மலையகத்தில் முருக வழிபாடு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

மலையகத்தில் முருக வழிபாடு

August 7, 2025 | Ezhuna

காலனித்துவ காலத்துக்கு முன்னரே வர்த்தக நடவடிக்கைகளோடு இலங்கை தேசத்தில் தென்னிந்தியத் தமிழர்கள் தொடர்புபட்டிருந்தார்கள். அவர்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் என அழைக்கப்பட்ட செட்டிமார்களின் வர்த்தக நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கதாகும். செட்டிமார்களின் வரவு மலையக நகரங்களில் சத்திரங்கள் உருவாகுவதற்கு வழிகோலின. அச்சத்திரங்கள் பின்னாளில் முருகன் ஆலயங்களாக அமையப்பெற்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களின் வரவு இவ்வாறு அமையப்பெற்ற ஆலயங்களின் விருத்திக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கின எனலாம். வர்த்தக நோக்கம் கருதி வருகைதந்த செட்டிமார்கள் நகரங்களில் தாங்கள் தங்குவதற்கான இடங்களைத் தெரிவு செய்து கொண்டார்கள். தென்னிந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட இவர்கள் தற்காலிகக் கொட்டில்கள் அமைத்து, தங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அக்கறை செலுத்தினார்கள். குறிப்பாக இயற்கை கடன்களைக் கழிப்பதற்கு ஏற்ற சூழுல், நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கிணறுகளை அமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள். பின்னாளில் நிரந்தரமான கட்டடங்களை அமைத்தார்கள். பங்காளர்களாகவே வியாபாரத் தாபனங்களை நிறுவி வியாபார முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். தங்கள் தாயகத்தில் இருந்து தங்களுடன் முருகக் கடவுளும் வருகைதந்து அருள் புரிவதாகவே நம்பினார்கள். அதனால் முருகப் பெருமானையும் தங்களில் ஒரு பங்காளராக இணைத்துக் கொண்டுள்ளார்கள். கிடைக்கும் இலாபத்தில ஒரு பகுதியை முருகனுக்காகவும் ஒதுக்கினார்கள். அப்பங்குத் தொகையின் ஊடாகவே முருகன் ஆலயங்களை வரிவுபடுத்தியதோடு ஆலயத்தோடு தொடர்புபட்ட சொத்துகளையும் ஆலயத்தின் பெயரிலேயே வாங்கிக் குவித்தார்கள். மலையகம் எனும் சொல்லாடல் தொடங்கப்படுவதற்கு முன்னரே இப்பகுதிகளில் முருக வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு வலிமை சேர்க்கப்பட்டுள்ளமையை அறியலாம்.

பிரித்தானியக் காலனித்துவத்தில் பெருந்தோட்டப் பொறிமுறையை விருத்தி செய்யும் பொருட்டு தென்னிந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் இன்று வரையில் ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்றே சட்டரீதியாக வகைப்படுத்தப்படுகிறார்கள். கடந்த வருடம் (2023) இவ்வாறு புலம்பெயர்ந்து இருநூறு வருடங்களைப் பூர்த்தி செய்தமை தொடர்பில் கொண்டாட்டங்களாகவும், அனுஷ்டிப்புகளாகவும் இக்கால நகர்வை இச்சமூகத்தினர் அணுகினார்கள். இந்த இருநூறு வருட கால நகர்வில் இம்மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்கள் ஏராளம். புலம்பெயர்வு நிர்ப்பந்தம், அதன் வேதனை, இருப்பின் இசைவாக்கம், ஏனைய இனக் குழுமத்தினர்களின் காழ்ப்புணர்ச்சி, வாக்குரிமைப் பறிப்பு, பிரஜாவுரிமைப் பறிப்பு, ஒப்பந்தங்கள் ஊடாக உறவுகள் துண்டாடப்பட்டமை போன்ற இம்மக்களைச் சிதைத்த செயற்பாடுகள் வருத்தத்திற்குரியவையாகும். சுதந்திரத்திற்கு முன்னரே இந்நாட்டில் இலவசக் கல்வி பற்றிய சிந்தனைகள் மேலோங்கி அதன் செயற்பாடுகள் தொடங்கப்பெற்றன. மாறாக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு அவ்வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, ஐம்பது வருடப் பாய்ச்சலின் பின்னரே அம்மக்கள் தேசிய கல்வி நீரோட்டத்தில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே கிடைக்கப்பெற்ற கல்வி வாய்ப்புகள் ஊடாக உருவான கற்றவர்கள் படைப்பிலக்கிய கர்த்தாக்களாகவும் சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டாளர்களாகவும் உருவாகுகின்றார்கள். அறுபதுகளுக்குப் பின்னர் இவ் எழுச்சி வேகத்தை உற்று நோக்கலாம். இவ்வாறு உருவான தலைமுறையினர்களை ‘ஆத்திரப் பரம்ரையினர்’ எனவும் சிறப்பிப்பார்கள். அவர்களுடைய ஆக்கபூர்வ முன்னெடுப்புகள் ‘மலையகம்’ எனும் எண்ணக்கருவை விருத்தியடையச் செய்துள்ளது. இவ் எண்ணக்கரு குறித்தவொரு பிரதேசத்தை மாத்திரம் வரையறுக்காமல், இந்திய வம்சாவளித் தமிழர்களின் நலன் குறித்த சிந்தனைத் தூண்டலில் பங்குகொள்ளும், பிரதேச எல்லைகளைக் கடந்த அத்தனை சிந்தனையாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கியதாக அமையப்பெறும். ‘மலையகம்’ என்ற சொற்பதம் மீது அதீத நாட்டத்தை இச்சமூகம் கொண்டமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. இச்சமூக அடையாளங்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

