பன்மைத் தேசங்களில் கண்ணகை: தாய்த் தெய்வ மரபில் கண்ணகையை மீள்வரையறை செய்தல்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
30 நிமிட வாசிப்பு

பன்மைத் தேசங்களில் கண்ணகை: தாய்த் தெய்வ மரபில் கண்ணகையை மீள்வரையறை செய்தல்

September 25, 2025 | Ezhuna

தமிழ்ச் சமூகத்தின் தாய்த்தெய்வ மரபு மிக நீண்டது. அது சிந்துவெளி தொடங்கி, தமிழகம் ஊடாக, கிழக்கிலங்கை வரை விரிந்துள்ளது. இந்தக் கால இட நீள் மரபில் தமிழ்ச் சமூகம் கண்டுள்ள தாய்த்தெய்வங்கள் எவை? அவற்றின் இருத்தலியம் என்ன? படிமலர்ச்சி என்ன? பிற்காலப் பரிமாணங்கள் என்ன? இவற்றில் கண்ணகையின் வகிபாகம் என்ன? முதலான கருத்தினங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. தமிழர் தேவகணத்தில் கண்ணகை மிகவும் தனித்துவமானவள் என்பதும், அவளை வேறுவகையில் மீள்வரையறை செய்ய வேண்டும் என்பதும் இந்த ஆய்வின் கருதுகோள்கள்.

இலக்கிய மானிடவியலும், ஒப்பியல் இனவரைவியலும் இந்த ஆய்வின் ஆதார சுருதிகளாகும். செவ்வியல் இலக்கியத் தரவுகளும், வாய்மொழி இலக்கியத் தரவுகளும், பனுவலாக்கம் பெற்றுள்ள பத்ததி ஏடுகளும், மிக அண்மையில் (2025) ஈழம் தொடங்கி கேரளம் வரை மேற்கொண்ட களப்பணித் தரவுகளும் இந்த மெய்மைகளைக் கண்டடைய உதவும் தரவுக் களங்களாகும்.

சமகாலக் களப்பணியிலிருந்து சிலப்பதிகாரம் நோக்கிச் செல்வதும், சிலம்பிலிருந்து சமகாலம் நோக்கி மீள வருவதும் வரலாற்று ரீதியில் ஒன்றையொன்று இட்டுநிரப்பும் அணுகுமுறை (Complimentary Approach) சார்ந்ததாகும். அதாவது, சமகாலத்திலிருந்து கடந்த காலத்தையும், கடந்த காலத்திலிருந்து சமகாலத்தையும் ஒன்றிணைத்து வாசித்தல் இந்த ஆய்வுக்கான முறையியலாகும். இவையனைத்தையும் இலக்கிய இனவரைவியலாக (Literary Ethnography) இந்த ஆய்வு நோக்குகிறது.

தாய்த் தெய்வ மரபின் வேர்கள்

தமிழ்ச் சமூகம் குழந்தையாக இருந்தபோதே சமய நம்பிக்கை தோன்றிவிட்டது. அப்போது உலகைப் படைத்தது கடவுள் எனும் சிந்தனை உருவாகவில்லை. சமயத்திற்கு முந்தைய ‘முன் சமயம்’ (Pre-religion) ஏற்பட்ட காலமது. அக்கால கட்டத்தில் தமிழர்களின் தொல் சமயம் ஆவியுலகமாக இருந்தது. பல்வேறு மீவியல் ஆற்றல்கள் பரவியிருந்தன. பின்னர் உருவான சங்க இலக்கியம் அவற்றை அணங்கு, சூர், சூலி, கூளி, கழுது, கூற்று, காலன், பேய், பூதம், முருகு என்றெல்லாம் குறிப்பிட்டது. இவையனைத்தும் மீவாற்றல் கொண்டவை; தாக்கி வருத்தும் ஆற்றல் கொண்டவை; அருவமானவை. இவற்றில் அணங்கு, சூர், கூளி, பூதம் போன்றவை பெண்பால் வகையினத்தவை.

அணங்குகள் அந்தியிலும் இரவிலும் பூச்சூடி விரும்பிய உருவெடுத்து சுற்றித் திரிந்தவை. மலைகளிலும், நீர்த்துறைகளிலும் எதிர்ப்பட்டாரைத் தாக்கித் துன்புறுத்தியவை (அகம். 7, நற். 319). சூரர மகளிர் (குறுந். 52), வரையர மகளிர் (அகம். 342), அர (வானர) மகளிர் (கலி. 40), பேய் (குறுந். 89), பூதம் (பட்டின. 57), கழுது (நற். 122, 171) முதலானவையும் பெண் உருவம் கொண்டவை. இவை யாவும் அணங்கு போன்றே செயல்பட்டவை. தாக்கித் துன்புறுத்துவதே இவற்றின் செயலாக இருந்தது. இயற்கை மீது மனித சமூகம் கையாடல் செய்யத் தொடங்கிய தருணத்தில் அவை எதிர்வினையாற்றியதாக நாம் அவதானிக்கலாம். இயல்பின் சமநிலையும், இயற்கையின் இயங்குநிலையும் பாதிக்காதவாறு இவை காத்து நின்றன. இயற்கையில் இயற்கையாக இயங்கிய ஆற்றல்கள் இவை. பேய் மகளிரின் ஆற்றல்களைக் க. கைலாசபதி பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966) எனும் நூலில் கண்டுள்ள முடிவுகளையும் இங்கு ஒப்பு நோக்கலாம். இந்த மீவாற்றல்கள் இயற்கையின் சமநிலையைப் பேண முற்பட்டவை எனும் சூழலியல் வாதம் இங்கு நியாயம் பெறுகிறது. பேய்களின் பெண் பூசாரியே ‘பேய் மகளிர்’ எனவும் பொருள் கொள்ளலாம்.

தமிழ்த் தேவகணத்தின் உருவாக்கத்தில் ஏற்பட்ட அடுத்த கட்ட மாற்றத்தையும் சங்க இலக்கியம் காட்டுகிறது. பெண்ணுருவில் திரிந்த மீவாற்றல்களுக்கடுத்து, உருவம் சார்ந்து உருவான தாய்த் தெய்வங்களை இந்தக் கட்டத்தில் காண்கிறோம். பெருங்காட்டுக்கொற்றி (கலி. 89), கானமர்செல்வி/ காடமர்செல்வி (அகம். 345), துணங்கையஞ்செல்வி (பெரும்பாண். 459) என்றெல்லாம் இத்தெய்வங்கள் அழைக்கப்பட்டன. பெண் தெய்வங்கள் ஆதியில் ‘செல்வி’ என்றே அழைக்கப்பட்டன. காட்டில் வளத்தைத் தருபவள் என்பது இதன் பொருள். பழையோள், காடுகிழவோள் என்பவையும் செல்வியின் வழி நின்றவர்கள்தாம்.

சங்ககாலத்தில் பெண் தெய்வங்கள் உற்பத்தி சார்ந்த பொருண்மையில் அறியப்பட்டனர். அன்று ‘செல்வி’ என்பவள் வளரிளம் பருவத்தினள். இவள் காட்டில் வாழ்வாதாரப் பணிகளில் (உணவு உற்பத்தி) தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்ளும் தகுதி பெற்றவள். மணமான பெண்கள் உழைப்பதற்குத் தேவையான குழந்தைகளைப் பெற்றெடுக்கும் (மானுட உற்பத்தி) பொறுப்பில் இருந்தார்கள். அவர்களால் ஆண்டு முழுவதும் அன்றாடம் உணவாதாரங்களைத் தேடுவதில் ஈடுபட முடியவில்லை. ஆகவே, குறிஞ்சியில் ‘செல்வி’யர் முக்கிய பங்கெடுத்தனர். பழையோள் (திருமுருகு. 259), காடுகிழவோள் (திவாகர நிகண்டு. 78) போன்றவர்கள் கானகத்தில் வன்புல விவசாயத்தில் ஈடுபட்டவர்கள் வணங்கும் தெய்வங்களாயின.

சங்ககாலத்தில் கானக வாழ்வுக்கடுத்து வீரயுகம் உருவானது. சிற்றெல்லைகளைக் கொண்ட நாடுகள், சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், குறுநில மன்னர்கள், போர்கள், ஆநிரை கவர்தல் மீட்டல் முதலானவை மிகுந்து காணப்பட்ட காலகட்டம் அது. அக்காலகட்டத்தின் முக்கிய தெய்வமாகக் கொற்றவை திகழ்ந்தாள். கானக வாழ்வுக்குச் செல்வியும், வீரயுக வாழ்வுக்குக் கொற்றவையும் எனும் தனித்துவ உருவாக்கங்கள் தமிழ்த் தேவகணத்தின் ஒரு முக்கிய படிமலர்ச்சியாகும்.

போர், வீரம், வெற்றி ஆகிய கூறுகளை மையமிட்ட கொற்றவை உருவாக்கம் என்பது, பின்னாளில் மூவேந்தர்கள் உருவாக்கிய ‘அரச தெய்வம்’ எனும் வகையினத்திற்கான வேர்களாகும். பின்னாளில் அரசு ஆதரவில் உருவான கண்ணகிக் கோட்டங்கள் கொற்றவை நிலையிலிருந்து விருட்சமடைந்த ஒரு விரிநிலைப் படிமலர்ச்சி (Divergent Evolution) என இங்கு நாம் உய்த்துணரலாம்.

தமிழர் தேவகணம்

மேற்கூறிய தொல்குடிச் சமயமானது உழுகுடிச் சமூகம் உருவான காலகட்டத்தில் நாட்டார் சமயமாக உருவானது. அது கால, இட, சமூக வேறுபாடுகளால் மிகப் பன்மியமாகப் பரந்து விரிந்துவிட்டது. இந்த வளர்ச்சியினூடாகப் பெருநெறிச் சமயம் (நிறுவனச் சமயம்) தோன்றியது. தொல்குடி மரபு, நாட்டார் மரபு, பெருநெறி மரபு ஆகிய இந்த மூன்று படிநிலைகளிலும் கண்ணகை பெறும் வகிபாகத்தை ஆராய வேண்டும். தமிழர் சமய வரலாற்றிலேயே கண்ணகையின் தெய்வமாதல் மரபு தனிப்பெரும் மரபாக வேறுபட்டு நிற்கிறது. அதனை இனிவரும் பகுதிகளில் ஆராய்வோம்.

