இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
67 நிமிட வாசிப்பு

இ. மயூரநாதனின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1948)

October 28, 2026
கருத்துரை: வ.ந. கிரிதரன்
இ. மயூரநாதனின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1948)

(‘டொரோண்டோ’ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621–1948)’ நூல் பற்றிய நான் ஆற்றிய உரையின் விரிவான, ஓரளவு முழுமையான கட்டுரை இது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு என்னால் முழுமையாக உரையாற்ற முடியவில்லை. அதன் ஓரளவு முழுமையான எழுத்து வடிவம் இது.)

கட்டடக்கலைஞர் மயூரநாதன், அவரது இந்த நூலின் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம்

இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், முக்கிய குறைபாடுகளில் ஒன்று வரலாற்றுத் தெளிவின்மை. இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றியும், அதன் மன்னர்களைப் பற்றியும், இருந்த இராஜதானிகள் பற்றியும் ஆதாரபூர்வமான, வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு அவர்களிடம் இல்லை என்றுதான் கூற வேண்டும். இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை, 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அதுபோல் கைலாயமாலை, வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே, இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்ட வரலாற்றைக் கூறுகின்றன. எனவே, பல கர்ணபரம்பரைக் கதைகளையும் கேள்வி ஞானத் தகவல்களையும் உள்ளடக்கியவை. இவற்றை வடிகட்டி, உண்மை எது, பொய் எது என்பதை அறிவதற்கு முதலியார் செ. இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள். அவற்றின் விளைவுகளே முதலியார் செ. இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.

மேலும், மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர் காட்டும் அசிரத்தை குறிப்பிடத்தக்கது. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன் அண்மையில் ஆதித்தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு, அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில், யாழ். ஈழநாடு பத்திரிகையில், யாழ். நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன். நான் எழுதிய பின்னரே யாழ். மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமாக இருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

அதேநேரம், சிங்களவர்களைப் பொறுத்தவரையில், தம் வரலாற்றினைக் காலத்துக்குக் காலம் ஒழுங்காகப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். தீபவம்சம், அதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட மகாவம்சம், தொடர்ந்து எழுதப்பட்ட சூளவம்சம் என அவர்கள் தம் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். இவ்விதம் இலங்கைத் தமிழரும் செய்துவந்திருந்தால், இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தற்போது எதிர்கொள்ளும் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்.

இந்நிலையில்தான் மயூரநாதனின் இந்நூலின் முக்கியத்துவம் உள்ளது. பொது யுகத்தின் பின் 1621 தொடக்கம் 1948 வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாண நகரம் எப்படியிருந்தது என்பதை ஆதாரபூர்வமாகவும் சான்றுகளுடனும் விவரிக்கும் வரலாற்று நூல் யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு. இவ்விதமான வரலாற்று நூல்கள் அதிக அளவில் எதிர்காலத்தில் வரவேண்டும். தமிழ் நகரப் பகுதிகளில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அண்மையில் யாழ். கோட்டைப் பகுதியில் நடத்தியது போல், ட்ரோன்கள், ரேடார் போன்றவற்றின் உதவியுடன் ஆய்வுகள் செய்வதன் மூலம் கடந்தகால வரலாற்றினை இன்னும் தெளிவாக அறிய முடியும். அதேபோல், வழக்கமான தொல்லியற் செயற்பாடுகளான அகழாய்வுகள் மூலமும் ஆய்வுகள் தொடர வேண்டும். இவற்றின் அடிப்படையில் மேலும் பல வரலாற்று நூல்கள் உருவாவது காலத்தின் தேவை.

பெளதிக ரீதியிலான வரலாற்று நூல்

அடுத்தது, மயூரநாதனின் இந்நூலின் இன்னுமொரு முக்கியமான சிறப்பு, இது பெளதிக ரீதியில் யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் நூல் என்பதாகும். பொதுவாக, அரச வம்சங்களின் அடிப்படையில் அமையும் வரலாற்று நூல் அல்ல இந்நூல். பெளதிக ரீதியிலான நகரமொன்றின் வளர்ச்சி வரலாறு என்னும் போது, உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ‘பெளதிக ரீதியிலானது’ என்றால் என்ன?

ஒரு நகரத்தின் கட்டமைப்பு, புவியியல், சுற்றுச்சூழல், நில அமைப்பு, நகர அமைப்பு, கட்டடக்கலை, சமூக மற்றும் அரசியல் தாக்கங்களால் ஏற்படும் நகர மாற்றங்கள், தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய விளைவுகள், மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றால் நகரில் பல்வேறு வகைகளில் ஏற்படும் வளர்ச்சி அல்லது காலப்போக்கில் நிகழும் மாற்றங்கள் பற்றிய வரலாற்றை பெளதிகக் கண்ணோட்டம் என்று பொதுவாகக் கூறலாம். குறிப்பாகக் கூறினால், மேலும் விளக்கமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. நிலப்பயன்பாடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி – நகரமொன்றின் நிலப்பயன்பாடு எவ்விதமிருந்தது, காலப்போக்கில் எவ்விதம் மாறுதலடைந்தது என்பதை வெளிப்படுத்துவது.

2. கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு – கட்டடக்கலைப் பாணிகளின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள், நுட்பங்கள் மற்றும் அழகியல் கூறுகள் நகரத்தின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகின்றன. 

3. சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் தாக்கங்கள் – ஒரு நகரத்தின் புவியியல் இருப்பிடம் (மலைகள், ஆறுகள், கடல்கள்) அதன் வளர்ச்சிப் போக்கை எவ்வாறு பாதித்தது என்பதைப் பெளதிக ரீதியிலான வரலாறு வெளிப்படுத்துகிறது.

4. சமூகப் பொருளாதாரப் பரிணாமம் – நகரமொன்றின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் எவ்விதம் நகர அமைப்பைப் பாதிக்கின்றன என்பதைப் பெளதிக ரீதியிலான வரலாறு எடுத்துரைக்கும்.

5. அழிவு மற்றும் மறுகட்டமைப்பு – போர்கள், இயற்கைச் சீற்றங்கள் அல்லது அரசியல் மாற்றங்கள் ஒரு நகரத்தின் பெளதிக அமைப்பை எவ்வாறு அழித்தன என்பதையும், பின்னர் அவை எவ்வாறு மறுகட்டமைக்கப்பட்டன என்பதையும் பெளதிக வரலாறு பதிவு செய்கிறது.

6. பழங்குடி அறிவு மற்றும் உள்ளூர் பாரம்பரியம் – ஒரு நகரத்தின் பழமையான பெளதிகக் கட்டமைப்புகள், அங்கு வாழ்ந்த மக்களின் உள்ளூர் அறிவு, சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் மற்றும் பாரம்பரியக் கட்டுமான முறைகள். 

7. எதிர்காலத் திட்டமிடல், சவால்கள் – ஒரு நகரத்தின் பெளதிக வரலாற்றைப் புரிந்துகொள்வது அதன் எதிர்காலத் திட்டமிடலுக்கு முக்கியமானது. கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், வெற்றிகரமான அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் நிலையான, மீள்திறன் மிக்க நகரங்களை உருவாக்க முடியும். புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை வகுக்கும்போது, வரலாற்றுச் சூழல், பெளதிக அம்சங்களைப் புரிந்துகொள்வது நகரத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்த உதவும்.

இவை பெளதிக ரீதியிலான நகரமொன்றின் வரலாறு வழங்கும் பயன்கள். அதேசமயம், மயூரநாதனின் இந்நூல் யாழ்ப்பாண நகரம் அந்நியர் ஆதிக்கத்தின் கீழிருந்த காலத்தின் வரலாறு. இது அந்நியரின் ஆதிக்க வரலாறு. இது தேவையா என்றும் சிலர் கேட்கக்கூடும். உண்மைதான். அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் யாழ். மண் இருந்தபோது எப்படியிருந்தது என்பதை வெளிப்படுத்தும் வரலாறுதான் இது. அதற்காக, இது அந்நியர் பெருமை பேசும் வரலாறு அல்ல. அந்நோக்கத்தில் இந்நூல் எழுதப்படவும் இல்லை. இது யாழ். மண்ணின் வரலாறு. மனிதன் ஒருவனின் வாழ்க்கையில் இன்பப் பக்கங்கள் மட்டுமல்ல, துன்பப் பக்கங்களும் நிச்சயம் இருக்கும். அம்மனிதனின் வரலாறு என்னும்போது, அது அவனது இன்பப் பக்கத்தின் வரலாறு மட்டுமல்ல; துன்பப் பக்கத்தையும் உள்ளடக்கிய வரலாறுதான். அம்மனிதன் சிறையில் இருக்கலாம், வெளியில் இருக்கலாம். அம்மனிதனின் வரலாறு, அவன் சுதந்திரமாக வெளியில் இருக்கும் காலத்தின் வரலாற்றுடன், சிறையில் இருந்த காலத்தையும் உள்ளடக்கியதுதான்.

அதுபோன்றதுதான் நகரமொன்றின் வரலாறும். புகழ்பெற்ற துறைமுகப் பட்டினமாகப் புகழுடன் விளங்கிய யாழ்ப்பாண நகரம் சில நூற்றாண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தின் கீழும் இருந்தது. அக்காலகட்டத்தின் வரலாறு யாழ். மண்ணின் வரலாறு. அங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு. அதைத்தான் மயூரநாதனின் இந்நூலும் வெளிப்படுத்துகின்றது. அதனால்தான் இந்நூலின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.

மேலும், அந்நியர் கால ஆட்சியில் ஒரு நகரத்தின் வரலாறு பதிவு செய்யப்படுவது, அது அந்நியரின் வரலாறாக இருந்தாலும், வெறும் அந்நியரின் வரலாறு மட்டுமல்ல. நம் மண்ணிலும் நம் மக்களின் வாழ்விலும் அந்நிய ஆட்சி ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களின் வரலாறும் ஆகும். அந்நிய ஆட்சி ஒரு நகரத்தின் பெளதிக, சமூக, பொருளாதார, கலாசார அமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பதிவு செய்வது, அந்தத் தாக்கத்தின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள உதவுகிறது. சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், கட்டடங்கள், பொது நிர்வாகக் கட்டமைப்புகள் போன்ற உள்கட்டமைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன, அவை யாரால், ஏன் உருவாக்கப்பட்டன, அவற்றின் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை அறிய வழிவகுக்கின்றது.

ஒரு நகரம் அந்நியர் ஆட்சிக்கு முன் எப்படி இருந்தது, அந்நியர் ஆட்சியில் எப்படி மாறியது, ஆட்சிக்குப் பின் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க அந்நியர் காலப் பதிவுகள் அவசியம். அந்நியர்கள் தங்கள் தேவைகளுக்காக நகரத்தை எவ்வாறு வடிவமைத்தார்கள், அது உள்ளூர் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவு உதவியது அல்லது தடையாக இருந்தது என்பதையும் அறிய அக்காலகட்ட வரலாறு உதவுகின்றது. அந்நியர்கள் தங்கள் நிர்வாக, அறிவியல், தொழில்நுட்ப அறிவை எவ்வாறு உள்ளூர் சூழலில் அறிமுகப்படுத்தினார்கள் என்பதை இந்த வரலாறு பதிவு செய்யும். இவை உள்ளூர் வளர்ச்சிக்கு எவ்வகையில் உதவின என்பதை அறிந்துகொள்ள இவ்வரலாறு துணைசெய்யும். அதேசமயம், இந்த அறிவையும் உள்ளூர் வளங்களையும் பயன்படுத்தி எவ்வாறு தங்கள் நலன்களுக்காகச் சுரண்டினார்கள் என்பதையும் வரலாறு அம்பலப்படுத்தக்கூடும்.

அந்நியர் ஆட்சி உள்ளூர் சமூக அமைப்பில், சமூக உறவுகளில், பொருளாதாரப் பிரிவினைகளில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பதிவு செய்வது முக்கியம். புதிய சட்டங்கள், வரி விதிப்புகள், நிர்வாக அமைப்புகள் எவ்வாறு சமூக மாற்றங்களைத் தூண்டின என்பதை அதன் மூலம் அறியலாம். இவற்றைப் பற்றி அறிந்துகொள்ள இவ்வகையான அந்நியர் காலகட்டப் பெளதிக ரீதியிலான வரலாறு உதவும். அதேசமயம், அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், கிளர்ச்சிகள், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு இயக்கங்கள் பற்றிய பதிவுகளும் அந்நியர் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அவற்றின் வீரியத்தையும் பின்னணியையும் புரிந்துகொள்ள அந்நியர் காலகட்ட வரலாறு உதவிசெய்யும்.

அந்நியர் வருகை கலாசாரக் கலப்புக்கு வழிவகுத்தது. புதிய மொழிகள், கல்வி முறைகள், மதங்கள், கலை வடிவங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டன, அவை உள்ளூர் கலாசாரத்துடன் எவ்வாறு இணங்கின அல்லது மோதின என்பதைப் பதிவு செய்வது ஒரு நகரத்தின் பன்முக கலாசாரப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. 

இவ்வகையில், காலனித்துவக் கால வரலாற்றுப் பதிவுகள் ஒரு நகரத்தின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். அந்நியர் காலப் பதிவுகள் சார்புத்தன்மை கொண்டவையாகவும், ஆதிக்கச் சக்திகளின் பார்வையை மட்டுமே பிரதிபலிப்பவையாகவும் இருக்கலாம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவற்றை விமர்சனபூர்வமாக அணுகி, உள்ளூர் மக்களின் குரல்களுடனும் பிற ஆதாரங்களுடனும் இணைத்துப் பார்க்கும்போது, அவை ஒரு நகரத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு அவசியமான, தவிர்க்க முடியாத கூறுகளாக மாறுகின்றன. இவை வெறும் அந்நியரின் வரலாறு அல்ல; நம்முடைய பன்முகத்தன்மை கொண்ட, சவால்கள் நிறைந்த வரலாற்றின் ஒரு முக்கியமான அத்தியாயம்.

