ஆங்கில மூலம்: எலிசபெத் ஜே. ஹரிஸ்
எட்வர்ட் காட்பரி பொதுமக்களுக்கான சமயப் புரிதல் மையம், பர்மிங்காம் பல்கலைக்கழகம், பர்மிங்காம் B15 2TT, UK
The Edward Cadbury Centre for the Public Understanding of Religion, University of Birmingham, Birmingham B15 2TT, UK; e.harris.2@bham.ac.uk
Harris, Elizabeth J. “Contested Histories, Multi-Religious Space and Conflict: A Case Study of Kantarodai in Northern Sri Lanka.” Religions, vol. 10, no. 9, 2019, p. 537. MDPI, doi.org.
சுருக்கம்:
இக்கட்டுரை, இலங்கையின் வடகோடியில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் கந்தரோடைத் தொல்லியல் களத்தை மையமாகக் கொண்டது. இது, காலனியப் பிந்தைய, போருக்குப் பிந்தைய சமூகங்களுக்குள் வெளிப்பட்ட, முரண்பட்ட வரலாறுகள் கொண்டுள்ள வலுவை ஆராய்கிறது. கந்தரோடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இலங்கை இராணுவத்தினர், இதனை ஒரு சிங்களப் பௌத்தத் தலமாக மட்டுமே பார்க்கின்றனர். இருப்பினும், உலகத் தொல்பொருள் அறிஞர்களின் பார்வையில் இதைப் பார்க்கும்போது, அதன் பல்லின, பன்நெறி வரலாறு தெளிவாகிறது. அதன் தற்போதைய சூழ்நிலையானது, இந்த வரலாற்றுடன் தொடர்புடைய கதையாடல்களை உறுதிப்படுத்தத் தவறியதைச் சுட்டுகிறது.
இலங்கையின் இனப் போரின் போது யாழ்ப்பாணத்திற்கான எனது முந்தைய சொந்தப் பயணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை நான் பார்க்கிறேன். அண்மைய கடந்த காலத்தில் குடாநாட்டின் மாறிவரும் அரசியல், நெறிச் சூழல்களை முதலில் நான் நினைவுபடுத்துகிறேன். இரண்டாவதாக, இத்தீவின் மிகவும் செல்வாக்குமிக்கச் சமூகமான சிங்களப் பௌத்த சமூகத்திடமிருந்து குடாநாட்டின் மீது முன்வைக்கப்படும் ஒற்றை ஆதிக்கக் கற்பனாதீதத்தை ஆராய்கிறேன். மூன்றாவதாகக் கந்தரோடைக்கு நகர்ந்து, அதன் வரலாற்றினைப் பற்றிய அண்மைய இரு வேறுபட்ட பதிவுகளையும் இலங்கையின் போருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பில் இவற்றில் ஒன்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் அடிப்படையாகக் கொள்கிறேன். பின்னர், கந்தரோடையில் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தத் தவறியதால் இலங்கைக்கு ஏற்படும் விளைவுகளை நான் மதிப்பீடு செய்கிறேன். அதன்வழியாக காலனியப் பிந்தைய, போருக்குப் பிந்தைய சமூகங்களின் ஆய்வுக்கான பரந்த பொருத்தப்பாட்டை வெளிப்படுத்துகிறேன்.
முதன்மைச் சொற்கள்: பன்நெறி வெளிகள், காலனியப் பிந்தைய வாதம், நெறிகளுக்கு இடையிலான உறவுகள், புராண வெளி, கந்தரோடை, இலங்கை, பௌத்தம், இந்து.
1. அறிமுகம்: யாழ்ப்பாணத்தின் மாறிவரும் போர்க்கால நிலப்பரப்பு
யாழ்ப்பாணக் குடாநாடு இரு வேறு உலகங்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வடக்கே, ‘பாக்கு’ நீரிணைக்கு அப்பால், அது தமிழ்நாட்டையும் இந்தியாவின் பெரும் நிலப்பரப்பையும் அண்டி அமைந்துள்ளது. தெற்கே, ஆனையிறவு எனப்படும் குறுகிய நிலப்பரப்பின் வழியாக, அது இலங்கையின் முதன்மை நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது வணிகர்கள், குடியேற்றவாசிகள், குடியேறிகளை இரு பகுதிகளிலிருந்தும் பெற்றுள்ளது. போர்த்துக்கேயர், டச்சுக்காரர்கள், பிரித்தானியர்கள் ஆகிய மூன்று காலனித்துவ ஆற்றல்களினாலும், நவீன காலத்தில் ஒரு கசப்பான ஆயுத மோதலினாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலப்பரப்பு பௌத்த, இந்து திருப்பயணத் தலங்களின் தாயகமாக விளங்குகிறது. முரண்பட்ட வரலாறுகள் ஒன்றையொன்று சந்தித்து, அதன் தட்டையான, ஒளி நிறைந்த, உப்பங்கழிகள் ஊடுருவிய பரப்பில் இவை பின்னிப் பிணைந்துள்ளன. இது காலனித்துவம், பின்காலனித்துவம், இன மோதல்கள், நெறிகளுக்கு இடையிலான உறவுகள் பற்றிய ஆய்விற்கான ஒரு நுண் உலகமாகத் (Microcosm) திகழ்கிறது.
இந்தக் கட்டுரை யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒரு குறிப்பிட்ட ஆய்வை, அதாவது கந்தரோடைத் தொல்பொருள் தலத்தை மையமாகக் கொண்டு அமைகிறது. காலனியப் பிந்தைய, போருக்குப் பிந்தைய சமூகங்களுக்குள் வெளி குறித்து உருவகப்படுத்தப்பட்ட, முரண்பட்ட வரலாறுகளின் ஆற்றலை விளக்குகிறது. கந்தரோடையைக் கட்டுப்படுத்தும் இலங்கை இராணுவம் இதனை ஒரு சிங்கள பௌத்தத் தலமாக மட்டுமே பார்க்கிறது. இருப்பினும், வரலாற்று, சமூக, அரசியல், பண்பாட்டுக் கண்ணோட்டங்கள் மூலம், உலகளாவிய தொல்பொருள் அறிஞர்களின் பங்களிப்பைப் பயன்படுத்திப் பார்க்கும்போது, அதன் பல்லின, பன்மத வரலாறு தெளிவாகிறது. அதன் தற்போதைய சூழ்நிலையானது, இந்த வரலாற்றுடன் தொடர்புடைய கதையாடல்களை உறுதிப்படுத்தத் தவறியதை, அல்லது ஜொனாதன் வோல்டர்ஸ் (Jonathan Walters) குறிப்பிடும் ஒன்றுக்கும் மேற்பட்ட இனத்தவர்களும் மதத்தவர்களும் சந்திக்கும் ஒரு ‘பன்நெறிக் களம்’ (Multi-religious Field) (Walters 1995) உருவாகத் தவறியதை வெளிப்படுத்துகிறது. இந்த ஆய்வைப் பார்க்கையில், முதலாவதாக, 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் மேற்கொண்ட பயணங்களைக் குறிப்பிட்டு, அண்மைய காலத்தில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் மாறிவரும் அரசியல், மதக் களங்களை நினைவுபடுத்துகிறேன். இரண்டாவதாக, தீவின் அதி வலுவாய்ந்த சமூகமான சிங்களப் பௌத்த சமூகத்திடமிருந்து இந்தத் தீபகற்பத்தின் மீது திட்டமிட்டுத் திணிக்கப்படும் ஒற்றை மேலாதிக்கக் கற்பிதத்தை ஆராய்கிறேன். மூன்றாவதாக, எனது வரலாற்று ஆய்வுக்கு நகர்ந்து, அதன் வரலாற்றைப் பற்றிய இரண்டு அண்மைக்காலச் சித்தரிப்புகள், இலங்கையின் போருக்குப் பிந்தைய அரசியல் சூழலில் அவற்றில் ஒன்றிற்கு அளிக்கப்படும் முன்னுரிமை ஆகியவைகளில் கவனம் செலுத்துகிறேன். பின்னர், கந்தரோடையில் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தத் தவறியதால் இலங்கைக்கு ஏற்படும் விளைவுகளை மதிப்பிட்டு, போருக்குப் பிந்தைய, காலனித்துவத்திற்குப் பிந்தைய சமூகங்களின் ஆய்விற்கான இதன் பரந்த தேவைப்பாட்டை வெளிக்கொணர்கிறேன்.
2. இலங்கையின் மாறிவரும் அரசியல் மத நிலப்பரப்புகள்
முதன்மையாக இந்துக்களும் தமிழர்களும் வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு எனது முதல் பயணம் 1989 அக்டோபரில் அமைந்தது.1 நான் 1986 முதல் இலங்கையில் தங்கி, பௌத்தம் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு பறங்கியப் (Burgher) பெண்ணிய ஆர்வலர், தெற்கில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண் ஆகிய இரு இலங்கை நண்பர்களுடன் அங்கு சென்றேன். இது யாழ்ப்பாணப் பெண்களுடனான ஓர் ஒற்றுமைக்கான பயணமாகும்.
யாழ்ப்பாணம் அப்போது இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) கட்டுப்பாட்டில் இருந்தது. விடுதலைப் புலிகளை (LTTE) எதிர்த்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) என்ற தமிழ் ஆயுதக் குழுவின் உதவியுடன் இந்திய அமைதி காக்கும் படையினர் அதை நிர்வகித்தனர். 1987 ஜூன் மாதம் இலங்கை, இந்திய அதிபர்களால் கையெழுத்திடப்பட்ட ‘இந்தோ-லங்கா’ ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிடவே IPKF தீவுக்கு வந்திருந்தது. ‘ஒப்பரேஷன் லிபரேஷன்’ மூலம் இலங்கை அரசாங்கம் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவிருந்த ஒரு கட்டத்தில் இது நிகழ்ந்தது. இந்த ஒப்பந்தம் அதிகாரப் பகிர்வு, அகதிகள் மறுவாழ்வு, இந்தியாவிற்கான வெளியுறவுக் கொள்கைகள் மூலம் விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர முயன்றது. இது ஆரம்பத்திலிருந்தே வடக்கிலும் தெற்கிலும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. புலிகள் அமைப்பு இதனைக் ‘கட்டாயத்தின் பேரில்’ ஏற்றுக்கொண்டு பின்னர் விலகியதால், IPKF தாம் முதலில் நட்புறவு பாராட்டியவர்களுடனேயே பின்னர் போரிட வேண்டியதாயிற்று (e.g., De Silva 1998, pp. 231–40; Richardson 2005, pp. 531–34).
