இலங்கை மலையகத் தமிழர்களின் சமூக அசைவியக்கத்தில் கூத்துக் கலைகளின் செல்வாக்கு – பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

இலங்கை மலையகத் தமிழர்களின் சமூக அசைவியக்கத்தில் கூத்துக் கலைகளின் செல்வாக்கு – பகுதி 2

June 23, 2025 | Ezhuna

இ) மலையக சமூக அசைவியக்கத்தில் அருச்சுனன் தபசு

தமிழர் பண்பாட்டில் வழங்கப்பட்டுவரும் மகாபாரத இதிகாசத்தின் கிளைக்கதையான அருச்சுனன் தபசு, துரியோதனனிடம் சூதாட்டத்தில் நாடு, நகரங்களையும் அரசாட்சியையும் இழந்த பஞ்ச பாண்டவர்களான தருமன், வீமன், நகுலன், சகாதேவன், அருச்சுனன் ஆகியோர் வனவாசம் அனுப்பப்பட்ட பின்னர், தாம் இழந்த நகரங்களை மீளப் பெறுவதற்கு ‘பாசுபத ஆயுதம்’ பெற செல்லும் அருச்சுனனின் வனம் கடத்தல் காட்சிகளை மையப்படுத்தியதாக மலையகத்தில் நிகழ்த்தப்படுகின்றது.

மோகினிவனம், இராட்சதன் வனம், ஏழை பிராமணன் வனம், நாராயண வனம், வேடுவர் வனம், வேங்கை கன்னி வனம், ஏலகளனி வனம், பேரண்ட வனம், ஊர்க்குருவி வனம், மாயவன் வருகை, காளி வருகை, தபசு மரமேறல் என்ற பிரதான காட்சிகள் அடங்கிய வனம் கடத்தல் காட்சிகள் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.

இவ்வனம் கடத்தல் பகுதிகள் தோட்டம் – துறவுகள், உறவுகள், நாடு – நகர்களை இழந்து புதிய அடையாளத்தைத் தேடும் மலையகத் தமிழர்களின் வாழ்வியல் கோலத்தோடு உணர்வுபூர்வமான ஊடாட்டத்தைக் கொண்டுள்ளமையைக் காணலாம். மலையகத் தமிழரின் அரசியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு, பொருண்மிய வரலாற்றுடனும் நேரிடைத் தொடர்பினைக் கொண்டுள்ள அருச்சுனன் தபசு, மலையகத் தமிழர்களின் சமூக அசைவியக்கத்தின் இயங்கு விசையாகத் தொழிற்பட்டுள்ளது எனலாம்.

“தார நல்ல புகழ்படைத்த தர்ம ராசா, வெற்றிக்கொடி பிடித்த வீம ராசா, நாக கொடி பிடித்த நகுல ராசா, சாஸ்திரக் கொடி பிடித்த சகாதேவன்”

எனவரும் பாடற்பகுதிகள் ஓர் ஆர்ப்பரிக்கும் உளநிலையையும் எழுச்சியூட்டும் உடல்மொழியையும் கொண்டவை; பாரம்பரியப் பெருமைகளை, நினைவுகளை மீட்டிடும் வல்லமை கொண்டவை.

“அரகர அருனனே நாங்கள் ஆதியில் கங்காதரனே

சிவசிவ சிவனே நாங்கள் சிவனடி பாதம் போற்றி”

என்ற வரிகளில் ஆதியில் தமிழினம் கங்கைக்கு அடிமையானதையும், சிவனடி பாதம் அமைந்துள்ள மலைகாடுகளில் குடியேறியதன் வரலாற்றுப் பதிவையும் எடுத்துக்காட்டுகின்றது.

“குருகுல அரசே நாங்கள் வேந்தராம் ஒருகுடை கீழ் உலகம் ஆண்டோம், முன்னூறு வருடம் நாங்கள் முல்லை வனமாண்டோம், பின் நூறு வருடம் நாங்கள் பேயாண்டிக் கோலமானோம்.”

எனும் பாடலடிகளை காடுமலை கடந்து, கால்நடையாக வந்த மலையகத் தமிழர்களின் ஆழ்மனப் பதிவாகவும், தற்கால அரையடிமை நிலையைப் பிரதிபலிக்கும் வாழ்வியலாகவும் கொள்ளலாம்.

