யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு: 1621-1948 - ஒரு கண்ணோட்டம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
கருத்துரை
9 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு: 1621-1948 – ஒரு கண்ணோட்டம்

August 21, 2026
கருத்துரை: மைதிலி தயாநிதி
யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு: 1621-1948 – ஒரு கண்ணோட்டம்

2025இல் குமரன் புத்தக இல்லமும் எழுநாவும் இணைந்து வெளியிட்ட, கட்டடக்கலைஞர் இ. மயூரநாதன் எழுதிய ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு: 1621-1948’ எனும் நூல், 300 ஆண்டுகளுக்கும் மேலான காலனிய கால யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றை ஏறத்தாழ 500 பக்கங்களில் ஆராய்கிறது. நகர வரலாற்றியல் சார்ந்த இந்நூலின் கருப்பொருளாக அமைவது இன்றைய யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் அடங்கிய யாழ்ப்பாண நகரம் ஆகும்.

ஆசிரியர் தற்போதைய யாழ்ப்பாண நகரத்தின் தோற்றத்தினைப் போர்த்துக்கேயர் ஆட்சியுடன் பிணைக்கின்றார். போர்த்துக்கேயர் பண்ணைக் கடல் நீரேரிக் கரையோரம் கோட்டை கட்டிய பின்னர், அதற்கு ‘ஜவ்னா பட்டவ்’ என்று பெயரிட்டதுடன், நகரக் கட்டுமானத்திற்கானப் பல கட்டட வேலைகளையும் அங்கு 1621-22ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஆரம்பித்தனர். எனவே, நல்லூர் போர்த்துக்கேயர் வசமான 1619ஆம் ஆண்டை விடுத்து, இராணுவ, நிர்வாகத் தலைமையிடமாக ‘ஜவ்னா பட்டவ்’ செயல்படத் தொடங்கிய 1621ஆம் ஆண்டையே காலனிய யாழ்ப்பாண நகரத்தின் தொடக்கமாக ஆசிரியர் கொள்கிறார்.

வரலாறு என்று கூறும்போது, நம்மை ஆண்ட மன்னர்கள், அவர்கள் செய்த போர்கள் என்பனவே நமது நினைவுக்கு வருபவை. ஆனால், இந்நூல் விவரிக்கும் காலனிய யாழ்ப்பாண நகர வரலாற்றில், மனிதர்களுக்குப் பதிலாக முக்கியத்துவம் பெறுவது அவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைச் சூழல் (Built Environment) ஆகும். ‘யாழ்ப்பாண நகரத்தின் தோற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் உருவாக்கிய சூழலின் (Built Environment) வளர்ச்சி நிலையிலிருந்து எழுதுவதே எனது நோக்கமாக இருந்தது’ என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இயற்கையாக இருக்கும் காடுகள், ஆறுகள் போன்றவற்றுக்கு மாறாக, மனிதரால் உருவாக்கப்பட்ட செயற்கைச் சூழலில் வீடுகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், கடைகள், ஆலயங்கள் போன்ற கட்டடங்களும், வீதிகள், புகையிரதத் தண்டவாளங்கள், குடிநீர் விநியோகம், வடிகால் அமைப்பு முதலான கட்டமைப்பு வசதிகளும், பூங்கா, மயானம் போன்ற பொது இடங்களும் அடங்கும்.

மேலும், ‘இந்த நூல் இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் தோற்றப் பின்னணி, அது இன்றைய வளர்ச்சி நிலையை அடைந்ததற்கான காரணிகள் போன்ற விடயங்களை ஆராய்வதுடன், அந்நகரத்தின் கட்டமைப்புகள் உருவான வரலாற்றை அவ்வக் காலத்துப் புவியியல், பொருளாதாரம், சமூகம், சமயம், அரசியல், தொழில்நுட்பம் முதலான அம்சங்களின் பின்னணியில் விளக்கவும் முயற்சி செய்கின்றது’ என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவ்வகையில், இந்த நூல் வெறும் காலவரிசைப்படியான விவரிப்பாக (Chronological Narration) மட்டும் அமைந்துவிடாது, பல்வேறு அறிவுத்துறைகளை ஒன்றிணைத்த நகர வரலாற்று ஆய்வாகவும் மிளிர்கிறது.

