பிறப்பிலும் வெவ்வேறானவை. ‘ப3ட’ என்பது இவ்விரண்டு மொழித் தொடர்களுக்கும் பொதுவானது. பிராகிருதமான அச்சொல் ‘பா4ண்ட’ என்னும் சமஸ்கிருத மொழிச் சொல் மூலமாக வந்தது. அது இருவேறு கருத்துகளைக் கொண்டது. முதலாவதாக அது பொன், பொருள், திரவியம் முதலானவற்றைக் குறிக்கும். இரண்டாவதாக அது கலன்கள் முதலான (மட்பாண்டம்) பாத்திரங்களைக் குறிக்கும்.

‘ப3ட’ என்ற சொல்லுடன் ‘க3ரிக’ என்ற சொல் இணையுமிடத்து அதனை ‘திறைசேரி’ எனக் கொள்ளலாம். ‘க3ர’ என்பது ‘க்ருஹ’ என்ற சமஸ்கிருதமொழிச் சொல் மூலமாக வந்தது. ஆனால், ‘வ3ட’ என்ற சொல்லுடன் ‘கரிக’ (காரிக) என்ற சொல் இணையுமிடத்து உருவாகும் கூட்டுமொழி முன்னையதிலும் முற்றும் வேறுபட்ட பொருளைக் குறிக்கும். ‘கரிக’ (காரிக) என்ற பிராகிருதச் சொல் ‘க்ரு’ என்னும் சமஸ்கிருதச் சொல் வழியாக வந்தது. ‘க்ரு’ என்ற வினையடிச்சொல் செய், பண்ணு என்பவற்றைக் குறிக்கும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் நோக்குமிடத்து ‘ப3டகரிக’ என்ற கூட்டுமொழிச் சொல் கலன்களை உற்பத்தி செய்வோரைக் குறிக்கும். எனவே, வல்லிபுரம் பொன்னேட்டில் வரும் ‘ப3டகர’ என்ற சொல் (மட்)பாண்ட உற்பத்தி என்பதைக் குறிக்கும். அது ‘அதந’ என்ற சொல்லுடன் இணைந்து வருவதால் இந்த விளக்கம் உறுதியாகின்றது. ‘அதந’ என்பது ‘குறித்த இடம்’ என்ற கருத்துடைய ‘ஆஸ்தாந’ என்ற சமஸ்கிருதச் சொல் வழியாக வந்தது. எனவே, வல்லிபுரம் சாசனம் மட்கல உற்பத்திச் சாலையினை அல்லது மட்கலங்களை வனைவோர் வாழும் இடத்தைக் குறிக்கின்றது எனக் கொள்வதே சாலவும் பொருந்தும்.

இங்கு குறிக்கப்படும் ‘ப3டகர’ என்ற சொல் வடகரை என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத வடிவம் என்று கொள்வது புலமை நோக்கிற் பொருத்தமற்றது. ஒலியமைதி முறைப்படி அவ்வாறு கருதலாம். ஆயினும், கூட்டுமொழியின் சொற்பிறப்பினை ஆராய்கின்ற போது அது பிராகிருதமொழி மூலமான தொடர் என்பது தெளிவாகும்.9 வேற்றுமொழியில் வழங்கிய இடப்பெயரைப் பிராகிருத மொழியில் மொழிபெயர்த்துக் கூறுகின்றனர். அதனால் இடத்தின் மூலப்பெயர் வடிவம் தெரியவில்லை. ஆனால், அது எவ்விதமான இடம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. விகாரம் மட்கல உற்பத்தியாளர்கள் வாழும் தலத்தில் உருவானது என்று கருதமுடிகின்றது.

அரசனின் பெயரும் வரிவடிவ வளர்ச்சியும்

பொன்னேட்டின் காலம், அதிற் குறிப்பிடப்படும் அரசனின் அடையாளம் என்பன கவனித்தற்குரியவை. இவற்றைப் பற்றிப் பலரும் வெவ்வேறான விளக்கங்களைக் கூறியுள்ளனர். ‘மகாராஜ வஹய’ என்பதை அநுராதபுர அரசனாகிய வசபன் (கி.பி. 67 – 111) என்று பரணவிதான கொள்வார். வசபனின் ஆட்சிக்காலம் அவருடைய கணிப்பிலே பெருமளவிற்கு கி.பி. முதலாம் நூற்றாண்டுக்குரியதாகும் (கி.பி. 67-111).

