தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அரசியல் மறுசீரமைப்புகளும்: சிறுபான்மை மக்களை மையப்படுத்தி ஒரு சில குறிப்புகள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
23 நிமிட வாசிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அரசியல் மறுசீரமைப்புகளும்: சிறுபான்மை மக்களை மையப்படுத்தி ஒரு சில குறிப்புகள்

April 29, 2025 | Ezhuna

இக்கட்டுரையானது கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற S.J.V செல்வநாயகம் அவர்களின் 127வது ஜனன தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் நான் ஆற்றிய உரையினை மையப்படுத்தியதாகும். எனது உரையின் பிரதான கருப்பொருளாக அமைந்தது, தற்போது பதவியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (NPP) அரசியல் மறுசீரமைப்புகள் தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப்போகின்றது, சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு கையாளப்போகின்றது, அரசியல் மறுசீரமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் எவ்வளவு முக்கியமானது, சிறுபான்மை மக்களுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குமிடையிலான உறவு எவ்வாறு அமையும் ஆகிய விடயங்களாகும். 

நம் அனைவரையும் மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்திய தேர்தல் முடிவுகளை 2024ஆம் ஆண்டு பார்த்தோம். தேர்தல் அரசியலின் கட்டமைப்பினை அத்தேர்தல் முடிவுகள் முற்றாக மாற்றின. அதன்மூலம் இலங்கையில் மிகப்பெரிய அரசியல் நிலைமாற்றம் ஒன்று ஏற்பட்டது. சுதந்திரத்திற்குப்பின் ஆழமாக வேரூன்றிய வர்க்க அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாரம்பரிய அரசியலுடன் தொடர்பில்லாத ஒரு தலைவரை மக்கள் தெரிவு செய்து மரபுரீதியான அரசியல்வாதிகளுக்கு ஒரு பலமான செய்தியினை வழங்கினர். 2024ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினை அமெரிக்காவில் ‘Wake Forest’ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் நீல் டிவொட்டா என்பவர் அமைதியான மக்கள் புரட்சி என வர்ணித்தார். மறுபுறமாக அமெரிக்காவில் சல்ஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீதபொன்கலன் தேர்தல் ஊடாக இடம்பெற்ற அமைதியான சூழ்ச்சி எனக் குறிப்பிட்டார். அதுவரைகாலமும் இத்தகையதொரு அரசியல் நிலைமாற்றத்தினை எவரும் எண்ணியும் பார்க்கவில்லை. 

தீவிர அரசியல் மாற்றம் ஒன்றுக்கான தேவை இலங்கை மக்களிடம் மிக அதிகமாகவே காணப்பட்டது. இலங்கைப் பிரஜைகளின் ஒட்டுமொத்த விரக்தியின்/ கோபத்தின் இறுதி வெளிப்பாடே 2024ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் எனலாம். இவ்விரக்தியின் மீது ஊழல் மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம், குடும்ப ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, தீய ஆட்சி நடைமுறைகள், இன மற்றும் மதவாதம் போன்ற பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தின. இவ்விரக்திநிலை அரகலய எனும் மக்கள் போராட்டத்திற்குப் பின்னர் அதிகளவில் வெளிப்பட ஆரம்பித்தன. மட்டுமன்றி, ஒரு முழு அளவிலான அரசியல் மறுசீரமைப்பு மற்றும் நிலைமாற்றம் குறித்த கருத்தாடல் வடக்கு – கிழக்கு – தெற்கு – மலையகம் என எல்லா இடங்களிலும் தீவிரமாகப் பரவியது. 

இச் சூழ்நிலையினை தேசிய மக்கள் சக்தி மிகவும் வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்தியதன் விளைவே 2024ஆம் ஆண்டு ஆட்சி மாற்றமாகும். இலங்கை மக்களின் அபிலாசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கவரும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசியல் பிரசாரங்களையும் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தயாரித்தது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில் வெளியிடப்பட்டது. இதில் அரசியல் மறுசீரமைப்பு தொடர்பாக பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. 

  1. புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கி ஜனநாயகத்தினை சக்திப்படுத்தல் மற்றும் சகல மக்களுக்கும் சமத்துவத்தினை உறுதி செய்தல்.
  2. இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய ஐக்கியத்தினை ஏற்படுத்தல்.
  3. தேசத்தின் நற்பெயரினை சுதந்திரம், ஜனநாயகம், சமூக நீதி, மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி மற்றும் சுற்றுச் சூழல் நீதி (Climate Justice) போன்ற விழுமியங்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் கட்டியெழுப்புதல்.
  4. நாட்டில் நல்லாட்சியினை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் சகவாழ்வு மற்றும் ஒற்றுமையினைப் பேணுதல். அத்துடன் ஜனநாயகம், பிரஜைகளின் உரிமை  மற்றும் மனித உரிமை என்பவற்றினை சட்டத்தின் ஆட்சியின் ஊடாகப் பாதுகாத்தல்.
  5. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை நீக்கி பாராளுமன்ற அரசாங்க முறையினை அறிமுகம் செய்தல்.

