இருத்தலின் மீது கவியும் இன்மைகள்: குற்றவுணர்வின் மொழி
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
6 நிமிட வாசிப்பு

இருத்தலின் மீது கவியும் இன்மைகள்: குற்றவுணர்வின் மொழி

July 13, 2026
கருத்துரை: ரதன்
இருத்தலின் மீது கவியும் இன்மைகள்: குற்றவுணர்வின் மொழி

பொதுவாகவே நூல் விமர்சனங்கள் – அறிமுகங்கள் மிக முக்கியமானவை. இவை படைப்பாளிக்கும் நுகர்வோருக்கும் (வாசகர்-வாசிப்பவர்) இடையில் ஒரு நெருக்கத்தை உண்டாக்குகின்றன. நுகர்வோரின் கருத்துகளை மீள் பரிசீலிக்கின்றன. நுகர்வோருக்கான தேடலை அதிகரிக்கின்றன. அதே சமயம் விமர்சகரின் அனுபவங்கள், அறிந்தவை, கருத்தியல் என்பன விமர்சனத்தினூடாக வெளிப்படுகின்றன. இது நுகர்வோருக்கு விமர்சகர்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கும் வழிவகுக்கின்றது.

இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூலையும் அறிமுகப்படுத்துவதில் அவசியம் உள்ளது. எழுநாவின் வெளியீடான இந்நூலை எழுநா எனக்கு அனுப்பிய நூல்களுள் ஒன்றாகவே பெற்றுக்கொண்டேன்.

இளங்கோ கடந்த பல வருடங்களாக எழுதிவருகின்றார். இவர் டி.செ. தமிழன் என்ற பெயரிலும் அறியப்படுகின்றார். இவர் சீரிய இலக்கியம், நூல் விமர்சனங்கள், தீவிர சினிமா, நாடக விமர்சனம், அரசியல் ஆய்வு, மொழிபெயர்ப்பு போன்றவற்றுடன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுடன் இவர் ஒரு பயணி. பல நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டு பதிவு செய்கின்றார்.

தான் பார்ப்பதை, கேட்பதை, வாசிப்பதனை, நுகர்வதனை தனது எழுத்துகளில் கொண்டுவருகின்றார். இவரது மனச்சாட்சியின் ஒரு குரலாக இவரது எழுத்துகள் ஒளிர்கின்றன, ஒலிக்கின்றன. இதுவரை சுமார் 500 இற்கும் மேலான இவரது ஆக்கங்கள்  இணையம், இலக்கிய இதழ்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றில் வெளிவந்துள்ளன.

இளங்கோ பல நூல்களின் விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு அம்ருதாவில் வெளிவந்த பிள்ளையானின் ‘வேட்கை’ நூலைப் பற்றிய விமர்சனம் இவரது நூல் விமர்சனங்களுள் முக்கியமானது. அதிலிருந்து சில பகுதிகள் இவை:

“முஸ்லீம் மக்கள் மீது தான் பரிவுள்ளவர் என்றாலும் அதை மீறி கிழக்கு மாகாணத்து தமிழ் மக்கள் மீது அக்கறை என்று சொல்லிக்கொண்டு முஸ்லீம்கள் மீது ஒருவகையான வெறுப்பு உமிழப்படுகின்றது”.

இந்நூலில் இலங்கை அரசாங்கம் மீது ஒரு துளி விமர்சனமும் குறிப்பிடப்படவில்லை என்றும் இளங்கோ குறிப்பிட்டுள்ளார். போராளியாக இருந்தவர் அரசியல் தளத்துக்கு வரும் பொழுது தன்னைப் பற்றிய சுய விமர்சனம் அவசியம் எனச் சுட்டிக்காட்டும் இளங்கோ, தனது இளமையை தான் நம்பிய கொள்கைக்காக இழந்தவர்கள் அரசியல் செய்வதற்கு பல மடங்கு நியாயங்கள் உள்ளன எனவும் கூறியுள்ளார் (முழுமையான கட்டுரையை இளங்கோ சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார் என நம்புகின்றேன் – இது கருத்துப் பிறழ்வுகளை தவிர்க்க உதவும்). வேட்கை பற்றிய இவ்விமர்சனம் மிக நேர்மையான ஆழமான விமர்சனம். பலர் எனது கருத்துடன் முரண்படலாம்.

யூன் 2026 அம்ருதா இதழில் இளங்கோ எழுதியுள்ள டி. தருமராஜன் அவர்களின் ‘ஜல்லிக்கட்டு’ நூல் விமர்சனமும் இளங்கோவின் நூல் விமர்சனங்களுள் முக்கியமானது.

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் என்ற கவித்துவத் தலைப்பைக் கொண்ட நூலில் 13 நூல்களைப் பற்றிய விமர்சனம் பதிவாகியுள்ளது. இந்த 13 நூல்களின் முக்கியத்துவம், நூலாசிரியர் தவறவிட்ட விடயங்கள், அவரது பலவீனம் எனப் பன்முகத் தன்மையுடன் விமர்சனத்தை இளங்கோ முன்வைக்கின்றார். இந்நூலில் உள்ள அனைத்து நூல்களையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் இளங்கோவின் விமர்சனங்களை நுகர்ந்த பின்னர் மீண்டும் ஒரு தடவை நூல்களை முழுமையாகவோ பகுதியாகவோ வாசிக்க வேண்டும் என்ற அவசியம் எழுந்துள்ளது.