சாசனத்தின் எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சி காலத்தால் இரு நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டதாகும். அது இஷ்வாகு குல மன்னர் காலத்தில் ஆந்திர தேசத்தில் ஏற்பட்ட வரிவடிவ வளர்ச்சி நிலையை வெளிக்காட்டுவதாகும். இலங்கையில் வேறெந்தக் கல்வெட்டிலும் இவ்வாறான வளர்ச்சிநிலை காணப்படவில்லை. புராதன எழுத்தியல் நிபுணரான தானி இச்சாசனம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குரியது என்று கருதுவார். எனவே, நாகதீவின் மேல் அதிகாரம் பெற்றிருந்த ‘வஹய’ என்னும் அரசன் மகாவம்சம் நிரல்படுத்தும் அரசர் ஆவலியில் இடம்பெறாத அரசனொருவனாதல் கூடும். அவன் அநுராதபுரத்திற்கு வடபாலான பகுதிகளில் மேலாதிக்கம் செலுத்திய ஒருவனாதல் வேண்டும்.

வல்லிபுரம் பொன்னேட்டு வாசகம் சிங்கள மொழியில் உள்ளது என்ற கருத்தைச் ஸெனரத் பரணவிதான வெளிப்படுத்தினார். அத்துடன் சிங்களமே யாழ்ப்பாணத்திற் பேச்சுவழக்கு மொழியாகியது என்றும் அவர் சொன்னார். அவருடைய கருத்துகளை 1983 வரையான காலப்பகுதியில் எவரும் விமர்சிக்கவில்லை. அதேவேளை தென்னிலங்கையிலே இன உறவுகளைப் பொறுத்தவரையில் ஒரு பாசிஸ நோக்கிலான சிந்தனை வலுப்பெறுவதற்குப் பரணவிதானவின் குறிப்புகள் ஆதாரமாகிவிட்டன.

பொன்னேடு தொடர்பாகப் பரணவிதான முன்வைத்த கருத்துகளைப் பேராதனைப் பல்கலைக்கழகத்து வரலாற்றுத்துறையில் இளம் விரிவுரையாளராகவிருந்த செ. குணசிங்கம் அறிவியல் சார்புடைய வாதங்களினால் நிராகரிக்க முனைந்தார். அதனைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்துத் தமிழ்த் துறையிலுள்ள முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை பொன்னேட்டின் வாசகம் பற்றித் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். ஆயினும், பரணவிதான அடையாளங்கண்ட ‘இஸிகி3ராய’ என்ற பெயரின் முற்பகுதியான ‘இஸிகி’ என்பதை ‘ஈளம்’ என்ற சொல்லின் பிராகிருத வடிவம் எனக் கொண்டதால் வேலுப்பிள்ளை உண்மையில் ஒரு பொறிக்குள் அகப்பட்டுவிட்டார். இவ்விடயம் தொடர்பான அவரின் தவறுகள் இருவிதமானவை. அவற்றுள் முதலாவது ‘இஸிகிரய’ என்பது பரணவிதான பிழையாக அடையாளங் கண்டுள்ள வடிவம் என்பதை உணர்ந்துகொள்ளாமை. இரண்டாவது தவறு அதற்கு வரலாற்று மொழியியல் அடிப்படையிலே பொருத்தமற்ற விளக்கம் சொன்னமை.

ஆயினும் இச்சாசனம் பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதையும் அதன் வரிவடிவங்கள் இக்ஷ்வாகு மன்னர் காலத்து ஆந்திர தேசத்தில் வழங்கிய பிராமி வடிவங்கள் போன்றவை என்பதையும் வேலுப்பிள்ளையினால் நிறுவிக்கொள்ள முடிந்தது. பொன்னேட்டின் வாசகத்தைத் தெளிவுபடுத்துவதற்கு முன்பு சிங்கள மொழி பற்றிப் பரணவிதான கூறியவற்றை அவதானிக்க வேண்டியது இங்கு அவசியமாகின்றது.