எங்கள் மூவருக்கும் வடக்கில் பத்து நாட்கள் தங்குவதற்கான அனுமதி மட்டுமே இருந்தது. அனுராதபுரத்திற்குப் பிறகு, பலத்த இராணுவமயமாக்கப்பட்ட பாதையில் 12 மணிநேரம் பேருந்தில் பயணித்தோம். இராணுவ முகாம்களுக்கு அருகிலுள்ள வீடுகளைத் தவிர யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இல்லை. தங்கள் பிள்ளைகளைச் சண்டையிடும் அமைப்புக்கள் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பார்களோ என்று பெற்றோர்கள் அஞ்சினர். அரசாங்கத்தின் எறிகணை வீச்சு, 1987 அக்டோபரில் நடந்த IPKFஇன் தாக்குதல்களால் வழிபாட்டுத் தலங்கள் உட்படப் பல கட்டடங்கள் அழிவடைந்திருந்தன. உதாரணமாக, மெதடிஸ்ட் டிரிம்மர் மண்டபம் (Methodist Trimmer Hall) முற்றிலும் இடிபாடாகக் கிடந்தது. இந்த நேரத்தில் மிகச் சில சிங்கள பௌத்தர்களே யாழ்ப்பாணத்திற்குள் வந்து போயினர். முந்தைய பத்தாண்டுகளில் இருந்த சிறிய சிங்கள மக்கள் நடமாட்டம், சிங்கள வெதுப்பகங்கள், ஒரு சில பௌத்தத் துறவிகள் ஆகியோர் காட்சியிலிருந்து முற்றிலுமாக மறைந்துவிட்டனர். 1973இல் காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட திஸ்ஸ பௌத்த விகாரையின் தெல்கல்ல பதுமசிறி தேரர் சில வருடங்களுக்கு முன்பே வெளியேறியிருந்தார். யாழ்ப்பாணத்தின் மையத்திலிருந்த பழமையான நாக விகாரை, 1984இல் அரசாங்கப் படைகள் ‘அடைக்கல அன்னை’ (Our Lady of Refuge) தேவாலயத்தின் மீது எறிகணை வீசியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் கோபத்தினால் தாக்கப்பட்டு, இடிக்கப்பட்டிருந்தது.2 அதன் பின்னர் அந்த விகாரை கைவிடப்பட்டது. எனவே, 1989இன் யாழ்ப்பாணம் ஒரு தமிழ், இந்திய நிலமாக, தீவின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பகுதியாக இருந்தது. சிங்களப் பெரும்பான்மை கொண்ட தெற்கிலிருந்து செய்திகளைப் பெறுவது சாத்தியமற்றதாக இருந்தது. இந்தோ-லங்கா ஒப்பந்தத்திற்கு எதிராக மீண்டும் பலம்பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன (JVP) என்ற ஆயுதமேந்திய சிங்களக் குழுவுடன் இலங்கை அரசு போரிட்டுக் கொண்டிருந்தது. அதனால் ஆயிரக்கணக்கான மரணங்கள் தெற்கில் ஏற்பட்டிருப்பதும் வடக்கில் வாழ்ந்த சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இருப்பினும், நாங்கள் சந்தித்த பெரும்பான்மையான மக்கள், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா IPKFஐ வெளியேற்ற விரும்புவதை அறிந்திருந்தனர். மேலும் புலிகள் மீண்டும் குடாநாட்டைக் கையகப்படுத்துவார்கள் என்று சிலர் கணித்தனர். IPKFஇன் வெளியேற்றம் 1990 மார்ச்சில் நிறைவடைந்தது. கிறிஸ்தவ, இந்து மத நிறுவனங்கள் போரின் பல்வேறு கட்டங்களில் அகதி முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, 1987 அக்டோபர், டிசம்பர் மாதங்களுக்கு இடையில், யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்டா சேவா ஆசிரமம் IPKF தாக்குதலில் இருந்து தப்பிய 2500 தமிழர்களால் நிரம்பியிருந்தது.
எனது இரண்டாவது யாழ்ப்பாண விஜயம் 1991 மே மாதத்தில் அமைந்தது. ஒரு கிறிஸ்தவப் பிரிவின் சார்பாக வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் தொடர்பைப் பேணிய ஒரு டச்சு கிறிஸ்தவ ஊழியருடனும், ஒரு தமிழ்க் கிறிஸ்தவ தம்பதியினருடனும் நான் பயணித்தேன். இராணுவ அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட அந்த ஐந்து நாள் பயணம் பயம் நிறைந்ததாக இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாடு புலிகளின் கைகளில் இருந்தது. இலங்கை அரசு அவர்கள் மீது குண்டுகளையும் எறிகணைகளையும் வீசிப் போரிட்டுக் கொண்டிருந்தது. நான் இலங்கையில் தங்கி எனது முனைவர் பட்டத்தை நிறைவாக்கிக் கொண்டிருந்தேன். அங்கு வாழ்பவர்களுடன் எனது ஒற்றுமையைக் காட்டுவதற்காகவே யாழ்ப்பாணம் சென்றேன். யாழ்ப்பாண உப்பங்கழிக்கு அருகிலுள்ள பூநகரியை அடையும் வரை நாங்கள் காரில் சென்றோம். அனுராதபுரத்திற்குப் பிந்தைய பாதையை எனது டச்சு ஊழியர் நன்கு அறிந்திருந்தார்: வவுனியாவில் உள்ள இராணுவச் சாவடிகள்; அதைத் தொடர்ந்து இராணுவம் கூடுதல் பிரதேசத்தைக் கைப்பற்ற முயன்றதால் சமீபத்தில் மோதல்களைக் கண்ட யாருமற்ற நிலப்பரப்பு (No Man’s Land); பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை அடைந்ததும் அவர்களின் சாவடிகள்; அதன் பின் 1990 நவம்பரில் இராணுவ முகாமை புலிகள் முற்றுகையிட்டதால் இடிபாடுகளாகக் கிடந்த மாங்குளம் நகரம்; ‘கொடூரமாக எறிகணை வீசப்பட்ட’ கிளிநொச்சி என அனைத்தும் அவர் அறிந்திருந்தார். அவற்றின் வழியாகப் பூநகரிக்கான நீண்ட பயணம். புலிகளின் கட்டுப்பாட்டு வட பகுதிக்குள் நுழைந்ததும், சாலையில் மிகச் சில வாகனங்களே இருந்தன. எப்போதாவது ஒரு லொறி அல்லது ‘வான்’ வவுனியாவில் நீண்ட நேரம் காத்திருப்பதற்காகவெனச் சென்றது. ஏராளமான உந்துருளிகள் மட்டுமே காணப்பட்டன. பூநகரியில், நாங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படகு மூலம் உப்பங்கழியைக் கடந்து, பின்னர் யாழ்ப்பாணத்திற்குள் செல்ல ஒரு தானிக்கு (ஆட்டோ) 1000 ரூபாய் என்ற அதிகப்படியான தொகையைச் செலுத்திப் பத்து மைல் பயணித்தோம். யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பிடமும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் மட்டுமே மகிழுந்துகள் இருந்தன.
1991இல், வவுனியாவுக்கு வடக்கே உள்ள நிலமும் யாழ்ப்பாணமும் அதன் சூழலும், பௌதிகத் தோற்றத்தில் 1989ஐ விட தென்னிலங்கையிலிருந்து இன்னும் தூர விலகி இருப்பதாகத் தோன்றியது. அது நடைமுறையில் மற்றொரு நாடாக இருந்தது. போர் வன்முறையின் சான்றுகள் அதிகமாகக் காணப்பட்டன. பொருளாதார வளர்ச்சி முடங்கியிருந்தது. யாழ்ப்பாணம் பொருளாதார முற்றுகையின் கீழ் இருந்தது. மருத்துவப் பொருட்கள் கூடத் தடை செய்யப்பட்டிருந்தன. மக்கள் உணவை விலைக்கு வாங்குவதைவிடத் தாங்களாகவே பயிரிட்டனர். ஆனால் உள்ளூர் மீன் கொழும்பையும் விட மலிவாக இருந்தது. சமையலுக்கு விறகு பயன்படுத்தப்பட்டது. குளியலறைத் தொட்டிகளை நிரப்பக் கிணறுகளிலிருந்து தண்ணீர் கையால் இறைக்கப்பட்டது. குடும்பங்களிடம் பேட்டரிகள் இருந்தால் (அவையும் தடை செய்யப்பட்டிருந்தன) அவர்கள் சில வானொலிச் செய்திகளைக் கேட்க முடிந்தது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உந்துருளிகளில் மண்ணெண்ணெய் கொண்டுவரப்பட்டது. யாழ்ப்பாணத்தின் சாலைகள் உந்துருளிகளுக்கே உரியதாக இருந்தன. முதன்மைச் சந்திப்புகளில் புலிகளின் போக்குவரத்துக் காவல்துறையால் அவை ஒழுங்குபடுத்தப்பட்டன. அரசாங்கத்தின் எறிகணை வீச்சு வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. எறிகணையின் சத்தம் கேட்டதும் மக்கள் தற்காலிகப் பதுங்கு குழிகளுக்குள் விரைந்தனர். நான் அங்கு இருந்தபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள அனைவரும், மிக ஏழைகளைத் தவிர, தங்களின் இரண்டு பவுன் நகைகளை அல்லது அதற்கு இணையான தொகையை புலிகளின் ‘போராட்டக் காரணத்திற்காக’ வழங்கக் கோரப்பட்டனர். இப்பணத்தைத் திரும்பத் தருவதாகக் கூறி இந்த ‘வரிக்கு’ ரசீதுகள் வழங்கப்பட்டன. திருட்டு, பாலியல் வல்லுறவு, போதைப்பொருள் கடத்தல், பிற குற்றங்களைத் தடுக்கும் கடுமையான சட்ட ஒழுங்கும் அங்கு இருந்தது. நான் பேசியவர்கள் சிங்கள மேலாதிக்க அச்சுறுத்தலுக்கு எதிராக யாழ்ப்பாணப் பண்பாடு காட்டும் எதிர்ப்புக் குறித்து பெருமிதம் கொண்டனர். மற்றவர்கள் சிலர் விரக்தியையும் வெளியிட்டனர்.
1989ஐப் போலவே, யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளைத் தவிர சிங்கள நடமாட்டம் இருக்கவில்லை. ஊர்காவற்துறை அண்மையில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருந்தது. கொழும்பிலிருந்து ஒரு கத்தோலிக்கச் சிங்கள அருட்சகோதரி ஒரு மாதம் தங்குவதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் வேறு யாரும் வரவில்லை. கிறிஸ்தவத் தேவாலயங்களும் இந்துக் கோவில்களும் இயங்கி வந்தன. அவற்றில் சில அகதிகளுக்குத் தஞ்சம் அளித்தன. பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியிலும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன. நாங்கள் தானியில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும்போது, வீதியில் வண்ணக் கொடிகள் கட்டப்பட்டு, தெய்வங்களின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு இந்துத் திருவிழா எங்களை வரவேற்றது. நகரத்தில் சாய் பாபாவின் படங்களும் ஏராளமாக இருந்தன. ‘யாழ்ப்பாணத்தில் இரு வழிபாட்டு நாயகர்கள் இருக்கிறார்கள், ஒருவர் சாய் பாபா, மற்றவர் (தமிழ் ஈழ விடுதலைப்) புலிகளின் தலைவர் பிரபாகரன்’ என்று எனது நாட்குறிப்பில் எழுதினேன். அரசாங்கத்தின் குண்டுகள், எறிகணைகளிலிருந்து வழிபாட்டுத் தலங்களும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிரிம்மர் மண்டபம், அடைக்கல அன்னை தேவாலயம் பற்றிய எனது முன்சொன்ன குறிப்புகளும் இதை நிரூபிக்கின்றன.3 1991 இல், யாழ்ப்பாணம் ஒரு தமிழ் நிலமாக இருந்தது. ஆனால் இராணுவம் நகரத்தை நெருங்கியதால் அதன் சமூகங்கள் சிங்களப் பௌத்த மேலாதிக்க அச்சுறுத்தலுடன் வாழ்ந்தன.
