மலையகத் தமிழர் பண்பாட்டுத் தேசியம்: கோட்பாடும் நடைமுறையும் ஒரு பரிசீலனை - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
29 நிமிட வாசிப்பு

மலையகத் தமிழர் பண்பாட்டுத் தேசியம்: கோட்பாடும் நடைமுறையும் ஒரு பரிசீலனை – பகுதி 2

November 20, 2025 | Ezhuna

மலையகத்தின் கூத்துக் கலைகள்

பொன்னர் – சங்கர் 

மலையகத் தமிழர்களிடையே மட்டுமே நிகழ்த்தப்படும் ‘பொன்னர் – சங்கர்’ கூத்தின் மையக் கருவாக, குண்ணுடையான், தாமரை நாச்சி ஆகியோரின் மரணமும், அவரது குழந்தைகளான பொன்னர், சங்கர், தங்காள் ஆகியோரின் சோகமும் துயரமும் அமைந்துள்ளன. இக்கூத்து, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தோட்டங்களிலும், குறிப்பாக நோர்வூட், போற்றி, சீனக்கொல்லை, வீரட் தோட்டங்கள், மஸ்கெலிய, காட்மோர், அரசித் தோட்டம், புளூம்பில்ட், அடம்ஸ்பிக் தோட்டங்கள் ஆகிய இடங்களிலும் நிகழ்த்தப்படுகின்றது.

“பொன்னி வள நாட்டுல தான்

குமரசங்கா சங்கா

தாய் தகப்பன் தானிழந்தோம்

குமரசங்கா”

என வரும் பாடல் மூலம் தமிழகத்தின் பொன்னி வள நாட்டில் நடந்த பெருங்காப்பியமொன்றாக இக்கதை காணப்படுவதைச் சுட்டிக்காட்டலாம். இதில் வரும் பாடல் பகுதியொன்றில்,

“நாக மலை, தோக மலை,

நாலு பக்கம் வீர மலை”

என மதுரை மாநகரைச் சூழவுள்ள மலைகளின் வர்ணனையும்,

“தெற்கத்தித்தான் கிளிகள் எல்லாம்

தென்னம்பழம் தின்னக் கிளி 

வடக்கத்தித்தான் கிளிகள் எல்லாம்

வாழைப்பழம் தின்னக் கிளி”

எனத் தங்காள் புலம்புவதும் சித்திரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இங்கு தென்னம்பழம் என்பது தென்னங்காயின் பழுத்த தேங்காயைக் குறிக்கிறது.

லவகுசா

இராமாயணக் கதையைச் சார்ந்த லவகுசா புராணக் கூத்து, இராமன் – சீதை ஆகியோரின் குழந்தைகளான லவன், குசன் ஆகியோர் காட்டில் வளரும் சூழல் பற்றியது. அவர்கள் ஒருநாள் தந்தையின் குதிரையைப் பிடித்துக் கட்டி வைக்கின்றனர். அதனை மீட்க வரும் சிறிய தந்தையர்களான இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் ஆகியோரைக் கொன்றும் விடுகின்றனர். பின், தந்தையாகிய இராமனையும் கொல்ல முற்படும் வேளையில், சீதையும் முனிவரும் தலையிட்டு அதனைத் தடுப்பதாக அமையும் இக்கூத்து, மலையகத் தோட்டப் பகுதிகளில் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.

காமன் கூத்து

காமன் கூத்து மலையகத் தமிழர்களின் தேசியக் கூத்தாக எழுச்சி பெற்றுள்ளதுடன், அவர்கள் வாழும் தோட்டப் பகுதிகளில் பரவலாக நிகழ்த்தப்படுகின்றது. 600க்கும் மேற்பட்ட தோட்டங்களில் நிகழ்த்தப்படுகின்ற இக்கூத்து, ஒரு பன்முகப் பரிமாணம் கொண்ட சமூகக் கலையாக, மக்கட் கலையாக, மற்றும் சமுதாய அரங்காகவே காணப்படுகிறது. இது சடங்கு அரங்கு, ஊர்வல அரங்கு, மேடை நாடகம், தெருக்கூத்து போன்ற பல்வேறு வடிவங்களைக் கொண்ட ஒரு சமுதாய அரங்காக இருக்கிறது. மலையகப் பாட்டாளிகளின் பன்முகக் கூறுகளையும், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவரும் கூட்டாகப் பங்கேற்பதையும் உள்ளடக்கியிருக்கும் இக்கூத்து, மலையகச் சமூக வாழ்வியலைக் கட்டமைப்பதில் பிரதான பங்கு வகிக்கிறது.

மலையக இளைய தலைமுறையினரிடையே காமன் கூத்து மிகுந்த ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இதற்குச் சான்றாக, 2024 ஆம் ஆண்டு பொகவந்தலாவ, பெத்தராசி தோட்டத்தில், ஊடகத்துறை மாணவர் ஒருவரான சதாசிவம் சஞ்ஜீவகுமார் என்பவரால் நாற்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் இக்கூத்து மீண்டும் நிகழ்த்தப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். மேலும், சுண்டுலாகந்தையில் கூட முப்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் காமன்கூத்து நிகழ்த்தப்பட்டிருப்பது, இளையோர் மத்தியில் இக்கலையின் மறுமலர்ச்சியைக் காட்டுகிறது.

காலி என்கலவத்தை, மத்துகம இங்கிரிய, தெரனியாகலை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, மாத்தளை மாவட்டத் தோட்டங்களில் இக்கூத்து சிறப்பான பண்பாட்டு விழாவாகக் காணப்படுகிறது.

அருச்சுனன் தபசு

மலையகத் தமிழர் பண்பாட்டில் உள்ள கூத்துக் கலைகளின் மணிமகுடமாக அருச்சுனன் தபசு சிறப்பிடம் பெறுகிறது. மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்ட இக்கூத்து, சூதாட்டத்தில் நாடு நகரங்களை இழந்த தருமன், தன் சகோதரர்களான நகுலன், சகாதேவன், வீமன், அருச்சுனன் ஆகியோருடன் 12 ஆண்டுகள் காடேகுவதுடன் தொடங்குகிறது. பின்னர், அருச்சுனன் தவமிருந்து பாசுபத ஆயுதத்தைப் பெற்று, தமது நாடு நகரங்களை மீட்கும் நிகழ்வு இக்கூத்தின் முக்கியக் கருவாகும். இக்கூத்தில் வனம் கடத்தல் காட்சிகள், சண்டை, காதல் போன்ற பல்வேறு அம்சங்கள் சித்திரிக்கப்படுகின்றன. குறிப்பாக, தபசு மரமேறல் ஒரு சிறப்பான காட்சியாக அமைகிறது.

“எந்தப் பக்கம் பார்த்தாலும்

மூங்கில் வனச் சோலை“

தருமர் தம்பி அருச்சுனனும் பாசுபதம் போறேன்.