பொன்னேடு அநுராதபுரத்து அரசனாகிய வஸபனின் காலம் (கி.பி. 67-111) என்பதும் அது சிங்கள மொழியில் உள்ளது என்பதும் பரணவிதானவின் சிந்தனையாகும். வஸபனின் காலத்திற் சிங்கள மொழி உருவாகிவிட்டதா? என்பதும் அவனுடைய காலத்துக் கல்வெட்டுகள் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளனவா? என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய விடயங்களாகும். பரணவிதான பொன்னேடு தொடர்பாகச் சிங்கள மொழி பற்றிச் சொன்னவை முற்றிலும் ஆதாரமற்றவை. அவ்வாறு கொள்வதற்கு அடிப்படையான நான்கு காரணங்கள் உள்ளன. ஒன்று ஆதிப்பிராமிக் கல்வெட்டுகளிற் பதிவாகியிருக்கும் பிராகிருதத்திற்கும் சிங்களத்திற்கும் இடையிலான முரண்பாடுகள்; மற்றது சிங்கள மொழி உற்பத்தி பற்றிய காலவரையறை; இன்னொன்று அண்மைக் காலத்திலே கள ஆய்வுகள் மூலமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சொற்கள் எழுதிய ஆதி வரலாற்றுக் காலத்துப் பண்பாட்டுச் சின்னங்கள். நான்காவது ஆதிக்குடிகளான நாகர் தமிழ்மொழி பேசியவர்கள் என்பது ஈமக்கல்லறைகளிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் வெளிப்படையானமை. பிராமிக் கல்வெட்டுகளிற் பதிவாகியுள்ள பிராகிருதம் சிங்கள மொழிக்கு மூலமானது என்பது அறிஞர் பலரின் உறுதியான நம்பிக்கையாகும். ஆயினும், இது ஒரு மேலோட்டமான ஒப்பீட்டின் வழியாக ஏற்பட்ட ஒன்றாகும்.

பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் பிராகிருதம் ஒலியமைப்பில் பாளி, சிங்களம் என்பவற்றிலிருந்து பெரிதும் வேறுபட்டது; சமகாலத்து, பரதகண்டத்தில் வழங்கிய பிராகிருத மொழிகளிலிருந்தும் வேறுபட்டது. அது ஒரு கலப்பு மொழி. அதில் இடையிடையே திராவிட மொழிச் சொற்களும் குறுணிக் கற்கால மக்கள் பேசிய மொழியின் சொற்களும் கலந்துள்ளன. அந்தப் பிராகிருதத்தின் ஒலியமைப்பு முறையிற் சில வேறுபாடான இயல்புகள் உள்ளன. அதில் நெட்டுயிர் எழுத்துகள் தவிர்க்கப்படும் (ராஜ: ரஜ; காமணி: கமணி); வல்லின மெய்யெழுத்துகளின் கூட்டு தவிர்க்கப்படும்; இடையொலி (Aspirates) எழுத்துகளும் இடம்பெறுவதில்லை. ‘அனுஸ்வாரம்’, ‘விஸர்க்கம்’ என்பன தவிர்க்கப்படும்.

ஆதியான ஈழத்துக் கல்வெட்டு வழக்கான பிராகிருதத்திலே தவிர்க்கப்படும் எல்லா அம்சங்களும் பாளி, சிங்களம் என்பவற்றில் வழமையானவை; சமகாலத்து இந்தியாவிலே பேச்சுவழக்கான பிராகிருத மொழிகளுக்கும் அவை இயல்பானவை. அவ்வாறான ஒரு பிராகிருதத்தைச் சிங்கள மொழி என அடையாளப்படுத்துவது மொழியியல் கோட்பாடுகளுக்கு விரோதமான, ஆய்வுநெறி முறை பிறழ்ந்த, ஒரு விபரீதமான செயலாகும்.