கட்டடக்கலையும் நகர அமைப்பும்

நல்லூர்க் காலம்: நகர அமைப்பு, கட்டடக்கலை

நல்லூர் இராசதானியாக விளங்கிய காலகட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள், கள ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் நல்லூர் இராசதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை மயூரநாதன் முன்வைக்கின்றார். எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

“…முத்திரைச் சந்தை ஏறத்தாழ இதன் மையத்தில் அமைந்துள்ளது. எனினும், அக்கால நல்லூர் ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ, அதன் சரியான மையத்தில் முத்திரைச் சந்தை இருந்தது என்றோ எடுத்துக்கொள்ள முடியாது. ஒல்லாந்தர் கால நல்லூர் ஒழுங்கற்ற வடிவம் கொண்டதாக இருந்ததையே அக்கால நிலப்படங்கள் காட்டுகின்றன. தற்காலத்தில் முத்திரைச் சந்தையிலிருந்து நான்கு திசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்.” (யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621–1948), பக்கம் 69)

நகரம் ஒழுங்கான சதுர வடிவில் இருந்ததாகவோ, சந்தை நகரின் மையத்தில் இருந்ததாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு அவர் வருவதற்கு முன்னர், இவ்விடயத்தில் கட்டடக்கலை, நகர அமைப்பு பற்றிய வாஸ்துசாஸ்திர விதிகளையும் சிறிது கவனத்திலெடுத்திருக்கலாம். ஏனென்றால், நாம் இன்றுவரை வாஸ்துசாஸ்திரம் பார்த்துத்தான் வீடுகளைக் கட்டுகின்றோம். இவ்விதிகளையே எம் முன்னோரும் நகரங்களை அமைக்கையில் பின்பற்றினார்கள். இவ்விதிகளின்படி, தலைநகரங்களை அமைக்கும்போது நகரின் மையத்தில் கிழக்கு–மேற்காகவும் வடக்கு–தெற்காகவும் இரு பிரதான பாதைகள் இருக்க வேண்டும் எனவும், நகரம் சதுர வடிவில் (அவ்விதம் அமைக்க முடியாத சூழலில் செவ்வக வடிவில்) அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், இவ்விதம் அமைக்கப்படும் தலைநகரைச் சுற்றி மதில் அமைக்கப்பட வேண்டும் எனவும், பிரதான பாதைகள் மதில்களின் வாசல்களைச் சந்திக்குமிடங்களுக்கு அண்மையில் ஒவ்வொரு திசையிலும் ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. இவ்விதமான பண்டைய நகர அமைப்பு விதிகளை ஆராய்ந்து, தென்னிந்திய, வட இந்திய நகரங்களையும் ஆலயங்களையும் ஆராய்ந்திருக்கும் ‘Architecture of the World: India’ என்னும் நூல், இவற்றை ஆராய்வதற்குரிய சிறந்த உசாத்துணை நூல்களில் ஒன்று (Andreas Volwahsen, Henri Stierlin (Editor)). இந்நிலையில், மயூரநாதன் இவ்விடயத்தில் முடிந்த முடிவுக்கு வராமல், வாஸ்துசாஸ்திர விதிகளின்படி அவ்விதம் இருந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன; ஆனால், அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டிருக்கலாம் என மேற்படி அவரது கருத்தை வாசித்தபோது தோன்றியது.

மேலும், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் நல்லூர் கிராமமாகச் சுருங்கிவிட்டது என்பதையும் மயூரநாதன் ஆவணங்களின் மூலம் எடுத்துக்காட்டியிருக்கின்றார். ஆனால், போர்த்துக்கேயர் காலத்து ஆவணங்களை ஆராய்ந்து ‘The Kingdom of Jafanapatam 1645’ என்ற நூலை எழுதிய P. E. Peiris, ஓரிடத்தில் ‘நல்லூர் பட்டணம்’ (Nallur Patanam) என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது எதைக் காட்டுகின்றது என்றால், போர்த்துக்கேயர் காலத்தில் பட்டணமாக இருந்த நல்லூர், ஒல்லாந்தர் காலத்தில் கிராமமாகவும் சுற்றுலாத்தலமாகவும் மாறிவிட்டிருந்தது. போர்த்துக்கேயரால் நல்லூர் இராசதானியின் ஆலயங்களும் கட்டடங்களும் அழிக்கப்பட்ட நிலையில், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஒல்லாந்தரின் ஆவணங்கள் உருவான காலத்தில், நல்லூர் நகரத்தின் வீதிகள் அனைத்தும் முக்கியத்துவம் இழந்து சிதைந்திருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில், ஒல்லாந்தர் காலத்து நல்லூர் அமைப்பின் அடிப்படையில் நல்லூர் இராசதானியின் நகர அமைப்பைத் தீர்மானிப்பதில் மிகுந்த சிக்கலுண்டு. ஆனால், அதேசமயம், “தற்காலத்தில் முத்திரைச் சந்தையிலிருந்து நான்கு திசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்” என்று அவர் கூறுவது, நல்லூர் இராசதானி ஒழுங்கான வடிவத்தில் இருந்திருக்கலாம் என்ற சாத்தியத்தை உணர்த்துகின்றது.

அவர் இவ்விடயத்தில் முடிந்த முடிவாகக் கருத்தைத் தெரிவித்திருந்தாலும், அவரது சிறப்புமிக்க இந்நூல், நல்லூர் இராசதானி ஒழுங்கான வடிவில் அமைந்திருந்ததையே வெளிப்படுத்தும் தகவல்களைக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன். நல்லூர் இராசதானி சதுர வடிவில் அமைந்திருக்க வேண்டும் என்பதையும், அதன் பிரதான வீதிகளாக வடக்கு–தெற்கு, கிழக்கு–மேற்கு வீதிகள் அமைந்திருக்க வேண்டும் என்பதையுமே எனது ஆய்வு நூலில் தெரிவித்திருந்தேன். அவ்வீதிகளைப் பற்றிய மயூரநாதனின் நூலிலுள்ள தகவல்களும் அவற்றையே உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகின்றது.

மேலும், மயூரநாதனின் ஆய்வில் கிழக்கில் கோட்டை வாசல், கோட்டையடி ஆகிய காணிப்பெயர்களைக் கொண்ட பகுதிகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனது ஆய்விலும் அக்காணிப் பகுதிகளைக் குறிப்பிட்டு, அங்கு கோட்டையின் கிழக்கு வாசல் இருந்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். மேலும், யாழ்ப்பாண வைபவமாலை உள்ளிட்ட வரலாற்றுக் குறிப்புகள், சட்டநாதர் கோயிலுக்கு அருகில் வடக்கு வாசலும், வீரமாகாளியம்மன் கோயிலுக்கு அருகில் மேற்கு வாசலும் இருந்ததாகக் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். இதன் அடிப்படையில், கைலாசநாதர் கோயிலுக்கு அருகில் தெற்கு வாசல் இருந்திருக்கலாம் என்ற தர்க்கபூர்வமான முடிவுக்கு வந்தேன். ஆனால், அதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும், இதுபற்றிப் போர்த்துக்கேயரின் குறிப்புகளை மேலும் ஆராய வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன். மயூரநாதனின் இந்நூலிலும், 1560ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் படையெடுப்பின் போது அங்கு மேற்கு வாசலும், மதில் ஒன்றும் இருந்ததாக அவர்களின் குறிப்புகள் தெரிவிப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவையெல்லாம் நல்லூர் இராஜதானி மதிலால் சூழப்பட்ட இராசதானியாக இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. எனவே, நல்லூர் இராசதானி ஒரு கோட்டை நகரமாகவும் ஆலய நகரமாகவும் திகழ்ந்திருக்கக் கூடும் என்பதே எனது ஆய்வின் முதன்மை முடிவாகும். இப்பொருண்மையில் வெளியான முதல் நூலே ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆகும்.

மயூரநாதன், மேற்படி நூலில் கோட்டை வாசல்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைக் கவனத்திலெடுக்கவில்லை என்பதை உணர முடிகின்றது. கிழக்கிலுள்ள கோட்டை வாசல், கோட்டையடி, யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடும் வடக்கு வாசல், மேற்கு வாசல், போர்த்துக்கேயரின் குறிப்புகள் குறிப்பிடும் கோட்டை மதில், நகர அமைப்பு பற்றிய வாஸ்துசாஸ்திர விதிகள் போன்றவையெல்லாம் நல்லூர் இராசதானியின் நகர அமைப்பைப் பொறுத்தவரையில் கவனத்தில் எடுக்க வேண்டியவை. அவற்றையும் கவனத்திலெடுத்திருந்தால், ஒருவேளை மயூரநாதனின் நல்லூர் இராசதானியின் நகர அமைப்பின் வடிவம் பற்றிய கருத்துகளிலும் மாற்றங்கள் இருந்திருக்குமென்று கருதுகின்றேன்.

அவர் இவ்விடயத்தில் முடிந்த முடிவாகக் கருத்தைத் தெரிவித்திருந்தாலும், அவரது சிறப்புமிக்க இந்நூல், நல்லூர் இராசதானி ஒழுங்கான வடிவில் அமைந்திருந்ததையே வெளிப்படுத்தும் தகவல்களைக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

இந்நகரம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தமை தொடர்பான தகவல்களையும் மயூரநாதன் இந்நூலில் தெரியப்படுத்தியிருக்கின்றார். அவர் இப்பகுதிகள் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள மேலதிகத் தகவல்கள் முக்கியமானவை. நல்லூர் இராசதானியின் மையத்தில் முத்திரைச் சந்தை இருந்தது என்றும், அதனை மையமாகக் கொண்டு இராசதானி நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படும் வகையில் கிழக்கு–மேற்கு, வடக்கு–தெற்கு வீதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது என்றும் கூறுவதே எனது ஆய்வின் முடிவு. வேறு எவரும் ஆய்வின் மூலம் இவ்விதம் நல்லூர் இராசதானி அமைந்திருந்தது என்ற முடிவுக்கு வந்ததில்லை. மயூரநாதன் இப்பிரிவுகளைக் கவனத்திலெடுத்து, அப்பகுதிகளை ஆராய்ந்துள்ளார்.

அடுத்ததாக, ஒல்லாந்தரின் நிலப்படத்தை மட்டும் கவனத்தில்கொண்டு முடிவுக்கு வராமல், அவர் தமிழரின் நகர அமைப்பு விதிகளையும் கவனத்திலெடுத்திருக்கலாம் என்றும் தோன்றியது.

இந்நூலின் 79ஆம் பக்கத்திலுள்ள படம் 11இல், நல்லூர்க் காலத்தில் இருந்திருக்கக்கூடிய தற்கால வீதிகள் என்று குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள நிலவரைபடத்தில், எனது ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று வடக்கு–தெற்கு, கிழக்கு–மேற்காக வீதிகள் முத்திரைச் சந்தைக்கு அருகாகச் செல்வதைக் காண முடிகின்றது. இவ்விதமான வீதி அமைப்புக்கான தகவலை மயூரநாதன் எங்கிருந்து பெற்றார் என்பதைக் குறிப்பிடவில்லை என்பதால் எனக்குச் சிறிது குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

நூலின் அறிமுகக் குறிப்பு பற்றிச் சில கருத்துகள்

மேலும், நூலின் அறிமுகப் பகுதியில் மயூரநாதன் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்தைப் பற்றியும் இங்கு சுட்டிக்காட்டலாம். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

“யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டுள்ள எல்லைக்கோயில்களின் அமைவிடங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது நல்லூர் நகரம் முத்திரைச் சந்தையை மையமாகக் கொண்டதும், ஒரு கிலோ மீற்றர் ஆரை கொண்டதுமான வட்டத்துக்குள் அடங்கிவிடுவதைக் காணலாம்” (பக். 40).

யாழ்ப்பாண வைபவமாலையில் எங்கும் நல்லூர் இராசதானியின் அமைப்பு பற்றிக் குறிப்பிடப்படவில்லை. நகரின் நான்கு திசைகளிலும் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தமை பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன. முத்திரைச்சந்தை பற்றி எங்குமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. முத்திரைச்சந்தை பற்றிப் போர்த்துக்கேயரின் குறிப்பொன்றில்தான் முதன்முதலாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள நல்லூரில் ஆலயங்கள் வெவ்வேறு இடங்களில் அமைந்திருப்பதால், அவை முத்திரைச்சந்தையை மையமாகக் கொண்டு இயங்கியது என்பதையும், அவற்றில் ஓர் ஒழுங்கு இருந்தது என்பதையும் கணிக்க முடியாது. ஆனால், நல்லூர் இராசதானியாக இருந்த காலத்தில் முத்திரைச்சந்தையை மையமாகக் கொண்டு இந்நகரம் சதுர வடிவில் அமைந்திருந்தது என்பதை முதன்முறையாக என் ஆய்வு வெளிப்படுத்துகிறது. அந்நகரை ஊடறுத்துச் சென்ற இரு பிரதான வீதிகளும் கோட்டை வாசல்களைச் சென்றடைந்தன என்றும், அவ்வாசல்களுக்குப் பாதுகாப்பாகவே ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்றும் எனது ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு முடிவு செய்கிறது. எனவே, முத்திரைச்சந்தையை மையமாகக் கொண்டு நகரம் அமைந்திருந்தமை பற்றிக் கருத்துக் கூறும் எவரும் நிச்சயம் எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வைக் குறிப்பிடுவது அவசியம். மேற்படி நூலின் அறிமுகப் பகுதியில் இடம்பெற்றுள்ள மயூரநாதனின் கூற்று பின்வருமாறு இருந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்:

“யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிட்டுள்ள எல்லைக்கோயில்களின் அமைவிடங்களைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, வ.ந. கிரிதரன் ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வில் குறிப்பிடுவது போல், நல்லூர் நகரம் முத்திரைச்சந்தையை மையமாகக் கொண்டதும், ஒரு கிலோ மீற்றர் ஆரை கொண்டதுமான வட்டத்துக்குள் அடங்கிவிடுவதைக் காணலாம்.”

