உத்தியாக்கள்: உள்ளிருந்து பேசும் குரல்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
10 நிமிட வாசிப்பு

உத்தியாக்கள்: உள்ளிருந்து பேசும் குரல் 

August 12, 2026
கருத்துரை: எம்.ஆர். ஸ்ராலின் ஞானம்
உத்தியாக்கள்: உள்ளிருந்து பேசும் குரல் 

‘கிழக்கு மாகாணம்’ குறித்த வரலாற்று நூல்களில் ‘மட்டக்களப்பு மான்மியம்’, ‘மட்டக்களப்புத் தமிழகம்’ போன்றவை பிரசித்தி பெற்றவையாகும். அவற்றைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிரதேசம் சார்ந்து எழுதப்பட்டு வந்த பெருவாரியான நூல்கள் கூட இந்நூல்களை அடிப்படையாகக் கொண்டே விரிவதனை நாம் அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் மேற்படி நூல்கள் கட்டியமைத்த வரலாற்றுப் பதிவுகளில் பெரும்பாலானவை ‘முற்குக மைய’ வரலாறுகளாகவே அறியப்படுகின்றன. இத்தகைய மைய நீரோட்ட அரசியல் வரலாற்றெழுதல்களின் காரணமாக விளிம்பு நிலைக்குப் புறமொதுக்கப்பட்ட சமூகக் குழுக்களில் ‘வேடர்கள்’ முக்கியமானவர்களாவர்.

இந்த வேடர்கள் பற்றிய பல்வேறு விதமான ஆய்வுகளை காலனித்துவ கால ஐரோப்பிய அறிஞர்கள் பலர் மேற்கொண்டிருந்தனர். அதேபோல தமிழ்ச் சூழலில் ஈழத்துப் பூராடனார் செல்வராசகோபால் அவர்கள் 2005ஆம் ஆண்டு எழுதிய ‘யாரிந்த வேடர்’ என்னும் நூலும் வேடர்கள் குறித்து பலவித ஆய்வுகளை முன்வைத்தது. ஆனாலும் இவ்வித நூல்கள் புறவெளியிலிருந்தே வேடர்களைப் பார்க்கும் ஆய்வுகளாகவே இருந்து வந்துள்ளன. இந்நிலையில்தான் இவ்வனைத்துவித ஆய்வுகளிலிருந்தும் வேறுபட்டு வேடர்களின் வரலாறு பற்றி ‘உள்ளிருந்தே பேசும் குரலாக’ பத்திநாதன் அவர்களின் இந்த ‘உத்தியாக்கள்’ வெளிவந்துள்ளது.

இந்நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தில் நாடகமும் அரங்கியல் கற்கை நெறி சார்ந்து தற்காலிக விரிவுரையாளராகச் சிறிது காலம் பணிபுரிந்தவர். தற்போது மானிடவியல் சார்ந்த தத்துவமானி கற்கை நெறியை இந்தியாவில் தொடருகின்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரங்கியல் பற்றி அவர் கல்விகற்ற காலத்தில் தனது இறுதிவருட ஆய்வுக்காக ‘வேடர்களின் சடங்கு முறைகளின் குணமாக்கல் பண்பு’ பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த அனுபவங்களே அவரை வேடர்களின் வரலாறு மற்றும் மானிடவியல் குறித்தும் ஆழமாகப் பயணிக்கத் தூண்டியது என அறிய முடிகின்றது. அதன் விளைவே இந்நூலூடாக அவர் தொடங்கியுள்ள ‘வேடர்கள்’ பற்றிய ஆய்வுப் பயணமாகும்.

கிழக்கு மாகாணத்தில் பரவலாக வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் வேடர்கள் பற்றியதாகவே இந்நூல் அமைந்துள்ள போதிலும், குறிப்பாக எழுவான் கரைகளில் வாழ்ந்து வருகிற ‘கரையோர வேடர்கள்’ பற்றியே கூடிய கவனம் கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் என்று பொருள்படக்கூடியதாக வேடுவ மொழியில் ‘உத்தியாக்கள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலானது, வேடுவர்களின் இனக் குழுத்தலைவர்களாகவும் சமூக வழிகாட்டிகளாகவும் ‘கப்புறாளைகள்’ என்றழைக்கப்படும் சடங்காற்றுநர்களாகவும் மருத்துவர்களாகவும் தங்களோடு வாழ்ந்து மடிந்து போன நீத்தார்களின் குரலாக ஒலிக்கின்றது.

