பசுமையின் அபாயங்களும் அபிவிருத்தியின் ஆபத்துகளும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
10 நிமிட வாசிப்பு

பசுமையின் அபாயங்களும் அபிவிருத்தியின் ஆபத்துகளும்

August 6, 2026
கருத்துரை: நஸீஹா ஹிஸ்மி
பசுமையின் அபாயங்களும் அபிவிருத்தியின் ஆபத்துகளும்

இலங்கையில் அண்மைக்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மற்றும் நவீன அபிவிருத்தித் திட்டங்களின் பின்னாலுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், மறைக்கப்பட்ட பொருளாதாரக் காரணிகளையும் விரிவான தரவுசார்ந்த ஆய்வுகளுடன் விவரிக்கிறது கலாநிதி ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் ‘பசுமை எனும் பேராபாயம்’ என்ற நூல். தற்காலச் சூழலியல் கொள்கைகள் குறித்த முறையான விசாரணையையும், புறவயமான விமர்சனப் பார்வையையும் முன்வைக்கும் இந்நூலின் உள்ளடக்கத்தை விரிவாக ஆராயும்போது மட்டுமே, இதன் முகப்புத் தலைப்பில் உள்ள குறியீட்டுத் தனித்துவத்தையும் அதன் பொருளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நவீனக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மறைப்பதற்காகக் கையாளும் ‘பசுமைப் போர்வை’ (Greenwashing) உத்திகளைத் தர்க்கரீதியாக அம்பலப்படுத்துவதில் இந்நூல் ஒரு முக்கிய கல்விசார் பங்களிப்பாக அமைகிறது.

பசுமை என்பதை அடையாளம் காட்டி உலகையே நாசமாக்கிக்கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களை திட்டமிடுவோரும் அமுல்படுத்துவோரும் அதனால் துன்பப்படுவோரும் இதன் உட்கருத்தை ஆழமாக அறிந்தால் அபாயத்தின் விளிம்பிலிருந்தேனும் தப்பித்துக் கொள்ளலாம். இந்நூலுக்கான அணிந்துரையில் திரு. அசோக்பரன் அவர்கள், நூலாசிரியர் நூலை ஒரு கூர்மையான விமர்சன மற்றும் விசாரணை ஆயுதமாகவும் வழிகாட்டும் திசைகாட்டியாகவும் சரியாகவே சித்திரித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார். முக்கியமாகப் பசுமை, இயற்கை எனும் சொற்களை புதிய சமூகக் கருத்தாடலாகக் கொண்டு வருகிறது இந்நூல். இதனால்தான் அட்டைப்படத்தின் கீழ்ப் பகுதியில் ஓரம் கட்டப்பட்ட, எப்பொழுதுமே போராட்டத்தின் மூலமே வாழும் உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளான மக்களின் நிழல் கொண்ட படமும் உள்வாங்கப்பட்டுள்ளது. இம்மக்கள் சீமெந்துத் தொழிற்சாலை, அனல் மின்நிலையம் மற்றும் அமுல்படுத்தப்பட வேண்டும் எனப் பலராலும் அழுத்தத்துக்கு உட்பட்டுக் கொண்டிருக்கின்ற அருவக்காடு குப்பைத் திட்டம் போன்ற உயிர்கொல்லித் திட்டங்களில் இருந்து தம்மையும் தமது சந்ததியினரையும் பாதுகாக்கப் போராடும் புத்தள மக்களாகவும் இருக்கலாம் எனத் தோன்றுகின்றது.