“வளமாய் வனம் கடந்து, வாழ்விஜயன் நான் நடந்தான், சிங்கம் உறங்கும் வனம், சிறுபுலியார் தூங்கும் வனம்”

என்ற பகுதி, தலைமன்னாரிலிருந்து மலையகக் காடுகள் வரை மலையகத் தமிழர் எதிர்கொண்ட கானகப் பயணத்தின் ஒரு பகுதியைப் பிரதிபலிப்பதைக் காணலாம். அருச்சுனன் பாசுபதம் பெறக் கடந்த வனங்களும், தமிழர் மலையகப் புலப்பெயர்வில் எதிர்கொண்ட சவால்களும் ஒரே தன்மையிலானவையாக அமைவதைக் காண்கின்றோம்.

அருச்சுனனின் தவ வலிமையைப் பரிசோதிக்கும் விதமாக ஒவ்வொரு வனப்பகுதியிலும் மாயவர் வெவ்வேறு வடிவங்களில் குறுக்கிடுவதாக அமைகிறது இக்கதை. மோகினி வனத்தைல் கடக்கும் அருச்சுனனை மோகினி வழிமறிப்பதாக வரும்,

“தடத்தை மறித்தேயானால்

தவமிழந்து போகும் தாயே

“பகையாளி தான் வதைக்க, எதிராளியை நான் ஜெயிக்க, வஞ்சியரோ மறித்தாயானால் வரமிழந்து போகும் தாயே”

என்கிற வரிகள், தாயகம் விட்டுச் சேயகம் சென்ற மக்களின் ஆழ்மன உளவியலைப் பதிவு செய்வதோடு, பின்காலனித்துவச் சூழலில் உருவான கலக்கம், பொருள் தேடும் வாழ்வுமுறை போன்றவற்றையும் பிரதிபலிக்கின்றன. நாடுவிட்டு நாடு போகும் நிலையில், சமூக சக்திகள் எதிரிகளாக மாறும் ஊடாட்டங்களைக்கூட இவை வெளிப்படுத்துகின்றன. 

இராட்சத வனத்தின் சண்டைக் காட்சிகள், “மலையோரம் வாடா வாடா போர்கள் செய்வோம், செடியோரம் வாடா சேர்ந்து போர்கள் செய்வோம்” எனவும், பிராமண வனக் காட்சிகள் “பார்ப்பார தெருவினில் தேடி எடுத்த பழைய பஞ்சாங்கம் கைத்தவிலே” எனவும், நாராயண வனக்காட்சிகள் “முக்கண்ணுத் தேங்காயை திக்கென்று தானுடைத்தார்” எனவும், வேங்கை கன்னி வனக்காட்சிகள் “ஒரு கல்லை மந்திரிச்சு ஓடிவந்து போடச் சொன்னார்” எனவும் விரிகின்றன.

“சின்ன நடை

சிங்கார மோகினி

கொண்டை கொப்புகள்

மூக்குப் பல்லாக்கு

கழுத்துக்குத் தாலி

கையில் இவங்கன வளையல்

நெற்றியில் தாமன் பொட்டு”

எனும் பாடல் வரிகளில், பண்டையத் தமிழகம் முதல் சங்க இலக்கியச் சான்றுகள் வரை கண்டதும், கீழடி ஆதிச்ச நல்லூர் ஆய்வுகளில் வெளிக்கொணரப்பட்டதும், இன்றும் தொடர்வதுமான தமிழ்ப் பெண்களின் நடையழகு, மயக்கம் தரும் இயல்பு, அணியும் ஆபரணங்கள் என்பன விவரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

“சங்கர சிவ மங்கபாலனே மகாதேவன் சாமிக்கு தியானமாகினேன், சங்கர சிவ மங்கபாலனே பார்த்தரிச்சுவன் மேலே தாக்கினேன்”

என்கிற பாடல் பகுதியில் வரும் ஆடல் மொழி, போர்க்குணம் வாய்ந்த எதிர்ப்பு உணர்ச்சியைப் பதிவு செய்கின்றது. 