இவ்விதம் குறிப்பிட்டிருந்தால், அது எனது ஆய்வின் முடிவுகளைச் சுட்டிக்காட்டுவதாகவும் ஆமோதிப்பதாகவும் இருந்திருக்கும்.

அதேசமயம், அறிமுகப் பகுதியில் இவ்விதம் கூறும் மயூரநாதன், எனது நூலைக் குறிப்பிடுகையில், “முத்திரைச் சந்தை ஏறத்தாழ இதன் மையத்தில் அமைந்துள்ளது. எனினும், அக்கால நல்லூர் ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ, அதன் சரியான மையத்தில் முத்திரைச் சந்தை இருந்தது என்றோ எடுத்துக்கொள்ள முடியாது” என்று கூறுவது ஏன் என்பது சிறிது குழப்பத்தைத் தருகின்றது. அதை மயூரநாதன்தான் விளக்க வேண்டும்.

ஒல்லாந்தர் காலத்துச் செமினரியும் நல்லூர் பெரிய முருகன் ஆலயம் பற்றிச் சில குறிப்புகளும்

இந்நூலில் செம்மணிப் பகுதியில் ஒல்லாந்தர் காலத்தில் இருந்த செமினரி பற்றி மிகவும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் மயூரநாதன். மிகவும் பெரிய அளவில் அமைந்திருந்த செமினரியில், செம்மணி வீதிப்பக்கமாக அமைந்துள்ள பகுதியில் அக்காலத்தில் கிறிஸ்தவ ஆலயம் இருந்ததையும், வடக்குப் பகுதியில் யமுனா ஏரி இணைந்திருப்பதையும் காண முடிகின்றது. அக்கிறிஸ்தவ ஆலயம் இருந்த பகுதியில்தான் தற்போதுள்ள பெரிய கிறிஸ்தவ ஆலயம் உள்ளது.

இப்படம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. மயூரநாதன் இதனைத் தேடி எடுத்து இந்நூலில் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. இது அவரது தேடலின் ஆழத்தையும் வெளிப்படுத்துகின்றது. அடுத்ததாக, செமினரி, யமுனா ஏரி, பழைய கந்தசாமி ஆலயம் ஆகியவை பற்றி அவர் குறிப்பிடும் முக்கிய விடயங்கள் வருமாறு:

  1. செமினரி மூன்றரை ஏக்கருக்குச் சற்று அதிகமான நிலப்பரப்பைக் கொண்டது.
  2. வரைபடங்கள் நெதர்லாந்தின் தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ளன.
  3. செமினரிக் கட்டடம் அற்புதமானது எனக் கட்டடளைத் தளபதி சுவார்டெக்ரூன் கூறியிருக்கின்றார் (அவர் 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்).
  4. வரைபடத்தில் போதகரின் வீடு, தேவாலயம், 24 மாணவர்கள் படிக்கக்கூடிய பாடசாலை, ஒல்லாந்த ஆசிரியரின் வீடு, 200 மாணவர்களுக்கான பொதுப் பாடசாலை என ஐந்து கூறுகள் இருந்தன.

பூங்காக்கள், குளிப்பதற்கான நீர்த்தொட்டிகள் என நன்கு வடிவமைக்கப்பட்டிருந்த இச்செமினரி, ஒல்லாந்தரின் கட்டடக்கலை, நில அமைப்பு வடிவமைப்புக் கலையின் திறமையை வெளிப்படுத்துகின்றது.

இச்செமினரியின் வடக்குப் பகுதியில் ‘ப’ வடிவக் கேணியான யமுனா ஏரி இணைக்கப்பட்டிருந்ததைத் தள வடிவமைப்புப் படம் புலப்படுத்துகின்றது.

“தற்போது யமுனா ஏரி, புனித யாக்கோபு தேவாலயத்தையும் அண்டி இருப்பதாகச் சொல்லப்படும் அத்திவார எச்சங்கள் மேற்படி செமினரியினுடையதாக இருக்கக்கூடும்” என்கின்றார் மயூரநாதன். நல்லூர்க் காலத்தில் யமுனா ஏரிக் கேணி இருந்திருந்தாலும், அதைச் செமினரியின் பகுதியாகப் பயன்படுத்தியதால், செமினரியைக் கட்டியபோது திருத்தி மேம்படுத்தியிருப்பர் என்கின்றார். 

செமினரியின் தளவரைபடத்தில் கேணி பகர வடிவில் இருக்கின்றது (பக். 218, படம் 63). ‘ப’ வடிவின் இடையில் கேட்போர் கூடமும் உள்ளது. கேட்போர் கூடத்தை நீக்கினால் ‘ப’ வடிவம்; கேட்போர் கூடத்தையும் உள்ளடக்கினால் செவ்வக வடிவம். இது பற்றிய மயூரநாதனின் கருத்து: “முன்னர் செவ்வக வடிவாக இருந்த கேணி, ஒல்லாந்தர் காலத்தில் கேட்போர் கூடத்தையும் கட்டியதால் ‘ப’ வடிவமாக மாறியிருக்கவும் வாய்ப்புண்டு” என்பதாகும்.

செமினரியின் வரைபடமும் யமுனா ஏரி பற்றிய மயூரநாதனின் கருத்துகளும் முக்கியமானவை. அவற்றை நூலின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாக நான் இனங்காண்பேன். அவை அவரது தேடலையும் ஆய்வுச் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன.

செமினரியின் பெரிய அளவிலான வரைபடத்தை நோக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள்:

எனது நல்லூர் இராஜதானி ஆய்வில், பாதிரியார் குறிப்பிட்டது போல், நல்லூர் முருகன் ஆலயம் இருந்த பகுதியிலேயே கிறிஸ்தவ ஆலயம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

போர்த்துக்கேயரின் 1560ஆம் ஆண்டு படையெடுப்பை விவரிக்கும் ஆவணங்களில் நல்லூர் முருகன் ஆலயம் பெரிய கோயில் என்று விவரிக்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் பகோடா என்றழைத்தார்கள். அதேசமயம், கோயில்களை விட்டு மன்னன் வடக்கு அல்லது கிழக்காக ஓடினான் என்னும் போர்த்துக்கேயரின் கூற்றுகளிலிருந்து, நல்லூரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்திருக்கலாம் என்பதையும் உணர முடிகின்றது என்கின்றார் மயூரநாதன்.

எனக்கு என்ன தோன்றுகின்றது என்றால், யமுனா ஏரிக்கு அருகில் இருக்கும் அத்திவாரச் சிதைவுகள் செமினரியினுடையதாக மட்டும் ஏன் இருக்க வேண்டும்? அவை பெரிய நல்லூர் முருகன் கோயிலினுடையதாகவும் ஏன் இருக்கக்கூடாது? அந்தக் கோயில் பெரியது. மதில்களுடன் கூடிய பாதுகாப்பு மிக்கதாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான், 1619இல் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றியதும் தளபதி ஒலிவேறா, முதல் இரண்டு ஆண்டுகள் நல்லூர் பெரிய கோயிலில் இருந்தே நாட்டை நிர்வகித்திருக்க வேண்டும். அதன் பின்னர், தஞ்சை மன்னனின் உதவியுடன் தமிழரின் எதிர்த்தாக்குதல்கள் அடிக்கடி நடைபெறவே, பாதுகாப்புக் கருதி பண்ணைத்துறையில் அமைத்த கோட்டைக்குச் செல்கின்றான் என்பதையும் இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது.

மேலும், யமுனா ஏரி பற்றிப் பின்வருமாறு யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடும்:

“.. முப்புடைக் கூபமும் உண்டாக்கி, அக்கூபத்தில் யமுனாநதித் தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்து விட்டு..” (யாழ்ப்பாண வைபவமாலை, முதலியார் குல. சபாநாதன் பதிப்பு, பக். 26)

இங்கு மயில்வாகனப்புலவர் யமுனா ஏரி என்று கேணியை அழைக்காவிட்டாலும், அதில் இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றான யமுனை நதியின் தீர்த்தத்தை வரவழைத்துக் கலந்ததைக் குறிப்பிடுகின்றார். ஏன்? அது அருகில் இருந்த நல்லூர் முருகன் ஆலயத்தின் தீர்த்தக்கேணியாக இருந்திருக்கலாம் என்பதைத்தான் இத்தகவல் சுட்டிக்காட்டுகின்றது. மயில்வாகனப்புலவர் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டில் அக்கேணி புனிதக் கேணியாக விளங்கியிருக்கின்றது என்பதையே அவரது யமுனை நதித் தீர்த்தம் பற்றிய கூற்றும் வெளிப்படுத்துகின்றது.

அண்மையில் யாழ். கோட்டைப் பகுதியில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளைப் போன்று, யமுனா ஏரியை அண்டிய பகுதிகளிலும் ஏன் ஆய்வுகளை நடத்தக்கூடாது? அதன் மூலம் பழைய நல்லூர் முருகன் கோயிலினதும் செமினரியினதும் அத்திவாரச் சிதைவுகளைக் காணக்கூடும்.

‘சங்கிலித்தோப்பு’ வாயில் அல்லது கல்தோரண வாயில் பற்றிச் சில குறிப்புகள்

இந்த வாயில் பற்றியும் மயூரநாதன் தனது இந்நூலில் விரிவாகக் குறிப்பிடுகின்றார். இதுவரை யாரும் சுட்டிக்காட்டாத முக்கியமான விடயம் ஒன்றையும் மயூரநாதன் இவ்வாயில் பற்றிக் குறிப்பிடுகின்றார். அது முக்கியமானது. இவ்வாயிலானது ஒரு மாளிகையின் முகப்பு வாசலாக இருப்பதற்குச் சாத்தியமில்லை என்கின்றார். இதன் குறைந்த பருமன், அகலமான மாளிகைச் சுவர்களுடன் பொருந்தியிருக்கும் வகையில் இது அமைக்கப்படவில்லை என்பதையே முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது பற்றிய நுணுக்கமான ஆய்வு அவசியம் என்றும் கூறுகின்றார். “இது மாளிகையின் முகப்பாக அல்லாமல், அங்கிருந்த மாளிகையொன்றின் வளவை அல்லது வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள மதிலில் இருந்த நுழைவாயிலாக இருந்திருக்கலாம் என்பதை ஊகிக்கலாம்” என்று அவர் கூறுகின்றார் (பக். 222).

அதேநேரம், இதனுடன் மயூரநாதன் இம்முகப்பு பற்றிய தனது கருத்துகளை நிறுத்திவிட்டார். எனக்கு ஆச்சரியம் தந்த விடயம் என்னவென்றால், மயூரநாதன் குறிப்பிட்டுள்ள மேற்படி ஒல்லாந்தர் காலத்து நல்லூர் தொடர்பான சில முக்கிய விடயங்களை ஏன் அவர் இம்முகப்புடன் இணைத்துப் பார்க்கவில்லை என்பதுதான். இந்நூலின் 207–211ஆம் பக்கங்களில் அவர் முக்கியமான விடயம் ஒன்றை ஒல்லாந்தரின் அப்பகுதி பற்றிய நிலப்படத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதனைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்:

ஒல்லாந்தர் காலத்தில், 1719ஆம் ஆண்டு வரையப்பட்ட வலிகாமப் பிரிவில் காணப்படும் நல்லூர் பற்றிய நிலப்படங்களின் அடிப்படையில், தற்போது சங்கிலித்தோப்பு முகப்பு காணப்படும் பகுதியில் ஓர் அரசாங்கத் தோட்டம் அமைந்திருந்தது (படங்கள் 52, 53, 54; பக்கங்கள் 207, 208, 209). ஒல்லாந்தர் காலத்தில் நல்லூர், ஒல்லாந்த அரச அதிகாரிகளின் குடும்பத்தவர்கள் செல்லும் சுற்றுலாத்தலமாக இருந்ததை அக்கால ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. அதனை மயூரநாதனும் இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார். இதனைச் சுட்டிக்காட்டும் மயூரநாதன் பின்வருமாறும் குறிப்பிடுவார்:

“ஒல்லாந்தர் காலத்தில், 1719ஆம் ஆண்டைச் சேர்ந்த நிலப்படமொன்று இந்தத் தோட்டத்தைப் பெயர் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இது பருத்தித்துறை வீதி, செம்மணி வீதிச் சந்தியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்தது எனலாம். இந்தத் தோட்டத்துக்குப் பருத்தித்துறை வீதியிலிருந்து ஒன்றும், இன்றைய செம்மணி வீதிப் பக்கத்திலிருந்து ஒன்றுமாக இரண்டு நுழைவாயில்கள் இருந்தன. நிலப்படத்தில் உள்ள குறியீடுகளிலிருந்து, இவ்வாயில்களில் சங்கிலித்தோப்பு வளைவு போன்ற வளைவுகள் இருந்ததை அறியக்கூடியதாக உள்ளது. […] நிலப்படத்திலிருந்து, உள்ளே தோட்டத்தின் தெற்கு மதிலை அண்டி ஒரு கட்டடமும், மேற்கு மதிலிலிருந்து சற்றுத் தள்ளி உட்புறமாக இன்னொரு கட்டடமும் இருந்ததை அறிய முடிகின்றது” (படம் 55, பக். 210).

