போருக்கு முன்பும் போரின்போதும் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களிலிருந்து மாறுபடும் வகையில், இக்காலத்தில் மக்கள் இயக்கம் புதிய வடிவம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கோடுகளைத் தாண்டி, அடிப்படை வாழ்வாதாரமான மண்ணின் மீதும் அதன் வளத்தின் மீதுமான பற்றையும் திடமான பிடிப்பையும் இந்த நிலையின் தோற்றத்திற்கான காரணியாகக் காணலாம். இந்தப் போராட்டங்கள் வாழ்வாதாரங்களைத் தக்கவைக்க உருவாகியுள்ளன. அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள, மன்னார் தீவில் நடைபெறும் கனிம மணல் அகழ்வுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் போராட்டம் ஆழமான, அறிவியல் தளத்தில் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. ‘மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு: சமூக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள்’ எனும் இக் குறுந்தொடர், மன்னார் மாவட்டத்தின், குறிப்பாக மன்னார் தீவின் சூழலியல் வளங்கள் மற்றும் அதன் மீது உலகளாவிய அதீத இலாப நோக்கிலான கார்ப்பிரேட் நிறுவனங்களின் கனிம வளத்திரட்சியைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளால் நிகழவிருக்கும் ஆபத்துகள் பற்றி ஆக்கபூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலானது. இது, மன்னார் தீவின் கனிம மணல் அகழ்வின் உள் மற்றும் வெளி நிலைகொள் கண்ணோட்டங்களைத் தருவதோடு, திரண்ட சிந்தனைக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஒரு வீட்டின் சாளரங்களில் ஒன்றைத் திறந்து பார்ப்பதுபோல், பரந்து விரியும் சிந்தனையை முன்வைக்கிறது.
மன்னாரில் கனிம வளச் சுரண்டலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பும்
‘டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிடெட்’ நிறுவனம் மன்னார் தீவு மற்றும் வடமேற்கு இலங்கையின் அருகிலுள்ள முக்கிய நிலப்பகுதிகளில் உள்ள கனிம மணல்களுக்கான ஐந்து ஆய்வு உரிமங்களைப் பெற்றுள்ளது. இப்போது மன்னார் தீவின் கனிம அகழ்வில் கவனம் செலுத்தி, ஆய்வுப் பணியை மேற்கொள்ளுகின்றது. இக்கனிம அகழ்வின் பரப்பளவு சுமார் 140 சதுர கிலோமீட்டராகும். மன்னார் தீவு, சாலை மற்றும் இரயில் பாதை வழியாக பிரதான நிலப்பகுதிக்கு தரைப்பாலத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியான மணல் திட்டுகளான தீவுகளில் மிகப்பெரியதாகும். இது தென்னிந்தியாவை நோக்கி மேற்கில் 100 கிலோமீட்டர் தொலைவில் விரிவடைந்துள்ளது; பண்டைய புராணக் கதைகளில் இடம்பெற்றிருந்த பாத்திரப் பெயர்களிலான ஆதாமின் பாலம் அல்லது இராமரின் பாலம் என அழைக்கப்படும் பரந்த வளைவை உருவாக்கியுள்ளது.
புவியியல் ரீதியில், மன்னார் தீவு கனிம மணல் அகழ்வு மேற்கொள்ளப்படாத நிலமாகும். உலகக் கடல் மட்டங்கள் சுமார் 6,000 – 8,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலைபெறத் தொடங்கியதிலிருந்து, மணல் குவிப்பின் மூலம் இந்நிலம் உருவாகியுள்ளது. பாக்கு நீரிணை சந்தியில் நிலவும் கடற்கரை நீரோட்டங்களும் பொதுவான சுழற்சிகளும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் பெருமளவு மணலைச் சேர்த்துள்ளது. ஒதுக்கப்பட்ட மணல் வண்டல்கள் வடக்கை நோக்கிப் பரந்து விரிந்துள்ளன. மன்னார் தீவின் வளர்ந்து வரும் மணல் தீவுகளில் இந்த வண்டல் நிலங்கள் பரவியுள்ளன. இதனால் தீவின் கடற்கரைகள் மற்றும் கடலோரக் குன்றுகளில் கனமான கனிம மணல் குவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இலகுவான கார்பனேட் மற்றும் சிலிக்கா மணல்கள் அரிக்கப்பட்டு, பாக்கு நீரிணை சந்தியின் குறுக்கே உள்ள மணல் திட்டுகளின் சங்கிலிகள் மற்றும் அதன் கரைகளை நோக்கி மேற்குத் திசையில் தள்ளப்படுவதாகவும் அறியப்படுகிறது.

டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிடெட் (TSL) நிறுவனம் கனிம மணல் அகழ்வு செய்ய உத்தேசித்துள்ள பகுதி (மன்னார் தீவு).
மூலம்: www.titaniumsands.com.au
டைட்டானியம் சாண்ட்ஸ் ஆய்வில் ஈடுபடுவதற்கு முன்பு, 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட துளையிடுதல்கள் மூலம் மன்னார் கடற்கரையின் வடக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் உயர்தர கனரகக் கனிமங்களின் குறிப்பிடத்தக்க செறிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், கடற்கரையிலிருந்து உள்நாட்டிற்குள் சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு மட்டுப்படுத்தி துளையிடுதல் நடத்தப்பட்டது. டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிடெட் (முன்பு விண்டிமுர்ரா வெனடியம் லிமிடெட்) திட்டத்தைப் பெற்ற பிறகு, ஆரம்ப JORC தரநிலை வளத்தை அறிவிப்பதில் இந்த முடிவுகள் போதுமான ஆதாரமாக இருந்தன.