மேற்கூறிய தேர்தல் வாக்குறுதிகள் இலங்கையின் அரசியல் மற்றும் ஆட்சிமுறைக் கட்டமைப்பில் தீவிர நிலைமாற்றத்தை மேற்கொள்ளும் நோக்குடன் முன்வைக்கப்பட்டவையாகும். மறுபுறமாக, இவை நாட்டிற்கு பெரிதும் அவசியமான அரசியல் மறுசீரமைப்புகளாகும். 1994ஆம் ஆண்டிலிருந்து பதவிக்கு வந்த சகல அரசாங்கங்களும் மேற்கூறிய அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதாக தொடர்ந்தும் வாக்குறுதியளித்தன. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் கீழும் நல்லாட்சிக்காலத்தின் (2015-2019) போதும் அரசியல் மறுசீரமைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை கட்சி அரசியல் எதிர்ப்பு, சிங்கள – பௌத்த தேசியவாத சக்திகளின் எதிர்ப்பு, அரசியல் விருப்பமின்மை, 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியலமைப்புச் சூழ்ச்சி, ஈஸ்டர் தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆயினும், தற்போதைய அரசாங்கம் சகல இன மக்களின் ஆதரவினையும் பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. அரசியல் மறுசீரமைப்புக்கான சாதகமான சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாரிய அரசியல் மறுசீரமைப்புகளுக்கு எதிப்புத் தெரிவித்து வந்த சிங்கள – பௌத்த தேசியவாத சக்திகள், ராஜபக்ச தரப்பினர் மற்றும் இன – மதவாத சக்திகள் செல்வாக்கிழந்துள்ளன. அவை இதுவரைகாலமும் செயற்பட்டு வந்த தளம் இன்று செயலற்றுக் காணப்படுகின்றது அல்லது வலுவிழந்துள்ளது எனலாம். ஆகவே, இவை அரசாங்கம் மேற்கொள்ளும் அரசியல் மறுசீரமைப்புகளுக்கான எதிர்ப்பினை பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பெரியளவில் மட்டுப்படுத்தி அரசியல் மறுசீரமைப்புகளுக்கான கதவினைத் திறந்துள்ளன என வாதிட முடியும்.  

மேற்கூறியவாறு அரசியல் மறுசீரமைப்புகளுக்கான வாய்ப்புகள் காணப்பட்டாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் மறுசீரமைப்பு விடயத்தினை ஏன் தாமதிக்கின்றது, அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்ற கேள்வி பலரிடம் காணப்படுகின்றது. இந்த அரசாங்கம் பெரும்பான்மை சிங்கள மக்களினதும் சிறுபான்மை மக்களினதும் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்த முதலாவது அரசாங்கமாகும். இம்மாற்றம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தினை உருவாக்கியுள்ளது. ஆகவே, இவ் அரசாங்கம், தெற்கில் வாழும் சிங்கள மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாசைகளையும், சிறுபான்மை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளையும் சமநிலைப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தெற்கில் உள்ள சிங்கள மக்களின் பிரதான எதிர்பார்ப்புகளாக பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவது, வாழ்க்கைச் செலவினைக் கட்டுப்படுத்துவது, தொழில் வாய்ப்பு, ஊழல் மோசடி செய்த அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவது, பொறுப்புக்கூறும் அரசாங்கத்தினை உருவாக்குவது, பாதாள உலக கோஸ்டியினரைக் கட்டுப்படுத்துவது என்பன காணப்படுகின்றன. மறுபுறமாக, சிறுபான்மை மக்களும் மேற்கூறிய விடயத்தில் உடன்பட்டாலும் அவர்களுக்கு சில பிரத்தியேக கோரிக்கைகளும் அபிலாசைகளும் உள்ளன. அவை நீடித்த யுத்தம், இன பாரபட்சம், தொடர்ச்சியான அடக்குமுறை, ஒதுக்கல், சமூக அநீதி மற்றும் சமத்துவமற்ற கவனிப்பு என்பவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். எனவே, புதிய அரசாங்கத்திடமிருந்து சிறுபான்மை மக்கள் தாம் இதுவரைகாலம் அனுபவித்த பிரச்சினைகளுக்கான தீர்வினை எதிர்பார்க்கிறார்கள். சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளில் அதிகாரப் பகிர்வு, புதிய அரசியலமைப்பினை உருவாக்குதல், இராணுவத்தினரைக் குறைப்பது, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, மீள் குடியேற்றம், நல்லிணக்கம், நிலைமாறுகால நீதி என்பன முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. இவை தெற்கில் உள்ள சிங்கள மக்களின் எதிர்பார்ப்புகளில் இருந்து பெரிதும் வேறுபட்டவை. ஆகவே, அரசாங்கம் தெற்கினையும் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளையும் எவ்வாறு கையாளப்போகின்றது என்பதிலேயே இவ்வரசாங்கத்தின் சட்டத்தன்மை தங்கியுள்ளது. இதில் ஏதேனும் தளம்பல் ஏற்படுமாயின் அது அரசாங்கத்தின் சட்டத்தன்மையில் தாக்கத்தினை ஏற்படுத்தும். தற்போது உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில்  முழு அளவிலான வெற்றியினைப் பெறுவது குறித்து அரசாங்கம் தீவிர அக்கறை காட்டுகின்றது. அதன்மூலம் சகல அரசியல் நிறுவனங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தமது கொள்கைகளை/ வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முற்படலாம். தேர்தல் பெறுபேறுகளில் தளம்பல்நிலை ஏற்படக்கூடாது என்பதனால் தெற்கில் உள்ள பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது. அண்மைக்கால கைதுகள்/ விசாரணைகள் என்பன அதனைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஆறு மாதகாலமாகிய நிலையில் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் இவ்வரசாங்கம் எதனைச் செய்துள்ளது என்ற கேள்வியும் பலமாகவே முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றது.  

