இளங்கோவின், ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ கட்டுரைத் தொகுப்பில் 13 நூல்களைப் பற்றிய பார்வைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவையாவன: அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான ஒரு பயணம்’ (A Passage North), ‘ஒரு குறுகிய திருமணத்தின் கதை’ (The Story of a Brief Marriage), வாசுகி கணேசானந்தனின் ‘சகோதரனற்ற இரவு’ (Brotherless Night), ‘காதல் திருமணம்’ (Love Marriage), நிரோமி டீ ஸொய்சாவின் ‘தமிழ்ப் பெண்புலி’ (Tamil Tigress), ஷியாம் செல்வதுரையின் ‘பசித்த பேய்கள்’ (The Hungry Ghosts), சாரோன் பாலாவின் ‘படகு மக்கள்’ (The Boat People), ரோய் ரத்தினவேலின் ‘கைதி #1056’ (Prisoner #1056), லோகதாசன் தர்மதுரையின் நூலை (The Sadness of Geography) முன்வைத்து ‘ஓர் ஈழத்தமிழரின் புகலிட வாழ்வு’, மலரவனின் ‘போர் உலா’ (War Journey), மார்க் ஸ்டீபனின் ‘தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்’ (Tea Time with Terrorists), சங்கரி சந்திரனின் ‘சூரியக் கடவுளின் பாடல்’ (Song of the Sun God), பெஞ்சமின் டிக்ஸ், லின்ட்சே பொல்லக் ஆகிய இருவராலும் எழுதப்பட்ட ‘வன்னி’ (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict) என்கிற ‘கிராபிக்’ நாவல் ஆகியவையாகும்.
தமிழில் வெளியாகி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மலரவனின் ‘போர் உலா’வைத் தவிர, இதர பன்னிரண்டு நூல்களும் ஈழத்தைக் கதைக்களமாகக் கொண்டு ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. ஈழத்துப் படைப்புகளை மட்டுமல்லாது, பிறநாட்டுப் படைப்புகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து வாசிப்பவரும், அவற்றைக் குறித்து இணைய, அச்சு இதழ்களிலும் எழுதி வருபவருமான இளங்கோ, தமிழிலக்கிய வட்டாரத்தில் ‘டிசே தமிழன்’ என அறியப்பட்டிருக்கிறார். கதைக்களங்கள் பற்றிய பின்னணி அறிவும் அரசியல் தெளிவும் அவரிடம் இருப்பதால், தான் படிக்கும் புத்தகங்களைத் தாண்டியும் குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி அவரால் ஆழமாக விவாதிக்க முடிகிறது.
ஒருவரைத் தமிழ்த்தேசிய ஆதரவாளர் அல்லது எதிர்ப்பாளர் என எழுந்தமானமாக எளிதில் முத்திரை குத்திவிடும் சூழலில், அத்தகைய விமர்சனங்களுக்கு அஞ்சாது, பக்கச்சார்பின்றித் தனக்கு நியாயமெனத் தோன்றுபவற்றைத் தன்னறத்துடன் எழுதுபவராக இத்தொகுப்பின் வழி இளங்கோவை இனங்காண முடிகிறது.
வாசுகி கணேசானந்தனின் ‘சகோதரனற்ற இரவு’ நாவல் பற்றிய கட்டுரையில், ஈழத்தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடத் தூண்டப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களுக்கு இந்நாவலில் போதியளவு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், அனுக் அருட்பிரகாசம் தனது நாவல்களில் (A Passage North & The Story of a Brief Marriage) இடம்பெறும் கதாபாத்திரங்களினூடாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘நியாயம்’ செய்திருப்பதாக எழுதுகிறார்.
‘சகோதரனற்ற இரவு’ நாவலைப் பற்றிய கட்டுரையில் உள்ள சில பந்திகளை இங்கு மேற்கோள் காட்டலாம்.
//இலங்கையில் அடிப்படைப் பிரச்சினையாக இருப்பது சிங்களப் பேரினவாதமும், அவ்வப்போது தோன்றிக்கொண்டிருக்கும் இனவாத, மதவாத அரசியல் கட்சிகளுமே ஆகும். ஆகவேதான் இன்று யுத்தம் முடிந்தபின்னும் இலங்கையில் ஒரு நிரந்தரமான அமைதி ஏற்படாமல் இருக்கின்றது.