இதிலிருந்து, தற்போது காணப்படும் முகப்பு மேற்படி அரச தோட்டத்தின் கிழக்குப் பகுதி நுழைவாயிலாகவும், அதுவே இன்று சங்கிலித்தோப்பு வாசல் என்று அழைக்கப்படும் வாயிலாகவும் இருந்திருக்க வேண்டும். இதனை ஏன் மயூரநாதன் தனது கவனத்தில் எடுக்கவில்லை? கவனத்தில் எடுத்திருந்தால், “இது மாளிகையின் முகப்பாக அல்லாமல், அங்கிருந்த மாளிகையொன்றின் வளவை அல்லது வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள மதிலில் இருந்த நுழைவாயிலாக இருந்திருக்கலாம் என்பதை ஊகிக்கலாம்” என்று கூறும் மயூரநாதன் (பக். 222), மேற்படி அரச தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த மதிலின் நுழைவாயில்தான் இந்தச் சங்கிலித்தோப்பு முகப்பு என்று கூறியிருக்கலாமே! ஏன் கூறவில்லை? இது வியப்பைத் தருகின்றது.

மேற்படி சங்கிலித்தோப்பு வாசல் எதுவாக இருந்திருக்கும் என்பதற்கான முக்கிய ஆதாரமாக அரச தோட்டத்தின் நிலப்படம் இருக்கையில், இரண்டையும் இணைத்து ஏன் மயூரநாதன் இறுதி முடிவுக்கு வரவில்லை? மயூரநாதனின் இந்நூல் அரச தோட்டம் பற்றிய முக்கிய தகவல்களை வழங்குகின்றது. அத்தகவல்களின் அடிப்படையில், தற்போது காணப்படும் சங்கிலித்தோப்பு வாசல் பற்றிய நல்லதொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டிய மயூரநாதன், எதற்காக அதனைத் தவறவிட்டார்? கிடைத்த தகவல்களை ஆவணப்படுத்திய மயூரநாதன், தற்போது காணப்படும் சங்கிலித்தோப்பு வாசல் பற்றிய இறுதிக்கருத்தைக் கூறும்போது, கவனக்குறைவால் சில விவரங்களை தவற விட்டுவிட்டார் என்றே நினைக்கிறேன். அப்படித் தவறவிட்டிருந்தாலும், அவரது ஒல்லாந்தர் கால நிலப்படம் இந்தச் சங்கிலித்தோப்பு வாசல் பற்றிய நல்லதோர் ஊகத்துக்கு வலுச்சேர்க்கும் முக்கிய சான்றுகளில் ஒன்று.

மேலும், ஒல்லாந்தரின் நிலப்படத்திலிருந்து, மேற்படி கிழக்கு வாசல் பருத்தித்துறை வீதியிலிருந்து கிழக்காக, உள்ளே அமைந்திருப்பதால், அத்தோட்டத்தின் மாளிகையைச் சுற்றி அமைந்திருந்த மதில் கிழக்குப் பகுதியில் வீதியிலிருந்து சிறிது தள்ளி அமைந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம். தெற்குப் பகுதி வாசல் செம்மணி வீதியை அண்டி அமைந்திருந்ததையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

நல்லூரும் காடும்

நல்லூர் இராசதானி பற்றிக் குறிப்பிடுகையில், போர்த்துக்கேயரின் நல்லூர் மீதான படையெடுப்புகளையும், போர்வீரர்கள் கொழும்புத்துறை, பண்ணைத்துறையிலிருந்து நல்லூர் நோக்கிச் சென்ற பாதைகளையும் விவரிக்கும் மயூரநாதன், இன்னுமொரு முக்கிய விடயத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். அது பண்ணைத்துறைக்கும் கொழும்புத்துறைக்கும் தலைநகருக்கும் இடையில் நீண்டு வியாபித்திருந்த சதுப்பு நிலமும் காட்டுப் பகுதியுமாகும்.

இக்காடு காரணமாக, பண்ணைத்துறையும் கொழும்புத்துறையும் நல்லூர் நகரின் பகுதிகள் அல்ல என்று மயூரநாதன் வாதிடுகின்றார். ஏன் அப்படிப் பார்க்க வேண்டும்? யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரம் நல்லூர். அது மதில்களாலும் காவற் காடுகளாலும் பாதுகாக்கப்பட்ட தலைநகரமாக இருந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்கள் கொழும்புத்துறையும் யாழ்ப்பாணப் பட்டினமும் (பண்ணைத்துறை) ஆகும். இவ்விதம் பார்க்கும்போது குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

இங்கு, நல்லூர் இராசதானியின் முக்கிய பகுதிகளாக மேற்படி துறைமுகப் பகுதிகளை உள்ளடக்கிய யாழ்ப்பாண நகரப் பகுதி இருக்கவில்லை என்று மயூரநாதன் குறிப்பிடுகின்றார். இத்தர்க்கம் மேலும் விரிவான விவாதத்தைக் கோரி நிற்கின்றது. என்னைப் பொறுத்தவரையில், அக்காடு தலைநகரின் பாதுகாப்புக் காடாகவும் பாதுகாப்பு அரணாகவும் தென்படுகின்றது. துறைமுகங்களும் நகரின் பிரதான பகுதிகளாகவே தென்படுகின்றன. எனினும், இத்தர்க்கம் மேலும் விவாதத்துக்குரியது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்துக் கட்டடக்கலையும் நகர அமைப்பும்

இக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகர அமைப்பை நிர்ணயித்த முக்கிய கூறுகளாகப் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் அரசியல் நிலைப்பாடுகளைக் குறிப்பிடலாம். சமயமும் பாதுகாப்பும் நகர அமைப்பை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றின எனலாம்.

போர்த்துக்கேயர் ஆட்சியில் மதம் முக்கிய பங்கினை வகித்தது. கத்தோலிக்க மதம் தவிர ஏனைய மத வழிபாடுகள் தடை செய்யப்பட்டன. 1619இல் யாழ்ப்பாண இராச்சியத்தை வெற்றிகொண்ட தளபதி ஒலிவேறா, ஆரம்பத்தில் நல்லூர் பெரிய கோயிலைத் தனது இருப்பிடமாகக் கொண்டிருந்தான். பின்னர், அதன் பாதுகாப்பற்ற நிலையைக் கருத்தில்கொண்டு, பண்ணைத்துறைப் பகுதியில் புதுமை மாதா தேவாலயத்தை அமைத்து, அதைச் சுற்றி நான்கு பக்கங்களைக் கொண்ட கோட்டையையும் அமைத்து ஆட்சியைத் தொடர்ந்தான்.

பாதுகாப்பும் நிர்வாகமும் கோட்டையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. ஒல்லாந்தர் காலத்திலும் இது தொடர்ந்தது. ஆங்கிலேயர் காலத்தில்தான் இந்நிலை மாறியது. ஆங்கிலேயர் கோட்டையைப் பாதுகாப்புக்காக மட்டும் பயன்படுத்தினர். நிர்வாகத்தைச் கோட்டைக்கு வெளியே கொண்டு சென்றனர். இன்று நாம் காணும் யாழ்ப்பாண நகரின் கல்விக்கூடங்கள், நீதிமன்றங்கள், போக்குவரத்து வழிமுறைகள், யாழ்ப்பாண மருத்துவமனை, உள்ளூராட்சி மன்றங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலேயர் நாட்டிய வித்துக்களின் வளர்ச்சியே.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் ஆட்சியாளர்களின் மதமே பிரதானமாக இருந்தது. ஏனைய மதங்கள், போர்த்துக்கேயர் காலத்தில் முற்றாகவும், ஒல்லாந்தர் காலத்தில் அவர்களது ஆட்சியின் இறுதிக்காலம் வரையிலும் தடை செய்யப்பட்டிருந்தன. ஒல்லாந்தரின் இறுதிக்காலத்தில் மதச்சகிப்புத்தன்மை நிலவியது. அதன் காரணமாக நல்லூர் ஆலயம், வண்ணை சிவன் கோயில் போன்ற ஆலயங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர், ஆங்கிலேயர் காலத்தில் மதம் தனது முக்கியத்துவத்தை இழந்தது. அவர்கள் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினர். இதன் விளைவாக, ஏனைய மத வழிபாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன், நகரில் பல்வேறு மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் உருவாக்கப்பட்டன.

ஆங்கிலேயர் காலத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்திருப்பது மயூரநாதனின் ஆய்வுச் சிறப்பை வெளிப்படுத்துகின்றது. அவர் இக்காலத்தைப் பின்வரும் காரணகாலப் பிரிவுகளாகப் பிரித்துள்ளார்:

  • பிரித்தானியர் காலம்: 1795–1833
  • பிரித்தானியர் காலம்: 1833–1867
  • பிரித்தானியர் காலம்: 1867–1896
  • பிரித்தானியர் காலம்: 1896–1948

கட்டடக்கலை, நகர அமைப்புத் துறைகளில் பாண்டித்தியம் மிக்கவரான மயூரநாதன் இந்நூலை எழுதியிருப்பது பல நன்மைகளைத் தந்துள்ளது. ஏனைய வரலாற்று அறிஞர்களின் நூல்களில் காணப்படாத சிறப்பம்சங்கள் இவை. குறிப்பாக, கட்டடக்கலை, நகர அமைப்பு ஆகிய துறைகளை இந்த அளவுக்கு விரிவாக எடுத்துரைத்த இலங்கை வரலாற்று நூல்கள் எவையுமில்லை என்றே குறிப்பிடுவேன்.

போர்த்துக்கேயரின் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் பிரதான கட்டடமான யாழ்ப்பாணக் கோட்டையின் பெரும்பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. அதனை அழித்துப் புதிதாக, ஒல்லாந்தரின் ஐங்கோண வடிவத்திலும் அம்புத்தலைக் கொத்தளங்களுடனும் கூடிய இன்றைய கோட்டை கட்டப்பட்டது. உள்ளிருந்த போர்த்துக்கேயரின் புதுமை மாதா ஆலயமும் அழிக்கப்பட்டு, ஒல்லாந்தர் புதிய தேவாலயத்தைக் கட்டினர். இருப்பினும், போர்த்துக்கேயரின் கோட்டை மதில்கள் இரண்டையும் உள்ளடக்கியே ஒல்லாந்தர் கோட்டை கட்டப்பட்டுள்ளது என்பதையும், அவற்றின் நடுவே பீரங்கிகளை அமைப்பதற்காக நிறுவப்பட்ட அரைவட்டப் பிதுக்கங்களையும் இன்றும் காண முடிகிறது. இதனை மயூரநாதன் இந்நூலில் சுட்டிக்காட்டுகின்றார்.

யாழ்ப்பாணக் கோட்டை முக்கியமாக ஒல்லாந்தரின் இராணுவக் கட்டடக்கலையைச் சேர்ந்த ஒரு ‘Star Fort’ (நட்சத்திர வடிவக் கோட்டை) ஆகும். இது ஐரோப்பியர்களின் பீரங்கி யுகப் பாதுகாப்பு முறைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.

இதன் கட்டடக்கலையின் முக்கிய அம்சங்கள்:

ஐங்கோண அல்லது நட்சத்திர வடிவம் (Pentagon / Star-shaped): கோட்டை ஐங்கோண நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டது. இதனால் எல்லாத் திசைகளிலும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தவும் பாதுகாப்பைப் பெறவும் முடிந்தது.

வோபான் பாணிக் கோட்டைக் கட்டமைப்பு (Vauban-style Fortification): பிரெஞ்சு இராணுவப் பொறியியலாளர் ‘Sébastien Vauban’ உருவாக்கிய கோட்டைக் கட்டமைப்புகளின் தாக்கம் இதில் காணப்படுகின்றது. தடித்த பாதுகாப்புச் சுவர்கள் (Ramparts), கொத்தளங்கள் (Bastions), அகழி (Moat) ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவக் கட்டடக்கலை (VOC Dutch Military Architecture): இது ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி (VOC) பயன்படுத்திய கடற்படை, வர்த்தகப் பாதுகாப்புக் கோட்டைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தியப் பெருங்கடல் வர்த்தகப் பாதைகளைக் கண்காணிப்பதில் இக்கோட்டை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

பவளக்கல், சுண்ணாம்புக்கல் பயன்பாடு (Coral Stone and Limestone): யாழ்ப்பாணப் பகுதியில் கிடைத்த பவளக்கல், சுண்ணாம்புக்கல் கொண்டு கோட்டையின் பல பகுதிகள் கட்டப்பட்டன.

இராணுவ, நிர்வாக நகர அமைப்பு

கோட்டைக்குள் ஆளுநர் மாளிகை, Kruys Church, ஆயுதக் கிடங்குகள், படைத்தளங்கள், நீதிமன்றம் போன்ற கட்டடங்கள் இருந்தன.

யாழ்ப்பாணக் கோட்டை, காலிக் கோட்டையைப் போல வர்த்தக நகரமாக அல்லாமல், பெரும்பாலும் இராணுவ, நிர்வாகக் கோட்டையாகவே செயல்பட்டது. அதன் கட்டடக்கலையைச் சுருக்கமாகக் கூறுவதானால், ‘ஒல்லாந்தரின் Vauban பாணி நட்சத்திர வடிவ இராணுவக் கட்டடக்கலை’ அல்லது ‘Dutch Colonial Military Star-Fort Architecture’ எனக் குறிப்பிடலாம்.