கண்ணகி ஒரு தனி வகையினம்

இந்திய இதிகாச காப்பிய மரபுகளைப் பார்க்கும்போது கண்ணகி மிகவும் தனித்துவமானவள். இதனை இன்னும் நாம் நுட்பமாக ஆராயவில்லை, நிறுவவில்லை. ஒருவித செவ்வியல் சார்ந்த, மைய நீரோட்ட மரபுக்குள்ளேயே நாம் கட்டுண்டு கிடப்பதாகத் தோன்றுகிறது.

சீதை, திரௌபதி, குந்தி, மண்டோதரி, காந்தாரி போன்றவர்கள் தலைசிறந்த ஒழுக்க சீலர்கள். கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்ந்தவர்கள். இவர்கள் முன்மாதிரியான மனைவிமார்களாகப் புகழப்படுபவர்கள். பதிவிரத தர்மத்தைப் போற்றி மாபெரும் கற்புக்கரசிகளாகப் புகழப்படுபவர்கள்.

கண்ணகி கற்புக்கரசி, பதிவிரதை, பத்தினி என்பதையெல்லாம் தாண்டியவள். இந்தியக் காப்பிய மரபில் இவளுக்கு நிகரானவள் எவரும் இல்லை. அவளுடைய தனித்துவத்தை இன்னும் நாம் துல்லியமாக இனங்காணவில்லை. கண்ணகி புகாரில் பேசா மடந்தையாக இருந்தவள். மதுரையில் வழக்காடி நீதி வென்றவள். வஞ்சியில் தெய்வமானவள்.

கண்ணகி தன் கணவன் இறந்தவுடன் அன்றைய மரபுப்படி பதிவிரதப் பெண்ணாக உடன்கட்டை ஏறவில்லை. தீப்பாய்ந்தம்மனாக மாறவில்லை. சதிக்கல்லாக மாறவில்லை. மாறாக, நீதி கேட்டுப் போராடினாள். நீதி தவறிய மன்னனை உயிரிழக்கச் செய்தாள். மதுரை மாநகரையே எரித்தாள். கண்ணகி பதிவிரதையாகவோ, கற்புக்கரசியாகவோ நின்று நீதியை வென்றெடுக்கவில்லை. தன் மார்பகத்தைக் கிழித்தெறிந்து வஞ்சினம் உரைக்கிறாள். அக்னி தேவனுக்கு ஆணை இடுகிறாள். அதன் பின்னரே மதுரை எரிகிறது. கண்ணகி பெருந்துயரத்துடன் இருந்தபோது அவளுடைய தோழி தேவந்தி கண்ணகியிடம் ‘நீ காமனை வழிபட்டால் உன் கணவன் விரைவில் வந்து சேர்வான்’ என்று சொல்லி காமனை வழிபடத் தூண்டினாள். அதனை ஏற்காமல் ‘பீடுஅன்று’ எனக்கூறி மறுத்துவிட்டாள். அன்றைய உலக வழக்கை ஏற்காதவளாகவே கண்ணகி இருந்தாள்.

இந்தியத் தமிழ் மரபுகளில் இறப்பால் ஒருவர் தெய்வமாதல் உண்டு. கண்ணகி உயிரோடு வாழும்போதே தெய்வமானவள். இவ்வாறான சூழலில் காப்பியவாதிகள் கண்ணகியைப் ‘பத்தினித் தெய்வம்’ என அடையாளப்படுத்தினர். ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல்’ என்று சிலப்பதிகாரத்தின் மூன்று நோக்கங்களைப் பேசும் போது பத்தினி பற்றிக் கூறுகிறார் இளங்கோவடிகள். கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக சிலம்பு முழுவதும் காட்டுகிறார். இது இலக்கியவாதிகளின் காப்பிய மனம் சார்ந்தது. செவ்வியல் தன்மை கொண்டது. அனைத்திந்தியப் பார்வை கொண்டது. பெருமரபு சார்ந்தது. மைய நீரோட்டம் சார்ந்தது.

கண்ணகியைத் தமிழ் நாட்டார் மரபிலிருந்தும் நோக்க வேண்டும். நாட்டார் மரபே மக்கள் மரபு; சுதேசி மரபு; அகவய மரபு; தமிழ்ச் சிந்தனை மரபு. கொங்கு நாட்டையே நாம் இங்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். கொங்கு தேசத்தில் வீரமாத்திகள் அதிகம். மக்கள் வழிபடும் சக்தி தெய்வங்கள் இவை. கண்ணகியும் ஒரு வீரமாத்தியே; கற்புக்கரசியல்ல. நீதியை வென்றெடுத்த வீர மங்கை. இந்த வீர மங்கைக்குக் கற்புத்திறன் உதவியாக அமைந்திருக்கலாம். ஆனால் கற்பே முதன்மை பெறவில்லை. வீராயியாக வடிவெடுத்தாள்.

இதுவரை நாம் கண்ணகியைப் ‘பத்தினித் தெய்வம்’ என்றே பேசி வந்துள்ளோம். கண்ணகியின் மூலப்படிமத்தை (Archetype) இன்னும் நாம் துல்லியமாக அவதானிக்கவில்லை. அவள் ஒரு தனி வகையினம். பழையோள், கொற்றவை, காடமர்செல்வி, கானமர்செல்வி, துணங்கையஞ்செல்வி முதலான சங்ககாலத் துடியான தெய்வங்களின் பிற்சங்ககால நீட்சியாகப் பார்க்க வேண்டியவள். அவள் ஒரு புது வடிவத்தில் பரிணமித்தவள். ஆதியில் ‘‘பெண் ஒரு வேட்டைக்காரி’’ (Woman, the Hunter) என்பது மனிதகுல வரலாற்றில் மானிடவியல் கண்ட உண்மை. அந்த வகையில் கண்ணகி ஒரு ‘வீராயி’. தமிழ் மரபில் இவள் ஒருவளே வீராயியாகப் பரிணமித்திருக்கிறாள். காட்டில் வேட்டையாடியது இயற்கைக் காலம். நாட்டில் வேட்டையாடியது அறநெறிக் காலம். கண்ணகி தன் வெற்றியின் மூலம் நாட்டில் நீதியை நிலை நாட்டினாள். அது வேட்டைக்கு நிகரானதே.

இவள் காளி, மாரியம்மன் போன்றவள். காளியும் மாரியம்மனும் மணமானவர்கள். ஆனால் என்றுமே கணவருடன் இணையாகத் தோன்றாதவர்கள். அதனால் அவர்களைத் ‘தேவித் தெய்வம்’ என்கிறோம். கண்ணகியும் அப்படித்தான். திருமணமாகி நான்காம் நாளன்றே கோவலன் மாதவியிடம் சென்று விட்டான். கண்ணகி காளி, மாரியம்மனைப் போல் மணமான ஒரு கன்னிப் பெண். தமிழ்த் தேவகணத்தில் தோன்றிய முதல் ‘வீராயி’ கண்ணகியே. இளங்கோவடிகள் முன்னிறுத்திய இந்த முதல் தமிழ் வீராயி பற்றி இன்னும் அதிகமாக விவாதிக்க வேண்டும். தமிழ் தேவகணத்தின் படிமலர்ச்சியில் கண்ணகி ஒரு தனி வகையினம். இவள் கன்னித் தெய்வமாகவோ, மனைவித் தெய்வமாகவோ உருவாகவில்லை. அவள் ஒரு தனித்துவமான தேவி தெய்வம்.

இளங்கோவடிகள் உருவாக்கிய புதுமரபு

சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவனுடைய மனைவி நற்சேனை. தன் கணவன் இறந்தபோது உடன்கட்டை ஏறுகிறாள். சேரன் செங்குட்டுவன் தன் தாய்க்குப் பத்தினி படிமக்கல் எடுத்தான் என்கிறது சிலப்பதிகாரம். நற்சேனை தீப்பாய்ந்தவளாகவே கருதப்பட்டாள்.

தீப்பாய்ந்தவர்களுக்கு எடுக்கப்பட்டவை சதிக்கல், மகாசதிக்கல், மாஸ்திகல் என்றெல்லாம் அழைக்கப்பட்டன. ஆனால் கண்ணகியை வேறு வகையான தெய்வமாக்கினார் இளங்கோவடிகள். இதனை, தான் இயற்றிய சிலப்பதிகாரத்திலேயே காட்டுகிறார். பத்தினிக் கோட்டம் என்று சொல்கிறார்.

கண்ணகி தன் கணவன் கோவலன் இறந்தவுடன் தீப்பாயவில்லை. மாறாக, பாண்டிய மன்னனிடம் ஆவேச தர்க்கமிட்டு நீதி வென்றாள். மதுரையை எரித்தாள். சேர நாட்டை அடைந்து விண்ணுலகம் சென்று தெய்வமானாள்.

இந்திய மரபில் பதிவிரதைகளின் ஆற்றல்களை இங்கு நாம் ஒப்பிட வேண்டும். கண்ணகி ஒரு சக்திவாய்ந்த ‘பத்தினி’ மட்டுமல்ல. நீதியை நிலைநாட்டி, மதுரை நகரை எரித்த வீரமங்கை. வடமரபைச் சேர்ந்த பஞ்ச கன்னியரின் பதிவிரதத்தன்மை வேறு வகையானது. கண்ணகியின் ஆற்றல் வேறுவிதமானது. இரண்டு மரபுகளையும் பொதுமைப்படுத்த முடியாது. கண்ணகியிடம் அணங்குடை பேய்மகளிரின் ஆதிக்கூறுகள் அடங்கியுள்ளன.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகி வழிபாட்டை நமக்குக் காட்சிப்படுத்துகிறார். கண்ணகி தன் வாழ்வின் கடைசி நாளில் தெய்வமாகிறாள். கண்ணகி கோவிலில் முதலில் பூசை செய்தவள் தேவந்திகை. இவள் ஒரு பெண் பூசாரி. இதனைச் சிலம்பின் வரந்தருகாதை பின்வருமாறு சொல்கிறது.

