வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
10 நிமிட வாசிப்பு

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்

July 22, 2026
கருத்துரை: பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்
வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்

அமரசிங்கம் கேதீஸ்வரன் எழுதிய ‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற நூலுக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதில் பெருமை கொள்கிறேன். 2025இல் வெளிவந்துள்ள இந்நூல் ஒன்பது அத்தியாயங்களையும் 168 பக்கங்களையும் கொண்டுள்ளதுடன், அழகுற வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்தையும் கொண்டிருக்கிறது. இதற்கான அணிந்துரைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவராலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராலும் எழுதப்பட்டுள்ளன. நூலாசிரியர் என்னுரை என்ற பகுதியைத் தந்துள்ளார். எங்கள் எல்லோருக்கும் பரிச்சயமான நூலாசிரியரின் தாயாருக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

நூலாசிரியர் தனது நூலினூடாக வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களையும் அதன் பயன்பாட்டையும் முதன்மைப்படுத்தியுள்ளார். இதன் உள்ளடக்கங்களை ஒவ்வொரு அத்தியாயமாக விளங்கிக்கொண்டு அளவீடு செய்வது அவசியமானதாகத் தெரிகின்றது. அதனடிப்படையில் முதல் பகுதியாக ‘வடக்கு-கிழக்கு மாகாணங்களுடைய வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற அறிமுகம் தரப்பட்டுள்ளது. குறித்த அத்தியாயத்தில், வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பிரதேசம் பற்றிய அறிமுகம், அங்குள்ள வளங்கள் மற்றும் அவை சார்ந்த புள்ளிவிவரத் தரவுகள் ஆகிய விடயங்களே முதன்மையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் முக்கிய ஆய்வுப் பொருளாக, ‘வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொருளாதார உந்துசக்தியாக அமையக்கூடிய நிலம், காடு, காலநிலை, சனத்தொகை, விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித் துறை, பொருளாதாரக் கட்டமைப்புகள், சக்தி வளம், நீர் மற்றும் நீர்நிலைகள் முதலான வளங்கள் பற்றிய பகுப்பாய்வு’ அமைந்துள்ளதென்பதை நூலாசிரியர் தனது கருத்தாக முன்வைத்துள்ளார். இப்பகுதி ஓர் அறிமுகமாகத் தரப்பட்டுள்ளது. இதில் இன்னொரு அம்சமாக பிரதான நோக்கமும் நூலின் கருதுகோளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

முதலாவது அத்தியாயம் நிலப்பயன்பாடும் வனவள முகாமைத்துவமும் என்ற பகுதி ஆகும். இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியங்களின் பரப்பளவும், அங்குள்ள காடுகளின் பரப்பளவும் மிகத் துல்லியமான புள்ளிவிவரங்களுடன் இதில் விளக்கப்பட்டுள்ளது தனித்துவமான அம்சமாகும். வடக்கு-கிழக்குப் பிராந்தியங்களின் காலநிலை, மக்களின் வாழ்வியல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு அதன் விளைவுகள் எத்தகைய நன்மைகளைத் தருகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டு, அதன் தனித்துவமான தன்மைகளும் இங்கு துல்லியமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தியாயம் இரண்டாக, விவசாயத்துறையும் வாய்ப்புகளும் என்ற பகுதியை நூலாசிரியர் வடிவமைத்துள்ளார். குறிப்பாக, நெல் உற்பத்தியின் முக்கியத்துவத்தை இதில் முதன்மைப்படுத்தியுள்ளார். அத்துடன், சிறுதானிய உற்பத்திக்கான வாய்ப்புகளையும் அதன் மூலமான பொருளாதார இலாபப் பங்களிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், நெல் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான சூழலையும் அடையாளப்படுத்தியுள்ளார். மேலும், இலங்கையில் நிலவும் போசாக்கின்மை மற்றும் மந்தபோசணைப் பிரச்சினைகளுடன் இதனைத் தொடர்புபடுத்தி, இதன் முக்கியத்துவத்தை ஆசிரியர் ஆராய்ந்துள்ளார்.