இனி, நூலின் உள்ளடக்கத்தைச் சுருக்கமாக நோக்குவோம். இந்நூல் எட்டு அத்தியாயங்கள், முன்னுரை, அட்டவணைகள், உசாத்துணை நூற்பட்டியல், சொல்லடைவு, நிலப்படங்கள் மற்றும் படங்களுக்கான மூலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. நூலின் முதலாம் அத்தியாயமான ‘அறிமுகம்’ என்பதில், ‘யாழ்ப்பாணம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது? யாழ்ப்பாண நகரின் எல்லைகள் எவை? போன்ற விவரங்கள் ஆராயப்படுகின்றன. இரண்டாம் அத்தியாயம், ‘நல்லூர்க் காலம் 1619 வரை’ என்ற தலைப்பைக் கொண்டது. நவீன யாழ்ப்பாண நகரத்தின் தோற்றத்துக்கான காரணிகள் நல்லூர்க் காலத்திலேயே படிப்படியாக வளர்ச்சியுற்று வந்தமையால், அக்காரணிகள் குறித்து ஆசிரியர் இந்த அத்தியாயத்தில் விரிவாக ஆராய்கிறார். மூன்றாம், நான்காம் அத்தியாயங்களில் முறையே போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்து யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி கூறப்படுகிறது. இறுதி நான்கு அத்தியாயங்களும் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தை நான்கு காலகட்டங்களாகப் பகுத்து நோக்குகின்றன. யாழ்ப்பாணம் எவ்வாறு நவீன நகரமாக உருவெடுத்தது என்பதை இந்த அத்தியாயங்கள் படிப்படியாக விளக்குகின்றன. இவ்வாறு இரண்டாம் அத்தியாயம் முதல் எட்டாம் அத்தியாயம் வரையிலான அத்தியாயங்களில் பரந்த அளவில் காலவரிசைப்படியான (Chronological) அமைப்புக் காணப்படினும், ஒவ்வொரு அத்தியாயமும் பொருண்மை சார்ந்த (Thematic) பகுப்பாய்வு முறையையே மேற்கொள்கிறது.

ஆய்வுநூல்

ஆராய்ச்சி என்பது ஏற்கெனவே திரட்டப்பட்ட அறிவை வேறு சொற்களில் கூறுவது அன்று; தற்போது அறியப்பட்டவற்றிற்கும், இன்னும் விரிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியவற்றிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் (Research Gap) காண்பது ஆய்வின் முதற்படி ஆகும். இந்த இடைவெளியைத் துல்லியமாகக் கண்டறிந்த பின்னர், புதிய தரவுகளின் மூலம் அந்த இடைவெளியை நிரப்ப முயல்வதே ஆய்வின் நோக்கமாகும். இவ்வாறே, ஆராய்ச்சியாளர்கள் அறிவின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவல்ல மூல (Original) ஆய்வு நூல்களை எழுதுகின்றனர். அத்தகைய ஆய்விடைவெளியைக் கண்டறிந்து அதனை நிரப்பும் முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்நூலை நாம் நோக்கலாம்.

யாழ்ப்பாண நகரின் பௌதிக வரலாறு, நகரப் புவியியல், நகர உருவவியல் ஆகிய நோக்குநிலைகளிலிருந்து டபிள்யூ.எல். ஜெயசிங்கம், கா. இந்திரபாலா, பொ. பாலசுந்தரம்பிள்ளை, க. குணராசா ஆகியோர் ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளனர் என்பதை ஆசிரியர் இந்நூலில் குறிப்பிடுகிறார். ‘ஆனாலும், யாழ்ப்பாண நகரத்தின் பௌதிக வரலாற்றை முறையாக ஆராய்ந்து, ஒரு முழுமையான பௌதிக வரலாறு என்று கூறுமளவுக்கு நூல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை’ என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்தப் பெரும் இடைவெளியை நிரப்பும் ஒரு முதன்மையான ஆய்வு நூலாகவே இந்நூல் விளங்குகிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, இந்நூலில் வரலாறு, தொல்லியல், கட்டடவியல், நகரியல், சமயம், புவியியல் முதலான பல்துறைசார் அறிவும் மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், காலனிய காலத்து முதன்மை ஆவணங்கள், வரைபடங்கள் (Maps), இரண்டாம் நிலைத் துணை நூல்கள் (Secondary Sources) மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றைத் தகுந்த ஆதாரங்களாகக் கொண்டே யாழ்ப்பாண நகர வரலாறு இங்கு எழுதப்பட்டுள்ளது. அவ்வகையில், இ. மயூரநாதனை ஓர் அனுபவவாத வரலாற்று ஆசிரியர் (Empirical Historian) என்று கூறலாம்.

