ஆங்கிலத்தில் வெளியான 13 நூல்களின் வாசிப்பனுபவங்கள் தொடர்பிலான கட்டுரைகளின் தொகுப்பே இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’. எழுநாவின் வெளியீடாக வந்துள்ள இந்நூலின் அட்டைப்படம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளங்கோவின் வீடு என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது பயணங்களின் போது போரினால் கைவிடப்பட்ட வீடுகளைப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வை மீட்டிப் பார்க்க வைத்தது. அந்த வீடுகளின் ஏக்கமும், அவை கொண்டுள்ள கதைகளும் ஏராளம்.
உண்மையில் இந்நூலை வாசிக்கின்றபோது 112 பக்கங்களுக்குள் 13 நூல்களை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் மேலதிகமான தகவல்களையும் அறிய முடிகிறது. “ஆங்கிலத்தில் இந்நூல்களை வாசிக்க முடியாதவர்களுக்கும் அதனைப் பற்றிய அறிமுகமும் கிடைக்கின்றது.”
இதில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து நூல்களுமே ஈழப்போராட்டம் தொடர்பானவையாகும். உண்மையில் இளங்கோ குறிப்பிடுவதைப் போல, “பௌதீகமான நூல்களைத்தான் அழிக்க முடியும், இனமொன்றின் வரலாற்றை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என்பதே உண்மை. அதற்கு ஆதாரமாகத்தான் இன்றைக்கும் ஈழப் போராட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் நிறைய நூல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.”
ஒவ்வொரு நூல் தொடர்பாகவும் தனது பார்வையை விரிவாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆழமாகவும், சிறந்த முறையிலும் விவரித்திருக்கிறார் இளங்கோ. அவர் இந்நூல் குறித்து முன்வைத்துள்ள அணுகுமுறையானது, வாசகர்களுக்கு அது பற்றிய ஒரு தெளிவான மற்றும் பரந்த புரிதலை வழங்கிவிடுகிறது.
இதில் அடங்கியுள்ள 11 எழுத்தாளர்களின் 13 நூல்களில் ‘போர் உலா’ தவிர்ந்த ஏனையவை ஆங்கிலத்தில் வெளிவந்தவை. ‘போர் உலா’ மாத்திரம் தமிழில் வெளிவந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும்.
பதின்மூன்று நூல்களும் ஈழப்போர் தொடர்பான வெவ்வேறுபட்ட அனுபவங்களைக் கொண்ட புலம்பெயர்ந்தவர்கள், போராளிகளாக இருந்தவர்கள், வெளிநாட்டவர்களால் எழுதப்பட்டுள்ளமையினால், போர் தொடர்பான ஆழமான, அதேபோன்று வித்தியாசமான பார்வையை இந்நூல் தருகின்றது.
குறிப்பாக ஒவ்வொரு நூல் தொடர்பாக அறிமுகம் தருகின்றபோதும் அதனை விவரிக்கின்றபோதும் இளங்கோவின் வாசிப்பின் ஆழத்தையும் எழுத்து நடையின் அழகையும் ரசிக்காமலும் வியக்காமலும் இருக்க முடியாது. அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான ஒரு பயணம்’ நூலைப் பற்றி ஆரம்பிக்கும்போது மிக அழகாக அதன் தனித்துவத்தையும் அந்நூல் ‘மான் புக்கர்’ பரிசின் குறும்பட்டியல் வரை சென்ற காரணத்தையும் இவ்வாறு குறிப்பிட்டு ஆரம்பிக்கின்றார்.
“எல்லாக் கதைகளும் எழுதப்பட்டு விட்டதெனின், எந்தக் கதையைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஒரு விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப் போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகி விடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பியதன் விளைவாகவே அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான ஒரு பயணம்’ நமக்குக் கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்த தமிழ் எழுத்தாளருக்கும் வாய்க்காத ‘மான் புக்கர்’ பரிசின் குறும்பட்டியல் வரை அவரைக் கொண்டு சென்றிருக்கின்றது.”
