'யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்: ஒரு வரலாற்றுத் தேடல்’ - ஒரு கண்ணோட்டம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
10 நிமிட வாசிப்பு

‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்: ஒரு வரலாற்றுத் தேடல்’ – ஒரு கண்ணோட்டம்

September 25, 2026
கருத்துரை: லக்சனா பாலகுமாரன்
‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்: ஒரு வரலாற்றுத் தேடல்’ – ஒரு கண்ணோட்டம்

ஈழத்து நூலியல் மற்றும் அவை தொடர்பான பதிவுகளின் முதன்மைத் தரவுப் பெட்டகமாகத் திகழும் திரு. நடராஜா செல்வராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்: ஒரு வரலாற்றுத் தேடல்’ எனும் ஆய்வு நூல், இலங்கைத் தமிழ் மக்களின் அறிவுப் பாரம்பரியத்தின் ஆழமான வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றாகும். இது எழுநா நூல் வரிசையின் 28ஆவது வெளியீடாக 231 பக்கங்களைக் கொண்டு 2025ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. ‘நூல் தேட்டம்’ தொகுதிகளின் வாயிலாக ஈழத்து நூலியல் துறைக்குத் தனியொரு மனிதராக அளப்பரிய பங்களிப்பை வழங்கிய ஆசிரியர் செல்வராஜா, இந்நூலின் வாயிலாக யாழ்ப்பாணத்தின் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நூலக வரலாற்றை அரிய வரலாற்று ஆதாரங்களுடனும் நூலகவியல் ஆய்வுக்கண்களுடனும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மக்களின் சிந்தனை மரபையும், ஏட்டுச் சுவடிகள் முதல் நவீன நூலகங்கள் வரையிலான அறிவுச் சேமிப்பு முறைகளையும் வரலாற்று ரீதியாகக் கற்றுக்கொள்வதற்கு இந்நூல் ஒரு சிறந்த திறவுகோலாக அமைவதோடு, ஈழத்துச் சூழலில் சேகரமாக்கத்தின் அவசியத்தையும் உணர்த்துகிறது.

