மீநிலங்கோ அவர்கள் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ‘அபிவிருத்தி, சக்தி மற்றும் பேண்தகைமை’ முதுகலை திட்டத்தை வழிநடத்துகிறார். மானுடப் புவியியல் புலமையுடன் சமூக விஞ்ஞான ஆய்வுத் துறைகளிலும் நிபுணத்துவம் உடையவர். இலக்கியம், விமர்சனம் ஆகிய துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர்.
இந்நூல் இலங்கையை மையப்படுத்தி, பசுமை என்ற எண்ணக்கரு, இலங்கையில் சூழலியல், சுதந்திர இலங்கையின் குடியேற்றத் திட்டங்கள், மகாவலி அபிவிருத்தித் திட்டம், இலங்கையில் நீர்மின்சாரம், நீலப்புரட்சி, மேல்கொத்மலைத் திட்டம், சம்பூர் அனல்மின் நிலையம், சுன்னாகம் நிலத்தடி நீர், எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரிடர், சூழலியல் சுற்றுலா, வளமான பசுமைத் தாயகத்தின் எதிர்காலம் ஆகிய தலைப்புகளில் நின்று, ஆய்வு நோக்கில் பல அடிப்படை வினாக்களை விமர்சன ரீதியாக எழுப்புகிறது.
228 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் 11 கட்டுரைகள் எழுநாவில் வெளிவந்தவை; இறுதிக் கட்டுரை நூலாக்கத்தின் போது சேர்க்கப்பட்டது. நூலின் அட்டைப்படம் நூலின் கட்டுரைகள் பேசும் விடயங்களின் குறியீடாக உள்ளது. சட்டத்தரணி என்.கே. அஷோக்பரன் காத்திரமான அணிந்துரை ஒன்றைத் தந்துள்ளார்.
இயற்கையைக் கொண்டாடுதல் என்ற தலைப்பில் நூலாசிரியர் வாசகர்களுடன் பேசுகிறார். நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும், இலக்கியக் கட்டுரைகளின் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
இக்கட்டுரைகள் நூல்கள், சஞ்சிகைகள், அறிக்கைகள், கள ஆய்வுகள், நேர்காணல்கள், ஒப்பீட்டுப் பார்வைகள் ஆகியவற்றின் வழி நின்று எழுதப்பட்டுள்ளன. சான்றாக, ‘பசுமை எனும் எண்ணக்கரு நல் உணர்வா, கொடுங்கனவா’ என்ற கட்டுரை, பசுமை பற்றிய கட்டுக்கதைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ‘கரிம உணவுகளில் (Organic) இரசாயனம் இல்லை, அவை சாதாரண உணவை விட அதிக ஊட்டச்சத்துக் கொண்டவை, சுவையிலும் மேம்பட்டவை’ போன்ற ‘Organic’ பொருட்கள் சிறந்தவை என்பதற்குக் கூறப்படும் காரணங்கள் வெறும் கட்டுக்கதைகளே என்பதை ஆசிரியர் தெளிவாகக் கட்டுடைத்துள்ளார்.
மேலும், இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள நிறைவுக் குறிப்புகளும் அடிக்குறிப்புகளும், வாசகர்கள் கட்டுரையின் போக்கையும் அதன் விடயப் பரப்பையும், வாத-பிரதி வாதங்களையும், ஆசிரியரின் விமர்சனங்களையும் சரியாகப் புரிந்து மதிப்பீடு செய்ய உதவுகின்றன.
இக்கட்டுரைகள் பேசாப் பொருளைப் பேசுவனவாக, வரலாற்றுப் பின்புலங்களோடு சமூகவியல், பொருளியல், அரசியல், பண்பாடு, ஒழுக்க நியமங்கள், விஞ்ஞான அணுகுமுறை, படங்கள், வரைபடங்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் வழி நின்று வாசகர்களுடன் பேசுகின்றன. இந்நூலில் உள்ள கட்டுரைகள் யாவும் காலத்தின் தேவைகருதி எழுதப்பட்டுள்ளதுடன், காலனித்துவத்திற்குப் பின் இலங்கையில் நிகழ்ந்த மாற்றங்களையும், பசுமைப் பொருளாதாரத்தையும் விசாரணைக்கு உட்படுத்துகின்றன. அரச அதிகாரங்கள், சூழல் சீரழிவுகள், பேண்தகுநிலை, அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி, சந்தை நிலை, நுகர்வு ஆகியவற்றில் மறைந்து நிற்கும் புரட்டுகளையும் அம்பலப்படுத்துகின்றன.
காலநிலை மாற்றங்களுக்கான காரணங்களும், விளைவுகளும் காலனித்துவச் சுரண்டல்களினாலும் ஏகாதிபத்தியத்தினாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன; மேலைத்தேய மேலாதிக்க நாடுகளும், செய்திகளும், அறிக்கைகளும் இவ்வுண்மையை திசை திருப்புகின்றன எனக்கூறும் ஆசிரியர், அபிவிருத்தி திட்டங்கள் யாருக்காக? இவை முறையாகத் திட்டமிடப்பட்டுள்ளனவா? இவற்றின் பின்னுள்ள அரசியல் என்ன? இவற்றின் சமூகச் செலவினங்கள் யாவை? என்பவற்றையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்.
மீநிலங்கோவின் மொழியும், கருத்துகளை முன்வைக்கும் பாங்கும், அவற்றைப் பகுத்தாய்ந்து நியாயப்படுத்தும் முறையியலும் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டித் துலங்க வைக்கின்றன. அவரது தேடலும் அதனை முறைப்படுத்தும் பணியும் தொடரட்டும்.