பிராகிருதம் வழியாகவே சிங்களம் உருவாகியது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அது எத்தகைய பிராகிருதம் மூலமாக உற்பத்தியானது என்பது விசாரத்திற்கு உரியதாகும். பாளி, சிங்களம் ஆகியவற்றின் ஒலியமைப்பு முறைகள் ஒரே விதமானவை என்பதால் சிங்கள மொழியின் உருவாக்கத்திற் பாளி மொழியின் செல்வாக்கு மிகுந்தளவிலே படிந்துவிட்டது போலத் தெரிகின்றது. அந்த இலக்கியமும் கௌதம புத்தரின் காலத்தில் மகத தேசத்தை மையமாகக் கொண்ட அர்த்தமாகதி என்னும் வகைக்குரிய பிராகிருதத்தில் அமைந்தவொன்றாகும். அந்தப் பிராகிருதம் அங்கு பேச்சுவழக்கு மொழியாக விளங்கியது. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளிற் பதிவாகியுள்ள பிராகிருதத்திலே தவிர்க்கப்படும் ஒலிவடிவ அம்சங்கள் யாவும் அர்த்தமாகதிக்கும் அதிலிருந்து இலக்கிய வடிவம் பெற்ற பாளி மொழிக்கும் சிறப்பாக உரியவை. அவற்றோடு ஆந்திர தேசத்துக் கல்வெட்டு மொழியான பிரகிருதமும் சிங்கள மொழியின் உருவாக்கத்திலே செல்வாக்கினை ஏற்படுத்தியிருந்தது என்பது ஐராவதம் மகாதேவனின் கருத்தாகும்.

சிங்கள மொழியின் வளர்ச்சிக் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என்பது மகாவம்சத்தின் பதிப்பாசிரியரான வில்லியம் கைகரின் (Wilhelm Geiger) ஆராய்ச்சி முடிபாகும். அவர் சிங்கள மொழி இலக்கணம் பற்றி ஆய்வு நூலொன்றை எழுதி, அதனை ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றிற் சமர்ப்பித்துக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். சிங்கள மொழியின் உற்பத்தி பற்றி வில்லியம் கைகர் சொன்னவற்றை இலங்கைப் பல்கலைக்கழகத்து ‘இலங்கை வரலாறு’ என்னும் நூலின் முதலாம் தொகுதியின் முதலாம் பாகத்திலுள்ள ‘மக்களும் மொழிகளும்’ என்ற அத்தியாயத்தில் D.E. ஹெற்றியாராச்சி உறுதிப்படுத்துகின்றார். அவர் அந்தப் பல்கலைக்கழகத்திலே சிங்கள மொழித்துறைப் பேராசிரியர் என்பதும் குறிப்பிடற்குரியது. ஸெனரத் பரணவிதான, அந்நூலின் பதிப்பாசிரியர் குறிப்பிட்டதன் படி நான்காம் நூற்றாண்டு முதலாக வளர்ச்சியடைந்த ஒரு மொழியை, கி.மு. 250 – கி.பி. 300 ஆகிய காலத்துக் கல்வெட்டுகள் பதிவு செய்கின்ற மொழியாக அடையாளங் காண்பது அறிவியல் சார்புடைய சிந்தனைக்கு அப்பாலானது. மேலும் வல்லிபுரம் பொன்னேடு ஒரு பிராகிருத மொழியில் அமைந்துள்ள ஆவணம் என்பதில் எதுவிதமான ஐயமுமில்லை. அதிலே பதிவாகிய மொழியின் ஒலியமைப்பு முறை இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளிற் பதிவாகியுள்ள பிராகிருதத்தின் பண்பாகும். அத்துடன் அது சிங்கள மொழிக்குரியதிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டது. இந்நிலையிலே பொன்னேட்டின் வாசகத்தைக் காரணமாகக் கொண்டு யாழ்ப்பாணத்திலே வஸபனுடைய காலத்திலே (கி.பி. 67-111) சிங்களமே பேச்சுவழக்கு மொழியாக விளங்கியது என்னும் பரணவிதானவின் வாதம் விசித்திரமானது. அது புராணமன்று; முழுமையான புனைகதை. கி.பி. 1990 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மொழிச் சொற்கள் பதிவாகியுள்ள ஆதி வரலாற்றுக் காலத்துத் தொல்பொருட் சின்னங்கள் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. யாழ்ப்பாணத் தொல்லியல் கழக வெளியீடான பூர்வகலாவில் (1974) எழுத்துப் பொறித்த இரண்டு சின்னங்கள் மட்டுமே கிடைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. அவை பிராகிருத மொழியில் உள்ளவை; ஒன்று பொன்னேடு, மற்றது ஒரு கலவோடு.