இறந்துபோன முன்னோர்களையும் அவர்களது ஆவிகள் என்று நம்பப்படுகின்ற அமானுஷ்யங்களையும் வழிபடுதலே மனித குல வரலாற்றின் முதல் வழிபாட்டு முறையாக இருத்தல்கூடும். தமிழர் மெய்யியலில் புறநானுற்றுக் காலத்து நடுகல் வழிபாட்டு முறைகளும் சூபி முஸ்லிம்களிடையே காணப்படும் கபுறு வணக்க முறைகளும் கூட அதன்பாற் பட்டனவேயாகும். அந்த வகையில் குறித்த கடலோர வேடர்களிடையே காணப்படும் ‘உத்தியாக்கள்’ வழிபாட்டின் புராதன தொடர்ச்சியை இந்நூலின் தலைப்பு பிரதிபலிக்கின்றது.

அத்தோடு வேடர்களின் இயற்கையோடிணைந்த வாழ்க்கை முறைகள், இயற்கைசார் உணவுப் பழக்கவழக்கங்கள், மூலிகை வைத்தியங்கள்; கலையாடல், வாக்குரைத்தல், கழித்தல், பரிகாரித்தல், கட்டுச்சொல்லுதல், ஆற்றுப்படுத்தல் போன்ற உத்தியாக்கள் மூலமான வழிபாட்டுச் சடங்காற்று முறைகள்; கரடிக்கூத்து, புலிக்கூத்து போன்ற நிகழ்த்துகலைகள் என்று கடலோர வேடர்களின் வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களையும் தரிசிக்கும் வாய்ப்பை இந்நூல் தருகின்றது.

இக்கரையோர வேடர்களின் பாரம்பரிய வாழ்விடங்களாக மூதூர் தொடங்கி வாகரை, வெருகல், களுவன்கேணி, வேப்பவெட்டுவான், குசானமலை வரையான சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை அடையாளமிடும் இந்நூலாசிரியர், திருக்கோவில், போரதீவு, சித்தாண்டி, வெருகல் போன்ற இடங்களில் அமைந்துள்ள சித்திர வேலாயுதர் சுவாமி கோவில்கள், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர், மண்டூர் முருகன் ஆலயம் என்று அனைத்துமே ஆதிக்க சமூகங்களால் கையகப்படுத்தப்பட்ட வேடர்களின் பூர்வீக வழிபாட்டிடங்கள் என்றுரைக்கின்றார். உதாரணமாக, 

“கழுவோ வித்தனமா தொழுவோ வித்தனமா

கழுவன்னீ  தொழுவன்னீ …லே பூஞ்சி தப்புரம்மா

பூ நொச்சி முனையோ கல்குடாவோ தொப்பிகலையோ…ஓ

சீம்பிலாகல் மாப்பாரே தெய்நாச்சி”  

என்பது போன்ற வேட்டுவ மொழி வழிபாட்டுப் பாடல்கள் ஊடாக அம்பாறை மாவட்டத்தின்  சீயம்பிலாகல வரையான தங்கள் பூர்வீக பூமிகளை அகக்குரல்களில் துணை கொண்டு ஆசிரியர் அடையாளம் காட்டுகின்றார்.

மேற்படி ஆய்வுகளில் காத்தான், புலியன் போன்ற வேடுவத் தலைவர்கள் ஆண்ட காத்தான்குடி, புளியந்தீவு போன்ற பிரதேசங்கள் பற்றியோ களுவன் எனும் வேடுவத் தலைவனின் ஆட்சியின் கீழிருந்த களுதாவளை, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்கள் பற்றியோ ஆய்வுக் குறிப்புகளைக் காண முடியவில்லை. எதிர்காலத்தில் இவை குறித்தும் நூலாசிரியர் கவனங்கொள்ளுதல் நன்று.