பத்தினிக் கோட்டம் படிப்புறம் வகுத்து

நித்தல் விழாவணி நிகழ்க என்று ஏவிப்

பூவும் புகையும் மேவிய விரையும்

தேவந்திகையைச் செய்க என்று அருளி

(வரந்தருகாதை. 151-154)

மனித குலத்தில் முதல் பூசாரி பெண் பூசாரியே என்று நிறுவுவதற்குச் சிலப்பதிகாரம் மிக முக்கியச் சான்றாக விளங்குகிறது. வேட்டுவ வரியில் கொற்றவையின் பூசாரியாகச் சாலினியைக் காட்டுகிறார் இளங்கோவடிகள். கண்ணகியின் பூசாரி தேவந்திகை. இவ்விரண்டு சான்றுகளும் மிக முக்கியமானவை. பெண் பூசாரியம் (Shawomanism) பற்றி வேறெந்தத் தமிழிலக்கியமும் பேசவில்லை. இந்த வகையில் சிலப்பதிகாரம் தனித்துவமானது. மனித குல வரலாற்றை மீட்டுருவாக்குவதில் இந்தத் தரவுகள் மிக முக்கியமானவை.

கொடுங்களூர் பூசகர்கள் இன்று ‘அடிகள்’ எனும் சாதியாராக இருப்பதும், இவர்கள் தாய்வழி முறையைப் பேணுவதும் சிலம்பின் நேர்த் தொடர்ச்சி எனலாம். மட்டக்களப்புக் கண்ணகைச் சடங்குகளில் கட்டாடியார் பெண்களாக இல்லை என்றாலும், சடங்குகளில் பெண்களின் பங்கேற்பே மிகுதியாகும். பொங்கலிட்டு மடை வைப்பதும், தீச்சட்டி ஏந்தி வேண்டுவதும், மடிப்பிச்சை எடுத்து நேர்ச்சை செய்வதும் பெண்கள்தான். ஆண்கள் வேடிக்கை பார்ப்பவர்கள்தான்.

கண்ணகி வழிபாட்டின் படிமலர்ச்சி

கண்ணகி தன் குறுகிய கால வாழ்வில் பல்மதச் சூழலை எதிர்கொண்டவள். கோவலனின் பெற்றோர் பௌத்தர்கள். கண்ணிகியின் பெற்றோர் ஆசீவகர்கள். கோவலனின் குடும்பத்தார் கடல் வணிகர்கள். அதனால் அவர்கள் கடல் தெய்வமான மணிமேகலாவை முதன்மைத் தெய்வமாக வழிபட்டு வந்தனர். சேரன் செங்குட்டுவன் சைவர். கவுந்தியடிகள் சமணத் துறவி. சிலப்பதிகார காலத்தில் அறுவகைச் சமயங்களைச் சார்ந்த சமயக்கணக்கர்களிடம் நிகழ்ந்த கடுமையான விவாதங்களையும் மோதல்களையும் காண்கிறோம். இத்தகைய சூழல்கள் நிலவியபோது கண்ணகி எவ்வாறு தெய்வமானாள் என்பதை நுணுகி ஆராய வேண்டும்.

கண்ணகி மதுரையிலிருந்து கிளம்பி சேரர் தேசத்தில் நெடுவேள் குன்றத்தில் வேங்கை மர நிழலில் நின்றபோது, அங்கிருந்த குறவரின மூதாட்டி அவள் யாரென வினவினாள். கண்ணகி தன் விதிப் பயனை விவரித்தாள். பின்னர் அந்த மூதாட்டி தன் மக்களை அழைத்து “சிறுகுடியீரே! சிறுகுடியீரே!, தெய்வங்கொள்ளுமின்” என்று அறிவுறுத்தினாள். கண்ணகியைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றாள். கண்ணகியை முதன் முதலில் தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் குறிஞ்சித் திணை குறவரின மக்கள்தான். ஒரு தொல்குடியின் தேவகணத்திற்குள் கண்ணகி ஐக்கியமாகி விட்டாள். அந்தக் கட்டத்தில் கண்ணகி ஒரு தொல்குடித் தெய்வமாகும்.

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கோவலனும் கண்ணகியும் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பயணக் களைப்பில் எயினர் குடியினர் வாழும் ஒரு சோலையில் இளைப்பாறினர். அங்குக் கொற்றவையாகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்த சாலினி கண்ணகியைப் பார்த்து ஒரு கணம் யோசித்துவிட்டு ‘‘இவளோ கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென் தமிழ்ப்பாவை, செய்தவக்கொழுந்து, உலகிற்கு ஓங்கிய திருமாமணி’’ எனப் போற்றினாள் (வேட்டுவவரி 47 – 50).

சாலினி எனும் ஒரு தொல்குடிப் பெண் பூசாரி, செல்வச் செழிப்புள்ள ஓர் உயர்குடி வணிக குலப் பெண்ணைப் பார்த்து “உலகமெலாம் போற்றும் திருமாமணியாய் வருவாய்” என்று வாக்குரைத்தது ஓர் அதிசயம். இவளை எல்லா உலகத்துக்குமான தெய்வம் எனப் போற்றினாள்.

அதனால்தான் துளுநாடு, குடகுநாடு (புன்னாடு), சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, யாழ்குடா நாடு, மட்டக்களப்புத் தமிழகம், சிங்கள இலங்கை என எட்டுத் தேசங்களிலும் வழிபடும் தெய்வமானாள். தென்னாசியப் பரப்பில் வேறெந்த தெய்வமும் இவ்வளவு நாடுகளில் வழிபடப்படவில்லை. ஒரு வீரமாத்தியாகப் பெயர் பெறவும் இல்லை.

குன்றக் குறவர்களிடம் தெய்வமாகிய கண்ணகி அடுத்துக் கேரளத்தில் பகவதியாக உருவெடுத்தாள். இதனை நாம் கருத்தூன்றி ஆராய வேண்டும். கிறித்து பிறந்த காலத்தில் பல்வேறு மரபுகளின் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் உலகப் பொதுமறையை வகுத்தார் திருவள்ளுவர். எல்லாருக்கும் பொதுவாக இறைவனை ‘ஆதிபகவன்’ என முன்மொழிந்தார். மதங்களைப் பொதுமையாக்கிய அறநூல் வள்ளுவம் என்பதை நாமறிவோம். அதனால்தான் அதுவரை யாரும் அழைக்காத வகையில் இறைவனை ‘பகவன்’ என்றார்.

பகவன் எனும் சொல்லுக்கு இணையான பெண்பாற் சொல்தான் ‘பகவதி’. ஆண், பெண் தெய்வங்களைச் சமன்படுத்தினார் வள்ளுவர். தான் தெய்வமாகத் தோன்றிய சேர தேசத்தில் எல்லாருக்குமான ஒரு பொதுத் தெய்வமாக உருவெடுத்தாள் பகவதி. இளங்கோவடிகளின் நோக்கமும் ஒன்றுபட்ட தமிழகத்தை உருவாக்குவது தான். தொல்குடிகளின் தேசங்கள், சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் ஆகிய அனைத்தையும் ஒற்றை தமிழ்நாடாக மாற்ற விரும்பினார். அந்தத் தேசத்துக்கு முன்னோடித் தெய்வம்தான் கண்ணகி. இதனை அரச தெய்வமாக உருவாக்கினார் இளங்கோவடிகள்.

ஆனால் பிராமண மதம், வைதீகம், இந்து மதம் எனும் பெயர்களில் எழுந்த பக்தி இயக்கப் பேரெழுச்சியால் பகவதி இந்துமயமாக்கப்பட்டாள். இது ஒரு சமய ரீதியான விபத்துதான். அந்த விபத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டில் மீளெழுச்சி நிகழவேயில்லை. பொது இறைமை ஒன்று உருவாகவில்லை. கண்ணகி இந்து மதக் கடவுளாக மாற்றப்பட்டாள். காலம் நிகழ்த்திய மாற்றத்தில் பல்வேறு வடிவங்களை ஏற்றுக்கொண்டாள்.

தமிழகத்தில் கண்ணகியின் உருமாற்றங்கள்

தமிழ்ச் சமய மரபில் கண்ணகி ஓர் அச்சு அசலான தொல் மூலப்படிமம் (Archetype). அவளுக்கு முன்பும், பின்பும் அப்படியொரு தெய்வத்தைத் தமிழர்கள் கண்டதில்லை. அந்தப் படிமம் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. அவள் பெருமரபாக இருந்த இந்து மதம் எனும் கூட்டமைப்பில் கரைந்து போனாள். பல்வேறு வித்தியாசங்களுடனும், வேறுபாடுகளுடனும், பன்முகத்தன்மையுடனும் உருமாற்றங்களையும் திரிபுவடிவங்களையும் பெற்றுக் கொண்டாள். இன்று அவள் பல்வேறு பெயர்களில் வணங்கப்படுகிறாள்.

1. மதுரை யாதவர் தெருவில் உள்ள செல்லத்தம்மன் கோயில் சிலப்பதிகார மாதரியின் வீடு எனும் வழக்குண்டு. கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த மாதரி செல்லத்தம்மனாகக் கருதப்படுகிறாள். நாளடைவில் கண்ணகி கோவிலாகவே அது மாறிவிட்டது.

2. கண்ணகி மதுரையை எரித்துவிட்டு அமர்ந்த இடத்தில் விராட்டி பத்து அம்மன் கோயில் உள்ளது. கண்ணகி ஓய்வெடுத்த இடத்தில் பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் உள்ளது.

3. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள துர்க்கையின் மார்பில் வெண்ணெய் வீசுவது வழக்கம். ஒரு முலையிழந்த கண்ணகிக்கு இடையர் குலப் பெண்கள் வெண்ணெய் தடவியதன் ‘போலச் செய்’வதாக இது அமைகிறது. உண்மையில் அது கண்ணகியே என்பார்கள் ஆய்வாளர்கள்.

4. ஈரோடு சுணக்கம்பாளையம் பகவதி கோயில், கண்ணகி கோயிலே. ஆத்தூரிலும் கண்ணகி கோயில் சடங்கில் சிலம்பின் கூறுகள் உள்ளன.

5. சென்னை திருவெற்றியூர் சிவன் கோயிலில் வடக்கு வீதியில் இருக்கும் துர்க்கை கோயில் ஆதியில் கண்ணகி கோயில்தான். இங்கு நிகழும் திருவிழாவில் பந்தல் எரிக்கும் சடங்கு நிகழ்கிறது. இது மதுரையை எரியூட்டியதை நினைவூட்டுகிறது.

6. திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மனும், தூத்துக்குடி கொற்கையில் உள்ள வெற்றி வேலம்மனும், சென்னையில் திருவெற்றியூர் தியாகராசர் கோயிலில் உள்ள வட்டபுரியம்மனும் கண்ணகியின் திரிபுவடிவங்களே.

7. திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் மதுர காளியம்மன், தஞ்சாவூரில் செங்கிளாச்சியம்மன், சிவகங்கை மாவட்டத்தில் கண்ணுடைய நாயகி இவர்களும் கண்ணகியே.

8. கொங்கு நாட்டில் காங்கேயத்தில் பகவதியம்மன் கோயில் உள்ளது. இதனைக் கொங்கு ஆவணம் ஒன்று ‘தாய்பகவதி’ என்று கூறுகிறது.

9. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகவதி கோயிலுக்குக் கேரள மாநிலம் திருச்சூர் பகுதி மக்கள் வந்து வழிபடுகின்றனர். அவர்கள் இந்தப் பகவதியைப் ‘பருமக்காவு காணி பகவதி’ என்கிறார்கள்.

10. சூலூர் கண்ணம் பாளையத்தில் கேரளப் பாணியில் மரத்தால் மிகப் பெரிய பகவதி கோயில் கட்டப்பட்டுள்ளது (புலவர் செ.இராசு. கொங்குக் குல தெய்வங்கள், பக். 62-64).

11. கோவை மாநகரில் உள்ள கோணியம்மன் கண்ணகியே.

12. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கேரளத்தின் தாக்கம் பெற்றதாகும்.

இப்படியான இன்னும் சில கண்ணகி கோயில்களைத் தமிழ்நாட்டில் இனங்காண இயலும் (இராசு, ம. 2005; செல்லன் கோவிந்தன் 2009; ஜெயகலா, வெ. 2022: 54).

கண்ணகி வழிபாட்டின் மாற்றங்கள்

தமிழகத்தில் கண்ணகி வழிபாடு மாரியம்மன் வழிபாடாகவும், வட்டபுரியம்மன், செல்லத்தம்மன், செல்லாண்டி அம்மன் வழிபாடாகவும் மாறிவிட்டது. கொங்குப் பகுதியில் இந்த மாற்றங்களைக் கொங்கு மன்னர்கள் செய்தனர். இதற்கான எண்ணற்ற சான்றுகளைக் கொங்கு நாட்டிலிருந்து நிறுவுகிறார் ஆரோக்கியசாமி (1953). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள பண்ணாரியம்மன் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்கிறார் அவர் (மேலது: 157).

கேரளத்தை ஒப்பிடும்போது, தமிழகத்தில் கண்ணகி வழிபாடு மிகக் குறைவுதான். தமிழகத்தின் மீது படையெடுத்த கன்னடர், தெலுங்கர், மராட்டியர் செல்வாக்கால் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்தன. வைதீகத்தின் தாக்கமும் மிக அதிகம். இதனால் கண்ணகி வழிபாடு நாட்டார், வைதீகத் தாய்த் தெய்வங்களுடன் கரைந்து விட்டது அல்லது திரிபு வடிவம் பெற்றுவிட்டது எனலாம்.

கேரளத்தில் கண்ணகி வழிபாடு

கேரளத்தில் கண்ணகி வழிபாடு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையுள்ள இடங்களில் மிகுந்த செல்வாக்குடன் வழக்கில் உள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் மிகவும் பரவலாக உள்ளது.

கண்ணகி வழிபாடு கேரளத்தில் மூன்று நிலையில் உள்ளது.

1. ஆகம மரபுக்குரிய பகவதி அம்மன். வைதீக மரபு வழிபாடு. நம்பூதிரி பிராமணர்கள் பூசகர்கள்.

2. கண்ணகியின் சில அடையாளங்களுடன் பகவதியாக வழிபடப்படுகிறாள். நாட்டார் வழிபாடும் வைதீக வழிபாடும் கலந்து நடைபெறுகின்றன. தகுதி குறைந்த நம்பூதிரிகள் பூசைகள் செய்கின்றனர்.

3. ஸ்ரீகுரும்பாதேவியாக வழிபடுதல். இதில் நாட்டார் மரபு அதிகம். வைதீகம் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறது (பால்சேகர், அ. 2005; சந்திரன், வி.ஆர். 2005; ஜெயகிருஷ்ணன், ப. 2023).

கேரளத்தில் ஸ்ரீகுரும்பா, பத்திரகாளி, நல்லம்மா, மணிமங்கா, மாரியம்மன் போன்ற தாய்த் தெய்வங்களை வழிபடும் பாடல்களில் கண்ணகி புராணம் உள்ளது என்கிறார் கே.கே.என். குரூப் (1977).

வடகேரளத்துச் சீர்மக்காவு கோயில்கள் கண்ணகிக் கோயில்களே என்கிறார் மலபார் வரலாற்றை எழுதிய ஆங்கில அதிகாரி வில்லியம் லோகன் (Malabar Manual 1887).

கி.பி.9 ஆம் நூற்றாண்டில் ஆரிய நம்பூதிரிகள் கேரளத்தில் குடியேறியபோது கண்ணகி வழிபாடு பகவதி வழிபாடாக உருமாற்றம் பெற்றது. கேரளத்தில் கண்ணகி வழிபாடு சிலப்பதிகார காலத்தில் உருவாகி விட்டாலும், கி.பி.14 ஆம் நூற்றாண்டு வரை அது பல இடங்களுக்கும் பரவலாகியது என்கின்றனர் அறிஞர்கள் (பெருமாள், அ.கா. 2022; செல்லன் கோவிந்தன். 2009).

8 ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் மகோதயப் பேரரசு உருவானது. இந்த அரசு கி.பி. 1102 வரை நீடித்தது. பண்டைய சேர வம்சத்தினரே மகோதய அரசர்கள். மகோதயப் பேரரசர்கள் பெருமாள்கள் எனப்பட்டனர்.

முதல் மகோதய அரசன் குலசேகர வர்மன் (கி.பி. 800-820). இவரே குலசேகர ஆழ்வார் என்ற கருத்தும் உண்டு. இரண்டாம் அரசன் ராஜசேகரன் (கி.பி. 820-844). இவரது காலத்திய முதல் கல்வெட்டு ஒன்று ‘நமச்சிவாய’ என்று தொடங்குகிறது. இவர் பெரிய புராணம் குறிப்பிடும் சேரமான் பெருமாள் நாயனாராக இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் உண்டு.

வட கேரளத்தில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டை ஒட்டி நம்பூதிரிகளின் செல்வாக்கு ஆரம்பமானது. வைதீகத்தின் வளர்ச்சி இங்கிருந்து தொடங்குகிறது. கண்ணகி வழிபாட்டை இந்துவயமாக்கும் முயற்சி இக்காலகட்டத்தில் முழுமை பெற்று விடுகிறது எனலாம். 14 ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் பகவதி வழிபாடு மிகப் பரவலான வழிபாடாக மாறிவிட்டது. நம்பூதிரிகளின் ஆகம முறை பெருநெறி வழிபாடானது. மறுபுறம் கிராமப்புறக் காவுகளில் நாட்டார் தெய்வமாகவும் அது தொடர்ந்து நிலைபெற்றது.

கண்ணகி மதுரையை எரித்ததும் மழைவளம் நின்றது. பஞ்சம், வறுமை வந்தன. வெப்பு நோயும் தோன்றியது. அதனால் கொற்கைப் பாண்டியன் 1000 பொற்கொல்லர்களைக் கொன்று நங்கையைக் குளிர்வித்தான். இதனைக் கேட்ட கொங்கியம் கோசர், கயவாகு, சோழன் மூவரும் கோவில் எடுத்தனர் என்கிறது உரைபெறு கட்டுரை. ஆக, கேரளத்தில் கண்ணகி வழிபாடு பரவ சேர மன்னன் மட்டுமல்ல, கோசர்களும் காரணமாகும்.

கேரளத்தில் பல்வேறு சமூகத்தினர் கண்ணகி கதையைப் போற்றி வருகின்றனர். நல்லம்மா பாட்டு, தோற்றம் பாட்டு, கோவலன் சரித்திரம், கோவலன் கண்ணகி கதை, மலை அரையர், மன்னான், இருளர், காணிக்காரர், முதுவான் ஆகிய பழங்குடியினரின் கண்ணகி கதைப் பாடல் முதலானவை இன்றளவும் பிரசித்தி பெற்றுள்ளன. இவற்றில் கதாபாத்திரங்களின் பெயர்கள் பொன்மகன், பொன்மகள், கோவலன், கண்ணகி, தேவி எனப் பல வகைகளில் வருகின்றன. ஆனாலும் கதையின் அடிக்கருத்தும் (Motif), செயல்கூறுகளும் பொது அமைப்பைக் கொண்டுள்ளன. காடர் பழங்குடி மக்களிடம் வழங்கும் கண்ணகிக் கதையில் கோவலன் – கண்ணகி திருமணம் நடைபெறவில்லை. கண்ணகியின் மண வாழ்க்கை வேதனையளிப்பதால் அதனைக் காடர்கள் தம் கதையில் சேர்க்கவில்லை போலும்.