பேரண்ட வனக் காட்சிகளில், பெண்ணின் காமமும், காமம் தணிக்க மறுக்கும் பேரண்டனைப் பற்றி இல்லாத பொல்லாத பழிகளைக்கூறி போருக்குத் தூண்டுவதையும், போரில் பேரண்டன் மரணிப்பதையும் காண்கின்றோம். மேலும் பேரண்டன் போருக்கு, 

“தேருக்குப் புரவிகட்டி காவடிகட்டி..

காட்டிலே வேட்டையாடல்..

ஆலமரத்தை வேரோடு பிடுங்கி..

தட்டுப்படலை..

எட்டுக்கடலையும் தாண்டிக்குதித்தான்”

எனப் புறப்படுவதாகக் கூறப்படுகின்றது.

பேரண்டச்சியின் புலம்பலில்,

“சந்தன மேனி குங்கும் மேனி” எனவும், வருகைப் பாடலொன்றில்,

“தங்கப் பள்ளாக்கு”

“முத்துப் பள்ளாக்கு”

“கட்டிலுண்டு”

“மெத்தையுண்டு”

“தாழியுண்டு”

“கூடமுண்டு”

“முத்து சம்பா”

“கோர சம்பா”

“சந்தரிசி”

“தங்கத்தினால் உலக்கை”

“வெள்ளியினால் உலக்கை”

“பொன்னிலே உலக்கை”

“தங்கத்தினாலே முறம்”

“பொன்னிலே முறம்”

“வெள்ளியிலே முறம்”

“கத்தரிக்காய், கருணைக் கிழங்கு”

“பூசணிக்காய், புடலங்காய்”

“பாகற்காய், பரங்கிக்காய்”

“சாத்திக் கதவடைத்தல்”

எனவும் வருவது, கீழடி, சிவகங்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வுகளில் வெளிப்பட்ட பண்டைத் தமிழரின் வாழ்வியல் கூறுகளைக் காட்டுகின்றன. இவ்வாறான வாழ்வியலுக்கு இன்றைய மலையகத் தமிழர்களும் உரித்தானவர்களாக இருப்பதைக் குறிப்பிட இச்சான்றுகள் உதவுகின்றன.

தமிழரின் பொருள் வாழ்வும், துயரமிகு இடப்பெயர்வுகளின் ஆழ்மனச் சுவடுகளும், காலனிய வாழ்வின் அச்சமும், இன்றைய சமூக யதார்த்தங்களும் ஒருங்கே அமைந்த ‘அருச்சுனன் தபசு’, மலையகத் தமிழர்களின் பண்பாட்டு அசைவியக்கத்தில் ஒரு முக்கிய பண்பாட்டு விசையாகத் திகழ்கின்றது.

ஈ) மலையக சமூக அசைவியக்கத்தில் லவகுசா அல்லது குசலவன் கதை

சீதையின் கற்பை வண்ணான் பழித்துப் பேசுவதாக அறிந்த இராமன் தன் மனைவியான சீதையைக் காட்டில் விட்டுவிடும்படி தம்பிமார்களைப் பணிக்கிறார். தம்பிமார் வனம் பார்த்துவிட்டு வருவோம் எனச் சீதையை அழைத்துச்சென்று அடவியில் விட்டு வருகின்றனர். வனத்தில் சீதை, இலவன் – குசன் என்ற இரு புதல்வர்களை ஈன்றெடுக்கிறார். அவர்களுக்கு வான்மீகி பலவேறு வித்தைகளைக் கற்றுக்கொடுக்கிறார். லவனும் குசனும் வளர்ந்துவரும் காலத்தில் ஒருமுறை, காட்டில் இராமன், இலட்சுமணன், பரதர், சத்துருக்கன் ஆகியோரின் குதிரைகளைப் பிடித்துக் கட்டி வைக்கின்றனர் (குசலவர் நாடகம், பக்: 131). அக்குதிரையை மீட்க வரும் சித்தப்பாமார் லவனை தேரில் கட்டிக்கொண்டு செல்கின்றனர். இறுதியில் இவர்கள் இராமனின் பிள்ளைகள் என்றறியும் போது, சீதா தேவியின் புலம்பலையேற்று, வான்மீகி முனிவர் மீட்க வருகிறார். லவகுசன் தந்தையருடன் போரிட்டு வெல்வதாகவும், லவகுசன் இருவரும் தந்தை இழந்த நாட்டில் மீண்டும் முடிசூடுவதாகவும் இக்கதை காணப்படுகின்றது.