NPP அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆங்காங்கே ஜனநாயகம்/ மனித உரிமைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் அதன் நடைமுறைச் செயற்பாடுகளை நோக்கும் போது இவ்வரசாங்கம் அதிகாரப் பரவலாக்கம், ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகளைப் பாதுகாத்துப் பலப்படுத்துவது மற்றும் அரசியல் மறுசீரமைப்பு போன்ற விடயங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதாகத் தெரியவில்லை. இக்கருத்தினை பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்களும் தமது அண்மையக் கட்டுரையொன்றில் வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு JVPயின் கருத்தியல்கள் ஆதிக்கம் செலுத்தலாம். NPP எனும் கூட்டமைப்பில் தாராளவாதிகள் அதிகளவில் காணப்பட்டாலும், தீர்மானம் எடுத்தல் செயன்முறையில் JVPயின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது என்ற விமர்சனத்தினை பரவலாக அவதானிக்க முடிகின்றது. NPPஅரசாங்கம் JVP சாயத்தினை அதிகளவில் பூசிக்கொள்ளுமாக இருந்தால், அதன் விளைவுகள் வேறுபட்டதாக அமையும். மக்கள் தமது ஆணையினை வழங்கியது NPPக்கு என்பதனை இவ்வரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். NPP அரசாங்கம் JVPயின் பிடியில் இருந்து விடுபட்டு தம்மை வேறுபடுத்திக் காட்டவேண்டும். அதுவே NPPயின் எதிர்கால அரசியல் பாதையினைத் தீர்மானிக்கும். சிறுபான்மை மக்களின் விடயத்தில் ஒரு திடமான நிலைப்பாட்டினை NPP அரசாங்கம் எடுக்க வேண்டும். அதனைத் தொடர்ந்தும் தாமதப்படுத்துமாக இருந்தால் அது அரசாங்கத்தின் நம்பிக்கையில் எதிர்க்கணியத் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

அரசாங்கத்தின் கடந்த ஆறுமாதககாலச் செயற்பாடுகளை அவதானிக்கும்போது ஜனநாயகம், மனித உரிமைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் மறுசீரமைப்புத் தொடர்பாக ஒரு திடமான நிலைப்பாட்டினைக் காண முடியவில்லை. JVP, தீவிர சிங்கள தேசியவாத சிந்தனையினைக்கொண்ட கட்சி என்பதனால் மேற்கூறிய விடயங்கள் குறித்து NPP தரப்பினர் பேசுவதனைத் தவிர்த்துக்கொண்டிருக்கலாம். அண்மைக்காலமாக இலங்கையர் எனும் பொது அடையாளத்தினைக் கட்டியெழுப்புவது தொடர்பாக இவ்வரசாங்கம் அதிக அக்கறை காட்டி வருகின்றது. இப்போக்கானது அதிகாரப் பகிர்வு, சிறுபான்மையினர்களின் கூட்டு அரசியல் உரிமைகள் போன்ற விடயத்தில் இவ்வரசாங்கம் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளது என்பதனை அறியக்கூடியதாக உள்ளது. இவ்வரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பாகக் கடந்தகாலங்களில் கொண்டுவரப்பட்ட மனித உரிமைத் தீர்மானங்களை ஏற்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. வெளியகத் தலையீடுகள் ஊடான விசாரணை மற்றும் தீர்வுகளை ஏற்கப்போவதில்லை என அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் குறிப்பிட்டார். மாறாக தமிழ்மக்கள் திருப்தியடையும் வகையிலான தீர்வினை வழங்குவோம் என இவ்வரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆயினும் அது எத்தகைய தீர்வு, அதன் உள்ளடக்கம் என்ன என்பது தொடர்பாக ஒரு தெளிவும் இல்லை. 