கேரளத்தில் பெருமலையில் வாழும் முதுவான் பழங்குடி மக்கள் கண்ணகியை மலையாள அம்மனாக வழிபடுகின்றனர். தீயர், வேலன், கணியான், மன்னான் முதலான பழங்குடி மக்களும் கண்ணகியைத் தொன்று தொட்டு வணங்கி வருகின்றனர். அவரவர் ஊர்களில் உள்ள பகவதி காவுகளில் இவர்கள் பூசாரிகளாகவும் உள்ளனர் (ஜெயகிருஷ்ணன், ப. 2023: 68 – 75).

பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி இருளர்களிடம் கண்ணகி கதைப்பாடல் வழக்கில் உள்ளது. ஆண்டுத் திருவிழாவில் கோவலன் கூத்து எனும் தலைப்பில் கண்ணகி கதையை நிகழ்த்துகின்றனர் (மேலது: 47).

கேரளத்தின் புவியியல் பரப்பு நீண்டு வளர்ந்தது என்றாலும், பல்வேறு பிரதேசங்களிலும் கதையின் அடிக்கருத்து தொடர்கிறது. கேரளத்தில் வழங்கும் மேற்கூறிய வழக்காறுகள் அனைத்தும் தேவி தெய்வமான வரலாற்றை முன்னிலைப்படுத்துகின்றன. ஒரு சாதாரணப் பெண் நீதி கேட்டுத் தெய்வமாதல் என்பது ஒரு மகிமைக் கதையாக உருவெடுக்கிறது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இந்தத் தெய்வமாதல் நிகழ்வே பெரிதும் பேசப்படுகிறது.

கேரளத்தைத் தோற்றுவித்தவர் என அறியப்படும் பரசுராமர் எது எது எப்படி இருக்க வேண்டும் என வரையறை செய்ததாக கேரளோற்பத்தி எனும் மலையாள நூல் கூறுகிறது. அதன்படி சில வழிபாட்டு முறைகளில் வைதீகம் கலக்காமலிருக்க வரையறுத்தார். அதன்படி கண்ணகி வழிபாடும் தெய்யமும் (சங்ககால வேலன் ஆட்டம் – வெறியாட்டம்) இன்றும் தொடர்கின்றன.

கண்ணகி மதுரையை எரித்த பின்பு சிவனிடம் வரம் பெற்றுக் கேரளத்தில் கோயில் கொண்டாள் என்று தோற்றம் பாட்டுக் கூறுகிறது. கண்ணகியை இந்துவயமாக்கும் முயற்சி இது. கேரளத்தில் கண்ணகி வழிபாடு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையுள்ள இடங்களில் பெருவழக்கில் உள்ளது.

கேரளத்தில் எண்ணற்ற தாய்த் தெய்வங்களின் தோற்றத் தொன்மங்களில் (Origin Myths) தாருகன் – காளி கதை மையமாக உள்ளது. கண்ணகியை வழிபடும் தெய்வமாக ஏற்கும்போது காளியின் இடத்தில் கண்ணகியையும், தாருகன் இடத்தில் பாண்டிய மன்னனையும் வைத்து தோற்றப் பாட்டுகள் இயற்றப்பட்டன. இது இந்துவயமாக்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாகும்.

காளி தாருகனை அழிக்கச் சிவனால் தோற்றுவிக்கப்பட்டவள். கண்ணகியோ பாண்டியனை அழிக்கப் பிறந்தவள் என மணிமங்கா தோற்றப் பாட்டுக் கூறுகிறது. இதன் மூலம் இந்துவயமாக்கம் முழுமை பெறுகிறது.

கேரளத்தில் கண்ணகி வழிபாட்டின் பரவலாக்கம்

கண்ணகி மதுரையை எரித்த பின்னர் வைகை வழியே 64 கி.மீ. நடந்து சென்று சேரநாட்டில் நெடுவேள் குன்றில் வேங்கை மரத்தடியில் நிற்கிறாள். அங்கிருந்த குன்றக் குறவர் இன மூதாட்டி கண்ணகியை யார் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். பின்னர் தன் இனத்தாரை அழைத்து,

சிறுகுடியீரே! சிறுகுடியீரே

தெய்வம் கொள்ளுமின்

(வஞ்சிக்காதை. 24.4)

என்றாள். கண்ணகியை முதன் முதலில் தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள் நெடுவேள் குன்றத்தில் வாழ்ந்த குன்றக் குறவர்கள் தான். இவர்கள் குறிஞ்சித் திணை மக்கள்; தொல்குடியினர்.

இன்றைய கொடுங்களூர் பகவதி அம்மன் கோயிலே கண்ணகியின் முதல் கோயில் என்றும் கருதப்படுகிறது. இந்தக் கோயிலுக்கும் ஒரு சிறிய மூலக் கோயில் உள்ளது. அது கொடுங்களூரில் சற்று தொலைவில் உள்ளது. மிகச் சிறிய பழைய கோயில் இது. இன்றும் விழா தொடங்கும்போது நிகழும் தாலப்பொலி இங்கிருந்துதான் தொடங்குகிறது. இக்கோயிலின் பெயர் ஸ்ரீகுறும்பா பகவதி கோயில் ஆகும். இக்கோயிலை நிறுவியவர்கள் குறும்பர் இன மக்கள். இவர்கள் முல்லைத் திணைக் குடியினர். தாலப்பொலி ஊர்வலம் நான்கு நாட்கள் நடக்கும். எல்லா நாட்களிலும் குறும்பா பகவதி கோயிலில் இருந்துதான் அது தொடங்கும்.

குறும்பர்கள் தமிழ்நாட்டில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவ வம்சத்தின் மரபினர். சோழ ஆட்சி உருவான பின்னர் இவர்கள் நீலகிரி, வயநாடு, குடகுப் பகுதிகளில் மறைந்து வாழ்ந்தனர். மலபாரில் குறும்ப நாடு ஒன்று உள்ளது. ஆக கண்ணகி குறிஞ்சித் திணையில் தெய்வமாகி, பிறகு முல்லைத் திணையில் வாழ்வெடுத்தாள் என்பதைக் காண்கிறோம். இறுதியில் அவள் அனைவருக்குமான தெய்வமாகி சமவெளி எங்கும் பரவிவிட்டாள். பெருநெறி தெய்வமாக, இந்துக் கடவுளாக மாறி விட்டாள்.

வாய்மொழி வரலாற்றுக் கதையின்படி பன்னெடுங்காலத்திற்கு முன்பே கம்மாளர்கள் (பொற்கொல்லர்), அரையர் (மீனவர்), தீயர், வாணியன், வண்ணான், மூத்தன் முதலானவர்கள் தமிழகத்தின் கரூர், காங்கேயம் பகுதிகளிலிருந்து பாலக்காட்டுக்குக் குடிபெயர்ந்தனர். செட்டியார்களில் ஒரு பிரிவினர் கண்ணகியைத் தம் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். இன்று கேரளத்தின் மற்ற சமூகத்தாரும் ஸ்ரீகுரும்பா (கண்ணகி) தேவியை வழிபடுகின்றனர்.

முல்லைத் திணையிலிருந்து பகவதியம்மன் கேரளத்தின் சமவெளிப் பகுதிகளுக்கும் பரவியது என்பது ஒரு விரிநிலையாக்க அசைவியக்கமாகும் (Universalization Process). சேர நாட்டில் தொடக்க காலத்தில் உருவான கண்ணகிக் கோட்டங்கள் அனைத்தும் பிற்காலத்தில் காளி கோயில்களாகவும், பகவதிக் காவுகளாகவும் உருமாற்றம் பெற்றுவிட்டன. இந்த அசைவியக்கத்தின் பின்னணியை நோக்க வேண்டும்.

ஒரு முறை கொடுங்களூர் அரசரை எதிரிகள் முற்றுகையிட்டனர். அப்போது ஒடுக்கப்பட்ட சாதியினர் ஆயுதங்களுடன் வந்து அரசரைக் காப்பாற்றினர். இதன் பொருட்டு நன்றி தெரிவிக்கும் வகையில் அரசர் எல்லா மக்களுக்கும் பகவதி வழிபாட்டில் உரிமை கொடுத்தார். இன்றைக்கும் மீனபரணிக்கு முந்தையநாள் நடக்கும் காவுதீண்டல் நிகழ்ச்சியில் எல்லாச் சாதிக்காரர்களும் பங்கேற்கிறார்கள்.

குறும்பர், குடும்பர் (குடும்பி), அரையர், புலையர், தட்டான் (கம்மாளர்), வேலன் (மண்ணார்), தீயர், நாயர், சாத்திரர் (நம்பூதிரிகளின் ஒரு தாழ்வான பிரிவினர் – இவர்கள் வேதம் படிக்க உரிமையில்லை. ஆயுதப் பயிற்சி செய்பவர். சமையல் தொழிலும் செய்வர்) முதலான பலரும் பகவதி அம்மன் ஆலயத்தில் வெவ்வேறு நிலைகளில் பங்கெடுக்கின்றனர்.

கண்ணகி வழக்காறுகள்

கேரளத்தில் கண்ணகி வழக்காறுகள் அதிகம். அவற்றில் கதைகளும் பாடல்களும் அதிகமாகும். 12க்கும் மேல் கதை வடிவங்கள் உள்ளன.

1. சிலம்பு கதை, 2. கோயிலாண்டி கதை, 3. ஸ்ரீ குறும்பா கதை, 4. அட்டப்பாடி இருளர் கதை, 5. நல்லம்மா கதை, 6. பாலக்காடு சித்தூர் வண்ணார்களின் கதை, 7. கொடுங்களூர் கதை, 8. ஆற்றுக்கால் பகவதி கோயிலில் பாடப்படும் வில்லுப்பாட்டு கதை, 9. மணிமங்கலம், 10. தோற்றப்பாட்டுக் கதை, 11. தோல்பாவைக் கதை, 12. மன்னான் உள்ளிட்ட சில பழங்குடிகளின் கதை, 13. புகழேந்திப் புலவர் கதை.