இக்கருத்தியலின் பின்னணியிலேயே மலையக இலக்கியம், மலையக நாட்டார் இலக்கியம், மலையகக் கூத்துகள், மலையகக் கவிதைகள், மலையகப் புனைவுகள், மலையக நாடகங்கள் எனப் படைப்பபிலக்கிய வடிவங்கள் விருத்தி பெறுவதையும் அவதானிக்க முடிகிறது. அவ்வாறே மலையகக் கல்வி, மலையக அரசியல் என்றவாறு மலையகச் சமூக அசைவியக்கம் நிலைபெறுகிறது. அதனடிப்படையில் மலையக மக்களின் வாழ்வியலோடு வழிபாட்டு மரபுகள் தனித்துவ அம்சங்களைக் கொண்டமைந்துள்ளது எனலாம். மலையக மக்களின் வரலாற்றுடன் அம்மன் வழிபாட்டுமுறை மிகத்தனித்துவ அம்சத்தோடு வளர்ச்சி பெறுவதை அவதானிக்கலாம். கிராமியத் தெய்வ வழிபாட்டு அம்சத்தில் இயற்கையுடன்கூடிய நேசிப்புத் தன்மைகளை உணரலாம். இவ் அம்மன் வழிபாட்டுடன் இரண்டறக்கலந்த வகையில் வழிபாட்டிற்குரிய தெய்வமாக முருகன் நோக்கப்படுகின்றமை அவதானிக்கத்தக்கது. மலையகத்தில் அம்மன் வழிபாட்டிற்கு முன்னரே முருக வழிபாட்டிற்குரிய தளங்கள் அமையப்பெற்றமை கவனிக்கத்தக்கது. அதன் வழியில் இம்மலையக மக்களோடு முருக வழிபாடு எவ்வகையில் தாக்கம் செலுத்துகின்றது என்பது பற்றிய அவதானம் முக்கியமானதாகும்.

மலையகத்தின் தலைநகராகக் கண்டி நகரை நோக்குவது மிக நீண்டகாலமாகவே கைக்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பின்னணியிலேயே இருநூறு வருடத்திற்கு முன்னரான மலையக மக்களின் புலப்பெயர்வுகளின் போது ‘கண்டிச்சீமை’ என்ற சொல்லாடல் பிரயோகத்தில் இருந்தமை கவனிக்கத்தக்கது. கண்டி என்ற சொல்லுருவாக்கத்தின் பின்னணியில் பின்வரும் சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது. “இலங்கையின் சிவனொளிபாத மலையினைத் தரிசிக்க இந்தியாவில் இருந்து இந்துக்கள் வருகை தருவது வழக்கமாகும். அவ்வாறு வருகைதந்த செங்கந்தன் என்பவர் காட்டுப் பகுதியிலேயே நீண்டகாலம் வாழ்ந்துள்ளார். காடு என்பதை சிங்களத்தில் ‘கெலே’ எனக் கூறுவார்கள். செங்கந்தன் வாழ்ந்த காடு ‘செங்கந்தன் காடு’ என அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே சிங்களமொழிப் பிரயோகத்தில் ‘செங்கந்த கெலே’ என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் ‘செங்கடகல’ எனும் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறே முருகனின் பெயர்களுள் ஒன்றான கந்தன் என்ற சொல் ‘கந்த’ எனும் பிரயோகத்திற்கு வந்துள்ளது. அதன் பிரயோகத்திலேயே ‘கண்டி’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இந்நகரம் இன்று கண்டி என அழைக்கப்படுகிறது. கண்டி நகரில் காணப்படும் கோயில்களில் செங்கந்தன் வழிபட்ட கோயில் ‘நாதர்’ கோயில் எனவும், கண்டி இராசதானியின் இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கன் என்ற ‘கண்னுசாமி’ வழிபட அமைத்த கோயிலே கதிரேசன் கோயில் எனவும் கூறப்படுகிறது. கண்டியில் அமைந்துள்ள தலதாமாளிகை உட்பட எம்பக்க தேவாலயம் போன்றன முருகக் கடவுளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.” முருகன் இலங்கையின் கதிர்காமத்தில் வேடர் இனத்தின் வள்ளியை மணந்தார் என்பது வழக்காற்றியல் நம்பிக்கையாகும். அதன்வழியில் கதிர்காமம் முருகன் ஆலயத்தின் உருவாக்கமும் வழிபாட்டு அம்சங்களும் கவனிக்கத்தக்கவைகளாகும். 