அனுபவவாதத்தின் (Empiricism) அடிப்படைக் கொள்கையை மூன்று முக்கிய கோட்பாடுகளாகச் சுருக்கிக் கூறலாம்: நிரூபிக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்களைக் கவனமாக உன்னிப்பாக ஆராய்தல், தனிப்பட்ட கருத்தை அல்லது சார்புநிலையைத் தவிர்க்கும் வகையில் ஆதாரங்களை மையப்படுத்தல், மற்றும் குறிப்பிட்ட விவரங்களிலிருந்து பொதுவான உண்மைகளைப் பெறுதல் (Inductive Reasoning) என்பவையே அவையாகும். இம்மூன்று பண்புகளையும் மயூரநாதனின் நூல் நெடுகிலும் அவதானிக்கலாம். இதன் காரணமாக, வாய்மொழி வழக்காறுகள், ஐதிகங்கள் மற்றும் ஆதாரமற்ற முடிவுகள் என்பவற்றைக் கேள்விக்குட்படுத்தி நிராகரிப்பதை இந்நூலின் பல இடங்களில் காண முடிகிறது.

இந்த அனுபவவாத அணுகுமுறை நூலின் பல பகுதிகளில் வெளிப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, பக்கம் 259இல் ‘யாழ். சிறீ வெங்கடேச வரதராசப் பெருமாள்’ எனும் தலைப்பில் காணப்படும் முதலிரு பந்திகளையும் நோக்குவோம். யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலுக்கும் நெசவாளர் சமூகத்திற்குமான தொடர்பு பற்றி இங்கு ஆராயும்போது, ஆசிரியர் ஐதிகங்கள் நம்பகத்தன்மையற்றவை என நிராகரித்து, ஒல்லாந்தர்காலப் பொருளாதார வரலாற்றின் அடிப்படையில் ஒரு கருதுகோளை (Hypothesis) உருவாக்குவதையும், அந்தக் கருதுகோளை ஆதரிக்க ஆதாரப்பூர்வமான சான்றுகளைத் தேடுவதையும், நேரடி ஆதாரங்கள் முழுமையாகக் கிடைக்காதவிடத்து, அனுமானம் (Inference) ஒன்றைக் கவனமாக மேற்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது. ஆசிரியரின் இந்த அணுகுமுறை அனுபவவாத வரலாற்று ஆய்விற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே வரலாறு எழுதப்பட வேண்டும் எனும் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்நூலின் இறுதியில் 19 பக்கங்களில் விரிவான உசாத்துணைப் பட்டியல் இடம்பெற்றுள்ளது. ஓர் ஆய்வு நூலில் இத்தகைய பட்டியல் இடம்பெறுவது வியப்பிற்குரியது ஒன்றன்று எனினும், தமிழ்மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு குறித்த பெருமிதத்துடன் கூடிய தேசிய உணர்வு மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் தமிழில் இத்தகையதொரு புறவயமான, தரமான வரலாற்று நூலைப் படைத்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும், பாராட்டுதலுக்குரியதுமாகும்.

இந்நூல் எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் காலனிய கால யாழ்ப்பாணத்தை ‘பின்-காலனியம்’ (Postcolonial Perspective) போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதற்கான இன்றியமையாத தளத்தை வழங்குகின்றது. நகரத்தின் பௌதிக மாற்றங்கள் எவ்வாறு காலனிய அதிகார அமைப்புகளை வலுப்படுத்தின, உள்நாட்டுச் சமூகப் படிநிலைகளில் (Social Hierarchies) எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தின போன்ற விடயங்களை விரிவாகப் பகுப்பாய்வு செய்ய இந்நூல் வழியமைத்துக் கொடுக்கிறது.