ஏப்ரல் 22, 2015 அன்று, மொத்த கனரக கனிமத் துளை (Total Heavy Mineral, THM) 11.7% உள்ளடக்கத்துடன் 10.3 மில்லியன் டன் (Mt) கனிம வளம் இருப்பதாக ஆஸ்திரேலிய வர்த்தகப் பரிவர்த்தனைக்கு (Australian Securities Exchange) ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த வள மதிப்பீடு 785 துளையிட்ட துளைகள் மற்றும் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட 115 கூடுதல் துளைகள் ஆகியவற்றின் விரிவான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. துளையிடுதல் மற்றும் வரையறுக்கப்பட்ட வள எல்லைகள் பெரும்பாலும் மன்னார் தீவுக் கடற்கரையிலிருந்து 150 மீட்டர் தூரத்திற்குள் மட்டுமே இருந்தன.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட துளையிடுதல்களில், மன்னார் தீவின் உள்நிலப்பகுதிகளில் கனரகக் கனிமங்களின் குறிப்பிடத்தக்க செறிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தத் துளையிடுதலின் போது சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு சிறப்புக் கனிம மணல் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. துளையிடுதலின் முடிவுகள் 2018 ஜனவரி 30 அன்று ASX (Australian Securities Exchange) இற்கு அறிவிக்கப்பட்டன. தற்போது, மன்னார் தீவில் காணப்படும் கனரகக் கனிம இனங்களுக்கான கனிமவியல் பகுப்பாய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், முழுமையான தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2024 மே மாதம் 19 ஆம் திகதியளவில், ஒரு தனியார் நிறுவனம் கனிம நிறுவனத்துடன் இணைந்த குழுவுடன் நில அளவீடு செய்ய எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மன்னாருக்கு வந்தது. அவர்கள் ட்ரோன்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டு வந்திருந்த போதிலும், தேவையான சட்ட அனுமதிகள் அவர்களிடம் இருக்கவில்லை. கடலோரப் பாதுகாப்புத் துறை அல்லது மீன்வளம் மற்றும் நீர்வாழ் வளத்துறையால் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை, அத்துடன் மன்னார் நில அளவீட்டுத் துறையிடமும் கலந்தாலோசிக்கப்படவில்லை. இத்தகைய, உள்ளூர்க் குரல்களையும் சட்ட நடைமுறைகளையும் புறக்கணித்த நடைமுறைகள் சீற்றத்தைத் தூண்டியது. சிவில் சமூகக் குழுக்கள், சமூக அமைப்புகள் மற்றும் குடியிருப்பாளர்கள் நேரடியாகத் தலையிட்டு, அக்குழுவை எதிர்கொண்டு உடனடியாக அந்த நடவடிக்கைகளை நிறுத்தக் கோரினர். இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்ட போதிலும், பிரச்சினையின் அளவு குறையவில்லை; மாறாக, தற்போதைய அரசின் மீதான நம்பிக்கைகள் தான் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றன.
ஜூன் 11, 2025 அன்று, மன்னார் தீவில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் அமைதியான ஆனால் உறுதியான போராட்டத்தில் திரண்டனர். சமூக அமைப்புகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டு சுற்றுச்சூழல் குழுக்களால் ஆதரிக்கப்பட்ட இந்தப் பேரணி, கனிம மணல் அகழ்வுத் திட்டத்திற்கான மக்களின் ஒன்றுபட்ட நிராகரிப்பைக் குறிக்கிறது. மீனவர்கள், விவசாயிகள் முதல் இளைஞர் குழுக்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரை அனைவரும், தீவின் எதிர்காலமே ஆபத்தில் உள்ளது என்ற தெளிவான குரலை எழுப்பினர். இந்தக் கனிம மணல் அகழ்வு நெருக்கடி, மன்னார் தீவின் சூழலியல், கலாசாரம் மற்றும் மக்களின் இருப்பிற்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கெதிராக நடைபெற்ற மக்கள் போராட்டம்.
மூலம்: tamilguardian
மன்னாரில் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய அவசரத் தேவை இன்று எழுந்துள்ளது. ஏனெனில், கட்டுப்பாடற்ற மணல் அகழ்வு, உள்ளூர் வாழ்வாதாரங்களையும் தீவின் இயற்கை வளங்களின் பாதுகாப்பையும் அச்சுறுத்தி, மன்னார்ப் பகுதியை மூழ்கடிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. உள்ளூர் மக்களின் பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள இந்தச் செயல்பாடு, மன்னார் தீவை ‘பகலில் திருடுவது’ போல் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அகழ்வு நிறுத்தப்படாவிட்டால், நன்னீர் வளங்கள் மாசுபடக்கூடும், இது மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதத்திற்கு வழிவகுக்கும் என்ற கடுமையான கவலைகள் எழுந்துள்ளன. மன்னார் தீவின் நிலப்பரப்பில் குறைந்தது 63% கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மெல்லிய மண்ணைத் தோண்டுவது தீவை முழுமையாக நீரில் மூழ்கடிக்கும் அபாயத்தை அதிகரிப்பதுடன், இயற்கைக் குடிநீரின் உப்புத்தன்மையை அதிகரிக்கவும் கூடும்.
மன்னார் தீவின் அமைதியான சூழல் தற்போது மேலும் அதிகரித்த அமைதியின்மையின் விளிம்புக்குச் செல்கிறது. அதன் அமைதியான கடற்கரைகள் இன்று தன் இருப்பின்மையை உணரத் தலைப்பட்டுள்ளன. இந்தத் தீவு, மன்னார் சமூகத்திற்கும் கொழும்பைத் தளமாகக் கொண்ட கனிம வளங்களைப் பிரித்தெடுக்கும் ஆர்வலர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களின் மையமாக மாறியுள்ளது. ஒட்டுமொத்தத் தீவின் கவனமும் அதன் கனிம வளம் நிறைந்த மணலைச் சுரண்டுவதைத் தடுப்பதை நோக்கியே உள்ளது. இது ஒரு சாதாரணப் போராட்டம் மட்டுமல்ல, நீதி, கண்ணியம் மற்றும் தங்கள் நிலத்துடன் இணக்கமாக வாழும் உரிமைக்கான ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIA) நடத்தப்பட்டாலும், அவை பெரும்பாலும் மக்களின் பார்வைக்கு முழுமையாக அணுக முடியாதவையாகவே உள்ளன. அவை ஒருபோதும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதில்லை அல்லது பகிரப்படுவதில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து முறையாக விலக்கப்படுகிறார்கள். இப்பகுதியில் முன்மொழியப்படும் காற்றாலைத் திட்டங்கள் போன்ற ‘பசுமை வளர்ச்சி’ முயற்சிகள் கூட மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை. இவை உண்மையில் நிலைத்தன்மைக்கு உதவாமல், வெறும் ‘பசுமைச் சலவையாக’ (Greenwashing) இருக்கக்கூடும் என்ற சந்தேகம் மன்னார் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.
கனிம மணல் மதிப்பீடு என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட செயல் அல்ல; மாறாக, இது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குள் ஊடுருவிச் செல்லும் ஒரு பெரிய வளச் சுரண்டல் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சிகள், போர், இடப்பெயர்ச்சி மற்றும் நீண்டகாலப் பொருளாதாரப் புறக்கணிப்பிலிருந்து இன்னும் மீண்டுவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வளங்களைக் குறிவைக்கின்றன. இத்தகைய தொடர்ச்சியான பிரித்தெடுக்கும் முன்னெடுப்புகள், அப்பகுதி மக்களின் வாழ்வாதார அடித்தளங்களைத் தகர்க்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
மன்னாரின் காற்று வீசும் மணல் மேடுகள், சதுப்பு நிலங்கள், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஈரநிலங்கள் என்பன வெறும் நிலப்பரப்புகள் மட்டுமல்ல; அவை அழிந்து வரும் உயிரினங்களை ஆதரிக்கும், கடலோர அரிப்பிலிருந்து பாதுகாக்கும், மற்றும் மீன்பிடித்தல், உப்பு விவசாயம், சிறிய அளவிலான விவசாயம் போன்ற பாரம்பரிய வாழ்வாதாரங்களை நிலைநிறுத்தும் உயிர்நாடிகள் ஆகும். ஆனால், இந்த நிலங்களுக்கு அடியில் டைட்டானியம், மட்பாண்டங்களில் பயன்படுத்தப்படும் இல்மனைட், ரூட்டைல் மற்றும் சிர்கான் போன்ற உலகளவில் தேவைப்படும் மதிப்புமிக்க கனிமப் படிவுகள் உள்ளன. இதன் விளைவாக, பன்னாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் மன்னாரின் கடற்கரையைப் பாதுகாக்கப்பட வேண்டிய நிலப்பரப்பாக அல்லாமல், கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட வேண்டிய ஒரு வளமாகவே பார்க்கின்றன.