கதிர்காம முருகன் கோயிலை விஜயன் அமைத்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. ‘கந்த உபாத’ ஊடாக துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடிப்பதற்காக கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்தி வைத்தது தொடர்பிலும் அறிகிறோம். எல்லாளன், துட்டகைமுனு யுத்தத்தில் வெற்றி பெற்ற துட்டகைமுனு கதிர்காமக் கந்தன் கோயிலை அமைத்தது தொடர்பாகவும் அல்லது அக்கோயிலை விருத்தி செய்தது தொடர்பிலும்  ஊகிப்பதற்கு ‘கந்தன் உலா’ வழிவகுக்கிறது. கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் பூர்வீகம் சார்ந்த முரண்பட்ட பார்வைகள் தொடர்ந்தும் நிலவி வருகின்றன; பௌத்தவாதக் கோணத்தில் வரலாறுகள் திரிபுபெறும் செயல்கள், இனவாதச் சூழலில் முக்கிய அங்கமாக அமைகின்றன எனக் கூறலாம். கண்டியின் தலதாமாளிகையின் வருடாந்த உற்சவமும் (பெரஹரா), கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த உற்சவமும் பௌத்த மத அனுட்டானங்களுடனே கையாளப்படுகிறது. இருந்தபோதிலும் தமிழர்களின் தனித்துவமான கிரியைகளைத் தவிர்க்க முடியாமலும் அவை அனுஷ்டிக்கப்படுகின்றமையும் கவனிக்கத்தக்கது. இவ் ஊர்வலங்களில் இந்துக்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட அடையாளங்கள் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. அவற்றில் இராவணன் கொடி, சேவற்கொடி, மயில்கொடி போன்றன குறிப்பிடத்தக்கவைகளாகும். தவில், நாதஸ்வரம் போன்ற தமிழர்களுக்கே உரிய இசைக்கருவிகளின் பாவனையும், கரகம், காவடி போன்ற பக்தி நடனங்களும், விபூதி, சந்தனம், குங்குமம் போன்ற அடையாளங்களும் பயன்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

மலையக நகரங்களில் முருகன் ஆலயங்கள் அமையப்பெற்றிருக்கும். அவ் ஆலயங்களை அமைத்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் செட்டிமார்கள் ஆவர். அவற்றுள் நாவலப்பிட்டி கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், கம்பளை முருகன் ஆலயம், புசல்லாவை முருகன் ஆலயம், கொழும்பில் அமைந்துள்ள முருகன் ஆலயங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும். பல ஆலயங்கள் இன்னமும் செட்டிமார்களின் கண்காணிப்பிலேயே நிர்வகிக்கப்படுகின்றமையும் கவனிக்கத்தக்கது. சில ஆலயங்கள் செட்டியார்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, பொதுமக்கள் பரிபாலிக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இலங்கையின் மலையக மக்களின் வரலாற்றில் நவநாத சித்தர் தொடர்பான நம்பிக்கை மற்றும் அணுகுமுறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அம்மன் வழிபாடு சார்ந்த அவதானத்தில், நவநாத சித்தர் ஆலயத்துடன் தொடர்புடைய நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்டமும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இங்கு அமையப்பெற்றுள்ள நவநாத சித்தர் சிவாலயத்துடன் இணைந்த வகையில் அமையப்பெற்றுள்ள முருகன் ஆலயமும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் தொடர்பு நிலையிலேயே வருடாந்தம் தைப்பூசத் தினத்தில் இவ் ஆலய வளாகத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கப்பட்டு, நாவலப்பிட்டி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நிறைவு செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள குறிஞ்சிக்குமரன் ஆலயம் மலையகத்தில் முருக வழிபாட்டிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. அவ்வாறே, கண்டிக்கு அருகிலுள்ள முருகாகந்த ஆலயம், தற்போது மொரகாகந்த முருகன் ஆலயமாக மாற்றமடைந்தமை தொடர்பான வரலாற்றுச் செய்திகள் கவனிக்கத்தக்கவையாகும். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள — குறிப்பாக நல்லூர் கந்தசாமி கோயிலுடன் — தொடர்புடைய வழிபாட்டு நடவடிக்கைகளுடனான மலையக மக்களின் தொடர்பும் அவதானிக்கத்தக்கதாகும்.