அரசாங்கம் பொருளாதாரத்தினை தூக்கிநிறுத்திவிட்டு அதன்பின்னர் ஏனைய விடயங்கள் பற்றிச் சிந்திக்கலாம் என்ற அணுகுமுறையினைக் கையாளலாம். பொருளாதாரம் நிலைகுலையுமாயின் அது தெற்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு உண்டு. ஆகவே பொருளாதார மறுசீரமைப்புகள் தொடர்பாக கலந்துரையாடி வருகின்றார்கள். ஆயினும் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்த அரசியல் மறுசீரமைப்புகளும் அவசியம் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்தினைப் பகிராமல் பொருளாதார அபிவிருத்தி குறித்துச் சிந்திப்பது எவ்வளவு தூரம் பொருத்தமாக அமையும் என்பதனைச் சிந்திக்க வேண்டும். அரசியல் மறுசீரமைப்புகளுக்கும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதனை பல ஆய்வுகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளன.  ஆகவே, பொருளாதாரத்தினைக் காரணம்காட்டி அரசியல் மறுசீரமைப்புகளை காலம் தாழ்த்துவது அரசாங்கத்தின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையினைப் பாதிக்கும். மாறாக சிங்கள – பௌத்த தேசியவாத சக்திகள் மீண்டும் எழுச்சிபெற்று அணிதிரண்டு சிறுபான்மை மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய அரசியல் மறுசீரமைப்புகளை சீர்குலைக்கலாம். அத்தகைய அனுபவங்கள் இலங்கையில் நிறையவே உண்டு என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும். அத்துடன் இவ்வரசாங்கம் முன்னைய அரசாங்கங்கள் கையாண்ட தாராள சமாதானத்தினைக் கட்டியெழுப்பும் அணுகுமுறையினை (liberal peacebuilding approach) விரும்பவில்லை. குறிப்பாக மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன், அவற்றின் அணுகுமுறையுடன் கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கம், நிலைமாறுகால நீதி, சமாதானத்தினைக் கட்டியெழுப்புதல், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல், அதிகாரப்பகிர்வு மற்றும் கூட்டு உரிமைகள் (collective rights) போன்ற விடயங்களில் இவ்வரசாங்கம் நம்பிக்கையற்றுக் காணப்படுகின்றது. ஆகவேதான், கடந்தகாலங்களில் ஐ.நா கொண்டு வந்த மனித உரிமைத் தீர்மானங்களை இவ்வரசாங்கம் ஏற்க மறுத்துள்ளது. இப்பின்புலத்திலேயே 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டினை அவதானிக்க வேண்டும். அதன்படி 54 பில்லியன் ரூபாய் மாத்திரமே இவ்வமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகக்குறைந்த ஒதுக்கீடாகும். அதே வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 442 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சாதாரண வேறுபாடு அல்ல.  

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு 126 மில்லியன் ரூபாயும், இழப்பீட்டு அலுவலகத்திற்கு 2.35 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது குறைந்த ஒதுக்கீடாகும். மேலும், இவ்வரவுசெலவுத் திட்டத்தில் இராணுவ முகாம்களை அகற்றவோ, இராணுவத்தினைக் குறைக்கவோ, சோதனைச் சாவடிகளை அகற்றவோ அல்லது வடக்கு – கிழக்கில் வாழும் முன்னால் LTTE போராளிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தவோ நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எவ்வாறயினும், இவ் வரவு செலவுத் திட்டத்தில் வடக்கில் பின்வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் வட்டுவாகல் பாலத்தினை அமைப்பதற்கு 6 பில்லியன் ரூபாயும், போரினால் இடம்பெயர்ந்தோரின் வீட்டு வசதிக்காக 1.5 பில்லியன் ரூபாயும், 16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்காக 500 மில்லியன் ரூபாயும், யாழ். நூலகத்திற்கு 100 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கி – கிழக்கு மக்களின் சமூக – பொருளாதார நிலையினை மேம்படுத்துவதற்காக போருக்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கமும் ஏனைய நிதி நிறுவனங்களும் வழங்கிய உதவிகள் டிரம்பின் வருகையுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலை இம்மக்களின் சமூக நிலையினை மேலும் பாதிக்கும். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த பெப்ரவரி மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற 58ஆவது மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை தாபிக்க மற்றும் அது தொடர்பாகச் செயற்பட அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பான நகல் வரைபொன்றும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தகாலத்தில் உருவாக்கப்பட்டது. ஆயினும் இவ்வரைபு இன்னும் நடைமுறைக்குவரவில்லை. சிறுபான்மை மக்களின் நலன்கள்சார்ந்த விடயங்களில் இவ்வரசாங்கத்துக்கு உண்மையான அக்கறை காணப்படுமாயின் இவ்வாணைக்குழுவினை உடனடியாகச் செயற்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பெரும் எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்த சிறுபான்மை மக்களின் அபிலாசையை நிறைவேற்றும் வகையில் ஏதேனும் ஒரு திடமான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும். இவ்வரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இனவாதச் செயற்பாடுகள் எல்லா மட்டங்களிலும் தொடர்கின்றது என்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது. அவற்றை அரச பதவிகளுக்கான நியமனம், பதவி உயர்வு, வள ஒதுக்கீடு, சட்டத்தினை அமுல்படுத்துவது, முறையற்ற பாதுகாப்புக் கெடுப்பிடிகள் போன்ற விடயங்களில் அவதானிக்க முடிகின்றது. படிப்படியான சிங்களமயமாக்கம் இடம்பெறுவதாக விமர்சிக்கப்படுகின்றது. மேலும், சட்டத்திற்குப் புறம்பாக இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவது குறித்து இவ்வரசாங்கம் எதுவும் குறிப்பிடவில்லை. போருக்குப் பின்னர் சிவில் மக்களின் காணிகளை வனவிலங்குத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனத்துறை என்பன கைப்பற்றியுள்ளன. இக்காணிகளை விடுவிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்த திடமான நிலைப்பாட்டினையும் இவ்வரசாங்கம் எடுக்கவில்லை. இதன் எதிர்விளைவுகளை உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளில் அவதானிக்கலாம்.