அதன் முக்கிய அம்சங்கள்:

  • கோட்டையைச் சுற்றி அகழி (Moat) இருந்தது.
  • வெளியிலிருந்து கோட்டைக்குள் செல்ல ஒரு முக்கிய நுழைவாயில் மட்டுமே இருந்தது.
  • அந்த நுழைவாயிலுக்குச் செல்லும் பாதை நேராக அல்லாமல், சற்றுத் திருப்பங்களுடன் அமைக்கப்பட்டது. இதனால் எதிரிகள் நேரடியாகத் தாக்குவதைத் தடுக்க முடிந்தது.
  • அகழியைத் தாண்டுவதற்கு மரப்பாலம் அல்லது Causeway போன்ற அமைப்பு இருந்தது. சில காலங்களில், உயர்த்தக்கூடிய பால அமைப்பான Drawbridge-உம் இருந்திருக்கலாம் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
  • நுழைவாயிலின் இருபுறங்களிலும் Bastion-கள் அமைக்கப்பட்டிருந்ததால், உள்ளே வரும் பாதையைப் பீரங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் கட்டுப்படுத்த முடிந்தது.

ஒல்லாந்தரின் கோட்டைக் கட்டடக்கலையில் ‘Approach Control’ எனப்படும் அணுகல் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. அதாவது, ‘எதிரி கோட்டைக்குள் நுழைவதற்கு முன்பே திறந்தவெளியில் கண்காணிக்கப்பட வேண்டும்’ என்பதே அதன் அடிப்படைக் கோட்பாடு. இதனால், பாதை குறுகலாகவும் பாதுகாப்புக் கண்காணிப்புக்கு உட்பட்டதாகவும், அகழிக்கும் பாதுகாப்புச் சுவர்களுக்கும் (Ramparts) இடையில் அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இன்றும் யாழ்ப்பாணக் கோட்டைக்குச் செல்லும் பிரதான நுழைவுப் பாதையில் அகழி, Causeway, பழைய வாயில் அமைப்பு போன்ற ஒல்லாந்தரின் இராணுவக் கட்டடக்கலை அம்சங்கள் தென்படுகின்றன.

கோட்டைக்குள் இருந்த கட்டடங்கள்

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் பல முக்கியமான நிர்வாக, இராணுவ, சமயக் கட்டடங்கள் இருந்தன. இது வெறும் பாதுகாப்புக் கோட்டையாக மட்டுமல்லாமல், ஒரு சிறிய ‘கோட்டை நகரம்’ போலவும் அமைந்திருந்தது.

கோட்டைக்குள் இருந்த முக்கிய கட்டடங்கள்:

  • ஆளுநர் மாளிகை (Governor’s House): ஒல்லாந்து ஆளுநரின் நிர்வாக மையமாகவும், உயர் அதிகாரிகள் தங்கும் இடமாகவும் விளங்கியது.
  • Kruys Church / Dutch Church: ‘Dutch Reformed Church’ மரபைச் சேர்ந்த தேவாலயம். ஒல்லாந்தரின் சமய, சமூக வாழ்வின் மையமாக விளங்கியது.
  • படைத்தளங்கள் (Military Barracks): படையினர் தங்குவதற்கும் இராணுவப் பயிற்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட கட்டடங்கள்.
  • வெடிமருந்து, ஆயுதக் கிடங்கு (Gunpowder Magazine / Armoury): வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் சேமிப்பதற்காக அமைக்கப்பட்ட இடம். இத்தகைய கிடங்குகள் பொதுவாகத் தடித்த சுவர்களுடன் கட்டப்பட்டன.
  • சிறைச்சாலை, காவலர் அறைகள் (Prison / Guard Rooms): கைதிகளை அடைப்பதற்கும் காவல் படையினர் தங்குவதற்குமான இடங்கள்.
  • சேமிப்புக் கிடங்குகள் (Storehouses / Warehouses): உணவு, வர்த்தகப் பொருட்களையும் இராணுவப் பொருட்களையும் சேமிப்பதற்கான இடங்கள்.
  • மருத்துவமனை (Hospital): படைவீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மருத்துவ வசதிகளை வழங்குவதற்கான இடம்.
  • கிணறுகள், நீர்ச் சேமிப்பு வசதிகள் (Wells and Water Storage): முற்றுகைக் காலங்களிலும் தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான வசதிகள்.
  • அணிவகுப்பு மைதானம் (Parade Ground): படைத்துறை அணிவகுப்புகளுக்கும் பயிற்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட திறந்தவெளி.
  • கொத்தளங்களும் பாதுகாப்புச் சுவர்களும் (Bastions and Ramparts): கோட்டையின் ஐந்து முனைகளிலும் அமைந்திருந்த பாதுகாப்புக் கட்டமைப்புகள்.

இந்தக் காலத்து நிலப்படங்களில் பொதுவாக ஐங்கோண அல்லது நட்சத்திர வடிவக் கோட்டை, கொத்தளங்கள், பிரதான நுழைவாயில், தேவாலயம், ஆளுநர் மாளிகை, அணிவகுப்பு மைதானம், படைத்தளங்கள் போன்றவை குறிக்கப்பட்டிருக்கும்.

இத்தகைய தகவல்கள் இந்நூலின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன.

கெவின் லின்ச்சின் நகரக் கோட்பாடும், ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறும்’

மேனாட்டு நகர அமைப்பு வல்லுநர்களில் ஒருவரான கெவின் லின்ச் (Kevin Lynch), நகர வடிவமைப்பு (Urban Design), நகரத் திட்டமிடல் (Urban Planning), சுற்றுச்சூழல் உளவியல் (Environmental Psychology) போன்ற துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்க நகர வடிவமைப்பாளரும் சிந்தனையாளரும் ஆவார். அவரது புகழ்பெற்ற நூல் ‘The Image of the City’ ஆகும்.

இந்நூலில் அவர் முன்வைத்த நகரக் கோட்பாடுகள் இன்றுவரை உலகளாவிய நகரத் திட்டமிடலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு நகரம் என்பது வெறும் கட்டடங்களின் தொகுப்பு மட்டுமல்ல என்பதே கெவின் லின்ச்சின் அடிப்படைச் சிந்தனையாகும். மக்கள் அந்நகரை எவ்வாறு உணர்கிறார்கள், நினைவில் கொள்கிறார்கள், பயணிக்கிறார்கள், தங்களது மனத்தில் அதன் பிம்பத்தை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதே முக்கியமானது என அவர் கருதினார். இதனை அவர் ‘Imageability’ அல்லது ‘நகரப் படிமத் தன்மை’ எனக் குறிப்பிட்டார். அதாவது, ஒரு நகரம் மக்களின் மனத்தில் தெளிவான காட்சிப் படிமமாகப் பதிய வேண்டும் என்பதே அவரது கோட்பாட்டின் மையமாகும்.

கெவின் லின்ச்சின் நகரக் கோட்பாட்டின் ஐந்து கூறுகள்

1. பாதைகள் (Paths) – மக்கள் நகரத்தில் பயணிப்பதற்குப் பயன்படுத்தும் வழிகள். இவை நகரத்தின் முதன்மையான இயக்க அமைப்பாகும். உதாரணமாக, நியூயோர்க் நகரின் (New York City) பிராட்வே வீதியைக் குறிப்பிடலாம்.

2. எல்லைகள் (Edges) – ஒரு பகுதியை மற்றொரு பகுதியிலிருந்து பிரிக்கும் விளிம்புகள். ஆறுகள், கடற்கரைகள், மதில்கள், தொடருந்துப் பாதைகள் போன்றவை நகரத்தின் பகுதிகளுக்கிடையிலான எல்லை உணர்வை உருவாக்குகின்றன.

3. மாவட்டங்கள் / பிரதேசங்கள் (Districts) – தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட நகரப் பகுதிகள். வர்த்தகப் பகுதிகள், கோவில் பகுதிகள், பழைய நகரங்கள், குடியிருப்புப் பகுதிகள் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். ஒரு பகுதிக்குள் நுழைந்தவுடன் அதன் தனித்துவத்தை மக்கள் உணரக்கூடியதாக இருக்க வேண்டும்.

4. மையங்கள் (Nodes) – மக்கள் கூடும் முக்கியமான இடங்கள். சந்திகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், பொது மைதானங்கள் போன்றவை நகரத்தின் செயல்பாட்டு மையங்களாக அமைகின்றன.

5. அடையாளச் சின்னங்கள் (Landmarks) – மக்கள் வழிகாணப் பயன்படுத்தும், எளிதில் நினைவில் நிற்கும் கட்டடங்கள் அல்லது இடங்கள். கோபுரங்கள், கோவில்கள், மணிக்கூட்டுக் கோபுரங்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.

மயூரநாதனின் இந்நூலில், பல்வேறு காலகட்டங்களில் யாழ்ப்பாண நகரத்தில் காணப்பட்ட பாதைகள், மையங்கள், எல்லைகள், அடையாளச் சின்னங்கள், பிரதேசங்கள் ஆகியவை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக, வெவ்வேறு காலகட்டங்களில் நிலவிய யாழ்ப்பாண நகரத்தின் படிமங்கள் மனக்கண்ணில் விரிகின்றன.

யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றறிஞர்களின் சந்தேகங்களும் புரிதல்களும்

யாழ்ப்பாணம் தமிழர்களின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. இருப்பினும், அதன் வரலாறு தொடர்பான பல கேள்விகளும் சந்தேகங்களும் வரலாற்றறிஞர்களிடையே இன்னும் நிலவுகின்றன. யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றின் அடிப்படையில், இந்நகரம் பற்றிய வரலாற்றுத் தகவல்களாகப் பொதுவாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இவை எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்னும் ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கலாநிதி சி.க. சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோரின் கருத்துப்படி, ‘யாபாபட்டுன’ எனக் குறிப்பிடப்படுவது நல்லூரே ஆகும். கலாநிதி சி.க. சிற்றம்பலம் தனது யாழ்ப்பாண இராச்சியம் என்னும் நூலில், “யாழ்ப்பாணப் பட்டினம் (சிங்கள நூல்கள் யாபாபட்டுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது எனலாம்” எனக் குறிப்பிடுகிறார்.

மேலும், சுவாமி ஞானப்பிரகாசர், எஸ்.டபிள்யூ. குமாரசுவாமி போன்றோரின் கருத்துகளின்படி, சிங்களவர்கள் நல்லூருக்கு வழங்கிய ‘யாப்பநே’, ‘யாப்பா பட்டுநே’ ஆகிய பெயர்களே பிற்காலத்தில் ‘யாழ்ப்பாணம்’ என மருவியதாக அறியலாம். இதனைப் பற்றி செ. இராசநாயகம் தனது யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“வண. ஞானப்பிரகாச சுவாமியவர்களும் இடப்பெயர் ஆசிரியராகிய திரு. எஸ்.டபிள்யு. குமாரசுவாமியவர்களும் யாழ்ப்பாடியின் கதை புனைந்துரையெனவும் இது போன்ற கதைகள் வையாபாடலிலும், தஷிண கைலாய புராணத்திலும் மலிந்து கிடக்கின்றனவெனக் கூறியதோடு, அந்தகக் கவி வீரராகவன் உண்மைச் சரிதையை யாழ்ப்பாடி தலையில் வைபவமாலைக்காரர் கட்டி வைத்தாரெனவும், அப்படியொருவன் இருக்கவுமில்லை, யாழ்ப்பாணம் பரிசிலாக ஒருவருக்குக் கொடுக்கப் படவில்லையெனவும், சிங்களவர் நல்லூருக்கு வைத்த ‘யாப்பநே’, ‘யாப்பா பட்டுநே’யென்னும் பெயரே பிற்காலத்தில் யாழ்ப்பாணமென மருவியதெனவும், யாழ்ப்பாணன் கதையை எமது புலவர்கள் உருவகப்படுத்தி வைத்தார்களெனவுங் கூறுவர்..”

— யாழ்ப்பாணச் சரித்திரம், செ. இராசநாயகம், பக். 253.

இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை முதலியார் செ. இராசநாயகமும் கலாநிதி க.செ. நடராசாவும் முன்வைக்கின்றனர். யாழ்ப்பாணப்பட்டினம் என்ற தமிழ்ப் பெயரின் சிங்களத் திரிபே ‘யாப்பாபட்டுநே’ என்பது அவர்களது கருத்தாகும். இதனை முதலியார் செ. இராசநாயகம் தனது யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் பின்வருமாறு விளக்குகிறார்:

“…சிங்களப் புலவரொருவர் தங்காலையில் எழுதி வைத்த நூலில் கண்ட ‘யாப்பாபட்டுநே’யென்னும் பெயரை யாழ்ப்பாணவாசிகள் எவ்விதமாயறிந்தமைத்துக் கொண்டனரென்பது ஆச்சரியம். ‘யாப்பாபட்டுநே’க்கும், நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும் முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்கவேண்டிய அவசியமில்லை. நல்லூரென முற்காலத்தில் தமிழர் சிங்கள நாட்டிலிட்டு வழங்கிய ஊர்ப்பெயர்களை இன்றும் அவ்வண்ணமே நல்லூரென அழைக்குஞ் சிங்களவர், யாழ்ப்பாணத்திலிருக்கும் நல்லூரென்னும் பெயரைச் சிங்களமாக மாற்றி வைத்தாரென்பது விந்தையே. யாழ்ப்பாணத்திலுள்ள சிங்களப் பெயருடைய ஊர்களையுங் காணிகளையுந் தமிழர் தமிழ்ப் பெயராக்காது விட்டது அதினும் விந்தையே. இனிப் ‘பட்டுந’ என்பது சிங்கள மொழியா? பட்டினமென்னுந் தமிழ் மொழியின் சிதைவென்பதைப் பள்ளிச் சிறுவருமறிவாரே. ஆகையால் யாழ்ப்பாணப் பட்டினம் என்னுந் தமிழ்ப் பெயரையே ‘யாப்பாபட்டுநே’யெனச் சிங்களவர் சிதைத்து வழங்கினர் என்பது தெளிவாகும்..”