நூலின் அட்டை இளங்கோ சிறிய வயதில் வாழ்ந்த வீட்டின் படம். நூலின் உள்ளிருப்பை எதிரொலிக்கின்றது. நூலின் சமர்ப்பணம் என்பது படையல் என்ற தலைப்பில் பின்வருமாறு உள்ளது: “ஈழ யுத்தத்தில் அநியாயமாகப் பலியான அனைவர்க்கும்”. இளங்கோவின் கருத்துடன் முரண்பட்டாலும், அவர் கூறிய கருத்தின் பின்னால் உள்ள விடயம் ஒரு உரையாடல் வெளியை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு போரும் ஒரு காரணத்துடனேயே தொடங்கப்படும். போரில் வெற்றி பெற்றால் பலியானவர்களை “தேசத்துக்காக” என்று கூறுகின்றோம். தோல்வியடைந்தால் “அநியாயமாக” என்கின்றோம்.

நிரோமி டி சொய்சாவின் ‘தமிழ்ப் பெண்புலி’ என்ற ஆங்கில நூலின் விமர்சனத்தில் தமிழ்ப் பெண்புலி நூலின் கடைசி அத்தியாயம் விடுதலைப் புலி ஆதரவாளர்களைக் கோபப்படுத்தும் என எழுதுகிறார் இளங்கோ. “போராட்டத்தின் பெயரால் எல்லாச் சுமைகளையும் சுமந்த மக்கள் என்ற மூன்றாவது தரப்பும் இருக்கின்றது. அத்தரப்பைப் பற்றியே நாம் இன்னும் நிறைய கவலைப்பட வேண்டியிருக்கின்றது. அந்த அக்கறை இந்த நூலை எழுதிய நிரோமியிடம் ஏதோ ஒரு வகையில் இருக்கின்றது” என இளங்கோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்’ என்ற மார்க் ஸ்டீபனின் நூலின் முக்கியத்துவத்தைப் பற்றி இளங்கோ குறிப்பிட்டுள்ளார். இந்திய சமாதானப்படையின் கொலைகளைப் பற்றி ஸ்டீபன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிடாதபடியால்தான் மூர்க்கமாக அழிக்கப்பட்டனர் என ஸ்டீபன் எழுதியதையும் இளங்கோ பதிவு செய்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் போராளி மலரவனின் ‘போர் உலா’ நூலைப் பற்றியும் விரிவாக இளங்கோ எழுதியுள்ளார்.

இந்நூலின் ஊடாக தனக்கு போர் ஏற்படுத்தியுள்ள வெறுமையை இளங்கோ வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் போரில் இறந்தவர்களை நினைத்து வருத்தப்படுகின்றார். இளங்கோ தனக்கு ஏற்பட்டுள்ள குற்றவுணர்வினை இந்த நூல்களினூடாக வெளிப்படுத்துகின்றார். போருடன் தான் முரண்பட்டு நிற்பதனையும் இளங்கோ வெளிப்படுத்த தயங்கவில்லை. போரினால் உடைக்கப்பட்டுள்ள சமூகக் கட்டமைப்புகள், சமூகக் கட்டமைப்பினால் கட்டுடைக்க முடியாமல் போன போர், உடைக்கப்பட வேண்டிய சமூகக் கட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு என இளங்கோ விமர்சிக்கின்றார். போர் ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தையையே மனிதர்களிடம் அழித்துவிட்டது என்பது இளங்கோவின் விமர்சனம். ஒவ்வொரு நூலுடனும் இளங்கோ உரையாடியுள்ளார். அதுவே இந்த நூலின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும்.

போர் இளங்கோவிற்கு ஏற்படுத்தியுள்ள இருண்மையை நேர்மையாகக் குற்றவுணர்வுடன் அவர் பதிவு செய்துள்ளார். இளங்கோவின் பல கருத்துகளுடன் முரண்பட்டாலும், அவரது கருத்துகள் ஓர் உரையாடல் வெளியை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

இது இந்த நூலுக்கான விமர்சனமல்ல. நூலை அனைவரும் வாசிக்க வேண்டியதன் அவசியத்தையே கூறியுள்ளேன். பிறிதொரு தளத்தில் விரிவான விமர்சனம் வெளியாகவுள்ளது.

நூலில் உள்ள நூல்கள் பற்றிய விவரங்கள் இவை:

  1. A Passage to North – Anuk Arudpragasam
  2. Brotherless Night – V.V. Ganeshananthan
  3. Tamil Tigress  – Niromi de Soyza
  4. The Story of a Brief Marriage – Anuk Arudpragasam
  5. The Hungry Ghosts – Shyam Selvadurai
  6. The Boat People – Sharon Bala
  7. Prisoner No 1056 – Roy Ratnavel
  8. The Sadness of Geography: My Life as a Tamil Exile – Logathasan Tharmathurai
  9. Love Marriage – V.V. Ganeshananthan
  10.  போர் உலா – மலரவன்
  11. Tea Time With Terrorists – Mark Stephen Meadows
  12. Song of the Sun God – Shankari Chandran
  13. Vanni: A Family’s Struggle through the Sri Lankan Conflict – Benjamin Dix  and  Lindsay Pollock