‘வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்’ நூலானது, நாகமுத்து பிரதீபராஜா (யாழ் பல்கலைக்கழக புவியியற்துறைப் பேராசிரியர்) அவர்களால் காலத்தின் தேவையறிந்து நீண்டகால ஆய்வின் பயனாக எழுதப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் காலநிலை அனர்த்தங்கள் முனைப்புப் பெற்று வருகின்றன. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் நிலச்சரிவினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பின்னணியில் காலநிலை, அதில் ஏற்படும் மாற்றம் பற்றிய அறிவு, தெளிவு, புரிதல் புவியியலாளர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் அவசியமாகும். இதன் அடிப்படையிலேயே நூலாசிரியர் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்த முகாமைத்துவம், இயற்கை அனர்த்தங்கள், காலநிலை மாற்றம், புவிசார் அரசியல், இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள்: காரணங்கள், விளைவுகள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், Climate Pattern and Climatic Hazards in Northern Province of Sri Lanka, Hydro Climate in Northern Sri Lanka ஆகியன ஆய்வாளரின் ஏனைய படைப்புகளாகும். வடக்குப் பிராந்தியக் காலநிலையியல் நூலானது, வானிலை, காலநிலை, காலநிலை மாற்றம் ஆகிய மூன்று விடயங்களைத் தழுவியே எழுதப்பட்டுள்ளது. புவியியல் துறைசார் நூலாக இது கருதப்பட்டாலும், வடக்கு மக்களின் சமயம், வரலாறு, பொருளாதாரம் சார்ந்து மக்களின் வாழ்வியலோடு பிராந்தியக் காலநிலையினை ஆராய்வது இதன் சிறப்பம்சமாகும். உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிலும் காலநிலை சார்ந்து வேறுபட்ட நூல்கள் வெளிவந்துள்ள போதிலும், வடக்குப் பிராந்திய காலநிலை சார்ந்த நீண்டகாலத் தரவுகளை சேகரித்து இணைவுப் பகுப்பாய்வின் ஊடாக (Correlation Analysis) பிராந்தியக் காலநிலை பற்றி தமிழில் வெளிவந்திருக்கக் கூடிய நூல் என்ற பெருமை இந்த நூலையே சாரும்.
வடமாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கல், காலநிலை மாற்றம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடல் ஆகிய முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வுநூல் வெளியிடப்பட்டுள்ளதுடன், மாணவர்கள், ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் திட்டமிடலாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஒரு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பதின்மூன்று அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவது அத்தியாயமான ‘தமிழர்களின் வாழ்க்கை முறையும் காலநிலையும்’ என்பதன் ஊடாக, காலநிலைக்கும் மக்களின் வாழ்வியலுக்குமிடையிலான தொடர்பினை பண்பாட்டு ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் முன்வைத்துள்ளார். இரண்டாவது அத்தியாயத்தில், பஞ்சாங்கத்தில் சொல்லப்படுகின்ற எதிர்கால வானிலை எதிர்வுகூறல்களை அடிப்படையாகக் கொண்டு பிராந்தியத்தின் காலநிலை பற்றிய அனுபவங்களை முன்வைத்துள்ளார். மூன்றாவது அத்தியாயமானது, வடக்குப் பிராந்தியத்தின் காலநிலையைத் தீர்மானிக்கும் காரணிகளை பகுப்பாய்வு செய்கிறது. நான்காவது அத்தியாயமானது, வடக்குப் பிராந்தியத்தின் மழைவீழ்ச்சி அளவீட்டு முறைகள் மற்றும் வானிலை அவதானிப்பு நிலையங்கள் பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் ஆரம்ப காலத்திலிருந்து மக்களால் மழைவீழ்ச்சியை கணிப்பிட பயன்படுத்தப்பட்டு வந்த பாரம்பரிய அளவீட்டு முறைகளான மரக்கால், ஆட்டுக்கால் என்பவை பற்றி ஆசிரியர் தற்போதைய அளவீட்டு முறைகளுடன் இணைத்து விளக்கியுள்ளமையானது தமிழர் மரபின் பெருமையை வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து, வடக்குப் பிராந்தியத்தின் வெப்பநிலை, மழைவீழ்ச்சி மற்றும் மேற்பரப்பு நீர்வளங்கள் பற்றியும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எட்டாவது தலைப்பில் வேறுபட்ட 16 மாதிரிகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் எதிர்கால வெப்பநிலைப் பாங்கு எதிர்வுகூறப்படுகிறது. எதிர்காலத்தில் மழைவீழ்ச்சி நாட்களின் எண்ணிக்கை குறைவடையும், வெப்ப அதிகரிப்பு ஏற்படும் என்பவை விவசாயம், நீர்வளம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் தாக்கங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன. வடக்கு மாகாணத்தின் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகளும் தணிப்பதற்கான தந்திரோபாயங்களும் பற்றி ஒன்பதாவது அத்தியாயத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் வறட்சி, இடி-மின்னல் நிகழ்வுகள், காலநிலை அனர்த்தங்களும் பொருளாதாரப் பாதிப்புகளும், வடக்கு மாகாணத்தின் காலநிலை தொடர்பான பரிந்துரைகளும் பற்றியும் ஆய்வாளர் விளக்குகிறார்.
தற்போதுள்ள வானிலை அவதானிப்பு நிலையங்கள் 13இற்கு மேலதிகமாக, புதிதாகவும் பல வானிலை அவதானிப்பு நிலையங்கள் வட பிராந்தியத்தில் தாபிக்கப்படுவதுடன், பழையவற்றின் வினைத்திறனையும் அதிகரிப்பதன் தேவையை ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றார். மாங்குளத்தை மையமாகக் கொண்ட வடபிராந்திய வானிலை அவதானிப்பு நிலையத்தை உருவாக்குவதன் அவசியத்தை பாலசுந்தரம்பிள்ளையைப் (1981) போலவே ஆய்வாளரும் மீள வலியுறுத்துகின்றார். அத்துடன் கடற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வதற்கு கடல்சார்ந்த அவதானிப்பு நிலையங்கள் (OWOC) நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தையும், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளார்.
புத்தகத்தில் படங்கள், வரைபடங்கள் மற்றும் அட்டவணைகள் பல வழங்கப்பட்டுள்ளதாயினும், அவற்றின் அளவிலும் தெளிவிலும் மேலும் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டால், கருத்துகளை வாசகர் இலகுவாக ஒப்பிட்டு விளங்கிக்கொள்ள முடியும்; இதன் மூலம் தரவின் பெறுமதியையும் கணிப்பிடும் இயலுமையையும் பெற முடியும். அத்துடன் இத்தரவுகளின் ஒருமுகத்தன்மையைப் பேணுவதன் ஊடாக, வடபிராந்தியக் காலநிலை பற்றிய தெளிவான பிம்பத்தை மேலும் அர்த்தமுடையதாக்க முடியும். தரவுகளை எளிமைப்படுத்தி வழங்கும் போது புவியியல் பாடப் பின்னணியற்றோரும் அதனைப் புரிந்து கொள்வது மேலும் இலகுவாக இருக்கும்.
ஒட்டுமொத்தத்தில் இந்நூல், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பிரதிபலிப்பதுடன், மண்ணினதும் மக்களினதும் இருப்புக்கும் நிலைப்புக்கும் அடிப்படையாகவும் உள்ளது. இதுபோன்ற ஆய்வு நூல்கள் மேலும் வெளிவர வேண்டும். ‘வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்’ காலம், இடம், நேரம் கடந்தும் பேசப்படும்!