இருநூறு வருடப் புலப்பெயர்வின் பின்னர் மலையகத்தில் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் போன்ற அம்மன் வழிபாட்டுத் தலங்கள் உருவாகின்றன. அதனைத் தொடர்ந்து மலையகத்தில் அம்மன் வழிபாட்டு மரபு தனித்துவத்தைப் பெறுகிறது. இவ்வாறு அமையப்பெற்ற அம்மன் ஆலயங்களில் முருகனுக்குரிய வழிபாட்டுத்தலங்களும் தவிர்க்க முடியாத அம்சங்களாக விளங்குகின்றன எனலாம். அம்மன் திருவிழாக்களிலும் வேல் குத்துதல், தீ மிதித்தல், பறவைக் காவடி எடுத்தல் போன்ற முருக வழிபாட்டிற்குரிய நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஊவா மாகாணத்தை அண்மித்து காணப்படும் தோட்டங்களிலும், பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டங்களிலும், அம்மன் ஆலயங்களைவிட முருகன் ஆலயங்களே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இராகலை முருகன் ஆலயம் குறிப்பிடத்தக்க முருகன் ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றமை கவனிக்கத்தக்கது. ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்திற்கு அடுத்ததாகவே மொனராகலை மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திலேயே கதிர்காமக் கந்தன் ஆலயமும் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்து. மலையக மக்கள், பல தோட்டங்களில் இருந்தும் வருடந்தோறும் கதிர்காம உற்சவத்திற்கு வழிபாட்டிற்காகச் செல்வதைக் கட்டாயக் கடமையாகக் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாத யாத்திரையாகச் செல்லும் வழக்கம் மிக நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. அண்மைக் காலங்களிலும் இவ்வாறு பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்களும் உள்ளனர். கதிர்காமத்திற்குச் செல்ல முன்பே விரதம் அனுஷ்டிக்கும் வழமை காணப்படுகிறது. பின்னர்  கதிர்காமத்தில் இருந்து வீட்டிற்கு வருகைதந்ததன் பின்னர், அடுத்த தினம் விரதம் அனுஷ்டித்து இடும்பன் பூசையுடன் விரதத்தை நிறைவு செய்கின்ற நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. 

எந்தவொரு சமூகத்தின் தொடக்கத்தையும் நாட்டார் பாடல்களில் இருந்தே ஊகித்துக் கொள்ள முடிகிறது. அந்தவகையில் மலையக மக்கள் தொடர்பிலும், அதன் அடிச்சுவட்டை, மலையக நாட்டார் பாடல்கள் ஊடாகவே அறிய முடிகிறது. புலம்பெயர்வு அதன் பின்னரான உழைப்புச் சுரண்டல், துன்பியல் அம்சங்கள், காதல், மகிழ்வு போன்ற இன்னோரன்ன விடயங்களை இப்பாடல்கள் தெளிவுறுத்துகின்றன. அதுபோலவே பல பாடல்கள் இம்மக்களோடு பின்னப்பிணைந்த இறை நம்பிக்கை வழிபாட்டு மரபுகள் தொடர்பிலான அவதானத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றன. இவை மூலமாக இம்மக்களோடு ஆரம்பத்திலிருந்து முருக வழிபாடு நிலைகொண்டிருந்தமையை ஆதாரப்படுத்த முடிகிறது. அவ்வாறான பாடல்களில் அமைந்த பின்வரும் பாடல் வரிகள்,

“குளங்கலங்க தலை முழுகி

கொடி போல ராமமிட்டு

மலை முழங்க பாடி வரும்

மலைப் பழனியாண்டவர்களுக்கு 

தெய்வானை பச்சை நிறம்

வள்ளியம்மை பவள நிறம்

சுப்பையா சோதி நிறம்

துலங்குதையா கதிர்காமம்

வள்ளி அழகுக்கும் – வள்ளி 

வலதுபுறத் தேமலுக்கும்

கூந்தல் அழகுக்கும் வேலவர்

குறவேசம் கொண்டாரோ

காணிக்கை கொண்டு – செல்வமே

கண்டி கதிருமலை போனோமையா

வழியா வழி நடந்து – செல்வமே

வரத்துக்கு போனோமையா”

முருக வழிபாட்டுடன் கொண்ட ஈடுபாட்டை எடுத்துரைப்பதாக அமைகின்றமையை அறியலாம். மலையக மக்களின் நம்பிக்கையில் குறி சொல்லல், குறி கேட்டல் ஆகிய நடவடிக்கைகள் காலங்காலமாகவே முன்னெடுக்குமாற்றைக் காணலாம். அதன்வழியில் மலையக மக்களோடு பூசாரிகள் (கோடாங்கிகள்) மிகுந்த முக்கியத்திற்குரியவர்களாக விளங்கியுள்ளார்கள். மலையகப் பூசாரிகள், மூலிகைகளின் மூலம் உடல்நலச் சிகிச்சைகளை வழங்குவதோடு, மனத்தாக்கங்களைச் சமாளிக்க உளவியல் நோக்கிலான அணுகுமுறைகளையும் பயன்படுத்துவது வியத்தகு அம்சமாகக் காணப்படுகின்றது. முருகனுடைய வேல் அறிவின் அடையாளமாகவே உலகில் நோக்கப்படுகின்றது. அதன் துணைகொண்டு கேள்வி சொல்லும் நடைமுறை மலையகத் தோட்டப்புறங்களில் கையாளப்படுகின்றது. அவ்வாறான முயற்சியில் முருகனின் சக்தியை அழைக்கும் வகையில் அமைந்த பாடல்கள் பல காணப்படுகின்றன. அவ்வாறான பாடல்களில், எடுத்துக்காட்டாக அமைந்த பாடல் ஒன்று பின்வருமாறு அமைகிறது. 

