இளங்கோ யாழ்ப்பாணத்தில் அம்பனையில் பிறந்து தனது பதினாறாவது வயதில் புலம்பெயர்ந்தவர்; தற்போது கனடாவில் வசிக்கிறார். இதுவரை கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இது அவரது பத்தாவது புத்தகம்.
‘ஈழ யுத்தத்தில் அநியாயமாகப் பலியான அனைவரிற்குமாக’ படையல் செய்யப்பட்டுள்ள இந்நூல் 112 பக்கங்களில் எழுநாவால் அழகான, கைக்கடக்கமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இளங்கோவின், யுத்தத்தால் சிதைவடைந்த வீட்டின் எஞ்சிய பகுதியும், அதனைச் சுற்றிப் படரும் கொடிகளும் பூக்களும் நூலின் அட்டைப்படமாக உள்ளது. வீடு என்பது இருத்தலின் ஒரு குறியீடு. ஆனால், படத்தில் உள்ள வீடு இல்லாமையை உணர்த்துவதும், அதேவேளை பூக்கள் நம்பிக்கையைத் தருவது போல் அமைந்திருப்பதும் தலைப்பிற்கு வலுச்சேர்க்கின்றன.
‘எழுநா’ சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளிவந்த 13 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். ஈழப் போராட்டத்துடன் தொடர்புடைய ஆங்கிலத்தில் வெளியான 13 நூல்களை ஆசிரியர் தன்னுடைய பார்வையில் ஆராய்கிறார். அவற்றின் சார்புநிலை, வரலாற்று உண்மைகள், எழுதப்பட்ட நோக்கம், அந்நோக்கத்திற்கு நியாயம் செய்யப்பட்டுள்ளதா என விரிகின்றன இந்நூலின் இக்கட்டுரைகள்.
‘ஈழக்கற்கைகள்’ என்ற எண்ணக்கருவின் கீழ் வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், அபிவிருத்தி, சட்டம், பொருளாதாரம் என்று பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு அறிவுப் பரிமாற்றம் அல்லது கருத்தாடல் அல்லது வெவ்வேறு பார்வைக் கோணங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்படும் ‘எழுநா’ இதற்கான களத்தை வழங்கியுள்ளது. அந்த வகையில் ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகங்கள் தொடர்பான உரையாடலை உருவாக்குவதில் எழுநாவும் இளங்கோவும் வெற்றி பெற்றுள்ளனர்.
பதினொரு எழுத்தாளர்களின் 13 நூல்கள் தொடர்பாக இக்கட்டுரைகள் பேசுகின்றன. அந்நூல்கள் வருமாறு: அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான ஒரு பயணம்’, ‘ஒரு குறுகிய திருமணத்தின் கதை’, வாசுகி கணேசானந்தனின் ‘சகோதரனற்ற இரவு’, ‘Love Marriage’, நிரோமி டீ ஸொய்ஷாவின் ‘தமிழ்ப் பெண் புலி’, ஷியாம் செல்வதுரையின் ‘பசித்த பேய்கள்’, சாரோன் பாலாவின் ‘படகு மக்கள்’, ரோய் ரத்னவேலின் ‘கைதி #1056’, லோகதாசன் தர்மதுரையின் ‘The Sadness of Geography’, மலரவனின் ‘போர் உலா’, மார்க் ஸ்டீபனின் ‘தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்’, சங்கரி சந்திரனின் ‘சூரியக்கடவுளின் பாடல்’, பெஞ்சமின் டிக்ஸ் மற்றும் லின்ட்சே பொல்லக்கின் ‘வன்னி: கிராபிக் நாவல்’.
மலரவன் அவர்களின் ‘போர் உலா’ தவிர்ந்த ஏனையவை யாவும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. ‘போர் உலா’ தமிழில் எழுதப்பட்டு ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல்களின் எழுத்தாளர்களை எடுத்து நோக்கினால் இருவர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்; பத்துப் பேர் புலம்பெயர்ந்தவர்கள். மலரவன் ஈழ விடுதலைப் போராளி; நிரோமி போராளியாக இருந்து விலகி பின்னர் புலம்பெயர்ந்தவர்.
இந்நூல்கள் தொடர்பான தனது பார்வையை இளங்கோ முன்வைக்கும் போது ஒரு தெளிவான வடிவத்தைக் கையாளுகின்றார். அதாவது முதலில் நூலை அறிமுகம் செய்து, அதனுடைய கதை, அதை எழுதியவரின் பின்னணி, கதை எழுதப்பட்ட சூழல் என்பவற்றைக் குறிப்பிட்டு, அதன் பின்னர் அந்தப் பிரதியூடாகவும், அந்தப் பிரதிக்கு வெளியேயும் அந்நூல் எதைப் பற்றி பேசுகிறது என்பதைத் தெரிவிப்பதன் மூலம் வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.
இது ஆதாரமான சில கேள்விகளை எழுப்புகின்றது. ஒரு படைப்பை புரிந்துகொள்ள படைப்பு மாத்திரம் போதுமா? அல்லது அதன் பின்னணி, எழுத்தாளரின் நோக்கம் போன்றவற்றையும் கொண்டு அதனை மதிப்பிட வேண்டுமா? அத்துடன், இலக்கியம் என்றால் என்ன? அதன் சார்புநிலைகள் என்ன? வாசகர்களுக்கு இலக்கியத்தின் ஊடாக என்ன வழங்கப்பட வேண்டும்? போன்ற கேள்விகளும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.