பதினெட்டிற்கும் கிட்டவான ஆண்டுகள் தொடர்ந்த தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளுக்கும் போர்களுக்கும் பின்னர் சண்டை முடிவுக்கு வந்திருந்தது.4 எனது பயணத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1996இல் யாழ்ப்பாணம் இராணுவத்தால் மீண்டும் கைப்பற்றப்பட்டிருந்தது. புலிகள் பின்வாங்கியபோது, பல குடியிருப்பாளர்களும் அவர்களுடன் வெளியேறினர். வெளியேறியவர்கள் பாதுகாப்பாகத் திரும்பலாம் என்று இராணுவம் உறுதியளித்தபோது, அந்த வாக்குறுதி ஆழமற்றதாக நிரூபிக்கப்பட்டது (Harris 2018, p. 172). அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் காணாமல் போதல்களும் கடத்தல்களும் நிகழ்ந்தன. நான் 1999இல் இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியபோது, யாழ்ப்பாணப் பகுதியில் இரண்டு மனிதப் புதைகுழிகள் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவை 1996ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகள் இருந்தன (Harris 1999, pp. 2–3). 2002இல் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது, ஒரு குறுகிய கால அமைதி நிலவியது. அந்த நேரத்தில் சில சிங்களப் பௌத்தர்கள் வடக்கிற்கு திருப்பயணம் வந்தனர். ஆயுத மோதல் முடியும் வரை யாழ்ப்பாணம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தங்கள் தலைநகரைக் கிளிநொச்சிக்கு மாற்றியிருந்தனர்.
1996க்குப் பிறகு யாழ்ப்பாணக் குடாநாட்டின் இராணுவக் கட்டுப்பாடு, முதன்மையாகப் பௌத்த அடையாளங்கள் தொடர்பாக, அப்பகுதியின் மத நிலப்பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இராணுவ முகாம்களுக்கு அருகிலோ அல்லது உள்ளேயோ, இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளிலோ புத்தர் சிலைகள் வைக்கப்பட்டன. மேலும் பௌத்தத் திருப்பயணத் தலங்கள் புதுப்பிக்கப்பட்டுக் ‘கண்டறியப்பட்டன’. உதாரணமாக, 2012இல், யாழ்ப்பாணத்தின் பொது மருத்துவமனைக்கு பின்னால் உள்ள விக்டோரியா வீதியில் தானாக முளைத்திருந்த போதி மரத்திற்கு அருகில் 1996க்குப் பிறகு இராணுவத்தால் வைக்கப்பட்ட இரண்டு பௌத்த வழிபாட்டுத் தலங்கள் எனக்குக் காட்டப்பட்டன. தமிழர்களின் எதிர்ப்பை ஏற்று 2017ஆம் ஆண்டளவில் அவை அகற்றப்பட்டன. மேலும் 1997 டிசம்பரில், கடற்படையினர் அனுராதபுரத்தின் போதி மரத்தின் ஒரு கிளையை குடாநாட்டின் கடற்கரையில் உள்ள ‘தம்பகொல படுன’வில் (ஜம்புகோளப் பட்டினம் என்ற சம்பில் துறை) அல்லது மாதகலில் நட்டனர். புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளையை ஏந்தி வந்த சங்கமித்தா கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்த இடத்தில்தான் இறங்கியதாக நம்பப்படுகிறது (Perera 2016, p. 40; Harris 2018, p. 213). யாழ்ப்பாணத்தின் நகரின் மத்தியில் இருந்த நாக விகாரையை மீண்டும் கட்டியெழுப்பும் பணியும் தொடங்கியது. எனவே, 1996க்குப் பிறகு பௌத்தச் சின்னங்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பின. இருப்பினும் தெற்கிலிருந்து பொதுவான சிங்களப் பௌத்தர்கள் 2002 இன் போர்நிறுத்தத்தின் போது தவிர மற்ற நேரங்களில் விலகியே இருந்தனர். 2009இல் ஆயுத மோதல் முடிவுக்கு வந்தது. அதன்போது, நைனாதீவு (தமிழ்), நாகதீப (சிங்களம்) போன்ற மரபான பௌத்தப் பயணத் தலங்கள் பயணிகளைப் பெறத் தொடங்கியதால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத நிலப்பரப்பு மேலும் மாறியது. இருப்பினும், கிறிஸ்தவ, இந்து வழிபாட்டுத் தலங்களும் இக்காலத்தில், ஒரு வகையான மதங்களுக்கு இடையிலான போட்டி என்ற வடிவில் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டன (Harris 2018, pp. 215–18).
3. சிங்கள பௌத்தக் கற்பனைகள்
1977ஆம் ஆண்டில், மானிடப் புவியியலாளர் யி-ஃபு குவான் (Yi-Fu Kuan) ஓர் உலகப் பார்வையின் இடஞ்சார்ந்த கூறுகளைப் ‘புராண இடம்’ (Mythical Space) என்று அழைத்தார். புராணங்கள், தோற்றக் கதைகள், சமூக வரலாறுகள் ஆகியவை ஓர் இடத்தில் வெளிப்படுத்தப்படும் போக்கை குவான் இதற்குச் சான்றாகச் சுட்டிக்காட்டினார். வெளி என்பது சமூக வகையில் கட்டமைக்கப்பட்டது என்றால் (Lefebvre [1974] 1991), இந்தக் ‘கட்டமைப்பிற்குள்’ நிபந்தனைக் காரணியாக இருப்பன, வெளியின் மீது திட்டமிடப்பட்டு அதில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள புராணங்களும் வரலாறுகளும் ஆகும் (Harris 2018, p. 3). இது மதத்திற்குப் பயன்படுத்தப்படும் போது, ஒற்றை மத உலகப் பார்வையின் வெளிசார்ந்த வெளிப்பாடுகள், ஆன்மீகம் சார்ந்த கூறுகளை மட்டுமல்லாமல், வரலாறுகளையும் கதையாடல்களையும் உள்ளடக்கியுள்ளன. இது அவற்றை ‘அடையாளம், அதிகாரம், பிறரைச் சேர்த்தல், விலக்குதல், இனச் சமூக உறவுகளின் ஊடாடல் ஆகியவற்றுடன் மேலெழச் செய்கிறது’. தற்போது பார்வையாளர்களால் பார்க்கப்படும் கந்தரோடை, இலங்கையில் உள்ள சிங்களப் பௌத்த சமூகத்தின் ஒரு சக்திவாய்ந்த பிரிவினரால் தகைமை பெற்றுள்ள, ஒரு குறிப்பிட்ட மதக் கற்பனையின் வெளிசார்ந்த வெளிப்பாடாகும் (Harris 2018, p. 3). இது அதன் வரலாற்றில் பங்குகளைக் கொண்ட மற்றையப் பண்பாட்டு, நெறி சார்ந்த மக்களை விலக்கும் ஒரு ‘புராணிக வெளியாக’ மாறியுள்ளது.
தற்போது கந்தரோடையில் ஆதிக்கம் செலுத்தும் மதக் கற்பனையானது, இலங்கை முழுவதையும் புத்தருக்குப் புனிதமானதாக, புத்தரின் உடலாகவே பார்க்கிறது. இது வம்சப் பாரம்பரியத்தில் உள்ள, குறிப்பாக மகாவம்சத்தில் உள்ள கதையாடல்களால் ஈர்க்கப்பட்டது. உதாரணமாக, மகாவம்சத்தின் முதல் அதிகாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தர், தீவுக்கு மூன்று முறை வான்வழியாக விஜயம் செய்ததை விவரிக்கிறது. அதில் ஒன்று வடக்கில் உள்ள நயினாதீவிற்கு ஆகும். இந்தப் பிற கதையாடல்கள் இலங்கையைப் பௌத்த ‘வரலாற்றால்’ சூழ்கின்றன. இதன் மூலம் தீவைப் பௌத்தத்திற்கு என அவை உரிமை கோருகின்றன. மேலும் அதன் நீட்சியாகச் சிங்கள பௌத்தர்களுக்கும் என உரிமை கோருகின்றன. ஏனெனில், வடக்கில் தமிழ்ப் பௌத்தர்கள் இருந்திருக்கலாம் என்ற உண்மையை இந்தக் கற்பனை உள்ளேற்பதில்லை. இலங்கையின் இன மோதலின் போது, குடிச் சமூக அமைப்புகளும் தாராளமய அரசியல்வாதிகளும், அவர்களில் சிலர் பௌத்தர்கள், சிக்கலை வேறு வகையில் அணுகினர். புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதற்கு ஆதரவளித்த பௌத்தர்களிடம் முன்வைப்புக்களைச் செய்வதற்கு அவர்கள் மனித உரிமை உரையாடல்கள், சமகால அரசியல் கோட்பாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட வாதங்களை அதற்காக அவ்வப்போது பயன்படுத்தினர். பல்லின, பன்மதச் சமூகங்களில் அதிகாரப் பகிர்வுக்கான பல, உலகளாவிய மாதிரிகளின் அடிப்படையில், இன மோதலுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான ஆதரவைப் பெறுவதே அவர்களைப் போன்றவர்களின் நோக்கமாக இருந்தது. பௌத்தர்களில் ஒரு சிறுபான்மையினரே அவர்களைப் போன்றவர்களின் முன்வைப்புகளால் ஈர்க்கப்பட்டனர். அதற்கு இந்த மேற்குறிப்பிட்ட பௌத்தக் கற்பனையே காரணமாக இருந்தது. அதன் வலுவான வெளிசார்ந்த கூறுகளைக் கொண்ட இக்கற்பனை, இந்தக் காலத் தாராளமய அரசியல் கோட்பாட்டை விட மிகவும் வலுவானதாக நிரூபிக்கப்பட்டது.6 1990களில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் அதிகாரப் பகிர்வு முன்மொழிவுகளை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முடியாமல் போனதற்கும் இக்கற்பனையே ஓரளவு காரணமாக இருந்தது. புத்தரினாலும், பௌத்த ஒழுங்கமைப்பின் கீழும் பிரபஞ்ச ரீதியாகக் கட்டளையிடப்பட்டு வழங்கப்பட்டது இலங்கை என்பது அவர்கள் கற்பனை. அதன் ஒற்றுமையை உடைக்கும் ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ (Union of Regions) என்ற சொல்லாடலுக்குச் சில பௌத்தத் துறவிகளும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு பௌத்தத் தலைவரான மத்தும பண்டார, இந்த முன்மொழிவுகள் ‘பெரும் தேசத்துரோகம்’ என்று கூறினார். ஏனெனில் தீவின் ‘பிராந்திய ஒருமைப்பாட்டை’ சீர்குலைப்பது பௌத்தத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பது அவர் நிலைப்பாடு (Bandara 2000, p. 12; quoted in Harris 2018, pp. 179–184).