இந்த நாவலும் யுத்தத்திற்கான அடிப்படைக் காரணங்களுள் செல்லாது, அதன் எதிர்வினைகளையும், பின் விளைவுகளையும் முக்கியமானதாகக் காட்ட விழைகின்றது. ஒரு பேரினவாத அரசிற்கெதிராக, ஒரு கெரில்லா இயக்கமாகத் தோன்றி, பின்னர் மரபுவழி இராணுவமாக ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த புலிகளை, அரசுக்கு நிகராக வாசுகி முன்னிறுத்த விரும்புகின்றார். அதனாலே இந்தப் புனைவு 2009இல் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர் என்பதை முதன்மையாகச் சொல்கின்றது.
இன்றைக்கு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்துகொண்டிருக்கும் படுகொலைகளுக்கு நாம் ஹமாஸை இஸ்ரேல் அரசுக்கு நிகராக வைத்துப் பேசுவது நியாயமாக இருக்கமுடியுமா?// என்று கேள்வியெழுப்புகிறார் இளங்கோ.
தவிர, இந்நாவலானது 1989இலிருந்து தடாலடியாக 2009ஆம் ஆண்டிற்குச் சென்றிறங்கி விடுகிறது என்பதையும் குறிப்பிடுகிறார். அந்த இருபதாண்டு காலத்தில் எத்தனையோ அழிவுகளையும் இழிவுகளையும் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். நாவலில் அந்த இரண்டு தசாப்தங்களும் பேசப்படாதவையாக, வெறும் பக்கங்களாக இருந்திருக்க வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். முப்பதாண்டுகளுக்கு மேலாக நடந்த போரில், இருபதாண்டுகளை ஒரே பாய்ச்சலில் கடந்துசெல்வது தார்மீக மீறலாகும்.
இதே விமர்சனத்தை வாசுகி கணேசானந்தனின் ‘Love Marriage’ நாவல் மீதும் வைக்கிறார்.
//மிகச் சிக்கலாகவும், பலவீனமாகவும் போய் அழிவில் முடிந்த தமிழரின் ஆயுதப் போராட்டத்தை ‘எல்லாத் தரப்புகளும் பிழை செய்கின்றன’ என்று எளிதாக விளக்கிவிட முடியாது. தொடக்ககாலத்தில் தமிழரின் உரிமைக்காய் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு எவ்வளவு வலிமையான காரணங்கள் இருந்தனவோ, அந்தக் காரணங்கள் இன்னமும் இருக்கின்றன. இந்நாவலில், தமிழர் தரப்பின் தீர்க்கப்படாத பிரச்சினைகளின் ஆழங்களை அலசாமல், பொதுப்படையாக அனைவரும் தவறு செய்கின்றார்கள் என்று எழுதுவது, ஈழப்போராட்டம் குறித்து அவ்வளவு அறியாதவர்களுக்கு தவறான நிலைப்பாட்டை விதைக்கக்கூடியது.//
மேட்டிமைத்தனத்தின் மீதான ஒவ்வாமையை இந்நூலின் பல பக்கங்களில் அவதானிக்க முடிகிறது.
ரோய் ரத்தினவேலின் ‘கைதி எண் #1056’ என்ற தன்வரலாற்று நூலைப் பற்றி எழுதும்போது, ‘தனிமனித அனுபவங்களைப் பொதுமைப்படுத்தலாகாது’ என்ற தொனியில் எழுதியுள்ளார்.
இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குடும்ப நண்பரொருவரின் (இராணுவத்தில் முதல்நிலை அதிகாரிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர்) தலையீட்டால் விடுதலை செய்யப்பட்ட ரோய், தன்னுடைய பதினெட்டாவது வயதில் கனடாவில் வந்திறங்குகிறார். ஆரம்பத்தில் ஒரு முதலீட்டு நிறுவனத்தில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி, படிப்படியாக முன்னேறி, ஈற்றில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராக அவர் உயர்ந்ததைப் பற்றி இந்நூலின் பிற்பகுதியில் விவரித்துள்ளார்.
