யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
8 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு

November 19, 2026
யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு

கருத்துரை : தமிழ்நதி

யாழ்ப்பாணம் என்றதும் உங்களுடைய நினைவுக்கு வருவது என்ன? எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து தொண்ணூறுகளின் தொடக்கம் வரையிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த (பால்யப் பருவத்திலும், அவ்வப்போது சிற்சில ஆண்டுகளும் அங்கு வசித்திருக்கிறேன் என்றாலும் தொடர்ச்சியாக வாழ்ந்தது அக்காலத்தில்தான்) என் போன்றோரின் நினைவில் யாழ்ப்பாணம் எனப்படுவது போரிருள் அடர்ந்த நிலம். எறிகணை வீச்சுகளும், தாழப் பதிந்து சன்னங்களை உமிழும் உலங்குவானூர்திகளும், இராணுவத்தின் சுற்றிவளைப்புகளும், இடப்பெயர்வுகளும் என அந்நாட்களில் அச்சத்துடனேயே வாழ்ந்தோம். ‘இருண்ட காலத்திலும் பாடல்கள் இருந்ததுபோல’, சந்தோசங்களும் இருக்கவே செய்தன. எந்நேரம் கடைகள் திறக்கும்? எந்நேரம் மூடப்படும் என்பதைக் கடைக்காரர்களோ நாங்களோ அறியோம். பல்கலைக்கழகத்தில் ‘மகாபொல’ உதவித் தொகை கிடைக்கும் நாளன்று, எறிகணை வீச்சுகள் குறைந்திருந்தால் சட்டை வாங்குவதற்காக ‘ரவுனுக்கு’ச் செல்லுமளவு அசட்டுத் துணிவோடிருந்திருக்கிறேன். “நீ ஒருநாளைக்கு Cross Fireஇல் மாட்டுப்பட்டு அநியாயமாச் சாகப் போறாய்” என்ற எனது அறைத் தோழிகளிடம் ‘ஆசீர்வாதம்’ வாங்கிக்கொண்டு போனேனென்பதையும் மறக்காமல் இங்கு சொல்லியாக வேண்டும். சாகாது தப்பித்தேன்; ஆனாலும், துரதிர்ஷ்டம் பீடித்த நாளொன்றில் செவிப்பறை கிழிந்து இடது காது கேட்காது போயிற்று.

மலாயன் கஃபேயில் வடை, றொலக்ஸில் கொத்துரொட்டி, கல்யாணி கிறீம் ஹவுஸில் ‘ஸ்பெசல் ஐஸ்கிறீம்’, பேருந்து நிலையத்தை அண்டிய கடைகளில் வெண்ணிற நூல்களில் கோர்த்துத் தொங்க விடப்பட்டிருக்கும் திராட்சைக் குலைகள், மணிக்குரல் விளம்பரம், றேடியோஸ்பதியில் பாட்டுப் பதிவு, பரபரப்போடு இயங்கிக்கொண்டிருக்கும் பேருந்து நிலையம், அடுத்த சண்டை தொடங்குவதற்கிடையில் பேருந்திலேறி வீட்டுக்கோ வேறு நகரத்திற்கோ செல்லவென பரபரத்தலையும் பயணிகள், பார்வையாளர் நேரத்தை எதிர்பார்த்து வைத்தியசாலை வாசலில் காத்திருக்கும் கவலை தோய்ந்த முகங்களோடான மனிதர்கள், வெடிமருந்தும் மருந்து மணமும் கலந்து வீசும் காற்று, மணிக்கூண்டுக் கோபுரம், மாற்றி மாற்றி இராணுவங்கள் குடியிருந்த கோட்டை, “மாதகல் பண்டத்தரிப்பு சில்லாலை ஏறு” என்று கூவியழைக்கிற மினி பஸ்காரர்கள், சந்தையையொட்டிய வைரவர் கோயில் என எல்லாம் கலந்துகட்டிய நினைவுகள்! யாழ்ப்பாணம் என்றவுடன் இந்த நினைவுகளையெல்லாம் கடந்துதான் இன்றிருக்கும் யாழ்ப்பாணத்துள் வந்து சேரவேண்டியிருக்கிறது.