“ஆண்டவா – ஆண்டவா

உன்னைக் கூப்பிட்டேன் – இந்நேரம்

தங்க வடிவேலு – தங்க வடிவேலு

உங்க வண்ண மயிலேறி

என் குடங்கையிலே வந்து நில்லு

உனக்கு பொன்னரச்சு ராமமிட்டால்

பொழுதொருக்கா சொல்லுமென்று

உனக்கு தங்கம் அரைச்சு

தங்க வடிவேலு – தங்க வடிவேலு

உனக்கு தனிராமம் சாத்திவிட்டேன்

உனக்கு வலது புறம் வள்ளியம்மை

உனக்கு இடது புறம் தெய்வானை

நீங்க கவர்ந்த திருமுகத்தால்

கண் பார்க்க வேணுமின்னேன்

வாண்டாம் தருமமில்லை

வாண்டாம் தருமமில்லை

சுவாமி பொய்மை உரையாதே

பொழைகள் வந்து சேருமின்னே

நான் பார்க்குமொரு மந்தையிலே

இன்னொருவன் பார்க்காமே.”

மலையக எதிர்ப்பிலக்கியம் தொடர்பில், மலையக வீதிப்பாடல் யுகம் மிக முக்கிய அவதானத்திற்குரியதாக விளங்குகிறது. இப்பாணியை மலையகத்தின் முதல் பெண் கவிஞரான மீனாட்சி அம்மையார் தொடக்கி வைக்கிறார். 

“தேயிலைத் தோட்டத்திலே – பாரத

சேய்கள் சென்று மாய்கிறார் ஐயோ (தேயிலை..)

ஓயாது நாள் முழுதும் – சதா

ஊழியம் செய்து உடம்பழுத்தே – கெட்ட

நோயால் வருந்தும் மக்கள்

நொந்து நொந்து தினம் நைந்து மாய்கிறார் (தேயிலை)”

எனத் தொடரும் பாடல் வரிகள் மலையக மக்களின் துன்பியல் வாழ்வை நன்கு புலப்படுத்துவதாக அமைகின்றன. இவ்வாறான பாடல் மரபில் கவிஞர்கள் பலர் உருவாகிறார்கள். அவர்களில் பலர் முருகனை வாழ்த்தி பல பாடல்களை உருவாக்குகிறார்கள். அவர்களுள் பெரியாம்பிள்ளை எழுதிய பின்வரும் பாடல் வரிகள் குறிப்பிடத்தக்கதாகும். 

“சுருதி மலை மீது தன்னில் வாழும் 

சுப்ரமணியா உன்னை ஸ்தோத்தரித்தேன்

தோகை மயில் மீதில் ஏறி நீ வாராய்

ஐயா முருகையா

சிக்கந்தன் மலை தன்னில் இருப்போனே முருகா

அக்கந்த தலை தனில் விழிப்போனே

அக மன்னவர் சுகம் எய்திய

பெரியாம்பிள்ளை கவி பாட

ஆனந்தம் மீது ஆனந்தம் ஆனந்தம்.

ஆனை முகனுக்கு இளையோனே

ஞான வடிவேலவனே – ஆறுமுக 

பன்னிரெண்டு கையனே – மத

யானைமேல் பவனிவரும் மெய்யனே

வையகம் புகழும் ஊவா மாகாணத்தின் 

ஒரு பகுதி டயகாமம் தோட்டத்திலே

ஆண்டவா நாங்க பட்ட பாட்ட

கேட்டுப்பாரு தாண்டவா.”

இப்பாடல் காம்போதி இராகத்தில் அமைய வேண்டும் எனவும் பாடலாசிரியர் குறிப்பிட்டுளார். மேற்குறித்த பாடல்களைப் போன்று அமைந்த பல பாடல்கள் மலையக மக்களின் பாதிப்பு நிலைகளையும், எழுச்சிக்குரிய சிந்தனைகளையும் விதைப்பதாக அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும். 

மலையக மக்களின் பாரம்பரியம் குறித்த அவதானத்தில், மலையகத்திற்கே உரித்தான தனித்துவமான கூத்துகள், முக்கூத்துகளாக வரையறுக்கப்படுகின்றன. காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் – சங்கர் ஆகிய கூத்துகளே இம்முக்கூத்துகள் என்ற வரையறைக்குள் அடங்குகின்றன. இக்கூத்துகளில் முருகன் பற்றிய சித்தரிப்புகளும் பாத்திரவார்ப்பும் தவிர்க்க முடியாதவையாகின்றன. கணபதியை முதல் வணக்கத்திற்குரிய பாங்குடன் அணுகும் தன்மையில், அதன் தொடர்ச்சி நிலையில், முருகக் கடவுளும் தவிர்க்க முடியாத அங்கமாக நிலைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காமன் கூத்துக் கட்டமைப்புத் தொடர்பில் கந்தபுராணமே அதன் உருவாக்கத்திற்குப் பிரதானமாக அமைகிறது எனலாம். மகாகவி காளிதாசரின் ‘குமார சம்பவம்’ என்னும் இலக்கியம், இந்திய நாகரீக மரபின் தோற்றத்தைப் புவியியல் தொடர்புகளுடன் இணைத்துக்காட்டுவதோடு, இமயமலையின் உருவாக்கம், உயிர்ப் பல்வகைமை குறித்துக் கூறும் கதைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அவ்வாறே, மலையகக் கூத்து மரபுகளின் ஊடாக முருகன் மீதான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டு, முருகன் பாத்திரம் முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது. அதன் தொடர்ச்சி நிலையில் மலையக அரங்கியல் கலையிலும் முருகன் இன்றியமையாத அம்சமாக அமைகின்றார். மலையகத்தில் பிரயோகத்திலுள்ள நடன அமைப்புகளான காவடி, கும்மி, கோலாட்டம் ஆகிய நடனங்களுக்கான பாடல்களிலும் முருகக் கடவுள் தொடர்பான பாடல்கள் இசைக்கப்படுகின்றமை கவனிக்கத்தக்கதாகும். 