இந்நூல் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பண்டைய, இடைக்கால மற்றும் நவீனகால நூலக வரலாற்றை 20 அத்தியாயங்களில் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் விவரிக்கிறது. ஆசிரியர் செல்வராஜா அவர்கள் யாழ்ப்பாணத்தின் நூலக வரலாற்றை நேரடியாகத் தொடங்காமல், உலகளாவிய நூலகப் பாரம்பரியத்தின் பின்னணியில் திபெத்தின் ‘சக்யா’ (Sakya) மடாலய நூலகக் கண்டுபிடிப்பை முதல் அத்தியாயத்தில் ஒப்பீட்டு ரீதியாகச் சுட்டிக்காட்டுவது, இந்நூலின் ஆய்வுப் பரப்பை விரிவுபடுத்துகிறது. கி.பி. 1073ஆம் ஆண்டில் ‘கொங்கொக் கெயல்போ’ என்ற திபெத்திய மன்னரால் ‘Sakya’ மடாலயம் கட்டப்பட்டு, 13ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய வரலாற்றுப் பின்னணியை ஆசிரியர் இங்கு பதிவு செய்கிறார். 2003ஆம் ஆண்டில் சக்யா மடாலயத்தின் பிரதான மண்டபத்தின் தடித்த சுவருக்குப் பின்னிருந்த ரகசிய அறையிலிருந்து 84,000 அரிய ஏட்டுச் சுவடிகள் தற்செயலாகக் கண்டறியப்பட்ட அரிய நிகழ்வை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். 60 மீட்டர் நீளமும் 10 மீட்டர் உயரமும் கொண்ட தடிமனான சுவர்களுக்கிடையில், மரப்பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வந்த 10,000 ஆண்டுகள் பழமையான தென்னாசிய வரலாற்றுச் செய்திகள், 18 அங்குல அகலமுடைய மரப்பலகைகளுக்கு நடுவில் வண்ண அலங்காரங்களுடன் கூடிய சுவடிகளாகக் கிடைத்ததை ஆசிரியர் விவரித்துள்ளார். பௌத்த தத்துவம், மருத்துவம், வரலாறு, ஜோதிடம், விவசாயம் போன்ற துறைகளுடன் சமஸ்கிருத மொழியிலான ஏடுகளும் இதில் அடங்கியிருந்த செய்தி, ஒரு சமூகத்தின் அறிவுச் செல்வம் எவ்வாறு சுவர்களுக்குப் பின்னால் பாதுகாக்கப்பட்டது என்பதை விளக்குகின்றது. யாழ்ப்பாணத்தின் சரஸ்வதி மகாலயம் இன்று கண்டெடுக்கப்பட்டால் அதன் சேமிப்புகளும் இத்தகைய நிலைமையிலேயே இருந்திருக்கும் எனும் ஆசிரியரின் கூற்றின் பின்னால், ஈழத்து நூலியல் மற்றும் அதன் சேகரமாக்கம் மீது ஆசிரியர் வைத்திருக்கக்கூடிய ஏக்கம் வெளிப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் மேலைத்தேய மிஷனரிகளின் வருகைக்குப் பின்னரான நூலக அமைப்புகள் பற்றிய விரிவான தகவல்களை நூலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அத்தியாயங்கள் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்கன் பாப்டிஸ்ட் மிஷன், வெஸ்லியன் மிஷன் போன்ற அமைப்புகள் தமது சமயப் பரப்புரையைத் தாண்டி மக்களின் கல்வியறிவுக்காக நூலகங்களையும் அச்சுக்கூடங்களையும் நிறுவிய வரலாற்று உண்மைகளை ஆசிரியர் சான்றுகளுடன் நிறுவுகிறார். ஆறுமுக நாவலர் அவர்கள் தனது ‘சைவ தூஷண பரிகாரம்’ எனும் நூலில், கிறித்துவ மிஷனரிகள் தமது பிள்ளைகளுக்குக் கல்வி மற்றும் சமய உணர்ச்சியை ஊட்டுவதற்காக அச்சுக்கூடங்களையும் நூலகங்களையும் நிறுவியதைச் சுட்டிக்காட்டி, சைவ மக்களும் இத்தகைய விழிப்புணர்வுடன் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திய வரலாற்றுப் பதிவை இந்நூல் குறிப்பிடுகின்றது. இதன் தொடர்ச்சியாக, 1842ஆம் ஆண்டில் நீதிமன்றக் காரியதரிசி வில்லியம் கட்டரால் தொடங்கப்பட்ட ‘யாழ்ப்பாணப் புத்தகசாலை’ பற்றியும், 1848இல் வில்லியம் குரோஃப்டன் துவைனத்தின் (William Crofton Wynam) முயற்சியால் இது அங்கத்தவர்களுக்கான நூலகமாக உருவெடுத்த வரலாற்றையும் ஆசிரியர் தருகிறார். மேலும், 1845இல் இலங்கை சிவில் சேவையில் சேர்ந்த உதவி அரச அதிகாரியான வில்லியம் துவைனம், 1869 முதல் 1896 வரை, 27 ஆண்டுகள் அரச அதிகாரியாகப் பணியாற்றி, தனது 95ஆவது வயதில் யாழ்ப்பாணத்திலேயே மறைந்ததையும், அவர் தனது வாழ்நாள் சேகரிப்புகள் அனைத்தையும் யாழ்ப்பாணத்திற்கே வழங்கிச் சென்ற கொடைப் பண்பையும் ஆசிரியர் நன்றியோடு பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் சமயப் புண்ணியத் தலங்களிலும் கிராமப்புறங்களிலும் நூலகங்கள் இயங்கிய வரலாற்றை ஆசிரியர் மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். 1915இல் ‘ஹிந்து சாதனம்’ (Hindu Organ) பத்திரிகையின் மூலம் அறியப்படும் கீரிமலை நகுலேஸ்வரப் படிப்பகம், சைவப் பெரியாராகிய கி. முத்துத்தம்பி அவர்களின் பெரு முயற்சியால் உருவாக்கப்பட்டதை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். 1915 டிசம்பர் 27 அன்று ஸ்ரீமத் சர்வானந்த அடிகளாரால் திறந்து வைக்கப்பட்ட இப்படிப்பகம், வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் கோயிலின் சூழலில் நீராடுவோரும் யாத்திரிகர்களும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்த விதம், தமிழர்களின் பண்பாட்டு வாசிப்பை உணர்த்துகிறது. அதேபோன்று, தமிழ்க் கலை மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஆய்வு நூலக அமைப்பாகத் திகழ்ந்த ‘கலாநிலையம்’ பற்றிய பதிவுகள் மிக முக்கியமானவை. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியரான கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்களால், 1930 டிசம்பர் 5 அன்று வண்ணார்பண்ணை மேற்கில் உள்ள பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோயில் வீடொன்றில் தொடங்கப்பட்ட கலாநிலையம், சு. நடேசபிள்ளை அவர்களைத் தலைவராகவும், க. நவரத்தினம் அவர்களைச் செயலாளராகவும், கா. வைரமுத்து அவர்களைப் பொறுப்பாளராகவும் கொண்டு இயங்கியது. சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், டாக்டர் அன்ரியான்ஸ் நெல், முதலியார் செ. இராசநாயகம், டாக்டர் ஐசக் ரி. தம்பையா போன்ற மாபெரும் அறிஞர்கள் இதன் சிறப்பு அங்கத்தினர்களாக இருந்த செய்தியையும், பண்டிதமணி அவர்களுக்கும் கலாநிலையத்திற்குமான தொடர்பையும் க.சி. குலரத்தினத்தின் கட்டுரையை மேற்கோள் காட்டி ஆசிரியர் விளக்குகிறார். கிராமியச் சூழலில் காரைநகர் சைவமகாசபை நூலகம் 1926இலேயே 347 தமிழ்ப் புத்தகங்களுடனும் 279 ஆங்கிலப் புத்தகங்களுடனும் இயங்கியதையும், 1915இல் மு. திசைநாயகம் தலைமையில் க. கதிரவேலு முயற்சியால் உருவாக்கப்பட்ட ‘காரை இளைஞர் கல்வித் தேர்ச்சிச் சங்கம்’ நூலக வளர்ச்சிக்கு வித்திட்டதையும் ஆசிரியர் திறம்படக் குறிப்பிட்டுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரபுக்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த ‘கிளப்’ கலாசாரத்திற்கு மாற்றாக, கிராமப்புற மக்களின் சுயசிந்தனை மற்றும் பொது அறிவு மேம்பாட்டிற்காக ‘சனசமூக நிலையங்கள்’ உருவெடுத்த வரலாற்றை ஆசிரியர் அத்தியாயம் 13இல் மிக அற்புதமாகப் பதிவு செய்கிறார். மரங்களைச் சுற்றிய குந்துகளிலும், சந்திகளிலும் ‘ஊர்த்துளவாரம்’ பேசி நேரத்தை விரயம் செய்த கிராமத்துப் பொதுமக்களை பயனுள்ள வாசிப்பை நோக்கித் திருப்புவதற்காக, தெருக்கோடி இளைப்பாறு மடங்களிலும் முச்சந்தி மடங்களிலும் ‘பத்திரிகைகள்’ வைக்கும் பழக்கம் அறிமுகமானது. இதுவே பின்னர் அல்வாய் பாரதிதாசன் படிப்பகம் (1964), அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் (1946), மற்றும் 1906இல் ‘இளைஞர் வாசிகசாலை’யாகத் தொடங்கிப் பின்னர் 1948இல் பெயர்மாற்றம் பெற்ற பருத்தித்துறை தம்பசிட்டி சதாவதானி கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனசமூக நிலையங்களாகப் பரிணமித்தன. அதேபோன்று, 1974இல் நிறுவப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தின் (பின்னாளைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) நூலக உருவாக்கத்தையும், சேர். பொன். இராமநாதனின் பரமேஸ்வராக் கல்லூரி நூலகப் பயன்பாட்டையும், கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களால் உருவாக்கப்பட்டுப் பின்னர் கைவிடப்பட்ட ‘ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவன’ நூலகச் சேகரிப்புகளையும் ஆசிரியர் மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.