பச்சி பறக்க வேணும்

ஹரி ஹரி ஹரிகர இராமா”

மலையகத் தமிழர் பண்பாட்டில் இராம நாம கீர்த்தனை (டயகம தோட்டம்), பவளக்கொடி, காத்தவராயன் கூத்து, குறவஞ்சிக் கூத்து என்பனவும் நிகழ்த்தப்படுகின்றன.

மலையகத் தேசிய அரங்கு

மலையகத் தமிழரின் பாரம்பரிய அரங்குகளை விடுத்து, அவர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் அரங்க வடிவங்களும் காணப்படுகின்றன. இதில் கோ. நடேசய்யரின் தோட்டத் தொழிலாளரின் அந்தரப் பிழைப்பு நாடகம் முதல், மாத்தளை கார்த்திகேசுவின் கள்ளத்தோணி, காலன் கூத்து, சகதிப் புழுக்கள், செ. லீலாவதியின் திக்க காட்ட (கசந்த தேயிலை), லயத்துக் கோழிகள், ரதி – கூத்து, கிருஸ்டிநேசகுமாரின் விம்பம், பொன் பிரபாகரனின் நெருப்பு, வெல்வதற்கோர் பெண்ணுலகம், சின்னக் கவுண்டர், தி. சிவநேசனின் எலிப்பொறியில் பூனை, நிசாமின் மேட்டுநிலக் கண்ணீர், யட்டியாந்தோட்டை கருணாகரன், காளிதாஸ் ஆகியோரின் நாடகங்கள், மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகளான கலைமாமணி ராதிகா, கலைமாமணி பிரசாந்தி ஆகியோரின் நாடகங்கள், லிந்துலை சுகுமார், சு. பிரேம்குமார், கொட்டகலை செந்தூரன், ஹப்புத்தளை புனிதவதி, ஜீவராஜா ஆகியோரின் நாடகங்கள் வரையான அரங்க முயற்சிகள் மலையகத் தேசிய நாடக இயக்கத்தின் சிறப்பான குறிகாட்டிகளாகும்.

மலையகத் தமிழர் நாட்டுப்புற நடனங்கள்

மலையகத் தமிழரிடையே பயிலப்பட்டு வரும் நாட்டுப்புற நடனங்களாக கும்மியாட்டம், கோலாட்டம், மாரடிப்பு, கரகாட்டம், காவடியாட்டம், இலாவணியாட்டம், பேயாட்டம், தீப்பந்த ஆட்டம், சுருளி வித்தை ஆகியனவும்; ஓரடி, ஈரடி, மூன்றடி, நான்கடி, எட்டடி, வட்டம், அரைவட்டம், முக்கோணம், எண்கோணம் போன்ற வடிவங்களைக் கொண்ட ஆடல் வகைகளும் காணப்படுகின்றன. மேலும், குரங்காட்டம், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் நடனம், சாமியாட்டம், மருதை வீரன் ஆட்டம், வீரபத்திரன் ஆட்டம், காளி நடனம், தேர் வசந்தன் நடனம், காட்டேறி ஆட்டம், ஆணிப்பலகை மேல் ஆடல், அறுதபடி கம்பத்தில் ஆடல், தீவட்ட ஆட்டம், சுருளி ஆட்டம், வேலாட்டம், பரதன் ஆட்டம், அருச்சுனன் ஆட்டம், தேவியாட்டம் எனப் பல்வேறுபட்ட ஆடற்கூறுகளும் மலையகத் தமிழரின் சிறப்பான நடனங்களாக உள்ளன. 

அரங்கப் பாடல்கள்

இலங்கை மலையகத் தமிழர்களின் அரங்கச் செயற்பாடுகளில் அவர்களின் சமூக வியாபகத் தன்மை, வாழ்வியல் துன்பங்கள், அவலங்கள், சவால்கள், போராட்டங்கள், ஏக்கங்கள் என்பனவும் வெளிப்படுகின்றன. இவை மலையகத் தமிழரின் பண்பாட்டுத் தேசியத்தின் தனித்தன்மையையும், தேசியத் தன்னாட்சிக்கான தேவையையும் முன்னிறுத்துகின்றன. இவ்வரங்கப் படைப்புகளுக்கு தமிழர் வரலாறு, பண்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய அரங்கியல் கூறுகளும், நவீன சமூகத்தின் சமூக அசைவுகளும் உந்துசக்தியாக இருக்கின்றன. இருப்பினும், இவை கடந்த 200 ஆண்டுகளாக முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை; குறிப்பிட்ட சில அரங்கப் பிரதிகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான அரங்க முயற்சிகள் ஆவணப்படுத்தப்படாமல் போயிருக்கின்றன.

“மண்ணின் நிறத்தவரோ – அவர்

மானின் நிறத்தவரோ – அவர்

பொன்னின் நிறத்தவரோ – அவர்

பூமி நிறத்தவரோ – அவர்”

(பொன். பிரபாகரன் – வெல்வதற்கே பெண்ணுலகம்)

“தலை உடைபட்டு

அறுபட்டு, நெரிபட்டுப் போனது – அங்கு தேசிங்கு கைவாள் தீப்பொறி

கக்கியே பறக்கையிலே…..

சிப்பாய் முகமது சிங்கம்

எங்கும் செந்தீ வருகையிலே”

(பொன். பிரபாகரன்,  2023, அமரர் வேலு. தங்கவேல் மாஸ்டர், வாழ்வும் பணியும், தேசிங்கு ராஜன் கதைப் பாடல், பக்.23)

“மலையகத் தோழா

மானம் இங்கே

போவதைப் பாராய்

மாண்புள்ள எம்மை

மறந்திட்டாரே

மாறுதன்றோ”

(பொன். பிரபாகரன், 2023, அமரர் வேலு. தங்கவேல் மாஸ்டர், வாழ்வும் பணியும், பக். 27)

“தினக்கு தினக்கு தினக்கு தின்னா…

அரசி மூட்டையில ஓட்டை

அய்யா போடும் சட்டையிலும் ஓட்டை

அலுமாரி லாச்சியிலும் ஓட்டை

அம்மா அட்டாளி மூலையிலும் ஓட்டை”

(தியாகராஜா சிவநேசன், எலிப் பொறியில் பூனை, பக். 3)

“மட்டக் கொழுந்துக் காரி

மடமடத்த சேலைக்காரி.. ஒன்

மடத்தனத்த விடுப்புட்டு

குடித்தனத்தப் பாருங்கடி”

(மா. ரூபவதன், வாழப் பிறந்தோர்க்கு)

“இந்தக் கூடைகள்…

இந்தக் கூடைகள்…

எப்போதும் எம் வரலாற்றையும்

எம் பண்பாட்டையும்

மட்டுமே பேசுகின்றன”

(பொன். பிரபாகரன், வெல்வதற்கே பெண்ணுலகம்)

போன்ற அரங்கப் பாடல்கள் மலையகத் தமிழரின் அரங்கியல் பண்பாட்டில் தேசிய தன்மையைப் பிரதிபலிக்கின்றன.