தமிழர்களின் கடவுளாகக் கருதப்படும் முருகன், உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் பக்தியோடு வழிபடப்படும் கடவுளாக இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். முருகன் போர்க்கடவுளாகச் சித்தரிக்கப்படுகின்ற நிலையில், தாரகாசுரனை வதம் செய்த நாளாக தைப்பூச தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தத் தினத்திலேயே மலையகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கும் நிகழ்வை மேற்கொள்ளுகின்றனர். பிறந்த பிள்ளைகளுக்கு முதன்முதலில் மொட்டை போடும் வழக்குடன், பெண் பிள்ளைகளுக்காகக் காது குத்தும் நிகழ்வும் இத்தைப்பூச தினத்தில் அனுஷ்டிக்கப்படும் முக்கிய நிகழ்வுகளாகும். இந்தத் தினத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், முருகன் மீது தமிழர்கள் கொண்டுள்ள பக்தி நிலைக்கு எடுத்துக்காட்டாகும். இவ்வாறே பங்குனி உத்தர தினமும் முருகனோடு தொடர்புபட்ட முக்கிய நாளாக விளங்குகின்றது. அந்நாளிலும் மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கார்த்திகை தீபம், கந்தசஷ்டி போன்ற முக்கிய நாட்களும், விரதங்களும் மலையக மக்களிடத்தேயும் முக்கிய கவனத்தைப் பெற்றவையாக விளங்குகின்றன. ‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது மலையக மக்களிடத்தேயும் புழக்கத்திலுள்ள பழமொழியாகும். அதன் உண்மைப் பொருள், ‘சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும்’ என்பதாகவே அமைகிறது. அதனடிப்படையில் மலையகத்திலும் கந்தசஷ்டி விரதம் முனைப்புப் பெறுகின்றது.

முருகனுக்குக் கிரியா சக்தியாக தெய்வானையும், இச்சா சக்தியாக வள்ளியும் விளங்குகின்றனர்; ஞான சக்தியாக வேல் விளங்குகின்றது. முருகனின் கையிலிருக்கும் வேல் கூர்மையானதாகவும், அகன்றதாகவும், பின்னர் ஆழமான பகுதியைக் கொணடதாகவும் அமைகிறது. அறிவு கூர்மையாக இருத்தல் வேண்டும் என்பதையே வேலின் கூர்மைப் பகுதி காட்டி நிற்கிறது. அகலமான பகுதி, அனைத்தையும் விரிவான பார்வையில் நோக்க வேண்டும் என்பதை தெளிவுறுத்துகிறது. எதிலும் ஆழ்ந்த எண்ணமும், அறிவும் தேவை என்பதையே ஆழமான பகுதி வெளிப்படுத்தி நிற்கிறது. இது தமிழ் மக்களின் ஆன்மீகம், கலாசாரம் மற்றும் வரலாற்றில் ஓர் அதிகாரம்மிக்க சின்னமாக உள்ளதுடன், நீதி, தர்மம், வீரம் ஆகியவற்றின் சின்னமாகவும் திகழ்கின்றது என்பார்கள். இன்னொரு வகையில், லிங்கம் தொடர்பான விளக்கமும் முக்கியத்துவம் பெற்றதாகும். சிவலிங்கம் என்றால், ஆண் குறியையே நாம் நோக்குவோம். ஆனால், இன விருத்திச் செயற்பாட்டில் லிங்கமும் யோனியும் இணையும் தன்மையை, இச்சிவலிங்கம், யோனியுடன் இணைந்த அடையாளமாகக் காட்டுகிறது. இந்தச் செயற்பாட்டில் லிங்கத்திலிருந்து யோனிக்குள் நுழையும் விந்து இனவிருத்தியை நிர்ணயிக்கும் அம்சமாகும். அவ்வாறு உட்செல்லும் விந்தின் வடிவமாகவே வேலின் உருவம் உருவானமையும் கவனிக்கத்தக்கது. இவ் அடையாளம் பெண் தெய்வ வழிபாட்டு மரபிற்கு அடிகோலியமையையும் அவதானிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் மதமாற்று நடவடிக்கைகள் முருக வழிப்பாட்டு மரபிலும் பெரிதும் தாக்கத்தைச் செலுத்துகிறது எனலாம். இந்து மதத்தவர்களிடத்தே சமூகரீதியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், மதமாற்றத்திற்குப் பிரதான காரணமாகிறது. அவ்வாறே ஏனைய சமூகத்தவர்கள், மதத்தவர்கள் மீது ஏற்படும் காதல், திருமண உறவுகளும் மதமாற்றத்திற்கு ஏதுவானதாக அமைகிறது. அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் மலையக மக்களைப் புலம்பெயரச் செய்யும் நடவடிக்கைகளும் அவதானத்திற்குரியதாகும். இந்நடவடிக்கைகளால் மலையக மக்கள் சிதைக்கப்பட்ட பல சம்பவங்கள் நினைவுகூரத்தக்கவை. இலங்கையின் குடியேற்றத்திட்டங்கள் மலையக மக்களிடையே சிதைவை ஏற்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாகும். நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்த மலையகத்தவர்களை தோட்டங்களில் இருந்து அப்புறப்படுத்தி, அங்கு வேறு மாவட்டங்களில் வாழ்ந்த பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியமர்த்தி, அவர்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையச் செய்த அபிவிருத்தித் திட்டங்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் 1987 காலங்களில் அமுல்படுத்தப்பட்ட துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் குறிப்பிடத்தக்கதாகும். 1987 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமையவே செறிவாக வாழ்ந்த மலையக மக்கள் வரையறுத்த அளவில் வெவ்வேறு தோட்டங்களுக்குக் குடியமர்த்தப்பட்டனர். அவ்வாறு சிதைக்கப்பட்ட மக்களில் ஒரு சாரார் எவ்வித முன்னெடுப்புகளும் இல்லாமல் தங்கள் பூர்விக இடங்களில் அடிமை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அந்நிலைமை நாவலப்பிட்டி, கட்டபுலா பிரதேசத்தில் திஸ்பனை, கிலசகலை, மொச்சைக்கொட்டை ஆகிய தோட்டங்களில் தற்போதும் நிலவிக்கொண்டிருப்பது கண்கூடான விடயமாகும். 

மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்கள் இவ்வாறு சிதைக்கப்பட்ட நிலையில், அவர்களது வழிபாட்டு இடங்களும் சிதைந்து போயின. அவ்வாறான தலங்களில் முருகன் ஆலயங்களும் அடங்கும். பல தலங்கள் நீருக்கு அடியில் மறைக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. அவ்வாறான ஆலயங்களுள், மஸ்கெலியா சண்முகநாதர் ஆலயம் குறிப்பிடத்தக்கதாகும். அப்பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்ட நீர்த்தேக்க நடவடிக்கைகளின் காரணமாக, அத்தேக்கத்தினுள் இவ் ஆலயம் அமிழ்ந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. கோடைகாலங்களில், அவ் ஆலயம் வெளியே தென்படும். அவ்வேளைகளில் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் கவனத்தை ஈர்ப்பதாக இவ் ஆலயம் காட்சி தருவதை அவதானிக்கலாம். கல்லினால் அமைக்கப்பட்ட அவ் ஆலயம் பல தசாப்தங்களாக நீரில் மூழ்கியிருக்கும் நிலையிலும், அடிப்படைக் கட்டமைப்பில் எதுவித சிதைவுகளும் இல்லாத நிலையில் காட்சியளிக்கின்றது. இது போன்ற பல ஆலயங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டு, சிதைவுக்குள்ளாக்கப்பட்டமை கவனிக்கத்தக்கதாகும்.