ஜனாதிபதி, 2030ஆம் ஆண்டாகும் போது முப்படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக அண்மையில் குறிப்பிட்டார். இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும். அதன்படி இராணுவத்தினை 100,000 ஆகவும் (தற்போது 255,000) கடற்படையினை 40,000 ஆகவும், விமானப்படையினை 18,000 ஆகவும் குறைக்கப்போவதாகக் குறிப்பிட்டார். இவை உடனடியாக இடம்பெறுமாக இருந்தால் அது சிறுப்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க உதவும். மறுபுறமாக, பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும். காரணம் ஒவ்வொரு அரசாங்கமும் முப்படையினரின் எண்ணிக்கையினை அரசியல் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காக கணிசமாக அதிகரித்துள்ளன. மிகப்பெரிய முப்படையினை இலங்கை அரசாங்கம் முகாமை செய்து வருகின்றது. முப்படைகளிலும் சுமார் 346,700 பேர் பணியாற்றுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை போன்ற சிறிய பொருளாதாரத்தினைக் கொண்ட நாட்டுக்கு இது மேலதிக பொருளாதாரச் சுமையினை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பெரிய எண்ணிக்கையிலான இராணுவத்தினைக்கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 14ஆவது இடத்தில் காணப்படுகின்றது. 

முப்படையினரைக் குறைப்பது தெற்கில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற அச்சமும் அரசாங்கத்திற்கு உண்டு. ஆகவேதான் இதனை நிறைவேற்றுவதற்காக எதிர்பார்க்கப்படும் ஆண்டு 2030 என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இங்கு அவதானிக்க வேண்டிய பிரிதொரு விடயம் யாதெனில், NPPக்கு வாக்களித்தவர்களில் 75% ஆனவர்கள் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் மொட்டுக்கட்சிக்கும் ராஜபக்சக்களுக்கும் வாக்களித்தவர்களாகும். ஆகவே, சிங்கள பௌத்தத்தின் இருப்புக்கு, நாட்டின் இறைமைக்கு அல்லது ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்த ஒரு தீர்மானத்தினையும் இவ்வரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளாது. அதில் சில அரசியல் மறுசீரமைப்புகளும் அடங்கும் என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும். குறிப்பாக, மனித உரிமை மீறலுக்கான பொறுப்புக்கூறல், அதிகாரப் பகிர்வு, நிலைமாறுகால நீதி, இராணுவக் குறைப்பு, வடக்கு – கிழக்கில் பௌத்தமயமாக்கத்தினை மற்றும் சிங்களமயமாக்கத்தினை நிறுத்துதல் என்பன இதில் பிரதான இடத்தினைப் பிடிக்கின்றன.