ஆனால், எண்பதுகளில் நான் கண்ட யாழ்ப்பாணம் உருவாகி வரவே நானூற்றுச் சொச்சம் ஆண்டுகளாகியிருக்கின்றன. அந்த நானூற்றுச் சொச்சம் ஆண்டுகளுள் ஐரோப்பியர் எங்களை ஆண்டது 327 ஆண்டுகள். அக்காலப்பகுதி முழுவதையும் ‘போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் இலங்கையை ஆட்சி செய்தார்கள்’ என்ற ஒற்றை வாசகமாய்ச் சுருக்கி உருப்போட்டுக்கொண்டிருந்தோம்.

‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு’ என்ற நூலை அதனை எழுதிய இ. மயூரநாதன் அவர்களின் பேருழைப்பை வியந்தபடியே வாசித்துமுடித்தேன். அத்தனை உசாத்துணை நூல்கள், குறிப்புகள், கட்டடங்களின் புகைப்படங்கள், நிலப்படங்கள் (Map எனும் ஆங்கிலச் சொல்லை இப்படித் தமிழ்ப்படுத்தியது மிகவும் பிடித்திருந்தது), வீதிகளின் வரைபடங்கள்.

நல்லூர்க் காலம், போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், பிரித்தானியர் காலம் என நான்கு பகுதிகளாகப் பிரித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அதனுள்ளும் பிரித்தானியர் காலமானது ஆண்டுவாரியாக நான்கு காலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நூலின் பெரும்பகுதி, அதாவது 200 பக்கங்கள், பிரித்தானியரது ஆட்சிக் காலத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. 327 ஆண்டுக்கால காலனித்துவ ஆட்சியில் அரைவாசிக்கும் ஒரு தசாப்தம் குறைவாக (1795 தொடக்கம், இலங்கை சுதந்திரமடைந்த (?) 1948 வரையிலான), 153 ஆண்டுக்கால வரலாற்றை உள்ளடக்கியது இப்பகுதி.

இப்போது வாகனங்கள் பாய்ந்துசெல்கிற வீதிகள் முன்பு மண்ணொழுங்கைகளாக இருந்தனவென்றும், நகரமாக இன்றைக்கு மாறியிருக்கிற நிலப்பரப்பில் பெரும்பகுதி வயல்களாக இருந்ததென்றும், அங்கே குளங்களும் மரங்களும் நிறைந்திருந்தனவென்றும் வாசிக்கிறபோது தோற்றப்பிழையாகவே தோன்றுகிறது. அந்நகரத்தின் வீதிகளில் எத்தனை யானைகளின் காலடிகள் பதிந்திருக்கும்! எத்தனையெத்தனை வெள்ளையர்களின் சப்பாத்துக் கால்கள் கடந்திருக்குமென எண்ணியெண்ணி வியந்தது மனம். போர்த்துக்கேயரால் நிர்மாணிக்கப்பட்ட கோட்டையிலிருந்து, தமிழரசர்கள் நிலைகொண்டிருந்த நல்லூருக்குச் செல்லும் வழி காட்டுப் பகுதியாக இருந்ததென வாசித்தபோது, இப்போது நெருநெருவென்று சனங்கள் அலைமோதித் திரிகின்ற தி. நகர் பற்றி அசோகமித்திரன் அவர்கள் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது: “ரங்கநாதன் தெருவில் 9 எண்ணிட்ட வீட்டில் இருந்தேன். குடிதண்ணீர் அடுத்த தெருவிலிருந்தது. குளிப்பது அரைக் கிலோ மீட்டர் தள்ளி தாமோதர ரெட்டித் தெருவில் இருந்த ஓர் உறவினர் வீட்டில். அது நரி உலவும் இடம் என்று சொல்வார்கள். பிசாசுகளும் உலவலாம்.” (ஒரு பார்வையில் சென்னை நகரம்)

1855இல் வேம்படி வீதியில் ஆறு வீடுகள் மட்டுமே இருந்துள்ளன. முற்றவெளிக்கு மேற்கிலும் வடக்கிலும், வேம்படி வீதியையொட்டியும், இன்று யாழ்ப்பாண வைத்தியசாலை அமையப்பெற்றிருக்கும் இடத்திலும் வயல்வெளிகளே இருந்திருக்கின்றன.