— யாழ்ப்பாணச் சரித்திரம், முதலியார் செ. இராசநாயகம், பக். 254.

இப்பிரச்சினை தொடர்பாகக் கலாநிதி க.செ. நடராசா முன்வைத்துள்ள கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அவர் இது குறித்து விரிவான விளக்கமொன்றை அளித்துள்ளார்:

“….சிங்களப் பெயராகக் கருதப்பட்ட ‘யாப்பாபட்டுன’ என்பது ‘யாபா’ என்ற பதமும், ‘பட்டுன’ என்ற பதமும் இணைந்த சொற்கூட்டாகும். ‘பட்டுன’வென்பது தமிழிலே பட்டினம் என்று வழங்கும் துறைமுக நகரத்தைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும். அச்சொல் தமிழிலே சங்ககால இலக்கியத் தொகுதிகளுள் ஒன்றான பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்ற பாடலில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்கு முற்பட்ட சிங்களச் சொல் என்று கொள்ள எள்ளளவும் இடமில்லை… யாவா என்பது யாபா என மருவி வந்தது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயில்லை. அதனால் யாபா என்பது ஜாவா என்பதன் தமிழ் உருவம் என்று கருதமுடியாது. அன்றியும் அது ஜாவா என்பதன் சிங்கள வடிவமுமன்று. ஏனெனில் சிங்கள இலக்கியங்களில் ஜாவாவை யாபா என்று குறிப்பிடும் வழக்கம் என்றும் இருந்ததில்லை… அதனால் யாழ்ப்பாணப்பட்டினம் என்ற பெயரைக் கொண்டே சிங்களப் பெயரான ‘யாப்பாபட்டுநெ’ என்ற பெயர் புனையப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தமான முடிவாகும்.”

— யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள், கலாநிதி க.செ. நடராசா, தமிழோசை, 11.11.1993.

மேற்படி கட்டுரையில், க.செ. நடராசா தனது முடிவுக்கு ஆதாரமாக மேலும் ஒரு காரணத்தையும் முன்வைக்கிறார்:

“..மேலும் ஊர்ப்பெயர்களை மற்றொரு மொழியிற் பெயர்த்து அவ்வூரவர்களால் உபயோகிக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருப்பதில்லை. யாழ்ப்பாணத்து நல்லூரை அதன் சிங்கள மொழிபெயர்ப்பு என்று கருதப்படும் ‘யாபனே’ என்ற பதத்தால் வழங்காது ஏன் ‘நல்லூருவ’ என்று வழங்கி வருகின்றார்கள் என்பது விளங்கிக் கொள்ள முடியாததாகி விடும்… எனவே ‘யாபனே’ என்பது தமிழில் யாழ்ப்பாணம் என்று கூறும் பெயரின் சிங்களத் திரிபென்றே கொள்ள வேண்டும்…”

— தமிழோசை, 11.11.1993.

மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை (முதலியார் குல. சபாநாதன் பதிப்பித்தது), அந்தகக் கவி வீரராகவன் என்னும் யாழ்ப்பாணன் யாழ் வாசித்துப் பரிசு பெற்றதால் ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறது. அதனை அந்நூல் பின்வருமாறு விளக்குகிறது:

“..அக்காலத்திலே சோழ நாட்டிலிருந்து இரண்டு கண்ணுங் குருடனாகிய கவி வீரராகவன் என்னும் யாழ்ப்பாணன் செங்கடக நகரிலிருந்து அரசாட்சி செலுத்தும் வாலசிங்கமகராசன் பேரிற் பிரபந்தம் பாடிக்கொண்டு போய் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் அதைக் கேட்டு மிக்க சந்தோஷம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் இந்நாட்டைக் கொடுத்தான். யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்ற பெயரிட்டு…”

— யாழ்ப்பாண வைபவமாலை, பக். 25.

மயில்வாகனப் புலவர் குறிப்பிடும் ‘செங்கடகநகர்’ என்பது சிங்கை நகரையே குறிக்கிறது என்பது முதலியார் இராசநாயகத்தின் கருத்தாகும். இது குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“..சிங்கைநகர் என்னும் பெயரை மயில்வாகனப் புலவரோ அவருக்குப் பின் ஏடெழுதியவர் எவரோ, ‘செங்கடகநகர்’ என்று வைபவமாலையில் மாற்றி விட்டனர். உக்கிரசிங்கன் காலத்தில் ‘செங்கடகநகர்’ என்னும் நகர் கனவிலும் அறியப்படாததொன்று.”

— யாழ்ப்பாணச் சரித்திரம், பக். 29.

மேலும், அவர் தனது நூலில் மற்றோர் இடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“..பின்வந்த யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் எழுதப்பட்ட நூல்களிலெல்லாம் அவ்வரசர்கள் சிங்கை நகரிலிருந்து அரசாண்டார்களெனக் கூறியிருப்பதால், உக்கிரசிங்கன் தன்னிராசதானியைச் சிங்கைநகருக்கு மாற்றினானென்று கூறுவதே பொருத்தமுடைத்தாம். சிங்கை நகரே பிற்காலத்தில் ‘செங்கடக நக’ரெனத் திரிந்திருக்க வேண்டும்.”

— யாழ்ப்பாணச் சரித்திரம், பக். 235.

யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற மற்றுமொரு நூலை எழுதிய ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, வேறொரு கருத்தை முன்வைக்கிறார். அவரது கருத்துப்படி, கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏலேலசிங்கன் என்னும் மன்னன், அந்தகனான யாழ்ப்பாடி என்பவனுக்குக் கொடையாக வழங்கிய நிலமே யாழ்ப்பாணம் ஆகும். இதற்கு ஆதாரமாக, அவர் தனிப்பாடற்றிரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பின்வரும் பாடலைக் குறிப்பிடுகிறார்.

“..நரை கோட்டிளங்கன்று

நல்வளநாடு நயந்தளிப்பான்

விரையூட்டு தார்ப்புயன்வெற்

பீழமன்னனெ தேவிரும்பிக்

கரையோட்ட மாக மரக்கலம்

போட்டுனைக் காணவந்தாற்

திரை போட்டிருந்தனை யேலேல

சிங்க சிகாமணியே..”

இப்பாடலின் யாப்பு அமைப்பைக் கொண்டு, இது கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாக இருக்க வேண்டும் எனக் க.செ. நடராசா கருதுகிறார். இலங்கையின் வடபகுதியிலுள்ள மணற்றிடரைத் திருத்தி வளமாக்கியவன், விபீடணனிடம் யாழ் வாசிக்கும் ஒருவனே என வையாபாடல் குறிப்பிடுகிறது.

ம.க.அ அந்தனிசிலும் யாழ்ப்பாணம் பற்றிய தனது கருத்தை வீரகேசரி இதழில் எழுதியுள்ளார். மூவகைப் பாணர்களில் ஒரு பிரிவினரான யாழ்ப்பாணர் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்றது என்பது அவரது கருத்தாகும். இதனை அவர் பின்வருமாறு விளக்குகிறார்:

“தமிழருள் பழைய சாதியினரான பாணர் மூவகையினராவர். அவர்களுள் ஒரு பிரிவினரே யாழ்ப்பாணர் என்பதாம். தமிழரின் பழைய இசைக்கருவிகள் மூன்று. அவை யாழ், குழல், முழவு என்பன. இவற்றில் யாழ் மீட்டிப் பாடிடும் பாணரே யாழ்ப்பாணர் என்ற பெயரைப் பெற்றனர். காலப்போக்கில் அது சாதிப்பெயராக மாறியது. எனவே யாழ்ப்பாணர் என்பது சாதிப்பெயராகும்…. அவ்வாறு தமிழ்ப் பெருங்காப்பியங்களிலும் இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் யாழ்ப்பாணர் என்னும் சாதியினரில் ஒரு பகுதியினர் இலங்கைத் தீவின் வடபகுதியில் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது.”

— வீரகேசரி, 9.12.1990.

இது தொடர்பாக முதலியார் குல. சபாநாதனும் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் பதிப்பித்த யாழ்ப்பாண வைபவமாலை நூலின் அடிக்குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“..யாழ்ப்பாணம் எனும் பெயர் 15ஆம் நூற்றாண்டுச் சிங்கள நூலிற்றான் முதன் முதற் காணப்படும். 14ஆம் நூற்றாண்டிறுதியில் இருந்தவராகக் கருதப்படும் அருணகிரிநாதர் ‘யாழ்ப்பாணாயன் பட்டின மருவிய பெருமாளே’ எனக் குறிப்பிட்ட இடம் யாழ்ப்பாணத்தையே குறித்ததென்றும், அதனால் யாழ்ப்பாணம் எனும் பெயர் தமிழ்ப் பெயரெனவுங் கொள்வர் ஒரு சாரார். அருணகிரிநாதர் குறித்த இடம் எருக்கத்தம்புரியூர் என்பாருமுளர். எங்ஙனமாயினும், அருணகிரிநாதர் குறிப்பிட்ட தலம் ஈழநாட்டின் கண்ணதேயென்பது வலியுறின், யாழ்ப்பாணம் எனும் சொல் சிங்களப் பிறப்பாகப் பிறந்ததெனுங் கொள்கை வலிழந்துபடும்.”

— முதலியார் குல. சபாநாதன் பதிப்பித்த யாழ்ப்பாண வைபவமாலை, பக். 24, அடிக்குறிப்பு.

இவற்றையெல்லாம் ஆராயும்போது, பின்வரும் முடிவுக்கே வர முடிகிறது. நல்லூர் என்பதன் சிங்கள மொழிபெயர்ப்பான ‘யாப்பாபட்டுநே’ என்பதிலிருந்து ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர் தோன்றியது என்பதைவிட, ‘யாழ்ப்பாணம்’ என்ற தமிழ்ப் பெயரின் சிங்களத் திரிபே ‘யாப்பாபட்டுநே’ என்பது பொருத்தமானதாகத் தெரிகிறது. “ ‘யாப்பாபட்டுநே’க்கும் நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும், முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்க வேண்டியதில்லை” என்ற முதலியார் இராசநாயகத்தின் கூற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது.

மேலும், அவர் பிறிதோர் இடத்தில் சுட்டிக்காட்டும் பின்வரும் கருத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கது:

“..மேலும் கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுக்கிடையே இத்துறையில் வந்திறங்கிய மேலைத்தேய முஸ்லிம் பிரயாணிகளும் ‘ஜப்பா’, ‘ஸுப்பா’வென அத்தொனிப்படவே கூறியிருக்கின்றனர்…”

— யாழ்ப்பாணச் சரித்திரம், பக். 255.

யாழ்ப்பாணம் என்ற பெயரின் தோற்றம் தொடர்பான விவாதத்தில் இக்குறிப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

மேலும், கைலாயமாலை நூலில் இடம்பெறும் பின்வரும் பாடலும் யாழ்ப்பாணத்தையும் நல்லூரையும் தனித்தனியாகக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

“..மார்ப்பனாம் புவனேகவாகு

நலமிகும் யாழ்ப்பாண நகரி

கட்டுவித்து, நல்லைக்குலவிய

கந்தவேட்குக் கோயிலும்

புரிவித்தானே…”

இவற்றிலிருந்து இறுதியாக நாம் வரக்கூடிய முடிவு இதுதான். நல்லூரும் சிங்கை நகரும் இரு வேறுபட்ட இராசதானிகள்; இரு வேறுபட்ட நகரங்கள். ‘யாப்பாபட்டுநே’ என்பது யாழ்ப்பாணத்தின் சிங்களத் திரிபே. நல்லூரின் சிங்கள மொழிபெயர்ப்பான ‘யாப்பாப்படுனே’ என்பதிலிருந்து யாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்தது என்பது பொருத்தமற்றதாகவே படுகின்றது.

யாழ்ப்பாணப் பட்டினம் பற்றிப் பேசும் போர்த்துக்கேயரின் ஆவணமொன்று

பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையில் நிகழ்ந்த போர்த்துக்கேயரின் படையெடுப்புகள் பற்றிய நூல் ‘The Temporal and Spiritual Conquest of Ceylon’ ஆகும். இந்நூலை எழுதியவர், Fernão de Queyroz. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பைச் செய்தவர், S.G. Perera. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நூலில், நல்லூரும் யாழ்ப்பாணமும் வெவ்வேறான நகரங்கள் என்பதை உறுதிப்படுத்தும் குறிப்பு 27ஆம் அத்தியாயத்தின் 353ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

“… the other half a league from the city of Nelur, called patanao, where there was less danger, …”

(The Temporal and Spiritual Conquest of Ceylon, பக். 353)

மேற்படி அத்தியாயத்தின் தலைப்பு: “Chapter 27: Other Successes of this War and the Expedition of the Viceroy to Jafanapatao” (பக். 347).

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட இந்நூலில், பதினாறாம் நூற்றாண்டில் நிகழ்ந்த போர்த்துக்கேயரின் யாழ்ப்பாணப் படையெடுப்புகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. பதினாறாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் ஏனைய போர்த்துக்கேயரின் குறிப்புகளின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளன.

