ஒரு சமூகத்தின் வரலாறு, கலாசாரம், அடையாளம் மற்றும் அரசியல் இருப்பு ஆகியவற்றின் அசைக்க முடியாத அடித்தளமே நிலம் என்பதாகும். சிறுபான்மை இனக்குழுக்களைப் பொறுத்தவரையில், நிலம் என்பது அவர்களின் கூட்டுரிமை, சுயஅடையாளம் மற்றும் சுயநிர்ணய உரிமையின் மையக் கூறாக விளங்குகின்றது. எனவேதான், உலகெங்கிலும் உள்ள பழங்குடியின மக்களும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் தங்களின் தனித்துவமான அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், பாரம்பரிய நிலங்களைப் பாதுகாக்கவும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். மறுபுறம், வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்போமானால், சிறுபான்மை இன மக்களின் நிலங்களை அரசாங்கங்கள் பல்வேறு உத்திகளின் ஊடாகக் கையகப்படுத்தியுள்ளன. அந்த வகையில், தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி, வனஜீவராசிகள் பாதுகாப்பு, நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற காரணங்கள் இதற்காக முன்வைக்கப்படுகின்றன. எனினும், பல சந்தர்ப்பங்களில் அவை குறிப்பிட்ட இன மக்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பை மாற்றுவதற்கான அரசியல் கருவிகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் மக்கள்தொகைச் செறிவைக் குலைத்து, திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் அவர்களின் தன்னாட்சிக் கோரிக்கைகளையும் தாயகக் கோட்பாட்டையும் பலவீனப்படுத்துவதே இத்தகைய நடவடிக்கைகளின் முதன்மை நோக்கமாகக் காணப்படுகின்றது. இஸ்ரேல்–பாலஸ்தீனப் பிரச்சினை முதல் உலகின் பல பகுதிகளில் நடைபெறும் இன முரண்பாடுகள் வரை, நில உரிமை தொடர்பான கேள்விகளே பிரதான மோதல் மையங்களாகக் காணப்படுகின்றன. பேரினவாத அரசாங்கங்களின் இத்தகைய நில ஆக்கிரமிப்பு உத்திகள், இறுதியில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களாகவும் சர்வதேசக் குற்றங்களாகவுமே உருவெடுத்துள்ளன.
இலங்கையின் இனப் பிரச்சினையையும் இந்தப் பரந்த உலகளாவிய அனுபவத்திலிருந்து தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமது வரலாற்றுத் தாயகமாகக் கருதும் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளில் நில உரிமை எப்போதும் சமரசப்படுத்த முடியாத முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. குறிப்பாக, சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் அரச உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட கல் ஓயா, அல்லை–கந்தளாய், பதவியா, வெலிஓயா மற்றும் மகாவலி போன்ற குடியேற்றத் திட்டங்கள் தமிழ் மக்களிடையே உள்நாட்டுக் காலனித்துவம் தொடர்பான பலத்த அச்சங்களை உருவாக்கியுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் வடக்கு–கிழக்கின் மக்கள்தொகைக் கட்டமைப்பை மாற்றி, தமிழர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும் நோக்குடன் அமைந்தனவாகவே பல ஆய்வாளர்களாலும் சுட்டிக்காட்டப்படுகின்றன. நடைமுறையில் இவை கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் நிதர்சனமாகக் காணப்படுகின்றன. இதன் விளைவுகள் இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையின்மையையும் சமூகப் பிளவுகளையும் தோற்றுவித்து, இறுதியில் ஆயுத மோதலுக்கான சூழலையே வலுப்படுத்தின என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.
இந்தப் பின்னணியிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினை புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது வெறும் நிலத் தகராறோ அல்லது கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையோ மட்டுமல்ல; இது நிலம், அடையாளம், வாழ்வியல், இன அரசியல் மற்றும் அதிகார உறவுகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ள ஒரு சிக்கலான சமூக–அரசியல் விவகாரமாகும். தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மேய்ச்சல் நிலங்களின் எதிர்காலம், மட்டக்களப்பின் கால்நடைப் பொருளாதாரத்தோடு மட்டுமல்லாமல், அப்பகுதி தமிழ் மக்களின் சமூக இருப்புடனும் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. இந்த மேய்ச்சல் தரை குறித்த முடிவுகள் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், மாவட்டத்தின் பால் உற்பத்தியையும், சமூக நல்லிணக்கத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவை.
இந்நூலின் ஆசிரியர் திரு. வை. ஜெயமுருகன் அவர்கள், மயிலத்தமடு–மாதவனைப் பிரச்சினையை வெறும் செய்தி நிகழ்வாக அணுகாமல், அதன் வரலாற்று, அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பின்னணிகளை ஆழமாக ஆராய்ந்துள்ளார். குறிப்பாக, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் வரலாறு, அதன் அரசியல் விளைவுகள், கிழக்கு மாகாணத்தின் மக்கள்தொகை மாற்றங்கள், கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதார நெருக்கடிகள் மற்றும் இன்றைய போராட்டங்களின் பின்னணிகள் ஆகியவற்றை முறையியலோடு ஒருங்கிணைத்து வாசகர்களுக்கு முன்வைக்கிறார். இதன் மூலம், இப்பிரச்சினை ஏன் மட்டக்களப்பின் எல்லைகளைத் தாண்டி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரமாக மாறியுள்ளது என்பதை ஆசிரியர் மிகத் தெளிவாகப் புலப்படுத்துகிறார்.
ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி, சமத்துவம் மற்றும் நீதி ஆகியவை நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், நில உரிமை தொடர்பான முரண்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், நீதியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கையாளப்பட வேண்டும். இல்லையெனில், அவை சமூகங்களுக்கிடையிலான பிளவுகளை மேலும் ஆழப்படுத்தும் அபாயத்தை உருவாக்கும்.
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை பற்றிய விவாதத்தை மட்டுமல்லாது, நிலம் மற்றும் அடையாளம் தொடர்பான இலங்கையின் பரந்த அரசியல் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்நூல் ஒரு பயனுள்ள ஆதாரமாக அமையும் என்பதில் எனக்கு ஐயமில்லை. இந்த முக்கியமான ஆய்வை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.