4. கந்தரோடை பற்றிய ஆய்வு
நான் 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் இலங்கையின் வடக்குப் பகுதிக்குக் களப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். எனது 2018ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையில் (Harris 2018, பக். 177, 208–9) சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்த கந்தரோடை குறித்த ஆய்வுத் தகவல்களை விரிவுபடுத்த, இந்தப் பயணங்களையும் இரண்டு முக்கிய வெளியீடுகளையும் அடிப்படையாகக் கொள்கிறேன். ஒன்று ஒரு தமிழ் அறிஞரால் எழுதப்பட்டது; மற்றொன்று சிங்கள பௌத்த தேசியவாதக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. அவை முறையே, சிவ. தியாகராஜா எழுதிய ‘Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE—800 CE’ (பண்டைய யாழ்ப்பாணத்தின் காந்தரோடை நாகரிகம்: கி.மு. 500 – கி.பி. 800), எல்லாவல மேதானந்த தேரர் எழுதிய ‘The Sinhala Buddhist Heritage in The East and North of Sri Lanka’ (இலங்கையின் கிழக்கு, வடக்கில் சிங்களப் பௌத்த மரபு) ஆகிய நூல்கள் ஆகும். இவை இரண்டும் ஒரே தரத்திலானவை அல்ல. ஆசிய, மேற்கத்தியத் தொல்லியல், வரலாற்று ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது முதலாவது நூல். இரண்டாவது நூல், ஆசிரியரின் சொந்தக் களப்பயணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அவரது சிங்களத் தேசியவாதக் கண்ணோட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், இவை ஒவ்வொன்றும் ஒரு பெரிய குழுவின் நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கின்றன. தியாகராஜா, சிங்களத் தேசியவாதக் கண்ணோட்டங்களுக்கு அப்பாற்பட்ட வரலாற்றை நாடும் தமிழர்கள், சிங்களவர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கிறார். மேதானந்த தேரர், இலங்கை ஒரு காலத்தில் முழுமையாகச் சிங்களப் பௌத்த நாடாகவே இருந்தது என்று உறுதியாக நம்புகின்ற, பெருமளவிலான சிங்களப் பௌத்தர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கிறார். உதாரணமாக, மேதானந்த தேரரின் நூலை மொழிபெயர்த்த சிரில் சந்திரசேகர குணவர்தன, தனது ‘மொழிபெயர்ப்பாளர் குறிப்பில்’, இந்த நூலின் முக்கியத்துவம் கருதி, ஒருவித அச்ச உணர்வுடனேயே இதனைத் தான் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் இந்த நூலை ‘மதத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு’ என்று வர்ணித்துள்ளார் (Medhananda 2005, பக். 12). இரு படைப்புகளுக்கும் இடையிலான இந்தச் சமச்சீரற்ற தன்மையை, பின்வரும் புள்ளி ஒன்று மேலும் உறுதிப்படுத்துகிறது. தியாகராஜாவின் படைப்பை என்னால் கொழும்பின் மையப்பகுதியில் உள்ள, நல்ல பெயர் பெற்ற மதச்சார்பற்ற புத்தகக் கடையான ‘விஜிதா யாப்பா’வில் (Vijitha Yapa) கண்டறிய முடிந்தது. அதே சமயம் மேதானந்தாவின் படைப்பை, கொழும்பிலுள்ள மிகப்பெரிய பௌத்த மையங்களில் ஒன்றின் புத்தகக் கடையில் மட்டுமே என்னால் கண்டறிய முடிந்தது.
கந்தரோடைத் தொல்பொருள் தலம் ஏறக்குறைய 3.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது (Thiagarajah 2016, p. 50). இது வடக்கின் முன்னாள் போர் வலயத்தில், பெரும்பான்மையாகத் தமிழர்களும் இந்துக்களும் வாழும், கிறிஸ்தவச் சிறுபான்மையினரையும் கொண்ட பகுதியில் அமைந்துள்ளது. இன்று ஒரு பொதுப் பார்வையாளர் அல்லது திருப்பயணிகள் காண்பது தென்னிலங்கையின் பௌத்த விகாரைகளில் காணப்படும் பல பெரிய தூபிகள் அல்லது தாதுகோபுரங்களைப் போன்ற பாணியில் புனரமைக்கப்பட்ட, ஆனால் அளவில் சிறிய, பௌத்த தூபிகளின் வளாகத்தையாகும். இருப்பினும், இவை ஒரு பெரிய தொல்பொருள் தலத்தின் ஒரு பகுதி மட்டுமேயாகும். கந்தரோடை ஒரு காலத்தில் ரோம் நகருடன்கூட, விரிவான வணிகத் தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய, செல்வாக்குமிக்க நகர்ப்புறக் குடியேற்றமாக இருந்திருக்கிறது என்பதை இந்தத் தலத்தின் கண்டுபிடிப்புகள் நிரூபித்துள்ளன. இருப்பினும், தலத்திற்கு வரும் இப்போதையப் பார்வையாளர்களுக்கு இந்தப் பரந்த சூழலைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை.
நவீன காலத்தில் கந்தரோடையின் ‘கண்டுபிடிப்பு’ இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகளில் ஜே.பி. லூயிஸ் (J.P. Lewis) என்ற பிரித்தானிய சிவில் அதிகாரியினதும், போல் பீரிஸ் (Paul Pieris) என்ற சிங்கள அரசுப் பணியாளரதும் பணிகளுடன் தொடங்கியது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் வல்லிபுரம், சுன்னாகம் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளைக் கண்டுபிடிப்பதில் லூயிஸ் முக்கிய பங்காற்றினார். மேலும் இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் சிங்களப் பௌத்தப் பகுதியாக இருந்தது என்றும் வாதிட்டார் (Lewis 1916). பீரிஸ் தனது கந்தரோடைக் ‘கண்டுபிடிப்பு’ அதே வாதத்திற்கு வலுச் சேர்ப்பதாகக் கூறினார் (Pieris 1917, p. 14, cited in Harris 2018, p. 107). யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பௌத்தத் தலங்களின் இந்தப் பங்கு, அக்காலத்தின் சமகால உரையாடல்களுக்கு வழிவகுத்தது. அவை பிரித்தானிய ஆட்சியாளர்களையும் ஆங்கிலக் கல்வி கற்ற இலங்கையர்களையும் ஈர்த்தன. அதாவது தமிழர்கள் அல்லது சிங்களவர்களில் யார் முதலில் தீவில் குடியேறினர்? சிங்களப் பௌத்தப் பெரும்பான்மையினர் ஒரு காலத்தில் அதன் முழுவதையும் கட்டுப்படுத்தினரா? என்பது போன்ற விவாதங்கள் எழுந்தன. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகளுக்கு முன்பே, தென்னிந்தியர்களுக்கு எதிரான போர்களின் பதிவுகள், சிங்கள மக்கள் ‘ஆரியர்கள்’, தமிழர்கள் ‘திராவிடர்கள்’ என்ற கூற்றுகளின் அடிப்படையில், இலங்கையின் காலனித்துவ உணர்வுக்குள் ‘தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்கள்’ என்ற கதையாடல் இருந்தது (Harris 2018, pp. 101–7). எனவே, லூயிஸ் போன்ற பிரித்தானிய அதிகாரிகளும் அவர்களது இலங்கையின் சக ஊழியர்களும் நாட்டின் வடக்கில் உள்ள பௌத்த எச்சங்களை, சிங்களவர்கள் ஒரு காலத்தில் வடக்கைக் கட்டுப்படுத்தி அங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றாக விளக்க முற்பட்டனர்.
சுதந்திர இலங்கைக்குள் 1972இல் தொல்பொருள் திணைக்களம் கந்தரோடையில் புதுப்பிப்புப் பணிகளைத் தொடங்கியபோது, லூயிஸ், பீரிஸ் ஆகியோரின் தீர்ப்புகள் உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்டன (Uduwara 1990, p. 175; Harris 2018, p. 177).7 அதாவது கந்தரோடை இலங்கையின் சிங்களத் தெற்கில் உள்ள, பௌத்தப் பண்பாட்டுடன், குறிப்பாக அனுராதபுரத்தின் பௌத்தப் பண்பாட்டுடன் தொடர்ச்சியைக் கொண்டிருந்தது என்று கருதப்பட்டது. எனவே, பல தூபிகளின் அடித்தளங்கள் தென்னிலங்கைக்கு ஏற்பப் புத்தாக்கப்பட்டன. அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள மிஹிந்தலை என்ற தலத்தில் காணப்படுவதைப் போன்ற மென்மையான, மணி வடிவ அமைப்பு உருவாக்கப்பட்டது. அங்குதான் இலங்கைக்குப் பௌத்தம் வந்து சேர்ந்ததாக அவர்கள் பாரம்பரியம் கூறுகிறது (Uduwara 1990, p. 175; Harris 2018, p. 177).
2012இல் ஆயுத மோதல் முடிவடைந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் நான் முதன்முறையாக இத்தலத்திற்குச் சென்றபோது, வெளியில் நின்ற எனது தானி ஓட்டுநரைத் தவிர நான் தனியாகவே இருந்தேன்.8 இந்தத் தலத்தை இலங்கை இராணுவத்தின் மூன்று உறுப்பினர்கள் கண்காணித்து வந்தனர். நான் மட்டுமே அங்கு வந்திருந்த ஒரே பார்வையாளர். வேறு சில பொதுமக்களும் அங்கு இருந்தனர். ஆனால் அவர்கள் இராணுவத்தின் கூட்டாளிகளாகத் தோன்றினர். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து ஒரு தகரக் கட்டமைப்பைச் சுட்டிக்காட்டி, நான் காலணிகளைக் கழற்ற வேண்டும் என்று கூறினார். அந்தக் கட்டடம் ஒரு தற்காலிகப் பௌத்த வழிபாட்டுத் தலம் என்பதையும், நான் முதலில் அங்கு வழிபாடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதையும் நான் விரைவில் உணர்ந்தேன். அதன் பின்னரே நான் புதுப்பிக்கப்பட்ட தூபிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். போதி மரத்தின் கீழ் ஒரு பலகையுடன் கூடிய மற்றொரு வழிபாட்டுத் தலமும் இருந்தது. அது தலத்தின் வரலாற்றைச் சிங்களத்தில் வழங்கியது. அது கூறியவற்றின் சில பகுதிகளை நான் சுருக்கமாகத் தருகிறேன்:
“வரலாற்றுச் சிறப்புமிக்க கதுருகொட பழமையான விகாரையின் கடந்த கால வரலாறு புத்தரின் காலம் வரை செல்கிறது. மீட்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், வண்ணம் பூசப்பட்ட ஓடுகளின் துண்டுகள், அனுராதபுரம், பொலன்னறுவைக் கால ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. கண்டிக் காலத்தில் விகாரைகளின் பட்டியலில் இது கதுருகொட விகாரையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த விகாரை பதினாறாம் நூற்றாண்டில் தமிழ் மன்னன் சங்கிலியின் கொடூரமான செயல்களால் அழிக்கப்பட்டது.”
“சூலோதரன், மகோதரன் ஆகிய இரு மன்னர்களுக்கு இடையிலான தகராறைத் தீர்த்து வைத்த பின்னர், புத்தர் ஓய்வெடுப்பதற்காகக் கதுருகொடவிற்கு விஜயம் செய்தார் என்று நம்பப்படுகிறது. இந்தத் தலத்திலிருந்து மீட்கப்பட்ட புத்தர் சிலைகள், பிற கலைப்பொருட்கள் யாழ்ப்பாண தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.”
“சிங்களப் பௌத்தத்தின் கடந்த கால வரலாற்றின் அடையாளமான இந்தப் பழமையான கதுருகொட விகாரை, ஒரு தேசிய பாரம்பரியமாக எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும் (நன்கொடை: சேதுமிய கம்யூனிகேஷன்ஸ், மாத்துகம).”
நான் தலத்திற்கு அருகில் நடக்க அனுமதிக்கப்பட்டபோது, எனது வழிகாட்டி 1972 என்ற ஆண்டு ஒரு தூபியின் அடித்தள வளையங்களில் செதுக்கப்பட்டிருந்ததைப் பெருமையுடன் காட்டினார். இந்தத் தலம் ஒரு மதச்சார்பற்ற அரசாங்க அமைப்பான தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. ஆனாலும் இந்த முதல் பயணத்தில் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது என்னவென்றால், ஒரு பார்வையாளராகிய நான் அதை ஒரு திருப்பயணத் தலம் போல நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டேன்.