2022ஆம் ஆண்டுத் தகவலின்படி இலங்கைச் சனத்தொகையில் 30 சதவீதமானவர்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமன்றி, ஒவ்வொரு மரக்கறி உற்பத்தியும் நேரடியாகவும் உடனடியாகவும் தரக்கூடிய பயன்களை அடையாளப்படுத்தியுள்ளார். இது ஓர் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இவ்வத்தியாயம் விரிவாக ஆராய்கிறது. அத்துடன், அதற்கேற்ற வளங்கள், பிரத்தியேகமான நிலவளம் மற்றும் காலநிலை ஆகியவற்றையும் அடையாளப்படுத்தி விளக்குகிறது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்குக் கால்நடை உற்பத்தி எவ்வாறு ஒரு சிறந்த வளமாக அமைய முடியும் என்பதை மூன்றாவது அத்தியாயம் மாவட்ட வாரியாக ஆராய்ந்துள்ளது. மேலும், இதன் முக்கியத்துவத்தையும் இதனால் கிடைக்கக்கூடிய பொருளாதார இலாபத்தையும் இப்பகுதி கணிப்பீடு செய்துள்ளது. தற்போது இருக்கும் அளவீட்டையும் அதனை அதிகரிப்பதற்கான சூழலையும் இனங்காட்டியிருப்பதோடு, வடக்கு-கிழக்கு மாகாணங்களின் கால்நடையின் பங்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் இவ்வத்தியாயம் விவரிக்கின்றது. கால்நடை வளர்ப்புத் துறையை ஒரு முறையான நிறுவனக் கட்டமைப்பாக மாற்றுவதற்கான திட்டங்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ள இப்பகுதி, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அதற்கான சாத்தியக்கூறுகளையும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய அதிகப்படியான இலாபத்தையும் முக்கியத்துவப்படுத்தி விளக்கியுள்ளது.

நான்காம் அத்தியாயமானது, மீன்பிடித் தொழில்துறையின் வளங்களையும் வாய்ப்புகளையும் விரிவாக ஆராய்கிறது. இலங்கைத் தீவின் ஒட்டுமொத்தக் கடற்கரையில் 63 சதவீதத்தை வடக்கு-கிழக்கு மாகாணங்களே கொண்டிருக்கின்றன என இப்பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தனை பரந்த கடல் பரப்பைக் கொண்டுள்ளமையால், இப்பிராந்தியம் மீன்பிடி உற்பத்தி மூலம் பெருமளவு வருவாயை ஈட்டுவதற்கான அரிய வாய்ப்புகளைப் பெற்றுள்ளது. இவற்றுடன், தற்போதைய மீன்பிடி உற்பத்தியில் காணப்படும் குறைபாடுகளையும், அவற்றைச் சரிசெய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாத நடைமுறைகளையும் இந்த அத்தியாயம் துல்லியமாக மதிப்பிட்டுள்ளது.

வடக்கு-கிழக்குக் கடல் பரப்பில் தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் ஏற்படுத்தப்படும் அத்துமீறல்கள் தமிழ் மீனவர்களின் பொருளாதாரத்தில் தோற்றுவித்துள்ள தாக்கங்கள் குறித்தும் இது விவாதிக்கின்றது. அத்துடன், இப்பிராந்தியத்தில் நவீன மீன்பிடித் தொழில்துறையின் வளர்ச்சியின்மை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்ற மற்றொரு பரிமாணத்தையும் இது வெளிப்படுத்துகின்றது. மீன்பிடித் துறையானது நவீனமயப்படுத்தப்படாமல் உள்ளது; நிறுவனம் சார்ந்த ஒரு கட்டமைப்பையோ அல்லது அதற்கான கைத்தொழில் வாய்ப்புகளையோ உருவாக்குவதற்கான சாதகமான சூழல் இருந்தபோதிலும், அவை ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பன பற்றிய முக்கிய விடயங்களையும் இந்நூல் விரிவாக ஆராய்கிறது.

நன்னீர் மீன்பிடி ஆய்வின் பிரதான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சட்டரீதியான அல்லது மரபுசார்ந்த மீன்பிடி முறைமைகளை மீறுகின்ற தொழில்துறையும், தொழிலாளர்களும், மீனவர்களும் இத்துறையின் இயல்பான வாய்ப்புகளை பலவீனப்படுத்துவதாக நூலாசிரியர் கருதுகின்றார்.

அத்தியாயம் ஐந்து, கைத்தொழில்துறை சார்ந்து ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை விரிவாகப் பட்டியலிட்டிருப்பதோடு, வடக்கு-கிழக்கில் காணப்படும் கைத்தொழில் நிலையங்களையும், அவற்றின் பலவீனங்களையும், அவை சீர்செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஆராய்ந்துள்ளது. விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளிலிருந்து கைத்தொழிலுக்குப் பரிமாற்றம் நிகழும்போது, ஆரோக்கியமான இரட்டை அறுவடை அல்லது இரட்டைப் பொருளாதார இலாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு வடக்கு-கிழக்கில் அதிகமாக உள்ளது என்பதை இவ்வாய்வு கோடிட்டுக் காட்டியுள்ளது.