கண்ணகி வழிபாட்டின் பன்மியத்தையும், பரவலாக்கத்தையும் இந்த வாய்மொழி நாட்டார் இலக்கியங்கள் காட்டுகின்றன. தென்னிந்தியாவில் கண்ணகியின் தேசம் ஒன்று உண்டென்றால் அது கேரளம்தான்.

கர்நாடகத்தில் கண்ணகி வழிபாடு

துளுவ நாட்டை ஆண்ட கொங்கர் வம்சத்து அரசன் தென் கன்னடத்தில் மேற்குக் கடற்கரையில் மங்களபுரம் எனும் ஊரில் கண்ணகி கோயில் ஒன்றை நிறுவினான். இலிங்காயத்து மக்களின் நாட்டார் வழக்காறுகளில் கண்ணகி கதை உள்ளது. அங்குக் கண்ணகி, கோவலன், மாதவி ஆகிய மூவரும் முறையே சந்திரா, கொய்லா, மெதிகா எனப்படுகின்றனர் (ஃபிரீரி, 1870). கேரளத்தில் பகவதியம்மன் அளவிற்குக் கர்நாடகத்தில் மங்கலாதேவி பரவலாக்கம் பெறவில்லை.

ஈழத்தில் கண்ணகை வழிபாடு

கண்ணகை வழிபாடு இந்தியத் தமிழகத்தில் இல்லை; ஈழத்தில் இருக்கிறது; இந்தியத் தமிழராக இலங்கை வந்து வாழும் மலையகத்திலும் இல்லை. இத்தகைய சீர்மையற்ற பண்பாட்டுப் படிமலர்ச்சி கண்ணகை வழிபாட்டில் தொழிற்பட்டுள்ளது. இதனை ஓர் அரிதான விரிநிலைப் படிமலர்ச்சி (Divergent Evolution) எனலாம். இந்தியத் தமிழருக்கும் ஈழத்துக் கண்ணகிக்கும் எந்தத் தாக்கமும் இல்லை என்றாகிவிட்டது.

இன்று வடக்கிலங்கையில் ஏறக்குறைய ஐம்பது கோயில்களும், கிழக்கிலங்கையில் ஏறக்குறைய எழுபது கோயில்களும், வன்னி, முல்லைத்தீவு, திரிகோண மலை ஊடாக பாணமை வரை ஏறக்குறைய நாற்பது கோயில்களும் கண்ணகை கோயில்களாக உள்ளன. சிங்கள இலங்கையில் ‘பத்தினித் தெய்யோ’ (கண்ணகை) துணைத் தெய்வமாக உள்ள கோயில்கள் பரவலாக உள்ளன.

கண்ணகி பிறந்து வளர்ந்து வாழ்ந்த தேசத்தில் அவளின் வழிபாடு மருவிவிட்டது. ஆனால் இலங்கைத் தேசமெங்கும் அவள் பூர்வ வடிவில் அருளாட்சி செய்கிறாள். இப்படியொரு தெய்வம் தென்னாசியப் புலத்தில் இல்லை எனலாம். பழங்குடி மக்கள் தொடங்கி நாகரிக மக்கள் வரை அனைவரும் வழிபடும் தெய்வமாகி விட்டாள் கண்ணகை. பக்தி இயக்கம்கூட கண்ணகி உட்பட நாட்டார் தெய்வங்களை நெருங்க முடியவில்லை. கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கூத்திகன் காலத்திலிருந்தே சேர நாட்டுக் குடியேற்றம் ஈழத்தில் நடந்துள்ளது.

இலங்கையில் கண்ணகை தெய்வமான வரலாற்றைப் போற்றும் தொன்மங்கள், இலக்கியங்கள், காவியங்கள், கதைகள், வழிபாட்டு முறைகள், சடங்காற்றுகைகள், வழக்காறுகள், நம்பிக்கைகள், பிற ஐதீகங்கள் என அனைத்தும் இலங்கைக்குரியவையாகும். ஐந்து தலை நாகமாக உருவெடுத்து ஈழம் வந்த தொன்மமும், மீகாமன் வெடியரசன் வரலாறும் சிலப்பதிகாரத்தில் இல்லாதவை. சுயம்புவான சுதேசியான வழிபாட்டு மரபாக ஈழத்தில் கண்ணகை வழிபாடு உருவானது. தென்னிந்தியாவிலிருந்து தென்னிலங்கை வரை பரவிவிட்ட இந்த வழிபாடு தமிழீழத்தில் பிரதேசமயப்பட்டும், உள்ளூர்வயப்பட்டும் உயிர்ப்புடன் திகழ்கிறது. அதனால் அது இங்கு வாழும் மரபாக மட்டுமல்ல, தொன்மை மரபாகவும் விளங்குகிறது (சண்முகலிங்கன், என். 2014).

கயவாகு மன்னன் (கி.பி. 113 – 135) கண்ணகையைக் கொண்டு வருவதற்கு முன்பே, அவ்வழிபாடு சேர நாட்டிலிருந்து ஈழத்திற்கு வந்துவிட்டது எனும் வரலாறும் ஈழ மரபுக்கானது (சாந்தி கேசவன், 2024). ஏலவே கண்ணகை வழிபாடு சார்ந்து ஈழத்தில் உருவாகியுள்ள எல்லா வழக்காறுகளும் உள்ளூர் மரபாகப் பேணப்படுவது இதன் உயிர்ப்புத் தன்மைக்குக் காரணமாக உள்ளது.

கிழக்கிலங்கையில் வழங்கும் அம்மன் சிந்து, தோத்திரம், அகவல், பதிகம், குளிர்த்திப் பாடல்கள், ஊர்சுற்றுக் காவியம், வசந்தன் காவியம், மழைக்காவியம், கூத்து மரபு, ஆடல் மரபு, கொம்பு முறி விளையாட்டுகள் என அனைத்தும் இந்த மண்ணுக்கானவையாக உள்ளன. அவை பிரதேச மரபுகளாகவும், உள்ளூர் மரபுகளாகவும் செழித்து நிற்கின்றன. நாட்டார் வழிபாட்டின் அதிமுக்கியமான பண்புகள் இவை. இங்குள்ள கண்ணகை வழிபாட்டில் இவை யாவும் உயிர்ப்புடன் உள்ளன.

தமிழகத்தில் கண்ணகி பாண்டிய மன்னனை வீழ்த்திய புரட்சிப் பெண்ணாகவும், கற்புக்கரசியாகவும் கருதப்படுகிறாள். ஆனால் ஈழத்தில் அவள் மழையாற்றல் பெற்றவளாகவும், நோய் நொடிகள் தீர்ப்பவளாகவும், வாழ்வில் வளம் தருபவளாகவும், காவல் தெய்வமாகவும், பயிர்கள் கால்நடைகளைப் பாதுகாப்பவளாகவும் வணங்கப்படுகிறாள். இந்த முக்கிய வேறுபாடு ஈழத்தில் அவளின் இருத்தலைக் காட்டுகிறது.

சிங்கள தேசத்தில் பத்தினி வழிபாடு

இலங்கையில் சிங்கள மக்கள் கண்ணகியைப் ‘பத்தினித் தெய்யோ’ என வணங்குகின்றனர். இதனை மிக விரிவாக ஆய்வு செய்திருப்பவர் உலகப் புகழ் பெற்ற இலங்கை மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகர.

கணநாத் ஒபயசேகர (1984) கருத்துப்படி கண்ணகியின் உண்மையான வழிபாடு சிங்கள தேசத்தில் மட்டுமே உள்ளது. இவருடைய கருத்து நமக்குப் பெரும் வியப்பைத் தருகிறது. உண்மைதான். அவருடைய கருத்துகளைக் காண்போம்.

கண்ணகி ஓர் இந்துத் தெய்வம் எனும் கருத்து பலரிடம் உள்ளது. காரணம் சேரன் செங்குட்டுவன் முன்னெடுத்த தெய்வமிது. அவன் ஓர் இந்து மதத்தவன். ஆனால் இரட்டைக் காப்பியங்களை ஆராய்ந்தால் கண்ணகி ஒரு சமணத் தெய்வமாகவே அடையாளம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.

சிங்கள இலங்கையில் அவள் ஒரு பௌத்த தெய்வம். பௌத்தர்கள் ஆதியிலிருந்தே நாட்டார் தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள். இன்றும் இலங்கையில் சிங்கள மக்கள் நாத (சிவன்), விஷ்ணு, கண (கணபதி), கதரகம (முருகன்), பத்தினி (கண்ணகி), கிரியம்மா (மலைத் தெய்வம்) உள்ளிட்ட 12 தெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். இத்தெய்வங்கள் எல்லாம் ஆதியிலிருந்து வழிபடப்படும் இந்து நாட்டார் தெய்வங்களேயாகும். இது பற்றிய புரிதல் தென்னிந்திய பௌத்தத்தோடு தொடர்புடையதாகும். அதனை இங்கு பேசுவதற்கு இடமில்லை. இலங்கையில் ‘நாட்டார் பௌத்தம்’ பற்றி அறிவதற்குப் போதிய ஆய்வுகள் உள்ளன. சிங்கள மக்கள் புத்தரை மட்டும் வணங்குகிறார்கள் என எண்ணுகிறோம். அது தவறு. அவர்கள் பன்னெடுங்காலமாக இந்து நாட்டார் தெய்வங்களைத் துணைத் தெய்வங்களாக (காவல் தெய்வங்கள்) வழிபட்டு வருகின்றனர்.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இலங்கையில் சிங்கள மக்களின் குடியேற்றமாகும். இன்றைய சிங்கள மக்களில் குறிப்பிட்ட அளவிற்குக் கேரளத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் குடிபெயர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் தமிழை மறந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. சிங்களவர்களாக மாறிவிட்டனர்.