லவகுசன் நாடகம் இன்றைய மலையகத்தில் பெருமளவு அருகியே போய்விட்டது. மத்திய மாகாணத்தில், நுவரெலியா மாவட்டத்தில், பொகவந்தலாவ பெரிய எலிப்படை தோட்டத்தில் சுமார் இருபது வருட முயற்சிகளுக்குப் பின்னர் 2014, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் அரங்கேற்றப்பட்டது. கட்டுரையாளரின் நேரடி முயற்சியினாலும், மாஸ்டர் G. கனகராஜ் மற்றும் உயிர்வாழும் மூத்த கலைஞர்களின் உதவியுடனும், புதிய தலைமுறை இளைஞர் – யுவதிகளும், மாணவர்களும் இக்கூத்தை சுமார் மூன்று மாதங்கள் ஆர்வத்துடன் பயின்றனர்.

இக்கூத்து மலையகப் பெண்களின் அவல வாழ்வையும், பிள்ளைகளை வீரமுடன் வளர்க்க வேண்டும் என்ற செய்தியையும், நாடுகளிழந்த மக்கள் மீண்டும் தாய்நிலத்தை, அதிகாரத்தை மீட்கவேண்டும் என்ற உள்ளக்கிடக்கையையும் வெளிக்கொணர்வதைக் காணலாம்.

“வண்ணான் வந்தேனே அயோத்தியில் வண்ணான் வந்தேனே.” (பக். 46) என வண்ணான் வருகையும், “சோறு போடம்மா அம்மா கொஞ்சம் சோறு போடம்மா” (பக். 47) என வண்ணாத்தி இரஞ்சுதலும், “மன்னிய சீதையைப் போல் விருந்துனானழைத்தேனாகில் என்னிட் குலத்துக்கெல்லாம் ஈனமும் வருமே தாயே” (பக்: 49) என வண்ணான் தன் தாயாரிடம் சீதையைப் பழித்துக் கூறும் கூற்றும் இடம்பெறுகின்றது.

இவ்வுரையாடலைக் கேட்ட தலையாரிகள் அதனை இராமனுக்குக் கூறுகிறார்கள்.

“அசலகம் போன பெண்டை அழைப்பேனோ வழையேனந்த

தசரதராமர்க்கு அல்லோ, தகுதி மினென்று தீதானையா?”

இச்செய்திகளை இராமன், பரதன், இலட்சுமணன், சத்துருக்கனுக்குக் கூறிப் புலம்புவதையும், அவர்கள் இராமனுக்கு மறுத்துரைப்பதையும் இக்கூத்தில் காண முடியும். இலட்சுமணன் சீதையை வனம் பார்க்க அழைத்தும் செல்கின்றார். மாமியாரிடம் சீதை விடைபெற்றுச் செல்வதாக விரிகிறது கரு.

“அன்னையே வாருமம்மா வளம் பார்க்க அரிவையே வாருமம்மா” (பக். 65) என இலட்சுமணன் சீதையை அழைப்பதையும், “அயோத்தியாளும் இராமர் ஆரண்யம் பார்க்கவென்னை அனுப்பினார், போய் வாரேன் மாமியாரே” என சீதை மாமியாரிடம் விடைபெறுவதையும், “மெய்யறிந்த எல்லாம் விழலுக்கு நீர் இறைத்ததுபோலாச்சே, சீதையாரே” (பக். 67) என மாமியார் புலம்புவதையும் இக்கூத்தில் காணலாம். இராமன் சீதையைக் காட்டில் விடும்போது அவள் ஐந்து மாதக் கர்ப்பிணியாயிருக்கிறார் என்பதை “அஞ்சுமாதப் பிண்டம் பிஞ்சல்லவோ கரப்பம் சீதையாரே உன்னை அஞ்சா வனத்திற் கொஞ்சி விடுவமோ சீதையாரே” (பக். 65) எனவரும் புலம்பல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இக்கூத்தில், பூனை குறுக்கிடுதல், பார்ப்பான் குறுக்கேவரல், விறகு சுமந்து வரல், எண்ணெய்க்குடம் கொண்டுவரல், தட்டான் குறுக்கேவரல், பாம்பு குறுக்கேவரல் ஆகிய சகுனங்கள் இடம்பெறுகின்றன.