ஆதி வரலாற்றுக் காலத்து யாழ்ப்பாணத்துச் சமுதாயம் பற்றிய புரிந்துணர்வில் இந்நூற்றாண்டிலே எதிர்பாராத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பிராமியில் எழுதிய சொற்களையும் பெயர்களையும் அடையாளங் கண்டதால் அந்த முன்னேற்றம் ஏற்பட்டது. அச்சொற்களும் பெயர்களும் தமிழ் மொழியிலானவை. அவை பல நூற்றுக்கணக்கான பொருள்களிற் காணப்படுகின்றன. அவை பல வழிபாட்டு நெறிகளைச் சேர்ந்த சின்னங்களிலும் படிமங்களிலும் காணப்படுகின்றன; பல கட்டுமானங்களின் உதிரிப்பாகங்களிற் காணப்படுகின்றன. அன்றாட வாழ்க்கையிற் பயன்படுத்திய சாதனங்கள், கருவிகள் என்பவற்றிலும் காணப்படுகின்றன. கிணறு, கேணி, குளம் முதலியவற்றின் பாகங்களிலுங் காணப்படுகின்றன. ஈமத்தலங்களிலுள்ள கல்றைகளிலும் கற்பாளங்களிலும் அவற்றைக் காணமுடிகின்றது.

யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கான மொழி பற்றிப் பூர்வகலா வெளியிடப்பட்ட காலம்வரை செறிவாகப் படிந்திருந்த இருள் இப்பொழுது முழுமையாக நீங்கிவிட்டது. கள ஆய்வுகளின் வழியாகக் கிடைத்த எழுத்துப் பொறித்த பண்பாட்டுச் சின்னங்களால் ஒளி பரவியுள்ளது. உண்மையில் மறைந்துபோன சமுதாயமும் மறந்துபோன யாழ்ப்பாணத் தொன்மை வரலாறும் இப்பொழுது பிரகாசமாகிவிட்டன. இது பலரின் முயற்சிகளின் பயனாகும். செ. கிருஷ்ணராசா, ப. புஷ்பரட்ணம் என்போர் கண்டெடுத்த கலவோடுகள் பற்றி இங்கு முன்பு அவதானித்தோம். அவை நூற்றுக்கணக்கானவை. அவற்றுள் ஒன்றைத் தவிர மற்றைய எல்லாவற்றிலும் தமிழ்ப் பிராமி வடிவங்கள் தெரிகின்றன.

எழுத்துப் பொறித்த கற்களும் உலோகப் பொருட்களும் ஏராளமானவை கிடைத்துள்ளன. நினைவுத் தூண்கள், நாகக் கற்கள், சமய வழிபாட்டுச் சின்னங்கள், வீட்டுப் பாவனைக்குரிய பொருட்கள் முதலியவற்றிலே காணப்படும் சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்கள். கல்லுருப்படி எதனிலும் பிராகிருதத்தைக் காணமுடியவில்லை. பெருந்தொகையான உலோக வார்ப்பான பொருள்களிலும் தமிழ்ச் சொற்களே காணப்படுகின்றன. இவற்றுள் வல்லிபுரம் பொன்னேடு மட்டுமே புறநடையானது. அதன் வாசகம் பிராகிருத மொழியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிலர், குறிப்பாகப் பௌத்தராயிருந்தோர் பிராகிருத மொழியினையும் அறிந்தவர்கள் என்பதற்குப் பொன்னேடு ஓர் அடையாளமாகும்.