சங்கிலித் தோப்பு பற்றிய விவரணையில் “1903 – 1906 காலப்பகுதியில் வடமாகாண அதிபரும் வரலாற்று ஆர்வலருமான ஜே.பி. லூயிசின் முயற்சியால், இந்த நுழைவாயில் அமைப்பைப் பாதுகாப்பதற்காக அதையும் அது இருக்கும் இடத்தையும் 1906ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி 10 ரூபாய் விலைக்கு அரசாங்கம் வாங்கியது” என்றுள்ளது.

அந்நாட்களில் வீதிகளும் விலைகளும் அப்படித்தானிருந்திருக்க முடியும்! நூற்றாண்டுகளைக் கடந்து வாசிக்கும் எமக்குத்தான் புதுமையாகத் தோன்றுகிறது.

நல்லூரை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த தமிழரசர்கள், கடற்கரைக்கு அண்மையில் தமது கோட்டையைக் கட்டியெழுப்பிப் பாதுகாப்பை உறுதிசெய்த போர்த்துக்கேயர்கள், அக்கோட்டையைப் போர்த்துக்கேயர்களிடமிருந்து கைப்பற்றிப் புனரமைத்து அதனைத் தம் கட்டளை மையமாகக் கொண்டு ஆட்சிசெய்த ஒல்லாந்தர்கள் (139 ஆண்டுகள்), நகர் முழுவதையும் சீரமைத்து எல்லைகளை விரிவாக்கி ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆண்ட பிரித்தானியர்கள், இம்மூன்று ஐரோப்பியர்களையும் அண்டி வாழ்ந்த ஆளணிகள், கைவினைஞர்கள், விதிக்கப்பட்ட வரிகள், எழுப்பப்பட்ட தேவாலயங்கள், இடிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், முஸ்லிம்களும் அவர்களுடைய வழிபாட்டிடங்களும், தென்னிந்திய வணிகர்கள், கத்தோலிக்கம் மற்றும் புரட்டஸ்தாந்த மதங்களைப் பரப்ப வந்த கிறிஸ்தவ மிசனரிகள், அவர்களால் கால்கோளிடப்பட்ட கல்லூரிகள், அரச அலுவலகங்களின் நிர்மாணம், வீதிகளது உருவாக்கம், சாதிகளும் தனிக் குடியிருப்புகளும், போக்குவரத்து, மருத்துவம், வணிகம், வடிகாலமைப்பு, நீர் வழங்கல் என விரிந்துசெல்கிறது யாழ்ப்பாணத்தின் வரலாறு.

ஒல்லாந்தர், பிரித்தானியரது ஆட்சிகளில் பதவிகளைப் பெற்று, பதவிகளின் வழி கிட்டிய செல்வத்தின் மூலமும் செல்வாக்கின் மூலமும் நிலங்களுக்கு உரிமையாளர்களாகி, அவற்றைச் சந்ததி சந்ததியாகக் கைமாற்றிய நிலவுடைமையாளர்களைப் பற்றியும் இந்நூல் குறிப்பிடுகின்றது.

ஆபத்துக்குதவி சங்கத்தின் (என்னவொரு பெயர்!) நிர்வாகத்தின் கீழிருந்த யாழ்ப்பாண வைத்தியசாலையை அரசாங்கம் (பிரித்தானியர்) பொறுப்பேற்றமை, யாழ்ப்பாண நகரத்திற்குத் தொடர்வண்டிச் சேவையும் மோட்டார் வண்டிகளும் அறிமுகமானமை, மின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டமை, தெருவிளக்குகள் போடப்பட்டமை ஆகியவை பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

நீரினடியில் அசைந்தபடியிருக்கும் கூழாங்கற்களைக் கையிலெடுத்துப் பார்க்கும்போது அவற்றின் திண்மையும் நிறங்களும் புலப்படுவதுபோல, இதுவரையில் துலக்கமற்றிருந்த இந்நகர் குறித்த புரிதலானது இந்நூலை வாசித்ததன் பின் கொஞ்சம் (எனக்குத்) துலக்கமாகியுள்ளது. முழுமையாகப் புரிந்துகொள்ள மேலும் தேடி வாசிக்கவேண்டும்.