அத்தியாயம் ஆறு, அதிக முக்கியத்துவம் பெற்றதாகக் காணப்படுகிறது. இதில் வடக்கு-கிழக்கில் நீர்மூலங்களும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் அதீதமாக இருக்கும் மாவட்டங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இப்பகுதி, நீர்ப்பாசன முகாமைத்துவம் மற்றும் ஆறுகளின் எண்ணிக்கை சார்ந்து வடக்கு-கிழக்கில் காணப்படும் விடயங்களை ஆழமாகப் பதிவு செய்துள்ளது. அத்தகைய நீர்வள வாய்ப்புகளைப் படிப்படியாக இழந்துபோகும் நிலையையும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் ஆசிரியர் மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார். குறிப்பாக, நீரைச் சேமிக்கும் குளங்களின் இருப்பும், அவற்றைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. வளங்களை நிர்வகிப்பதில் ஏற்படும் பலவீனமானது, உள்ளூர்ப் பாதிப்புகளை உருவாக்குவதுடன், வருங்காலச் சந்ததியினருக்குக் கிடைக்க வேண்டிய நல்வாய்ப்புகளையும் நசுக்கிவிடும் என்றவொரு எச்சரிக்கையை இந்நூலின் ஆசிரியர் தந்துள்ளார்.

அத்தியாயம் ஏழு, மனிதவள அபிவிருத்தி, கல்வி முதலீடு, கல்வியின் பயன்கள், ஏனைய துறைகளில் முதலீடுகள் என நீண்ட முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலை வழங்குகிறது. வீதிகளின் கட்டமைப்பு, அவற்றின் வகிபாகம், அதனால் ஏற்படக்கூடிய வாய்ப்புகள், பொதுவசதித் துறைகளின் பங்களிப்பு, வீட்டுத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள், காணியற்ற குடும்பங்களின் வாழ்வாதார நிலைகள் என விரிவான ஆய்வைத் தந்துள்ளது. மேலும், வலுச்சக்தி மூலங்களையும் அவற்றின் வளங்களையும் இவ்வத்தியாயம் பரந்தளவில் ஆராய்கிறது. குடிநீர் வழங்கல், அதில் காணப்படும் பிரச்சினைகள், சமூக நலத்துறைகளில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடிகள் என்பனவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இதில் அனைத்துப் பொதுச் சேவைத் துறைகளின் தரவுகளும் மிகத் தெளிவான புள்ளிவிவர ரீதியான உள்ளடக்கங்களுடன் ஆராயப்பட்டுள்ளன.

எட்டாவது அத்தியாயத்தில் கூட்டுறவுத் துறை சார்ந்த விரிவான பார்வைகளும் துல்லியமான கணிப்பீடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத் துறையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள் மாவட்ட ரீதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் கூட்டுறவுத்துறையின் வகிபாகம் வடக்கு-கிழக்கின் பொருளாதாரத்தில் பாரிய பங்கை வகித்தது என்பதை அடையாளப்படுத்தியுள்ள நூலாசிரியர், சமகாலத்தில் அது எதிர்கொள்ளும் சவால்களுக்கான காரணங்களையும் முன்னிறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி அமைப்புகள் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியைக் கட்டமைப்பதில் எதிர்கொள்ளும் எல்லைகளும், அவற்றின் வாயிலாக ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களும் ஒன்பதாம் அத்தியாயத்தில் மிகத் தெளிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது அத்தியாயம், முதலாவது அத்தியாயத்தில் முன்வைக்கப்பட்ட நோக்கத்தை வெற்றிகரமாக ஆய்வு செய்து, அதனை முழுமைப்படுத்தியுள்ளது என்றே தெரிகிறது.