இறுதியாக நாகருக்கும் தமிழ்மொழிக்கும் இடையிலான தொடர்பினைக் குறிப்பிடுவது அவசியமாகும். புராதன காலத்திலே யாழ்ப்பாணத் தீபகற்பத்தினை நாகதீவு என்றும் நாகநாடு என்றும் குறிப்பிட்டனர். நாகர் வாழும் நாடு என்பதால் அப்பெயர் உருவாகியது. பாளி நூல்களில் அதனை ‘நாக3தீ3ப’ என்றனர். அங்கு வாழ்ந்த மக்கள் தென்னிந்திய உற்பத்தியான பெருங்கற்காலப் பண்பாட்டுடன் இணைந்தவர்கள் என்பது தொல்லியல் ஆய்வுகளின் மூலமாக உணரப்பட்டது. ஆயினும், சென்ற நூற்றாண்டிலே நாகர் மூலமாகவே அப்பண்பாடு இலங்கையிற் பரவியது என்பதை சிரான் தெரணியகல மட்டுமே ஊகித்து உணர்ந்துள்ளார். மற்றவர்களுக்கு அது புலப்படவில்லை.

தென்னிலங்கையிலுள்ள ஈமக் கல்லறைகளிற் காணப்படும் கல்வெட்டுகள் நாகரைப் பற்றியவை; தமிழ் மொழியில் எழுதப்பட்டவை; அவற்றைத் தமிழ்ப் பிராமி வரிவடிவங்களில் எழுதியுள்ளனர். எனவே, பெருங்கற்காலப் பண்பாடு நாகர் மூலமாக இலங்கையிலே பரவியது என்பதும் அதன் காரணமாகவே தமிழ்மொழி பரவியது என்பதும் தெளிவாகின்றன.

இதுவரை சற்று விவரமாக விளக்கப்பட்டனவற்றின் மூலம் யாழ்ப்பாணத்தின் ஆதிக் குடிகளான நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத வரலாற்று விவரமாகும். இதுவரை கவனித்தவற்றின் அடிப்படையில் வல்லிபுரம் பொன்னேட்டு வாசகத்தை ஆராயமுடிகின்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டினதும் அதில் அதிகாரஞ் செலுத்திய ஆட்சியாளனதும் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் என்பதை வல்லிபுரம் பொன்னேட்டின் மூலம் அறியமுடிகின்றது. அப்பெயர்கள் முறையே ‘ணாகதீவு, சிவிராயன்’ என்பனவாகும். இவற்றில் முதலாவது பெயரை ‘ணகதி3வ’ எனப் பிராகிருதமயமாக்கிப் பொன்னேட்டில் எழுதியுள்ளனர்.

பௌத்த படிமம்

இலங்கையிலும் பிரதானமாக யாழ்ப்பாணத்திலும் கிடைத்த சிற்பங்களில் முதன்மையானவற்றிலொன்று வல்லிபுரத்திலே கண்டெடுத்த புத்தர் படிமம். அது இந்நாட்டுச் சிற்பக்கலை வளர்ச்சியின் உன்னதமான அடையாளம். இலங்கையிலே கட்டட, சிற்பக்கலைகளின் வரலாறு நாகருடன் ஆரம்பமாகியது. இதனை இதுவரை ஈழநாட்டு அறிஞர்களாற் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. கட்டடக்கலை வளர்ச்சிக்கு மரத்தில் அமைக்கப்பட்ட உருப்படிகளே அடிப்படையானவை என்று சென்ற நூற்றாண்டிலே பரணவிதான கருதினார். ஆரியக் குடியேற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோர் குழாத்தினரிடையிலும், குறிப்பாக ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே அகப்பட்டுக்கொண்ட வரலாற்றாசிரியர்களுக்கும் ஏற்பட்டிருந்த காலத்தில் அறிவியல் அடிப்படையிலான சிந்தனைகளை முன்கொண்டுவரும் மனப்பான்மை காணப்படவில்லை.

நாகர் மலைகளின் ஓரங்களிற் பெரும் பாறைகளையும் தூண்களையும் வெட்டியெடுக்கும் முறையினை அறிந்தவர்கள். அவ்வாறு எடுத்த கற்பாளங்களைக் கொண்டு பிரமாண்டமான அளவுடைய கல்லறைகளையும் மிதமான அளவுடைய கல்லறைகளையும் உருவாக்கினார்கள். நீளமான தூண்களைச் செதுக்கிய கோலத்தில் வழிபாட்டுத் தலங்களிலே கூரைகளைத் தாங்கும் வண்ணமாக நிலைநிறுத்தினார்கள்.