கடந்தகாலம் அடையவியலாத காதலென ஈர்க்கிறது. அந்த வரலாற்றில் நாமும் ஒரு துளி என எண்ணும்போதில் அதனோடு உளப்பூர்வமான நெருக்கம் உண்டாகிறது. சற்றே உணர்ச்சிவசப்பட்டு எந்தையர் பூமியென (எம் தாயார் பூமியுந்தான்) இறும்பூதும் எய்துகிறோம்.

நூலின் சாரத்தை வடித்துவைத்தாற் போன்ற அட்டை, வாசிக்க எளிதான எழுத்துருவும் காகிதமும் என வடிவ ரீதியிலும் மிகவும் சிரத்தையுடன் தயாரிக்கப்பட்ட நூலிது. வாசித்து முடித்ததும் ‘எப்பேர்ப்பட்ட உழைப்பு!’ என்ற மலைப்பு மேலிட்டது.

திருத்தங்கள்: 98ஆம் பக்கத்தில், ‘1982க்குப் பின்னர் யாழ்ப்பாண மன்னர் போர்த்துக்கேயருக்குத் திறை செலுத்திய காலத்தில்’ என்று அச்சிடப்பட்டுள்ளது. அது 1682க்குப் பின்னர் என வரல் வேண்டும். 6 தான் 9 ஆக நிமிர்ந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதுபோல, 159ஆம் பக்கத்தில், ஒல்லாந்தர் காலியைக் கைப்பற்றியது 1944 என்றும், நீர்கொழும்பைக் கைப்பற்றியது 1956 என்றும் அச்சிடப்பட்டுள்ளது. மறுபடியும் ஆறு ஒன்பது ஆகியுள்ளது. முறையே, காலியைக் கைப்பற்றியது 1644 எனவும், நீர்கொழும்பைக் கைப்பற்றியது 1656ஆம் ஆண்டெனவும் கொள்ளவேண்டும்.

உசாத்துணை நூற் பட்டியலைத் தனி நூலாகப் போடலாம். அத்தனையையும் வாசித்து முடிப்பதென்பது அசாத்தியம். எனினும் சிலவற்றைக் குறித்துவைத்தேன்.

அவையாவன: யாழ்ப்பாணச் சரித்திரம் – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, யாழ்ப்பாணச் சரித்திரம் ஆங்கிலேயர் காலம் – செ. இராசநாயகம், நல்லூர் இராஜதானி நகர அமைப்பு – வ.ந. கிரிதரன், நல்லூர் இராசதானியும் யாழ்ப்பாணக் கோட்டையும்: ஒரு மீள்வாசிப்பு – ப. புஷ்பரட்ணம், மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை (குல. சபாநாதன்), இலங்கையில் தமிழர் – ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு – கா. இந்திரபாலா, ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு (இரண்டு பாகங்கள்), ஆறுமுக நாவலர் சரித்திரம் – கனகரத்தின உபாத்தியாயர், பிரித்தானிய கால நல்லூர்: ஒரு நோக்கு – ச. சத்தியசீலன், ‘யாழ்ப்பாண முற்றவெளி: சில நினைவுக் குறிப்புகள்’ – க. குணராசா, யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல் – கா. சிவத்தம்பி.

நூலாசிரியர்: இ. மயூரநாதன்

பக்கங்கள்: 448

வெளியீடு: எழுநா, குமரன் புத்தக இல்லம், ஆதிரை

விலை: 4800 இலங்கை ரூபாய்கள் (இப்போதுள்ள நாணயமாற்றின்படி 1370 இந்திய ரூபாய்கள்)