நாட்டுப்புறப் பாடல்கள்

மலையகத் தமிழரின் நாட்டுப்புறப் பாடல்களாக கல்யாணப் பாடல், வளைகாப்புப் பாடல், தாலாட்டுப் பாடல், வாழ்த்துப் பாடல், குலவைப் பாடல், ஒப்பாரிப் பாடல், தெம்மாங்குப் பாடல், கொலைச் சிந்து, மாரியம்மன் தாலாட்டு, திருக்கல்யாணம், கூத்துப் பாடல், உடுக்கடிப் பாடல், தொழிற் பாடல், விளையாட்டுப் பாடல், காதல் பாடல், மாரடிப்புப் பாடல், பபூன் பாடல், குறவன் குறத்திப் பாடல்கள் எனப் பலவகைப் பாடல்கள் பயிலப்படுகின்றன.

மலையக நாடகங்களில், பாரம்பரிய மற்றும் சமூக நாடகங்களுக்கு இடையே, மக்களை கிளுகிளுப்பூட்டுவதற்காகவும், மகிழ்ச்சி ஊட்டுவதற்காகவும், சிந்திக்கத் தூண்டுவதற்காகவும் பபூன் பாடல்கள் பாடப்படுகின்றன. இதைப் பாடும் கதாபாத்திரங்கள் கோமாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்; இவர்களைப் பபூன் என்றும் கூறும் மரபு காணப்படுகிறது. இந்தக் கோமாளிகள் (பபூன்கள்), நாடகத்தின் இடையே வெளிவந்து, பாடல்களைப் பாடி, நாட்டுப்புறக் கதைகளையும் கூறி மக்களை மகிழ்விக்கிறார்கள்.

“ஹாய் பள பள பள பள பள பள பள பள பள பபூன் வந்தேனே சொக்க பபூன் வந்தேனே வந்தனம் சொல்லித் தந்தேனே தக்கடா தக்கா தக்கடா தக்கா”

“கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற சோக்கிலே

நான் குட்டியைத் தான் பார்ப்பனா இந்த ரொட்டிய தான் தின்பனா

கும்குன்னா கும்கு தான்”

“பந்தலிலே பாவக்கா பந்தலிலே பாவக்கா போகையில பாத்துக்கலாம் போகையில பாத்துக்கலாம்”

“ஐயா கப்பலேறிக் கூட்டி வந்த கங்காணியாரே தலைமைக் கங்காணியாரே 

உங்க கப்பலும் தான் கவிழ்ந்து போச்சே கங்காணியாரே 

உங்க கப்பலும் தான் கவிழ்ந்து போச்சே”

இந்தப் பபூன்கள் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் அவர்களின் பல பாடல்களை நாடகங்களின் இடையே பாடிக்காட்டுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக பெரிய எலிப்படைத் தோட்டம் பணியக் கணக்கிலே வாழ்ந்த, கோமாளி என்று அழைக்கப்படும் சின்னதம்பி என்பவர்,

“சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான் 

அந்த சின்னப் புள்ள காதுல ஒரு குணுக்குத் தான்

சின்ன ஆறாம் மீனை ஆத்துல

அகிலங்கன்டா சேத்துல

சின்னச் சட்டியில் போட்டாலும்

ஒரு சிலுக்குத் தாளம் போடுது

பெரிய சட்டியில் போட்டாலும்

ஒரு குணுக்குத் தாளம் போடுது” 

என்று பாடி வருவது என்றும் மறக்க முடியாத நிகழ்வாக மனதில் பதிந்து இருப்பதை இங்கு பதிவு செய்யலாம். மேலும், 

“கல்யாணமாம் கல்யாணமாம் 

கன்னியவற்கு கல்யாணமாம் 

கல்யாணமாம் கல்யாணமாம்

காளையிற்கே கல்யாணமாம்

எனக் கல்யாணப் பாடல்களும்,

“கண்ணுறங்கு கண்ணுறங்கு

கண்மணியே கண்ணுறங்கு

மாமன் அடிச்சானோ

மாலையிடும் கையாலே”

என்றவாறான தாலாட்டுப் பாடல்களும்,

“பொலி பொலி தாயே

பொலி பொலி தம்பிரானே”

என்றவாறான கொழுந்தெடுக்கும் பெண்கள் பாடல்களும்,

“தண்டுகலா தோட்டத்திலே

தண்டு முண்டு கணக்குத்தான்

துண்டு துண்டா வெட்டிப்புட்டாங்க”

எனக் கொலைச் சிந்துப் பாடல்களும்,

“தோட்டம் துறந்தல்லவோ – மாமா

தொண்ணூறு இலட்சம் பூவெடுத்தன்”

எனப் பொன்னர் – சங்கர் கூத்துப் பாடல்களும்,

“தோட்டம் துறந்தல்லவோ – மாரி 

தொண்ணூறு இலட்சம் பூவெடுத்தன்”

என மாரியம்மன் தாலாட்டுப் பாடல்களும்,

“கண்ணா கண்ணாம் பூச்சியோ

காட்டுத் தலைச்சியோ

எத்தனை முட்டை இட்டாய்”

எனக் கண்ணாம்பூச்சி விளையாட்டுப் பாடலும்,

“சங்கிலி புங்கிலி கதவத் திற

நாமாட்டேன் வேங்கைப் புலி

பசுமாட்டக் கண்டிங்களா?”

என விளையாட்டுப் பாடல்களும்,

“ஓடற நரியில ஒரு நரி குள்ள நரி”

எனும் உச்சரிப்பை வலியுறுத்தும் பாடல்களும்,

“ஊசி மணி, பாசி மணி

ஊசி வாங்கலையோ

அம்மாமாரே ஊசி வாங்கலையோ”

என்ற குறத்திப் பாடல்களும்,

“வனமாய் வனம் கடந்து அடுத்த வனம் தானடைந்தேன்”

என வனம் கடத்தல் பாடல்களும்,

“வண்ணான் வந்தேனே

வண்ணான் வந்தேனே”

என வண்ணார் பாடல்களும்,

“என்னப் பெத்த ராசாவே

என்னவுட்டு போயிட்டியே”

என ஒப்பாரிப் பாடல்களும்,

“தத்தக்கா புத்தக்கா

தைலம் சோறு”

என கிச்சி மூட்டும் பாடல்களும்,

“அந்தி முனி சந்தி முனி

ஆவாசம் காத்த முனி”

என்ற உடுக்கடி பூசாரிப் பாடல்களும்,

“தேங்காய் உடைக்க தண்ணீர் சிதறவே

தெப்பக்குளம் ரெண்டும் தத்தளிக்க 

சின்னக் குளத்திலே பாம்பு புடிச்சு சிங்கார

தோப்புல வேட்டையாட சின்னத்துரை வீட்டுக்கு வந்தாராம்”

எனக் கும்மிப் பாடல்களும்,

“தீப ராம தீம ராக்கு பெட்டி

ஐஸ்கிறீம் கொத்தமல்லி

ஐந்தாம் நம்பர் சோடா

குடிச்சி பாத்துட்டுப் போடா”

போன்ற வாய்மொழிப் பாடல்களும் மலையக இலக்கியத்தின் கூறுகளாகக் காணப்படுகின்றன.