வேறுவகையில் கூறுவதாயின், இவ்வரசாங்கம் தாராளவாத ஜனநாயகத்தின் (liberal democracy) மீது நம்பிக்கையற்று இருப்பது போல் தென்படுகின்றது. இதற்கு கடந்தகால அனுபவங்களும் காரணமாக இருக்கலாம். நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றமை, கடந்த காலங்களில் ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் நடாத்திய தீய அல்லது மோசமான ஆட்சியின் இறுதி விளைவாகும். ஆகவே, லிபரல் ஜனநாயகமும் இன்றைய சமூக, பொருளாதார மற்றும் அரசில் நெருக்கடிக்கு காரணமென NPP அரசாங்கம் நினைக்கின்றது. தாராள ஜனநாயகத்தின் அழிவுக்கு ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியர்களே காரணம் என்ற கருத்தினை ‘ஜனநாயகம் எவ்வாறு மரணிக்கின்றது’ (How Democracies Die) என்ற நூலில் அமெரிக்க அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர்களான டேனியல் சிப்லெட் மற்றும் ஸ்டீபன் லெவிட்ஸ்கி ஆகியோர் வாதிட்டுள்ளார்கள். 2017ஆம் ஆண்டு இதே கருத்தினைத் தழுவி பிறிதொரு முக்கியமான நூலும் வெளியிடப்பட்டது. இது பல விருதுகளைப்பெற்ற உலகில் மிகவும் போற்றப்படுகின்ற அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர்களான Christopher Achen மற்றும் Larry Bartels என்போரால் எழுதப்பட்ட ‘ஏன் தேர்தல்கள் பொறுப்புக்கூறும் அரசாங்கத்தினை உருவாக்குவதில்லை’ (Why Elections do not Produce Responsive Government) என்ற நூலாகும். இத்தகையதொரு பின்புலத்திலேயே NPP அதிகம் பொருளாதார ஜனநாயகம் குறித்துப் பேசிவருகின்றது. சம பொருளாதார வாய்ப்பு, சமத்துவம், சம பங்கீடு என்பன தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகம் பேசப்பட்டுள்ளது. பொருளாதார ஜனநாயகத்தினை ஏற்படுத்துவதன் மூலம் ஏனைய பிரச்சினைகளை தீர்க்க முடியும் என எண்ணலாம். 

சிறுபான்மை மக்களின் கூட்டு அரசியல் உரிமைகள்

NPP அரசாங்கம் சிறுபான்மை மக்களின் கூட்டு அரசியல் உரிமைகளை எவ்வாறு உறுதி செய்யும் என்பதே பலரிடம் காணப்படும் சந்தேகமாகும். உண்மையில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள், மலையக மக்கள் மற்றும் முஸ்லிம்கள் கோருவது கூட்டு அரசியல் உரிமைகளையாகும். அவை சுயநிர்ணயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. அவை அதிகாரப் பகிர்வு, அரசியல் அதிகாரம், குழு உரிமை, மனித உரிமைகள் என்பவற்றுடன் பிணைக்கப்பட்டவை. இன்று அரசியல் மறுசீரமைப்பு அல்லது கூட்டு அரசியல் உரிமைகள் குறித்துப் பேசும் போது வடக்கு – கிழக்கு மக்கள் மட்டுமன்றி மலையக மக்களும், முஸ்லிம் மக்களும் தவிர்க்க முடியாத பங்குதாரர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கென்று பிரத்தியேகப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக மலையக மக்கள் வேறுபட்ட குடியுரிமையினைக் (differentiated citizenship) கோருகின்றார்கள். இவை வாக்களித்தல், பிரதிநிதித்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கு அப்பாற்பட்டவை. அதில் நிர்வாக அதிகாரத்தை பன்முகப்படுத்துவது, நிலத்தொடர்பற்ற அதிகாரப் பகிர்வு, நிலத்தொடர்பற்ற கலாசார சபை ஒன்றினைத் தாபித்தல், குறைதீர் நடவடிக்கையின் ஊடாக நீடித்த சமூக – பொருளாதார அசமத்துவத்தினைச் சரிசெய்தல், உள்ளூராட்சி நிறுவனங்களின் சம பிரதிநிதித்துவம், காணியுரிமை போன்ற கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைக்கின்றார்கள். இவை மலையக மக்களின் மரபுரீதியான தொழிலாளர்களை மையப்படுத்திய கோரிக்கைகளில் (வேதனம், தொழிலாளர் உரிமை, தொழில் பாதுகாப்பு, தொழில் சட்டங்களை மறுசீரமைத்தல், கூட்டு ஒப்பந்தம்) இருந்து முற்றிலும் வேறுப்பட்டவை. மாத்திரமன்றி, தமது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இது தொடர்பான தேசியமட்டக் கலந்துரையாடல்களில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசாங்க மட்டத்தில் முன்னெடுக்கப்படும் அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல்முறைச் சீர்திருத்தச் செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்கெடுத்து வருகின்றனர். இது இச்சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் விழிப்புணர்வினை எடுத்துக்காட்டுகின்றது. இதேபோன்ற கோரிக்கைகளை முஸ்லிம் மக்களும் முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மற்றும் தேர்தல் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போது மிக ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், தமது கோரிக்கைகளை அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து முன்வைத்தார்கள். முஸ்லிம் சமூகத்தில் இன்று பலமான சிவில் சமூக அமைப்பொன்று உருவாகியுள்ளதுடன், அது இச்சமூகத்தின் அரசியல் – சமூக, பொருளாதார மற்றும் கலாசாரப் பிரச்சினைகளை தீவிரமாக ஆராய்ந்து, அது குறித்து விவாதித்து அதற்கான தீர்வுகளை முன்வைத்து வருகின்றது. இவ் யதார்த்தத்தினை NPP அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும். கடந்தகாலங்களில் சிறுபான்மை மக்களும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையிலான உறவு பெரியளவில் சிதைவடைந்திருந்தது. அவ்வுறவினை புதுப்பிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பொன்று தற்போது கிடைத்துள்ளது. இனவாதத்திற்கு எந்தவகையிலும் இடமில்லை எனவும் அதனைப் புதிய சட்டமொன்றினை உருவாக்கியேனும் இல்லாது செய்வோம் எனவும் ஜனாதிபதி அடிக்கடி கூறிவருவது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆயினும், அதனை யதார்த்தமாக்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பின்னர் மாறிமாறி பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இலங்கைத் தேசத்தினைக் கட்டியெழுப்புவதில் கையாண்ட தவறான அணுகுமுறையை இவ்வரசாங்கம் உணரவேண்டும். சிங்கள – பௌத்த தேசியவாதக் கருத்தியலின் அடிப்படையில் இலங்கையர் என்ற பொது அடையாளத்தினை உருவாக்க முடியாது என்ற யதார்த்தத்தினை ஏற்று அங்கிகரிக்க வேண்டும். 