கிழக்கு மற்றும் ஊவா மாகாண எல்லைப் பிரதேசங்களில் காணப்படும் மகியங்கனை, விந்தனை போன்ற இடங்களில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்த வேடர்கள், பல்வேறு காலகட்டங்களில் இடம்பெயர்ந்தும் துரத்தப்பட்டும் எழுவான் கரையோரங்களை நாடி சீவனம் கொள்ளத் தொடங்கியதாக அறியமுடிகின்றது. புராதன காலத்திலிருந்தே திமிலர்கள், முக்குவர்கள், வேளாளர்கள், சோழர்கள், கலிங்கர், நாயக்கர்கள், இஸ்லாமியர்கள், ஐரோப்பியர்கள் என்று எல்லோராலும் தங்கள் வாழ்வும் வளமும் மொழியும் பண்பாடுகளும் சிதைக்கப்பட்டே வந்துள்ளன என்கின்ற துன்பியல் வரலாற்றை இந்நூல் செவ்வனே பதிவு செய்துள்ளது.

அந்த வகையில் வேடர்கள் என்போர் இலங்கை வரலாறுகளில் பிரஸ்தாபிக்கப்படும் இயக்கர்களினதோ நாகர்களினதோ வாழ்த்தோன்றல்கள் இல்லையென அறுதியிட்டுக் கூறும் ஆசிரியர், ‘வேடர்களே’ இந்நாட்டின் உண்மையான பூர்வீக குடிகள் எனப் பிரகடனம் செய்கின்றார். அதுமட்டுமன்றி தாங்கள் தமிழர்களோ சிங்களவர்களோ இல்லையென்று மறுதலித்து தமது தனித்துவத்தை உயர்த்திப்பிடிக்கும் ஆய்வாகவும் இந்நூல் நகருகின்றது. வரலாறுகள் என்பன எப்போதும் ஒரே படித்தானவை இல்லைத்தானே?

ஆனால் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகள் காரணமாக தங்கள் மொழியும் கலப்புற நேர்ந்தமை பற்றியும், அதன் காரணமாக சிங்களப் பகுதியில் வாழும் வேடர்கள் சிங்களவர்களாகவும், தமிழ்ப் பகுதிகளில் வாழும் வேடர்கள் தமிழர்களாகவும் மாறிவருகின்றமை பற்றியும் பல்வேறு மனக்குறைகளை வெளிப்படுத்துகின்றார். இத்தகைய மொழிக்கலப்பின் காரணமாக இன்று இலங்கையில் சுமார் நாற்பதாயிரம் பேர் வரையானோரே வேட்டுவ மொழி பேசும் வன சுதந்திர மனிதர்களாக வாழ்ந்து வருவதாகப் பதிவு செய்கின்றார்.

இவ்வாறாக தொல்குடி வேடர்களின் ஆதிப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் ஆய்வுகளோடு இணைந்து அவற்றை மீளுருவாக்கம் செய்யும் சிந்தனைகள் நோக்கியும் இந்நூல் கவனம் கொண்டுள்ளது. குறிப்பாக இயற்கையோடு இணைந்து, இயற்கையைப் போஷித்து வாழ்ந்த தங்கள் முன்னோர்களின் வாழ்வியல் முறைதான் இயற்கையின் சமநிலையைப் பேணியது என்று விளக்குவதன் ஊடாக, மனித குலத்தின் எதிர்காலத்தில் அரசியல், பொருளாதார விடயங்களில் பெரும் தாக்கம் செலுத்தப்போகும் சூழலியல் கருத்தாக்கம் குறித்து எம்மை மென்மேலும் சிந்திக்கத் தூண்டுகின்றது இந்நூல்.