இலங்கை மலையகத் தமிழர் பண்பாட்டில் வீதிப் பாடல்கள் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. மலையகத் தமிழரின் வாழ்வியலின் ஆரம்பக் கட்டங்களில், தொழிற்சங்க இயக்கம், பத்திரிகை இயக்கம், நவீன நாடக இயக்கம் ஆகியவற்றின் ஆரம்பக் கர்த்தாக்களான தேசபக்தன் கோ. நடேசய்யர், மீனாட்சியம்மாள், எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை, கா.சி ரெங்கநாதன், சிறி மகாலிங்கம் போன்றவர்கள் இந்த வீதிப் பாடல்களைத் தொகுத்திருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. கோவிந்தசாமி, பெரியசாமி, ஜில் ஆகியோரும் இந்த மலையகப் பகுதிகளில் வீதிப் பாடல்களைப் பாடிய மிக முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். இப் பாடல்களில், கொலைச் சிந்துப் பாடல்கள் சிறு பிரசுரங்களாக எழுதப்பட்டு, வீதி வீதியாக விற்பனை செய்யப்பட்டதோடு, அந்தப் பாடல்களைத் தோட்டம் தோட்டமாகச் சென்று பாடிக்காட்டிய ஒரு காலமும் மலையகத்தில் இருந்தது. 60களுக்கு முற்பட்ட காலத்தில்,

“1959 ஆம் ஆண்டிலேயே ஆனதொரு

பத்தாம் மாதம் அவனிதனில் நடந்ததொரு 

கொலை 23 ஆம் தேதி

நடந்த கொலை செய்தி பார்ப்போம்

லட்சுமித் தோட்டம்

சிறந்த தொழிலாளர்களாம்

சேர்ந்தாராம் சங்கம்

லட்சுமித் தோட்டத்திலே பட்சமுடன் சங்கம் வந்து

பலமான கூட்டம் போட்டு பறக்குது பார்

கதர் கொடி ஜொலிக்குது பார்”

என்ற பாடல் கொலைச் சிந்தாகப் பாடப்பட்டு இருக்கின்றது.

“அடிமை நாட்டுக்குள்ளே

ஆண்டகாலம் போதுங்க

மேல்நாட்டுக்காரன் வாழுங்க

அமெரிக்காவின் சூதுங்க

சட்டம் கடுமை கொடுமை

அடிமை என்ற மடமை நமக்கு ஏதுங்க”

என்ற பாடலும் சிந்திக்கத் தூண்டுவதாக இடம்பெற்றிருக்கின்றது.

“கண்காணிச்சதும் போதுமடி

நம்ம கங்காணி போட்டது போதுமடி

சில சங்கங்களைச் செய்த போதுமடி

இங்கு தந்த தந்திட தந்திட்டா போதுமடி”

என்று பாடுகின்றனர்.

ஏ.எம்.எம்.ஏ இராமையா என்பவர் தன்னுடைய தெருப்பாடல்களில்,

“சீக்கிரமாய் பத்தாம் நம்பர் சோடி தீரணும்

சீமை மேலே பறந்து கொண்டு சேர்த்துக் கட்டணும்

பெரிய சணல் கயிற்றை அதுக்கு மேல இறுக்கிக் கட்டணும்

கைக் குழந்தை ஒன்றைத் தூக்கி இடுப்பில் வைக்கணும்

மாட்டுப் பாலை கொஞ்சம் போத்தலிலே ஊற்றிக் கொள்ளணும்”

என்று பாடுகிறார்.

மலையகத்தின் ஆரம்பகால நாடகங்களில், தோட்டத் தொழிலாளர்கள் தாமாகவே இயற்றிப் பாடிய பல்வேறுபட்ட நாடகப் பாடல்கள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். அவை மலையகத் தமிழர்களின் சிறப்பான வாழ்வியலைச் சித்திரிக்கின்ற நாடகப் பாடல்களாகக் காணப்படுகின்றன. மலையக பஜனைப் பாடல்கள் மார்கழி மாதம் தொடங்கப்பட்டு, தைப்பொங்கல் தினம் வரை ஒரு மாத காலத்திற்கு தோட்டம் தோட்டமாகவும், கிராமம் கிராமமாகவும், நகர்ப்புறங்களிலும் வருடந்தோறும் பாடப்படுகின்றன. இந்த பஜனைப் பாடல்களில் இராமனையும் இராமாயணக் கதைகளையும் முன்னிறுத்தி இயற்றப்பட்ட பல பாடல்கள் பாடப்படுகின்றன.

“தேடித் தேடி அலைய நானே ராமா

வாடி வாடி வருந்தினோமே

அண்டம் எல்லாம் ஓர் அடியாய்

மண்டலமும் இரு அடியாய்

அளந்து மேல் நின்றவனை ராமா

அரிபாதம் காண்பதுவோ ராமா”

என்றும்,

“இன்னும் எத்தனை தூரமோ பண்டாரிபுரம்

இன்னும் எத்தனை தூரமோ

அது ஏன் பண்டாரிபுரம் செல்லேன் பண்டாரி நாதா

பண்டாரி நாதா உன்னைப் பார்ப்பது காலமோ”

என்றும் பாடல்கள் பாடப்படுகின்றன. 

மலையக மக்களிடையே பல்வேறு வகையான கோலாட்டங்கள் ஆடப்படுகின்றன. 

“மானை விரட்டலையோ ராமா

மனவருத்தம் கொள்ளலையோ சீதையை 

இராவணன் சிறையும் எடுக்கலையோ 

தந்த காருண்ய வனத்தில் கொண்டு போய் விடலையோ”

கும்மிப் பாடல்கள் மற்றும் கும்மியடித்தல் என்ற குழுச் செயற்பாடு அல்லது விளையாட்டு தோட்டப் பகுதிகளில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர், சிறுமிகளால் நிகழ்த்தப்படுவதைக் காணலாம். குறிப்பாக திருவிழாக் காலங்களில் கும்மிப் பாடல்கள் பாடப்பட்டு, கோலாட்டம் ஆடப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

“தன்னன்ன வேணும் தன்னன்ன தினம் தன்னானே

தன்னன்ன நவீனம் தன்னன்ன வேணும்

தன்னன்ன வேணும் தன்னானே

மங்கையர் எல்லோரும் வாருங்கடி

நல்ல மாணிக்க கங்கை நீராடுங்கடி

சிங்கார நகையை பூட்டுங்கடி நல்ல

சிறந்த குங்குமம் தீட்டுங்கடி

மூங்கில் மனையிலே பச்சரிசி நல்ல 

முப்பது தேங்காய் வச்சி படைக்கின்ற அம்மனுக்கு 

தினம் வந்தேந்து கும்மியடிங்கடி

ஆத்துல மழையிலே தெரு பூட்டி அல்ல 

அங்கொரு பானையை நட்டு வச்சி

வாராரு நம்ம பரமசிவன்

வளைந்து கும்மியடிங்கடி”

என்ற வகையான கும்மிப் பாடல் சிறப்பாகப் பாடப்படுவதைக் காணலாம்.