சுதந்திரம்பெற்ற காலத்தில் இருந்து இலங்கை ஓர் இனத்துவ அல்லது இன மேலாதிக்க அரசாகவே (ethnocratic state) இருந்துள்ளது என்பதனை பேராசிரியர் நீல் டிவொட்ட தமது கட்டுரைகளில் தொடர்ச்சியாக வாதிட்டுள்ளார். இலங்கை அரசு யாவரையும் உள்ளடக்கிய அரசாக இருக்கவில்லை. சிறுபான்மை மக்கள், ஆட்சிமுறைக் கட்டமைப்பில் இருந்து வெளியில் தள்ளப்பட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டார்கள் எனலாம். இந்நிலையினை NPP அரசாங்கம் மாற்ற வேண்டும். வேறுபட்ட அடையாளங்களை, கலாசாரத்தினை உள்வாங்கி அங்கீகரிக்கும் அரசு ஒன்றினைக் கட்டியெழுப்ப வேண்டும். மேலும், யுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இலங்கை ஒரு தேசிய பாதுகாப்பு அரசாகவே இருந்து வந்துள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அரசினை பாதுகாப்புமயப்படுத்தி சிறுபான்மை மக்களை அரசாட்சிக் கட்டமைப்பில் இருந்து ஒதுக்கினார்கள். சிறுபான்மைச் சமூகங்களை இராணுவபலம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற கருவிகள் ஊடாக அச்சம் நிறைந்த சூழலுக்குள் தள்ளுகின்றார்கள். சிறுபான்மை மக்கள் குறிப்பாக, போர்க்காலத்தில் தமிழ் மக்கள், போர் முடிந்த பின்னர் முஸ்லிம் மக்கள், பாதுகாப்பு மயப்படுத்தப்பட்டார்கள். அண்மையில் கொழும்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒன்றினை ஒட்டியதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை இதன் தொடர்ச்சியான வெளிப்பாடாகும். ஆகவே, NPP அரசாங்கம் தேசிய பாதுகாப்பு அரசினை மறுசீரமைக்க வேண்டும். இலங்கைச் சமூகத்தினை ஜனநாயகப்படுத்த வேண்டும். சிவில், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை சகல இனத்தவர்களும் சமமாக அனுபவிக்கும் சூழ்நிலையினை உருவாக்க வேண்டும். அதற்கு அவசியமான சட்ட அல்லது கொள்கை அல்லது நிறுவன மறுசீரமைப்புகளை மேற்கொள்ளல் வேண்டும். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைக் கையாளுவதற்காக பிரத்தியேக ஆணைக்குழு ஒன்றினை உருவாக்க முடியும். இது எமது நீண்டநாள் கோரிக்கையாகக் காணப்படுகின்றது. சிறுபான்மை மக்களின் விவகாரங்களுக்கான ஆணைக்குழுக்கள் உலகில் பல நாடுகளில் உள்ளன. இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கான அமைச்சும், அவ்வமைச்சின்கீழ் சிறுபான்மையினருக்கான ஆணைக்குழுவொன்றும் காணப்படுகின்றது. கிழக்கு ஐரோப்பாவில் வேறுப்பட்ட அமைப்புகள் நிறுவப்பட்டு, மனித உரிமைகள், பிரகடனங்கள் மற்றும் சமவாயங்கள் ஊடாக சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. 