படைப்பயிற்சி பெறும் லவகுசனுக்கு வான்மீகி முனிவர் குறிபார்க்கும் வித்தையைக் கற்பிக்கும் விதத்தை பின்வரும் பாடல் பகுதி எடுத்துக்காட்டுகின்றது.

“மத்தியிலே குறிபாரு

“மார்புக்கும் நாபிக்கும் நேரு 

அதன் பாருக்குள்ள ராஜரை அணுவாகப் பார்த்திடு 

வீறு சிங்கத்தை வேல் கொண்டிடு” (பக். 119)

அசுவத்திற்கு (குதிரை) சத்துருக்கன் பட்டம் கட்டி வேட்டைக்கு அனுப்புதல் குறித்த பாடல், “வீர பட்டம் கட்டினாரையா – வசிட்டர், வீர பட்டம் கட்டினாரையா” எனவும், குசலவன் வேட்டைக்குப் புறப்படும் காட்சி, “வேட்டைக்கு புறப்பட்டாரையா குசேல ராசா, வேட்டைக்குப் புறப்பட்டாரையா, கொடி முடி அதிரவே, கொக்கரித்து ஆர்ப்பரித்தார்” எனவும் வருகின்றன. இப்பகுதிகளில், லவகுசா ஊடாக, ஒடுக்கப்பட்ட மலையகத் தொழிலாளர்களின் வீரம், வேட்கை, ஏக்கங்கள் என்பன வெளிப்படுவதைக் காண்கின்றோம். இதன் உடல்மொழியானது வீரியமும், வீச்சும், வசீகரமும் மிக்கதாகவும் காணப்படுகின்றது.

மலையகக் கூத்துகளில் துயரத்தையும், வேதனையையும், ஏக்கப் பெருமூச்சையும் வெளிப்படுத்தும் லவகுசா கூத்து, தற்போது அருகியமைக்கு அதன் சமூகத் தேவை அருகியமை காரணமாக இருக்கக்கூடும். எனினும் அதன் சமூக விளைவு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.

உ) பிற கூத்துகள்

மலையகத் தோட்டங்களில் நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்படுகின்ற ஏனைய கூத்துகளான பவளக் கொடி, அபிமன்யு சௌந்தரி, மருதை வீரன் கூத்து, காசிராஜன் கதை என்பவற்றின் பிரதிகள் கிடைப்பதும், அவற்றை ஆற்றுகை நிலையில் காண்பதும் அரிதாகவுள்ளது. அரிச்சந்திர மயான காண்டம், இராம நாடகம், சத்தியவான் – சாவித்திரி, குசேலர் புராணம், காத்தவராயன் கூத்து, சித்திரபுத்திரக் கதை, பாம்பாட்டி சித்தர் கதை, குறவஞ்சி நாடகம், காட்டேரியம்மன் கதை, காசிராஜன் கதை, கண்டி ராசன் கதை, வீரபாண்டிய கட்டபொம்மன், நல்லதங்காள் கதை என்பன பயிலப்பட்டு வந்த போதிலும், 1967 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற தமிழகம் நோக்கிய புலப்பெயர்வு, 1958 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்கள் நோக்கிய புலப்பெயர்வு, 1971, 1972 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற காணி, தோட்ட வெளியேற்றம், 1958 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையான இன வன்முறைகள், உள்நாட்டுப்போர் என்பனவோடு, திறந்த பொருளாதாரக் கொள்கை (1977), ஏகாதிபத்திய உலகமயமாக்கல் என்பன காரணமாகவும் இக்கூத்துகள் மருவிப் போய்விட்டன அல்லது எப்போதாவது நிகழ்த்தப்படுவதாக மாறிவிட்டன. இவை மலையக சமூக அசைவியக்கத்தில் காத்திரமான பங்கு வகித்துள்ளன எனலாம்.

ஆளுமைமிக்க மூத்த கலைஞர்களின் புலப்பெயர்வு, மரணம், பொருளாதார – சமூக கௌரவம் வழங்கப்படாமை, புதிய தலைமுறையின் மத்தியதர வர்க்கத்தினர் அந்நியமாதல், நகரப்புற இடப்பெயர்வுகள், புத்திஜீவிகள் அந்நியமாதல், சினிமா –  தொலைக்காட்சி சீரியல்களின் வருகை, சமூக ஊடக வளர்ச்சி என்பன பண்பாட்டுச் செயற்பாடுகளுக்குப் பின்னடைவையும், இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளன.