2015இல் எனது இரண்டாவது விஜயத்தின் போது, நான் ஒரு இலங்கை நண்பருடன் பயணித்தேன். இத்தலம் தொடர்ந்து இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டு வந்த போதிலும், சூழல் 2012ஐ விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. முதலாவதாக, தீவின் தெற்கிலிருந்து பேருந்துகளில் வந்த பௌத்த சுற்றுலாப் பயணிகள் பலர் அங்கு இருந்தனர். இரண்டாவதாக, 2012இல் நான் போய்ப் பார்வையிட வேண்டும் எனக் கேட்கப்பட்ட தற்காலிக, தகரத்தால் வேயப்பட்ட வழிபாட்டுத் தலம், பெரும்பாலும் இராணுவத்தால் மேம்படுத்தப்பட்டிருந்தது. அது ஒரு பக்கத்தில் திறந்தவெளி வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டிருந்தது. போதி மரத்தின் கீழ் இருந்த வழிபாட்டுத் தலம் இன்னும் அங்கேயே இருந்தது. ஆனால் இந்த முறை அதைச் சுற்றியும் பௌத்தக் கொடிகள் கட்டப்பட்டு, வழிபாட்டின் தெளிவான மையமாக இருந்தது. காலணிகளைப் பொறுத்தவரை, சிங்களச் ‘சுற்றுலாப் பயணிகளில்’ சிலர் தங்களின் காலணிகளைக் கழற்றினர், இராணுவ வழிகாட்டிகள் பூட்ஸ் அணிந்திருந்தனர், என்னிடம் காலணிகளைக் கழற்றுமாறு கேட்கப்படவில்லை. எனது நண்பரின் உதவியுடன் இராணுவ வழிகாட்டிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு என்ன கூறுகிறார்கள் என்பதையும் என்னால் கேட்க முடிந்தது. அது எல்லாவல மேதானந்தவின் கருத்துகளைப் பெரிதும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. சுருக்கமாக, இந்தத் தலம் ஒரு காலத்தில் சிங்கள மக்களைக் கொண்ட ஒரு சிங்கள பௌத்த ராச்சியத்தின் பகுதியாக இருந்தது என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. இந்த ராச்சியம் தமிழ்ப் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது. அவர்கள் பல சிங்களவர்களைக் கொடூரமாகக் கொன்று நாட்டின் வடக்கிலிருந்து பௌத்தத்தை ஒழித்தனர். போர் முடிந்த பின்னரே, இந்தத் தலம் மீண்டும் சிங்கள பௌத்தத்திற்காக இப்போது உரிமை கோரப்படுகிறது என்று கூறப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, இராணுவத்தினர் இத்தலத்தில் ஒரு முழுமையான பௌத்த விகாரை அல்லது மடாலயத்தைக் கட்ட விரும்பியதாகவும், ஆனால் தொல்பொருள் திணைக்களம் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவும் எனக்குக் கூறப்பட்டது. மேலும் தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சிக்காகக் கூடுதல் நிலத்தைப் பெற விரும்பியதாகவும், ஆனால் உள்ளூர்த் தமிழ் நில உரிமையாளர்கள் அதை எதிர்த்ததாகவும் கூறப்பட்டது. இந்தத் தலம் தமிழ்ச் சமூகங்களின் மத்தியில் அமைந்திருந்த போதிலும், இரு சந்தர்ப்பங்களிலும் நான் இந்து அல்லது கிறிஸ்தவ தமிழ்ப் பார்வையாளர்களை அங்கே பார்க்கவில்லை. அது ஓர் ஒற்றைப் பண்பாட்டு, ஒற்றை மதத் தலமாக, ஒரு சிங்களத் தலமாகவே இருந்தது. நடைமுறையில், சுற்றியுள்ள தமிழ்ச் சமூகங்கள் அதன் மீதான தங்களின் உரிமையிலிருந்து பறிக்கப்பட்டிருந்தனர்.
5. கந்தரோடையின் மாறுபட்ட வரலாறுகள்
எல்லாவல மேதானந்த, சிவ தியாகராஜா ஆகியோரால் முன்வைக்கப்படும் கந்தரோடை பற்றிய முரண்பட்ட முன்னோக்குகளை, உந்தும் கதையாடல்களை ஆராயலாம். இதனால் காலனித்துவத்துக்குப் பிந்தைய, ஆயுத மோதலுக்குப் பிந்தைய சமூகத்தில் இந்த முரண்பட்ட கதையாடல்களின் உணர்ச்சிபூர்வமான வலுவையும் அவற்றின் மோதலைத் தூண்டும் சாத்தியக்கூறுகளையும் நிரூபிப்பதே எனது நோக்கமாகும்.
எல்லாவல மேதானந்த, 2004இல் ‘சிங்கள உருமய’வின் (சிங்களப் பாரம்பரியக் கட்சி) வாரிசாக உருவான சிங்களத் தேசியவாத அரசியல் கட்சியான ஜாதிக ஹெல உருமயவின் தலைவர். அவர் தன்னை ஓர் ஆசிரியர், கல்வியாளர், தொல்பொருள் ஆய்வாளர், அர்ப்பணிப்புள்ள அறிஞராக வரையறுக்கிறார். தனது ஓய்வுக்கு முன், அவர் சப்ரகமுவ மாகாணத்தின் கல்விப் பணிப்பாளராக இருந்தார். ஆயுத மோதல் முடிவுக்கு வருவதற்கு முன்பு, இராணுவத்தின் உதவியுடன், அவர் பௌத்தத் தொல்பொருள் தலங்களைக் கண்டறிவதற்காகத் தமிழர்களும் இந்துக்களும் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்குப் போர்ப் பகுதிகளுக்குப் பயணித்தார். முழுத் தீவிலும் ஒரு முற்போக்கான சிங்கள பௌத்த நாகரிகம், நீதியான முறையில் ஆட்சி புரிந்தது. தென்னிந்தியாவிலிருந்து தமிழர்கள் படையெடுத்து இந்த அரசியல் நிலையை அழிப்பதற்கு முன்பு, இதை நிரூபிப்பதே அவரது நோக்கமாக இருந்தது.
அவர் உருவாக்கிய வாதத்தின் தூண்கள் சுருக்கமாகப் பின்வருமாறு:
- சிங்களப் பௌத்தர்கள் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்கள். அவர்கள் ஒரு காலத்தில் இலங்கை முழுவதையும் ஆண்டவர்கள்.
- இலங்கையில் உள்ள தமிழர்கள் படையெடுப்பாளர்களின் வழிவந்தவர்கள். சிலர் வணிகர்களாக வந்தனர்.
- இலங்கையில் உள்ள அனைத்துப் பௌத்தத் தலங்களும் சிங்கள பௌத்தத் தலங்கள் ஆகும்.
- எனவே கந்தரோடை ஒரு சிங்களப் பௌத்தத் தலம்.
- கந்தரோடை உட்பட வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுகள், தென்னிந்தியாவிலிருந்து வந்த தமிழ் வணிகர்களுக்கு இடமளிப்பதற்காகச் சிங்களவர்களால் எழுதப்பட்டவை. பூர்வீகத் தமிழ் குடியிருப்பாளர்களால் எழுதப்பட்டவையல்ல (Medhananda 2005, p. 26)
மேதானந்த இதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் தமிழர்களின் ஆதிக்கம், பிரிவினைவாதப் போர் காரணமாக 45 சிங்களப் பௌத்தத் தலங்கள் இடிபாடுகளாகக் கைவிடப்பட்டுக் கிடப்பதாக அவர் கூறினார். அதில் ஒன்று கந்தரோடை ஆகும் என்பது அவர் கருத்து. கிழக்கைப் பொறுத்தவரை, 100 பௌத்த மடாலயங்களின் மேல் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளதாக அவர் வாதிட்டார் (Fernando 2016, p. 267; Medhananda 2005, pp. 26, 42, 48; Harris 2018, p. 153). வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிங்களப் பௌத்தத் தலங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைந்தது 500 ஆகும் என்பதும் அவர் கருத்து. இது தொல்பொருள் திணைக்களத்தின் 276 என்ற எண்ணிக்கையை எதிர்க்கிறது (Medhananda 2005, p. 10, cited in Fernando 2016, p. 268 and Harris 2018, p. 153). ஆரிய சிங்களக் குடியேற்றவாசிகள் வட இந்தியாவிலிருந்து வந்து பூர்வீக மக்களுடன் கலந்து, பழகி, திருமணம் செய்துகொண்டு ‘சிங்கள’ இனத்தை உருவாக்கினர் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் இவர்கள் தென்னிந்தியத் தமிழ் மக்களாக இருந்திருக்கலாம் என்பதை அவர் சேர்க்கவில்லை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது நூல்களில் ஒன்றில், செழித்தோங்கிய வணிகம், ‘தடையற்ற நிர்வாகக் கட்டமைப்பு’ ஆகியவற்றைக் கொண்ட ஒரு கற்பனையான சித்திரத்தை அவர் வரைந்துள்ளார். அதில், ஒற்றையாட்சியைக் கொண்ட சிங்களப் பௌத்த அரசின் கீழ், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் அனுராதபுரத்திலிருந்து ஆளப்பட்டதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன (Medhananda 2005, pp. 19–25). தீபவம்சம், மகாவம்சம் போன்ற இலங்கையின் வம்சப் பாரம்பரிய நூல்களைப் பயன்படுத்தி, இந்த ஒற்றையாட்சி அரசு தென்னிந்தியப் படையெடுப்பாளர்களிடமிருந்து அச்சுறுத்தல்களைச் சந்தித்தது என்றார். அத்துடன் இத்தீவு பிராந்திய ஆட்சியாளர்களைக் கொண்டிருந்தது என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். இருப்பினும், தீவு முழுவதும் ஒரு பொதுவான பண்பாட்டில் இணைக்கப்பட்டிருந்தது என்பதைத் தொல்பொருள், கல்வெட்டுச் சான்றுகள் நிரூபிப்பதாக அவர் வலியுறுத்தினார்.
“வடக்கிலும் கிழக்கிலும் பௌத்த நடவடிக்கைகள் சிங்கள மன்னர்களால் மேற்கொள்ளப்பட்டன என்ற உண்மை, இவ்விரு மாகாணங்களும் எப்பொழுதும் நாட்டின் பிரதம மன்னரின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் இருந்தன என்பதை நிரூபிக்கிறது. அவை முற்காலத்தைச் சேர்ந்தவையா அல்லது பிற்காலத்தைச் சேர்ந்தவையா என்பதைப் பொருட்படுத்தாமல், வடக்கு, கிழக்கு, தெற்கில் உள்ள கல்வெட்டுகள் எழுத்து, மொழி, பண்பாட்டில் ஒரே மாதிரியான பாணியைப் பிரதிபலிக்கின்றன. (Medhananda 2005, p. 25)”
கந்தரோடையில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட ஒரு பானை ஓட்டை அவர் மேற்கோள் காட்டினார், அதில் ‘தாதா’ (அல்லது தத்தா) என்று அழைக்கப்படும் ஒரு நபரைக் குறிப்பிடும் ஒரு கல்வெட்டு இருந்தது. மேலும், ‘அதே காலகட்டத்தில் ரோஹணவில், அதாவது தீவின் தெற்கில், ஒரு ‘தாதா’ என்பவரால் சங்கத்திற்கு ஒரு குகை நன்கொடையாக வழங்கப்பட்டது’ என்று அவர் கூறினார். இது அதே நபராக இருந்திருக்கலாம் என்பதையும், அல்லது குறைந்தபட்சம், அந்த இரண்டு பகுதிகளும் ஒரு பொதுவான பண்பாட்டில் இணைந்திருந்தன என்பதையும், அந்தக் கிண்ணம் தாதாவால் துறவற சமூகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார்; ஆனால் நேரடியாகக் கூறவில்லை.