வல்லிபுரத்துப் பௌத்த படிமம் பொன்னேட்டிலே குறிப்பிடப்படும் விகாரைக்குரியது. அவையிரண்டும் வல்லிபுர ஆழ்வார் கோயிலின் வளாகத்திற் கிடைத்தவை. அங்கிருந்த படிமம் ஆறடிக்கு மேலான உயரமுடையது. ஆனால், சுண்ணாகத்தில் கிடைத்த படிமம் 12 அடி உயரமானது. அவையிரண்டும் மிக விசாலமான கற்தூண்களை வெட்டி, அவற்றைச் செதுக்கி அமைத்த சிற்பங்களாகும். நாகரின் உன்னதமான தொழில்நுட்பத்திற்கும் செதுக்கு வேலைப்பாடுகளில் அவர்கள் பெற்றிருந்த அனுபவங்களுக்கும் இச்சிற்பங்கள் உதாரணங்களாகும். இக்காலப்பகுதியிலும் பிந்திய நூற்றாண்டுகளிலும் இவற்றைப் போன்ற நின்ற கோலத்திலான படிமங்களை இலங்கையின் வடமத்திய பகுதியிலும் உறுகுணைப் பிரதேசத்திலும் உருவாக்கியுள்ளனர்.

வல்லிபுரத்துப் படிமத்திற் கேசம் சிறியதாகவும் உயரமற்றதாகவும் அமைந்திருக்கிறது. சிறிய சுருள்களாகத் தோன்றும் வண்ணமாக அதனைச் செதுக்கியுள்ளனர். காதுகள் கழுத்தின் அடிவரை மிக நீண்டு காணப்படுகின்றன. முகம் மலர்ச்சியானது. குமிண் சிரிப்பு தோன்றும் வகையிலானது. மடிப்புகள் அமைந்த சீவரம் பாதங்கள் வரை நீண்டுள்ளது. இப்படிமம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குரியது என்று கொள்ளப்படுகின்றது. அது ஆந்திர தேசக் கலைப்பாணிக்குரியது என்று அதனைப் பற்றி ஆராய்ந்த புலமையாளர் கருதுவர்.

அது இப்போது பாங்கொக் நகரின் மத்தியிலுள்ள முதன்மை விகாரத்தின் சாலையொன்றின் மூலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள எவருக்கும் அதனைப் பற்றி எதுவும் தெரியாது. இலங்கையைச் சேர்ந்தவர்கள் எவரும் 1906இன் பின்னர் அதனைக் காணவில்லை.

ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து வல்லிபுரத்தில் வாழ்ந்த நாகர் பௌத்த சமயத்திற்கு ஆதரவு வழங்கினர். பொன்னேட்டு வாசகத்தின்படி மட்கலங்களின் உற்பத்தி நடைபெறுகின்ற தலத்தில் விகாரமொன்று அமைக்கப்பட்டது. வல்லிபுரத்திற் கிடைத்த படிமமும் அதற்குரியதாகும். அது பூங்காவிலிருந்த காலத்தில் எடுத்த புகைப்படத்தில் இடையிடையே தமிழ்ப் பிராமி வடிவங்கள் தெரிகின்றன. யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ள ஏனைய பௌத்த படிமங்களிற் தமிழ்ப் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு ‘ணாகதீவு’ என்ற பெயரால் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. அங்கு ‘ஸிவிராய(ன்)’ என்ற பெயருடைய சிற்றரசன் ஆட்சிபுரிந்தான். அவன்மீது ‘வஹய’ என்ற அரசன் மேலாதிக்கம் பெற்றிருந்தான். ஆனைக்கோட்டை முத்திரை, வல்லிபுரம் பொன்னேடு என்பன மட்டுமே பிராந்திய அரசரின் இயற்பெயர்களைக் குறிப்பிடுகின்றன. வேறு எல்லா வகையான பண்பாட்டுச் சின்னங்களிலும் வேள் என்னும் பதவிநிலைப் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதேசத்தினதும் அதன் ஆட்சியாளரினதும் தமிழ்ப்பெயர்கள், முன்னர் இங்கு குறிப்பிடப்பட்டவாறு பொன்னேட்டிற் சற்று விகாரமாகிப் பிராகிருதமயம் பெற்றுள்ளன. தற்போது ஆதாரங்களும் சான்றுகளும் பெருகிவரும் நிலையில் மரபுவழியான கருத்துகள் மறைந்துவிடுகின்றன. இது அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.