மன்னாரில் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்ட ‘கருநிலம்’ மண் மீட்புப் போராட்டம்.
மூலம்: kuriyeedu.com
தற்போதைய சுரண்டல் நடவடிக்கைகள் இலங்கையின் சுரங்கப் பணியகத்தின் (Geological Survey and Mines Bureau) இரகசிய அனுசரணையுடனும், மன்னாரில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் பக்கபலத்துடனும் தொடர்வதாகவும் மக்கள் நம்புகின்றனர். மேலும், இத்தகைய நடவடிக்கைகளுக்கு எந்தச் சட்ட அனுமதியும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வெளிநாட்டில் செயற்படும் டைட்டானியம் சாண்ட்ஸ் லிமிடெட் (Titanium Sands Limited) நிறுவனம், பல ஆண்டுகளாக இரகசியமாக மணல் அகழ்வுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது என்றும், ஏமாற்றும் முறைகளைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்குப் பணம் கொடுத்து தங்கள் நோக்கங்களை அடைவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல தனிநபர்கள், இந்த நிறுவனங்கள் அளித்த பொய்யான வாக்குறுதிகளுக்குப் பலியாகி, தங்கள் நிலங்களை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தயாராக இருந்ததாக கள நிலைகள் கூறுகின்றன. இதற்கு, அதிகரித்த வேலையின்மை, அதிகரிக்கும் வறுமை மற்றும் நுண்கடன்களின் சிக்கிய வாழ்வு நிலை காரணங்களாக இருக்கலாம்.
கனிம மணல் அகழ்வு நிறுவனங்கள், தனியார் நிலங்களை இலக்காகக் கொண்டு, பனை மரங்களை அகற்றி, அகழ்வுக்கான சாதனங்களைப் பயன்படுத்தும் நோக்குடன் நிலங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த மன்னார் நிலப்பரப்பு, ஆஸ்திரேலியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாடுகளின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்த கனிம மணல் அகழ்வு சார்ந்த ஆர்வமானது, உள்ளூர்ச் சமூகங்களை இடம்பெயர்த்து, அவர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தி, சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சேதப்படுத்தி, இறுதியில் தீவின் முழுமையான இயற்கைப் பாதுகாப்புகளை ‘அபிவிருத்தி’ என்னும் பெயரில் சீர்குலைக்கிறது. இந்த முன்னெடுப்புகளை முற்றாகத் தடுக்க வேண்டியது இன்றைய காலக் கடமையாகும்.
மன்னாரில் நாம் இழப்பவை யாது? அதன் அபாயம் என்ன?
வடமேற்கு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்டம் ஓர் உணர்திறன் மிக்க சூழலுக்குப் பெயர் பெற்றது. ஆதாம் பாலம் தேசிய பூங்கா, வங்காலை சரணாலயம், மற்றும் விடத்தல்தீவு இயற்கை காப்பகம் உள்ளிட்ட இப்பகுதி, பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு இன்றியமையாதது. இது பல்வேறு வகையான தாவரங்கள், புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை ஆதரிக்கும் ஓர் உயிர்ப்புள்ள சுற்றுச்சூழல் அமைவிடமாக உள்ளது. எனினும், கடலோர அரிப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற அச்சுறுத்தல்களைத் தாண்டி, இந்த உணர்திறன் மிக்க பகுதி தற்போது ஒரு பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், அபிவிருத்தி என்ற பெயரில் அரச ஆதரவுடன் மேற்கொள்ளப்படவுள்ள கடலோர கனிம மணல் அகழ்வு மற்றும் டைட்டானியம் பிரித்தெடுத்தல் போன்ற மனிதச் செயற்பாடுகளால், மன்னார் மாவட்டமும் அதனுடன் இணைந்த வன்னி நிலப்பரப்பும் கடல் வளமும் ஒரு பாரிய சூழலியல் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.

பாக்கு நீரிணை (Palk Strait) வழியாக இலங்கைக்கும் (மன்னார் தீவு) இந்தியாவுக்கும் (தமிழ்நாடு) இடையே நீண்டு செல்லும் மணல் திட்டுகள், குன்றுகள் மற்றும் தீவுகள்.
மூலம்: www.titaniumsands.com.au
மன்னார் பிராந்தியத்தின் கடலோரப் பகுதிகள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், தொடர்ச்சியான சமநிலையையும் பாதுகாப்பையும் பேணுவதற்கும் இன்றியமையாதவை என்பதால், அங்கு சமரசமில்லா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அத்தியாவசியத் தேவையாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இலங்கை தற்போது ஒரு ‘வளச் சாபத்தில்’ சிக்கியுள்ளது. நாட்டின் கனிம மணல் அகழ்வு மற்றும் அதனுடன் இணைந்த சுரங்கத்துறை ஆகியவை இன்று சுற்றுச்சூழல் அரசியல் களத்தின் மையப்புள்ளியில் முழுமையாகச் சிக்கியுள்ளன. இலங்கையில் நிலையான வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான சமநிலை பெரும்பாலும் இல்லாமல் உள்ளது. குறுகிய பார்வை கொண்ட, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல் தலைமையால், பொருளாதார வளர்ச்சி என்னும் பெயரில் சுற்றுச்சூழல் மீதான வளச் சுரண்டல் முன்னுரிமை பெற்று வருகின்றது என்பது அவதானிக்கத்தக்கது.
மன்னார் நிலப்பரப்பு, குறிப்பாக மன்னார் தீவு, மத்திய ஆசிய பறக்கும் பாதை வழியாகப் புலம்பெயரும் பறவைகளுக்கு ஓர் அத்தியாவசிய வாழ்விடமாக உள்ளது. அத்துடன், ஆவிலியா (கடல் பசு) மற்றும் கடல் ஆமைகள் உட்படப் பல்வேறு வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களின் தாயகமாகவும் இது விளங்குகிறது. மாவட்டத்தின் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளில் தடாகங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் பவளப்பாறைகள் உள்ளன. இவை அனைத்தும் அதன் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்திற்குப் பங்களிக்கின்றன. இருப்பினும், இந்தக் கடலோரப் பகுதிகள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. கடலோர அரிப்பு ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது. கடல் மட்டங்கள் உயர்ந்து வருவதாலும், மனிதச் செயற்பாடுகளாலும், குறிப்பாக வங்காலை போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகள் தினமும் பாதிப்படைகின்றன. இந்தக் கவலைகளில் மிக முக்கியமானது, கடல் நீர் ஊடுருவல் காரணமாக மாவட்டத்தின் நிலத்தடி நீரின் தரம் குறைந்து வருவது ஆகும்.