இக்குறிப்பின்படி, Nelur (நல்லூர் நகர்) நகரிலிருந்து அரை லீக் தொலைவிலுள்ள ‘Patanao’ (Jafanapatao) யாழ்ப்பாணப் பட்டினம் என்பதை அறிய முடிகின்றது. இது முக்கியமான வரலாற்றுக் குறிப்பாகும். இதன்படி, யாழ்ப்பாணப் பட்டினம் நல்லூர் நகரிலிருந்து அரை லீக் தொலைவில் அமைந்திருந்தது. யாழ்ப்பாணமும் நல்லூரும் வெவ்வேறான இடங்கள் என்பதைத் தெளிவுபடுத்தும் கூற்று இது. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்துக்கு வந்த காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் இருந்ததை எடுத்துக்காட்டும் வரலாற்றுக் குறிப்பாக இதனைக் கருதலாம்.

2017இல் யாழ்ப்பாணக் கோட்டையில் நடைபெற்ற அகழாய்வுகள் யாழ்ப்பாணப் பட்டினத்தைப் பற்றிக் கூறுவது என்ன?

‘Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade’ என்னும் தலைப்பிலான ஆங்கில ஆய்வுக் கட்டுரையை C.E. Davis, P. Gunawardhana, R.A.E. Coningham, P. Pushparatnam, A. Schmidt, M. J. Manuel, H. Namalgamuwa, J. Senanayaka, K.G.Y. Bandara ஆகியோர் எழுதியுள்ளனர். இவ்வாய்வுக் கட்டுரையில் அகழாய்வுகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆய்வின் நோக்கம்: ‘யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதி வெறும் போர்த்துக்கேயர்/ ஒல்லாந்தர் காலக் கட்டட வரலாறா? அல்லது அதற்கு அடியில் இன்னும் தொன்மையான நாகரிக அடுக்குகள் உள்ளனவா?’

ஆய்வில் நவீன அறிவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டன:

(அ) UAV/ Drone Survey – வானிலிருந்து கோட்டைப் பகுதியின் நிலவடிவம் படமாக்கப்பட்டது. மேற்பரப்பின் அமைப்பு, புதைந்த கட்டட வடிவங்கள், நிலத்தடிப் பாதைகள் ஆகியவை கண்டறியப்பட்டன.

(ஆ) GPR – Ground-penetrating Radar – நிலத்தடியில் என்ன இருக்கின்றது என்பதைத் தரையைத் தோண்டாமல் கண்டறிய உதவும் ரேடார் முறை.

சதுர, செவ்வகக் கட்டட அமைப்புகள், புதைந்த சுவர்கள், பழைய தேவாலயக் கட்டடத் தடயங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.

(இ) Stratigraphic Excavation – அடுக்கு அடுக்காக மண்ணை அகற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வு.

ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய சான்றுகள்

அகழாய்வுகளில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

– ரூலெட்டட் மட்பாண்டங்கள் (Rouletted Ware): இவை பொதுவாகக் கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பானைப் பொருள் வகையாகும். தென்னிந்தியா, இலங்கை, ரோமப் பேரரசு ஆகியவற்றுடன் நிலவிய பழைய வணிகத் தொடர்புகளுக்குச் சான்றாக இவை கருதப்படுகின்றன.

– கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (Black and Red Ware): சுமார் கி.மு. 1000 முதல் நிலவிய பண்டைய தென்னாசிய நாகரிகங்களுடன் தொடர்புடையவை.

– ஆரம்பகால இஸ்லாமிய மட்பாண்டங்கள்: அரபு வணிகத் தொடர்புகளின் அடையாளங்களாக இவை அமைகின்றன. யாழ்ப்பாணம், இந்தியப் பெருங்கடல் இஸ்லாமிய வணிக வலையமைப்பிலும் இடம்பெற்றிருந்தது.

– சீனாவின் மிங் வம்சப் பீங்கான் பொருட்கள்: 14–16ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இப்பொருட்கள், கிழக்காசிய வணிக வலையமைப்புடன் யாழ்ப்பாணம் இணைந்திருந்ததைக் காட்டுகின்றன.

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதி, போர்த்துக்கேயர்/ ஒல்லாந்தர் காலத்திற்கு முற்பட்டே மனிதக் குடியேற்றம், வணிகம், கடல்சார் தொடர்புகள் ஆகியவற்றைக் கொண்ட இடமாக இருந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்தியப் பெருங்கடல் வணிக வலையமைப்பின் முக்கிய மையமாக இருந்துள்ளது. தென்னிந்தியா, அரபு உலகம், தென்கிழக்காசியா, சீனா போன்ற பகுதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்துள்ளது.

தமிழர் வரலாற்றைப் பொறுத்தவரையில், இது இலங்கைத் தமிழர் வரலாற்றுக்கான வலிமையான தொல்லியல் ஆதாரமாக அமைகிறது. யாழ்ப்பாணத் தீபகற்பம் தொன்மையான நாகரிகத் தொடர்ச்சியைக் கொண்ட நிலம் என்பதை இது வலுப்படுத்துகிறது. கடல்வழி வணிகம், பண்பாட்டுப் பரிமாற்றம், நகரமயமாக்கல் போன்றவை தொன்மையானவை என்பதையும் உணர்த்துகிறது.

மேற்படி அகழ்வாய்வு யாழ்ப்பாணப் பட்டினத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றது. காவிரிப்பூம்பட்டினம் போன்று புகழ்பெற்ற துறைமுக நகரமாக யாழ்ப்பாணப் பட்டினம் இருந்ததை எடுத்துக்காட்டும் முக்கியமான ஆய்வு இதுவாகும். இது இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தெளிவை ஏற்படுத்தும் முக்கியமான சான்றாகும். இவ்வகழ்வாய்வுகள் மேலும் தொடரப்பட வேண்டும். அவ்வாய்வுகள் மேலும் பல உண்மைகளை எடுத்துக்காட்டும்.

யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு (1621-1948) நூலில் வரலாற்றறிஞரும், கட்டடக் கலைஞருமான மயூரநாதனின் பார்வையில் யாழ்ப்பாணப் பட்டினம்

மயூரநாதன் குடியேற்றவாதக் காலத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணம் பற்றிப் பின்வருமாறு மேற்படி நூலில் கூறுவார்:

“யாழ்ப்பாணம் அல்லது அதையொத்த யாழ்ப்பாணயன் பட்டினம் (தமிழ்நாட்டிலுள்ள திருமாணிக்குழிக் கல்வெட்டு), யாப்பா பட்டுன போன்ற பெயர்கள் குடியேற்றவாதக் காலத்துக்கு முன்பே புழக்கத்தில் இருந்துள்ளன. இப்பெயர்கள் எதைக் குறித்தன என்ற கேள்விக்குத் துல்லியமாக விடையளிக்கும் வகையிலான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. .. முந்திய காலங்களில் இப்பெயர்கள் குறித்த இடம் அல்லது இடங்களைக் குறித்த போதிய தெளிவு இல்லை. …அருணகிரிநாதர் திருப்புகழிலும் இதே பெயர் வருகின்றது. 15ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியைச் சேர்ந்த கோகில சந்தேசய என்னும் சிங்களத் தூது நூலில் (குயில் விடு தூது நூலில்) முதன் முதலாக யாப்பா பட்டுன என்னும் பெயர் உள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு சிங்கள மூலங்களில் இப்பெயரைக் காண முடிகின்றது…..தமிழில் தற்போது புழங்கும் யாழ்ப்பாணம் என்னும் பெயரைக் கைலாயமாலை, வையாபாடல் ஆகிய ஐரோப்பியருக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்துத் தமிழ் நூல்களில் காணக்கூடியதாக உள்ளது. வையாபாடல் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கைலாயமாலை இதற்கு முந்தையது எனவும், பிந்தியது எனவும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மேலே எடுத்துக்காட்டிய மூலங்களில் யாழ்ப்பாணம் அல்லது அதையொத்த பெயர்கள் நாட்டையோ அதன் தலைநகரத்தையோ அல்லது இரண்டையுமே குறிப்பதற்குப் பயன்பட்டுள்ளன. கோகில சந்தேசய ஓரிடத்தில் யாப்பா பட்டுன நாடு என நாடாகவும், இன்னோரிடத்தில் குபேரனுடைய நகரத்தைப் போன்ற யாப்பாப் பட்டுன என நகரமாகவும் குறிப்பிடுகின்றது. அத்துடன் கோகில சந்தேசயவில் உள்ள யாப்பாப் பட்டுன குறித்த வர்ணனை, அது மிகையானதெனினும் ஒரு நகரத்தைக் குறிக்கின்றது. பிற்காலத் தமிழ்மூலங்களும் யாழ்ப்பாணம் என்பதை இரண்டு விதமாகவும் குறிப்பிடுவதைக் காண முடிகின்றது. பேராசிரியர் இந்திரபாலாவும் யாழ்ப்பாணம் என்னும் பெயர் நாட்டையும் அதன் தலைநகரத்தையும் குறிக்கப் பயன்பட்டிருக்கலாம் என்கின்றார். ….யாழ்ப்பாணயன் பட்டினம், யாப்பாப் பட்டுன போன்ற பழைய பெயர்களின் பகுதியாக, நகரத்தைக் குறிக்கும் பட்டினம் அல்லது அதையொத்த ஒரு சொல் இருப்பதால் இப்பெயர்கள் அவை தோன்றிய காலத்தில் நகரமொன்றைக் குறித்துப் பின்னர் நாட்டுக்கும் வழங்கின எனக் கொள்ளுதலே பொருத்தமாக இருக்கும். சமகாலத்தில் இலங்கையிலிருந்த கோட்டே இராச்சியம், கண்டி இராச்சியம் ஆகியவற்றுக்கும் அவற்றின் தலைநகரங்களின் பெயர்களே வழங்கின. எனவே ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் அல்லது அதையொத்த மேற்குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய ஒரு நகரம் இருந்தது என்று ஓரளவு உறுதியாகச் சொல்ல முடியும்.”

குடியேற்றவாதக் கால யாழ்ப்பாணம் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

“போர்த்துக்கேயர் ‘ஜஃப்னாபட்டவ்’ என்னும் பெயரைப் பயன்படுத்தினர். இலங்கைத் தீவில் உள்ளூர்த் தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த ஆட்சிப்பகுதி முழுவதையும் அவர்கள் இப்பெயரால் அழைத்தனர். அக்காலத்தில் இருந்த ஒரு நகரத்தையோ குறிப்பிட்ட ஒரு இடத்தையோ இப்பெயரால் அவர்கள் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. நாட்டின் தலைநகரத்தை அவர்கள் எப்போதும் ‘நல்லூர்’ என்றே குறிப்பிட்டனர். ‘ஜஃப்னாப் பட்டவ்’ ஒல்லாந்தரின் எழுத்துமூல ஆவணங்களில் ‘ஜஃபனாபட்டம்’ அல்லது ‘ஜஃப்னாபட்டம்’ என்றும், சில நிலப்படங்களில் ‘ஜஃப்பெனபட்ணம்’ எனவும் வழங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் இது ‘ஜஃப்னா’ எனச் சுருங்கியது. … “

மேலும், இப்பெயரைப் போர்த்துக்கேயர் சிங்களப் பெயரான ‘யாப்பா பட்டுன’, தமிழ்ப் பெயர்களான ‘யாழ்ப்பாணப் பட்டினம்’, ‘யாழ்ப்பாணயன் பட்டினம்’ போன்றவற்றிலிருந்து பெற்றிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருப்பார். மேலும், ‘பட்டினம்’ என்னும் சொல் பற்றியும், அது துறைமுக நகரத்தைக் குறிப்பது பற்றியும் விரிவாக விளக்கியிருப்பார்.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் மயூரநாதன், இறுதியில் குடியேற்றவாதத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணம் பற்றி வந்தடைந்திருக்கும் முடிவுகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

‘யாழ்ப்பாண இராச்சியக் காலத்தில் யாழ்ப்பாணம் என்னும் பெயர் அங்கிருந்த ஏதோவொரு நகரத்தைக் குறித்தது எனச் சொல்வதற்கான நேரடிச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.’ இவ்வாறு குறிப்பிடும் மயூரநாதன், தொடர்ந்து முதலியார் இராசநாயகத்தையும், கைலாயமாலையில் சேர்க்கப்பட்டுள்ள தனிப்பாடலையும் சுட்டிக்காட்டுவார்.

‘யாழ்ப்பாணப் பட்டினம் பிற்காலத்தில் போர்த்துக்கேயரின் யாழ்ப்பாண நகரம் அமைந்த பண்ணைத்துறைப் பகுதியில் இருந்தது என்று 1970களின் தொடக்கத்திலேயே பேராசிரியர் இந்திரபாலா கருத்து வெளியிட்டிருந்தார். அண்மையில் கோட்டைப் பகுதியில் கிடைத்த அகழ்வாய்வுத் தகவல்கள் மேற்படி கருத்துக்கு வலுச்சேர்ப்பனவாக அமைந்துள்ளன. இப்பகுதியில் மேலும் விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டால், இந்தக் கருதுகோளை உறுதி செய்வதற்கும், நகரின் துல்லியமான அமைவிடத்தை அறிந்துகொள்வதற்கும் தெளிவான சான்றுகள் கிடைக்கக்கூடும்.’

இது மயூரநாதன் இவ்விடயத்தில் வந்தடைந்திருக்கும் இறுதி நிலைப்பாடு.

யாழ்ப்பாணப் பட்டினம் அந்நியர் நாட்டில் அடியெடுத்து வைத்த காலம் வரையில் முக்கியமான பட்டினமாகவே இருந்து வந்திருக்கின்றது என்பதையே அது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் அண்மையக் கோட்டை அகழ்வாய்வுகளும் புலப்படுத்துவதாக எனக்குப் படுகின்றது. இவ்விதம் நோக்கும்போது, யாழ்ப்பாணம் பற்றிய பல சந்தேகங்களுக்குத் தர்க்கரீதியான பதில்கள் கிடைக்கின்றன.