அத்தோடு இன்றுவரையான காலப்பகுதியில் இப்பழங்குடிகளின் வாழ்வியல் அம்சங்கள் எவ்வாறான மாற்றங்களைக் கடந்து வந்திருக்கின்றன என்பது குறித்தும், அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் காலத்துக்குக் காலம் மாறுபட்டு வந்த ஆக்கிரமிப்புகள் குறித்தும் இந்நூல் விரிவாக்கப் பேச முனைகின்றது. அதாவது மொழி, மத மற்றும் கலாசார அம்சங்களில் இடம்பெற்றுவரும் பண்பாட்டு ஆக்கிரமிப்புகள் கரையோர வேடர்களின் பாரம்பரியக் கலாசாரங்களையும் தனித்துவங்களையும் எவ்வாறு அழித்து வருகின்றன என்பன பற்றிய நிறைந்த கள ஆய்வுத் தகவல்களில் தோய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய ஆய்வு முயற்சிகள் அரிதானவை மட்டுமல்ல, ஆச்சரியம் மேலிடச் செய்வனவுமாகும். அவ்வகையில் செறிவார்ந்த நேரத்தையும் காலத்தையும் அயராத உடலுழைப்பையும் இந்நூலுருவாக்கத்துக்காக ஆசிரியர் அர்ப்பணித்துள்ளமை கண்கூடாகின்றது.

அத்தோடு இந்த ‘உத்தியாக்கள்’ ஒரு வரலாற்று ஆய்வு நூல் என்னும் ஒற்றைச் சட்டகத்தைத் தாண்டி, கடலோர வேடர்கள் எதிர்கொள்ளும் தற்கால வாழ்வியல் சவால்களையும் பேசும் ஒரு நூலாகவும் பரிணமிக்கின்றது.

குறிப்பாக திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தில் உள்ள ‘குவேனி பழங்குடிகள் நலன்புரி அமைப்பு’ போன்றவை முன்வைக்கும் பல்வேறு அன்றாடப் பிரச்சினைகளை இந்நூல் பதிவு செய்கின்றது. அப்பிரதேசங்களில் வாழும் பழங்குடிகள் மீது நிகழ்த்தப்படும் பண்பாட்டுச் சிதைப்புகள், நிர்வாகப் பயங்கரவாதங்கள் குறித்த பல தகவல்களை அறிய முடிகின்றது. இஸ்லாமிய விரிவாக்கம் மற்றும் கிறிஸ்தவமயமாக்கல் போன்றவற்றால் தங்களது தனித்துவங்கள் அழிக்கப்படுவது குறித்தும் இந்நூல் விவரமாகப் பேசுகின்றது. யுத்தகால அவலங்கள் காரணமாக பல தடவைகளில் வேடுவர்கள் மீது இடம்பெற்ற கைதுகள், துரத்தியடிப்புகள், இடப்பெயர்வுகள் போன்றவை பற்றியும் இந்நூல் விவரமாகப் பேசுகின்றது.

குறிப்பாக நல்லூர், பாட்டாளிபுரம், நீனாக்கேணி, வீரமாநகர் போன்ற இடங்களில் புராதன காலம் தொட்டு வாழ்ந்த ‘வேடர்கள்’ கிழக்கில் இறுதியுத்தம் இடம்பெற்ற 2006ஆம் ஆண்டு காலத்தில் முழுமையாக இடம்பெயர நேர்ந்தமையினால் அவர்களது விவசாய நிலங்கள், குளங்கள், வழிபாட்டிடங்கள் என்று பாரம்பரியமான வாழ்விடங்களை இழந்து நிற்கின்றனர் என்பது போன்ற தகவல்கள் இதுவரை பொதுசன ஊடகங்கள் பேசாத விடயங்களாகும். இதனை “தோப்பூரைச் சேர்ந்த முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களால் 1000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது” என்று உத்தியாக்களின் குமுறலாக வெளிப்படுத்துகின்றார் ஆசிரியர்.

இந்த ‘உத்தியாக்கள்’ சொல்லும் மாற்று வரலாற்றுப் பார்வைகள் எங்கிருந்தோ வந்த வெள்ளைச்சட்டை ‘அறிஞர் குழாத்தின்’ ஆய்வுகளாகவோ அல்லது கணினி முன்னமர்ந்து களமாடும் ஆய்வுகளாகவோ முன்வைக்கப்படவில்லை. தன்னிலையிலிருந்தும், தன் சொந்த வாழ்வனுபவங்கள் ஊடாகவும் இவ்வாய்வுகளை நமக்குத் தந்துள்ளார் ஆய்வாளர். அத்தோடிணைந்ததாக தன்னைச் சுற்றி வாழும் கடலோர வேடக் குடிகளான மூத்த பிரசைகளின் வாய்மொழி வரலாறுகள், கதையாடல்கள், பாடல்கள் போன்றவற்றைப் பனுவலாக்கி ஒரு மாபெரும் மானிடவியல் வரைவு நோக்கி நம்மை இழுத்துச் செல்கின்றார்.