2020 ஆம் ஆண்டு முதல், பேசாலை, எருக்கலம்பிட்டி, தோட்டவெளி, தலைமன்னார் மற்றும் சவுத்பார் உள்ளிட்ட மன்னார் முழுவதிலும் உள்ள சமூகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. இதில், சரியான வடிகால் அமைப்புகள் இல்லாததால் மாதக்கணக்கில் நீடிக்கும் வெள்ளம், வீடுகள், சாலைகள் மற்றும் வயல்களைச் சேதப்படுத்துவது முதன்மையானது. மேலும், ஆண்டுதோறும் மீன்பிடிப்புக் குறைந்து வருவது மற்றொரு தீவிரமான பிரச்சினையாகும். பல மீனவர்கள் தங்கள் வருமானத்தில் 40%க்கும் அதிகமான இழப்பைப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சவால்கள் மணல் அகழ்வு தொடங்குவதற்கு முன்பே எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மணல் அகழ்வு நிறுவனம் இது ‘வெறும் மணல்’ என்று கூறினாலும், அங்குள்ள வாழ்க்கைக்கு அது இன்றியமையாதது என்பதே உண்மை. ஏனெனில், மணல் தான் மன்னாரைப் பாதுகாக்கிறது, தண்ணீரை வடிகட்டுகிறது, மேலும் விவசாயம் மற்றும் மீன்பிடித்தலை நிலைநிறுத்துகிறது. எனவே, மணலை அகற்றுவது இந்தச் சமநிலையைச் சீர்குலைத்து, மன்னார் சமூகத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
பல்லுயிர்ப் பெருக்கத்தின் மீதான தாக்கங்கள்: வாழ்விட அழிவு என்பது மணல் பிரித்தெடுப்பின் நேரடி விளைவாகும். இந்தச் செயல்பாடு ஆறுகள், கடலோரப் பகுதிகள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள் மற்றும் மணல் குன்றுகள் போன்ற ஈரநிலங்களில் உள்ள வாழ்விடங்களை நேரடியாக நீக்குகிறது அல்லது தொந்தரவு செய்கிறது. இந்த அகற்றுதல் செயல்முறை ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் சீர்குலைப்பதுடன், பல உயிரினங்களுக்கும் அவசியமான வாழ்விடங்களை இல்லாமலாக்குகிறது.
சீர்குலைந்த சுற்றுச்சூழல் செயல்முறைகள்: மணல் பிரித்தெடுக்கும் செயல்பாடு, ‘மேக்ரோஇன்வெர்ட்பிரேட்’ சறுக்கல் (Macroinvertebrate Drift), மீன் இடப்பெயர்வு மற்றும் விதை பரவல் உள்ளிட்ட பல அத்தியாவசிய சுற்றுச்சூழல் செயல்முறைகளை நேரடியாகக் குறுக்கிடலாம். இந்த இடையூறுகள், உணவு வலை இயக்கவியலை (Food Web Dynamics) வெகுவாகப் பாதிப்பதுடன், ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தையும் மற்றும் அதன் நிலைத்தன்மையையும் பலவீனப்படுத்தும்.
நீரின் தரச் சிக்கல்கள்: மணல் அகழ்வுச் செயல்முறையானது நீர்நிலைகளில் கொந்தளிப்பு (Cloudiness) மற்றும் வண்டல் படிவுகளை (Sedimentation) அதிகரிக்கிறது. இதன் காரணமாக, நீரில் ஒளி ஊடுருவல் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் குறைகின்றன. இந்தச் சுற்றுச்சூழல் சீரழிவு, மீன், மட்டி மற்றும் தாவரங்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதுடன், மனித நுகர்வு மற்றும் விவசாயத்திற்கான நீரின் தரத்தையும் எதிர்மறையாகப் பாதிக்கும்.
உயிரினங்களின் இழப்பு: வாழ்விடங்களை அழிப்பதும் மற்றும் சுற்றுச்சூழல் செயல்முறைகளைச் சீர்குலைப்பதும் பூர்விக உயிரினங்களின் எண்ணிக்கையிலும், குறிப்பாக அரிய அல்லது அழிந்து வரும் உயிரினங்களின் எண்ணிக்கையிலும் சரிவுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, இந்தச் சுற்றுச்சூழல் சீர்குலைவு, வெளியிலிருந்து வரும் ஆக்கிரமிப்பு உயிரினங்களின் (Invasive Species) பெருக்கத்தை எளிதாக்கி, மேலும் ஒரு சூழலியல் அச்சுறுத்தலை உருவாக்கும்.
சுற்றுச்சூழல் அமைப்பின் மீள்தன்மை குறைப்பு: வாழ்விடங்களை மாற்றுவதன் மூலமும் சுற்றுச்சூழல் செயல்முறைகளைச் சீர்குலைப்பதன் மூலமும், வணிக ரீதியான மணல் அகழ்வு ஆனது, சுற்றுச்சூழல் அமைப்புகளின் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கான எதிர்ப்புத் திறனைக் (Ecological Resistance) குறைக்கிறது. இதன் விளைவாக, அந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் வெள்ளம், வறட்சி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற வெளிப்புறத் தொந்தரவுகளுக்கு அதிக வாய்ப்புள்ளவையாகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாகவும் மாறுகின்றன.
ஆற்று சுற்றுச்சூழல் அமைப்புகளில் மணல் அகழ்வானது ஆற்றுப் படுகைகளைக் குறைக்கலாம், ஆறுகளை விரிவுபடுத்தலாம் மற்றும் ஆற்றங்கரைகளைச் சீர்குலைக்கலாம். இதன் விளைவாக, அரிப்பு (Erosion), வாழ்விட இழப்பு மற்றும் நீர் ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள், இறுதியில் மீன் தொகை, ‘மேக்ரோஇன்வெர்ட்பிரேட்’ சமூகங்கள் மற்றும் கரையோரத் தாவரங்களைப் பாதிக்கின்றன.
கடலோரச் சுற்றுச்சூழல் அமைப்புகள் மீதான பாதிப்பு: கடற்கரைகள் மற்றும் மணல்மேடுகளில் (Dunes) நடைபெறும் மணல் அகழ்வு நடவடிக்கையானது, கடலோர அரிப்பு (Coastal Erosion), தாவர இழப்பு மற்றும் புயல்களுக்கு அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலைமைகளுக்கு வழிவகுக்கும். இது கடற்புறாக்கள் (Terns) மற்றும் ஆமைகள் முட்டையிட வரும் இடங்களையும் நேரடியாகச் சீர்குலைக்கும்.