அடிக்குறிப்புகள்

1. Peter Schlalk, “The Vallipuram Buddha Image” Buddhism Among Tamils ​​in Pre. Colonial Tamilakam and Ilam (BATTI). Part I, Editor in Chief: Peter Schalk, Co-Editor: Āļvāppillai Veluppiļļai, Uppsala, 2002, Pp.218-220.

2. Ponnampalam Raghupathy, Early Settlements In Jaffna An Archaeological Survey, Cre A, Madras, 1987, P.83. “In 1972 there was a report that a mound near the temple had yielded a large pot in a cist covered by orthostats and that this was possibly a Megalithic burial site. The above find was described as an urn in a cist burial.”

3. Iravatham Mahadevan Early Tamil Epigraphy Corpus of Tamil Brahmi Inscription, p.9.

Peter Schalk, “The Vallipuram Inscription”, BATTI, Pp.221-224

4. S.Paranavitana, “The Vallipuram Gold Plate Inscription of the Reign of Vasabha”, EZ, Vol.IV, Pp.229-237.

5. BATTI, pp.221,222.6. 

6. சிவிச்சக்கரவர்த்தி பற்றிய அடையாளம் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றது. வழக்குரை காதையில் அறம் பிழைத்த பாண்டியராசனுக்குத் தீராத துன்பம் அடைந்தவளாகிய கண்ணகி சோழ மன்னரின் இணையிலாச் சிறப்பினை மேல்வருமாறு உறுத்தியதாகச் சொல்கிறாள்:

“தேரா மன்னா! செப்புவதுடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண்தீர்த்தோன்; அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத்
தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்;
பெரும்பெயர்ப் புகார் என் பதியே?”

சிலப்பதிகாரம், புலியூர்க் கேசிகன் தெளிவுரை, பாரி நிலையம், சென்னை, 2000, 20:49-55.

7. கா. இந்திரபாலா, “இலங்கைத் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு”, 2006, பக். 328-329.

8. S. Paranavitana, “The Vallipuram Gold Plate Inscription of Vasabha”, Epigraphia Zeyanlaca, Vol.IV, Pp. 229-237.

9. வல்லிபுரம் பொன்னேட்டிலுள்ள ‘வடகர’ என்ற சொல்லை வடகரை என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத வடிவமென்று பீற்றர் ஷல்க், ஆ. வேலுப்பிள்ளை ஆகியோர் கொள்வர். “பரணவிதான (இச்சொல்லை) ‘ப33கர’ என அடையாளங் கண்டுள்ளார். ஆனால், அதனை எவ்வாறு விளக்குவது என்பது அவருக்குத் தெரியவில்லை. அதனைப் பிரதேசம் (Region) என்று மொழிபெயர்த்துள்ளார். ஆள்வாப்பிள்ளை வேலுப்பிள்ளை, இராமச்சந்திரன் நாகசாமி ஆகியோருடன் நானும் அதனை வடகரை என்னும் தமிழ்ச் சொல்லாக அடையாளம் காண்கின்றேன்.” BATTI, Part I, P. 223.

எமது கருத்து இவர்களின் விளக்கத்திலிருந்தும் வேறுபட்டதாகும். அது பிராகிருதமொழிச் சொல். பிராகிருத இலக்கண முறையின் அடிப்படையிற் புரிந்துகொள்ளக்கூடியது.

Dani, “Indian Palaeography”, BATTI, Part I, p221-232.

Peter Schalk, “The Vallipuram Buddha Image Rediscovered”, Paper presented at the Symposium of Dance, Music and Art in Religions Abo, Finland, 16th-18th August, 1994.



About the Author

பேராசிரியர் சி.பத்மநாதன்

யாழ். பல்கலைக்கழக வேந்தரும் தகைசார் பேராசிரியருமான சி. பத்மநாதன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றியவர்.