இதே போல இந்தத் தோட்டப்பகுதிகளில் பாடப்படுகின்ற தொழிற் சிந்துகள் எனப்படுகின்ற வேலைத்தலப் பாடல்கள், தொழிற்சாலைகளில் பல்வேறு வகையில் தொழிலாளர்களாலும் பாடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

“திண்ணைய திண்ணையைக் கூட்டுங்கடி அந்த

தெருவுல திண்ணையக் கூட்டுங்கடி

நம்ம ஐயா கங்காணி சாய்ந்திருக்க

நல்லா திண்ணையைக் கூட்டுங்கடி”

“பாப்பாத்தி போலிருப்பாள் வெள்ளைக்காரி

அதைப் பார்த்துப்புட்டு ஓடிருவாள் புள்ளக்காரி”

“மேல் மதுரை கீழ் மதுரை தென்மதுரை

நம்ம துரை போற வாகனத்தினால் நொண்டிக்குதிரை

அட கோப்பி நல்லாக் குடிச்சிட்டாராம்

நல்ல குதிரை மேல ஏறிட்டாராம்

வம்பக்காடு சுற்றி எல்லோராரா நம்ம சின்னத்துரை”

“கிளிக் கூட்டு மேலேறி சின்னத்துரை

கிண்ணாரங்கள் பல வாசிப்பாராம் அடி

சின்னக் கிணத்துல சிங்காரத் தோப்புல 

வேட்டையாடி வம்புக்காடு சுத்தி எல்லோராரா

நம்ம சின்னத்துரை”

“வெள்ளிக் குஞ்சரம் வீசுங்கடி 

பெண்கள் வெள்ளிக் குஞ்சரம் வீசுங்கடி”

“கங்காணி காட்டுங்க கண்டாக்கையா

ரோட்டு மேல பொடியன் பலம் எடுக்க

பொல்லாப்பு நேர்ந்தது – ஐயா

பழமிருக்கு சாக்குலதான் பாத்துக்கடி

பத்திரமா வாசு மகன் கோப்பையிலே

பலம் எடுக்க நேரமாச்சு”

“கண்டித்துரை தோட்டத்திலே 

கருத்த குட்டி மொழி பெரட்டி

கிட்ட கிட்ட நிறப்புடிச்சு சிட்டா

பறக்கிறாரே கட்டதுரை பட்டியலில்

கட்டக் குட்டி இரண்டு பேரு கிட்ட

கிட்ட நிறப்பிடிச்சு சிட்டா பறக்கிறாரே” 

எனப் பாடல்கள் பல பாடப்படுவதைக் காணலாம்.

இதே போல சிறுவர் விளையாட்டுகளில் நையாண்டிப் பாடல்கள் என்றொரு வகைப் பாடல்கள் பாடப்படுகின்றன.

“தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு

அந்தத் தட்டுவாணி பெத்த புள்ள”

இலக்கியத்திலே காதல் பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றன.

“மாமன் மகளே மருதப்பில்லா சோலையே

ஏலங்கிராம்பே உன்னை என்ன சொல்லிக் கூப்பிடுவேன்

அஞ்சு மணி ஆச்சு ஐயா வர நேரமாச்சி

கொஞ்சி விளையாடாதீங்க குழுக்காரன்

கங்காணி கல்லுருக கல்லுருக

கண்டார் மனமுருக நானும் சடங்காகி

ஏறிட்டு முகம் பார்க்கலையே

மறக்குதில்ல மறந்ததினால் ஆறுதல்ல

மருதசரவிலக்கு நான் மறக்கிறது

எந்த விதம்”

தொழிலில் படுகின்ற, துன்ப துயரங்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். 

“கூடையில கொழுந்தும் இல்ல 

கொழுந்தெடுக்க சிந்தை இல்ல 

கங்காணி  சொன்ன சொல்லு

கண்ணீரைக் கொட்டுதடி 

பாலு மடிப்பிலே

பாலகனும் தொட்டியிலே 

பாலகனும் பெத்தெடுத்த 

பாண்டியரும் முள்ளு குத்த

வேலைக்கு பிந்தினேனே 

விரட்டிடுவான் கங்காணி 

தூங்கடா என் மகனே 

துயரக் கதை பாடிடுவேன்”

சமூக நிலையைச் சித்திரிக்கும் நாட்டுப்புறப் பாடல்கள், மலையகத் தமிழரின் தேசியத்தில் மிகச் சிறப்பான இடம்பெறுகின்றன.

“தோணி வருகிறது என்று துறைமுகமே காத்திருந்தேன்

தோணி கவுந்துருச்சு துறைமுகமே ஆசை இல்லை

கப்பல் வரகுதுன்னு கடற்கரையை காத்திருந்தேன்

கப்பல் கவுந்தருச்சு கடற்கரையே ஆசை இல்லை”

குலவைப்பாடல்கள், மாரியம்மன் திருவிழாவையொட்டி அல்லது தலைமையொற்றி தோட்டப்பகுதிகளில் பாடப்பட்டிருக்கின்றன.

“வெள்ளிக்கொட புடிச்சு நம்ம

முத்துமாரிக்கு விரலால பொட்டுமிட்டு

வெள்ளாள பெண்களோட நம்ம

முத்துமாரிக்கு விளையாண்டு 

வாராங்களாம் போடுங்கோ மாதர்களே

நம்ம முத்துமாரிக்கு பொன்னால

திருக்கொலவ”  

மலையகத் தமிழர்களின் திருமணப் பாடல்களில், மணமகள் கட்சியினர் பாடுவதாகச் சில பாடல்கள் அமைகின்றன.

“நீக்கிணறு வெட்டி நிழல் பார்க்கும் போது

என் அண்ணார் அழகை கண்டு பின்னால்

சரணம் என்றாள் பால் கிணறு வெட்டி

பால் கிணறு வெட்டி பால் விலை

பல் விளக்கப் போகும்போது

என் அண்ணார் அழகைக் கண்டு பின்னால்

சரணம் என்றாள்”

“கல்யாணம் என்றைக்கோ கல்யாணம்

என்று சொல்லி கடேலேறி பார்க்க 

வைத்தோம் வெள்ளிக்கிழமையிலே

வெளியே இரண்டு நாளிலே புதன்கிழமை

நாளிலேயே பொன்னான தேதியிலே

கல்யாணம் கல்யாணம் என்றைக்கோ கல்யாணம்”

மரண வீடுகளில் பாடப்படுகின்ற ஒப்பாரிப் பாடல்களில், கணவனுக்கு ஒப்பாரி பாடுகிறார்கள் (இரா. சிவலிங்கம், பக். 186).