இருந்தபோதிலும் இத்தகைய தீவிர இடையீட்டுக் காரணிகளையும் மீறி பல நூற்றுக்கணக்கான தோட்டப் பிரிவுகளில் மக்கள் பண்பாட்டுக் கலைகள் பயிலப்பட்டும், நிகழ்த்தப்பட்டும் வருவதானது, மலையக சமூக அசைவில் இக்கூத்துகளின் பங்களிப்பிற்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.

மலையகப் பாரம்பரியக் கலைப்பண்பாட்டுக் கோலங்களை மீட்டெடுப்பதிலும் பாதுகாப்பதிலும் ‘புதிய பண்பாட்டு அமைப்பு’ 1997 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுவருகின்றது. ‘மலையக மரபுரிமைகள் பாதுகாப்பு அமைப்பு’ பாரம்பரியக் கலைஞர்களைக் கௌரவிக்கும் முகமாக ‘மலையக மரபுரிமை அறிவியலாளர்கள்’ என்ற விருதை வழங்கிவருகின்றது. பத்தனை கல்வியியல் கல்லூரி, கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கல்லூரி, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் (2018), லிந்துலை சரஸ்வதி கல்லூரி, கந்தலோயா தமிழ் வித்தியாலயம், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை, யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறை, வயம்ப பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன மலையகப் பாரம்பரிய கூத்துகளை அரங்கேற்றம் செய்தல், ஆய்வு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மாகாண சாகித்திய விழாக்களில் மலையக கூத்துகள் சிறப்பிடம் வகிக்கின்றன.

கொட்டியாகலை தங்கவேல் மாஸ்டர் (1972), இலங்கை வானொலி, யாழ் விக்னேஸ்வரா கல்லூரி, திருக்கோணேசர் ஆலயம் என்பனவற்றில் மலையக காமன் கூத்து பரிசோதனையாக அரங்கேற்றப்பட்டுள்ளது. புதிய பண்பாட்டு அமைப்பு, கிழக்குப் பல்கலைக்கழக நாடகவிழா (2001), ஈழத்து கூத்து விழா (2001) என்பனவற்றில் மலையகப் பாரம்பரியக் கூத்துகளை அரங்கேற்றியது. பிரான்ஸிஸ் ஹெலன் என்பவர் செம்மொழி மாநாட்டில் காமன் கூத்தை அரங்கேற்றினார். அ. இராமர் என்பவர் திருகோணமலையில் பொன்னர் – சங்கர் கூத்தையும், ப. விஜயாந்தன், க. பிரேம்குமார் ஆகியோர் காமன் கூத்தையும் அளிக்கை செய்தனர்.

மக்கள் களரி எனும் நடமாடும் நாடகக்குழு, சிங்கள நாடக ஆளுமைகளின் வழிகாட்டலில் ‘தாகம்’, ‘கண்களில் ஈரம்’, ‘செகவே’, ‘தித்த காட்ட’ (கசந்த சாயம்) ஆகிய நாடக ஆற்றுகைகளில், காமன் கூத்தின் ஆடல், பாடல், இசை மற்றும் தாளக்கட்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக கலாசார திருவிழாவில் மலையக பாரம்பரியக்கூத்துகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