இளங்கோ சொல்வதைப் போல, வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் உழைப்பும் எல்லோருக்கும் நேர்கோட்டில் சந்திப்பதில்லை. ரோயின் நூலை நானும் வாசித்திருக்கிறேன். பேரினவாத அரசால் சிறைப்படுத்தப்பட்டு, சித்திரவதைகளை அனுபவித்த பதின்பருவச் சிறுவன் மீது உண்டாகும் பரிவுணர்வு, கடும் உழைப்பால் பொருளாதார ரீதியாக முன்னேறிவரும் இளைஞனிடம் ஏற்படும் மதிப்பு, பெரும் பணக்காரராக மாறி மேட்டுக்குடியின் குரலாக ஒலிக்கத் தொடங்குபவரிடம் ஏற்படுவதில்லை.
இளங்கோவின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘ஒருவரின் வெற்றிக்கதை (அல்லது அவ்வாறாக நம்புகின்ற) எல்லோரினதும் கதையாகாது; எதையும் பொதுமைப்படுத்துவது ஆபத்தானதாகவே முடியும்’.
வெற்றி பெற்றவர்களால் சொர்க்கபுரியாகச் சித்தரிக்கப்படுகின்ற கனடாதான், போரிலிருந்து தப்பித்து ‘Sun Sea’ கப்பலில் வந்திறங்கிய ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தியது. திருப்பியனுப்பப்பட்டவர்கள், தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள், எந்தவொரு ஆவணங்களும் வழங்கப்படாது அல்லலுற்று வாழ்பவர்கள் என அவர்களது வாழ்வு சீரழிந்து போயிற்று. சாரோன் பாலாவின் ‘படகு மக்கள்’ இவ்வாறு வந்திறங்கி அல்லற்படும் மக்களைப் பற்றிப் பேசுகிறது.
நம் எல்லோருக்கும் அரசியல் சார்புகள் இருப்பது உண்மைதான். அவை வெற்றிடத்திலிருந்து உருவானவை அல்ல. ஒவ்வொருவரது அரசியல் நிலைப்பாடுகளுக்கும் பின்னால் அவரவர் அனுபவங்கள், கண்ட காட்சிகள், செவிமடுத்த செய்திகள் இருக்கும். அவ்வாறு முற்சார்புகள் இல்லாத, யுத்தத்திற்கு வெளியே இருக்கும் அதேவேளை யுத்தத்தோடு தொடர்புடைய தலைமுறையொன்று இலக்கியத்தில் காலடி எடுத்துவைத்திருப்பதை ஆரோக்கியமானதாக இளங்கோ கருதுவதை இந்தக் கட்டுரைத் தொகுப்பின் பல இடங்களில் காண முடிகிறது. அனுக் அருட்பிரகாசம், சாரோன் பாலா, சங்கரி சந்திரன் ஆகியோரை நம்பிக்கை தரும் நல்வரவுகளாகக் காண்கிறார். புலம்பெயர்ந்து வாழும் இளையவர்களால் ஈழத்தைப் பற்றியும் போராட்டத்தைப் பற்றியும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் எழுதப்படும் நூல்களைப் புலம்பெயர் தமிழிலக்கியம் என்று குறிப்பிடுவது பொருத்தமற்றது. அவற்றை புலம்பெயர்ந்த தமிழர்களால் எழுதப்படும் இலக்கியங்கள் என்று நாம் கூறிக்கொள்ளலாம்.
‘தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்’ நூல் பற்றிய கட்டுரையில், அதை எழுதிய வெள்ளையினத்தைச் சேர்ந்த மார்க் ஸ்டீபனின் எழுத்தில் மேற்கத்திய மேட்டிமைவாதம் மிகுந்திருந்ததை இளங்கோ விமர்சிக்கிறார். அத்துடன், ஈழத்துக்குச் சென்று அவரால் நேர்காணல் செய்யப்பட்டவர்களுள் ஒருவர்தானும் அந்தக் காலகட்டத்தில் (2002இல் தொடங்கி 2010இல் வெளியிடப்பட்ட நூல்) களத்தில் நின்றவர்களல்லர் என்றும் எழுதுகிறார்.
முதலாவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பதின்மூன்று நூல்களைப் பற்றிய சிறந்த அறிமுகங்களாகவும், வாசிப்பினுள் அழைத்துச் செல்லும் நுழைவாயிலாகவும் இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ தொகுப்பின் கட்டுரைகள் அமைந்துள்ளன. தேடி வாசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்நூல் நல்லதோர் வழிகாட்டி.
வெளியீடு: எழுநா
பக்கங்கள்: 112
விலை: 700 இலங்கை ரூபாய்கள்