‘பசுமை’ என்ற பெயரிலேயே இயற்கைக்கு உலை வைத்த பல திட்டங்களை இந்நூல் அம்பலப்படுத்தியுள்ளது. உலகளவில் நடக்கும் இந்தப் போலிப் பசுமை நாடகங்களுக்கு நமது இலங்கையும் விதிவிலக்கல்ல என்பதை இது மிகத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது. அண்மையில் ஒரு தனியார் நிறுவன உற்பத்திச் சாலை தனது சுதந்திர தினச் செய்தியில் ‘உண்மையான சுதந்திரம் என்பது சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் உரிமையே’ எனக் குறிப்பிட்டு இருந்தது. இந்த உற்பத்தி நிலையம் ‘சூழல் நேயம்’, ‘மீள்சுழற்சி’ என்ற பல திட்டங்களையும் வகுத்துக் கொண்டு தமது உற்பத்திப் பொறிமுறைக்கும் சாம்பலாக்கும் (Incineration) முறைமையை பிரயோகிக்கின்றது. ஏற்கனவே தூசு, நச்சு வாயுக்களின் வெளியேற்றம், நீர்வாழ் மீன் இனங்களில் ஏற்படும் பாதரச மாசடைவு, வெப்ப வெளியேற்றம் ஆகியவற்றுக்குக் காரணமாக அமைந்த இந்நிறுவனம் இன்று சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் சுதந்திரம் பற்றிப் பிரசாரம் செய்வதை திரைப்படப் பாணியாகவே உணர்கின்றேன்.

இன்று உலகளவில் பல சந்தைப்படுத்தல் உத்திகள், ‘இயற்கை மூலிகை’, ‘இயற்கைச் சாறுகள்’, ‘இயற்கைச் சேர்மானங்கள்’ போன்ற சொற்களையே முதன்மையாகப் பயன்படுத்துகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஏழை மக்கள் உணவாக உட்கொள்வதற்கே ஏங்கும் முட்டை, பாதாம், கேரட் போன்றவை, அழகு சவர்க்காரங்களிலும் ‘கிரீம்’களிலும்தான் அதிகளவில் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகின்றன. இந்தக் ‘கிரீம்’ வகைகளில் அதிகமானவை அங்கீகரிக்கப்பட முடியாத அளவு பாதரச அளவினைக் கொண்டுள்ளன. இவை பயன்படுத்தப்பட்ட பின்னர், அவை உள்ளடங்கியிருந்த போத்தல்கள் மற்றும் ‘டியூப்’கள் மீண்டும் சூழலுக்கே திரும்பிச் செல்கின்றன. இவ்வாறான பசுமை பற்றிய பல கட்டுக்கதைகளையும் படம் பிடித்துக் காட்டும் இந்நூல், இதனால் ஏற்படும் பேராபாயங்களையும் சூட்சுமமாக முன்வைக்கின்றது. மேலும், உலகளவில் ஒவ்வொரு விநாடிக்கும் சுமார் 20,000 பிளாஸ்டிக் போத்தல்கள் கழிவுகளாகச் சுற்றுச்சூழலில் கொட்டப்படுகின்றன. எவரெஸ்டின் பனிப்பாறை, மரியானா ஆழி போன்றவற்றையும் இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள் விட்டு வைக்கவில்லை என்பதையும் இந்நூல் ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். முக்கியமாக நாம் சிந்திக்காத நச்சுக் காலனித்துவம் பற்றியும் இந்நூல் நமக்குத் தெளிவூட்டுகின்றது. இதன்போது, நம்மை முன்னர் அடிமைப்படுத்தி ஆண்ட பிரித்தானியாவில் இருந்து கழிவுப் பொருட்கள் நிறைந்த கொள்கலன்கள் நம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். காலனித்துவ ஆட்சிக்கிடையே நமது பாரம்பரிய இயற்கை நடைமுறைகள் அழிக்கப்பட்டு, அவர்களின் சுயநலத் திட்டங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்ட சூழ்ச்சிகளையும், அதனால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளையும் இந்நூல் சிறப்பாகப் பகுப்பாய்வு செய்கிறது.

இலங்கையின் குடியேற்றத் திட்டங்களில் ஒன்றான கல்லோயாத் திட்டத்தின் பின்னணியிலுள்ள உண்மையான நோக்கத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்நூல், அத்திட்டத்தால் சாதாரண மக்களின் வாழ்க்கைக் கோலத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் விரிவாக ஆராய்கிறது. குளிரூட்டப்பட்ட அறைகளிலும் ஆடம்பர வாகனங்களிலும் அமர்ந்துகொண்டு உயர் வர்க்கத்தினர் எடுக்கும் ஒருசில முடிவுகள், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்பதை மிகத் தெளிவாக விளக்குவதால், இந்நூல் வாசகர்களுக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக அமைகிறது.