கேரளத்தில் குலசேகரன் ஆட்சிக்கு முன்பு வரை அங்கு பௌத்தம் ஓங்கியிருந்தது. சங்கரரின் பக்தி இயக்கத்துக்குப் பின்னர் கேரளத்தில் பௌத்தமும், சமணமும் வலுவிழந்தன. இந்தச் சூழலில் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கேரள பௌத்தர்கள் இலங்கையின் மேற்கு, தெற்கு, சபரகமுவ மாகாணங்களுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு பௌத்தம் அரச மதமாக ஓங்கியிருந்தது.

கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலேயே சிலோன் (இலங்கை) நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிலும் அதனையொட்டிய சேர நாட்டிலும் பௌத்தத்தைப் பரப்பும் நடவடிக்கைகள் நிகழ்ந்ததற்கான பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன (காண்க: அலெக்சாண்டர், பி.சி. 2025).

தென்னிலங்கை வரலாற்றில் கேரள பௌத்தர்களின் குடிப்பெயர்வை ஒபயசேகர தன் ஆய்வில் மிக விரிவாகப் பேசுகிறார். கேரளத்தில் பத்தினியைப் பன்னெடுங் காலம் வழிபட்டு வந்தவர்கள் சமணர்களும் பௌத்தர்களும்தான். பக்தி இயக்கம் எழுச்சி கண்டபோது பௌத்தர்கள் பெரிதும் விரும்பி இலங்கை சென்றார்கள். தம்முடன் தாம் வழிபட்டு வந்த நாட்டார் தெய்வ வழிபாட்டையும் கொண்டு சென்றார்கள். அதில் பத்தினி வழிபாடும் ஒன்றாகும் (ஒபயசேகர, 1984: 523).

இங்கு நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய விழுமியக் கருத்து ஒன்றுதான். கேரள பௌத்தர்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்து சென்ற காலத்தில் பத்தினி வழிபாடு அங்கு மேலும் வீரியமடைந்தது. இந்த வரலாற்றுச் சூழலைப் பார்க்கும்போது கேரள பௌத்தர்களே பத்தினியின் தொடர்ச்சியான பக்தர்கள் எனத் தெளியலாம். பக்தி இயக்கத்துக்கு முன்பிருந்து இன்று வரை கண்ணகியைத் தொடர்ச்சியாகப் பெயர் மாறாமல் வழிபடுபவர்கள் இலங்கைக்குச் சென்ற கேரள பௌத்தர்கள்தான். இந்த வரலாற்றைக் கேரளத்திலிருந்தும் ஆராய வேண்டும்.

உண்மையில் தமிழகத்திற்கும் இலங்கைக்குமான உறவு விஜயன் காலம் முதல் (கி.மு. 520) கயவாகு காலம் வரை (கி.பி. 113) தொடர்ந்து நிகழ்ந்தது. அதன் பிறகும் அது தொடர்ந்தது. அதற்குப் படையெடுப்பு, வணிகம், குடிப்பெயர்வு ஆகிய மூன்று சமூக அரசியல் காரணங்களும் மிக முக்கியமாக அமைந்தன.

சிங்கள மன்னர்களின் தொடர்ச்சியான வலுவான ஆட்சி அமையும் வரை, பல்வேறு தமிழ் மன்னர்கள் இலங்கையை ஆண்டனர். சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழகத்திலிருந்து இலங்கையுடன் வணிகம் நடைபெற்று வந்தது. அதேபோல தென்னிந்திய மக்கள் குழுவினர் பலர் தென்னிலங்கையில் குடியேறி மெல்ல மெல்ல சிங்கள மக்களாகவே மாறிவிட்ட வரலாறும் உண்டு.

இத்தகைய மூன்று அசைவியக்கங்களால் கண்ணகி வழிபாடு சேர நாட்டிலிருந்து இலங்கைக்குப் பரவியது. இது ஓர் இயல்பான ‘நேர்ப் பரவல்’ ஆகும். ஆனால் இலங்கையிலிருந்து ஒரு ‘எதிர்ப் பரவல்’ மூலம் தமிழகத்திற்குப் ‘பத்தினி வழிபாடு’ வந்தது. இது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அது வரலாற்று உண்மையாகும்.

பிற்காலச் சோழ அரசனான முதல் ராஜராஜன் இலங்கையுடன் போர் செய்த போது இலங்கை அரசன் மகிந்தனின் மனைவியைச் சிறைபிடித்துக் கொண்டு வந்தான். அவளைத் தஞ்சையில் சிறை வைத்தான். அவள் சோழனிடம் தான் வழிபட பத்தினித் தெய்வத்திற்குக் கோவில் கட்ட வேண்டும் எனக் கேட்டாள். மன்னன் இலங்கையில் மட்டக்களப்புப் பகுதியிலிருந்த கண்ணகி கோவிலிலிருந்து மண் எடுத்துவரச் செய்து தஞ்சை வல்லம் பகுதியில் பத்தினிக்குக் கோயில் கட்டினான். இக்கோவிலை சிங்கள நாச்சியார் வழிபட்டதால் சிங்கள நாச்சி கோவில் எனப்பட்டது. இக்கோவில் வழிபாடு சடங்குமுறைகளில் ஈழத்தைப் பின்பற்றியது. பேச்சுவழக்கில் இக்கோவில் செங்களாச்சி அம்மன் என இப்போதும் வழங்குகிறது. இக்கோவில் தொடர்பான செய்திகளிலிருந்து கண்ணகி வழிபாடு சேர நாட்டிலிருந்து ஈழத்துக்குப் போய், பின் பல காலம் கழித்து சோழ நாட்டிற்குத் திரும்பி வந்தது என்று தெரிகிறது. இது ஒரு ‘மீள் பரவல்’ ஆகும். பண்பாட்டுப் பரவலில் நேர்ப் பரவல், எதிர்ப்பரவல்/ மீள் பரவல் நிகழ்வதுண்டு.

இலங்கை பௌத்தர்கள் வழிபடும் ‘பத்தினித் தெய்யோ’ ஒட்டுமொத்த பௌத்த மதத்திற்கானதல்ல. ஏனெனில் பௌத்தம் பரவிய மியான்மர், தாய்லாந்து முதலான நாடுகளில் பத்தினி வழிபாடு இல்லை. இலங்கை தேரவாத பௌத்தர்கள் மட்டுமே இதனை வழிபடுகின்றனர். ஆகவே, கேரளத்திலிருந்து தென்னிலங்கைக்குக் குடிபெயர்ந்த பௌத்தர்களே பத்தினியை அங்கு கொண்டு சென்றார்கள் என அறுதியிட்டுச் சொல்ல முடியும். கேரளத்தில் பௌத்தம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இதற்கான வரலாற்றுச் சான்றுகளைக் காட்டுகின்றனர் (அலெக்சாண்டர், பி.சி. 2025). கண்ணகியைக் கயவாகு மன்னன் இலங்கைக்குக் கொண்டு சென்றது ஒரு முக்கிய நிகழ்வாகும்.

பின்னுரை

கண்ணகி வழிபாடு சிலப்பதிகாரக் காலத்திலிருந்தே பல இடங்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. ஆனால் பின்னர் வெவ்வேறு அரசியல் சமூகக் காரணங்களால் கண்ணகி வேறு இந்துப் பெண் தெய்வங்களுடன் இணைக்க வேண்டிய சூழல் உருவானது. சேர நாட்டில் தொடக்க காலத்தில் உருவான கண்ணகிக் கோட்டங்கள் அனைத்தும் பிற்காலத்தில் காளி கோயில்களாகவும், பகவதிக் காவுகளாகவும் உருமாற்றம் பெற்றுவிட்டன.

கேரளத்தில் பகவதி, காளி ஆகிய தெய்வங்களுடன் கண்ணகி இணைக்கப்பட்டாள். தமிழகத்தில் மாரியம்மன், திரௌபதியம்மன், காளி, ரேணுகாதேவி, முத்தாரம்மன், செல்லத்தம்மன் முதலான தெய்வங்களுடன் இணைக்கப்பட்டாள். ஆனால் இன்றும் சில சுவடுகளும் எச்சங்களும் கண்ணகி வழிபாட்டைக் காட்டுகின்றன.

தமிழகத்தில் தசரா விழா நடைபெறும் குலசேகரப்பட்டினம் முத்தாலம்மன் கோயில் வழிபாட்டில் கண்ணகி கதை இடம்பெற்றிருப்பது இந்தத் தொல் எச்சங்களில் ஒன்றாகும். இவ்வாறான பல சான்றுகளை ஆராய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் (பெருமாள், அ.கா. 2022). காலம் நிகழ்த்திய மாற்றத்தில் கண்ணகி வைதீகத்தின் தாக்கத்தாலும், இந்து மயமாக்கலாலும் தமிழ்நாட்டில் தன் உண்மையான அடையாளத்தை இழந்துவிட்டாள். ஆனால் ஈழத்தில் அவள் உயிர்ப்புடன் அருளாட்சி செய்கிறாள். ஆகவே தமிழ் மரபில் ஈழம் தனித்துவமாக நிற்கிறது.

கண்ணகியைப் ‘பத்தினித் தெய்வம்’ என வரையறுப்பது ஒரு செவ்வியல் சார்ந்த மரபான கண்ணோட்டம்தான். இளங்கோவடிகள் அதனைக் கையாண்டுள்ளார். உண்மையில் அவளை ‘வீரத்தாய்’, ‘வீரத்திருமகள்’, ‘வீராயி’, ‘வீரநாச்சி’, ‘நீதித்தாய்’ எனும் வகையில் ஒரு தனித்துவமான அடையாளமாகவே காட்டியிருக்க வேண்டும். ‘பத்தினித் தெய்வம்’ எனப் பொதுமைப்படுத்துவது பொருத்தமானதல்ல. தன் வெஞ்சினத்தால், வஞ்சினம் உரைத்து, பாண்டிய மன்னனை வீழ்த்தி, மார்பகத் தீயை மூட்டி, கோபத் தீயால் மதுரையை எரித்து, அறியாத் திசையில் சேர தேசம் நடந்து சென்று தெய்வமானவள். ஆக, நாம் உருவாக்க முனையும் அடையாள உருவாக்கத்தில் இந்தப் பொருண்மைகள் பிரதிபலிக்க வேண்டும்.