குறிப்பாக இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நூல்களின் மூலம் 1983 ஜுலைக் கலவரம், 1974 தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, 1981 யாழ் நூலக எரிப்பு போன்றவை அம்மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளையும் அவற்றால் அவர்கள் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அறிய முடிகிறது.
அதேபோன்று சொந்த நாட்டில் பிரச்சினை என்று வலிகளோடு வெளியேறிய மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் அனுபவிக்கும் வலிகளையும், சவால்களையும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சாரோன் பாலாவின் ‘படகு மக்கள்’, ரோய் ரத்தினவேல் அவர்களின் ‘கைதி #1056’, லோகதாசன் தர்மதுரையின் ‘நிலவியலின் துயரம்’ ஆகிய நூல்களின் வாயிலாக உணர முடிகின்றது. மீண்டும் மீண்டும் வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை, அந்நிய கலாசாரத்திற்குத் தங்களைப் பழக்கப்படுத்த வேண்டியிருக்கின்றமை, புதிய மொழி இவை எல்லாம் அவர்களை உளச்சிக்கலுக்கு ஆளாக்குகின்றது. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு சொந்த நிலத்தை விட்டுச் செல்லும் மக்களுக்கு இவை எல்லாம் மிகப்பெரும் சவாலாகவே அமைந்திருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நூல்களை நாங்கள் முழுமையாக வாசிக்காவிட்டாலும் இளங்கோவின் எழுத்து வாயிலாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வலிகளை எம்மால் உணர முடிகிறது.
ரோய் ரத்தினவேல் அவர்களின் ‘கைதி #1056’ என்ற சுயசரிதை நூலில் குறிப்பிடப்படும் பூசா சிறை அனுபவம், அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான ஒரு பயணம்’ நூலில் வரும் ராணியின் மகன் அவர் மடியிலேயே ‘செல்’ துண்டு பட்டு இறந்து போதல், மலரவனின் ‘போர் உலா’ நூலில் வரும் அவரது தமையன் பிடிபட்டு நான்காம் நாள் விடிகாலையில் தாயும் மலரவனும் முகாமிற்குச் செல்லுதல் போன்றவை ஆழமான சிந்தனைக்குள் எம்மை இழுத்து விடுகின்றன.
உண்மையில் இந்தப் போர் எதைத்தான் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது என்ற கேள்வி எமக்கு எழாமல் இல்லை. இளங்கோ கூறுவதைப் போல,
“இறந்தவர்கள் எந்தத் தரப்பாயினும் அவர்கள் மீண்டு வரவா போகின்றார்கள்? அன்று முகாமை தாக்கி வெற்றி கொண்டவர்கள் பின்னர் தோற்றுப் போயிருக்கின்றனர். அன்று தோற்றவர்கள் பிறகு வென்றிருக்கின்றனர் எனில் இந்த யுத்தங்கள் எதைத்தான் நமக்குக் கொண்டு வந்திருக்கின்றன? இழப்புகளையும் வெறுப்புகளையும் காலத்தால் ஆற்ற முடியாத வடுக்களையும் அல்லவா நினைவுகளாக அவை விட்டுச் சென்றிருக்கின்றன.”
இது வாசிப்பனுபவம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு என்றாலும் இளங்கோவின் வாசிப்பின் ஆழமும் குறிப்பிட்ட பரப்புகளில் அவருக்கு இருக்கும் பரந்துபட்ட அறிவும், சில விடயங்களை அவர் விவாதிக்கும் திறனும், அவ்விடயப் பரப்புகள் தொடர்பாக நம்மையும் தேட வைக்கின்றன. அத்தோடு இன்னும் வாசிக்க வேண்டிய தேவைப்பாடு நமக்கு இருக்கின்றது என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கின்றன.