எமது நாட்டில் அன்று முதல் இன்று வரை அபிவிருத்தித் திட்டங்களுடன் கலந்துறவாடி வரும் ‘தேசியவாதம்’, ‘அவசரத் திட்டமிடல்’, ‘கட்டுமானத்தின் பின்னர் திட்டமிடல்’, ‘மக்கள் எதிர்ப்பின் மத்தியில் கெடுபிடி அமுலாக்கம்’ போன்ற பன்முகங்களையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

இப்பொழுது, 2026ஆம் ஆண்டில், சக்தி வள பிரதி அமைச்சர் நுரைச்சோலை அனல் மின்நிலைய செயற்றிட்டத்துக்கான சரியான இடம் தெரிவு செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 2003ஆம் ஆண்டில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அனல் மின்நிலையத்தின் இட அமைவின் காரணமாக செப்டம்பர் முதல் ஏப்பிரல் வரை மட்டுமே நிலக்கரி இறக்குமதி செய்ய முடியுமாக உள்ளது. இக்காலப்பகுதி நாம் நிலக்கரி கொள்வனவு செய்யும் ரஷ்யா போன்ற நாடுகளில் குளிர்காலம் என்பதால் அங்கு நிலக்கரி விற்பனை விலை அதிகரிக்கும். இவ்வாறு நிலக்கரி அதிக விலையில் விற்பனை செய்யப்படும் காலத்திலேயே நிலக்கரியைக் கொண்டு வந்து இறக்க வேண்டிய வலுக்கட்டாய நிலைமைக்கு இந்நிலையத்தின் அமைவிடமே காரணமாக உள்ளது. 

அது மட்டுமன்றி 2018ஆம் ஆண்டில் சூழல் நீதிக்கான அமைவு மற்றும் ஐ.பி.இ.என் இணைந்து நடத்திய ஆய்வில், புத்தளம் களப்பில் உள்ள மீன்கள் மாசடைவுக்கு உட்பட்டுள்ளமையும், மீன்களைப் பிரதான புரத உணவாக உட்கொண்ட பிள்ளை பெறும் வயதில் உள்ள 18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்களது தலைமுடியில் சாதாரண அளவான 0.5ppmஐ விட மிக அபாயகரமான அளவு பாதரசம் காணப்படுவதாகவும், இப்பாதரச மாசடைவுக்கு அனல் மின்நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளின் வெளியேற்றக் கழிவுகள் காரணமாக அமையலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாதரச மாசடைவு மூளை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்பு, ஞாபக மறதி நோய், கற்றல் சம்பந்தமான பிரச்சினைகள் போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே விடயம் தொடர்பான பல செயற்றிட்டங்கள் இப்புத்தகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. முக்கியமாக மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பாதிப்புகள் ஆராயப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. மலைநாட்டுப் பகுதியில் உற்பத்தியாகிப் பள்ளத்தை நோக்கிப் பாயும் மகாவலி கங்கை அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் செயற்படுத்தப்பட்ட செயற்றிட்ட முறைமையினை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை ஓர் அறிவியல் மீள்பார்வையைத் தூண்டுவதாக உள்ளது. இலங்கையின் பல்வேறு செயற்றிட்ட வழுக்களுக்குக் காரணமாக அமைந்துள்ள சாத்தியக்கூற்று அறிக்கையின் (FSR) தவறுகள் பற்றியும் நூலாசிரியர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

விக்டோரியா நீர்த்தேக்கத் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட சாத்தியக் கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அளவைவிட 4 மடங்கு அதிகமான மக்கள் இச்செயற்றிட்டத்தினால் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது முன்மொழியப்பட்டுள்ள அருவக்காடு நில அகழி நிரப்பல் செயற்றிட்டத்திற்கான சாத்தியக் கூற்று அறிக்கையும் கூட, அப்பிரதேசம் மக்கள் குடியிருப்புகள் அற்ற பிரதேசம் எனவும், 2.5 கிலோமீட்டரை விடத் தூரத்திலேயே மக்கள் வாழ்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 300 மீட்டர் அளவு தூரத்தில் மீனவக் கிராமங்கள் அமைந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