“சுத்தி மருள் இருக்கும் – நம்ப வாசல்

சுடலைக்கல் பாவியிருக்கும் – நான்

சுத்தி மருள் ஒதுக்கி

சுடலைக் கல் மேல் நிக்க

சூதான ஏமன் வந்து  – உங்களை 

சுண்டு விரலுக்கே

சூச்ச கயிர் போட்டு

கரு வீலங் காட்டிலே – நான் 

கை வீசிப் போனால்

கரடி வழி மறிக்கும் 

கரட்டானும் முன்னே வரும்”

தந்தைக்கு ஒப்பாரி பாடுகையில்,

“வெள்ளரிக்கா பச்ச நிறம் 

என்ன பெத்த அப்பா 

வீமர் கை பூ மாலை 

வெயிலடிச்சு மங்காமே 

நீ பெத்த மக்க 

விசனம் வச்சி மங்குறோமே!”

என்றும் (மேலது, பக். 188), தாயிற்கு ஒப்பாரி பாடுகையில்,

“கூடையிலே பூவெடுத்து – என்

மாதாவே அம்மா

கோயிலுக்குப் போகையிலே

கோயிலிலே உள்ள குருக்களே பண்டாரம் – நீங்க பெத்த

குயிலாலே எங்கையம்மன்

குயிலத்தான் தேடுவனோ – அம்மா நான்

கோயில் குரு பூசை செய்வேனா”

என்றும் பாடுகின்றார்கள் (மேலது, பக். 189).

கோடாங்கிப் பாடலிலே பேயோடு உரையாடும் போது,

“அடிக்க வேணாம் உதைக்க வேணாம்

உண்மையாய் திறந்து சொல்வேன்

அந்த முறுக்கு பக்கோடா என்ன

பின் தொடர்ந்து வந்தான்” 

என்று பாடுவதையும் காணலாம். இத்தகைய நாட்டுப்புறப் பாடல்கள் மலையக மக்களின் பண்பாட்டுத் தேசியத்தின் தனித்துவமான அடையாளமாகக் காணப்படுகின்றன எனலாம்.

எழுத்து முயற்சிகள்

இலங்கை மலையகத் தமிழர்களின் வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான எழுத்து முயற்சிகள், கோப்பிக்கால ஆவணங்கள், வெளியீடுகளில் இருந்து தொடங்குகின்றன. இந்த முயற்சிகள், காலப்போக்கில் பல ஆக்க இலக்கிய வெளியீடுகளாகவும் பத்திரிகைகளாகவும் வளர்ந்துள்ளன. பத்திரிகைகள் மலையகத் தமிழரின் தேசிய அடையாளத்தை வலியுறுத்தி, அவர்களின் அன்றாட வாழ்க்கை, இலக்கிய முயற்சிகள், அரசியல், சமூகச் செயற்பாடுகள் ஆகியவற்றுக்குக் களமமைத்தன. இந்தப் படைப்புகள், மலையகச் சமூகத்தின் அவலங்கள், துயரங்கள், இன்ப – துன்பங்கள் மற்றும் அவர்களின் வாழ்வியல் கூறுகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன. இன்றைய சூழலில், இளம் படைப்பாளிகள் பலரும் மலையக வாழ்வியலைப் பல்வேறு எழுத்து வடிவங்களில் துணிச்சலுடன் பதிவு செய்து வருகின்றனர்.

பாரம்பரியக் கலை மற்றும் நாடக முயற்சிகள்

கூத்து வாத்தியார்கள், பஜனை மாஸ்டர்கள், பூசாரிகள், உடுக்கடிப்பாளர்கள், கரகாட்டக்காரர்கள் போன்ற நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இன்றும் மலையகத் தமிழரின் பண்பாட்டு அடையாளக் கூறுகளாக உள்ளனர். முதுபெரும் கலை ஆளுமைகள் கூத்துகளையும், நாட்டுப்புறப் பாடல்களையும், சமூக நாடகங்களையும் பயிற்றுவித்து, அரங்கேற்றி, வானொலிகளிலும் ஒளிபரப்புச் செய்ததன் மூலம் மலையகத்தின் தேசிய பண்பாட்டுச் சின்னமாகத் திகழ்ந்தனர். மலையக நாடக முயற்சிகளும் பல பிரதேசங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றதோடு, சமூகத்தின் முரண்பாடுகள் மற்றும் கலாசாரச் செயற்பாடுகளை வெளிப்படுத்தின. இந்த நாடக முயற்சிகள் தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இளம் மாணவர்கள் பலர் நாட்டின் பல்கலைக்கழகங்களிலும் கலைக் கல்லூரிகளிலும் இசை, நடனம், நாடகம், சித்திரம் போன்றவற்றைப் பயின்று சிறப்பான ஆளுமைகளாக வெளிவருகின்றனர். மலையகத் தமிழரின் பண்பாட்டுத் தேசியம் என்பது அவர்களின் பாரம்பரியக் கலை மற்றும் நாடகச் செயற்பாடுகளில் ஆழமாக வேர் விட்டிருப்பதை இது காட்டுகிறது.

விழாக்கள்

மலையகத் தமிழர்களின் பிரதான விழாக்களாக தைப்பூசம், தை பிறப்பு, தைப் பொங்கல் விழா, மாரியம்மன் திருவிழா, ஆடி பதினெட்டு, பங்குனி உத்தரம், தீபாவளி என்பன காணப்படுகின்றன.

தேர்த் திருவிழாக்கள்

மலையகத் தமிழர்கள் வருடந்தோறும் தாம் வாழும் தோட்டங்களிலும் நகரங்களிலும் பிரம்மாண்டமான தேர்த் திருவிழாக்களை நிகழ்த்துகின்றனர். இத்திருவிழாக்களில், மாரியம்மன் திருவிழா, காளியம்மன் திருவிழா, பங்குனி உத்தரம், மாசி மகம், தைப்பொங்கல் தேர், மருதை வீரன் திருவிழா, வைரவர் திருவிழா, மாடசாமி கோயில் திருவிழாக்கள் என்பன சிறப்பானவையாகும். இவை பல்லாயிரக்கணக்கான தோட்டப் பகுதிகளிலும், நூற்றுக்கணக்கான நகர்ப்புறப் பகுதிகளிலும் சிறப்பாக நிகழ்த்தப்படுகின்றன.

குறிப்பெடுத்தல்

மலையகத் தோட்டப் பகுதிகளில் நிகழ்த்தப்படும் மாரியம்மன் திருவிழாக்களில், கரகம் தூக்குபவர்கள், ஊர்ப் பெரியவர்களால் மறைத்து வைக்கப்படும் ஒரு பொருளையோ, கருத்தையோ, எண்ணக்கருவையோ சாமியாடிக் கூறல் அல்லது எடுத்தல் வேண்டும்; குறிப்பாக அம்மனின் தாலி, வேல், தேசிக்காய், கருகமணி, உடுக்கு, நட்சத்திரங்கள், கோள்கள், குலதெய்வங்கள் என்பவற்றின் பெயர்கள் எழுதிவைக்கப்படுகின்றன அல்லது கூட்டாகக் குறிக்கப்படுகின்றன. இது இலங்கையின் மலையகத் தமிழரிடையே நிலவி வரும் மிக முக்கியமானதொரு பண்பாட்டு அடையாளக் கூறு ஆகும்.