மலையக மக்களைப் பொறுத்தவரையில் உழைப்புச் செயன்முறையில் ஒவ்வொரு நாளும் போர்க்களமான சூழ்நிலைகளையே எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. போர்க் கடவுளாக முருகப்பெருமான் திகழ்கின்ற நிலையில் அறிவை ஆயுதமாக்கி அதனை எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவுறுத்துவதாகவே முருக வழிபாடு அமைகிறது. எதிர்நீச்சலுக்குரிய களத்தேவைகளையே ஆராதிக்க வேண்டிய அவசியம் நிலவுகின்றது. அதன் பின்னணியில் போராட்டம், போர்க்குணம் என்பது மலையக மககளிடத்தே பின்னிப்பிணைந்தவைகளாக உருப்பெற்றுள்ளன. அதன் தாக்கமும் முருகன் மீதான பிடிப்பு மலையக மக்களிடத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாக மலையக மக்களின் ஆண்களின் பெயர்கள், பெரும்பாலும் முருகனுக்குப் பொருந்தும் பெயர்களாகச் சூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே மலையக மக்களால் உருவாக்கப்பட்ட பல பாடசாலைகளின் பெயர்கள் முருகனுக்கு ஒத்த பெயர்களில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக கதிரேசன் கல்லூரி என்ற பெயரில் பல பாடசாலைகள் மலையகத்தில் காணப்படுவதை அறியலாம். மலையகத்தில் பெண்களின் பெயர்களிலும் தெய்வானை, வள்ளி போன்ற சொற்கள் கணிசமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. ஞானவள்ளி, புஷ்பவள்ளி, செண்பகவள்ளி ஆகிய பெயர்கள் மிக அதிகமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன. அண்மைக்காலங்களில் கார்த்திகாயினி போன்ற நவீனப்படுத்தப்பட்ட பெயர்களும் பிரயோகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. முருக வழிபாட்டுடன் மலையக மக்கள் கொண்டிருக்கின்ற பிணைப்பின் அடையாளங்களாகவும் இப்பெயர்கள் விளங்குகின்றன. முருகனின் இரு திருமணங்களையும் ஆதரிக்கும் கருத்துகள் பல மட்டங்களிலும் காணப்படுகின்றன. அவ்விடயம் தொடர்பான மாறுபட்ட கருத்துகளும் விமர்சனங்களும் நிலவுகின்றன. தெய்வானை உயர்குடியில் பிறந்த பெண்ணாகவும், வள்ளி தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பெண்ணாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இருவருடனும் இணைந்த முருகப் பெருமானின் இல்லறம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வைக் களைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது எனலாம். முருகன் – வள்ளியோடு தொடர்புபடுத்தப்பட்ட நிலையில், குறவர்களை மதித்து அவர்களுக்கு யாசகம் வழங்குதல், சாஸ்திரம் பார்த்தல் போன்ற செயல்களில் மலையக மக்கள் குறவர்களுடன் இடைத்தொடர்பை பேணியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் தனித்துவக் கடவுளாக முருகன் நோக்கப்படுகின்ற நிலையில், இன்று இலங்கையில் சிங்களமயப்படுத்தப்பட்ட கடவுளராக வடிவமைக்கப்படுகின்ற வரலாற்றுத் திரிபும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். முருகனுக்கு மாத்திரம் இந்நிலை ஏற்படவில்லை. தென்னிலங்கை போன்ற பெரும்பான்மையினத்தவர்கள் வாழுகின்ற மாவட்டங்களில் வாழ்கின்ற மலையகத் தமிழர்கள், தமிழர் பண்பாட்டைத் தொலைத்த நிலையில், தமது கலாசார அடையாளங்களையும் தாரைவார்க்கும் அபத்தம் மிகக் கவலைக்குரியதாகும். தமிழர்களைத் தமிழர்களுக்கு எதிராகத் திசைதிருப்பும் கைங்கரியத்தில் காலத்தால் முந்திய வெற்றியை இராமாயணம் கற்பித்திருக்கிறது. ஆனால் இன்று இராவணன் சிங்களவர்களால் ஆராதிக்கப்படுவதும், அந்த இனத்தின் மூலவராக மதிக்கப்படுவதும் கண்கூடு. இது வரலாற்றில் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. முருக பக்தர்கள் என்றதன் அடிப்படையிலாவது மலையக மக்களின் சிதைவுகள் பற்றிக் கவனத்தைச் செலுத்த வேண்டியது தமிழர்களின் கடப்பாடு என்பதை உணர வேண்டும். இன ஒற்றுமை அவசியமானதே! அது தொடர்பாக மாற்றுக்கருத்து இல்லை. ஆயினும், இன ஒற்றுமைக்கு முருக வழிபாடு எடுத்துக்காட்டாக அமைகின்றது என்ற மாயையையும் உணர்தல் வேண்டும். அதனைப் பொறியாக வைத்தே மலையகத் தமிழர்கள் சிதைக்கப்படுகிறார்கள். முருக வழிபாடு தமிழர்களிடத்தே மனப்பூர்வமிக்க புரிதலை ஏற்படுத்துவதற்கு வழி சமைக்க வேண்டும்.

உசாத்துணை நூல்கள்

  1. ஆத்மாநந்தா, (1993), ஸ்ரீ கந்தபுராணம், ஸ்ரீ இந்து பப்ளிகேசன் – சென்னை.
  2. வேலுப்பிள்ளை. சி, (2023), மாமன் மகனே – மலைநாட்டு மக்கள் பாடல்கள் (இரண்டாம் பதிப்பு), இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் – கொழும்பு.
  3. அநிருத்தனன். ய, (2023) மலை நாட்டார் கலை வளம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  4. வடிவேலன். பெ, (2007), மலையக நாட்டுப்புறவியலில் மாரியம்மன், மாத்தளை தமிழ் இலக்கிய வட்டம்.
  5. ஆனந்தகுமார். பா, (2017), இலங்கை மலையகத் தமிழ் இலக்கியம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம். 
  6. முரளிதரன். சு, (2002), மலையக நாட்டாரியல் சிந்தனைகள், சாரல் வெளியீட்டகம்.
  7. மகேஸ்வரன். ஆர், (2022), மணிவிழா சிறப்பு மலர், பேராதனைப் பல்கலைக்கழகம்.    


About the Author

அருணாசலம் லெட்சுமணன்

‘ம.மா - கொத் - உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின்’ அதிபரான அருணாசலம் லெட்சுமணன், 'நிகர்' சமூக - கலை - இலக்கிய அரங்கத்தின் பிரதம அமைப்பாளருமாவார். தேசிய, பன்னாட்டு ஆய்வரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்து வருகிறார். 2023இல் மலேசியாவில் இடம்பெற்ற பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய, பன்னாட்டு இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். பயண இலக்கியங்கள், சமூக, கலை, இலக்கிய, கல்வித்துறைச் செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். இவர் ஒரு கவிஞருமாவார். சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியம் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்