ஈழத்துத் தமிழ் நூல் பதிவியலின் ஒரு முன்னோடியாகத் திகழும் திரு. நடராஜா செல்வராஜா அவர்களின் நாற்பதாண்டுகாலச் சேவையின் உச்சக்கட்டப் படைப்பாகவே இந்நூல் மிளிர்கிறது. 1981ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு, தமிழ்ச் சமூகத்தின் 95,000க்கும் மேற்பட்ட அரிய நூல்களும் ஏட்டுச் சுவடிகளும் சாம்பலாக்கப்பட்ட வரலாற்றுப் பேரழிவுக்குப் பின்னர், ‘சிதைக்கப்பட்ட அறிவு மரபை எவ்வாறு மீட்டெடுப்பது?’ என்ற பெரும் தேடலே செல்வராஜா அவர்களை ‘நூல் தேட்டம்’ எனும் பிரம்மாண்டமான நூலியல் (Bibliography) திட்டத்தை நோக்கி நகர்த்தியது. உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் அச்சிடப்பட்ட நூல்கள், சிறுவெளியீடுகள் மற்றும் அரிய சேகரங்களை முறைப்படியாகத் திரட்டி, நூலகவியல் கோட்பாடுகளுக்கு அமைவாகப் பட்டியலிட்டு, நூல் தேட்டத்தை பல தொகுதிகளாக இவர் வெளியிட்டமை ஈழத்து எழுத்துமூலக் காப்பக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். இத்தகைய பரந்த அனுபவமும், ஈழத்து நூல்கள் பற்றிய துல்லியமான தரவுச் சேகரிப்புமே இந்நூலில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மறைக்கப்பட்ட நூலக வரலாற்றை மிகத் துல்லியமான ஆதாரங்களோடு வெளிப்படுத்த இவருக்குக் கை கொடுத்துள்ளது. வெறும் நூலியல் பட்டியலாக்கத்தோடு நின்றுவிடாமல், அப்பட்டியலாக்கத்தின் பின்னணியில் உள்ள சமூக, வரலாற்று மற்றும் நிறுவன அமைப்புகளின் பங்களிப்பை ஆய்வுக்கண்களோடு அணுகும் ஒரு நூலகவியல் பேராசானின் பார்வையை இந்நூலில் காண முடிகிறது. ‘நூல் தேட்டம்’ எவ்வாறு ஈழத்துத் தமிழ் வெளியீடுகளின் முதன்மைச் சேகரப் பெட்டகமாகத் திகழ்கிறதோ, அதேபோன்று இந்நூல் அந்த வெளியீடுகளைத் தாங்கிப் பிடித்த நூலகங்களின் வரலாற்றுப் பின்னணியை விளக்கும் வரலாற்றுப் பதிவாக அமைகிறது.