கரகம் பாலித்தல்

இலங்கை மலையகத் தோட்டங்களில் மாரியம்மன் வழிபாடு ஒரு பெருந்தெய்வ வழிபாடாகக் காணப்படுகிறது. இம்மாரியம்மன் திருவிழா மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள், ஒன்பது நாள், பதினொரு நாள் என்ற அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. அதற்காக ஒரு வெள்ளிக்கிழமை நள்ளிரவில், ஆற்றங்கரையில் உள்ள கெங்கையம்மன் ஆலயமொன்றில், செம்பு, தேங்காய், மாலை, பூக்கள், பட்டுச் சால்வைகள், சந்தனம், குங்குமம் என்பனவற்றைச் சேர்த்து கட்டப்படுகின்ற கரகம், மேடையில் வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு, குறிப்பெடுப்போர் (சாமியாடிகள்) தலையில் வைக்கப்படுகிறது. இச்சடங்கு மலையகத் தமிழரிடையே சிறப்பானதொரு பண்பாட்டுச் சடங்காகும்.

விரதங்கள்

தைப்பூசம், பங்குனி உத்தரம், மாசி மகம், சதுர்த்தி, சித்திராப் பௌர்ணமி, ஆடிப் பூரம், அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், கந்தசஷ்டி, பிரதோசம் உள்ளிட்ட தினங்களை விரதங்களாக அனுஷ்டிக்கும் வழக்கம் மலையகத் தமிழ் மக்களிடையே காணப்படுகின்றது.

மலையகத் தமிழர்களின் பண்பாட்டுத் தேசியமும் பண்பாட்டு அரசியல் தன்னாட்சியும்

மலையகத் தமிழர்கள், தமது தேசத்தின் மக்களான தோட்டத் தொழிலாளர்கள், உதிரிப் பாட்டாளிகள், மத்தியத் தர வர்க்கத்தினர், மேல் மத்தியத் தர வர்க்கத்தினர், ஆண்கள், பெண்கள், மாணவர்கள், கலை – பண்பாட்டு ஆளுமைகள், இசைக் கலைஞர்கள், பாட்டுக்காரர்கள், வாத்தியக்காரர்கள், வண்ணான், வண்ணாத்தி, கோவில் பூசாரிகள், மேள வாத்தியக்காரர்கள், தப்பிசைக் கலைஞர்கள் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட தமிழ்மொழி சார்புடைய சிந்தனை, வரலாறு, பண்பாடு, மொழிவழித் தேசிய அடையாளம், பெருந்தோட்ட உற்பத்திச் சக்திகள், உறவுகள், பொருண்மிய ஓர்மைத் தன்மை, கூட்டு உளவியல், சமூக இயங்கியல் ஆகியவற்றின் அடிப்படையிலும்; மதம், சமூகச் சடங்குகள், கலை – இலக்கியக் கோலங்கள், கடவுள்கள், நம்பிக்கைகள், தொன்மங்கள் மற்றும் மரபுரிமைகளின் அடிப்படையிலும் ஒரு பண்பாட்டுத் தேசியத்தின் மக்களாவார்கள். இப்பண்பாட்டு தேசியக் கூறுகளே, ஓர் அந்நிய நாட்டில் தனித்துவமான அரசியல் சமூகமாக, பண்பாட்டுக் குழுமமாக, கூட்டு வாழ்க்கைப் பெறுமானமுடைய மக்களினமாக இவர்களை அடையாளப்படுத்தியுள்ளது; எனவே, மலையகத் தமிழர்கள ஒரு பண்பாட்டுத் தேசத்தின் மக்களாக வரையறுத்து அங்கீகரிக்க வேண்டும்.