கடற் சுற்றுச்சூழல் அமைப்புகள் மீதான பாதிப்பு: கடல் நீரில் மணலைத் தோண்டுவது என்பது, பெந்திக் வாழ்விடங்களைத் (Benthic Habitats) தொந்தரவு செய்யலாம், இது பல்லுயிர்ப் பெருக்கத்தைக் குறைக்கலாம்; மீன்களின் எண்ணிக்கையைப் பாதிக்கலாம். கூடுதலாக, இந்தச் செயல்பாடு ஒலி மாசுபாட்டை உருவாக்கலாம். இந்த இரைச்சல் மாசுபாடு, போர்போயிஸ் (Porpoises) போன்ற செவித்திறனை நம்பியிருக்கும் கடல் பாலூட்டிகளைப் பெரிதும் பாதிக்கிறது.
மன்னார் முதல் யாழ்ப்பாணம் வரையிலான கடற்கரை நிலப்பரப்பு மீதான அச்சுறுத்தல்கள்
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான கடற்கரைப் பகுதி வட மாகாணத்தின் ஒரு பலம் மிக்க பொருளாதார வலயமாகும். அத்துடன் இன்றுவரை போதிய கவனம் கொள்ளப்படாத பல்வேறு கரையோர வாழ்விடங்களின் ஆதாரமாகவும் திகழ்கிறது. இவை பாதுகாக்கப்பட வேண்டிய வாழ்விடங்களாகும். இப்பகுதியில் கழிமுகங்கள், தடாகங்கள், கடற்கரைகள், பாறைகள் நிறைந்த கரையோரங்கள், மணல் திட்டுகள், உப்புச் சதுப்பு நிலங்கள் மற்றும் சதுப்புநிலங்கள் எனப் பல வகைப்பட்ட அமைப்புகள் உள்ளன. இவை சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியான அத்தியாவசிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட வெப்பமண்டலப் பகுதிகள், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் தீவிர அழுத்தத்தில் உள்ளன. இதன் விளைவாக, இந்தக் கடலோரச் சுற்றுச்சூழல் வாழ்விடங்கள் அமைதியான முறையில் அழிந்து வருகின்றன.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றங்கள் அழிவுகளை உண்டாக்கினாலும், அழிவில் அதிகம் பங்களிப்பது தற்போதைய அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளே ஆகும். இந்தக் கொள்கைகள் நீண்டகாலத்தில் இந்த வாழ்விடங்களை நீர்த்துப்போகச் செய்யக்கூடியன. இதனால் மிகவும் பாதிக்கப்படப் போவது எமது நெய்தல் நிலத்தின் வாழ்வாதாரங்கள், வளமான எமது கடல்சார் வனங்கள் மற்றும் கடல் பண்ணைகளே (Sea Farms) ஆகும். மொத்தத்தில், தற்போதைய இந்தச் செயல்நெறி, மனிதர்களைக் காவுகொள்ளும் ஒரு மோசமான திசையை நோக்கிச் செல்கிறது.
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வடமேற்குக் கரையோர நிலப்பரப்பு ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் கட்டமைப்பை உள்ளடக்கியது. மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், மன்னார் (மன்னார் மாவட்டம்) மற்றும் பூநகரி (கிளிநொச்சி மாவட்டம்) ஆகிய மிக முக்கிய மையங்களை இது கொண்டுள்ளது. மன்னார் தீவு, ஆடம்ஸ் பாலம் மற்றும் மணல் தீவுகள், பிரதான மன்னார் தீவின் மணல் குன்றுகள் மற்றும் சதுப்பு நிலப்பரப்புகள் ஆகியவை இப்பகுதியின் உயிர்ப்பான பகுதிகளாகும். இருப்பினும், காடழிப்பு, முறையற்ற மக்கள்தொகை குடியிருப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிவின்மை போன்ற கடுமையான இயற்கை மற்றும் மனிதத் (மனிதனால் உருவாக்கப்பட்ட) தலையீடுகள் இப்பகுதிகளைத் துவம்சம் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, நூற்றுக்கணக்கான பறவை முட்டைகள் சிதைக்கப்படும் நடவடிக்கைகள் ஒருபுறம் தொடர, புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் கழுதைகள் உள்ளிட்ட பாலூட்டிகளின் இருப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், வறட்சி, தீவிர வானிலை நிகழ்வுகள், கடல் ஊடுருவல் மற்றும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு ஆகியவை சமூகத்தின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் அடிப்படை வாழ்வாதார வாய்ப்புகளை அச்சுறுத்துகின்றன.
எனவே, முன்னுரிமை அடிப்படையில் பல்லுயிரியலைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் சேவைகளை மேம்படுத்துதல், கார்பன் சுரப்பு (Carbon Sequestration) மற்றும் நிலச் சீரழிவைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் உடனடியாக அமுலாக்கப்பட வேண்டும். இதற்குப் பங்கேற்பு அணுகுமுறை மற்றும் பல பங்குதாரர்களின் இணைவு மிக அவசியம். இயற்கை முகாமைத்துவ முறை மூலம் கடலோரச் சுற்றுச்சூழல் கட்டமைப்புகளுக்கு மேலும் இடையூறு ஏற்படுவதைக் குறைக்க நாம் வேகமாகச் செயல்பட வேண்டியுள்ளது. அத்துடன், காலநிலை மாற்றத்தைத் தணிக்கவும், மாற்றியமைக்கவும் உதவும் வகையில், பங்கேற்புடனான சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரத் தலையீடுகளைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தத் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.
அப்பகுதிச் சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதற்கான செயற்பாடுகள் கட்டாயமானவை. சிவில் சமூக அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், இந்த உயிர்ப்பான நிலப்பரப்பில் உள்ளூர் மக்களின் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்கும் நீண்டகாலச் செயற்பாடுகள் அவசியம். பறவைகள் சரணாலயங்களில் மீன்பிடிச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, அங்கிருக்கும் புலம்பெயர்ந்த மற்றும் பூர்வீகப் பறவைகளைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில், கடற்கரை மற்றும் கடல்சார் பாதுகாப்புத் திட்டங்களை வடிவமைப்பதற்கான சூழலியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும் நிலப்பரப்பின் திறன், மீள்தன்மை மற்றும் அதன் எதிர்கால வாழ்வாதாரத்தை அதிகரிப்பது போன்ற செயற்பாடுகள் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் உட்கட்டமைப்பை உருவாக்க உதவும்.
மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கரையோரப் பகுதி பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. இவற்றில் கரையோரச் சுற்றுச்சூழல் மற்றும் தடாகங்களின் அழிவு, சனத்தொகைப் பெருக்கம், மண் அரிப்பு, வறட்சி, மாசுபாடு காரணமாக மண் மற்றும் நீரின் தரச் சீர்குலைவு, சட்டவிரோதமாக திடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் அதிகரிப்பு ஆகியவை அடங்கும். மேலும், நில அபகரிப்புடன் கூடிய சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் காடுகளை அகற்றுதல் போன்றன தண்டனையின்றி மேற்கொள்ளப்படுகின்றன. சதுப்பு நிலத்தின் வடகிழக்கு எல்லையில் குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. பலத்த காற்றுடன் இவை சதுப்பு நிலத்தை மோசமாக்குகின்றன. தவறான நகரமயமாக்கல், கழிவுகளை அகற்றுதல் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக ஈரநிலங்களை நிரப்புதல் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் மனித நடைமுறைகள், இந்தப் பகுதியின் ஈரநிலச் சுற்றுச்சூழல் அமைப்பை ஆபத்தில் ஆழ்த்துவதற்கு வழிவகுத்துள்ளன.
சட்டவிரோதமான முறையில் நீர்ப்பறவைகளைப் பிடிப்பதும் சுட்டுக்கொல்லுவதும் குறைவில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கு, பின்டைல் வாத்துகள் மற்றும் கார்கனி வாத்துகள் போன்ற புலம்பெயர்ந்த இனங்களும், சைபீரியக் கொக்குகள் (Heuglin’s Gulls), கிரே பார்ட்ரிட்ஜ் (Grey Partridge) போன்ற பெரிய பறவைகளும், அத்துடன் அழிந்துவரும் புள்ளி-பில்டு வாத்துகள் (Spot-billed Ducks) போன்ற இனங்களும் தொடர்ந்து வேட்டையாடப்படுகின்றன.
உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட திட்டமிடப்படாத செயற்பாடுகளால் சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களும் பாதிப்புகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக காடழிப்பு மற்றும் மணல் அகழ்வு போன்ற நடவடிக்கைகள், மன்னார் தீவில் உள்ள தனித்துவமான மற்றும் செழுமையான பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளின் நீண்டகால நிலைத்தன்மைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் மேற்கொள்ளப்படுகின்றன.
பின் – போர்க்காலப் பின்னணியில் பல்தேசிய முதலாளித்துவ முதலீட்டுத் திட்டங்கள்
2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் முடிவானது, இலங்கையின் வடமேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள சமூகங்களுக்குப் புதிய சவால்களை அறிமுகப்படுத்தியது. உள்ளக முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துதல், பிரதேசங்களைத் தனிமைப்படுத்தல் மற்றும் பாகுபாடுகளைக் கூர்மைப்படுத்துதல் போன்ற அணுகுமுறைகள், குடியிருப்பாளர்களிடையே, குறிப்பாக மன்னார் மக்களிடையே, ஆழமான அவநம்பிக்கையை வளர்த்த கடந்தகால அனுபவங்களாகும். தொடர்ச்சியான அநீதிகளின் அனுபவங்கள் மற்றும் இனச்சார்பு குறித்த அச்சம் காரணமாக, பல சமூக உறுப்பினர்கள் சமூகப் பொருளாதார முன்னெடுப்புகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, உள்ளக மற்றும் வெளியக இடப்பெயர்வுகளில் ஈடுபட முயலுவதற்கு இதுவே வழிவகுத்துள்ளது எனலாம்.
போருக்குப் பிந்தைய வாழ்வைக் கட்டியெழுப்பும் முன்னெடுப்புகளைத் தடுக்கும் வகையில், மன்னாரில் கடற்படை அல்லது இராணுவத்தால் தனியார் நிலங்களைக் கட்டாயமாக கையகப்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலங்கள் பின்னர் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அல்லது பெரிய மற்றும் நடுத்தர அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் தேசிய நன்மைகளாக வடிவமைக்கப்பட்டாலும், அவை உள்ளூர்ச் சமூகங்கள், வனவிலங்குகள் மற்றும் அவை நம்பியிருக்கும் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் மீது அதிகம் கவனம் கொள்ளவில்லை.
பல ஆண்டுகளாக, உள்ளூர்ச் சமூகங்களும் ஆதரவு அமைப்புகளும் போராட்டங்கள், கதைவடைப்புகள் மற்றும் ஊர்வலங்கள் மூலம் இந்த நடவடிக்கைகளுக்குத் தங்கள் அமைதியான எதிர்ப்பைக் காட்டி வந்துள்ளன. இருப்பினும், இந்த மக்களின் உணர்வுகளும் கோரிக்கைகளும் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டவையாகவே உள்ளன. மேலும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்த எதிர்ப்புகளை அரசின் அபிவிருத்திக்கு எதிரானவை என்று சித்திரிக்கும் தவறான கதைகளும் தவறான தகவல்களின் பெருக்கமும் தொடர்ந்து வளர்ந்து வருவதுதான்.
மன்னார், அதன் உயிர்ப்பான மணற் குன்றுகள், வளமான நிலப்பரப்பு, கடல், பறவை மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டிருப்பதால், சுமார் 123,674 (2024) மக்களின் வாழ்வாதாரங்களைத் தாங்கும் ஒரு துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பாக உள்ளது. இருப்பினும், இன்று இந்தப் பிராந்தியம், பல்தேசிய முதலாளித்துவ முதலீட்டு மையங்களைப் பெரிதும் கவர்ந்துள்ளதால், சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பல்லுயிர் வளங்களையும் மீறி இலாபத்திற்காகத் தியாகம் செய்ய வேண்டுமா? என்ற முக்கிய வினாவை எதிர்கொள்கிறது.
நாம் காலநிலை நெருக்கடிக்கு அவசரமாகத் தீர்வுகளைத் தேடும் இந்தக் காலகட்டத்திலும், போரால் பாதிப்படைந்த மன்னார், நிலையான அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Sustainable Development Projects) அவசரத் தேவைகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், தற்போதைய போக்கு, மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை அழித்து பேரழிவு விளைவுகளைத் தரும் வகையில், அரச ஆதரவு கொண்ட பல்தேசியத் திட்டங்கள் எதிர்கால விளைவுகளைப் புறக்கணிக்கிறது. எனவே, இந்தப் பிராந்தியத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் வகையில், பாதிப்பு குறைவான வளர்ச்சித் திட்டங்களை (Low-Impact Development) கொண்டுவருவதே இன்றைய அத்தியாவசியத் தேவையாக உள்ளது.