யாழ்ப்பாணத்தின் அறிவுத் தாகத்தின் உச்ச அடையாளமாகத் திகழும் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் வளர்ச்சிப் பாதையில் பணியாற்றிய பல ஆளுமைகளை ஆசிரியர் இந்நூலில் பதிவு செய்துள்ளார். பிதா. லோங் அடிகள் நூலகத்தின் ஆரம்பகால நிதிச் சேகரிப்பிலும், 1950களில் நகரசபைக் கட்டடத் தீர்மானத்திற்குப் பின் புதிய கட்டட உருவாக்கத்திலும் ஆற்றிய பங்களிப்பு விரிவாகப் பேசப்படுகிறது. அத்துடன், நூலகப் பணியின் மேற்பார்வையாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய சி. சிவசுந்தரம் அவர்களின் பங்களிப்பும், 1973இல் யாழ். பொது நூலகத்தில் தரம் 1 நூலகராக நியமனம் பெற்றுப் பணியாற்றிய திருமதி பவாணி நடராஜா அவர்களின் கல்வி மற்றும் சேவைப் பின்னணியும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நூலின் மொழிநடை மிகவும் தெளிவானதாகவும் எளிமையானதாகவும், அதேவேளையில் ஆழமான வரலாற்றுச் செறிவோடும் அமைந்துள்ளது. ஆசிரியர் நடராஜா செல்வராஜா அவர்கள் தகவல்களை வெறும் பட்டியலாகத் தராமல், வரலாற்றுச் சான்றுகள், பத்திரிகைக் குறிப்புகள், பொன்விழா மலர்கள் மற்றும் நினைவுப் பதிவுகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, ஒரு கட்டுரைக்குரிய ஓட்டத்துடன் எழுதியுள்ளார். ஒவ்வொரு வரலாற்று நிகழ்வையும் அத்தியாய வாரியாகத் தொகுத்துள்ள விதம், வாசகர்களுக்கு வாசிப்புச் சலிப்பை ஏற்படுத்தாமல், யாழ்ப்பாணத்து வரலாற்றுக் காலடிகளைத் தொடரச் செய்கிறது. 

முடிவுரையாகக் கூறின், நடராஜா செல்வராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்: ஒரு வரலாற்றுத் தேடல்’ எனும் நூல் சாதாரண வரலாற்றுப் பதிவு மட்டுமன்றி, ஈழத்துத் தமிழ் அறிவு மரபின் அழியாத சாட்சியமாகவும் திகழ்கிறது. நூலகவியல் ஆய்வாளர்கள், வரலாற்று மாணவர்கள் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படித்துப் பாதுகாக்க வேண்டிய ஒரு முதன்மையான ஆய்வுப் பேழையாக இந்நூல் விளங்குகிறது.