உசாத்துணை மூலங்கள்

  1. வி.ஐ. லெனின் தொகுப்பு நூல்கள் – 7, 11
  2. எஸ்.வி. இராஜதுரை, வ. கீதா, 1991, அந்தோனியா கிராம்சி: வாழ்வும் சிந்தனையும்
  3. கூ.கி.வா தியாங்கோ, 2000, சிலுவையில் தொங்கும் சாத்தான்
  4. அமில்கார் கப்ரால், 2001, வேர்களை நோக்கி
  5. என். சண்முகலிங்கன், 2000, சமூக மாற்றத்தில் பண்பாடு
  6. கூ.கி.வா தியாங்கோ, 2004, அடையாள மீட்பு
  7. யமுனா இராஜேந்திரன், 2000, மலைகளை தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை
  8. கா. அப்பாத்துரை, 2001, தென்னாட்டுப் போர்க்களங்கள்
  9. ஆ.இரா. வெங்கடாசலபதி, 1990, அந்த காலத்தில் காப்பி இல்லை
  10. சிந்துவெளி ஆய்வறிக்கை
  11. சிவகளை ஆய்வறிக்கை, தமிழ் நாடு தொல்லியல் துறை
  12. ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை, தமிழ் நாடு தொல்லியல் துறை
  13. S. இராமகிருஸ்ணன் தொல்லியல் ஆய்வுகள்
  14. R. பாலகிருஸ்ணன், நேர்காணல், தமிழ்நாடு தொல்லியல் துறை
  15. பக்தவத்சலபாரதி, 2014, பண்பாட்டு மானிடவியல்
  16. பக்தவத்சலபாரதி, 2015, தமிழர் மானிடவியல்
  17. பக்தவத்சலபாரதி, 2017, மானிடவியல் கோட்பாடுகள்
  18. கி. நவநாயகமூர்த்தி, 1996, பண்டைத் தமிழ்ப் பண்பாட்டுக் கோலங்கள்
  19. கார்த்திகேசு சிவத்தம்பி, 1993, இலங்கை மலையகத் தமிழர் பண்பாடும் கருத்து நிலையும்
  20. கார்த்திகேசு சிவத்தம்பி, 2004, பண்டைத் தமிழர் சமூகத்தில் நாடகம்
  21. எஸ். ஏ. டாங்கே, 2017, பண்டைக்கால இந்தியா
  22. Christine Wilson, 2010, Bitter Berry
  23. R. சடகோபன், 2010, கசந்த கோப்பி
  24. ராஜ் கௌதமன், 2018, பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்
  25. சிலம்பு செல்வராசு, 2009, பண்டைத் தமிழர் திருமண வாழ்க்கை
  26. சோ. பழனி, 2019, தமிழர் நாடக ஆற்றுகை கூறுகளின் வரலாறு (பக். 212–223)
  27. தொ. பரமசிவன், 2023, அறியப்படாத தமிழகம்
  28. தொ. பரமசிவன், 2020, தெய்வங்களும் சமூக மரபுகளும்
  29. பா. ராகவன், 2014, உணவின் வரலாறு
  30. முகில், 2024, உணவு சரித்திரம்
  31. டாக்டர் ஜி. ஜான், சாமுவேல், 2008, திராவிட மொழிகளின் ஒப்பாய்வு
  32. அ.அ. மணவாளன், 2005. இராமகாதையும் இராமாயணங்களும்
  33. இரா. வெங்கடேசன், 2018, சொல், பண்பாட்டு அடையாளம்
  34. கே.ஏ. குணசேகரன், 2002, நாட்டுப்புறக் கதைகளும் நாடக ஆக்கமும்
  35. ஆர். ருக்மணி, 1998, தமிழ் நாட்டில் பஞ்சாயத்து அமைப்புகள்
  36. A.L. பசாம், 2005, வியத்தகு இந்தியா
  37. எஸ்.வி. இராஜதுரை, 2000, அயர்லாந்தின் போராட்டம்: தேசியமும் சோசலிசமும்
  38. இ.எம்.எஸ்., 2009, இந்திய வரலாறு
  39. சிராக், 1984, எங்கெங்கும் எழில்
  40. திருநாவுக்கரசு, 1995, குருகுலமகள்
  41. திருநாவுக்கரசு, 1996, கபிலவஸ்து
  42. சு. முரளிதரன், 2002, வரவும் வாழ்வும் மலையக நாட்டாரியல் சிந்தனைகள்
  43. சு. முரளிதரன், 2001, மலையக இலக்கியத் தளங்கள்
  44. மு. சிவலிங்கம், 1992, மலையக தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்
  45. வ. வாமதேவன், 2014, மலையகச் சமூகம்… அபிவிருத்தியை நோக்கி
  46. வ. வாமதேவன், 2023, மலையகத் தோட்ட தொழிலாளர் நிலவுரிமை
  47. K. M. D. Silva, 1981, A History of Sri Lanka (pp. 239–260)
  48. S. Nadesan, A History of Malaiyaga Tamil People in Sri Lanka
  49. C. V. வேலுப்பிள்ளை, 2023, மாமன் மகளே – மலைநாட்டு மக்கள் பாடல்கள்
  50. A. T. லோரன்ஸ், 2006, மலையக சமகால அரசியல் தீர்வு
  51. மாத்தளை ரோகிணி, மலையகத் தியாகிகள்
  52. V. T. தர்மலிங்கம், 2013, மலையகம் எழுகிறது
  53. அந்தனி ஜீவா, 2002, கண்டி மாவட்ட தமிழர்களின் வரலாற்று பதிவுகள்
  54. சாரல் நாடன், 1988, தேசபக்தன் கோ. நடேசய்யர்
  55. பொ. முத்துலிங்கம், 1996, எழுதாத வரலாறு
  56. சாரல் நாடன், 1988, பத்திரிகையாளர் நடேசய்யர்
  57. வரதன் கிருஸ்ணா, 2021, வெந்து தணியாத பூமி
  58. க. சண்முகலிங்கம், 2011, இலங்கையின் இனவரையியலும் மானிடவியலும்
  59. M. I. சந்தனம், பெரிய கங்காணிமார் வரலாறு
  60. M. Sivalingam, 1992, Sweat (Novel)
  61. A. P. Kanapathipillai, 2023, Glimpse of Tea Buds (pg. 287)
  62. கோ. நடேசய்யர், இலங்கை தோட்ட இந்திய தொழிலாளர் அந்தரப் பிழைப்பு
  63. என். சரவணன், 2019, கள்ளத்தோணி
  64. பொன். பிரபாகரன், 2015, காமன் கூத்து
  65. விடிவு, 1995
  66. மலையகத் தமிழர் பண்பாடும் கூத்து மரபுகளும், 2009 – பொன். பிரபாகரன்
  67. அருச்சுனன் தபசு பாடல்கள், 2009 – பொன். பிரபாகரன்
  68. இலங்கை மலையகத் தமிழர் வரலாறு: அறிமுகக் குறிப்புக்கள், 2009 – பொன். பிரபாகரன்
  69. புதிய பண்பாட்டு அமைப்பு, 2023, செங்கீற்று – மலையக சமூக நாடக விழா சிறப்பிதழ்
  70. செவ்வொளி, 2016 (பக். 12–35)
  71. செவ்வொளி, 2018 (பக். 65–72)
  72. முழங்கி, 2017 (பக். 95–99)
  73. சென். மேரிஸ் மத்திய கல்லூரி, 2019, பறைபுரவிகள் (பக். 37–51)
  74. சென். மேரிஸ் மத்திய கல்லூரி நூற்றாண்டு மலர்
  75. பொன். பிரபாகரன், 2024, உப்பு ரொட்டி
  76. பொன். பிரபாகரன், 2024, மலையகத் தமிழர் அரசியலும் சமூகவியலும்
  77. சு. தவச்செல்வன், 2023, ஆடுபாலம்
  78. மாலதி பாலேந்திரன், 2006
  79. பிரமிளா பிரதீபன், 2010
  80. பிரமிளா செல்வராஜ், 2007, பீலிக்கரை
  81. வண. யோசுவா, 2023, பூச்சாண்டி
  82. பொன். பிரபாகரன், 2023, தங்கவேல் மாஸ்டர் வாழ்வும் பணியும்
  83. தியாகராஜா சிவனேசன், எலிப்பொறியில் பூனை (சிறுவர் நாடக பிரதி)
  84. மலையகத் தமிழர் மரபுரிமைகள் பாதுகாப்பு அமைப்பு, அட்டன் பிரகடனம், 2018
  85. பேரா. கரு.அழ. குணசேகரன், 2009, நாட்டுப்புற நடனங்களும் பாடல்களும்
  86. கா. அப்பாத்துரை, 2001, தென்னாட்டுப் போர்க்களங்கள்
  87. பேரா. நா. வானமாமலை, 2006, தமிழர் நாட்டுப்பாடல்கள்
  88. மா. ரூபவதன், வாழப் பிறந்தோர்க்கு (நாடகப் பிரதி)
  89. மு. சிவலிங்கம், 2007, மலையகத் தமிழர் நாட்டுப்புற பாடல்கள் (ஓர் ஆய்வு)
  90. வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் (தமிழில், பி. இராமநாதன்), 2009, தமிழரின் தோற்றமும் பரவலும்


About the Author

பொன் பிரபாகரன்

பொன்.பிரபாகரன், யாழ். பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவப் பட்டம் பெற்றவர். பட்டப்பின் டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும், ஊடகவியலில் டிப்ளோமாப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். மேலும், கொழும்பு வணிகப் பள்ளியில் செயற்றிட்ட முகாமைத்துவப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 'காமன் கூத்து'(மலையக தமிழரின் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு), 'உப்பு ரொட்டி' (கவிதைத் தொகுப்பு), 'மலையகத் தமிழரின் சமூகவியலும் அரசியலும்' என்பன இவரது நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்