மேதானந்தர், துல்லியமான மேற்கோள்களைக் குறிப்பிடாமல், இலங்கையைப் பார்வையிட்ட இரு ஐரோப்பியர்களின் கருத்துகளை முன்வைக்கிறார்: போர்த்துக்கீசிய வரலாற்றாசிரியர் டி கெய்ரோஸ் (de Queyroz. இறப்பு: 1688), டச்சு போதகர் பிலிப்பஸ் பல்தேயஸ் (Philippus Baldaeus. 1632–1671) ஆகியோரே அவர்கள். மேதானந்தரின் கூற்றுப்படி, டி கெய்ரோஸ், யாழ்ப்பாணம் ‘கோட்டை மன்னனின் சகோதரர்களால்’ ஆளப்பட்டது என்று எழுதியுள்ளார். இது, ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் இலங்கையின் தெற்குப் பகுதியிலிருந்து ஆளப்பட்டது என்பதை நிரூபிக்கிறது.9 மேலும், பல்தேயஸ் இலங்கையின் வடக்குப் பகுதியில் இருந்த பிரிவுகளைப் பட்டியலிடும்போது பயன்படுத்திய சொற்கள் சிங்கள மொழியின் சாயலைக் கொண்டுள்ளன; இவை சிங்களக் குடியிருப்புகள் என்பதையே உணர்த்துகின்றன என்று மேதானந்தர் வாதிடுகிறார் (Medhananda 2005, ப. 28).10 கந்தரோடையில் உள்ள தூபிகளைப் பற்றி அவர் இவ்வாறு எழுதியுள்ளார்:
“தோற்றத்தில், இந்த ஸ்தூபிகள் முற்கால அனுராதபுரக் காலத்தின் கட்டடக்கலை, சிற்பக்கலைப் பாணிகளைக் காட்டுகின்றன. மையத்தில் எந்தச் சிற்ப வேலைப்பாடுகளும் இல்லாத சந்திரக்கற்கள், செங்கற்கள், பாதச்சுவடுக் கற்கள் என்பன இத்தலம் முற்காலத்தைச் சேர்ந்தது என்பதற்குச் சான்றாக அமைகின்றன. இந்த ஸ்தூபிகள் அனைத்தும் ஒரு மைய நினைவுச்சின்னத்தைச் சுற்றி அமைந்திருந்தன என்பது என் கருத்து (Medhananda 2005, ப. 271).”
மேதானந்தாவின் எழுத்துகள் அவரது வரலாற்றின் பிரதிநிதித்துவம் உண்மை என்ற முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. மேலும், சிங்களப் பௌத்தப் பண்பாட்டு எச்சங்கள் அழிக்கப்பட்டதாக அவர் கருதியதன் மீதான சோகத்தால் மட்டுமல்ல, சிங்களப் பௌத்தத்திற்கு எதிராக எழக்கூடிய பிற அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஆத்திரத்தாலும் அவரால் அவை அப்படிக் குறிக்கப்படுகின்றன. 2005ஆம் ஆண்டில், அவர் முஸ்லிம் ‘தீவிரவாதிகள்’ (Medhananda 2005, p. 30), புலிகள் அமைப்பு (e.g., Medhananda 2005, p. 40), பெயரிடப்படாத ‘சிங்களவர் அல்லாத மக்கள்’ (Medhananda 2005, pp. 33–34), பெயரிடப்படாத ‘அந்நியர்கள்’ (Medhananda 2005, p. 32) ஆகியோரை ஒரு பட்டியலில் குறிப்பிட்டார். மேதானந்தாவின் பார்வையில் இவர்கள் அனைவரும் சிங்களப் பௌத்தத்திற்குரிய இடத்தை அழித்த குற்றவாளிகள் ஆவர். அவரது படைப்புகளில் உணர்ச்சியின் அளவு மறைமுகமாகவும், படிப்படியாகக் கூடும் வகையிலும் வெளிப்படுகிறது; இதற்கு, சிங்களவர் அல்லாதவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் கைவிடப்பட்டுக் கிடக்கும் சிதைவுகளை அவர் தொடர்ந்து குறிப்பிடுவது சான்றாக அமைகிறது. அதேவேளையில், ‘சாதாரணத் தமிழர்கள் அமைதிக்காகவும் சகவாழ்வுக்காகவும் எப்போதும் முழு மனதுடன் எங்களிடம் கைகளை நீட்ட விரும்புகிறார்கள்’ என்பதையும் அவர் உறுதிப்படுத்தத் தயங்கவில்லை (Medhananda 2005, p. 273). இந்தப் பிரதிநிதித்துவத்தின் உணர்வுபூர்வமான ஈர்ப்பு, பல இலங்கைப் பௌத்தர்களிடையே மிகவும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இது இழப்பையும் சோகத்தையும் மட்டுமல்லாமல் ஆத்திரத்தையும் தூண்டுவதாக இருக்கிறது.
சிவ. தியாகராஜா மனித மரபியல், தொல்பொருள் துறையில் சிறப்பு ஆர்வம் கொண்டவர். தொழிலில் ஒரு மருத்துவர் ஆவார். கந்தரோடை பற்றிய அவரது எழுத்தில், அவர் உலகளாவிய தொல்பொருள் ஆய்வுகள், எஸ். கிருஷ்ணராஜா, எஸ்.கே. சிற்றம்பலம் போன்ற கல்விசார் தமிழ்த் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் பணிகளைப் பயன்படுத்தியுள்ளார். இலங்கை அரசால் கந்தரோடைத் தொல்பொருள் தலத்திற்கு வழங்கப்பட்ட ‘கதுருகொட புராதன விகாரை’ என்ற பெயருக்கு ஆசிரியர் பதிலளித்தபோது, அவரது பணியின் பின்னணியிலுள்ள நிகழ்ச்சி நிரல் வலுவாக வெளிப்படுகிறது. இந்தத் தலைப்பை ஆதரிக்கும் எந்தவொரு ‘கல்வெட்டு அல்லது வரலாற்றுச் சான்றுகளும்’ இல்லை என்று கூறிய அவர், மேலும் குறிப்பிட்டதாவது:
“அரசாங்கம் இதனை ஒரு தொடக்ககாலச் சிங்களக் குடியேற்றம் என்று உரிமை கோருகிறது. இதனை ஒரு சிங்களப் பௌத்த மையமாக முன்வைப்பது யாழ்ப்பாணத் தமிழர்களின் பண்டைய வரலாறு, மரபை வேண்டுமென்றே திருடிப் பறிக்கும் ஒரு செயலாகும். கந்தரோடையில் தொல்பொருள் திணைக்களத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள் ஒருபோதும் யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவதில்லை. எப்போதும் அவை கொழும்பு அல்லது அனுராதபுரம் அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்படுவதன் மூலம் இந்தக் கருத்து வலுப்படுத்தப்படுகிறது (Thiagarajah 2016, p. 392).”
தியாகராஜாவின் நிலைப்பாடு பின்வரும் வாதங்களைக் கொண்டுள்ளது:
- சிங்கள மொழி, சிங்களவர்கள் ஓர் இனக்குழுவாக உருவாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கந்தரோடை தொடக்கத்தில் இந்தியாவின் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்ச்சியைக் கொண்ட ஒரு பெருங்கற்கால நகரமாக இருந்தது.
- கந்தரோடை பண்டைய நாகநாட்டின் தலைநகராக இருந்தது. இது திருகோணமலை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுகள், இன்று வன்னி என்று அழைக்கப்படும் பகுதி உட்படத் தீவின் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியிருந்தது (Thiagarajah 2016, p. 268).
- கந்தரோடை தெற்காசியாவின் ஒரு வர்த்தக மையமாக, இந்து – பௌத்த வணிக நடவடிக்கைகளின் மையமாக இருந்தது.
- கந்தரோடையில் உள்ள பௌத்த எச்சங்கள் தமிழ் மகாயான பௌத்தத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. இது பெருங்கற்காலப் பண்பாட்டுடன் மேலெழுந்தது. இந்தியாவின் அமராவதி பௌத்தப் பாரம்பரியத்தைப் போன்றது.
- இந்தத் தமிழ்ப் பௌத்தம் பொதுவான சகாப்தத்தின் ஏழாம் நூற்றாண்டின் இறுதி வரை யாழ்ப்பாணத்தில் பரவலாக இருந்தது.
- இந்தத் தமிழ்ப் பௌத்தம் அனுராதபுரத்தின் தேரவாத பௌத்தர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தது (Thiagarajah 2016, p. 256). இது மகாவம்சம் ‘தமிழர்களுக்கும் பௌத்தத்திற்கும் உள்ள தொடர்பை’ குறிப்பிடத் தவறியதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது (Thiagarajah 2016, p. 368).
- கந்தரோடையும் வடக்கின் பிற பௌத்தத் தலங்களும் தொடக்ககாலத் தமிழ்ப் பண்பாட்டைச் சுட்டிக்காட்டும் சான்றுகள் (கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்கள், தமிழ்ப் பிராமி எழுத்துகள்) சமகாலத்தில் சிங்கள வரலாற்றாசிரியர்கள், அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்படுகின்றன (Thiagarajah 2016, p. 280).