முடிவுரை

மலையகத் தமிழர்களின் சமூக அசைவில் கூத்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரபுத்துவக் கட்டமைப்பை எதிர்கொண்டு காலனியச் சூழலில் தங்களைத் தகவமைக்கவும் மறுசீரமைக்கவும் கூத்துகள் ஓர் உந்துதலையும், உளவளத்தையும் வழங்கின. நவீனக் கல்வியில் ஈடுபடாத மக்களிடையேகூட, கூத்துகள் வழியாக மொழிப்புலமை, இலக்கியச் செழுமை, இலக்கண அறிவு, கல்வித்துவம், காதல், வீரம், ஏக்கம், சமயம், கடவுள் நம்பிக்கை, சமூக உறவுகள், சமரசம், சமத்துவம், இனக் குழு-குலக் குழுக்களின் ஒருமைப்பாடு, ஆதிக்க எதிர்ப்பு, கேளிக்கை, கிண்டல், ஆழ்மன உளவியல், நோய்த் தீர்க்கும் நம்பிக்கைகள், அழகியல் மற்றும் வாழ்க்கைத் தொழில்கள் போன்றவை வெளிப்பட்டன. பாடுபொருள், உடல்மொழி, ஆடுவெளி ஆகியவை வழியாக சமகால அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளுக்கு எதிரான ஒரு திறனுடைய பதிலாக கூத்துகள் இயங்குகின்றன. அவ்வகையில், மலையகத் தமிழர் பண்பாட்டின் மணிமகுடங்கள் என அடையாளம் காணும் அளவில் காமன் கூத்து, பொன்னர் – சங்கர், அருச்சுணன் தபசு, லவகுசா என்பன திகழ்கின்றன எனலாம்.

சான்றாதாரங்கள்

1. கையெழுத்து பிரதிகள்

காமன் கூத்து, P.A. மூக்கையா, புப்புரஸ்ஸ தோட்டம்

காமன் கூத்து, T. தேவராஜ் (1979), கொட்டியாகலை

காமன் கூத்து, பொன்னுசாமி (1985), டன்பாரை

அருச்சுனன் தபசு, ஆ. ஐயாத்துரை

அருச்சுனன் தபசு, பாலசுப்பிரமணியம்

அருச்சுனன் தபசு, R. பெருமாள் மாஸ்டர், சீனிக்கத்தாழை தோட்டம்

அருச்சுனன் தபசு, S. முத்துக்காளி மாஸ்டர் (2005), கேம்பிரிட்ஜ் தோட்டம்

2. நூல்கள்

துரைசாமி நாவலர், (1949), அச்சுப்பிரதிகள், சரஸ்வதி புத்தகசாலை

சோதிமலர் இரவீந்திரன், (2004), காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும்

காரை செ. சுந்தரம்பிள்ளை, (2006), ஈழத்து மலையகக் கூத்துகள்

V.T. இராஜேந்திரன், (2005), நவரத்தின ஒப்பாரி

M. நாராயணசாமிப் பிள்ளை, தர்க்க ஒப்பாரி

P.T. தங்கமுத்துப்பிள்ளை, நவரச ஒப்பாரி

சந்தனம் சச்சிதானந்தன், காமன்கூத்து கள ஆய்வு (சங்குவாரித் தோட்டம்)

ஹாரிஸ், மலையகக் கூத்துகள்

ஆ. லெட்சுமணன், (2011), காமன் கூத்துப்பற்றிய ‘உதயசூரியன்’ தொடர் கட்டுரை

பொன். பிரபாகரன், (2015), காமன் கூத்து (இலங்கை மலையகத் தமிழர் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல், பொருண்மிய ஆய்வு)

அம்பிகை வேல்முருகு, (1998), அருச்சுனன் தபசு

அமில்கர் காப்ரால், (2001), வேர்களை நோக்கி

பக்தவத்சல பாரதி, (2008), தமிழர் மானிடவியல் – இரண்டாம் பதிப்பு

மானிடவியல் கோட்பாடுகள் (2017)

அ.சு. மணவாளன் (2005), இராமகாதையும் இராமாயணங்களும்

கோ. பழனி, தமிழ் நாடக ஆற்றுகைக் கூறுகளின் வரலாறு

தா. வாணமாமலை, (1964), தமிழர் நாட்டுப் பாடல்கள்

கட்டபொம்மன் கூத்து (1972) 