யாழ்ப்பாண நகரத்தின் ஒட்டுமொத்தப் பரிணாம வளர்ச்சி குறித்த அடிப்படை வரலாற்று நோக்கு நூலில் காணப்படுகின்ற போதிலும், அது நூல் முழுவதையும் ஒருங்கிணைக்கும் வெளிப்படையான வரலாற்று வாதமாக வடிவமைக்கப்படவில்லை என்பது எனது கருத்து. இதன் விளைவாக, இந்நூல் ஓர் ஒருங்கிணைந்த விளக்கக் கதையாடலாக (Integrated Interpretive Narrative) அமையாது, கவனமாகத் தேர்ந்தெடுத்து ஒழுங்குபடுத்தப்பட்ட விடய ஆய்வுகளின் தொகுப்பாகவே (Collection of Thematic Studies) பெரிதும் தோற்றமளிக்கிறது. அதாவது, யாழ்ப்பாண நகரத்தின் பௌதிக வரலாறு குறித்த ‘கலைக்களஞ்சியத் தன்மை’ (Encyclopedic Nature) உடையதாக இந்நூல் விளங்குகிறது.

பொது வாசகர்கள் இந்நூலை முதலிலிருந்து இறுதிவரை வரிசைக்கிரமமாக வாசிக்க வேண்டிய கட்டாயமில்லை. தங்களுக்கு விருப்பமான அல்லது தேவைப்படும் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் இடையில் தேர்ந்தெடுத்தும் வாசிக்க முடியும். இதற்கு உள்ளடக்கமும், இந்நூலின் இறுதியில் உள்ள சொல்லடைவுமே (Index) பெரிதும் துணைநிற்கின்றன.

அடுத்த பதிப்பில் கவனத்திற்கொள்ளத்தக்க சில பரிந்துரைகளையும் இங்கு முன்வைக்கிறேன்.

முறையான முடிவுரை: இந்நூலுக்குச் சிறப்பான முன்னுரை அமைந்திருப்பது போலவே, நூலின் இறுதியில் ஒட்டுமொத்த ஆய்வின் முக்கிய முடிவுகளையும் அதன் மையக் கருத்தையும் தொகுத்துரைக்கும் ஒரு விரிவான முடிவுரை இடம்பெறுவது பயனுள்ளதாக அமையும். இது ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகால யாழ்ப்பாண நகரப் பரிணாமத்தின் பிரதான போக்குகளை வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும்.

அத்தியாய அறிமுகங்கள்: ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும், அந்த அத்தியாயத்தின் நோக்கம், உள்ளடக்கம் பற்றிய விவரங்கள், அதற்கும் முந்தைய அத்தியாயத்திற்குமான தொடர்பு மற்றும் முக்கிய வரலாற்றுக் கேள்விகளைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் ஒரு முன்னுரை இடம்பெறுவது வாசகரின் புரிதலையும் வாசிப்பு ஓட்டத்தையும் மேலும் எளிதாக்கும்.

சான்றுகளின் பகுப்பு: உசாத்துணைப் பட்டியலில் முதன்மைச் சான்றுகளையும் (Primary Sources), இரண்டாம் நிலைச் சான்றுகளையும் (Secondary Sources), கட்டுரைகளையும் தனித்தனியாக வகைப்படுத்திக் காட்டுவது ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடியதாக இருக்கும்.

உள்ளடக்கப் பட்டியலின் விரிவாக்கம்: தற்போது நூலின் உள்ளடக்கப் பட்டியலில் ஒவ்வொரு அத்தியாயத்தினதும் பெருந்தலைப்புகள் (Major Headings) மட்டுமே இடம்பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றினதும் கீழ் அமைந்துள்ள உபதலைப்புகளையும் (Sub-headings) உள்ளடக்கப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது பயனுள்ளதாக அமையும். குறிப்பிட்ட தகவல்களைத் தேடும் வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இத்தகைய விரிவான உள்ளடக்கம் பெரிதும் உதவும்.

நிறைவாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காலனிய காலத்தில் முஸ்லிம் குடியிருப்பாக இருந்த கொழும்பு நகர் எவ்வாறு வளர்ச்சியுற்றது என்பது குறித்த ஆய்வுத்திட்டம் ஒன்று 2024இல் தொடங்கியது; 2029இல் அத்திட்டம் பல்துறைப் புலமையாளர்களின் பங்களிப்புடன் நிறைவேற உள்ளது. ஆனால், மயூரநாதன் தனியொருவராக இருந்து, காலனிய யாழ்ப்பாண நகரின் அடுக்குநிலையான வளர்ச்சி குறித்து, சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு இவ்வளவு விரிவாக ஆராய்ந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

நன்றி: தாய்வீடு | ஜூலை | 2026