இந்தக் கருத்துகளை முன்வைப்பதற்காக, அவர் பிரிட்டிஷ் காலனித்துவச் சிந்தனை முறைக்கு எதிராக ஒரு வாதத்தை முன்வைத்தார். ‘ஆரிய’ இனத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்றும், ‘திராவிட’ இனத்தைச் சேர்ந்த தமிழர்கள் படையெடுத்து வந்தவர்கள் என்றும் கருதும் அந்தக் காலனித்துவக் கண்ணோட்டத்திற்கு மாறாக, தற்கால மரபணுவியல் ஆய்வுகளை அவர் சுட்டிக்காட்டினார். அந்த ஆய்வுகளின்படி, “இலங்கையிலுள்ள சிங்களவர்கள், தமிழர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோரின் முன்னோர்கள், 30,000 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்காலத்தின் போது தெற்காசியாவில் வாழ்ந்த இடைக்கற்கால (Mesolithic) மக்களின் நேரடி வாரிசுகள் ஆவர்; அக்காலத்தில் இலங்கை இந்திய நிலப்பகுதியின் ஓர் அங்கமாகவே இருந்தது” (தியாகராஜா 2016, பக். xi). இதன் மூலம், இந்த 85 சதவீத மக்கள் ‘ஆரிய’ உலகத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல, மாறாக தென்னிந்தியாவோடு தொடர்ச்சியான பிணைப்பைக் கொண்டவர்கள் என்பதை அவர் உணர்த்தினார். ‘கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களின் நிரந்தரக் குடியிருப்புகள் எதுவும் இருக்கவில்லை’ என்று வாதிடும் சிங்கள அறிஞர்களை அவர் விமர்சித்தார். அவர்களின் சொந்த வரலாற்றுப் பதிவுகளிலேயே, ஆரம்பகால அனுராதபுரக் காலத்தில் ‘குறைந்தது பத்து தமிழ் ஆட்சியாளர்கள்’ இருந்ததாகவும், இலங்கையை ஒன்றிணைத்த சிங்கள வீரரான துட்டகைமுனு (Dutthagāmini), இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்த 32 ‘தமிழ்க் குறுநில மன்னர்களை’க் கொன்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார் (தியாகராஜா 2016, பக். ix–xii). அவரது வாதம் இதுதான்: இத்தகைய குறுநில மன்னர்கள் நிச்சயமாக நிரந்தரக் குடிகளாகவே இருந்திருக்க வேண்டும்; மேலும், அவர்களின் ஆட்சியில் ‘தமிழ் குடிமக்களும்’ இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி (தியாகராஜா 2016, பக். xii). சில பக்கங்களுக்குப் பிறகு, அவர் இவ்வாறு எழுதியுள்ளார்:
“யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில், குறிப்பாகக் கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்களில் பௌத்த எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கந்தரோடை முதலிய பிற இடங்களில் உள்ள இந்தப் பௌத்த எச்சங்கள், அவை பௌத்தத் தன்மையைக் கொண்டவை என்பதற்காக மட்டுமே சிங்களப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டு, பெருமளவில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அதேசமயம், இப்பகுதிகளில் உள்ள பௌத்த எச்சங்கள், கலைப்பொருட்களுக்கு இடையிலேயே தெற்காசியாவின் பண்பாட்டுடன் தொடர்புடைய ‘கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள்’ (Black and Red Ware) காணப்படுகின்றன. இவை பற்றி எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. பொது யுகத்திற்கு முந்தைய, பிந்தைய ஆரம்ப நூற்றாண்டுகளில், திராவிடர்களிடையே இருந்த மதங்களில் பௌத்தமும் ஒன்று என்ற உண்மையை, கல்வி கற்ற சிங்கள அறிஞர்களே புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கும்போது, சாதாரண மக்கள் அறியாமையில் இருப்பதற்காக அவர்களைக் குறை கூற முடியாது (தியாகராஜா 2016, பக். xiv).”
1970இல் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த ஒரு தொல்பொருள் ஆய்வுக் குழுவின் பணியை மேற்கோள் காட்டி அவர் இந்தக் கருத்துகளை உறுதிப்படுத்தினார். அக்குழு, ‘கந்தரோடை குடியிருப்புகள் தென்னிந்தியாவின் பெருங்கற்காலப் பண்பாட்டின் ஒரு நீட்சியாகும்’ என்றும், கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பின்படி ‘கந்தரோடையில் இந்தப் பண்பாடு கி.மு. 1300இல் தொடங்கியது’ என்றும், இது இலங்கைக்குப் பௌத்தம் வருவதற்கு ஒரு முழு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் நிரூபித்திருந்தது (தியாகராஜா 2016, ப. xv). பின்னர், இந்த ஆய்வு தமிழ்த் தொல்பொருள் ஆய்வாளர்களாலும் வரலாற்றாசிரியர்களாலும் எவ்வாறு மேம்படுத்தப்பட்டது, ஆனால் சிங்களக் குறிப்புகளில் எவ்வாறு அடக்கப்பட்டது என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
அவரது வாதத்தின் மையப்பகுதி என்னவென்றால், கந்தரோடையில் உள்ள தூபிகளின் அடித்தளங்கள் தென்னிலங்கைப் பௌத்தப் பாணியில் புதுப்பிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஏனெனில் அவை வேறுபட்ட வடிவ அமைப்புகளைக் கொண்ட கட்டமைப்புகளைத் தாங்கியிருக்கலாம். அவை தூபிகளை விட ஒரு புதைகுழி வளாகமாக, அதாவது ‘பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பௌத்தமயமாக்கப்பட்ட வடிவம்’ ஆக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று தியாகராஜா வாதிடுகிறார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அமராவதி, நாகார்ஜுனகொண்டா ஆகிய இடங்களில் பெருங்கற்காலப் புதைகுழிகளின் மேல் சிறிய தூபிகளின் கொத்தாகக் கட்டப்பட்டிருந்த பௌத்தத் தலங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார். எனவே, தொல்பொருள் திணைக்களத்தின் புதுப்பித்தல் மீதான அவரது தீர்ப்பு:
“அரசாங்கம் வேண்டுமென்றே ஒரு பண்பாட்டு நினைவுச் சின்னத்தை உருவாக்கி, அதைச் சிங்கள-பௌத்தப் பண்பாட்டின் அடையாளமாக முன்வைக்கிறது. அதே வேளையில், பௌத்தக் கலைப்பொருட்களுக்கு இடையில் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்களைப் புறக்கணிக்கிறது. இது வரலாற்றை மாற்றி எழுதுவதற்கும், உண்மையான கடந்த காலத்தை அறியாத பொதுமக்களையும் உலகச் சமூகத்தையும் ஏமாற்றுவதற்குமான ஓர் எடுத்துக்காட்டாகும் (Thiagarajah 2016, p. 251).”
இலங்கையின் பல்வேறு புவியியல் பகுதிகளுக்கு இடையிலான தொடர்ச்சியை நிரூபிக்கும் சான்றாக மேதானந்தர் குறிப்பிடும் ‘தாதா’ (Data) என்பவருடைய பாண்ட ஓட்டைப் பொறுத்தவரை, அது ஒரு துறவியின் பிச்சைப்பாத்திரம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று தியாகராஜா கூறுகிறார். ‘தாதா’ என்பது வங்காளத்தில் பொதுவாக இருந்த ஒரு பெயர்; எனவே, இது இந்தியாவின் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு வணிகருக்குச் சொந்தமான கிண்ணமாக இருந்திருக்கக்கூடும் (தியாகராஜா 2016, ப. 78).
எனவே, தியாகராஜாவின் எழுத்துகளில், கந்தரோடை என்பது இந்தியாவின் பெருங்கற்காலப் பண்பாடு, இந்துப் பண்பாடுகள், தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரு தரப்பினரின் பௌத்தம் எனப் பல்வேறு பண்பாட்டு அம்சங்களை உள்ளடக்கிய ஓர் இடமாக வெளிப்படுகிறது. இலங்கையில் மகாயான, தேரவாத பௌத்தப் பிரிவுகளுக்கிடையிலான மோதல்கள் நிகழ்ந்த இடமாகவும் இது இருந்திருக்கலாம் என்று அவர் வாதிடுகிறார்.11 ஜொனாதன் வால்டர்ஸின் கலைச்சொல்லைப் பயன்படுத்திக் கூறுவதானால், இது ஒரு ‘பன்மதக் களம்’ (Multireligious Field) ஆகும் (வால்டர்ஸ் 1995).
மேதானந்தரின் விவரிப்பைப் போலவே தியாகராஜாவின் விவரிப்பும் உறுதி, சோகம், சீற்றம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. அவர் மேற்கோள் காட்டும் கந்தரோடையின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின் உண்மைத்தன்மை குறித்த உறுதி, சிங்களப் பெரும்பான்மையினருக்குள் உள்ள சிலரால் இந்தக் கண்டுபிடிப்புகளைத் திரிக்கத் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பது குறித்த சோகம், இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டு மரபைப் பறிக்கும் ஒரு வரலாற்றுத் திரிப்பால் இத்தனை பேர் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்த சீற்றம் ஆகியனவே அவை.
6. இரு எழுத்தாளர்களையும் ஒன்றிணைத்தல்
ஒவ்வொருவரும் தொல்பொருள் சான்றுகளைக் குறிப்பிடுகின்றனர். மேதானந்தா இலங்கையின் வடக்குக் கிழக்கில் இராணுவ உதவியுடனான தனது சொந்தப் பயணங்களிலிருந்து சான்றுகளைப் பெறுகிறார். தியாகராஜா மேற்கத்திய தொல்பொருள் ஆராய்ச்சி, தொழில்முறைத் தமிழ்த் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் பணிகளிலிருந்து சான்றுகளைப் பெறுகிறார். ஒவ்வொருவரும் வெவ்வேறு சமூகத்தின் குரலை வெளிப்படுத்துகின்றனர். ஒவ்வொருவருக்கும், யாழ்ப்பாணக் குடாநாடு அவர்களின் மதப் பண்பாட்டு அடையாளத்தின் உணர்ச்சிபூர்வமான கூறுகளை வெளிப்படுத்துகிறது, உள்ளடக்குகிறது. கூடுதலாக, ஒவ்வொருவரும் இனப் போரின் போது ஏற்பட்ட இன்னல்கள், பாதிக்கப்பட்ட உணர்வுகளால் ஈர்க்கப்பட்ட தப்பெண்ணங்களைத் தங்களின் பணிகளுக்குக் கொண்டு வருகிறார்கள். கந்தரோடை அவர்களின் முரண்பட்ட கதையாடல்களைத் தாங்குவதாக மாறுகிறது. இருப்பினும், தற்போதைய சூழலில், தலத்தில் வெளிப்படுத்தப்படும் கதையாடல் மேதானந்தாவினுடையது ஆகும். இது தலத்தின் இராணுவ வழிகாட்டிகளால் சிங்களப் பௌத்தப் பயணிகளுக்குத் தெரிவிக்கப்படும் வரலாற்றின் மூலம் வலுப்படுத்தப்படுகிறது. இராணுவ வலிமையினாலும் சிங்கள மேலாதிக்கம் கொண்ட அரசினாலும் ஆதரிக்கப்படும் ஒற்றைக் கற்பிதத்தின் ஆதிக்கம், பன்மத, பன்முகப் பண்பாட்டுத் தளமொன்று உருவாவதற்கான வாய்ப்பைத் தடுத்து நிறுத்துகிறது.
7. முடிவுரைக் கருத்துகள்
போருக்குப் பிந்தைய, காலனியப் பிந்தைய சூழல்களில், பல்வேறுபட்ட வரலாற்றுச் சித்தரிப்புகள் (Narrative Multiplicity) இருப்பதை அங்கீகரிக்கத் தவறும்போது, எதிர்கால மோதல்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதை எனது ஆய்வு காட்டுகிறது. தமிழர்களிடையே பௌத்தம் செல்வாக்குடன் இருந்திருக்கலாம் என்ற கருத்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவுடன் பௌத்தம் பிணைக்கப்படாத காலம் ஒன்று இருந்திருக்கலாம் என்ற கருத்தோ இலங்கையின் தென்பகுதியில் வாழும் பௌத்தர்களிடையே பெரும் எதிர்ப்பைச் சந்திக்கிறது. இதைக் கண்டு நான் வியப்படைந்தேன். வடபகுதியைச் சேர்ந்த தமிழர்களின் ‘மகாயான’ பௌத்தத்திற்கும், நாட்டின் வடமேற்கு, மத்திய, தென்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்களின் ‘தேரவாத’ பௌத்தத்திற்கும் இடையே ஒரு காலத்தில் மோதல் இருந்திருக்கலாம் என்றால், அந்த நினைவுகள் பெரும்பாலான சிங்கள பௌத்தர்களிடமிருந்து முற்றிலுமாக அழிந்துவிட்டன. ஏனெனில், முழுத் தீவும் ஒரு காலத்தில் சிங்கள பௌத்தத்திற்கு மட்டுமே உரியதாக இருந்தது என்ற அவர்களின் நம்பிக்கையை இந்த உண்மை தகர்த்துவிடும். இலங்கையைப் பற்றிய இத்தகைய பிம்பத்திற்கு விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும், சில பௌத்தர்கள், ஒட்டுமொத்தமான சிங்களப் பௌத்தர்களின் இருப்புக்கே விடுக்கப்படும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர் என்று சொன்னால், அது மிகையாகாது.