பொதுவில் நெருக்கடியான சூழ்நிலையானது அரசியல் – பொருளாதார மறுசீரமைப்புக்கான கதவினைத் திறக்கும். இதுவே உலகளாவிய அனுபவமாகும். ஆகவே, அதனைப் புரிந்துகொண்டு NPP அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளதார மறுசீரமைப்புகளைக் காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும். அத்தகைய மறுசீரமைப்புகள் பல சமூக – அரசியல் – பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்பினை வழங்கும். NPP  அரசாங்கம் சிறுபான்மை மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தொடர்ந்தும் காலம் தாழ்த்துமாக இருந்தால் சிவில் சமூகம், பிரஜைகள் மற்றும் முற்போக்கு அரசியல் சக்திகள் என்பன ஒன்றிணைந்து அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். அரசியல் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் தீவிர ஈடுபாட்டினைக்காட்ட வேண்டும். காரணம் இத்தகையதொரு வாய்ப்பு இனிக் கிடைக்கப்போவதில்லை.

மிக முக்கியமாக, சிறுபான்மை அரசியல் தலைமைகள், அரசியல் சக்திகள், சிவில் சமூகம், கல்விமான்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை நலன்சார் தரப்பினர் இதுவரை காலமும் கையாண்ட அணுகுமுறையினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். புதிய அணுகுமுறைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது, அதற்கான புதிய அணுகுமுறைகள் என்ன என்பன தொடர்பில் தீவிர கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும். இவ்விடயத்தில் வடக்கு – கிழக்கு தமிழர், முஸ்லீம் மற்றும் மலையக அரசியல் தலைமைகள், சிவில் சமூகம் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து பொது அமைப்பின்கீழ் செயற்பட முன்வரவேண்டும். பொது அமைப்புக்குள் இருந்துகொண்டு தமது பிரத்தியேகக் கோரிக்கைகளை அடைந்துகொள்ள கூட்டிணைந்த அணுகுமுறையினைக் கையாள வேண்டும். சிறுபான்மை மக்களின் அரசியல் சக்திகள் இன்று பெரியளவில் துருவமயமாகிப் பிரிந்து செயற்படுகின்றன. இது சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வாய்ப்பினைக் குறைக்கும். இத்தகைய துருவமயமாக்கலை தென்னிலங்கை அரசியல் தலைமைகள் விரும்புவர். 

புதியதொரு தாராள ஜனநாயக அரசியல் யாப்பொன்று இலங்கைக்குத் தேவை. அதன்மூலமே பல்லினத்தன்மை, பல்கலாசாரம் மற்றும் வேற்றுமைகளில் ஒற்றுமை என்பவற்றினை உறுதி செய்ய முடியும். குழு உரிமை, கூட்டு அரசியல் உரிமை, சமூக – பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் மனிதப் பாதுகாப்பு என்பன சிறுபான்மை மக்கள்சார்ந்து முன்வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகளாகும். சிறுபான்மை மக்களின் கூட்டு அரசியல் உரிமைகளை NPP அரசாங்கம் ஏற்க வேண்டும். அரசியல் மறுசீரமைப்புக்கான அடிப்படையாக அதனைப் பயன்படுத்த வேண்டும். சிறுபான்மை மக்களின் கூட்டு அரசியல் உரிமைகள் பொதுச்சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் இருந்து வேறுப்பட்டவை. ஆகவே, விசேட ஏற்பாடுகளின் மூலம் கூட்டு அரசியல் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். அவை பொதுச்சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள சிவில், அரசியல், பொருளாதர, சமூக மற்றும் கலாசார உரிமைகளை அனுபவிக்க அவசியமாகும். இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டுகால இனமோதல் சிறுபான்மை மக்களின் கூட்டு அரசியல் உரிமைகள் தொடர்பான கருத்தாடலுக்கு வித்திட்டது. மொழியுரிமை இதற்குச் மிகச்சிறந்த உதாரணமாகும். ஆகவே, இக்கருத்தாடலை பரந்துபட்ட அளவில் கூட்டிணைந்த முறையில் மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பிரதான நிகழ்ச்சிநிரலில் இதனைத் தொடர்ந்தும் இருப்புக்கொள்ளச் செய்ய வேண்டும். அதன்மூலமே NPP அரசாங்கத்தின்கீழ் அரசியல் மறுசீரமைப்புகளை சாத்தியமாக்கி சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். 


ஒலிவடிவில் கேட்க


About the Author

இராமசாமி ரமேஷ்

கலாநிதி இரா. ரமேஷ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார். ஆட்சிமுறை, ஊழல், அரச சேவை வழங்கல், சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக தனது ஆய்வுகளைச் செய்து வருகிறார். மலையகம் குறித்தும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்