பண்டைத் தமிழ் மரபில் கொற்றவையைப் பத்தினித் தெய்வம் என்று கூறுவதில்லை. அவ்வாறே காளியையும் காண்பதில்லை. இவர்கள் வீரத்தின் அடையாளத்தைக் கொண்டவர்கள். எப்போதும் துடியான சாமிகள். கண்ணகியும் இதே வகையினம்தான். முன்னவர் இருவருக்கும் புராணம், தொன்மம் உண்டு. கண்ணகியோ மானுடப் பிறவி. இவள் கொலையால் உதித்த தீப்பாய்ந்தம்மன் (கொங்கு நாட்டில் வீரமாத்தி) இல்லை. கொலையைக் கண்டு வெகுண்டெழுந்து நீதியை வென்றவள். இவளை ‘நீதி தேவதை’ என்றே வரையறை செய்ய வேண்டும். அவள் தோன்றிய தென்னிந்தியா முதல், பரவிய தென்னிலங்கை வரை நீதியின் வெற்றி நாயகியாகவே அருளாட்சி செய்கிறாள்.

பொதுவாகத் தெய்வங்களைக் கன்னித் தெய்வம், தேவி தெய்வம், மனைவித் தெய்வம் என வகைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கண்ணகியை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது அவளை எல்லாத் தெய்வங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும். அத்தகையதோர் அடையாளத்தை அறிஞர்கள் கண்டடைய வேண்டும். தமிழ் மரபு மிகவும் தனித்துவமானது. அதன் சிறப்பியல்புகளைப் பிற மரபோடு கரைத்துப் பொதுமைப்படுத்த இயலாது. அதன் தனித்தன்மைகளை எல்லாத் தளங்களிலும் பேண வேண்டும். ஈழத்தில் கண்ணகை ஒரு பெருந்தெய்வமாக நிலைபெறுவதற்குக் காரணம் அதன் திணைவயமாக்கச் செயல்பாடுதான் (Indigenization Process). இத்தகைய அசைவியக்கங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கண்ணகி தன் கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு கோபாவேசத்துடன் மதுரை வீதிகளின் வழியே அரண்மனையை நோக்கிச் செல்லும்போது அந்நகர மக்கள்,

செம்பொற் சிலம்பொன்று கையேந்தி

நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம்

வந்த திதுவென்கொல்

(சிலம்பு. ஊர் சூழ் வரி. 23 – 25)

என வியந்து பேசுவதாக இளங்கோவடிகள் காட்டுகிறார். புதியதொரு பெருந்தெய்வம் வரப்போகிறது என்பதை மதுரை மக்களே முதன் முதலாக ஊகித்தனர். கண்ணகியைப் புதியதொரு தெய்வமாகப் படைக்க வேண்டுமென்பது இளங்கோவடிகளின் நோக்கமாக இருந்தது.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகியைப் ‘பத்தினி’ என்றும் சுட்டியுள்ளார். இதனை ஓர் ‘இனம்சார் வகைமை’ (Ethnic Category) எனக் கொள்ள வேண்டும். புலமையாளர்கள் தமிழ் மரபை மற்ற மரபுடன் ஒப்பிட்டுப் பேசும்போது ‘பகுப்பாய்வு வகைமை’யை (Analytical Category) முன்னிறுத்த வேண்டும். ஆய்வு என்றாலே அது பகுப்பாய்வு நெறி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். ஆகவே, இந்தக் கண்ணோட்டத்தில் கண்ணகியின் அடையாள உருவாக்கம் அமைய வேண்டும்.

உசாத்துணைகள்

  1. அரங்கநாதன், ஜெகநாதன். 2024. பண்டைத் தமிழர் வழிபாட்டு மரபில் கண்ணகி. எழுநா மின்னிதழ் ஜூலை 2024.
  2. அலெக்சாண்டர், பி.சி (தமிழில் கி. ஜெயபிரகாஷ்). 2025. கேரளாவில் பௌத்தம். தேவஸ்தானபடையூர்: திரிரத்னா பதிப்பகம்.
  3. இராசு, ம. 2005. தமிழ்நாட்டில் கண்ணகி கோயில்கள். அச்சேறா கட்டுரை.
  4. கந்தையா, வி.சீ. 1968. கண்ணகி வழக்குரை. மட்டக்களப்பு. காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கம்.
  5. கனகரத்தினம், இரா.வை. 2016. ஈழத்து நாட்டார் வழிபாடு. பேராதனை: பேராதனைப் பல்கலைக்கழகம்.
  6. சண்முகலிங்கன், என். 2014. ஈழத்தில் கண்ணகியின் அடையாளம். இலங்கை இந்திய மானிடவியல் நூலிலுள்ள கட்டுரை. பக். 13 – 26. (இணையாசிரியர் பக்தவத்சல பாரதி). சென்னை: என்சிபிஎச்.
  7. சண்முகலிங்கன், என். & பக்தவத்சல பாரதி. 2025. ஈழத்தில் கண்ணகை வழிபாடு (களப்பணி விவரங்கள்).
  8. சந்திரன், வி.ஆர். (தமிழில்: ஜெயமோகன்). 2005. கொடுங்களூர் கண்ணகி. சென்னை: யுனைடெட் ரைட்டர்ஸ்.
  9. சபாரெத்தினம், க. & பிரசாத், சொ. 2017. ஆரையூர் கண்ணகை: வரலாறும் வழிபாடும். ஆரையம்பதி: மறுகா.
  10. சாந்தி கேசவன். 2024 (2021). மட்டக்களப்புத் தமிழகத்தில் கண்ணகியம்மன் வழிபாடு. கொழும்பு – சென்னை: குமரன் புத்தக இல்லம்.
  11. சிவசுப்பிரமணியம் ரகுராம். 2009. ஈழத்தில் கண்ணகி வழிபாடு. புதிய ஆராய்ச்சி இதழ் 2: 5 – 17.
  12. செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (செம்பதிப்பாசிரியர்). 2025. கோவலனார் கதை: வட ஈழத்து ஆதிகாவியம். இலங்கைத்தமிழியற் கழகம்.
  13. செல்லன் கோவிந்தன். 2009. கண்ணகி வழிபாடு: தென்னகத்திலும் இலங்கையிலும். சென்னை: சேகர் பதிப்பகம்.
  14. டாக்டர் நசீம்தீன். 1992. கோவலன் சரித்திரம். சிவகங்கை: அன்னம்.
  15. தில்லைநாதன், சா. 2015. மட்டக்களப்பு தமிழர் பண்பாட்டு மரபுகள். கொழும்பு – சென்னை: குமரன் புத்தக இல்லம்.
  16. பக்தவத்சல பாரதி. 2025. கண்ணகி வழிபாடு: காலம் நிகழ்த்திய மாற்றங்கள். கோயம்புத்தூர் குமரகுரு பன்முகக் கல்லூரியில் நிகழ்ந்த கண்ணகி பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் வழங்கிய கட்டுரை (அச்சிடப் பெறாதது).
  17. பால்சேகர், அ. 2005. இடுக்கி மாவட்டத்தில் கண்ணகி வழிபாடு. அச்சிடப்பெறாத முனைவர் பட்ட ஆய்வேடு.
  18. பால சுகுமார். 2009. ஈழத்தில் கண்ணகி கலாச்சாரம். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
  19. பெருமாள், அ.கா. 2022. கேரளத்தில் கண்ணகி வழிபாடு. சென்னை: என்சிபிஎச்.
  20. மகேஸ்வரன், வ. 2011. இலங்கையில் சிங்கள மக்களிடையே கண்ணகி வழிபாடு: இருப்பும் நடப்பும். சங்கத்தமிழ் இதழ் 2: 13 – 20.
  21. வெல்லவூர்க் கோபால். 2018. கண்ணகி வழிபாடு: பார்வையும் பதிவும். மட்டக்களப்பு: மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம்.
  22. ஜெயகலா, வெ. 2022. தமிழகத்தில் கண்ணகி வழிபாடு: திருச்செங்கோட்டை முன்வைத்துச் சில விவாதங்கள். புதிய ஆராய்ச்சி இதழ் 10: 53 – 101.
  23. ஜெயகிருஷ்ணன், ப. 2023. சிலப்பதிகாரமும் கண்ணகி வழிபாடும். சென்னை: என்சிபிஎச்.
  24. Arokiaswami, M. 1953. The Cult of Mariamman or the Goddess of Rain. Tamil Culture 2, 2: 153 – 157.
  25. Kurup, K.K.N. 1977. Aspects of Kerala History and Culture. Trivandrum: College Book House.
  26. Obeysekere, Gananath. 1984. The Cult of the Goddess Pattini. Chicago: The University of Chicago Press.
  27. Sreedhara Menon, A. 1967. A Survey of Kerala History. Kottayam: National Book Stall.


About the Author

பக்தவத்சல பாரதி

மானிடவியல் ஆய்வாளர். நாற்பது ஆண்டுகளாக மானிடவியல் புலத்தில் பங்காற்றி வருபவர். பழங்குடிகள், நாடோடிகள், விளிம்பு நிலையினர் தொடங்கி, தமிழர் மானிடவியல், திராவிட மானிடவியல், இலக்கிய மானிடவியல் ஊடாக, இலங்கை மானிடவியல் வரை பயணித்தவர். எழுத்து, பதிப்பு, மொழிபெயர்ப்பு என இதுவரை 32 நூல்களைப் படைத்திருப்பவர். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் இரண்டிலும் வருகைதரு பேராசிரியர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்