1994ஆம் ஆண்டு ‘நியூ சயின்டிஸ்ட்’ (New Scientist) இதழில் வெளியான செய்தியை இந்நூல் மேற்கோள் காட்டுகிறது. அதில், விக்டோரியா அணைக்கட்டுத் திட்டத்தின் முதன்மை நோக்கமே, இலங்கையில் பெறும் அனுபவத்தைக் கொண்டு உலகின் பிற பகுதிகளில் அத்திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நமது இலங்கை நாடு வல்லரசுகளின் பரிசோதனைக் கூடமாகவும், மக்கள் சோதனை எலிகளாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக உணர முடிகிறது.  

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதை விட மின்சார உற்பத்தியே அவசரத் தேவை என்ற அடிப்படையில், மேல் கொத்மலைத் திட்டத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை அனுமதி வழங்கியது. இதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தும் ஏனைய திட்டங்களுக்கும் அவர்கள் எந்தக் காரணங்களைக் கூறி அனுமதி வழங்குகிறார்கள் என்பதையும் இந்நூல் விளக்குகிறது.

மேலும் சம்பூர் அனல் மின்நிலையத்துக்கு எதிரான வெற்றிமிக்க மக்கள் போராட்டம் பற்றியும் இந்நூல் குறிப்பிடத் தவறவில்லை. சுன்னாகம் நிலத்தடி நீர்ப் பாதிப்புப் பற்றிய பிரச்சினைகள் மற்றும் இலங்கை மக்களின் கண்களைக் கட்டி ஏமாற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம் ஆகியன பற்றியும் சிறப்பாக முன்வைத்துள்ளார் நூலாசிரியர் கலாநிதி ஞாலசீர்த்தி மீநிலங்கோ. இருப்பினும், புத்தளம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பல பாதிப்புகளை ஏற்படுத்தியதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், எதிர்காலத்தில் அமுல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இந்நூல் குறிப்பிடத் தவறியதை சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.

இந்நூல் வெறும் விமர்சனங்களோடும் கேள்விகளோடும் நின்றுவிடாமல், குடிமக்களாகிய நமது கடமைகளையும், சூழல் சார்ந்த விழிப்புணர்வையும் எடுத்துரைக்கிறது. அதுமட்டுமின்றி, இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், அதற்கு எத்தகைய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதைப் புரியவைக்கும் ஒரு சிறந்த சுயகற்றல் வழிகாட்டியாகவும் திகழ்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்நூல் பல்துறைசார் அறிவுத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவருக்கு அறிவு ஊற்றாகவும், ஆய்வாளர்களுக்கு ஆய்வுத் தேடலை விருத்தி செய்யும் ஒரு தூண்டல் கருவியாகவும் அமைந்துள்ளது. சமூகவியல், விஞ்ஞானம், பொருளியல், வணிகம், வரலாறு, புவியியல், பொறியியல், மருத்துவம் போன்ற அனைத்துத் துறை சார்ந்தோரும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய உண்மையான நிலைப்பாடுகளை அறிந்து கொள்வது மிக அவசியமாகும். அன்றேல் அவர்களது துறைசார் நிபுணத்துவம் பூரணமற்றது என்றே கருத வேண்டும். ‘பசுமை எனும் பேராபாயம்’ என்ற இந்நூல் அனைத்து மக்களுக்கும் அவர்களது துறை, வயது, மதம் மற்றும் வாழுமிடம் போன்ற வித்தியாசம் இன்றிய பொதுவான கல்விக் களஞ்சியமாக உள்ளமை மறக்க முடியாத உண்மையாகும். இந்நூல் பரவலாகச் சென்றடைய வேண்டும். சூழல் பற்றியும் பசுமை பற்றியுமான அக்கறையை மக்களிடம் உருவாக்கவும், இளந்தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லவும் இந்நூல் பயனுள்ளது.