மறுபுறம், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தச் சிங்களப் பௌத்தப் பிரதிநிதித்துவத்தைக் கேள்விக்குள்ளாக்க மிகக் குறைந்த அதிகாரமே உள்ளது. நான் குறிப்பிட்ட தியாகராஜாவின் அறிவார்ந்த பணிகள் போன்றவற்றைத் தவிர வேறு வழியில்லை. இது சிங்களத் தரப்பில் ஆங்கிலம் கற்ற தாராளமய உயரடுக்கினரால் மட்டுமே படிக்கப்படும்.
எனவே, கந்தரோடை பற்றிய ஆய்வு இலங்கையின் போருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பிற்குள் இருக்கும் சில அடிப்படைப் பதற்றங்களையும், எதிர்கால மோதல்களுக்கான விதைகளையும் தெளிவாகக் காட்டுகிறது. கந்தரோடையைச் சுற்றியுள்ள அதிகார உறவுகள் பன்முகத்தன்மைக்குப் பதிலாக ஒற்றைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதால், நிலைத்தன்மைக்கு வழிவகுக்காது. மாறாக, அவை ஏமாற்றம், ஆத்திரம், அதிகாரம் பறிக்கப்பட்ட உணர்வை வளர்க்கின்றன. இந்த உணர்வுகளின் விளைவுகள் இலங்கைக்கு அதிக விலை வைப்பதாக அமையலாம். இந்த ஆய்வு, பொதுவாக, காலனியப் பிந்தைய, போருக்குப் பிந்தைய சமூகங்களில், பன்முகத்தன்மை அங்கீகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டால் செழிக்கக்கூடிய மத வெளிகளின் மீது, கதையாடல் மேலாதிக்கத்தைத் திணிப்பதன் ஆபத்துகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அடிக்குறிப்புகள்:
1. நான் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட பயணங்கள் பற்றிய பதிவுகள், வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களைத் தவிர, அக்காலத்தில் நான் எழுதிய வெளியிடப்படாத நாட்குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டவை. அந்த நாட்குறிப்புகளில், யாழ்ப்பாணத்தில் நாங்கள் சந்தித்த மக்களுடனான உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2. 2012, 2015 ஆம் ஆண்டுகளில் களப் பயணங்களின்போது, தமிழ் மனித உரிமைப் பணியாளர் ஒருவருடன் மேற்கொண்ட தனிப்பட்ட உரையாடல்.
3. போரின்போது இலங்கையில் இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டமை தொடர்பான பார்வைக்கு (Neiminathan 1998) ஐப் பார்க்கவும்.
4. அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட முறிவுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களுக்கு (Keethaponcalan 2009) ஐயும், 1994/1995ஆம் ஆண்டுகளில் தோல்வியடைந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரிப்புக்கு (Rajanayagam 2006) ஐயும் பார்க்கவும்.
5. இந்தச் சூழலில் டேனியல் கென்ட்டின் (Daniel Kent) ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. 2004 முதல் 2007 வரையான காலப்பகுதியில், இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய சிங்களப் பௌத்தர்களுக்குப் போதனைகள் வழங்கிய அல்லது அவர்களுடன் சமயச் சடங்குகளை நடத்திய பௌத்த பிக்குகளை மையமாகக் கொண்டு அவர் தனது கலாநிதிப் பட்ட ஆய்வுக்கான களப்பணியை மேற்கொண்டார். போரை நியாயப்படுத்துவதையோ, அதனை ஒரு தார்மீக நன்மையாகப் போற்றுவதையோ இந்தப் பிக்குகள் அரிதாகவே செய்தனர் என அவர் முடிவுசெய்தார். எனினும், தம்மம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த சூழலில், பௌத்தத்தைப் பாதுகாக்க வேண்டியிருந்ததால், பௌத்தத்தின் தார்மீக நெறிகளை முழுமையாகப் பின்பற்றுவது சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டு, சிங்கள பௌத்தர்கள் போரில் ஈடுபடுவதை அவர்கள் ஊக்குவித்தனர். யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் செயற்பாடுகளும் இத்தகைய போதனைகளின் வழிநடத்தலுக்கு உட்பட்டிருந்தன. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக (Kent 2015) ஐப் பார்க்கவும்.
6. இந்தக் கற்பிதத்தை (Harris 2018, pp. 13–24, 145–59) நான் ஆராய்ந்துள்ளேன். இதற்காக (Kemper 1991; Roberts 2004; De Silva Wijeyeratne 2014) ஆகியோரின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளேன்.
7. தியாகராஜாவின் கூற்றுப்படி, இதற்கு முன்னதாகவே தொல்லியல் திணைக்களத்தினால் 1946, 1956, 1964ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன (Thiagarajah 2016, p. 391).
8. இந்த இரண்டு பயணங்கள் குறித்தும் எனது 2018ஆம் ஆண்டு ஆய்வு நூலில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (Harris 2018, pp. 208–9). இக்கட்டுரையில், எனது கள ஆய்வுக் குறிப்புகளை இன்னும் விரிவாகப் பயன்படுத்தியுள்ளேன்.
9. டி கெய்ரோஸ் இந்தியாவில் 53 ஆண்டுகள் வாழ்ந்த போர்த்துக்கேய இயேசு சபைத் துறவியாவார். 1686ஆம் ஆண்டில், இலங்கையில் போர்த்துக்கேயரின் வரலாறு குறித்த விரிவான நூலொன்றை அவர் எழுதி முடித்தார். அந்நூல் அக்காலத்தில் வெளியிடப்படவில்லை. இலங்கை இயேசு சபைத் துறவியும் வரலாற்றாசிரியருமான எஸ்.ஜி. பெரேராவின் (S.G. Perera) மொழிபெயர்ப்புடன், 1930ஆம் ஆண்டிலேயே அது இலங்கை மக்களுக்குக் கிடைக்கப்பெற்றது (De Queyroz 1930).
10. (Medhananda 2005, p. 28) இல் ‘Valigama, Tenmarachchi, Vadamaracci and Pacciyarapalla’ என்றும், (Baldaeus [1672] 1960, p. 318) இல் ‘Beligamme, Tenmarache, Waddemarache and Patchiarapalle’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
11. இனப்போரின் போது அனைத்துச் சமூகங்களும் எதிர்கொண்ட துன்பங்கள் குறித்த விவரிப்புக்கு, எடுத்துக்காட்டாக (Hoole 2001) ஐப் பார்க்கவும்.
உசாத்துணை மூலங்கள்
Baldaeus, Philippus. 1960. A True and Exact Description of the Great Island of Ceylon. Translated by Peter Brohier. Maharagama: Saman Press. First published 1672.
Bandara, Sandaruwan Madduma. 2000. Buddhism under Siege. The Sunday Times, March 12, p. 11.
Chandraprema, C. A. 1991. Sri Lanka: The Years of Terror, The JVP Insurrection 1987-1989. Colombo: Lake House Bookshop.
De Queyroz, Fernão. 1930. The Temporal and Spiritual Conquest of Ceylon. Translated by Simon Gregory Perera. Colombo: Government Printer.
De Silva, Kingsley M. 1998. Reaping the Whirlwind: Ethnic Conflict, Ethnic Politics in Sri Lanka. New Delhi: Penguin.
De Silva Wijeyeratne, Roshan. 2014. Nation, Constitutionalism and Buddhism in Sri Lanka. London and New York: Routledge.
Fernando, Jude Lal. 2016. Liberating the Conflicts from ‘History’ in the island of Lanka: Buddhist Perspectives. In History as a Challenge to Buddhism and Christianity. Edited by Elizabeth J. Harris and John O’Grady. Sankt Ottilien: EOS, pp. 245-87.
Gunaratne, Rohan. 1990. Sri Lanka A Lost Revolution?: The Inside Story of the JVP. Kandy: Institute of Fundamental Studies.
Harris, Elizabeth J., ed. 1999. Sri Lanka: Making Peace Possible. London: Churches Together in Britain and Ireland.
Harris, Elizabeth J. 2018. Religion, Space and Conflict in Sri Lanka: Colonial and Postcolonial Perspectives. London and New York: Routledge.
Hoole, Rajan. 2001. Sri Lanka: The Arrogance of Power. Myths, Decadence and Murder. Colombo: University Teachers for Human Rights (Jaffna).
Keethaponcalan, S. I. 2009. Conflict and Peace in Sri Lanka: Major Documents with an Introductory Note on Each Document. Colombo: Kumaran Book House.
Kemper, Steven. 1991. The Presence of the Past: Chronicles, Politics and Culture in Sinhala Life. Ithaca and London: Cornell University Press.
Kent, Daniel. 2015. Preaching in a Time of Declining Dharma: History, Ethics and Protection in Sermons to the Sri Lankan Army. Contemporary Buddhism 16: 188-223. [Cross Ref]
Lefebvre, Henri. 1991. The Production of Space. Translated by Donald Nicholson-Smith. Oxford: Blackwell. First published 1974.
Lewis, J. P. 1916. Some Notes on Archaeological Matters in the Northern Province. The Ceylon Antiquary and Literary Register II: 94-99.
Mëdhānanda, Ellawala. 2005. The Sinhala Buddhist Heritage in the East and the North of Shri Lanka. Colombo: Jayakody and Co.
Neiminathan, M. 1998. Destruction of Hindu Temples in Tamil Eelam and Sri Lanka. London: Federation of Hindu Temples.
Perera, Sasanka. 2016. War Tourism in Sri Lanka: Tales from Darker Places in Paradise. New Delhi: Sage.
Pieris, Paul E. 1917. Nagadipa and Buddhist Remains of Jaffna. Journal of the Royal Asiatic Society Ceylon Branch 70: 11-30.
Rajanayagam, P. 2006. Govt-LTTE Negotiations 1994/5: Another Lost Opportunity. In Negotiating Peace in Sri Lanka: Efforts, Failures and Lessons, 2nd ed. Edited by Kumar Rupasinghe. Colombo: The Foundation for Co-Existence, vol. 1, pp. 156-222.
Richardson, John. 2005. Paradise Poisoned: Learning about Conflict, Terrorism and Development from Sri Lanka’s Civil Wars. Kandy: International Center for Ethnic Studies.
Roberts, Michael. 2004. Sinhala Consciousness in the Kandyan Period 1590s to 1815. Colombo: Vijitha Yapa.
Thiagarajah, Siva. 2016. Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800 CE: A Study in Archaeology and Other Disciplines. Colombo and Chennai: Kumaran Book House.
Uduwara, Jayantha. 1990. History of the Department of Archaeology, 1970-1990. In History of the Department of Archaeology. Edited by Nandadeva Wijesekere. Archaeological Department Centenary 1890-1990 Commemorative Series; Colombo: State Printing Corporation, vol. 1, pp. 153-92.
Walters, Jonathan S. 1995. Multireligion on the Bus: Beyond ‘Influence’ and ‘Syncretism’ in the Study of Religious Meetings. In Unmaking the Nation: The Politics of Identity and History in Modern Sri Lanka. Edited by Pradeep Jeganathan and Qadri Ismail. Colombo: Social Scientists Association, pp. 25-54.