அழ. குணசேகரன், (2009), நாட்டுப்புற நடனங்களும் பாடல்களும்

திரிகூடராசப்ப கவிராயர், (1960), திருக்குற்றாலக் குறவஞ்சி

மு. சிவலிங்கம், மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் பல்வகை

புகழேந்திப் புலவர், நல்லதங்காள் கதை

அ.க. பெருமாள், (2004), நல்லதங்காள் கதை

ச. மெய்யப்பன், நாட்டுப்புற பாடல் களஞ்சியம், தொகுதி 9

அ.க. பெருமாள், நா. இராமச்சந்திரன், (2001), நாட்டார் நிகழ்த்துகலை களஞ்சியம்

லவகுசா நாடகப் பிரதி

3. கள ஆய்வுகள்

காமன் கூத்து, பெரிய எல்படை கீ.பி

காமன் கூத்து, பெரிய எல்படை மே.பி

காமன் கூத்து, லெட்சுமி தோட்டம் ப.பி

காமன் கூத்து, லெட்சுமி தோட்டம் மே.பி

காமன் கூத்து, மோறார் தோட்டம்

காமன் கூத்து, தெரேசியா தோட்டம்

காமன் கூத்து, கெம்பியன் தோட்டம்

காமன் கூத்து, லொய்னோன் தோட்டம்

காமன் கூத்து, சாஞ்சிமலை தோட்டம்

காமன் கூத்து, சாஞ்சிமலை தோட்டம்

காமன் கூத்து, லங்கா தோட்டம்

காமன் கூத்து, சீனாக்கொல்லை பூசாரி டிவிசன்

காமன் கூத்து, அரிசித் தோட்டம்

அருச்சுனன தபசு, பெரிய எல்படை ப.பி

அருச்சுனன் தபசு, பெரிய எல்படை மே.பி

அருச்சுனன் தபசு, லெட்சுமி தோட்டம் மே.பி

அருச்சுனன் தபசு, கெம்பியன் தோட்டம் ப.க

அருச்சுனன் தபசு, அவரவத்தை தோட்டம்

அருச்சுனன் தபசு, கொட்டியாகலை ப.பி

அருச்சுனன் தபசு, பெரிய அறை தோட்டம்

அருச்சுனன் தபசு, தொங்கபத்தினி தோட்டம்

பொன்னர் சங்கர், பெரிய எலிப்படை ம.க

பொன்னர் சங்கர், வீரட் 30 ஏக்கர் தோட்டம் (2001)

பொன்னர் சங்கர், புளும்பில்ட் தோட்டம் (2016)

பொன்னர் சங்கர், காட்மோர் தபேதன்னே தோட்டம் (2019)

பொன்னர் சங்கர், போற்றித் தோட்டம் (2019)

பொன்னர் சங்கர், லிந்துலை சரஸ்வதி கல்லூரி கூத்துவிழா

பொன்னர் சங்கர், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம், உலக நாடக விழா (2018)

லவகுசா, பெரிய எலிப்படை கி.பி (2015, 2017, 2019)

4. சந்திப்புகள்

P. தங்கவேல், பெரிய எல்படை

S. சுப்பையா, லெட்சுமி தோட்டம்

ஆ. ஐயாத்துரை (2001-2021)

திரு. பாலசுப்ரமணியம் மாஸ்டர்

பம்பை கணேசன்

பம்பை தங்கவேல்

அருச்சுனன் தபசு

ஆறு களியன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் டிப்ளோமா பாடநெறி (2009)

நோர்வூட் த.ம.வி அரங்கியல் மாணவர்களின் பயிற்சிப் பட்டறை (2015)

லவகுசா

பெரிய எலிப்படை தோட்டப் பயிலரங்கு (2014,2015,2019)

உலக நாடகவிழா (2001)

G. கனகராஜ் மாஸ்டர், பயிற்சிப்பட்டறை

குசலவன் நாடக அச்சுப்பிரதி

காசிராஜன் கதை

முத்துசாமி மாஸ்டர், கேம்ரி தோட்டம்

R. தங்கவேல் மாஸ்டர், கொட்டியாகலை தோட்டம்

நல்லதங்காள் கதை

முத்துசாமி மாஸ்டர், கேமரி தோட்டம்

காத்தவராயன் கதை

R. தங்கவேல் மாஸ்டர், கொட்டியாகலை தோட்டம்



About the Author

பொன் பிரபாகரன்

பொன்.பிரபாகரன், யாழ். பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவப் பட்டம் பெற்றவர். பட்டப்பின் டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும், ஊடகவியலில் டிப்ளோமாப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். மேலும், கொழும்பு வணிகப் பள்ளியில் செயற்றிட்ட முகாமைத்துவப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 'காமன் கூத்து'(மலையக தமிழரின் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு), 'உப்பு ரொட்டி' (கவிதைத் தொகுப்பு), 'மலையகத் தமிழரின் சமூகவியலும் அரசியலும்' என்பன இவரது நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்