இத்தகைய ஆய்வு முயற்சிகளே, பிரதிகளின் மீது ஆசிரியர்கள் செலுத்தும் ஆதிக்கத்தின் பிடிகளைத் தளர்த்தி பன்முக வாசிப்புக்கு வழிவகுத்து நம்பகத்தன்மையையும் உறுதி செய்கின்றன. அந்த வகையில் இந்த ‘உத்தியாக்கள்’ என்னும் ஆய்வு நூலை ஒரு பின்நவீனத்துவ பிரதியாக நாம் அணுக முடியும்.

இந்த உத்தியாக்களின் குரல்கள் ஊடாக மட்டக்களப்பு வரலாற்றெழுதியலில் ஒரு நிராகரிக்க முடியாத அம்சமாக கரையோர வேடர்களின் பண்பாட்டு அசைவியக்கத்தை மாற்றியுள்ளார் ஆசிரியர். அந்த வகையில் மைய நீரோட்ட அரசியல் சமூகப் பொது வெளியில் இந்நூல் எதிர்காலத்தில் பெரும் பேசுபொருளாக மாறும் என்று நம்புகின்றேன்.

‘எழுநா’ வெளியீடாக வந்துள்ள இந்நூலுக்கு முறையே முனைவர் பக்தவத்சல பாரதி, கலாநிதி மெளனகுரு மற்றும் பேராசிரியர் சி. ஜெயசங்கர் போன்ற அறிஞர்கள் விரிவான முன்னுரைகளைத் தந்துள்ளனர்.

வரலாற்று ஆய்வு நூல் என்னும் மேதாவித்தனங்களுக்குள் நின்றுலவாத ஆசிரியரின் இலகு நடை எழுத்தமைவு காரணமாக ஆய்வு நூலுக்குரியதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள கடின வாசிப்பை இந்நூல் கோரவில்லை. இந்நூலாசிரியர் ஆய்வாளராக மட்டுமன்றி மரபார்ந்தும் துறைசார்ந்தும் ஒரு வாழ்க்கைக் கூத்தனாக இருக்கின்றார். எனவே கரையோர வேடர்களின் நாட்டுப்புற வழக்காற்றியல் பண்புகள் மாறாத தன்வரலாற்று இலக்கியமாகவும் இந்நூல் மற்றுமொரு பரிணாமம் பெறுகின்றது எனலாம். இதனையே ‘அவர்கள் பேசத்தொடங்கி விட்டார்கள்’ என்று தனது முன்னுரையில் சிலாகிக்கின்றார் ஐயா மெளனகுரு அவர்கள்.

இந்நூலாசிரியர் வயதில் ஓர் இளம் ஆய்வாளராக இருக்கலாம். ஆனால் இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு தகவல்களும் அவை சார்ந்து அவர் முன்வைக்கும் பார்வைகளும் எழுப்புகின்ற கேள்விகளும் ஒரு தேர்ந்த ஆய்வாளனுக்குரிய முதுமையின் கனதியைப் பறைசாற்றி நிற்கின்றன. அந்த வகையில் தோழர் பத்திநாதன் அவர்கள் ஒரு எஸ்.ஓ. கனகரெட்ணம் போல, ஒரு எஃப்.எக்ஸ்.சி. நடராசா போல, ஒரு வி.சீ. கந்தையா போல, ஓர் ஈழத்துப் பூராடனார் போல எதிர்காலத்தில் ‘மட்டக்களப்புத் தமிழகம்’ சார்ந்த தனது ஆய்வுப் பணிகளில் புகழ் பெறுவார் என்னும் நம்பிக்கை பிறக்கின்றது.

நன்றி: அரங்கம் மின்னிதழ்