நீடித்த போர், கோவிட் – 19 தொற்றுநோய் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஆகியவை பொருளாதார ரீதியில் மேலும் அதிகப்படியான சுமைகளைச் சேர்த்து, இந்த பிரச்சினைகளைச் சிக்கலாக்கின. காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் மற்றும் மனிதச் செயற்பாட்டால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் எதிர்ப்பின் பின்னாலுள்ள காரணங்களையும் உள்நோக்கிப் பார்ப்பது மிக அவசியம். மக்களின் பங்களிப்பு என்பது அபிவிருத்தியின் மையமாகும். எனவே, மக்களின் பயங்களைப் போக்கி, நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வாதார நம்பிக்கையிலிருந்தே கட்டியெழுப்பப்பட வேண்டும். எனினும், அரசின் முடிவெடுக்கும் நடைமுறைகள், தற்போதுள்ள ஆக்கபூர்வமான முயற்சிகளின் போக்கு மற்றும் அவற்றின் நீண்டகாலத் தாக்கங்கள் குறித்துப் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற அச்சத்தை உருவாக்குகின்றன.
மன்னாரின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளையும் அதன் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் சுரண்டல் நடைமுறைகள், உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார பன்முக வாய்ப்புகள் என்ற போர்வையில் வெளிவந்தாலும், இறுதியில் அவை அச்சுறுத்தல் நிறைந்த சமூகப் பொருளாதார நிலையையே எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில், மன்னார் தீவின் ஈரநிலங்கள் பல்லுயிர்ப் பன்முகத்தன்மை கொண்டவை; ஆற்றல் நிறைந்தவை. சுற்றியுள்ள சுற்றுச்சூழல் வளங்கள், வனவிலங்குகளுடன் அதன் மக்கள் கொண்டிருக்கும் உறவு பிரிக்க முடியாதது. எனவே, உண்மையான உள்ளூர்ப் பொருளாதார வாய்ப்புக்குரிய திட்டங்களை, முக்கியமாக இந்த ஈரநிலங்களின் பல்லுயிர்ப் பன்முகத்தன்மை கொண்ட வளங்களின் மீதுதான் வடிவமைக்க வேண்டியுள்ளது. இதுவே அம்மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
முடிவு
இலங்கையின் தனியார் துறையும் அதன் சர்வதேசக் கூட்டாளர்களும் இணைந்து, பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை (Diversity, Equity and Inclusion) ஊக்குவிப்பதில் முன்னணி வகிப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும். தேசிய ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதற்கும், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் இந்த அணுகுமுறை மிக அவசியம். குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும், இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும் இந்த உள்ளடக்கிய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
சமூகப் பொருளாதார மட்டத்தில் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பங்களிப்புகளை ஊக்குவிப்பதற்கு, கட்டமைக்கப்பட்ட சமூகத் தடைகளைக் குறைப்பதற்கு நிறுவனங்கள் தங்களை ஒப்புக்கொள்வது அவசியம். தனியார் துறையால் மேற்கொள்ளப்படும் மிகச்சிறிய முயற்சிகள் கூட இலங்கையில் மட்டுமல்லாமல், உலகளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த முயற்சிகளில் கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, பொதுச் சேவைகளுக்கான அணுகல் போன்றவற்றை மேம்படுத்துவதுடன், உள்ளடக்கிய நிர்வாக வழிமுறைகளையும் உருவாக்கும். மேலும், உள்ளூர் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை நம்பியிருக்கும் உள்ளூர்ப் பொருளாதாரத்தின் உயிர்ச்சக்தியை உறுதி செய்வதும் மிக முக்கியமானது. இவை உள்ளூர் வாழ்வாதாரங்கள் செழிக்கத் தேவையான நிபந்தனைகளாகும். அமைதி, உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு ஆகியவை நிலையான சந்தைகளை உருவாக்க உதவும். மாறாக, இத்தகைய உள்ளடக்கம் இல்லையெனில் மோதல்கள் உருவாகி, பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.
பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (Diversity, Equity, and Inclusion – DEI) ஆகியவை வெறும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைத் (ESG) தரநிலைகளுக்கான இணக்கத் தேவைகள் அல்ல. மாறாக, இவை தனியார் துறை, அதன் நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் நீண்டகால நலன்களுக்குச் சேவை செய்கின்றன. இலங்கையில் தனியார் துறையின் பங்கு மிக முக்கியமானது; ஏனெனில் அரசாங்கங்களால் மட்டுமே ‘DEI’ இலக்குகளை அடைய முடியாது. தனியார் துறையின் முன்னெடுப்புகள் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார வலுவூட்டலை வளர்ப்பதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருப்பது அவசியம். ஓர் உண்மையான பொருளாதார மீட்சி என்பது நாட்டின் பல இன மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பை உள்ளடக்கியதாகவும் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும். எனவே, சமூக ஒற்றுமை என்பது ஓர் இரண்டாம் நிலைப் பிரச்சினை அல்ல; அது மீள்தன்மை (Resilience), நெருக்கடியைத் தாங்கும் தேசிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய தூணாகும்.
மன்னார் தீவு மறுக்க முடியாத சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது ராம்சர் மாநாடு போன்ற சர்வதேச மாநாடுகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் வழித்தடமான மத்திய ஆசிய பறக்கும் பாதையில் பயணிக்கும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த பறவைகளின் தாயக, தரிப்பிடமாகும். கூடுதலாக மன்னார், நாட்டின் மூன்றாவது பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியைக் கொண்டுள்ளது. இது ‘ப்ளூ கார்பன்’ என வகைப்படுத்தப்பட்ட பல்வேறு கடல் சுற்றுச்சூழல் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்தத் தனித்துவமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. பல்வேறு சர்வதேச மாநாடுகளில் கையொப்பமிட்ட நாடாக, இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.
மன்னாரின் எதிர்காலம் ஒரு முக்கிய மாற்றத்தைச் சார்ந்துள்ளது. நாம் பசுமைச் சலவைக்கு (Greenwashing) அப்பால் நகர்ந்து உண்மையான நிலைத்தன்மையைத் தழுவ வேண்டும். இந்த நிலைமை சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை மதித்து, தீவின் மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாற வேண்டும். கடந்தகால நடவடிக்கைகள் சிறந்த முடிவுகளைப் பிரதிபலிக்காமல் போனாலும், வளங்கள், தகவல் மற்றும் ஆதரவை அணுகுவதில் உள்ளூர் சமூகங்கள் எதிர்கொள்ளும் வரம்புகளை அங்கீகரித்து, மக்களின் பங்களிப்பை இணைக்கக்கூடிய சமமான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.
மன்னாரின் சவால்கள் குறித்த விவாதங்களில் நாம் ஈடுபடும்போது, இந்தப் பிரச்சினைகளின் சிக்கல்கள் வெளிப்படுகின்றன. இவை துயரகரமான, சர்ச்சைக்குரிய மற்றும் மாறுபட்ட கதைகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், இந்தப் பன்முகப் பிரச்சினைகளின் சிக்கலை நாம் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை அங்கீகரிப்பது அவசியம். முடிவுகளை முன்மொழிவதை விட, நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ஓரங்கட்டப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களை அணுகி ஆதரிப்பதும், அனைத்து உயிரினங்களின் உரிமைகளையும் நிலைநிறுத்துவதும் முதன்மையானது. இதுவே எதிர்காலச் சந்ததியினரின் உயிர்வாழ்வையும் சமநிலையையும் உறுதி செய்வதற்கான வழியாகும்.