மேலும், மயூரநாதன் போர்த்துக்கேயரின் வரலாற்று ஆவணங்களிலிருந்து யாழ்ப்பாணம், பண்ணைத்துறைக்கு அருகிலிருந்த முஸ்லிம் வணிகக் குடியிருப்புப் பற்றியும், முஸ்லிம் வணிகர்களின் பண்டசாலைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். அங்கிருந்த முஸ்லிம் வணிகக் குடியிருப்பை அகற்றிவிட்டே போர்த்துக்கேயர் தமது கோட்டையைக் கட்டியதாகவும் குறிப்பிடுகின்றார். அத்துடன், பண்ணைத்துறைக்கு அண்மையில் காங்கேசன்துறை வீதியை ஒட்டி தென்னிந்திய வணிகக் கணங்கள் இருந்ததற்கான வரலாற்றுச் சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதுவும் முக்கியமான ஓர் உண்மையை வெளிப்படுத்துகின்றது. எதற்காக முஸ்லிம் வணிகக் குடியிருப்பும் பண்டசாலைகளும் பண்ணைத்துறைப் பகுதியில் இருக்க வேண்டும்? யாழ்ப்பாணத் துறைமுக நகர், போர்த்துக்கேயர் வரும்வரை நல்லூர் இராசதானியின் இறுதிக் காலகட்டம் வரையிலும் புகழ்பெற்ற, முக்கியத்துவம் மிக்க நகராக இருந்ததால்தானே? அந்நியர் ஆட்சியின் பின்னரே, அவர்களின் பாதுகாப்புக் கோட்டை காரணமாக அது அம்முக்கியத்துவத்தை இழந்திருக்க வேண்டும். இதனால்தான் யாழ்ப்பாணம் என்னும் பெயரையொட்டியே தமிழர் அரசு பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளிலும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

காவிரிப்பூம்பட்டினம் எவ்வாறு மிகவும் புகழ்பெற்ற துறைமுக நகராக விளங்கியதோ, அவ்வாறே சங்க காலத்திலிருந்து புகழ்பெற்ற துறைமுக நகராக யாழ்ப்பாணப் பட்டினமும் விளங்கியிருக்க வேண்டும். சங்க காலத்தில் புகழ்பெற்றிருந்த யாழ்ப்பாணப் பட்டினம், காலப்போக்கில் மாந்தை தனது புகழ்மிக்க துறைமுக அந்தஸ்தை இழந்திருந்ததைப் போல் தன் இடத்தை இழந்திருந்தாலும், முக்கியமான துறைமுக நகராக இருந்து வந்திருக்கின்றது. அதனால்தான் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் என்னும் பெயர் தொடர்ந்து பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணம் என்னும் பெயர்தான் இந்தியக் கல்வெட்டுகளிலும் திருப்புகழிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

போர்த்துக்கேயர் வந்தபோதும் வடக்கிலிருந்த தமிழர் இராச்சியத்தை யாழ்ப்பாணப் பட்டினத்தின் பெயரைக் கொண்டே அழைத்தார்கள். ஏன்? அப்போதும் யாழ்ப்பாணம்தான் முக்கிய நகராகவும் தமிழர் இராச்சியத்தை வெளிப்படுத்தும் பெயராகவும் வழக்கில் இருந்திருக்கின்றது. அதனால்தான் அவர்கள் ‘யாழ்ப்பாணப் பட்டினம்’ என்பதைத் தம் மொழியில் ‘ஜாஃப்னா பட்டவ்’ எனக் கொச்சையாக உச்சரித்து அழைத்திருக்கின்றார்கள்.

ஒல்லாந்தரும் யாழ்ப்பாணம் என்ற பெயரையே பயன்படுத்தியிருக்கின்றார்கள். கைலாயமாலையும் யாழ்ப்பாணம் என்றே குறிப்பிட்டிருக்கின்றது. மயில்வாகனப்புலவரும் ‘யாழ்ப்பாண வைபவமாலை’ என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றார். ஏன் ‘நல்லூர் வைபவமாலை’ என்றோ அல்லது வேறு பெயரோ அச்சரித்திர நூலுக்குச் சூட்டப்படவில்லை?

யாழ்ப்பாண வைபவமாலையை விட, சபுமல் குமாரயா யாழ்ப்பாணத்தை வென்றதைச் சிறப்பித்துப் பாடும் கோகில சந்தேசய, அதன் சமகால வரலாற்றைப் பற்றிக் கூறும் நூலாகும். அதனால், அது நகரைப் பற்றிக் கூறும் தகவல்கள் ஓரளவு உண்மைக்கு நெருக்கமானவையாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. அதில் யாழ்ப்பாண நகரத்தை ‘யாப்பா பட்டுன’ என்று விவரிக்கும் பகுதிகள் அந்நகரின் சிறப்பான நகர அமைப்பை எடுத்துக்காட்டுகின்றன. அந்நகரம் குபேரபுரியுடன் ஒப்பிடப்படுகின்றது. இது யாழ்ப்பாணப் பட்டினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.

மேலும், சபுமல் குமாரயா யாழ்ப்பாண அரசரை வென்றபோது தலைநகர் சிங்கைநகரில் இருந்தது என்பது சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ. இராசநாயகம் ஆகியோரின் கருத்தாகும். இக்கட்டுரையாசிரியரின் கருத்தும் அதுவே. அங்கு தலைநகர் போரில் அழிந்ததும், மீண்டும் ஒரு தலைநகரை நல்லூரில் அவனே உருவாக்கினான் என்பது முதலியார் செ. இராசநாயகம் போன்றோரின் கருத்தாகும். இக்கட்டுரையாசிரியரின் கருத்தும் அதுவே. அந்நகரை மீண்டும் கைப்பற்றி, தமிழர் அரசு மீண்டும் உருவானபோது, சிங்கைப் பரராசசேகரன் காலத்தில் அதன் நகரமைப்பு தமிழர்தம் நகரமைப்புக் கோட்பாடுகளுக்கு அமையப் புனரமைக்கப்பட்டது. இது இன்று பல வரலாற்றறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. சபுமல் குமாரயா யாழ்ப்பாண அரசை வென்ற காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் புகழ்பெற்ற துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கின்றது. அதனால்தான் யாழ்ப்பாண வெற்றியைக் குறிப்பிடும் கோகில சந்தேசய நூலும் ‘யாப்பா பட்டுன’ என்று யாழ்ப்பாணப் பட்டினத்தைப் புகழ்ந்து பாடுகின்றது.

யாழ்ப்பாணப் பட்டினத்தின் புகழ் காரணமாகவே, அன்று தமிழர்களின் அரசு ‘யாழ்ப்பாண இராச்சியம்’ என்று அழைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இன்றும் யாழ்ப்பாணம் என்னும் நகரின் வரலாற்று முக்கியத்துவம் காரணமாகத்தான் யாழ் மாவட்டம் என்று அப்பகுதி முழுவதும் யாழ்ப்பாணத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அதுபோலவே, அன்றும் யாழ்ப்பாணப் பட்டினத்தின் புகழ், முக்கியத்துவம் காரணமாகத்தான் அப்பகுதியில் ஆட்சியிலிருந்த இராச்சியத்தின் பெயரைக் குறிப்பிடுகையில் யாழ்ப்பாண இராச்சியம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். மேலும், யாழ்ப்பாண இராச்சியம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சிலப்பதிகாரக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய காவிரிப்பூம்பட்டினம் போன்ற துறைமுகப் பட்டினமாக, அந்நியரின் ஆதிக்கத்துக்குள் யாழ்ப்பாணம் செல்லும் வரையில் இருந்திருக்கின்றது. அதன் காரணமாகத்தான் அந்நியராலும் யாழ்ப்பாணப் பட்டினம் என்னும் பொருள்படும் ‘ஜாஃப்னாப் பட்டவ்’, ‘ஜாஃப்னப் பட்டம்’ போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றது. கோகில சந்தேசயவும் ‘யாப்பா பட்டுன’ என அழைக்கின்றது. அதே சமயத்தில், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரங்களாகக் கந்தரோடை, சிங்கைநகர், நல்லூர் ஆகியவையும் இருந்திருக்கின்றன.

மேலும், நல்லூர் தொன்மைமிக்க நகர். சோழர் காலத்துக் கல்வெட்டொன்று அதனை ‘நல்லை மூதூர்’ என்றும், அங்கிருந்த முருகன் கோயில் பற்றியும் குறிப்பிடுகின்றது. யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட ராஜேந்திர சோழன் காலக் கல்வெட்டில் நல்லூரில் முருகன் ஆலயம் இருந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதை கலாநிதி இந்திரபாலா தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், தமிழரின் தொன்மைமிக்க நகரங்களான நல்லூர், யாழ்ப்பாணப் பட்டினம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றிச் சிங்கைநகர் என்று வரலாற்றறிஞர்கள் சிலர் கருதுவது இக்கட்டுரையாசிரியருக்கு ஏற்புடையதல்ல.

பட்டினமும் பட்டணமும்

தமிழில் இரண்டு சொற்பதங்கள் உள்ளன. ஒன்று ‘பட்டினம்’; அடுத்தது ‘பட்டணம்’. பட்டினம் என்பது துறைமுக நகரத்தையும், பட்டணம் என்பது பெருநகர் அல்லது நகரத்தையும் குறிக்கும். போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ‘ஜஃப்னா பட்டவ்’, ‘ஜஃப்னாப் பட்டம்’ போன்ற சொற்பதங்களால் அழைத்தனர். ஒல்லாந்தர் பெரும்பாலும் ‘ஜஃப்னாப் பட்ணம்’ என்னும் பெயரில் அழைத்ததை அவர்கள் காலத்து நிலவரைபடங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ‘பட்ணம்’ என்பது ‘பட்டணம்’ என்பதன் திரிபாக இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணம் புராதன காலத்தில் பெரும்பாலும் யாழ்ப்பாணப் பட்டினம் என்றே அழைக்கப்பட்டிருக்கலாம். பின்னர் அது யாழ்ப்பாணப் பட்டணம் என்றழைக்கப்பட்டிருக்கலாம்.

இன்று யாழ்ப்பாணம் நகரம் தனியாகவும், அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதி யாழ்ப்பாண மாவட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது. கொழும்பு நகர், கொழும்புப் பெருநகர், டொரோண்டோ நகர், டொரோண்டோப் பெருநகர் என்று அழைப்பதைப் போன்றது இது. அக்காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் நிலவிய அரசு யாழ்ப்பாண அரசு என்றே அறியப்படுகின்றது. அரசு நிலவிய அனைத்துப் பகுதிகளும் யாழ்ப்பாணப் பட்டணம் என்றழைக்கப்பட்டிருப்பதற்கும் சாத்தியமுண்டு. யாழ்ப்பாணப் பட்டணம், யாழ்ப்பாணப் பட்டினத்தையும், சிங்கை நகரான வல்லிபுரம், பழைய தலைநகரான கந்தரோடை, பிற்காலத் தலைநகரான நல்லூர் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது.

அந்நியர் ஆதிக்கத்துக்குப் பிற்பட்ட யாழ்ப்பாண நகரத்தின் நகர அமைப்பு, போர்த்துக்கேயர் பண்ணைத்துறையில் கட்டிய கோட்டையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அந்நகரமைப்பு ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலங்களில் புனரமைக்கப்பட்டு வந்துள்ளதை, கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621–1948) என்னும் நூல் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எடுத்துரைக்கின்றது. அவ்வகையில், இந்நூல் வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு நூலாகும். 493 பக்கங்களைக் கொண்ட இந்நூலைக் குமரன், எழுநா, ஆதிரை பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. மிகுந்த உழைப்பின் அறுவடை இவ்வாய்வு நூல். அதற்காக நூலாசிரியர் மயூரநாதனுக்கும், வெளியிட்ட பதிப்பகங்களுக்கும், அதன் பின்னணியில் இருந்தவர்களுக்கும் நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம். நூலைச் சிறப்பாக டொரோண்டோவில் வெளியிட ஓராயம் அமைப்பு உதவியிருக்கின்றது. இதன் மூலம் முக்கியமானதொரு வரலாற்றுப் பங்களிப்பை அவ்வமைப்புச் செய்திருக்கின்றது. இது விதந்தோதப்பட வேண்டிய பங்களிப்பு.

உசாத்துணை நூல்கள்

  1. யாழ்ப்பாணச் சரித்திரம் – முதலியார் செ. இராசநாயகம்
  2. யாழ்ப்பாணச் சரித்திரம் – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
  3. கைலாயமாலை
  4. யாழ்ப்பாண வைபவமாலை
  5. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு – வ.ந. கிரிதரன்
  6. யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621–1948) – கட்டடக்கலைஞர் இ. மயூரநாதன்
  7. ம.க.அ. அந்தனிசிலின் வீரகேசரிக் கட்டுரை: ‘யாழ்ப்பாணம் என்னும் பெயர் தோன்றியது எவ்வாறு?’
  8. Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade – C.E. Davis, P. Gunawardhana, R.A.E. Coningham, P. Pushparatnam, A. Schmidt, M. J. Manuel, H. Namalgamuwa, J. Senanayaka, K.G.Y. Bandara
  9. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி – கலாநிதி க.செ. நடராசா
  10. யாழ்ப்பாண இராச்சியம் – கலாநிதி சி.க. சிற்றம்பலம்