இந்நூலின் உள்ளடக்கம் மூன்று பிரதான பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, ஆய்வுப் பாரம்பரியத்தையும் முறையியலையும் தெளிவாக வடிவமைத்து வெளிப்படுத்தியுள்ளது. நூலாசிரியர் ஆய்வுப் பாரம்பரியத்திற்குள் வளர்க்கப்பட்டவர் என்பதற்கான அடிப்படை, அவரது அத்தியாய ஒழுங்கமைப்பிலும் ஆய்வின் வடிவமைப்பிலும் நேர்த்தியாக வெளிப்படுகிறது. அறிமுகப் பகுதி ஏறக்குறைய வடக்கு-கிழக்கின் அடிப்படை வளங்களையும் சமகாலத் தேவைகளையும் கேள்விக்குள்ளாக்குவதோடு, ஒவ்வொரு அத்தியாயமும் அதற்கான பதில்களை வெளிப்படுத்தும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஆய்வு முறையியல் மாதிரிக்குள் வடிவமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

இரண்டாவது, நூலாசிரியர் தெளிவான சான்றுகளின் வழியே, வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தின் பொருளாதார வலிமையானது அங்குள்ள வளமான இயற்கை வளங்களிலேயே தங்கியுள்ளது என்பதை விளக்கியுள்ளார். அத்துடன், அவ்வளங்களைக் கையாள்வதற்கான சிந்தனைகளையும் பின்புலங்களையும் எமது முன்னோர்கள் எவ்வாறு ஏற்படுத்தியிருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தற்காலத்தில் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். இது புதிய ஆய்வுக்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது. உலகளாவிய பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு இணங்க, இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியம் எத்தகைய அபிவிருத்திப் பாதைக்குள் தன்னை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதை இந்நூல் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

மூன்றாவது, ஒவ்வொரு அத்தியாயமும் வடக்கு-கிழக்கில் காணப்படும் வாய்ப்புகளை மட்டுமன்றி, பிரச்சினைகளையும் அவற்றுக்கான நூலாசிரியரின் எல்லைக்குட்பட்ட தீர்வுகளையும் முன்மொழிந்துள்ளது. ஆயினும், இம்முன்மொழிவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக் காணப்படுகிறது. அரசியல், நிறுவன மற்றும் சமூகத் தளங்களில் அறிவுசார்ந்த பலத்தை இந்நூல் வழங்கியிருக்கிறது. அத்துடன், வடக்கு-கிழக்குப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை வெற்றிகரமான முறையில் கட்டியெழுப்ப இயலும் என்பதைத் தெளிவுபடுத்துவதே இந்த நூலின் மிக முக்கியமான சாதனையாகும்.

வடக்கு-கிழக்கின் குறுநிலைப் பொருளாதாரத்தின் (Micro Economy) தனித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்காலத்திலும் நூலாசிரியர் தனது பங்களிப்பைத் தொடர வேண்டும். மேலும், இந்நூலை வடக்கு-கிழக்கின் அரசியல் மற்றும் நிர்வாக நிறுவனங்கள் ஆதாரமாகக் கொண்டு, வடக்கு-கிழக்குப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் பயன்படுத்த வேண்டும்.

அத்தியாயப் பிரிப்புகளை வகைப்படுத்துகின்ற போது, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அதன் சாரத்தையும் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களையும் பட்டியலிடுவது மேலும் சிறப்பான அம்சமாக அமையும் என்பதை இம்மதிப்பீடு பணிவுடன் முன்வைக்கிறது. அதேவேளை, பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கும் அது ஏற்றதாக இருக்கும்.

இந்நூலின் ஆசிரியர் பொருளியல் துறையை விசேட கற்கையாகக் கற்றவர் என்பதோடு, பொருளியல் துறையில் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்றிருப்பது இந்நூலின் சிறப்புக்கு அடிப்படையாக அமைகிறது. அது மட்டுமன்றி, இவர் தனது பல்கலைக்கழகக் காலத்தில் சிறந்த தேடல் மிக்க ஆய்வு மரபுகளை உள்வாங்கிய ஒருவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது கூட்டுறவுத்துறை தொடர்பான ஈடுபாடு, வலுவான சமூக நடைமுறையையும் செயற்பாட்டையும் உருவாக்கியிருந்தது. ஒருங்கிணைந்த மற்றும் பிரதேச அபிவிருத்தி குறித்து ஆழமான புரிதலைத் தனக்குள் கொண்டிருந்த இவர், பிரதேச அபிவிருத்தியை வடிவமைக்கும் பணியில் பொருளியல் காரணிகளுடன் அரசியல், சமூகவியல், பண்பாடு மற்றும் மரபார்ந்த விழுமியங்களுக்கும் முக்கியத்துவமளித்தார்.

இதற்கான வாய்ப்பை வழங்கிய எழுநா வெளியீட்டிற்கும், நூலாசிரியரின் இப்பணிக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். மேலும் பல படைப்புகளை உருவாக்குவதற்கான திறனும் வளமும் அவரிடம் உள்ளன என்பதை அவரது நண்பர் என்ற அடிப்படையில் தெரிவித்துக்கொள்கிறேன்.