உசாத்துணை மூலங்கள்
- ABC News. (2020, December 23). Mannar Island is a bird paradise that survived Sri Lanka’s civil war. Now an Australian mining company wants its sand. Retrieved from https://www.abc.net.au/news/science/2020-12-23/mining-mannar-island-titanium-sands-bird-sanctuary/12914650
- Bisht, A., & Martinez-Alier, J. (2023). Coastal sand mining of heavy mineral sands: Contestations, resistance, and ecological distribution conflicts at HMS extraction frontiers across the world. Journal of Industrial Ecology, 27(1), 238-253. https://doi.org/10.1111/jiec.13358
- Daily Mirror. (2019, March 23). Pulmoddai mineral sand deposits will not be transferred: Rishad. Retrieved from https://www.dailymirror.lk/print/business-news/Pulmoddai-mineral-sand-deposits-will-not-be-transferred-Rishad/273-164361
- Daily Mirror. (2025, October 13). FR petition filed against the heavy mineral sand mining project in Mannar. Retrieved from https://www.dailymirror.lk/breaking-news/FR-petition-filed-against-heavy-mineral-sand-mining-project-in-Mannar/108-322139
- DeCarlo, K. F., & Moon, J. W. (2023). The Mineral Industry of Sri Lanka (2020–2021 Minerals Yearbook). U.S. Geological Survey (USGS). Retrieved from https://pubs.usgs.gov/myb/vol3/2020-21/myb3-2020-21-sri-lanka.pdf
- Groundviews. (2025, August 7). The Battle for Mannar’s Ecological and Social Future. Retrieved from https://groundviews.org/2025/08/07/the-battle-for-mannars-ecological-and-social-future/
- Groundviews. (2025, August 19). The Sand Mining Crisis in Mannar: A Battle for Survival, Ecology and Justice. Retrieved from https://groundviews.org/2025/08/19/the-sand-mining-crisis-in-mannar-a-battle-for-survival-ecology-and-justice/
- ICSF. (n.d.). Sri Lanka: “Halt and suspend disastrous projects!”: A plea from people of Mannar. Retrieved from https://icsf.net/newss/sri-lanka-halt-and-suspend-disastrous-projects-a-plea-from-people-of-mannar/
- Investing News. (n.d.). Terms of Reference for Environmental Study Provided for Mannar Heavy Mineral Project. Retrieved from https://investingnews.com/terms-of-reference-for-enviromental-study-provided-for-mannar-heavy-mineral-project/
- Lanka Business Report. (2009, November 5). Sri Lanka Could Expand Mineral Sand Mining. Sangam.org. Retrieved from https://sangam.org/2009/11/Mineral_Sand_Mining.php?uid=3739
- Lanka Mineral Sand Ltd. (2020). Annual Report. Parliament of Sri Lanka. Retrieved from https://www.parliament.lk/uploads/documents/paperspresented/1709727844029708.pdf
- Lohathayalan, N. (n.d.). Ilmenite Mining in Sri Lanka – Destructive of the Environment? Lanka News Web. Retrieved from https://lankanewsweb.net/archives/2085/ilmenite-mining-in-sri-lanka-destructive-of-the-environment/
- Mining-Technology. (n.d.). Moma Titanium Minerals Mine, Mozambique. Retrieved from https://www.mining-technology.com/projects/moma-titanium-minerals-mine-mozambique/
- Morin-Ka, S., González-Álvarez, I., Duuring, P., & Gonzalez, C. M. (2025). Understanding rare earth elements in heavy mineral sand systems. Journal of Geochemical Exploration, 274, 107705. https://doi.org/10.1016/j.gexplo.2025.107705
- Subasinghe, S. H. C., Ratnayake, A. S., & Sameera, K. A. G. (2021). State-of-the-art and perspectives in the heavy mineral industry of Sri Lanka. Mineral Economics, 34(3), 427. https://doi.org/10.1007/s13563-021-00274-3
- Tamil Guardian. (2025, February 12). Former Sri Lankan soldiers hired by international corporations for land grabs in the North-East. Retrieved from https://www.tamilguardian.com/content/former-sri-lankan-soldiers-hired-international-corporations-land-grabs-north-east
- The Morning. (2025, October 1). Against wind-power plant, mineral sand mining: Mannar denizens claim hartal a success. Retrieved from https://www.themorning.lk/articles/Q9BOux4JWPgrCL0eOJWa
- Thuppahi’s Blog. (2020, June 29). Danger for Mannar: Anxiety Aroused by Australian Sand-Mining Project. Retrieved from https://thuppahis.com/2020/06/29/danger-for-mannar-anxiety-aroused-by-australian-sand-mining-project/
- Titanium Sands Ltd. (2023, May). Scoping Study Mannar Heavy Mineral Project. Retrieved from https://wcsecure.weblink.com.au/pdf/TSL/02665385.pdf
- Titanium Sands Ltd. (2023, March 15). Updated Resource Estimate – Mannar Heavy Mineral Project. Retrieved from https://www.listcorp.com/asx/tsl/titanium-sands-limited/news/updated-resource-estimate-mannar-heavy-mineral-project-2849314.html
- Titanium Sands Ltd. (n.d.). Sri Lanka Project. Retrieved from https://www.titaniumsands.com.au/company-projects/
- Titanium Sands Ltd. (n.d.). Titanium Sands: Unlocking Sri Lanka’s heavy mineral sands potential [Video]. YouTube. Retrieved from https://www.youtube.com/watch?v=mfcG1t4EbN8
- Urban Development Authority (UDA). (2030). Mannar Development Plan, 2030 (Volumes I & II). Government of Sri Lanka. Retrieved from https://www.uda.gov.lk/attachments/devplan_detailed/for_public_comments/FINAL_MANNAR_%20Volume%20I%20&%20II.pdf
- UNDP. (2023, May). Updated Landscape Strategy for Building Social, Economic, and Ecological Resilience in Mannar Coastal Landscape. Retrieved from https://www.undp.org/sites/g/files/zskgke326/files/2023-05/Mannar%20Landscape%20Strategy%2005-05-2023.pdf
- UNDP. (n.d.). Conservation and Sustainable Use of the Gulf of Mannar Biosphere Reserve’s Coastal Biodiversity. Retrieved from https://erc.undp.org/evaluation/evaluations/detail/1954
- UNESCO. (n.d.). The Gulf of Mannar Biosphere Reserve. Retrieved from https://en.unesco.org/silkroad/silk-road-themes/biosphere-reserve/gulf-mannar



